எங்கள் தோழர் உ.ரா.வரதராஜன் என்கிற என் முந்தைய பதிவிற்கு வந்த எதிர்வினைகள் மற்றும் அதற்குப்பிறகு சில பத்திரிகைகளில் வந்த கட்டுரைகள், பெண்கள் சந்திப்பு என்கிற அமைப்பினர் இது தொடர்பாக நேற்றுச் சென்னையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு போன்றவற்றை பார்த்த பிறகு மீண்டும் இதுபற்றி எழுதத் தோன்றியது.
கட்சிக்கு வக்காலத்து வாங்குவதாகவும் கட்சியின் தவறை நான் மூடி மறைப்பதாகவும் You too tamilselvan என்றும் சில தோழர்கள் எழுதியுள்ளனர்.சரியாகவும் தெளிவாகவும் சொல்லியிருப்பதாகவும் சில தோழர்கள் எழுதியிருக்கிறார்கள்.எதிர்வினை ஆற்றிய ஒவ்வொருவருக்கும் நன்றி.
நடந்திருப்பது ஒரு மகத்தான மனிதரின் தற்கொலை.ஆகவே இவ்வளவு கோபங்களும் வருத்தங்களும் ஆத்திரங்களும் எழுவது இயற்கை.அவை அத்தனையயும் கட்சியை நோக்கி மட்டுமே திருப்புவதில்தான் எனக்கு உடன்பாடு இல்லை.உண்மையில் அவரது தற்கொலை எனக்கும் கட்சியில் பல தோழர்களுக்கும் இரண்டாவது அதிர்ச்சிதான்.முதல் அதிர்ச்சி அவருக்கு நாங்கள் அறியாத இன்னொரு வாழ்க்கை இருப்பது பற்றி அறிய நேர்ந்தபோதுதான்.( You too com WRV)அப்படி ஒன்றும் அவருக்கு இருக்கக்கூடாது என்று வாதிடுகிற முட்டாள்கள் அல்ல நாங்கள். அது அவருடைய சொந்த விஷயம்.ஆனால் அவருடைய துணைவியாருக்கு அதில் ஆட்சேபம் இருக்கும்போது அது சமூக விஷயமாகிவிடுகிறது அல்லவா? டைவர்ஸ் கேட்கிற அளவுக்கு அவர் மனம் வெறுத்ததை சும்மா சாதாரணமாக எடுத்துக்கொள்ளச் சொல்வது சரியான பார்வையா? நேரில் அழைப்பது/போனில் அழைப்பது/எஸ்.எம்.எஸ் மூலம் அழைப்பது எதுவானாலும் அது பாலியல் துன்புறுத்தல் இல்லையா? அது பற்றி சம்பந்தப்பட்ட பெண் புகார் தரவில்லை என்று அவருடைய வாதங்கள் அடங்கிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் தோழர் உ.ரா.வ அவர்களே பின்பற்றிய வழக்கமான கட்சி விசாரணைகளில் கடைப்பிடிக்கப்படும் எல்லா வழிமுறைகளிலும் விசாரித்து உறுதியான பின்னரே அவரது வாதங்களையும் கேட்ட பின்னரே அவர்மீது நடவடிக்கைக்கு (நாங்கள் யாரையும் தண்டிப்பதில்லை) முடிவு எடுத்தோம் என்று தோழர் பிரகாஷ் காரத் அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதற்கு மேல் எனக்குச் சொல்ல இதில் ஒன்றுமில்லை.ஆதாரங்களை விடவும் கம்யூனிஸ்ட் வாழ்க்கையின் தார்மீக உணர்வுகளைத்தான் நாம் முக்கியமாகக் கருத வேண்டும்.அவரது(உ.ரா.வ) பதில் மனுவில் உள்ள வார்த்தைகள் மட்டுமே போதும் என்று நினைப்பவர்கள் கட்சியைத் தாக்கத்தான் செய்வார்கள்.அப்பதில் மனு அவரது இறுதி வார்த்தைகள் அல்ல.மத்தியக்குழுக் கூட்டத்தில் அவர் பேசியதே இறுதி வார்த்தைகள்.ஒரு கம்யூனிஸ்ட்டாக மத்தியக்குழு நடவடிக்கையை ஏற்கிறேன்..ஆனால் கண்ட்ரோல் கமிசனுக்கு மேல் முறையீடு செய்யும் எனது உரிமையைப் பயன்படுத்துவேன் என்பதுதான் அவரது இறுதி வார்த்தைகள்.
