Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, May 27, 2011

என் சக பயணிகள்-7 தேவதச்சன்

poet

ஜன்னலெங்கே

ஜன்னலெங்கே

சிபி பார்த்துக்

காத்திருந்த

மாடம் எங்கே

கண்ணாடிக்காவல்காரா

கருணை வையேன்

கழுகின் மூச்சு

சிறகைச்சுடுதே

எங்கே போச்சு

மக்கிப்போச்சா

சிபியின் தராசு

மண்ணுள் போச்சா

சிபியின் ஜன்னல்

அலகின் ரத்தம்

அர்ப்பணித்தேனே

காவல்காரா

உன்னை நிறுத்தியவர்

எதனைக் காக்க

என்னை வெறுத்தார்

கழுகின் மூச்சு

காலில் தெரியுதே

தேவதச்சன் என் கல்லூரித்தோழர்.எனக்கு ஓராண்டு முன்னால் படித்துக்கொண்டிருந்தார்.நவீன கவிதை புதிய திசைகளில் பயணிக்கத்துவங்கிய 70களின் முற்பகுதியில் அதை வழிமடக்கி எங்கள் ஊருக்குத் திருப்பிக்கொண்டு வந்த முன்னோடி.கோவில்பட்டியில் எங்கள் கல்லூரியில் எனக்கு முன்னால் நின்று அவரும் கவிஞர் பிரதீபனும் -தனபாண்டி என்று ஒரு தேவதச்சனின் நண்பர் இருந்தார்- அவரும் இலக்கியம் பேசிக்கொண்டிருப்பதை பின்னாலிருந்து நான் கேட்டுக்கொண்டிருப்பேன்.அவர்கள் பேச்சின் வழியாக எனக்கு அறிமுகம் ஆனவைதான் கசடதபறவும் வானம்பாடியும்.ஏற்கனவே தீபம் எங்கள் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தது.

கோவில்பட்டித் தெருக்களில் தேவதச்சனும் கௌரிஷங்கரும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளை விதைத்தபடி போய்க்கொண்டிருப்பார்கள்.நான் அவர்கள் அறியாமல் அவர்கள் பின்னால் அவற்றைப் பொறுக்கியபடி போய்க்கொண்டிருப்பேன்.அப்போதெல்லாம் நான் பயங்கரமான மரபுக்கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பேன்.ஆசிரியப்பாவில் ரெண்டு மூணு நோட்டுகள் நிரப்பியிருந்தேன்.அதுபற்றி அறிய வந்தபோது செண்பகவல்லியம்மன் கோவிலுக்குப் பின்னால் ஒரு ராவில் தேவதச்சனும் கௌரிஷங்கரும் என்னைப்பிடித்துக்கொண்டார்கள். நிலாவைப்பற்றி எழுதிவிட்டீர்களா? மேகத்தைப்பற்றி எத்தனை கவிதைகள் எழுதியிருக்கிறீர்கள்? மழையைப்பற்றி? என்று ஒருமணிநேரத்துக்கு மேல் ‘வியந்து’ கேட்டுக்கொண்டிருந்தார்கள்.அது சரியான கிண்டல் என்பது அப்போது எனக்குப் புரியவில்லை.

ராணுவத்துக்குப் போய்விட்டு ஐந்தாறு ஆண்டுகள் கழித்து நான் வேறொரு ஆளாகத் திரும்பி வந்து தேடல் என்கிற கையெழுத்துப் பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்தபோது அதில் நான் எழுதிய கவிதைகளைப் பார்த்துவிட்டு நம்ம ஊரிலே இன்னொரு கை தேரும் போல இருக்கே என்று என்னை வீடு தேடி வந்து உற்சாகப்படுத்திச் சென்றார்கள்.

அப்போது அவர் எழுதிய ஜெயம் என்கிற கவிதை கோவில்பட்டி இடதுசாரி நண்பர்களால் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானது.நான் இடது நண்பர்களோடு அப்போதுதான் அறிமுகமாகிக் கொண்டிருந்தேன்.

வாழ்வு

சாவெனத் தன்

வேசம் மாற்றிக்கொள்ளுமுன் உன்

சீட்டைக் காலி பண்ணு

நீ பாத்திரம் அது

பார்வையாளனெனத் தலை கீழாய்

நாடகம் மாறப்போகிறது

என்று துவங்கும் அக்கவிதை முடியும்போது

என்றும்

சோற்றால் பசியை

ஜெயிக்கணும் என்றால்

பசியால் சோற்றை

ஜெயிக்க்கணும் தான்

என்று முடியும்.இந்த இறுதிப்பத்திதான் தோழர்களால் விமர்சிக்கப்பட்டது. பொருள்முதல்வாதத்துக்கும் கருத்து முதல்வாதத்துக்கும் இடையிலான போராட்டம் இந்த நாலு வரிகளுக்குள் பதுங்கியிருப்பதைத் தோழர்கள் சரியாகவே இனங்கண்டனர்.

அன்று நான் தேவதச்சனின் ஜன்னலெங்கே ஜன்னலெங்கே என்கிற கவிதையால் மிகவும் ஆகர்ஷிக்கப்பட்டிருந்தேன்.ஓர் உயிரின் பரிதவிப்பைப் பதிவு செய்த கவிதையாக அதை நான் உணர்ந்தேன்.இன்றைக்கு வாசிக்கும்போதும் அதை நான் உணர்கிறேன்.

தேவதச்சனின் அடையாளமாக அவரது முத்திரை என்று சொல்லும்படியாக அன்று நான் கண்டது அவரது பழத்தைச் சாப்பிட்டு விடு கவிதையை.

பழத்தைச் சாப்பிட்டு விடு

நாளைக்கென்றால் அழுகிவிடும்

என்றாள் அம்மா

வாங்கி விண்டு

உண்டேன்

இன்றை.

தேவதச்சனின் கவிதைகள் மிகச்சாதாரணமான அன்றாட லௌகீக வாழ்வின் நிகழ்வுகள் பற்றியதாகவே தொடங்கி அவ்விதமாகவே பயணித்து ஆனால் லௌகீகமல்லாத தத்துவார்த்தமாகச் சென்று முடியும்.

காற்றில் வாழ்வைப்போல்

வினோத நடனங்கள் புரியும்

இலைகளைப் பார்த்திருக்கிறேன்

ஒவ்வொரு முறையும்

இலையைப் பிடிக்கும்போது

நடனம் மட்டும் எங்கோ

ஒளிந்து கொள்கிறது

அவருடைய கவிதைகளுக்குப் பொழிப்புரை சொல்ல முடியாது.ஆனால் அதில் கவிதை இருப்பதை நம்மால் சட்டெனக் கண்டுணர முடியும்.

