Showing posts with label பண்பாடு. Show all posts
Showing posts with label பண்பாடு. Show all posts

Friday, June 8, 2012

வழியெங்கும் புத்தகங்கள்

bk reading நான் ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் பள்ளிக்கு எதிரே ஒரு வாசக சாலை இருந்தது.அதில் சாணி மெழுகிய திண்ணையில் விரித்த ஓலைப்பாயில் தினசரிகள்,வார,மாத இதழ்கள் கிடக்கும்.பெரிய ஆட்கள் உட்கார்ந்து படித்துக்கொண்டிருப்பார்கள்.அப்போது பொடியன்களான நாங்கள் சிலர் அவ்வப்போது உள்ளே நுழைந்து எதையாவது வாசிப்போம்.பிறகு மணியடிக்கவும் ஓடிவிடுவோம்.அப்படி ஒருநாள் ஒரு வார இதழில் வாசித்த பெட்டிச்செய்தியில் , பகத்சிங்கைத் தூக்கு மேடைக்கு அழைத்த போது அவர் லெனின் எழுதிய ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார் என்றும் அதை முழுதாகப் படித்து முடிக்கும்வரை கால அவகாசம் கேட்டார் என்றும் படித்து முடித்ததும் மகிழ்ச்சியோடு தூக்கு மேடைக்குப் போனார் என்றும் எழுதியிருந்தது.பாருய்யா சாகப்போற நேரத்திலே கூடப் படிச்சிருக்கான்...அவன் மனுசனா.. நாம மனுசங்களா என்று பெரியவர்கள் ரெண்டுபேர் பேசிக்கொண்டதையும் கேட்டேன்.அந்த செய்தியும் பேச்சும் என் மனதில் ஆழப்பதிந்து விட்டது.

பின்னர் பெரியவனாகிக் கோவில்பட்டியில் கல்லூரியில் படித்த காலத்தில்(1970-71) பஸ் நிலையத்துக்கு எதிரே என்சிபிஹெச் புத்தகக் கண்காட்சி நடந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன்.சிவப்புப் புத்தகங்களின் அணிவகுப்பில் லெனின் எழுதிய புத்தகங்களைத் தேடிப்பார்த்துக்கொண்டிருந்தேன்.மேசை அருகே சேர் போட்டு அமர்ந்திருந்த வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை மனிதர் ஒருவர் என்ன புத்தகம் தேடுறே தம்பி என்று கேட்டார்.’பகத்சிங் சாவதற்கு முன்னால் படித்த லெனின் புத்தகம்’ என்று சொன்னேன்.உடனே அவர் ‘அரசும் புரட்சியும் ‘என்ற நூலை எடுத்துக்கொடுத்தார்.என்னை இன்றும் செதுக்கிக் கொண்டிருக்கும் புத்தகமாக அது இருக்கிறது.இதையும் சேர்த்துப்படி என்று அந்தச் சிவந்த மனிதர் ஏங்கல்ஸ் எழுதிய குடும்பம் ,தனிச்சொத்து,அரசு ஆகியற்றின் தோற்றம் என்கிற புத்தகத்தையும் அன்பளிப்பாக எனக்கு வழங்கினார்.அந்த இரண்டு புத்தகங்களும் நூற்றுக்கு மேற்பட்ட முறைகள் என்னால் மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்டு பைண்டிங் கிழிந்து தாள் தாளாக ஆகிவிட்டாலும் பொக்கிஷம் போலக் கையில் வைத்திருக்கிறேன்.அதே நூல்களின் வேறு இரு பிரதிகள் அப்புறம் வாங்கிவிட்டாலும் அந்தப் பெரியவர் கொடுத்ததுதான் என் புத்தகமாக என் வாசிப்புக்கான சொந்தப் பிரதியாக பிரியத்துடன் வைத்திருக்கிறேன்.அந்தப்பிரதி பேசுவது போல வேறு பிரதிகள் என்னோடு நெருங்கிப் பேச முடிவதில்லை.அந்தப் புத்தகங்களை எனக்கு எடுத்துக் கொடுத்த பெரியவர் பெயர் எஸ்.எஸ்.தியாகராஜன் என்பதும் அவர் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்பதும் அவர் என் சித்தப்பாவின் நண்பர் என்பதும் பின்னர் அறிய நேர்ந்த கூடுதல் தகவல்கள்.

அரசு என்பது காலம் காலமாக எப்போதும் இருந்து கொண்டிருக்கும் ஒன்று- அது எல்லா மக்களுக்கும் பொதுவான ஒரு நிர்வாக ஏற்பாடு மட்டும்தான் என்கிற என் பொதுப்புத்தியை வெடிகொண்டு தகர்த்தன இவ்விரு புத்தகங்களும்.தீர்க்க முடியாத வர்க்கப்பகைமையின் விளவுதான் அரசு.தனிச்சொத்தைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையின் பெயர்தான் அரசு என்பதும் வரலாற்றில் தனிச்சொத்து தோன்றுவதற்கு முன்னால் அரசு என்கிற வன்முறைக்கருவி இருந்திருக்கவில்லை என்பதும் இவ்விரு புத்தகங்களால் தெளிவானது.அப்போது இலக்கிய வாசிப்பில் நான் நா.பார்த்தசாரதியிடமிருந்து விடைபெற்று ஜெயகாந்தனின் ஆளுகைக்குள் வந்துகொண்டிருந்த காலமாகவும் இருந்தது.பொன்விலங்கும் குறிஞ்சிமலரும் அந்த நாட்களில் என் மனதுக்கு நெருக்கமான நாவல்களாக இருந்தன.அரவிந்தனைப்போல சத்தியமூர்த்தியைப்போல தேசம் பற்றிய பொங்கும் பெருமிதத்தோடும் ஒருவித கற்பிதமான சத்திய ஆவேசத்தோடும் சிலபல நா.பா. கொட்டேசன்களோடும் ஒரு பூரணியை அல்லது பாரதி-கல்யாணியைத் தேடும் இளைஞனாக இருந்துகொண்டிருந்தேன்.கோகிலா என்ன செய்துவிட்டாள் என்கிற குறுநாவல்தான் ஜெயகாந்தனில் நான் முதலில் வாசித்தது.அப்படியே அவர் இழுத்துக்கொண்டு போய்விட்டார்.பாரீசுக்குப் போவின் கலை சார்ந்த தத்துவ விவாதங்களில் பிரமித்து அக்கினிப்பிரவேசத்தில் குளித்தெழுந்த கங்காவைப் பின்தொடர்ந்து சிலநேரங்களில் சில மனிதர்களைச் சந்தித்துச் சினிமாவுக்குப் போன சித்தாளுவுடன் ரிக்‌ஷாவில் ஏறி எம்.ஜி.ஆரின் பட வால் போஸ்டரை உடம்பில் சுற்றிக்கொண்டு அலைந்தேன்.விகடனில் அவர் எழுதிய வசீகரமான தொடர்களை விடாமல் வாசித்துக்கொண்டிருந்தேன்.ஆனால் வெகு சீக்கிரமாக நான் ஜெயகாந்தனிடமிருந்து விடைபெற்றுக் கொள்ள நேர்ந்தது. புதுக்கவிதை பொங்குமாங்கடல்போலப் பொங்கிப் பிரவகித்துக்கொண்டிருந்த நாட்களாக அவை இருந்தன.பழைய தடைகளை எல்லாம் உடைத்துக்கொண்டு மொழி புதிய எல்லைகளில் பிரவேசித்த அனுபவத்தில் நின்று ஜெயகாந்தனின் சத்தமான குரலை முன்போலக் கேட்க முடியவில்லை.வண்ணநிலவன்,வண்ணதாசனிடம் மிக இயல்பாக வந்து சேர்ந்தேன்.வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவலையும் தோழர் பால்வண்ணம் கொடுத்த ஜூலியஸ் பூசிக்கின் தூக்குமேடைக்குறிப்புகளையும் ஒரே சமயத்தில் படித்துக்கொண்டிருந்தேன்.இந்தப்பிரியங்களும் பாசங்களும்தான் வாழ்க்கை என்று கடல்புரத்துப் பிலோமிக்குட்டி சொன்னதையும் சிறைக்குள்ளே உலகத்தொழிலாளர் மீதான பாசத்துடன் ஜூலியஸ் பூசிக் மேதினம் கொண்டாடியதையும் ஒரே நேர்கோட்டில் வைத்து வாசித்துக்கொண்டிருந்தேன்.’உன் அடிச்சுவட்டில் நான்’ புத்தகத்தையும் அதே நேரம் வாசித்து அந்த ட்ராயைப்போல உலகத்தின் மக்கள் எல்லோருக்காகவும் சாகத் தயாராகிக்கொண்டிருந்தேன்.வண்ணதாசனின் கலைக்க முடியாத ஒப்பனைகள் என்ற சிறுகதைத்தொகுப்பின் அகல விரித்த வார்த்தைப் பரப்பில் தீட்டப்பட்ட நுட்பமான ஓவியங்களைக் கண்டு மனம் நடுங்கி ’எச்சங்கள்’ சிறுவர்களின் எச்சிற்சோடாக் குடிக்கும் காட்சியைக்கண்டு மனம் பதறி அச்சிறுவர்களுக்காகப் போராட உறுதிகொண்டேன்- கண்ணீரைத்துடைத்துக்கொண்டு.

இப்படியான மனநிலையோடு பாலியல் சார்ந்த குழப்பங்களும் கூடவே ஓடிவந்து கொண்டிருந்த ஒரு வயதில் –அப்போதுதான் ராணுவத்திலிருந்தும் திரும்பியிருந்தேன் –ராணுவமுகாம்களில் வாசிக்கக் கிடைத்த கமலாதாஸ் அக்காவும் சஸ்தி பிரதாவும் பாரதி முகர்ஜியும் இன்னும் என்னோடு இருந்துகொண்டிருந்தார்கள்.குறிப்பாக சஸ்தி பிரதாவின் HE AND SHE, MY GOD DIED YOUNG போன்ற நாவல்களும் கமலாதாசின் என் கதையும் கவிதைகளும் கதைகளும் இருட்டுக்குள் என்னை இழுத்துக்கொண்டே இருந்தன.இருட்டு எப்போதும் மயக்கம் தரவல்ல வசீகரத்தோடு கூடியதுதானே.

கல்லூரிநாட்களின் இறுதியில் அறிமுகமான ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவ உரையாடல்களையும் இன்னும் விடாமல் வாசித்துக்கொண்டிருந்தேன். அவருடைய COMMENTARIEES ON LIVING இரண்டு தொகுதிகளும் BEYOND VIOLENCE மற்றும் THE AWAKENING YEARS ,அவருடைய கிருஷ்ணமூர்த்தி நோட் புக் போன்ற நூல்கள் என்னோடு இருந்தன.அப்போதைய என்னுடைய பட்ஜெட்டில் அவற்றை வாங்கியது பெரிய செலவுதான்.என்றாலும் ஜே.கிருஷ்ணமூர்த்தி அப்படி ஈர்த்தார்.கேள்வி பதில் பாணியிலான அவருடைய உரைகள் அன்று என்னை ஆட்டி வைத்தன.

நீங்கள் ஒரு குழுவோடு உங்களை ஏன் அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள்? ஒரு இனத்தோடு-ஒரு மதத்தோடு- ஒரு இயக்கத்தோடு?ஒரு கூட்டத்தோடு உங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ளும் கணத்தில் உங்கள் படைப்பாற்றல் (CREATIVITY) மறும் கேள்வி கேட்கும் சுரணை முற்றுப்பெற்று விடுகிறது.என்கிற ஜே.கே யின் முன்வைப்பு நீண்ட காலம் என்னை அலைக்கழித்தது.

ஆனால் ஆர்.கே.கண்ணன் மொழிபெயர்ப்பில் வாசித்த ஜார்ஜ் பொலிட்சரின் மார்க்சீய மெய்ஞ்ஞானம் நூல் என்னைப் பிடித்திழுத்துப் பிரகாசிக்கும் சூரிய வெளிச்சத்தில் தள்ளிவிட்டது.இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைப் பச்சைக்குழந்தைகளுக்குச் சொல்வதுபோலச் சொன்ன புத்தகம் அது.அதைத்தொடர்ந்து ராகுல்ஜியின் வால்கா முதல் கங்கை வரை நூலையும் பொதுவுடமைதான் என்ன என்கிற புத்தகத்தையும் வாசித்ததில் மனம் மேலும் துலக்கமானது.வரலாற்று ரீதியாக ஒரு கதை வடிவில் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தையும் மனித குல வரலாற்றின் முக்கியமான பக்கங்களையும் பேசிய வால்கா முதல் கங்கை வரை வாசித்து அதில் வரும் ஒரு கதாபாத்திரமான ரேக்காபகத் என்கிற பெயரைப் புனைபெயராகக் கொண்டு சில கதைகளைச் செம்மலரில் எழுதினேன்.

ஜே.கிருஷ்ணமூர்த்தியிடமிருந்தும் சஸ்தி பிரதாவிடமிருந்தும் கமலாதாசிடமிருந்தும் முறையாக விடைபெற்று வர மாரீசு கான்போர்த்தின் இயக்கவியல் பொருள் முதல்வாதம் நூலும் சோவியத் வெளியீடாக அன்று வந்த Marxist Ideology என்கிற அட்டவணைகள் நிறைந்த எளிய புத்தகமும்தாம் கை கொடுத்தன.மனம் என்பதின் செயல்பாடுகள் பற்றியும் உள்மனம்-வெளி மனம்-ஆழ் மனம் மற்றும் அறிவு-உணர்வு என்பவற்றின் அடிப்படை அறிவியல் உண்மைகளோடும் இயக்கவியலைப் புரிய வைத்த இப்புத்தகங்கள் என் வாழ்க்கையையும் வாழ்க்கைக் கண்ணோட்டத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டன.

என் பசிக்குத் தீனியாக அப்போது சென்னை புக்ஸ் பாலாஜி பல நல்ல நூல்களை வெளியிட்டுக்கொண்டிருந்தார்.போல்ஷ்விக் கட்சியின் வரலாறு அப்போது வெளியாகியிருந்தது.அந்தக் கறுப்பு ஞாயிறு பற்றிய பக்கங்கள் என் மனதைப் பாதித்தன.பின்னர் பேட்டில்ஷிப் பொடெம்கின் திரைப்படத்தைப் பார்த்தபோது ஒடெஸ்ஸா படிக்கட்டுகள் காட்சி மீண்டும் என்னைப் போல்ஷ்விக் கட்சியின் வரலாற்றைப் படிக்க வைத்தது.சோவியத்யூனியனைப்போலவே அன்று கிழக்கு ஜெர்மனியிலிருந்தும் ஏராளமான மார்க்சிய அடிப்படை நூல்கள் வந்து கொண்டிருந்தன.அப்புத்தகங்கள் சோவியத் புத்தகங்களைப்போல சிவப்பு வண்ணத்தில் அல்லாமல் நீல வண்ன அட்டைகளுடன் இருக்கும்.ப்ளூ மார்க்சிஸ்ட்ஸ் என்று அவற்றைப்பற்றிய ஒரு கேலியான சிரிப்பு கோவில்பட்டித் தோழர்களிடம் இருக்கும்.

பிளெக்கனோவின் இரு புத்தகங்கள் அந்தத் தருணத்தில் தெளிவான பார்வையைத் தந்தன.வரலாற்றில் தனி நபர் பாத்திரம் என்கிற நூலும் கலையும் வாழ்க்கையும் என்ற நூலும்.அப்போது கு.சின்னப்ப்பாரதியின் தாகம் நாவலும் டி.செல்வராஜின் மலரும் சருகும் நாவலும் வந்துவிட்டிருந்தன.இதுதான் எனது பாதை எனத் தீர்மானிக்க இவ்விரு நாவல்களும் பிளெக்கனோவின் நூல்களும் வழிகாட்டின என்பேன்.

இவ்வளவு புத்தகங்களுக்குப் பிறகுதான் நான் 1848இல் மார்க்சும் ஏங்கல்சும் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையை வாசித்தேன்.ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது என்று துவங்கி எத்தனை இலக்கியப்பூர்வமான மொழிநடையில் உலகத்தொழிலாளர்களை ஒன்றுசேர அறைகூவி அழைத்த புத்தகம் அது.இன்றுவரை அப்புத்தகத்தை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே இருக்கிறேன்.ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஒரு புதிய தெளிவு கிடைத்துக்கொண்டே இருக்கிறது.எதைப்பற்றி எழுதப்போனாலும் பேசப்போனாலும் கம்யூனிஸ்ட் அறிக்கையை ஒருமுறை பார்த்துக்கொள்வது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது.அப்போது Radical review பத்திரிகையில் இ.எம்.எஸ். அவர்களின் நேர்காணல் ஒன்று வெளியாகி இருந்தது.CPI-CPM-CPI-ML என்பது அந்நேர்கணலின் தலைப்பு அதைப்படிச்சிட்டு அப்புறம் இதைப்படி என்று தோழர் பால்வண்ணம் என்னிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சித்திட்டம் என்கிற நூலையும் மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை அறிக்கை என்கிற சிறு நூலையும் கொடுத்தார். கட்சித்திட்டம் என்றால் ஏதோ அது அவர்கள் கட்சியைப்பற்றியும் அவர்களின் வழியைப் புகழ்ந்தும் எழுதியிருக்கும் என்று எதிர்பார்த்த எனக்கு அது ஓர் ஆழமான வரலாற்று ஆவணம்போல பல உண்மைகளை அடுக்கி மக்கள் ஜனநாயகப்புரட்சிக்கு மக்களை அழைக்கும் புத்தகமாக இருந்து என்னை ஆச்சர்யப்படுத்தியது.

சோவியத் நூல்களைச் சரளமாக வாசிக்கும் பழக்கம் இதற்குள் வந்துவிட்டிருந்தது.கார்க்கியைவிட அன்று என்னை மிகவும் ஈர்ப்பவராக தஸ்தாவ்ஸ்கியே இருந்துகொண்டிருந்தார்.வெண்ணிற இரவுகளின் பனி பொழியும் பாதைகளில் காதல்வயப்பட்ட இளைஞனாக நான் நடந்துகொண்டிருந்தேன்.சிங்கிஸ் ஐத்மாத்தோவின் ஜமீலாவைக் காதலிக்கும் பலகோடி உலக இளைஞர்களில் நானும் ஒருவனாக நிலவொளியில் நீந்திக்கொண்டிருந்தேன்.கோகோலின் ’மேல்கோட்’டை அணிந்து இருமிக்கொண்டு அந்தோன் செகாவின் கதைகளுக்குள் ஆறாவது வார்டில் ஒரு பாத்திரமாக மனப்பிறழ்வுடன் அலைந்து கொண்டிருந்தேன்.இவான் துர்கனேவின் முதற்காதல் என்கிற குறுநாவல் என்னை அந்நாவலில் வரும் சிறுபையனாகவே மாற்றியது.டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவலில் வரும் ஏமாற்றுக்காரப் பெண்ணும் அவள்மீது காதல் கொண்டு வாழ்நாள் முழுக்க அவள் பின்னாலேயே ஏமாந்து அலையும் அந்த இளைஞனும் அந்தக்காதலின் புனிதமும் மனதைத் தாக்கினாலும் இது ஒரு கிறித்துவப்பார்வையுடன் எழுதப்பட்ட நாவல் என்று டால்ஸ்டாயையே விமர்சிக்கும் அளவுக்கு அப்போது வளர்ந்துவிட்டிருந்தேன்.