மறைந்த எங்கள் தலைவரின் புகழுக்குக் குந்தகம் வரக்கூடாது என்கிற உணர்வோடும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் அவரது குடும்பத்தினர் உணர்வுகளைக் கணக்கில் கொண்டும் கட்சி ஒரு அளவுக்கு மேல் விளக்கிப் பேச முடியா
மார்க்சிஸ்ட் கட்சிக்குள் இரண்டாவது நெறிப்படுத்தும் இயக்கம் நடந்துகொண்டிருக்கிறது. அது குறித்தும் முதலாளித்துவ ஊடகங்களில் சிலர் நக்கலாக எழுதியிருக்கிறார்கள். தனிநபர்களைத் தாக்குவதற்கு நெறிப்படுத்தும் இயக்கத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று ஒரு கட்டுரையாளர் இலவச ஆலோசனையும் வழங்கியிருக்கிறார்.கம்யூனிஸ்ட் கட்சின்னா என்னான்னே தெரியாமல் கட்சியைப் பற்றி 700 பக்கத்துக்கு ஜெயமோகன் ஒரு நாவல் எழுதியது போலத்தான் இதுவும்.சீனக்கம்யூனிஸ்ட் கட்சி கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 12 முறை கட்சிக்குள் நெறிப்படுத்தும் இயக்கத்தை நடத்தியுள்ளது.உலகமயத்தின் தாக்குதலால அரிமானத்துக்கு ஆளாகிவரும் தனிமனித சுதந்திரம்,சுயமரியாதை,சமூக மதிப்பீடுகள் , சீரழிந்து வரும் ஆண்-பெண் உறவு,ஒரு பட்டனைத்தட்டினால் வீட்டுக்குள் வந்து விழுகிற ஆபாசங்கள் என இவை நம் எல்லோரையும் தாக்கிக் கொண்டிருக்கின்றன.ஏற்கனவே பெண் குறித்த ஜனநாயகமற்ற ஆணாதிக்கச் சிந்தனை ஊதிப்பெருத்துள்ள நம் இந்திய சமூகத்தில் உலகமயம் பெண்கள் மீதான வன்முறைக்கு மேலும் புதிய புதிய வடிவங்களையும் வண்ணங்களையும் சேர்த்து வருகிறது.மக்களை-உழைப்பாளிகளையும் கூட –அது வெறும் கன்ஸ்யூமர்களாக ஆக்கி வருகிறது.மார்க்சியம் என்கிற அறிவியல்பூர்வமான அணுகுமுறையும் கண்ணோட்டமும் கொண்டுதான் இந்த முதலாளித்துவ /நிலப்பிரபுத்துவ/உலகமயக் கருத்தோட்டங்களிலிருந்து ஒருவர் விடுபட முடியும்.இவற்றை கம்யூனிஸ்ட்டுகள் அந்நிய வர்க்கக் கருத்துக்கள் என்று குறிப்பிடுகிறோம்.பெண்ணை வெறும் உடம்பாகவும் போகப்பொருளாகவும் ஆணுக்கு அடிமையாகவும் பார்ப்பது அந்நிய வர்க்கக் கருத்து என்கிறோம்.நமக்கான உழைக்கும் வர்க்கக் கருத்தல்ல அது என்கிறோம்.அந்நிய வர்க்கக் கருத்துக்கள் நம் குடும்பங்கள்,பள்ளி கல்லூரிகள்,மீடியாக்கள்,கலை இலக்கியங்கள்,சமயங்கள் எனப் பல்வேறு பண்பாட்டு நிறுவனங்களின் மூலம் நம் மனங்களில் திணிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் மார்க்சியத் தத்துவத்தின் பலம் கொண்டு எதிகொள்ளவே கம்யூனிஸ்ட் கட்சிகள் நெறிப்படுத்தும் இயக்கங்களைத் தொடர்ந்து நடத்துகின்றன.
