Showing posts with label நாட்டுப்புறவியல். Show all posts
Showing posts with label நாட்டுப்புறவியல். Show all posts

Tuesday, June 9, 2009

தொட்டதெல்லாம் உள்ளூர் மண்ணாக...

 

habib1 habib3 ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் நேரில் அவரைப் பார்த்தது 1999 இல் டெல்லியில் சஹ்மத் ( SAHMAT-Safdar Hashmi Memorial trust) நடத்திய சப்தரின் பத்தாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சிகளின்போதுதான்.அப்போதே அவர் தன் 70களில் இருந்தார். முதுமை முகத்தில் தெரிந்த போதும் உடலிலும் உள்ளத்திலும் இல்லை.இரண்டு மூன்றுநாட்களாக அவரைத் தூர இருந்தே பார்த்துக்கொண்டிருந்தேன்.கவனத்தை ஈர்க்கும் கனத்த குரல்.பிரளயனுக்கு ஏற்கனவே அவரோடு அறிமுகம் இருந்தது.அவரைப்பற்றி என்னிடம் அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்தார்.வட இந்தியாவில் முக்கியமான ஒரு அரங்க ஆளுமை என்கிற அளவில் ஒரு மதிப்புக் கொண்டேன்.

ஆனால் இரண்டாம் நாள் இரவு அரங்கேற்றப்பட்ட அவருடைய நாடகம் Jisne Lahore Nai Dekhya Wo Jamyai Nai ( = யார் லாகூரைக்காணவில்லையோ அவர் வாழ்ந்தென்ன என்று பொருள் கூறலாம்.லாகூரைக் காணாத கண்ணென்ன கண்ணோ என்றும் சொல்லிக்கொள்ளலாம்.உணமையில் இது வடமேற்கு இந்தியா முழுதும் நாட்டார் வழக்கில் உள்ள ஒரு சொலவடையாகும்) என் மனதில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.தலைகீழாக என்னைப் புரட்டிப்போட்ட கலைப்படைப்பாக அது இருந்தது.கவிதைகளும் நாட்டுப்புறக் கலைக்கூறுகளும் பின்னிப் பிணைந்த அற்புதமான படைப்பு அது.ஒரு வட இந்தியக் கலைஞர் என்கிற என் பார்வை தகர்ந்து ஒரு சர்வதேசக் கலைஞனாக அவர் அந்த இரவில் என் மனதில் எழுந்து நின்றார்.

வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் நான் அதுவரை பார்த்திருந்த நாடகங்கள் எவையும் தொட்டிராத உயரத்தில்/ஆழத்தில் அந்நாடகம் நிகழ்த்தப்பட்டது.ஆனால் ஹபிப் சாருடைய மிகச்சிறந்த நாடகம் ’சரண் தாஸ் சோர்’ என்கிற நாடகம்தான் என்று அருகே அமர்ந்திருந்த பிரளயன் சொன்னார்.பின்னர் நானும் படித்துத் தெரிந்து கொண்டேன்.போட்ட இடங்களிலெல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக வடக்கு ,கிழக்கு,மேற்கு இந்தியா முழுவதும் வெற்றிக்கொடி நாட்டிய நாடகம் சரண்தாஸ் சோர்.