அவரவர் கைமணலைத் துழாவிக்கொண்டிருந்தோம்

எவரெவர் கைமணலோ இவை என்றேன்

ஆம் எவரெவர் கைமணலோ இவை என்றான்

பிறகு

மணலறக் கைகழுவி விட்டு

எங்கோ சென்றோம்

அவருடைய முதல் தொகுப்பான அவரவர் கைமணலில்(ஆனந்த்துடன் இணைந்து வெளியிட்ட தொகுப்பு) வந்த கவிதை இது.இக்கவிதை முடிந்தபின்னாலும் நமக்குள் தொடர்கிறதாய் இருக்கிறது.ஆம். அவர்கள் மணலறக் கை கழுவிவிட்டு எங்கோ சென்ற பிறகு வேறு இருவர் வந்தமர்ந்து எவரெவர் கை மணலோ இவை என்று தமக்குள் பேசத்துவங்குகின்றனர். வாழ்வென்னும் பெரும் பயணத்தில் ஒரு புள்ளியைப் படம் பிடிப்பதாக நாம் இக்கவிதையை உள்வாங்கிக்கொள்ள முடியும்.வாழ்வென்னும் பெரு நதியில் என் வாழ்வு என்னும் துளி எது என்கிற கேள்வியை இக்கவிதை எழுப்புகிறது.

சிறு

கிளைகளிலிருந்து

இலைகள்

உதிர்ந்து

கொண்டிருக்கின்றன

அதன்

சுழல்மொழி

மழலையில்

மெல்ல

என்னுள்

திறக்கிறது

நீலப்பரவசம்

அது

மூடும்போது

எப்போதும் நீ

உள்ளே

வந்து விடுகிறாய்

அன்றாடப் புழக்கத்தில் உள்ள சொற்களே அவருடைய கைபட்டுக் கவித்துவ மெருகேறி மிளிர்வதை – அதன் சுழல் மொழி மழலையில்- நம்மால் சிலிர்ப்புடன் உள்வாங்க முடிகிறது.உணர்ச்சிப்பரவசமும் அறிவின் பெருக்கமுமாக மாறி மாறிப் பயணிக்கும் அவரது கவிதைகள் மொழியின் சாத்தியமான கடைசி எல்லைவரை செல்பவை.” அவரது மொழி கானகத்தில் எங்கோ தெரியும் சுடரைப்போல நம்மைத் தூண்டி அருகில் அழைக்கிறது.நெருங்கிச் செல்லச் செல்ல அது எங்கோ விலகிச் சென்று விடுகிறது.நவீன கவிதை மொழியைத் தொடர்ந்து உயிர்ப்பிக்கும் காரியத்தைத் தேவதச்சனின் இடையறாத கவிதை இயக்கம் செய்து வருகிறது” என்கிற வார்த்தைகள் உண்மையானவை.நாம் காணும் –நாம் வாழும்- இவ்வாழ்வின் சின்னஞ் சிறு தருணங்களே –அவற்றில் பொதிந்திருக்கும் வினோதங்களே தேவதச்சனின் கவிதைகளின் பாடுபொருளாகின்றன.பெரிதாக எதையும் சொல்ல வரவில்லை நான் என்கிற அடங்கிய தொனியே இவரது கவிதைகளின் தனிச்சிறப்பாக நான் உணர்கிறேன்.

எப்போதெல்லாம்

மைனாவைப்பாக்கிறேனோ

அப்போவெல்லாம் தெரிகிறது

நான்

நீராலானவன் என்று

அதன் குறுஞ் சிறகசைவில்

என் மேலேயே

தெறிக்கிறேன் நான்

ஆரம்ப நாட்களில் ’நீ விரும்புவதுன் உடல் முழுதும் ஆகுக’ போன்ற கவிதைகளை வாசித்துவிட்டு அவருடைய கவிதைகளின் உள்ளார்ந்த சேதியாக அத்வைதமோ அல்லது ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளோதான் இருக்கிறதாக நான் உணர்ந்ததுண்டு.அதன் காரணமாகவே ஒருவித எதிர்ப்புணர்விலேயே அவரது கவிதைகளைத் தொடர்ந்து பின் தொடராமல் போனதும் உண்டு.இப்போதும் அத்தகு மயக்கம் தரும் கவிதைகளை அவரிடம் காணவே செய்கிறேன்.ஆனால் ஜென் கவிதைகளைப் போல தத்துவச் சாயலோடு வாழ்வின் சின்னத் தருணங்களை அழகான கவித்வமிக்க வரிகளில் சொல்வதுதான் அவரது கவிதைகளின் பிரதானமான போக்காக இப்போது புரிந்து கொள்கிறேன்.

நாம் அன்றாடம் அனுபவிக்கும் மின் வெட்டு பற்றிய அவரது கவிதை முதல் நாள் இவ்வாறு செல்கிறது:

நகரில்

மின்வெட்டு வேளை

அப்படி ஒரு கும்மிருட்டு

ஊழிக்காலத்தின் இரண்டாம் நாள்

போல இருக்கிறது

எங்கோ

திசை கணிக்க முடியாத

கருந்ததும்பலில்

முரட்டு லாரி ஒன்று

இரைச்சலிட்டபடி ,

வருகிறது போகிறது.

பிரபஞ்சம் விழித்தெழுந்த

இரண்டாம் நாள்

போலவும் இருக்கிறது,

முதல் நாள்

நாளை வரும் போல

வலிந்து எதையும் சொல்லாத கவிதைகள். வலுவாக எதையும் வற்புறுத்தாத கவிதைகள் என்கிற தோற்றம் காட்டினாலும் Far from tha madding crowd என்பது போன்ற மனநிலை தீவிரமாக இக்கவிதைகளில் முன்வைக்கப்படுவது போலவும் உணர்கிறேன். அவரது கவிதைகள் தரும் அனுபவத்தை அவரோடு நாம் நடத்தும் உரையாடலிலும் காண முடியும்.அவரோடு மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருக்கும் அனுபவம் மிக ரசமானது.எதையும் திணிக்க மாட்டார்.விவாதம் தொடர்து செல்ல மென்மையாகத் தூண்டுவார்.விவாதங்கள் முடிந்து அவர் விடைபெற்றுச்சென்றதும் நாம் வேறு ஒரு உலகத்திலிருந்து மீண்டு இறங்கி வருவதுபோல இருக்கும்.மனம் ஒரு பறவையின் சிறகு போல லேசாகியிருக்கும்.

உயிர்மை பதிப்பகம் அவரது 229 கவிதைகளை மூன்று தொகுப்புகளாக வெளியிட்டுள்ளது.

”பலூனை விரல்களில் வைத்திருப்பது என்பது

காற்றைக் கையில் வைத்திருப்பது போல் இருக்கிறது,

பலூன்கள் கொஞ்ச நேரமே இருக்கின்றன.

எனினும் சிறுவர்கள்,கொஞ்சத்தை ரொம்ப நேரம்

பார்த்து விடுகிறார்கள்....”

அவருடைய நீல நிற பலூன் கவிதையில் வரும் இவ்வரிகள் அவருடைய 229 கவிதைகளுக்கும் அவருடன் பேசிக்கொண்டிருக்கும் இன்பமிக்க தருணங்களுக்குமே கூடச் சரியாகப் பொருந்தும்.

