Tuesday, February 14, 2012
Tuesday, January 10, 2012
மாற்றுத்திறனாளி விக்னேஷ்வர் படுகொலை
நில மோசடிக்கென்று தனி காவல்துறை விசாரணையெல்லாம் நடப்பதாக சொல்லப்படுகிறது.திமுக முன்னாள் அமைச்சர்களெல்லாம் கைதாகவாதாக பத்திரிகைகளில் படங்கல் வருகின்றன.ஆனால் என்ன ஆட்சி மாறினாலும் இந்த மாஃபியா கும்பலின் ஆதிக்கம் தமிழகத்தை ஆக்டோபஸ் போல கவ்விக்கொண்டிருக்கிறது.
நேற்று தூத்துக்குடி மாவட்ட சிபிஎம் செயலாளர் கனகராஜ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.அவரது துணைவியார் தலைக்காயத்துடன் மருத்துவமனையில் இருக்கிறார்,இன்று இதோ நம் அன்புத்தோழன் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் செயல்வீரன் புவனேஷ்வரன் சென்னைக்கு அருகே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.நினைக்கவே நெஞ்சம் பதைக்கிறது.
திரு.புவனேஷ்வரன் அவர்கள் ஆவடி அருகே மோரே கிராமத்தில் நில மோசடிக்கு எதிராகக் கடந்த 5 ஆண்டுகளாகப் போராடி வருபவர்.அப்பகுதியிலுள்ள வீராபுரம் குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலாலராகவும் பணியாற்றி வருபவர்.தொடர்ந்த போராட்டங்களின் விளைவாக கடந்த ஆண்டு சிலருக்கு மோசடியாளர்களிடமிருந்து நிலம் மீட்டுத்தரப்பட்டது.புவனேஷ்வரன் உள்ளிட்ட இன்னும் சிலருடைய அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்படவில்லை.சட்டரீதியாகவும் ஜனநாயக அடிப்படையிலும் அவர் தொடர்ந்து போராடி வந்த சூழலில் நேற்று 10 ஆம் தேதி பட்டப்பகலில் அவர் நில மோசடிக்கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும்.உரிய தண்டனை பெற வேண்டும்.நில மோசடியாளர்களுக்கு உடந்தையாக இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரிக்கப்பட்டுக் கைது செய்யப்பட வேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய நிலம் மீட்டுத்தரப்பட வேண்டும்.கொலை மிரட்டல் பற்றி அறிந்தும் மெத்தனமாக இருந்த காவல்துறையும் விசாரிக்கப்பட வேண்டும்.
அனைவரும் கண்டனக்குரல் எழுப்புவோம்.அவர் அனைத்துவகை மாற்றுத்திரனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வடசென்னை மாவட்டப்பொருளாளராகப் பணியாற்றியவர்.
தீரமிக்க ஒரு தோழனை இழந்து நிற்கும் அவருடைய இயக்கத்துக்கும் குடும்பத்துக்கும் தோள் கொடுப்போம்.
Friday, October 21, 2011
மீண்டும் கொல்லப்பட்ட இமானுவேல் சேகரன்
காரிருள் சூழ்ந்த 1950களின் கரிய வானத்தில் தாரகைபோல் ஜொலித்த மகத்தான போராளி இமானுவேல் சேகரன், ஆதிக்க சாதியினரால் 1957இல் முதலில் கொல்லப்பட்டார். எனினும் ஒடுக்கப்பட்ட மக்களின் மனங்களில் அவர் உயிர்த்துடிப்பாக வாழ்ந்து வருகிறார். நினைவுகளிலும் அவர் வாழ்ந்திருக்கக் கூடாதென அஞ்சும் ஆதிக்க சாதியும் அதன் பாதுகாவலனான அரசும் மீண்டும் மீண்டும் அவரைக் கொன்று சாய்க்கிறது. ஃபீனிக்ஸ் பறவையைப் போல அவர் மறுபடியும் பிறக்கிறார். பிறக்கிறார், பிறப்பார் என்பதை அறியாமல்.
1952இல் இராணுவப் பணியை உதறிவிட்டு மக்களிடம் பணியாற்ற இராமநாதபுரம் பகுதிக்கு வந்து சேர்ந்த அவரை 6 ஆண்டு காலமே வாழ அனுமதித்தது ஆதிக்க சாதி. அந்த 6 ஆண்டு கால மின்னல் வாழ்க்கையில் அவர் செய்த “குற்றங்கள்” ஏராளம். அவற்றில் சில:_
1. தேவேந்திரகுலச் சங்கத்தின் மாவட்டப் பொறுப்பாளராகி தொலைபேசி மற்றும் வாகன வசதி இல்லாத அந்நாட்களில் ஊர் ஊராகச் சென்று ஒடுக்கப்பட்ட மக்களை அமைப்பாகத் திரட்டினார்.
2. அப்பகுதியின் ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைக்கும் அடாவடிகளுக்கும் ஆளான எல்லா சாதிகளைச் சேர்ந்த மக்களையும் நேச அணியாக ஒன்றுபடுத்தினார்.
3. பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி முதலான இடங்களில் வணிகர்களை மிரட்டி ‘மாமூல்’ வசூலித்து வந்த கூட்டத்தின் அடாவடிகளை மக்கள் ஒத்துழைப்புடன் தடுத்து நிறுத்தினார். வணிகர்களின் ஆதரவைப் பெற்றார்.
4. 1953 சித்திரைத் திருநாளில் இராமநாதபுரத்தில் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாட்டைக் கூட்டினார். தென் தமிழகமே அங்கு திரண்டது.
5. பேரையூர் பெருமாள் பீட்டர் அவர்களுடன் இணைந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைத்திடப் பணியாற்றினார்.
6. பண்பாட்டு ஒடுக்கு முறையின் வெளிப்பாடாகத் திகழ்ந்த கிராமப்புறக் கோவில் திருவிழாக்களில் ஊதியமில்லாத தொண்டூழியமாக தாழ்த்தப்பட்ட மக்கள் செய்து வந்த பறையடித்தல், இலவசமாக வைக்கோல் உள்ளிட்ட விவசாயப் பொருட்களை இலவசமாக வழங்குதல், ஊரைச் சுத்தம் செய்தல் போன்றவற்றை நிறுத்தினார். கோவில் பணிகள் எல்லாவற்றையும் சமத்துவமான முறையில் வேலைப்பிரிவினை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதன் காரணமாக பல ஊர்களில் பொதுவிழாக்கள் நின்றன. தாழ்த்தப் பட்டோர் தனி விழாக்கள் நடத்தலாயினர்.
7. இரட்டைக்குவளை எதிர்ப்பு மாநாட்டை அருப்புக்கோட்டையில் நடத்தியதோடு மட்டுமன்றி பலமுறை எச்சரித்தும் கேளாத டீக்கடைகளை மக்களைத் திரட்டிச் சென்று நேரடி நடவடிக்கைகளிலும் இறங்கியது _ சட்ட பூர்வமாக எண்ணற்ற வழக்குகளைப் பல தேநீர்க் கடைகளின் மீது பதிவு செளிணிதது.
8. 1957 மார்ச் பொதுத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு வாக்களிக்காத மக்களை _ குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களை அடையாளம் கண்டு ஆதிக்க சாதியினர் தாக்கியதைக் கண்டித்து இயக்கம் நடத்தியது,
“முத்துராமலிங்கத் தேவரின் சாயல்குடிக் கூட்டத்திற்குப் பிறகு அரிசனங் களும் காங்கிரசு ஆதரவாளர்களும் முதுகுளத்தூர் மறவர்களின் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். பல கிராமங்களில் சட்டம் ஒழுங்கே இல்லை. உடனடியாகத் தலையிடவும்’’ எனத் தமிழக முதல்வருக்குத் தந்தி அனுப்பினார்.
9. தந்தி அனுப்பிவிட்டுச் சும்மா இருக்கவில்லை. தாக்குதல்களை எதிர் கொண்டு திருப்பித் தாக்க மக்களுக்குப் பயிற்சி அளித்தார். எதிர்த்தாக்குதலால் நிலை தடுமாறிய ஆதிக்க சாதியினர் “பாதுகாப்பு’’ கோரி அரசுக்கு மனுவும் தந்தியும் அனுப்பினர். அந்தத் தந்தியை விட இந்தத் தந்தி அரசை வேகமாக இயக்கி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு எல்லாரையும் அழைத்தது.
இப்படி அடுக்கடுக்கான குற்றங்களைப் புரிந்த இமானுவேல் மீது ‘இயல்பாக‘க் கோபம் கொண்டது சாதியம். எல்லாவற்றுக்கும் மேலாக 9 மணி பேச்சுவார்த்தைக்கு சரியான நேரத்துக்கு வந்து காத்திருந்த எல்லா சாதித்தலைவர்களும் தாமதமாக பசும்பொன் முத்துராமலிங்கர் நுழைந்த போது எழுந்து நின்று மரியாதை செய்ய, இமானுவேல் தன் இருக்கையில் அமர்ந்திருந்தார். பேச்சுவார்த்தையில் முத்துராமலிங்கரின் பேச்சுக்குப் பேச்சு இமானுவேல் பதிலளித்தார். மாவட்ட ஆட்சியர் இறுதியாக சமாதானத்தை வலியுறுத்தி எல்லாத் தலைவர்களும் கையொப்பமிட்ட துண்டறிக்கையை வெளியிடலாம் என்றார். அப்போது உ.முத்துராமலிங்கர் அது பயனளிக்காது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு படிக்கத் தெரியாது என்றார். உடனே தலையிட்ட இமானுவேல் பிற எந்தச் சாதியாரையும் விட அதிகமான படிப்பறிவு கொண்டவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று பதிலளித்தார்.
இவ்வளவு திமிர் 1957இல் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவருக்கு எப்படி இருக்கலாம்? ஆகவே மேற்சொன்ன அடுக்கடுக்கான கொடும் குற்றங்களைப் புரிந்த இமானுவேல் சேகரனுக்கு இராமநாதபுரம் மாவட்ட சாதியம் மரணதண்டனை என்று தீர்ப்பு எழுதி ஒரு பஷீமீளியில் பாரதி நினைவு நாள் சொற்பொழிவாற்றி விட்டு வீடு திரும்பிய அவரைப் படுகொலை செளிணிது, தீர்ப்பை உடனே நிறைவேற்றியது.
இன்று 2011ல் கூட ஒரு வரலாற்று நோக்கில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் அரசியல் வாழ்க்கையை விருப்புவெறுப்பின்றி சார்பு நிலையின்றி அச்சமின்றி விமர்சித்து எழுதிட முடியாத நிலையே நீடிக்கிறது. எனில் 1957இல் இவ்வளவு துணிச்சலாக எழுந்து நின்ற இமானுவேல் சேகரன், ஒரு பள்ளப்பயலுக்கு இவ்வளவு திமிரா என்கிற கேஷீமீவியோடு கொல்லப்பட்டதில் வியப்பில்லை.
தன் உயிரை எடுத்து வைத்து இமானுவேல் பற்ற வைத்த விடுதலை நெருப்பு பற்றிப்படர்ந்தது. தென் மாவட்டங்களில் எப்பொழுதும் போல தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கலாம், அடிக்கலாம், உதைக்கலாம், வெட்டிச் சாய்க்கலாம் என்கிற கதை முடிவுக்கு வந்து விட்டது. அடித்தால் பதிலடி கிடைக்கும் என்கிற யதார்த்தம் நடைமுறைக்கு வந்துவிட்டது.
தஞ்சை மண்ணில் தாழ்த்தப்பட்ட மக்களின் மகத்தான தலைவராக செங்கொடியுடன் உயர்ந்த தோழர்.பி.சீனிவாசராவ் முழங்கிய ‘அடித்தால் திருப்பி அடி’ என்கிற முழக்கத்தின் எதிரொலிகளாகவே தென் மாவட்டங்களில் தலித் மக்கள் திருப்பித் தாக்கிய எதிர்வினைகளைப் பார்க்க வேண்டும். இராமநாதபுரத்திலோ தமிழகத்தின் இதர பகுதிகளிலோ ஒரு சீனிவாசராவ் தோன்றும் வரை வரலாறு காத்திருக்காதல்லவா? வரலாறு இமானுவேல் சேகரனையும் பெருமாள் பீட்டரையும் ஜார்ஜ் ஜோசப்பையும் படைத்துத் தந்தது. பிற்காலத்தில் ஜான் பாண்டியனையும் டாக்டர் கிருஷ்ணசாமியையும் தொல் திருமாவளவனையும் படைத்தளித்தது. இத்தலைவர்களில் சிலர் முன்வைத்த முழக்கங்களில் குறிப்பிட்ட சாதிகள் மீதான துவேஷ உணர்வு வெளிப்பட்டிருக்கலாம். அவற்றை நாம் விமர்சிக்கலாம்.
ஆனால் அத்தகைய கோஷங்களுக்குப் பின்னால் ஏன் பல்லாயிரக்கணக்கான தலித் மக்கள் அணி திரண்டார்கள் என்கிற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக விடை காண வேண்டுமல்லவா? ஆதிக்க சாதிகளின் வல்லந்தம் தலித் மக்களின் மனங்களில் ஏற்படுத்தியுள்ள வரலாற்றுக் காயங்களுக்கு ஏதோ ஒரு வகையில் இத்தலைவர்கள் முன்வைத்த ‘துவேஷ‘ முழக்கங்கள் மருந்தாக அமைந்தன.
பண்பாட்டு ரீதியாகப் பன்னெடுங்காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் மனங்களில் உயர்சாதியினர் மீதும் சாதிய அமைப்பின் மீதும் தீராக் கோபம் கனன்று கொண்டேதான் இருக்கும். அதை வெளிப்படுத்த முடியாத வன்முறையான புறச்சூழல் நிலவும் போது அது நாட்டுப்புறப் பாடல்களாக கதைகளாக சொலவடைகளாக வெளிப்பட்டு நிற்கும். அத்தனை விதமான நாட்டுப்புற ஆட்டங்களிலும் கதைகளிலும் பிராமணர்கள் கேலிக்கு உள்ளாக்கப்படுவதும் பகடி செய்யப்படுவதும் இன்று வரை தொடர்வதை நாம் இந்தக்கோணத்திலேயே புரிந்து கொள்ள வேண்டும்.
“வெள்ளாளன் போன வழி வெட்டவெளி”
“பிண்டத்துக்கு பிராமணன்
துண்டத்துக்கு துலுக்கன்
தெண்டத்துக்கு சம்சாரி
என்பன போன்ற சொலவடைகளையும் நாம் அடித்தட்டு மக்களின் வாழ்வனுபவ வரலாற்றின் பின்னணியில் வைத்தே புரிந்து கொள்ள வேண்டும்.
இதே எதிர்பண்பாட்டு மனநிலை தான் “இமானுவேல் சேகரன் குரு பூஜை” “தெய்வத் திருமகன் இமானுவேல் சேகரன்” போன்ற சொற் சேகரங்களை தலித் மக்கள் சுவரொட்டிகளிலும், ஃபிளக்ஸ் பேனர்களிலும் எழுதி வைப்பதிலும் ஒளிந்திருக்கிறது என்பதை கருத்தியல் ரீதியாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.. இந்த வார்த்தைகள் எவையும் ‘காப்பி ரைட் ‘ வாங்கப்பட்ட வார்த்தைகளுமல்ல. இன்றைய பரமக்குடிப் படுகொலைகளின் பின்னணியில் இத்தகைய வார்த்தைகளுக்கு ஒரு பங்கு இருக்கிறது.
நினைவஞ்சலி, வீரவணக்கம் போன்ற பல வார்த்தைகள் தமிழில் இருக்க தலித் மக்களின் ஒரு பகுதியினர் குருபூஜை என்கிற ‘வார்த்தை’யைத் தேர்வு செய்ததற்கும் ஒரு வரலாற்று ரீதியான பின்புலமும் சமூக உளவியலும் இருக்கிறது என்பதைப் பதட்டமின்றி நம் தமிழ்ச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஏன் இந்த வார்த்தையைத்தான் தேர்வு செய்ய வேண்டுமா? இந்த வார்த்தையை ஏன் தேர்வு செய்யக் கூடாது? என்கிற இரு கேள்விகளும் இன்று முன் வைக்கப்படுகின்றன. வார்த்தைகள் மொழியிலிருந்து எடுத்தாளப்படவில்லை. வலிமிகுந்த வரலாற்றிலிருந்தும் வஞ்சம் தீர்க்கப்படாத கோபத்திலிருந்தும் எடுத்தாளப் படுகின்றன என்பதை நாம் பார்க்க வேண்டியுள்ளது.
