Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Thursday, July 5, 2012

மாநில திரைப்பயண நிறைவு விழா

ஜூன் 16 அன்று சென்னையில் துவக்கப்பட்ட மக்களை நோக்கிய திரைப்பயணம்-இந்திய சினிமாவின் நூற்றாண்டை நினைவு கூர்ந்த –இன்னும் தொடரும் என்கிற முழக்கத்தோடு முதல் கட்ட நிறைவு விழா

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற உள்ளது.வாய்ப்புள்ளோர் பங்கேற அன்புடன் அழைக்கிறோம்.

Invitation

Wednesday, June 20, 2012

Mobile theatres to take serious cinema to masses across state- by Tha.mu.e.ka.sa.-The Hindu news dated 16th jun 2012

clip_image001

CoimbatoreDelhiHyderabadKochiMaduraiMangaloreThiruvananthapuramTiruchirapalliVijayawadaVisakhapatnam

 

News » States » Tamil Nadu

CHENNAI, June 16, 2012

 

news story by B. Kolappan

 

clip_image002

Thr propaganda van of the Tamil Nadu Progressive Writers and Artists Association carrying projector and other materials for screening films on the streets. Photo: M. Karunakaran

Multiple screenings to mark a century of Indian cinema

Today, only some film-buffs might remember Avan Amaran, a film with strong Marxist moorings, highlighting the relentless struggle of the working class.

Released in 1958, after being subjected to massive editing by the Censor Board for its “strong political message,” the film failed to make a mark in the box office, despite a good story, excellent direction (by Veena S. Balachandar and Leftist producer S. Nagarajan) and an impressive cast.

And now, fifty four years after its release, the film will be screened again by the Tamil Nadu Progressive Writers and Artistes Association — however, not in theatres, but on the streets, in as many as 600 places all over the State.

“Not just Avan Amaran, beginning Saturday in Chennai, the Association will screen many short films, documentaries and world class films including Charlie Chaplin's comedies to mark the 100th anniversary of Indian cinema. As many as 1,500 of them will be screened in 15 days,” says S. Tamilselvan, president of the Association.

The film movement affiliated to the Association has already sent 15 copies of 25 short films and documentaries to be screened in 15 districts. Directors and producers of the short films and documentaries will be invited for discussions during the screening.

“Our objective is to create an audience for serious cinema. Every year, many good films are made out of individual efforts but they are not given any attention due to lack of patronage. We want to take the films to the people,” noted Mr. Tamilselvan.

The Association has in its possession over 500 movies in various languages that have made a mark across the world. Moreover, in every district, the Association has a bank of CDs and DVDs. Many of these will be screened during the next fortnight.

“There is no point in just blaming the film world for making B-grade commercial films. We have to inculcate a taste for alternative and serious film among the masses. This screening will go a long way in fulfilling such an objective,” Mr. Tamilselvan said.

Film director Karuna, who is also the co-ordinator of the film movement of the Association, said films had been classified to suit various sections.

“We will screen a different set of movies in schools and colleges, and a different variety on the streets,” he said.

The Association has good prints of some of the best Iranian and Chinese movies, besides films by Indian directors such as Satyajit Ray, Mrinal Sen and others.

“The Iranian movie, Children of Heaven, will be a feast for school children,” Mr. Karuna said. Akrinai, a short film on transgenders, Aarayatha Theerpu, which depicts the plight of members of the Irula community working in granite quarries, and Ezhumalai Jama, a film on ‘therukoothu' artistes will also be screened.

Keywords: century of Indian cinema, mobile theatres

Wednesday, June 13, 2012

தமுஎகச வின் இரு பெரும் விழாக்கள்

தமுஎகச சார்பாக தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஜூன் 16 முதல் ஜூலை 5 வரை 600 மையங்களில் தமிழின் சிரந்த குறும்பட ஆவணப்படங்கள் மற்றும் முழு நீளத் திரைப்படங்களை மக்கள் மத்தியில் திரையிட விரிவாகத் திட்டமிட்டுள்ளோம்.அத்திரைப்பயணத்தின் துவக்க விழா ஜூன் 16 மாலை சென்னை கோடம்பாக்கம் கங்காராம் ஹாலில் நடைபெறுகிரது.

ஆண்டுதோறும் தமுஎகச வழங்கும் இலக்கியப் பரிசளிப்பு விழா பண்பாட்டு மலர் வெளியீட்டு விழா திரைப்பட விருது வழங்கும் விழா ஜூன் 17 அன்று முழுநாள் நிகழ்வாக சென்னையில் ரிசர்வங்கி எதிரே உள்ள கப்பல் சிப்பந்திகள் நல மையத்தில் நடைபெற உள்ளது.

இவ்விரு விழாக்களுக்கான அழைப்பிதழ்கள் கீழே.அவசியம் வருக என அன்புடன் அழைக்கிறோம்.

 

THAMUEKASA 2012 1

THAMUEKASA 2012 2

Friday, June 8, 2012

எப்படி எழுதுவது ?-விவாதத்துக்கான குறிப்புகள்

 

hosur-5 (ஓசூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய இளம் படைப்பாளிகளுக்கான படைப்பூக்க முகாமில் –மே 18,19,20-2012 இல் வாசிக்கப்பட்ட கட்டுரை)

பேனாவால் எழுதலாம்.

பென்சில் கொண்டு எழுதுவாரும் உளர்.

நேரடியாக கணிணியில் தட்டுவார் இன்று அதிகம்.

ஒருவர் சொல்ல ஒருவர் எழுத அல்லது தட்டச்சு செய்ய என்கிற நடைமுறையும் உள்ளது.

இந்த ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட மனநிலையைக் கோருவதாக இருக்கிறது.பேனாவால் தாளில் எழுதியவர் கணிணிக்குச் சென்றபோது ஒரு சிறிய உளவியல் நெருக்கடிக்கு ஆளாகித்தான் பழக்கமானார். யோசித்துக்கொண்டே இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட நிமிடத்தில் கணிணியின் திரை காணாமல் போகும்.கையால் எழுதும் ‘க’ வும் ’ற’ வும் என்னுடைய ’க’ வாகவும் ’ற’ வாகவும் இருந்தது.கணிணியில் யாரோ வடிவமைத்து வைத்திருக்கும் ’க’ வை எடுத்து அதில் என் எண்ணங்களைச் சொல்ல நேர்கிறது. அந்த என்னுடைய என்கிற சொந்த உணர்வு மறைந்து போகிறது.கையால் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிப் பின் அதை அச்சில் பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி இதில் குறைந்து விட்டது.கணிணியில் எழுதும் படைப்பு மனதை மின்சாராமும் மின் வெட்டும் கூடத் தகவமைக்கிறது.

சொல்லச்சொல்ல எழுதுவதில் ஒருவர் காத்திருக்கிறாரே என்கிற நெருக்கடி இருந்துகொண்டே இருக்கும்.அதையும் வென்றவர்கள் உண்டு. இன்னும் நாம் எங்கே உட்கார்ந்து எழுதுகிறோம்- தனி அறையிலா,கூட்ட்த்து நடுவிலா பொது இடத்திலா என்பதெல்லாம்கூட எழுத்தின் போக்கைப் பாதிக்கத்தான் செய்யும்.

எப்படி எழுதினாலும் அதை எழுத்தென்போம்.இங்கு இந்த நடைமுறை உண்டாக்கும் உளவியல் பற்றி நாம் விரிவாகப்பேசப்போவதில்லை-அதுவும் அவசியமே என்றபோதும். எழுத்தின் தொழில்நுட்பம் அல்லது நல்ல வார்த்தையில் சொன்னால் எழுதும் கலை பற்றி சற்றுப் பேசிப்பார்க்கலாம்.

எழுதும் கலையில் மூன்று அம்சங்கள் மிக முக்கியமானவையாகின்றன.

1.உள்ளடக்கம்

2.உருவம்/அழகியல்

3.படைப்பு மனநிலை

அ.உள்ளடக்கம்

எதை எழுதுவது என்கிற பொதுவான புரிதல் விரிவாகத் தனியே பேசப்பட வேண்டியது.அவரவர் வர்க்க நிலை சார்ந்து பிறந்த நிலப்பரப்பு-காலம்-சாதி-பால் சார்ந்து எதை எழுதுவது என்பதை படைப்பாளி தீர்மானிக்கிறார்.நாம் இங்கு பேச எடுத்துக்கொள்வது அதுவல்ல. ஒரு குறிப்பிட்ட சிறுகதை அல்லது கவிதைக்கான ஒரு குறிப்பிட்ட உள்ளடக்கம்/கருப்பொருள் பற்றியே.ஒரு படைப்பின் உருவத்தை படைப்பாளி தேர்வு செய்யும் இந்த உள்ளடக்கமே தீர்மானிக்கிறது.

வெண்மணிக் கொடுமையை அதன் முழுமையான வரலாற்றுப் பின்னணியோடு கவிதையில் சொல்ல முயன்ற நவகவிக்கு ஒரு நெடுங்கவிதை என்கிற உருவமே கை கொடுத்தது.அதை உரைநடையில் சொல்ல முயன்ற இந்திரா பார்த்தசாரதிக்கும் சோலை சுந்தரபெருமாளுக்கும் பாட்டாளிக்கும் நாவல் என்கிற உருவம் பொருத்தமாக இருந்தது.தன் குருதிப்புனல் நாவலில் வெண்மணியை பிராய்டிய உளவியல் பார்வையில் இந்திரா பார்த்தசாரதியும் செந்நெல் நாவலில் விவசாயத்தொழிலாளர் நிலைபாட்டில் நின்று சோலை சுந்தரபெருமாளும் தன் கீழைத்தீ நாவலில் இடது தீவிரவாதப் பார்வையில் பாட்டாளி சொல்ல முற்பட்ட போது --ஒரே நிகழ்வு பற்றிய மூன்று வேறு வேறு உள்ளடக்கங்களாக அவை மாற்றம் பெறுகின்றன.இப்போது இந்திரா பார்த்தசாரதியின் உள்ளடக்கத்துக்கு ஏற்ற மொழியும் உத்தியும் வேறாகவும் சோலை சுந்தரபெருமாளின் வர்க்கநிலை சார்ந்த உள்ளடக்கத்துக்கான மொழியும் உத்தியும் வேறாகவும் அதிதீவிர நிலைபாட்டில் பேசிய பாட்டாளியின் உத்தியும் மொழியும் வேறாகவும் அமைவது தவிர்க்க முடியாததாகிறது.நவகவியும் புதுக்கவிதை என்கிற உருவத்தில் அல்லாமல் மரபுக்கவிதை என்கிற உருவத்திலேயே அதைச்சொல்ல நேர்கிறது.அதே வெண்மணியை தலித் மக்களின் குரலாக ஓர் ஆவேசத்தை பொது மேடைகளில் எடுத்துச்செல்ல இன்குலாப் “..எதையெதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க... நாங்க எரியும்போது எவன் மசிரப் புடுங்கப்போனீங்க..” என்று ஓர் இசைப்பாடல் வடிவத்தைக் கையில் எடுத்தார்.எந்த உள்ளடக்கம் என்பதும் –அதாவது ஒரே வெண்மணிக் கொடுமையின் எந்தப் பகுதியை உள்ளடக்கமாகக் கொள்கிறோம் என்பதும்- அதை யாருக்குச் சேர்க்கப்போகிறோம் என்பதும் இங்கு உருவத்தைத் தீர்மானித்ததைக் காண்கிறோம்.இன்னும் வெண்மணியின் சொல்லப்படாத கதைகளும் கவிதைகளும் எத்தனையோ வடிவங்களில் வரவேண்டிய பாக்கியும் இருக்கிறது.

அருணனின் கடம்பவனமும் மதுரையை மையமாகக் கொண்ட நாவல்தான்.சு.வெங்கடேசனின் காவல்கோட்டமும் மதுரையை மையமாகக் கொண்ட நாவல்தான்.நா.பார்த்தசாரதியின் பொன்விலங்கும் மதுரையைத்தான் சுற்றியது.அருணன் ஒரு அரசியல் சித்தாந்தப் போராட்ட்த்தைக் கருப்பொருளாக-உள்ளடக்கமாக்க் கொண்டார்.ஒரு இனக்குழுவின் வாழ்முறையை சு.வெ. உள்ளடக்கமாகக் கொண்டார்.நா.பா.வோ தேசியப் பெருமிதம் பற்றிய ஒருவித ஈர்ப்பையும் பிளேட்டோனியப் புனிதக்காதலையும் உள்ளடக்கமாகக் கொண்டார்.களம் ஒன்றாக இருந்தாலும் உள்ளடக்கம் வேறு வேறாக அமைந்த்தால் இம்மூன்று நாவல்களின் விரிவும் பரப்பும் அளவும் வடிவமும் மொழியும் முற்றிலும் வேறு வேறாக அமைந்த்தை நாம் பார்க்க முடிகிறது.

தன் கதைகளின் உள்ளடக்கம்- அவற்றின் நோகம் குறித்துப் புதுமைப்பித்தனுக்கு இருந்த தெளிவுதான் அவரது விதவிதமான எழுத்து முயற்சிகளுக்கு- சோதனைகளுக்கு- அடிப்படையாக அமைந்தது எனலாம்.

“பொதுவாக என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் பண்ண உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல.பிற்கால நல்வாழ்வுக்குச் சௌகரியம் பண்ணி வைக்கும் இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடும் அல்ல.”

என்பார் அவர்.உள்ளடக்கம் மட்டுமல்ல எழுத்தாளனின் நோக்கமும் ஒரு படைப்பு எப்படி எழுதப்படுகிறது என்பதற்கு அடிப்படையாக அமையும் என்பதற்கு புதுமைப்பித்தன் ஒரு உதாரணம் எனலாம்.

ஆ.உருவம் அல்லது வடிவம்/அழகியல்

”தமிழில் இம்மாதிரி உரைநடை நவீனம் பொதுமக்களுக்குஇதுவரை அளிக்கப்படவில்லை.ஆகையால் இந்நூல் வாசகர்களுக்கு ரசமாகவும் போதனை நிறைந்ததாகவும் இருக்கலாம் எனப் பெருமை கொள்கிறேன்.இம்மாதிரிப் புதிய முயற்சியில் ஏதாவது குற்றங்குறைகள் இருப்பின் பொருத்தருளுமாறு பொதுமக்களை வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்”

மேற்கண்ட வரிகள் 1879ஆம் ஆண்டு வெளியான தமிழின் முதல் நாவலான பிரதாபமுதலியார் சரித்திரம் நூலுக்கு அதன் ஆசிரியர்(!) ச.வேதநாயகம் பிள்ளை.ரசமாகவும் போதனை நிறைந்ததாகவும் என்கிற இரண்டு வார்த்தைகளும் கூர்ந்து நோக்கத்தக்கவை.தெருக்கூத்தில் குற்றங்குறை இருந்தால் பொறுத்தருளக்கேட்கும் கூத்துக்கலைஞனைப்போல நாவல் என்கிற ஒரு புதிய உரைநடை இலக்கிய வடிவத்தை முதன் முதலாகக் கைக்கொள்ளும் எழுத்தாளன் பேசுகிறான்.

கவிஞனுக்கு அத்தகைய மனத்தடைகளோ தயக்கங்களோ இருப்பதில்லை.ஏனெனில் கவிதைக்கு மிக நீண்ட வரலாறும் ஏற்பும் இருக்கிறது.ஆதிப்புராதன சமூகங்களில் நிலவிய கூட்டு வாழ்க்கையிலேயே உழைப்புப் பாடல்கள் எனும் வடிவில் கவிதை பிறந்து விட்டது.இயற்கையை வேண்டியும் ஏவல்கொண்டு அடக்கியாளவும் அம்மக்கள் நடத்திய சடங்குகளில் உச்சாடஞ்செய்யப்பட்ட மந்திரங்களும் கவிதை வடிவில் அமைந்தன.ஆகவே கவிதைக்கு மந்திர சக்தி இருப்பதான நம்பிக்கை இன்றுவரை தொடர்கிறது.இசைபாடவும் வசைபாடவும் ஏற்றவராக்க் கவிஞர்களே கொள்ளப்பட்டனர் என்பார் கைலாசபதி.மார்க்சிய அறிஞர் காட்வெல் “ கவிதை கூட்டு மொழியின் வெளிப்பாடாகவும் பொதுமக்களின் உணர்ச்சி வெளிப்பாட்டின் வடிவமாகவும் அமைந்தது “ என்று குறிப்பிடுகிறார்.புதுக்கவிதை வந்தபோது இந்த இலக்கணமெல்லாம் அடிவாங்கியது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.தனி மனித உணர்ச்சியை மையமாகக் கொண்ட உரைநடை இலக்கியத்தின் கூறுகளை புதுக்கவிதை உள்வாங்கிப் பயணம் செய்தது.

நிற்க.

உருவம் என்பது கதை அல்லது கவிதை எப்படிச்சொல்லப்பட்டுள்ளது என்பதைப் பற்றியது.அஎன்ன சொல்கிறாய் என்பதை விட எப்படிச்சொல்கிறாய் என்பதுதான் முக்கியம் என வாதிடுவோர் எல்லாக்காலங்களிலும் இருப்பர்.நம்மைப்பொறுத்தவரை இரண்டும் சம முக்கியத்துவம் உடையவை.எதை நீ- எப்போது- எப்படிச்சொல்கிறாய் என்கிற மூன்றும் நமக்கு முக்கியம்.

ஒரு படைப்பின் உருவம் அல்லது வடிவம் பற்றிப் பேசுங்கால் “அடியின் சிறப்பே பாட்டெனப்படுமே”என்று தொல்காப்பியம் கூறுவதுபோல படைப்பின் உள் கட்டமைப்பு பற்றிப் பிரித்தும் விரித்தும் பேசியாக வேண்டும்.கதைக்கும் கவிதைக்கும் இது வேறு வேறாக அமையும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

1,மொழிநடை

2.உத்தி

3.பாத்திரப்படைப்பு

ஆகிய மூன்று கூறுகள் உருவத்தின் அடிப்படை அம்சங்களாகின்றன.

1.மொழிநடை

”எளிய பதங்கள்,எளிய நடை,எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம்,பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு,இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான்” என்கிற பாரதியின் முன்வைப்பில் உள்ள எளிமை ஒன்றை மட்டுமே பிடித்துக்கொண்டு நம் படைப்பு மொழி நின்றுவிடக்கூடாது.சுவை புதிது,பொருள் புதிது,சொல் புதிது என்றும் பாரதி சொன்னதையும் சேர்த்த்துக்கொள்ள வேண்டும்.நாம் எதைச் சொல்ல வருகிறோமோ யாருக்குச் சொல்லப்போகிறோமோ கதையில் எந்தக் கதாபாத்திரத்தின் வழியே அதைச் சொல்கிறோமோ அதற்கேற மொழி நடை அமைய வேண்டும்.இதுபற்றி ரகுநாதன் குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும் “ தமிழில் எழுதி வந்தவர்கள் காதலாயினும் கையறு நிலையாயினும் ஒரே மாதிரி நடையில் ஒரே மாதிரி வேகத்துடன் பாவத்துடன்தான் எழுதினார்கள்” இது சரியல்ல.சொல்ல வரும் உணர்ச்சிக்கும் மொழி உகந்ததாக இருக்க வேண்டும்.தனித்தமிழ், செந்தமிழ் நடை என்பதெல்லாம் படைப்பிலக்கியத்தில் கவைக்குதவாதவை எனக் காலம் நிராகரித்துவிட்ட்தை நாம் உணர வேண்டும்.

