நான் உயிர்மை இதழில் ‘விடுபட்ட வார்த்தைகள்’
என்றொரு தொடர் எழுதிக்கொண்டிருந்தேன்.
அது பின்னர் பேசாத பேச்செல்லாம் என்கிற தலைப்பில்
புத்தகமாகவும் வந்தது.அது வந்துகொண்டிருந்தபோதும் இப்போதும்
அதுபற்றிப் பேசும் சில நண்பர்கள் வெறும் நோஸ்டால்ஜிக்காக
நீங்கள் எழுதுவதில் என்ன அரசியல் இருக்கிறது என்று கேட்டதுண்டு.
இவ்வலைப்பக்கத்தில் கூட ஒரு அன்பர் அதே பழைய கேள்வியைக்
கேட்டுள்ளார்.நான் யோசித்துப்பார்க்கிறேன் ‘வெறும்’ என்கிற
அடைமொழியுடன் தாழ்த்திப் பேசத்தக்கதா நோஸ்டால்ஜியா?
நோஸ்டால்ஜியா என்பது பழசை நினைத்துப்பார்க்கும் செயல் என்று
நான் பார்க்கவில்லை.அதை ஆதிநிலைகளுக்குத் திரும்ப விழையும்
மனதின் அசைவு என்றும் தன் ஆதி அடையாளங்களைத் தேடும்
மனித மனதின் செயல்பாடு என்றும்தான் பார்க்கிறேன்.
காலனிய காலத்தில் காலனிப்படுத்தும் வேலையில் இங்கிலாந்தை
விட்டுத் தூர தூர தேசங்களுக்கு வாழப்போன ஆங்கிலேயர்கள்
தங்கள் நாட்டில் விட்டு வந்த அந்தத் தேம்ஸ் நதியையும்
பனிமலைகளையும் நினைத்து ஏராளமான கவிதைகள் படைத்தனர்.
அதே போல காலனிப்படுத்தப்பட்ட நாட்டின் மனிதர்கள் காலனியவாதிகள்
வருகைக்கு முன்னர் தங்கள் நாட்டில் நிலவிய சூழலை எண்ணி ஏங்கிப்
பாடியுள்ளனர்.ஆஸ்திரேலியா ,ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கப் பகுதிகளில்
குடியேறப்போன காலத்து ஆங்கில இலக்கியத்தில் இத்தகு மனநிலை
இயங்குவதைப் பார்க்கலாம்.
காலனிப்படுத்தப்பட்ட நம் போன்ற நாடுகளில் பாரதி போன்ற படைப்பாளிகள்
‘முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே...’ என்றும்
மன்னும் இமயமலை எங்கள் மலையே என்று எமக்கான சொந்த அடையாளங்கள்
இந்த மண்ணில் ஏராளம் உண்டு என்று உரத்துப்பேசியதும் இத்தகைய
உளவியலில் இருந்துதான்.இன்று தேசமெங்கும் சிதறிக்கிடக்கும் நம் ஈழத்தமிழ்ச்
சகோதரர்களும் சகோதரிகளும் தங்கள் நாட்டின் மரங்களுக்காகவும் மலைகளுக்காகவும்
விடும் பெருமூச்சை ‘ வெறும் ‘ நோஸ்டால்ஜியா என்றா கூறுவோம்?
தவிர, அந்தக்காலத்திலே.... என்று ஒருவித ஏக்கத்துடன் பேசுவதில்
நிகழ்காலத்தின் மீதான விமர்சனம் அடங்கியிருப்பதாக நாம் பார்க்கலாம்.
ஒருவகையில் மார்க்சியம் என்பதும் மனித சமூகத்தின் நோஸ்டால்ஜியாவில்
இருந்தே பிறந்ததாகக் கூறமுடியும்.
ஆதியிலே பூமியே இல்லாத காலம் ஒன்று இருந்தது.450 கோடி ஆண்டுகளுக்கு
முன்னால் பூமி தோன்றியது அல்லது உருவானது.அப்போது அதில் உயிர்கள் இல்லை.
பின்னர் அமீபா போன்ற ஒருசெல் உயிரிகள் தோன்றின.பின்னர் பரிணாம வளர்ச்சியில்
பலசெல் உயிரிகளான மீன்கள்,பறவைகள்,விலங்குகள்,பின்னர் மனிதர்கள் தோன்றினர்.
அப்போது இப்பூமியில் கோயில்கள் இல்லை,சர்ச்சுகள் இல்லை, மசூதிகள் இல்லை,
சாமிகள் இல்லை.சொத்து-தனிச்சொத்து என்றும் ஏதும் இல்லை.எதுவும் யாருக்கும்
சொந்தம் இல்லை.எல்லாம் எல்லோருக்கும் -சகல ஜீவராசிகளுக்கும்-சொந்தம்-அதாவது
பொதுவுடமை.ஆதிப் பொதுவுடமை பூமி. ஆகா... அந்தக்காலத்தில்... என்று நம்
எல்லோருக்காகவும் நோஸ்டால்ஜிக்காக கார்ல் மார்க்ஸ் கனவு கண்டான்.அந்த ஆதிப்
பொதுவுடமை சமூகம் மீண்டும் வந்தால்...?
அந்த நோஸ்டால்ஜியாவிலிருந்து பிறந்த மார்க்சியம் உலக
வரலாற்றின் திசைகளைத் திருத்திய்மைத்தது.
வாழ்க நோஸ்டால்ஜியா!