உண்மையில் அன்றைய பல இளைஞர்களைப்போலவே நானும் மொழிபெயர்ப்பு நூல்கள் என்னும் பெரும் கடலில் விழுந்து கிடந்தேன்.நட் ஹாம்சனின் நிலவளம் நாவல் மனித வாழ்க்கையை ஆதியிலிருந்து புரிந்து கொள்ள உதவிய வரலாற்று ஆவணம் போல வந்து சேர்ந்த்து.அந்நாவலில் வரும் மேல் உதடு பிளந்த பெண்ணின் வயிற்றில் பிறந்த அவளைப்போலவே மேல் உதடு பிளந்த குழந்தையை அவள் யாருக்கும் தெரியாமல் மண்ணில் புதைக்கும் காட்சியில் இன்னும் மனம் உறைந்துபோய்க் கிடக்கிறேன்.நிலவளம் போலத் தமிழில் வந்த ஒரு புத்தகமாக அப்போது சா.கந்தசாமியின் சாயாவனம் நாவலை இயற்கையை வெல்லும் மனிதக்கதையாகப் புரிந்து கொண்டேன்.இன்று அதே கதையை இயற்கையை அழித்த மனிதன் சீரழியும் கதையாகப் புரிந்துகொள்கிறேன். வி.ஸ.காண்டேகரின் எரிநட்சத்திரம் நாவலில் வரும் புரட்சிகர இளைஞனாக என் ஆசிரியர்களுடன் வாதம் செய்திருக்கிறேன்..வங்கத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட கதைகள் ஏராளம்.விபூதிபூஷனின் இலட்சிய இந்து ஓட்டல், பங்கிம் சந்திரரரின் விவசாய எழுச்சியை மையமாக்க் கொண்ட வந்தேமாதரம் பாடலைத் தந்த ஆனந்த மடம் நாவல் ,வெளிநாட்டுக்குப் பிழைக்கப்போகும் உயர்சாதி இளைஞன் பற்றிய பாரதி நாவல் எனப்பல நாவல்கள். தாகூரின் கீதாஞ்சலி வாசித்துத் தலை நிமிர்த்தி நடந்திருக்கிறேன்.வங்க நாவல்களின் தத்துவப் பார்வையை விட என்னோடு எளிமையாகவும் நெருக்கத்துடனும் பேசிய கதைகளாக மலையாள எழுத்தாளர்களின் படைப்புகள் இருந்தன.வைக்கம் முகம்மது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும் இளம்பருவத்துத் தோழியும் குறுநாவல்களும் பஷீரின் சிறுகதைகளும் கேசவ்தேவின் நடிகையும் ஓர் அழகியின் சுயசரிதையும் என் திருமணத்துக்கு அன்பளிப்பாக வந்த என்.பி.டி.யின் சமீபத்திய மலையாளச்சிறுகதைகள் தொகுப்பும் என ஒரு வளமான பங்கு கேரளத்திலிருந்து வந்து கொண்டிருந்தது.அந்த அளவுக்குத் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு ஏதும் செல்லவில்லை என்பது இன்றுவரை தீராத ஒரு சோகம்தான்.

இந்த சந்தர்ப்பத்தில் நான் தொழிற்சங்க இயக்கத்தில் கூட்டங்களில் பேசுகிற ஆளாக மாறிப்போனதால் தேவையை ஒட்டித் தேடிப்படிக்கும் பழக்கமும் வந்து விட்டது.அப்படி வாசித்த புத்தகங்களில் என்னை மிகவும் பாதித்த புத்தகம் என தோழர் இ.எம்.எஸ். அவர்கள் எழுதிய INDIAN PLANNING IN CRISIS என்கிற நூலையும் அதன் தொடர்ச்சியாக வந்த CRISIS INTO CHAOS என்ற நூலையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே பொருளாதார அமைப்பு குறித்து எழுந்த விவாதங்கள் 1948இல் திட்டக்கமிஷன் உருவாக்கப்பட்ட பின்னணி அதன் பின் இயங்கிய வர்க்க அரசியல் பற்றியெல்லாம் தெளிவாக விளக்கிய நூல்கள் இவை.இ.எம்.எஸ் மீது ஏற்பட்ட ஈர்ப்பு அவர் எழுதிய எல்லா நூல்களையும் தேடி வாசிக்கத் தூண்டியது.அவரது இந்திய வரலாறு-ஒரு சுருக்கமான வரலாறும், நான் ஏன் கம்யூனிஸ்ட் ஆனேன் என்கிற நூலும் அப்போது தமிழில் கிடைத்தன.பின்னர் அவரது A HISTORY OF INDIAS FREEDOM STRUGGLE என்கிற புத்தகம் வந்ததும் ஓடிப்போய் வாங்கிப்படித்தேன்.இப்போது அது தமிழிலேயே கிடைக்கிறது.நம் நாட்டின் கடந்த கால வரலாற்றை ஒரு மார்க்சிய நோக்கில் பயில இதைவிடச் சிறந்த புத்தகம் வேறொன்றும் இல்லை.பின்னர் வேதங்களின் நாடு வந்தது.இந்தியாவில் சாதிகளின் தோற்ரம் பற்றிய ஒரு புதிய விளக்கத்தை இந்நூல் தந்த்து.

அங்கிருந்து என் வாசிப்பு வரலாற்று நூல்களின் மீது ஆவலுடன் தாவியது.குறிப்பாக இந்திய வரலாறு,தமிழக வரலாறு குறித்து என்ன துண்டுத்தாள் கிடைத்தாலும் வாங்கி வாசித்துத் தீவிரமாக்க் குறிப்புகளும் எடுத்துக்கொண்டிருந்தேன்.இந்திய வரலாற்று ஆய்வுக் கவுன்சிலின் நூல்கள் பலவற்றை அப்போது என்.சி.பி.எச் வெளியிட்டுக்கொண்டிருந்தது.என்சிபிஎச் கிளை பொறுப்பாளர் ஒருவரிடம் ரகசியமாக்க் கணக்கு வைத்துக்கொண்டு மாத்த் தவனையில் அந்த எல்லா வரலாறு நூல்களையும் வாங்கிக் குவித்து வெறிகொண்டு படித்துக்கொண்டிருந்தேன்.டி.டி.கோசாம்பியின் பண்டைய இந்திய வரலாறு,ராகுல்ஜியின் ரிக் வேத கால ஆரியர்கள்,ரோமிலா தாப்பரின் வரலாறும் வக்கிரங்களும்,சுவீரா ஜைஸ்வாலின் வைஷ்ணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,ஆர்.பி.ஷர்மாவின் பண்டைய இந்தியாவில் அரசு நிர்வாகத்தின் தோற்றம்,விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்கள்,பி.சி.ஜோசியின் 1857 புரட்சி ,சுசோபன் சர்க்காரின் வங்காள மறுமலர்ச்சி என எண்ணற்ற புத்தகங்கள்.படித்த நூல்களை நோட்டுப்போட்டுக் குறிப்புகளாக எழுதி வைத்துக்கொண்டிருந்தேன் –எதற்கென்று தெரியாமலே.இவ்வாசிப்பில் 1857 புரட்சியை ஒரு தனித்த சிறப்பு வாய்ந்த நூலாக உணர்ந்தேன்.ஒரு வரலாற்று நூல் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமான நூலாக இது அமைந்தது.ஏற்கனவே 1857 சிப்பாய்ப் புரட்சி பற்றி வேறு சில நூல்களையும் நான் வாசித்திருந்தேன்.மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள் முயற்சியில் 1957இல் அரசு வெளியிட்ட 1857 என்கிற விரிவான ஆங்கில நூலையும் பட்டாபி சீத்தாராமையா எழுதிய 1857 கலகம் என்கிற நூலையும் சவர்க்காரின் இந்தியப்புரட்சி நூலையும் வாசித்திருந்தாலும் அவை எதுவும் பி.சி.ஜோஷியின் நூலுக்கு ஈடாக நிற்கவில்லை.1857 புரட்சி பற்றிய வரலாறுக் காரணங்கள்,அன்றைய பத்திரிகைகளில் அது பற்றி வந்த செய்திகள்,நாட்டுப்புறப்பாடல்கள் ,பிற நாட்டு அறிஞர்கள் அப்புரட்சி பற்றி எழுதிய குறிப்புகள் என எல்லாவற்றையும் உள்ளடக்கிய முழுமையான நூலாக அது வந்திருந்தது.என்னைப்போன்ற அன்றைய இளம் வாசகர்களுக்குச் சரியான தீனியாக அது அமைந்தது.கோ.கேசவனின் எழுத்துக்களை நான் இந்த சமயத்தில்தான் வாசிக்க வாய்ப்புக் கிடைத்தது.அவரது சமூகமும் கதைப்பாடல்களும் என்கிற சின்னஞ் சிறிய புத்தகம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை இருக்கிறது.பாளையக்காரர்களின் காலத்தைப்புரிந்துகொள்ள தமிழில் இதைவிடச் சிறந்த நூல் ஏதும் இல்லை என்பேன்.அவரது மண்ணும் மனித உறவுகளும், இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் மற்றும் இயக்கமும் இலக்கியப்போக்குகளும் போன்ற நூல்களையெல்லாம் ஒருசேரத் தேடித் தேடி வாசித்தேன்.இயக்கங்களில் பணியாற்றும் தோழர்களுக்குக் கல்வி புகட்டும் மொழியில் அவர் எழுதினார்.அவரது மறைவு இட்து சிந்தனை உலகுக்குப் பேரிழப்பாகும்.

இப்போது கதைகள் எழுதவும் துவங்கியிருந்தேன்.ஒரு திட்டமிட்ட பாடத்திட்ட அடிப்படையில் இலக்கியங்களைக் கற்பது என்று முடிவு செய்து கால வாரியாக நூல்களைப் பட்டியலிட்டு நூலகங்களிலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் நிறைய சொந்தமாகவும் வாங்கிப் படிக்கலானேன்.(இந்த வைராக்கியம் ஓராண்டுக்கு மேல் நீடித்தது எனக்கு ஆச்சரியமே-அவ்வளவு நீண்ட காலத்துக்கு என் புத்தி ஒரு நிலையில் நிற்பது –வாசிப்பைப் பொறுத்து-அபூர்வம்தான்)

1920களின் முக்கிய உரைநடை இலக்கிய எழுத்துக்கள் என பாரதியின் சிறுகதைகளையும் அவரது சந்திரிகையின் கதை என்னும் நாவலையும் அ.மாதவய்யாவின் குட்டிக்கதைகளையும் வ.வே.சு.அய்யரின் மங்கையர்க்கரசியின் காதல் தொகுப்பையும் படித்தேன்.சமூகத்துக்கு ஏதேனும் சொல்லத்துடித்த கதைகளாக அவற்றை உணர்ந்தேன்.மாதவய்யா கதைகளின் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் நான் எதிர்பாராதவை.சிறுகதை என்னும் வடிவம் பூரணமாகக் கைவராத படைப்புகளாக இம்மூவரின் கதைகள் இருந்தன.ஆனாலும் சிறுகதையின் துவக்கம் சமூக அக்கறை கொண்ட்தாகவே இருந்தது-உள்மனப் பயணம் பற்றியதாக இல்லை என்பது குறிக்கத்தக்கது.

1925இல் இம்மூவரும் மறைந்து விட்ட பின் புதுமைப்பித்தனும் கு.ப.ராஜகோபாலனும் மௌனியும் முன்னுக்கு வந்தனர்.இப்போதுபோல ஒட்டுமொத்தத் தொகுப்புகள் அக்காலத்தில் இல்லை.மௌனியின் அழியாச்சுடர் ஒரு தொகுப்புதான் வந்திருந்தது.என்னைப்போலவே(!) மிகக் குறைந்த எண்ணிக்கையில் கதை எழுதியவர் அவர் என்பதாலும் சிறுகதைகளின் திருமூலர் என்று புதுமைப்பித்தன் அவரைப்பற்றிச் சொன்னதாலும் அவரை ஆவலுடன் வாசித்து ஏமாந்தேன்.அன்றுமுதல் இன்றுவரை மௌனி என்னை வசீகரிக்கவில்லை.புதுமைப்பித்தனின் காஞ்சனை,புதுமைப்பித்தன் கதைகள் ,துன்பக்கேணி போன்ற பத்துத்தொகுப்புகள் என் கையில் இருந்தன.ஒவ்வொரு கதையும் எனக்குப் பாடம் சொன்ன கதைதான்.இலங்கைக்குப் போய் பரங்கிப்புண் பெற்ற மருதாயியின் சோகமும் கடவுளோடு ஒருநாள் கழித்த கந்தசாமிப் பிள்ளையின் எள்ளலும் மகாமசானம் என்று சென்னைப்பட்டணத்தை மயானம் என்று சொல்லி முதலாளித்துவத்தின் முகத்தில் அடித்த கோபமும் அவருக்கன்றி யாருக்கு வரும்? கு.ப.ராவின் சிறிது வெளிச்சம் தொகுப்பின் கதைகள் இன்றைக்கும் மனதை ஈர்ப்பவையாக இருக்கின்றன.சிறிது வெளிச்சம்,ஆற்றாமை,மெகருன்னிசா போன்றவை இறவாப்புகழ் பெற்ற கதைகள்தாம்.

40களின் படைப்பாளிகளில் நான் தடுமாறி விழுந்தது கு.அழகிரிசாமியின் மடியில்தான்.இன்றைக்குவரை எனக்கு ஆதர்சம் அவர்தான்.நான் கதை எழுதிய ஒவ்வொரு நாளும் அவரது மடியில் உட்கார்ந்து கதை எழுதுவதான உணர்வே எனக்கு இருக்கும்.எளிய வார்த்தைகளில் எங்கள் கரிசல் மனிதர்களின் கள்ளமில்லாத உள்ளத்துடன் கதை சொன்ன அவர்தான் எமக்கு அப்பா.அவரது சிரிக்கவில்லை,தவப்பயன்,அன்பளிப்பு,கற்பக விருட்சம் போன்ற 11 தொகுப்புகள் அன்று என் கைவசம் இருந்தன. அது பற்றிய அளவற்ற கர்வமும் எனக்கு இருத்து.அவற்றை மொத்தமாக வாங்கிப்போன ஜோதிவிநாயகம் திருப்பித்தராமலே போய்விட்டது ஒரு சோகம்தான்.இன்று மொத்தக்கதைகளின் தொகுப்பு வந்துவிட்டாலும் அந்த என் புத்தகங்கள் போன சோகத்தை அது ஈடு செய்யவில்லை.

50-60 களின் இலக்கிய ஆளுமைகளாக அசோகமித்திரனும் கி.ராஜநாராயணனும் சி.சு.செல்லப்பாவும் ஜி.நாகராஜனும் சுந்தரராமசாமியும் லா.ச.ராமாமிர்தமும் என் வாழ்வில் வந்து சேர்ந்தார்கள்.சென்னை வாழ்வின் கீழ் மத்தியதர வாழ்வைக்களனாக்க் கொண்ட அசோகமித்திரனின் சிறுகதைகளைப்(காலமும் ஐந்து குழந்தைகளும் ) பார்க்கிலும் என்னைப் பாதித்தவை அவரது அற்புதமான நாவல்களான கரைந்த நிழல்கள்,தண்ணீர்,பதினெட்டாவது அட்சக்கோடு போன்றவைதாம்.தண்ணீரில் வரும் ஜமுனாவின் துக்கம் நம்முடையதாகிவிடும்.அதை ஒரு குறியீட்டு நாவல் என்று அப்போது பேசிக்கொள்வார்கள்.பத்னெட்டாவது அட்சக்கோடு ஹைதராபாத்தைக் கதைக் களனாகக் கொண்டு இந்து முஸ்லீம் கலவரத்தில் சிதையும் மனித மாண்புகள் பற்றி நுட்பமாகப் பேசிய நாவல்.கி.ரா எங்க காட்டுப் பெரியவர். வேட்டி,கிடை,கன்னிமை போன்ற சிறுகதைத் தொகுப்புகளாலும் கோபல்லபுரம் மற்றும் கோபல்லபுரத்து மக்கள் ஆகிய நாவல்களாலும் கரிசல் வாழ்வின் பல பரிமாணங்கலை எளிய பேச்சுவழக்கில் கதைகளாக்ச் சொன்னவர் கி.ரா.பிரசாதம் சிறுகதைத் தொகுப்புத்தான் சுந்தரராமசாமியின் எழுத்துக்களில் நான் முதலில் வாசித்தது.புளியமரத்தின் கதையை ரொம்ப்ப் பின்னாளில்தான் வாசித்தேன்.அவருடைய எழுத்தின் மீது ஏற்பட்ட ஒரு வசீகரமும் மோகமும் இன்றுவரை தீரவில்லை.ஜே.ஜே.சில குறிப்புகள்தான் அவருடைய மாஸ்டர்பீஸ்.கருத்துரீதியாக அந்நாவலில் விமர்சனம் எனக்குண்டெனிலும் மொழி மற்றும் உத்தி ரீதியில் அது வந்த காலத்தில் மிக முன்னதாகப் பாய்ந்த படைப்பு அது.லா.ச.ராவை அன்று வாசித்தபோது பிரமிப்பாக இருந்தது.மொழியின் எல்லைகளை இவ்வளவு தூரம் விரிக்க முடியுமா என்று வியந்ததுண்டு.பின்னர் 90களில் அபிதாவை எடுத்து வாசித்தபோது என்னால் வாசிக்கவே முடியாத அயர்ச்சி ஏற்பட்டது.ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு குறுநாவலும் நாளை மற்றொரு நாளே நாவலும் தமிழ் நவீன இலக்கியம் அதிகம் பேசாத பக்கங்களைப் பேசின.எல்லோரும் வாழ்க்கையை முன்வாசல் வழியாகப் பார்க்கும்போது ஜி.நாகராஜன் புழக்கடை வழியே அதைப் பார்க்கிறார் என்ற சு.ரா.வின் கருத்து முற்றிலும் சரிதான்.இன்றும் என்னை ஈர்க்கும் ஒரு எழுத்து ஜி.நாகராஜனுடையது.

70-80 களில் நானும் மைதானத்தில் இறங்கியிருந்தேன்.எனக்கு முன்னால் பிரபஞ்சனும்,வண்ணநிலவனும்,வண்ணதாசனும்,பூமணியும்,பா.செயப்பிரகாசமும் ,கந்தர்வனும் மேலாண்மை பொன்னுச்சாமியும் போய்க்கொண்டிருந்தார்கள்.

தொழிற்சங்க மற்றும் இலக்கிய உலகத்தோடு நான் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்து சில வேலைகளைச் செய்தபோது என் அறிவுலகின் வாசல்கள் இன்னும் அகலத் திறந்தன.கே.கிருஷ்ணகுமாரின் இயற்கை,சமுதாயம்,மனிதன் என்ற புத்தகம் எளிமையாக மனித குலவரலாற்றினூடாக அறிவியல் செய்த பயணம் பற்றிப் பேசியது. அறிவியல் இயக்கம் எனக்குச் செய்த மாபெரும் உதவி சில தலை சிறந்த மனிதர்களை எனக்கு அறிமுகம் செய்ததுதான். ச.மாடசாமி,டாக்டர் சுந்தரராமன்,டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன்,டாக்டர் ராமானுஜம்,டாக்டர் (?) செந்தில்பாபு போன்ற அறிஞர்கள் எனக்கு முற்றிலும் புதியதோர் உலகத்துப் புத்தகங்களை வாரி வழங்கிய கொடை வள்ளல்களாக அமைந்தனர்.

