Showing posts with label கலை. Show all posts
Showing posts with label கலை. Show all posts

Wednesday, June 13, 2012

தமுஎகச வின் இரு பெரும் விழாக்கள்

தமுஎகச சார்பாக தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஜூன் 16 முதல் ஜூலை 5 வரை 600 மையங்களில் தமிழின் சிரந்த குறும்பட ஆவணப்படங்கள் மற்றும் முழு நீளத் திரைப்படங்களை மக்கள் மத்தியில் திரையிட விரிவாகத் திட்டமிட்டுள்ளோம்.அத்திரைப்பயணத்தின் துவக்க விழா ஜூன் 16 மாலை சென்னை கோடம்பாக்கம் கங்காராம் ஹாலில் நடைபெறுகிரது.

ஆண்டுதோறும் தமுஎகச வழங்கும் இலக்கியப் பரிசளிப்பு விழா பண்பாட்டு மலர் வெளியீட்டு விழா திரைப்பட விருது வழங்கும் விழா ஜூன் 17 அன்று முழுநாள் நிகழ்வாக சென்னையில் ரிசர்வங்கி எதிரே உள்ள கப்பல் சிப்பந்திகள் நல மையத்தில் நடைபெற உள்ளது.

இவ்விரு விழாக்களுக்கான அழைப்பிதழ்கள் கீழே.அவசியம் வருக என அன்புடன் அழைக்கிறோம்.

 

THAMUEKASA 2012 1

THAMUEKASA 2012 2

Wednesday, July 6, 2011

ஓவியர் ஜீவாவுடன் நேர்காணல்

 

படித்தது சட்டம் பிடித்தது தூரிகை

jeeva 2

சிறந்த திரைப்பட நூலுக்கான தேசிய விருதை இந்த ஆண்டு திரிசக்தி பதிப்பக வெளியீடான திரைச்சீலை என்னும் நூல் பெற்றுள்ளது.இந்நூலைக்கோவையைச் சேர்ந்த ஓவியர் ஜீவா எழுதியுள்ளார்.1982இல் அறந்தை நாராயணன் எழுதிய தமிழ்ச் சினிமாவின் கதை என்னும் நூலுக்குப் பின்பு இவ்விருது பெறும் தமிழ் நூல் இதுவே.கோவையின் போக்குவரத்து நெரிசல் மிக்க டவுன்ஹால் சாலையின் அஞ்சு முக்கு வீதியில் உள்ள அவரது வீடும் ஸ்டூடியோவுமான இடுக்கமான இடத்தில் செம்மலர் சார்பாக அவரைச் சந்தித்து வாழ்த்துச் சொன்னோம்.

நாகர்கோவில் மாவட்டம் பூதப்பாண்டி இவரது பூர்வீக பூமி.ஆம்.அதே பூதப்பாண்டிதான்.தோழர் ஜீவா பிறந்த மண்ணில் அவருடைய உறவுக்காரப் பையனாகப் பிறந்தவர்தான் இந்த ஜீவாவும்.இன்றும் நாகர்கோவில் நகரில் உள்ள ஜீவா மணி மண்டபத்தில் இவர் வரைந்த ஜீவாவின் ஓவியம்தான் வைக்கப்பட்டுள்ளது.

படித்தது உயர்தர ஆங்கில வழிப்பள்ளியில்; வாழ்ந்தது இந்தச் சந்து பொந்தில் என்று தன்னைப்பற்றிக் குறிப்பிடும் ஜீவா படிப்பால் ஒரு வழக்கறிஞர்,மனதால் மன விருப்பத்தால் ஒரு ஓவியர், வாழ்வுக்காக அல்லது பிழைப்புக்காக ஒரு ஓவிய டிசைனர்.சென்னை மாநிலக்கல்லூரியில் எம்.ஏ.பட்டமும் கோவை சட்டக்கல்லூரியில் வழக்கறிஞர் பட்டமும் பெற்றாலும் மனம் முழுக்க ஓவியத்திலேயே நாட்டம் கொண்டிருந்தது.காரணம் அவருடைய தந்தையார் திரு.வேலாயுதம்.அவர் துவக்கி நடத்திய சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சினிமா பேனர்கள் வரைந்து கொடுப்பதைப் பிரதான பணியாகக் கொண்டது.அப்பாவுடன் சேர்ந்து வரையத்துவங்கியவர் ஜீவா.அப்பா 56 வயதில் காலமாகிவிட வீட்டுக்கு மூத்த பிள்ளையான ஜீவா குடும்ப வருமானத்துக்காக அப்பாவின் தொழிலையே கைக்கொண்டார்.ஆங்கிலப்பள்ளியில் படித்த அவர் தமிழ் படிக்கவில்லை.அவர் இதற்கு முன் எழுதியதுமில்லை.இதுதான் அவரது முதல் நூல்.

“ கோவையில் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் தான் நடத்திய ரசனை இலக்கிய இதழில் சினிமா ரசனை பற்றி ஒரு தொடர் எழுதுமாறு வற்புறுத்தியதால் தமிழில் எழுத வந்தேன்.உலக சினிமாக்களைப் பார்க்க அப்ப என்னைச் சிறுவயதிலேயே அழைத்துச் செல்வார்.மொழி பெயர்த்து எனக்குக் காட்சிகளை விளக்குவார்.அந்த அனுபவமும் அப்பா எனக்கு வாசிக்கத் தந்த சோவியத் இலக்கியங்களும்தான் இந்த திரைச்சீலை நூல் வெளிவரக் காரணம் எனலாம்.நாஞ்சில்நாடன் போன்ற நான் மிகவும் நேசிக்கும் படைப்பாளிகளின் உற்சாகமூட்டலும் தொடர்ந்து எழுதி முடிக்க ஒரு காரணம்”

செம்மலர்: அப்பாவிடம் ஓவியம் கற்றுக்கொண்டீர்களா அல்லது முறையாக ஓவியப்பள்ளியில் சேர்ந்து படித்தீர்களா?

ஜீவா: அப்படி எந்தப் பயிற்சியுமில்லை.அப்பாவும் கற்றுக்கொடுக்கவில்லை.அவர் என்னை ஆங்கில வழியில் எம்.ஏ. அரசியல் விஞ்ஞானம் படிக்க வைத்து ஐ.ஏ.எஸ் பயிற்சிக்கு போகச்சொன்னவரல்லவா? இந்தத் தொழில் விருத்தியில்லாத தொழில் என்பதால் அப்பா அப்படி நினைத்தார்.ஆனால் நானோ புனே திரைப்படக்கல்லூரிக்குப்போய் திரைப்படம் கற்க ஆசைப்பட்டேன்.இரண்டுமில்லாமல் சட்டம் படித்துவிட்டு நான் பிரஷ் பிடித்தேன்.அப்பா வரையும் பேனர்களில் இடைவெளிகளை வண்ணம் கொண்டு அடைக்கும் வேலை செய்யத் துவங்கியதிலிருந்து என் ஓவிய வாழ்க்கை பள்ளிப்பருவத்திலேயே துவங்கியது.6 பேரில் மூத்தவனான நான் வருமானத்துக்காக இப்படி ஆனாலும் என் தம்பி மணி கண்டனை சினிமாத்துறைக்கு அனுப்பி ஆறுதல் தேடிக்கொண்டேன்.தம்பி மணிகண்டன் அடையாறு திரைப்படக்கல்லூரியில் படித்து இன்று பேசப்படும் ஒளிப்பதிவாளராக வாழ்ந்துகொண்டிருக்கிறான்.ராவணன்,பெண்ணின் மனதைத் தொட்டு,செங்கோட்டை சாருக்கான் எடுத்த ஓம் சாந்தி ஓம் இந்திப்படம் என அவன் மும்பையிலும் சென்னையிலும் வலுவாகக் கால் ஊன்றி கேமராமேனாக வெற்றி பெற்றிருக்கிறான்.

