Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Wednesday, June 13, 2012

தமுஎகச வின் இரு பெரும் விழாக்கள்

தமுஎகச சார்பாக தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஜூன் 16 முதல் ஜூலை 5 வரை 600 மையங்களில் தமிழின் சிரந்த குறும்பட ஆவணப்படங்கள் மற்றும் முழு நீளத் திரைப்படங்களை மக்கள் மத்தியில் திரையிட விரிவாகத் திட்டமிட்டுள்ளோம்.அத்திரைப்பயணத்தின் துவக்க விழா ஜூன் 16 மாலை சென்னை கோடம்பாக்கம் கங்காராம் ஹாலில் நடைபெறுகிரது.

ஆண்டுதோறும் தமுஎகச வழங்கும் இலக்கியப் பரிசளிப்பு விழா பண்பாட்டு மலர் வெளியீட்டு விழா திரைப்பட விருது வழங்கும் விழா ஜூன் 17 அன்று முழுநாள் நிகழ்வாக சென்னையில் ரிசர்வங்கி எதிரே உள்ள கப்பல் சிப்பந்திகள் நல மையத்தில் நடைபெற உள்ளது.

இவ்விரு விழாக்களுக்கான அழைப்பிதழ்கள் கீழே.அவசியம் வருக என அன்புடன் அழைக்கிறோம்.

 

THAMUEKASA 2012 1

THAMUEKASA 2012 2

Friday, June 8, 2012

வழியெங்கும் புத்தகங்கள்

bk reading நான் ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் பள்ளிக்கு எதிரே ஒரு வாசக சாலை இருந்தது.அதில் சாணி மெழுகிய திண்ணையில் விரித்த ஓலைப்பாயில் தினசரிகள்,வார,மாத இதழ்கள் கிடக்கும்.பெரிய ஆட்கள் உட்கார்ந்து படித்துக்கொண்டிருப்பார்கள்.அப்போது பொடியன்களான நாங்கள் சிலர் அவ்வப்போது உள்ளே நுழைந்து எதையாவது வாசிப்போம்.பிறகு மணியடிக்கவும் ஓடிவிடுவோம்.அப்படி ஒருநாள் ஒரு வார இதழில் வாசித்த பெட்டிச்செய்தியில் , பகத்சிங்கைத் தூக்கு மேடைக்கு அழைத்த போது அவர் லெனின் எழுதிய ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார் என்றும் அதை முழுதாகப் படித்து முடிக்கும்வரை கால அவகாசம் கேட்டார் என்றும் படித்து முடித்ததும் மகிழ்ச்சியோடு தூக்கு மேடைக்குப் போனார் என்றும் எழுதியிருந்தது.பாருய்யா சாகப்போற நேரத்திலே கூடப் படிச்சிருக்கான்...அவன் மனுசனா.. நாம மனுசங்களா என்று பெரியவர்கள் ரெண்டுபேர் பேசிக்கொண்டதையும் கேட்டேன்.அந்த செய்தியும் பேச்சும் என் மனதில் ஆழப்பதிந்து விட்டது.

பின்னர் பெரியவனாகிக் கோவில்பட்டியில் கல்லூரியில் படித்த காலத்தில்(1970-71) பஸ் நிலையத்துக்கு எதிரே என்சிபிஹெச் புத்தகக் கண்காட்சி நடந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன்.சிவப்புப் புத்தகங்களின் அணிவகுப்பில் லெனின் எழுதிய புத்தகங்களைத் தேடிப்பார்த்துக்கொண்டிருந்தேன்.மேசை அருகே சேர் போட்டு அமர்ந்திருந்த வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை மனிதர் ஒருவர் என்ன புத்தகம் தேடுறே தம்பி என்று கேட்டார்.’பகத்சிங் சாவதற்கு முன்னால் படித்த லெனின் புத்தகம்’ என்று சொன்னேன்.உடனே அவர் ‘அரசும் புரட்சியும் ‘என்ற நூலை எடுத்துக்கொடுத்தார்.என்னை இன்றும் செதுக்கிக் கொண்டிருக்கும் புத்தகமாக அது இருக்கிறது.இதையும் சேர்த்துப்படி என்று அந்தச் சிவந்த மனிதர் ஏங்கல்ஸ் எழுதிய குடும்பம் ,தனிச்சொத்து,அரசு ஆகியற்றின் தோற்றம் என்கிற புத்தகத்தையும் அன்பளிப்பாக எனக்கு வழங்கினார்.அந்த இரண்டு புத்தகங்களும் நூற்றுக்கு மேற்பட்ட முறைகள் என்னால் மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்டு பைண்டிங் கிழிந்து தாள் தாளாக ஆகிவிட்டாலும் பொக்கிஷம் போலக் கையில் வைத்திருக்கிறேன்.அதே நூல்களின் வேறு இரு பிரதிகள் அப்புறம் வாங்கிவிட்டாலும் அந்தப் பெரியவர் கொடுத்ததுதான் என் புத்தகமாக என் வாசிப்புக்கான சொந்தப் பிரதியாக பிரியத்துடன் வைத்திருக்கிறேன்.அந்தப்பிரதி பேசுவது போல வேறு பிரதிகள் என்னோடு நெருங்கிப் பேச முடிவதில்லை.அந்தப் புத்தகங்களை எனக்கு எடுத்துக் கொடுத்த பெரியவர் பெயர் எஸ்.எஸ்.தியாகராஜன் என்பதும் அவர் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்பதும் அவர் என் சித்தப்பாவின் நண்பர் என்பதும் பின்னர் அறிய நேர்ந்த கூடுதல் தகவல்கள்.

அரசு என்பது காலம் காலமாக எப்போதும் இருந்து கொண்டிருக்கும் ஒன்று- அது எல்லா மக்களுக்கும் பொதுவான ஒரு நிர்வாக ஏற்பாடு மட்டும்தான் என்கிற என் பொதுப்புத்தியை வெடிகொண்டு தகர்த்தன இவ்விரு புத்தகங்களும்.தீர்க்க முடியாத வர்க்கப்பகைமையின் விளவுதான் அரசு.தனிச்சொத்தைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையின் பெயர்தான் அரசு என்பதும் வரலாற்றில் தனிச்சொத்து தோன்றுவதற்கு முன்னால் அரசு என்கிற வன்முறைக்கருவி இருந்திருக்கவில்லை என்பதும் இவ்விரு புத்தகங்களால் தெளிவானது.அப்போது இலக்கிய வாசிப்பில் நான் நா.பார்த்தசாரதியிடமிருந்து விடைபெற்று ஜெயகாந்தனின் ஆளுகைக்குள் வந்துகொண்டிருந்த காலமாகவும் இருந்தது.பொன்விலங்கும் குறிஞ்சிமலரும் அந்த நாட்களில் என் மனதுக்கு நெருக்கமான நாவல்களாக இருந்தன.அரவிந்தனைப்போல சத்தியமூர்த்தியைப்போல தேசம் பற்றிய பொங்கும் பெருமிதத்தோடும் ஒருவித கற்பிதமான சத்திய ஆவேசத்தோடும் சிலபல நா.பா. கொட்டேசன்களோடும் ஒரு பூரணியை அல்லது பாரதி-கல்யாணியைத் தேடும் இளைஞனாக இருந்துகொண்டிருந்தேன்.கோகிலா என்ன செய்துவிட்டாள் என்கிற குறுநாவல்தான் ஜெயகாந்தனில் நான் முதலில் வாசித்தது.அப்படியே அவர் இழுத்துக்கொண்டு போய்விட்டார்.பாரீசுக்குப் போவின் கலை சார்ந்த தத்துவ விவாதங்களில் பிரமித்து அக்கினிப்பிரவேசத்தில் குளித்தெழுந்த கங்காவைப் பின்தொடர்ந்து சிலநேரங்களில் சில மனிதர்களைச் சந்தித்துச் சினிமாவுக்குப் போன சித்தாளுவுடன் ரிக்‌ஷாவில் ஏறி எம்.ஜி.ஆரின் பட வால் போஸ்டரை உடம்பில் சுற்றிக்கொண்டு அலைந்தேன்.விகடனில் அவர் எழுதிய வசீகரமான தொடர்களை விடாமல் வாசித்துக்கொண்டிருந்தேன்.ஆனால் வெகு சீக்கிரமாக நான் ஜெயகாந்தனிடமிருந்து விடைபெற்றுக் கொள்ள நேர்ந்தது. புதுக்கவிதை பொங்குமாங்கடல்போலப் பொங்கிப் பிரவகித்துக்கொண்டிருந்த நாட்களாக அவை இருந்தன.பழைய தடைகளை எல்லாம் உடைத்துக்கொண்டு மொழி புதிய எல்லைகளில் பிரவேசித்த அனுபவத்தில் நின்று ஜெயகாந்தனின் சத்தமான குரலை முன்போலக் கேட்க முடியவில்லை.வண்ணநிலவன்,வண்ணதாசனிடம் மிக இயல்பாக வந்து சேர்ந்தேன்.வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவலையும் தோழர் பால்வண்ணம் கொடுத்த ஜூலியஸ் பூசிக்கின் தூக்குமேடைக்குறிப்புகளையும் ஒரே சமயத்தில் படித்துக்கொண்டிருந்தேன்.இந்தப்பிரியங்களும் பாசங்களும்தான் வாழ்க்கை என்று கடல்புரத்துப் பிலோமிக்குட்டி சொன்னதையும் சிறைக்குள்ளே உலகத்தொழிலாளர் மீதான பாசத்துடன் ஜூலியஸ் பூசிக் மேதினம் கொண்டாடியதையும் ஒரே நேர்கோட்டில் வைத்து வாசித்துக்கொண்டிருந்தேன்.’உன் அடிச்சுவட்டில் நான்’ புத்தகத்தையும் அதே நேரம் வாசித்து அந்த ட்ராயைப்போல உலகத்தின் மக்கள் எல்லோருக்காகவும் சாகத் தயாராகிக்கொண்டிருந்தேன்.வண்ணதாசனின் கலைக்க முடியாத ஒப்பனைகள் என்ற சிறுகதைத்தொகுப்பின் அகல விரித்த வார்த்தைப் பரப்பில் தீட்டப்பட்ட நுட்பமான ஓவியங்களைக் கண்டு மனம் நடுங்கி ’எச்சங்கள்’ சிறுவர்களின் எச்சிற்சோடாக் குடிக்கும் காட்சியைக்கண்டு மனம் பதறி அச்சிறுவர்களுக்காகப் போராட உறுதிகொண்டேன்- கண்ணீரைத்துடைத்துக்கொண்டு.

இப்படியான மனநிலையோடு பாலியல் சார்ந்த குழப்பங்களும் கூடவே ஓடிவந்து கொண்டிருந்த ஒரு வயதில் –அப்போதுதான் ராணுவத்திலிருந்தும் திரும்பியிருந்தேன் –ராணுவமுகாம்களில் வாசிக்கக் கிடைத்த கமலாதாஸ் அக்காவும் சஸ்தி பிரதாவும் பாரதி முகர்ஜியும் இன்னும் என்னோடு இருந்துகொண்டிருந்தார்கள்.குறிப்பாக சஸ்தி பிரதாவின் HE AND SHE, MY GOD DIED YOUNG போன்ற நாவல்களும் கமலாதாசின் என் கதையும் கவிதைகளும் கதைகளும் இருட்டுக்குள் என்னை இழுத்துக்கொண்டே இருந்தன.இருட்டு எப்போதும் மயக்கம் தரவல்ல வசீகரத்தோடு கூடியதுதானே.

கல்லூரிநாட்களின் இறுதியில் அறிமுகமான ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவ உரையாடல்களையும் இன்னும் விடாமல் வாசித்துக்கொண்டிருந்தேன். அவருடைய COMMENTARIEES ON LIVING இரண்டு தொகுதிகளும் BEYOND VIOLENCE மற்றும் THE AWAKENING YEARS ,அவருடைய கிருஷ்ணமூர்த்தி நோட் புக் போன்ற நூல்கள் என்னோடு இருந்தன.அப்போதைய என்னுடைய பட்ஜெட்டில் அவற்றை வாங்கியது பெரிய செலவுதான்.என்றாலும் ஜே.கிருஷ்ணமூர்த்தி அப்படி ஈர்த்தார்.கேள்வி பதில் பாணியிலான அவருடைய உரைகள் அன்று என்னை ஆட்டி வைத்தன.

நீங்கள் ஒரு குழுவோடு உங்களை ஏன் அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள்? ஒரு இனத்தோடு-ஒரு மதத்தோடு- ஒரு இயக்கத்தோடு?ஒரு கூட்டத்தோடு உங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ளும் கணத்தில் உங்கள் படைப்பாற்றல் (CREATIVITY) மறும் கேள்வி கேட்கும் சுரணை முற்றுப்பெற்று விடுகிறது.என்கிற ஜே.கே யின் முன்வைப்பு நீண்ட காலம் என்னை அலைக்கழித்தது.

ஆனால் ஆர்.கே.கண்ணன் மொழிபெயர்ப்பில் வாசித்த ஜார்ஜ் பொலிட்சரின் மார்க்சீய மெய்ஞ்ஞானம் நூல் என்னைப் பிடித்திழுத்துப் பிரகாசிக்கும் சூரிய வெளிச்சத்தில் தள்ளிவிட்டது.இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைப் பச்சைக்குழந்தைகளுக்குச் சொல்வதுபோலச் சொன்ன புத்தகம் அது.அதைத்தொடர்ந்து ராகுல்ஜியின் வால்கா முதல் கங்கை வரை நூலையும் பொதுவுடமைதான் என்ன என்கிற புத்தகத்தையும் வாசித்ததில் மனம் மேலும் துலக்கமானது.வரலாற்று ரீதியாக ஒரு கதை வடிவில் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தையும் மனித குல வரலாற்றின் முக்கியமான பக்கங்களையும் பேசிய வால்கா முதல் கங்கை வரை வாசித்து அதில் வரும் ஒரு கதாபாத்திரமான ரேக்காபகத் என்கிற பெயரைப் புனைபெயராகக் கொண்டு சில கதைகளைச் செம்மலரில் எழுதினேன்.

ஜே.கிருஷ்ணமூர்த்தியிடமிருந்தும் சஸ்தி பிரதாவிடமிருந்தும் கமலாதாசிடமிருந்தும் முறையாக விடைபெற்று வர மாரீசு கான்போர்த்தின் இயக்கவியல் பொருள் முதல்வாதம் நூலும் சோவியத் வெளியீடாக அன்று வந்த Marxist Ideology என்கிற அட்டவணைகள் நிறைந்த எளிய புத்தகமும்தாம் கை கொடுத்தன.மனம் என்பதின் செயல்பாடுகள் பற்றியும் உள்மனம்-வெளி மனம்-ஆழ் மனம் மற்றும் அறிவு-உணர்வு என்பவற்றின் அடிப்படை அறிவியல் உண்மைகளோடும் இயக்கவியலைப் புரிய வைத்த இப்புத்தகங்கள் என் வாழ்க்கையையும் வாழ்க்கைக் கண்ணோட்டத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டன.

என் பசிக்குத் தீனியாக அப்போது சென்னை புக்ஸ் பாலாஜி பல நல்ல நூல்களை வெளியிட்டுக்கொண்டிருந்தார்.போல்ஷ்விக் கட்சியின் வரலாறு அப்போது வெளியாகியிருந்தது.அந்தக் கறுப்பு ஞாயிறு பற்றிய பக்கங்கள் என் மனதைப் பாதித்தன.பின்னர் பேட்டில்ஷிப் பொடெம்கின் திரைப்படத்தைப் பார்த்தபோது ஒடெஸ்ஸா படிக்கட்டுகள் காட்சி மீண்டும் என்னைப் போல்ஷ்விக் கட்சியின் வரலாற்றைப் படிக்க வைத்தது.சோவியத்யூனியனைப்போலவே அன்று கிழக்கு ஜெர்மனியிலிருந்தும் ஏராளமான மார்க்சிய அடிப்படை நூல்கள் வந்து கொண்டிருந்தன.அப்புத்தகங்கள் சோவியத் புத்தகங்களைப்போல சிவப்பு வண்ணத்தில் அல்லாமல் நீல வண்ன அட்டைகளுடன் இருக்கும்.ப்ளூ மார்க்சிஸ்ட்ஸ் என்று அவற்றைப்பற்றிய ஒரு கேலியான சிரிப்பு கோவில்பட்டித் தோழர்களிடம் இருக்கும்.

பிளெக்கனோவின் இரு புத்தகங்கள் அந்தத் தருணத்தில் தெளிவான பார்வையைத் தந்தன.வரலாற்றில் தனி நபர் பாத்திரம் என்கிற நூலும் கலையும் வாழ்க்கையும் என்ற நூலும்.அப்போது கு.சின்னப்ப்பாரதியின் தாகம் நாவலும் டி.செல்வராஜின் மலரும் சருகும் நாவலும் வந்துவிட்டிருந்தன.இதுதான் எனது பாதை எனத் தீர்மானிக்க இவ்விரு நாவல்களும் பிளெக்கனோவின் நூல்களும் வழிகாட்டின என்பேன்.

இவ்வளவு புத்தகங்களுக்குப் பிறகுதான் நான் 1848இல் மார்க்சும் ஏங்கல்சும் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையை வாசித்தேன்.ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது என்று துவங்கி எத்தனை இலக்கியப்பூர்வமான மொழிநடையில் உலகத்தொழிலாளர்களை ஒன்றுசேர அறைகூவி அழைத்த புத்தகம் அது.இன்றுவரை அப்புத்தகத்தை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே இருக்கிறேன்.ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஒரு புதிய தெளிவு கிடைத்துக்கொண்டே இருக்கிறது.எதைப்பற்றி எழுதப்போனாலும் பேசப்போனாலும் கம்யூனிஸ்ட் அறிக்கையை ஒருமுறை பார்த்துக்கொள்வது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது.அப்போது Radical review பத்திரிகையில் இ.எம்.எஸ். அவர்களின் நேர்காணல் ஒன்று வெளியாகி இருந்தது.CPI-CPM-CPI-ML என்பது அந்நேர்கணலின் தலைப்பு அதைப்படிச்சிட்டு அப்புறம் இதைப்படி என்று தோழர் பால்வண்ணம் என்னிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சித்திட்டம் என்கிற நூலையும் மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை அறிக்கை என்கிற சிறு நூலையும் கொடுத்தார். கட்சித்திட்டம் என்றால் ஏதோ அது அவர்கள் கட்சியைப்பற்றியும் அவர்களின் வழியைப் புகழ்ந்தும் எழுதியிருக்கும் என்று எதிர்பார்த்த எனக்கு அது ஓர் ஆழமான வரலாற்று ஆவணம்போல பல உண்மைகளை அடுக்கி மக்கள் ஜனநாயகப்புரட்சிக்கு மக்களை அழைக்கும் புத்தகமாக இருந்து என்னை ஆச்சர்யப்படுத்தியது.

சோவியத் நூல்களைச் சரளமாக வாசிக்கும் பழக்கம் இதற்குள் வந்துவிட்டிருந்தது.கார்க்கியைவிட அன்று என்னை மிகவும் ஈர்ப்பவராக தஸ்தாவ்ஸ்கியே இருந்துகொண்டிருந்தார்.வெண்ணிற இரவுகளின் பனி பொழியும் பாதைகளில் காதல்வயப்பட்ட இளைஞனாக நான் நடந்துகொண்டிருந்தேன்.சிங்கிஸ் ஐத்மாத்தோவின் ஜமீலாவைக் காதலிக்கும் பலகோடி உலக இளைஞர்களில் நானும் ஒருவனாக நிலவொளியில் நீந்திக்கொண்டிருந்தேன்.கோகோலின் ’மேல்கோட்’டை அணிந்து இருமிக்கொண்டு அந்தோன் செகாவின் கதைகளுக்குள் ஆறாவது வார்டில் ஒரு பாத்திரமாக மனப்பிறழ்வுடன் அலைந்து கொண்டிருந்தேன்.இவான் துர்கனேவின் முதற்காதல் என்கிற குறுநாவல் என்னை அந்நாவலில் வரும் சிறுபையனாகவே மாற்றியது.டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவலில் வரும் ஏமாற்றுக்காரப் பெண்ணும் அவள்மீது காதல் கொண்டு வாழ்நாள் முழுக்க அவள் பின்னாலேயே ஏமாந்து அலையும் அந்த இளைஞனும் அந்தக்காதலின் புனிதமும் மனதைத் தாக்கினாலும் இது ஒரு கிறித்துவப்பார்வையுடன் எழுதப்பட்ட நாவல் என்று டால்ஸ்டாயையே விமர்சிக்கும் அளவுக்கு அப்போது வளர்ந்துவிட்டிருந்தேன்.

உண்மையில் அன்றைய பல இளைஞர்களைப்போலவே நானும் மொழிபெயர்ப்பு நூல்கள் என்னும் பெரும் கடலில் விழுந்து கிடந்தேன்.நட் ஹாம்சனின் நிலவளம் நாவல் மனித வாழ்க்கையை ஆதியிலிருந்து புரிந்து கொள்ள உதவிய வரலாற்று ஆவணம் போல வந்து சேர்ந்த்து.அந்நாவலில் வரும் மேல் உதடு பிளந்த பெண்ணின் வயிற்றில் பிறந்த அவளைப்போலவே மேல் உதடு பிளந்த குழந்தையை அவள் யாருக்கும் தெரியாமல் மண்ணில் புதைக்கும் காட்சியில் இன்னும் மனம் உறைந்துபோய்க் கிடக்கிறேன்.நிலவளம் போலத் தமிழில் வந்த ஒரு புத்தகமாக அப்போது சா.கந்தசாமியின் சாயாவனம் நாவலை இயற்கையை வெல்லும் மனிதக்கதையாகப் புரிந்து கொண்டேன்.இன்று அதே கதையை இயற்கையை அழித்த மனிதன் சீரழியும் கதையாகப் புரிந்துகொள்கிறேன். வி.ஸ.காண்டேகரின் எரிநட்சத்திரம் நாவலில் வரும் புரட்சிகர இளைஞனாக என் ஆசிரியர்களுடன் வாதம் செய்திருக்கிறேன்..வங்கத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட கதைகள் ஏராளம்.விபூதிபூஷனின் இலட்சிய இந்து ஓட்டல், பங்கிம் சந்திரரரின் விவசாய எழுச்சியை மையமாக்க் கொண்ட வந்தேமாதரம் பாடலைத் தந்த ஆனந்த மடம் நாவல் ,வெளிநாட்டுக்குப் பிழைக்கப்போகும் உயர்சாதி இளைஞன் பற்றிய பாரதி நாவல் எனப்பல நாவல்கள். தாகூரின் கீதாஞ்சலி வாசித்துத் தலை நிமிர்த்தி நடந்திருக்கிறேன்.வங்க நாவல்களின் தத்துவப் பார்வையை விட என்னோடு எளிமையாகவும் நெருக்கத்துடனும் பேசிய கதைகளாக மலையாள எழுத்தாளர்களின் படைப்புகள் இருந்தன.வைக்கம் முகம்மது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும் இளம்பருவத்துத் தோழியும் குறுநாவல்களும் பஷீரின் சிறுகதைகளும் கேசவ்தேவின் நடிகையும் ஓர் அழகியின் சுயசரிதையும் என் திருமணத்துக்கு அன்பளிப்பாக வந்த என்.பி.டி.யின் சமீபத்திய மலையாளச்சிறுகதைகள் தொகுப்பும் என ஒரு வளமான பங்கு கேரளத்திலிருந்து வந்து கொண்டிருந்தது.அந்த அளவுக்குத் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு ஏதும் செல்லவில்லை என்பது இன்றுவரை தீராத ஒரு சோகம்தான்.