எளிய மக்களின் மனதோடு பேசும் கலையைக் கற்றுத்தந்த பேராசிரியர் ச.மாடசாமியின் எனக்குரிய இடம் எங்கே? அவரவர் கிணறு,சொலவடைகளும் சொன்னவர்களும் ஆகிய மூன்று நூல்களும் வாசிப்பவரின் மனங்களை விசாலமாக்கும் தன்மையுடையவை..சொலவடைகள் புத்தகம் கடுமையான உழைப்பையும் ஈடுபாட்டையும் கோரிய புத்தகம்.டாக்டர் சுந்தரராமன் தான் எமக்கு அந்தோனியோ கிராம்ஷியையும் மிஷேல் பூக்கோவையும் அறிமுகம் செய்து வைத்தவர்.அவருடைய அறிமுகத்தால் உந்தப்பெற்றுத் தேடிப் பிடித்து வாசிக்க முயன்ற புத்தகங்களென கிராம்ஷியின் PRISON NOTE BOOK மற்றும் CULTURAL WRITINGS ஆகிய இரு நூல்களையும் குறிப்பிட வேண்டும்.தோழர் தொ.மு.சி.ரகுநாதனின் கடைசி நாட்களில் இப்புத்தகங்களை அவர் கேட்கக் கொண்டுபோய்க் கொடுத்த சந்தோஷமும் எனக்குக் கிட்டியது.சவுத் விஷன் பாலாஜி வெளியிட்ட (எஸ்.வி.ஆர்-கீதா) அந்தோனியோ கிராம்ஷி-வாழ்வும் சிந்தனையும் அக்காலத்தில் முதல் அறிமுக முயற்சி.இப்போது விடியலில் அதைவிட நல்ல புத்தகங்கள் வந்துவிட்டன.

செந்தில்பாபு வரலாற்றாளர் எரிக் ஹோப்ஸ்வாம் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டார்.இப்போது அவரை விடவே முடியவில்லை.நான் முதலில் வாசித்த்து அவரது AGE OF EXTREMES தான் .நான் வாசித்த வரலாற்று நூல்களில் CLASSIC என்று இந்நூலைத்தான் சொல்வேன்.20ஆம் நூற்றாண்டைப்பற்றிய ஒரு முழுமையான பார்வையை இந்நூல்தான் வழங்கியது.அவருடைய Nations and Nationalism,Age of Empires,Age of Capitalism, சமீபத்திய Globalisation,Democracy and Terrorism போன்ற நூல்கள் வரலாற்றின் பக்கங்களைப் புரிந்துகொள்ள உதவிய நூல்கள்.ஒவ்வொரு நூற்றாண்டும் நமக்குச் சில வார்த்தகளை விட்டுச்செல்கின்றன என்கிற அவருடைய வரியும் மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு-நினைவு படுத்திக்கொண்டே இருப்பது வரலாற்றாளனின் கடமை என்கிற வரியும் மறக்க முடியாதவை.

த.வி.வெங்கடேஸ்வரன் திருவனந்தபுரத்தில் இருந்தபோதும் இப்போது டெல்லியில் இருக்கும்போதும் அவ்வப்போது அறிய புத்தகங்களை எனக்கு அறிமுகம் செய்பவராக இருக்கிறார்.முக்கியமாக புவியியல் நூல்களின் அரசியலை எனக்குப்புரிய வைத்து Jared Diamond என்கிற அற்புதமான புவியியல் எழுத்தாளரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.Jared Diamond இன் Why Geography என்கிற நூல் புவியியல் கற்பதன் அவசியத்தையும் உன்னதத்தையும் எனக்கு உணர்த்தின.அவருடைய இன்னொரு புத்தகமான GUNS,GERMS AND STEEL இதுவரையிலும் பார்க்காத ஒரு புதிய புவியியல் கோணத்தில் உலக வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவியது.வரைபடங்களின் அரசியலையும் வரைபடங்களின் வழியே வரலாற்றைப் புரிந்து கொள்ளவும் SUSAN GOLE அவர்களின் நூல்கள் சில உதவின.குறிப்பாக INDIA WITHIN GANGES- இண்டியா இந்த்ரகேஞ்சம் என்கிற அவரது நூல் ஐரோப்பியர்களின் பார்வையில் ஆதி காலந்தொட்டு இந்தியா பற்றிய சித்திரங்கள் எவ்விதம் மாறி மாறி வடிவம் கொண்டன என்பதை விளக்குகிறது.- இப்பாதையில் புத்தகங்களோடு என் வாழ்வில் குறுக்கிட்ட இன்னொரு ஆளுமை சேலம் சகஸ்ரநாமம்.நானும் அவரும் சேர்ந்து மனிதகுல வரலாறு,சமூக வரலாறு, கட்சித்திட்டம் போன்றவற்றை நழுவுபடக்காட்சிகளாகத் தயாரிக்கப் பெரும் திட்டங்கள் தீட்டினோம்.(நடக்கிறதோ இல்லையோ கனவுகளை விரித்துக்கொண்டே இருப்பதுதான் வாழ்வின் ஆதாரம் இல்லையா).மனித குல வரலாறு தொடர்பான சமீபத்திய பல நூல்களை அவர் பல ஊர்களிலிருந்து தருவித்தார்.ஒரு மேப் பாணியிலான கண்காட்சியைத் தயாரித்து ஆளுக்கு ஒரு செட் வைத்துக்கோண்டோம். சில ஊர்களுக்குக் கொண்டு சென்றோம்.அதற்குள் பவர் பாயிண்ட் என்கிற இன்னும் சிறப்பான வடிவம் வந்துவிட்டது.அவர் மூலம் வாசிக்க்க் கிடைத்த புத்தகங்களில் முக்கியமானவையாக JaredJared Diamond எழுதிய DioThe Rise anf Fall of Third Chimpanzee யையும் by Robert Wright எழுதிய The Moral Animal என்கிற நூலையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.மரபணு ஆராய்ச்சிகளின் விளைவாக மனித குலம் பிறந்தது ஆப்பிரிக்கா கண்ட்த்தில்தான் என்பது நிரூபணமான பிறகு இந்நூல்களை வாசித்தது நம் வேர்களை இன்னும் நெருக்கமாக அடையாளம் காண உதவியது. நமது ஆதி விலங்கினத் தொடர்பு எவ்விதம் இன்றுவரை நம் பண்பாட்டு வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்பதையும் நாம் ஏன் இவ்விதமாக வாழ்கிறோம் என்பதற்கான டார்வினிய அடிப்படையிலான விளக்கத்தை இந்நூல்கள் அளிக்கின்றன.

90களில் சோவியத் யூனியன் சிதறுண்டதும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகள் வீழ்ச்சியடைந்ததும் பண்பாட்டுத்தளத்தில் நாம் பணியாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின. எனது பார்வையும் இயக்கத்தின் பார்வையோடு சேர்ந்து மாற்றம் பெற்றது.அம்பேத்கரின் நூற்றாண்டு அவரது சிந்தனைகளின் மீது கவனத்தைத்திருப்பியது எனலாம்.அவரது நூல்கள் தமிழில் வெளியாகத் துவங்கியதும் ஈர்ப்புக்கு ஒரு வடிவம் கொடுத்தது.அவருடைய இந்தியாவில் சாதிகள் என்கிற கொலம்பியா பல்கலைக்கழக உரையும் புத்தரும் அவரது தம்மமும் என்கிற நூலும் காந்தியும் காங்கிரசும் தீண்டாதோருக்குச் செய்தது என்ன என்கிற நூலும் முதல் வாசிப்பிலேயே வாசகனின் கண்ணோட்டத்தை மாற்றியமைத்தன.அவரைப்பற்றிய புத்தகங்களில் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியின் அம்பேத்கர் ஆய்வு மையம் வெளியிட்ட அம்பேத்கர்-ஒரு பன்முகப்பார்வை ஒரு நல்ல எளிமையான அறிமுக நூலாகவும் DR.AMBEDKAR AND UNTOUCHABILITY- என்கிற CHRISTOPHER JAFFRELOT அவர்களின் நூல் அவரது சிந்தனைகளின் அறிமுகமாகவும் எனக்கு வாசிக்கக் கிடைத்தன.மராட்டிய அரசு வெளியிட்டுள்ள 40க்கு மேற்பட்ட அம்பேத்கர் நூல்வரிசையில் 20க்கு மேற்பட்டவற்றை வாங்கி வைத்து அவ்வப்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். முழு தொகுதிகளையும் வாங்கியாக வேண்டும்.அவருடைய ஆய்வு முறையும் ஆழ்ந்தகன்ற வாசிப்பும் ஒவ்வொரு வார்த்தையிலும் குமுறும் அவரது கோபாவேசமும் அம்பேத்கரை என் மனதின் உச்சத்தில் கொண்டு வைத்துள்ளது-மிகத் தாமதமாக அவரிடம் வந்து சேர்ந்தோமே என்கிற குற்ற உணர்ச்சியுடன்.

தந்தை பெரியாரின் நூல்களில் பெண் ஏன் அடிமையானாள்? மற்றும் திராவிடர் கழக வெளியீடுகளான பெரியார் களஞ்சியம் பத்துத் தொகுதிகள் (பெண்ணியம்,சாதி மட்டும்)வாங்கி வாசித்திருந்தாலும் வழக்குகளைச் சந்தித்து வெற்றி கண்டு பெரியார் திராவிடர் கழகத்தோழர்கள் வெளியிட்ட பெரியாரின் குடி அரசு எழுத்துக்களின் 27 தொகுதிகளை வாங்கி பரீட்சைக்குப் படிப்பது போல (ஒரு கூட்ட்த்தில் பேச வேண்டி இருந்ததால்)படித்த அனுபவம் அலாதியானது.பெரியாரின் எழுத்துக்களில் மிளிரும் கிண்டலும் கேலியும் நாட்டுப்புறக் கதைகளும் சொலவடைகளும் தனியே விவரித்து எழுதத்தக்கவை. காதல் பற்றிய அவரது கிண்டலான கருத்துக்கள் முதல் வாசிப்பில் எனக்கு வியப்பூட்டின. மக்கள் மொழியில் மக்களிடம் பேசிய மகத்தான தலைவராக அவர் மனதில் உயர்ந்து நிற்கிறார்.கிராம்ஷி சொல்லும் Organic Intellectual இவர்தான் என்று தோன்றியது.

பெண்களின் நிலை குறித்துத் தொடர்ந்து பேசி வந்தாலும் வலுவான புத்தகங்கள் வாசிக்க்க் கிடைக்காத சூழலில் எழுத்தாளர்-பத்திரிகையாளர் ஏ.எஸ்.பத்மாவதி அவர்கள் வீட்டுக்கு ஒருமுறை சென்றபோது அரிய பல நூல்களை அப்படியே எனக்கே எனக்கு என அள்ளிக்கொடுத்து விட்டார்.அவற்றில் – SIMON DE BEUOVA எழுதிய நான் ரொம்ப காலமாகத் தேடிக்கொண்டிருந்த THE SECOND SEX என்கிற புத்தகமும் இருந்தது.பிரான்ஸ் நாட்டையும் ஐரோப்பாவையும் குலுக்கிய அப்புத்தகம் பெண்நிலையில் நின்று இவ்வுலகைக் காணப் புதிய சாளரங்களைத் திறந்து விட்டது.The Beauty Myth மற்றும் Sacrificing Ourselves ஆகிய இரு புத்தகங்களும் வ.கீதா எழுதிய Gender மற்றும் Patriarchy ஆகிய இரு நூல்களும் பெண்ணியம் தொடர்பான என் பல குழப்பங்களுக்கும் விடையளிப்பதாக அமைந்தன.

நெல்லைக்குப் பணியாற்ற வந்த வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதியும் தமிழறிஞர் தொ.பரமசிவமும் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனும் எனக்குச் செய்துள்ள உதவிகள் சொல்லாலே விளக்கிவிட முடியாதவை.இந்திய-பாகிஸ்தான் பிரிவினை குறித்த சில முக்கியமான புத்தகங்களை சலபதிதான் எனக்கு வாங்கித்தந்தார்.ஊர்வசி புட்டாலியாவின் The Otherside of Silence கமலா பாஷின் எழுதிய Borders and Boundaries ஆகிய இரு நூல்களும் எந்த வரலாற்று நூலும் இதுவரை சொல்லியிராத தேசப்பிரிவினையின் காயங்களைத் திறந்து காட்டின.இந்தியாவின் விடுதலை என்பது பெண்களின் உடம்பின் மீது எழுதப்பட்ட ஒரு வரலாறுதான் என்பதை இவ்விரு நூல்களும் நம் முகத்திலறைந்து சொல்கின்றன.கண்ணீரில் கரைந்தபடி வாசித்த நூல்கள் இவை.எஸ்.ராமானுஜம் மொழி பெயர்ப்பில் வெளியான மண்ட்டோ படைப்புகள் இவ்வரிசையில் ஓர் மகத்தான நூலாகும்.

தொ.பரமசிவன் அவர்களின் அறியப்படாத தமிழகம் என்கிற நூல் தமிழகப்பண்பாட்டு வரலாற்றில் உண்மையிலேயே அறியப்படாத ஒரு தமிழகத்தை அறிமுகம் செய்து பலத்த அதிர்வுகளை உண்டாக்கிய நூல்.அந்நூலை நாங்கள் எம் தோள்களில் சுமந்து சென்று விற்பனை செய்தோம்.இன்று அவருடைய எல்லாக் கட்டுரைகளும் பண்பாட்டு அசைவுகள் என்கிற நூலாக வந்துள்ளது.நாட்டார் தெய்வங்களி வரலாற்றை ஆய்வு செய்து வெளிக்கொண்டுவந்த வாழும் நா.வானமாமலை என நான் மதிக்கிற தோழர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் அடித்தள மக்கள் வரலாறு, கொலையில் உதித்த தெய்வங்கள்,கிறித்துவமும் சாதியும் ,மந்திரங்கள் சடங்குகள் என அவரது ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு எழுத்தும் தமிழகப் பண்பாட்டு வரலாற்றைக் கட்டமைக்க உதவும் அடிப்படையான நூல்களாக அமைந்துள்ளன.சின்ன வயதிலேயே பெரும் சாதனைகள் புரிந்தவராக நான் மதிக்கும் ஆ.இரா.வேங்கடாசலபதியின் அந்தக்காலத்தில் காப்பி இல்லை,நாவலும் வாசிப்பும்,திராவிட இயக்கமும் வேளாளரும்,முச்சந்தி இலக்கியம் உள்ளிட்ட பல நூல்கள் தமிழில் வரலாற்று நூல்களின் வரிசையில் மிக முக்கிய இடம் பிடிப்பவை.

தமிழகத்தில் நானறிந்த ஒரே பொருளாதார வரலாற்றாய்வாளரான முனைவர் கே.ஏ.மணிக்குமாரின் 1930களில் தமிழகம் என்கிற நூலும் முதுகுளத்தூர் கலவரம் குறித்த அவரது 1957 RIOTS என்கிற நூலும்(அச்சில்) தமிழக வரலாற்றுக்கு அரிய பங்களிப்புகளாகும்.முத்துராமலிங்கத்தேவர் பற்றிய ஒரு விருப்பு வெறுப்பற்ற கணிப்பை மணிக்குமார் அவர்களின் இந்நூல் செய்துள்ளது குறிப்பிட்த்தக்கது.1930களில் தமிழகம் நூலை முன் வைத்து புதுமைப்பித்தனின் கதைகள் சிலவற்றை ஆய்வு செய்து பார்ப்பது அவசியம்.30களின் பொருளாதார மந்தம் பற்றி பல கதைகளில் புதுமைப்பித்தன் அழுத்தமாகவும் வெளிப்படையாகவும் பேசியுள்ளார்.

நான் சந்தித்த மனிதர்கள் எல்லோருடைய முகங்களுமே எனக்குச் சில புத்தகங்களாகவே மனதில் தோன்றுகின்றன.புத்தகம் சுமந்த (புத்தகங்களை நானும் என்னைப் புத்தகங்களும் ) வரலாறுதான் என் கடந்தகாலமும் நிகழ்காலமும் எதிர்காலமுமாக இருக்க முடியும்.என் மனப்போக்கின் ஒவ்வொரு திருப்பத்தையும் நடப்புகளும் நிகழ்வுகளும் தீர்மானித்ததை விட மேலே குறிப்பிட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்களே தீர்மானித்தன என்று உறுதியாகச் சொல்லுவேன்.

சமீபத்திய வாசிப்பில் இளம்பிறை,குட்டி ரேவதி, சுகிர்தராணி,சல்மா,மாலதி மைத்ரி போன்ற பெண் படைப்பாளிகளின் கவிதைகளும் கதைகளும் லிவிங் ஸ்மைல் வித்யாவின் தன் வரலாறும் ப்ரியாபாபுவின் எழுத்துக்களும் என்னைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளன என்பேன்.இவர்களைப்பற்றி இப்படி ஒட்டுமொத்தமாக ஒரு வரியில் எழுதுவது நியாயமில்லை.ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான வாழ்வை முன்வைத்துப் பேசுகிறார்கள்.பொதுவான அம்சம் ஒன்றுண்டு என்பதால் பொதுவாக்க் குறிப்பிட்டேன்.வாசிக்கும் ஆண் மனதைக் குற்ற உணர்வு கொள்ளச்செய்யும் படைப்புகளாக இவை யாவும் உள்ளன என்பதே அது.

கீரனூர் ஜாகிர் ராஜாவின் வடக்கேமுறி அலிமா,யோ.கர்ணனின் தேவதைகளின் தீட்டுத்துணி மற்றும் சேகுவேரா இருந்த வீடு போன்ற படைப்புக்கள் சமீபத்தில் நான் வாசித்து அதிர்வுக்குள்ளான உயிர்த்துடிப்புள்ள படைப்புக்கள்.இஸ்லாமிய வாழ்க்கைப் பின்புலத்தோடு மனித வாழ்வை, நம்பிக்கைகளை , மனித மதிப்பீடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் நாவல்களைத் தொடர்ந்து எழுதி வரும் ஜாகிர் ராஜாவின் எழுத்துக்களில் தனித்துவமான ஒன்றாக வடக்கே முறி அலிமாவை நான் மதிப்பிடுகிறேன்.ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்கிற புஷ்பராஜாவின் புத்தகமும் ராஜனி திரானகம எழுதிய முறிந்தபனை யும் காட்டிய ஈழப்போராட்ட்த்தின் மறுபக்கத்தையும் முழுமையான சித்திரத்தையும் வலி மிகுந்த வாழ்க்கையையும் துக்கத்தின் உச்சியில் பிறக்கும் பகடியாக யோ.கர்ணன் தன் சிறுகதைகளில் எழுதிச்செல்கிறார்.சேகுவேரா இருந்த வீடு ஒட்டுமொத்த ஈழப்போராட்டத்தின் குறியீடாக அமைந்துவிட்ட்து.

கோ.ரகுபதியின் தலித்துகளும் தண்ணீரும் சமீபத்தில் நான் வாசித்த மிக முக்கியமான புத்தகம்.பாவங்களைக் கழுவும் புனித வஸ்துவாகக் கருதப்படும் தண்ணீரைக் குடிப்பதற்காக தலித்துகள் நடத்தி வரும் போராட்டங்களை வரலாற்று ரீதியில் விளக்கும் இந்நூல் பரவலாக வாசிக்கப்பட வேண்டிய நூலாகும்.சு.கி.ஜெயராமன் தொடர்ந்து எழுதிவரும் புவியியல் சார் புத்தகங்களான குமரி நில நீட்சி,மணல் மேல் கட்டிய பாலம் போன்றவை இன்றைய இந்துத்துவப் புரட்டுகளையும் புளுகுமூட்டைகளையும் எதிர்கொள்ள உதவும் முக்கியமான புத்தகங்கள்.

என் இலக்கிய வாசிப்பு குறித்துப் பாதியிலேயே நிறுத்தி விட்டேன்--500 புத்தகங்களுக்கு மேல் அது வளரும் என்பதால்.

.இவையெல்லாம்தான் என் புத்தகங்கள்.இவற்றை என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டுதான் என் அன்றாடம் நகர்கிறது.இன்னும் கூட வாசிக்காத பல புத்தகங்கள் என் அலமாரிகளில் இருக்கின்றன.வாழ்வு முடிவதற்குள் நம்மிடம் இருக்கும் புத்தகங்களையாவது நாம் வாசித்து முடிப்போமா என்கிற சந்தேகம் அவ்வப்போது வரத்தான் செய்கிறது.என்றாலும் வாசிக்காமல் முடியாது.வாசித்தாலும் தீராது.