செம்மலர்: பேனர்கள் வரைவது ஒரு கலை மனதுக்கு திருப்தியளிக்குமா?

ஜீவா: சினிமா பேனர் வரைவது ஒரு மறு படைப்புத்தான்.முகங்களை வரைவதுதான் அதில் பிரதான வேலை.இத்தனை ஆண்டுகளில் லட்சக்கணக்க்கான முகங்களை வரைந்து விட்டேன்.அந்த அனுபவமே எனக்குத் தடையாக உள்ளது.நவீன ஓவியர்களைப்போல அரூப ஓவியங்களை வரைய ஆசைதான்.அப்படி முயன்றாலும் அது ஒரு முகமாகவே எனக்கு வந்து விடும்.அப்படிப் படிந்து போய்விட்டது.இயற்கையைப் பார்த்து வரையவும் ஆசை இருந்தாலும் நேரமில்லை.அந்த அளவுக்கு நேரத்தை ஒதுக்க என் நெருக்கடி மிகுந்த வாழ்க்கை இதுவரை இடம் தரவில்லை.

செம்மலர்: அது ஒரு சோகம் தானே..?

ஜீவா: அப்படிச்சொல்ல முடியாது.நான் பேனர் வரைவதை எப்போதும் ஒரு கூட்டம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்.அதில் அன்றாடம் வந்து நிற்கும் எனக்கான ரசிகர்களும் உண்டு.உடனுக்குடன் பாராட்டும் விமர்சனமும் கிடைக்கும்.அதைப் பெரிதாக மதிப்பேன்.நவீன ஓவியம் வரைந்து அதைக் கண்காட்சியாக வைப்பது என்பது ரொம்பவும் காஸ்ட்லியான சங்கதி.ஓவியக்கண்காட்சி என்பது எப்போதுமே கார்ப்பொரேட் கையில்தான்.மண்டபம் பிடித்து படங்களை வைக்கவே பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் செலவிட வேண்டும்.தவிர அதில் ஒரு பிராண்ட் பெயர் தேவைப்படுகிறது.எம்.எஃப்.உசேன் படம் என்றால் ஒரு கோடி 2 கோடி ரூபாய்க்குப் போகும்.ஆதிமூலம் படம் என்றால் ஒரு விலை இருக்கிறது.நம்மைப்போன்ற ஆட்கள் அந்த இடத்துக்கு வர வாய்ப்பில்லை.அதுவும் கோவையில் வாழ்ந்து கொண்டு அந்த இட்த்தி எட்ட முடியாது.மனத் திருப்திக்காக வரைய வேண்டும் என்றாலும் இன்று வண்ணங்கள்,திரைச்சீலைகள் விற்கும் விலையைப் பற்றி யோசித்தால் கலை , மனதுக்குள்ளேயே வறண்டு போகும்.ஒரு கலர் ட்யூப் விலை 150 ரூபாய்.35 கலர்களாவது வேண்டும்.அப்புறம் கேன்வாஸ் இத்யாதி செலவுகள் வேறு.

யாரைப்பார்த்தாலும் அந்த இடத்திலேயே அவரை அப்படியே ஐந்து பத்து நிமிடங்களுக்குள் ஓவியமாக வரைந்து விடும் திறன் சின்ன வயதிலிருந்தே எனக்கு வந்துவிட்டது.அது எனக்குப் பல இடங்களில் பேரும் புகழும் மரியாதையும் பெற்றுத்தந்துள்ளது.ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஸ்விஸ் நிறுவனம் காஃப்காவின் நாடக அரங்கேற்றத்துக்காக அவர்கள் சொன்ன

கருத்துக்களுக்கேற்ப பேனர்கள் வரைந்து தரச்சொன்னார்கள்.வரைந்து கொடுத்தேன் அது அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. வலைத்தளங்களில் அப்படங்களைப் போட்டார்கள்.சர்வதேச அளவில் எனக்கு நிறைய ரசிகர்களை அது உருவாக்கித் தந்துள்ளது.ஆகவே இந்த ஓவிய வாழ்வில் சோகம் என்று ஒன்றுமில்லை.நம் வாழ்நிலையிலிருந்துதானே பார்க்க வேண்டும்?

செம்மலர்: ஓவியத்துறையில் உங்கள் மனதுக்குப் பிடித்ததாக வேறு ஏதும் செய்கிறீர்களா?

ஜீவா: கோவையில் சித்ரகலா அகாடமி என்றொரு சங்கத்தை 1979இலிருந்து நடத்தி வருகிறோம்.20 ஆண்டுகள் அதன் செயலாளராகவும் இப்போது அதன் தலைவராகவும் இருந்து வருகிறேன்.குழந்தைகளுக்கு ஓவியம் வரையக் கற்றுக்கொடுப்போம்.இலவசமாக அதைச் செய்து தருகிறோம்.ஆண்டுதோறும் ஏராளமான குழந்தைகள் எங்களிடம் ஓவியம் பயின்று வருகிறார்கள்.தவிர ,2000த்தில் வள்ளுவர் கோட்டத்தில் 133 ஓவியர்களை அழைத்து ஆளுக்கு ஒரு திருக்குறள் அதிகாரத்தைப் படமாக வரையச்சொன்னார்கள் அந்த 133 பேரில் ஓவியக்கல்லூரியில் பயிலாத 2 பேரில் ஒரு ஓவியனாக நான் பங்கேற்றேன்.அந்தப் படங்களெல்லாம் இப்போது குப்பையாகக் கிடப்பதைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது.

செம்மலர்: டிஜிட்டல் பேனர்களின் வருகையை எவ்விதம் எதிர்கொண்டீர்கள்?

ஜீவா: ஒன்றுமே செய்யமுடியாமல் போனது ஒரு நாளில்.கோவையில் ஓவியர்கள் 400 கடை வைத்து பேனர்கல் வரைந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.எல்லாம் மாயமாய் மறைந்து போனது.இப்போது 3 கடை கூட இல்லை.அந்த ஓவியர்கள் இப்போது வீடுகளுக்கு வெள்ளை அடிக்கப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.அதில் நல்ல வருமானமும் கிடைக்கிறது.நாங்கள் உண்மையில் ஆடித்தான் போனோம்.வீட்டை அடமானம் வைத்து ஒரு டிஜிட்டல் பேனர் தயாரிக்கும் எந்திரத்தை நிறுவி தொழில் பண்ணிக்கொண்டிருக்கிறோம்.100 ரூபாய் வேலைக்காக மணிக்கணக்கில் ஒருவருக்கு உட்கார்ந்து அவர் விருப்பப்படி டிசைன் பண்ணிக்கொண்டிருக்கும் ஒன்றுதான் சோகம்.எப்போதும் ஒருவித எரிச்சலான மனநிலையே நீடிக்கும் நிலை இருக்கிறது.என்னடா வாழ்க்கை இது என்கிற சலிப்பும் வரத்தான் செய்கிறது.