இந்த சந்தர்ப்பத்தில் நான் தொழிற்சங்க இயக்கத்தில் கூட்டங்களில் பேசுகிற ஆளாக மாறிப்போனதால் தேவையை ஒட்டித் தேடிப்படிக்கும் பழக்கமும் வந்து விட்டது.அப்படி வாசித்த புத்தகங்களில் என்னை மிகவும் பாதித்த புத்தகம் என தோழர் இ.எம்.எஸ். அவர்கள் எழுதிய INDIAN PLANNING IN CRISIS என்கிற நூலையும் அதன் தொடர்ச்சியாக வந்த CRISIS INTO CHAOS என்ற நூலையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே பொருளாதார அமைப்பு குறித்து எழுந்த விவாதங்கள் 1948இல் திட்டக்கமிஷன் உருவாக்கப்பட்ட பின்னணி அதன் பின் இயங்கிய வர்க்க அரசியல் பற்றியெல்லாம் தெளிவாக விளக்கிய நூல்கள் இவை.இ.எம்.எஸ் மீது ஏற்பட்ட ஈர்ப்பு அவர் எழுதிய எல்லா நூல்களையும் தேடி வாசிக்கத் தூண்டியது.அவரது இந்திய வரலாறு-ஒரு சுருக்கமான வரலாறும், நான் ஏன் கம்யூனிஸ்ட் ஆனேன் என்கிற நூலும் அப்போது தமிழில் கிடைத்தன.பின்னர் அவரது A HISTORY OF INDIAS FREEDOM STRUGGLE என்கிற புத்தகம் வந்ததும் ஓடிப்போய் வாங்கிப்படித்தேன்.இப்போது அது தமிழிலேயே கிடைக்கிறது.நம் நாட்டின் கடந்த கால வரலாற்றை ஒரு மார்க்சிய நோக்கில் பயில இதைவிடச் சிறந்த புத்தகம் வேறொன்றும் இல்லை.பின்னர் வேதங்களின் நாடு வந்தது.இந்தியாவில் சாதிகளின் தோற்ரம் பற்றிய ஒரு புதிய விளக்கத்தை இந்நூல் தந்த்து.

அங்கிருந்து என் வாசிப்பு வரலாற்று நூல்களின் மீது ஆவலுடன் தாவியது.குறிப்பாக இந்திய வரலாறு,தமிழக வரலாறு குறித்து என்ன துண்டுத்தாள் கிடைத்தாலும் வாங்கி வாசித்துத் தீவிரமாக்க் குறிப்புகளும் எடுத்துக்கொண்டிருந்தேன்.இந்திய வரலாற்று ஆய்வுக் கவுன்சிலின் நூல்கள் பலவற்றை அப்போது என்.சி.பி.எச் வெளியிட்டுக்கொண்டிருந்தது.என்சிபிஎச் கிளை பொறுப்பாளர் ஒருவரிடம் ரகசியமாக்க் கணக்கு வைத்துக்கொண்டு மாத்த் தவனையில் அந்த எல்லா வரலாறு நூல்களையும் வாங்கிக் குவித்து வெறிகொண்டு படித்துக்கொண்டிருந்தேன்.டி.டி.கோசாம்பியின் பண்டைய இந்திய வரலாறு,ராகுல்ஜியின் ரிக் வேத கால ஆரியர்கள்,ரோமிலா தாப்பரின் வரலாறும் வக்கிரங்களும்,சுவீரா ஜைஸ்வாலின் வைஷ்ணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,ஆர்.பி.ஷர்மாவின் பண்டைய இந்தியாவில் அரசு நிர்வாகத்தின் தோற்றம்,விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்கள்,பி.சி.ஜோசியின் 1857 புரட்சி ,சுசோபன் சர்க்காரின் வங்காள மறுமலர்ச்சி என எண்ணற்ற புத்தகங்கள்.படித்த நூல்களை நோட்டுப்போட்டுக் குறிப்புகளாக எழுதி வைத்துக்கொண்டிருந்தேன் –எதற்கென்று தெரியாமலே.இவ்வாசிப்பில் 1857 புரட்சியை ஒரு தனித்த சிறப்பு வாய்ந்த நூலாக உணர்ந்தேன்.ஒரு வரலாற்று நூல் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமான நூலாக இது அமைந்தது.ஏற்கனவே 1857 சிப்பாய்ப் புரட்சி பற்றி வேறு சில நூல்களையும் நான் வாசித்திருந்தேன்.மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள் முயற்சியில் 1957இல் அரசு வெளியிட்ட 1857 என்கிற விரிவான ஆங்கில நூலையும் பட்டாபி சீத்தாராமையா எழுதிய 1857 கலகம் என்கிற நூலையும் சவர்க்காரின் இந்தியப்புரட்சி நூலையும் வாசித்திருந்தாலும் அவை எதுவும் பி.சி.ஜோஷியின் நூலுக்கு ஈடாக நிற்கவில்லை.1857 புரட்சி பற்றிய வரலாறுக் காரணங்கள்,அன்றைய பத்திரிகைகளில் அது பற்றி வந்த செய்திகள்,நாட்டுப்புறப்பாடல்கள் ,பிற நாட்டு அறிஞர்கள் அப்புரட்சி பற்றி எழுதிய குறிப்புகள் என எல்லாவற்றையும் உள்ளடக்கிய முழுமையான நூலாக அது வந்திருந்தது.என்னைப்போன்ற அன்றைய இளம் வாசகர்களுக்குச் சரியான தீனியாக அது அமைந்தது.கோ.கேசவனின் எழுத்துக்களை நான் இந்த சமயத்தில்தான் வாசிக்க வாய்ப்புக் கிடைத்தது.அவரது சமூகமும் கதைப்பாடல்களும் என்கிற சின்னஞ் சிறிய புத்தகம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை இருக்கிறது.பாளையக்காரர்களின் காலத்தைப்புரிந்துகொள்ள தமிழில் இதைவிடச் சிறந்த நூல் ஏதும் இல்லை என்பேன்.அவரது மண்ணும் மனித உறவுகளும், இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் மற்றும் இயக்கமும் இலக்கியப்போக்குகளும் போன்ற நூல்களையெல்லாம் ஒருசேரத் தேடித் தேடி வாசித்தேன்.இயக்கங்களில் பணியாற்றும் தோழர்களுக்குக் கல்வி புகட்டும் மொழியில் அவர் எழுதினார்.அவரது மறைவு இட்து சிந்தனை உலகுக்குப் பேரிழப்பாகும்.

இப்போது கதைகள் எழுதவும் துவங்கியிருந்தேன்.ஒரு திட்டமிட்ட பாடத்திட்ட அடிப்படையில் இலக்கியங்களைக் கற்பது என்று முடிவு செய்து கால வாரியாக நூல்களைப் பட்டியலிட்டு நூலகங்களிலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் நிறைய சொந்தமாகவும் வாங்கிப் படிக்கலானேன்.(இந்த வைராக்கியம் ஓராண்டுக்கு மேல் நீடித்தது எனக்கு ஆச்சரியமே-அவ்வளவு நீண்ட காலத்துக்கு என் புத்தி ஒரு நிலையில் நிற்பது –வாசிப்பைப் பொறுத்து-அபூர்வம்தான்)

1920களின் முக்கிய உரைநடை இலக்கிய எழுத்துக்கள் என பாரதியின் சிறுகதைகளையும் அவரது சந்திரிகையின் கதை என்னும் நாவலையும் அ.மாதவய்யாவின் குட்டிக்கதைகளையும் வ.வே.சு.அய்யரின் மங்கையர்க்கரசியின் காதல் தொகுப்பையும் படித்தேன்.சமூகத்துக்கு ஏதேனும் சொல்லத்துடித்த கதைகளாக அவற்றை உணர்ந்தேன்.மாதவய்யா கதைகளின் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் நான் எதிர்பாராதவை.சிறுகதை என்னும் வடிவம் பூரணமாகக் கைவராத படைப்புகளாக இம்மூவரின் கதைகள் இருந்தன.ஆனாலும் சிறுகதையின் துவக்கம் சமூக அக்கறை கொண்ட்தாகவே இருந்தது-உள்மனப் பயணம் பற்றியதாக இல்லை என்பது குறிக்கத்தக்கது.

1925இல் இம்மூவரும் மறைந்து விட்ட பின் புதுமைப்பித்தனும் கு.ப.ராஜகோபாலனும் மௌனியும் முன்னுக்கு வந்தனர்.இப்போதுபோல ஒட்டுமொத்தத் தொகுப்புகள் அக்காலத்தில் இல்லை.மௌனியின் அழியாச்சுடர் ஒரு தொகுப்புதான் வந்திருந்தது.என்னைப்போலவே(!) மிகக் குறைந்த எண்ணிக்கையில் கதை எழுதியவர் அவர் என்பதாலும் சிறுகதைகளின் திருமூலர் என்று புதுமைப்பித்தன் அவரைப்பற்றிச் சொன்னதாலும் அவரை ஆவலுடன் வாசித்து ஏமாந்தேன்.அன்றுமுதல் இன்றுவரை மௌனி என்னை வசீகரிக்கவில்லை.புதுமைப்பித்தனின் காஞ்சனை,புதுமைப்பித்தன் கதைகள் ,துன்பக்கேணி போன்ற பத்துத்தொகுப்புகள் என் கையில் இருந்தன.ஒவ்வொரு கதையும் எனக்குப் பாடம் சொன்ன கதைதான்.இலங்கைக்குப் போய் பரங்கிப்புண் பெற்ற மருதாயியின் சோகமும் கடவுளோடு ஒருநாள் கழித்த கந்தசாமிப் பிள்ளையின் எள்ளலும் மகாமசானம் என்று சென்னைப்பட்டணத்தை மயானம் என்று சொல்லி முதலாளித்துவத்தின் முகத்தில் அடித்த கோபமும் அவருக்கன்றி யாருக்கு வரும்? கு.ப.ராவின் சிறிது வெளிச்சம் தொகுப்பின் கதைகள் இன்றைக்கும் மனதை ஈர்ப்பவையாக இருக்கின்றன.சிறிது வெளிச்சம்,ஆற்றாமை,மெகருன்னிசா போன்றவை இறவாப்புகழ் பெற்ற கதைகள்தாம்.

40களின் படைப்பாளிகளில் நான் தடுமாறி விழுந்தது கு.அழகிரிசாமியின் மடியில்தான்.இன்றைக்குவரை எனக்கு ஆதர்சம் அவர்தான்.நான் கதை எழுதிய ஒவ்வொரு நாளும் அவரது மடியில் உட்கார்ந்து கதை எழுதுவதான உணர்வே எனக்கு இருக்கும்.எளிய வார்த்தைகளில் எங்கள் கரிசல் மனிதர்களின் கள்ளமில்லாத உள்ளத்துடன் கதை சொன்ன அவர்தான் எமக்கு அப்பா.அவரது சிரிக்கவில்லை,தவப்பயன்,அன்பளிப்பு,கற்பக விருட்சம் போன்ற 11 தொகுப்புகள் அன்று என் கைவசம் இருந்தன. அது பற்றிய அளவற்ற கர்வமும் எனக்கு இருத்து.அவற்றை மொத்தமாக வாங்கிப்போன ஜோதிவிநாயகம் திருப்பித்தராமலே போய்விட்டது ஒரு சோகம்தான்.இன்று மொத்தக்கதைகளின் தொகுப்பு வந்துவிட்டாலும் அந்த என் புத்தகங்கள் போன சோகத்தை அது ஈடு செய்யவில்லை.

50-60 களின் இலக்கிய ஆளுமைகளாக அசோகமித்திரனும் கி.ராஜநாராயணனும் சி.சு.செல்லப்பாவும் ஜி.நாகராஜனும் சுந்தரராமசாமியும் லா.ச.ராமாமிர்தமும் என் வாழ்வில் வந்து சேர்ந்தார்கள்.சென்னை வாழ்வின் கீழ் மத்தியதர வாழ்வைக்களனாக்க் கொண்ட அசோகமித்திரனின் சிறுகதைகளைப்(காலமும் ஐந்து குழந்தைகளும் ) பார்க்கிலும் என்னைப் பாதித்தவை அவரது அற்புதமான நாவல்களான கரைந்த நிழல்கள்,தண்ணீர்,பதினெட்டாவது அட்சக்கோடு போன்றவைதாம்.தண்ணீரில் வரும் ஜமுனாவின் துக்கம் நம்முடையதாகிவிடும்.அதை ஒரு குறியீட்டு நாவல் என்று அப்போது பேசிக்கொள்வார்கள்.பத்னெட்டாவது அட்சக்கோடு ஹைதராபாத்தைக் கதைக் களனாகக் கொண்டு இந்து முஸ்லீம் கலவரத்தில் சிதையும் மனித மாண்புகள் பற்றி நுட்பமாகப் பேசிய நாவல்.கி.ரா எங்க காட்டுப் பெரியவர். வேட்டி,கிடை,கன்னிமை போன்ற சிறுகதைத் தொகுப்புகளாலும் கோபல்லபுரம் மற்றும் கோபல்லபுரத்து மக்கள் ஆகிய நாவல்களாலும் கரிசல் வாழ்வின் பல பரிமாணங்கலை எளிய பேச்சுவழக்கில் கதைகளாக்ச் சொன்னவர் கி.ரா.பிரசாதம் சிறுகதைத் தொகுப்புத்தான் சுந்தரராமசாமியின் எழுத்துக்களில் நான் முதலில் வாசித்தது.புளியமரத்தின் கதையை ரொம்ப்ப் பின்னாளில்தான் வாசித்தேன்.அவருடைய எழுத்தின் மீது ஏற்பட்ட ஒரு வசீகரமும் மோகமும் இன்றுவரை தீரவில்லை.ஜே.ஜே.சில குறிப்புகள்தான் அவருடைய மாஸ்டர்பீஸ்.கருத்துரீதியாக அந்நாவலில் விமர்சனம் எனக்குண்டெனிலும் மொழி மற்றும் உத்தி ரீதியில் அது வந்த காலத்தில் மிக முன்னதாகப் பாய்ந்த படைப்பு அது.லா.ச.ராவை அன்று வாசித்தபோது பிரமிப்பாக இருந்தது.மொழியின் எல்லைகளை இவ்வளவு தூரம் விரிக்க முடியுமா என்று வியந்ததுண்டு.பின்னர் 90களில் அபிதாவை எடுத்து வாசித்தபோது என்னால் வாசிக்கவே முடியாத அயர்ச்சி ஏற்பட்டது.ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு குறுநாவலும் நாளை மற்றொரு நாளே நாவலும் தமிழ் நவீன இலக்கியம் அதிகம் பேசாத பக்கங்களைப் பேசின.எல்லோரும் வாழ்க்கையை முன்வாசல் வழியாகப் பார்க்கும்போது ஜி.நாகராஜன் புழக்கடை வழியே அதைப் பார்க்கிறார் என்ற சு.ரா.வின் கருத்து முற்றிலும் சரிதான்.இன்றும் என்னை ஈர்க்கும் ஒரு எழுத்து ஜி.நாகராஜனுடையது.

70-80 களில் நானும் மைதானத்தில் இறங்கியிருந்தேன்.எனக்கு முன்னால் பிரபஞ்சனும்,வண்ணநிலவனும்,வண்ணதாசனும்,பூமணியும்,பா.செயப்பிரகாசமும் ,கந்தர்வனும் மேலாண்மை பொன்னுச்சாமியும் போய்க்கொண்டிருந்தார்கள்.

தொழிற்சங்க மற்றும் இலக்கிய உலகத்தோடு நான் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்து சில வேலைகளைச் செய்தபோது என் அறிவுலகின் வாசல்கள் இன்னும் அகலத் திறந்தன.கே.கிருஷ்ணகுமாரின் இயற்கை,சமுதாயம்,மனிதன் என்ற புத்தகம் எளிமையாக மனித குலவரலாற்றினூடாக அறிவியல் செய்த பயணம் பற்றிப் பேசியது. அறிவியல் இயக்கம் எனக்குச் செய்த மாபெரும் உதவி சில தலை சிறந்த மனிதர்களை எனக்கு அறிமுகம் செய்ததுதான். ச.மாடசாமி,டாக்டர் சுந்தரராமன்,டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன்,டாக்டர் ராமானுஜம்,டாக்டர் (?) செந்தில்பாபு போன்ற அறிஞர்கள் எனக்கு முற்றிலும் புதியதோர் உலகத்துப் புத்தகங்களை வாரி வழங்கிய கொடை வள்ளல்களாக அமைந்தனர்.

எளிய மக்களின் மனதோடு பேசும் கலையைக் கற்றுத்தந்த பேராசிரியர் ச.மாடசாமியின் எனக்குரிய இடம் எங்கே? அவரவர் கிணறு,சொலவடைகளும் சொன்னவர்களும் ஆகிய மூன்று நூல்களும் வாசிப்பவரின் மனங்களை விசாலமாக்கும் தன்மையுடையவை..சொலவடைகள் புத்தகம் கடுமையான உழைப்பையும் ஈடுபாட்டையும் கோரிய புத்தகம்.டாக்டர் சுந்தரராமன் தான் எமக்கு அந்தோனியோ கிராம்ஷியையும் மிஷேல் பூக்கோவையும் அறிமுகம் செய்து வைத்தவர்.அவருடைய அறிமுகத்தால் உந்தப்பெற்றுத் தேடிப் பிடித்து வாசிக்க முயன்ற புத்தகங்களென கிராம்ஷியின் PRISON NOTE BOOK மற்றும் CULTURAL WRITINGS ஆகிய இரு நூல்களையும் குறிப்பிட வேண்டும்.தோழர் தொ.மு.சி.ரகுநாதனின் கடைசி நாட்களில் இப்புத்தகங்களை அவர் கேட்கக் கொண்டுபோய்க் கொடுத்த சந்தோஷமும் எனக்குக் கிட்டியது.சவுத் விஷன் பாலாஜி வெளியிட்ட (எஸ்.வி.ஆர்-கீதா) அந்தோனியோ கிராம்ஷி-வாழ்வும் சிந்தனையும் அக்காலத்தில் முதல் அறிமுக முயற்சி.இப்போது விடியலில் அதைவிட நல்ல புத்தகங்கள் வந்துவிட்டன.

செந்தில்பாபு வரலாற்றாளர் எரிக் ஹோப்ஸ்வாம் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டார்.இப்போது அவரை விடவே முடியவில்லை.நான் முதலில் வாசித்த்து அவரது AGE OF EXTREMES தான் .நான் வாசித்த வரலாற்று நூல்களில் CLASSIC என்று இந்நூலைத்தான் சொல்வேன்.20ஆம் நூற்றாண்டைப்பற்றிய ஒரு முழுமையான பார்வையை இந்நூல்தான் வழங்கியது.அவருடைய Nations and Nationalism,Age of Empires,Age of Capitalism, சமீபத்திய Globalisation,Democracy and Terrorism போன்ற நூல்கள் வரலாற்றின் பக்கங்களைப் புரிந்துகொள்ள உதவிய நூல்கள்.ஒவ்வொரு நூற்றாண்டும் நமக்குச் சில வார்த்தகளை விட்டுச்செல்கின்றன என்கிற அவருடைய வரியும் மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு-நினைவு படுத்திக்கொண்டே இருப்பது வரலாற்றாளனின் கடமை என்கிற வரியும் மறக்க முடியாதவை.

த.வி.வெங்கடேஸ்வரன் திருவனந்தபுரத்தில் இருந்தபோதும் இப்போது டெல்லியில் இருக்கும்போதும் அவ்வப்போது அறிய புத்தகங்களை எனக்கு அறிமுகம் செய்பவராக இருக்கிறார்.முக்கியமாக புவியியல் நூல்களின் அரசியலை எனக்குப்புரிய வைத்து Jared Diamond என்கிற அற்புதமான புவியியல் எழுத்தாளரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.Jared Diamond இன் Why Geography என்கிற நூல் புவியியல் கற்பதன் அவசியத்தையும் உன்னதத்தையும் எனக்கு உணர்த்தின.அவருடைய இன்னொரு புத்தகமான GUNS,GERMS AND STEEL இதுவரையிலும் பார்க்காத ஒரு புதிய புவியியல் கோணத்தில் உலக வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவியது.வரைபடங்களின் அரசியலையும் வரைபடங்களின் வழியே வரலாற்றைப் புரிந்து கொள்ளவும் SUSAN GOLE அவர்களின் நூல்கள் சில உதவின.குறிப்பாக INDIA WITHIN GANGES- இண்டியா இந்த்ரகேஞ்சம் என்கிற அவரது நூல் ஐரோப்பியர்களின் பார்வையில் ஆதி காலந்தொட்டு இந்தியா பற்றிய சித்திரங்கள் எவ்விதம் மாறி மாறி வடிவம் கொண்டன என்பதை விளக்குகிறது.- இப்பாதையில் புத்தகங்களோடு என் வாழ்வில் குறுக்கிட்ட இன்னொரு ஆளுமை சேலம் சகஸ்ரநாமம்.நானும் அவரும் சேர்ந்து மனிதகுல வரலாறு,சமூக வரலாறு, கட்சித்திட்டம் போன்றவற்றை நழுவுபடக்காட்சிகளாகத் தயாரிக்கப் பெரும் திட்டங்கள் தீட்டினோம்.(நடக்கிறதோ இல்லையோ கனவுகளை விரித்துக்கொண்டே இருப்பதுதான் வாழ்வின் ஆதாரம் இல்லையா).மனித குல வரலாறு தொடர்பான சமீபத்திய பல நூல்களை அவர் பல ஊர்களிலிருந்து தருவித்தார்.ஒரு மேப் பாணியிலான கண்காட்சியைத் தயாரித்து ஆளுக்கு ஒரு செட் வைத்துக்கோண்டோம். சில ஊர்களுக்குக் கொண்டு சென்றோம்.அதற்குள் பவர் பாயிண்ட் என்கிற இன்னும் சிறப்பான வடிவம் வந்துவிட்டது.அவர் மூலம் வாசிக்க்க் கிடைத்த புத்தகங்களில் முக்கியமானவையாக JaredJared Diamond எழுதிய DioThe Rise anf Fall of Third Chimpanzee யையும் by Robert Wright எழுதிய The Moral Animal என்கிற நூலையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.மரபணு ஆராய்ச்சிகளின் விளைவாக மனித குலம் பிறந்தது ஆப்பிரிக்கா கண்ட்த்தில்தான் என்பது நிரூபணமான பிறகு இந்நூல்களை வாசித்தது நம் வேர்களை இன்னும் நெருக்கமாக அடையாளம் காண உதவியது. நமது ஆதி விலங்கினத் தொடர்பு எவ்விதம் இன்றுவரை நம் பண்பாட்டு வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்பதையும் நாம் ஏன் இவ்விதமாக வாழ்கிறோம் என்பதற்கான டார்வினிய அடிப்படையிலான விளக்கத்தை இந்நூல்கள் அளிக்கின்றன.