தலித் இலக்கியம் தமிழில் முன்னுக்கு வந்த காலத்தில் அதன் மொழி குறித்துத்தான் அதிகமான சர்ச்சைகள் எழுந்தன.தொல்காப்பியர் காலந்தொட்டே இவ்விவாதம் இருந்துள்ளது.

“சேரி மொழியாற் செவ்வதிற் கிளந்து

தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்

புலனென மொழிப் புலனுணர்ந்தோரே” என்பது செய்யுளியலில் தொல்காப்பியர் கூற்று.இவ்வரிகளுக்கு

பேராசிரியர் உரை இவ்விதம் அமைகிறது “ சேரி மொழி என்பது பாடி மாற்றங்கள்.அவற்றானே செவ்விதாகக் கூறி ஆராய்ந்து காணாமைப் பொருட்டொடரானே தொடுத்துச்செய்வது புலன் என்று சொல்வார் புலனுணர்ந்தோர் என்றவாறு அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச்செய்யுளாகிய வேண்டுறைச் செய்யுள் போல்வன வென்பது கண்டுகொள்க” அதாவது நாடகத்தில் கூற்றுக்குரியோர்க்கு ஏற்றவண்ணம் பேச்சு அமைதல் வேண்டும் என்கிறார்கள்.அதாவது பாத்திரங்களின் மொழியாக வரும்போது மக்கள் மொழி இருக்கலாம்.ஆசிரியர் கூற்றாக வரும்போது பொதுமொழி இருக்கட்டும் என்பதே இதன் பொருள்.ஆனால் இன்று மு.ஹரிருஷ்ணன் போன்றோர் முற்றிலும் அவர்தம் வட்டாரப் பேச்சுமொழியிலேயே இடக்கரடக்கல் ஏதுமின்றிக் கட்டற்ற காட்டாற்று வெள்ளம்போல எழுத்த்துவங்கியுள்ளனர்.அத்தகைய மொழிக்கு வரவேற்பும் விமர்சனமும் சேர்ந்தே வருவதையும் பார்க்கிறோம்.அது படைப்பாளியின் சுதந்திரம்தான் என்றபோதும் வாசகனுக்கு நெருக்கமான மொழி என்பதும் முக்கியம் அல்லவா?

“கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்புச் சாதனமாக மட்டும் வைத்துத் தாவிச்செல்லும் நடை ஒன்றை அமைத்துக்கொண்டேன்.நானாக எனக்கு வகுத்துக்கொண்ட பாதை.தமிழ்ப்பண்புக்கு முற்றிலும் புதிது” –இது புதுமைப்பித்தன்.

“சொல்லும் பொருளும் நெஞ்சில் கண்ணாமூச்சி ஆடுகின்றன.வரம்புகள் கடந்த விஷயங்களை எழுத்தில் பிடிக்க முயல்கையில் அவை நழுவுகின்றன.ஊடலாடுகின்றன.பாஷையே பரிபாஷையாக மாறுகின்றது”-இது லா.ச.ராமாமிருதம்.

”மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும்” என்பதும் “வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர் சுட்டு ஆகலான்” என்பதும் தொகாப்பிய பொருளதிகாரம்.அதாவது மரபு வழிக் கூறவில்லை எனில் பொருள் வேறுபடும் என்பதும் உயர்ந்தோர் கூறும் வழக்கால் மரபு தோன்றுகிறது.வழக்கை உருவாக்குவதும் செயல்படுத்துவதும் உயர்ந்தோரே என்பதும் இதன் விளக்கம்.

மொழியில் விழுத்திணை(உயர்குடி வழக்கு) என்றும் இழிசனர் வழக்கு என்றும் இரண்டாக இருந்து வந்த்தும் பக்தி இயக்ககாலம் வரை இழிசனர் வழக்கு எழுதா எழுத்தாகவே இலக்கியத்தில் இடமின்றிட் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்ட்தும் நம் மொழிவரலாற்றின் முக்கியமான பக்கங்கள்.

மேற்சொன்ன எல்லாவற்றையும் பகுத்தாய்ந்து பார்க்கையில் ஒரு படைப்பின் மொழி என்பது அலங்காரமாகப் படைப்பில் நான் இருக்கிறேன் பார்த்தாயா இல்லையா என்று துருத்திக்கொண்டு நில்லாமல் உள்ளடக்கத்திற்கும் நோக்கத்துக்கும் உணர்ச்சிக்கும் பொருத்தமானதாக வாசிப்புக்கு இடையூறாக நில்லாமல் அமைய வேண்டும்.ஈராயிரமாண்டுப் பாரம்பரியம் மிக்க நம் தமிழ் மொழியின் செறிவான சொற்களையும் இலக்கணத்தையும் இலக்கியங்களையும் கற்றுத்தேறாமல் அன்றாடப்புழக்கத்தில் உள்ள தேய்ந்துபோன அலுமினியப்பாத்திரங்கள் போன்ற குறைவான சொல்வளத்தைக் கொண்டே நம் படைப்பாளிகள் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விமர்சன-சுய விமர்சன-நோக்குடன் நாம் பார்க்க வேண்டும்.

இவ்வகையில் ரகுநாதன் –புதுமைப்பித்தன்- கு.அழகிரிசாமியின் பள்ளி (SCHOOL OF THOUGHT)மாணாக்கர்களாக நாம் இருப்பது நல்லது.க.நா.சு- மௌனி-சுந்தரராமசாமி என்கிற சொந்தப் பாரம்பரியமற்ற பள்ளி மட்டும் போதாது.மேனாட்டுக் கலைச்செல்வங்களுக்காக இவர்கள் பள்ளியில் நாம் அமர்வது அவசியம் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இடைக்காலத்தில் பின் நவீனத்துவ வாதிகளாகத் தம்மைக் காட்டிக்கொள்ள முயன்ற சிலரின் சொல் விளையாட்டுக்களில் நாம் வீழ்ந்துவிடக்கூடாது.லா.ச.ராவின் பரிபாஷை என்பதை சரியான அளவில் சரியான கோணத்தில் உள்வாங்க வேண்டும்.நீண்ட காலம் செய்யுளிலும் சூத்திரத்திலும் மந்திரத்திலும் பரிபாஷையாக முடங்கிக்கிடந்த மொழியை நடமாட வைக்க ’வழங்கும் வசன நடை’ ஒன்று வரப் பலகாலம் ஆனதை மறந்து விடக்கூடாது.அதே சமயம் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையிலான பரிபாஷையாக உயிர்ப்புள்ள படைப்பு திகழமுடியும் என்பதையும் நாம் புரிந்து ஏற்க வேண்டும்.

மரபுகளை மீறாமல் புதியது பிறக்காது.மரபை முழுதாக அறியாமல் அதை மீறவும் முடியாது.மொழியிலும் சொல்புதிது வேண்டுமெனில் மரபுமீறல்கள் தவிர்க்க முடியாது.ஆனால் அதன் அவசியம் அதன் அளவு அதன் எல்லை குறித்த தன்னுணர்வு தேவை.

மக்கள் மொழியான நாட்டுப்புற இலக்கியங்களிலிருந்தும் பண்டைய தமிழிலக்கிய மரபிலிருந்தும் நம் படைப்புக்கான மொழியைப் பெற வேண்டும்.நாட்டுப்புற இலக்கிய வடிவங்களான பாடல்கள்,கதைப்பாடல்கள்,விடுகதைகள்,சொலவடைகள்,பழமொழிகள் போன்ற எல்லாவற்றிலிருந்தும் நாம் வார்த்தைகளை உருவி எடுக்கப்பழக வேண்டும்.இடையறாத வாசிப்பின் மூலம் நம் மனதில் தேக்கி வைக்கும் சொற்சேகரத்திலிருந்து படைப்பு மனம் தேவையானவற்றை தேவையான நேரத்தில் எடுத்துக்கொள்ளும்.

கிள்ளிப்போட்டுக் கிட்ட நிக்கலாம்..அப்படி ஒரு இருட்டு..

அரிசின்னு அள்ளிப்பார்ப்பாரும் இல்லை உமின்னு ஊதிப்பார்ப்பாரும் இல்லை.

சாமியே சைக்கிள்ளே போகுது பூசாரி புல்லட் கேட்கிறாரு

போன்றவையும் நமக்குத்தேவை.காமம் செப்பாது கண்டது மொழிமோவும் நமக்குத் தேவை.

புதுக்கவிதை பிறந்த காலத்தில் அதன் முக்கிய அம்சங்கள் பற்றிச் பேசிய க.நா.சு.,

“1. வார்த்தைச் சேர்க்கைகள் காதில் ஒருதரம் ஒலித்து உள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்ப வேண்டும்.

2.முதலில் புரியாமலிருந்து படிக்கப் படிக்கப் புரியத்தொடங்குவதாக இருக்க வேண்டும்.

3.நள்ளிரவில் விழித்துக்கொள்ளும்போது திடுதிப்பென காரண காரியமேயில்லாமல் மனசில் தானே தோன்றிப் புது அர்த்தம் தரவேண்டும்.”

என்றார்.எழுத்தாளர் வாசகர் இருவருக்கும் பொதுவான அவரவர் மொழிக்கிடங்கிலிருந்துதான் பொது அர்த்தங்கள் கிடைக்கின்றன.கநாசு வின் பார்வை எப்போதும் முற்றிலும் ரசனை சார்ந்ததுதான்.ஆனால் இலக்கியத்துக்கு அது முக்கியம்.அது ஒரு முகம்.அவர் மேலே கூறும் அனுபவம் மொழியின் சாத்தியங்கள் சார்ந்த்து என்பதையே இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.முதலில் புரியாமல்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏதுமில்லை.இந்த வரி மொழி சார்ந்த்தல்ல கவிதையின் உள்ளடக்கம்/அர்த்தம் சார்ந்த்து எனக்கொள்ளலாம்.

சொல்லாலே விளக்கத் தெரியலே அதைச் சொல்லாமலும் இருக்க முடியலே என்று பட்டுக்கோட்டையார் காதலுக்குச் சொன்னதை நாம் படைப்பு மொழிக்கும் பொருத்திப்பார்க்கலாம்.சொல்லிலிருந்து சொல்ல முடியாமைக்கும் சொல்ல முடியாததை உணரச்செய்வதற்குமாக நமது சொற்கள் நகரவேண்டியிருக்கிறது. ஜிப்ஸி சிறுகதையில் மக்சீம் கார்க்கி “ என் காதலை வார்த்தைகளால் சொல்லமுடியவில்லை.அந்த வயலினைக்கொண்டுவா.அதில் வாசித்துக்காட்டுகிறேன்” என்று எழுதியிருப்பார்.மனக்குகை ஓவியங்களானாலும் எழுத்தாளன் அவற்றைத் தன் வார்த்தைகளால்தான் வரையவேண்டியிருக்கிறது.சொல்லைப் புதுப்பித்துப் புதுப்பித்து அதில் தன் உயிரையும் சக்தியையும் ஏற்றித் தீ என்று எழுதினால் தாளில் தீப்பிடிக்கும் நிலைக்குக் கொண்டுசேர்க்க வேண்டும்.

எனக்கு இப்படியான மொழிதான் கை வருகிறது நான் என்ன செய்யட்டும் என்று ஒரு நவீன படைப்பாளி சொல்ல முடியாது.பொதுவாக எழுதுபவர் எல்லோருமே ஒரு மத்தியதரவர்க்க மனோபாவத்தில்(பிறப்பால் அப்படி இல்லாவிட்டாலும்)தான் இயங்குகிறோம்.மொழி குறித்த மனத்தடைகளுக்கு இந்த வர்க்கநிலையும் ஒரு காரணம்.நம் தலைகளில் நீண்டகாலமாக ஏற்றப்பட்டிருக்கும் மொழி குறித்த புனிதம்-தீட்டு என்கிற கருத்துக்கள் நாம் படைப்பில் ஈடுபடும்போது வந்து நின்று வழிமறிக்கின்றன.மொழியைச் சுதந்திரமாகக் கையாளவே நாம் நம்மை கீழ்வர்க்கப்படுத்திக்கொள்ளவும் அ-சாதிப்படுத்திக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.

மௌனி,நகுலன்,கோணங்கி,ரமேஷ்-பிரேதன் போன்றோரின் மொழி வாசகப்பங்கேற்புக்கு எந்த வாசலையும் திறந்து வைக்காமல் நகர்வதாகும்.நவீன கவிதைகள் இதுபோல அசாதாரணமான வடிவ இறுக்கம் ,மொழிச்சிக்கனம்,படிம அடர்த்தி,உள்நோக்கிய பார்வை கொண்டு இயங்கியாக வேண்டும் என்பது நீண்டகாலமாக எழுதப்படாத விதியாக இருப்பதை நாம் காண்கிறோம்.முற்போக்குப் படைப்பாளிகளும் ஈழத்திலிருந்து வரும் படைப்புகளும் பெண் படைப்பாளிகளின் புதிய வரவும் தலித் எழுத்துக்களுமே இப்போக்கை சக்தியிழக்கச்செய்தன எனலாம். மொழியின் கட்டமைக்கப்பட்ட புனிதங்களை நவீன பெண் படைப்பாளிகள் தங்கள் ஆவேசமிக்க கவிதைகளால் உடைத்து நொறுக்கிவிட்டனர்-சில அதீதங்களும் இருந்தன என்றபோதும்.மொழியின் எல்லைகளையும் சாத்தியங்களையும் அவர்கள் விரிவாக்கமும் செய்துள்ளனர்.மிகசமீப காலமாக எழுத வந்துள்ள திருநங்கையரின் மொழி அவர்களின் ஈராயிரமாண்டுத் தனிமையையும் கேட்கப்படாத உடல்/மன வாதைகளையும் சுமக்க இயலாமல் திணறுவதைக் கான முடிகிறது.ப்ரியாபாபு அவர்களுக்கான பொதுமொழியில் பேசுகிறார் எனில் லிவிங் ஸ்மைல் வித்யா தனித்த வேதனையை மனச்சிதைவை கூர்மையான மொழியில் பேசுகிறார்.

புதிதாக எழுதத்துவங்கும் இளம் படைப்பாளி தலித்/பெண்/திருநங்கையர்/சிறுபான்மையினர் எழுத்துக்களைச் சுமக்கும் ’மொழிகளை’ வாசித்து உள்வாங்குவது அவசியம்.

இலக்கியம் மொழியின் சாத்தியக்கூறுகளால் ஆனதல்ல.மொழியின் ரூபத்தில் வாழ்வின் சாத்தியக்கூறுகளால் ஆனது என்பதை மட்டும் ஒருபோதும் நாம் மறந்துவிடலாகாது.

2.உத்தி

கதையின் முதல் வரி எப்படி அமைய வேண்டும்.முடிப்பு எப்படி இருக்க வேண்டும்.ஒரு நிகழ்வை எந்தக்கோணத்தில் நின்று பார்க்க வேண்டும்.எந்தக் கதாபாத்திரத்தின் பார்வையில் கதையைச் சொல்வது.நான் பேசுவதாகவே அமைப்பதா அவன் அவள் என்று போவதா அல்லது ரமேஷ்,சுசீலா என்று கதாபாத்திரங்களுக்குப் பேர் வைத்து நகர்த்துவதா.அல்லது மாடு பேசுவதாகவோ புளியமரம் அல்லது குளத்தங்கரை அரசமரம் பேசுவதுபோலவோ கதையைச் சொல்லுவதா, நனவோடை உத்தியா முற்றிலும் உரையாடலாகவே கொண்டு செல்வதா ,யாராக இருந்து கதையைச் சொல்லுவது– இது போன்ற பல நூறு சின்னச் சின்ன நுட்பங்களையே நாம் உத்தி என்ற பேரால் குறிக்கிறோம்.

தான் சொல்ல வந்ததை வாசகனுக்குக் கடத்த நினைத்த உணர்வை சரியாகக் கொண்டுசெல்ல படைப்பாளி கையாளும் கலைத் தந்திரங்களே உத்தி எனப்படும்.

வேலையற்ற இளைஞனின் மனநிலை பற்றிய கரையும் உருவங்கள் என்கிற தன் கதையை வண்ணநிலவன் ”அவன் தலையைக் குனிந்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான்” என்று துவக்கியிருப்பார்.சக்கிலியர் சமூகத்தின் வாழ்வைச்சொல்ல வந்த பூமணியின் பிறகு நாவல் “ ஏலேய் சக்கிலியத்தாயிளி மாடு பாருடா படப்புல மேயிறத..” என்று துவங்கும்.கம்யூனிஸ்ட் இயக்கத்தை லட்சியவெறி பிடித்த அகம்பாவமாகக் காட்டும் நோக்கத்துடன் எழுதப்பட்ட ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரல் நாவல் கைக்கொள்ளும் உத்தியும் மொழியும் நாம் கவனிக்கத்தக்கவை.ஒரு நாவலுக்குள்ளேயே சிறுகதைகள்,நாடகம்,கவிதைகள்,கடிதங்கள்,கட்டுரைகள்,நினைவுக்குறிப்புகள் என மொழியின் எல்லா வடிவங்களையும் கொண்டுவரும் உத்தி படைப்பாளிக்கு நிறையச் சுதந்திரத்தை வழங்குவதைக் காண்கிறோம்.

சுந்தரராமசாமியின் புளிய மரத்தின் கதை ஒரு உத்தி எனில் ஜேஜே சில குறிப்புகள் முற்றிலும் வேறான ஒரு உத்தியில் எழுதப்பட்டுள்ளது.ஜேஜே என்னும் கற்பனைப் பாத்திரத்தை நிஜம்போலும் படைத்து ஒரு புதிய வழியை அவர் படைப்புலகுக்குத் திறந்து விட்டார்.சமீபத்திய வரவான கீரனூர் ஜாகீர்ராஜாவின் வடக்கேமுறி அலிமா முற்றிலும் புதிய ஒரு உத்தியைக் கையாண்டுள்ளது.ஆதவன் தீட்சண்யாவின் லிபரல் பாளையத்துக்கதைகள் உலகமய காலத்தைப் படம் பிடிக்க மேற்கொள்ளப்பட்ட புதுவகை உத்தி எனக் கூறலாம்.கன்னட/மராட்டிய அனுபவங்களிலிருந்து உரம் பெற்று தமிழில் எழுதப்பட்ட கருக்கு,சிலுவைராஜ் சரித்திரம் போன்ற தன் வரலாற்று நாவல்கள் ஒரு புதுவகை உத்திதாம்.

இந்த உத்தி,வடிவம்,மொழி பற்றிய தன்னுணர்வு ஏதுமின்றிக் களங்கமில்லாத கிராமத்து மனதுடன் கதை சொன்ன கு.அழகிரிசாமி அந்தக் களங்கமற்ற படைப்பு மனதின் காரணமாகவே பல அற்புதமான படைப்புகளைத் தந்து நாம் மேலே பேசிய முறைமைகளுக்கெல்லாம் சவாலாக விளங்குகிறார்.நாட்டுப்புற மொழியுடன் ஒரு தத்துவப்பார்வையை இணைத்துப் படைத்த கி.ராஜநாராயணனும் இவ்வரிசையில் வைக்கத்தக்கவரே.