1923 இல் பிறந்த ஹபிப் மாமா 1945இல் அன்றைய இடதுசாரி பண்பாட்டு இயக்கங்களாகத் திகழ்ந்த IPTA ( Indian people’s Theatre Association) விலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் தன்னை இணைத்துக்கொண்டார்.அந்த பந்தத்தின் அர்த்தம் மேலும் அடர்த்தியாகும் வண்ணம் எளிய மக்களின் பக்கம் நின்று தன் படைப்புகளை முன் வைத்தார்.லண்டன் ராயல் நாடக அகாடமியில் மூன்று ஆண்டுகள் முறையாக நாடகம் பயின்றவர்.எதை நான் செய்யக்கூடாதென விரும்புகிறேனோ அதையெல்லாம் அங்கு கற்றுக்கொண்டேன்.அங்கு கற்றதையெல்லாம் கழட்டி எறிந்த பிறகுதான் என் நாடகங்கள் நான் விரும்பத்தக்கவையாக அமைந்தன என்று பின்னர் கூறினார்.பிரெக்ட்டின் நாடகங்களை ஜெர்மனியில் நேர்ல் சென்று பார்த்து அதிலிருந்து படிப்பினைகள் கற்றுக்கொண்டார்.சதிஸ்கர் நாட்டுப்புறக்ககலைஞர்களை அப்ப்டியே தன்னுடைய நாடகக்குழுவில் இணைத்துக்கொண்டார்.நம் நாட்டு நாடகம் நாட்டுப்புறக் கலைகள் இவற்றிலிருந்து மட்டுமே நமக்கான நாடகம் வேர்கிளம்பி வரமுடியும் என்பதை நிகழ்த்திக்காட்டினார்.

மைதாஸ் கதையில் அவன் தொட்டதெல்லாம் பொன் ஆவது போல ஹபீப் சார் எதைத் தொட்டாலும் அது சதிஸ்காரிப் படைப்பாக உள்ளூர்த் தன்மை பெற்று ஒளிர்ந்தது.ஷேக்ஸ்பியர் துவங்கி சப்தர் ஹாஷ்மி வரை பலருடைய கதைகளை அவர் நாடகமாக்கியபோதும் எல்லாமே ச்திச்காரி மொழி பேசுகிற நாட்டுப்புற அசைவுகளும் பாடல்களும் கொண்ட படைப்புகளாகவே மேடையேறின.என் கிராமமே எனது அரங்கு என் பெயர் ஹபீப் என்பது அவரைப் பற்றி உலகம் சொன்ன வார்த்தைகளாகும்.கவிதையையும் நாட்டுப்புறவியலையும் நவீன பார்வைகளுடன் இணைத்து நாடகம் தயாரித்தவர் அவர்.

சப்தர் காங்கிரஸ் குண்டர்களால் கொலை செயப்பட்டபோது அதை எதிர்த்த போராட்டங்களில் முன் நின்றவர் ஹபீப்.

டெல்லியில் அவரைத் தரிசித்த அந்த நாட்களில் நான் இந்திய-பாகிஸ்தான் பிரிவினை பற்றிய எழுதப்படாத வரலாறுகளைத் தேடித்தேடிப் படித்துக்கொண்டிருந்தேன்.ஊர்வசி புடாலியாவின் The Other side of Silence மற்றும் கமலா பாஷின் /ரித்து மேனன் எழுதிய Borders and Boundaries போன்ற நூல்களைப் படித்துவிட்டுத் தாள முடியாமல் இரவுகளில் தரையில் புரண்டு அழுது கொண்டிருந்தேன்.அந்த மனநிலையில் ஹபிப் மாமாவின் லாகூரைக் காணாத கண் என்ன கண்ணோ நாடகத்தைப் பார்த்தது சொல்ல முடியாத துக்கத்திலும் பரபரப்பிலும் என்னை ஆழ்த்தியது. 1947 தேசப்பிரிவினையின்போது இந்துக்கள் பாகிஸ்தானை விட்டு இங்கு ஓடிவர இஸ்லாமியர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு ஓடினர்.லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்த வரலாற்றின் மிகப்பெரும் சோகநாடகம் இந்திய-பாக் பிரிவினையின் போது நடந்ததுதான். அப்படி பாகிஸ்தானின் லாகூர் நகரை விட்டு இந்தியாவுக்கு ஓடிப்போன ஒரு இந்துக்குடும்பம் ஒரு வயதான மூதாட்டியை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு ஓடியிருக்கும்.அந்த வீடு இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தானுக்கு ஓடி வந்த ஒரு முஸ்லீம் குடும்பத்துக்கு ஒதுக்கப்படும்.அக்குடும்பம் தங்கள் சொந்த வீடாக அவ்வீட்டை நினைக்க – அந்த வீட்டிலேயே பிறந்து வளர்ந்து பல்லாண்டு காலம் அங்கேயே வாழ்ந்த அந்தக் கை விடப்பட்ட இந்துக் கிழவி வரலாற்றின் சாட்சியாக அங்கேயே இருந்துகொண்டிருக்க அவளுக்கும் அக்குடும்பத்துக்கும் ஏற்படும் உறவை மையமாக வைத்து பாகிஸ்தானில் நடந்த மதவாத நடவடிக்கைகள் மற்றும் அரசுகளால் ஏற்படுத்தப்பட்ட பிரிவினை மீதான ஆழ்ந்த விமர்சனத்தை வைத்தபடி அந்நாடகம் செல்லும்.கடந்த காலத்தில் கொண்டுபோய் என்னை –லாகூரிலேயே- வாழவைத்தது அந்நாடகம்.நாடகம் பார்த்த அந்தக் குளிர் இரவு வாழ்வில் மறக்க முடியாத இரவுதான்.