90களில் சோவியத் யூனியன் சிதறுண்டதும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகள் வீழ்ச்சியடைந்ததும் பண்பாட்டுத்தளத்தில் நாம் பணியாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின. எனது பார்வையும் இயக்கத்தின் பார்வையோடு சேர்ந்து மாற்றம் பெற்றது.அம்பேத்கரின் நூற்றாண்டு அவரது சிந்தனைகளின் மீது கவனத்தைத்திருப்பியது எனலாம்.அவரது நூல்கள் தமிழில் வெளியாகத் துவங்கியதும் ஈர்ப்புக்கு ஒரு வடிவம் கொடுத்தது.அவருடைய இந்தியாவில் சாதிகள் என்கிற கொலம்பியா பல்கலைக்கழக உரையும் புத்தரும் அவரது தம்மமும் என்கிற நூலும் காந்தியும் காங்கிரசும் தீண்டாதோருக்குச் செய்தது என்ன என்கிற நூலும் முதல் வாசிப்பிலேயே வாசகனின் கண்ணோட்டத்தை மாற்றியமைத்தன.அவரைப்பற்றிய புத்தகங்களில் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியின் அம்பேத்கர் ஆய்வு மையம் வெளியிட்ட அம்பேத்கர்-ஒரு பன்முகப்பார்வை ஒரு நல்ல எளிமையான அறிமுக நூலாகவும் DR.AMBEDKAR AND UNTOUCHABILITY- என்கிற CHRISTOPHER JAFFRELOT அவர்களின் நூல் அவரது சிந்தனைகளின் அறிமுகமாகவும் எனக்கு வாசிக்கக் கிடைத்தன.மராட்டிய அரசு வெளியிட்டுள்ள 40க்கு மேற்பட்ட அம்பேத்கர் நூல்வரிசையில் 20க்கு மேற்பட்டவற்றை வாங்கி வைத்து அவ்வப்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். முழு தொகுதிகளையும் வாங்கியாக வேண்டும்.அவருடைய ஆய்வு முறையும் ஆழ்ந்தகன்ற வாசிப்பும் ஒவ்வொரு வார்த்தையிலும் குமுறும் அவரது கோபாவேசமும் அம்பேத்கரை என் மனதின் உச்சத்தில் கொண்டு வைத்துள்ளது-மிகத் தாமதமாக அவரிடம் வந்து சேர்ந்தோமே என்கிற குற்ற உணர்ச்சியுடன்.

தந்தை பெரியாரின் நூல்களில் பெண் ஏன் அடிமையானாள்? மற்றும் திராவிடர் கழக வெளியீடுகளான பெரியார் களஞ்சியம் பத்துத் தொகுதிகள் (பெண்ணியம்,சாதி மட்டும்)வாங்கி வாசித்திருந்தாலும் வழக்குகளைச் சந்தித்து வெற்றி கண்டு பெரியார் திராவிடர் கழகத்தோழர்கள் வெளியிட்ட பெரியாரின் குடி அரசு எழுத்துக்களின் 27 தொகுதிகளை வாங்கி பரீட்சைக்குப் படிப்பது போல (ஒரு கூட்ட்த்தில் பேச வேண்டி இருந்ததால்)படித்த அனுபவம் அலாதியானது.பெரியாரின் எழுத்துக்களில் மிளிரும் கிண்டலும் கேலியும் நாட்டுப்புறக் கதைகளும் சொலவடைகளும் தனியே விவரித்து எழுதத்தக்கவை. காதல் பற்றிய அவரது கிண்டலான கருத்துக்கள் முதல் வாசிப்பில் எனக்கு வியப்பூட்டின. மக்கள் மொழியில் மக்களிடம் பேசிய மகத்தான தலைவராக அவர் மனதில் உயர்ந்து நிற்கிறார்.கிராம்ஷி சொல்லும் Organic Intellectual இவர்தான் என்று தோன்றியது.

பெண்களின் நிலை குறித்துத் தொடர்ந்து பேசி வந்தாலும் வலுவான புத்தகங்கள் வாசிக்க்க் கிடைக்காத சூழலில் எழுத்தாளர்-பத்திரிகையாளர் ஏ.எஸ்.பத்மாவதி அவர்கள் வீட்டுக்கு ஒருமுறை சென்றபோது அரிய பல நூல்களை அப்படியே எனக்கே எனக்கு என அள்ளிக்கொடுத்து விட்டார்.அவற்றில் – SIMON DE BEUOVA எழுதிய நான் ரொம்ப காலமாகத் தேடிக்கொண்டிருந்த THE SECOND SEX என்கிற புத்தகமும் இருந்தது.பிரான்ஸ் நாட்டையும் ஐரோப்பாவையும் குலுக்கிய அப்புத்தகம் பெண்நிலையில் நின்று இவ்வுலகைக் காணப் புதிய சாளரங்களைத் திறந்து விட்டது.The Beauty Myth மற்றும் Sacrificing Ourselves ஆகிய இரு புத்தகங்களும் வ.கீதா எழுதிய Gender மற்றும் Patriarchy ஆகிய இரு நூல்களும் பெண்ணியம் தொடர்பான என் பல குழப்பங்களுக்கும் விடையளிப்பதாக அமைந்தன.

நெல்லைக்குப் பணியாற்ற வந்த வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதியும் தமிழறிஞர் தொ.பரமசிவமும் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனும் எனக்குச் செய்துள்ள உதவிகள் சொல்லாலே விளக்கிவிட முடியாதவை.இந்திய-பாகிஸ்தான் பிரிவினை குறித்த சில முக்கியமான புத்தகங்களை சலபதிதான் எனக்கு வாங்கித்தந்தார்.ஊர்வசி புட்டாலியாவின் The Otherside of Silence கமலா பாஷின் எழுதிய Borders and Boundaries ஆகிய இரு நூல்களும் எந்த வரலாற்று நூலும் இதுவரை சொல்லியிராத தேசப்பிரிவினையின் காயங்களைத் திறந்து காட்டின.இந்தியாவின் விடுதலை என்பது பெண்களின் உடம்பின் மீது எழுதப்பட்ட ஒரு வரலாறுதான் என்பதை இவ்விரு நூல்களும் நம் முகத்திலறைந்து சொல்கின்றன.கண்ணீரில் கரைந்தபடி வாசித்த நூல்கள் இவை.எஸ்.ராமானுஜம் மொழி பெயர்ப்பில் வெளியான மண்ட்டோ படைப்புகள் இவ்வரிசையில் ஓர் மகத்தான நூலாகும்.

தொ.பரமசிவன் அவர்களின் அறியப்படாத தமிழகம் என்கிற நூல் தமிழகப்பண்பாட்டு வரலாற்றில் உண்மையிலேயே அறியப்படாத ஒரு தமிழகத்தை அறிமுகம் செய்து பலத்த அதிர்வுகளை உண்டாக்கிய நூல்.அந்நூலை நாங்கள் எம் தோள்களில் சுமந்து சென்று விற்பனை செய்தோம்.இன்று அவருடைய எல்லாக் கட்டுரைகளும் பண்பாட்டு அசைவுகள் என்கிற நூலாக வந்துள்ளது.நாட்டார் தெய்வங்களி வரலாற்றை ஆய்வு செய்து வெளிக்கொண்டுவந்த வாழும் நா.வானமாமலை என நான் மதிக்கிற தோழர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் அடித்தள மக்கள் வரலாறு, கொலையில் உதித்த தெய்வங்கள்,கிறித்துவமும் சாதியும் ,மந்திரங்கள் சடங்குகள் என அவரது ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு எழுத்தும் தமிழகப் பண்பாட்டு வரலாற்றைக் கட்டமைக்க உதவும் அடிப்படையான நூல்களாக அமைந்துள்ளன.சின்ன வயதிலேயே பெரும் சாதனைகள் புரிந்தவராக நான் மதிக்கும் ஆ.இரா.வேங்கடாசலபதியின் அந்தக்காலத்தில் காப்பி இல்லை,நாவலும் வாசிப்பும்,திராவிட இயக்கமும் வேளாளரும்,முச்சந்தி இலக்கியம் உள்ளிட்ட பல நூல்கள் தமிழில் வரலாற்று நூல்களின் வரிசையில் மிக முக்கிய இடம் பிடிப்பவை.

தமிழகத்தில் நானறிந்த ஒரே பொருளாதார வரலாற்றாய்வாளரான முனைவர் கே.ஏ.மணிக்குமாரின் 1930களில் தமிழகம் என்கிற நூலும் முதுகுளத்தூர் கலவரம் குறித்த அவரது 1957 RIOTS என்கிற நூலும்(அச்சில்) தமிழக வரலாற்றுக்கு அரிய பங்களிப்புகளாகும்.முத்துராமலிங்கத்தேவர் பற்றிய ஒரு விருப்பு வெறுப்பற்ற கணிப்பை மணிக்குமார் அவர்களின் இந்நூல் செய்துள்ளது குறிப்பிட்த்தக்கது.1930களில் தமிழகம் நூலை முன் வைத்து புதுமைப்பித்தனின் கதைகள் சிலவற்றை ஆய்வு செய்து பார்ப்பது அவசியம்.30களின் பொருளாதார மந்தம் பற்றி பல கதைகளில் புதுமைப்பித்தன் அழுத்தமாகவும் வெளிப்படையாகவும் பேசியுள்ளார்.

நான் சந்தித்த மனிதர்கள் எல்லோருடைய முகங்களுமே எனக்குச் சில புத்தகங்களாகவே மனதில் தோன்றுகின்றன.புத்தகம் சுமந்த (புத்தகங்களை நானும் என்னைப் புத்தகங்களும் ) வரலாறுதான் என் கடந்தகாலமும் நிகழ்காலமும் எதிர்காலமுமாக இருக்க முடியும்.என் மனப்போக்கின் ஒவ்வொரு திருப்பத்தையும் நடப்புகளும் நிகழ்வுகளும் தீர்மானித்ததை விட மேலே குறிப்பிட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்களே தீர்மானித்தன என்று உறுதியாகச் சொல்லுவேன்.

சமீபத்திய வாசிப்பில் இளம்பிறை,குட்டி ரேவதி, சுகிர்தராணி,சல்மா,மாலதி மைத்ரி போன்ற பெண் படைப்பாளிகளின் கவிதைகளும் கதைகளும் லிவிங் ஸ்மைல் வித்யாவின் தன் வரலாறும் ப்ரியாபாபுவின் எழுத்துக்களும் என்னைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளன என்பேன்.இவர்களைப்பற்றி இப்படி ஒட்டுமொத்தமாக ஒரு வரியில் எழுதுவது நியாயமில்லை.ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான வாழ்வை முன்வைத்துப் பேசுகிறார்கள்.பொதுவான அம்சம் ஒன்றுண்டு என்பதால் பொதுவாக்க் குறிப்பிட்டேன்.வாசிக்கும் ஆண் மனதைக் குற்ற உணர்வு கொள்ளச்செய்யும் படைப்புகளாக இவை யாவும் உள்ளன என்பதே அது.

கீரனூர் ஜாகிர் ராஜாவின் வடக்கேமுறி அலிமா,யோ.கர்ணனின் தேவதைகளின் தீட்டுத்துணி மற்றும் சேகுவேரா இருந்த வீடு போன்ற படைப்புக்கள் சமீபத்தில் நான் வாசித்து அதிர்வுக்குள்ளான உயிர்த்துடிப்புள்ள படைப்புக்கள்.இஸ்லாமிய வாழ்க்கைப் பின்புலத்தோடு மனித வாழ்வை, நம்பிக்கைகளை , மனித மதிப்பீடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் நாவல்களைத் தொடர்ந்து எழுதி வரும் ஜாகிர் ராஜாவின் எழுத்துக்களில் தனித்துவமான ஒன்றாக வடக்கே முறி அலிமாவை நான் மதிப்பிடுகிறேன்.ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்கிற புஷ்பராஜாவின் புத்தகமும் ராஜனி திரானகம எழுதிய முறிந்தபனை யும் காட்டிய ஈழப்போராட்ட்த்தின் மறுபக்கத்தையும் முழுமையான சித்திரத்தையும் வலி மிகுந்த வாழ்க்கையையும் துக்கத்தின் உச்சியில் பிறக்கும் பகடியாக யோ.கர்ணன் தன் சிறுகதைகளில் எழுதிச்செல்கிறார்.சேகுவேரா இருந்த வீடு ஒட்டுமொத்த ஈழப்போராட்டத்தின் குறியீடாக அமைந்துவிட்ட்து.

கோ.ரகுபதியின் தலித்துகளும் தண்ணீரும் சமீபத்தில் நான் வாசித்த மிக முக்கியமான புத்தகம்.பாவங்களைக் கழுவும் புனித வஸ்துவாகக் கருதப்படும் தண்ணீரைக் குடிப்பதற்காக தலித்துகள் நடத்தி வரும் போராட்டங்களை வரலாற்று ரீதியில் விளக்கும் இந்நூல் பரவலாக வாசிக்கப்பட வேண்டிய நூலாகும்.சு.கி.ஜெயராமன் தொடர்ந்து எழுதிவரும் புவியியல் சார் புத்தகங்களான குமரி நில நீட்சி,மணல் மேல் கட்டிய பாலம் போன்றவை இன்றைய இந்துத்துவப் புரட்டுகளையும் புளுகுமூட்டைகளையும் எதிர்கொள்ள உதவும் முக்கியமான புத்தகங்கள்.

என் இலக்கிய வாசிப்பு குறித்துப் பாதியிலேயே நிறுத்தி விட்டேன்--500 புத்தகங்களுக்கு மேல் அது வளரும் என்பதால்.

.இவையெல்லாம்தான் என் புத்தகங்கள்.இவற்றை என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டுதான் என் அன்றாடம் நகர்கிறது.இன்னும் கூட வாசிக்காத பல புத்தகங்கள் என் அலமாரிகளில் இருக்கின்றன.வாழ்வு முடிவதற்குள் நம்மிடம் இருக்கும் புத்தகங்களையாவது நாம் வாசித்து முடிப்போமா என்கிற சந்தேகம் அவ்வப்போது வரத்தான் செய்கிறது.என்றாலும் வாசிக்காமல் முடியாது.வாசித்தாலும் தீராது.

இப்படிச் சொல்ல உங்களுக்கும் நிறையவே இருக்கும்.

எப்படி எழுதுவது ?-விவாதத்துக்கான குறிப்புகள்

 

hosur-5 (ஓசூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய இளம் படைப்பாளிகளுக்கான படைப்பூக்க முகாமில் –மே 18,19,20-2012 இல் வாசிக்கப்பட்ட கட்டுரை)

பேனாவால் எழுதலாம்.

பென்சில் கொண்டு எழுதுவாரும் உளர்.

நேரடியாக கணிணியில் தட்டுவார் இன்று அதிகம்.

ஒருவர் சொல்ல ஒருவர் எழுத அல்லது தட்டச்சு செய்ய என்கிற நடைமுறையும் உள்ளது.

இந்த ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட மனநிலையைக் கோருவதாக இருக்கிறது.பேனாவால் தாளில் எழுதியவர் கணிணிக்குச் சென்றபோது ஒரு சிறிய உளவியல் நெருக்கடிக்கு ஆளாகித்தான் பழக்கமானார். யோசித்துக்கொண்டே இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட நிமிடத்தில் கணிணியின் திரை காணாமல் போகும்.கையால் எழுதும் ‘க’ வும் ’ற’ வும் என்னுடைய ’க’ வாகவும் ’ற’ வாகவும் இருந்தது.கணிணியில் யாரோ வடிவமைத்து வைத்திருக்கும் ’க’ வை எடுத்து அதில் என் எண்ணங்களைச் சொல்ல நேர்கிறது. அந்த என்னுடைய என்கிற சொந்த உணர்வு மறைந்து போகிறது.கையால் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிப் பின் அதை அச்சில் பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி இதில் குறைந்து விட்டது.கணிணியில் எழுதும் படைப்பு மனதை மின்சாராமும் மின் வெட்டும் கூடத் தகவமைக்கிறது.

சொல்லச்சொல்ல எழுதுவதில் ஒருவர் காத்திருக்கிறாரே என்கிற நெருக்கடி இருந்துகொண்டே இருக்கும்.அதையும் வென்றவர்கள் உண்டு. இன்னும் நாம் எங்கே உட்கார்ந்து எழுதுகிறோம்- தனி அறையிலா,கூட்ட்த்து நடுவிலா பொது இடத்திலா என்பதெல்லாம்கூட எழுத்தின் போக்கைப் பாதிக்கத்தான் செய்யும்.

எப்படி எழுதினாலும் அதை எழுத்தென்போம்.இங்கு இந்த நடைமுறை உண்டாக்கும் உளவியல் பற்றி நாம் விரிவாகப்பேசப்போவதில்லை-அதுவும் அவசியமே என்றபோதும். எழுத்தின் தொழில்நுட்பம் அல்லது நல்ல வார்த்தையில் சொன்னால் எழுதும் கலை பற்றி சற்றுப் பேசிப்பார்க்கலாம்.

எழுதும் கலையில் மூன்று அம்சங்கள் மிக முக்கியமானவையாகின்றன.

1.உள்ளடக்கம்

2.உருவம்/அழகியல்

3.படைப்பு மனநிலை

அ.உள்ளடக்கம்

எதை எழுதுவது என்கிற பொதுவான புரிதல் விரிவாகத் தனியே பேசப்பட வேண்டியது.அவரவர் வர்க்க நிலை சார்ந்து பிறந்த நிலப்பரப்பு-காலம்-சாதி-பால் சார்ந்து எதை எழுதுவது என்பதை படைப்பாளி தீர்மானிக்கிறார்.நாம் இங்கு பேச எடுத்துக்கொள்வது அதுவல்ல. ஒரு குறிப்பிட்ட சிறுகதை அல்லது கவிதைக்கான ஒரு குறிப்பிட்ட உள்ளடக்கம்/கருப்பொருள் பற்றியே.ஒரு படைப்பின் உருவத்தை படைப்பாளி தேர்வு செய்யும் இந்த உள்ளடக்கமே தீர்மானிக்கிறது.

வெண்மணிக் கொடுமையை அதன் முழுமையான வரலாற்றுப் பின்னணியோடு கவிதையில் சொல்ல முயன்ற நவகவிக்கு ஒரு நெடுங்கவிதை என்கிற உருவமே கை கொடுத்தது.அதை உரைநடையில் சொல்ல முயன்ற இந்திரா பார்த்தசாரதிக்கும் சோலை சுந்தரபெருமாளுக்கும் பாட்டாளிக்கும் நாவல் என்கிற உருவம் பொருத்தமாக இருந்தது.தன் குருதிப்புனல் நாவலில் வெண்மணியை பிராய்டிய உளவியல் பார்வையில் இந்திரா பார்த்தசாரதியும் செந்நெல் நாவலில் விவசாயத்தொழிலாளர் நிலைபாட்டில் நின்று சோலை சுந்தரபெருமாளும் தன் கீழைத்தீ நாவலில் இடது தீவிரவாதப் பார்வையில் பாட்டாளி சொல்ல முற்பட்ட போது --ஒரே நிகழ்வு பற்றிய மூன்று வேறு வேறு உள்ளடக்கங்களாக அவை மாற்றம் பெறுகின்றன.இப்போது இந்திரா பார்த்தசாரதியின் உள்ளடக்கத்துக்கு ஏற்ற மொழியும் உத்தியும் வேறாகவும் சோலை சுந்தரபெருமாளின் வர்க்கநிலை சார்ந்த உள்ளடக்கத்துக்கான மொழியும் உத்தியும் வேறாகவும் அதிதீவிர நிலைபாட்டில் பேசிய பாட்டாளியின் உத்தியும் மொழியும் வேறாகவும் அமைவது தவிர்க்க முடியாததாகிறது.நவகவியும் புதுக்கவிதை என்கிற உருவத்தில் அல்லாமல் மரபுக்கவிதை என்கிற உருவத்திலேயே அதைச்சொல்ல நேர்கிறது.அதே வெண்மணியை தலித் மக்களின் குரலாக ஓர் ஆவேசத்தை பொது மேடைகளில் எடுத்துச்செல்ல இன்குலாப் “..எதையெதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க... நாங்க எரியும்போது எவன் மசிரப் புடுங்கப்போனீங்க..” என்று ஓர் இசைப்பாடல் வடிவத்தைக் கையில் எடுத்தார்.எந்த உள்ளடக்கம் என்பதும் –அதாவது ஒரே வெண்மணிக் கொடுமையின் எந்தப் பகுதியை உள்ளடக்கமாகக் கொள்கிறோம் என்பதும்- அதை யாருக்குச் சேர்க்கப்போகிறோம் என்பதும் இங்கு உருவத்தைத் தீர்மானித்ததைக் காண்கிறோம்.இன்னும் வெண்மணியின் சொல்லப்படாத கதைகளும் கவிதைகளும் எத்தனையோ வடிவங்களில் வரவேண்டிய பாக்கியும் இருக்கிறது.