செம்மலர்: ஓவியம் தவிர வேறு கலைகளில் ஆர்வம்?

ஜீவா: தொடர்ந்து வாசிப்பேன்.நிறைய எழுத்தாளர்களோடும் ஓவியர்களோடும் நட்புக்கொண்டிருக்கிறேன்.ஆதிமூலம் அவர்களின் ஓவியம் பற்றி கணையாழியில் விமர்சனமாக நான் எழுதி எனக்கும் அவரும் ஒரு சண்டையே நடந்து அதன் தொடர்ச்சியாக நாங்கள் மிக நெருக்கமான நன்பர்களாகிவிட்டோம்.பின்னர் அவரே என் குருநாதரும் வழிகாட்டியாகவும் ஆனார் என்பேன்.பாஸ்கரன்,தட்சிணாமூர்த்தி,மருது,ராஜராஜன்,நெடுஞ்செழியன்,மகி,அல்போன்ஸ் எனப் பல முன்னணி ஓவியர்கள் எனக்கு நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.

புத்தகங்கள் மிகச்சிறந்த நண்பர்களாக எப்போதும் இருக்கிறார்கள்.நான் எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே நீல.பத்மநாபனின் தலைமுரைகள் நாவலை முடித்து விட்டேன்.நண்பர் மாலன் “திசைகள்” வார இதழை ஆரம்பித்தபோது அதில் ஓவியங்கள் வரைந்தேன்.அச்சமயம் கல்கியில் சிந்து-ஜீவா என்கிற பெயரில் 2 ஆண்டுகள் சினிமா விமர்சனம் எழுதினேன்.

கோவையில் திரைப்படக் கழகம் யார் துவக்கினாலும் அவர்களோடு நான் கட்டாயமாக இருப்பேன்.திரைப்படச் சங்கத் திரையிடல்களுக்கு தவறாமல் செல்வேன்.கவிஞர் புவியரசுவின் தாக்கமும் என் மீது உண்டு.இதெல்லாம் சேர்ந்துதான் திரைச்சீலை புத்தகம் உருவானதாகச் சொல்ல வேண்டும்.

அவருடைய மகன் ஊடகவியல் படித்துள்ளார்.மகள் பி.எஸ்ஸி ஐ.டி படிக்கிறார்.ஓவியத்துறையில் இருவரும் இல்லை.அவருடைய மகன் ஒருநாள் எதிர்பாராமல் ஒரு மரம் வரைந்திருக்கிறார்.அந்த நாள் நான் அடைந்த துடிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை என்று சொல்லிக் குதூகலிக்கும் ஜீவா வலைப்பூவில் அவ்வப்போது எழுதி வருகிறார்.அவருடைய வலைப்பூ முகவரி: jeevartistjeevaa.blogspot.com.

ச்சந்திப்பு- சதன்,பாலாஜி

Friday, April 8, 2011

இம்மாதத் திரைப்படங்கள்

muthukku

சரி.பார்த்து வைப்போமே என்று சீடன்,முத்துக்கு முத்தாக,சிங்கம் புலி ஆகிய மூன்று படங்களைப் பார்த்தோம்.ஒண்ணும் தேறாது.சீடன் படம் குறித்து கதாநாயகன் தனுஷ் கோபப்பட கதைப்படி அவர் கதாபாத்திரம் பாதிப்படத்துக்கு மேலேதான் வருகிறது . ஆகவே கதைப்படிதான் நான் படம் எடுக்க முடியும் என்று இயக்குநர் சுப்பிரமணியம் சிவா கதைக்காக வாதிட்டதாக பத்திரிகைகளில் படித்ததை நம்ம்ம்பி இப்படத்துக்குப் போனது நம்ம தப்பு.பழனி முருகனே தனுஷாக வந்து தன் பக்தை அனன்யாவின் காதலை நிறைவேற்றி( கொட்டாவி வருது சார்) வைப்பதுதான் கதை. சாண்டோ சின்னப்பாத்தேவர் மறைந்தாலும் அவருடைய ஆவியாக சிலர் வந்து முருகன் புகழ் பாட படம் எடுத்து விடுகிறார்கள்.மக்களின் பக்தியைக் காசாக்கப் பலரும் பல விதங்களில் முயற்சிக்கிறார்கள். இவர்கள் படம் எடுத்துப்பார்த்திருக்கிறார்கள்.எப்பிடியெல்லாம் யோசிக்கிறாய்ங்க சாமி!இது நந்தனம் என்கிற மலையாளப்படத்தின் தழுவலாம்.அது வேறயா?படம் முழுக்க பிழியப்பிழிய அழுதிருக்கும் அனன்யாவுக்கு அழுதகூலி அதிகமாகத் தரவேண்டும்.

சாய் ரமணி இயக்கியுள்ள சிங்கம்புலி படத்தில் ஜீவா இரட்டை வேடத்தில் நல்ல அண்ணன் கெட்ட தம்பியாக வந்து நல்லதும் கெட்டதும் மோதி கடைசியில் கெட்டது அழிந்து நல்லது மீள்வது கதை.எத்தனை வருசத்துக்கு இப்பிடிக்கதையாக எடுத்துக்கொண்டிருப்பார்களோ தெரியவில்லை.

மாயாண்டி குடும்பத்தாரை எடுத்த ராசு மதுரவன் கோரிப்பாளையம் போய் மறுபடி ஒரு குடும்பக்கண்ணீர்க் காவியம் எடுத்தே தீருவது என்கிற சங்கற்பத்துடன் களம் இறங்கிய படம் முத்துக்கு முத்தாக. நமக்கு சின்ன வயசாக இருக்கையில் 1973இல் லஷ்மி தீபக் இயக்கத்தில் எஸ்.வி.ரங்காராவ் மூத்த அண்ணனாகவும் ஏ.வி.எம்.ராஜன் ,ஜெய்ஷங்கர் உள்ளிட்டோர் அன்புச்சகோதரர்களாகவும் நடித்து அன்புச்சகோதரர்கள் என்றொரு படம் வந்தது.அதில் வரும் பாடல்தான் ’முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்குக் கண்ணாக ’ அதிலிருந்து தலைப்பை வைத்து படம் பார்க்க வருபவர்கள் அரைவாளிக் கண்ணீராவது சிந்தாமல் போய்விடக்கூடாது என்கிற முடிவோடு எடுக்கப்பட்ட படம் இது.நல்லவேளையாக கைமறதியாக சிங்கம்ம்புலியின் வேன் நகைச்சுவைக் காட்சிகளைச் சேர்த்துவிட்டார்கள். இல்லாவிட்டால் அழுது அழுது ரசிகர்கள் பாதி உடம்பாகத்தான் படம் முடிந்து வெளியே வரவேண்டும். ஒரே நல்ல விசயம் இப்படத்தில் அத்தனை பாத்திரங்களும் புதிய இளைஞர்கள் –வளரும் கலைஞர்கள் என்பதுதான்.அது சரி.இந்த சரண்யா மேடம் அந்தக்காலத்து பண்டரிபாய் மாதிரி எல்லாப்படத்திலேயும் அம்மாவாக வந்து நாம் எந்தப்படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்கிற குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறார். படத்தில் எல்லாமே எந்த தர்க்கமும் இல்லாமல் அழ வைப்பது ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு எடுக்கப்பட்டிருப்பதால் செயற்கையாக இருக்கிறது படம்.