ஆனாலும் இந்த ‘வார்த்தைப் போரை நடத்துவது சிறிய பகுதிதான். பெருவாரியான மக்கள் இம்மானுவேல் ‘சாமி கும்பிட‘ப் போவதாகவே பெருவழக்காகப் பேசுகின்றனர். இமானுவேல் சேகரனுக்குப் பால்குடம் எடுத்து விரதம் இருந்து அணியணியாகச் செல்வதை ஒரு பண்பாட்டு நடவடிக்கையாகக் கைக் கொண்டுள்ளனர்.யதார்த்த்த்தில் தீராத சாடிய நெருக்கடியை ஒடுக்கப்பட்ட மக்கள் இப்படிப் பண்பாட்டு ரீதியான சடங்குகள்,விழாக்கள் மூலம் ஆற்றுப்படுத்திக்கொள்வது உலகெங்கும் உள்ள வழக்கம்தான்.
ஆதிக்க சாதியினரும் நிலைமைக்கேற்ப தமது தந்திரோபாயங்களை மாற்றி வருகின்றனர். ஊரோடு மலையில் ஏறி உட்கார்ந்து கொள்வது அதில் ஒரு வடிவம். தாமே நேரடியாகச் சென்று தாக்குவதை நிறுத்திவிட்டுத் தம் சார்பாகக் காவல்துறையை ஏவிவிடும் நடைமுறையை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளார்கள்.. தாமிரபரணிக் கரையில் 17 உயிர்களைக் காவல்துறை பலி கொண்டபோது இமானுவேல் சேகரன் 17 முறை கொல்லப்பட்டதாகவே கருதினோம்.
காங்கியனூரில் வயிற்றில் மிதித்தார்கள். செட்டிப்புலத்தில் தடிகொண்டு தாக்கினார்கள். மதுரை மண்ணில் தலைவர்களைத் தூக்கி எறிந்தார்கள்.. உத்தப்புரத்தில் என்னதான் செய்யாமல் விட்டார்கள்? சாதியம் காத்திடக் காவல்துறையும் அரசும் எடுத்திட்ட முயற்சிகள் தாம் எத்தனை எத்தனை? இவை அத்தனை அடிகளும் இமானுவேல் சேகரனின் மீது விழுந்த அடிகள்தானே?
தென்பகுதி தலித் மக்களின் மனங்களில் ஆழப்பதிந்து விட்ட இமானுவேல் சேகரனின் சித்திரத்தை தடிகொண்டு அடித்தும் பூட்ஸ் கால்களால் மிதித்தும் எனப் பலவித வடிவங்களிலும் அழிக்க முயன்று தோற்றுப்போன அரசும் காவல்துறையும் இன்று அதே பரமக்குடியில் இமானுவேல் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகிலேயே மீண்டும் ஆறுமுறை இமானுவேல் சேகரனைக் கொலை செய்துள்ளது.
இமானுவேல் சேகரன் ஒரு காங்கிரஸ்காரர். நம்பிய காங்கிரசால் கழுத்தறுக்கப்பட்டவர். அவருடைய துணைவியாரையும் நான்கு பெண் குழந்தைகளையும் கூடப் பராமரிக்கவோ, வாழ்வாதாரத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யவோ காங்கிரஸ் முன் வரவில்லை என்பது வரலாறு. அவர் காங்கிரஸ்காரரா கிறித்தவரா மதம் மாறிய இந்துவா பட்டாளத்துக்காரரா என்பது எதுவுமே முக்கியமல்ல. இன்று அவர் தென் தமிழகத்து ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் விடுதலையின் சின்னம். சாதி ஒழிப்புப் போராட்டத்தின் உயிர்த்துடிப்பு.
அவரை ஒரு சாதியின் தலைவராகப் பார்ப்பதை மாற்ற வேண்டும். அதற்கு எல்லா சாதிகளையும் சேர்ந்த ஜனநாயக எண்ணம் கொண்ட மக்கள் அவரை விடுதலையின் சின்னமாக மனதார ஏற்க வேண்டும். அவர் ஒருபோதும் சாதி வெறுப்பை முன் வைத்ததில்லை. சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதி மக்களையும் ஒன்றிணைக்கும் அரசியலையே முன் வைத்தார்.
அம்பேத்கர் தன் வாழ்வில் சாதியத்தின் வடிவமாக பிராமணியத்தை எதிர் கொண்டார். இமானுவேல் சேகரன் இராமநாதபுரத்தில் பிராமணியத்தின் வடிவமாக வேறொரு சாதியை எதிர்கொள்ள நேர்ந்தது. இது வரலாறு.இது அவர் செய்த குற்றமல்ல.
வர்க்கப் போராட்டம் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய மூன்று தளங்களிலும் நடைபெறுவது. இந்தியாவின் வர்க்க ஏற்பாடான சாதியக் கட்டமைப்புக்கு எதிரான போரும் இம்மூன்று தளங்களிலும் நடைபெறுவதை, நடைபெற வேண்டியதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
அவ்வகையில் சாதி எதிர்ப்புப் போர்த் தியாகிகளெல்லாம் வர்க்கப் போர்த் தியாகிகளாகப் போற்றத்தக்க தியாகிகளல்லவா?
இமானுவேல் சேகரனின் தியாகத்தைப் போற்றுவோம்!
தோழர் இமானுவேல் சேகரனின் தியாகத்துக்கு வீர வணக்கம் செய்வோம்!
(பி.கு. இக்கட்டுரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தும் அணையா வெண்மணி இதழில் வெளியாகியுள்ளது)
Tuesday, June 28, 2011
என் பார்வையில் சுந்தரராமசாமி
(சுரா-80 என்கிற தலைப்பில் எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்களின் 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டுக் காலச்சுவடு அறக்கட்டளை கன்னியாகுமரியில் ஜுன் 2,3,4 ஆகிய 3 நாட்கள் கருத்தரங்கம் நடத்தியது.100 பேருக்கு மேலான பேச்சாளர்கள் மூன்று நாட்களிலுமாக சு.ராவை நினைவுகூர்ந்தார்கள்.அங்கு நிகழ்த்தப்பட்ட என் உரையின் திருத்தப்பட்ட வடிவம் இது)
I
என் பார்வையில் சுந்தரராமசாமி என்னும் தலைப்பின் கீழ் நான் சுரா அவர்களை ஒரு ஆய்வாளனாக நின்று மதிப்பீடு செய்ய வரவில்லை.சுரா அவர்கள் குறித்த என் மனப்பதிவுகளைப் பகிர்ந்துகொள்ளவே விழைகிறேன்.அவரை அடிக்கடி சந்தித்து உரையாடியவன் அல்லன் நான்.சிறு வயதிலிருந்தே எனக்கு எழுத்தாளர்களைச் சந்திப்பதில் ஆர்வம் இல்லாதிருந்தது ஒரு காரணம்.இப்போதும் அந்த உணர்வு எனக்குள் மேலோங்கி இருந்து கொண்டுதான் இருக்கிறது. எழுத்துக்களின் வழி நமக்கு அறிமுகமாகும் மதிப்புக்குரிய எழுத்தாளர்களின் பிம்பம் நேரில் சந்திக்கையில் உடைந்து போவதும்கூட அப்படியான ஆர்வமின்மைக்கு ஒரு காரணமாக இருந்திருக்கும்.அவர் வீட்டுக்குச் சென்று சாப்பிட்டு உரையாடியது என்று பார்த்தால் ஒரு நான்கைந்து முறைக்கு மேல் இருக்காது.ஆனாலும் ஒரு மன நெருக்கம் எங்களுக்குள் எப்போதும் இருந்தது.
என் முன்னோடிகளில் ஒருவரான சுரா அவர்களின் மீது அவரை நேரில் சந்திக்கும் முன்பே அவருடைய எழுத்துக்களின் வழியாகப் பெரும் மதிப்புக்கொண்டிருந்தேன்.1959இல் பதிக்கப்பட்ட அவரது முதல் தொகுப்பான அக்கரைச்சீமையில் மற்றும் 1964இல் பதிப்பிக்கப்பட்ட பிரசாதம் ஆகிய இரு கதைத் தொகுதிகளும்தான் எனக்கு முதலில் வாசிக்கக் கிடைத்த சுரா அவர்களின் படைப்புக்கள். அக்கரைச்சீமையில் தொகுப்புக்கு தோழர் ரகுநாதன் கச்சிதமான ஒரு முன்னுரை எழுதியிருப்பார்.பிரசாதம்தான் முதலில் வாசித்தேன்.அவர் ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட்டுகளான ரகுநாதனும் விஜயபாஸ்கரனும் முறையே நடத்திய சாந்தி,சரஸ்வதி ஆகிய இதழ்களில்தான் தன் முதல் 15 கதைகளை எழுதினார். முஷ்டி உயர்த்தும் வரிகளோடுதான் கதையை முடிப்பார்கள் என்கிற விமர்சனத்தை முற்போக்காளர்கள் மீது நவீன இலக்கியவாதிகளில் சிலர் சதா வைப்பதுண்டு.அத்தகைய கதைகளுக்கும் முன்னோடி சுந்தரராமசாமி அவர்கள்தான் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.சாந்தியில் வெளியான அவருடைய ‘தண்ணீர்’ சிறுகதையின் கடைசி வரிகளே இதற்குச்சான்று. அவர் தொடங்கி வைத்த இந்தப் பாரம்பரியத்தைத்தான் சில முற்போக்கு எழுத்தாளர்கள் மேலும் முன்னெடுத்துச் சென்றார்கள் என்பேன்.
அவருடைய எழுத்து வாழ்க்கையில் மூன்று கட்டங்கள் உண்டு.கம்யூனிஸ்ட்டுகளோடு –கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு-அவர் நெருக்கமாக இருந்த முதல் கட்டம்.அதிலிருந்து முற்றிலுமாக விலகி பிரபஞ்ச வெளியில் சூரியனை நோக்கிப் பறக்க முயலும் ஒரு பறவையாக வாழ ஆசைப்பட்ட இரண்டாவது கட்டம்.நிதானமும் முதிர்ச்சியும் கொண்ட மூன்றாவது காலகட்டம்.
இரண்டாவது தொகுப்பான பிரசாதம் கதைகளுக்கு அவரே எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார்,” 1956 ஆம் ஆண்டு உலக நிகழ்ச்சிகள்,அன்று வரையிலும் மனவேதனையை அளித்துக்கொண்டிருந்த சந்தேகங்களைச் செம்மையாக ஊர்ஜிதம் செய்து என் முள் முடியைப் பிடுங்கி எறிந்துவிட்டன.இதன் பின் வாழ்க்கைக் கண்ணோட்டமும், அதன் ஒரு கிளையான கலைக்கொள்கைகளும் மாறுதல் உற்றன.இந்த ‘இரண்டாவது மனநிலை’யில் எழுதிய கதைகள் இவை “ 1950 களில் தோழர் ஜீவாவுடனான நெருக்கத்துடன் துவங்கிய அவரது இடதுபக்கப் பயணம் 1956களின் உலக நிகழ்வுகளால் திசை மாறியது.1956இல் என்ன நடந்த்து? சோவியத் படைகள் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் அதிரடியாக நுழைந்தது.உலகப்புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் எரிக் ஹோப்ஸ்வாம் போன்ற சில மார்க்சிய அறிஞர்களைத்தவிர பெரும்பாலான அறிவுஜீவிகள் அப்போது கம்யூனிசத்தின் மீது கோபம் கொண்டு வெளியேறினார்கள்.அந்த உலகநிகழ்வைத்தான் சுராவும் குறிப்பிடுவதாக நினைக்கிறேன். இப்படிப் புற உலக நிகழ்வுகளுக்குச் செவி சாய்ப்பவராக-முகம் கொடுப்பவராகத்தான் அதன் பிறகும் அவர் இருந்தார்.இறுதிவரை அப்படியேதான் இருந்தார்.உள்மனத் தேடல் என்று அவர் ஒருபோதும் கிளம்பிவிடவில்லை. எப்போதும் ஒரு பொருள்முதல்வாதியாகத்தான் அவர் பெரும்பாலும் இருந்தார் என்று நான் உணர்கிறேன்.
இரண்டாம் கட்டம் எனப்படும் காலப்பகுதியில் மட்டும் வாழ்வின் அர்த்தம் அர்த்தமின்மை குறித்த சில குழப்பங்கள் அவரிடம் இருந்ததாக நான் கருதுகிறேன்.அக்காலகட்ட்த்தையே நவீன இலக்கிய உலகில் பலரும் பாராட்டிப் பேசுவதும் உண்மை.வாசனை,அழைப்பு,போதை போன்ற கதைகளிலும் ஜேஜே சில குறிப்புகள் நாவலிலும் அதற்கான அடையாளங்களைக் காணலாம்.நினைவின் எந்தப்பக்கத்தைப் புரட்டினாலும் பிழைகள் மலிந்து கிடக்கும் அவமானம் என்று மனம் பிறழும் ஒருவரின் கதையான அழைப்பு,சாதிய மனமோ என்கிற ஆழமான சந்தேகத்தைக் கிளப்பும் போதை மற்றும் வாசனை கதைகளை இப்போது வாசித்தாலும் அந்தச் சிக்கலை உணர முடிகிறது.அவரது மரணத்தின் போதுகூட எந்த சாதி மதச்சடங்குகளும் இல்லாமல் தன் உடல் மின்மயானத்தில் எரிக்கப்படவேண்டும் என்று சொல்லிச்சென்ற சாதி மத மறுப்பாளராகிய அவரா போதையையும் வாசனையையும் எழுதினார் என்று நம்பமுடியாத வியப்பாக இருக்கிறது.இவை இரண்டுமே இரண்டாம் காலகட்ட்த்தில் அவர் எழுதியவை.இரண்டாம் கட்டத்திலும்கூட அவர் பல நல்ல யதார்த்தக் கதைகளை எழுதியுள்ளார்.தமிழ்ச்சிறுகதை உலகின் சிகரமான கதைகளில் ஒன்றான ரத்னாபாயின் ஆங்கிலம் கதையும் இக்காலத்தில் எழுதப்பட்ட்துதான்.
என்னதான் அமைப்புரீதியான விஷயங்களுக்கு எதிராக அவர் பேசி வந்தாலும் வாழ்நாள் முழுவதிலும் கச்சிதமான யதார்த்தவாதக் கதைகளையே அதிகம் எழுதினார் என்பது மறுக்க முடியாத உண்மை.அவரது மூன்றாம் கட்ட்த்தில் மீண்டும் அவர் சரஸ்வதி காலத்து எழுத்துமுறையிலான கதைகள் பலவற்றை எழுதினார்.நாடார்சார்,பிள்ளை கெடுத்தாள் விளை,அந்த ஐந்து நிமிடங்கள்,கிட்னி என்று பல கதைகளைச் சான்றாகக் குறிப்பிடலாம்.
கல்கி,தினமணி கதிர்,யாத்ரா,தீபம்,,காலச்சுவடு எனப் பல இதழ்களில் அவர் எழுதியிருந்தபோதும் அதிகமான கதைகளை அவர் சாந்தியிலும் சரஸ்வதியிலும்தான் எழுதினார் என்பதை அழுத்தமாக்க் குறிப்பிட விரும்புகிறேன்.உரைநடையைப் பின் தொடர்ந்த்துபோல அவரது கவிதைகளை நான் தொடர்ந்து வாசித்ததில்லை.பசுவய்யா என்கிற பெயரில் அவர் எழுதிய சில கவிதைகளை மட்டுமே வாசித்த அனுபவம் எனக்கு.கவிதைகளில் வேறு ஒரு மனதை வாசித்த நினைவே எனக்கிருக்கிறது. மரணம் பற்றிய பயம் அவ்ருடைய சில கவிதைகளில் தென்பட்டதை அவரிடமே பேசியிருக்கிறேன்.
II
தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்குமிடையே பேசிக்கொள்ளாத ஒரு நெருக்கம் இருந்த்து. ஆங்கிலத்தில் சொன்னால் அது ஒரு LOVE AND HATE RELATIONSHIP .The love was too personal and the hate was organizational என்று சொல்ல்லாம்.என்னைப் பார்க்கும்போதெல்லாம் அவர் உற்சாகமடைந்து ‘ என்ன தலைவரே..’ என்று அழைத்துக் குஷியாகப் பேசுவார். உருப்படியாக எழுதிக் கொண்டிருக்காமல் கட்சி,இயக்கம் என்று சுற்றிக்கொண்டிருப்பதில் அவருக்கு என்மீது வருத்தம் இருந்த்து.அதைச் சுட்டித்த்தான் தலைவரே என்றழைத்துக் கேலியாகப் பேசித் தன் வருத்தத்தை வெளிப்படுத்துவது அவர் வழக்கம்.கலைஞனை சமூகத்தில் எல்லோருக்கும் மேலான இட்த்தில் வைத்துப் பார்ப்பது அவர் மனம்.அதில் எனக்கு உடன்பாடு இருந்த்தில்லை. தொழிலாளர்கள், குழந்தைகள்,பெண்கள் ,கலைஞர்கள் இவர்கள் நால்வருமே சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பது என் கருத்தாக இருக்கும்.குழந்தைகள்,பெண்கள் ,ஆண்கள் என்று வரிசைப்படுத்தித் தன் நாவலுக்கு அவர் பெயர் வைத்தபோது நான் மிகவும் மகிழ்ந்தேன்.