அருணனின் கடம்பவனமும் மதுரையை மையமாகக் கொண்ட நாவல்தான்.சு.வெங்கடேசனின் காவல்கோட்டமும் மதுரையை மையமாகக் கொண்ட நாவல்தான்.நா.பார்த்தசாரதியின் பொன்விலங்கும் மதுரையைத்தான் சுற்றியது.அருணன் ஒரு அரசியல் சித்தாந்தப் போராட்ட்த்தைக் கருப்பொருளாக-உள்ளடக்கமாக்க் கொண்டார்.ஒரு இனக்குழுவின் வாழ்முறையை சு.வெ. உள்ளடக்கமாகக் கொண்டார்.நா.பா.வோ தேசியப் பெருமிதம் பற்றிய ஒருவித ஈர்ப்பையும் பிளேட்டோனியப் புனிதக்காதலையும் உள்ளடக்கமாகக் கொண்டார்.களம் ஒன்றாக இருந்தாலும் உள்ளடக்கம் வேறு வேறாக அமைந்த்தால் இம்மூன்று நாவல்களின் விரிவும் பரப்பும் அளவும் வடிவமும் மொழியும் முற்றிலும் வேறு வேறாக அமைந்த்தை நாம் பார்க்க முடிகிறது.

தன் கதைகளின் உள்ளடக்கம்- அவற்றின் நோகம் குறித்துப் புதுமைப்பித்தனுக்கு இருந்த தெளிவுதான் அவரது விதவிதமான எழுத்து முயற்சிகளுக்கு- சோதனைகளுக்கு- அடிப்படையாக அமைந்தது எனலாம்.

“பொதுவாக என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் பண்ண உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல.பிற்கால நல்வாழ்வுக்குச் சௌகரியம் பண்ணி வைக்கும் இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடும் அல்ல.”

என்பார் அவர்.உள்ளடக்கம் மட்டுமல்ல எழுத்தாளனின் நோக்கமும் ஒரு படைப்பு எப்படி எழுதப்படுகிறது என்பதற்கு அடிப்படையாக அமையும் என்பதற்கு புதுமைப்பித்தன் ஒரு உதாரணம் எனலாம்.

ஆ.உருவம் அல்லது வடிவம்/அழகியல்

”தமிழில் இம்மாதிரி உரைநடை நவீனம் பொதுமக்களுக்குஇதுவரை அளிக்கப்படவில்லை.ஆகையால் இந்நூல் வாசகர்களுக்கு ரசமாகவும் போதனை நிறைந்ததாகவும் இருக்கலாம் எனப் பெருமை கொள்கிறேன்.இம்மாதிரிப் புதிய முயற்சியில் ஏதாவது குற்றங்குறைகள் இருப்பின் பொருத்தருளுமாறு பொதுமக்களை வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்”

மேற்கண்ட வரிகள் 1879ஆம் ஆண்டு வெளியான தமிழின் முதல் நாவலான பிரதாபமுதலியார் சரித்திரம் நூலுக்கு அதன் ஆசிரியர்(!) ச.வேதநாயகம் பிள்ளை.ரசமாகவும் போதனை நிறைந்ததாகவும் என்கிற இரண்டு வார்த்தைகளும் கூர்ந்து நோக்கத்தக்கவை.தெருக்கூத்தில் குற்றங்குறை இருந்தால் பொறுத்தருளக்கேட்கும் கூத்துக்கலைஞனைப்போல நாவல் என்கிற ஒரு புதிய உரைநடை இலக்கிய வடிவத்தை முதன் முதலாகக் கைக்கொள்ளும் எழுத்தாளன் பேசுகிறான்.

கவிஞனுக்கு அத்தகைய மனத்தடைகளோ தயக்கங்களோ இருப்பதில்லை.ஏனெனில் கவிதைக்கு மிக நீண்ட வரலாறும் ஏற்பும் இருக்கிறது.ஆதிப்புராதன சமூகங்களில் நிலவிய கூட்டு வாழ்க்கையிலேயே உழைப்புப் பாடல்கள் எனும் வடிவில் கவிதை பிறந்து விட்டது.இயற்கையை வேண்டியும் ஏவல்கொண்டு அடக்கியாளவும் அம்மக்கள் நடத்திய சடங்குகளில் உச்சாடஞ்செய்யப்பட்ட மந்திரங்களும் கவிதை வடிவில் அமைந்தன.ஆகவே கவிதைக்கு மந்திர சக்தி இருப்பதான நம்பிக்கை இன்றுவரை தொடர்கிறது.இசைபாடவும் வசைபாடவும் ஏற்றவராக்க் கவிஞர்களே கொள்ளப்பட்டனர் என்பார் கைலாசபதி.மார்க்சிய அறிஞர் காட்வெல் “ கவிதை கூட்டு மொழியின் வெளிப்பாடாகவும் பொதுமக்களின் உணர்ச்சி வெளிப்பாட்டின் வடிவமாகவும் அமைந்தது “ என்று குறிப்பிடுகிறார்.புதுக்கவிதை வந்தபோது இந்த இலக்கணமெல்லாம் அடிவாங்கியது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.தனி மனித உணர்ச்சியை மையமாகக் கொண்ட உரைநடை இலக்கியத்தின் கூறுகளை புதுக்கவிதை உள்வாங்கிப் பயணம் செய்தது.

நிற்க.

உருவம் என்பது கதை அல்லது கவிதை எப்படிச்சொல்லப்பட்டுள்ளது என்பதைப் பற்றியது.அஎன்ன சொல்கிறாய் என்பதை விட எப்படிச்சொல்கிறாய் என்பதுதான் முக்கியம் என வாதிடுவோர் எல்லாக்காலங்களிலும் இருப்பர்.நம்மைப்பொறுத்தவரை இரண்டும் சம முக்கியத்துவம் உடையவை.எதை நீ- எப்போது- எப்படிச்சொல்கிறாய் என்கிற மூன்றும் நமக்கு முக்கியம்.

ஒரு படைப்பின் உருவம் அல்லது வடிவம் பற்றிப் பேசுங்கால் “அடியின் சிறப்பே பாட்டெனப்படுமே”என்று தொல்காப்பியம் கூறுவதுபோல படைப்பின் உள் கட்டமைப்பு பற்றிப் பிரித்தும் விரித்தும் பேசியாக வேண்டும்.கதைக்கும் கவிதைக்கும் இது வேறு வேறாக அமையும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

1,மொழிநடை

2.உத்தி

3.பாத்திரப்படைப்பு

ஆகிய மூன்று கூறுகள் உருவத்தின் அடிப்படை அம்சங்களாகின்றன.

1.மொழிநடை

”எளிய பதங்கள்,எளிய நடை,எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம்,பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு,இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான்” என்கிற பாரதியின் முன்வைப்பில் உள்ள எளிமை ஒன்றை மட்டுமே பிடித்துக்கொண்டு நம் படைப்பு மொழி நின்றுவிடக்கூடாது.சுவை புதிது,பொருள் புதிது,சொல் புதிது என்றும் பாரதி சொன்னதையும் சேர்த்த்துக்கொள்ள வேண்டும்.நாம் எதைச் சொல்ல வருகிறோமோ யாருக்குச் சொல்லப்போகிறோமோ கதையில் எந்தக் கதாபாத்திரத்தின் வழியே அதைச் சொல்கிறோமோ அதற்கேற மொழி நடை அமைய வேண்டும்.இதுபற்றி ரகுநாதன் குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும் “ தமிழில் எழுதி வந்தவர்கள் காதலாயினும் கையறு நிலையாயினும் ஒரே மாதிரி நடையில் ஒரே மாதிரி வேகத்துடன் பாவத்துடன்தான் எழுதினார்கள்” இது சரியல்ல.சொல்ல வரும் உணர்ச்சிக்கும் மொழி உகந்ததாக இருக்க வேண்டும்.தனித்தமிழ், செந்தமிழ் நடை என்பதெல்லாம் படைப்பிலக்கியத்தில் கவைக்குதவாதவை எனக் காலம் நிராகரித்துவிட்ட்தை நாம் உணர வேண்டும்.

தலித் இலக்கியம் தமிழில் முன்னுக்கு வந்த காலத்தில் அதன் மொழி குறித்துத்தான் அதிகமான சர்ச்சைகள் எழுந்தன.தொல்காப்பியர் காலந்தொட்டே இவ்விவாதம் இருந்துள்ளது.

“சேரி மொழியாற் செவ்வதிற் கிளந்து

தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்

புலனென மொழிப் புலனுணர்ந்தோரே” என்பது செய்யுளியலில் தொல்காப்பியர் கூற்று.இவ்வரிகளுக்கு

பேராசிரியர் உரை இவ்விதம் அமைகிறது “ சேரி மொழி என்பது பாடி மாற்றங்கள்.அவற்றானே செவ்விதாகக் கூறி ஆராய்ந்து காணாமைப் பொருட்டொடரானே தொடுத்துச்செய்வது புலன் என்று சொல்வார் புலனுணர்ந்தோர் என்றவாறு அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச்செய்யுளாகிய வேண்டுறைச் செய்யுள் போல்வன வென்பது கண்டுகொள்க” அதாவது நாடகத்தில் கூற்றுக்குரியோர்க்கு ஏற்றவண்ணம் பேச்சு அமைதல் வேண்டும் என்கிறார்கள்.அதாவது பாத்திரங்களின் மொழியாக வரும்போது மக்கள் மொழி இருக்கலாம்.ஆசிரியர் கூற்றாக வரும்போது பொதுமொழி இருக்கட்டும் என்பதே இதன் பொருள்.ஆனால் இன்று மு.ஹரிருஷ்ணன் போன்றோர் முற்றிலும் அவர்தம் வட்டாரப் பேச்சுமொழியிலேயே இடக்கரடக்கல் ஏதுமின்றிக் கட்டற்ற காட்டாற்று வெள்ளம்போல எழுத்த்துவங்கியுள்ளனர்.அத்தகைய மொழிக்கு வரவேற்பும் விமர்சனமும் சேர்ந்தே வருவதையும் பார்க்கிறோம்.அது படைப்பாளியின் சுதந்திரம்தான் என்றபோதும் வாசகனுக்கு நெருக்கமான மொழி என்பதும் முக்கியம் அல்லவா?

“கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்புச் சாதனமாக மட்டும் வைத்துத் தாவிச்செல்லும் நடை ஒன்றை அமைத்துக்கொண்டேன்.நானாக எனக்கு வகுத்துக்கொண்ட பாதை.தமிழ்ப்பண்புக்கு முற்றிலும் புதிது” –இது புதுமைப்பித்தன்.

“சொல்லும் பொருளும் நெஞ்சில் கண்ணாமூச்சி ஆடுகின்றன.வரம்புகள் கடந்த விஷயங்களை எழுத்தில் பிடிக்க முயல்கையில் அவை நழுவுகின்றன.ஊடலாடுகின்றன.பாஷையே பரிபாஷையாக மாறுகின்றது”-இது லா.ச.ராமாமிருதம்.

”மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும்” என்பதும் “வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர் சுட்டு ஆகலான்” என்பதும் தொகாப்பிய பொருளதிகாரம்.அதாவது மரபு வழிக் கூறவில்லை எனில் பொருள் வேறுபடும் என்பதும் உயர்ந்தோர் கூறும் வழக்கால் மரபு தோன்றுகிறது.வழக்கை உருவாக்குவதும் செயல்படுத்துவதும் உயர்ந்தோரே என்பதும் இதன் விளக்கம்.

மொழியில் விழுத்திணை(உயர்குடி வழக்கு) என்றும் இழிசனர் வழக்கு என்றும் இரண்டாக இருந்து வந்த்தும் பக்தி இயக்ககாலம் வரை இழிசனர் வழக்கு எழுதா எழுத்தாகவே இலக்கியத்தில் இடமின்றிட் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்ட்தும் நம் மொழிவரலாற்றின் முக்கியமான பக்கங்கள்.

மேற்சொன்ன எல்லாவற்றையும் பகுத்தாய்ந்து பார்க்கையில் ஒரு படைப்பின் மொழி என்பது அலங்காரமாகப் படைப்பில் நான் இருக்கிறேன் பார்த்தாயா இல்லையா என்று துருத்திக்கொண்டு நில்லாமல் உள்ளடக்கத்திற்கும் நோக்கத்துக்கும் உணர்ச்சிக்கும் பொருத்தமானதாக வாசிப்புக்கு இடையூறாக நில்லாமல் அமைய வேண்டும்.ஈராயிரமாண்டுப் பாரம்பரியம் மிக்க நம் தமிழ் மொழியின் செறிவான சொற்களையும் இலக்கணத்தையும் இலக்கியங்களையும் கற்றுத்தேறாமல் அன்றாடப்புழக்கத்தில் உள்ள தேய்ந்துபோன அலுமினியப்பாத்திரங்கள் போன்ற குறைவான சொல்வளத்தைக் கொண்டே நம் படைப்பாளிகள் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விமர்சன-சுய விமர்சன-நோக்குடன் நாம் பார்க்க வேண்டும்.

இவ்வகையில் ரகுநாதன் –புதுமைப்பித்தன்- கு.அழகிரிசாமியின் பள்ளி (SCHOOL OF THOUGHT)மாணாக்கர்களாக நாம் இருப்பது நல்லது.க.நா.சு- மௌனி-சுந்தரராமசாமி என்கிற சொந்தப் பாரம்பரியமற்ற பள்ளி மட்டும் போதாது.மேனாட்டுக் கலைச்செல்வங்களுக்காக இவர்கள் பள்ளியில் நாம் அமர்வது அவசியம் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இடைக்காலத்தில் பின் நவீனத்துவ வாதிகளாகத் தம்மைக் காட்டிக்கொள்ள முயன்ற சிலரின் சொல் விளையாட்டுக்களில் நாம் வீழ்ந்துவிடக்கூடாது.லா.ச.ராவின் பரிபாஷை என்பதை சரியான அளவில் சரியான கோணத்தில் உள்வாங்க வேண்டும்.நீண்ட காலம் செய்யுளிலும் சூத்திரத்திலும் மந்திரத்திலும் பரிபாஷையாக முடங்கிக்கிடந்த மொழியை நடமாட வைக்க ’வழங்கும் வசன நடை’ ஒன்று வரப் பலகாலம் ஆனதை மறந்து விடக்கூடாது.அதே சமயம் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையிலான பரிபாஷையாக உயிர்ப்புள்ள படைப்பு திகழமுடியும் என்பதையும் நாம் புரிந்து ஏற்க வேண்டும்.

மரபுகளை மீறாமல் புதியது பிறக்காது.மரபை முழுதாக அறியாமல் அதை மீறவும் முடியாது.மொழியிலும் சொல்புதிது வேண்டுமெனில் மரபுமீறல்கள் தவிர்க்க முடியாது.ஆனால் அதன் அவசியம் அதன் அளவு அதன் எல்லை குறித்த தன்னுணர்வு தேவை.

மக்கள் மொழியான நாட்டுப்புற இலக்கியங்களிலிருந்தும் பண்டைய தமிழிலக்கிய மரபிலிருந்தும் நம் படைப்புக்கான மொழியைப் பெற வேண்டும்.நாட்டுப்புற இலக்கிய வடிவங்களான பாடல்கள்,கதைப்பாடல்கள்,விடுகதைகள்,சொலவடைகள்,பழமொழிகள் போன்ற எல்லாவற்றிலிருந்தும் நாம் வார்த்தைகளை உருவி எடுக்கப்பழக வேண்டும்.இடையறாத வாசிப்பின் மூலம் நம் மனதில் தேக்கி வைக்கும் சொற்சேகரத்திலிருந்து படைப்பு மனம் தேவையானவற்றை தேவையான நேரத்தில் எடுத்துக்கொள்ளும்.

கிள்ளிப்போட்டுக் கிட்ட நிக்கலாம்..அப்படி ஒரு இருட்டு..

அரிசின்னு அள்ளிப்பார்ப்பாரும் இல்லை உமின்னு ஊதிப்பார்ப்பாரும் இல்லை.

சாமியே சைக்கிள்ளே போகுது பூசாரி புல்லட் கேட்கிறாரு

போன்றவையும் நமக்குத்தேவை.காமம் செப்பாது கண்டது மொழிமோவும் நமக்குத் தேவை.

புதுக்கவிதை பிறந்த காலத்தில் அதன் முக்கிய அம்சங்கள் பற்றிச் பேசிய க.நா.சு.,

“1. வார்த்தைச் சேர்க்கைகள் காதில் ஒருதரம் ஒலித்து உள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்ப வேண்டும்.

2.முதலில் புரியாமலிருந்து படிக்கப் படிக்கப் புரியத்தொடங்குவதாக இருக்க வேண்டும்.

3.நள்ளிரவில் விழித்துக்கொள்ளும்போது திடுதிப்பென காரண காரியமேயில்லாமல் மனசில் தானே தோன்றிப் புது அர்த்தம் தரவேண்டும்.”

என்றார்.எழுத்தாளர் வாசகர் இருவருக்கும் பொதுவான அவரவர் மொழிக்கிடங்கிலிருந்துதான் பொது அர்த்தங்கள் கிடைக்கின்றன.கநாசு வின் பார்வை எப்போதும் முற்றிலும் ரசனை சார்ந்ததுதான்.ஆனால் இலக்கியத்துக்கு அது முக்கியம்.அது ஒரு முகம்.அவர் மேலே கூறும் அனுபவம் மொழியின் சாத்தியங்கள் சார்ந்த்து என்பதையே இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.முதலில் புரியாமல்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏதுமில்லை.இந்த வரி மொழி சார்ந்த்தல்ல கவிதையின் உள்ளடக்கம்/அர்த்தம் சார்ந்த்து எனக்கொள்ளலாம்.

சொல்லாலே விளக்கத் தெரியலே அதைச் சொல்லாமலும் இருக்க முடியலே என்று பட்டுக்கோட்டையார் காதலுக்குச் சொன்னதை நாம் படைப்பு மொழிக்கும் பொருத்திப்பார்க்கலாம்.சொல்லிலிருந்து சொல்ல முடியாமைக்கும் சொல்ல முடியாததை உணரச்செய்வதற்குமாக நமது சொற்கள் நகரவேண்டியிருக்கிறது. ஜிப்ஸி சிறுகதையில் மக்சீம் கார்க்கி “ என் காதலை வார்த்தைகளால் சொல்லமுடியவில்லை.அந்த வயலினைக்கொண்டுவா.அதில் வாசித்துக்காட்டுகிறேன்” என்று எழுதியிருப்பார்.மனக்குகை ஓவியங்களானாலும் எழுத்தாளன் அவற்றைத் தன் வார்த்தைகளால்தான் வரையவேண்டியிருக்கிறது.சொல்லைப் புதுப்பித்துப் புதுப்பித்து அதில் தன் உயிரையும் சக்தியையும் ஏற்றித் தீ என்று எழுதினால் தாளில் தீப்பிடிக்கும் நிலைக்குக் கொண்டுசேர்க்க வேண்டும்.

எனக்கு இப்படியான மொழிதான் கை வருகிறது நான் என்ன செய்யட்டும் என்று ஒரு நவீன படைப்பாளி சொல்ல முடியாது.பொதுவாக எழுதுபவர் எல்லோருமே ஒரு மத்தியதரவர்க்க மனோபாவத்தில்(பிறப்பால் அப்படி இல்லாவிட்டாலும்)தான் இயங்குகிறோம்.மொழி குறித்த மனத்தடைகளுக்கு இந்த வர்க்கநிலையும் ஒரு காரணம்.நம் தலைகளில் நீண்டகாலமாக ஏற்றப்பட்டிருக்கும் மொழி குறித்த புனிதம்-தீட்டு என்கிற கருத்துக்கள் நாம் படைப்பில் ஈடுபடும்போது வந்து நின்று வழிமறிக்கின்றன.மொழியைச் சுதந்திரமாகக் கையாளவே நாம் நம்மை கீழ்வர்க்கப்படுத்திக்கொள்ளவும் அ-சாதிப்படுத்திக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.

மௌனி,நகுலன்,கோணங்கி,ரமேஷ்-பிரேதன் போன்றோரின் மொழி வாசகப்பங்கேற்புக்கு எந்த வாசலையும் திறந்து வைக்காமல் நகர்வதாகும்.நவீன கவிதைகள் இதுபோல அசாதாரணமான வடிவ இறுக்கம் ,மொழிச்சிக்கனம்,படிம அடர்த்தி,உள்நோக்கிய பார்வை கொண்டு இயங்கியாக வேண்டும் என்பது நீண்டகாலமாக எழுதப்படாத விதியாக இருப்பதை நாம் காண்கிறோம்.முற்போக்குப் படைப்பாளிகளும் ஈழத்திலிருந்து வரும் படைப்புகளும் பெண் படைப்பாளிகளின் புதிய வரவும் தலித் எழுத்துக்களுமே இப்போக்கை சக்தியிழக்கச்செய்தன எனலாம். மொழியின் கட்டமைக்கப்பட்ட புனிதங்களை நவீன பெண் படைப்பாளிகள் தங்கள் ஆவேசமிக்க கவிதைகளால் உடைத்து நொறுக்கிவிட்டனர்-சில அதீதங்களும் இருந்தன என்றபோதும்.மொழியின் எல்லைகளையும் சாத்தியங்களையும் அவர்கள் விரிவாக்கமும் செய்துள்ளனர்.மிகசமீப காலமாக எழுத வந்துள்ள திருநங்கையரின் மொழி அவர்களின் ஈராயிரமாண்டுத் தனிமையையும் கேட்கப்படாத உடல்/மன வாதைகளையும் சுமக்க இயலாமல் திணறுவதைக் கான முடிகிறது.ப்ரியாபாபு அவர்களுக்கான பொதுமொழியில் பேசுகிறார் எனில் லிவிங் ஸ்மைல் வித்யா தனித்த வேதனையை மனச்சிதைவை கூர்மையான மொழியில் பேசுகிறார்.

புதிதாக எழுதத்துவங்கும் இளம் படைப்பாளி தலித்/பெண்/திருநங்கையர்/சிறுபான்மையினர் எழுத்துக்களைச் சுமக்கும் ’மொழிகளை’ வாசித்து உள்வாங்குவது அவசியம்.

இலக்கியம் மொழியின் சாத்தியக்கூறுகளால் ஆனதல்ல.மொழியின் ரூபத்தில் வாழ்வின் சாத்தியக்கூறுகளால் ஆனது என்பதை மட்டும் ஒருபோதும் நாம் மறந்துவிடலாகாது.