இப்படியாகச் சிலபல கோடிகளைத் தமிழ்நாட்டில் கோடம்பாக்கத்தார் வெட்டியாகச் செலவு பண்ணிக்கொண்டே போகிறார்கள்.தமிழ் வாழ்க்கையிலிருந்து கதையை எடுக்கத்தான் துப்பில்லாமல் போகிறது இவர்களுக்கு.

Tuesday, September 29, 2009

மீண்டும் வந்தேன்... மீண்டு வந்தேனா...

shut-1

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் வீதியில் உங்களைச் சந்திக்கிறேன்.பெரும் மனச்சோர்வு பீடித்த காலமாக இந்த இடைப்பட்ட காலம் இருந்தது.உலகமே அனாதரவாக விட்டு விட்ட இலங்கைத்தமிழ் மக்களின் கதி பற்றிய பெருத்த குற்ற உணர்வும் துயரமும் ஒரு காரணம். இந்திய அரசியல் அரங்கில் இடதுசாரிகள் சந்தித்துவரும் நெருக்கடிகள் பற்றிய கவலை இன்னொரு காரணம்.

திறந்த வெளிச்சிறைகளான அகதிகள் முகாம்களில் அடைபட்டுள்ள தமிழ்மக்கள் உடனடியாக அவரவர் ஊர்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என்கிற ஒரே உடனடிக்கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு இடங்களில் கருத்தரங்குகள் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறோம்.எல்லாம் முடிஞ்சு போன பிறகு இப்ப என்ன ( சில கெட்ட வார்த்தைகள்) த்துக்கு கூட்டம் போடுறானுக என்று நம் இனிய நண்பர்கள் நம்மை நோக்கிப் பேசிக்கொண்டிருக்க இக்கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறோம்.பத்திரிகையாளர் திசநாயகத்தின் மீதான 20 ஆண்டு சிறைத்தண்டனை என்கிற இலங்கை உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும் சென்னை,புதுச்சேரி போன்ற இடங்களில் கண்டனக் கூட்டம்/ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.’நாங்க ஒண்ணும் சும்மா இல்லே’ என்று காட்டிக்கொள்வதற்காக இக்கூட்டங்களை நாங்கள் நடத்தவில்லை. இவ்வுலகத்தாரால் முற்றிலுமாகக் கைவிடப்பட்டுவிட்ட தமிழ் மக்களுக்கான குரல் முன்னைவிடவும் வலுவாக ஒலிக்க வேண்டிய காலம் இது என மனப்பூர்வமாக நம்புகிறோம்.

நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தீராநதியில் தொடர்ந்து பல கட்டுரைகளில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினரைப்பற்றி இலங்கைப்பிரச்னையில் அவர்கள் மௌனம் சாதிப்பதாகவும் கட்சி சொல்வதை அப்படியே கேட்பதாகவும் மார்க்சியம் லெனினியத்தை அவர்கள் கைவிட்டு விட்டதாகவும் எழுதிக்கொண்டே இருக்கிறார்.சமீபத்திய அவரது தீராநதிக்க்கட்டுரையில் ஈழம் பற்றி ஒரு மூணுவரி ஹைக்கூ எழுதியவரின் பெயரைக்கூட மறக்காமல் குறிப்பிட்டுப் பட்டியலிட்டிருக்கிறார்.ஆனால் கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றுவதற்கு வெகு நாட்கள் முன்னதாகவே உடனடிப்போர் நிறுத்தமே இன்றைய தேவை என்பதை வலியுறுத்தி சென்னை,புதுச்சேரி ,தஞ்சை,மதுரை ஆகிய இடங்களில் எழுத்தாளர்கள் கலைஞர்களை அணிதிரட்டி முழக்கப்போராட்டம் நடத்தினோம். தமிழகத்தில் ஈழப்பிரச்னைக்காக அதிகபட்ச எழுத்தாளர்கள் பங்கேற்ற கூட்டங்கள் இவைதான் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.இப்போதும் 100 இடங்களில் பொதுக்கூட்டம்,கருத்தரங்கம் எனச் சென்று கொண்டிருக்கிறோம்.இவற்றில் எதுவுமே தோழர் பா.செ. அவர்களின் பார்வையில் படாமல் போனதற்கும் போவதற்கும் காரணம் உண்டு. அரசியலற்ற ராணுவப்பாதையைத் தேர்வு செய்து தங்களைத் தவிர தமிழ் மக்களுக்காகப் பேச யாரும் இருக்கக்கூடாது என்கிற நிலையைப் புலிகள் திட்டமிட்டு உருவாக்கிய காலம் தொட்டு நாங்கள் புலிகளை ஆதரிக்கவில்லை என்பதாலும் இலங்கையில் தனி ஈழம் என்பது சாத்தியமற்ற கோரிக்கை என நாங்கள் பேசுவதாலும்தான் பா.செ. தன் பட்டியலில் எம்மைச் சேர்ப்பதில்லை. பா.செ. மட்டுமல்ல- பல நண்பர்களும்.புலிகளை நானே என் சொந்தக் கண் கொண்டு பார்த்துத்தான் ஆதரிக்கவில்லை.என் கட்சி சொன்னதால் மட்டுமல்ல.கட்சியில் இருந்தால் சொந்த அறிவு இருக்காது என்று ஒரு கட்சியில் இருந்து தான் பெற்ற அனுபவத்தை மட்டும் வைத்து பா.செ. முடிவு செய்வது தவறு.எங்கள் சங்கத்தில் உங்களைப்போலவே கண்ணை மூடிக்கொண்டு புலிகளை ஆதரிக்கும் தோழர்களும் (இப்போதும்) இருக்கத்தான் செய்கிறார்கள்.

புலிகளோ பிற ஆயுதப்போராளிக்குழுக்களோ ஏன் தோன்றினவோ அதற்கான நியாயங்கள் இன்றைக்கும் இலங்கையில் நீடிக்கின்றன.உடல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் சிதைத்து ஒடுக்கப்பட்டுள்ள இலங்கைத்தமிழ் மக்களின் நியாயத்திலும் நியாயமான கோரிக்கைகளை சற்றேனும் மதிக்காத ராஜபக்சே அரசின் போக்கு மீண்டும் புலிகளைப்போன்ற ஆயுதப்போராளிக்குழுவின் எழுச்சிக்குத்தான் வழி வகுக்கும் என்றுதான் நாங்கள் பேசுகிறோம்.ஒரு சிவில் சமூகம் சுதந்திரமாகச் செயல்படமுடியாதபடி வன்முறை சார்ந்த பேரினவாத அரசியல்தான் இலங்கையை இன்றைக்கும் ஆட்டிப்படைக்கிறது. சிங்களப்பகுதியில் உள்ள இடதுசாரி சக்திகள் மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் பகுதி தம் வரலாற்றுக் கடமையை ஆற்றத்தவறியதும் இந்தப் பேரழிவிற்கு ஒரு முக்கியக் காரணம் என்றும் சொல்கிறோம்.