மீண்டும் ஒரு ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பீகாரின் தலைநகரான பாட்னாவில் ஜன்வாதி லேகக் சங்கின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது.இந்தி மற்றும் உருது எழுத்தாளர்கள் மாநாடு அது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக சகோதரப் பிரதிநிதியாக வாழ்த்திப்பேச நான் அங்கு போயிருந்தேன். முதல் நாள் மாலை இந்துத்வ எதிர்ப்புப் பேரணியைத் துவக்கி வைக்க சாட்சாத் ஹபிப் தன்வீர் சாரே வந்துவிட்டார். பரவசமடைந்த நான் ஓடிப்போய் கூட்டத்தோடு கூட்டமாகக் கை குலுக்கினேன்.

மாநாட்டைத்துவக்கி வைத்து அவர்தான் பேசினார்.அப்போது அவருடைய நாடகங்களை நடத்த விடாமல் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தார்கள்.அரங்குகளில் அவருடைய நாடகம் பார்க்க வந்த மக்களின் மீது கல் வீசுவது அவருடைய மற்றும் அவர் குழுவினருடைய வாகனங்களை மறித்துத் தாக்குதல் தொடுப்பது என்கிற அவர்களின் பிறவிக்கடனை ஆற்றிக்கொண்டிருந்த நேரம்.நான் அவர்களுக்குப் பணிய மாட்டேன்.நாடகம் எனது பிறப்புரிமை என்று மாநாட்டில் கம்பீரமாகப் பிரகடனம் செய்தார்.உங்களை எல்லாம் பார்த்தபிறகு நான் இன்னும் கூடுதலான தெம்படைகிறேன்.இன்னும் அதிக வாழ்நாளை இன்று பெற்றுத் திரும்புகிறேன் என்று பேசினார்.

நாடகம் குறித்த அவருடைய பார்வைகள் அவரால் எழுதப்படவேண்டும் என்று அரங்கவியலாளர் எல்லோரும் -உலகம் முழுதும்- ஆவலுடன் விரும்பினார்கள்.ஆனால் அவர் நாடகம் போடாமல் சும்மா ஓய்வில் இருந்தால்தானே எழுதுவார்.உடல்ரீதியாக இயங்க முடியாமல் போனால் மட்டுமே அது நடக்கும்.அப்படிச் சில காலம் படுத்த படுக்கையாகி எழுத மாட்டாரா என்று கூடப் பலர் ரகசியமாக மனதுக்குள் விரும்பினர்.

ஆனால் அவர் உஅடலும் உள்ளமும் ஓய்வே எடுக்கவில்லை.நாடகத்துக்காகவே வாழ்ந்த அம்மாமனிதன் இறக்கும்வரை நாடகம் படைப்பதையும் மக்களிடம் நேரடியாகக் கொண்டு செல்வதையும் ஒருநாளும் நிறுத்தவே இல்லை.

நேற்று(8-6-09) அவர் நம்மிடமிருந்து விடை பெற்றார்.

வெற்றிடத்தில் நிற்கிறோம்.