மலையாள அறிவு உலகில் மாற்றுச்சிந்தனைகளை முன்வைத்த எம்.கோவிந்தன் மீதும் ஆரம்பகால கம்யூனிஸ்ட் தோழர் எம்.என்.ராய் மீதும் அளப்பரிய மரியாதை கொண்டிருந்தார்.இயக்கத்தில் இணைந்து பணியாற்றும் கம்யூனிஸ்ட்கள் பற்றி அதிகம் அவர் பேசியதில்லை.இதில் எனக்கு மாற்றுக்கருத்து இருந்தது.கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும் ஒரு தகப்பனுக்குரிய இடம் என் மனதில் அவருக்கு இருந்தது உண்மை.ஒரு கறாரான தந்தை.என்ன எழுதினாலும் அவர் வாசித்தால் என்ன நினைப்பாரோ என்கிற ஒரு சிறு பயம் எனக்கு அந்த நாட்களில் இருந்துகொண்டேதான் இருந்தது.நான் செய்யும் வேலைகள் குறித்து அவ்வப்போது அவருக்குச் சொல்ல வேண்டும் என்கிற வேட்கை எனக்குள் எப்போதும் இருக்கும்.
கல்வி குறித்து அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.வசந்திதேவியுடன் அவர் நட்த்திய உரையாடல் மட்டுமின்றி அவரது பல படைப்புகளில் கல்வி பற்றி எழுதியிருக்கிறார்.அவர் ஆசைப்பட்ட விதத்தில் நாங்கள் ஒரு பள்ளியை பட்டுக்கோட்டை அருகே குறிச்சி கிராமத்தில் நட்த்தி வருகிறோம்.அந்த இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் பள்ளியில் பிரம்பு கிடையாது.வீட்டுப்பாடம் என்கிற சித்ரவதை கிடையாது.பாடங்களை விளையாட்டாகக் கற்பிக்கிறோம்.குழந்தைகள் அப்படி ஒரு ஆனந்த்த்தோடு குதித்துக்கொண்டு பள்ளிக்கு வருகிறார்கள். அப்பள்ளிக்குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான வெற்றிகள் பெறும் போதெல்லாம் சுரா அவர்களுக்குப் போன் செய்து பேச வேண்டும் என்று ஆசைப்படுவேன். அவரை எங்கள் பள்ளிக்கு அழைத்துச் சென்று காட்ட வேண்டும் என்கிற அவா
நிறைவேறாமலே போனது.இப்போதும் கூட பள்ளியில் எது நடந்தாலும் சுரா சாருக்குப் போன் பண்ணிச் சொல்லணும் என்று மனதில் ஒரு எண்ணம் மின்னி மறைவதும் அடுத்த கணமே அவர் இல்லையே என்கிற ஏக்கம் ஒரு கேவலுடன் கண்ணீராய் என் கன்னங்களில் உருளுவதும் நடந்து கொண்டே இருக்கிறது.தெருவில் எது நடந்தாலும் அம்மாவிடம் ஓடிச்சென்று சொல்லும் ஒரு குழந்தையின் மனநிலைதான் அது.அப்படி ஒரு இடம் அவருக்கு என் மனதில் எப்போதும் உண்டு-விமர்சனங்களை எல்லாம் தாண்டி.
அவருடைய கடைசி நாட்களில் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார்.அப்போதும்கூட அவர் எழுதினார்.கடைசியாக அவர் எழுதிய பத்துக்கட்டுரைகளில் ஒன்று என் ‘இருளும் ஒளியும்’ என்கிற புத்தகம் பற்றியது என்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு.அக்கட்டுரை புதிய பார்வை இதழில் வந்த்து.அறிவொளி இயக்க அனுபவங்களின் தொகுப்பான அப்புத்தகத்தை அவருடைய இடையறாத தூண்டுதல் காரணமாகவே எழுதினேன்.பார்க்கும்போதெல்லாம் தலைவரே புத்தகம் என்னாச்சு என்று கேட்ட அந்தச் சிரித்த முகம் மனதில் அப்படியே நிற்கிறது.அந்த அனுபவங்களை அவர் மிகவும் மதித்தார்.
அவர் மீது எனக்கு இருக்கும் தீராத வருத்தம் ஒன்று உண்டு.இடதுசாரிகளை விட்டு அவர் விலகியபிறகு அவர் இட்துசாரிப் படைப்பாளிகளின் படைப்புகளை ஏறெடுத்தும் பார்க்காமல் விட்டுவிட்டார்.கந்தர்வன் கதைகளைக்கூட அவர் வாசித்திருக்கவில்லை.என்னுடைய கதைகளை அவராக வாசிக்கவில்லை.ஜோதிவிநாயகம் சிபாரிசு செய்து அவரிடம் என் தொகுப்பைக் கொடுத்ததால் வாசித்தார்.ஆனால் வாசித்த பிறகு அவரே காலச்சுவட்டில் தமிழ்ச்செல்வன் ஒரு கலைஞன் என்று எழுதினார்.எவ்வளவு போதையூட்டும் ஒரு வரியாக அது எனக்கு இருந்துகொண்டிருக்கிறது! எங்கள் தோழர்களின் படைப்புகளை வாசித்தால் நிச்சயம் அவர் கொண்டாடியிருப்பார்.ஆனால் இடதுசாரி எழுத்துக்கள் என்றால் வாசிக்காமலேயே கருத்துச் சொல்லலாம் என்கிற ஒரு பாரம்பரியத்தை அவர்தான் உருவாக்கிச் சென்றார் என்கிற வருத்தம் எனக்கு ஆழமாக உண்டு.இந்தக் கருத்தரங்கிலேயே இன்று காலை நண்பர் பெருமாள் முருகன் சமகால பத்தாண்டு எழுத்துக்கள் பற்றி வாசித்த கட்டுரையில் கூட எஸ்.லட்சுமணப்பெருமாள், சுப்பாராவ் ஆகிய இரண்டு அற்புதமான படைப்பாளிகள் பற்றிக் குறிப்பிடவே இல்லை.அவர்கள் செம்மலரில் எழுதுகிறார்கள் என்பதால்தானே இந்தப் புறக்கணிப்பு?அல்லது மறதி? லட்சுமணப்பெருமாளின் வயனம் ஒரு கதையையாவது வாசியுங்கள்.சுரா இருந்து அக்கதையை வாசித்திருந்தால் நிச்சயம் கொண்டாடியிருப்பார்.மிக வலுவான படைப்பாளிகளின் படை வரிசையாக முற்போக்காளர்கள் இன்று வந்திருப்பதை நீங்கள் வாசிக்க வேண்டும்.( நான் பேசி முடித்ததும் பெருமாள் முருகன் வந்து லட்சுமணப்பெருமாளைத் தான் வாசித்திருப்பதாகவும் அவரை காலத்தால் முந்தியவராகக் கருதியதால்தான் சேர்க்கவில்லை என்றும் சுப்பாராவ் பற்றி அறியாமல் இருந்தது பற்றிய என் விமர்சனத்தை ஏற்பதாகவும் கூறினார்).
III
ஒவ்வொரு நூற்றாண்டும் உலகத்துக்குச் சில வார்த்தைகளை விட்டுச்செல்வதாக எரிக் ஹோப்ஸ்வாம் குறிப்பிடுவார்.ஒவ்வொரு படைப்பாளியும் அவ்விதமே சில வாக்கியங்களை விட்டுச் செல்கிறான்.ஒரு எழுத்தாளன் தான் வாழும் சமூகத்துக்கு வேறு என்னதான் செய்துவிடப் போகிறான்.சில வார்த்தைகளை,வாக்கியங்களை விட்டுச்செல்லலாம்.அவ்வார்த்தைகளில் சில நம்மைக்கொல்லும்.சில நாம் சோர்ந்து வீழும்போது தூக்கி நிறுத்தும்.முகம் துடைத்து ஆறுதல் சொல்லும்.சுந்தரராமசாமி அவ்விதமாக எனக்கான வரிகளாகச் சிலவற்றை விட்டுச் சென்றிருக்கிறார்.என் வாழ்நாள் பூராவும் கூட வரும் வரிகளாக இவை இருக்கின்றன.சுரா என்பது இந்த ஏழெட்டு வாக்கியங்கள்தானா என்று ஒரு கேள்வியும் எனக்குள் எழுகிறது.ஆனால் அவரால் இவ்வளவு வரிகளை எனக்காக விட்டுச்செல்ல முடிந்திருக்கிறதே ,நான் வாழ்க்கை பூராவும் எழுதி எழுதி என் வருங்கால சந்ததியினர் நினைவு கொள்ளத்தக்க ஒரு வரியையாவது விட்டுச் செல்வேனா என்கிற ஏக்கம்தான் மிச்சமாக இருக்கிறது.
ஜீவா மறைந்தபோது தாமரை அவர் நினைவாக மலர் ஒன்று கொண்டு வந்தது.அதில் பல தலைவர்கள் கட்டுரைகள் எழுதியிருந்தார்கள்.அவை எல்லாவற்றிலும் பார்க்க சுந்தரராமசாமி அவர்களின் கட்டுரையான காற்றிலே கலந்த பேரோசைதான் எல்லோருடைய மனதையும் உலுக்குவதாக- ஜீவாவின் முழுமையைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்திருந்தது.ஜீவாவுக்கு அதை விடச் சிறப்பான அஞ்சலியை அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் யாருமே செய்து விடவில்லை.(காற்றிலே கலந்த பேரோசை என்கிற தலைப்பில் அவருடைய கட்டுரைத் தொகுப்பு பின்னர் வந்தபோது நண்பர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு என்று கையெழுத்திட்டு 10.2.98 தேதியிட்டு சுரா எனக்களித்த அப்புத்தகப் பிரதியை ஒரு பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.)
அக்கட்டுரையின் துவக்க வரிகள் இன்றும் என்னை அலைக்கழிக்கிற வரிகளாக இருக்கின்றன.
“ நண்பர் ஒருவரிடம் ‘ஜீவா மறைந்து விட்டார்’என்றேன்.1963 ஜனவரி மாதம் பதினெட்டாம் தேதி.நண்பகல் வேளை.செய்தி தபால் நிலையத்துக்கு வந்து அப்போது ஒரு மணி நேரம் கூட ஆகியிருக்கவில்லை.’ஆ!’ என்று கூவி ஸ்தம்பித்து நின்ற நண்பர், இரண்டொரு நிமிஷங்களுக்குப் பின் ‘கூட்ட்த்தில் பேசிக்கொண்டிருக்கும்போதா?” என்று கேட்டார்.” இந்த ஒரு வரியை நான் வாசித்தபோது எனக்கு வயது 21.கம்யூனிஸ்ட் இயக்கத்தில் காலடி எடுத்து வைத்துக்கொண்டிருந்த நேரம்.இந்த வரி எனக்குள் புகுந்து ஒரு பூதம்போல ஆட்ட்த்துவங்கியது.வாழ்ந்தால் ஜீவா மாதிரி வாழணும்.தமிழ்ச்செல்வன் செத்துட்டானா மேடையில் பேசிக்கிட்டிருக்கும்போதா? இயக்கப்பணிகளின்போதா? என்றுதான் பேசப்பட வேண்டும் என்று ஒரு சங்கற்பம் அன்று ஏற்பட்டது.இன்று வரை என் கூடவே எனக்கு ஓரடி முன்னால் சென்று என்னை இழுத்துச்செல்லும் வரியாக இது இருந்துகொண்டிருக்கிறது என்பேன்.
இரண்டாவது வரி “ புரட்சி சமீபத்தில் இருக்கிறது என்று நம்பிய கடைசித் தலைமுறை நாங்கள்” என்று சுந்தரராமசாமி எழுதிய அல்லது நேர்காணலின்போது சொன்ன ஒரு வரி.வாசித்த உடன் நான் மறுத்துத் தலை ஆட்டிய வரி இது.இல்லை சுரா சார்..உங்களுக்கு அப்புறமும் வந்துள்ள இரண்டு தலைமுறைகளாக புரட்சி பற்றி நீங்கள் கண்ட கனவை சுருதி சுத்தமான ஒரு உலகைப் படைக்கக் கனவைக் காணும் தோழர்கள் வந்துகொண்டேதான் இருக்கிறோம் என்று ஒரு வரி என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. எத்தனை வெற்றி தோல்விகள் வந்தாலும் வீழ்ச்சிகள் ஏற்பட்டாலும் கம்யூனிஸ்ட் இயக்கம் இன்னும் அழியாமல் இயங்குவது புரட்சி பற்றிக் கனவுகள் கொண்ட தோழர்கள் வந்து கொண்டே இருப்பதால்தான்.புரட்சி பற்றிய கனவுகளுக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் கடைசித்தலைமுறை என்று ஒன்று இருக்கவே முடியாது.
மூன்றாவது வரி இடதுசாரி எழுத்தாளர்கள் பற்றி அவர் எங்கோ எழுதிய ஒரு வரி “ இவர்கள் இலக்கியக் கால் நனைப்புக் கொண்ட அரசியல்வாதிகள்”இவ்வரியின் அங்கதத்தை இப்போதும் நான் ரசிக்கிறேன் என்றபோதும் இந்த வரியைப்பொய்யாக்கும் ஒரு வாழ்வை நாம் வாழ்ந்துவிட வேண்டும் என்கிற வெறியை எனக்குள்ளும் என் தோழர்கள் பலருக்குள்ளும் கிளர்த்துகிற வரியாக இது நிலைத்து நிற்கிறது.
நான்காவது வரி “ படைப்புகளை அணுகும்போது பண்டிதம் எவ்வித அனுபவங்களையும் பெறுவதில்லை.இன்றுவரையிலும் அது எந்தச் சீரிய கலைஞனையும் புன்னகையுடன் வரவேற்றதில்லை” இளம் படைப்பாளிகளை அணுகும்போதும் எதை வாசிக்கும்போதும் எனக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக இவ்வரிகள் துணை நிற்கின்றன.
ஐந்தாவது வரி “ இலக்கியம் சங்கீதம் அல்ல என்பதாலேயே அர்த்தமும் தத்துவமும் அதன் உடன் பிறந்த சங்கடங்கள் .எனவே தத்துவத்தின் ஒரு சாயலில் ,திட்ட்த்தின் ஒரு நிலையில் நின்றே தொழிலைத் தொடங்க வேண்டியதாக இருக்கிறது.எனினும் கலைஞன்,சிருஷ்டி கருமத்தில் முன்னேறும்போது, மனசை ஏற்கனவே பற்றியிருக்கும்முடிவுகள் ,த்த்துவச்சாயல்கள் இவற்றைத்தாண்டி ,சத்திய வேட்கை ஒன்றையே உறுதுணையாகக் கொண்டதன் விளைவால்,கலை சத்திய வெறி பெற்று, குறுகிய வட்டங்களை ‘நிரூபிக்க’க் குறுகாமல்,அனுபவத்தின் நானாவிதமானதும் மாறுபட்ட்தும் முரண்பட்ட்துமான சித்திரங்களின் மெய்ப்பொருளை உணர்த்த வேண்டும்.நான் நம்பும் கலை இது”- உடன்படவும் முரண்படவுமான உள்ளடக்கத்தோடு வந்து விழுந்துள்ள வரிகள் இவை.இவ்வரிகள் குறித்து நிறைய ஒட்டியும் வெட்டியும் பேச முடியும்.இப்போதைக்கு இலக்கியம் சங்கீதம் அல்ல.அதற்கு அர்த்தமும் தத்துவமும் வேண்டும் – இருந்துதான் தீரும் என்றுதான் சுந்தரராமசாமி கூறியிருக்கிறார் என்று அடிக்கோடிட்டு விட்டுச் செல்கிறேன்.தவிர இந்த வரிகளை அவர் 1963இல் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகிய தருணத்தில் எழுதினார் என்பதையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும்.
ஆறாவதாக, குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலில் வரும் ஒரு வரி “ இந்த பூமியில் சரஸ்வதி கடாட்சம் இல்லாத குழந்தை என்று யாரும் இல்லை”-என்ன அற்புதமான வரி இது. கல்வித் தளத்தில் எம் முயற்சிகளுக்கு அடிநாதமாக இவ்வரி எப்போதும் கூடவே ஓடி வந்துகொண்டிருக்கிறது.
ஏழாவதாக ரத்னாபாயின் ஆங்கிலம் கதையில் வரும் வரிகள் “ பாஷை ஒரு அற்புதம்.கடவுளே உனக்கு நன்றி” என்றாள்.இதை விட்டால் எனக்கு வேறு எதுவுமில்லை” என்றாள்.மீண்டும் கண்ணாடி முன் நின்று சிறு அபிநயத்துடன் அந்தக் கடித்த்தைப் படித்தாள் “ அந்தக் கதையே தன் ஆங்கில மொழி அறிவு மற்றும் மொழி அழகில் தானே மயங்கி அதையே தன் வாழ்வின் வரமாக்க் கற்பிதம் செய்து வாழும் பெண்ணைப்பற்றியது.அக்கதையின் கடைசி வரிகள்தாம் இவை.ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் பொருந்தும் வரிகள் இவை.வார்த்தைகளை விட்டால் நமக்கு வேறு என்ன இருக்கிறது?