மே மாதம் முடிவுற்ற போரின் இறுதி நாட்களில் மனிதகுல வரலாறு இதுவரை கண்டிராத போர்க்குற்றங்களை சிங்கள ராணுவம் செய்துள்ளது என்பதே என் கருத்தாகவும் இருக்கிறது. அதே சமயம் கடைசி நாட்களில் புலிகளும் மக்களைச் சுட்டார்கள் என்று வருகிற செய்திகளை பொய் என்று நிராகரித்துவிடவும் முடியவில்லை.முகாம்களிலிருந்து மக்கள் வெளியேறி மனப்பிறழ்வு நிலையிலிருந்து ஓரளவுக்கேனும் மீண்ட பிறகு அவர்கள் பேசும்போதுதான் கடைசி 10 நாள் போர் பற்றிய உண்மைத்தகவல்கள் உலகுக்குத் தெரிய வரும்.

இப்போதைக்கு நம் எவருடைய நிலைப்பாடு சரி என்று நாம் விவாதிக்கிற நேரம் அல்ல இது. மக்களை குடியிருப்புகளுக்கு அனுப்பு என்று ஒரே குரலில் நாம் பேச வேண்டிய காலம் இது.

புலிகளால் நாடுகடத்தப்பட்டு 1990 முதல் இன்றும் முகாம்களில் வசிக்கும் முஸ்லீம் மக்களையும் சேர்த்து வீடுகளுக்கு அனுப்பு என்று சேர்த்துப்பேசுங்கள் என்று நெல்லையில் ஒரு பொதுக்கூட்டத்தில் நான் பேசியதால் என்னை சிங்களச்செல்வனே இனத்துரோகியே என்று நெல்லைவாழ் இனமானத்தோழர்கள் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள்.போஸ்டர் ஒட்டியவர்களும் பா.செ.வைப்போன்றே எனக்கு மிக நெருக்கமான நண்பர்கள்தான்.இந்துத்வாவுக்கு எதிரான போராட்டத்தில் தோளோடு தோள் சேர்த்து நின்றவர்கள்-நிற்கப்போகிறவர்கள்தான் என்பதை நான் அறிவேன்.

இதையெல்லாம் தொடர்து பேசிக்கொண்டுதான் இருந்தோம்.எங்கள் பேச்சு யாருக்கும் ரசிக்கவில்லை.பிடிக்கவில்லை.ஆகவே யார் காதிலும் அது விழவில்லை.ஆகவே நாங்கள் கள்ள மௌனம் சாதித்தவர்களாக கட்சி சொன்னதைக்கேட்கும் கிளிப்பிள்ளைகளாக சொந்த அறிவு இல்லாதவர்களாக ஒரு கற்பிதமான பிம்பமாகக் கட்டமைக்கப்பட்டோம்.

எனக்கு 54 வயதாகிறது.இத்தனை வயதில் நான் கேட்டறியாத கெட்ட வார்த்தை வசவுகளையெல்லாம் blog ஆரம்பித்த இச்சில நாட்களில் நான் கேட்க நேர்ந்தது.Moderate செய்து பின்னூட்டங்களை வெளியிடத்துவங்கியபின் அந்த கெட்ட வார்த்தை நண்பர்களைக் காணவில்லை.அவர்களின் வார்த்தைகளால் நான் காயப்படவில்லை.அந்த வார்த்தைகளைப் புறந்தள்ளி அவற்றுக்குப் பின்னால் இருக்கும் மனதின் உணர்வையே நான் பார்த்தேன்.அது விமர்சனமற்ற புலிகள் ஆதரவு என்கிற புள்ளியிலிருந்து வந்தது.யாராவது ஒரு தோழர் ஒரு வரி பேசிவிட்டால் அதைப் பிடித்துக்கொண்டு தமுஎகசவையும் சிபிஎம்மையும் விளாசுவதற்கு ஒரு இருபது முப்பது நண்பர்கள் எந்நேரமும் விழிப்புடன் வலைப்பக்கங்களில் இயங்கிக் கொண்டிருப்பதை உணர்கிறேன்.அவர்களின் அவதூறுகள் அல்லது விமர்சனங்களில் கொப்பளிக்கும் கோபத்தையும் குரோதத்தையும் ஒதுக்கிவிட்டு அதில் நியாயமான விமர்சனம் இருப்பின் உள்வாங்கிப்பரிசீலித்து என்னை நான் திருத்திக்கொள்ளும் மனதோடுதான் நான் எப்போதும் இருக்கிறேன்.எல்லாவற்றுக்கும் மேலாக நண்பர் டி.அருள்எழிலன் அடுத்த தேர்தலில் வங்கத்திலிருந்து சிபிஎம் துடைத்து அழிக்கப்பட்டுவிடும் என்று எழுதிய வார்த்தைகள்தான் என் மனதைக் காயப்படுத்திய மிகக் கூர்மையான வார்த்தைகளாக இன்னும் கடக்க முடியாதவையாக என் எதிரே வழி மறித்து நிற்கின்றன.சிபிஎம் அங்கே ஜெயித்தாலும் சரி தோற்றாலும் சரி அதை இயக்கம் பார்த்துகொள்ளும்.ஆனால் அருள் எழிலன் போன்ற நல்ல நண்பர்களின் மனதில் எம்மீதான இத்தனை குரோதம் வளர்ந்து கிடக்கிறதே எப்படிச் சரி செய்யப்போகிறோம் என்பதுதான் என் பெரும் கவலையாக உள்ளது.நிலைப்பாடுகளால் நட்பும் மரியாதையும் கூட முறிந்து போவது அச்சமளிக்கிறது.அருள் எழிலனுக்கு மட்டுமல்ல ஆதவன் தீட்சண்யாவுக்கும் சேர்த்தேதான் இதை நான் கூறுகிறேன்.

முகாம்களில் கிடக்கும் பிஞ்சுக்குழந்தைகளின் முகங்களைப் புகைப்படங்களில் பார்க்கும் கணத்தில் மேற்சொன்ன எனது வார்த்தைகளும் கூட அர்த்தமற்று இற்று வீழ்ந்து விடுகின்றன.என்ன செய்துவிடப்போகிறோம் அவர்களுக்கு – புலிகள் ஆதரவாளர்களாகவும் – எதிர்ப்பாளர்களாகவும் தமிழகத்தில் சௌக்கியமாக இருக்கிற நாம்?

பிரபாகரனைத் தம்பி என்று அன்போடு அழைத்த அந்த அமிர்தலிங்கம் இன்று இருந்தால் கூட இலங்கையில் ஏதேனும் அரைகுறை நிவாரணத்தையாவது முகாம்களுக்குப் பெற்றுத்தந்திருப்பாரே என்கிற எண்ணம் தினமும் வந்து போகிறது.