2.உத்தி

கதையின் முதல் வரி எப்படி அமைய வேண்டும்.முடிப்பு எப்படி இருக்க வேண்டும்.ஒரு நிகழ்வை எந்தக்கோணத்தில் நின்று பார்க்க வேண்டும்.எந்தக் கதாபாத்திரத்தின் பார்வையில் கதையைச் சொல்வது.நான் பேசுவதாகவே அமைப்பதா அவன் அவள் என்று போவதா அல்லது ரமேஷ்,சுசீலா என்று கதாபாத்திரங்களுக்குப் பேர் வைத்து நகர்த்துவதா.அல்லது மாடு பேசுவதாகவோ புளியமரம் அல்லது குளத்தங்கரை அரசமரம் பேசுவதுபோலவோ கதையைச் சொல்லுவதா, நனவோடை உத்தியா முற்றிலும் உரையாடலாகவே கொண்டு செல்வதா ,யாராக இருந்து கதையைச் சொல்லுவது– இது போன்ற பல நூறு சின்னச் சின்ன நுட்பங்களையே நாம் உத்தி என்ற பேரால் குறிக்கிறோம்.

தான் சொல்ல வந்ததை வாசகனுக்குக் கடத்த நினைத்த உணர்வை சரியாகக் கொண்டுசெல்ல படைப்பாளி கையாளும் கலைத் தந்திரங்களே உத்தி எனப்படும்.

வேலையற்ற இளைஞனின் மனநிலை பற்றிய கரையும் உருவங்கள் என்கிற தன் கதையை வண்ணநிலவன் ”அவன் தலையைக் குனிந்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான்” என்று துவக்கியிருப்பார்.சக்கிலியர் சமூகத்தின் வாழ்வைச்சொல்ல வந்த பூமணியின் பிறகு நாவல் “ ஏலேய் சக்கிலியத்தாயிளி மாடு பாருடா படப்புல மேயிறத..” என்று துவங்கும்.கம்யூனிஸ்ட் இயக்கத்தை லட்சியவெறி பிடித்த அகம்பாவமாகக் காட்டும் நோக்கத்துடன் எழுதப்பட்ட ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரல் நாவல் கைக்கொள்ளும் உத்தியும் மொழியும் நாம் கவனிக்கத்தக்கவை.ஒரு நாவலுக்குள்ளேயே சிறுகதைகள்,நாடகம்,கவிதைகள்,கடிதங்கள்,கட்டுரைகள்,நினைவுக்குறிப்புகள் என மொழியின் எல்லா வடிவங்களையும் கொண்டுவரும் உத்தி படைப்பாளிக்கு நிறையச் சுதந்திரத்தை வழங்குவதைக் காண்கிறோம்.

சுந்தரராமசாமியின் புளிய மரத்தின் கதை ஒரு உத்தி எனில் ஜேஜே சில குறிப்புகள் முற்றிலும் வேறான ஒரு உத்தியில் எழுதப்பட்டுள்ளது.ஜேஜே என்னும் கற்பனைப் பாத்திரத்தை நிஜம்போலும் படைத்து ஒரு புதிய வழியை அவர் படைப்புலகுக்குத் திறந்து விட்டார்.சமீபத்திய வரவான கீரனூர் ஜாகீர்ராஜாவின் வடக்கேமுறி அலிமா முற்றிலும் புதிய ஒரு உத்தியைக் கையாண்டுள்ளது.ஆதவன் தீட்சண்யாவின் லிபரல் பாளையத்துக்கதைகள் உலகமய காலத்தைப் படம் பிடிக்க மேற்கொள்ளப்பட்ட புதுவகை உத்தி எனக் கூறலாம்.கன்னட/மராட்டிய அனுபவங்களிலிருந்து உரம் பெற்று தமிழில் எழுதப்பட்ட கருக்கு,சிலுவைராஜ் சரித்திரம் போன்ற தன் வரலாற்று நாவல்கள் ஒரு புதுவகை உத்திதாம்.

இந்த உத்தி,வடிவம்,மொழி பற்றிய தன்னுணர்வு ஏதுமின்றிக் களங்கமில்லாத கிராமத்து மனதுடன் கதை சொன்ன கு.அழகிரிசாமி அந்தக் களங்கமற்ற படைப்பு மனதின் காரணமாகவே பல அற்புதமான படைப்புகளைத் தந்து நாம் மேலே பேசிய முறைமைகளுக்கெல்லாம் சவாலாக விளங்குகிறார்.நாட்டுப்புற மொழியுடன் ஒரு தத்துவப்பார்வையை இணைத்துப் படைத்த கி.ராஜநாராயணனும் இவ்வரிசையில் வைக்கத்தக்கவரே.

3.படைப்பு மனநிலை

எதைச் செய்வதற்கும் ஒரு மனசு வேண்டுமல்லவா? மனசில்லாமல் செய்யும் எதுவும் ஜெயிக்காது.கதை ,கவிதை எழுதவும் ஒரு மனசு வேணுமல்லவா? அதையே படைப்பு மனநிலை என்கிறோம்.ஒருமுறை தமுஎச அன்று நடத்திய நாவல் முகாமுக்கு வந்திருந்த எழுத்தாளர் அசோகமித்திரனிடம் படைப்பு மனநிலை பற்றி நம் தோழர்கள் கேட்டபோது அவர் சொன்ன பதில் : ”அப்படின்னு தனியா ஒண்ணும் இல்லை.இதுதான் என் வெளிப்பாட்டு வடிவம் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையும் தன் ஏற்பும் அழுத்தமான சமூக அக்கறையுமே படைப்பு மனநிலையாக வடிவெடுக்கும்”

அதெல்லாம் ஒரு இன்ஸ்டிங்க்ட்-ஒரு ஸ்பார்க்-எனச்சொல்லி உழைப்பால் வருவதல்ல படைப்பு மனநிலை என்று ஒதுக்கிச்செல்ல முயல்வார் உளர்.ஒரு துளிர்ப்பும் வெடிப்பும் படைப்புக்கு முக்கையம் என்பதில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை.ஆனால் ஒரு ஸ்பார்க்- மின்னல்கீற்று மட்டுமே படைப்பாக முடியாது.படைப்பை அது தூண்டலாம்.நன்கு பண்படுத்தப்பட்ட நிலம்போலத் தன் மனதை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கும் படைப்பாளியின் மனதில் இந்துத் துளி வீழும்போதுதான் படைப்பு கிளை பரப்பி விரிகிறது.

இந்தத் “தயார் நிலை” என்பது என்ன?

இடையறாத வாசிப்பும் எழுத்து முயற்சியும் இன்னொருவர் நிலைபாட்டிலிருந்து தன்னையும் இந்த வாழ்வையும் பார்க்கும் மனப்பயிற்சியும் பிறர் வலிகளைத் தன் வலியாக உணரும் பண்பாடும்தான் இந்தத் தயார்நிலையாகும்.நான் யார் என்ற கேள்விக்கு மனித குல வரலாற்றின் நெடும்பாதையில் இன்று வாழ நேர்ந்த மனிதன் நான் எனப்பதிலுரைக்கும் மனமே இந்தத்தயார் நிலை.அறிவால் இவ்வுலகின் போக்கையும் பிரபஞ்ச இயக்கத்தையும் புரிந்துகொள்ளும் அறிவு மேதமையும் படைப்பாக்க உந்துதலும் இணையும் புள்ளிதான் இந்தத் தயார் நிலை.

பொதுவாக தமிழ்ப்படைப்பாளிகள் மத்தியில் அறிவுக்கு எதிரான ஒரு மனநிலை நீண்ட காலம் இருந்து வந்தது.இக்கதையை இவர் தன் மனதால் எழுதவில்லை.மூளையால் எழுதிவிட்டார் என்பது போன்ற விமர்சனக்குரல்களை நாம் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.இந்த்ப்பார்வையின் பின் உள்ள அரசியல் எதுவெனில் கீழ்த்தட்டு மக்களின் வாழ்வைச் சொல்லி விடாமல் முற்றிலும் ஒரு மத்திய தர வர்க்க மனோபாவமான உள்முகப்பயணம்தான் இலக்கியத்தின் அடிப்படை என்று நிறுவும் அரசியல்தான்.

இன்னொரு புறம் இலக்கியம் எதையும் சொல்ல வேண்டியதில்லை என்கிற போக்கும் லட்சியவாதத்துக்கு எதிர்நிலையில் அறம் என்பதை வைத்து(இரண்டும் எதிரானவையா?) ஒருமுகப்பட்ட மனிதப்பயணம் சாத்தியமில்லை என்கிற போக்கும் வளர்ந்து வருகிறதைப் பார்க்கிறோம்.சுந்தர்ராமசாமி அவர்கலின் ஒரு வாசகத்தையே இதற்குப் பதிலாகக் கூறலாம்:

“ இலக்கியம் சங்கீதம் அல்ல என்பதாலேயே அர்த்தமும் தத்துவமும் அதன் உடன் பிறந்த சங்கடங்கள் .எனவே தத்துவத்தின் ஒரு சாயலில் ,திட்ட்த்தின் ஒரு நிலையில் நின்றே தொழிலைத் தொடங்க வேண்டியதாக இருக்கிறது.எனினும் கலைஞன்,சிருஷ்டி கருமத்தில் முன்னேறும்போது, மனசை ஏற்கனவே பற்றியிருக்கும்முடிவுகள்,தத்துவச்சாயல்கள் இவற்றைத்தாண்டி ,சத்திய வேட்கை ஒன்றையே உறுதுணையாகக் கொண்டதன் விளைவால்,கலை சத்திய வெறி பெற்று, குறுகிய வட்டங்களை ‘நிரூபிக்க’க் குறுகாமல்,அனுபவத்தின் நானாவிதமானதும் மாறுபட்டதும் முரண்பட்ட்துமான சித்திரங்களின் மெய்ப்பொருளை உணர்த்த வேண்டும்.நான் நம்பும் கலை இது”- உடன்படவும் முரண்படவுமான உள்ளடக்கத்தோடு வந்து விழுந்துள்ள வரிகள் இவை.இவ்வரிகள் குறித்து நிறைய ஒட்டியும் வெட்டியும் பேச முடியும்.இப்போதைக்கு இலக்கியம் சங்கீதம் அல்ல.அதற்கு அர்த்தமும் தத்துவமும் வேண்டும் – இருந்துதான் தீரும் என்றுதான் சுந்தரராமசாமி கூறியிருக்கிறார் என்று அடிக்கோடிட்டு விட்டுச் செல்வோம்.

வாழ்க்கை என்னும் பேராற்றிலிருந்து ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கான வடிவமான கதை,கவிதை,நாவல்,காவியம் என்னும் பாத்திரத்தில் துளி நீரை/ஒரு குவளை நீரை/ஒரு வாளி நீரை/ஒரு அண்டா நீரை வாசகருக்கு அள்ளி வருகிறான்.அந்தத் துளி நீரிலும்கூட –குவளை நீரிலும் கூட- அப்பேராற்றின் வரலாறும் வாசமும் ருசியும் தன்மையும் அறியத்தக்கதாக –உணரத்தக்கதாக-உட்கொள்ளத் தக்கதாக இருந்திட வேண்டும்.அதற்கு உதவும் விதமாக நீரைச் சேந்திக் கொண்டுவர உதவும் உருவும் உத்தியுமே நாம் எப்படி எழுதுவது என்பதைக் கற்பிக்கும்.

-ச.தமிழ்ச்செல்வன்

என் சக பயணிகள்-19 கவிஞர் பரிணாமன்

parinaman for pp என்னைவிட ஆறேழு வயது மூத்தவரான கவிஞர் பரிணாமன் என் வாழ்நாள் முழுதும் என மனதுக்குள் இசைத்துக்கொண்டிருக்கும் பல வரிகளை எனக்குத்தந்தவர்.பொதுவுடமை இயக்கத்தின் பொக்கிஷங்களில் ஒருவராக அவரை எப்போதும் நான் கொண்டாடுவேன்.அவரை நான் அறியத்துவங்கியது நான் ராணுவப்பணியிலிருந்து திரும்பிய 1978-79 களில்தான் என்று நினைவு. கோவில்பட்டியில் சரஸ்வதி தியேட்டர் சாலையில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜீவா படிப்பகத்தில் ஓலைப்பாய் மீது கிடக்கும் மகாநதி இலக்கிய இதழின் வழித்தான் முதலில் அவரை அறிந்தேன்..அதை நடத்திய ஆசிரியர் குழுவிலும் பரிணாமன் இருந்தார் என்று நினைவு.மதுரையிலிருந்து அதை வெளிக்கொண்டு வந்தார்கள்.அப்போது மதுரையில் பரிணாமன்,சகுந்தலை,நவபாரதி என ஒரு வலுவான குழு கலை இலக்கியப் பெருமன்றத்தில் துடிப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.கல்பனா இதழிலும்கூட இந்தக் குழுவே பெரிய பங்களிப்பு செய்ததாக ஞாபகம்.

அப்புறம் அவருடைய முதல் கவிதைத்தொகுப்பான ஆகஸ்ட்டும் அக்டோபரும் கையில் கிடைத்தது.அதிலிருந்த பல கவிதைகளை எங்கள் கரிசல் குயில்கள் இசைக்குழுவைச்சேர்ந்த கிருஷ்ணசாமியும் சந்திரசேகரும் மெட்டமைத்துப் பாடத்துவங்கியிருந்தார்கள்.அப்போது அவ்விசைக்குழுவில் பின் பாட்டுப் பாடுகிறவனாகவும் குழு மேனேஜராகவும் நானும் ஊர் ஊராகப் போய்க்கொண்டிருந்தேன்.எங்கள் குழுவுக்கு அன்று உயிர் தந்த கவிகளாக பரிணாமனும் நவகவியும் பின்னர் ரமணனும் இருந்தார்கள்.

பின் பாட்டுப்பாடியே அவருடைய பல பாடல்கள் எனக்கும் மனப்பாடம் ஆகியிருந்தன.இடதுசாரி இயக்கத்திலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இணைந்து வேகத்துடன் மக்களிடம் சென்று பணியாற்றும் ஆவேசம் கொப்பளித்துக் கொண்டிருந்த அந்த நாட்களின் எம் மனங்களை அலைக்கழித்த இசைப்பாடல்களை பரிணாமன் வாரி வாரி வழங்கிக்கொண்டிருந்தார். ஒரு கட்டிடம் கட்டும் கொத்தனாராம் .படிப்பு ஒண்ணும் கிடையாதாம்.பாட்டு பாட்டு அப்படி ஒரு பாட்டுக்கட்டும் படைப்பாளியாம் என்று அவரைப்பற்றிய கசிவுகள் எங்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருந்தன.ஆனால் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு மட்டும் கிட்டவில்லை.

எட்டயபுரத்தில் முற்போக்கு வாலிபர் சங்கம் ஜீவா காலந்தொட்டு ஆண்டுதோறும் பாரதி விழா நடத்தி வருகிறது.1981 இல் அங்கு நடந்த பாரதி நூற்றாண்டு விழாவில் அவர் கவிதை வாசிக்கிறார் என்று கேள்விப்பட்டு ஓடினோம்.பேண்ட் சட்டை அணிந்த ஒரு ஒல்லியான உருவம் மேடையேறி, பயந்தது போன்ற தொனியில் சன்னமான ஒரு குரலில் இசையோடு பாடத்துவங்கியது.

மண் எண்ணெய் விளக்கினிற்

பாட்டுக்கட்டி இந்த

மண்ணுக்குக் கொண்டு வந்தேன்

அந்த மாகவி இங்கெங்கோ

மறைந்து நிற்பானென்று

மனப்பால் குடித்து வந்தேன்

என்கிற ஆரம்ப வரிகளைப் பாடி ஒரு கணம் நிறுத்தினார்.கரவொலியால் எட்டயபுரம் அதிர்ந்தது.

கவி தவழ்ந்தோடிய காலடி மண்ணையும் கண்டுஞ்சென்றேன் முன்பு கொண்டுஞ்சென்றேன்.அவனது ஒரு நூறு ஆண்டுக்கவியரங்கில் ஆள வந்தேன்புகழ் சூழ வந்தேன்.. என்று பத்திக்குப் பத்தி கைதட்டலோடு அந்நெடுங்கவிதை நகர்ந்து கொண்டிருந்தது.கூட்டத்தின் கடைசியில் நின்றபடி அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.வீழ்க அணுகுண்டு வீசும் கொடுமைகள் வீழ்கவே யுத்தங்களே என்று உலகமெல்லாம் நல்லாருக்கட்டும் என்கிற நல்ல மனசோடு அவர் பாடி முடித்த்தும் என் கண்களில் கண்ணீர் மெல்லக் கசிந்தது.ஒரு ஏழைக்கவியின் உள்ளத்திலிருந்து இந்த வரிகள் –வாழ்க நிரந்தரம் வாழ்க நல் அமைதி வாழ்கவே சோசலிசம் என்று –சத்தியத்தின் குரலாய் இசையாய் வந்து என் உள்ளத்தில் வந்து இறங்கியபோது அடைந்த பரவச மனநிலையைச் சொல்லாலே விளக்கி விட முடியாது.அன்று அடைந்த அதே உணர்வை நான் மீண்டும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற ஆண்டு சமயபுரம் எஸ்.ஆர்.வி.பள்ளியில் பெண் குழந்தைகள் சேர்ந்து “ எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்கிற பாடலைப்பாடிக்கேட்டபோதுதான் அடைந்தேன்.கவிகளும் குழந்தைகளும் இந்த உலகம் நல்லா இருக்கப் பாடும்போது அவ்வரிகளுக்குப் புது அர்த்தமும் புத்துணர்ச்சியும் கிடைத்து கேட்பவர் மனம் நடுங்கி விடுவதாக உணர்கிறேன்.

பிற கவிஞர்களையும் படைப்பாளிகளையும் பற்றி இத்தொடரில் எழுதியதுபோல இசைப்பாடல்களால் எம் நெஞ்சங்களை நிறைத்த பரிணாமன் பற்றி எழுதி வாசக மனங்களுக்குக் கொண்டு சேர்க்க முடியுமா என்கிற சந்தேகம் கூடவே வருகிறது.என் வாழ்வின் திருப்பங்களோடு அவர் தந்த வரிகள் பின்னிக்கிடக்கின்றன.தவிர அவ்வரிகளைக் கிருஷ்ணசாமி பாடக்கேட்க வேண்டியுமிருக்கிறது.இசையோடு தான் பரிணாமனும் பாடுவார்.

பாரதி பிடித்த தேர் வடமும் –நடு

வீதி கிடக்கிறது- அதைப்

பற்றிப் பிடித்து இழுப்பதற்கு ஊர்

கூடித்தவிக்கிறது.

நம்பிக்கை வைத்து நெம்புகோல் எடுத்து

நடப்போம் வாருங்கள் –நாம்

நடந்தால் தேர் நடக்கும் ; அன்றேல்

வெய்யில் மழையில் கிடக்கும்...

நம்பிக்கை வைத்து நெம்புகோல் எடுத்து நடப்போம் வாருங்கள் என்று வரிகள் உச்ச ஸ்தாயியில் சஞ்சாரிக்கும்போது ஒவ்வொரு முறையும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடித் தேரை நகர்த்தும் பெருமுழக்கம் என் மனதிலும் செவிகளிலும் காட்சியாக விரிந்து கிளர்ச்சியடைய வைக்கும்.அவருடைய எந்தக்கவிதையும்/ இசைப்பாடலும் கேட்போர் மனங்களில் சித்திரங்களாகவே விரியும்.

அவர் இசைத்த பாடல்களில் என் மனம் அடிக்கடி பாடிக்கொண்டிருக்கும் ஒரு பாடல் எங்களைத் தெரியலையா என்ற பாடல்.மக்களுக்கான போராட்டத்தில் எங்கள் இயக்கத்தோழர்கள் ஒவ்வொரு முறை கொல்லப்படும்போதும் யாருக்காகப் பாடுபட்டார்களோ அந்த வர்க்கத்து மக்களே அவர்களின் வீரமரணம் பற்றி அறியாதவர்களாக அவரவர் பாடுகளில் உழலும் காட்சியைக்காணும்போதும் கண்ட இழவையெல்லாம் முதற்பக்கத்தில் செய்தியாக்கும் ஊடகங்கள் எம் தோழர்களின் மரணங்களை ஒரு ஓரத்துப் பெட்டிச்செய்தியாகக்கூட வெளியிட மறுக்கும்போதும் 2000 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட ஏசுவுக்காக இப்போதும் கதறி அழும் உழைப்பாளி மக்கள் வாரம் ஒரு தோழரைப் பலி கொடுக்கும் இட்துசாரி இயக்கத்தைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும்போதும் என இது போன்ற தருணங்களிலெல்லாம் என் மனம் அழும்.அப்போது பரிணாமனின் இப்பாடல்தான் என் மனதில் இசைக்கும்.அப்பாடல் வரிகளின் வழியே என் துக்கத்தைக் கரைப்பேன்.பல முறை மனம் விரக்தியில் ததும்பும்போது இப்பாடலைச் சத்தமாகப் பாடியபடி ராத்திரி தெருக்களில் நடந்து சென்றதுண்டு.

எங்களைத் தெரியலையா-இந்த

இசையைப் புரியலையா?

திங்கள் ஒளியினில் துயில்வோரே-தினம்

சூரியத்தீயினில் உழைப்போரே

என்று துவங்கும் அப்பாடல் நாங்கள் யார் என்று உழைப்பாளி மக்களுக்கு அறிமுகம் செய்தபடி முன்னகர்ந்து பாடல் முடியும் போது பெருத்த நம்பிக்கையை விதைத்தபடி முடியும்.என் சோகம் மறைந்திருக்கும்:

ஆன்ம பலமுள்ள மானிடரே-எங்கள்

அணிவகுப்பைச் சற்றுப் பாருங்கள்

அமெரிக்க ஆதிக்கம் பின் வாங்க..

வியட்நாம் வென்றதைக் கூறுங்கள்

பூமியின் முகத்தை உழைப்பால் மாற்றிடும்

புயலின் சின்னங்களே-நம்

போரின்னும் முடியவில்லை-இந்தப்

பூமி முழுவதும் விடியும்வரை!