3.படைப்பு மனநிலை

எதைச் செய்வதற்கும் ஒரு மனசு வேண்டுமல்லவா? மனசில்லாமல் செய்யும் எதுவும் ஜெயிக்காது.கதை ,கவிதை எழுதவும் ஒரு மனசு வேணுமல்லவா? அதையே படைப்பு மனநிலை என்கிறோம்.ஒருமுறை தமுஎச அன்று நடத்திய நாவல் முகாமுக்கு வந்திருந்த எழுத்தாளர் அசோகமித்திரனிடம் படைப்பு மனநிலை பற்றி நம் தோழர்கள் கேட்டபோது அவர் சொன்ன பதில் : ”அப்படின்னு தனியா ஒண்ணும் இல்லை.இதுதான் என் வெளிப்பாட்டு வடிவம் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையும் தன் ஏற்பும் அழுத்தமான சமூக அக்கறையுமே படைப்பு மனநிலையாக வடிவெடுக்கும்”

அதெல்லாம் ஒரு இன்ஸ்டிங்க்ட்-ஒரு ஸ்பார்க்-எனச்சொல்லி உழைப்பால் வருவதல்ல படைப்பு மனநிலை என்று ஒதுக்கிச்செல்ல முயல்வார் உளர்.ஒரு துளிர்ப்பும் வெடிப்பும் படைப்புக்கு முக்கையம் என்பதில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை.ஆனால் ஒரு ஸ்பார்க்- மின்னல்கீற்று மட்டுமே படைப்பாக முடியாது.படைப்பை அது தூண்டலாம்.நன்கு பண்படுத்தப்பட்ட நிலம்போலத் தன் மனதை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கும் படைப்பாளியின் மனதில் இந்துத் துளி வீழும்போதுதான் படைப்பு கிளை பரப்பி விரிகிறது.

இந்தத் “தயார் நிலை” என்பது என்ன?

இடையறாத வாசிப்பும் எழுத்து முயற்சியும் இன்னொருவர் நிலைபாட்டிலிருந்து தன்னையும் இந்த வாழ்வையும் பார்க்கும் மனப்பயிற்சியும் பிறர் வலிகளைத் தன் வலியாக உணரும் பண்பாடும்தான் இந்தத் தயார்நிலையாகும்.நான் யார் என்ற கேள்விக்கு மனித குல வரலாற்றின் நெடும்பாதையில் இன்று வாழ நேர்ந்த மனிதன் நான் எனப்பதிலுரைக்கும் மனமே இந்தத்தயார் நிலை.அறிவால் இவ்வுலகின் போக்கையும் பிரபஞ்ச இயக்கத்தையும் புரிந்துகொள்ளும் அறிவு மேதமையும் படைப்பாக்க உந்துதலும் இணையும் புள்ளிதான் இந்தத் தயார் நிலை.

பொதுவாக தமிழ்ப்படைப்பாளிகள் மத்தியில் அறிவுக்கு எதிரான ஒரு மனநிலை நீண்ட காலம் இருந்து வந்தது.இக்கதையை இவர் தன் மனதால் எழுதவில்லை.மூளையால் எழுதிவிட்டார் என்பது போன்ற விமர்சனக்குரல்களை நாம் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.இந்த்ப்பார்வையின் பின் உள்ள அரசியல் எதுவெனில் கீழ்த்தட்டு மக்களின் வாழ்வைச் சொல்லி விடாமல் முற்றிலும் ஒரு மத்திய தர வர்க்க மனோபாவமான உள்முகப்பயணம்தான் இலக்கியத்தின் அடிப்படை என்று நிறுவும் அரசியல்தான்.

இன்னொரு புறம் இலக்கியம் எதையும் சொல்ல வேண்டியதில்லை என்கிற போக்கும் லட்சியவாதத்துக்கு எதிர்நிலையில் அறம் என்பதை வைத்து(இரண்டும் எதிரானவையா?) ஒருமுகப்பட்ட மனிதப்பயணம் சாத்தியமில்லை என்கிற போக்கும் வளர்ந்து வருகிறதைப் பார்க்கிறோம்.சுந்தர்ராமசாமி அவர்கலின் ஒரு வாசகத்தையே இதற்குப் பதிலாகக் கூறலாம்:

“ இலக்கியம் சங்கீதம் அல்ல என்பதாலேயே அர்த்தமும் தத்துவமும் அதன் உடன் பிறந்த சங்கடங்கள் .எனவே தத்துவத்தின் ஒரு சாயலில் ,திட்ட்த்தின் ஒரு நிலையில் நின்றே தொழிலைத் தொடங்க வேண்டியதாக இருக்கிறது.எனினும் கலைஞன்,சிருஷ்டி கருமத்தில் முன்னேறும்போது, மனசை ஏற்கனவே பற்றியிருக்கும்முடிவுகள்,தத்துவச்சாயல்கள் இவற்றைத்தாண்டி ,சத்திய வேட்கை ஒன்றையே உறுதுணையாகக் கொண்டதன் விளைவால்,கலை சத்திய வெறி பெற்று, குறுகிய வட்டங்களை ‘நிரூபிக்க’க் குறுகாமல்,அனுபவத்தின் நானாவிதமானதும் மாறுபட்டதும் முரண்பட்ட்துமான சித்திரங்களின் மெய்ப்பொருளை உணர்த்த வேண்டும்.நான் நம்பும் கலை இது”- உடன்படவும் முரண்படவுமான உள்ளடக்கத்தோடு வந்து விழுந்துள்ள வரிகள் இவை.இவ்வரிகள் குறித்து நிறைய ஒட்டியும் வெட்டியும் பேச முடியும்.இப்போதைக்கு இலக்கியம் சங்கீதம் அல்ல.அதற்கு அர்த்தமும் தத்துவமும் வேண்டும் – இருந்துதான் தீரும் என்றுதான் சுந்தரராமசாமி கூறியிருக்கிறார் என்று அடிக்கோடிட்டு விட்டுச் செல்வோம்.

வாழ்க்கை என்னும் பேராற்றிலிருந்து ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கான வடிவமான கதை,கவிதை,நாவல்,காவியம் என்னும் பாத்திரத்தில் துளி நீரை/ஒரு குவளை நீரை/ஒரு வாளி நீரை/ஒரு அண்டா நீரை வாசகருக்கு அள்ளி வருகிறான்.அந்தத் துளி நீரிலும்கூட –குவளை நீரிலும் கூட- அப்பேராற்றின் வரலாறும் வாசமும் ருசியும் தன்மையும் அறியத்தக்கதாக –உணரத்தக்கதாக-உட்கொள்ளத் தக்கதாக இருந்திட வேண்டும்.அதற்கு உதவும் விதமாக நீரைச் சேந்திக் கொண்டுவர உதவும் உருவும் உத்தியுமே நாம் எப்படி எழுதுவது என்பதைக் கற்பிக்கும்.

-ச.தமிழ்ச்செல்வன்

Sunday, February 19, 2012

காவல்கோட்டம்-தில்லித் தமிழ்ச்சங்கம் பாராட்டு

(எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான திருமிகு எம்.ஏ.சுசீலா அவர்கள் தானும் பங்கேற்ற அவ்விழா பற்றி எழுதிய பதிவு இங்கே)

.image தில்லியின் மூத்த பத்திரிகையாளரும் இதழாளருமான காலம் சென்ற
எழுத்தாளர் திரு ஏ ஆர் ராஜாமணி அவர்களது நினைவுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் முடிந்த பின்பு துவங்கியதாலும் புதன்கிழமை வேலை நாள் என்பதாலும் சாகித்திய அகாதமி விருது பெற்ற வெங்கடேசனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழா சற்றுத் தாமதமாகவே தொடங்கியது; என்றாலும் மனதுக்கு நிறைவளிக்கும் ஒரு விழாவாக அது அமைந்து விட்டதற்கு முதன்மைக் காரணம் அரங்கிலிருந்த பார்வையாளர்கள். வந்தவர்களின் எண்ணிக்கை குறைவுதான்; அவர்களிலும் நூலைப் படித்தவர்கள் இன்னும் கூடக் குறைவுதான் என்றபோதும் நாவல் பற்றிய உரைகளைக் கூட்டத்தினர் ஆர்வத்தோடு உள்வாங்கிக் கொண்டதும் நாவலைப் படிக்க வேண்டும் என்னும் ஆர்வத்தை இந்தக் கூட்டத்தின் மூலம் பெற்றதாக நிகழ்ச்சியின் இறுதியில் பகிர்ந்து கொண்டதும் மகிழ்ச்சியளித்தது.
பேச்சாளர்களின் உரைகளும் கூட,மேலெழுந்தவாரியான வெறும் பாராட்டுரைகளாகப் போய் விடாமல்,நாவலை ஒட்டிய பலவகையான தகவல்களை விரித்துரைப்பதாக அமைந்தது பொதுவாக இந்தவகையான கூட்டங்களில் அரிதாகவே வாய்க்கக் கூடிய ஒன்று.
திரு முத்து இருளன், நான், விஜய் ராஜ்மோகன் ஆகிய மூவரும் நாவல் குறித்த பலவகையான பார்வைகளை முன் வைத்த பிறகு மார்க்ஸிஸ்ட் கட்சியின் எம் பி திரு டி கே ரங்கராஜன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.அந்த உரை சற்று நாவலுக்கு வெளியில் சஞ்சரித்தாலும் கூடச் சூழலுக்குப் பொருத்தமானதாகவும் தமிழ் சாகித்திய அகாதமி உருவாக வேண்டும் என்பது போன்ற ஆக்க பூர்வமான யோசனைகளை முன் வைப்பதாகவுமே அமைந்திருந்தது.சாகித்திய அகாதமியின் தலைவராகப் பண்டித நேரு பொறுப்பேற்றிருந்தபோது அவர் போட்ட முதல் ஆணை தன் எந்தப் படைப்புக்கும் அந்தவிருது வழங்கப்படக் கூடாது என்பதுதான் என்னும் செய்தியை அவையில் அவர் பகிர்ந்து கொண்டபோது முந்தைய தலைவர்களின் நேர்மைத் திறனையும்,இன்றைய சூழலின் அவலத்தையும் ஒரு கணம் ஒப்பு நோக்கிப் பார்க்காமல் இருக்க இயலவில்லை.
நிகழ்ச்சியின் உச்சம் சு வெங்கடேசனின் ஏற்புரை. நாவல் உருவாக்கத்தில் தனது பத்தாண்டுக் காலஉழைப்பை - முயற்சியை தேடல்களை அவையில் விரிவாக முன் வைத்த அவர் தமிழ்நாட்டில் ஒரு எழுத்தாளனாக உருப்பெறுவதும்,அங்கீகாரம் பெறுவதும் அத்தனை எளிதான காரியம் ஒன்றும் இல்லை என்பதைத் தன் உரையில் நிறுவ முற்பட்டார்.
எங்கோ மூலையில் கிடைத்த ஒரு சிறு ஆவணம் நாவலுக்கான சிறு பொறியைத் தன் உள்ளத்தில் விதைத்ததையும், அதைத் துரத்தித் தேடிப் பிடிக்கச் செய்த முயற்சியே இத்தனை பக்க நாவலாக உருப்பெற்றதையும் விவரித்த அவர் இந்த நாவல் குறித்த சர்ச்சைகளும்,விவாதங்களும் பெருகப் பெருக இதைத் தேடிப் படிப்பவர்களின் எண்ணிக்கையும் கூடியது என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை. கி ராஜநாராயணனின் கோபல்ல கிராமம்[வாய்மொழிக் கதைகளை மட்டும் சார்ந்த இனக்குழு வரலாற்றுப் பதிவு], பிரபஞ்சனின் வானம் வசப்படும்[ஆனந்தரங்கம் பிள்ளையின் டயரிக் குறிப்புக்களை வரலாற்று நிகழ்வுகளாகக் காட்சிப்படுத்தல்] ஆகிய இரு நாவல்களும் வித்தியாசமான முறையில் இந்த நாவலை எழுதவும் அணுகவும் தனக்கு முன்னோடியாக இருந்தன என்பதைச் சுட்டிக் காட்டிய அவர் இந்த இரு அணுகு முறைகளையும் ஒருங்கிணைத்தபடி,தன் முன்னோடிகளின் தோள் மீது ஏறி அடுத்த கட்டத்தை நோக்கிய பயணத்தைத் தன் நாவலில் தொடர்ந்திருப்பதாகவும் விவரித்தார்.
இளம் வயதில் சாகித்திய அகாதமி பெறுபவர் என்னும் கருத்து தன்னைப் பற்றி முன் வைக்கப்படுவது பற்றிப் பேசுகையில் ஜெயகாந்தன் தனது 38ஆம் வயதில் ’சிலநேரங்களில் சில மனிதர்க’ளுக்கான விருதைப் பெற்றபோது இதை விடப் பலமான சர்ச்சைகள் எழுந்தததை நினைவு கூர்ந்தார். கேரளத்தில் 30 வயதுக்கு உட்பட்ட படைப்பாளிக்குக் கூட இந்த விருது கிடைத்து வருகையில் தமிழகத்தில் மட்டுமே வயது விருதுக்கு ஒரு பிரச்சினையாகக் கொள்ளப்படுவதை எடுத்துக் காட்டிய வெங்கடேசன், அந்த அடிப்படையிலேயே இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’ விருதுக்குத் தப்பிப் போன அவலத்தையும் சுட்டிக் காட்டினார்.கடந்த பத்தாண்டுக் காலத்தில் தமிழ்ப் புனைவுலகில் இளம் படைப்பாளிகளின் எண்ணிக்கையும்,எழுத்துத் தரமும் மிகச் சிறப்பாகத் துலங்குவதைப் பல சான்றுகளுடன் [ஜோ டி குரூஸின் ‘ஆழி சூழ் உலகு’,சு வேணுகோபாலின் ‘வெண்ணிலை’,ஃபிரான்சிஸ் கிருபா போன்றோரின் ஆக்கங்கள்] விவரித்த வெங்கடேசன் அந்த இளைஞர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான ஒரு குறியீடாகவே இந்த விருதைக் கொள்வதாகவும் -அதிலும் விருது தனக்கு என்பதை விடவும் ‘காவல் கோட்டம்’என்னும் படைப்புக்கு என்பதிலேயே தான் பெருமிதம் கொள்வதாகவும் கூறித் தன் உரையை நிறைவு செய்தார்.

Monday, January 9, 2012

நக்கீரன் அலுவலகத்தின் மீது தாக்குதல் தமுஎகச கண்டனம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

மாநிலக்குழு

11,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,மதுரை-625011

421,அண்ணாசாலை,தேனாம்பேட்டை,சென்னை-600018

நக்கீரன் அலுவலகத்தின் மீது தாக்குதல்

தமுஎகச கண்டனம்

முதல்வர் ஜெயல்லிதா அவர்கள் மீது அவதூறுச் செய்தி வெளியிட்ட்தாக்க் கூறி சென்னையில் உள்ள நக்கீரன் அலுவலகத்தை அதிமுக தொண்டர்கள் 300 பேர் திரண்டு சென்று தாக்கி அங்குள்ள பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கியுள்ளனர்.ஒரு சட்ட மன்ற உறுப்பினர் தலைமையில் இந்த அராஜகம் நிகழ்ந்துள்ளது.பத்திரிகையில் செய்தி வெளியிட்டால் அதன் மீது கருத்து மாறுபாடு இருக்கும் பட்சத்தில் சட்டபூர்வமாக வழக்குத்தொடுத்தோ பிரஸ் கவுன்சிலில் முறையிட்டோ எதிர்ப்பைத் தெரிவிக்க ஜனநாயகப் பூர்வ வழிகள் பல இருக்க அதையெல்லாம் கைவிட்டு இப்படி நேரடித் தாக்குதலில் ஆளும் கட்சியினரே இறங்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்கு உரியது.முதல்வர் அவர்களும் இச்செயலைக் கண்டனம் செய்யாத்து வருத்த்துக்குரியது. திருச்சியில் நக்கீரன் பத்திரிகையை எரித்தபோது அதிமுக தொண்டர் ஒருவர் தீக்காயத்துக்கு ஆளானதும் நடந்துள்ளது.இத்தகைய கருத்து சுதந்திரத்துக்கு எதிரான வன்முறைகளை தமுஎகச வன்மையாக்க் கண்டனம் செய்கிறது.

அதே சமயத்தில் பரபரப்பான வியாபாரத்துக்காக செய்திகளை வெளியிடுவதில் எந்த எல்லைக்கும் செல்ல்லாம் என்கிற நக்கீரனின் போக்கை ‘பத்திரிகை சுதந்திரம்’ என வரவேற்க முடியாது என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறோம்

ச.தமிழ்ச்செல்வன் சு.வெங்கடேசன்

மாநிலத்தலைவர் பொதுச்செயலாளர்

மேற்கண்ட செய்தியைத் தங்கள் இதழில்/வலைத்தளத்தில் வெளியிடுமாறு வேண்டுகிறோம்

சு.வெங்கடேசன்

9-1-2012

Wednesday, December 21, 2011

சாகித்ய அகாதமி விருது பெற்ற சு.வெங்கடேசனுக்கு தமுஎகச பாராட்டு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

மாநிலக்குழு

11,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,மதுரை-625001

பத்திரிகைச்செய்தி:21.12.2011

சாகித்ய அகாதமி விருது பெற்ற சு.வெங்கடேசனுக்கு தமுஎகச பாராட்டு

CHENNAI, 18/07/2010: Suvenkatesh. Photo:Handout_E_Mail

2011க்கான தமிழ் இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு அவர் எழுதிய காவல் கோட்டம் நாவலுக்காக வழங்கப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சியையும் பெருமித்தையும் ஒருசேர எமக்கு வழங்கியுள்ளது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளரான அவர் பெற்றுள்ள இவ்விருது எம் அமைப்புக்கே கிடைத்த விருதாக எமது இயக்கத்தின் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களும் பெருமையுடன் கொண்டாடுகிறார்கள்.

தமிழ் நாவல் வரலாற்றில் அழுத்தமான தடம் பதித்த காவல் கோட்டம் நாவலுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது இன்னும் சிறப்பான செய்தியாகும்.அறுநூறு ஆண்டுகால மதுரையின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு கி.பி.1300லிருந்து 1900 வரையிலான காலத்தின் கதையை அரசியல், சமூகவியல்,இன வரைவியல் கண்ணோட்டத்துடன் இந்நாவல் பேசுகிறது.வரலாறும் புனைவும் பிரித்தறிய முடியாதபடிக்குப் பின்னிச்செல்லும் நுட்பமான அழகியலோடு இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது.தாதனூர் என்னும் சிறு கிராமத்து மக்களின் களவும் காவலுமான வாழ்வினூடாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதுரையைக் கைப்பற்றுவதில் துவங்கி ரேகைச்சட்டத்தால் களப்பலியாகும் ஒரு மக்கள் குழுவின் வரலாறாகவும் இந்நாவல் விரிகிறது.என்னதான் முயன்றாலும் ஆங்கிலேய மூளைகளால் கணித்திடவே முடியாத ஒரு எளிய ஆனால் வலுவான உள்ளூர் பண்பாட்டு வரலாற்றைப் பதிவு செய்வதாகவும் காவல் கோட்டம் அமைகிறது.ஏற்கனவே இருந்த பண்பாட்டை அழித்து புதிதாக எதையும் தராத ஆங்கில அரசு என்று கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்ட ஒரு வரலாற்று உண்மையின் கலாபூர்வமான வடிவமாகவே காவல் கோட்டம் நாவல் அமைந்துள்ளது.1050 பக்கங்களில் விரியும் ஒரு பெருங்கதையாக ஓர் உள்ளூர்வரலாறு சொல்லப்பட்டிருப்பது தமிழில் அரிதாக நடக்கும் படைப்பு முயற்சியாகும்.ஏழு ஆண்டுகால கடுமையான ஆய்வுகளையும் உழைப்பையும் உண்டு செறித்து எழுந்து நிற்கும் காவல் கோட்ட்த்துக்காக இவ்விருது வழங்கப்பட்டிருப்பது அந்த உழைப்புக்குக் கிடைத்த உரிய அங்கீகாரமாகவே தமுஎகச கருதுகிறது.