Monday, February 28, 2011

என் சக பயணிகள்-5 விக்ரமாதித்யன்

nambi

1

முதலில் விக்ரமாதித்யனை-இப்படிப் பேர் சொல்லி அவரைக் குறிப்பிட்டு ஒருபோதும் பேசியதில்லை-மரியாதைக் குறைவாக எழுதுகிறோமே என்கிற மன அவஸ்தை உடனே வந்து விடுகிறது- நம்பி அண்ணாச்சி அல்லது அண்ணாச்சி என்றே அழைத்துப் பழகியிருக்கிறோம். அண்ணாச்சியைப் பற்றி யோசிக்கும்போதே சில மனத்தடைகள் முன்னுக்கு வந்து மறிப்பது வழக்கமாகிவிடுகிறது.எனக்கு மட்டும்தான் இப்படியா எல்லோருக்குமா என்று தெரியவில்லை. ஆகவே முதலில் அதைப்பற்றி எழுதிக் ’கழித்து’ விடுகிறேன்.அப்போதுதான் அவரைப்பற்றிச் சரியாக நிதானமாகச் சில வரிகளை எழுத முடியும் என்று தோன்றுகிறது.

அது குடிகாரரான அவருடைய ஒரு பக்கம் பற்றியது.கோயில் போல ஒரு மனசு அவருக்குள் உண்டு.நானே கும்பிட்டிருக்கிறேன் பலமுறை. அப்படி ஒரு மனசுக்கு இந்தக் குடிப்பழக்கம் எத்தனை அவமானங்களைக் கேவலங்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

என்னை சுலபமாகத் தவிர்த்து விடலாம்

எச்சரித்து அனுப்பிவிடலாம்

“வெளியே போடா” என்கலாம்

மன்னித்து மறந்துபோகலாம்

தண்டித்து அனுப்பலாம்

பொருட்படுத்தாமல் போய்க்கொண்டிருக்கலாம்

எதுவானாலும் உங்கள் இஷ்டம்தான்

– என்று செல்கிற ’என் வாழ்க்கையில் நீங்கள்’ என்கிற அவருடைய கவிதை

“ ஒரு கை ஓசையென்பது

உலகத்தில் இல்லைதானே” என்று முடியும்போது தவிர்க்கவியலாதபடி என் மனம் குற்ற உணர்வு கொள்கிறது. குடிப்பவர்கள் பற்றி நாம் கொண்டிருக்கும் அணுகுமுறை எத்தகையது என்கிற கேள்வி எனக்குள் எழும்புகிறது.நம் அணுகுமுறை மேலும் அவர்களைக் குடியை நோக்கித் தள்ளுவதாக இருக்கிறதா அல்லது அதிலிருந்து மீண்டுவர உதவுகிறதா? கவிஞனையே கழிசடையாய் மாற்றும் சமூகத்துக்குக் கனிவோடு கொஞ்சம் கவிதைகள் விட்டுச் செல்லும் மனசோடுதான் அவர் இருக்கிறார்.ஆனால் நாம்?

அவனை அடிப்பதென்று தீர்மானித்துவிட்டால்

அடித்து விடுங்கள் சற்றும் தயங்காமல்

பிறகு வருவதை

பார்த்துக்கொள்ளலாம்

..........

உங்களை யாரும்

கேட்கப்போவதில்லை

சும்மா இருக்க

முடியுமா அதற்காக

குடிகாரன் என்று

குறை கூறுங்கள்

குடித்துவிட்டு வந்து

கலகம் செய்தானெனக் குற்றம் சாட்டுங்கள்

என்று ஒரு கவிதையில் பேசும் அண்ணாச்சி இன்னொரு கவிதையில் அடிபட்டவன் புலம்பினால் தீர்ந்தது மறைந்தது(கவிஞனை மட்டும் தெருவில் திரியவிடும் தமிழ்ச்சமூகம்- என்பது போல) ஆனால் அடித்தவன் வேதனை அலைந்துகொண்டிருக்கும் ஆவியாய் என்று அடித்தவனுக்காக மனம் இரங்குகிறார். அதுதான் கவிமனம்.

தவிர்க்க

முடியாததை

சகிக்கப்

பழகுவது

மேன்மை

என்று அவரே சொன்னதுபோல அவரோடு நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.நம் சூழலில் இன்று குடிப்பவர் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ந்து விட்டது.எனக்குக் கவலை எல்லாம் படைப்பாளிகளும் பாட்டாளி வர்க்கமும் பெரும் குடிகாரர்களாக மாறிவருவது பற்றி மட்டும்தான்.இவர்கள் இருவரும்தானே ஒரு சமூகத்தை உருவாக்கும் கர்த்தாக்கள்.தொழிற்சங்க இயக்கங்களிலும் குடி இன்று ஒரு தீராப்பிரச்னையாகி வருகிறது.இதற்கான சமூக உளவியலை நாம் அவதானித்து விடை காண வேண்டும்.சும்மா குடிகாரர்களை மட்டும் குறை கூறுவதில் பயனில்லை.ஆனால் குடிப்பவர்களும் யோசிக்க வேண்டும்.அளவுக்கு மீறினால்- அளவு மாற்றம் குண மாற்றத்துக்கு இட்டுச்செல்லுமே –

நீ

குடித்தாலும்

யோனி தேடும் போதையிலிருந்தாலும்

உன்னை மறக்காதே

சமூகத்தை மறக்காதே

மத்யவர்க்கம் என்பதையும் மறக்காதே

என்கிற ஓர்மையெல்லாம் மிதமிஞ்சிய அளவு போகும்போது நிற்குமா அண்ணாச்சி ?(அளவு என்று நான் குறிப்பிடுவது குவார்ட்டர் /ஃபுல் அல்ல.குடித்துக்கொண்டே போகும் வாழ்க்கையின் கால அளவை) . கனவுகளுக்கு வர்ணம் பூசும் நம் கவி மூளையும் இந்த உடம்புக்குள்ளேதானே இருக்கிறது?புறமெல்லாம் புண்பட்டால் அகமெல்லாம் அழிந்து போகாதா?

தவிர,

ஜெயமோகன் கூட்டத்தில் அண்ணாச்சி தண்ணியைப்போட்டு அலப்பரை பண்ணீட்டாராமில்லே பெருமாள்புரம்னு பேர் வைக்காமே ஏண்டா விஷ்ணுபுரம்னு பேர் வச்சே என்று திரும்பத் திரும்பக் கேட்டு உரிச்சுட்டாராமில்லே என்று நமக்குள்ளே புறம்பேசிக் கொண்டாடி மகிழும் ஒரு மனப்போக்கு பரவலாக நம்மிடம் இருப்பது இத்தகைய கலாட்டாக்களைப் போற்றும் ஒரு சமூகவிரோத மனநிலைதான் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டியதும் இருக்கிறது.போதையின்றி எக்கருத்தையும் எதிர்கொள்ளும் துணிவும் அறிவு நேர்மையும் –அதற்கான ஆரோக்கியமான சூழலையும் -நாம் வளர்த்துக்கொண்டாக வேண்டும்.அல்லவா?எதிராளியிடம் அது இல்லாதபோதும்கூட.