இப்படிச் சொல்ல உங்களுக்கும் நிறையவே இருக்கும்.

Saturday, October 22, 2011

‘‘எந்த ஆன்மிகவாதியாலும் தொட முடியாத எல்லையில் நிற்பவன் கம்யூனிஸ்ட்''

ச.தமிழ்ச்செல்வன் நேர்காணல் – 2011 அக் 30-த சண்டே இந்தியன் இதழில்

நேர்கண்டவர் : பேராச்சி கண்ணன்

ச. தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் THI_6313 சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக ஆறு ஆண்டுகள் பதவி வகித்தவர். தற்போது மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இருளும் ஒளியும், அரசியல் எனக்கு பிடிக்கும் உட்பட முப்பது நூல்களை வெளியிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருக்கும் இவர், தமிழகம் முழுவதும் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருப்பவர். தமுஎகச மற்றும் இடதுசாரிகளின் பங்களிப்புகள், முற்போக்கு எழுத்து உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பேராச்சி கண்ணனிடம் தெளிவாகப் பதிலளிக்கிறார்

தமிழின் நம்பிக்கை அளிக்கும் சிறுகதை எழுத்தாளராக அறிமுகமானவர் நீங்கள். பிறகு முற்றிலும் களச்செயல்பாட்டாளராக மாறிவிட்டீர்கள். ஏன் இந்தத் தேர்வு?

எல்லா மனிதர்களுக்குமே புறச்சூழல் தான் அகத்தூண்டுதலைத் தீர்மானிக் கிறது. என்னுடைய வாழ்க்கையில் புறச்சூழல் தூண்டுதல்தான் எழுதக் காரணமானது. எழுத்து முக்கியம்தான். ஆனால் அதைவிட களப்பணி முக்கியமானதாக இருக்கிறது. இது ஒரே நாளில் எடுத்த முடிவல்ல. எழுதிக் கொண்டே களப்பணி செய்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் களப்பணியே அதிகமாகிவிட்டது. படைப்பாளியின் நோக்கம் மக்களுக்குச் சொல்லவேண்டும் என்பதுதான். நாம் பார்த்த கண்டடைந்த வாழ்வனுபவங் களை சகமனிதர்களுக்குச் சொல்வது தானே எழுத்து. இருந்தும் கதை வழியாகச் சொல்வதைவிட, நேரடியாகச் சொல்வது உடனடி தேவை என்ற உணர்வு எனக்குள் தோன்றியது. மேலும் சுதந்தரத்திற்குப் பிறகு நடந்த மாபெரும் பண்பாட்டு இயக்கம் அறிவொளி இயக்கம். அப்படிப்பட்ட மக்கள் இயக்கம் அழைக்கும்போது வீட்டில் சும்மா இருக்கமுடியாது. அதனால் களப்பணிக்கு வந்தேன். இப்போது நேரமின்மையால் எழுத முடியவில்லை. ஆனால் நான்கு இரவுகள் கிடைத்தால் போதும் ஒரு சிறுகதை எழுதிவிடுவேன்.

தொடர்ந்து சிறுகதைகள் எழுதாமல் போனதில் வருத்தம் உண்டா?

கதை எழுத முடியவில்லையே என்ற வருத்தம் ஒவ்வொரு நாளும் எனக்குள் இருக்கிறது. நாம் யார் என்ற அடையாளம் இருக்கிறது. எனக்கு சிறுகதை எழுத்தாளர் என்ற அடையாளம் உள்ளது. ஆனால் நேரம் தான் போதுமானதாக இல்லை. இப்போது நிறைய பேர் எழுத வந்துள்ளனர். இது ரொம்ப மகிழ்ச்சியான விஷயம். ஆனால் மின்னணு ஊடகம் வந்த பிறகு மக்களின் வாசிப்புத்திறன் குறைந்துள்ளது. நல்ல நூல்களை வாசிக்கும் வாசகர்கள் குறைந்துவிட்டனர். இப்போது மேலோட்டமாக வாசிக்கும் மனநிலை வாசகர்களிடையே உள்ளது. இது ரிமோட் கண்ட்ரோல் மனநிலை. சுவாரசியமான சேனல் பார்க்கலாம்; இல்லையெனில் மாற்றிவிடலாம். ஆனால் அதேநிலையில் புத்தகங்களையும் மேற்கொள்ள முடியாது. உள்ளே போனால் படித்து தான் ஆகவேண்டும். அதற்கான காலம் எடுத்துதான் வாசிக்கவேண்டும். மேலும் தற்போது வெகுஜன இதழ்களில்கூட கதைக்கான இடம் என்பது இல்லாமல் போய்விட்டது. சில இதழ்களில் ஒரு பக்க கதை மட்டும் போடுகின்றனர். காரணம் சந்தையில் மதிப்பு இல்லை என்பதுதான். சீக்கிரம் சலிப்படைவது என்பது இன்றைய காலத்தின் மனநிலையாக இருக்கிறது.

ஒரு கலாச்சார இயக்கமாக தமுஎகசவின் செயல்பாடுகள், தமிழகத்துக்கு செய்திருக்கும் பங்களிப்புகள் பற்றிக் கூறுங்களேன்?

தமிழ்நாட்டில் ஏழே கால் கோடி பேர் உள்ளனர். அதில் சில லட்சம் பேர்களைத் தொடுபவர்களாக நாங்கள் இருக்கிறோம். தமுஎகச தமிழ்ச் சமூகத்தின் மனச்சாட்சி. அந்தந்த நேரத்தில் மனச்சாட்சி என்ன பேசுமோ அதை எழுத்தாளர்கள் பேச வேண்டும். எழுத்தாளர்கள் என்ன பேசவேண்டும் என்பதை தமுஎகச சொல்லிக் கொண்டே இருக்கிறது. உதாரணமாக விவசாயிகள் தற்கொலைகள் நடக்கும்போது, அதைப் பற்றி ஏன் பேசவில்லை என்று கேட்கிறோம். எந்த ஊடகமும் சாதாரண விவசாயிகள் பற்றியோ, தொழிலாளிகள் பற்றியோ பேசுவதில்லை. முதல் பக்கத்தில் அவர்களைப் பற்றிய முக்கியமான செய்திகூட போடுவதில்லை. நாங்கள் மக்களின் மனச்சாட்சியாக இருந்து அதைப்பற்றி பேசுகிறோம். அன்று 35 பேருடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்று 21 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்தளவு வளர்ச்சி உள்ளது. பங்களிப்பைப் பொறுத்தவரை கலை இலக்கிய இரவு என்ற பண்பாட்டுத் திருவிழாவை நடத்து கிறோம். அதன்மூலம் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருக்கும் திறன் வாய்ந்தவர்களை அந்த மேடையில் ஏற்றுவோம். அடுத்து தெரு சினிமா இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளோம். நல்ல திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றை தெருக்களில் போட்டுக் காண்பிப்பது. இதன் மூலம் மக்களின் சினிமா ரசனையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். அடுத்து நாட்டுப்புற ஆய்வுகள் இயக்கம் தொடங்கி யுள்ளோம். 1960&ல் ஜீவானந்தம் தலைமையில் பேராசிரியர் நா.வானமாமலை பொறுப்பில் நாட்டுப்புற இலக்கியங்களை, கலைகளை தொகுத்து வளர்த்தெடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அதில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. இவை எத்தனையோ மாவட்டங்களில் தொகுக்கப்படாமல் உள்ளன. விடுகதை, சொலவடை, நாட்டுப்புறக் கதைகள், பொருட்கள் சார்ந்த பண்பாடு என நிறைய பிரிவுகள் உள்ளன. இதில் எப்படி ஆய்வு செய்வது, தொகுப்பது என்பது பற்றி பயிற்சி கொடுத்துள்ளோம். அடுத்து உள்ளூர் வரலாறு எழுத பயிற்சி கொடுக்கிறோம். இதையெல்லாம் தமுஎகசவால் மட்டுமே செய்யமுடியும். நாட்டுப்புறக் கலைஞர்கள் வாரியம் கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டதற்கு தமுஎகசவின் போராட்டம்தான் காரணம்.

கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தை குறுக்கும் நெடுக்குமாய் பயணம் செய்து இருக்கிறீர்கள். தமிழகம் எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

தமிழகத்தில் இளைஞர்கள், இளம் பெண்கள் யாரும் சொந்த ஊர்களில் இல்லை. ஏனெனில் பிழைப்பிற்கு இங்கே வழியில்லை. பிழைப்புத் தேடி இடம் பெயர்ந்து அலைகின்றனர். நான் பார்த்த பெரிய துயரம் இது. அடுத்த துயரம் அழிக்கமுடியாத சாதிய உணர்வு. அது மக்களிடையே இறுகிப் போய் உள்ளது. சிறுபான்மையினராக இருக்கும் மக்களான அருந்ததியினர், அரவாணிகள் எல்லோரும் தங்கள் குரலை வலுவாக உயர்த்தி வெளிவந்துள்ளனர். மாற்றுத்திறனாளி கள் இன்று ஒருங்கிணைந்துள்ளனர். ஒடுக்கப்பட்ட அனைவரும் இன்று வெளிவந்துள்ளனர். அடுத்து அணி திரட்டப்பட்ட தொழிலாளர்கள் வர்க்கம் குறைந்துவிட்டது. தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்த முறையில் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற, இரக்கமற்ற, அறிவில்லாத நாற்கர சாலைகள் வந்துள்ளன. இதனால் கிராமங்கள் துண்டாகிக் கிடக்கின்றன. இதில் சாதாரண மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அடுத்து தமிழகத்தில் குடிப்பழக்கம் அதிகமாகியுள்ளது. தொழிலாளிகள், படைப்பாளிகள், இளைஞர்கள் என அனைவரும் போதைக்கு அடிமையாகியுள்ளனர். ஏனெனில் பிரச்னைகள் அதிகமாகி விட்டன. பிரச்னைகளைச் சமாளிக்க தெரியாமல் அல்லாடுகின்றனர். பொருளாதாரப் பிரச்னைகளை பண்பாட்டுத் தளத்தில் வைத்துத் தீர்க்க முயற்சி செய்கின்றனர். இதனால் அதிலிருந்து தப்பிக்க போதைக்கு அடிமையாவதும், கோவிலுக்குச் செல்வதும், சினிமாவிற்குச் சென்று மகிழ்ச்சியாக இருப்பதும் அதிகரித்துள்ளது.

அறிவொளி இயக்கத்தில் உங்கள் செயல்பாடுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் பணிகள் தமிழகத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?

அறிவொளி இயக்கம்தான் கல்வி என்பது முக்கியம் என்பதை மக்கள் மத்தியில் அழுத்தம் திருத்தமாக உணர்த்திய இயக்கம். அறிவொளி இயக்கத்திற்கு வந்தவர்கள் அனைவரும் படிக்காதவர்கள். முதியோர் கல்வி என்பது வேறு. அறிவொளி இயக்கம் என்பது வேறு. நாங்கள் 15 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களை மட்டுமே சேர்த்து நடத்தினோம். ஏனெனில் இவர்கள்தான் நாளைய பெற்றோர். இவர்கள் படிக்கமுடியவில்லை என்றாலும் அவர்களது குழந்தைகளின் கல்வியை உணர்த்தினோம். இதனால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை அதிகமானது. பள்ளிகளின் தேவையும் அதிகமானது. கல்வி குறித்து மக்களிடையே அக்கறை ஏற்பட்டது. பள்ளிகள் ஏன் இப்படி இருக்கின்றன என்ற கேள்வியையும் மக்களிடையே எழச் செய்தது. கல்விக்காக இன்று வீதிக்கு வந்து போராட்டம் நடத்தும் அளவிற்கு மக்கள் வந்ததற்கு அறிவொளி இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான் காரணம். இதனால் அரசும் பல திட்டங்களை வகுத்தது. தமிழகம் முழுவதும் கல்வி சம்பந்தமான நிறைய மாற்றங்கள் வந்தன.

தமிழகத்தில் ஒரு காலகட்டத்தில் இடதுசாரி இயக்கங்களுக்கு இருந்த செல்வாக்கு இப்போது இல்லாமல் போய்விட்டதே... என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?

இடதுசாரி இயக்கங்கள் இன்று நிறையவே வளர்ந்துள்ளார்கள். ஆனால் மற்ற கட்சிகள் அதைவிட வேகமாக வளர்ந்துள்ளன. காரணம் இடதுசாரிகள் உண்மையான, அடிப்படையான பொருளாதார மாற்றத்திற்குப் போராடி வந்தனர். ஆனால் மக்கள் பண்பாட்டு ரீதியாகப் பேசுபவர்கள் பக்கம் போய்க் கொண்டிருக்கின்றனர். பண்பாட்டு ரீதியான விஷயங்களில் இடதுசாரிகள் கவனம் செலுத்தினால்தான் வேகமாக முன்னேறமுடியும். திராவிட இயக்கம் மொழி சார்ந்து பேசி வளர்ந்தது. இன்று தலித் அமைப்புகள் ஓரளவு வளர்ந்துள்ளன. ஆனால் எந்த அமைப்பும் தலித் மக்களுக்கு நிலம் தேவை என்று பேசவில்லை. நிலம் கிடைத்தால்தான் முன்னேற முடியும் என்பது அடிப்படை உண்மை. அன்றிலிருந்து இன்றுவரை அவர்களுக்கு நிலம் வேண்டி போராடி வரும் ஒரே கட்சி இடதுசாரி இயக்கம் தான். ஆனால் தலித் மக்கள் தலித் அமைப்புகளுக்குப் பின்னால்தான் சென்றனர். காரணம் அன்றாடம் அவர்கள் அனுபவிக்கிற ஒடுக்குமுறையை அந்தக் குரல் வெளிப்படுத்தியது. அவர்கள் பொருளாதாரத்தைப் பேசவில்லை; உணர்ச்சிகளை மட்டுமே பேசினர். உணர்ச்சிகரமான மக்களாக இந்திய மக்கள் இருப்பதால் உண்மையான அரசியலைப் பேசும் இடதுசாரிகள் வளரவில்லை. இப்போதுதான் அவர்கள் பண்பாட்டுத் துறையில் கவனம் செலுத் தத் தொடங்கியுள்ளனர். சாதிய பிரச்னை யில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியை ஏற்படுத்தியுள்ளோம். உத்தபுரம் ஆரம்பித்து இதுவரை 25 சாதிய சுவர்களை இடித்துள்ளோம். கலை இலக்கியத் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இதனால் எதிர்காலத்தில் இடதுசாரிகள் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

அரசு விருதுகள் தேர்வுக்குழுவில் இடதுசாரிகள் இருந்துகொண்டு அமைப்பு சார்ந்த சராசரியான எழுத்தாளர்களுக்கு விருதுகளைத் தருகிறார்கள் என்ற விமர்சனம் உள்ளதே?

தேர்வுக்குழுவின் தகுதியைப் பொறுத்து விருதுகள் வழங்கப்படுகின்றன. பெயரை மட்டும் அறிவிக்காமல் எதற்காக கொடுக்கிறோம் என்பதை வெளிப்படையான விளக்கத்தோடு அறிவிக்கவேண்டும். அப்போதுதான் கேள்வி எழுப்ப முடியும். தமுஎகச ஆரம்பித்து 36 ஆண்டுகள் ஆகிறது. எங்கள் அமைப்பு சார்ந்து யாருக்கும் சாகித்ய அகாதெமி விருது கிடைத்ததில்லை. இடதுசாரி அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கும் கொடுத்ததில்லை. தமுஎகசவில் இருந்து முதல் முறையாக சாகித்ய அகாதெமி வாங்கியது மேலாண்மை பொன்னுச்சாமி மட்டும்தான்.

உ.ரா. வரதராஜனின் தற்கொலையை முன்வைத்து உங்கள் கட்சி ஒழுக்க வாதப் பிடியில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது பற்றி?

அவர் தற்கொலை செய்துகொண்டது ரொம்ப தவறான முடிவு. அவர் எனக்கு தனிப்பட்ட முறையில் முக்கியமான வழிகாட்டி. எனக்கு அந்தச் சம்பவம் மனரீதியாக அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அவர் செய்த தவறு உறுதியான பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியில் நடவடிக்கை என்பது திருந்துவதற்கு அளிக்கும் ஒரு வாய்ப்பு. அவரைக் கட்சியில் இருந்து நீக்கவில்லை. இருந்த பொறுப்பில் இருந்து அடுத்தகட்ட பொறுப்பிற்குப் போட்டனர். அதனைச் சரி செய்து திருத்திக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும். இதுமாதிரி நிறைய உதாரணங்கள் உள்ளன. சில விஷயங்களை நாம் ஏற்றுக்கொண்டுதான் வந்தோம். என்னுடைய நலனை பொதுநலன் மற்றும் கட்சியின் நலனிற்கு உட்படுத்துவேன். கட்சியின் நலனை மக்களின் நலனிற்கு உட்படுத்துவேன் என எழுதி கையெழுத்திட்டுதான் வந்துள்ளோம். இதனை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது. சும்மா கட்சியைத் திட்டுவதற்காக இதனைப் பயன்படுத்துகின்றனர். இந்த விஷயத்தை நாங்கள் ஒழுக்கரீதியாகப் பார்க்கவில்லை. இருந்தும் மக்கள் எங்களை எப்படி பார்க்கிறார்கள்? என்பது முக்கியம். மக்களிடையே கம்யூனிஸ்ட் பற்றி எதிர்பார்ப்பு உள்ளது. கம்யூனிஸ்ட் இப்படி இருக்கலாமா? என்றுதான் நினைப்பார்கள். எந்த மக்களுடன் வேலை செய்கிறோமோ அங்கே கம்யூனிஸ்ட் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழவேண்டும்.

ஒரு கம்யூனிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பொதுநலன்தான் முக்கியம் என்று இருக்கவேண்டும். அதாவது கம்யூனிஸ்ட் என்பவன்தான் வாழும் காலத்தில் மனித குலம் சேகரித்து வைத்துள்ள அத்தனை அறிவையும் உள்வாங்கவேண்டும். அறிவாளியாக, படைத்தளபதியாக இருக்கவேண்டும். உலகத்திலேயே மிகச் சிறந்த மனிதாபிமானியாகவும் சபலம், சலனம் இல்லாதவனாகவும் இருக்கவேண்டும். சுயஒழுக்கத்தை அவனே உருவாக்க வேண்டும். விமர்சனம், சுயவிமர்சனம் என்பதை கறாராக வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். சுற்றி நடப்பதை, இருப்பவர்களை, சமூகத்தை விமர்சனம் செய்ய வேண்டும். தன்னையும் சுயவிமர்சனப்படுத்திக் கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட்டாக வாழ்வது என்பது மனரீதியான விஷயம். மிகப்பெரிய ஞானிகளால் கூட ஒரு சரியான கம்யூனிஸ்ட் தோழரின் மனஇடத்திற்குப் போக முடியாது. எந்த ஆன்மிகவாதியாலும் தொட முடியாத எல்லையில் நிற்பவன் கம்யூனிஸ்ட். இவன் அடைகிற மனஉளைச்சல் யாரும் அடையமுடியாது. அடுத்தவர்களுக்காக அடி, உதை வாங்குவதில் ஏற்படும் சந்தோஷம் வேறு எதிலும் இல்லை என்று நினைப்பவர்களும் அவர்கள் தான்.

இராணுவப் பணி உங்கள் ஆளுமையில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றிக் கூறுங்கள்?