பொதுவுடமை இயக்கத்தில் நம்பிக்கையோடு இயங்கும் படைப்பாளியாக அவர் எனக்கு முன்னால் பாடியபடி நடந்து போய்க்கொண்டிருப்பதான ஒரு சித்திரம் எனக்கு எப்போதும் உண்டு.தண்ணீரைப்போல இலகுவான மனதுடன் இயங்கும் ஓர் எளிய அன்புள்ளம் பரிணாமன் என்கிற உணர்வு எப்பவும் எனக்குண்டு.

என்னை இக்கதிக்கு ஆளாக்கியவர்களில் ஒருவரான தனுஷ்கோடி ராமசாமியைப் போன்ற உலகின் சிறந்த அப்பாவிகளில் ஒருவர் இவர் என்கிற படிமமும் பரிணாமன் பற்றி அவரோடு நேரில் அதிகம் பழகாமலே எனக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. பல நிகழ்வுகள் அவரைப்பாதித்தது போலவே அவ்வக்காலங்களில் என்னையும் பாதித்துள்ளது.குறிப்பாக சோவியத் யூனியன் சிதைந்தபோது கதறியழுத தோழர்களில் ஒருவனாக அவரைப்போல நானும் இருந்தேன் என்பது அவரது கவிதை வழி அறிய நேர்கையில் இன்னும் மனம் நெருக்கமானது.தாயுண்டு தமிழுண்டு! நீ எங்கே சோவியத்தே?,புதிய ருசியா எழும், கவி வாக்குப் பொய்க்குமோ? மற்றும் ஒப்பாரியல்ல போன்ற கவிதைகளில் சோவியத் சிதைவைப் பாடித் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார்.உண்மையில் சோவியத் தகர்வு 90களில் என் போன்ற பலரை தலைகுப்புறப் புரட்டிப்போட்டது உண்மை.அது பற்றிய மனப்பதிவுகளை நாங்கள் யாரும் இன்றுவரை எழுதவில்லை.

இப்படி எப்படி ஆனதுவோ?

எதிரியும் நம்பக்கூடியதோ? என்று துவங்கும் பாடல் நினைக்க நெஞ்சுக்கு வேதனைதான் நேரக்கூடாத சோதனைதான்! நன்றிக்கடன்பட்ட நாடெல்லாம் என்று காணும் அந்த சோவியத்தை?

ஆற்றலுக்கோர் அளவில்லை

என்பதனை உலகுக்குக்

காட்டிநின்ற பெருங்கனவே

கண்மணியே சோவியத்தே!

ஒரு தேசத்தைக் கண்மணியே என்று சொல்லிக் கசிந்துருகும் மனம் சோவியத்தின் பால் இருந்தது.என் இரண்டாம் தாயகம் என்று சோவியத்தை மூத்த படைப்பாளி ஜெயகாந்தன் சொன்னது நினைவுக்கு வருகிறது.அது ஒரு கனாக்காலம் போல் ஆகிவிட்டது.அக்காலத்தின் அடையாளமாகப் பரிணாமனின் வரிகள் என் முன்னே விரிந்து கிடக்கின்றன.

தமிழக நெல் களஞ்சியமாம்

தஞ்சை மண்ணின் ஓரம்

தாத்தப்பட்ட நாப்பத்திரண்டு

பூக்கள் எரிந்த கோரம்

நெஞ்சம் குமுறும் அம்மா அம்மா

என்கிற அவருடைய பாடலை கிருஷ்ணசாமி பாடிய பல மேடைகள் கண்ணீரால் மீண்டும் கட்டப்பட்டன.கேட்ட மக்கள் கரைந்து நிற்பார்கள்.

இசைப்பாடல்களுக்கும் இடதுசாரி இயக்கங்களுக்கும் நீண்ட வரலாற்றுத் தொடர்பு உண்டு.தமிழகத்தில் இடதுசாரி இயக்கம் வேர் கொள்ளத் துவங்கிய நாட்களில் தோழர் ஜீவாவின் காலுக்குச் செருப்புமில்லை கால் வயிற்றுக் கூழுமில்லை என்கிற கோவை ஸ்டேன்ஸ் மில் தொழிலாளர் போராட்டம் பற்றி எழுதிய பாடல் எத்தனையோ தோழர்களால் தமிழகமெங்கும் பாடப்பட்டது.பின்னர் அடுத்தடுத்துச் சில இசைக்குழுக்களை பொதுவுடமை இயக்கம் உருவாக்கி மக்களிடம் அனுப்பியது.பாவலர் வரதராஜன் குழு,திருமூர்த்தி குழு,மதுரை தியாகி ராமசாமி கலைக்குழு, பிற்காலத்தில் கரிசல் குயிலகள் குழு,கைலாசமூர்த்தி பாடல் குழு எனத்துவங்கி இன்று ஏராளமான குழுக்களும் தனிப்பாடகர்களும் இடதுசாரி இயக்கங்களில் பாடி வருகிறார்கள்.இவர்கள் எல்லோருக்கும் பாடல்களை வழங்கும் வற்றாத ஊற்றாகப் பரிணாமன் எம்மோடு வாழ்கிறார்.

அமெரிக்க்க் கறுப்பின மக்கள் மத்தியில் பணியாற்றிய இசைக்குழுக்கள் பற்றி ஆய்வு செய்து வெளியாகியுள்ள MY SONG IS MY WEAPON என்கிற நூலைப்போல தமிழகத்தில் மக்கள் இயக்கங்களோடு கலந்து நின்ற –நிற்கிற- இசைக்குழுக்கள்-பாடகர்கள்-கவிஞர்கள் குறித்த வரலாற்றை இனிமேல்தான் நாம் யாரேனும் எழுத் வேண்டியிருக்கிறது.அவ்வரலாற்றில் மதிக்கத்தக்க ஒரு பங்கினை ஆற்றியவராக பரிணாமன் இருப்பார்.சந்தக்கவிதைகள் மறைந்து புதுக்கவிதைகள் வந்து சேர்ந்த இடைவெளியில் இசைப்பாடல்களை நம் சமூகம் மறந்து விட்டதுபோல ஆகிவிட்ட்து.இசைப்பாடல் என்ரால் அது சினிமாப்பாடல் என்றாகிவிட்டது.அதைத் தாண்டி சமூக அக்கறைமிக்க கிளர்ச்சிப்பாடல்களை பரிணாமன் போன்றோர் தொடர்ந்து வழங்கி வருவது முக்கியமானது.

சமீபத்தில் வெளியாகியுள்ள அவரது கவிதைத் தொகுப்பான என் பெயர் இந்தியா என் மனதைத் தொடவில்லை. மக்கள் போராட்ட வரலாற்றிலிருந்து வார்த்தைகளை உருவி எடுத்து மனசிலிருந்து நூலெடுத்துக் கோர்த்துக் கவி பாடும் பரிணாமனின் கவிமனம் திட்டமிட்டுச் செய்யும் பணிகளில் சறுக்கி விடத்தான் செய்கிறது.

கல்பனா மாத இதழ் வந்துகொண்டிருந்தபோது பரிணாமன் அதில் ஒரு நாவலும் எழுதியிருக்கிறார்.உரைநடையில் அவர் எழுதி ஏதும் நான் படித்ததில்லை.உழைப்பாளி வர்க்கத்திலிருந்து உருவாகி வந்த அபூர்வமான கவி பரிணாமன்.

பாரதத் தென் கோடி

பாண்டி மாமதுரையில்

பாட்டாளியாய் வளர்ந்தேன்!

பார்வை உலகெங்கும்

அளவளாவிடப்

பாட்டுரம் பெற்றுயர்ந்தேன்

சாரதி பாரதி

ஆகிட ரத்த்தினில்

சஞ்சரித்தெங்கும் வந்தேன்

சமகாலப் பாடலில்

பரிணாமன் என்றதோர்

சந்ததி கொண்டு வந்தேன்.

பரிணாமன் கவிதைகள் தொகுப்பை ஸ்ரீ செண்பகா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.என் பெயர் இந்தியா தொகுப்பை என்சிபிஎச் வெளியிட்டுள்ளது.

என் சக பயணிகள்-18 இன்குலாப்

inkulab

எழுதியதெல்லாம்

மொழிபெயர்ப்புத்தான்.

இளைஞர் விழிகளில்

எரியும் சுடர்களையும்,

போராடுவோரின்

நெற்றிச்சுழிப்புகளையும்

இதுவரை கவிதையென்று

மொழிபெயர்த்திருக்கிறேன்

என்று சொல்லி எழுத வந்தவர் தோழர் இன்குலாப்.ஆகவே அவருடைய எழுத்துக்கள் கவிதையல்ல என்று ப்யூர் கவித்வவாதிகள் அன்று முதல் இன்றுவரை சொல்லத்தவறவில்லை.என் இளம் வயதில் எனக்கும் என் போன்ற இளைஞர்களுக்கும் ஆவேசமூட்டிய கவிதைகளைத் தந்தவர் இன்குலாப்.70’களில் நக்சல்பாரி இயக்கம் பிறந்தபோது வசந்தத்தின் இடிமுழக்கம் எங்கள் எல்லோருக்கும் தெளிவாகக் கேட்டதுதான்.பின்னர் அது தூரத்து இடிமுழக்கமாகித் தேய்ந்து கரைந்துபோனதாக சிலர் கருதினோம்.இல்லை இல்லை இடிமுழக்கம் கேளாச் செவிடராய் நீங்கள்தான் ஆகிப்போனீர்கள் என அதே பாதையில் தொடர்ந்தவர்கள் சிலர்.

நக்சல்பாரிப்பாதையில் நம்பிக்கையோடு நீண்ட காலம் நடைபோட்ட கவியாக இன்குலாப் எழுதினார்.அவருடைய பாதையில் உடன்படாவிட்டாலும் அவருடைய கவிதைகளால் உரமும் உத்வேகமும் பெற்ற இளைஞனாக நான் வளர்ந்துகொண்டிருந்தேன்.போராடும்போதுதான் மனிதன் பிறக்கிறான் என்கிற அவருடைய வரி இன்றைக்கும் என்னை உள்ளிருந்து இயக்கும் வரியாக இருக்கிறது. பார்ப்பன எதிர்ப்பு அரசியல் பேசிய திமுக ஆட்சியில் பார்ப்பன சிம்சன் முதலாளிக்கு ஆதரவாக தமிழ்த்தொழிலாளிகளுக்கு எதிராக காவல்துறையும் ரௌடியிசமும் கூட்டாகக் களமிறக்கி விடப்பட்டனர்.ஆவடியில் தோழர் வி.பி.சிந்தன் மீது கொலைவெறித்தாக்குதல்.அவர் உடம்பெங்கும் கத்திக்குத்துகள்.

“இரும்புக்கரங்கொண்ட ஹிட்லரின் புதல்வர்கள்

நாசிச நிர்வாண நாடகத்தை

ஆவடியில் போய் அரங்கேற்றினார்கள்

தொழிலாளர் வர்க்கத்தின் தூய புதல்வர்கள் மேல்

கைவைக்கத் துணிந்த காட்டுமிராண்டிகளே:

இந்த ரத்த்த்தின் ஈரம் உலருமுன்

எங்கள்

தோழர்கள் உங்களைச் சூறையாட வருவார்கள் “

என்கிற இன்குலாப்பின் வரிகள்தான் அன்று இக்கொலை முயற்சி பற்றி எழுதப்பட்ட வரிகளிலேயே உக்கிரமானதாக நாங்கள் உணர்ந்தது .பின்னர் சில காலம் கழித்து பல ஊர்களில் கட்சிக்கூட்டங்களில் தன் சட்டையைக் கழற்றித் தோழர்களுக்கு காயங்களையும் தழும்புகளையும் தோழர் வி.பி.சி. காட்டும் போதெல்லாம் எங்கள் மனங்களில் இன்குலாபின் வரிகள்தான் பழிதீர்க்கப்படாத கோபத்தின் வெளிப்பாடாக ஓடிக்கொண்டிருக்கும்.

வெண்மணியைப் பற்றி அதிகமான கவிதைகளில் வெடித்து எழுதியவராக தோழர் இன்குலாப்பையே கூற முடியும்.(நவகவியின் நெடுங்கவிதையும் வேறு சில கவிஞர்களின் சில முக்கியமான கவிதைகளும் குறிப்பிடத்தக்கவை என்றபோதும்)

தாஜ்மகாலிலேயே ஷாஜகான் காலத்துப்

பொன்மாயப் புனை சுருட்டுகளை

நெருப்பிலே போட்டு நீதி வழங்குவோம்.

வெண்மணிச் சாம்பல் மேட்டிலிருந்தே

நமது தாஜ்மகாலை நாம் உருவாக்குவோம்.

· * *

குடியானவன் வீட்டு அடுப்பெரியாதபோதும்

கோபாலகிருஷ்ணர்கள் குளிர்காய்ந்துகொள்ள

விறகாய் எரிந்தது வெண்மணி விவசாயிதான்

· * *

சதையும் எலும்பும் நீங்க வச்சதீயில் வேகுதே-ஒங்க

சர்க்காரும் கோர்ட்டும் அதிலே எண்ணெ ஊத்துதே

எதையெதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க-நாங்க

எரியும்போது எவன் மசுரைப் புடுங்கப் போனீங்க?

மனுசங்கடா..நாங்க-மனுசங்கடா

என இன்னும் பல கவிதைகளில் அணையா நெருப்பாக வெண்மணி அவருடைய வரிகளில் எரிந்து கொண்டே இருக்கிறது.மனுசங்கடா பாடலை கே.ஏ.குணசேகரன் மெட்டமைத்து முதன் முதலாக தமுஎசவின் மேடைகளில் பாடிய போது காற்று வெளியெங்கும் தீப்பற்றக்கண்டோம்.வெண்மணியின் வரலாற்றை இந்த நாலு வரிகளுக்குள் துடிப்போடும் உயிர்ப்போடும் அதே நெருப்பின் வெக்கையோடும் சொல்ல முடிந்ததே .இந்த எழுத்தின் வலிமை கண்டு அன்று போலவே இக்கணத்திலும் நான் வியந்து நிற்கிறேன்.

எனக்குள் நெருப்பை மூட்டி என்னை இடது பக்கம் நின்று இயங்க வைத்த பல கவிதைகளை இன்குலாப் தந்து கொண்டிருந்தார்.கனவுகளின் இடத்தில் விஞ்ஞானத்தை வைத்த உங்களை ஒரு மனிதராகக் கண்டே மரியாதை செய்கிறோம் என்று கார்ல் மார்க்ஸ் பற்றி அவர் எழுதிய எழுச்சியூட்டிய ஒரு கவிதை,

நாடு நாடாக விரட்டப்பட்டீர்

ஊர் ஊராகத் துரத்தப்பட்டீர்

இன்று

ஒரு பகலைப்போல

வெளிப்படையாகவும்

ஒரு பூகம்பம்போலத்

தலைமறைவாகவும்

நீங்கள் நடந்து செல்லாத

நாடேது?

ஊரேது?

அவர் எழுதிப் பரபரப்பையும் கடுமையான எதிர்ப்புகளையும் சந்தித்த கவிதைகள் என கண்மணி ராஜம் ,ராஜ மகேந்திர சதுர்வேதி மங்கலம், ஸ்ரீராஜராஜேச்சுவரியம் போன்ற கவிதைகளைக் குறிப்பிட வேண்டும்.இன்று மீண்டும் தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டை திமுக ஆட்சி கொண்டாடியபோது இன்குலாபின் ஸ்ரீராஜராஜேச்சுவரியம் கவிதையின் வரிகளைத்தான் தமுஎகசவின் பல மேடைகளில் முழங்கினோம்:

ஆயிரம் ஆண்டு மூத்த என் தங்கையின்

காலில் கட்டிய சதங்கை

இந்தப் பெரிய கோயில் முற்றத்தில்

அழுது கொண்டிருக்கிறது

இன்னும்

இதனுடைய ஒவ்வொரு கல்லிலும்

என் சகோதரன் தசைகள்

பிதுங்கிக் கொண்டிருக்கின்றன.

வல்லாங்கு செய்யப்பட்டுப் பிறந்து கொண்டிருக்கும்

நான்

கூசி நிற்கிறேன்.

இந்தக் கவிதைகளும் யுகப்பிரளயம்,பிரமிடுகள் போன்ற நெடுங்கவிதைகளும் இன்று வாசிக்கையில் ஆயாசம் தந்தாலும் அன்று இளம் பருவத்தில் எமக்குக் கல்வி புகட்டிய கவிதைகளாக விளங்கின.கல்வி பற்றி அவர் எழுதிய வரிகள் இன்றைக்கும் எத்தனை பொருத்தப்பாடுடையவையாகத் திகழ்கின்றன:

தாமரைப் பீடத்தில்

இருந்த சரசுவதியை

நிலப்பிரபுத்துவம்

எழுப்பிக்கொண்டுபோய்

ஏகாதிபத்தியத்தின்

மடியில் அமர்த்தியது.

கலைமகள் பின்பு

கவுன் மாட்டிக்கொண்டாள்

வீணையிலிருந்து

இங்கிலீஷ் ம்யூசிக்.

தொழிற்சங்கங்களின் தேவை,பணி பற்றிய நக்சல் பார்வை கொண்ட அவருடைய கவிதை வரிகள் அப்போதும் எனக்கு ஏற்புடையதாக இருந்ததில்லை.இப்போதும் ஏற்க முடியவில்லை.

புரட்சி ஓங்குக

என்ற இடிகளின் முழக்கத்தை

ஒலிக்க வேண்டிய உனது பேரிகை

“ கூலி உயர்வு

போனஸ்”

என்று கொசுக்களைப் போலவா

முணங்கித் திரிவது?

வர்க்கபோதம் அல்லது வர்க்க உனர்வு என்பது தானே தொழிலாளி வர்க்கத்துக்கு வந்து சேராது.அது தொழிற்சங்கப் போராட்டங்களின் வழியே ஊட்டப்பட்டு உருவாக்கப்படுவதுதான்.லெனின் காட்டிய வழியும் அதுதான்.தொழிற்சங்க இயக்கத்தின் மீது ஆரோக்கியமான விமர்சனம் வைக்கலாம்.ஆனால் கொசுவென்று பேசிக் கொச்சைப்படுத்தும் பார்வையை என்னால் ஏற்க இயலாது.அதே போல பகத்சிங் சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசியதை நக்சல் பாதைதான் சரியானதென்று சிம்பாலிக்காக காட்டுவதாக எழுதப்பட்ட கவிதையும் நெருடா பற்றிய கவிதையில் சிலிப் புரட்சி தோற்ர்ர்தற்குக் காரணம் அவர்கள் வாக்குச்சீட்டை நம்பி நக்சல் பாதையில் ஆயுதம் ஏந்திப் போகாததுதான் என்றெல்லாம் எழுதியிருப்பது வாசிக்கும்போதே ஓவராத்தான் எழுதிட்டார் தோழர் என்று நினைத்ததுண்டு.ஆனாலும் அது அவருடைய பாதை.அவருடைய தேர்வு.அவருடைய சுதந்திரம்.நம் கருத்து நம்மோடு.அதற்காக அன்பே உருவான இனிய அம்மனிதரை நம்மால் கடந்து செல்ல முடியுமா என்ன?

நிற்க.

பிற்காலத்தில் 2007இல் அவர் எழுதிய கவிதைகள் பொன்னிக்குருவி என்னும் தொகுப்பாக வந்துள்ளன.அவை முற்றிலும் வேறு ஒரு மன உலகத்தைக் காட்டுபவையாக இருக்கின்றன.அருவியை நீரின் உச்ச முழக்கம் என்றும் கிணற்றை நீரின் ஆழ்நிலைத் தியானம் என்று ஒரு கவிதை பேசுகிறது.விடை பெறுகிறது அலை, கடலிடமிருந்தா?கரையிடமிருந்தா என்று இன்னொரு கவிதை பேசுகிறது.பிற்காலக் கவிதைகளில் ஆழ்ந்தடங்கிய மௌனமும் அமைதியும் கோலோச்சுகின்றன.இதய அறுவைச்சிகிச்சைக்கு முன்னும் பின்னுமென அவரெழுதிய இரு கவிதைகள் அற்புதமான உணர்வைத் தருகின்றன.பிற்காலக் கவிதைகளில் என்னை மிகவும் தொட்ட கவிதையென ’எனது தனியறை’ கவிதையைச் சொல்வேன்.மூடிய தனியறை என்னுடன் வருகிறது எனத்துவங்கும் அக்கவிதை தரும் அனுபவம் நம்மில் பலரும் பெறுவதாக இருக்கிறது.

இன்குலாப் அவருடைய கவிதைகளின் வழியாகவே பெரிதும் அறியப்பட்டிருக்கிறார்.அவர் நாடகங்களும் எழுதியிருக்கிறார்.ஔவை,குரல்கள்,தடி ,மீட்சி போன்ற நாடகங்களை அவர் அவருடைய இயக்கத்தின் தேவைகாரணமாகவும் சூழலின் நெருக்குதல் காரணமாகவும் படைத்துள்ளார்.ஔவை பேசப்பட்டது.

நான் மிகுந்த கவலையோடு குறிப்பிட விரும்புவது அவரது அற்புதமான சிறுகதைகள் பற்றி யாருமே பேசாமல் விட்டது பற்றியே.அவருடைய கவிதைகளின் ஆவேசமும் ஆர்ப்பாட்டமும் முழக்கமுமான முகத்துக்கு முற்றிலும் வேறான ஒரு கலைமனதை அவருடைய சிறுகதைகளில் தரிசிக்க முடிகிறது.அவருடைய 13 சிறுகதைகளை பாலையில் ஒரு சுனை என்கிற பேரில் தொகுப்பாக அன்னம் வெளியீடாக ஒரு நுட்பமான முன்னுரையோடு மீரா 1992இல் வெளியிட்டிருக்கிறார்.சமீபத்தில் அக்கதைகளை முழுமையாக வாசித்தபோது அடடா என்ன ஒரு எழுத்தென்ற வியப்பும் சிறு அதிர்ச்சியும் எனக்குள் ஏற்பட்டது.விபத்து,கிணறு போன்ற மனிதக் கீழ்மைகளைப் பற்றிய பதிவாகட்டும் பாலையில் ஒரு சுனை,உம்மாவோட மொகம் போன்ற மனதை நடுங்கச்செய்யும் மானுட மேன்மை குறித்த கதைகளாகட்டும் எத்தனை ஆழ்ந்தடங்கிய அமைதியோடு எழுதப்பட்ட காவியங்களாக அவை விளங்குகின்றன.எப்போதும் இயக்கச் செயல்பாடுகளுக்கூடாக பரபரப்பாக வாழ நேர்ந்த ஒரு கலைமனதின் அற்புதமான மறுபக்கமாக இக்கதைகள் மின்னுகின்றன.இச்சிறுகதைகளின் வடிவமும் மொழியும் என்ன ஒரு நவீனமான உணர்வைத்தருகின்றன.இக்கதைகளை வாசித்து புத்தம் புதுசான ஒரு உணர்வை நான் பெற்றேன்.அது குறித்துத் தனியாக விரிவாக எழுத ஆவல் கொண்டுள்ளேன்.