ஓட்டையிடாத புல்லாங்குழல்,பாசி வெளிச்சத்தில்,ஆதிப்புதிர் போன்ற தொகுப்புகளின் வழியே ஒரு நுட்பமான கவிஞராக வெளிப்பட்ட எழுத்தாளர் சு.வெங்கடேசன் தொடர்ந்து ஆட்சித்தமிழ்,கலாச்சாரத்தின் அரசியல்,கருப்பு கேட்கிறான் கிடா எங்கே,மதமாற்றத்தடைச்சட்டம்,சமயம் கடந்த உ.வே.சா போன்ற பல நூல்களால் ஓர் ஆழமிக்க ஆய்வாளராக முகம் காட்டினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக அவர் ஆற்றிவரும் களப்பணிகள் அவரது இன்னொரு முகம்.தன் ஆவேசமிக்க உரைகளின் மூலம் அணிகளை மன எழுச்சிகொள்ள வைப்பவர் சு.வெங்கடேசன்.

2011 செப்டம்பரில் விருதுநகரில் நடைபெற்ற தமுஎகசவின் மாநில மாநாட்டில் அவர் தமுஎகசவின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.இவ்வளவு இளம் வயதில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தமிழ்ப் படைப்பாளி என்கிற பெருமையையும் இதன்மூலம் அவர் பெறுகிறார்.

தமுஎகச படைப்பாளிகள் இன்னும் உற்சாகத்துடன் தம் படைப்பு முயற்சிகளில் ஈடுபட இவ்விருது தூண்டுதலாக அமையும்.தோழர் சு.வெங்கடேசனுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஆவிசேரக் கட்டியணைத்துத் தெரிவித்துக்கொள்கிறது.

அருணன்                          ச.தமிழ்ச்செல்வன்

கௌரவத்தலைவர்           மாநிலத்தலைவர்

2011க்கான தமுஎகச பரிசுகள்/விருதுகள் நூல்கள்/குறுந்தகடுகள் வரவேற்பு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

மாநிலக்குழு

சென்னை அலுவலகம்-421,அண்ணாசாலை,தேனாம்பேட்டை,சென்னை-600018

மதுரை அலுவலகம்-57-ஏ,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,மதுரை-625001

2011க்கான தமுஎகச பரிசுகள்/விருதுகள் நூல்கள்/குறுந்தகடுகள் வரவேற்பு

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக வழங்கப்படும் கீழ்க்கண்ட பரிசுகளுக்கான நூல்கள் /தகடுகள் வரவேற்கப்படுகின்றன.2011இல் அச்சாகி வெளியான நூல்கள் ஒவ்வொரு பரிசுக்கும் இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும்.குறும்பட ஆவணப்படங்களுக்கன பரிசுக்கும் 2011இல் வெளியான படங்களின் சிடி அல்லது டிவிடி இரு பிரதிகள் அனுப்ப வேண்டும்.எழுத்தாளர்/இயக்குநர் மற்றும் பதிப்பாளர்/பட்த்தயாரிப்பாளரின் முழு முகவரி தொலைபேசி எண்ணுடன் புத்தகங்களுடன்/தகடுகளுடன் எழுதி அனுப்பிட வேண்டுகிறோம்.அனுப்ப வேண்டிய முகவரி பொதுச்செயலாளர்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,11,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடம்,மதுரை-625001.செல்- 9442462888. வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 29-02.2012.

புத்தகம்/தகடுகளை திருப்பி அனுப்ப இயலாது.நடுவர் குழுக்களின் முடிவே இறுதியானது.

1.தோழர் கே.பி.பாலச்சந்தர் நினைவுப்பரிசு- சிறந்த நாவலுக்காக- ரூ.10000/-

2.புதுமைப்பித்தன் நினைவுப்பரிசு -சிறந்த சிறுகதை நூலுக்கு-ரூ 5000/-

3.குன்றக்குடி அடிகளார் நினைவுப்பரிசு-தமிழ் வளர்ச்சிக்கு உதவும் நூல்-ரூ.5000/-

4.அமரர் சேதுராமன் -அகிலா நினைவுப்பரிசு-சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கு ரூ 5000/-

5.தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனார் நினைவுப்பரிசு-சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு-ரூ 5000/-

6.அமரர் செல்வன் கார்க்கி நினைவுப்பரிசு- சிறந்த கவிதை நூலுக்கு-ரூ5000/-

7. தோழர் பா.இராமச்சந்திரன் நினைவு விருது-சிறந்த ஒரு குறும்படம் மற்றும் சிறந்த ஒரு ஆவணப்படத்துக்கு-தலா ரூ 5000/-

8.அமரர் சு.சமுத்திரம் நினைவுப்பரிசு -ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய படைப்பு ஒன்றுக்கு(கதை,கவிதை,நாவல்,ஆய்வு,கட்டுரை எதுவாகவும் இருக்கலாம்)- ரூ. 10000/-

9.தோழர் மு.சி.கருப்பையா பாரதி –ஆனந்த சரஸ்வதி சார்பாக நாட்டுப்புறக்கலைச்சுடர் பட்டமும் ரூ.10000 விருதும்-ஒரு மூத்த நாட்டுப்புறக்கலைஞருக்கு –பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட செய்தியை தங்கள் இதழில் வெளியிட அன்போடு வேண்டுகிறோம்.

சு.வெங்கடேசன்

பொதுச்செயலாளர்konangi pics 379

Wednesday, November 23, 2011

உயர்நீதிமன்றத்தில் தமுஎகச வழக்கு

 

  •  

    annaa library1
  • நூலக நிதியில் உருவான நூலகத்தை அரசு தன்னிச்சையாக மாற்ற முடியுமா? உயர்நீதிமன்றத்தில் தமுஎகச வழக்கு சென்னை, நவ.22- மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமாக அமைக்கப்பட உள்ள அறிவு சார் பூங்கா வளாகத்திற்குள், அனைத்துத் தரப்பினருக்குமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றுவது பொருத்தமான முடிவல்ல என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கூறியுள்ளது. நூலகத்திற்கென்றே மக்களிடம் வசூலிக்கப்பட்ட வரியில் கட்டப்பட்ட நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அதிமுக அரசு, நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி வளாகத்திற்கு இடம் மாற்ற முடிவு செய்திருப்பது தெரிந்ததே. அந்த வளாகத்தில் புதிதாக அறிவு சார் பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும், அங்கே இந்த நூலகம் அமைவதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அரசு அறிவித்திருந்தது. அமைச்சரவையின் இந்த முடிவை எதிர்த்து ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கான அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழக்குத் தொடுத்துள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன் சார்பில், வழக்கறிஞர் ச. செந்தில்நாதன் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். புதனன்று (நவ.23) இந்த வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வுக்குழு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மாற்ற முடியுமா? மாநகர நூலக ஆணைக்குழு நிதியில்தான் இந்த நூலகம் கட்டப்பட்டது. நூலகத்தைப் பராமரிக்க இயலவில்லை என்று ஆணைக்குழு முடிவெடுத்துச் சொன்னால்தான் அரசு வேறு முடிவு எடுக்க வேண்டுமேயன்றி, தானே நேரடியாக இந்த முடிவை எடுக்க இயலாது. மேலும், மக்களிடம் வசூலிக்கப்பட்ட நூலக வரியிலிருந்து கட்டப்பட்ட நூலகக்கட்டடம் ஆணைக்குழுவுக்கே சொந்தமானது. அதை அரசு வேறு நோக்கத்திற்குப் பயன்படுத்த முடியாது என்று சங்கத்தின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது. தற்போது நூலகம் அமைந்துள்ள பகுதியில் அதனால் எவ்விதமான இடையூறும் ஏற்படுவதாக எந்தத் தரப்பிலிருந்தும் புகார் வரவில்லை. இந்நிலையில் அரசு தன்னிச்சையாகவே இந்த முடிவை எடுத்துள்ளது. நிதிநிலை உரையில் சொல்லப்பட்டதா? அரசுத் தரப்பில், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை உரையிலேயே இதுபற்றிக் கூறப்பட்டிருப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆனால், சட்டமன்ற உரையில், ஒருங்கிணைந்த அறிவு சார் பூங்கா அமைப்பது குறித்துதான் சொல்லப்பட்டிருக்கிறதேயன்றி, அண்ணா நூற்றாண்டு நூலகம் அங்கே நிறுவப்படும் என்பது குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. அறிவு சார் பூங்கா மாணவர்களுக்காகவும் ஆசிரியர்களுக்காகவுமே அமைக்கப்பட உள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகமோ அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படுவது. அதை அந்த பூங்காவுக்கு மாற்றுவது பொருத்தமல்ல என்று சங்கத்தின் மனுவில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு எவ்விதமான கலந்தாலோசனையும் நடத்தவில்லை. பொதுமக்கள் கருத்துக்கூற வாய்ப்பு அளிக்கவில்லை. தற்போதைய நூலகக் கட்டடம் மருத்துவமனைக்குப் பயன்படுமா என்பது குறித்து, மருத்துவக் கட்டட வல்லுநர்களின் கருத்தையும் பெறவில்லை. ஆகவே அரசின் இந்த முடிவு நிதிநிலை அறிக்கைக்குப் பின்னர் எடுக்கப்பட்டதே என்பது தெளிவாகிறது என்றும் சங்கம் கூறியுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள பல்வேறு நவீன வசதிகள், ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தெரிவித்துள்ள தமுஎகச, இந்த வசதிகள் அனைத்தையும் புதிய இடத்திற்கு மாற்றுவது நடைமுறை சாத்தியமல்ல என்பதையும் குறிப்பிட்டுள்ளது. தமுஎகச வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை ஏற்கெனவே உள்ள வழக்குகளோடு இணைக்க ஆணையிட்டனர். மூன்று வார காலத்தில் இது விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    annaa library 2

annaa lib 3

Sunday, November 13, 2011

புத்தகங்களோடு தெருவில் ஆர்ப்பாட்டம்-தமுஎகச அறைகூவல்

 

நவம்பர் 16 மாலை 4 மணிக்கு சென்னை மெமோரியல் ஹால் முன்பாக அண்ணா நூற்றாண்டு நூலக இடமாற்ற முடிவை கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தளர் கலைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்.அனைத்துப்பகுதி எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள்,நூலகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள்,குழந்தைகள் என அனைவரையும் அழைக்கிறோம்.குழந்தைகளை அழைத்து வாருங்கள்.ஒவ்வொருவரும் கையில் ஒரு புத்தகத்தோடு வாருங்கள்.ஒரு கையில் புத்தகத்தை இறுகப்பற்றி மறு கையை முஷ்டி உயர்த்தி முழக்குவோம்.எங்கள் புத்தகங்களைப் பறிக்க ஆட்சியாளர்களை அனுமதியோம்.கவிஞர்கள் கவிதைகளோடு வாருங்கள்.ஆர்ப்பாட்ட முடிவில் புத்தகத்தை நெஞ்சோடு அணைத்து மறு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நூலகத்தைக் காக்க –இடைவிடாது போராட சபதம் ஏற்க இருக்கிறோம்.மெழுகுவர்த்தி அங்கே இருக்கும்.புத்தகங்களோடு அனைவரும் வாரீர்.அறிவுக்கு எதிரான அராஜகத்தை முறியடிக்க ஆர்ப்பரித்து எழுவோம்.தமுஎகச அழைக்கிறது வாரீர்.

ச.தமிழ்ச்செல்வன்,மாநிலத்தலைவர் சு.வெங்கடேசன்,பொதுச்செயலாளர்.

Saturday, October 22, 2011

‘‘எந்த ஆன்மிகவாதியாலும் தொட முடியாத எல்லையில் நிற்பவன் கம்யூனிஸ்ட்''

ச.தமிழ்ச்செல்வன் நேர்காணல் – 2011 அக் 30-த சண்டே இந்தியன் இதழில்

நேர்கண்டவர் : பேராச்சி கண்ணன்

ச. தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் THI_6313 சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக ஆறு ஆண்டுகள் பதவி வகித்தவர். தற்போது மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இருளும் ஒளியும், அரசியல் எனக்கு பிடிக்கும் உட்பட முப்பது நூல்களை வெளியிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருக்கும் இவர், தமிழகம் முழுவதும் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருப்பவர். தமுஎகச மற்றும் இடதுசாரிகளின் பங்களிப்புகள், முற்போக்கு எழுத்து உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பேராச்சி கண்ணனிடம் தெளிவாகப் பதிலளிக்கிறார்

தமிழின் நம்பிக்கை அளிக்கும் சிறுகதை எழுத்தாளராக அறிமுகமானவர் நீங்கள். பிறகு முற்றிலும் களச்செயல்பாட்டாளராக மாறிவிட்டீர்கள். ஏன் இந்தத் தேர்வு?

எல்லா மனிதர்களுக்குமே புறச்சூழல் தான் அகத்தூண்டுதலைத் தீர்மானிக் கிறது. என்னுடைய வாழ்க்கையில் புறச்சூழல் தூண்டுதல்தான் எழுதக் காரணமானது. எழுத்து முக்கியம்தான். ஆனால் அதைவிட களப்பணி முக்கியமானதாக இருக்கிறது. இது ஒரே நாளில் எடுத்த முடிவல்ல. எழுதிக் கொண்டே களப்பணி செய்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் களப்பணியே அதிகமாகிவிட்டது. படைப்பாளியின் நோக்கம் மக்களுக்குச் சொல்லவேண்டும் என்பதுதான். நாம் பார்த்த கண்டடைந்த வாழ்வனுபவங் களை சகமனிதர்களுக்குச் சொல்வது தானே எழுத்து. இருந்தும் கதை வழியாகச் சொல்வதைவிட, நேரடியாகச் சொல்வது உடனடி தேவை என்ற உணர்வு எனக்குள் தோன்றியது. மேலும் சுதந்தரத்திற்குப் பிறகு நடந்த மாபெரும் பண்பாட்டு இயக்கம் அறிவொளி இயக்கம். அப்படிப்பட்ட மக்கள் இயக்கம் அழைக்கும்போது வீட்டில் சும்மா இருக்கமுடியாது. அதனால் களப்பணிக்கு வந்தேன். இப்போது நேரமின்மையால் எழுத முடியவில்லை. ஆனால் நான்கு இரவுகள் கிடைத்தால் போதும் ஒரு சிறுகதை எழுதிவிடுவேன்.

தொடர்ந்து சிறுகதைகள் எழுதாமல் போனதில் வருத்தம் உண்டா?

கதை எழுத முடியவில்லையே என்ற வருத்தம் ஒவ்வொரு நாளும் எனக்குள் இருக்கிறது. நாம் யார் என்ற அடையாளம் இருக்கிறது. எனக்கு சிறுகதை எழுத்தாளர் என்ற அடையாளம் உள்ளது. ஆனால் நேரம் தான் போதுமானதாக இல்லை. இப்போது நிறைய பேர் எழுத வந்துள்ளனர். இது ரொம்ப மகிழ்ச்சியான விஷயம். ஆனால் மின்னணு ஊடகம் வந்த பிறகு மக்களின் வாசிப்புத்திறன் குறைந்துள்ளது. நல்ல நூல்களை வாசிக்கும் வாசகர்கள் குறைந்துவிட்டனர். இப்போது மேலோட்டமாக வாசிக்கும் மனநிலை வாசகர்களிடையே உள்ளது. இது ரிமோட் கண்ட்ரோல் மனநிலை. சுவாரசியமான சேனல் பார்க்கலாம்; இல்லையெனில் மாற்றிவிடலாம். ஆனால் அதேநிலையில் புத்தகங்களையும் மேற்கொள்ள முடியாது. உள்ளே போனால் படித்து தான் ஆகவேண்டும். அதற்கான காலம் எடுத்துதான் வாசிக்கவேண்டும். மேலும் தற்போது வெகுஜன இதழ்களில்கூட கதைக்கான இடம் என்பது இல்லாமல் போய்விட்டது. சில இதழ்களில் ஒரு பக்க கதை மட்டும் போடுகின்றனர். காரணம் சந்தையில் மதிப்பு இல்லை என்பதுதான். சீக்கிரம் சலிப்படைவது என்பது இன்றைய காலத்தின் மனநிலையாக இருக்கிறது.

ஒரு கலாச்சார இயக்கமாக தமுஎகசவின் செயல்பாடுகள், தமிழகத்துக்கு செய்திருக்கும் பங்களிப்புகள் பற்றிக் கூறுங்களேன்?

தமிழ்நாட்டில் ஏழே கால் கோடி பேர் உள்ளனர். அதில் சில லட்சம் பேர்களைத் தொடுபவர்களாக நாங்கள் இருக்கிறோம். தமுஎகச தமிழ்ச் சமூகத்தின் மனச்சாட்சி. அந்தந்த நேரத்தில் மனச்சாட்சி என்ன பேசுமோ அதை எழுத்தாளர்கள் பேச வேண்டும். எழுத்தாளர்கள் என்ன பேசவேண்டும் என்பதை தமுஎகச சொல்லிக் கொண்டே இருக்கிறது. உதாரணமாக விவசாயிகள் தற்கொலைகள் நடக்கும்போது, அதைப் பற்றி ஏன் பேசவில்லை என்று கேட்கிறோம். எந்த ஊடகமும் சாதாரண விவசாயிகள் பற்றியோ, தொழிலாளிகள் பற்றியோ பேசுவதில்லை. முதல் பக்கத்தில் அவர்களைப் பற்றிய முக்கியமான செய்திகூட போடுவதில்லை. நாங்கள் மக்களின் மனச்சாட்சியாக இருந்து அதைப்பற்றி பேசுகிறோம். அன்று 35 பேருடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்று 21 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்தளவு வளர்ச்சி உள்ளது. பங்களிப்பைப் பொறுத்தவரை கலை இலக்கிய இரவு என்ற பண்பாட்டுத் திருவிழாவை நடத்து கிறோம். அதன்மூலம் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருக்கும் திறன் வாய்ந்தவர்களை அந்த மேடையில் ஏற்றுவோம். அடுத்து தெரு சினிமா இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளோம். நல்ல திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றை தெருக்களில் போட்டுக் காண்பிப்பது. இதன் மூலம் மக்களின் சினிமா ரசனையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். அடுத்து நாட்டுப்புற ஆய்வுகள் இயக்கம் தொடங்கி யுள்ளோம். 1960&ல் ஜீவானந்தம் தலைமையில் பேராசிரியர் நா.வானமாமலை பொறுப்பில் நாட்டுப்புற இலக்கியங்களை, கலைகளை தொகுத்து வளர்த்தெடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அதில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. இவை எத்தனையோ மாவட்டங்களில் தொகுக்கப்படாமல் உள்ளன. விடுகதை, சொலவடை, நாட்டுப்புறக் கதைகள், பொருட்கள் சார்ந்த பண்பாடு என நிறைய பிரிவுகள் உள்ளன. இதில் எப்படி ஆய்வு செய்வது, தொகுப்பது என்பது பற்றி பயிற்சி கொடுத்துள்ளோம். அடுத்து உள்ளூர் வரலாறு எழுத பயிற்சி கொடுக்கிறோம். இதையெல்லாம் தமுஎகசவால் மட்டுமே செய்யமுடியும். நாட்டுப்புறக் கலைஞர்கள் வாரியம் கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டதற்கு தமுஎகசவின் போராட்டம்தான் காரணம்.

கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தை குறுக்கும் நெடுக்குமாய் பயணம் செய்து இருக்கிறீர்கள். தமிழகம் எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

தமிழகத்தில் இளைஞர்கள், இளம் பெண்கள் யாரும் சொந்த ஊர்களில் இல்லை. ஏனெனில் பிழைப்பிற்கு இங்கே வழியில்லை. பிழைப்புத் தேடி இடம் பெயர்ந்து அலைகின்றனர். நான் பார்த்த பெரிய துயரம் இது. அடுத்த துயரம் அழிக்கமுடியாத சாதிய உணர்வு. அது மக்களிடையே இறுகிப் போய் உள்ளது. சிறுபான்மையினராக இருக்கும் மக்களான அருந்ததியினர், அரவாணிகள் எல்லோரும் தங்கள் குரலை வலுவாக உயர்த்தி வெளிவந்துள்ளனர். மாற்றுத்திறனாளி கள் இன்று ஒருங்கிணைந்துள்ளனர். ஒடுக்கப்பட்ட அனைவரும் இன்று வெளிவந்துள்ளனர். அடுத்து அணி திரட்டப்பட்ட தொழிலாளர்கள் வர்க்கம் குறைந்துவிட்டது. தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்த முறையில் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற, இரக்கமற்ற, அறிவில்லாத நாற்கர சாலைகள் வந்துள்ளன. இதனால் கிராமங்கள் துண்டாகிக் கிடக்கின்றன. இதில் சாதாரண மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அடுத்து தமிழகத்தில் குடிப்பழக்கம் அதிகமாகியுள்ளது. தொழிலாளிகள், படைப்பாளிகள், இளைஞர்கள் என அனைவரும் போதைக்கு அடிமையாகியுள்ளனர். ஏனெனில் பிரச்னைகள் அதிகமாகி விட்டன. பிரச்னைகளைச் சமாளிக்க தெரியாமல் அல்லாடுகின்றனர். பொருளாதாரப் பிரச்னைகளை பண்பாட்டுத் தளத்தில் வைத்துத் தீர்க்க முயற்சி செய்கின்றனர். இதனால் அதிலிருந்து தப்பிக்க போதைக்கு அடிமையாவதும், கோவிலுக்குச் செல்வதும், சினிமாவிற்குச் சென்று மகிழ்ச்சியாக இருப்பதும் அதிகரித்துள்ளது.

அறிவொளி இயக்கத்தில் உங்கள் செயல்பாடுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் பணிகள் தமிழகத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?

அறிவொளி இயக்கம்தான் கல்வி என்பது முக்கியம் என்பதை மக்கள் மத்தியில் அழுத்தம் திருத்தமாக உணர்த்திய இயக்கம். அறிவொளி இயக்கத்திற்கு வந்தவர்கள் அனைவரும் படிக்காதவர்கள். முதியோர் கல்வி என்பது வேறு. அறிவொளி இயக்கம் என்பது வேறு. நாங்கள் 15 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களை மட்டுமே சேர்த்து நடத்தினோம். ஏனெனில் இவர்கள்தான் நாளைய பெற்றோர். இவர்கள் படிக்கமுடியவில்லை என்றாலும் அவர்களது குழந்தைகளின் கல்வியை உணர்த்தினோம். இதனால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை அதிகமானது. பள்ளிகளின் தேவையும் அதிகமானது. கல்வி குறித்து மக்களிடையே அக்கறை ஏற்பட்டது. பள்ளிகள் ஏன் இப்படி இருக்கின்றன என்ற கேள்வியையும் மக்களிடையே எழச் செய்தது. கல்விக்காக இன்று வீதிக்கு வந்து போராட்டம் நடத்தும் அளவிற்கு மக்கள் வந்ததற்கு அறிவொளி இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான் காரணம். இதனால் அரசும் பல திட்டங்களை வகுத்தது. தமிழகம் முழுவதும் கல்வி சம்பந்தமான நிறைய மாற்றங்கள் வந்தன.

தமிழகத்தில் ஒரு காலகட்டத்தில் இடதுசாரி இயக்கங்களுக்கு இருந்த செல்வாக்கு இப்போது இல்லாமல் போய்விட்டதே... என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?

இடதுசாரி இயக்கங்கள் இன்று நிறையவே வளர்ந்துள்ளார்கள். ஆனால் மற்ற கட்சிகள் அதைவிட வேகமாக வளர்ந்துள்ளன. காரணம் இடதுசாரிகள் உண்மையான, அடிப்படையான பொருளாதார மாற்றத்திற்குப் போராடி வந்தனர். ஆனால் மக்கள் பண்பாட்டு ரீதியாகப் பேசுபவர்கள் பக்கம் போய்க் கொண்டிருக்கின்றனர். பண்பாட்டு ரீதியான விஷயங்களில் இடதுசாரிகள் கவனம் செலுத்தினால்தான் வேகமாக முன்னேறமுடியும். திராவிட இயக்கம் மொழி சார்ந்து பேசி வளர்ந்தது. இன்று தலித் அமைப்புகள் ஓரளவு வளர்ந்துள்ளன. ஆனால் எந்த அமைப்பும் தலித் மக்களுக்கு நிலம் தேவை என்று பேசவில்லை. நிலம் கிடைத்தால்தான் முன்னேற முடியும் என்பது அடிப்படை உண்மை. அன்றிலிருந்து இன்றுவரை அவர்களுக்கு நிலம் வேண்டி போராடி வரும் ஒரே கட்சி இடதுசாரி இயக்கம் தான். ஆனால் தலித் மக்கள் தலித் அமைப்புகளுக்குப் பின்னால்தான் சென்றனர். காரணம் அன்றாடம் அவர்கள் அனுபவிக்கிற ஒடுக்குமுறையை அந்தக் குரல் வெளிப்படுத்தியது. அவர்கள் பொருளாதாரத்தைப் பேசவில்லை; உணர்ச்சிகளை மட்டுமே பேசினர். உணர்ச்சிகரமான மக்களாக இந்திய மக்கள் இருப்பதால் உண்மையான அரசியலைப் பேசும் இடதுசாரிகள் வளரவில்லை. இப்போதுதான் அவர்கள் பண்பாட்டுத் துறையில் கவனம் செலுத் தத் தொடங்கியுள்ளனர். சாதிய பிரச்னை யில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியை ஏற்படுத்தியுள்ளோம். உத்தபுரம் ஆரம்பித்து இதுவரை 25 சாதிய சுவர்களை இடித்துள்ளோம். கலை இலக்கியத் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இதனால் எதிர்காலத்தில் இடதுசாரிகள் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

அரசு விருதுகள் தேர்வுக்குழுவில் இடதுசாரிகள் இருந்துகொண்டு அமைப்பு சார்ந்த சராசரியான எழுத்தாளர்களுக்கு விருதுகளைத் தருகிறார்கள் என்ற விமர்சனம் உள்ளதே?

தேர்வுக்குழுவின் தகுதியைப் பொறுத்து விருதுகள் வழங்கப்படுகின்றன. பெயரை மட்டும் அறிவிக்காமல் எதற்காக கொடுக்கிறோம் என்பதை வெளிப்படையான விளக்கத்தோடு அறிவிக்கவேண்டும். அப்போதுதான் கேள்வி எழுப்ப முடியும். தமுஎகச ஆரம்பித்து 36 ஆண்டுகள் ஆகிறது. எங்கள் அமைப்பு சார்ந்து யாருக்கும் சாகித்ய அகாதெமி விருது கிடைத்ததில்லை. இடதுசாரி அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கும் கொடுத்ததில்லை. தமுஎகசவில் இருந்து முதல் முறையாக சாகித்ய அகாதெமி வாங்கியது மேலாண்மை பொன்னுச்சாமி மட்டும்தான்.

உ.ரா. வரதராஜனின் தற்கொலையை முன்வைத்து உங்கள் கட்சி ஒழுக்க வாதப் பிடியில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது பற்றி?

அவர் தற்கொலை செய்துகொண்டது ரொம்ப தவறான முடிவு. அவர் எனக்கு தனிப்பட்ட முறையில் முக்கியமான வழிகாட்டி. எனக்கு அந்தச் சம்பவம் மனரீதியாக அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அவர் செய்த தவறு உறுதியான பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியில் நடவடிக்கை என்பது திருந்துவதற்கு அளிக்கும் ஒரு வாய்ப்பு. அவரைக் கட்சியில் இருந்து நீக்கவில்லை. இருந்த பொறுப்பில் இருந்து அடுத்தகட்ட பொறுப்பிற்குப் போட்டனர். அதனைச் சரி செய்து திருத்திக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும். இதுமாதிரி நிறைய உதாரணங்கள் உள்ளன. சில விஷயங்களை நாம் ஏற்றுக்கொண்டுதான் வந்தோம். என்னுடைய நலனை பொதுநலன் மற்றும் கட்சியின் நலனிற்கு உட்படுத்துவேன். கட்சியின் நலனை மக்களின் நலனிற்கு உட்படுத்துவேன் என எழுதி கையெழுத்திட்டுதான் வந்துள்ளோம். இதனை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது. சும்மா கட்சியைத் திட்டுவதற்காக இதனைப் பயன்படுத்துகின்றனர். இந்த விஷயத்தை நாங்கள் ஒழுக்கரீதியாகப் பார்க்கவில்லை. இருந்தும் மக்கள் எங்களை எப்படி பார்க்கிறார்கள்? என்பது முக்கியம். மக்களிடையே கம்யூனிஸ்ட் பற்றி எதிர்பார்ப்பு உள்ளது. கம்யூனிஸ்ட் இப்படி இருக்கலாமா? என்றுதான் நினைப்பார்கள். எந்த மக்களுடன் வேலை செய்கிறோமோ அங்கே கம்யூனிஸ்ட் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழவேண்டும்.

ஒரு கம்யூனிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பொதுநலன்தான் முக்கியம் என்று இருக்கவேண்டும். அதாவது கம்யூனிஸ்ட் என்பவன்தான் வாழும் காலத்தில் மனித குலம் சேகரித்து வைத்துள்ள அத்தனை அறிவையும் உள்வாங்கவேண்டும். அறிவாளியாக, படைத்தளபதியாக இருக்கவேண்டும். உலகத்திலேயே மிகச் சிறந்த மனிதாபிமானியாகவும் சபலம், சலனம் இல்லாதவனாகவும் இருக்கவேண்டும். சுயஒழுக்கத்தை அவனே உருவாக்க வேண்டும். விமர்சனம், சுயவிமர்சனம் என்பதை கறாராக வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். சுற்றி நடப்பதை, இருப்பவர்களை, சமூகத்தை விமர்சனம் செய்ய வேண்டும். தன்னையும் சுயவிமர்சனப்படுத்திக் கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட்டாக வாழ்வது என்பது மனரீதியான விஷயம். மிகப்பெரிய ஞானிகளால் கூட ஒரு சரியான கம்யூனிஸ்ட் தோழரின் மனஇடத்திற்குப் போக முடியாது. எந்த ஆன்மிகவாதியாலும் தொட முடியாத எல்லையில் நிற்பவன் கம்யூனிஸ்ட். இவன் அடைகிற மனஉளைச்சல் யாரும் அடையமுடியாது. அடுத்தவர்களுக்காக அடி, உதை வாங்குவதில் ஏற்படும் சந்தோஷம் வேறு எதிலும் இல்லை என்று நினைப்பவர்களும் அவர்கள் தான்.

இராணுவப் பணி உங்கள் ஆளுமையில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றிக் கூறுங்கள்?

நான் இராணுவத்திற்குப் போகும்போது காந்தியவாதியாகப் போனேன். அந்த வாழ்க்கை என்னை மார்க்சியவாதியாக மாற்றியது. இந்த நாட்டின் சொத்து களை, மக்களைப் பாதுகாக்க தேச எல்லையில் இருந்து பணியாற்றுகிறோம். ஆனால் உண்மையில் கோடிக்கணக் கான மக்கள் சொத்தோ சுகமோ இல்லாமல்தான் வாழ்கின்றனர். பிறகு யார் சொத்தைப் பாதுகாக்க தேச எல்லையில் நிற்கிறோம் என்ற கேள்வி எழுந்தது. தேசம் என்பது மக்கள்; எல்லையல்ல. மக்களின் நல்வாழ்வு தான் தேசம். எல்லோருக்கும் நல்வாழ்வு கிடைக்க மக்களோடு இருந்துதான் போராட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதனால் ஐந்தரை ஆண்டு பணியை முடித்துக்கொண்டு அங்கிருந்து வந்துவிட்டேன்.

தாத்தா தொடங்கி சகோதரர்கள் வரை நாடகம், எழுத்து என்ற தொடர்பைக் கொண்ட குடும்பம் உங்களுடையது. உங்களுக்கும் கோணங்கிக்கும் முருகபூபதிக்கும் படைப்புரீதியாக உரையாடல்கள் நடக்குமா?

இதில் எங்கள் அப்பாவை விட்டுவிட்டீர்கள். அவரும் எழுத்தாளர் தான். இரண்டு நாவல், ஒரு சிறுகதை தொகுப்பு எழுதியுள்ளார். எல்லோருமே இலக்கியத் தொடர்பு உள்ள ஆட்கள் தான். இப்போது வீட்டில் நான்கு எழுத்தாளர்கள் உள்ளோம். நாங்கள் நாலு பேருமே நாலு திசையில் இருக்கிறோம். அவரவர் பாணியில் மக்களை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறோம்.

கோணங்கியின் கதைகள் புரியவில்லை என்று சொல்லப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

புரியாத தன்மை இருக்கிறது. ஆனால் அதுமட்டும்தான் இலக்கியம் என்று கோணங்கியின் எழுத்துகளை மட்டுமே படிப்பவர்கள் ஐநூறு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு அந்த எழுத்து முறை புரிகிறது; பிடித்திருக்கிறது. ஆனால் எனக்கு அதில் விமர்சனம் இருக்கிறது. அப்படி எழுத வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். ஓரளவு வாசிப்புள்ள மக்களுக்காவது அந்த எழுத்து புரிய வேண்டும். ஆனால் அவர்கள் (கோணங்கியும் முருகபூபதியும்)எது இலக்கியம் என்று நினைக்கிறார்களோ அப்படி எழுதுகிறார்கள். அதை சாதாரணமாக எழுதவில்லை. அதில் கடுமையான உழைப்பும் இருக்கிறது.அது அவர்களின் சுதந்திரம்.

இன்றைய உலகமயமாதல் சூழலில் தமிழகப் பின்னணியில் இடதுசாரிகளின் தேவையும் பங்களிப்பும் என்ன?

இடதுசாரிகள் இல்லை என்றால் மக்களை நூறு சதவிகிதம் அடிமையாக்கிவிடுவார்கள். ஒரு கட்டம் வரை குட்ட குட்ட குனிந்துகொண்டேதான் இருப்பார்கள் மக்கள். சுதந்தர காற்று தமிழகத்தில் இருப்பதற்கு கம்யூனிஸ்ட் மட்டும்தான் காரணம். இன்று வேலை செய்யும் அத்தனை பேருக்கும் சங்கம் என்ற ஒன்றை வைத்து குரலை உண்டாக் கியது கம்யூனிஸ்ட் கட்சிதான். இல்லை யென்றால் குரலே இல்லாமல் இந்தச் சமூகம் அடிமையாகியிருக்கும்

rd flag

Wednesday, October 13, 2010

இசை என்னும் துன்ப வெள்ளம்

M.B.S-1

 

 

 

 

இம்முறை சென்னையில் இருந்தபோது ஞாநி வீட்டின் பின்புறம் நடைபெறும் கேணி கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.அன்று இசை மேதை எம்.பி.சீனிவாசன் அவர்களின் பிறந்தநாள்.இசைக்கலைஞர் அகஸ்டின் பால் எளிமையாகவும் சுவைபடவும் சேர்ந்திசை பற்றியும் சிம்பொனி பற்றியும் இசையிடையிட்ட உரை நிகழ்த்தினார்.சிம்பொனியை நம் போன்ற பாமரரும் உணர்ந்து ரசிக்கத் தக்க விதமாக எடுத்துரைத்தார்.அவரைத்தொடர்ந்து அமரர் எம்.பி.சீனிவாசன் அவர்களால் உருவாக்கப்பட்ட யூத் காயர் எனப்படும் சேர்ந்திசைக்குழுவினர் சில பாடல்களைச் சேர்ந்திசைத்தனர்.பகத்சிங் பற்றிய ஈரோடு தமிழன்பன் பாடலிலும் தாலாட்டுப் பாடலிலும் என் மனம் கரைந்து கண்களில் வழிந்துகொண்டிருந்தது.

பொதுவாக எனக்கு இசைஞானம் என்பது அறவே கிடையாது.தெருப்புழுதி தின்றலையும் ஒழுங்கற்ற ஓர் அன்றாடம் லபிக்கப்பட்ட நாம் எப்போது இசைபட வாழப்போகிறோம் என்கிற ஏக்கம் மட்டுமே எந்நேரமும் மனசில் நிறைந்திருக்கும் இசையாக இருக்கிறது.வாழ்வின் அர்த்தம் அர்த்தமின்மை குறித்தான தர்க்கங்களையெல்லாம் துடைத்தழித்துப் பரவி மனசை நிறைப்பது இசை என்பதை வாழ்வின் சில தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்.

எங்கள் வீட்டில் தம்பிகள் கோணங்கியும் முருகபூபதியும் பெரிய இசை ரசிகர்களாக இருப்பது கண்டு பெருமையும் பொறாமையும் அடைவதுண்டு.தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் இசையில் பெரிய மன்னனாக இருந்திருக்கிறார்.கிட்டப்பாவும் சுந்தராம்பாளும் அவரிடம் இசை கற்றிருக்கிறார்கள் என்கிற தகவலைப் பலரிடம் சொல்லிப்பீத்துவதுண்டு. அவர் வாழ்ந்த நாகலாபுரம்-பள்ளிவாசல்பட்டி வீட்டில் ரேடியோ ரூம் என்று ஒன்று இருக்கும்.ஒரு மேசையில் அந்த பெரிய (மர்பி என்றுதான் ஞாபகம்) ரேடியோப்பெட்டி இருக்கும்.அந்த அறையில் தனியாக அமர்ந்து தாத்தா பாட்டுக்கள் கேட்பாராம்.முற்றிலும் கலைஞனாக வாழமுடிந்த தாத்தா எப்போதும் எட்டாத உயரத்திலேயே இருக்கிறார்.முருகபூபதிக்குத்தான் உண்மையில் தாத்தா அவர் என்று ஒரு வரி அவ்வப்போது என் மனசில் ஓடி மறைவதுண்டு-வலியுடன்.பிச்சைக்காரர்கள் அவருடைய பாடல்களைத் தெருக்களில் பாடிச் செல்வார்களாம். ஆகவே அவரை ‘பிச்சைக்கொரு பாஸ்கரதாஸ்’ என்று பெருமையாக விளிப்பார்களாம்.அம்மா சொல்லுவார்கள்.அந்தப் பிச்சை என்ற சொல்லோடு மட்டும்தான் நமக்குத் தொந்தம் உண்டு அவரது இசை/நாடகம் இவற்றின் வாரிசாக நாம் வாழவில்லை என்கிற மன அவஸ்தை எப்போதும் எனக்குண்டு.

கல்லூரி நாட்களில் இரவு நேரங்களில் வானொலிக்கடியில் மயங்கிக்கிடந்தது இசைக்காகவா , கலங்குகின்றான் அவளை நெஞ்சில் நிறுத்தி.... என்கிற வரிகளுக்காகவா என்று இப்போதும் பிரித்துச்சொல்லிவிட முடியாது.இதுவரையிலான வாழ்க்கையில் அதிகம் இசைகேட்டது கல்லூரி நாட்களின் இரவுகளிலும் ராணுவத்தில் பணியாற்றிய காலத்து இரவுகளிலும்தான்.ராணுவ முகாம்களில் இரவு நேரங்களில் தூரத்துச் சாலைகளிலிருந்து வரும் வாய்ப்பாட்டு ஓசை மனதில் சொல்லொணாத்துயரத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.பெரும்பாலும் பனிபடர்ந்த மலைச் சாலைகளில் நிலவொளியில் மிதமான போதையுடன் கூர்க்கா இளைஞர்கள் பாடியபடி செல்வார்கள்.மேரா ஜீவன் கோரா காகஸ்.. என்று மெல்லிதாக என் அறைக்குள் நுழையும் வரிகளைப் பின் தொடரும் மனம் நெடுநேரம் அதில் இற்று வீழ்ந்து கிடக்கும்.