நான் இராணுவத்திற்குப் போகும்போது காந்தியவாதியாகப் போனேன். அந்த வாழ்க்கை என்னை மார்க்சியவாதியாக மாற்றியது. இந்த நாட்டின் சொத்து களை, மக்களைப் பாதுகாக்க தேச எல்லையில் இருந்து பணியாற்றுகிறோம். ஆனால் உண்மையில் கோடிக்கணக் கான மக்கள் சொத்தோ சுகமோ இல்லாமல்தான் வாழ்கின்றனர். பிறகு யார் சொத்தைப் பாதுகாக்க தேச எல்லையில் நிற்கிறோம் என்ற கேள்வி எழுந்தது. தேசம் என்பது மக்கள்; எல்லையல்ல. மக்களின் நல்வாழ்வு தான் தேசம். எல்லோருக்கும் நல்வாழ்வு கிடைக்க மக்களோடு இருந்துதான் போராட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதனால் ஐந்தரை ஆண்டு பணியை முடித்துக்கொண்டு அங்கிருந்து வந்துவிட்டேன்.

தாத்தா தொடங்கி சகோதரர்கள் வரை நாடகம், எழுத்து என்ற தொடர்பைக் கொண்ட குடும்பம் உங்களுடையது. உங்களுக்கும் கோணங்கிக்கும் முருகபூபதிக்கும் படைப்புரீதியாக உரையாடல்கள் நடக்குமா?

இதில் எங்கள் அப்பாவை விட்டுவிட்டீர்கள். அவரும் எழுத்தாளர் தான். இரண்டு நாவல், ஒரு சிறுகதை தொகுப்பு எழுதியுள்ளார். எல்லோருமே இலக்கியத் தொடர்பு உள்ள ஆட்கள் தான். இப்போது வீட்டில் நான்கு எழுத்தாளர்கள் உள்ளோம். நாங்கள் நாலு பேருமே நாலு திசையில் இருக்கிறோம். அவரவர் பாணியில் மக்களை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறோம்.

கோணங்கியின் கதைகள் புரியவில்லை என்று சொல்லப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

புரியாத தன்மை இருக்கிறது. ஆனால் அதுமட்டும்தான் இலக்கியம் என்று கோணங்கியின் எழுத்துகளை மட்டுமே படிப்பவர்கள் ஐநூறு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு அந்த எழுத்து முறை புரிகிறது; பிடித்திருக்கிறது. ஆனால் எனக்கு அதில் விமர்சனம் இருக்கிறது. அப்படி எழுத வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். ஓரளவு வாசிப்புள்ள மக்களுக்காவது அந்த எழுத்து புரிய வேண்டும். ஆனால் அவர்கள் (கோணங்கியும் முருகபூபதியும்)எது இலக்கியம் என்று நினைக்கிறார்களோ அப்படி எழுதுகிறார்கள். அதை சாதாரணமாக எழுதவில்லை. அதில் கடுமையான உழைப்பும் இருக்கிறது.அது அவர்களின் சுதந்திரம்.

இன்றைய உலகமயமாதல் சூழலில் தமிழகப் பின்னணியில் இடதுசாரிகளின் தேவையும் பங்களிப்பும் என்ன?

இடதுசாரிகள் இல்லை என்றால் மக்களை நூறு சதவிகிதம் அடிமையாக்கிவிடுவார்கள். ஒரு கட்டம் வரை குட்ட குட்ட குனிந்துகொண்டேதான் இருப்பார்கள் மக்கள். சுதந்தர காற்று தமிழகத்தில் இருப்பதற்கு கம்யூனிஸ்ட் மட்டும்தான் காரணம். இன்று வேலை செய்யும் அத்தனை பேருக்கும் சங்கம் என்ற ஒன்றை வைத்து குரலை உண்டாக் கியது கம்யூனிஸ்ட் கட்சிதான். இல்லை யென்றால் குரலே இல்லாமல் இந்தச் சமூகம் அடிமையாகியிருக்கும்

rd flag

Monday, February 28, 2011

போர்வையில்லாமல்..

6974974-surreal-dark-portrait-of-a-young-man-covering-his-face-and-eyes-with-his-hands-but-he-can-see-right-

நாங்கள் பள்ளியில் சின்ன வகுப்புகளில் இருந்தபோது தரையில் பலகை போட்டு அமர்ந்திருப்போம்.பெஞ்ச் வசதியெல்லாம் அப்போது(இப்போதும்தான்) கிராமப்புற ஆரம்பப்பள்ளிகளில் கிடையாது.சில வகுப்புகளுக்கு பலகையும்கூட இருக்காது.தரையில் அமர்ந்திருப்போம்.பலகையோ தரையோ பெஞ்சோ ஆண்களுக்குத் தனி இடமும் பெண்களுக்குத் தனி இடமும் என்பது மட்டும் உறுதியாக இருக்கும்.எங்கள் ரெண்டாப்பு டீச்சரிடம் ஒரு பழக்கம் இருந்தது.அவர் பிரம்பு வைத்துப் பிள்ளைகளை அடிப்பதில்லை.அடி ஸ்கேலை வைத்தும் புறங்கையில் சொட் சொட் என்று அடிப்பதில்லை. தலையில் அவரும் கொட்டுவதில்லை மற்ற பிள்ளைகளை விட்டுக் கொட்ட வைப்பதுமில்லை.தோல் சிவக்கக் கிள்ளுவதுமில்லை.குனிய வைத்து முதுகில் மொத்துவதுமில்லை.வெயிலில் போய் முட்டங்கால் போட வைப்பதுமில்லை. கொளுத்தும் வெயிலில் மைதானத்தை நாலு ரவுண்டு ஓடி வரச்செய்வதுமில்லை.இப்படியான ’அங்கீகரிக்கப்பட்ட’ தண்டனைகள் எதையும் பிள்ளைகள் மீது பிரயோகிக்கும் வழக்கம் அவருக்கில்லை.

கேள்விக்குப் பதில் சொல்லாவிட்டால்-வாய்ப்பாடு ஒப்பிக்காவிட்டால்-வகுப்பில் சேட்டை பண்ணினால் அவர் ஒண்ணுமே செய்ய மாட்டார்.அவன் பையனாக இருந்தால் அவனைத் தூக்கி பெண்கள் பலகையில் பெண்பிள்ளைகளுக்கு நடுவே உட்கார வைத்துவிடுவார்.பெண்ணாக இருந்தால் ஆம்பிளைப்பயல்கள் பலகையில் உட்கார வைத்து விடுவார்.இதுதான் அவர் தரும் தண்டனை.அதைப் பார்த்து வகுப்பே சிரிக்கும்.அந்தச் சிரிப்பை அவர் உற்சாகப்படுத்துவார்.செத்து விடலாம்போல இருக்கும்.

யோசித்துப்பார்க்கையில் என் சின்ன வயதில் ஆண் பெண் பேதம் என்பது இப்படி வகுப்பறையில்தான் எனக்கு அறிமுகமானதாகப் படுகிறது.தெருக்களில் நாங்கள் ஆண்-பெண் குழந்தைகள் சேர்ந்துதான் விளையாடிக்கொண்டிருப்போம். வகுப்பறையில் உண்டாக்கப்பட்ட இந்த பேதம் உருவாக்கிய கூச்ச உணர்வு பின்னர் நெடுங்காலத்துக்குக் என் கூடவே வந்து கொண்டிருந்தது .பெண்களோடு பேசவும் கூச்சப்படும் பையனாகவே நான் கல்லூரிக்காலம் கழிந்தபின்பும் இருந்து வந்தேன்.கிராமப்புறங்களில் இப்போதும் இப்படி நிறையப்பேர் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

என் நண்பரான பேராசிரியர் ஒருவர் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தார். அவரை வழிகாட்டியாகக் கொண்டு ஆய்வு செய்யும் மாணவர்களில் ஆண்களிடம் ஒருவிதமாகவும் பெண்களிடம் மட்டும் எப்பவும் கடுகடுப்பாகவும் தான் நடந்து கொள்வதாகவும் அது ஏன் என்று தனக்கே புரியவில்லை என்றும் கூறினார்.பெண்களிடமிருந்து ஒரு தூரத்தைத் தான் தக்க வைத்துக்கொள்ளும் உளவியலிலிருந்துதான் அந்தக் கடுகடுப்பு வந்திருக்கும் என்று பின்னர் கூறினார். அது பெண் என்கிற எச்சரிக்கை மணி உள்ளே ஒலித்ததும் ஆண் மனதுக்குள் இயல்பு மனநிலை என்னும் கோபுரம் இடிந்து தகரத்துவங்குவதன் வெளிப்பாடு.

என் எதிர்வீட்டில் ஒரு நண்பர் இருந்தார் அவர் ஆண்களிடம் அவ்வளவாகப் பேசமாட்டார்.பெண்கள் என்றால் நட்டு கழண்டதைப்போல வலிய வலியப் போய் வழிய வழியப்பேசிக்கொண்டிருப்பார். இந்த ‘வழிதல்’ என்பது எல்லா ஆண் மக்களிடத்தும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஏதாவது ஒரு மனுஷியிடத்து நிகழ்ந்துதான் விடுகிறது. வழிதலின் வரலாற்றை அவரவர் சொந்த வாழ்வுக்குள் ஊடறுத்துச் சென்று ஆய்ந்து பார்த்துச் செப்பனிட்டுக்கொள்ள வேண்டும்.இன்னும் சில நண்பர்கள் அக்கா,தங்கச்சி என்று யோசிக்காமல் உடனடியாக ஒரு உறவுப்பெயரிட்டுப் பெண்களோடு பேசத்துவங்கி விடுவார்கள்.எதுக்கு வம்பு என்கிற ரகம் இது.இதுதான் நம் பொதுப்புத்தி சங்கடப்படாமல் இருக்கச் செய்து கொள்ளும் பொதுவான ஏற்பாடாக இருக்கிறது.

ஐம்பது வயது தாண்டிய பிறகு நானும் இந்த பார்முலாவைப் பின்பற்றி பெண்பிள்ளைகளை மகளே என்று சட்டென அழைக்கத்துவங்கினேன்.அவர்களுக்கும் அது சரியென்று படுவதால் ஏதோ ஒருவித இயல்பும் பரஸ்பர அன்பும் ஆரோக்கிய அளவு குன்றாமல் போய்க்கொண்டிருக்கிறது.ஆனால் ஒரு மனுஷி இதை ஏற்கவில்லை.மகளே என்று அவசரமாக நான் அழைத்ததும் பட்டென்று என் முதுகில் அறைந்தாள்.எதுக்கு அவசரமா ஒரு போர்வையைப் போட்டு மூடறீங்க. எந்தப் போர்வையும் இல்லாமல் ஒரு மனுஷரும் மனுஷியும் இந்த உலகத்தில் இயல்பாகப் பழக முடியாதா என்ன? என்று கேட்டாள்.முதுகில் பட்ட அந்த அடி என்னைப் பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்பில் கொண்டுபோய் நிறுத்திவிட்டது.ஆண்பெண் பால் பேதம் –பேத உணர்வு என்பதில் இயற்கையானது என்பது மிகமிகக் குறைந்த சதவீதம்தான் என்று படுகிறது. மீதியெல்லாமே இச்சமூகத்தால்- நம் பண்பாடு என்னும் வசக்கும் கருவியால் - நம் மூளைகளில் ஏற்றப்பட்டதுதான். நான் இவ்விதம் வசங்கிய இடங்களை மனதுள் தேடித்தேடி அழித்துக்கொண்டிருக்கிறேன்- இந்த அறிவு முன்னாடியே வராமப்போச்சே என்கிற மனக்குறையுடனும் இக்கட்டுரையுடனும்.

Monday, October 4, 2010

பண்பாட்டுச் சீரழிவை ஊதி வளர்க்கும் சன் குழுமம் : தமுஎகச கண்டனம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

மாநிலக்குழு

28/21, வரதராஜபுரம் பிரதான சாலை,தேனாம்பேட்டை,சென்னை-600018

பத்திரிகைச்செய்தி 04-10-2010

சன் பிக்சர்ஸ் தயாரிப்பான எந்திரன் திரைப்படம் தயாரானது முதல் அக்கம்பெனியார் படத்துக்கான விளம்பரம் என்ற பெயரில் செய்து வரும் ஆர்ப்பாட்டங்கள் நியாய உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரையும் கவலை கொள்ளச்செய்வதாக உள்ளன. தங்கள் கையில் தொலைக்காட்சி அலைவரிசைகள் இருப்பதாலும் தாங்கள் போட்ட பணத்தைப்போல பல மடங்கு சம்பாதித்துவிட வேண்டும் என்கிற வியாபார வெறியுடனும் தமிழக இளைஞர்களைத் தவறான வழியில் திசைகாட்டும் வேலையை சன் குழுமம் செய்து வருகிறது.அதிகாலை 4 மணி முதல் திரைப்படத்தைத் திரையிடுவது ,இளைஞர்கள் மொட்டை போட்டுக்கொள்வதையும் கோழிகள் அறுப்பதையும் கட் அவுட்டுகளுக்குப் பால் ஊற்றுவதையும் மிகச்சிறந்த முன்னுதாரணமான பண்பாட்டு அசைவுகள் போல சன் டிவியிலும் தினகரன் பத்திரிகையிலும் திரும்பத் திரும்ப வெளியிட்டுத் தமிழக இளைஞர்களை மேலும் மேலும் அவ்விதமே செய்யத்தூண்டுகிறது.தமிழகத்தின் பலமான ஒரு உழைப்புச் சக்தியை இவ்விதம் சிதைக்கும் பணியை சன் குழுமம் செய்கிறது.சன் குழுமம் செய்து வரும் இந்தப் பண்பாட்டுச் சீரழிவு நடவடிக்கையை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. பொறுப்பும் மனச்சாட்சியும் உள்ள ஒவ்வொரு தமிழரும் இதைக் கண்டனம் செய்ய வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.தாம் விரும்பும் திரைக்கலைஞரைக் கொண்டாடும் ரசிக மனநிலையை ஒரு பைத்திய மனநிலைக்கு வழிநடத்தி இட்டுச்செல்லும் சன் குழுமத்தின் வியாபார வலையில் விமர்சனமின்றி வீழ்ந்துவிட வேண்டாம் எனத் தமிழகத்து இளைஞர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்ட கண்டன அறிக்கையை தங்கள் இதழில் வெளியிட்டு உதவுமாறு அன்புடன் வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம்.

அருணன்                                   ச.தமிழ்ச்செல்வன்

மாநிலத்தலைவர்                      பொதுச்செயலாளர்

Monday, August 2, 2010

தப்புமா தமிழ்த் திரையுலகம்?

kalanidhi 1

1897ஆண்டு சென்னையில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் முதன் முறையாக ஒரு சினிமா திரையிடப்பட்டது.அடுத்த 15 ஆண்டுகளில் -1916இல் நடராஜ முதலியாரும் தர்மலிங்க முதலியாரும் சேர்ந்து கீசகவதம் படத்தைச் சென்னையிலேயே தயாரித்தார்கள்.இன்று இந்திய சினிமாவில் தமிழ்ச் சினிமாவின் வகிபாகம் மிக முக்கியமானதாக மாறிவிட்டது.ஆண்டுக்கு 100க்குக் குறையாத எண்ணிக்கையில் தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகின்றன.

இக்கட்டுரையில் தமிழ் சினிமாவின் கலாபூர்வமான செய்திகளைப் பற்றிப் பேசப்போவதில்லை. அதன் வியாபாரத்தன்மைகள் மற்றும் ஏகபோகமாகிவரும் சினிமாத்துறையின் சில சிக்கல்கள் அது கலையை அழிக்கும் அபாயம் இவை பற்றியே பேச இருக்கிறோம்.ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் முதலீடு செய்யும் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் துவங்கி எப்போதாவது ஒரு வெண்ணிலா கபடிக்குழு மாதிரி 3 கோடி முதலீட்டில் ஒரே ஒரு படம் எடுக்கும் சின்னப் பட முதலாளிகள் வரை பலதரப்பட்ட முதலீட்டாளர்கள் மோதும் களமாக இன்று கோலிவுட்/கோடம்பாக்கம் என்றழைக்கப்படும் தமிழ்த் திரையுலகம் இருக்கிறது. 3 கோடியில் ‘பூ’ வருகிறது 100 கோடியில் ‘எந்திரன்’ வருகிறான்.

1931இல் காளிதாஸ் படத்துடன் தமிழ்ப் பேசும்படத்தின் வரலாறு துவங்குகிறது எனில் 1948 இல் ஜெமினி ஸ்டூடியோ வெளியிட்ட சந்திரலேகா அன்றைக்கே 30 லட்ச ரூபாய் (இன்றைய மதிப்பில் 25 மில்லியன் டாலர்) செலவில் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுதும் விநியோகிக்கப்பட்ட முதல் படம் என்ற பேர் பெற்றது. வியாபாரத்தை பெருக்கி ஒரு முன்மாதிரியை உருவாக்கிய படம் சந்திரலேகா.அதன் இயக்குநர்/தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன் ஆவார்.அப்போதெல்லாம் ஏ.வி.எம் மின் சரஸ்வதி ஸ்டோர்ஸ் மட்டுமே ஏகபோகமாக அனுபவித்து வந்த விநியோக வியாபாரம் (அதில்தான் முற்போக்கான கலைப்படமான பாதை தெரியுது பார் முடக்கப்பட்டது )பின்னர் பரவலானது.

தயாரிப்பாளர் பணம் கொடுப்பார்.இயக்குநர் படம் எடுப்பார்.விநியோகஸ்தர் படத்தை வாங்குவார்.தியேட்டர்களில் அது ஓடும் .மக்கள் பணம் கொடுத்துப் படம் பார்ப்பார்கள்.அந்தப்பணம் அப்படியே தியேட்டர் முதலாளியிலிருந்து தயாரிப்பாளர் வரை அவரவர் விகிதாச்சாரப்படி பங்காகாப் போகும் என்கிற எளிய சூத்திரமாக ஒருகாலத்தில் இருந்த சினிமா வியாபாரம் இன்று எளிதில் புரிந்து கொள்ள முடியாத சிக்கல்களும் மர்மங்களும் நிறைந்த சூதாட்டக்களமாக மாறி நிற்கிறது.

சினிமா வியாபாரத்தின் பிரிக்கமுடியாத பகுதியாக சொல்லப்போனால் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அங்கமாக இன்று தொலைக்காட்சி அலைவரிசைகள் வந்து சேர்ந்துள்ளன.படம் தயாரிக்கப்பட்டு தமிழகத்தை சினிமா விநியோகத்துக்காகப் பிரித்து வைத்த ஏழு அல்லது எட்டு ‘ஏரியாக்களி’ல் படத்தை விற்பது மட்டுமே வியாபாரம் என்றிருந்த நிலை மாறி இன்று 1. படத்தின் வெளிநாட்டு விற்பனை உரிமை 2. படத்தின் பாடல் குறுந்தகடு (ஆடியோ சிடி) கேசட் உரிமை 3.தொலைக்காட்சி மற்றும் கேபிள் டிவி ஒளிபரப்பு உரிமை 4.வலைத்தளங்களில் ஒளிபரப்பும் உரிமை 5. மொழி மாற்ற மற்றும் மறு தயாரிப்பு (ரீ மேக்) உரிமை 6.வாகனங்களில் திரையிடும் உரிமை 7.படத்தின் வீடியோ -குறுந்தகடு மற்றும் அடர் தகடு உரிமை(சிடி/டிவிடி) 8.டிடிஎச் உரிமை 9.எப்.எம். சேனல்களில் ஒலி பரப்பும் உரிமை 10.செல்பேசிகளில் ரிங் டோன்களாகப் பயன்படுத்தும் உரிமை 11. படத்தின் சில அம்சங்களை பனியனில் தொப்பியில் அச்சிட்டு விற்பனை செய்யும் உரிமை 12.படத்தைப் பற்றி விளம்பரம் செய்ய பல்வேறு உத்திகளுக்கான உரிமை என்று இன்னும் பல விதமான வியாபாரங்களை உள்ளடக்கியதாக இன்றைய தமிழ்த் திரைப்படத் தொழில் மாறியுள்ளது.