காலமெல்லாம் மார்க்சியவழியில் நின்ற ஒரு தலைவரையே அந்நிய வர்க்கக் கருத்தாக்கத்திடம் நாங்கள் இழந்து விட்டதாகவே நான் உணர்கிறேன்.எனக்குள்ளும் பல அந்நிய வர்க்கக் கருத்துக்கள் ஊடுருவியிருக்கின்றன.அவற்றுக்கெதிராகத் தொடர்ந்து எனக்குள் போராடி வருகிறேன். ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் அப்படித்தான்.அந்த அகப்போராட்டம் நம் வர்க்கப்போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும்.பலகாலம் சரியாக வாழ்ந்தாலும் சில கணங்களில் நாம் தோற்றுப்போகும் வாய்ப்பு முன்னெப்போதையும் விட இப்போது அதிகரித்துள்ளது.
ஆண்-பெண் உறவு குறித்து எங்களுக்குப் பாடம் எடுக்க சில ட்யூஷன் வாத்தியார்கள் கிளம்பி இருக்கிறார்கள்.நன்று.யாரிடமிருந்தும் கற்றுக்கொளவதற்கு எனக்கு எப்போதும் தயக்கமிருந்ததில்லை.சதா குடும்ப வாழ்விலிருந்து பிரிந்து ( அந்த மன அழுத்தம் ஒருபுறம் இருந்து கொண்டே இருக்க ) பொது வீதிகளில் மக்களுக்கான இயக்கங்களில் கிடக்கும் எம் கட்சித்தோழர்களை விடக் குடும்பத்தைப் பற்றி வேறு யாருக்கு அதிகம் தெரியும்?
பூர்ஷ்வாக்கட்சியினரும் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தபோதிலும் அவர்கள் அனுபவிக்கும் சொத்து சுகங்கள் எங்கள் தோழர்கள் அறியாதவை. விரும்பாதவை. வாழ்வை வறுமைக்குத் தின்னக்கொடுத்தாலும் கருத்தோட்டத்திலும் கண்ணோட்டத்திலும் மக்களுக்காக உழைப்பதிலும் பெரும் செல்வந்தர்களாக வாழும் எங்கள் கட்சியின் தோழர்கள் இச்சமூகத்தின் மகத்தான சொத்துக்களாவர்-அதை இச்சமூகம் அறிந்துகொள்ளாத போதிலும்கூட.குடும்பத்தில் இணக்கத்தை உருவாக்கும் போராட்டத்தையும் வறுமையில் குடும்பம் வாடிவிடாமலிருப்பதற்கான போராட்டத்தையும் நடத்திக்கொண்டேதான் எம் தோழர்கள் கட்சிப்பணியாற்றி வருகிறார்கள். பல குடும்பங்களில் இணக்கம் வந்து விடுவதில்லை.அந்த சோகத்தையும் சுமந்துகொண்டுதான் நாங்கள் பணியாற்றுகிறோம்.தோழர் உ.ரா.வ. அவர்களின் மரணத்தை முன் வைத்து இதுபோன்ற விஷயங்கள் பொதுத் தளத்தில் விவாதிக்கப்பட்ட்டால் அதை வரவேற்கலாம்.அதில் பங்கேற்கவும் செய்யலாம்.எல்லாவற்றையும் எம்மை அவதூறு செய்யவே பயன்படுத்தும்போது ஒவ்வொருவரையும் சந்தேகத்தோடே பார்க்க வேண்டியிருக்கிறது.பாலியல் உறவுக்கான சுதந்திரமான தேர்வுக்கான உரிமை பற்றியெல்லாம் சில பெண்ணிய வாதிகள் இப்போது எம்மை நோக்கிப் பேசுகிறார்கள்.ஒரு கோப்பைத் தேநீர்த் தத்துவமெல்லாம் தோழர் லெனின் காலத்திலேயே பேசப்பட்டு நிராகரிக்கப்பட்ட்டதை நாம் நினைத்துப்பார்க்கிறோம்.எந்த சமூகத்தில் நாம் வேலை செய்துகொண்டிருக்கிறோம் என்கிற சுய பிரக்ஞையோடு நாம் பேச வேண்டியிருக்கிறது.