நிற்க,

ஒருமுறை அண்ணாச்சியும் அவரது துணைவியாரும் திடீரென ஒரு வெயில் பொழுதில் நான் வேலை பார்த்துக்கொண்டிருந்த சேரன்மகாதேவி அஞ்சலகத்தில் பிரசன்னமானார்கள்.தம்பதி சமேதராக அவர்களைப் பார்த்ததும் மனம் அதிர்ந்தது.அண்ணாச்சி வெள்ளை வேட்டி வெள்ளை முழுக்கைச் சட்டையில் நெற்றி நிறைந்த திருநீற்றுடன் சிவப்பழமாகக் காட்சியளித்தார். இருவரையும் கையெடுத்துக் கும்பிட்டேன்.சாமி இப்படியே நீங்க நல்லா ஆயிறணும் இந்த மதினியைப் படுத்தியது இன்னியோட இந்த போஸ்டாபீசுக்கு வந்திறங்கிய இந்த நிமிசத்தோட போகட்டும் என்று கண்கள் கசிய மனதுக்குள் வேண்டிக்கொண்டேன் –நமக்கு சாமி கும்பிடும் வழக்கம் இல்லையென்றபோதும். அதெல்லாம் ஒரு மனநிலைதான்.குளிர்பானம் வாங்கிக் கொடுத்து சந்தோசமாக அவர்களை வழியனுப்பி வைத்தேன்.அன்று முழுக்க மனம் பரவசமாக இருந்தது. தம்பி லஷ்மி மணிவண்ணனுக்காகவும் அவரோடு வாழும் என் கொழுந்திக்கும் பிள்ளைகளுக்காகவும் கூட இப்படிப் பலமுறை நான் வேண்டிக்கொள்வதுண்டு.

2

இரண்டாவது மனத்தடைக்குக் காரணம் – முற்போக்கு எழுத்தாளர்கள் பற்றி அவர் கொண்டிருக்கும் (எழுத்தில் வெளிப்படுத்தியிருக்கும்) கேவலமான அபிப்ராயம்.சுந்தரராமசாமி அவர்களின் காலம் தொட்டு உலவிவரும் பொத்தாம் பொதுவான அறுதப் பழைய பார்வையே இவரிடமும் படிந்து கிடப்பது தெரிகிறது.எனினும் மற்றவர்களைப் பார்க்கிலும் ஒரு ஆறுதலான அம்சம் இவர் முற்போக்குப் படைப்பாளிகள் ஒரு சிலரின் படைப்புகளைப் படித்துவிட்டு எழுதுகிறார்.சிலருடைய படைப்புகளைப் பாராட்டவும் செய்துள்ளார்.நாங்கள் 100 சதம் சரியாகவேதான் காலம் காலமாக இருந்து கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் நான் வாதிட வரவில்லை.அப்படி ஒரு கருத்து எம்மில் யாருக்கும் இல்லை.விமர்சனங்களைப் பெரும் சொத்தாக மதிக்கும் மனநிலைதான் எமக்கு இருக்கிறது.ஆனாலும்....

“ செம்மலர் தாமரையில் மார்க்சிய சித்தாந்த சூத்திரங்களுக்கு ஏற்பவும் கட்சிக்கொள்கைகளுக்குத் தகவும் சிறுகதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன” என்று தடாலடியாக ஒரு கட்டுரையில் எழுதிச்செல்கிறார் அண்ணாச்சி. ஆனால் இது 100 சதம் தப்பான கணிப்பு என்று உரக்கக் கூற விரும்புகிறேன்.மார்க்சியப் பார்வையுடன் கட்சிக்கொள்கைகளுக்கேற்ப செம்மலரில் ஒரு கதைகூட வரவில்லையே என்கிற கவலைதான் செம்மலரின் ஆசிரியர் குழுவில் பணியாற்றும் எனக்கு இருக்கிறது. செம்மலரில் கூட மார்க்சியக் கதைகள் வரவில்லையானால் வேறு எதில்தான் வரும் என்கிற கேள்வியோடு நாங்கள் இருப்பதுதான் இன்றைய யதார்த்த நிலை. இதை எப்போதுதான் புரிந்துகொள்ளப்போகிறீர்களோ? 60 ஆண்டுகளுக்கு முன்னால் சுந்தரராமசாமி உள்ளிட்ட முன்னோடிகள் முன்வைத்த புளித்துப்போன அதே கருத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்தாமல் அப்படியே வாந்தி எடுத்து வரும் தீராவியாதியிலிருந்து வெளியே வாருங்கள்.இதை அண்ணாச்சிக்காக நான் எழுதவில்லை.அவரைச் சாக்கிட்டு வெளியில் (அமைப்புகளுக்கு) இருப்பதாலேயே உன்னதமான படைப்பாளிகள் நாம் என்று கருதிக்கொள்வோருக்காகவும் எழுதுகிறேன்.

முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்களாகவும் மாநிலத் தலைவர்களாகவும் இருந்து செயல்பட்டுக்கொண்டு படைப்புலகில் தடம்பதித்து வரும் நீங்கள் கேள்விப்பட்டிராத சில புதிய படைப்பாளிகளின் பெயர்களைக் கீழே தருகிறேன். எங்கள் மூத்த எழுத்தளர்களின் பெயர்களை விட்டு விடுகிறேன். ஆதவன் தீட்சண்யா, சு.வெங்கடேசன், லட்சுமணப்பெருமாள், உதயஷங்கர், பவா.செல்லதுரை, ஜாகீர்ராஜா,அ.வெண்ணிலா, ஹரிகிருஷ்ணன்,ஜீவி,ஸ்ரீரசா,தேனி சீருடையான் , ம.காமுத்துரை,போடி மாலன்,கேஜி பாஸ்கரன், நாறும்பூநாதன், மணிமாறன், சுப்பாராவ், ஜனநேசன்,மு.முருகேஷ், பா.ராமச்சந்திரன், யெஸ்.பாலபாரதி, கவிஞர் பாலபாரதி,புதுக்கோட்டை சஞ்சீவி,நா.வே.அருள், நவகவியின் இசைப்பாடல்கள்,கோவை சதாசிவம்,பாஸ்கர் சக்தி,க.சீ.சிவக்குமார் ,ஜா.மாதவராஜ்,காமராஜ் எனப் பட்டியல் இன்னும் நீள்கிறது.இதுபோக இன்னும் கலை இலக்கியப் பெருமன்றம்,மக இக படைப்பாளிகள் வேறு இருக்கிறார்கள்.படைப்புகளின் தரம் தரமின்மை குறித்து எங்கள் அமைப்புகளுக்குள் நடக்கும் மனம் திறந்த வெளிப்படையான விவாதங்கள் பற்றி வெளியே தெரியாததும் ஒரு குறைதான்.