சரி.அந்தக்கதையை விடுங்க.

எம்.பி.சீனிவாசன் ஒரு இடதுசாரியாக தோழர் ஜீவா போன்றவர்களால் கொண்டாடப்பட்ட கலைஞனாக உருவானவர்.கட்சிக்கூட்டங்களில் அவரோடு சேர்ந்து பாடிய தோழர் டேப் கார்க்கி எங்கள் மாவட்டத்தில் சிவகிரியில் எந்நேரமும் பீடி குடித்தபடி தீக்கதிர் விற்றுக்கொண்டும் பாடிக்கொண்டும் வாழ்ந்தார்.அன்று கம்யூனிஸ்ட் இயக்கம் கைக்கொண்டிருந்த முக்கியக் கலை வடிவமாக இசைப்பாடல்கள் இருந்தன.ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு டேப் கார்க்கி,டேப் காதர்,டேப் மாரிமுத்து என்று தோழர்கள் இருந்திருக்கிறார்கள். பேராசிரியர் நா.வானமாமலை அவர்களுக்கு நாட்டுப்புறப்பாடல்களைக் கிராமப்புறங்களில் சேகரித்து அனுப்பும் பணியையும் ஈடுபாட்டுடன் செய்தவர் டேப் கார்க்கி. கார்க்கி சேகரித்த சில பாடல்களைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டுவருவதற்காக அவரை நான் அடிக்கடி சந்தித்துக்கொண்டிருந்த அந்த நாட்களில் அவர் எம்.பி.சீனிவாசன் பற்றி பேசிக்கொண்டிருப்பார்.

நீண்ட காலத்துக்குப் பிறகு - 1979 அல்லது 80 ஆக இருக்கலாம்- நாங்கள் கோவை துடியலூரில் ஒரு இசைமுகாம் நடத்தினோம்.தோழர் கே.ஏ.குணசேகரனெல்லாம் அப்போது எங்களோடு இருந்தார்.அந்த முகாமுக்கு எம்.பி.சீனிவாசன் வந்து நான்கு நாட்களும் எங்களோடு இருந்தார்.அன்றைக்கு இயங்கிக்கொண்டிருந்த எங்கள் இசைக்குழுக்களையெல்லாம் அந்த முகாமுக்கு அழைத்திருந்தோம்.நான் அப்போதுதான் உருவாகியிருந்த எங்கள் கரிசல் குயில் இசைக்குழுவில் தொகுத்து வழங்கும் அறிவிப்பாளனாகவும் அவ்வப்போது ஆமா.. ஆமா..அப்படிப்போடு.. என்று சொல்கிற பின்பாட்டுக்காரனாகவும் குழுவோடு ஊரூராகச் சுற்றிக்கொண்டிருந்தேன்.ஆகவே நானும் அந்த இசை முகாமில் பங்கேற்கும் உரிமை பெற்றேன்.

முகாமில் பங்கேற்ற எங்கள் எல்லோரையும் (80 பேர் இருக்கும் ) பெஞ்சு மேலே ஏற்றி ஒரு சேர்ந்திசைக்குழுவாக்கி ,விடுதலைப்போரினில் வீழ்ந்த மலரே.., சர்வதேச கீதம், ஜெயபேரிகை கொட்டடா.. போன்ற ஒரு நான்கு பாடல்களை சேர்ந்திசையில் பாட எங்களுக்கு எம்.பி.சீனிவாசன் பயிற்சி அளித்தார்.நாலு நாளில் நாலு பாட்டு என்றால் அது எப்படித்தான் இருக்கும்.நாங்கள் அவருக்குப் பெரிய சவாலாக நான்கு நாட்களும் திகழ்ந்தோம்.அவ்வளவு பெரிய மேதை எப்படியோ எங்களை நான்காவது நாள் அவரது விரலசைவுக்குப் பாடுபவர்களாக மாற்றிவிட்டார்.கோவை சிறைச்சாலை அரங்கத்தில் மக்கள் முன் பாடினோம்.

இசை குறித்து அந்நாட்களில் அவர் எங்களோடு பேசியவை மறக்க முடியாத அனுபவம். விடுதலைப் போரினில்.. என்கிற இரு வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பது பற்றியே பல மணி நேரம் பேசினார். ‘ டு ’ என்கிற குற்றியலுகரம் எப்படி உச்சரிக்கப்பட வேண்டும் என்றும் ‘ ப் ’என்கிற எழுத்தில் வரும் புள்ளி உன் பாட்டில் துல்லியமாக ஒலிக்க வேண்டும் என்றும் அவர் சொன்னது இன்றுவரை என் பேச்சுக்கு உதவி வருகிற வார்த்தைகள்.கிடைமட்டமாக உருவாகி வளர்ந்த மக்கள் இசை செங்குத்தான சில தனித்திறன் படைத்த பாடகர்கள் என்கிற எட்டாப்பனை மரங்கள் உருவானபின் எவ்வாறு மக்களிடமிருந்து அந்நியமானது என்று இசையின் வரலாற்றை அவர் புதிய கோணத்தில் கற்றுத்தந்தார்.

எங்களில் யாருக்கும் முறையான சங்கீதம் கற்கும் வாய்ப்பு அன்று இருக்கவில்லை.கொஞ்சம் ஆஆ.. என்று இழுத்துப் பாட முயற்சிப்பவர் யாராக இருந்தாலும் பாடகர் என்று சொல்லிக் களத்தில் இறக்கி விடுவோம்.இயக்கத்தின் தேவையாகவும் சாத்தியமாகவும் அதுவே இருந்தது.எங்களுக்கு ஒண்ணுமே தெரியாமல் இருப்பது பற்றி வருத்தத்துடன் துயர் ததும்பிய குரலில் எம்.பி.சீனிவாசன் அந்த முகாமில் பேசிய வார்த்தைகள் என்றுமே மறக்க முடியாதவை :-

“ நான்தான் இருந்து உங்களுக்கெல்லாம் இசை கற்றுத்தந்திருக்க வேண்டும்.நான் அதை விட்டுட்டு எங்கெங்கோ சுற்றி விட்டு இப்போ திரும்பி வந்து பார்த்தால் என் வீடு இப்படிச் சிதைந்து கிடக்கிறதே..”

குடும்பத்தின் மூத்த பிள்ளை காணாமல் போய் ரொம்ப காலம் கழித்து வீடு திரும்பிப் பேசிய பேச்சாக அதை நான் உணர்ந்தேன்.அதற்கப்புறம் அவர் இயக்க இசைக்குழுக்களோடு நிறைய வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார்.ஆனால் காலம் அனுமதிக்கவில்லை.சீக்கிரமே அவர் மறைந்து விட்டார்.

கேணியிலிருந்து புறப்பட்டு அவர் குறித இந்த நினைவென்னும் துன்பக்கேணியில் ஒரு பாடலைப்போல அவரோகணமாக இறங்கிக்கொண்டிருந்தேன்.

Thursday, August 12, 2010

குடியாத்தம் போராட்டம்-தோழர்கள் கைது-15 நாள் சிறை

நேற்று இட்ட பதிவின் தொடர்ச்சியாக இன்று நடந்த போராட்டம் பற்றி...

gudi-1

வீடுகளிலிருந்து துரத்தப்பட்டு தெருவில் நிற்கும் மக்களை அழைத்துக்கொண்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர்.பி.சம்பத் ,மாநிலச்செய்லாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ்,மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ தோழர் லதா, வேலூர் மாவட்டச்செயலாளர் நாராயணன் போன்றோர் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேற ஊர்வலமாகப் போன போது இடையில் வழிமறித்த காவல்துறை ஆர்.டி.ஓ வும் வட்டாட்சியரும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பதாகவும் பேசித் தீர்க்கலாம் எனவும் தலைவர்களை அழைத்துச்சென்றனர்.

பேச்சு வார்த்தையில் தோழர்கள் அந்த நிலப்பகுதியை மறு நில அளவை (சர்வே) செய்து உண்மையை வெளிக்கொண்டுவர வலியுறுத்தியுள்ளனர்.முதலில் மறுத்துப் பின் கடைசியில் அதற்குச் சம்மதம் தெரிவித்து ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வட்டாட்சியர் அதில் கையொப்பம் இட்டு ஆர்.ட்.ஓ கையொப்பம் இடப்போகும் நேரத்தில் மேலிடத்திலிருந்து ஒரு தொலைபேசி வர ஒன்றும் சொல்லாமல் கொள்ளாமல் வட்டாட்சியரிம் பேசுங்கள் என்று சொல்லிவிட்டு ஆர்.டி.ஓ ‘தப்பி’விட்டார்.ஆர்டிஓ கையெழுத்துப் போடாமல் நான் என்ன செய்ய என்று வட்டாட்சியர் அம்மாவும் மறுத்துவிட தலைவர்களையும் அந்நேரவரை மணிக்கணக்காக நடுரோட்டில் வெயிலில் காத்திருந்த மக்களையும் கைது செய்வதாக காவல்துறை அறிவித்தது.15 நாள் ரிமாண்ட் செய்யப்பட்டுத் தோழர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் இன்னும் தெருவில்தான்.

தமிழ்ச்சினிமாக்களில்தான் இப்படி வில்லன்களுக்கு ஆதரவாக உச்சகட்டத்தில் மேலிடத்திலிருந்து தொலைபேசி வரும்.நிஜ வாழ்க்கையிலும் இன்று அப்படி நடந்துள்ளது காவல்துறை நண்பர்கள் சி.எம் ஆபீசிலிருந்தே அரெஸ்ட் பண்ணச்சொல்லி தகவல் வந்ததாகக் கூறுகிறார்கள்.பற்பல ஆண்டுகளாக வீடுகட்டி நன்கு வாழ்ந்து வந்த மக்கள் வீடுகளைவிட்டுத் துரத்தப்பட்டார்கள்.வடாட்சியர் அலுவலத்தை விட்டு இன்று துரத்தப்பட்டுள்ளனர்.பராசக்தி வசனம்போல மக்கள் ஓடினாள் ஓடினாள் என்று ஓடிக்கொண்டிருக்க மாட்டார்கள்.ஆளுக்கு 50 வீடும் பங்களாவும் என்று மாவட்ட வாரியாக ‘வாழ்ந்து’ கொண்டிருக்கும் உடன்பிறப்புகளின் குடியிருப்புகளுக்குள் வஞ்சிக்கப்பட்ட மக்கள் அணிதிரண்டு நுழைவார்கள் .காவல்துறை பலத்தோடும் கட்சிமாறி திமுகவுக்குள் வரும் இதுபோன்ற தாதாக்களின் தயவிலும் தேர்தலில் கவர் கொடுக்கும் அன்னன் அழகிரியின் ராஜதந்திரத்தை வைத்தும் ரொம்ப காலத்துக்கு வண்டியை ஓட்டிவிட முடியாது.மக்களைத் தெருவுக்குத் துரத்திவிட்டு வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டியாலும் அரிசியாலும் மட்டும் கொடியை நாட்டிவிட முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.

நியாயமான மக்கள் பிரச்னைகளுக்கான போராட்டங்களைக்கூட தன் மாசுமருவற்ற ஆட்சிக்கு எதிரான சதி என்றும் கலகம் என்றும் பீதியடையாமல் கலைஞர் தன் பகுத்தறிவின் பரப்புக்குள் நின்று இப்பிரச்னைகளை அணுகவேண்டியது காலத்தின் தேவையாகும்.

இன்றைய போராட்டக் காட்சிகள்:

gudi-1

gudiyaththam

gudi-2

gudi-3

Monday, July 19, 2010

சிதம்பரம் தெற்கு வாசல்-கருணாநிதி நக்கலும் தோழர் அருணனின் பொறுப்பான எதிர்வினையும்

(தீக்கதிர் நாளேட்டில் தோழர் அருணன்,தலைவர்,தமுஎகச எழுதிய கட்டுரை கீழே-இன்னும் சில கட்டுரைகளை அடுத்தடுத்து வெளியிடுவோம்.கொலையை ஜோதியில் குளித்தான் என்று மறைத்த அந்தணர்கள் சார்பாக தினமலர் வெளியிட்ட கட்டுரையில் வந்துள்ள செய்திகள் நாம் ஏற்கனவே அறிந்த ‘கதைகள்’தாம் .அதைப்படித்துவிட்டு சில நண்பர்கள் பதட்டமடைந்து பின்னூட்டம் அனுப்பியுள்ளனர்.தெற்கு வாசல் என்ற ஒன்றே இல்லை என்று ஒரே போடாகப் போட்டுள்ளனர்.நம் பயணம் தொடரும்)