Wednesday, April 15, 2009

பாவத்தில் பெரிய பாவம்

folk-1

folk-2 சென்னை சங்கமம் என்ற பெயரில் கவிஞர் கனிமொழி அவர்கள் முன்முயற்சியில் தமிழகம் முழுவதுமுள்ள நாட்டுப்புறக்கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்து ஆங்காங்கு பார்க்குகள் கடற்கரைகள் என மாநகர மக்கள் கூடும் இடங்களில் நிகழ்ச்சிகளைப் ‘போட்டுக்காட்டிய’போது அம்முயற்சிகள் மீது பலருக்கும் பலவிதமான விமர்சனங்கள் இருந்தன.என்றபோதும் நான் அதை வரவேற்கவே செய்தேன்.

கோவில் திருவிழாக்களும் நாங்கள் நடத்தும் கலை இரவு மேடைகளும் தவிர வேறு வாய்ப்புகள் கிட்டாத அக்கலைஞர்களுக்கு இப்படி ஒரு திறப்பு கிடைத்தது பற்றி மகிழ்ச்சியே அடைந்தேன். தவிர தி.மு.க. போன்ற ஒரு கட்சி தங்கள் ஊர்வலங்களுக்கு மட்டுமே நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டிருந்த நிலை மாறி கௌரவத்தோடு அக்கலைஞர்களைப் பார்க்கும் பார்வையை அக்கட்சிக்குள் கொண்டுவர கனிமொழி முயற்சிக்கிறார் என்றுதான் நினைத்தேன்.

நாட்டார் கலைகள் மற்றும் நவீன இலக்கியம் இரண்டோடும் எவ்விதத் தொடர்புமற்ற தி.மு.க.வுக்குள் இவற்றைக் கொண்டுசெல்லும் ஆர்வம் கவிஞர் கனிமொழிக்கு இருப்பதாக நான் நம்பினேன்.

இப்போது 15 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட சூழலில் திருவண்ணாமலையில் நாட்டுப்புறக்கலைஞர்களைக் கூட்டி தி.மு.கவுக்குப் பிரச்சாரம் செய்ய நாள் ஒன்றுக்கு ஒரு கலைஞருக்கு ரூ.800 வீதம் ஒவ்வொரு கலைஞருக்கும் ரேட் பேசியிருப்பதாக கலைஞர்கள் நம்மிடம் சொன்னபோது அதிர்ச்சி ஏற்பட்டது உண்மை. எல்லாத்திலேயும் வாயை வச்சிட்டாங்களே என்கிற வருத்தம் ஏற்பட்டது. ஒரு கட்சி அரசியல்வாதி என்கிற முறையில் கனிமொழி MP அவர்கள் இவ்வாறு யாரையும் ஏற்பாடு செய்ய முழு சுதந்திரமும் உண்டு என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.ஆனால் சென்னை சங்கமத்தின் மண்டல அமைப்பாளர்கள் உட்பட அந்த ஏற்பாடு முழுவதையும் அப்படியே தேர்தல் களத்துக்கு மடைமாற்றம் செய்வது வீணாக அவர்மீது ஒரு நல்ல அபிப்ராயத்தை வைத்திருந்தோமே என்கிற ஏமாற்ற உணர்வைத் தருகிறது.

அதைவிடவும் இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் கடந்த 35 ஆண்டுகளாக நாட்டுப்புறக்கலைஞர்களோடு – அவர்கள் வாழ்விலும் தாழ்விலும் நாமும் நம் அமைப்பும் கூட நின்றுகொண்டிருக்க காசு என்கிற ஒன்று இல்லாத காரணத்தால் நாம் அவர்களை இப்படி விட்டுக்கொடுக்க நேரிட்டு விட்டதே என்கிற ஆழமான ஆதங்கமும் ஏற்படுகிறது.