குறைந்த பட்சம் பட்டியலிட்டுள்ள இந்த ஒரு 30 பேருடைய படைப்புகளை மட்டுமாவது முழுசாகப் படித்து இதெல்லாம் எப்படி இலக்கியமில்லை என்று யாராவது ஆதாரத்துடன் புரியும்படி எழுதுங்கள். எங்கள் வளர்ச்சிக்கும் அது உதவும்.சும்மா ரோட்டிலே போற வாற சமயமெல்லாம் முற்போக்குகள் முட்டாள்கள் என்று கருத்துக்களை ’உதிர்த்துக்கொண்டு’ போகாதீர்கள்.அமைப்புக்கு வெளியே இருந்தாலும் சீரியஸ் இலக்கிய இதழ்களில் வெறும் குப்பையாகக் கதை எழுதுவோர் பற்றி ஆதாரத்துடன் காய்தல் உவத்தல் இன்றி நானும் எழுதுகிறேன்.அத்தோடு இந்த அமைப்பு-இலக்கியத் தரம் பற்றிய இப்பிரச்னையை முடிப்போம்.இன்னும் எத்தனை காலத்துக்கு இதையே உளறிக்கொண்டு திரிவது நாம்? எங்கள் மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமணப்பெருமாளின் ‘வயனம்’ என்கிற ஒரு சிறுகதையை மட்டுமாவது படியுங்கள் என்று மெத்தப் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

கல் பாறையென்று

கண்டனம் செய்வதெல்லாம்

கசிந்து பெருகும் ஊற்றுக்கண்ணை

கண்டுகொள்ளாத வரைதானே?

3

அண்ணாச்சி எழுதியதில் சுமார் 500 கவிதைகளையும் 4 கட்டுரைத் தொகுப்புகள் 2 சிறுகதைத் தொகுப்புகளையும் சில நேர்காணல்களையும் ஒரு சேர கடந்த ஒரு வாரமாக வாசித்தேன். ஏற்கனவே ஆரம்ப காலங்களில் ஆகாசம் நீல நிறத்தில் துவங்கி திரு உத்தரகோச மங்கை தொகுப்பு வரை அவரைப் பின் தொடர்ந்து வாசித்திருந்தேன்.அப்புறம் அவரை வாசிக்க வில்லை.நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது அவரை வாசிக்கிறேன்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் ஊழியம் செய்யும் வாய்ப்புப்பெற்ற எனக்கு மிக மிக நெருக்கமான கவிஞராகவே அவரைப் பெரிதும் உணர்ந்தேன்.அவர் கொண்டிருக்கும் சைவப் பிடிமானம்.சோதிடத்தில் வைத்துள்ள பெரும் நம்பிக்கை.பெண்கள் குறித்துக் கொண்டிருக்கும் பாரம்பரியமான நல்லுணர்வும் கெட்ட உணர்வும் எனச் சில பகுதிகளில் எனக்கு மாறுபட்ட கருத்தும் உணர்வும் ஏற்பட்டது.ஆனால் குறிப்பிட்ட இவையல்ல விக்ரமாதித்யன் என்னும் கவியின் அடையாளம் என்பதே நான் உணர்ந்தது.

தரித்திர தேசத்தில்

தரித்திர கவிஞர்கள்

தரித்திர கவிதைகளே எழுதுகிறார்கள்

........

தரித்திர நாராயணர்களை ஆளும்

தலைவர்கள் மட்டும்

தரித்திரமின்றியே வாழ்கிறார்கள் மாயமாய்

.....

தரித்திர ஜனங்கள் விழித்துக்கொண்டால்

தரித்திர தேசமாய் இருக்குமா எதுவும்

தரித்திரத்தில்தான் இருப்பார்களா ஜனங்களும்

காலமே தமிழே சொல்லே

குழந்தைகள் பெண்கள் பசுக்கள்மீது மட்டும்

தரித்திரம் கவியக்கூடாது ஒருபொழுதும்..

கடைசி மூன்று வரிகளை வாசிக்கும்போது உண்மையில் வெடித்து அழுது விட்டேன்.ஆகாசம் போல என்ன ஒரு பெருமனம் இவ்வரிகளில் விரிந்து கிடக்கிறது.சங்க கால மனமும் வானம்பாடிகளின் உணர்வும் கலந்த ஒரு அசலான முற்போக்குத் தமிழ்க்கவிதையல்லவா இது.

“விரும்புவது நதிக்கரை நாகரிகம்

விதிக்கப்பட்டது நெரிசல் மிக்க நகரம்” என்கிற தன் விதியை நொந்து ஏராளமான கவிதைகளை அண்ணாச்சி எழுதியிருகிறார்.தாமிரபரணி அவர் மனதில் சதா வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.எல்லாமே ஒருவித nostalgic உணர்வோடுதான் எழுதப்பட்டுள்ளதாக நாம் அவசரப்பட்டு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. மாஞ்சோலை தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் 17 பேர் (ஒன்றரை வயது குழந்தை விக்னேஷ் உள்ளிட்டு) திமுக அரசினால் பட்டப்பகலில் அடித்துக்கொல்லப்பட்டுத் தாமிரபரணியில் வீசப்பட்டது பற்றி அவர் எழுதிய வரிகளை நாம் வாசிக்க வேண்டும்:

எத்தனை துப்பாக்கிச் சூடுகள்

ஒரு வருஷத்தில்

....

துப்பாக்கிச் சூடுகளாலேயே துரைத்தனம்

துரைத்தனத்துக்காகவே துப்பாக்கிச் சூடுகள்

துப்பாக்கிகளை நம்பியே துரைகள்

துரைத்தனத்துக்காகவே துப்பாக்கிகள்

ஜாலியன் வாலாபாக் தாமிரவருணிக்கரை

காலம் இடம் ஆள்கள்தாம் வேறுவேறு

இன்னொரு கவிதையில் தனது நதியான தாம்ரவருணி பற்றி எழுதுவதையும் கவனிக்க வேண்டும்:

இத்தனை வன்கொலையா

இந்த நதியில்

நதியினில் பிணம் விழுந்தால்

நாமென்ன செய்ய

நதியையும் விட்டு வைக்காதா

நம்நாடு

ஒரே நாளில்

பதினேழு உயிர்கள்

கூசாமல் கொலை செய்யும் அரசு

உயிரின் விலையை

தீர்மானிக்கிறார்கள் ஆட்சியாளர்கள்

குழந்தைகளைக் காவு வாங்கும் நதி

உலகிலேயே இல்லை

ஆற்றைக்கறைப்படுத்துபவர்கள்

அயோக்கியர்கள்

எல்லாவற்றையும்

சம்பவமாக்கிவிடுகிறது ஜனநாயகம்

இதுவரை விக்ரமாதித்யன் என்றால் சொந்த நொந்த வாழ்வு பற்றிப் புலம்பிக்கவிதை எழுதுபவர் என்றும் குடியைக் கொண்டாடியும் கவிதைக்கு உந்து சக்தி குடியென்று சொல்பவர் என்றும் டாஸ்மாக்கைக் கடக்க முடியாத கவி என்றும் சில முகங்கள் முத்திரைகள் குத்தப்பட்டிருக்கலாம்.அவற்றில் உண்மை இல்லாமலில்லை.அதை நம் யாரையும் விட மிக அதிகமாக உணர்ந்திருப்பவரும் அது பற்றி எழுதியிருப்பவரும் அவரே.ஆனால் அவை மட்டுமல்ல விக்ரமாதியன் . பசியும் பட்டினியும் இயல்பென லபிக்கப்பட்ட மக்களில் ஒருவராக வீடற்ற மனித உயிராக தெருக்களில் திரிந்தலையும் துக்கத்தைச் சுமப்பவராக எப்போதும் வீடு திரும்புதல் பற்றிய கனவுகளோடும் ஏக்கங்களோடும் வாழும் ஒரு விளிம்புநிலை மனிதராக தான் ஒரு கவியென்னும் தன்னுனர்வு சண நேரமும் விட்டகலாத கர்வத்துடனும் வாழ்கிற கம்பீரமான படைப்பாளி விக்ரமாதித்யன்.சொந்த வாழ்வைப் பலி கொடுத்துக் கவி புனையும் தமிழ்க்கவி.

“இருக்கிற ஸ்திதியைச் சொல்வதுதான்என் வேலை.நம்பிக்கையையோ நம்பிக்கையின்மையையோ

பரப்புவது அல்ல.” என்கிற பார்வையுடன் அவர் படைக்கிறார்.அவருடைய படைப்புகளில் விஞ்சி நிற்பது நம்பிக்கையா அவநம்பிக்கையா என்று பட்டிமன்றம் நடத்துவது வீண்வேலை.ஒரு கலைஞன் இச்சமூக இருக்கும் நிலையைக் கூர்மையாகப் பதிவு செய்தால்கூடப் போதும்.அதுவே ஒரு முற்போக்கான பணிதான். அது ஏன் இப்படி இருக்கிறது என்று ஆய்வதும் அதற்கான மாற்றுகளை உருவாக்குவதும் அரசியலார் வேலை.தமிழில் அரசியலார் இந்தமாதிரிப் படைப்புகளை வாசிக்காமலும் ஏறெடுத்தும் பாராமல் இருப்பதுமே ஆகப்பெரும் வியாதியாகும்.

“உள்ளுணர்வும் ஒருவகையான உள்ளார்ந்த ஓசை ஒழுங்கும் இருக்கிற அளவுக்கு வேறு கவிதை நுட்பங்கள் என் கவிதைக்குள் வரவில்லை” என்றும் “ மிக இற்று நைந்து போன வாழ்வை வெகு பழைய மொழியில் சொல்லிச் சலிப்பூட்டுகிறேன் “ என்கிற சுயபார்வை அவருக்கு இருப்பது தமிழில் வேறு யாரிடமும் காணமுடியாத வியப்பூட்டும் மனநிலையாகும்.

இக்கட்டுரையில் அவருடைய சிறுகதைகள் பற்றி எழுத இடமில்லை.விரிவாக தனியே எழுதலாம்.திரிபு,நேர்ந்தது ஆகிய இரு கதைகளும் உலகத்தரத்துக்கான தமிழ்ச்சிறுகதைகள் என்று ஒரு வரியை மட்டும் இப்போதைக்கு எழுதிச்செல்கிறேன் -பிள்ளைமார் சமூக வாழ்வைப்பின்புலமாகக் கொண்டிருந்தாலும் அது உலக இலக்கியமாக நிற்கிறது.போய்ச்சேர்ந்தான் புதுமைப்பித்தன்/வந்து நிற்கிறான் விக்கிரமாதியன் என்கிற அவரது வரிகள் இக்கதைகளுக்கு முற்றிலும் பொருந்தும்.

அவரிடம் நான் காணும் பெரும் குறை. வீடு துறந்து இவ்வளவு அலைந்து திரிந்து எங்கோ சாப்பிட்டு எங்கோ படுத்துறங்கி என்று அமைந்த இந்த வாழ்விலிருந்து அவர் கண்டு சொன்னது மிகமிகக் கொஞ்சமே.சுகுமாறன் கணிப்பது போல நான் கவிஞன் குடித்திருக்கிறேன் என்கிற தன்னுணர்வோடு சலுகை கோரும் ஒருவித மனநிலையே பெரிதும் அவரை ஆக்கிரமித்து இன்னும் எவ்வளவோ பார்த்தும் கண்டடைந்தும் சொல்ல முடியாதபடிக்குத் தடுத்துக்கொண்டே இருப்பதாக உணர்கிறேன்.சுடுமணல் கொதிக்கலாம் நெடுந்தேருக்கு என்ன கவலை என்று இனிமேலும் இப்படியே போய்க்கொண்டிருக்காமல் அண்ணாச்சி இன்னும் தன் அனுபவங்களை (அதற்குள்ளேயே அமிழ்ந்து கிடக்காமல்) சற்றுத் தூரத்தில் வைத்துப் பார்த்து இன்னும் நிறையச் சொல்ல வேண்டும்- நினைவின் தாழ்வாரங்களைப்போல.

இறுதியாக...

யதார்த்தவாதம் குறித்த அவருடைய வலுவான கருத்துக்கள் முற்போக்காளர்கள் கொண்டாட வேண்டிய கருத்துக்களாகும் என்பதைச் சொல்லி முடிக்கிறேன்;-

“ இந்தச் சமூக அமைப்பில் இன்றைய நிலையில் வாழ்க்கை எப்படி இருக்கிறது,இதன் ஸ்திதி எத்தகையது,இதில் நேர்கிற சிறுமையும் வீழ்ச்சியும் என்னென்ன (சில சமயங்களில் இதன் நடுவேயுள்ள மேன்மையும்) சமூக இருப்பு, மனித நடப்பு,சமூக –தனிமனித உறவு நிலைகளின் மாற்றம் ஆகியவற்றை ஒரு படைப்பாளியின் பார்வையில் இயல்பாகவும் சிரத்தையாகவும் கண்டறிந்து முன்வைப்பதே எதார்த்த எழுத்து ஆகும்.முன் எப்போதையும் விட எதார்த்த இலக்கியம் இப்போது மிகவும் தேவைப்படுகிறது.”

“சராசரி இந்தியர்களின்

சகிப்புத்தன்மையில் மட்டுமே

தேசம்

தீப்பற்றி யெரியாமல் இருக்கிறது”

Wednesday, June 3, 2009

என் இளமையின் சிறகுகள் உதிரத்துவங்கி விட்டன.....

 

 

kamaladas4 kamaladas1

 

 

கமலாதாஸ் என்றும் மாதவிக்குட்டி என்றும் மாதவிசுரய்யா என்றும் அறியப்பட்ட -- மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் /கதைகள் எழுதிய என் பிரியத்துக்குரிய மூத்த படைப்பாளி - என் இளமைக்காலத்தின் அடையாளங்களில் ஒன்றாக என் வாழ்வோடு இரண்டறக்கலந்திருந்த கமலாதாஸ் கடந்த 31 ஆம் தேதி புனேயில் காலமாகிவிட்டார் என்கிற செய்தி என்னைப் பெரும் துயரில் ஆழ்த்திவிட்டது(இந்த வரிக்கான உண்மையான அர்த்தத்தில்).