பிற்காலக் கவிதைகளிலும் சிறுகதைகளிலும் காணும் அமைதிபற்றி இவ்விதம் நான் எழுதுவதால் அவருடைய மொத்தக் கவிதைகளின் சாரமான உணர்ச்சிக்கொந்தளிப்பையும் சமூக அக்கறையையும் சிறிதும் குறைத்து மதிப்பிடவில்லை.சதா விமர்சனத்தை முன்வைத்த சில இலக்கிய பீடாதிபதிகளுக்கு அவர் வைத்த தன்னடக்கமான பதிலையே சொல்லி இக்கட்டுரையை முடிப்போம்:

“கவிதையாக்கம் என்பது கூட்டிசை போன்றது.தேவதேவன் அவருடைய வயலினை எடுத்து வந்தால் நான் என்னுடைய பறையுடன் வருகிறேன்.கூட்டிசையில் வயலினின் சுநாதம் மட்டும்தான் ஒலிக்க வேண்டும்.பறையொலி தலைதூக்கக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது.பறையின் தேவை இருக்கும்வரை ஒரு பக்கத்தில் நின்று கொண்டு பறையை என்றென்றைக்கும் நான் தட்டிக்கொண்டேதான் இருப்பேன் “

ஒவ்வொரு புல்லையும் – 2005 வரையான இன்குலாப் கவிதைகளின் தொகுப்பு-பொன்னி வெளியீடு,விலை ரூ.200 பக்கம்-436

பொன்னிக்குருவி –வெளிச்சம் வெளியீடு-விலை ரூ.60 பக்கம் 120

Tuesday, April 10, 2012

இனிய உதயம் ஏப்ரல் 2012 இதழில் வெளியான ச.தமிழ்ச்செல்வன் நேர்காணல்

self-6

கேள்விகள்-பதில்கள்

1.எழுத்துலகுக்கு வந்தது எப்படி?. தாத்தா மதுர கவி பாஸ்கரதாஸ், தம்பிகள் கோணங்கி, முருகபூபதி என தலைமுறை தாண்டி கலை, இலக்கிய ஈடுபாடு வந்ததற்கு சிறப்பான காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா?

வீட்டுச் சூழல் நிச்சயமாக தூண்டுதலாக இருந்தது.தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் நான் பிறந்த ஆண்டில் இறந்து விட்டார்.அவரை நான் புரிந்து கொண்டது ரொம்பப் பின்னாடிதான்.சொல்லப்போனால் தாத்தாவின் இலக்கிய முகத்தை சரியாகவும் முழுமையாகவும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தவன் என் கடைசித்தம்பி முருக பூபதிதான்.அவந்தான் ஊரெல்லாம் தேடி தாத்தாவின் எழுத்துக்களையும் டைரிகளையும் வீட்டுக்குக் கொண்டு சேர்த்தவன்.

என்னை ஈர்த்த முதல் எழுத்தாளர் என் அப்பாதான்.புரட்சி என்கிற பேரில் அவர் பள்ளிக்காலத்தில் நடத்திய கையெழுத்து இதழும் அதில் அவர் எழுதிய கட்டுரைகளும்தான் முதல் தூண்டுதல்.பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என்று கலந்து கொண்டதும் அதற்கு அப்பாவும் சித்தப்பாவும் ஒத்தாசையாக இருந்ததும் இந்த மாதிரி வேலையெல்லாம் முக்கியம் என்கிற உணர்வை ஏற்படுத்தின. பெரிய எழுத்தாளனாகிப் பேரும் புகழும் அடைய வேண்டும் என்கிற ஆசை சின்ன வயசிலேயே ஏற்பட்டது.

இன்று திரும்பிப் பார்க்கையில் என்னைக் கதைகள் எழுதத்தூண்டிய முக்கிய காரணியாக நான் உணர்வது சிறு வயதில் என் அப்பாவும் அம்மாவும் வேறு வேறு ஊர்களுக்கு மாற்றலாகிப் போய்க்கொண்டே இருந்ததால் நெடுங்காலம் இளவயதில் மனதில் தேங்கியிருந்த அப்பா அம்மாகூடச் சேர்ந்து வாழ்வதற்கான ஏக்கம்தான் என்பேன்.கொஞ்ச காலம் கவிதகள் எழுதினேன்.அது கைவராது என்று உணர்ந்தபோது அதைக் கைவிட்டேன்.அச்சான கவிதைகளைக் கூடச் சேர்த்து வைக்கவில்லை.பின்னர் கொஞ்சம் கதைகள் எழுதினேன்.அதுவும் சரியாக வரவில்லை என்று தோன்றியது. பிறகு கொஞ்சகாலம் நாடகம் போட்டோம்.சப்தர் கொலையை அடுத்து வீச்சோடு பலப்பல கிராமங்களுக்கும் சென்று நாடகங்கள் போட்டோம்.

இதற்கிடையில் நான் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு தமுஎசவில் முழுமையாக கரைந்தேன்.அது வலர்த்த சமூக அக்கறையால் கதையல்லாத எழுத்துக்களின் பக்கம் திரும்பினேன்,அதைத்தான் இப்போது விடாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன்.கதைகள் எழுதும் மனநிலை இருந்தும் போதிய அவகாசம் இல்லாத்தால் தள்ளிப்போய்க்கொண்டிருக்கிரது.

அப்பா எங்கள் எழுத்தை ஆதரித்ததாலும் நான் அவனைப் புறக்கணித்ததாலும் கோணங்கி எழுத வந்தான்.முருகபூபதி நாடகத்தின் மீது அவனுக்கே ஏற்பட்ட ஆர்வத்திலிருந்து எழுத வந்துவிட்டான்.

எங்கள் அப்பாவின் நாவல்கள் பெரிய வயல்,நிலம் மறுகும் நாடோடி இரண்டும் பூட்டுப்பாம்படம் சிறுகதைத் தொகுப்பும் இப்போது வந்துள்ள மண்ணின் கதைகள் கவிதைத் தொகுப்பும் மற்றவர்களுக்கு எப்படியோ எங்களுக்கு மிக முக்கியமான புத்தகங்கள்.

2. எல்லாரையும் போலவே முதலில் கவிதை எழுதியிருக்கிறீர்கள்? தொடர்ந்து கவிதை எழுதாமற் போனது ஏன்?

அது ரொம்பக் கஷ்டமான வேலை என்பதைப் புரிந்து கொண்டதால் விட்டுவிட்டேன்.தவிர நான் முதலில் எழுதியது கவிதை அல்ல.முதலில் அச்சானதுதான் கவிதை. கதைகள்தாம் முதலில் எழுதினேன்..பல பத்திரிகைகளுக்கு அனுப்பிச் சோர்ந்து விட்டேன்.அப்புறம்தான் கவிதைகள் எழுதினேன்..ரொம்ப நாள் கழித்து என் முதல் கதையை தாமரை வெளியிட்டது.

3. உங்களுடைய முதல் சிறுகதைத் தொகுப்பான வெயிலோடு போய் யதார்த்த வகை எழுத்தாக இருந்த்து. ஆனால் அடுத்த சிறுகதைத் தொகுப்பான Ôவாளின் தனிமைÕ யில் உள்ள சில கதைகள் அவ்வாறில்லை. எழுத்து தொடர்பான உங்களுடைய பார்வையில் மாற்றம் ஏற்பட்டது காரணமா? அல்லது அன்று தமிழ் எழுத்துலகில் புதிதாகத் தோன்றி வளர்ந்த போக்கில் உங்களை அடையாளம் காணும் முயற்சியா?

அன்று இலக்கிய உலகில் நடந்த யதார்த்தவாதம் பற்றிய மோசமான உரையாடல்களால் பாதிக்கப்பட்டேன் என்பதுதான் உண்மை.எல்லா வகையிலும் எழுதிப்பார்க்கும் ஆசையும் காரணம்.வாளின் தனிமையில் 5 கதைகள் மட்டுமே அப்படி இருக்கும்.மற்ற எல்லாம் வெயிலோடுபோயின் தொடர்ச்சியாகத்தான் இருந்தது.

4.சிறுகதைகளில் அழுத்தமாகக் கால் பதித்த நீங்கள், படைப்பிலக்கியம் சாராத கட்டுரை நூல்களில் அதிகக் கவனம் செலுத்துவதேன்?

இயக்கத்தின் பகுதியாகிவிட்ட என் மனதில் இன்று இது தேவை என்கிற உணர்வு அழுத்தமாக இருப்பதால் எளிய சிறுநூல்களை எழுதலானேன்.என் இளம் தோழர்களுக்கும் பரந்துபட்ட உழைப்பாளி மக்களுக்கும் கல்வி புகட்டும் பணி நம்போன்ற படித்த மத்தியதர வர்க்கத்தின் முக்கியமான கடமை என்று கருதுகிறேன்.இந்திய தொழிலாளி வர்க்கம் இன்னும் வர்க்க உணர்வு பெறாத நிலை நீடிப்பதற்கு மத்தியதர வர்க்கம் ஆற்றத்தவறிய இக்கடமையும் ஒரு முக்கிய காரணம் என்று கருதுகிறேன்.

சிறுகதையிலும் ரொம்ப அழுத்தமாக நான் கால் பதிக்க வில்லை.சில நல்ல முயற்சிகளாக என் கதைகள் இருந்தன.

5. இடதுசாரி இயக்கத் தொடர்பு உள்ளவர் நீங்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் இருந்திருக்கிறீர்கள். இது உங்கள் படைப்பு முயற்சிக்கு எந்த அளவுக்குத் துணை செய்திருக்கிறது?

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்பது ஒரு பூந்தோட்டம்.அங்கே செடிகள் வளர்வதற்கான நல்ல சூழலும் தண்ணீரும் காற்றும் தட்ப வெப்பமும் இருக்கும்.ஒரு செடி வளர்வது என்பது முழுக்க முழுக்க அச்செடி பூமியிலிருந்தும் சூழலிலிருந்தும் எடுக்க வேண்டியவற்றை எடுத்துத் தன்னை வளர்த்துக் கொள்வதில்தான் இருக்கிறது..எழுத்து பெரிதும் தனி முயற்சி அல்லவா? சங்கம் கொட்டு அடிக்கும்.பீப்பீ ஊதும்.சாமி ஆட வேண்டியது அவனவன் –அவளவள்- பிரச்னை.

6. தமிழ்நாட்டில் முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் எந்த அளவுக்கு உதவியிருக்கிறது?

பொதுவான இலக்கிய வளர்ச்சிக்கும் முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கும் தமுஎச ஆற்றியுள்ள-ஆற்றி வரும்-பங்கு குறிப்பிடத்தக்கது.புறக்கணிக்க முடியாதது.எல்லாத்துறைகளிலும் தடம் பதித்த படைப்பாளிகள் தமுஎகசவின் தலைவர்களாக இருக்கிறார்கள்.எந்தப் பட்டியலிலும் இடம் பெறும் நாவல்களைத் தந்தவர்களான கு.சின்னப்ப்பாரதி,டி.செல்வராஜ்,சாகித்ய அகாதமி விருது பெற்ற மேலாண்மை பொன்னுச்சாமி,அருணன்,சோலை சுந்தர பெருமாள்,தேனி சீருடையான்,ம.காமுத்துரை,கீரனூர் ஜாகீர்ராஜா,சமீபத்தில் சாகித்ய அகாதமி விருது பெற்ற சு.வெங்கடேசன் எனப் பலரும் தமுஎகசவின் தலைவர்கள்.நாவலை அடுத்து சிறுகதையை எடுத்துக்கொண்டால் கந்தர்வன்,மேலாண்மை பொன்னுச்சாமி,தமிழ்ச்செல்வன், உதயஷங்கர்,பவா.செல்லதுரை,ஆதவன் தீட்சண்யா,கீரனூர் ஜாகீர்ராஜா, போடி மாலன்,காமுத்துரை,சீருடையான், வெண்ணிலா,நாறும்பூ நாதன்,இந்த ஆண்டு இலக்கியச்சிந்தனை பரிசு பெற்றுள்ள பாரதி கிருஷ்ணகுமார் ,எஸ்.லட்சுமணப்பெருமாள்,சுப்பாராவ் என்று ஒரு மிகப்பெரிய பட்டியல் இருக்கிறது.கவிதை உலகில் கந்தர்வன் துவங்கி சமீபத்தில் விருது பெற்ற சபரிநாதன் வரை ஏராளமான கவிஞர்கள் தமுஎகசவைச் சேர்ந்தவர்கள்.பிரளயன் போன்ற இந்திய அளவில் புகழ்பெற்ற நாடக்க்கார்ர்கள் தமுஎகசவின் நிர்வாகிகள்.கலைமாமணி பாவலர் ஓம் முத்துமாரி ,கலைமாமணி புரிசை சம்பந்தன், புதுகை பூபாளம் குழு , திண்டுக்கல் சக்தி போர்ப்பறை உள்ளிட்ட கூத்துக்கலைஞர்கள் எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.இன்னும் கரிசல் குயில்கள் கிருஷ்ணசாமி,திருவுடையான்,கருணாநிதி,கின்னஸ் சாதனை புரிந்துள்ள புதுவை சப்தர் ஹாஷ்மி குழு உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட இசைக்குழுக்கள் எம் அமைப்பில் இயங்கி வருகின்றன.ஸ்ரீரசா,வெண்புறா உள்ளிட்ட நல்ல ஓவியர்கள் பலரும் இருக்கிறார்கள்.

மேடைப்பேச்சை எடுத்துக்கொண்டால் இன்று தமுஎகசவில்தான் பேச்சாளர்களே இருக்கிறார்கள் என்று சொல்லுமளவுக்கு பாரதி கிருஷ்ணகுமார்,நந்தலாலா,மதுக்கூர் ராமலிங்கம்,முத்துநிலவன் ஜீவி என்று பெரும்படையே இங்குதான் இருக்கிறது.தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெல்லாம் கலை இலக்கிய இரவுகள் நட்த்தி விடிய விடிய மக்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்க் வேறு எந்த கலை இலக்கிய அமைப்பால் முடியும்?

என்ன துறையானாலும் அதில் தமுஎகச படைப்பாளிகளை யாரும் புறக்கணித்துவிட முடியாது.ஆகவே முற்போக்குக் கலை இலக்கியத்துக்கும் பொதுவாக தமிழ்க் கலை இலக்கிய உலகுக்கும் தமுஎகச அளப்பரிய பங்களிப்பைத் தொடர்ந்து செய்து வருகிறது.மற்றவர்கள் மனம் திறந்து இவர்களைப் பாராட்டப் பழகாத்தால் வெளிச்சம் போதிய அளவுக்கு இவர்கள் மீது விழவில்லை,

7. இன்று தமிழ் இலக்கியத்தில் பல போக்குகள் நிலவுகின்றன. முன்பு ஒரு குழுவினர் கலை கலைக்காகவே என்று சொல்லிக் கொண்டிருந்த போது , இடதுசாரி கருத்துள்ளவர்கள் கலை மக்களுக்காகவே என்று பரப்புரை செய்து வந்தனர். அந்த நோக்கில் தீவிரமான விமர்சனங்களையும் மதிப்பீடுகளையும் கைலாசபதி, கோ.கேசவன், அருணன் , கே.முத்தையா போன்றவர்கள் முன் வைத்தனர். ஆனால் இன்று மார்க்சிய அடிப்படையிலான இலக்கிய விமர்சனங்கள் அருகி வருகின்றன. இதற்குக் என்ன காரணம்? இதன் விளைவாக மக்களுக்கு எதிரான கருத்தியல் சார்ந்த பல இலக்கியப் படைப்புகளும், படைப்பாளிகளும் எழுதிக் குவித்து வருகின்றனர். இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

அருணன் இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறார்.அவர் ஆய்வுத்துறையில் மிகப்பெரிய பங்களிப்புகளைச் செய்து வருகிரார்.அவருடைய தமிழரின் த்த்துவ மரபு நூலுக்கு ஈடாக வேறொன்றைக் குறிப்பிட முடியாது என்று எஸ்.வி.ராஜதுரை குறிப்பிடுகிறார்.அவருடைய காலந்தோறும் பிராமணியம் என்கிற எட்டு நூல் தொகுதிகள் தமிழ் ஆய்வுலகுக்கு அவர் அளித்துள்ள கொடை என்பேன்.ஆ.சிவசுப்பிரமணியன், ந.முத்துமோகன், பா.ஆனந்தகுமார்,குமரி சொக்கலிங்கம்,பா.செயப்பிரகாசம்,அ.மார்க்ஸ் ,மணிமாறன் போன்றோரும் இட்துசாரிப் பார்வையோடு விமர்சனக்கட்டுரைகள் எழுதி வருகிறார்கள்.மக்களுக்கு எதிரான எழுத்துக்கள் அல்லது பிற்போக்கு எழுத்துக்கள் இன்றல்ல என்றுமே அரச மற்றும் முதலாளித்துவ ஊடகங்களின் உதவியோடு தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கும்.நாம் விமர்சனத்தல் மட்டும் அவற்றை வீழ்த்த முடியாது.படைக்க வேண்டும்.பரந்துபட்ட வாசகர் கூட்ட்த்தை உருவாக்க வேண்டும்.

இன்று தமிழகத்தில் பரவலாகி வரும் புத்தக்க் கண்காட்சிகள் இட்துசாரிகள் இல்லாமல் இவ்வளவு ஊர்களில் நட்த்தியிருக்கவே வாய்ப்பில்லை.வாசிப்பு இயக்கம்,புத்தக விற்பனை இயக்கம் போன்றவற்றை தமுஎகசவும் எங்கள் பாரதி புத்தகாலயமும் திட்டமிட்ட முறையில் எல்லா மாவட்டங்களிலும் செய்து வருகிறோம்.இதன் விளைவுகளைத் தமிழகம் நிச்சயம் விரைவில் காணும் என்று நம்புகிறேன்.கலையையும் இலக்கியத்தையும் இயக்கமாக மக்களிடம் கொண்டுசெல்வதன் மூலம்தான் நச்சிலக்கியத்தின் வெள்லப்பெருக்கை எதிர்கொள்ள முடியும்.மக்களுக்குக் கல்வி அறிவும் வாசிப்புப் பழக்கமும் அதிகரிக்க வேண்டும்.தமிழகத்தில் நடைபெற்ற அறிவொளி இயக்கம் தமுஎகச மற்றும் எமது சகோதர அமைப்பான தமிழ்நாடு அறிவியல் இயக்கம்(நானும் அதில் பொறுப்பாளராக இருந்தவன்)இண்ந்து நட்த்திய இயக்கமாகும்.அரசு மட்டும் அதை நட்த்தியிருக்க முடியாது.நாங்கல் இணைந்த்தால்தான் அது மக்கள் இயக்கமாக மாறியது.எழுத்தறிவு இயக்கம் இலக்கிய வாசிப்புக்கு முன் தேவை என்பதால் நாங்கள் அதில் இறங்கினோம்.இப்படி தொலைநோக்கோடு பல காரியங்கள் ஆற்றி நீங்கள் குறிப்பிட்ட மக்கள் விரோத இலக்கியங்கலை எதிர்கொள்வோம்.

8. உங்களுடைய இலக்கிய நண்பர்களைப் பற்றி சக பயணிகள் என்று தொடர் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அவர்களுடைய படைப்புகளைப் பற்றிய கூர்மையான விமர்சனப் பார்வை அவற்றில் தென்படவில்லை. நட்புதான் மேலோங்கியிருக்கிறது. உங்களுடைய இந்தப் பண்புதான், மக்கள் நலன் சாராத பல படைப்பாளிகளுடனான நல்லுறவுக்குத் துணை நிற்கிறதா?

என் சக பயணிகள் என்கிர தலைப்பில் நான் புத்தகம் பேசுது இதழில் மாதம்தோறும் எழுதிவரும் தொடர் என்னைப் பாதித்த என் மன வளர்ச்சியில் பங்காற்றிய படைப்பாளிகள் பற்றி இளம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் நோக்கம் கொண்ட்து.அதற்கேற்ற வகையில் அது எழுதப்படுகிறது.இலக்கிய விமர்சனமும் ஆய்வு செய்வதும் என் வேலை அல்ல.இத்தொடரில் அது நோக்கமும் அல்ல.

எனக்கு கூர்மையான விமர்சனப்பார்வை இல்லை என்கிற குற்றம் சாட்டும் தொனியும் இக்கேள்வியில் அடங்கியிருக்கிறது.விமர்சிக்க வேண்டியவர்களைக்கூட நட்பு காரணமாக நான் விமர்சிக்காமல் விடுகிறேன் என்கிற குற்றச்சாட்டும் இக்கேள்வியில் அடங்கியிருக்கிறது.ஒரு இட்துசாரி பழக்க் கூடாத மனிதர்களோடு எல்லாம் நான் நட்பு பாராட்டுகிறேன் என்கிற விமர்சனமும் இக்கேள்வியில் இருக்கிறது.

ரொம்ப சரி.நான் அப்படித்தான் இருக்கிறேன் போலும்.என்னால் இப்படித்தான் இருக்க முடியும்.இதுர்ஹான் எனக்குச் சரி என்று எனக்குத் தோன்றுகிறது.காக்கா குயிலாக முடியாது.குயில் புறாவாக முடியாதில்லையா?புறாக்கூட்டில் போய் உட்கார்வதால் மட்டும் குருவி புறாவாகி விடாதல்லவா?நான் என்னவாக இருக்கிறேனோ அன்னவாகவே என்னை ஏற்றுக்கொள்கிற மனிதர்களும் இருக்கிறார்கள்.அது போதும் நமக்கு.இன்னொருவர் எதிர்பார்ப்பை என்னால் ஈடுசெய்ய முடியாது.