சிதம்பரம் நடராஜர் கோவிலின் தென்புற வாசலைத் திறந்துவிடச் சொல்லி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் அங்கு நடைபெற்ற எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை தொலைக்காட்சி மூலம் கண்டபோது மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்று அந்தச்சுவரைப் பார்த்து ஆவேசப் பெருமூச்சு விட்ட வர்களில் நானும் ஒருவன்.
சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் வரும் நந்தன் கதையைப் படித்து விட்டு, அவன் வாழ்ந்த பகுதிகளை நேரில் சென்று பார்க்க ஆசைப்பட்டேன். அவன் பிறந்த மேற்கானாட்டு ஆதனூர் போனேன். அவன் வழிபட்ட திருப்புன்கூர் போனேன். அங்கே அவன் வெட்டிய குளத்தைப் பார்த்தேன். அங்கிருந்து சிதம்பரம் வந்தவன், நடராஜர் கோவிலின் தென்புற வாசல் வழியாக நுழைந்தேன். அங்கே அடுத்த பிரகாரத்தை சுவர் வைத்து அடைத்திருந்தார்கள்! நந்தன் நடந்த பாதை அந்த அளவில் மூடப்பட்டது! அவன் நடந்த பாதை வழியாக இப்போது நம்மால் நடராஜர் சன்னதிக்குப் போக முடியாது! ஏனென்றால் அன்று நந்தன் செய்தது மீறல்! வருணாசிரமவாதிகளின் தடையை மீறி அவன் நடத்திய கோவில் நுழைவு! ஆம், தமிழகத்தில் முதன்முதலாகக் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தியவன் நந்தனே!
இப்படிச் சொல்லும்போது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். அவனைத்தான் எரித்துவிட்டார்களே, அதற்குப்பிறகு அரூப வடிவில்தானே கோவிலுக்குள் நுழைந்தான். அது எப்படி மீறலாகும்? கோவில் நுழைவுப்போராகும்? புராணமயப்படுத்துதல் என்பது நடந்தவற்றை ஆதிக்கவாதிகள் தங்களது வசதிக்கு ஏற்ப அதீதப்புனைவு செய்வதாகும். அவர்கள் யதார்த்தத்தை அமானுஷ்ய கற்பிதத்தால் மூடிவைப்பார்கள். பகுத்தறிவு கொண்டு அந்த மூடியைத் திறந்து பார்த்தால்- அதாவது கட்டுடைத்துப் பார்த்தால்- யதார்த்தம் மீண்டும் வெளிப்படும்.
இன்றைக்குச் சுமார் ஆயிரத்துநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் சுந்தரர். இவர் பாடிய திருத்தொண்டத் தொகையில்தான் முதன்முதலாக நந்தன் பற்றிய குறிப்பு வருகிறது. செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன் என்கிற ஒற்றை வரி அது. இன்றைக்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி. இவர் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியில் நந்தன் பற்றி நான்கு வரிகள் உள்ளன. அதில்தான் அவன் பிறந்த ஊர் ஆதனூர் என்பதும், பிறந்த சாதி புலையர் என்பதும் வருகிறது.
இந்த ஐந்து வரிகளை வைத்துக் கொண்டு மட்டும் சேக்கிழார் அவ்வளவு விரிவாகப் புராணம் பாடியிருக்க முடியாது. நந்தனைப் பற்றிய நினைவுகளைச் சுமந்து நின்ற நாட்டுப்புற இலக்கியங்கள் மக்கள் மத்தியில் இருந்திருக்க வேண்டும். அவற்றைத்தான் புராணமயப்படுத்தியிருக்கிறார் சேக்கிழார். அப்படியும் நடந்த உண்மைகளை முழுசாய் மறைக்க முடியவில்லை.
கோவில் என்றாலே அந்தக்காலத்தில் சிதம்பரத்தைக் குறித்தது. அந்த அளவுக்கு சைவ சமயத்தவர் அதன் பெருமை பேசி வந்தார்கள். இதைக் கேள்விப்பட்ட நந்தனுக்கு சித்தமொடுத் திருத்தில்லைத் திருமன்று சென்று இறைஞ்ச ஆசை பிறந்தது என்கிறார் சேக்கிழார். அதாவது கோவிலுக்குள் சென்று திருமன்று தரிசிக்க - சன்னிதானத்தை தரிசிக்க- ஆசை பிறந்தது. ஆனால் அது கூடாத ஆசை, ஆகாத ஆசை. ஒன்றியனே தருதன்மை உறுகுலத்தோடு இசை வில்லை என்று அந்த ஆசை தனது குலத்திற்குப் பொருந்தாது என்று- அவனே நினைத்துக் கொண்டதாகவும் சேக்கிழார் கூறுகிறார்.
ஆசைக்கும் இயலாமைக்கும் இடையில் கிடந்து அல்லல்பட்டு, பின்னர் ஆசை மீறி நாளை போவேன் என்று தனக்குத்தானேயும், பிறரிடமும் சொல்லிக்கொள்வான். இதுவே அவனுக்குப் பட்டப்பெயராகிப் போனது. அந்தப் பெயராலேயே சுந்தரரும், நம்பியாண்டார் நம்பியும் அவனை அழைத்திருக்கிறார்கள். சேக்கிழாரும் அப்படியே சொல்லியிருக்கிறார்.இதிலிருந்து நந்தனின் நோக்கமும் திட்டமும் கோவிலுக்குள் நுழைவதாக இருந்தது என்பது நிச்சயமாகிறது.
ஒருநாள் ஆதனூரை விட்டுக் கிளம்பி சிதம்பரம் வந்து சேர்ந்தான். ஆனால் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. அவ்வளவு கட்டுத்திட்டம். என்ன செய்வது என்று அவன் யோசித்துக்கொண்டிருந்தான். இந்த இடத்தில்தான் சேக்கிழார் தனது அமானுஷ்ய கற்பிதத்தைச் சேர்க்கிறார். சிவபெருமானே நந்தனின் கனவில் வந்து இப்பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி முப்புரிநூல் மார்பருடன் முன் அணைவாய் என்றாராம். அவனது கனவில் மட்டுமல்ல தில்லை மூவாயிரவர் ஒவ்வொருவருடைய கனவிலும் போய்ச் சொன்னாராம். அவர்களும் வேறு வழியின்றி வெய்ய தழல் அமைத்து தந்தார்களாம். அந்தத் தீக்குண்டத்தில் நந்தன் இறங்கினானாம். பின்னர் இம்மாயப் பொய்தகையும் உரு ஒழித்துப் புண்ணியமாம் முனி வடிவாய் மெய்நிகழ் பெண்ணூல விளங்க மீண்டும் எழுந்தானாம்.
நல்லது. எழுந்தவன் என்ன ஆனான் அவனுக்கு கிடைத்த புது உருவத்தோடு கோவிலுக்குள் போனானா? போனான். நல்லது. அதற்குப் பிறகு என்ன ஆனான்? திரும்பி வந்தானா? சொந்த ஊர் திரும் பினானா? தனக்கு கிடைத்த சிதம்பர தரிசனம் பற்றி தன் மக்களுக்குச் சொன்னானா? ஆதனூரில் மகிழ்வோடு வாழ்ந்தானா? அதெல்லாம் தெரியாது. யாருக்கும் தெரியாது. சொன்னவர் யார்? சாட்சாத் சேக்கிழார்!
இந்த உச்சகட்டப் பாடலை நோக்குங்கள்- தில்லைவாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்திக்/கொல்லை மான் மறிக்கரத்தார் கோபுரத்தைத் தொழுதி இறைஞ்சி/தில்லைபோய் உட்புகுந்தார் உலகுய்ய நடமாடும்/எல்லையினைத் தலைப்பட்டார் யாவர்க்கும் கண்டிலரால் புது உருவெடுத்தவர் கோபுர தரிசனத்தோடு நிற்கவில்லை. நெல்லை போய் உட்புகுந்தார்-கோவிலுக்குள்ளேயே நுழைந்துவிட்டார். போனவர் உல குய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார் அதாவது நடராஜமூர்த்தியை அடைந்துவிட்டார். அதற்குப் பிறகு யாரும் அவரைக் கண்டிலர்!
விஷயம் தெளிவாகிறது. எரியுண்ட பிறகு ஒரு மனிதர் புதுவடிவம் எடுத்தார் என்பது அறிவுக்குப் பொருந்தாத விஷயம். உண்மையில் விஷயம் தலைகீழாக இருந்திருக்க வேண்டும். அதாவது, தீயில் புகுந்து வந்து கோவிலுக்குள் போகவில்லை. கோவிலுக்குள் தடாலடியாக நுழைந்ததால் தீக்குள் புகுத்தப்பட்டான் நந்தன். இதுவே நடந்திருக்கக் கூடியது. அதனால்தான் நந்தன் நடத்தியது கோவில் நுழைவுப்போராட்டம் என்கிறோம்.
தீண்டப்படாதோர் எனப்பட்டோர் இப்படி தர்மசாத்திர விதிமுறைகளை மீறினால் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அப்படிச் செய்யப்படலாம் என்று அந்த தர்ம சாதிரங்களே வகுத்துள்ளன. அப்படி நந்தன் எரித்துக் கொல்லப்பட்டிருந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. வருணாசிரமவாதிகள் காட்டிய ஒரே சலுகை அவனையும் நாயன்மார்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டதாகச் சொல்லி, புராணம் புனைந்து அந்த மக்களைச் சாந்தப்படுத்தியது.
இப்படி நந்தன் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்தது தென்புற வாசல் வழியாகத்தான். இதற்கு அசைக்க முடியாத ஆதாரம் பெரிய புராணத்திலேயே உள்ளது. நந்தனை எரியூட்ட தீக்குண்டம் - ஹோமக்குண்டம்- எங்கு அமைக்கப் பட்டது தெரியுமா? தென்திசையின் மதில்புறத்துப் பிறை உரிஞ்சும் திருவாயிலின் முன்னாக என்கிறார் சேக்கிழார். அதாவது, தென்திசையின் திருவாயில் முன்பாக! இப்போதும் ஓமக்குளம் எனப்படுவது கோவிலுக்குத் தென்திசையில்தான் உள்ளது!
இந்தத் தென்புற வாசலைத்தான் சுவர் எழுப்பி அடைத்துவிட்டார்கள் கோவில் நிர்வாகத்தார். இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? நந்தன் நுழைந்த வாசல் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? தீண்டாமை வெறியானது காலந்தோறும் எழுந்தும், தணிந்தும், எழுந்தும் வந்துள்ளது. ஆட்சி மாற்றங்கள், புதிய மதங்களின் வருகை என்று பல விதமான தாக்கங்களுக்கு மத்தியில் அது செயல்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அந்தத் தென்புற வாசல் திறந்துதான் இருந்தது. இன்னொரு கட்டத்தில் அது அடைக்கப்பட்டது. இப்போதும் கோவிலின் உள்புறம் அங்கே வாசல் இருந்ததற்கு அடையாளமாக ஒரு பெரிய மரக்கதவு உள்ளது. மரக்கதவுக்குள் கைவிட்டு தட்டிப்பார்த்தேன் தடுப்புச்சுவர் இருந்தது. சுவருக்கு எதற்கு மரக்கதவு? ஆக சுவர் இடையிலே எழுந்திருக்கிறது. தீண்டாமை வெறி அதிகமான ஒரு கட்டத்தில் எழுந்திருக்கிறது.
சிதம்பரம் நடராசர் கோவிலுக்குச் சற்றுத் தொலைவில் நந்தனுக்குத் தனிக்கோவில் இருக்கிறது. இதைக் கட்டியவர் சகஜானந்தர் என்கிற பஞ்சமர்குலத் தலைவர். இவர் காங்கிரஸ் இயக்கத்திலும் தீவிரமாக இருந்தவர். இந்தக் கோவிலுக்கு 1934ல் அடிக்கல் நாட்டியவர் யார் தெரியுமா? மகாத்மா காந்தி! அதற்கான கல்வெட்டு அங்கே உள்ளது.
இப்படித் தனிக்கோவில் எழுந்ததற்குக் காரணம் என்று அங்கிருந்த ஒரு பெரியவர் என்னிடம் சொன்னது - சிதம்பரம் நடராஜர் கோவிலின் தென்புறவாசல் அருகே நந்தனாருக்குச் சன்னதி உள்ளது. அங்கும் இப்படி நந்தனார், நடராஜர் சிவகாமியோடு காட்சியளிக்கிறார். ஒரு பஞ்சமர் குலத்தவருக்கு தனிச் சன்னதியா என்று அதைச் சுவர் வைத்து அடைத்துவிட்டார்கள். இது வெளிவாசலுக்கு ஏற்பட்ட கதி. இந்தச் சன்னதியின் உள்வாசல் கோவிலுக்குள் நடனசபைக்கு அருகே உள்ளது. அதையும் அடைத்து விட்டார்கள். மரக்கதவு போட்டுப் பூட்டி விட்டார்கள். இந்தக்கொடுமையை எதிர்த்தார் சகஜானந்தர். நந்தனார் சன்னதியைத் திறந்துவிடவேண்டும் என்று தில்லை மூவாயிரவராகிய தீட்சதர்களுடன் வாதாடினர். அவர்கள் கேட்கவில்லை. அதனால்தான் நந்தனார் தீப்புகுந்த ஓமக்குளத்துக்கு அருகே இப்படியொரு போட்டிக்கோவிலை உருவாக்கினார்.
கோவில் இப்போது தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் வந்துவிட்டது. தென்புற வாசலை அடைத்துக்கொண்டிருக்கும் அந்தச்சுவரைக் கலைஞர் அரசு அகற்ற வேண்டும். அது இரண்டு விஷயங்களைத் தீர்த்து வைக்கும். ஒன்று, நந்தன் நுழைந்த வாசல் என்கிற காரணத்தால்தான் அப்படிச்சுவர் வைத்து அடைக்கப்பட்டது என்று மக்கள் நெஞ்சில் காலங்காலமாக இருந்து வரும் காயம்-அந்தச் சரித்திர ரணம் ஆறிப்போகும். இரண்டு, அங்கே நந்தனுக்கு ஏற்கெனவே தனிச்சன்னதி இருக்குமேயானால் அதுவும் மக்களின் வழிபாட்டுக்கு வரும். கோவிலுக்குள்ளும் சமத்துவபுரம் உருவாகும்.
இப்படியொரு சமத்துவத்தை உருவாக்கத் தனது ஆட்சியில் வாய்ப்பு இருப்பதை உணர்ந்த அந்தச்சுவற்றை அகற்று வதற்குப் பதிலாக போராட்டக்காரர்களைக் கேலி செய்திருக்கிறார் முதல்வர் கலைஞர். நந்தனார் இருந்தாரா இல்லையா என்று பெரியாரைத்தான் கேட்க வேண்டும என்கிறார். பெரிய புராணத்தில் வரும் நாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், காரைக்காலம்மையார், தில்லைவாழ் அந்தணர்கள் எல்லாம் இருந்தார்களா, இல்லையா என்பது பற்றியும் இப்படிச் சந்தேகத்தைக் கிளப்புவாரா கலைஞர்? அவ்வளவுதான் சைவப் பண்டிதர்கள் இவரைப் பிடிபிடியென்று பிடித்துவிடுவார்கள். அவர்கள் எல்லாம் வாழ்ந்தது உண்மை என்றால், நந்தன் வாழ்ந்ததும் உண்மைதான். அதுமட்டுமல்ல, நந்தன் பிறந்த, நடமாடிய ஊர்கள் எல்லாம் அதே பெயரில் இப்போதும் உள்ளன. அந்தத் தில்லைவாழ் அந்தணர்களின் வாரிசுகள் என தீட்சதர்களும் இருக்கிறார்கள்.
நந்தன் சிதம்பரம் கோவிலுக்குள்ளேயே போகவில்லை என்கிறார் முதல்வர் கலைஞர். சேக்கிழாராவது புதிய உருவத்தில் உள்ளே போனான் என்று பாடியிருக்கிறார். சோழனின் அன்றைய முதலமைச்சராவது அந்த அளவுக்கு உண்மையை ஒப்புக்கொண்டார். தமிழகத்தின் இன்றைய முதலமைச்சரோ அவன் உள்ளே போகவேயில்லை என்று அடித்து விடுகிறார். உள்ளே போனான், அதனால்தான் தீட்டு என்று சொல்லி வாசலை அடைத்தார்கள் எனச் சொல்லுகிறவர்களைக் கிண்டலும் கேலியும் செய்திருக்கிறார். போனதைப் பார்த்தவர்கள் இல்லை என்கிறாரே, போகாததை உறுதி செய்ய இவர் மட்டும் என்ன அந்தக் காலத்தில் வாழ்ந்தவரா? தான் போகவில்லை என்று நேரே இவரிடம் வந்து வெற்றிலை பாக்கு வாங்கிப் போட்டுக் கொண்டு நந்தன் சொன்னானா? இப்படியெல்லாம் கேட்க நம்மாலும் முடியும் என்பதை முதல்வர் உணரவேண்டும்.
பெரியாரின் சீடர், அண்ணாவின் தம்பி என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் கலைஞர், வருணாசிரமவாதிகளின் வறட்டு வக்கீலாக மாறக்கூடாது. எந்தவொரு போராட்டத்தையும் அரசுக்கு எதிரானதாகப் பார்த்து எரிச்சல் அடையக்கூடாது. இது ஜனநாயக நாடு. பல கோரிக்கைகளும், அவற்றுக்கான போராட்டங்களும் எழத்தான் செய்யும். அவற்றின் நியாயத்தன்மை குறித்தே முதலில் யோசிக்க வேண்டும். அதுவே ஒரு ஆட்சியாளருக்கு அழகு.
நந்தன் பற்றி சேக்கிழார் பாடியதை கலைஞர் மீண்டும் படிக்கட்டும். அது பற்றிய புதிய ஆய்வுகளைத் தேடிப்பெறட்டும். அவரது கூட்டணியில் உள்ள திருமாவளவன் இந்தச்சுவரை அகற்றச் சொல்லி முன்பு போராட்டம் நடத்தினார். ஆகவே, அவரிடமும் இதுபற்றிக் கேட்கட்டும். போராட்டத்திற்கு ஆதரவாக விடுதலையில் தலையங்கம் வந்திருக்கிறது. அவர்களிடமும் கேட்கட்டும்.
இதை விடுத்து ஆத்திரப்பட்டு வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம். அதுவும் தாழ்த்தப்பட்டோரின் அந்நாளைய, இந்நாளையத் தலைவர்களைப் பற்றிப் பேசும் போது மேலும் நிதானம் வேண்டும். வருணாசிரமம் எனும் கொடூர சமூக ஆயுதத்தால் சித்ரவதைக்கு ஆளானவர்கள் அவர்கள். அந்த வலி இன்னும் இருக்கிறது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச வேண்டாம்.

Thursday, July 15, 2010

உத்தப்புரம் போராட்டம்-கருணாநிதி கடிதத்துக்கு தோழர் டி.கே.ரெங்கராஜன் பதிலடி

Today at 11:04pm

உத்தப்புரம் தலித் மக்களின் நியாயமான, நீண்டகாலமாக தீர்க்கப்படாத கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 12ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறை அத்துமீறி தடியடி தாண்டவத்தில் ஈடுபட்டது. பெண்களையும் கூட அடித்து நொறுக்கிய அவலக்காட்சி அரங்கேறியது.
இந்தக் கொடுமையை எப்படியாவது நியாயப்படுத்திவிட வேண்டும் என்று ஆளுங்கட்சி துடியாய் துடிக்கிறது. முதல் நாள் முரசொலியில் (14,7,2010) மார்க்சிஸ்ட் கட்சியின் அடாவடிப் போராட்டம் என்ற தலைப்பில் பெட்டிச் செய்தி யொன்று எழுதப்பட்டுள்ளது. மறுநாள் முரசொலி யில் (15.7.2010) முதல்வர் கலைஞர் உத்தப்புரம் உணர்த்தும் உண்மை என்ன? என்ற தலைப்பில் வினா-விடை பாணியில் எழுதியுள்ளார்.
உத்தப்புரம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமையேற்றவன் என்ற முறையில் தமிழ்நாட்டு மக்களுக்கு சில உண்மைகளை எடுத்துச் சொல்லவேண்டிய அவசியம் உள்ளது.
போராட்டத்தின்போது, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை. தமிழக அரசு திறந்துவிட்ட பொதுப்பாதையில் தலித்மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை குறித்து நாங்கள் எடுத்துச்சொன்னபோது, அங்கிருந்த அதிகாரிகளிடம் ஆட்சியர் கேட்டதற்கு, அது உண்மைதான் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர். அதேபோன்று, எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கியும் கூட நிழற்குடை கட்ட மாவட்ட நிர்வாகம் முன் வராதது குறித்தும், தலித்மக்கள் வசிக்கும் பகுதிக்குள் ஓடக்கூடிய ஊர் சாக்கடையை ஊருக்கு வெளியே திருப்பிவிட வேண்டும் என்ற கோரிக்கை குறித்தும், அரசு புறம்போக்கு பகுதியில் உள்ள அரசமரத்தில் பாரம்பரியமாக நடத்தப்பட்ட வழிபாட்டிற்கு தலித்மக்களை அனுமதிக்க வேண்டும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலித் மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை நாங்கள் எடுத்துரைத்தபோது, அதிலிருந்த நியாயங்களை ஆட்சியரின் அருகிலிருந்த அதிகாரிகள் ஒத்துக் கொண்டனர்.
அரசு திறந்துவிட்ட பொதுப்பாதையில் தலித்மக்கள் வாகனங்களில் சென்று வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகர் திரும்பத் திரும்ப கூறியபோது, இதில் உண்மையில்லை என்று உடன்வந்த தலைவர்கள் மறுத்தனர். இந்த நிலையில்தான் மாவட்ட ஆட்சியர் உத்தப்புரம் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று பார்த்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். உத்தப்புரத்திற்கு பல ஆட்சியர்கள் நேரடியாக வந்து பார்த்து நிழற்குடை அமைக்கவும், அரசமர வழிபாடு நடத்தவும், தலித் மக்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அறிவித்தனர். அது குறித்த கோப்புகளைப் பார்த்து நடவடிக்கை எடுங்கள் என்று கூறினோம்.
நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியதை ஒரு உறுதிமொழியாக எழுதிக்கொடுங்கள் என்று கேட்டோம். இதற்கு ஆட்சியர் மறுத்துவிட்டார். இவ்வாறு எழுதிக்கேட்டதைத்தான் ஏதோ மாபாதகச் செயலில் ஈடுபட்டு விட்டதாக முரசொலி ஏடு ஆத்திரப்பட்டு, அடாவடி என்று வர்ணித்துள்ளது. முதல் வரும் அன்று மாலைக்குள் கோரிக்கைகளை ஏற்று எழுத்துபூர்வமாக அனுமதி வழங்க வேண்டுமென்று பிடிவாதமாகக் கூறினர் என்று குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து மூலமாக எழுதித் தராவிட்டா லும் உங்களது வாக்குறுதியை வெளியே உள்ள பத்திரிகை மற்றும் தொலைக் காட்சி செய்தியாளர்களிடம் கூறுங்கள். உத்தப்புரம் தலித் மக்களுக்கு இதனால் நம்பிக்கை பிறக்கும் என்றும் கூறினோம். அதை மாவட்ட ஆட்சியர் முதல்வரிடம் தெரிவித்தாரா? இல்லையா? என்று தெரியவில்லை.
இது ஒருபுறமிருக்க, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரிடம் மாவட்ட ஆட்சியர் எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிப்பது என்பது எந்த வகையிலும் மரபுக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல. ஒரு மக்கள் பிரதிநிதி என்ற முறையில் மக்களுக்கு அளிக்கும் உறுதி மொழியே ஆகும் இது.
இங்கு ஒரு கடந்தகால வரலாற்று சம்பவத்தை நினைவூட்ட வேண்டியுள்ளது. 1967 தேர்தலில் திமுக வெற்றி பெற்று அண்ணா அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றார். டால்மியா சிமெண்ட் ஆலை உரிமையாளரான டால்மியா, ஆலை நிர்வாகி ராஜுவின் தொழிலாளர் விரோதப்போக்கைக் கண்டித்து ஆலைவாயில் அருகே மறைந்த தோழர் பி.ராமச்சந்திரன் தொடர்ந்து பத்து நாள் உண்ணாவிரதம் இருந்தார். அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு தொழிலாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். அப்போது, சங்கத்தின் தலைவராக இருந்த தோழர் ஆர். உமாநாத் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அவரது உடல்நிலையும் மோசமடைந்தது. அப்போது முதல்வராக இருந்த அண்ணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக இருந்த தோழர் பி.ராமமூர்த்திக்கு எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதினார். அதில், உமாநாத்தை உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளச் சொல்லுங்கள். பிரச்சனையை தீர்க்க நான் பொறுப்பேற்கிறேன் என்று அண்ணா அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த உறுதிமொழியின் அடிப்படையில் உமாநாத் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து டால்மியா சென்னைக்கு வந்து அண்ணாவை சந்திக்க முயன்றபோது அதற்கு அவர் மறுத்துவிட்டார். டால்மியாவுடன் பேச்சு நடத்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பி.ராமமூர்த்தி, திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. செழியன் ஆகியோர் கொண்ட குழுவை நியமித்தார். இந்தக்குழு டால்மியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், பிரச்சனை தீரவில்லை என்பது வேறு விஷயம்.
மிகுந்த ஞாபகசக்தி கொண்ட முதல்வர் கலைஞருக்கு இந்த சம்பவம் நிச்சயம் மறந்திருக்காது. எனவே எழுத்துப் பூர்வமாக உறுதிமொழி கேட்டது, யாரும் செய்யக்கூடாத குற்றம் என்பது போல கூறுவதுதான் வேடிக்கையாக உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த அனந்தநம்பியார், ஆர்.உமாநாத் ஆகியோரிடம் ஐஏஎஸ் அதிகாரிகள் மக்கள் பிரச்சனைகளுக்கான போராட்டத்தின் போது எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளித்து போராட்டம் முடிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு.
உத்தப்புரம் கிராமமக்கள் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், அங்கே ஒற்றுமை நிலவக்கூடாது என்ற எண்ணத்தோடு போராட்டம் நடத்துவதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அன்றைக்கு நடந்த போராட்டத்தில் உத்தப்புரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டும் 128 பேர் கலந்து கொண்டனர் என்பதுதான் உண்மை. கைது செய்யப்பட்டவர்களை நான் விடுவிக்குமாறு கூறினேன் என்று முதல்வர் கூறியுள்ளார். ஆனால் முதல்வர் இவ்வாறு காவல்துறைக்கு உத்தரவிடுவதற்கு முன்பு, கைதுசெய்யப்பட்டு தமுக்கம் மைதானத்தில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, திருச்சி சிறைக்கு அனுப்ப போலீசார் ஏற்பாடு செய்துகொண்டிருந்தனர். உத்தப்புரம் தலித் பெண்களிடம் நாம் அனைவரும் திருச்சி சிறைக்கு செல்வதற்கு தயாராக இருக்கவேண்டு மென்று கூறியபோது அவர்கள் யாரும் பயப்படவில்லை. மாறாக மகிழ்ச்சியடைந்தனர். தங்கள் காது மூக்குகளில் போட்டிருந்த சிறுசிறு நகைகளை கழற்றி வைத்துவிட்டு சிறைக்குச் செல்ல தயா ராக இருந்தனர். அந்த நிலையில்தான் கைதுசெய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
காவல்துறை கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியது உண்மை. பெண்களையும் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.சம்பத் மயங்கி விழும் அளவுக்கு காவல்துறையால் தாக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினர்கள் நன்மாறன், மகேந்திரன் ஆகியோரையும் போலீசார் வாகனத்திற்குள் தூக்கியெறிந்தனர். செங்குட்டுவன், நல்லதங்காள், கிருஷ்ணமூர்த்தி ஆகிய தோழர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். மேலும் பல தோழர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகிகளில் ஒருவரான எ.கே.பொன்னுத்தாய் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
உத்தப்புரத்தில் இதற்கு முன்னர் தலித் மக்கள் மீது காவல்துறை நடத்திய கொடூரத் தாக்குதல் தொடர்பாக மாதர் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்க விசாரணைக்குழு ஒன்றை உயர்நீதிமன்றம் நியமித்தது. தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை என்பதை கண்டறிந்த விசாரணைக்குழு, தாக்குதலின் தன்மைக்கேற்ப நிவாரணம் வழங்க உத்தரவிட்டது. தலித் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 15லட்சத்து 20ஆயிரத்து 900 நிவாரணம் வழங்கவேண்டுமென விசாரணைக்குழு சிபாரிசு செய்தது. இந்தத் தொகை அதிகமென அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. எனினும் இடைக்கால நிவாரணமாக இந்தத் தொகையை வழங்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் இதுவரை ரூ.10லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது.