இப்படியான வார்த்தைகளாக சுந்தரராமசாமி நம்மோடு வாழ்கிறார்.வணக்கம்.
Wednesday, June 2, 2010
குறைந்த ஒளியில் வாழ்ந்து மறைந்த கலைஞன்
ஒவ்வொரு முறையும் ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழ் வீதிக்கு எழுத வரும்போது ஒரு மரணச்செய்தியோடே வர நேர்கிறது.நேற்று ஓவியர் இசக்கி அண்ணாச்சி நெல்லையில் காலமாகிவிட்டார்.1927இல் பிறந்து 2010 ஜூன் 1 இல் மறைந்த இந்த 83 ஆண்டு வாழ்க்கையில் சுமார் 65 வருடங்களை ஓவியம்-புகைப்படம் என்றே வாழ்ந்து முடித்தவர் இசக்கி.ராய் சௌத்திரி போன்ற உலகப்புகழ் பெற்ற ஓவியர்களிடம் பாடம் கற்கும் வாய்ப்புப் பெற்ற இசக்கி அண்ணாச்சி திருவனந்தபுரம் ஓவியக்கல்லூரியில் படித்த காலத்தில் புதுமைப்பித்தனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றது பற்றி அவ்வப்போது நெகிழ்ச்சியுடன் பேசுவார்.
என்னுடைய முதல் சிறுகதைத்தொகுப்புக்கு (வெயிலோடு போய்..) அட்டைப்படமாக அவர் எடுத்த புகைப்படம் ஒன்றைக்கேட்டு வாத்தியார் ராமகிருஷ்ணன் சிபாரிசுடன் நடையாக நடந்துகொண்டிருந்த அந்த 1985இல் அவரோடு நெருக்கம் கிடைத்தது.லேசில் யாருக்கும் படம் தர மாட்டார்.பொத்திப் பொத்தி வைத்துக் கொள்வார்.அவருடைய அறையே ஒரு வினோதமான முறையில் அலங்கோலமாகக் கிடக்கும் . எங்கும் பிலிம் நெகடிவ்கள் தரையில் சிதறிக்கிடக்கும்.கால் வைக்க முடியாது.அவரைத்தவிர யாரும் அவர் அறையில் எதையும் தேடி எடுக்க முடியாது. இழுத்தடித்து என் முதல் தொகுப்புக்கு இந்தப்படத்தைக்கொடுத்தார்.
என் தொகுப்பை விட இப்படம் பேசப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.தொகுப்பைப்படித்த பிறகு கதைகள் ரொம்ப நல்லா இருக்கு. இந்தத்தொகுப்புக்குப் படம் கொடுக நான் அவ்வளவு தயங்கியிருக்க வேண்டியதில்லை என்று பின்னாளில் கூறினார்.அப்போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
நெல்லை வட்டாரத்தில் அந்த நாட்களில் ஸ்டூடியோ வைத்து கேமிரா,பிரஷ் என்று தொழில் ஆரம்பித்த ஒவ்வொருவரும் இசக்கி அண்ணாச்சியின் சிஷ்யர்களாகவே இருந்தனர்.எல்லோருமே பொருளாதார ரீதியாக நல்ல நிலைமையில் இருந்தனர்.இசக்கி அண்ணாச்சி உண்மையில் அவருடைய ஒதுங்கி வாழும் குணத்தின் காரணமாகவும் வெளிச்சத்தை விரும்பாத அவரது மனநிலை காரணமாகவும் குடத்திலிட்ட விளக்கு என்கிற அவர் காலத்து உவமானத்துக்கு ஏற்றவராகவே வாழ்ந்து முடித்து விட்டார்.தான் எடுத்த ஒவ்வொரு புகைப்படத்தையும் அவர் உயிர் போல நேசித்தார்.தன் நெஞ்சோடு அவற்றை அனணத்துக்கொண்டு உலகத்துக்குத் தரமாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தையாகவே கடைசி நிமிடம் வரை வாழ்ந்தார்.
அவர் 1940 களில் முதல் தலைமுறைக் கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர்.திருநெல்வேலியின் முதல் கம்யூனிஸ்ட்டுகளில் ஒருவரான சிந்துபூந்துறை சண்முகம்பிள்ளை அண்ணாச்சி நெல்லை பப்ளிஷிங் ஹவுஸ் ஆரம்பித்து சோவியத் இலக்கியங்களையெல்லாம் மொழியாக்கம் செய்து பதிப்பித்தபோது அந்நூல்களுக்கெல்லாம் இசக்கி அண்ணாச்சிதான் அட்டைப்படம் வரைந்து கொடுத்தார். அண்ணாச்சி என்ற சொல் இன்று பரவலாக பலசரக்குக்கடை வைத்திருக்கும் நெல்லைப்பகுதி நாடார்களைக் குறிக்கும் சொல்லாக அறியப்பட்டு விட்டது.அன்று நெல்லைச்சீமையில் தூத்துக்குடி சண்முகம் அண்ணாச்சி,பாப்பாங்குளம் சொக்கலிங்கம் அண்ணாச்சி,சிந்துபூந்துறை சண்முகம்பிள்ளை அண்ணாச்சி ஆகியோர்தான் முப்பெரும் கம்யூனிஸ்ட் தலைவர்களாக வாழ்ந்தார்கள்.அவர்களோடு பழகிய ஓவியர் இசக்கி , ‘இசக்கி அண்ணாச்சி’ ஆனார்.
நெல்லையில் யார் என்ன கலை முயற்சியில் இறங்கினாலும் இசக்கி அண்ணாச்சியின் பங்களிப்பு அதில் இருக்கும்.காஞ்சனை திரைப்பட இயக்கம்,விரல்கள் ஓவிய இயக்கம்,யாதுமாகி ,இப்போது ஓவியர் கதிர் எடுக்கும் முயற்சிகள் இவற்றோடு கம்யூனிஸ்ட் இயக்கங்களும் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் நிகழ்வுகளிலும் அவர் ஓரமாகவேனும் இருப்பார்.நாங்கள் நடத்திய பல புகைப்பட, போஸ்டர்- ஓவியக்கண்காட்சிகளில் அவர் முழுமையாகத் தன் உழைப்பையும் படைப்புகளையும் மகிழ்வுடன் தந்தார்.அவருடைய புகைப்படக் கண்காட்சியை தமிழகம் முழுவதும் 90-91 இல் கொண்டு சென்றோம். 1990 மற்றும் 2008 இல் நடைபெற்ற எங்கள் மாநில மாநாடுகளில் அவரது புகைப்படக்கண்காட்சிகள் இடம்பெற்றன. 2008 அக் 1,2,3 ஆகிய நாட்களில் நெல்லையில் 3 நாட்கள் அவரது புகைப்படக்காட்சியை தமுஎகச நடத்தியது. சென்னையில் கண்காட்சியைப்பார்த்து விட்டு இசக்கி அண்ணாச்சி என் அப்பாவின் நண்பர்.இந்தக் கண்காட்சிக்கு என் எளிய காணிக்கையாக இதை வழங்குகிறேன் என்று ஒரு பத்தாயிரம் ரூபாய்க் காசோலையை திருமதி.கமீலா நாசர் அளித்தார்.
திருநெல்வேலி நகரம் கடந்த 60 ஆண்டுகளில் அடைந்துள்ள மாற்றங்களை அவருடைய புகைப்படங்களில் அவர் ஆவணமாக விட்டுச்சென்றுள்ளார்.நெல்லை வட்டார விவசாய வாழ்வின் கோலங்களாக அவருடைய பெரும்பகுதிப் புகைப்படங்கள் அமைந்துள்ளன.தன் தோள்களில் கிடந்த பறையை கடைசிவரை அடித்து முழக்காமலே மௌனத்திலும் குறைந்த ஒளியிலுமாக வாழ்ந்து மறைந்த அக்கலைஞனுக்கு மௌனமாக என் அஞ்சலியைப் படைக்கிறேன்.
இப்படங்களைப் பிரதி எடுத்துக்கொடுத்த அவரது மகன் அருண் மற்றும் வாத்தியார் ராமகிருஷ்ணனின் மகன் கணேஷ் இருவருக்கும் நன்றி.இசக்கி அண்ணாச்சியின் புகைப்படங்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் கிருஷியின் முயற்சியில் நிரந்தர கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.வாய்ப்புள்ள நண்பர்கள் சென்று பார்க்கலாம்.கிருஷி- 9442946999
Thursday, March 4, 2010
துரத்தும் மரணம்
மரணத்துக்கு வழி தெரிந்து விட்டால் அது சூறாவளிக்காற்றைப்போல ஒரு வீட்டையே சுற்றிச்சுற்றிச் சுழன்றடிக்கும்போலிருக்கிறது.தோழர் உ.ரா.வ வை இழந்து நிற்கும் இயக்கம் இன்னும் மூன்று முக்கியமான ஆளுமைகளை இந்தப் பத்து நாட்களில் இழந்திருப்பது பற்றிச் சில வார்த்தைகளேனும் இங்கே பேசுவது அவசியம்.
தோழர் செல்வப்பெருமாள்
வடசென்னை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியராகக் களப்பணியாற்றிக் கொண்டிருந்த தோழர் செல்வப்பெருமாள் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் கணிணி இயக்கத்தெரிந்த ஒருவர் தேவை என்பதற்காக கட்சியின் வேண்டுகோளை ஏற்று அலுவலகப்பணிக்கு வந்தார்.பரந்த வாசிப்பு அனுபவம் மிக்க தோழர் அவர்.நவீன இலக்கியங்கள்,தத்துவார்த்த நூல்கள்,வரலாறு,பண்பாடு என்று அவர் பல துறைகளில் தன் வாசிப்பை விரித்திருந்தார்.அலுவலகத்துக்குச் செல்லும் போதெல்லாம் எனக்கான வார்த்தைகள்,தகவல்கள்,சில சமயம் விமர்சனங்கள் என வைத்திருப்பார்.நல்ல வளர்த்தியான அவருடைய உருவம் பெரிய கண்கள் பிரியம் குழைந்த குரல் என அப்படியே கண்ணுக்குள் நிற்கிறார்.
என்னுடைய எழுத்துக்கள் மீது கூர்மையான விமர்சனங்களை அன்பான வார்த்தைகளில் வெளிப்படுத்துவார்.கணிணியை ஒரு டைப்-ரைட்டர் அளவுக்கு மேல் பயன்படுத்தத் தெரியாத எனக்குப் பல சமயங்களில் அவருடைய வேலைப்பளுவுக்கு நடுவே மனம் கோணாமல் வேலை செய்து கொடுத்திருக்கிறார்.சந்திப்பு என்கிற பெயரில் வலைப்பக்கம் ஒன்றை விடாமல் நடத்தி வந்தார்.தான் களத்தில் வேலை செய்கிற ஆள் என்கிற தன்னுணர்வே அவரிடம் எப்போதும் இருந்து வந்தது.அறிவாளியாகத் தன்னை ஒருபோதும் முன்னிறுத்தாத அடக்கம் பல சமயம் என்னைக் கூச வைக்கும்.
களப்பணிக்குத்தான் போக வேண்டும் என்று தொடர்ந்து அவர் வலியுறுத்திக்கேட்டுக்கொண்டாலும் கட்சியின் தேவை கருதி அலுவலகத்திலேயே பணி செய்து வந்தார்.மானுட சமுத்திரம் அவரை வா வா என அழைத்துக்கொண்டே இருந்ததாக சதா உனர்ந்து கொண்டிருந்த அவர் ஒரு இடத்தில் இருப்பாக இருந்து பணியாற்றியதே ஒரு தியாகம்தான்.புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு விடுப்பில் சென்றிருந்த அவரை வீட்டில்போய் பார்த்து வர வேண்டும் என்கிற என் நினைப்பு நினைப்பாகவே இருக்க எதிர்பாராத நாளில்(40 வயது) அவர் மறைந்து விட்டார்.மூன்று பெண் குழந்தைகளும் அப்பா இல்லாத பிள்ளைகள் ஆகி நிற்கின்றன.கட்சி அவருடைய குடும்ப நிதிக்கான அறைகூவலை விடுத்துள்ளது.இதுவரை 2 லட்சத்துக்கு மேல் தோழர்கள் வழங்கியுள்ளனர்.இதை வாசிக்கும் நீங்களும் உங்கள் பங்களிப்பை (50 ரூபாய் கூட ) அனுப்பலாம்.நிதி அனுப்ப வேண்டிய முகவரி : செயலாளர்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்),தமிழ்நாடு மாநிலக்குழு,27,வைத்தியராமன் தெரு,தி.நகர்,சென்னை-600017.
அகரம் கண்ணன்
மதுரை தீக்கதிரில் ஊழியராகப் பணியாற்றி வந்த 36-37 வயதுக்காரரான தோழர் அகரம் கண்ணன் எதிர்பாராமல் வீட்டார் தூங்கி எழுது பார்த்தபோது இறந்து கிடந்திருக்கிறார்.ஏற்கனவே இதயநோய் இருந்ததாக அறிகிறேன்.எப்போதும் சிரித்த முகத்தோடு இனிப்பான வார்த்தைகள் பேசும் கண்ணன் திருப்பரங்குன்றம் ஆர்வி பட்டியில் வசித்து வந்தார்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்ங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டக்குழு உறுப்பினர்.கொஞ்சம் கவிப்பழக்கமும் உண்டு.
கோணங்கியின் எழுத்துக்களை எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் நூற்றுக்கணக்கான பக்கங்கள் தட்டச்சு செய்து கொடுத்தவர்.அவர் இறந்து விட்ட செய்தியை ஓவியர் வெண்புறா தொலைபேசியில் சொன்னபோது அதிர்ச்சியடைந்த என் மனதில் உடனே அவரது சிரரித்த முகமே நினைவிலாடியது.திருப்பரங்குன்றம் தமுஎகச கிலையில் பூத்த மலர்கள் மூன்று நான்குபேர் – முற்றிலும் இளைஞர்கள் - வரிசையாக காலமாகி விட்டனர். அது யோசிக்கையில் இன்னும் வருத்தம் தருகிறது.தற்செயல் நிகழ்வுகள் அடுத்தடுத்து ஒரே இடத்தில் நடக்கும்போது தெளிவான மன்மும்கூட சற்று ஆடித்தான் போகிறது.
பா.இராமச்சந்திரன்
என் மனதுக்கு நெருக்கமான மனிதர்களில் ஒருவராக- நீண்டகால நண்பராக- வளர்ந்து வரும் நல்ல சிறுகதைப்படைப்பாளியாக தோழர்.பா.இராமச்சந்திரன் நம்பிக்கையின் சின்னமாக வாழ்ந்து வந்தார். சதா துன்புறுத்தும் இதயநோயுடன் போராடியபடியே எனக்குத்தெரிய கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தவர்.அவருடைய நம்பிக்கை ( அப்பா! )மிரட்சியளிக்கக்கூடியது. இதயநோய் காரணமாக எப்போதும் விழுந்துவிடும் அபாயத்தை மடியில் கட்டிக்கொண்டே –அதற்கு முன் இதை முடித்து விடுகிறேன்ன -அதற்கு முன் இதை எழுதி விடுகிறேன் என்று பரபரப்பாக இயங்கினார்.அவரது ஒவ்வொரு படைப்பு முயற்சி குறித்தும் தொடர்ந்து என்னோடு பேசியபடி இருந்தார்.எனக்கு அவர் மனதில் முக்கியமான இடம் வைத்திருந்தார்.அந்த அன்புக்கு ஈடான அளவுக்குப் போதிய நேரத்தையோ அன்பையோ அவருக்காக நான் தந்துவிடவில்லை என்கிற குற்ற உணர்வு இப்போதும் எனக்கிருக்கிறது.
அவருடைய அப்பாவின் கைப்பெருவிரல் என்கிற சிறுகதைத்தொகுப்பு பல குறிப்பிடத்தகுந்த கதைகளைக்கொண்டது.வண்ணதாசன் மிகவும் சிலாகிட்துப் பாராட்டிய படைப்பாளியாக பா.ரா.இருக்கிறார்.சென்னைத் துறைமுகத்தில் பணியாற்றிய அவர் அங்கேயும் துரைமுகத்தமிழ்ச்சங்கத்தில் பல முக்கியமான காரியங்கலைச் செய்துள்ளார்.பல புதிய மரபுகளை அங்கே உருவாக்கப்பாடுபட்டிருக்கிறார்.துரைமுகத் தொழிற்சங்க வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு மூன்று தலைமுறை நாவல் ஒன்றை எழுதத்துவங்கியிருந்தார்.அது பாதியிலேயே நிற்கிறது.