மேற்குறிப்பிட்ட பலப்பல வியாபாரங்களுக்கு நடுவேதான் இன்று சினிமா என்கிற கலை வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது.கதையைத் தேர்வு செய்தோமா பொருத்தமான கலைஞர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் ஒருங்கிணைத்துப் படத்தைத் தயாரித்தோமா என்கிற கலாபூர்வமான உழைப்போடும் நிறைவோடும் இயக்குநர் என்கிற படைப்பாளி இன்று நிம்மதியாக ஒதுங்கிவிட முடியாது.கலைக்கு அப்பாற்பட்ட கலைமனதை அழிக்கக்கூடிய வேலைகள்தான் 70 சதவீதம் இன்று ஒரு இயக்குநர் பார்க்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.இது மிகவும் கவலை தரும் நிலையாகும்.

II

பொருளாதார உலகில் உலகமயம் தன் கொடுங்கரங்களை நீட்டுவதற்கு முன்னோடியாக ஊடக உலகில் உலகமயம் தன் சுவடுகளை அழுந்தப் பதித்து விட்டது.உலகமயத்தின் முன் தேவையின் காரணமாகவும் இது நிகழ்ந்திருக்கலாம். பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களுக்கேற்ற –பொருளாதார நடவடிக்கைகளுக்கேற்ற- நுகர்வோராக உலக மக்களின் மனநிலைகளைத் தகவமைக்க வேண்டிய பண்பாட்டுப் பணியை ஊடகம்தானே சக்தியுடன் செய்ய முடியும்?

இந்தியாவைப் பொறுத்தவரை 1957 இல் தூர்தர்ஷன் தன் ஒளிபரப்பைத் துவங்கினாலும் அது பெரிதும் மத்திய அரசின் பிரச்சாரப்பீரங்கியாக மட்டுமே செயல்பட்டு வந்தது.அச்சு ஊடகம் இந்தியாவில் முழுக்க முழுக்க தனியார் கைகளில் அரசின் கட்டுப்பாடின்றி ஆகக்கூடுதலான சுதந்திரத்துடன் செயல்படுவது வரலாறு.அதாவது 1980 வரையிலும்கூட கல்வி மறுக்கப்பட்ட பெருவாரியான விவசாயிகள்,தொழிலாளிகளுக்கு அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள தூர்தர்ஷன் என்றும் படித்த மத்திய தர வர்க்கத்தின் மூளைகளுக்குத் தீனி போட சுதந்திரமான அச்சு ஊடகம் என்றும் இந்திய ஊடக உலகம் வர்க்க ரீதியான கடமைகள் தீர்மானிக்கப்பட்டுத் தெளிவாக இயங்கி வந்தது.இந்திராகாந்தி பிரதமராகவும் ஆர்.வெங்கட்ராமன் நிதியமைச்சராகவும் இருந்த காலத்தில்தான் நாட்டை அடமானம் வைத்து ஐ.எம்.எப்பிடம் கடன் பெற்ற கதை துவங்கியது. இந்திரா தொலைக்காட்சியை ’தேசத்தை’க் கட்டும் சாதனமாகப்பார்த்தார்.அவர் ஆட்சிக்காலத்தில் மூன்று முக்கிய விஷயங்கள் நடந்தன. 1. வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பெரிய அளவில் நாடு முழுக்கக் கொண்டு சேர்த்தது 2.இன்சாட் 1 செயற்கைக்கோளை விண்ணில் ஏவி தொலைத்தொடர்பில் பெரும் புரட்சிக்கு வித்திட்டது 3. ஒளிபரப்பு நிலையங்களின் எண்ணிக்கையைப் பல மடங்கு பெருக்கியது.

இவ்வளவு செய்தாலும் தூர்தர்ஷன் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பைக்கூட எதிர்கொள்ள முடியாத நிலையில்தான் இருந்தது.இதற்கு மேலும் எண்ணெய் ஊற்றும் விதமாக இந்திய அரசு தொடர்ந்து கடைப்பிடித்த ‘ கதவைத் திறந்து விடும்’ கொள்கையின் காரணமாக உலக ஊடக ஜாம்பவான்கள் இந்தியாவுக்குள் சர்வசாதாரணமாக நுழைந்தனர்.1994இல் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட அந்நியப் படங்களுக்கு இந்தியாவில் இருந்த தடை நீக்கப்பட்டது.இந்தியப் படத்தயாரிப்பாளர்களின் அடிவயிறு கலங்க ஹாலிவுட் திரைப்படங்கள் அனகொண்டா,23பருத்தி வீரர்கள் ,ஹேரிபாட்டர் என்று வந்து குவியத்துவங்கின.நல்ல தமிழ் பேசும் இந்த ஹாலிவுட் படங்கள் வசூலை அமெரிக்காவுக்கு அள்ளிக்கொண்டு போயின.

இலங்கை வானொலியைச் சமாளிக்க தூர்தர்ஷன் வயலும் வாழ்வு போன்ற நிகழ்ச்சிகளோடு பழைய திரைப்படங்களைத் திரையிடும் முடிவை எடுத்தது.ஒளியும் ஒலியும் என்று வெள்ளிக்கிழமைகளில் புதிய திரைப்படப்பாடல்களையும் ஞாயிற்றுக்கிழமைகளில் திரைப்படங்களையும் திரையிடத்துவங்கியது.படத்தயாரிப்பாளர்கள் (குறைந்த பட்ஜெட் படங்களே) தூர்தர்ஷன் வாசலில் நீண்ட வரிசைகளில் காத்துக்கிடந்தனர்.இவ்வளவு இருந்தும் இறுகிப்போன முட்டாள்தனமான அதிகார வர்க்க நடைமுறைகளால் தூர்தர்ஷன் பெரிய அளவுக்கு வியாபார வெற்றியை ஈட்ட முடியவில்லை.

இந்நிலையில்தான் உலக நாயகர்களின் வருகை நிகழ்ந்தது.ஏற்கனவே உலக ஊடகம் குறிப்பிட்ட சில கம்பெனியாரின் ஆதிக்கத்துக்கு வந்திருந்தது.ஒரு கம்பெனி என்பது வெறும் தொலைக்காட்சிக் கம்பெனியாக மட்டும் இல்லாமல் அச்சு ஊடகம்,திரைப்படத் தயாரிப்பு,கேபிள் தொழில் எனப் பலவற்றஒ ஒருங்கிணைக்கும் கார்ப்பொரேட் கம்பெனியாக உருவெடுத்திருந்தது.

ஆஸ்திரேலியாவைச் சேந்த ராபர்ட் முர்தோக் 1960களில் இங்கிலாந்துச் சந்தையில் நுழைந்து 1980க்குள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஊடக உலகின் சக்கரவர்த்தியாக உயர்ந்தார்.அவருடைய நியூஸ் கார்ப்பொரேசன் கையில் கீழ்க்கண்ட மீடியா வலைப்பின்னல் இருக்கிறது:

· 132 தினசரிப் பத்திரிகைகள்

· ட்வெண்டியெத் செஞ்ச்சுரி ஃபாக்ஸ் எனப்படும் திரைப்படத் தயாரிப்பு,தொலைக்காட்சி சேனல் மற்றும் வீடியோ தயாரிப்பு நிறுவனம்

· ஆசியாவின் ஸ்டார் டிவி

· 22 அமெரிக்க டெலிவிஷன் சேனல்கள்

· டிவி கைடு உள்ளிட்ட 25 ஆங்கில இதழ்கள்

· ஹார்ப்பர் கோலின்ஸ் உள்ளிட்ட பல புத்தகப் பதிப்பு நிறுவனங்கள்

· ஃபாக்ஸ் செய்திச் சேனல்

· அமெரிக்கா,பிரிட்டன்,லத்தீன் அமெரிக்க நாடுகள்,ஜப்பான்,ஜெர்மனி,ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளின் பல்வேறு செனல்களில் அதிகபட்ச பங்குகள்

· இந்தியாவின் ஜீ டிவியில் 49.9 சத பங்கு (50 சதத்துக்கு மேல் அந்நிய பங்கு இருக்கக்கூடாது என்கிற கட்டுப்பாடு இருந்த காலத்தில்)

· டைம் வார்னர்,வியாகாம்,டிசிஐ,சோனி, எம்ஜிஎம் போன்ற பெரிய மீடியா நிறுவனங்களுடன் நீண்டகால ஒப்பந்தங்கள்

ஒரு உதாரணத்துக்காக முர்தோக்கின் கம்பெனியைப் பற்றி மட்டும் சொல்கிறோம்.இதே போல மிகப் பெரும் வலைப்பின்னல் உள்ள கார்ப்பொரேட் கம்பெனிகள்

டைம் வார்னர்( புகழ் பெற்ற டைம் பத்திரிகை,HBO சேனல் உள்ளிட்டு),

டிஸ்னி( டிஸ்னி லேண்ட் போன்ற பல பெரிய தீம் பார்க்குகள்,அமெரிக்காவின் ABC டெலிவிசன்,ESPN,ESPN 2 மற்றும் Disney சேனல்)

மற்றும் வியாகாம்,TCI போன்ற கார்ப்பொரேட் கம்பெனிகள் இன்று தமக்குள் கடும்போட்டியில் களத்தில் நிற்கின்றன.இவர்கள் எல்லோருமே இந்தியாவுக்குள்ளும் ஊடுருவி இருக்கிறார்கள்.இக்கம்பெனிகள்தான் உலகில் வெளியாகும் எல்லாத் திரைப்படங்களையும் விலைக்கு வாங்கி வெளியிடுவதும் தங்கள் ஊடகத்தின் சொத்தாக அவற்றை மாற்றுவதையும் செய்கிறார்கள்.

இந்த எல்லாக் கம்பெனிகளின் செயல்பாடுகளையும் இயங்குமுறைகளையும் உலகப் போக்குகளையும் நன்றாக அறிந்த முரசொலி மாறன் குடும்பத்தினர் அதே பாதையில் பயணிக்கும் சன் டிவியின் தமிழ் மாலை என்கிற தமிழின் முதல் தனியார் சேனலைத் துவக்கினர்.

sun

III

வெள்ளிக்கிழமை மட்டும் சினிமாப்பாடல் காட்சிகளை ஒளிபரப்பிக்கொண்டிருந்த தூர்தர்சன் சன் டிவியின் 24 மணிநேர சினிமா என்கிற தாக்குதலுக்கு ஈடு கொடுக்க் முடியாமல் இற்று வீழ்ந்தது.தமிழில் போட்டிக்கு எவரும் உருவாகியிராத காலத்தில் திறந்து கிடந்த பரந்த மைதானத்தில் டால்ஸ்டாயின் ஆறடி நிலம் கதையில் வருவதுபோல சன் டிவி குழுமம் ஓடி அளந்த இடம் பூராவும் தனக்கே சொந்தம் என்று சேர்த்துக்கொண்டது.இன்று தென்னாடு முழுக்கத் தன் கைக்குள் கொண்டு வந்து விட்டது.தமிழ்த்திரைப்படங்களின் வீடியோ உரிமைகளை வாங்கி வீடியோ கேசட் போட்டு விற்றுக்கொண்டிருந்த ராஜ் வீடியோ விஷன் கம்பெனி நெருக்கடிக்கு ஆளானது.ஒரு சேனலை ஆரம்பிப்பதைத் தவிர அதற்கு வேறு வழியின்றிப்போனது.இரண்டாவது தமிழ்த் தனியார் தொலைக்காட்சி அலை வரிசையாக ராஜ் டிவி வந்தது.சினிமாவை நம்பி சேனல்கள் இருந்ததால் போட்டியும் சகலவிதமான முதலாளித்துக் கழுத்தறுப்பு அரசியலும் மீடியா உலகத்துக்குள் வந்தது.எந்த ஆட்சி மத்தியில் இருந்தாலும் மாறன் அதில் அமைச்சராக இருந்தது அவர்க்ளின் ஊடகத் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருந்தது என்பது ஊரறிந்த ரகசியம்.சன் டிவியில் நேருக்கு நேர் மூலம் புகழ் பெற்ற ரபி பெர்ணார்டு துவக்கிய நிலா டிவி போட்டியில் நிற்க முடியாமல் அற்பாயுசில் அழிந்தது.முதலில் துவங்கப்பட்ட ஜேஜே டிவி வீழ்ந்து பின்னர் ஜெயா டிவியாக மறு உயிர்ப்புப் பெற்று வர வேண்டியிருந்தது.ஜெயலலிதாவின் வீட்டுக்குள் புகுந்து செருப்புகளின் அணிவரிசையைப்படம் பிடித்துக்காட்டியது முதல் நித்யானந்தாவின் படுக்கையறைக் காட்சியை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியது வரை எதைச் செய்தாகிலும் தன் முதலிடத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் வித்தையை சன் டிவி அறிந்து வைத்துள்ளது.

தினகரன்,குங்குமம் போன்ற ’நம்பர் ஒன்’ மற்றும் ‘ஒசத்தி கண்ணா’ இதழ்கள் ,பல்வேறு மொழிகளில் சேனல்கள்,செவிவழித்தாக்கும் சூரியன் எப்.எம் போன்ற ஒலி அலைவரிசைகள் ,சன் டிடிஎச் என நாம் மேலே குறிப்பிட்ட உலக நாயகர்களின் வரிசையில் மற்றும் பாதையில் சன் குழுமம் பயணப்பட்டு இந்தியாவின் முன்னணி முதலாளிகளில் ஒருவராக 13000 கோடி சொத்துக்கு அதிபதியாக கலாநிதி மாறன் உயர்ந்துள்ளார்.இந்த சன்டிவி இன்று சன் பிக்சர்ஸ் என்கிற பெயரில் திரைப்படங்களைத் தயாரிக்கவும் விலைக்கு வாங்கி வெளியிடவும் செய்கிற தொழிலில் இறங்கியுள்ளது. குடும்பச் சண்டையின் காரணமாக தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் மூன்று உயிர்கள் எரிந்து பின்னர் அவர்கள் ராசி ஆயிட்டோம் என்று சொன்னாலும் எனக்கென்று ஒரு சேனல் என் நாடு என் மக்கள் என்று கலைஞர் டிவி தொடங்கப்பட்டது.துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்சர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் என்ற கம்பெனியையும் மாண்புமிகு மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி க்ளவுட் நைன் மூவீஸ் என்ற கம்பெனியையும் துவக்கித் திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகக் களத்தில் குதித்துள்ளனர்.மாநிலங்களவை உறுபினர் கனிமொழி அவர்களும் சொந்தமாக இதுபோன்ற ஒரு படக்கம்பெனியைத் துவங்கப்போவதாகச் செய்திகள் வருகின்றன.

சினிமாவை நம்பி தொலைக்காட்சி சேனல்கள் என்றிருந்த நிலையை சேனல்கள் தரும் விளம்பரத்தை நம்பியே சினிமா என்கிற நிலைக்கு மாற்றியதில் சன்டிவி யின் பங்கே பிரதானமானது.முன்பெல்லாம் ரேடியோவில் ஒரு திரைப்படப் பாடலை ஒலிபரப்பினால் அப்படத்தயாரிப்பாளருக்கும் கவிஞருக்கும் இசை அமைப்பாளருக்கும் வருடத்துக்கு இவ்வளவு என்று காசு கொடுக்கும் வழக்கம் இருந்தது.இலங்கை வானொலி ஒரு பாட்டுக்கு ஆண்டுக்கு 10 ரூபாய் தந்ததாகச் சொல்லுவார்கள்.சூரியன் எப்.எம். மற்றுன் சன் தொலைக்காட்சி தலையெடுத்த பிறகு காசாவது ஒண்ணாவது போ போ என்கிற நிலை வந்து விட்டது. என்ன குப்பைப்படமானாலும் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை டிவியில் விளம்பரம் வந்தால் மக்களில் ஒரு பகுதியினர் தாங்க மாட்டாமல் திரை அரங்குகளுக்குப் போய்ப் படத்தைப் பார்த்து விடுவார்கள் என்கிற உத்தியை நம்பியே இன்று பெரும்பாலான படங்கள் இருப்பதால் சன் டிவியில் வந்தால் போதும் என்று முந்தைய உரிமைகள் அத்தனையையும் படத்தயாரிப்பாளர்கள் விட்டுக் கொடுத்துவிட்டனர்.

படம் ஓடுமா ஓடாதா என்கிற அச்சம் கத்தி போல ஒவ்வொரு தயாரிப்பாளரின் தலைக்கு மேலும் எப்போதும் தொங்கிக்கொண்டிருப்பதாலும் முதல் 25 நாள் ஓடிவிட்டால் போட்ட காசை எடுத்து விடலாம் அதற்கு தொலைக்காட்சி சேனல்களின் விளம்பரமே ஒரே கதி என்று ஆகிவிட்டபடியால் சன் பிக்சர்ஸ் கேட்டால் தயாரிப்பாளர் தன் படத்தை அவுட்ரைட்டாக விலை பேசி இனி அப்படத்துக்கும் தனக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று எழுதிக்கொடுத்து விட்டு விற்கிற நடைமுறை இன்று பரவலாக வந்து விட்டது. படம் வெளியாகிச் சில ஆண்டுகளுக்குப் பிறகே தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் என்கிற சட்டமெல்லாம் காற்றில் பறக்க “திரைக்கு வந்து சில மாதங்களே ஆன” திரைப்படங்களும் உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக என்கிற விளம்பரத்தோடு சேனல்களில் ஒளிபரப்பப் படுகின்றன.படம் தயாராகிக்கொண்டிருக்கும்போதே சேனல்காரர்கள் தயாரிப்பாளருக்குத் துண்டு போட்டு விலை பேசி முடிக்கும் அளவுக்கு இந்த வியாபாரம் இன்று வேகம் எடுத்துள்ளது.சிவாஜி படத்தையும் தசாவதாரம் படத்தையும் கலைஞர் டிவி அப்படி வாங்கியது.

பெரிய படத்தயாரிப்பாளர்கள் கூடத் தாக்குப் பிடிக்க முடியாமல் இன்று படத்தயாரிப்பைக் கைவிட்டுள்ளனர்.தமிழகம் முழுவதும் தியேட்டர்களை விலைக்கு வாங்கித் திரையிடும் அளவுக்கு வளர்ந்து வந்த சாய் மீரா குரூப் கூடத் தாக்குப் பிடிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.சிடி தயாரிப்பு மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள பீகாரைச் சேர்ந்த முதலாளியின் கார்ப்பரேட் நிறுவனமான மோசர் பேர் கூட படங்களைத் தயாரித்தாலும் அது சன் பிக்சர்ஸ்க்கும் கலைஞர் டிவிக்கும்தான் விற்க வேண்டியுள்ளது.

திரையரங்குகள் வணிக வளாகங்களோடு(ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்) இணைந்து அவற்றின் பகுதியாக கட்டப்படும் போக்கு இன்று வளர்ந்து வருகிறது.சென்னை நகரத்தில் மட்டும் இப்போது அப்படியான 170 வளாகங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அவற்றில் பெரும்பகுதி சன் மற்றும் கலைஞர் குடும்பத்தினருக்கே சொந்தம் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

இன்னொரு பக்கம் கேபிள் தொழிலில் ஏகபோக உரிமை கலாநிதிமாறன் அவர்களின் சுமங்கலி கேபிள் விஷன் கையில் இருக்கிறது.அதற்காக அழகிரியின் ராயல் கேபிள் விஷனுக்கும் அவர்களுக்கும் நடந்த போராட்டங்கள் அடிதடிகள் வயர் அறுப்புகள் எல்லாம் தமிழகம் அறிந்த கதை.அரசு கேபிள் அதோகதியாக பாதியில் நிற்க அதற்காகக் குரல் கொடுத்த ஐஏஸ் அதிகாரி உமா சங்கர் படாத பாடு பட்டுக்கொண்டிருப்பது சமீபத்திய கதை.