நிற்க.

unnai

சமீபத்தில் கமலஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன் என்கிற திரைப்படத்தைப் பார்த்தேன். வடிவரீதியாக பாய்ச்சலான பல முயற்சிகளையும் படு கேவலமான உள்ளடக்கத்தையும் கொண்டு வந்துள்ள படம் என்று சொல்வேன். குஜராத்தில் பெஸ்ட் பேக்கரியில் கொல்லப்பட்ட பெண்ணின் கணவன் ஒரு தீவிரவாதியாக மாறினால் ( கொள்கையளவில் நாம் அதை ஏற்கவில்லையாயினும்) சினிமா நியாயத்தின்படி அவன்தானே படத்தின் கதாநாயகனாக இருக்க வேண்டும்.அவனைக் கொலை செய்கிற கமலஹாசன் நிச்சயமாக வில்லன் அல்லவா?தவிர விஜய்காந்த் படங்களை விட மோசமாக இஸ்லாமியர்தான் தீவிரவாதிகள் என்று சொல்கிற ஒரு படத்தை கமல் தந்துள்ளார்- அவருடைய வழக்கமான சில குழப்பங்களையும் சேர்த்து. எந்தக்குற்றமும் செய்யாமல் இஸ்லாமியராகப் பிரந்த ஒரே குற்றத்துக்காக இந்தியச்சிறைச்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் அடைபட்டுக்கிடப்பது பற்றி சச்சார் குழு அறிக்கையே கவலைப்பட்டு எழுதியிருக்கும் யதார்த்தத்தின் பின்னணியில் வைத்து இப்படத்தைப் பார்க்கும்போது ஜனநாயக எண்ணம் கொண்டோர் ஒன்று சேர்ந்து கண்டனக்குரல் எழுப்ப வேண்டிய படம் என்கிற அழுத்தமான உணர்வே எனக்கு ஏற்படுகிறது.

Monday, April 20, 2009

கலை மனதின் எழுச்சியும் வீழ்ச்சியும்

balusir2 balusir

 

2008க்கான சிறந்த தமிழ்த்திரைப்படங்களுக்கான விருது வழங்கும் விழாவை நேற்று முன்தினம் சென்னையில் நடத்தினோம்.இயக்குநர் பாலுமகேந்திரா பேசும்போது குறிப்பிட்ட சில விஷயங்கள் முக்கியமானவை.

இயக்குநர் பாலச்சந்தர் ஒரு நேர்காணலில் Directors are born.You cannot teach direction என்று சொன்னாராம்.

No personality is Born. என்பது பாலுசாரின் எதிர்வினையாக இருந்தது.நான் எப்போதும்போல் பாலு மகேந்திராவின் பக்கம்தான்.

A dancer is born .A singer is born

A writer is born என்றெல்லாம் இப்படியே விரித்துச்செல்ல முடியுமா? என்று யோசிப்போம்.

ஒருவர் சிறந்த நாட்டியக்கலைஞராகப் பரிணமிக்க பயிற்சி தேவை.தாளம்,அடவுகள் இவையெல்லாம் முறையாகக் கற்றுக்கொண்ட பிறகுதான் ஆட முடியும்.அப்புறம் அவர் ஆடுவதெல்லாம் கலை ஆகிவிடாது.ஆடி ஆடிக் கலையின் மையத்தைத்தொட முயற்சிப்பார்.ஒரு மணிநேர ஆட்டத்தில் சில நிமிடங்கள்தான் கலையாக மிளிரும்.பாப்பம்பாடி ஜமாவில் பத்துப்பேர் தப்பு அடித்து ஆடினாலும் ஆட்டம் துவங்கி பத்து நிமிடத்தில் முனுசாமியின் அசைவுகளில் மட்டும் கலை துள்ளி எழுவதை நாம் பார்க்கிறோம்.பரதம் பார்த்துப்பழகியவர்களும் பத்மாவின் நடன அசைவுகள் முத்திரைகள் ஒரு கட்டத்தில் கலையாக உயர்வதைப் பார்ப்பார்கள். அந்த நிமிடத்துக்காகக் காத்திருப்பதுதான் நம் கடமை.

பாடகர் சாதகம் செய்வதும் தாளம் சுதி இவற்றுக்குள் நின்று பயிற்சி கொள்வதும் அடிப்படையான தேவைகள்.நாட்டுப்புறப் பாடகர்களுக்கும்கூடப் பாடப்பாட ராகம் என்கிற அளவிலேனும் பயிற்சி உண்டு.

ஒரு எழுத்தாளனுக்கு மொழியின் நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும்.கி.ரா, மேலாண்மை பொன்னுச்சாமி போன்ற பள்ளிக்கல்வி கிட்டாத எழுத்தாளர்களுக்கும் கூட பேச்சுமொழியின் நுட்பங்களேனும் தெரிந்திருக்கும். கலைப் படைப்பின் உருவாக்கத்தின்போது in the process of creating நாம் பெற்ற பயிற்சி உதவும் –கை கொடுக்கும்.

நாங்கள் எங்கள் அமைப்பின் சார்பாக கவிதைப்பயிலரங்குகள்,சிறுகதைப்பட்டறைகள் நடத்தும்போதெல்லாம் அப்படியே தட்டி நெளிச்சு கவிஞனாக ஆக்கிடுவீங்களா என்று நக்கல் செய்தவர் உண்டு. நமக்கு எழுத வராது என்பதை அறிந்து கொள்ளவேனும் அத்தகு பட்டறைகள் பலருக்கு உதவியிருக்கின்றன.

அதேபோல எழுதிய எழுத்தெல்லாம் இலக்கியமாக ஆகிவிடுவதில்லை.ஒரு நீண்ட கவிதையில் ஓரிரு வரிகள்தானே கவிதை.அந்த வரிகளைக் கண்டடைவதற்காக நாம் முழுக்கவிதையையும் (இதர வரிகளை மன்னித்து) வாசிக்கிறோம்.அந்த ஒரு வரியின் வெளிச்சத்தில் மற்ற வரிகளும் மினுங்க வாய்ப்புண்டு.இன்னும் வேறு மாதிரி சொன்னால் எல்லா வரிகளுமே அந்த ஒருவரிக்காக –அந்த வரியைக் கண்டடைவதற்காக கவிஞன் எழுதி முயற்சித்த வரிகள் எனலாம்.

எனவே கருவிலேயே திருவுடையவன் என எவனும் இப்பூமியில் இருக்க முடியாது-கலையையும் இலக்கியத்தையும் பொறுத்தவரை.

பாலுமகேந்திரா சொன்ன இன்னொரு முக்கியமான விசயம் – ஒரு கலைஞனின் கலை வாழ்வில் துவக்கம் –பயணம்- உச்சம்- சரிவு- வீழ்ச்சி- என ஒரு தன்மை உண்டு.பாரதியைப்போல புதுமைப்பித்தனைப்போல அவர்களின் கலை உச்சத்தில் இருக்கும்போதே மரணம் கிட்டியவர்கள் பாக்கியவான்கள். தன் சரிவை உணர்ந்தபின்பு செத்துவிட முடியாதவர்கள் மௌனம் காப்பது சிறந்தது.சத்யஜித்ரேயின் இறுதிக்காலத்தில் அவர் எடுத்த படங்களில் அவரின் வீழ்ச்சியைத் தான் கண்டதாகக் குறிப்பிட்டார் பாலுசார்.

ரேயின் கடைசிப்படமான Agantuk நான் பார்க்கவில்லை.ஆனால் அதற்கு முந்தைய இரு படங்களான கணசத்ரு வும் ஷாகா ப்ரஷாகா வும் பார்த்தேன். ரேயின் கலை மேதமை மிளிரும் இடங்கள் இருபடங்களிலுமே உண்டு என்பது என் கருத்து.