1974இல் நான் ராணுவத்தில் இருந்தபோது இமயமலையின் சரிவுகளில் கவிதைகளோடு துள்ளித்திரிந்த பருவத்தில் கமலாதாசை நான் கண்டடைந்தேன். “ மூன்று மொழிகளில் பேசுகிற-இரண்டு மொழிகளில் எழுதுகிற ஆனால் ஒரே மொழியில் கனாக் காண்கிற ” அந்தப் பெண்மணியின் கவிதைகள் தாம் நான் முதலில் வாசித்தது. ஜெயகாந்தனும், நா.பார்த்தசாரதியும் படித்துக்கொண்டிருந்த அந்த நாளின் என்னைத் தலைகீழாகக் கவுத்திப் போட்டன கமலாதாசின் எழுத்துக்கள்.தொடர்ந்து அவருடைய ‘ My Story’ படித்தேன்.அவர் எழுத்துக்களின் மீது பித்தானேன்.

அவரைப்போன்ற நேர்மையான ஓர் எழுத்துக்காரரை இந்தியாவில் நான் இதுவரை கண்டதில்லை.என்ன நேர்மை.என்ன ஒரு துணிச்சல்.எல்லாமே அதன் உச்சத்தில்.பாலியல் சார்ந்த ஒரு பெண்ணின் மன உளைச்சல்களைப் பகிரங்கமாக எழுதிய முதல் இந்தியப்பெண்மணி அவர்தான்.இந்தியாவிலேயே மிக அதிகமாக விற்பனையான தன் வரலாற்று நூல் அவருடைய என் கதை தான்.

சனாதனப் பண்டாரங்கள் அவரைப் பழித்தார்கள்.விமர்சித்தார்கள்.பாலியல் எழுத்தென்று வசை பாடினார்கள்.ஆனால் கமலாதாஸ் ஓர் அற்புதமான கலைஞர்.ஒரு கலைஞனுக்கான எல்லாக் குணாம்சங்களும் கொண்டு வாழ்ந்தவர். தன் வாழ்வையே பணயமாக வைத்து விளையாடியவர்.எல்லாத் தலைசிறந்த கலைஞர்களையும் போல எதிலும் உறுதியற்ற மனநிலையோடே இறுதிவரை வாழ்ந்தார். அவ்வக்கணத்தின் மன எழுச்சியே அவருடைய நிலைபாடாக இருந்தது. பொக்ரான் அணு வெடிப்பில் உற்சாகமடைந்து எல்லோருக்கும் இனிப்பு வழங்கிய அவருடைய மனநிலையை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.ஒருநாள் திடீரென இஸ்லாமியப் பெண்ணாக தன்னை மதம் மாற்றிக்கொண்டதும் அப்படித்தான்.

என் வாழ்வின் ரகசியங்கள் அத்தனையையும் எழுதி என்னைக் காலி உடம்பாக ஆக்கிவிட வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன் என்றவர்.அப்படியே கடைசி நிமிடம்வரை வாழ்ந்தார்.

கேரளா அவரைக்கொண்டாடியது போலவே தூற்றவும் செய்தது. விமர்சனங்களால் காயப்பட்ட அவர் ஒரு நாள் இனி நான் திரும்ப மாட்டேன் என்று அறிவித்துவிட்டு நிரந்தரமாக கேரளாவிலிருந்து வெளியேறினார். அந்தப் பாவம் மலையாளிகளை சும்மா விடுமா? மீண்டும் அவர் திரும்பவே இல்லை-கலைஞனுக்குரிய கர்வத்தோடு வெளி மண்ணில் புனேயில் மடிந்தார்.

இன்று தன் மூத்த மகளை இழந்துவிட்ட துயரில் மலையாளம் கரைந்து கொண்டிருக்கிறது.

எனக்கோ என் இளமையைச் செதுக்கிய கவி இன்று இல்லை.என் இளமையை நெறிப்படுத்திய படைப்பாளி இன்றில்லை. என் எழுத்துக்களில் நேர்மையின் துணிவைக் கொண்டு சேர்க்கப் பணித்த என் மாதவிக்குட்டி அக்கா இன்று இல்லை.படைப்பில் உண்மை என்பதின் உச்சம் எது என்பதை எனக்கு அடையாளம் காட்டிய முன்னோடி இன்றில்லை.பெண்ணின் பெருமையை புரியவைத்த அக்கா இன்றில்லை.என் சொந்த இழப்பு இது.

என் இளமை இன்றுமுதல் உதிரத் துவங்கிவிட்டதாக மனசார உணர்கிறேன்.உடம்பாலும் உணர்கிறேன்.

சென்று வா மாதவி அக்கா.கண்ணீரோடு வழியனுப்புகிறேன்.

பி.கு.

அவருடைய கவிதைகளில் முக்கியமான- அற்புதமான ஒரு கவிதையை அப்படியே கீழே தந்துள்ளேன்.யாரேனும் (தீபா ? )சரியாக மொழிபெயர்த்து பின்னூட்டத்தில் போட்டால் நன்றியுடையவனாவேன்.

An Introduction

I don’t know politics but I know the names
Of those in power, and can repeat them like
Days of week, or names of months, beginning with Nehru.
I amIndian, very brown, born inMalabar,
I speak three languages, write in
Two, dream in one.
Don’t write in English, they said, English is
Not your mother-tongue. Why not leave
Me alone, critics, friends, visiting cousins,
Every one of you? Why not let me speak in
Any language I like? The language I speak,
Becomes mine, its distortions, its queernesses
All mine, mine alone.
It is half English, halfIndian, funny perhaps, but it is honest,
It is as human as I am human, don’t
You see? It voices my joys, my longings, my
Hopes, and it is useful to me as cawing
Is to crows or roaring to the lions, it
Is human speech, the speech of the mind that is
Here and not there, a mind that sees and hears and
Is aware. Not the deaf, blind speech
Of trees in storm or of monsoon clouds or of rain or the
Incoherent mutterings of the blazing
Funeral pyre. I was child, and later they
Told me I grew, for I became tall, my limbs
Swelled and one or two places sprouted hair.
WhenI asked for love, not knowing what else to ask
For, he drew a youth of sixteen into the
Bedroom and closed the door, He did not beat me
But my sad woman-body felt so beaten.
The weight of my breasts and womb crushed me.
I shrank Pitifully.
Then … I wore a shirt and my
Brother’s trousers, cut my hair short and ignored
My womanliness. Dress in sarees, be girl
Be wife, they said. Be embroiderer, be cook,
Be a quarreller with servants. Fit in. Oh,
Belong, cried the categorizers. Don’t sit
On walls or peep in through our lace-draped windows.
Be Amy, or be Kamala. Or, better
Still, be Madhavikutty. It is time to
Choose a name, a role. Don’t play pretending games.
Don’t play at schizophrenia or be a
Nympho. Don’t cry embarrassingly loud when
Jilted in love … I met a man, loved him. Call
Him not by any name, he is every man
Who wants. a woman, just as I am every
Woman who seeks love. In him . . . the hungry haste
Of rivers, in me . . . the oceans’ tireless
Waiting. Who are you, I ask each and everyone,
The answer is, it is I. Anywhere and,
Everywhere, I see the one who calls himself I
In this world, he is tightly packed like the
Sword in its sheath. It is I who drink lonely
Drinks at twelve, midnight, in hotels of strange towns,
It is I who laugh, it is I who make love
And then, feel shame, it is I who lie dying
With a rattle in my throat. I am sinner,
I am saint. I am the beloved and the
Betrayed. I have no joys that are not yours, no
Aches which are not yours. I too call myself I.