பணபலம்,அதிகார பலம்,மீடியா பலம்,அடிதடி பலம் ஆகிய நான்கும் ஒரு குடும்பத்தின் கையில் இருக்க தமிழ்த் திரையுலகின் எதிர்காலம் அவர்கள் கையில் இருக்க என்கிற நிலையை நோக்கித் தமிழகம் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது.சன் பிக்சர்ஸ் மற்றும் பேரன்மார்களின் நிறுவனங்கள் தமிழ் மக்களின் வாழ்வையும் பண்பாட்டையும் மையமாகக் கொண்ட படம் ஒன்று கூடத் தயாரிப்பதில்லை.வருவதெல்லாம் மசாலாச் சரக்குதான்.விளம்பரத்தாலும் ஓட வைக்க முடியாத சுறா போன்ற தேறாத சரக்குகள்தான்.

இந்தச் சூழ்நிலையில் தமிழ் சினிமாவின் எதிர்காலமே இன்று சின்னச் சின்னத் தயாரிப்பாளர்கள் எடுக்கும் சின்ன பட்ஜெட் படங்களை நம்பியே இருக்கிறது.அப்படித் தயாராகும் படங்களும் திரையரங்குகளுக்கு திமிங்கிலங்களைத் தாண்டியே வந்து சேர வேண்டியிருக்கிறது.ஆகவே தயாரிப்பிலும் விநியோகத்திலும் திரையிடுவதிலும் ஏகபோகங்களுக்கு மாற்றுகளை உருவக்க வேண்டிய அவசர அவசியம் தமிழகத்தில் எழுந்துள்ளது.

தெரு சினிமா இயக்கம், குறும்பட ஆவணப்பட இயக்கம் மற்றும் நகரசபை மற்றும் பஞ்சாயத்துக்கள் சொந்தமாக சின்னச் சின்ன திரையரங்குகளைக் கட்டிப் படங்களைத் திரையிடுவது என்று இக்களத்தை மக்கள் மயமாக்க வேண்டிய அவசியம் உள்ளது.குற்றாலம் மற்றும் ஊட்டி டவுண்சிப்கள் கட்டிய திரையரங்குகள் கூட மூடப்பட்ட நிலை இன்று உள்ளது.

உலகமயத்துக்கு எதிராகப் பொருளாதார மற்றும் அரசியல் தளங்களில் போராடும்போது நாம் சொல்கிறோம் ‘ வேறு மாற்றே இல்லை என்கிற உலகமய ஆதரவாளர்களின் வாதங்களை ஏற்க மாட்டோம். மாற்று நிச்சயம் உண்டு’ என்கிறோம்.அதே போல இன்று தமிழ்ச் சினிமா மற்றும் ஊடக உலகில் ஒரு குழுவின் ஏகபோகம் உருவாகி விட்டது. தயாரிப்பு,விற்பனை, விநியோகம்,விளம்பரம்,எப்.எம் ஒலி வரிசை,கேபிள் இணைப்புகள் என எல்லாமே லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஒரு குழுவின்/குடும்பத்தின் கையில் என்கிற நிலைக்கு மாற்றுகளை நாம் தேட வேண்டும்.இல்லாவிட்டால் தமிழ்ச் சமூகத்தின் மனதைத் தகவமைக்கிற பண்பாட்டுச் செயல்பாட்டை கேட்க நாதியில்லாமல் அவர்கள் கையில் விடுவது என்றாகிவிடும்.

திடைப்படத் துறையில் உள்ள ஜனநாயக உள்ளம் கொண்டோரும் வெளியில் உள்ள சக்திகளும் இணைந்து யோசிக்க வேண்டிய செயல்படவேண்டிய தருணம் இது.

kn maran

Sun now owns 14 channels, 4 radio stations, newspapers and magazines. Group's April listing made Maran, who owns 90%, a billionaire.

Monday, July 12, 2010

மெல்லச்சாகும் மொழிகள்

 

footsteps_on_beach_1024x768(2)

மெல்லத்தமிழினிச்சாகும் என்று ஒரு பண்டிதர் சொல்ல அவரைப் பேதை என்று கோபத்துடன் குறிப்பிட்டு ‘என்றந்தப் பேதை உரைத்தான்’ என ஒருமையில் திட்டினான் பாரதி.

மேலும் ஒரு கட்டுரையில் பாரதி இவ்விதமாகப் பேசுகிறார்:

“தமிழ் பாஷை இறந்து போய்விடுமென்றும் நமது நாட்டில் எல்லா பாஷைகளுக்குமே பிரதியாக இங்கிலீஷ் பாஷை ஏற்படுமென்றும் நம்பிய மூடர்கள் சுமார் 10 வருஷங்களின் முன்பு நமது ஜனங்களிலே பலர் இருந்தார்கள்.இப்போதும் அந்நம்பிக்கையுடையவர் ஆங்கிலேயர்களிலே அனேகர் இருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள பாஷைகளெல்லாம் மடிந்துபோய் அவற்றினிடத்திலே இங்கிலீஷ் நிலவி வருமென்பது இவர்களுடைய எண்ணம். இஃதிவ்வாறிருப்ப , மகா வித்துவான் ஸ்ரீ உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் சில தினங்களின் முன்பு இவ்விஷயத்தைப் பற்றிப் பேசியபோது பின் வருமாறு கூறியிருக்கிறார்:

’அன்னியர்களைக் குறை கூறிப்பயனில்லை.தமிழ்ப்பாஷையின் செல்வங்களையெல்லாம் தக்கவாறு பயன்படுத்திக் கொள்ளாத குற்றம் நம்மவர்களையே சார்ந்ததாகும்.எவ்வாறாயினும் நமது தாய்மொழி ஸாமனியத்தில் இறந்துவிடக் கூடியதன்று.பெரியோர்கள் இதனைக் “கன்னி”த்தமிழ் என்று பெயரிட்டழைத்திருக் கிறார்கள்.இது எக்காலமும் வனப்பும் இளமையும் மாறாத கன்னிகையாகும்.இதற்கு முதுமையே கிடையாது.மரணமுமில்லை.”

பாரதியின் கோபமும் தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் நம்பிக்கையும் மதிப்புமிக்கவை.ஆங்கிலேயர் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்த அந்த நாட்களிலேயே இவ்விதமான நம்பிக்கையை வெளியிட்ட இவ்விரு மகான்களின் மொழியுணர்வு பின் வந்த காலங்களில்- குறிப்பாக விடுதலை பெற்று ஆங்கிலேயர் நாட்டை விட்டுப் போன பிறகு –இன்னும் குறிப்பாக 1967க்குப் பின் தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் ஆட்சி இடையறாது நடைபெற்று வரும் பின்னணியில் – மேலும் வளர்வதற்கு மாறாகத் தேய்ந்து கொண்டே வந்ததையே வரலாறு நமக்குக் காட்டுகிறது.

இன்று தமிழ் அழிந்து விடவில்லை.வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.ஆனாலும் பாரதியும் உ.வே.சா.வும் பேசிய அதே நம்பிக்கையான தொனியில் நம்மால் இன்று பேச முடியுமா?

யுனெஸ்கோ நிறுவனம் வரைந்துள்ள இலக்கணங்களின்படி பல்வேறு மொழிகள் அழிந்து வருவதைக் கண்ணுறும்போது நாம் அச்சப்படாமல் இருக்க முடியவில்லை.இன்று உலக மக்கள் பேசும் மொழிகளாக 6900 மொழிகள் இருக்கின்றன.இவற்றில் 2500 மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன.அல்லது இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகளில் நிச்சயம் அழிந்துவிடும் நிலையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றன.2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்போது அழியும் ஆபத்தில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை 900 ஆகவே இருந்தது.இப்போது அந்த எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளது என யுனெஸ்கோ நிறுவனம் அறிவிக்கிறது.

உலகமயப்பொருளாதார நடவடிக்கையின் விஸ்தரிப்பின் பகுதியாக ஆங்கிலத்தின் ஆதிக்கம் உலக நாடுகளில் எல்லாம் வெகு வேகமாகப்பரவி வருவதன் தொடர்ச்சியாகவே இம்மொழிகளின் அழிவை நாம் பார்க்க வேண்டும்.ஒப்பீட்டளவில் எந்த நாடுகளில் இத்தகைய அழியும் மொழிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதோ அந்த நாடுகள் இதுபற்றி மிகமிகக் கவலையுடன் அவசரமாக அம்மொழிகளைக் காக்க ஆனதெல்லாம் செய்ய வேண்டும் என யுனெஸ்கோ நிறுவனம் அறிவுறுத்துகிறது.

உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் அழிவின் விளிம்பில் உள்ள மொழிகள் இந்தியாவில்தான் இருக்கின்றன என்கிறது யுனெஸ்கோவின் புள்ளிவிவரம்.ஒரு நாடாளுமன்றக் கேள்விக்கு அளித்த எழுத்துப் பூர்வமான பதிலில் மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் இந்திய மொழிகளில் 196 மொழிகள் அழிவின் விளிம்பில் நிற்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.இவற்றில் 9 மொழிகள் அழிந்தே விட்டன,36 மொழிகள் உடனடியாக அழியும் அபாயத்தில் உள்ளன,62 மொழிகள் காப்பாற்ற முடியாத நிலையில் இருக்கின்றன,84 மொழிகள் அபாயத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன என்று அமைச்சர் அப்பதிலில் பட்டியலிட்டுள்ளார்.

உலகில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 192 மொழிகளும் பிரேசிலில் 190 மொழிகளும் இந்தோனேசியாவில் 147 மொழிகளும் சீனா மற்றும் மெக்சிகோவில் தலா 144 மொழிகளும் அபாயத்தில் இருப்பதாக கபில் சிபல் குறிப்பிடுகிறார்.

இன்றைய நிலையில் வட கிழக்கு மாகாணங்களில் வாழும் மொழிகளில் 120 , இமாச்சலப்பிரதேசம்,ஜம்மு காஷ்மீர்,உத்தர்கண்ட் ஆகிய மூன்று மாநிலங்களில் வாழும் மொழிகளில் 44, ஒரிஸ்ஸா,ஜார்கண்ட்,மே.வங்கத்தில் 42 ஆபத்தில் இருக்கின்றன. இம்மொழிகள் 20-30 ஆண்டுகளில் அழிந்துவிடக்கூடும்.

இப்பட்டியலில் இன்று தமிழ் இல்லை என்று நாம் ஆசுவாசப்பட முடியாது.இன்னும் 50 ஆண்டுகளில் இப்பட்டியலுக்கு வர வாய்ப்புள்ள மொழிகள் என்று பார்த்தால் (இன்றைய போக்கு இப்படியே நீடித்தால்) தமிழ் நிச்சயம் அந்த அபாயத்தை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகில் இன்றுள்ள மொழிகளில் 50 சதவீதமானவை அழிந்தே தீரும் என்று யுனெஸ்கோ கூறியுள்ள புள்ளிவிபரம் நம்மை உண்மையிலேயே அச்சுறுத்துகிறது.

யுனெஸ்கோ மற்றும் உலகின் மொழியியல் அறிஞர்கள் அழியும் மொழிகள் பற்றிக் கீழ்க்கண்ட விதமாக வகைப்படுத்துகிறார்கள்:-

1. அழிந்துவிட்ட மொழிகள் –பேச,எழுத யாருமே இல்லாது போன மொழிகள் (extinct languages)

2. அநேகமாக அழிந்துவிட்ட மொழிகள்-பேசுபவர்கள் யாரும் இருக்கிறார்களா என உறுதிப்படுத்த இயாலாத நிலையில் உள்ள மொழிகள்(possibly extinct languages)

3. கிட்டத்தட்ட அழிந்துவிட்ட மொழிகள்- பேசுபவர்கள் பத்துக்கணக்கில் மட்டுமே-அவர்களும் வயதானவர்கள்(nearly extinct languages)

4. கடுமையான ஆபத்தில் உள்ள மொழிகள் –பேசுபவர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கலாம்.ஆனாலும் அவர்கள் மத்தியில் குழந்தைகளே இல்லை என்கிற நிலையில் உள்ள மொழிகள்(seriously endangered languages)

5. ஆபத்தில் உள்ள மொழிகள் – சில பகுதிகளில் குழந்தைகள் இருக்கிறார்கள் ஆனால் அந்த எண்ணிக்கை குறைந்து கொண்டே போகும் நிலையில் உள்ள மொழிகள்(endangered languages)

6. இயல்திறன் ரீதியாக ஆபத்தில் உள்ள மொழிகள்-நிறையக் குழந்தைகள் இம்மொழிகளைப் பேசலாம்-ஆனாலும் அதிகாரபூர்வமான மொழியாக ஒரு மரியாதைக்குரிய மொழியாக இல்லாம்ல் இருக்கும் நிலையில் உள்ள மொழிகள்(potentially endangered languages)

7. ஆபத்தில் இல்லாத மொழிகள்-அடுத்த தலைமுறைக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் கடத்தப்படும் மொழிகள்( not endangered languages)

இன்று நம் தமிழ் மொழி சந்தேகத்துக்கிடமில்லாமல் 7 ஆவது வகையில்தான் உள்ளது.ஆனால் 5 மற்றும் 6 ஆவது வகை ஆபத்துக்கள் நமக்குக் காத்திருக்கின்றன.மத்தியில் ஆட்சி மொழியாக தமிழ் இல்லை.மாநிலத்தில் பாதிக்கும் குறைவான சதவீதமே நிர்வாக மொழியாக உள்ளது.நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக இல்லை.கோவில்களில் வழிபாட்டு மொழியாக இல்லை.ஊடகத்தில் தமிழ் சிதைந்து கொண்டிருக்கிறது.தமிழ் மக்களின் பேச்சிலாவது தமிழ் மிச்சமாக இருக்கிறதா? தமிங்கிலம்தான் தமிழரின் பேச்சு மொழியாகக் கோலோச்சுகிறது. பாவேந்தர் பாரதிதாசன் மனம் வெந்து சொன்னது போல’ “ மணக்க வரும் தென்றலிலே குளிரா இல்லை.தோப்பில் நிழலா இல்லை.தமிழகத்தில் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை”

மிக மிக முக்கியமாக பயிற்றுமொழியாகத் தமிழ் இல்லாமல் போகும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் சூழல்தான் நமக்கு மிகுந்த அச்சமளிக்கிறது.ஆங்கிலவழியில் கற்றால் மட்டுமே நாளைய உலகம் நம் பிள்ளைகளுக்குக் கிட்டும் என்கிற அச்ச உணர்வு கொண்ட தமிழ்ப் பெற்றோரின் மனவியாதிக்கு உடனடியாக மருந்து வேண்டும்.அதை அரசுகள் மட்டுமே வழங்க முடியும்.தமிழ் மட்டுமல்ல.இந்திய மொழிகள் அத்தனைக்குமே ஆங்கிலம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக பூதாகரமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. உள்ளூர் பயிற்று மொழியின் நிலை குறித்து கல்விக்கான திட்டமிடல் மற்றும் நிர்வாகத்துக்கான தேசியப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அகில இந்திய அளவிலான புள்ளிவிவரம் கீழே:

பயிற்று மொழி- மாணவர் சேர்க்கை எண்ணிக்கை

                                        மில்லியன்களில்

                                          2004                              2009

1. இந்தி                               7.2                                 83.2

2.ஆங்கிலம்                         8.4                                15.3

3.வங்காளி                           1.4                               13.3

4.மராத்தி                            10.6                              12.4

5.தெலுங்கு                          9.1                                 7.6

6.குஜராத்                             6.4                                 7.3

7.தமிழ்                                 7.9                                 7.0

8.கன்னடம்                          6.3                                 6.2

9.ஒரியா                              5.7                                 6.2

10.அஸ்ஸாமி                    3.2                                 4.6

11.உருது                           3.0                                  3.6

12.மலையாளம்               2.9                                   2.8

13.பஞ்சாபி                      2.4                                   2.4

பல்வேறு கிளை மொழிகள்,மலைவாழ்/பழங்குடி மக்களின் மொழிகளை விழுங்கி இந்தி வளர்ந்துள்ளது.இருளர்,குறும்பர் போன்ற மலைவாழ் மக்களின் மொழிகளைத் தமிழ் தின்றுள்ளது.பொதுவாக தென்னாட்டு மொழிகள் தேய்மானத்தில் உள்ளதையும் ஆங்கிலவழிக்கல்வி இருமடங்கு அதிகரித்திருப்பதையும் நாம் இப்புள்ளி விவரத்தில் காண முடிகிறது.

மத்திய அரசின் தவறான மொழிக்கொள்கையின் விளைவாக இச்சிதைவு எல்லா இந்திய மொழிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.திராவிட ஆட்சிகள் அதைத்தடுக்கப் போராடவும் இல்லை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.மாறாக ஆங்கிலத்தைத் தங்கள் தோள்களில் சுமந்து பரப்பிவருகிறார்கள்.1967க்கு முன் இருந்த ஆங்கிலப்பள்ளிகளின் எண்ணிக்கை பல மடங்காக பல்கிப்பெருகி இருப்பது திராவிடக்கட்சிகளின் ஆட்சியில்தான் என்கிற ஒரு சான்று போதும் இதை விளக்க.1930களிலும் 60களிலும் தமிழகத்தில் நடந்த மொழிப்போராட்டங்களின் காலத்தில் இந்தியால்தான் தமிழுக்கு ஆபத்து என நம்பினோம்.ஆனால் இன்று 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கிலம்தான் அசலான ஆபத்தாக வந்து நம் எதிரே பேயாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது-அரசுகள் உடுக்கடிக்க.

பேய் ஆடுவதற்கான இந்த உடுக்குச் சத்தத்தை பேயை விரட்டுவதற்கானதாக மாற்றுவது மக்கள் கையில்தான் உள்ளது.

Wednesday, March 3, 2010

நித்யானந்தம் என்கிற இளைஞன்

nithya5 சன் நியூஸ் தொலைக்காட்சி மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிய சுவாமி நித்யானந்தாவின் படுக்கையறைக்காட்சியை நானும் பார்த்தேன்.இந்துத்வா ஆசாமிகள் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி அவசர அவசரமாக அவர் அல்ல எங்கள் அடையாளம் என்று பிலிம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்னைகளுக்குப் பொருளாதாரத் தளத்தில் அல்லது அரசியல் தளத்தில் தீர்வுகாணப் போராட வேண்டும். அதற்குத் தயாராகாத மக்கள் பண்பாட்டுத்தளத்தில் சாமி,கோயில்,பூஜை என்று தீர்த்துக்கொள்ள முயலும் பழக்கம் அபினியைப்போல மயக்கிக்கொண்டிருக்கும் நம் சமூகத்தில் இதுபோன்ற சாமியார்கள் வருவதும் சமயங்களில் பிடிபடுவதும் சகஜம்.

எனக்கு அக்காட்சியை பார்த்தபோது நித்யானந்தா என்கிற அந்த 33 வயது இளைஞனின் மீது பச்சாதாப உணர்வு ஏற்பட்டது.பாலுணர்வு என்கிற இயற்கையான ஒன்று சாமியார் வேசம் போட்டதால் அவனுக்கு மறுக்கப்படுவது நியாயமல்ல. அவனும் சாதாரண மனிதன்தானே.சின்னப்பையனான அவன் அவனோடு விரும்பி உறவு கொள்ளும் பெண்ணோடு இருக்கும் கணத்தைப் படம் பிடித்து ஊருக்கே காட்டுவது நாகரிகமாக எனக்குப்படவில்லை.காஞ்சி சாமிகள், பிரேமானந்த சாமிகள் போல பெண்களிடமிருந்து அவன் வல்லந்தம் செய்ததாக புகார் வராமல்- அவர்கள் இருவரும் காதலால் ஒருமித்தது போன்ற ஒரு வீடியோ காட்சியைக் காட்டும் போது அய்யோ பாவம் அவன் என்கிற உணர்வுதான் முதலில் எனக்கு ஏற்பட்டது.