ஒரு கலைஞனை அவனுடைய உச்சபட்ச காலத்துப் படைப்புகளை மட்டும் வைத்தே கணிக்க வேண்டும் .அவனுடைய low ebb இல் வந்த படைப்புகளை வைத்து எடை போடக்கூடாது என்பது பாலுமகேந்திராவின் கருத்து.ஒரு நுட்பமான கலைஞனின் ஆழ்மனதில் படரும் ஒருவித அச்சத்தின் சாயையாக இக்குரல் எனக்குப்பட்டது.

இதுவும்கூட விவாதத்துக்கு உரியதுதான். எல்லாவற்றையும் கணக்கில் கொள்ளத்தான் வேண்டும்.மோசமாகி வந்த படைப்புகளை பெரிதாக நாம் எடுத்துக்கொண்டு அதையே போட்டுத் தாக்கப் பயன்படுத்திவிடக்கூடாது. நல்லதோ கெட்டதோ எல்லாம் அந்தக் கலைமனதிலிருந்து வந்ததுதானே.

திறந்த மனதோடு படைப்புகளையும் படைப்பாளியையும் அணுகும் பழக்கம் நம்மிடம் வந்துவிட்டால் கலைஞர்களுக்கு இத்தகைய அச்சம் வராது என்று படுகிறது.

தவிர உச்சம் /சரிவு /வீழ்ச்சி என்பதெல்லாம் கூட ஒரு ஒழுங்கில் வருவதில்லை மாறி மாறித்தான் வருகின்றன. ஒரு படைப்புக்குள்ளேயே கூட எழுச்சியும் வீழ்ச்சியும் இருப்பதில்லையா?

இப்படித்தொடர்ந்து பேசுவதற்கும் விவாதிப்பதற்குமான தூண்டுதலை பாலுமகேந்திராவின் பேச்சு தந்துள்ளது. தமிழின் மிகச்சிறந்த கலைஞனல்லவா?

பி.கு

எங்கள் மாநில மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராக பாலு மகேந்திரா அவர்கள் பணியாற்றினார்கள்.இலங்கைப்பிரச்னையில் எம்மோடு எம் நிலைபாட்டோடு நேர் எதிரான நிலையில் நிற்கும் அவர் ஒவ்வொரு நாளும் தன் எதிர்ப்பை வெளிப்படையாக தனிப்பட்ட முறையிலும் எல்லாக் கூட்டங்களிலும் அழுத்தமாகப் பதிவு செய்துகொண்டே எங்களோடு சேர்ந்து பணியாற்றினார். என்ன ஒரு ஜனநாயகவாதி அவர் என்கிற வியப்பு இன்னும் எமக்குத் தீரவில்லை.கருத்து வேறுபாடுகளோடு கூட , சேரும் புள்ளிகளில் சேர்ந்து பணியாற்ற முடியும் என்பதற்கு அவரைவிட மிகச்சிறந்த உதாரணம் வேறு யாருமில்லை. அவரை அவருடைய கருத்து வேறுபாட்டோடு சேர்த்தே அங்கீகரித்துக் கொண்டாடும் மனநிலை எமக்கும் இருக்கிறது.

Sunday, April 12, 2009

அரிவால் அரிவாளாகிக் கதிரான கதை

soviet woman

ஆதியிலே வார்த்தை இருந்தது என்று ஆன்மீகமாகப் பேசிக்கொண்டாலும் சொற்கள் மனித உடல் வந்த பிறகு குரல்-குரல் நாண்கள்-மூளை எல்லாம் வந்த பிறகு ரொம்ப காலம் கழித்து வந்த ஜூனியர்தான்.சரி.பீடிகையை இழுக்காமல் மேட்டருக்கு வந்து விடுகிறேன்.தேர்தல் பிரச்சாரத்துக்காக பாடல்கள் தயாரிப்பது/உருவாக்குவது/படைப்பது அப்புறம் அவற்றை ( உருப்படிகள் என்று சு.ரா தன் கடைசி நாட்களில் படைப்புகள் பற்றிக் குறிப்பிட்டது ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது) கேசட் அல்லது சிடியில் பதிவு செய்வது என்கிற வேலையைப் பல ஆண்டுகளாகச் செய்து வந்தாலும் சமீப காலங்களில் Recording theatre கள் பெற்றுள்ள டிஜிட்டல் தொழில்நுட்ப மாயத்தில் சொற்கள் பெற்றுள்ள treatment – மற்றும் சொற்கள் நம்மோடு கொண்டுள்ள உறவின் இணைப்புகள் பன்முகப்பட்டு நிற்பது போன்றவற்றை வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன. ஒலிபதிவுக்கூடத்தில் எப்பக்கமும் தப்ப முடியாத துல்லியத்துடன் சொற்கள் நம்ம்முன் பிரசன்னமாகின்றன.சரி. மகனே மேட்டருக்கு வா.

கடந்த சில பத்தாண்டுகளுக்கு மேலாகவே இயக்க மேடைகளில் பாடிவரும் மக்கள் செல்வாக்குப்பெற்ற கலைஞர்கள் சிலருக்கு சில சொற்களுடன் பிடிபடாத ஒரு உறவு இருப்பதும் சில எழுத்துக்களை அவர்களால் ஒருபோதும் சரியாக உச்சரிக்கவே முடியாது என்பதும் தெரிய வந்தது.

அருந்ததிமக்கள் எழுச்சியின் சின்னம்

அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்

என்ற வரியை அவர் பாட வேண்டும். அரிவாள் என்று அவரால் பாடமுடியவில்லை.அரிவால் என்றே பாடிக்கொண்டிருந்தார்.அதனால் டேக் ஓகே ஆகாமல் ரீடேக் ரீடேக் என்று போய்க்கொண்டிருந்தது.நேரம் ஆக ஆக தியேட்டர் வாடகை பில்லும் ஏறுமல்லவா? ஒரு உண்டியல் பார்ட்டி எவ்வளவு சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் என்பதைச் சொல்லி விளக்க வேண்டியதில்லை. ஒரு ‘ல்’ என்கிற எழுத்து ‘ள்’ ஆகாத சிக்கலில் 600 ரூபாய்க்கு மேல் மீட்டர் ஓடிக்கொண்டிருந்தது.இந்த 600 ரூபாயை வசூலிக்க நம் தோழர்கள் எத்தனை வீட்டு வாசலில் நின்று உண்டி அடித்திருப்பார்கள் என்கிற பதட்டம் எனக்கு அதிகமாகிக்கொண்டிருந்தது. சொல் காசாகவும் சொல் உண்டியலின் குலுக்கலாகவும் சொல் தோழர்களின் புழுதிபடிந்த கால்களாகவும் உருமாற்றம் பெற்று மனதில் விதவிதமான உணர்வலைகளைக் கிளப்பியபடி ஓடிக்கொண்டிருக்க கண்ணாடிக்கு அப்பால் அந்தத்தோழர் அரிவாலை அரிவாளாக்கப் போராடிக்கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் நானும் லகர ளகர ழகரப் பிரச்னை உள்ள தோழர் அவர் என்று நினைத்து

பள்ளம்

வள்ளம்

குள்ளம்

என்று அவருக்கு விளக்கிக் கொண்டிருந்தேன்.அவர் பள்ளத்தைப் பள்ளமென்றார்.கள்ளத்தைக் கள்ளமென்றே சொன்னார்.அதே வேகத்தில் பாடுங்க என்று சொன்னதும் அரிவால் என்றே மாறா நிலையில் நின்றார்.பேசும்போது சரியாக உச்சரிப்பார்.பாடும்போது மட்டும் அவருக்கு ளகரப் பிரச்னை இருக்கிறதுபோலும் என்று முதலில் நினைத்தேன். ஆனால்..