வடசென்னை மாவட்டத்தில் தமுஎகச சார்பில் தேநீர் என்கிற ஒரு தொடர் நிகழ்வை நடத்த்தி வருகிறார்கள்.அதன் முதல் நிகழ்வு அவரது வீட்டில்தான் நடந்தது.ஒவ்வொரு தேநீரும் ஒரு தோழர் வீட்டில் நடைபெறும்.அன்று அந்த வீட்டுப்பெண்களுக்கு முழு ஓய்வு கொடுத்து ஆண்கள் கூடிச் சமைத்து அதை உண்டு கருத்துரை,கலந்துரை, பெண்களின் படைப்புகளை வாசிப்பது இதுபோல அந்தத் தேநீர் நிகழ்ச்சி.அப்படியே தமுஎகச மாநில மாநாடு முடிவான தமுஎகசவில் உள்ள ஆண்கள் எல்லோரும் சட்டி பானை கழுவுவது உள்ளிட்ட அனைத்து வீட்டு வேலைகளிலும் அன்ராடம் பங்கேற்க வேண்டும் என்பதை வீடுகளில் நடைமுறைப்படுத்தும் துவக்கமாகவும் அந்தத் தேநீர் அமைய வேண்டும் என்பது திட்டம்.தோழர்.பா.ரா. தன் வீட்டில் அதற்கான ஏற்பாட்டை மிகக்கச்சிதமாகவும் அழகாகவும் இயல்பாகவும் செய்திருந்தார்.அந்த அப்பார்ட்மெண்ட்டில் இருந்த எல்லா வீட்டுப்பெண்களையும் அவருடைய துணைவியாரும் மக்களும் அழைத்து வந்து அமரவைத்திருந்தனர்.அவருடைய பிள்ளைகள் இந்த விளையாட்டை ரொம்பவே ரசித்தார்கள்.
அவர் கடைசியாக மருத்துவமனைக்குப் போவதற்கு முன்னதாக தன்னுடைய முதல் ஆவணப்படத்தை முடித்துவிட்டுத்தான் போக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.21 பிப்ரவரி இரவில் அவர் மரணமடைந்திருக்கிறார்.17ஆம் தேதி எனக்கு அவர் இயக்கிய முதல் ஆவணப்படமான தூரத்துக்கனவு சிடியை அனுப்பியிருந்தார்.கல்வி முறையின் மீது சீரியஸ்ஸான விவாதத்தை முன்வைத்த ஒரு அக்கறையான படம் அது.அவர் மருத்துவமனைப் படுக்கையில் இருந்தபோது படம் ரொம்ப அற்புதமாக வந்திருப்பதுபற்றி அவரோடு பேசினேன்.இறப்பதற்கு ஒருநாள் முன்னதாகக்கூட சென்னை வந்துவிட்டீர்களா என்று காலையில் பேசினார்.சும்மாதான் பேசினேன்.செய்தி ஒன்றுமில்லை என்றார்.ஆனால் வேறு சில நண்பர்களை பார்க்கணும்போல இருக்கிறது வீட்டுக்கு வாங்களேன் என்று அழைத்திருக்கிறார்.என்னையும் அப்படி அழைக்க நினைத்தே பேசியிருக்கிரார் என்பதை பின்னரே உணர்ந்தேன்.மரணத்தை முன்னுணர்ந்து விட்ட மனதின் அந்த அழைப்பை நான் தவற விட்டுவிட்ட வருத்தம் என்னுள் அப்படியே தங்கி நிற்கிறது.
இரண்டு தினங்களுக்கு முன் அவருடைய செல்போனிலிருந்து எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது .அவர் பெயரை செல்லில் பார்த்ததும் ஒருகணம் அதிர்ந்துதான் போனது மனது.செய்தியை விரித்தேன்.எங்க அப்பாவின் நினைவாக வீட்டில் ஒரு சின்ன நிகழ்ச்சி- நீங்க அவசியம் வரணும் என்று அவருடைய பிள்ளைகள் அனுப்பிய செய்தி அது.வாசித்ததும் அப்படியே உடைந்து அழுதுவிட்டேன். தேநீர் நிகழ்ச்சியின் போது அவருடைய மகனும் மகளும் முகத்தில் சிரிப்புடன் ஓடியாடித்திரிந்த காட்சி மனதில் தோன்றி என் கண்ணீர் பெருகியது. அந்தக்கண்ணீர்த்துளியின் ஈரம் இன்னும் என் விழி ஓரங்களில் உறைந்து நிற்கிறது.அந்தப் பிள்ளைகளின் முகத்தை எப்படி நான் எதிர்கொள்வேன்?
இந்த மூன்று தோழர்களுமே தங்கள் மரணத்தை முன்னுணர்ந்து வாழ நேர்ந்திருப்பது பற்றி நினைக்கப் பெரும் துயரமாக இருக்கிறது.
* இவை போதாதென்று திருநெல்வேலியில் நூற்றாண்டு கண்ட ஹிலால் பிரஸ் அதிபர் நண்பர் சாதிக் அதே 21ஆம் தேதி மரணமடைந்தார். மிகப்பெரிய நூலகத்தைத் தன் வீட்டில் வைத்திருக்கும் சாதிக் மிகப்பெரிய கலா ரசிகரும் ஆழ்ந்த வாசகரும் எளிய இலக்கிய முயற்சிகளுக்குக் கை கொடுப்பவருமாக வாழ்ந்தவர்.பழகுதற்கு இனிய அந்த நண்பரையும் இழந்தோம்.
* நேற்று தஞ்சையிலிருந்து கோணங்கியின் தொலைபேசி ‘ நம்ம கனகசபை இறந்திட்டாண்ணே..’ என்று. என்னாடா வாழ்க்கை இது என்று ஆகிவிட்டது.40 வயதுகூட நிரம்பாத திருமணமாகாத கனகசபை திருபுவனத்தில் குடும்பத்தொழிலான பட்டு நெசவு பார்த்துக்கொண்டிராமல் இலக்கியவாழ்வு வாழும் கனவுகளுடன் சென்னைக்குப்போனவன். சென்னை கற்றுக்கொடுத்த எந்தப் பாடத்தையும் சீரியஸ்ஸாக எடுத்துக்கொள்ளாமல் உடம்பைக்கெடுத்துக்கொண்டவன்.கடைசியாக திருவண்ணாமலையில் பவா வீட்டில் சில காலம் தங்கியிருந்த போது தான் வீட்டுக்கு எவ்வகையிலும் பயன்படாமல் போனவன் என வருந்தியிருக்கிறான்.வீட்டுக்கு என்னால் திரும்ப முடியுமா –தம்பிக்கு ஒரு சுமையாகத்தான் இருப்பேன் என்று வருந்தியிருக்கிறான்.பவா உடனே கனகசபையின் தம்பிக்கு தொலைபேசியிருக்கிறார். கனகசபையின் தம்பியோ அவர் எனக்கு அண்ணனாக வந்து என்கூட வீட்டில் இருந்தால் போதும்.எந்த வேலையும் அவர் செய்ய வேண்டாம்.அவர் பாட்டுக்கு படிக்கட்டும்.எழுதட்டும்.நல்லா நான் ராஜா மாதிரி வச்சிக்கிறேன் அவரை.உடனே அவரை ஊருக்கு அனுப்பி விடுங்க என்று சொல்லியிருக்கிறான்.ஆனாலும் கனகசபை ஊர் திரும்பவில்லை. காய்ச்சல் வந்து கவனிக்க ஆளின்றிச் சென்னையில் இறந்து விட்டான்.என் மீதும் எங்கள் குடும்பத்தார் மீதும் அளவற்ற அன்பு கொண்டு வாழ்ந்த என் தம்பி ஒருவனை நான் இழந்து விட்டேன்.
இலக்கியக் கிறுக்கு நம்மில் பலரை நம்மைச்சுற்றியுள்ள நம்மீது அளவற்ற அன்பு கொண்ட குடும்பத்தாரைக்கூடக் கணக்கில் கொள்ளாமல் அன்பைத் தேடி வேறு எங்கெங்கோ அலைய வைத்து விடுகிறது.
காலத்தின் நகைச்சுவை என்பது இதுதான் போலும்.
Monday, March 1, 2010
எங்கள் தோழர் உ.ரா.வரதராஜன்
எங்கள் தோழர் உ.ரா.வரதராசன்
பிப்ரவரி 21 அன்று விழுப்புரத்தில் தோழர் இ.எம்.எஸ் நூற்றாண்டுக் கருத்தரங்கில் கலை இலக்கியமும் கம்யூனிஸ்ட்டுகளும் என்கிற தலைப்பில் நானும் அரசியல் அரங்கில் இ.எம்.எஸ் என்னும் தலைப்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ்ணனும் பேசுவதான ஏற்பாட்டில் அம்மேடையில் இருந்தபோதுதான் –நான் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது தோழர் ஜி.ஆர். அடிக்கடி எழுந்து பின்னால் சென்று தொலைபேசிவிட்டு வந்து கொண்டிருந்தார். நான் பேசிவிட்டு அமர்ந்ததும் போரூர் ஏரியில் கிடைத்த உடல் பற்றி தொலைக்காட்சிச் செய்தி ஓடுவதாகச் சொன்னார்கள்.அடுத்து தோழர் ஜி.ஆர் பேச வேண்டும்.பேசும் மனநிலை அவருக்கு அப்போது இல்லை.அவர் உள்ளம் நடுங்குவதை அவரது கைகளில் நான் பார்த்தேன்.உடனே சென்னை கிளம்புகிறேன் என்றார்.திரண்டிருந்த 600க்கு மேற்பட்ட தோழர்களை மதித்து சில வார்த்தைகள் மட்டும் பேசுகிறேன் என்று மைக்கின் முன்னால் நின்றார்.அவர் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை.கண்களில் கண்ணீர்.அவ்விதம் அவரை நான் பார்த்ததில்லை.அவர் மீளச் சில நிமிடங்கள் ஆனது.
அன்று முதல் இந்த நிமிடம்வரை தோழர் உ.ரா.வரதராஜன் அவர்களின் நினைவாகத்தான் இருக்கிறது.முதல் மூன்று தினங்கள் எண்ணற்ற எங்கள் இயக்கத்தோழர்கள் பலரையும் போல நான் தூக்கமின்றிப் பெரும் மனக்குழப்பத்தில் கிடந்து தவித்தேன் நான் கட்சியில் சேர்ந்து 31 ஆண்டுகள் ஆகிறது.இந்த 31 ஆண்டுகளில் கட்சி சந்தித்திராத ஒரு துயரச்சம்பவம் இது.ஒரு மத்தியக்குழு உறுப்பினர் தற்கொலை செய்து கொள்வது என்பது.தவிர, அவர் என்ன ஒரு பன்முகப்பட்ட பரிமாணங்கள் கொண்ட ஆளுமை?எத்தனை பிரியமும் அக்கறையும் மிக தோழர்.சொந்த வாழ்வைத் தொடர்ந்து சத்திய சோதனைக்கு உள்ளாக்கி வாழ்ந்த மகத்தான மனிதர்.
அழுது அழுது கண்கள் கெட்டன.எங்கே தவறிழைத்தோம் நாம் - அவரை இழக்கும்படியாக ? என்று சம்பவம் சம்பவமாக எழுத்து எழுத்தாக யோசித்து யோசித்து மூளை சோர்ந்தது?குற்ற உணர்வு கழுத்தை நெறிக்கப் படுக்கையில் விழுந்து கிடந்தேன். இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர் ஐயாயிரம் பேர் என்றால் மாநிலம் முழுக்க எண்ணற்ற தோழர்கள் இம்மரணத்தை எதிர்கொள்ள முடியாமல் மனப்பிறழ்வுக்கு ஆளானதுபோல ஏதேதோ பேசித்திரிகிறோம். பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்கிறோம். கோபப்பட்டுக்கொள்கிறோம்.கட்சித்தலைமையை வெளியிலிருப்பவர்களைப் போலவே நாங்களும் கடுமையாகக் கண்டனம் செய்து பேசிக்கொள்கிறோம்.ஒரு பேதலித்த கூட்டு மனநிலையில் உழன்று கிடந்தோம்.
வேலை செய்தால் மட்டுமே இக்கொடிய உணர்வுகளிலிருந்து தப்பிக்கலாம் என்று மதுரைக்குச் செம்மலர் வேலைக்குப் போய் பகலும் இரவுமாகத் தோழர்களோடு சேர்ந்து வேலை செய்துவிட்டு அப்படியே தூங்காமல் ரயிலில் ஏறி நின்றபடி பயணம் செய்த கணத்தில் .. ..
(2)
எப்படி இறந்தீர்கள் தோழர்? இப்படி ஒரு முடிவை எப்படி எடுத்தீர்கள்- நொடிப்பொழுதில் எங்களையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு முகம் திருப்பி மரணத்துக்கு முகம் கொடுக்க எப்படி மனம் வந்தது என்று மீண்டும் மீண்டும் மானசீகமாக அவரிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.வாழ்நாள் முழுக்க மார்க்சிஸ்ட்டாக ஒரு கம்யூனிஸ்ட் பண்பாட்டில் வாழ்ந்து எமக்கெல்லாம் வழிகாட்டிய நீங்கள் இறுதி நாட்களில் ஏன் தன் வசம் இழந்தீர்கள்? சில மாதங்களுக்கு முன் நீங்கள் பொறுப்பு வகித்த ஒரு மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக முழுநேர ஊழியராகப் பணியாற்றிய ஒரு தோழர் பாலியல் பிரச்னையில் சிக்கியபோது நீங்கள்தான் விசாரணை நடத்தி அவரைக் கட்சியிலிருந்து நீக்கும் முடிவை கட்சியில் முன்வைத்தீர்கள்.அவருடைய குடும்பம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக அத்தோழரின் துணைவியாரை கட்சி அலுவலகத்தில் பணியாளராகச் சேர்த்து ஊதியம் வழங்க ஏற்பாடு செய்தீர்கள்.எத்தனை தோழர்கள் மீது எத்தனையோ நடவடிக்கைகள் –அவற்றையெல்லாம் நம் கட்சிக்குள் ’தண்டனை’ என்றா புரிந்து வைத்திருக்கிறோம்? வெளியிலிருப்பவர்களுக்கு நமக்கான இந்தப் பண்பாடு புரியாமல் இருக்கலாம்..தன் பலவீனத்தை மாற்றிக்கொண்டு மீண்டும் கட்சிப்பணியில் முன்னைப்போலப் பணியாற்றத் தரப்பட்ட வாய்ப்பாகத்தானே நடவடிக்கைகளை நாம் பார்த்து வந்துள்ளோம்.இதுதானே நம் கட்சிக்குள் நாம் பின்பற்றும் பண்பாடு?
கட்சி நடவடிக்கையால் தோழர் டெங் ஷியோ பிங் பத்தாண்டுகளுக்கு மேலாக கூட்டுப்பண்ணையில் விவசாயம் பார்க்கப் போகவில்லையா? மீண்டும் அவர் சீனதேசத்தின் தலைவராகவே வந்துவிடவில்லையா? தோழர்கள் பி.டி.ரணதிவே,சுந்தரய்யா, போன்ற தலைவர்களே கட்சி நடவடிக்கைக்கு ஆட்பட்டவர்கள்தானே? மீண்டும் அவர்கள் தலைமைக்குழுவுக்கே தேர்வு செய்யப்பட்டுத்தானே வந்தார்கள். தோழர் பி.ராமமூர்த்தி அரசியல்; தலைமைக்குழுவிலிருந்து சென்னை மாவட்டத்தில் வந்து வேலை செய்யவில்லையா?இந்த வரலாற்றையெல்லாம் எங்களுக்குக் கற்றுத்தந்த நீங்களா தற்கொலை என்னும் முடிவுக்குப் போனீர்கள்? மனம் ஏற்க மறுக்கிறது தோழர்..
மத்திய கமிட்டி எடுக்கும் நடவடிக்கைதான் கட்சியில் இறுதியா? அதற்குமேல் கண்ட்ரோல் கமிஷன் ஒன்று இருக்கிறதே? கடந்த மத்தியக்குழுக் கூட்டத்தில் கூட இந்த நடவடிக்கையை ஒரு கம்யூனிஸ்ட்டாக –கமிட்டியின் முடிவு என்பதால்-ஏற்கிறேன்- ஆனால் கண்ட்ரோல் கமிஷனுக்கு மேல்முறையீடு செய்யும் என் உரிமையைப் பயன்படுத்துவேன் என்று கம்பீரமாகச் சொல்லிவிட்டுத்தானே வந்தீர்களாம்?அதற்குப்பிறகு ஏன் இந்த முடிவு?எத்தனையோ மத்திய கமிட்டி/மாநிலக்கமிட்டி நடவடிக்கைகள் கண்ட்ரோல் கமிசன் விசாரணையில் மாற்றப்பட்டுள்ள வரலாறு தாங்கள் அறியாததா?