வாழ்வாரை வாழ்த்துகிற சமூகம் இது. நாலு பொண்டாட்டி வைத்துக்கொண்டு கோடி கோடி சொத்து சேர்க்கும் அரசியல்வாதிகளை பொன்னே மணியே என்று வாழ்த்துவதும் சொந்தக் கட்சிக்காரர்களை ஈவிரக்கமின்றிப் படுகொலை புரிந்தபோதும் மனித உரிமை பேசாமல் மௌனமாக இருப்பதும் ஏழை எளிய மக்களுக்காகப் போராடும் எமது இயக்கத்தை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் போட்டுத் தாக்குவதும்தான் எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.
அணுசக்தி ஒப்பந்த எதிர்ப்பு,தனியார் மய எதிர்ப்பு போன்ற பல போராட்டங்களினால் உலக சக்கரவர்த்தி அமெரிக்காவும்,விலைவாசி உயர்வுக்கெதிராகவும் ,பொதுத்துறைகளை ரேட்டுப் போட்டு விற்கும் மத்திய அரசின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதாலும் இந்திய ஆளும் வர்க்கமும் இந்திய இடதுசாரிகளின் மீது கோபமாக இருக்கிறார்கள்.எல்லா நன்மைகளையும் தமிழர்களுக்குச் செய்து முடித்துவிட்ட சாதனைக்களைப்பில் இருக்கும் தமிழக ஆட்சியின் தலைவருக்கு வாரம் ஒரு விருது வழங்கும் விழா தேவையாக இருக்க மார்க்சிஸ்ட்டுகள் குடிமனைப்பட்டா,கோவில் நுழைவுப்போராட்டம்,அருந்ததியர் வாழ்வுரிமை என்று எப்போதும் அரசு செய்யாததையே சொல்லிக்காட்டி அபசுரம் பாடிக்கொண்டிருக்கிரார்கள்..ஆகவே தமிழக மக்கள் உங்கள் மீது காரித்துப்புவார்கள் என்று தலைவர் காட்டமாகிக் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்.இம்மூன்று ஆளும் சக்திகளின் ஊதுகுழல்களாக செயல்படும் ஊடகத்துறையின் ஒரு பகுதியினர் இடதுசாரிகளைத் தாக்கிட ஒரு வாய்ப்பாக இத்துயர்மிகு தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
எத்தனையோ இடர்களைத் தாண்டி முன்னேறி வரும் நாங்கள் இதையும் தாண்டி முன்னேறுவோம்.ஒன்றுபட்டு இச்சவால்களை முறியடிப்போம்.
(பி.கு. கட்சியில் பதவி கிடைக்கும் என்பதற்காக நான் இப்பதிவுகளை எழுதியிருப்பதாக ஒருவர் பெயர் இல்லாமல் பினாமியாக ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.அந்த ஆங்கில மொழியை வைத்து அவர் யாராக இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது.இவ்வளவு குரூரமாகவா எழுதுவது? கட்சி உறுப்பினர் என்கிற ஒன்றைவிட உயர்ந்த பதவி எங்கள் கட்சியில் வேறு எதுவும் இல்லை தோழரே.பதவி என்பதும் அதிகாரம் செலுத்துவது என்பதும் கட்சிக்குள் ஒரு வேலைப்பிரிவினை மட்டுமே என்று எங்கள் தோழர் உ.ரா.வ அவர்கள் எனக்குச் சொன்னதையே உங்களுக்கும் திருப்பிச் சொல்கிறேன்.)