உள்ளத்தின் அடியாழத் தில்நின்று-எம்

உதிரச் செங்கொடி அசைகிறது

என்கிற வரிகளை உச்சரிப்பு சுத்தமாக -மூன்று லகரங்களையும்- அலட்சியமாகப் பாடி எம்மை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தினார்.என்ன பிரச்னை அவருக்கு? எந்த இடத்தில் பிரச்னை? என்று தலை குழம்பிய அந்தப்போராட்டத்தினூடே ஒரு மின்னல் வெட்டியது எனக்கு.

’அரிவாள் மற்றும் சுத்தியல் தானே’

என்று ஒரு வரி எழுதி இதைப்பாடுங்க தோழர் என்று கொடுத்தேன். எந்த உச்சரிப்புப் பிழையும் இல்லாமல் கச்சிதமாக அவ்வரியைப் பாடிவிட்டார்..உடனே இன்னொரு வரியை வேகமாக எழுதி இதைப்பாடுங்க என்றேன்,

‘அந்த ஆழ் கிணற்றுக்குள் விழுந்தே’

என்ற வரியை

‘அந்த ஆள் கிணற்றுக்குள் விழுந்தே ‘ என்று பாடினார்.அப்பாடா என்று என் மனக் குழப்பம் தீர்ந்தது.இதுதானா உன் பிரச்னை தோழா?

எனக்கு அண்ணன் கந்தர்வன் பல கூட்டங்களில் ரசித்துச் சொன்ன ஒரு சோவியத் கதை உடனே நினைவுக்கு வந்தது.

கூட்டுப்பண்ணை விவசாயத்தில் சோவியத் நாட்டிலேயே மிக அதிக விளைச்சல் செய்த பெண்மணி என்கிற லெனின் விருது பெற்ற பெண்ணைப் படமெடுக்க பத்திரிகையாளர் ஒருவர் அந்தக்கிராமத்துக்கு வருகிறார்.அந்தப் பெண்மணியிடம் பேட்டியெல்லாம் முடித்து புகைப்படம் எடுக்கும் கட்டம் வருகிறது.அவருடைய குழந்தைகளோடு நிறுத்தி ஒரு படம் கணவரோடு நிறுத்தி ஒரு படம் ஒட்டுமொத்தக் குடும்பத்தாரோடும் சேர்த்து ஒரு படம் தெருவில் வைத்து ஒரு படம் ஊர்மக்களைச் சுற்றிலும் உட்காரவைத்து நடுவில் இவரை நிற்க வைத்து ஒரு படம் ஊர்த்தலைவரோடு ஒரு படம் என்று படங்களை எடுத்துத் தள்ளினார். ஆனால் அவர் எதிர்பார்த்து வந்த ஒரு படம் மட்டும் கிடைக்கவில்லை- அமையவில்லை. என்ன எதிர்பார்த்து வந்தோம் என்ன கிடைக்கவில்லை என்பது அக்கலைஞனுக்குப் பிடிபடவில்லை. ஆனால் இத்தனை படத்திலும் கிட்டாத ஒன்றுதான் தான் தேடி வந்த படம் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிந்தது அவனுக்கு. துக்கத்தில் மனம் அமிழ்ந்து கொண்டிருக்க அவன் படங்களை மேலும் ஒரு ரோல் எடுத்து முடித்தான்( அதுதானய்யா கலைஞன் வாங்கி வந்த சாபம்! எந்நாளும் துன்பத்தில் உழலும் சாபம்! எதற்கென்றே பிடிபடாத துயரத்தில் உழலும் சாபம்)

கடைசியில் அவன் துக்கத்துடன் விடை பெற்றான்.அப்பெண்மணியும் அவரது கணவரும் ஊர் எல்லை வரை வழியனுப்ப வந்தனர்.வயல் வெளிகளைத் தாண்டி பஸ் நிற்கும் பிரதான சாலை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். அப்போது அக்கலைஞன் வயல் வெளியில் அப்பெண்மணியை நிறுத்தி ஒரு படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டான். உடனே ஓ என்று உற்சாகமாகத் தலையாட்டிய அப்பெண்மணி ஒரு குழந்தையைப்போல வயலின் நடு மையத்துக்கு ஓடினாள்.தன் செல்லமான பிள்ளைகளை அரவணைத்துத் தூக்குவது போல கோதுமைக் கதிர்களை வாரியணைத்துக்கொண்டு இப்போ எடுங்க படம் என்றாள்.கலைஞன் கேலிராவின் லென்ஸ் வழியாக க்ளோஸ்-அப்பில் அவலளப் பார்த்த அக்கணம் அவன் உடம்பே அதிர்ந்தது.இதுவரை அவன் பார்த்தும் பேசியும் வந்த பெண்மணி அங்கே இல்லை. வாரியணைத்த அக்கதிர்களுக்கு நடுவே முகத்தில் அத்தனை சோபையுடன் அத்தனை சிரிப்புடன் முகத்தின் ஒவ்வொரு துணுக்கிலும் ஒளிந்து நின்றிருந்த சிரிப்பெல்லாம் ஒருசேர வெளிப்பட்டு நின்ற பேரழகுடன் அப்பெண்மணி சுடர்ந்துகொண்டிருந்தாள்.இதுதான் இதுதான் என்று மனம் துடிக்க கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிய பார்வை மறைத்தபோதும் குத்து மதிப்பாக அவளுடைய முகத்தைக் குறிவைத்துப் படங்களை எடுத்தான்.

கதிர்களோடு அதாவது தன் உழைப்பின் குழந்தைகளோடு நிற்கும்போது மட்டுமே வெளிப்படும் அந்தப்பேரழகு! அந்தப் பெருமிதம்!

அந்த அரிவால் தோழர் பிரச்னை அற்புதமான இந்தக்கதையை நினைவுபடுத்திவிட்டது.மனித மனம் எப்போது யாருடைய நினைவைக் கிளறி விடும் எதுபற்றிய நினைப்பைத் தூண்டிவிடும் என்று திட்டவட்டமாக யாரால் சொல்ல முடியும்? இப்பதிவில் நான் எழுதத்திட்டமிட்டது சொற்கள் பற்றித்தான்.ஆனால் பாருங்கள் சோவியத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டேன்.

கதிரைப்பறித்தால் அவள் சிரிப்பு போய்விடும். அரிவாளையும் சுத்தியலையும் அடுத்தடுத்து வைத்தால் இவரின் உச்சரிப்பு போய்விடும் என்று பசுவைப் பனை மரத்தில் கட்டி இப்போதைக்கு முடிக்கிறேன்.எழுத நினைத்த சொற்கள் பற்றிய பதிவை நாளை எழுதி முடிக்க முயற்சிக்கிறேன்.நன்றி. வணக்கம்.