அதிகாரம் செலுத்துவது என்பதோ பதவி என்பதோ நம் கட்சிக்குள் ஒரு வேலைப்பிரிவினை மட்டும்தான் என்று எத்தனை கட்சி வகுப்புகளில் எங்களுக்குப் பாடம் எடுத்தீர்கள் தோழர்?இந்த நடவடிக்கைக்காகவா மனம் உடைந்து போனீர்கள் ? பெண் தொடர்பான குற்றச்சாட்டு என்பதால் அவமானமாக உணர்ந்து விட்டீர்களா?எத்தனையோ போராட்டங்களில் வெற்றி பெற்றேன் ஆனால் உள் போராட்டத்தில் தோற்றுவிட்டேன் என்று கடைசிக்கடிதத்தில் எழுதிய உங்கள் வரிகளுக்கு என்ன பொருள் என்று இன்னும் விளங்கவில்லை தோழா. .குடும்பத்தாருடனான மன இடைவெளியைச் சொன்னீர்களா?உங்களுக்குள்ளேயே நடந்த அகப்போராட்டத்தைச் சொன்னீர்களா ?
மயிர் நீப்பின் வாழாக் கவரிமானாக உங்களை ஏன் உணர்ந்தீர்கள்?மானம் அவமானம் என்பது குறித்த நிலப்பிரபுத்துவ/முதலாளித்துவக் கருத்தியல்களுக்கு நீங்களா இரையாவது?அன்றாடம் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் அவமானத்துக்கும் ஆளாகும் வறிய நம் வர்க்கத்துப் பெண்கள் ஒடுக்கப்பட்ட சாதிமக்கள் இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறதா?
கட்சி மாநிலக்குழுவின் விசாரணை சரியில்லை என உணர்வீர்களானால்- உங்கள் வாழ்க்கையையே பணயமாக வைத்து நீங்கள் அம்முடிவை எதிர்த்திருப்பதாகக் கொள்ள இடமிருப்பதால் இந்த இடத்தில் நான் கட்சி முடிவு தவறு என்றே ஏற்று – அப்படியானாலும் அதை எதிர்த்துக் கண்ட்ரோல் கமிசனுக்குப் போகலாம் – நின்று போராடலாம்- வாழ்க்கையில் எதுதான் இறுதி? தற்கொலை நமது பாதையாக எப்போதுமே இருந்ததில்லையே?என்றுதான் கேட்கத்தோன்றுகிறது.
(3)
எல்லா நிலைபாடுகள்,கொள்கைகள்,கருத்துக்கள் எல்லாவற்றையும் விட மனித உயிர் மகத்தானது.முக்கியமானது.அதிலும் தோழர்.உ.ரா.வ போன்றவர்கள் கட்சியின் தமிழக/இந்திய அரசியல் அரங்கின் - மாணிக்கங்கள்.அவர்களை இழக்க ஒரு கட்சி தானே முன்வருமா? ஆனால் டபிள்யூ.ஆர்.வி.யின் மரணத்தை முன்வைத்து எப்படியெல்லாம் எதிர்வினைகள்?
உலகம் சுற்றி வந்த தலைவர் தா.பாண்டியன் தர்ம அட்வைஸ் வழங்குகிறார்.படகேறி மீன் பிடிக்கப் போகும் தா.பா. கடலில் வலை வீசாமல் யாரோ பிடித்துப் படகில் போட்ட மீன்களுக்கே தூண்டில் போடுபவர்.இன்று மார்க்சிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் தற்காலிகக் கலக்கத்தில் ஏதாச்சும் மீன் கிடைக்குமா என்று பார்ப்பார். ஆயிரம் உண்டிங்கு பிரச்னை எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி?என்று கேட்போம் தோழரே.
அப்படின்னா உங்ககட்சி என்ன தனியார் கம்பெனியா கார்ப்பரேட் நிறுவனமா?பலபேர் உழைத்துச் செத்து மடிந்துதான் இக்கட்சியை வளர்த்தார்கள் என்று நமக்கு ஹிஸ்டரி ஜியாகிரபி பாடம் எடுப்பவர்கள் சிலபேர்.
பின் தொடரும் நெழலின்ட குரல் என்கிற முழுநீள நகைச்சுவை நாவலை எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன் பாத்திங்களா நான் அப்பவே என் நாவலில் கம்யூனிஸ்ட்டுகள் இப்படித்தான் ஆவாங்க சாவாங்கன்னு எழுதிட்டேன் என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் முடிவுரையை பிரகாஷ் காரத் எழுதிக்கொண்டிருக்கிறார் என்றும் காரத் கட்சிக்கு ஒரு சுமை என்றும் அவர் சீனாவால் செயலாளராக நியமிக்கப்பட்டவர் என்றும் கட்சியை தலைமையிடமிருந்து காப்பாற்றுங்கள் என்றும் இந்து என்.ராமின் சதி வேலைதான் இவ்வளவும் என்றும் தன் சதி வலைப்பின்னலில் எழுதியிருக்கிறார்.
இன்னும் ஒரு தோழர்- மார்க்சிஸ்ட் கட்சியில் உள்ளவர் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்?மாநிலக்குழு உறுப்பினர்கள் எல்லோரும் அக்மார்க் ராமர்களா சொல்லுங்க என்றும் இந்தக் கலாச்சாரப் பாசிசத்துக்கு எதிராக ஏதாச்சும் செய்யுங்க என்று ஊர் பூராவும் எஸ் எம் எஸ் அனுப்பினார்.
மாநிலச்செயலாளர் பதவிக்கான அதிகாரச்சண்டையில் உ.ரா.வரதராஜன் பலிகடா ஆக்கப்பட்டு விட்டார் என்று ஒரு பகுதியில் குறுஞ்செய்திகளும் குசுகுசுப்புகளும் பரப்பப்பட்டது.
பரபரப்பு நக்கீரன் இம்மரணத்தைகத் தொடர்ந்து கொண்டாடுகிறது.
எல்லோருடைய இலக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமைதான்.தலைமையையும் கட்சி அணிகளையும் வேறு வேறாக நிறுத்திப்பேசும் தொனி இந்த எல்லா எதிர்வினைகளிலும் பார்க்க முடிகிறது.
(4)
கட்சி வேறு நான் வேறு என்று பிரித்து வாழத்தெரியாத எம் போன்ற பல்லாயிரம் பல்லாயிரம் கட்சித்தொண்டர்கள் எங்கள் தோழரைப் பிரிந்து கண்ணீரில் நிற்கும் ஒரு துயரமான தருணத்தில் எம்மீது வீசப்படும் கணைகளாகவே இவற்றையெல்லாம் வேதனையுடன் பார்க்கிறோம்.ஒருபுறம் எங்களை விட்டுப்பிரிந்த தலைவரின் பேருக்கும் புகழுக்கும் களங்கம் வந்துவிடாமலும் அதே சமயம் எம் உயிரினும் மேலான எங்கள் சுவாசக்காற்றான ஆயிரம் ஆயிரம் தோழர்களின் குருதியிலும் தியாகத்திலும் எழுந்து நிற்கும் எம் கட்சியின் மீது அள்ளி எறியப்படும் (இவற்றில் சில எம் நெருங்கிய நண்பர்களிடமிருந்தே வருவதையும் புரிந்து கொள்கிறோம்) கேள்விகளை, குற்றச்சாட்டுகளை, ஏராளமான அவதூறுகளை,அற்பத்திலும் அற்பமான வார்த்தைகளை நிதானமாகவும் தைரியமாகவும் உண்மையின் மீது அழுத்தமாகக் காலூன்றி நின்று எம் செங்கொடியை இறுகப்பற்றியபடி எதிர்கொள்ளத்தயாராகிறோம்-மெல்ல மெல்ல.
தோழர் உ.ரா.வ அவர்களின் இறுதி உயில் போல இன்று மீடியாவினால் தூக்கி நிறுத்தப்பபட்டுள்ள அவரது கடிதத்தில் அவர் கட்சித்தலைமைக்கு முன்வைத்த புகார் இரண்டுதான் அப்படியே அவரது வார்த்தைகளில்.. .. ..
Thereafter, the receipt of a notice in August 2009 from Small Cause Court in connection with an accident compensation claim against my elder son who owned the car, which met with an accident on November 12, 2008, triggered the flashpoint. (I was driving the car at the time of the accident.) My wife was in extreme rage... and shot off a letter to the Party State Secretary by mid-August 2009 referring to the accident and intimating that she was going to file for divorce against me. There was no mention of Pramila issue or anything else about me in that letter.... Long after, three letters — 1) from Jhansi Rani dated 22 Sep. 2009, 2) from U Vasuki dated 23 Sep. 2009 and 3) from my wife D Saraswathi dated 25/28 Sep. 2009 — were received by the Party State Secretary. My explanation was called for and subsequently the enquiry was instituted.
இன்னும் ...
Between August middle and September third week, my wife Saraswathi had prevailed upon Ms Sudha Ramalingam to finalise the petition for consent divorce and was in an agitated temperament... When my wife Saraswathi fixed up the date for filing the petition for consent divorce as October 6, 2009, I reported the matter to the State Party Centre. The Party Centre decided to request U Vasuki to talk to Saraswathi, in an effort to postpone the filing of the petition and avert an awkward Press publicity... She in turn talked to Saraswathi. ...But in the process Vasuki assured Saraswathi that the Party would take action on complaints against me. Saraswathi conveyed this to me as well as to Ms Sudha Ramalingam as reason for postponing the filing of the divorce petition. The very next day after the meeting of the Party State Secretariat i.e. on November 22, 2009, Jhansi Rani during a 20-minute talk over telephone assured Saraswathi that the Party would take stern action against me; she also enquired whether she (Saraswathi) would be content with that and drop the proposal of divorce petition. These moves clearly indicate that both Vasuki and Jhansi Rani were keen on assuaging the agitated feelings of Saraswathi and in the process attempting “a barter deal” of dropping of divorce proposal with the disciplinary action against me.
அவர் குறிப்பிடும் குற்றச்சாட்டுகள்
‘COMPLAINT NOT IN WRITING, ONLY TELEPHONE EVIDENCE TAKEN’
‘PROBE PANEL FINALISED REPORT WITHOUT HOLDING ANY SITTING’
‘MOTIVE WAS ONLY TO ASSUAGE AGITATED FEELINGS OF MY WIFE’
தன்னுடைய ஆத்திரமடைந்த துணைவியாரை சாந்தப்படுத்துவதற்காக கட்சி தனது தரப்பு வாதத்தை முழுமையாகவும் முறையாகவும் கேட்கவில்லை என்பதுதான் அவரது வேதனையாக அவரது இறுதிக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.அவரே எழுத்துப்பூர்வமாக இப்படி எழுதிவிட்டபிறகும் கட்சிக்குள் அதிகாரப்போட்டி என்றும் என்.ராமின் சதி என்றும் இன்னும் கிளப்பப்படும் எண்ணற்ற வாதங்களுக்கும் என்ன அர்த்தம் இருக்கிறது? அவதூறு என்கிற ஒற்றைச்சொல்லைத்தவிர. இவற்றையெல்லாம் அவதூறு என்று சொன்னால் உடனே இந்த ஒற்றைச் சொல்லால் எங்கள் வாயை அடைக்காதீர்கள் என்று கிளம்பி விடுகிறது கோபம் . அவரே குறிப்பிடாத குற்றங்களை கட்சியின் மீது சுமத்துவது அவதூறு அல்லாமல் வேறு என்ன?
தவிர இக்கடிதத்துக்குப் பிறகுதான் அவர் மத்தியக்குழுக் கூட்டத்துக்குப் போகிறார்.அங்கு எல்லா அரசியல் அஜெண்டாக்களின் மீதும் தெளிவான கருத்துக்களை முன்வைக்கிறார்.கடைசி அஜெண்டாவான தன் மீதான நடவடிக்கையை ஏற்று மேல்முறையீட்டுக்குச் செல்வதாகக் கம்பீரமாகக் கூறிக் கீழே இறங்குகிறார்.
(5)
· எனக்கு எங்கள் தவறென்று படுவதை வெளிப்படையாகச் சொல்கிறேன். நடவடிக்கைக்கு ஆளான ஒரு தோழரின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை நாங்கள் அறிந்திருந்தும் அவரோடு அரவணைக்கும் மனதோடு சில தோழர்கள் தொடர்ந்து பேசிட ஒரு ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும். குற்ற மனநிலை குறித்து ஆயிரம் இலக்கியங்கள் படித்த நாங்கள் இதில் தவறிவிட்டோம் என்று எனக்குப் படுகிறது.அப்படியான ஏற்பாடு உலகின் எந்த கம்யூனிஸ்ட் கட்சியிலாவது இருக்கிறதா என்றும் தெரியவில்லை.(பூர்ஷ்வா கட்சிகள் பற்றி நாம் இங்கு பேச வேண்டியதில்லை)
· பலவீனங்களிலிருந்து மீண்டு வருவதற்குத்தான் நடவடிக்கை என்னும்போது அத்தகைய தோழர்களோடு தோழமையோடு தொடர்ந்து உறவு கொண்டு கவுன்செல்லிங் செய்வது யார் என்று அதே நடவடிக்கையின் பகுதியாகவே முடிவு செய்யப்பட வேண்டும் என்று தோன்றுகிறது.
· நடவடிக்கைக்கு உள்ளான தோழர்களோடு பகை முகம் காட்டும் இந்து தர்ம சிந்தனை இன்னும் பல பேரிடம் நீடிக்கிறது.அது களையப்பட வேண்டும்.
ஆண்பெண் உறவு குறித்து பலரும் இன்று எமக்கு பாடம் எடுக்கிறார்கள்.எல்லாம் நாங்களும் அறிந்ததுதான்.நாம் வாழ்வது ஐரோப்பிய நாகரிகத்தில் இல்லை.தமிழர்களைத்தான் நாம் கட்சியை நோக்கி அணி திரட்ட வேண்டியிருக்கிறது.ஆகவே இந்தப் பண்பாட்டின் அசைவுகளைப் புரிந்து கொண்டு நமக்கு உடன்பாடு இல்லாதபோதும் (ஒரு தந்திரமாகவேனும்) அதன்படி வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது.
· பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து அல்லது சம்பந்தப்பட்ட ஆணின் துணைவியாரிடமிருந்து புகார் வராத பட்சத்தில் கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்படாத அளவுக்குள் இருக்கும் பட்சத்தில் –கட்சியின் கவனத்திற்கு முறையாக வராத பட்சத்தில் தோழர்களின் சொந்த வாழ்வில் கட்சி தலையிடுவதில்லை
இதெல்லாம் ஒருபுறமிருக்க ,ஒரு கம்யூனிஸ்ட்டாக வாழ்வது என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டு அப்படி வாழ்வதற்கான போராட்டத்தை நடத்துகிறோம் என்று ஒப்புக்கொடுத்துத்தான் கட்சிக்குள் வந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.ஆகவே மார்க்சிஸ்ட்டுகள் தனி வார்ப்புகளாகத்தான் இருக்க முடியும்.இதில் யாருக்கும் விதி விலக்கை நாங்கள் ஒருபோதும் கோரியதில்லை.
கட்சிக்கு வெளியிலிருந்து வரும் விமர்சனங்களை அவை கோபமான வார்த்தைகளில் இருந்தாலும் நிதானத்துடன் பரிசீலித்து தவறுகள் இருப்பின் எம்மைத் திருத்திக்கொள்வோம் .தோழர் என்.வரதராஜன் அடிக்கடி கூறுவதுபோல விமர்சனங்களை பெரும் சொத்தாகவே நாங்கள் பாவிக்கிறோம்.அதுதான் எப்போதும் எங்கள் பாதை.
இப்பதிவை எழுதியதன் நோக்கம் எங்கள் தலைமையின் பக்கம் நின்று நியாயத்தைப் பேசுவது மட்டுமல்ல. கடந்த இருபது நாட்களுக்கு மேலாக எந்த இயக்கமுமின்றி முடங்கிக்கிடக்கும் என் சொந்த மனதை விடுவித்து அடுத்த அடியை எடுத்து வைப்பதற்கான –பாரத்தை இறக்கி வைக்கும் முயற்சியும்தான்.
நெருக்கடியான இந்த நேரத்தில் தற்கொலையைப் புனிதப்படுத்துவதையும் அதை முன்னிட்டு ஒட்டு மொத்தமாகக் கட்சியை –கட்சித்தலைமையை-வேரோடு சாய்க்கும் வார்த்தைகளை வீசுவதையும் பரப்புவதையும் ஒரு தொண்டனாக நின்று எம் உதிரச்செங்கொடியை உயர்த்திப்பிடித்து எதிர்ப்பேன்.
வாழ்க தோழர் உ.ரா.வ.வின் புகழ்!
ரெட் சல்யூட் டு மார்க்சிஸ்ட் பார்ட்டி!!
Thursday, June 11, 2009
ஏப்ரல்மாதச் சூரியனைப் பிழிந்த சாறு..