"உத்தப்புரம் தலித் மக்கள் பிரச்சனையில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தலித் மக்கள் பிரச்சனையிலும் தமிழக காவல்துறையினர் ஒருவகையான சாதிய வன்மத்துடன்தான் நடந்துகொள்கின்றனர். அதுதான் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் நடந்தது"

முதல்வர் கூறுவது உண்மை என்றால், ஒற்றுமையாக வாழ்ந்த மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது ஏன்? ஒற்றுமையை குலைக்கவா?
உத்தப்புரம் தலித்மக்கள் பிரச்சனையில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தலித் மக்கள் பிரச்சனையிலும் தமிழக காவல் துறையினர் ஒருவகையான சாதிய வன்மத்துடன்தான் நடந்துகொள்கின்றனர். அதுதான் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜூலை 12 அன்றும் நடந்தது.
உத்தப்புரத்தில் திமுக அரசுதான் பொதுப்பாதையை திறந்துவிட்டது என்று முதல்வர் கூறுகிறார். உத்தப்புரத்தில் அந்த தீண்டாமைச்சுவர் 20 ஆண்டுகளாக இருந்துவந்தது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டத்திற்குப் பிறகுதான் அந்தச்சுவர் உலகின் கவனத்திற்கு வந்தது. மார்க்சிட் கம்யூனிட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் வருகைக்கு முதல்நாள் தான் சுவரின் ஒருபகுதி உடைக்கப்பட்டது. அந்தப்பாதையிலும் கூட இன்னமும் ஆக்கிரமிப்பு உள்ளது. டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது என்பதை மாவட்ட ஆட்சியரின் கூற்றை மேற்கோள் காட்டியதன் மூலம் முதல்வரே ஒப்புக்கொள்கிறார்.
அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்று ஆட்சி நடத்துவதாக கலைஞர் கூறியுள்ளார். டால்மியாபுரம் ஆலை பிரச்சனையில் அண்ணா காட்டிய அணுகுமுறையை உத்தப்புரம் விஷயத்தில் இன்றைய அரசு காட்ட மறுப்பது ஏன்? அன்றைக்கு அதிகாரிகள் அரசின் கொள்கைகளை செயல்படுத்துபவர்களாக இருந்தார்கள். இன்றைக்கு அதிகாரிகள் ஆளும் கட்சியின் மனநிலைக்கு ஏற்ப மாறுபவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் பிரச்சனை.
அவசர நிலை காலம் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு இந்திரா காந்தி தமிழகத்திற்கு வந்தார். அப்போது திமுகவின் சார்பில் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. அப்போது, இந்திரா காந்தியை கொல்ல திமுகவினர் முயன்றதாகவும், அடாவடிப் போராட்டம் நடத்துவதாகவும் காங்கிரசார் கூறினர். ஆனால், திமுகவுடன் அந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும் இணைந்து நின்றது. திருச்சியில் திமுக தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கத்துடன் சேர்த்து நானும் கைது செய்யப்பட்டேன். இதேபோன்று மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களும் கைதானார்கள். கல்லக்குடி போராட்டத்தின் போது கலைஞர் தண்டவாளத்தில் தலை வைத்த போது, அதை அடாவடி போராட்டம் என்று அன்று மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் விமர்சிக்கவில்லை.
இந்த ஆட்சிக்கு கெட்டபெயர் உண்டாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டு செயலாற்றுகிறது என்று முதல்வர் கூறியுள்ளார். மின்வெட்டு, பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசில் அங்கம் வகிப்பது மட்டுமின்றி அதை நியாயப்படுத்துவது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான, உள்நாட்டு தொழிலாளர்களுக்கு எதிரான அணுகுமுறை என திமுக அரசு தனது சொந்த முயற்சியிலேயே நிரம்ப கெட்ட பெயரை சம்பாதித்துள்ளது.
இப்போது கூட உத்தப்புரம் தலித்மக்களின் சுயமரியாதையை பாதிக்கும் தீண்டாமையை அப்பட்டமாக கடைப்பிடிக்கும் அத்துமீறலுக்கு முடிவுகட்டி இந்த அரசு நல்லபெயரை சம்பாதித்துக் கொள்ளட்டும். இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

நந்தன் நடந்த பாதை

thillai 1

பத்திரிகைச் செய்தி

சிதம்பரம் நடராசர் ஆலயத்திற்கு தலித் சமுகத்தின் நந்தன் சென்ற பாதையை மறைத்து அடைக்கப்பட்டுள்ள கதவைத் திறந்திடவும், தடுப்புச் சுவரை அகற்றிடவும் வலியுறுத்தி புதனன்று (ஜூலை 14) எழுச்சி மிகு போராட்டம் நடைபெற்றது. அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அரசமைப்பு சாசனத்திற்கு விரோதமாக ஆலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடைப்பை அகற்றுவதற்கு மாறாக, தமிழக அரசின் காவல்துறையினர் அந்தக் கதவை திறக்கக் கோரி போராடியவர்களைக் கைது செய்தனர். நந்தன் சென்ற பாதையில் தாங்களும் நடந்து சென்று இப்போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

மேற்கண்ட போராட்டத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிதான் நடத்தியது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் அம்முன்னணியின் உயிர்ப்புள்ள ஓர் அங்கம்.நானும் எமது அமைப்பைச் சேர்ந்த படைப்பாளிகள் பலரும் நேற்றைய (14.7.10) மறியலில் பங்கேற்றுக் கைதானோம்.

இன்று சில தொலைக்காட்சிகளில் அந்தப் பாதைக்கும் நந்தனுக்கும் தொடர்பில்லை.அது வேறு காலம் இது வேறு காலம் என்று வரலாற்று அறிஞர் என்ற பேரில் ஒரு பக்தர் பேட்டி கொடுப்பதைக் காட்டினார்கள். தமிழக அரசும் சிதம்பரம் ஆலயத்தில் ட்ய்ஹமிழக அரசு மேற்கொண்டுவரும் நல்ல காரியங்களைக் கெடுக்கவே இப்படிப் போராட்டங்கள் நடத்தப்படுவதாகக் கண்டனம் செய்துள்ளதாக அச்சேனல் (ஜீ தமிழ்)கூறியது. நல்லது.உத்தப்புரம் பிரச்னையில் அத்தனை தடியடி நடத்தியபிரகும் கம் என்று உட்கார்ந்திருக்கும் தமிழக அரசு தில்லைவாழ் அந்தணர்களுக்காகவேனும் வாய் திறந்திருப்பது வரவேற்கத்தக்கது.

சிதம்பரம் நடராசர் கோவில் கட்டப்பட்டது கி.பி.600 வாக்கில் இருக்கலாம்.நந்தன் வாழ்ந்ததும் திருப்புன்கூரில் அவர் சிவனைத் தரிசித்ததும்( சற்றே விலகி இரும் பிள்ளாய் என்று நந்திக்கு சிவன் ஆணையிட்டதும்) பின்னர் அத்தைரியத்தில் சிதம்பரம் கோவிலுக்குள் அவர் நுழைந்ததும் அங்கே அவர் தில்லைவாழ் அந்தணர்களால் தீயில் தள்ளி உயிரோடு எரிக்கப்பட்டதும் கி.பி.700 களில் நடந்தது.சிதம்பரம் கோவிலின் இன்றய கட்டட அமைப்பு பின்னர் குலோத்துங்க சோழன் மற்றும் பல குறுநில மன்னர்கள் செல்வந்தர்களால் கி.பி.1000த்தை ஒட்டி அல்லது அதற்கு முன் வெவ்வேறு கால கட்டங்களில் கட்டப்பட்டவை.ஒரே ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டவை அல்ல.நந்தன் வாழ்ந்த ஊர் ஆதனூர் அது சிதம்பரம் கோவிலின் தெற்கு வாசல் பக்கம்தான் இருக்கிறது. தெற்குவாசல் கட்டப்பட்டு அது பின்னர் ஏன் சுவர் வைத்து மறிக்கப்பட்டது என்பதற்கான சரியான சால்ஜாப்புகளை தில்லைவாழ் அந்தணர்களோ தமிழக அரசோ இதுவரை சொல்லவில்லை.உண்மையில் அது நந்தன் நடந்ததால் தீட்டான பாதை என்பதற்காகவே அடைக்கப்பட்டது.இது ஒரு lore – வழக்காறாகவும் மக்கள் மத்தியில் நம்பிக்கையாகப் புழங்குவது.எரித்துக்கொன்ற நந்தன் கொலை வழக்கை தானே தீயில் (ஓமக் குளத்தில்) (ஓமக்குளமும் கோவிலுக்குத் தெற்கேதான் இருக்கிறது) இறங்கி ஈசனின் ஆணைப்படி பறையன் என்னும் பிறப்பால் ஏற்பட்ட தீட்டை எரித்து பிராமணனாக புது அவதாரம் எடுத்துத் திருநாளைப்போவாராகக் கோவிலுக்குள் நுழைந்தார் என அந்தணர்கள் கதை கட்டி விட்டதைப் போல இப்பாதை குறித்தும் பல கதைகளை அந்தணர்கள் உலவ விட்டுள்ளனர்.அவையும் சில நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருப்பதால் இப்போது அவற்றையெல்லாம் இப்போராட்டக் காலத்தில் பலரும் ‘அவுத்து’ விடுகின்றனர். தெற்குவாசலும் கீழ வாசலும் குடமுழுக்கு நேரம் தவிர மற்ற நேரங்களில் பயன்பாட்டில் வைப்பதில்லை . ஆகவே தெற்குவாசல் மூடப்பட்டது என்று சில தீட்சிதர்கள் நேற்று எங்களிடம் கூறினர். அப்படியானால் கீழவாசல் ஏன் சுவர் வைத்து மறிக்கப்படவில்லை என்கிற கேள்விக்கு அவர்களிடம் பதிலில்லை.

thillai-3

மற்ற சைவக்கோவில்களைப்போல அல்லாமல் இக்கோவிலில் நடராசர் தெற்கே பார்த்த நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு நேராக இருக்க வேண்டிய நந்தியை அவரைப் பார்க்க விடாமல் சுவர் வைத்து மறைத்துள்ளனர்.இது சைவ ஆகம விதிகளுக்கே புறம்பானதாகும் என்று சைவ அறிஞர்கள் கூறுகின்றனர்.இப்படி ஆகம விதிகளையே புறக்கணித்துச் சுவர் எழுப்பியிருக்கிறார்கள் என்றால் சும்மா ஏப்பை சாப்பையான காரணங்களுக்காக அதைச் செய்திருக்க முடியாது.பாதை நந்தன் வருகையாலும் கொலையாலும் தீட்டுப்பட்டது என்கிற வலுவான காரணத்தாலேயே அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் துணிபு.

எல்லாவற்றையும் கணக்கில் கொண்டே தீண்டாமை ஒழிப்பு முன்னணி இப்பிரச்னையைக் கையில் எடுத்துள்ளது.நேற்று நடைபெற்ற போராட்டத்துக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது நானும் உடன் இருந்தேன்.கோவில் அதிகாரி எங்களிடம் உச்சநீதிமன்றம் மறு உத்தரவு வரும்வரை இக்கோவிலிலின் கட்டமைப்பில் எதையும் மாற்றக்கூடாது(புதிதாக எதையும் கட்டவும் கூடாது.இடிக்கவும் கூடாது) என்று தடை உத்தரவு பிறப்பித்திருப்பதால் இச்சுவரை இப்போது இடிக்க முடியாது என்றுதான் கூறினார்.உடனிருந்த கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார்,காவல்துறை அதிகாரிகள் எல்லோருமே இச்சுவர் ஏன் வந்தது என்பது எல்லோருக்குமே தெரியும் சார் நாங்க என்ன சார் செய்ய முடியும் கவர்மெண்ட்டுதானே முடிவு எடுக்கணும் என்றுதான் கூறினார்களே ஒழிய இது நந்தன் நடந்த பாதை என்பதற்காக அடைக்கப்படவில்லை என யாருமே கூறவில்லை.

இதே பிரச்னைக்காக முன்னர் தோழர் தொல்.திருமா தலைமையில் ஒரு போராட்டம் நடைபெற்றுள்ளது.அவருக்கு அந்தணர்கள் எதிர்சேவை செய்து அவருக்குப் பரிவட்டம் கட்டி உள்ளே அழைத்துச்சென்றபடியால் மனம் குளிர்ந்து போராட்டத்தைக் கைவிட்டார் என்று கேள்விப்பட்டோம்.இப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இதே பிரச்னைக்காக அடுத்த வாரம் களத்தில் இறங்குவதாக அறிவித்துள்ளது. எல்லாருமே முட்டாள்கள் அல்லர்.சரித்திர ஞானம் அற்றவர்களும் அல்லர்.எந்தப் போராட்டத்தையும் மாசு மருவற்ற தன் சாதனை ஆட்சிக்கு எதிரான கலகமாகவே பார்ப்பதை விடுத்து இன்னும் மிச்சம் மீதியிருக்கும் (இருப்பின்) தந்தை பெரியாரின் வாசனையில் கொஞ்சத்தையேனும் பயன்படுத்தி இச்சுவரை இடிப்பதற்கான வழிமுறைகளைத் தமிழக அரசு காண வேண்டும்.

thillai-2

13ஆம் தேதி தீக்கதிரில் வெளியான முழக்க வரிகளைக் கீழே தருகிறேன் :

நந்தன் அழைக்கிறான்

ச.தமிழ்ச்செல்வன்

நந்தன் அழைக்கிறான்

நானிலமே கிளர்ந்தெழுக !

பிறப்பின் தீட்டழிக்க

நெருப்பில் குளித்தெழுந்து

புறப்பட்டு வா எனவே

ஈசன் சொன்னான் எனக்

கட்டிவிட்ட கதைக்குள்ளே

எரிகின்றான் நந்தன் எரிகின்றான்.

அவன் உடலம் எரிந்து

எலும்புகள் தெறிக்கையில்

சிரித்துக் கைகொட்டிச்

சுற்றிநின்ற சாதியத்தின்

வேரறுத்து வீழ்த்திடவே

நந்தன் அழைக்கின்றான்

நானிலமே கிளர்ந்தெழுக.

அவன் நடந்து வந்த பாதை

நடராசன் கோவிலிலே

தீட்டுப் பட்டதெனச்

சுவரெழுப்பி மறித்தார்கள்.

நந்தன் மடிந்துவிட்டான்

நெருப்பிட்டுக் கொலை செய்த

அந்தணரும் மரித்து விட்டார்.

சுவர் இன்னும் நிற்கிறது -

சுற்றிவரும் போதெல்லாம்

சாதியால் தாழ்த்தப்பட்ட எம்

சரித்திரத்தை நினைவூட்டி.

அந்நினைவுகளின் வலி மறக்கத்

திமிர்ந்து நிற்கும் இச்சுவர் தகர்த்து

வரலாற்றை நேர் செய்ய வா.. .. ..

நெருப்புக்கு உள்ளிருந்து

கங்குகளில் சொல்லெடுத்து

நந்தன் அழைக்கின்றான்

நானிலமே கிளர்ந்தெழுக!

நாட்டு மக்கள் நீர் அருந்த

நாடெல்லாம் குளம் வெட்டிக்

கோயிலும் கோபுரமும்

உயர்ந்திடவே மண்சுமந்து

கட்டி முடித்த கோவில்

எட்டி உதைத்ததாலே

காயம்பட்ட இதயத்தின்

எரிகின்ற நெருப்பாக

நந்தன் அழைக்கின்றான்

நானிலமே கிளர்ந்தெழுக!

வரலாற்றைப் படைத்தவர்கள்

வரலாறாய் வாழ்ந்தவர்கள்

வரலாற்றின் பக்கங்களில் ஒரு

வரியிலும் இடம் பெறாதவர்கள்

அவ்வலியின் நினைவை மட்டும்

சுமந்தபடி வாழ்பவர்கள்

வலிகளின் நினைவுகளை

நித்தம் புதுப்பிக்கும் இச்

சிதம்பரத்துச் சுவர் தகர்த்துச்

சீர்படுத்த வேண்டுமெனச்

சாதியரால் சதித்துக் கொலையுண்ட

சரித்திர நாயகனாம்

நந்தன் அழைக்கின்றான்

நானிலமே கிளர்ந்தெழுக!

தில்லைவாழ் அந்தணர்கள்

தின்று செழித்திடவே

சொந்தக்கோவிலாகச்

சிதம்பரத்து நடராசன்

சிறைப்பட்டுக் கிடந்த காலம்

தேவாரம் திருவாசகம் எனச்

செந்தமிழும் சிறைப்பட்ட கொடுங்காலம்.

சாதிகாத்த அரசுகள்

சரிந்து வீழ்ந்தபின்னும்

சாதிக்கு எதிராகத் தமிழ்ச்சாதியை

எழுப்பி விட்ட காவிய நாயகனாம்

பெரியாரின் வழிநின்று

சமத்துவபுரம் எழுப்பும்

சனநாயக காலத்திலும் ஒரு

சாதிச்சுவர் இன்னும் நின்று சிரிப்பதா?

அரசின் கைகளில் கோவில் வந்தபின்னும்

அச்சுவர் மட்டும் இன்னும் அசையாமல் நிற்பதா?

நந்தன் கேட்கின்றான்

நானிலமே பதில் பேசு.