திமுக வின் மைய அச்சாகத் திகழும் கலைஞர் குடும்பம் 40களில் அவர்களின் கட்சிக்காகச் சில தியாகங்களைச் செய்துள்ளனர்.பழைய தியாகங்களின் பேரால் பிற்காலத்தில் அவர்கள் செய்த பல பாவங்களிலெல்லாம் பெரிய பாவம் ஜனங்களை corrupt செய்து ஓட்டுக்காகக் கை நீட்டிக் காசு வாங்க massive ஆகப் பழக்கப் படுத்தியதுதான்.அதிமுக வும் விதிவிலக்கல்ல என்றபோதும் திருமங்கலத்தில் தொடங்கி மதுரை நாடாளுமன்றத்தொகுதியில் அண்ணன் அஞ்சா நெஞ்சர் (எந்தப் பானிப்பட் போரில் அண்ணன் களம் கண்டார் என்று தெரியவில்லை போஸ்டரெல்லாம் போர்ப்பரணிதான் ) இப்போதும் நடத்திவரும் பட்டுவாடா மகிமை ஜனநாயக இந்தியா இதுவரை காணாத உச்ச பட்ச பாவச்செயலாகும்.நரேஷ் குப்தாவின் அறிக்கைகளே சான்று.

அந்த வழியில் பார்த்தால் நாட்டுப்புறக்கலைஞர்களை ரேட் பேசி ஏற்பாடு செய்வது ஒன்றும் பெரிய பாவமில்லைதான்.

Monday, April 6, 2009

அள்ளிப்பார்க்க யாருமில்லை

solavadai

எழுத்தாளர் மாதவராஜ் தன்னுடைய வலைப்பக்கத்தில் சொலவடைகள் பற்றி ஓர் அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார். அப்பதிவு ஏற்படுத்திய தூண்டுதலில் இப்பதிவு....

சொலவடைகள் என்பவை பழமொழிகள் அல்ல.பழமொழி என்பதும் சொலவடை போல அனுபவத்திலிருந்து பிறப்பதுதான்.ஆனாலும் அது உள்ளூர் அறிவாளி ஒருவரால் வார்த்தைகள் ’செம்மை’ப்படுத்தப்பட்டு ஒரு சுத்தமான finishing effect உடன் இருக்கும்.ஆனால் சொலவடை என்பது தன்னளவில் முழுமையான பொருல் கொள்ளத்தக்கதாகவும் இருக்கும்.சில சொலவடைகள் அந்த சந்தர்ப்பத்தோடு பொருத்திப் பார்த்தால் இன்னும் கூடுதல் அர்த்தம் தருவதாக இருக்கும்.

“ காரணம் சொல்பவன் காரியம் செய்யான் “ என்பது பழமொழி. ‘பேச்சுப்படிச்ச நாயி வேட்டைக்கு உதவாது’ என்பது சொலவடை.’ வினை விதித்தவன் வினை அறுப்பான்.தினை விதைத்தவன் தினை அறுப்பான்’ என்பது பழமொழி ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும் என்பது சொலவடை.

சொலவடை என்பது மக்கள் மனசிலிருந்து அப்படியே வந்து விழுந்த வார்த்தைகளாக இருக்கும்.செதுக்குதல் இருக்காது.ஆகவே இயல்பாகவே நமக்குப் பழமொழிகளைவிட சொலவடைகளின் மீது பெரும் ஈர்ப்பு உண்டாகிவிடுகிறது.பண்பாடு குறித்து ஆழமான ஆய்வுப்பார்வையோடு கருத்துக்களை முன்வைத்த அந்தோனியோ கிராம்ஷி ( இவர் முசோலினி ஆட்சிக்காலத்தில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகாலம் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டு சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டவர்.இத்தாலிய கம்யூ.கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவர்) folklore –நாட்டார் வழக்காறுகள் பற்றிக் குறிப்பிடும்போது அவை உழைக்கும் மக்களின் உலகக்கண்ணோட்டத்தை வெளிப்படுத்துபவையாக இருக்கும் என்று குறிப்பிட்டார். அதே சமயம் அவை எல்லாவிதமான (முற்போக்கு மற்றும் பிற்போக்கான) சிந்தனைகளின் அருங்காட்சியகமாகவும் இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

தங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்கும்போது

‘ தட்டிப்போட்ட ரொட்டி பொறட்டிப்போட நாதியில்லை’ என்பார்கள்.இதே விரக்தியான தொனியில் ஏராளமான சொலவடைகள் உள்ளன.