நேற்றுத் தற்செயலாக பழைய ‘வேர்கள்’ இதழ்களைப் (பைண்டிங்) பார்த்துக்கொண்டிருந்தபோது இரண்டு விளம்பரங்கள் கவனத்தை ஈர்த்தது.அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளத்தோன்றியது.அந்த விளம்பரம்:
I
செப்டம்பர் 97 இல் வெளிவருகிறது
கமலாதாஸ் கதைகள்
கமலாதாஸின் படைப்புக்கள் சில சமயம் ஒரு பழைய ஆல்பத்தைப்போல
இழந்துபோன துக்கத்தில் நம்மை ஆழ்த்துகிறது.வேறு சமயம் ய்தேச்சையாய் நம்மைக் கடந்துபோகும் ஒரு காட்சியமைப்பாய் சுற்றுப்புறம் பற்றி நமது கருத்தாக்கங்களைக் காயப்படுத்துகிறது.இளமைக்கால நினைவுகளின் அழுத்தி வைக்கப்பட்ட தேம்பலில் கரைந்து போகும் தருணத்திலும் ஓர் அறுவைச்சிகிச்சை நிபுணணின் உற்சாகத்தோடு காதல், தாம்பத்தியம் பற்றிய அங்கீகரிக்கப்பட்ட நம்பிக்கைகளைக் கீறி அறுக்கும் வேளையிலும் முற்றிலும் தனித்துவத்தை வெளிக்கொணர்கிறது.
1956ல் இருந்து கமலாதாஸ் எழுதிய படைப்புகளின் தேர்ந்தெடுத்த தொகுப்பு
ஒரு குறு நாவலும் பதின்மூன்று சிறுகதைகளும்
மொழிபெயர்ப்பு : நிர்மால்யா
பக்கங்கள் 168 விலை ரூ.45
இது ஒரு வேர்கள் வெளியீடு
II
கமலாதாஸ் கதைகள்:தமிழில் –நிர்மால்யா
வௌவால்கள் சுற்றித்திரியும் பழைய நாலப்பாட்டு வீட்டின் அந்தி வேளைகள்,தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட ஒரு வேலைக்காரிப் பெண்ணின் விடை தெரியாத நிசப்தம்,படுக்கையில் காட்டெருமையின் வீரியத்தை வெளிப்படுத்தும் காதலன் உடம்பின் அடங்காத மூச்சிறைப்பு,கிளாசில் பிழிந்தெடுத்த ஆரஞ்சுச் சாற்றைப் போன்ற ஏப்ரல் மாதச்சூரியன்,நிர்வாண மனிதர்கள் நடனமாடும் பம்பாய் தெருவில் கோடைக்கால இறுதியில் வந்து சேரும் சிறிய மழை,மரணத்தைக் கண் முன் பார்த்த நாட்களில் தலையில் அறைந்தவாறு வரும் மருத்துவமனைப் படுக்கையின் மருந்து நெடி , மஞ்சள் துணி போர்த்தப்பட்ட நெருக்கமானவரின் பூதவுடல் போன்ற சுடர்விடும் நினைவுச்சித்திரங்களிலிருந்து உந்துதலும், உயிர்ப்பும் பெற்ற பதினான்கு சிறுகதைகள்
மேற்கண்ட இரு விளம்பரங்களை கமலாதாஸ் காலமாகி நிற்கும் இந்த நாட்களில் தற்செயலாகக் காணக்கிடைத்த இந்த நிமிடம் அபூர்வமான ஒரு மனநிலையைத் தந்துகொண்டிருக்கிறது.
வேர்கள் என்கிற பத்திரிகை மற்றும் அது முன்வைத்த இலக்கிய இயக்கம் இவ்விரண்டின் மீதும் இந்த நிமிடத்தில் மீண்டும் அளப்பரிய மரியாதை உண்டாகிறது.இராமலிஙம் என்கிர அந்த மகத்த்தான மனிதரும் அவரோடு துணை நின்ற நெய்வேலி நண்பர்களும் 90களில் நடத்திய வேர்கள் இயக்கம் இடையில் நின்று போனாலும் அது இதோ இந்த நிமிடத்திலும் மனதில் அதிர்வலைகளை ஏற்படுத்தியபடி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.ஆகவே சிறு சிறு கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு சமயங்களில் மனம் சோர்வடைந்துபோகும் அன்பர்கள் மனம் துவள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.நமக்கு என்றைக்கும் அழிவில்லை.
மேலே கண்ட விளம்பரப்படி கமலாதாசின் கதைகளை வேர்கள் வெளிக்கொண்டு வர முடியவில்லை.வேறு யாரேனும் கொண்டு வந்தார்களா என்பதும் எனக்குத் தெரியவில்லை.வந்திருந்தால் அது இன்று மீண்டும் மறுபதிப்பு வந்தால் நல்லது.விபரம் தெரிந்த நண்பர்கள் தெரிவிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.புத்தகம் வராவிட்டாலும் கூட இந்த விலம்பரத்தின் வரிகள் கமலாதாசின் எழுத்தின் சாரத்தைப் பிழிந்து தந்துள்ளன எனலாம்.நிர்மால்யாதான் இவ்வரிகளை எழுதியிருக்க வேண்டும்.அவர் இப்போது எங்கிருக்கிறார் என்ன செய்துகொண்டிருக்கிரார் என்பதும் நான் அறியமாட்டேன்.
ஆனால் மேற்கண்ட இரண்டாவது விளம்பரத்தில் உள்ள ஒரு வரி மாற்றப்பட வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது.கிளாசில் பிழிந்தெடுத்த ஆரஞ்சுச் சாற்றைப்போன்ற ஏப்ரல் மாதச் சூரியந் என்கிற வரிதான் அது. அவருடைய ஒரு கவிதை இப்படித்துவங்கும் The April sun squeezed like an orange in my glass –அவ்வரியிலிருந்தே இவ்விளம்பர வரி எடுக்கப்பட்டதெனில் மொழிபெயர்ப்பு சரி செய்யப்படவேண்டுமல்லவா?
சரி.
கமலாதாசின் கவிதை ஒன்று ‘வேர்கள் ‘அக்-டிச-96’ இதழில் வந்தது.அதைக் கீழே தருகிறேன்:-
சில வாசகர்களோடு
இரண்டு வார்த்தை
போனிலும் கடிதத்திலும்
விஷம் கக்குபவர்களே
என்னை வெறுப்பவர்களே
உங்கள் இகழ்ச்சியை நான்
கடந்து வாழ்கிறேன்.
என் கவிதை கோழி –எச்சத்தைத் தண்ணீராய் கழித்ததைப்
போல இருக்கிறது என எழுதி அறிவித்த நண்பரே,
என் புகைப்படம் தனக்கு சுய இன்பம் செய்ய
கொஞ்சமும் உதவவில்லை எனத் தெரிவித்த
அறியப்படாத இளைஞனே
உங்கள் மனதின் அகோரத்தையும்
நான் கடந்து வாழ்கிறேன்
என் இலக்கியப்படைப்புகள் குறிக்கோள் இல்லாதவை
எனத் தெரிவிக்க மட்டும்
மதியம் உறங்கிக் கொண்டிருந்த
என் கணவரை எழுப்பி என் வீட்டு
வாசற்படிக்கு வந்த அறிவுஜீவி,
நான் உங்கள் ஏளனத்தையும் கடந்து வாழ்கிறேன்.
ஆம்,இதோ நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
சிரிக்கிறேன்,பாடுகிறேன்,உறங்குகிறேன்
தூக்க மாத்திரைகளைத் தேடி மருந்துக்கடைகளில்
ஏறி இறங்குவதில்லை நான்
நீங்கள் ஒவ்வொருவரும் மண்ணாகிவிடும்போதும்
மிஞ்சியிருப்பேன் நான்
மையால் கருமைப்படுத்திய என் இரு விழிகளுக்கும்
தொலைவில்-வெகு தொலைவில், ஒரு வற்றாத
நீர் நிலையைப்போல என் கண்ணீர்
தேங்கி நிற்கிறது
இருப்பினும் நான் அழுவதை நீங்கள்
காணமாட்டீர்கள் ஒரு போதும்.
(தமிழில்-நிர்மால்யா)
கவிதை எழுதவோ அல்லது ஏது காரணமாகவோ பொது வெளியில் வந்து உலவும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது போன்ற ஒரு கவிதை எழுத அவசியம் இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கிறேன்.எவ்வளவு மோசமான ஓர் ஆணாதிக்கச் சுழலில் நாம் வாழ விதிக்கப்பட்டிருக்கிறோம்.
வாழ்க வேர்கள்!
வாழ்க கமலா அக்கா!
Tuesday, June 9, 2009
தொட்டதெல்லாம் உள்ளூர் மண்ணாக...
ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் நேரில் அவரைப் பார்த்தது 1999 இல் டெல்லியில் சஹ்மத் ( SAHMAT-Safdar Hashmi Memorial trust) நடத்திய சப்தரின் பத்தாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சிகளின்போதுதான்.அப்போதே அவர் தன் 70களில் இருந்தார். முதுமை முகத்தில் தெரிந்த போதும் உடலிலும் உள்ளத்திலும் இல்லை.இரண்டு மூன்றுநாட்களாக அவரைத் தூர இருந்தே பார்த்துக்கொண்டிருந்தேன்.கவனத்தை ஈர்க்கும் கனத்த குரல்.பிரளயனுக்கு ஏற்கனவே அவரோடு அறிமுகம் இருந்தது.அவரைப்பற்றி என்னிடம் அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்தார்.வட இந்தியாவில் முக்கியமான ஒரு அரங்க ஆளுமை என்கிற அளவில் ஒரு மதிப்புக் கொண்டேன்.
ஆனால் இரண்டாம் நாள் இரவு அரங்கேற்றப்பட்ட அவருடைய நாடகம் Jisne Lahore Nai Dekhya Wo Jamyai Nai ( = யார் லாகூரைக்காணவில்லையோ அவர் வாழ்ந்தென்ன என்று பொருள் கூறலாம்.லாகூரைக் காணாத கண்ணென்ன கண்ணோ என்றும் சொல்லிக்கொள்ளலாம்.உணமையில் இது வடமேற்கு இந்தியா முழுதும் நாட்டார் வழக்கில் உள்ள ஒரு சொலவடையாகும்) என் மனதில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.தலைகீழாக என்னைப் புரட்டிப்போட்ட கலைப்படைப்பாக அது இருந்தது.கவிதைகளும் நாட்டுப்புறக் கலைக்கூறுகளும் பின்னிப் பிணைந்த அற்புதமான படைப்பு அது.ஒரு வட இந்தியக் கலைஞர் என்கிற என் பார்வை தகர்ந்து ஒரு சர்வதேசக் கலைஞனாக அவர் அந்த இரவில் என் மனதில் எழுந்து நின்றார்.
வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் நான் அதுவரை பார்த்திருந்த நாடகங்கள் எவையும் தொட்டிராத உயரத்தில்/ஆழத்தில் அந்நாடகம் நிகழ்த்தப்பட்டது.ஆனால் ஹபிப் சாருடைய மிகச்சிறந்த நாடகம் ’சரண் தாஸ் சோர்’ என்கிற நாடகம்தான் என்று அருகே அமர்ந்திருந்த பிரளயன் சொன்னார்.பின்னர் நானும் படித்துத் தெரிந்து கொண்டேன்.போட்ட இடங்களிலெல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக வடக்கு ,கிழக்கு,மேற்கு இந்தியா முழுவதும் வெற்றிக்கொடி நாட்டிய நாடகம் சரண்தாஸ் சோர்.
1923 இல் பிறந்த ஹபிப் மாமா 1945இல் அன்றைய இடதுசாரி பண்பாட்டு இயக்கங்களாகத் திகழ்ந்த IPTA ( Indian people’s Theatre Association) விலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் தன்னை இணைத்துக்கொண்டார்.அந்த பந்தத்தின் அர்த்தம் மேலும் அடர்த்தியாகும் வண்ணம் எளிய மக்களின் பக்கம் நின்று தன் படைப்புகளை முன் வைத்தார்.லண்டன் ராயல் நாடக அகாடமியில் மூன்று ஆண்டுகள் முறையாக நாடகம் பயின்றவர்.எதை நான் செய்யக்கூடாதென விரும்புகிறேனோ அதையெல்லாம் அங்கு கற்றுக்கொண்டேன்.அங்கு கற்றதையெல்லாம் கழட்டி எறிந்த பிறகுதான் என் நாடகங்கள் நான் விரும்பத்தக்கவையாக அமைந்தன என்று பின்னர் கூறினார்.பிரெக்ட்டின் நாடகங்களை ஜெர்மனியில் நேர்ல் சென்று பார்த்து அதிலிருந்து படிப்பினைகள் கற்றுக்கொண்டார்.சதிஸ்கர் நாட்டுப்புறக்ககலைஞர்களை அப்ப்டியே தன்னுடைய நாடகக்குழுவில் இணைத்துக்கொண்டார்.நம் நாட்டு நாடகம் நாட்டுப்புறக் கலைகள் இவற்றிலிருந்து மட்டுமே நமக்கான நாடகம் வேர்கிளம்பி வரமுடியும் என்பதை நிகழ்த்திக்காட்டினார்.
மைதாஸ் கதையில் அவன் தொட்டதெல்லாம் பொன் ஆவது போல ஹபீப் சார் எதைத் தொட்டாலும் அது சதிஸ்காரிப் படைப்பாக உள்ளூர்த் தன்மை பெற்று ஒளிர்ந்தது.ஷேக்ஸ்பியர் துவங்கி சப்தர் ஹாஷ்மி வரை பலருடைய கதைகளை அவர் நாடகமாக்கியபோதும் எல்லாமே ச்திச்காரி மொழி பேசுகிற நாட்டுப்புற அசைவுகளும் பாடல்களும் கொண்ட படைப்புகளாகவே மேடையேறின.என் கிராமமே எனது அரங்கு என் பெயர் ஹபீப் என்பது அவரைப் பற்றி உலகம் சொன்ன வார்த்தைகளாகும்.கவிதையையும் நாட்டுப்புறவியலையும் நவீன பார்வைகளுடன் இணைத்து நாடகம் தயாரித்தவர் அவர்.
சப்தர் காங்கிரஸ் குண்டர்களால் கொலை செயப்பட்டபோது அதை எதிர்த்த போராட்டங்களில் முன் நின்றவர் ஹபீப்.
டெல்லியில் அவரைத் தரிசித்த அந்த நாட்களில் நான் இந்திய-பாகிஸ்தான் பிரிவினை பற்றிய எழுதப்படாத வரலாறுகளைத் தேடித்தேடிப் படித்துக்கொண்டிருந்தேன்.ஊர்வசி புடாலியாவின் The Other side of Silence மற்றும் கமலா பாஷின் /ரித்து மேனன் எழுதிய Borders and Boundaries போன்ற நூல்களைப் படித்துவிட்டுத் தாள முடியாமல் இரவுகளில் தரையில் புரண்டு அழுது கொண்டிருந்தேன்.அந்த மனநிலையில் ஹபிப் மாமாவின் லாகூரைக் காணாத கண் என்ன கண்ணோ நாடகத்தைப் பார்த்தது சொல்ல முடியாத துக்கத்திலும் பரபரப்பிலும் என்னை ஆழ்த்தியது. 1947 தேசப்பிரிவினையின்போது இந்துக்கள் பாகிஸ்தானை விட்டு இங்கு ஓடிவர இஸ்லாமியர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு ஓடினர்.லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்த வரலாற்றின் மிகப்பெரும் சோகநாடகம் இந்திய-பாக் பிரிவினையின் போது நடந்ததுதான். அப்படி பாகிஸ்தானின் லாகூர் நகரை விட்டு இந்தியாவுக்கு ஓடிப்போன ஒரு இந்துக்குடும்பம் ஒரு வயதான மூதாட்டியை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு ஓடியிருக்கும்.அந்த வீடு இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தானுக்கு ஓடி வந்த ஒரு முஸ்லீம் குடும்பத்துக்கு ஒதுக்கப்படும்.அக்குடும்பம் தங்கள் சொந்த வீடாக அவ்வீட்டை நினைக்க – அந்த வீட்டிலேயே பிறந்து வளர்ந்து பல்லாண்டு காலம் அங்கேயே வாழ்ந்த அந்தக் கை விடப்பட்ட இந்துக் கிழவி வரலாற்றின் சாட்சியாக அங்கேயே இருந்துகொண்டிருக்க அவளுக்கும் அக்குடும்பத்துக்கும் ஏற்படும் உறவை மையமாக வைத்து பாகிஸ்தானில் நடந்த மதவாத நடவடிக்கைகள் மற்றும் அரசுகளால் ஏற்படுத்தப்பட்ட பிரிவினை மீதான ஆழ்ந்த விமர்சனத்தை வைத்தபடி அந்நாடகம் செல்லும்.கடந்த காலத்தில் கொண்டுபோய் என்னை –லாகூரிலேயே- வாழவைத்தது அந்நாடகம்.நாடகம் பார்த்த அந்தக் குளிர் இரவு வாழ்வில் மறக்க முடியாத இரவுதான்.
மீண்டும் ஒரு ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பீகாரின் தலைநகரான பாட்னாவில் ஜன்வாதி லேகக் சங்கின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது.இந்தி மற்றும் உருது எழுத்தாளர்கள் மாநாடு அது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக சகோதரப் பிரதிநிதியாக வாழ்த்திப்பேச நான் அங்கு போயிருந்தேன். முதல் நாள் மாலை இந்துத்வ எதிர்ப்புப் பேரணியைத் துவக்கி வைக்க சாட்சாத் ஹபிப் தன்வீர் சாரே வந்துவிட்டார். பரவசமடைந்த நான் ஓடிப்போய் கூட்டத்தோடு கூட்டமாகக் கை குலுக்கினேன்.