அவன் பிரம்மச்சர்யத்தை ஊருக்கு உபதேசம் செய்பவனாக இருந்து கொண்டு தன்னுடைய வாழ்க்கையை இப்படி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறான் என்பதற்காக அவனைக் குற்றம் சாட்டலாம்.அது சரி.கோடிக்கணக்கான சொத்துக்கு தலைவனாக இருப்பதில் இதுவரை எந்த விதிமீறலும் இல்லாமலா இருந்திருக்கும்? அதைப்பற்றியெல்லாம் தோண்டி எடுத்து வெளியே போட்டு அவனைக்கிழிக்கலாம். இவனை மட்டுமல்ல இவனைப்போல ஊரை ஏமாற்றும் அத்தனை சாமியார்களின் சொத்துக்குவிப்புகளும் கிழிக்கப்பட வேண்டும்.அத்தனையும் ஏமாந்த எளிய மக்கள் கொடுத்த சொத்து.ஆட்சியில் இருப்பவர்களே சாமியார்களிடம் மோதிரம் வாங்கிக்கொண்டு திரியும்போது அவர்களின் பொருளாதாரக்குற்றங்களை யார் கேள்வி கேட்பார்கள்?

அதிலும் இந்த நித்யாப் பையன் அமெரிக்கா ,ஐரோப்பாவெல்லாம் போய் கார்ப்பொரேட் கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்களின் மன அழுத்தங்களை சரி செய்ய தியான வகுப்புகள் நடத்துகிறவன்.பன்னாட்டுக் கம்பெனிகளோடு தொடர்புடையவன்.தமிழகப் போலீஸ் போய் அவனைக்கைது செய்தாலும் சுலபமாக வெளியே வந்து விடுவான்.

பாலியல் குற்றம் இல்லாமலே ஏராளமான பிற குற்றங்கள் புரியாமல் சட்டத்தை ஏமாற்றாமல் எந்தச்சாமியாரும் கோடிக்கணக்கான சொத்துக்களைச் சேர்க்க முடியுமா? சாயிபாபா,அமிர்தானந்தா தொடங்கி எத்தனையோ ஆனந்தாக்களும் கிறித்துவ சாமியார்களும் இந்தத் திசையில் விசாரிக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டுப் பிடிபட வேண்டியவர்களாவர்.

மக்களை மயக்குவதற்கும் மனித மனங்களை கார்ப்பொரேட்டுகளின் சரக்குகளுக்கேற்ப தகவமைப்பதற்கும்தான் நவீன அபினிகளாக நாங்கள் வந்து விட்டோமே நீ என்ன எனக்குப் போட்டியாக என்று சன் டிவிக்குக் கோபம் வந்துவிட்டது போலும்.அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுத் தாளித்து விட்டார்கள்.

ஒரு விரிவான பகுத்தறிவுப் பண்பாட்டு இயக்கத்தை ( முன்னெப்போதையும் விட இப்போது வலுவாக) நடத்த வேண்டிய காலமாக இன்றைய காலம் இருக்கிறது.

Saturday, June 6, 2009

பின் குறிப்பு

alakiri அழகிரியார் மாவட்டத்தில் நாடாளுமன்றத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்ததும் அதற்கான விஞானப்பூர்வமான ஏற்பாடுகளைச் செய்து ஒரு புதிய தொழில்நுட்பத்தை அண்ணன் உலகுக்கு அளித்ததும் அனைவரும் அறிந்த பழைய செய்திகள். இப்போது மேலும் மேலும் பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.அவற்றில் என் மனதைத் தொட்ட ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்கிறேன்.

அநேகமாக அழகிரி மாவட்டத்தின் 70 சதவீத வாக்காளர்களுக்கு கவர் பெண் போலீசார் மூலமும் மற்றும் பொருத்தமான அரசுத்துறை நபர்கள் மூலமும் (effective use of govt machinery – இதில் 60 ஆண்டு ஆல் இண்டியா அனுபவம் உள்ள காங்கிரசெல்லாம் அண்ணனிடம் பிச்சை வாங்க வேண்டும்) போய்ச்சேர்ந்துள்ளது.சத்தமில்லாமல் எல்லோரும் வாங்கிக்கொண்டார்கள்.வாங்க மறுத்தால் அண்ணனுக்கு எதிர் வாக்கு என்று அடையாளப்படுத்தப்பட்டுவிடும் அபாயம் கருதியும் பலர் மறுக்கவில்லை.மார்க்சிஸ்ட் ஊழியர்கள் குடியிருக்கும் பகுதிகளில் யாருக்குமே பணப்பட்டுவாடா நடக்கவில்லை.பிடிபடும் அபாயம் இருந்ததால்.அதன் காரணமாக சனியன் போல இவன் ஒருத்தன் இங்க வந்து குடியிருக்கான் பாரு. அண்ணன் மூலம் நமக்குக் கிடைக்க வேண்டிய ‘பெனிபிட்’ எதுவும் கிடைக்காமப் போகுது பாரு என்று கட்சி ஊழியர்கள் unpopular ஆன கதையும் பரவலாக நடந்துள்ளது.

பொதுவாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவுத்தளங்களாக இருக்கும் தொழிற்சங்கப் பகுதி மற்றும் மத்தியதர வர்க்கம் இம்முறை அதிமுகவுடன் அவர்கள் நின்றதால் வாக்களிக்கவில்லை.அதிமுக கடந்த ஆட்சியில் உண்டாக்கிய காயம் இன்னும் அவர்களுக்குஆறவில்லை. பணம் வாங்குவதில் அவர்கள் எந்தக் கூச்சமும் படவில்லை என்பதை எழுதக்கூசத்தான் செய்கிறது.அரசு ஊழியர்,ஆசிரியர்,சஃபாரி போடும் அரசு அதிகாரிகள் என எல்லோருமே சந்தோசமாகக் கவர்களை வாங்கிக்கொண்டுள்ளனர்.

ஆனால் மேலூர் வட்டம் மேலவளவு கிராமத்தில் வாழும் 39 தலித் (பறையர் சமூகத்தினர்) குடும்பங்கள் “முருகேசன் கொலை செய்யப்பட்ட வழக்கு உட்பட எங்கள் வாழ்விலும் தாழ்விலும் தொடர்ந்து எங்களோடு உடன் நிற்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கே நாங்கள் வாக்களிப்போம்.” என்று பகிரங்கமாகக் கூறி ராத்திரி வீடுகளுக்குள் போடப்பட்ட 39 கவர்களை காலையில் திமுக அலுவலகத்துக்குத் திருப்பி அனுப்பி விட்டுள்ளனர்.

பெல்ட்டுகளுக்குள் தொப்பைகளை மறைக்கும் மத்திய தர வர்க்கம் அரசியலற்றுக் கைநீட்ட – மேலவளவு மக்கள் உறுதியான அரசியலுடன் நின்றது அனல்பறக்கும் பாலையில் ஓர் அருஞ்சுனையாய் நம்பிக்கை தருகிறது.

அதேபோல உத்தப்புரம்,பாப்பாப்பட்டி, கீரிப்பட்டைப் பகுதி தலித் மக்கள் மார்க்சிஸ்ட்டுகள் பக்கம் உறுதியாக நின்றுள்ளனர்.ஆனால் அக்கிராமங்களுக்கு பக்கத்து கிராமங்களில் வாழும் தலித் மக்கள் கூட மார்க்சிஸ்ட்டுகளுக்கு வாக்களிக்கவில்லை. ஏனெனில் கலைஞர்தான் முதன் முறையாக திருமாவளவனுக்கு 2 சீட் கொடுத்து எங்கள் இனத்தை கௌரவப்படுத்தியுள்ளார்.அந்த நன்றியை நாங்க மறக்க முடியுமா என்று பகிரங்கமாகக் கூறியுள்ளனர்.

மக்களின் சமூக மனதின் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள இத்தேர்தல் நல்ல பல பாடங்களை வழங்கியுள்ளது.சரி. அஞ்சாநெஞ்சருக்கு மத்திய ஆட்சி தம்பிக்கு மாநில ஆட்சி அப்போ கனிமொழிக்கு என்னா? ஏமாத்திட்டாரே கலைஞர் என்று கனிமொழிக்காக கண்ணீர் உருளப் பேசுபவர்கள் நிறையப்பேர் உள்ளனர்.அரண்மணை அரசியலில் அதிகாரம் கிடைக்காத இளவரசிகளுக்காகவும் இளவரசர்களுக்காகவும் கண்ணீர் விட்டு அழுத நம் முன்னோர்களின் வாரிசுகளாக இன்றும் அம்மனநிலை தமிழ்ச்சமூகத்தில் தொடர்கிறது.

பார்த்தால் ஜீன்ஸ்களோடும் லேப்டாப்புகளோடும் ஒரு நவீன சமூகம் போலத்தான் நம் தமிழ்ச்சமூகம் வெளிப்பார்வைக்குத் தெரிகிறது.ஆனால் தொடர்ச்சியான திராவிடக்கட்சிகளின் முயற்சியால் அவர்கள் சங்கம் மருவிய காலத்திலேயே இருத்திவைக்கப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது.

இதையெல்லாம் மீறி மதுரையில் மோகன் சுமார் 3 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார் என்பதும் ஒரு முக்கியமான செய்தியாகும்.

Tuesday, April 21, 2009

குழந்தைகளுக்கான புத்தகம் என்னும் வன்முறை

bk-1 bk2

நேற்று முன்தினம் ப்ராடிஜி –prodigy பதிப்பகத்தார் நடத்திய குழந்தைகளுக்கான எழுத்துக்கள் மீதான கலந்துரையாடலில் பங்கேற்றது ஒரு நல்ல அனுபவம்.நாங்கள் பாரதிபுத்தகாலயத்தின் சார்பாக ஜூன் மாதத்தில் நடத்தவிருக்கும் குழந்தைகளுக்கான எழுத்து பற்றிய பட்டறையை வடிவமைக்க இந்தக் கலந்துரையாடலில் வந்த பல கருத்துக்கள் உதவும் என நம்புகிறேன்.

தமிழில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்ற பேரில் பெரும் குப்பைகள் –நீதிக்கதைகள்-மற்றும் புராணக்கதைகள் என்ற பேரில் கொட்டப்பட்டு வரும் இந்நாளில் இன்னும் நல்ல புத்தகங்களைத் தயாரித்து வழங்க கூட்டு முயற்சிகள் –விவாதங்கள்-கலந்துரையாடல்கள் தேவை.வந்துள்ள சில நல்ல முயற்சிகள் மீதும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் தேவை.

சோவியத் யூனியன் இருந்த நாட்களில் ஏராளமான வண்ண வண்ணப் புத்தகங்கள் மிக மிகக் குறைந்த விலையில் கிடைத்தன.உலகத்துக்கெல்லாம் கப்பல் கப்பலாக ஓசியில் புத்தகம் அனுப்பி ஓய்ந்துபோன தேசமல்லவா அது.

அதை விட்டால் தமிழில் அந்தக்காலத்தில் கண்ணன் வந்துகொண்டிருந்தது. எங்கள் ஊரான நென்மேனி மேட்டுப்பட்டியிலிருந்து 7 மைல் நடந்து சாத்தூருக்குப்போய் கண்ணன் வாங்கி வருவேன்.அப்படி இழுத்தது கண்ணன்.அதை நடத்திய எழுத்தாளர் ஆர்.வி சமீபத்தில்தான் காலமானார்.அம்புலிமாமாவும் பின்னர் வந்த சிவகாசிப் படக்கதை-காமிக்ஸ் புத்தகங்களும் மிகப்பெரிய ஈர்ப்புகளாக இருந்தன.

இன்று தமிழகத்தில் பதிப்பகங்கள் பெருத்துவிட்ட சூழலில் புத்தகக் கண்காட்சிகள் பத்து இருபது இடங்களில் பரவலாக நடத்துவது பழக்கமாகிவிட்ட ஒரு பின்னணியில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்கிற பெரிய மார்க்கெட் பெரிய பதிப்பகங்களின் நாவில் நீர் சுரக்க வைப்பது சகஜம்.

பள்ளிக்கூடங்களுக்குப் போய் சில ஆசிரியர்களைப் பிடித்து நூலகத்துக்கு மொத்தமாக புத்தகங்களை வாங்கிப் போட வைத்துவிட முடிகிறது.இந்த ஏரியாவில் முடிசூடா மன்னனாக முன்னர் NCBH மட்டும் இருந்து வந்தது. இப்போது போட்டி அதிகமாகி விட்டது. நல்லது.அப்படிப் போட்டியினால் நிறையக் குழந்தைகளுக்கான புத்தகங்கள் வந்தால் நமக்கு நல்லதுதானே?

ஆனால் மார்க்கெட்டை மட்டும் மனதில் கொண்டு புத்தகங்களை அடித்துத் தள்ளினால் குப்பைகூளம்தான் மறுபடியும் சேரும். அப்படிச் செய்துவிடாதீர்கள் என எல்லாப் பதிப்பகத்தாரையும் அன்போடு கேட்டுக்கொள்வோம்.

நல்ல புத்தகம் எது? யார் தீர்மானிப்பது?

இதில் பதிப்பகம் நடத்துவோரின் சார்பு- மற்றும் புத்தகம் பற்றியும் குழந்தைகள் பற்றியும் அவர்கள் கொண்டிருக்கும் புரிதல்தான் முக்கியப் பங்காற்றுகின்றன.

இந்தக் கலந்துரையாடலில் கூட நீதிக்கதைகளை ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள் என்று ஒரு பெரியவர் கேட்டார்.அந்தக்காலத்தில் நீதிக்கதைகளைப் படித்துத்தான் நாங்களெல்லாம் வளர்ந்தோம்.இப்போ பூராவும் டிவி சினிமான்னு ஆகிப்போச்சு என்று வருத்தப்பட்டார்.

நீதிக்கதைகள் படித்து வளர்ந்த இந்திய படித்த வர்க்கம் உருவாக்கியுள்ள இந்த சமூகம் நல்லா இல்லை அல்லவா? ஆகவே அவற்றை நாம் பெருக்கித்தள்ளியாக வேண்டும்.தவிர குழந்தைகளுக்கு நீதியும் அறிவுரையும் சொல்வதுபோல ஒரு அராஜகம் உலகத்தில் எதுவும் கிடையாது. குழந்தைகளுக்கு அது பிடிப்பதுமில்லை.

சரி. இப்போது நம்முடைய குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் பதிப்பகங்களிடமிருந்து நேரடியாகக் குழந்தைகளுக்குப் போய்ச்சேருவதில்லை.அவை ஒன்று பெற்றோர் மூலமாக அல்லது ஆசிரியர்/பள்ளிக்கூடம் மூலமாகத்தான் குழந்தைகளைச் சென்றடைகின்றன. இரா.நடராசன் அக்கூட்டத்தில் சொன்னதுபோல குழந்தைகளுக்கான புத்தகங்களை – நூலகத்துக்கு அரசு ஒதுக்கும் நிதியின் மூலம் – ஒருபோதும் குழந்தைகள் தேர்வு செய்வதில்லை.எல்லா வகுப்புகளிலிருந்தும் மாணவ மாணவியரை அழைத்துக்கொண்டு கூட்டமாக புத்தகக் கடைகளுக்குப் போய் அவர்களைத் தேர்வு செய்யச்சொல்லி புத்தகங்களை அள்ளி வருகிற ஒரு தலைமை ஆசிரியரை-ஒரு ஆசிரியரை நம் நாட்டில் காட்ட முடியுமா? அந்த ஆசிரியருடைய அறிவுக்கும் புரிதலுக்கும் ஏற்ப தேர்வு செய்து அடுக்கப்பட்ட புத்தகங்களே பள்ளிக்கூட நூலகங்களில் உள்ளன.அவற்றையும் யாரும் தொடாமல் பார்த்துக்கொள்ள ஒரு நூலகரை நியமித்துள்ளது தனிக்கதை.நூலகர் பள்ளிக்கூடத்தின் மற்ற எழுத்தர் பணிகளைத்தான் பார்த்துக்கொண்டிருப்பார்.பாவம்.

பெற்றோரின் புத்தக ரசனை-புத்தக்க் காதல் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்கள் இதே கல்விமுறையால் வளர்த்தெடுக்கப்பட்ட முன்னாள் குழந்தைகள்தானே? நம்முடைய கல்விச்சாலைகள் பன்னிரண்டு ஆண்டுகள் உழைத்து புத்தகக்காதலர்களாக வெளியே வரவேண்டிய நம் குழந்தைச் செல்வங்களை புத்தக விரோதிகளாக மாற்றக் கடுமையான பணியாற்றி வருகின்றன.இதியெல்லாம் தாண்டித்தான் பிள்ளைகள் சரியான புத்தகங்களைத் தற்செயலாகக் கண்டடைந்து படிக்கிறார்கள்.அது எல்லோருக்கும் வாய்க்காதல்லவா? முறைசார் கல்வியிலேயே இதற்கான ஏற்பாடு –புத்தக வாசிப்புக்கு ஆதரவான சூழல் இருந்தால் நாம் எல்லோருமே புத்தக் காதலர்களாக மாறியிருப்போம்.தலைமுறைகள் கடந்தும் நம் நாட்டில் இதுவிசயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.அதுபற்றிய ஒரு தன்னுணர்வும் சமூகத்தில் உருவாகவில்லை.

ஆங்கிலக் கல்வி பயிலும் நகர்ப்புரக்குழந்தைகள் சிலர் தீவிரமான புத்தக வாசிப்பாளர்களாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கான நல்ல நல்ல புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன.தவிர வசதியுள்ள வீட்டுப்பிள்ளைகளுக்கு சொந்தமாக பாக்கெட் மணியும் உள்ளது.

குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்று இன்று நாம் தயாரித்து வழங்குபவையெல்லாமே படித்த மத்திய தர வர்க்கத்துக்க் குழந்தைகளுக்காக மட்டுமேதான்.பல்வேறு பொருளாதார மற்றும் கலாச்சாரப் பினனணியில் வளரும் பல்வேறு அடுக்குகளில் வாழும் குழந்தைகள் பற்றி நாம் யோசிப்பதே இல்லை. அரைகுறைப்படிப்பாளிகளாக drop out ஆன குழந்தைகளாக நகரத்து வீதிகளிலும் கிராமத்து சிறு தொழில்களிலும் உழலும் குழந்தை உழைப்பாளிகளான வாசகர்கள் பற்றி எந்தப் பதிப்பகத்தாரும் எந்த எழுத்தாளரும் கவலை கொள்வதில்லை என்று சுயவிமர்சனமாக நாம் விவாதிக்க வேண்டும்.

வயது வாரியாக குழந்தைகளைத் தரம் பிரித்து அவர்களுக்கான புத்த்கங்கள் தயாரிக்கப்பட வேண்டியுள்ளது.

பாரதி புத்தகாலயம்,தாரா பதிப்பகம்,NCBH, குழந்தைகளுக்கான நேஷனல் புக் ட்ரஸ்ட் ,ப்ராடிஜி என எல்லோரும் கூடிப் பேசி இன்னும் சரியான திசை நோக்கி நகர வேண்டும். எழுத்தாளர்கள் இதில்

மிக முக்கியப்பங்காற்றவேண்டியுள்ளது. அதுபற்றித் தனியே விரிவாகப் பேசலாம்.

தயாரிப்பிலிருந்து விநியோகம் வரை குழந்தைகளுக்கான புத்தகம் என்கிற துறையில் அவர்களின் பங்கு ஏதுமில்லாத ஒரு வன்முறை நம் கண் முன்னால் நடந்துகொண்டிருக்கிறது.திணிப்பு நடந்து கொண்டிருக்கிறது.அவசரமாக நாம் தலையிட வேண்டும். நாம் என்பது இதுபற்றி அக்கறை உள்ள எல்லோரையும்.