‘அரிசின்னு அள்ளிப்பார்ப்பாரும் இல்லே

உமின்னு ஊதிப்பார்ப்பாரும் இல்லே’

“ குமறுன்னு இல்லாம வாக்கப்பட்டுக்கிட்டேன்

மலடுன்னு இல்லாம பிள்ளப்பெத்துக்கிட்டேன்”

அதுக்கு மேல சொல்ல என்ன இருக்கு என்கிற வார்த்தைகள் சொல்லாமல் விடப்பட்டு நிற்கும்..இவை வெறும் சொலவடைகளாக மட்டுமின்றி சுதந்திர இந்தியாவின் 60 ஆண்டுகால அரசியலின் மீதும் வளர்ச்சி பற்றிய சிதம்பரம்களின் வாய்ச்சவடால்கள் மீதும் எளிய மக்கள் காரி உமிழ்ந்த வார்த்தைகளாகவும் நாம் கொள்ளலாம்.

தட்டிப்போட்ட ரொட்டி- புரட்டிப்போட நாதியில்லை என்பதில் காட்சிப்பூர்வமாக நாம் பெறும் அதிர்ச்சி பெரிது.சொலவடைகள் பெரிதும் காட்சிகளாக நம் மனதில் விரியும் தன்மை கொண்டவை.

ஆங்கிலக்கல்வி நுழையாத சுத்தமான கிராமத்து மனங்களிலிருந்து வந்தவை இவை என்பதால் கல்லாத மக்களின் சிந்தனை முறைப்படி காட்சிப்பூர்வமாகவே வந்து விழுகின்றன.

சிறிதுகாலம் பேராசிரியர் ச.மாடசாமி அவர்களின் தலைமையில்

( என் வாழ்வில் பெரும் மனக்கிளர்ச்சியை – மனத்திருப்பத்தை உண்டாக்கிய ஆளுமை இவர்.இவருடைய புத்தகங்கள் வாசல் பதிப்பகத்திலும்(9842102133)பாரதி புத்தகாலயத்திலும்( 9444960935) கிடைக்கும்)

தென்மாவட்டங்களில் நாட்டார் வழக்காறுகளை இரண்டாண்டுகாலம் சேகரித்துத் தொகுத்து ஆய்வு செய்துகொண்டிருந்தோம்.சொலவடைகள் ஆயிரக்கணக்கில் வந்து

குவிந்திருந்தன.அவற்றை உணர்வுகளின் அடிப்படையில் பிரித்துப்பார்த்தோம்.கிண்டல்,கேலி,விரக்தி,வருத்தம்,ஏளனம் என பலவிதமான உணர்வுகளில் அவை இருந்தன.கோபம் என்கிற தலைப்பில் ஒன்றும் கிடைக்கவில்லை.

நான் என் வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நினைத்துப்பார்க்கும் பாரதியின் கவிதை வரிகளைப்போல பல சொலவடைகள் மனசைத் தாக்குவதுண்டு.ஊரூராகச் சுற்றிவிட்டு சிலசமயம் ஏற்படும் சோர்வான மனநிலையில்

நாலு வீட்டுல கல்யாணம்

நாய்க்கு அங்கிட்டு ஓட்டம் இங்கிட்டு ஓட்டம்

என்கிற சொலவடை மனசில் ஓடும்.பொது வாழ்வில் எல்லா நேரமும் மனதுக்குப் பிடித்த வேலைகளே செய்துகொண்டிருக்க முடியாது.வெட்டிவேலைகள் நிறைய வரும்.அப்போதெல்லாம்

எள்ளு எண்ணெய்க்குக் காயுது

எலிப்புழுக்கை எதுக்குக் காயுது

என்று தன்னிரக்கம் வரும்.

இப்போது தேர்தல் காலம்.ஒவ்வொரு கட்சிகள் பேசுவதையும் செய்வதையும் பார்க்கும்போது நமக்குச் சில சொலவடைகள் நினைவுக்கு வந்து சிரிப்பூட்டுகின்றன.

