Wednesday, November 2, 2011

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் தமிழக அரசின் முடிவுக்குக் கண்டனம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

மாநிலக் குழு அலுவலகம்

421,அண்ணா சாலை,சென்னை-600018

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும்

தமிழக அரசின் முடிவுக்குக் கண்டனம்

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் புதிதாக சென்னை பள்ளிக் கல்வி இயக்கக (டிபிஐ) வளாகத்தில் அமைக்கப்பட உள்ள நவீன மைய நூலகக் கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் இன்று (2.11.2011) அறிவித்துள்ளார். 1.1.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவு, சமுதாய வளர்ச்சியில் நூலகங்களின் தலையாய பங்கு குறித்து அக்கறை கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது.

8 ஏக்கர் நிலப் பரப்பில் மக்கள் பணம் 180 கோடி ரூபாய் செலவில் ஏற்படுததப்பட்ட இந்த நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய நவீன கட்டமைப்புகள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. ஒலி, ஒளி தொகுப்புகள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.

பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டடமாகத் திகழ்கிறது இந்த வளாகம்.

முந்தைய அரசின் தவறுகள் காரணமாக தமிழக மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய போது புதிய அணுகுமுறைகள் பற்றிய எதிர்பார்ப்புகளுடனேயே இருந்தார்கள். ஆனால் அஇஅதிமுக அரசு அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு மாறாக, அரசியல் பகையுணர்வுடன் செயல்படுவதிலேயே முனைப்புக் காட்டுகிறது. தலைமைச் செயலகக் கட்டடத்தைத் தொடர்ந்து இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகமும் மாற்றப்படுவது அந்த அரசியல் பகையுணர்வின் அப்பட்டமான வெளிப்பாடாகவே இருக்கிறது.

நூலகத்தை மாற்றுவதற்குச் சொல்லப்பட்டிருக்கிற காரணம் ஏற்கத்தக்கதாக இல்லை. அறிவு சார் பூங்கா அமையவிருக்கும் இடத்தில்தான் ஒரு பொதுநூலகமும் அமைய வேண்டும் என்பது மக்களை திசைதிருப்புவதற்கான மேலோட்டமான காரணமாகவே இருக்கிறது. டிபிஐ வளாகம் பள்ளிக் கல்வி சார்ந்த துறையினரும் மாணவர்களும் வந்துசெல்கிற இடம். அங்கு இப்படியொரு பொதுநூலகத்தை நிறுவுவது அந்த வளாகத்தின் செயல்பாட்டுக்கும் இடையூறாகவே அமையும். தனியொரு இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்திருப்பது அதனைப் பயன்படுத்துவோருக்கு எவ்வகையிலும் இடைஞ்சலாக இல்லை. தற்போதைய அண்ணா நூலக வளாகத்தின் இடப்பரப்பைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் மேற்கொண்டு பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி அதனை வலுப்படுத்த முடியும்.

குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவது என்பது வரவேற்கத்தக்கதே. அதற்குப் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து புதிதாக ஒரு கட்டடத்தை அங்கு எழுப்ப முடியும். தேவையான உள்கட்டுமானங்களோடு அந்த மருத்துவமனை வளாகத்தைத் திட்டமிட்டு உருவாக்க முடியும்.

அதைச் செய்ய மனமில்லாமல், முந்தைய அரசால் கட்டப்பட்டது என்ற காரணத்திற்காகவும், அதற்கு முன் அஇஅதிமுக அரசு தலைமைச்செயலகத்தை அமைக்கத் தேர்வு செய்து பின்னர் நீதிமன்றத் தலையீட்டால் கைவிடப்பட்ட இடத்தில் இப்படியொரு கட்டடம் இருப்பதா என்ற தேவையற்ற ஆத்திரத்தாலும் தற்போதைய அண்ணா நூற்றாண்டு வளாகத்தை மாற்றுவது அரசியல் முதிர்ச்சியைக் காட்டவில்லை.

ஆகவே அரசின் இந்த முடிவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அரசு தனது முடிவைக் கைவிட்டு, நூலகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகிறது. அரசு இதனை ஏற்க மறுக்குமானால் கல்வியாளர்கள், புத்தக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரைத்திரட்டி மாநிலந் தழுவிய போராட்டத்தில் சங்கம் ஈடுபடும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

ச.தமிழ்ச்செல்வன் சு.வெங்கடேசன்

மாநிலத்தலைவர் மாநிலப்பொதுச்செயலாளர்

மேற்கண்ட செய்தியைத் தங்கள் இதழில்,வலைத்தளத்தில்,தொலைக்காட்சியில் வெளியிடுமாறு வேண்டுகிறோம்.

சு.வெங்கடேசன்

பொதுச்செயலாளர்

2 comments:

மணிச்சுடர் said...

ஒரு இனத்தை அழிக்க,அவ்வினத்தின் மொழியை அழி என்னும் சூட்சுமக் கோட்பாட்டின் வெளிப்பாடு இது என்பது அறிவுசார் தமிழினத்திற்குப் புரியாதா என்ன? தமிழன் படித்துப் பல்துறை அறிவு பெற்றுவிட்டால் பின் பார்ப்பனியப் பண்ணையம் பாழ்பட்டுப் போகுமே.நெருக்கடியான டி.பி.ஐ வளாகத்துக்குள் பத்தோடு பதினொன்றாய் முடக்கி விட்டால் யார் அதைச் சீண்டப் போகிறார்கள் என்கிற சாணக்கியத் தந்திரம்இது. யாழ் நூலகத்தைச் சிங்களக் காடையர் அழித்ததுபோல், இன்று அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அரிய பெரிய அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை அம்மையார் மாற்ற நினைப்பதும் அப்பட்டமான தமிழின அழிப்பு முயற்சியே.சக்களத்திப் போராட்டத்தில் சவலைப் பிள்ளை தமிழன்தானா? வீதியில் இறங்காமல் விடியாது எதுவும். பாவலர் பொன்.கருப்பையா, புதுகை.

K.Sibi said...

We have started a group in FB
https://www.facebook.com/#!/groups/241516629236700/

to discuss about the anna library shifting issue ..Requesting participation from progressive writers