Friday, March 27, 2009

ஒரு கவிஞனின் மரணம்

death

நேற்றிருந்த அப்பாஸ் இன்று இல்லை.
அவர் விட்டுச்சென்றுள்ள நான்கு கவிதைத்தொகுதிகளினூடே
அவர் நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார்.

‘கேசவா
என்ன செய்து கொண்டிருக்கிறாய்
என் தனிமையைக் காலி செய்து கொண்டிருக்கிறேன்
தனிமையை காலி செய்ய முடியுமா
இல்லை பசவராஜ்
நமது வேலையே அதுதான்’

என்று தொடங்கி

‘சரித்திரமும் தத்துவங்களும்
முதல் பிறப்பை விசாரித்துக்கொண்டிருக்கும்போது
.......
முதலில் இறந்தவன்தான் எனக்கு முக்கியம்
உனக்குத் தெரியாது
அவன் மிக மிக முக்கியமானவன்’

என்று பாய்கிற அவரது கவிதையின் தலைப்பு
‘முதலில் இறந்தவன்’

தன்னை பசவராஜ் என உணரும் அப்பாஸ் தன் நண்பர்கள்
டேனியல்,கேசவன் ஆகியோரோடு மது அருந்தியபடி நடத்தும்
உரையாடல்களாக வரும் கவிதைகள் அவரே சொல்வது போல

‘ ஒரு மொழி ஏன் நேராய் இருக்க வேண்டும்
வளைந்து நெளிந்து
ஹேர்ப்பின் பெண்டுகளைப்போல் அர்த்தங்கள்
வளைந்திருக்கக்கூடாதா என்ன
.......
அப்படியே பழகிப் பழகி
கவிழும் நேர்கோட்டு மொழியில்
அப்படி என்ன
விசித்திரம் கிடைத்துவிடப் போகிறது...’

சி.மோகன் குறிப்பிடுவதுபோல அர்த்தங்களை
வற்புறுத்தும் மனங்களுக்கு அப்பாஸின் கவிதைகள்
வெளிறித் தோன்றக்கூடும்.

அப்பாஸ் எங்க ஊர்க்காரர்.கோவில்பட்டியின் வீதிகளில்
நாங்கள் இலக்கிய சர்ச்சைகள் நடத்திக்கொண்டு திரிந்த நாட்களில்
கையெழுத்து இதழ் ஒன்றில் பாலியல் திரிபு சார் கதை ஒன்றை ராமு
எழுதிவிட அதை ஒட்டி நடந்த காரசாரமான விவாதங்களின் போது
அப்பாஸ் அறிமுகமானார்-முற்றிலும் 24 x 7 காதல் வயப்பட்ட இளைஞனாக
ஒரு சைக்கிளில் ஏதோ ஒரு பெண்ணை எப்போதும் பின் தொடர்ந்தபடி.
தஸ்தாவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகளில் மிதந்து திரியும் இளைஞனாக
மட்டுமே அவரை நான் அப்போது அறிந்திருந்தேன்.

என்னைவிட என் தம்பி (என் மூத்த தம்பி- நன்றி ரமேஷ் வைத்யா)
கோணங்கியோடுதான் அவர் நெருக்கம்.அர்த்தங்களின் பின்னால்
ஓடுகிறவன் என்றென்னை அவர் ஒரு இடத்தில் நிறுத்தி வைத்திருக்கலாம்.
நாம் என்ன மாதிரி ஆள் என்பது நமக்கே சரியாகப் பிடிபடாத போது
அடுத்தவர்கள் எப்படி நம்மைச் சரியாகப் புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியும்?

என்னோடு அவர் நடத்திய உரையாடல்கள் எல்லாமே இலங்கைத் தமிழர்
பற்றி மட்டுமேதான். அகதிகளான மக்கள் குறித்த ஆழ்ந்த துயரம்
அவரை வருத்தியபடி இருந்தது.

“ உரையாடலும் தத்துவமும் வாழ்தலும்
புத்துணர்ச்சி பெறாமல்
பதுங்கு குழியில் இருந்து
குண்டுகளை எதிர்பார்க்கும்
அந்தச் சிறு குழந்தையின் கண்களில் வழியும்
பகலையும் இரவையும் மரண பயத்தையும்
இன்னும் எத்தனை காலங்களுக்கு
தத்துவ மொழியில் உறைய வைப்பது.”

என்று அவர் தன்னுடைய மூன்றாவது தொகுப்பின் முன்னுரையில்
குறிப்பிடுவது இந்த மனோநிலையின் பின்னணியில்தான் என்று நினைக்கிறேன்.

என்னை ஒரு இயக்கவாதி என்று மட்டுமே அறிந்துகொண்டு
இலங்கைப்பிரச்னை பற்றி மட்டுமே என்னோடு பேசிச்சென்ற
அப்பாஸ் ஏதேனும் ஓர் நாள் என்னோடு கவிதைகள் பற்றியும் பேச
வருவார் எனக்காத்திருந்தேன்.

காலத்தின் அழைப்பு அகாலத்தில் அவரை நம்மிடமிருந்து
பிரித்துவிட்டது.குடித்துக் கல்லீரல் கெட்ட அப்பாஸின் இறுதி நாட்களை
நம் கவிச்செல்வங்கள் பாடமாகக் கொள்ள -வருந்தி -அன்புடனும் அக்கறையுடனும்
கேட்டுக்கொள்கிறேன்.

அப்பாஸ்...
முதலில் இறந்துபோன எங்கள் மண்ணின் கவிஞனே
என் அஞ்சலியை ஏற்றுக்கொள்.
உன் கவிதைகளை நான் அக்கறையுடனும்
உன் வாழ்வை நான் கவலையுடனும்
பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தேன் என்கிற செய்தியைக்கூட
கடைசிவரை உனக்குத் தெரிவிக்காமலே
கடந்து விட்டது எல்லாம்.

அப்பாஸின் கவிதைத்தொகுதிகள்

1. வரைபடம் மீறி
2.வயலட் நிற பூமி
3.ஆறாவது பகல்
4.முதலில் இறந்தவன்- உயிர் எழுத்து பதிப்பகம்,
9,முதல் தளம்,தீபம் வணிக வளாகம்,
கருமண்டபம்,திருச்சி-1. விலை ரூ.50