2011இல் முதல்வராகப்போகும் சரத்குமாரை நினைத்தால்

“ ஊசிப்போன மொச்சையிலே உழக்கு வாங்க மாட்டாதவன்

பாம்பே அல்வாயிலே பத்து டன் போடுன்னானாம்”

கூட்டணி-பேச்சுவார்த்தை-சீட்டுகள் பற்றி

”பணியாரம் சுட்ட வீட்டுக்கு

பத்துவாட்டி போனாளாம்

அவளும் வெக்கப்பட்டு ஒண்ணு கொடுத்தாளாம்”

ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆ.ராசாவுக்கு மற்றும் சகல ஊழல் பேர்வழிகளுக்காக...

1.”படப்போட மேயுற மாட்டுக்கு புடுங்கிப் போட்டா காணுமா”

2.‘கோழி களவாணிப்பய குடம் கிடைச்சா விடுவானா’

3.’அடிச்சுப்புடுங்குறவன் கண்டெடுத்தாக் குடுப்பானா’

மதுரைத்தொகுதியில் மு.க.அழகிரியை எதிர்த்து மார்க்சிஸ்ட் போட்டி

‘ கரட்டுக் கட்டைக்கு

முரட்டுக்கோடாரி’

சுடுகாட்டுக் கொட்டகை போடறதிலும் மாட்டுத்தீவனத்திலும் ராணுவதளவாடங்கள் வாங்குவதிலும் என எல்லாத்திலேயும் ஊழல்

‘நக்குற நாயிக்கு

செக்குன்னு தெரியுமா செவலிங்கம்னு தெரியுமா’

காங்கிரஸ்-திமுக சாதனைப்பட்டியல்கள் வெளியீடு

‘ உழக்கு அரிசி அன்னதானம் விடிய விடிய மேள தாளம்’

இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம்.

சொலவடைகள் எனப்படும் இந்த மக்கள் மொழி ஒரு குறிப்பிட்ட காலத்தோடு நின்று விட்டதா? என்பது ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.

Latest ஆன சொலவடைகள் என்று பார்த்தால்

’சாமியே சைக்கிள்லே போகுது

பூசாரி புல்லட் கேட்டானாம்’

கஞ்சிக்கு லாட்டரி

கைக்கு பேட்டரியா

போன்றவற்றையும் ரயில் சம்பந்தமான சொலவடைகள் விடுகதைகளையும் கூறலாம்.அதாவது புல்லட் பைக்,பேட்டரி எனப்படும் டார்ச் லைட் அறிமுகமான காலம் வரை சொலவடைகள் பீறிட்டு வந்துள்ளன.அதாவது காலனிய ஆட்சிக்கு முன் வரை என்று கொள்ளலாமா?அல்லது ஆங்கிலக்கல்வி பரவலாவதற்கு முன்வரை எனக்கொள்ளலாமா? கல்வி வந்து மக்களை ஒரு மௌனக்கலாச்சாரத்தில் அமிழ்த்தி விட்டதா?இந்த Cultural Silence தானே நாம் எதிர்கொள்ள வேண்டிய பெரும் பிரச்னையாக உள்ளது? புதிய சொலவடைகள் ஏதும் உண்டா? சினிமா வசனங்கள் சில – வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க என்பது போல மக்களின் பேச்சு வழக்கில் புகுந்துள்ளனவே அவைதான் இன்றைய சொலவடைகளா ? அவை வெளியிலிருந்து வந்தவை ஆயிற்றே?மக்கள் மனசிலிருந்து வருகை நின்று போனதா?

இப்படிப் பலப்பல கேள்விகளோடு சொலவடைகள் நம் தொடுதலுக்காகக் காத்திருக்கின்றன.அல்லது சொலவடைகளே அரிசின்னு அள்ளிப்பார்ப்பாரும் இல்லாம உமின்னு ஊதிப்பார்ப்பாரும் இல்லாமக் கிடப்ப்பதாகவும் கொள்ளலாம்.