மாநாட்டைத்துவக்கி வைத்து அவர்தான் பேசினார்.அப்போது அவருடைய நாடகங்களை நடத்த விடாமல் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தார்கள்.அரங்குகளில் அவருடைய நாடகம் பார்க்க வந்த மக்களின் மீது கல் வீசுவது அவருடைய மற்றும் அவர் குழுவினருடைய வாகனங்களை மறித்துத் தாக்குதல் தொடுப்பது என்கிற அவர்களின் பிறவிக்கடனை ஆற்றிக்கொண்டிருந்த நேரம்.நான் அவர்களுக்குப் பணிய மாட்டேன்.நாடகம் எனது பிறப்புரிமை என்று மாநாட்டில் கம்பீரமாகப் பிரகடனம் செய்தார்.உங்களை எல்லாம் பார்த்தபிறகு நான் இன்னும் கூடுதலான தெம்படைகிறேன்.இன்னும் அதிக வாழ்நாளை இன்று பெற்றுத் திரும்புகிறேன் என்று பேசினார்.
நாடகம் குறித்த அவருடைய பார்வைகள் அவரால் எழுதப்படவேண்டும் என்று அரங்கவியலாளர் எல்லோரும் -உலகம் முழுதும்- ஆவலுடன் விரும்பினார்கள்.ஆனால் அவர் நாடகம் போடாமல் சும்மா ஓய்வில் இருந்தால்தானே எழுதுவார்.உடல்ரீதியாக இயங்க முடியாமல் போனால் மட்டுமே அது நடக்கும்.அப்படிச் சில காலம் படுத்த படுக்கையாகி எழுத மாட்டாரா என்று கூடப் பலர் ரகசியமாக மனதுக்குள் விரும்பினர்.
ஆனால் அவர் உஅடலும் உள்ளமும் ஓய்வே எடுக்கவில்லை.நாடகத்துக்காகவே வாழ்ந்த அம்மாமனிதன் இறக்கும்வரை நாடகம் படைப்பதையும் மக்களிடம் நேரடியாகக் கொண்டு செல்வதையும் ஒருநாளும் நிறுத்தவே இல்லை.
நேற்று(8-6-09) அவர் நம்மிடமிருந்து விடை பெற்றார்.
வெற்றிடத்தில் நிற்கிறோம்.
Wednesday, June 3, 2009
என் இளமையின் சிறகுகள் உதிரத்துவங்கி விட்டன.....
கமலாதாஸ் என்றும் மாதவிக்குட்டி என்றும் மாதவிசுரய்யா என்றும் அறியப்பட்ட -- மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் /கதைகள் எழுதிய என் பிரியத்துக்குரிய மூத்த படைப்பாளி - என் இளமைக்காலத்தின் அடையாளங்களில் ஒன்றாக என் வாழ்வோடு இரண்டறக்கலந்திருந்த கமலாதாஸ் கடந்த 31 ஆம் தேதி புனேயில் காலமாகிவிட்டார் என்கிற செய்தி என்னைப் பெரும் துயரில் ஆழ்த்திவிட்டது(இந்த வரிக்கான உண்மையான அர்த்தத்தில்).
1974இல் நான் ராணுவத்தில் இருந்தபோது இமயமலையின் சரிவுகளில் கவிதைகளோடு துள்ளித்திரிந்த பருவத்தில் கமலாதாசை நான் கண்டடைந்தேன். “ மூன்று மொழிகளில் பேசுகிற-இரண்டு மொழிகளில் எழுதுகிற ஆனால் ஒரே மொழியில் கனாக் காண்கிற ” அந்தப் பெண்மணியின் கவிதைகள் தாம் நான் முதலில் வாசித்தது. ஜெயகாந்தனும், நா.பார்த்தசாரதியும் படித்துக்கொண்டிருந்த அந்த நாளின் என்னைத் தலைகீழாகக் கவுத்திப் போட்டன கமலாதாசின் எழுத்துக்கள்.தொடர்ந்து அவருடைய ‘ My Story’ படித்தேன்.அவர் எழுத்துக்களின் மீது பித்தானேன்.
அவரைப்போன்ற நேர்மையான ஓர் எழுத்துக்காரரை இந்தியாவில் நான் இதுவரை கண்டதில்லை.என்ன நேர்மை.என்ன ஒரு துணிச்சல்.எல்லாமே அதன் உச்சத்தில்.பாலியல் சார்ந்த ஒரு பெண்ணின் மன உளைச்சல்களைப் பகிரங்கமாக எழுதிய முதல் இந்தியப்பெண்மணி அவர்தான்.இந்தியாவிலேயே மிக அதிகமாக விற்பனையான தன் வரலாற்று நூல் அவருடைய என் கதை தான்.
சனாதனப் பண்டாரங்கள் அவரைப் பழித்தார்கள்.விமர்சித்தார்கள்.பாலியல் எழுத்தென்று வசை பாடினார்கள்.ஆனால் கமலாதாஸ் ஓர் அற்புதமான கலைஞர்.ஒரு கலைஞனுக்கான எல்லாக் குணாம்சங்களும் கொண்டு வாழ்ந்தவர். தன் வாழ்வையே பணயமாக வைத்து விளையாடியவர்.எல்லாத் தலைசிறந்த கலைஞர்களையும் போல எதிலும் உறுதியற்ற மனநிலையோடே இறுதிவரை வாழ்ந்தார். அவ்வக்கணத்தின் மன எழுச்சியே அவருடைய நிலைபாடாக இருந்தது. பொக்ரான் அணு வெடிப்பில் உற்சாகமடைந்து எல்லோருக்கும் இனிப்பு வழங்கிய அவருடைய மனநிலையை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.ஒருநாள் திடீரென இஸ்லாமியப் பெண்ணாக தன்னை மதம் மாற்றிக்கொண்டதும் அப்படித்தான்.
என் வாழ்வின் ரகசியங்கள் அத்தனையையும் எழுதி என்னைக் காலி உடம்பாக ஆக்கிவிட வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன் என்றவர்.அப்படியே கடைசி நிமிடம்வரை வாழ்ந்தார்.
கேரளா அவரைக்கொண்டாடியது போலவே தூற்றவும் செய்தது. விமர்சனங்களால் காயப்பட்ட அவர் ஒரு நாள் இனி நான் திரும்ப மாட்டேன் என்று அறிவித்துவிட்டு நிரந்தரமாக கேரளாவிலிருந்து வெளியேறினார். அந்தப் பாவம் மலையாளிகளை சும்மா விடுமா? மீண்டும் அவர் திரும்பவே இல்லை-கலைஞனுக்குரிய கர்வத்தோடு வெளி மண்ணில் புனேயில் மடிந்தார்.
இன்று தன் மூத்த மகளை இழந்துவிட்ட துயரில் மலையாளம் கரைந்து கொண்டிருக்கிறது.
எனக்கோ என் இளமையைச் செதுக்கிய கவி இன்று இல்லை.என் இளமையை நெறிப்படுத்திய படைப்பாளி இன்றில்லை. என் எழுத்துக்களில் நேர்மையின் துணிவைக் கொண்டு சேர்க்கப் பணித்த என் மாதவிக்குட்டி அக்கா இன்று இல்லை.படைப்பில் உண்மை என்பதின் உச்சம் எது என்பதை எனக்கு அடையாளம் காட்டிய முன்னோடி இன்றில்லை.பெண்ணின் பெருமையை புரியவைத்த அக்கா இன்றில்லை.என் சொந்த இழப்பு இது.
என் இளமை இன்றுமுதல் உதிரத் துவங்கிவிட்டதாக மனசார உணர்கிறேன்.உடம்பாலும் உணர்கிறேன்.
சென்று வா மாதவி அக்கா.கண்ணீரோடு வழியனுப்புகிறேன்.
பி.கு.
அவருடைய கவிதைகளில் முக்கியமான- அற்புதமான ஒரு கவிதையை அப்படியே கீழே தந்துள்ளேன்.யாரேனும் (தீபா ? )சரியாக மொழிபெயர்த்து பின்னூட்டத்தில் போட்டால் நன்றியுடையவனாவேன்.
An Introduction
I don’t know politics but I know the names
Of those in power, and can repeat them like
Days of week, or names of months, beginning with Nehru.
I amIndian, very brown, born inMalabar,
I speak three languages, write in
Two, dream in one.
Don’t write in English, they said, English is
Not your mother-tongue. Why not leave
Me alone, critics, friends, visiting cousins,
Every one of you? Why not let me speak in
Any language I like? The language I speak,
Becomes mine, its distortions, its queernesses
All mine, mine alone.
It is half English, halfIndian, funny perhaps, but it is honest,
It is as human as I am human, don’t
You see? It voices my joys, my longings, my
Hopes, and it is useful to me as cawing
Is to crows or roaring to the lions, it
Is human speech, the speech of the mind that is
Here and not there, a mind that sees and hears and
Is aware. Not the deaf, blind speech
Of trees in storm or of monsoon clouds or of rain or the
Incoherent mutterings of the blazing
Funeral pyre. I was child, and later they
Told me I grew, for I became tall, my limbs
Swelled and one or two places sprouted hair.
WhenI asked for love, not knowing what else to ask
For, he drew a youth of sixteen into the
Bedroom and closed the door, He did not beat me
But my sad woman-body felt so beaten.
The weight of my breasts and womb crushed me.
I shrank Pitifully.
Then … I wore a shirt and my
Brother’s trousers, cut my hair short and ignored
My womanliness. Dress in sarees, be girl
Be wife, they said. Be embroiderer, be cook,
Be a quarreller with servants. Fit in. Oh,
Belong, cried the categorizers. Don’t sit
On walls or peep in through our lace-draped windows.
Be Amy, or be Kamala. Or, better
Still, be Madhavikutty. It is time to
Choose a name, a role. Don’t play pretending games.
Don’t play at schizophrenia or be a
Nympho. Don’t cry embarrassingly loud when
Jilted in love … I met a man, loved him. Call
Him not by any name, he is every man
Who wants. a woman, just as I am every
Woman who seeks love. In him . . . the hungry haste
Of rivers, in me . . . the oceans’ tireless
Waiting. Who are you, I ask each and everyone,
The answer is, it is I. Anywhere and,
Everywhere, I see the one who calls himself I
In this world, he is tightly packed like the
Sword in its sheath. It is I who drink lonely
Drinks at twelve, midnight, in hotels of strange towns,
It is I who laugh, it is I who make love
And then, feel shame, it is I who lie dying
With a rattle in my throat. I am sinner,
I am saint. I am the beloved and the
Betrayed. I have no joys that are not yours, no
Aches which are not yours. I too call myself I.
Friday, March 27, 2009
ஒரு கவிஞனின் மரணம்
நேற்றிருந்த அப்பாஸ் இன்று இல்லை.
அவர் விட்டுச்சென்றுள்ள நான்கு கவிதைத்தொகுதிகளினூடே
அவர் நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார்.
‘கேசவா
என்ன செய்து கொண்டிருக்கிறாய்
என் தனிமையைக் காலி செய்து கொண்டிருக்கிறேன்
தனிமையை காலி செய்ய முடியுமா
இல்லை பசவராஜ்
நமது வேலையே அதுதான்’
என்று தொடங்கி
‘சரித்திரமும் தத்துவங்களும்
முதல் பிறப்பை விசாரித்துக்கொண்டிருக்கும்போது
.......
முதலில் இறந்தவன்தான் எனக்கு முக்கியம்
உனக்குத் தெரியாது
அவன் மிக மிக முக்கியமானவன்’
என்று பாய்கிற அவரது கவிதையின் தலைப்பு
‘முதலில் இறந்தவன்’
தன்னை பசவராஜ் என உணரும் அப்பாஸ் தன் நண்பர்கள்
டேனியல்,கேசவன் ஆகியோரோடு மது அருந்தியபடி நடத்தும்
உரையாடல்களாக வரும் கவிதைகள் அவரே சொல்வது போல
‘ ஒரு மொழி ஏன் நேராய் இருக்க வேண்டும்
வளைந்து நெளிந்து
ஹேர்ப்பின் பெண்டுகளைப்போல் அர்த்தங்கள்
வளைந்திருக்கக்கூடாதா என்ன
.......
அப்படியே பழகிப் பழகி
கவிழும் நேர்கோட்டு மொழியில்
அப்படி என்ன
விசித்திரம் கிடைத்துவிடப் போகிறது...’
சி.மோகன் குறிப்பிடுவதுபோல அர்த்தங்களை
வற்புறுத்தும் மனங்களுக்கு அப்பாஸின் கவிதைகள்
வெளிறித் தோன்றக்கூடும்.
அப்பாஸ் எங்க ஊர்க்காரர்.கோவில்பட்டியின் வீதிகளில்
நாங்கள் இலக்கிய சர்ச்சைகள் நடத்திக்கொண்டு திரிந்த நாட்களில்
கையெழுத்து இதழ் ஒன்றில் பாலியல் திரிபு சார் கதை ஒன்றை ராமு
எழுதிவிட அதை ஒட்டி நடந்த காரசாரமான விவாதங்களின் போது
அப்பாஸ் அறிமுகமானார்-முற்றிலும் 24 x 7 காதல் வயப்பட்ட இளைஞனாக
ஒரு சைக்கிளில் ஏதோ ஒரு பெண்ணை எப்போதும் பின் தொடர்ந்தபடி.
தஸ்தாவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகளில் மிதந்து திரியும் இளைஞனாக
மட்டுமே அவரை நான் அப்போது அறிந்திருந்தேன்.
என்னைவிட என் தம்பி (என் மூத்த தம்பி- நன்றி ரமேஷ் வைத்யா)
கோணங்கியோடுதான் அவர் நெருக்கம்.அர்த்தங்களின் பின்னால்
ஓடுகிறவன் என்றென்னை அவர் ஒரு இடத்தில் நிறுத்தி வைத்திருக்கலாம்.
நாம் என்ன மாதிரி ஆள் என்பது நமக்கே சரியாகப் பிடிபடாத போது
அடுத்தவர்கள் எப்படி நம்மைச் சரியாகப் புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியும்?
என்னோடு அவர் நடத்திய உரையாடல்கள் எல்லாமே இலங்கைத் தமிழர்
பற்றி மட்டுமேதான். அகதிகளான மக்கள் குறித்த ஆழ்ந்த துயரம்
அவரை வருத்தியபடி இருந்தது.
“ உரையாடலும் தத்துவமும் வாழ்தலும்
புத்துணர்ச்சி பெறாமல்
பதுங்கு குழியில் இருந்து
குண்டுகளை எதிர்பார்க்கும்
அந்தச் சிறு குழந்தையின் கண்களில் வழியும்
பகலையும் இரவையும் மரண பயத்தையும்
இன்னும் எத்தனை காலங்களுக்கு
தத்துவ மொழியில் உறைய வைப்பது.”
என்று அவர் தன்னுடைய மூன்றாவது தொகுப்பின் முன்னுரையில்
குறிப்பிடுவது இந்த மனோநிலையின் பின்னணியில்தான் என்று நினைக்கிறேன்.
என்னை ஒரு இயக்கவாதி என்று மட்டுமே அறிந்துகொண்டு
இலங்கைப்பிரச்னை பற்றி மட்டுமே என்னோடு பேசிச்சென்ற
அப்பாஸ் ஏதேனும் ஓர் நாள் என்னோடு கவிதைகள் பற்றியும் பேச
வருவார் எனக்காத்திருந்தேன்.
காலத்தின் அழைப்பு அகாலத்தில் அவரை நம்மிடமிருந்து
பிரித்துவிட்டது.குடித்துக் கல்லீரல் கெட்ட அப்பாஸின் இறுதி நாட்களை
நம் கவிச்செல்வங்கள் பாடமாகக் கொள்ள -வருந்தி -அன்புடனும் அக்கறையுடனும்
கேட்டுக்கொள்கிறேன்.
அப்பாஸ்...
முதலில் இறந்துபோன எங்கள் மண்ணின் கவிஞனே
என் அஞ்சலியை ஏற்றுக்கொள்.
உன் கவிதைகளை நான் அக்கறையுடனும்
உன் வாழ்வை நான் கவலையுடனும்
பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தேன் என்கிற செய்தியைக்கூட
கடைசிவரை உனக்குத் தெரிவிக்காமலே
கடந்து விட்டது எல்லாம்.
அப்பாஸின் கவிதைத்தொகுதிகள்
1. வரைபடம் மீறி
2.வயலட் நிற பூமி
3.ஆறாவது பகல்
4.முதலில் இறந்தவன்- உயிர் எழுத்து பதிப்பகம்,
9,முதல் தளம்,தீபம் வணிக வளாகம்,
கருமண்டபம்,திருச்சி-1. விலை ரூ.50