9.ஒரு படைப்பாளி என்பதையும் தாண்டி தொழிற்சங்க இயக்க அனுபவம் உள்ளவர் நீங்கள். இன்றைய தொழிற்சங்கங்களின் நிலையைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

இன்றைய தொழில் நிலைமை என்னவாக இருக்கிறது என்பதைப் பொறுத்து தொழிற்சங்க நிலையும் இருக்கும்.இன்று நிரந்தரத் தொழிலாளிகள் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாகக் குறைந்து விட்ட்து.எல்லாம் தற்காலிக ஊழியர்,காண்ட்ராக்ட் ஊழியர்,அவுட்சோர்சிங் முறை என்று வந்துவிட்டது.ஆகவே பழையபாணியிலேயே தொழிர்சங்க இயக்கத்தை நட்த்திச் செல்ல முடியாது என்கிர புதிய நிலை உருவாகியுள்ளது.பன்னாட்டுக் கம்பெனிகளுக்குள் இந்திய தொழிற்சங்க மற்றும் தொழிற்தகராறு சட்டமெல்லாம் செல்லாது என்று நாம் தேர்ந்தெடுத்த அரசுகளே அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்துள்ளன.அதை மீறி அக்கெம்பெனிகளுக்குள் சி.ஐ.டி.யு சங்கம் துவக்கப்பட்ட்தும், போராட்டங்கள் நடைபெற்றதும் தோழர் ஏ.சவுந்திரராசன் கைவிலங்கு பூட்டிக் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட்தும் சமீபத்திய வரலாறு.பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு எதிராக தமிழ்நாடு சிஐடியு நட்த்திவரும் போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் உடையவை.சமூக ஆய்வாளர்கள்கூட அதை இன்னும் சரியாக கவனிக்கவில்லை என்பது வருத்தம் தருகிறது.திருப்பூரில் காண்ட்ராக்ட் தொழிலாளிகள் ஒரு மில்லை முற்றுகையிட்டு உடைத்து நொறுக்கியது அதை விடச் சமீபத்திய செய்தி. போலீஸ் அனுமதிபெற்ற உண்ணாவிரதம்,தர்ணா போன்ற வடிவங்களும் தொடர்கின்றன.அவை போதாது என்கிற யதார்த்த நிலையும் வளர்ந்து வருகிறது.ஆள் நடமாட்டமிலாத சந்து பொந்துகளில்தான் ஆர்ப்பாட்டங்கள் நட்த்த போலீஸ் அனுமதி தருகிறது.இது காலப்போக்கில் காவல்துறையை போடா என்று சொல்லிவிட்டு தொழிலாளி வர்க்கம் தெருவில் இறங்கும் சூழ்நிலையை உருவாக்கும் என நம்புகிறேன்.

மிக அதிகமான தொழிலாளர் இயக்கங்கள் தேவைப்படுகிற இக்காலத்தில் தொழிலாளிகள் அந்த அளவுக்கு சங்க நடவடிக்கைகளில் ஈடுபடாத மனநிலைக்குத் தயாரிக்கப்பட்டு வருவது ஆபத்து.பண்பாட்டுத் தளத்தில் தொழிலாளி தனக்கே எதிராகத் தயாரிக்கப்படுகிறான்.அதை தொழிலாளர் இயக்கம் போதிய அளவில் கவனத்தில் கொள்ளவில்லை என்கிற வருத்தம் எனக்கிருக்கிறது.மத்தியதர வர்க்க தொழிற்சங்க இயக்கங்களில் ஒரு முன்னுதாரணமான இயக்கமாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் திகழ்கிறது.ஒரு சமூகப் பார்வையோடு தன் ஊழியர்களை அது வளர்க்கப்போராடுகிறது.

10.பெண் விடுதலை நோக்கிலான நூல்களும் எழுதியிருக்கிறீர்கள்? பெண் விடுதலை என்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளை - சமைப்பது உட்பட - ஆண்கள் செய்யும்நிலை வந்தால் பெண் விடுதலை சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?

ஆண்களுக்கான சமையல் குறிப்புகள் என்கிற என் நூலை வைத்தும் ஆண்கள் வீட்டு வேலைகளைச் சம்மாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தொடர்ந்து நான் பேசி வருவதை வைத்தும் இக்கேள்வி எழுப்ப்ப்படுவதாக புரிந்துகொள்கிறேன். ஆண்கல் சமைத்துவிட்டால் போதும் எல்லாம் சரியாப்போகும் என்பது என் பார்வையல்ல.நான் அப்படி பேசவும் இல்லை.எழுதவும் இல்லை.பெண்மை என்றொரு கற்பிதம்,நமக்கான குடும்பம் போன்ற என் பிற நூல்களையும் சேர்த்து வாசிக்க வேண்டுகிறேன்.

நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்கள் விடுபடாமல் மனிதகுல விடுதலை சாத்தியமில்லை என்பது தோழர் லெனின் கூற்று.மனித குலத்தில் சரிபாதியான பெண்கள் காலம் காலமாக அடுப்படியில் புகைந்து கொண்டிருப்பது பற்றி எந்த அக்கறையுமற்ற நம் சமூகம் எப்படி விடுதலை பெறும்?பொங்கவும் தெரியும் த்ங்கவும் தெரியும் பெண்களுக்கு.ஆனால் ஆண்களுக்குத் திங்க மட்டும்தான் தெரியும் என்பது ஆணாகிய எனக்குக் கேவலமாகப் படுகிறது.ஆகவே பொங்காமல் திங்க மட்டும் செய்யும் ஆண்கள் பற்றி எனக்குக் கேவலமான பார்வை மனதில் ஆழமாக உருவாகி விட்டது.ஆகவே அதுபற்றிக் கூடுதலாகப் பேசிவருகிறேன் என நினைக்கிறேன்.

வீட்டில் சக மனுஷியான என் அம்மா,என் சகோதரி,என் வாழ்க்கைத் துணைவி இவர்களின் வேலைகளைக் கூடப் பகிர்ந்துகொள்ளாமல் என்ன பெரிய சமூக மாற்றத்தைப் பற்றிப் பேச முடியும் என்னால்?ஆண் பெண் சமத்துவத்தை நான் (IN PRINCIPLE) கொள்கைரீதியான பிரச்னையாக விளங்கிக் கொள்ள மறுக்கிறேன்.அது மிகப் பிரதானமாக நடைமுறைரீதியான ஒன்று என்று மாற்ற விரும்புகிறேன்.நம் அன்றாட வாழ்வின் பகுதியாக பெண்ணியம் மாறியாக வேண்டும்.கொள்கை மாற்றத்துக்கான போராட்ட்த்தோடு அதைப் பின்னர் இணைத்துக்கொள்ளலாம்.

11. ஒரு காலத்தில் சினிமாப் பாடல்களின் மெட்டுகளில் அரசியல் பாடல்களைப் பாடினாலே அதற்கு இடதுசாரிகளிடம் எதிர்ப்பு இருந்தது. அரசியல் கருத்துகள் நிற்காது, சினிமா மெட்டுகளே நிற்கும் என்பதுதான் அதற்குக் காரணம். ஆனால் இன்று கலை இரவு நிகழ்ச்சிகளில் சினிமா பாடல்களுக்கு ஆடும் போக்கு உள்ளது. அதை இயக்கம் சார்ந்தவர்களே ரசிக்கவும் செய்கிறார்கள். இந்த நிலை எப்படி வந்தது? இதை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

இப்போதும் சினிமா மெட்டு இல்லாத பாடல்களையே கலை இரவு மேடைகளில் பாடி வருகிறோம். எங்கேனும் ஓரிரு நிகழ்ச்சிகளில் நீங்கள் சொன்ன நிலை இருந்திருக்கலாம்.அது எந்த ஊர் என்று சொன்னால் திருத்திக்கொள்ளலாம்.பெரும்போக்காக இருப்பதும் எமது கொள்கை நிலைபாடாக இருப்பதும் கருத்தும் கலையழகும் சேர்ந்த பாடல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே.ஏதேனும் ஒருசில சினிமாப்பாடல் மெட்டுகள் அதற்கு உதவினால் பயன்படுத்திக்கொள்வோம்.சினிமாவுக்கும் சினிமாப்பாடல்களுக்கும் நாம் எதிரிகள் அல்ல.சினிமா மெட்டில் பாடினால் கேட்பவர் மனதில் அந்த சினிமா காட்சிதான் ஓடும் நம் பாடலின் கருத்து சென்று சேராது என்பதால்தான் சினமாபாடல் மெட்டுக்களைத் தவிர்க்கிறோம்.பாவலர் வரதராசன் உள்ளிட்ட அன்றைய இயக்கப் பாடகர்கள் முழுக்கவும் சினிமாப் பாடல் மெட்டிலேயே பாடி வெற்றிகண்ட வரலாறும் இருக்கிறது.எல்லாவற்றையும் கணக்கில் கொள்ளலாம்.நம் நோக்கம் சிதையாவண்ணம் பயன்படுத்தலாம்.இறுக்கமான சட்டகமாக எதையும் மாற்ற வேண்டியதில்லை என்பது என் கருத்து.

12. அறிவொளி இயக்க அனுபவங்கள் உங்களுக்கு எவற்றைக் கற்றுத் தந்தன? இன்றைய கல்விமுறையைப் பற்றிய உங்கள் பார்வை என்ன?

அறிவொளி இயக்கம் என்னை இன்னும் நல்ல மனிதனாக மாற்றியது என்று நம்புகிறேன்.இருளும் ஒளியும் என்றொரு புத்தகத்தில் விரிவாக என் அனுபவங்களை எழுதியிருக்கிறேன்.மக்களிடம் வேலை செய்வது எப்படி என்பதற்கான சில முன்மாதிரிகளை அறிவொளி இயக்கம் எங்களுக்குத் தந்து சென்றுள்ளது.மக்களிடம் கற்றுக்கொள்வது என்றால் என்ன என்பதை அனுஜ்பவபுர்வமாக நான் புரிந்து கொண்ட இடம் கிராமப்புற அறிவொளி மையங்கள் என்பேன்.பேராசிரியர்.ச.மாடசாமி,டாக்டர் ராமானுஜம்,டாக்டர் ஆத்ரேயா,டாக்டர் சுந்தர்ராமன்,த.வி.வெங்கடேஸ்வரன் போன்ற மகத்தான மனிதர்களை என் வாழ்வில் கொண்டுவந்து சேர்த்த இயக்கம் அறிவொளி இயக்கம்.இலக்கியம் பற்றிய எனது பார்வையைத் தலைகீழாக மாற்றியதும் என் எழுத்து மொழியைப் பெரிதும் மாற்றியமைத்த்தும் அறிவொளி இயக்கம்தான். இதுபோக ஆயிரக்கணக்கான என் போன்ர சக தொண்டர்களை எனக்குப் பெற்றுத்தந்ததும் அந்த இயக்கம்தான்.

இன்றைய கல்வி முறை பற்றித் தனியாக பத்து இருபது பக்கமாவது பேச வேண்டிய விஷயம் இருக்கிறது.இன்றுள்ள கல்வி முறை தலை கீழாக மாற்றப்பட வேண்டும்.இது ஆள்பவரின் தேவையை மையமாகக் கொண்டு கட்டப்பட்ட கல்விமுறை.நாம் கோருவது குழந்தைகளை மையமாக்க் கொண்ட கல்வி முறை.ஏகலைவனின் கட்டை விரல் துண்டாடப்பட்ட்துபோல நம் குழந்தைகளின் சுய அறிவை எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் திறனை வெட்டி எறியும் (CONTROLLED LEARNING)கல்வி முறையே இன்று நம் தலையில் கட்டப்பட்டுள்ளது.இதை ரிப்பேர் செய்து பயன்படுத்த முடியாது.வெட்டி எறிந்து விட்டுப் புதிய விதைதான் நட வேண்டும்.

சமச்சீர் கல்விக்கான எமது போராட்டங்களும் ஆளும் வர்க்கம் தரும் கல்வியையே சமசீராகத் தா என்பற்கான போராடமாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.அல்ல.அல்ல.நாம் கோருவது முற்றிலும் வேறான ஒரு கல்வி முறை-உருவத்தாலும் உள்ளடக்கத்தாலும்.

13. ஒரு படைப்பாளி கட்சி சார்ந்து இயங்கும்போது அவனுக்கு ஏற்படுகிற நன்மை, தீமைகள் எவை? கட்சி சில நேரங்களில் மக்கள் நலனுக்கு முரணாகச் செயல்படும்போது ஒரு மக்கள் நலன் சார்ந்த படைப்பாளி அதை நியாயப் படுத்த முடியாமல் தவி க்க நேர்கிறது. படைப்பு முயற்சிகள் தடைபடுகின்றன. கட்சி சார்ந்து இயங்குவதே அவனை முடக்கிப் போட்டு விடாதா?

நான் கட்சி ஊழியனாக்க் கடந்த 30 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறேன்.தொடர்ந்து எழுதிக்கொண்டும் வருகிறேன்.எனக்கு அப்படி ஒரு நெருக்கடி ஏற்பட்ட்தில்லை.எழுத முடிவதும் எழுத முடியாமல் போவதும் என் பிரச்னை.என் கட்சி எப்போதும் மக்கள் நலனுக்கு விரோதமாகப் போனதில்லை.ஆகவே இந்தக் கேள்விக்கு இடமில்லை.அப்படி மக்களுக்கு விரோதமாகப் போகும் கட்சியில் இருக்கும் எழுத்தாளர்களுக்கு அது பிரச்னைதான்.

14. பூ திரைப்படத்துக்காக உங்களுக்கு விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோடிக்கணக்கான முதலீட்டுடன் இன்று செயல்படும் தமிழ்த் திரைப்பட உலகில் இடதுசாரி சிந்தனை உள்ளவர்கள் எப்படி இடம் பெற முடியும். அப்படியே முயற்சி செய்தாலும் வணிக விதிகளுக்கு உட்பட்டுத்தானே இயங்க முடியும்?

கிடைக்கிற வெளியைப் பயன்படுத்த முடியுமா என்று பார்க்கிறோம்.அதை மட்டும் நம்பிக்கொண்டு இருந்தால் தப்பு.அதன்மீது எந்த பிரேமையோ மயக்கமோ நமக்கில்லை.தெருக்களில் சினிமாக்களைத் திரையிடும் மக்கள் திரைப்பட இயக்கத்தில்தான் தமுஎகச இப்போது அதிக்க் கவனம் செலுத்தி வருகிறது.தமிழகம் முழுவதும் 500 மையங்களின் தெரு சினிமா இயக்கத்தைம் கட்டும் கனவோடு இயங்கி வருகிறோம்.மாவட்டம் தோறும் சொந்த டிவிடி புரொஜெக்டர்கள்,குறும்படங்கள்,ஆவணப்படங்கள் தயாரிப்பு எனப் பெரும் கனவுகளோடு நகர்ந்து கொண்டிருக்கிறோம்.இடையில் பூ,அரவான் போல கிடைக்கும் தொடர்புகளை என்ன செய்யலாம் என யோசிக்கிறோம்.எதையும் புறக்கணிக்க இப்போது நாங்கள் தயாராக இல்லை.ஆரம்பக் கட்ட்த்தில் நிற்கிறோம்.இன்னும் கொஞ்சம் நகர்ந்த பிறகு பரிசீலனை செய்து பார்ப்போம்.தவறுகள் ஏற்பட்டால் சரி செய்துகொண்டு முன்னேறுவோம்.திரைப்பட்த்துறைக்குள்ளும் சமூக அக்கறையும் எங்களைப்போலக் கனவுகளும் உள்ள எண்ணற்ற சக பயணிகல் இருக்கிறார்கள்.சினிமாக்காரர்கள் என்று கேலிப்புன்னகை செய்து அந்தப் பொக்கிஷங்களைப் புறக்கணிக்க நாங்கள் தயாராக இல்லை.

15. கருத்துருவாக்கத்தில் இதழ்களுக்கும், ஊடகங்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது. ஆனால் இடதுசாரி இயக்கத்தினர் தமிழகத்தில் பெரிய அளவுக்கு இந்தத் துறைகளில் பங்களிக்க முடியவில்லை. இதற்கு என்ன காரணம்?

பணம் இல்லாததுதான்.

Wednesday, March 7, 2012

ஒவ்வொரு வரியும் வரலாறாக.... சேகுவேரா இருந்த வீடு- யோ.கர்ணனின் சிறுகதைகள்

tamils2 யோ.கர்ணனின் தேவதைகளின் தீட்டுத்துணி சிறுகதைத்தொகுப்புக்குப் பின் வந்த 13 சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வந்துள்ளது.இக்கதைகளின் வடிவம்,மொழி நடை,உத்தி என்பதுபற்றியெல்லாம் சணமும் நினைக்க முடியாதபடிக்கு கதைகள் பேசும் உண்மைகள் வாசக மனதை நிலைகுலையச் செய்கின்றன.13 கதைகளை ஒரே மூச்சில் யாரும் வாசித்துவிட முடியாது.ஒரு கதையை வாசித்துவிட்டு அடுத்த கதைக்குப் போவதற்கு முன் இடைவெளியும் ஒருவித மௌனமும் வாசிப்பைத்தொடர்வதற்கான ஒரு மனத்தயாரிப்பும் தேவைப்பட்டது எனக்கு.ஆகவே இரண்டு மூன்று தினங்களாயின வாசித்து முடிக்க.

நேரடியாக வாசகரோடு பேசும் கதைகள் இவை.வாசகர் என்கிற ஹோதாவை சும்மா ஒரு இதுக்கு வைத்துக்கொண்டு இந்த உலகத்தோடு பேசும் கதைகள் இவை.உலகத்தோடு மட்டுமல்ல இக்கதைகள் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் தனி மொழிகளாகவும் பாவ மன்னிப்புக்கோரும் மன்றாட்டுக் குரலாகவும் வரலாற்றைப் பகடி செய்யும் உக்கிரமான பேச்சாகவும் பன்முகப் பரிமாணம் கொண்டு அமைந்துள்ளன. இயக்கங்கள் ,லட்சியங்கள்,கொள்கைகள், பிரச்சாரங்கள், கருத்தாக்கங்கள் என்கிற எல்லாவற்றையும் டவுசரைக் கழற்றிப்போட்டு நம்முன் அம்மணமாக நிற்கவைத்துக் கேள்வி கேட்கின்றன. நமக்குள் கேள்விகளை எழுப்புகின்றன.ஈழத்தில் நடந்துள்ள- இன்னும் தொடர்கின்ற – மானுட அவலத்தை முன் வைத்து வாழ்வின் சகலத்தின் முகத்தின் மீதும் தண்ணீரை வாரி வாரி இறைக்கின்றன.ஒவ்வொரு முறையும் நாம் சில்லிட்டுச் சிலிர்க்க நேர்கிறது.

திரும்பி வந்தவன் என்கிற கதையை இங்கு தமிழ் மானம் பேசுவோர் வாசித்தால் என்ன கதிக்கு ஆளாவார்களோ தெரியாது. இதை ஒரு குறிப்பிட்ட இயக்கத்து ஆள் பற்றிய கதை என்று பாராமல் பரத்தமை பற்றிய இன்னும் குறிப்பாகத் தமிழ்ப்பரத்தமை பற்றிய வரலாற்றுப் பார்வையுடன் இக்கதையை வாசித்தால் “ தமிழ் நளினங்களுடனும் தமிழ்ப்பவ்வியங்களுடனும் தமிழ் வெட்கத்துடனும் வரப்போறவள்...” என்கிற வார்த்தைகளில் புதைந்திருக்கும் பகடியின் வீச்சு நம்மைத் தமிழ் மூர்க்கத்துடன் தாக்கும். “ இப்படி இந்த வேலை செய்யிறாவெண்டு எங்கட அம்மாவை நீங்கள்தான் சுட்டனீங்கள்.... “என்கிற கடைசி வரி மரண தண்டனைக்கு எதிராக ஆவேசமான குரல் உலகெங்கும் எழும்பிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ஈழத்தில் விடுதலைக்கான இயக்கங்களின் கைகளால் நிறைவேற்றப்பட்ட கொலைத்தண்டனைகள் பற்றிய ஞாபகத்தை வரலாற்றிலிருந்து உருவிப்போடுகிறது.

பசியின் நெருப்பில் பொசிந்துபோகும் விழுமியங்களை தமிழ்க்கதை பேசுகிறது என்று ஒருவரி சம்பிரதாயமாக தமிழ்க்கதை பற்றி எழுதிவிட முடியவில்லை.வாழ்வும் வரலாறும் புனைவும் பிரித்தரிய முடியாதபடி பின்னிக்கிடக்கும் கதை இது. இடப்பெயர்வுகளுக்கூடான அன்றாட வாழ்க்கையில் மலசலம் கழிக்கப் பெண்கள் பட்ட பாட்டைப் பற்றிய வரிகளை வாசித்தபோது செயலற்றுக் கைகால் விளங்காமல் போனதுபோல என் உடம்பே தளர்ந்து போனது.என்ன மாதிரியான நாட்களை நம் பெண்கள் கடந்து வந்திருக்கிறார்கள்.சிறு வயதில் வாசித்த கு.அழகிரிசாமியின் திரிபுரம் கதைக்குப் பிறகு உடல் ரீதியாக என்னைத் தாக்கிய கதை.

கு.அழகிரிசாமி இரண்டு ஆண்கள் என்று ஒரு கதையும் தொடர்ந்து இரண்டு பெண்கள் என்றொரு கதையும் எழுதினார்.யோ.கர்ணன் திரும்பி வந்தவன் கதையை அடுத்து திரும்பி வந்தவள் என்றொரு கதை எழுதியிருக்கிறார்.ஈழத்தில் இந்த இரு வார்த்தைகளுக்கும் பல அர்த்தங்கள் உண்டு.வலி பொதிந்த அர்த்தங்கள்.போர்க்காலம் முழுக்க வெளி நாட்டிலிருந்துவிட்டு திரும்பி வந்தவர்.இடையிலே போய் இப்போது திரும்பி வந்தவர்,இயக்கத்துக்குப் போய் திரும்பி வந்தவர்,சிங்கள ராணுவத்தால் பிடிக்கப்பட்டு நீண்ட நாட்களின் பின் திரும்பி வந்தவர், செத்துப்போனதாகக் கருதப்பட்டு இப்போது திரும்பி வந்தவர் என எத்தனையோ திரும்பி வந்தவர்கள்.உடலால் திரும்பி வந்தவர்கள்.மனதால் திரும்பி வந்தவர்கள்.இந்தக் கதை போராளியாக இயக்கத்துக்குப் போய் போரில் ராணுவத்திடம் பிடிபட்டுப் பின்னர் திரும்பி வந்தவளான பவித்ரா அக்காவைப்பற்றிய கதை.தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுபோன்ற பாத்திரங்களை இதுபோன்ற தருணங்களை நாம் வாசித்த்தே இல்லை - அப்படியான வாழ்க்கையை நாம் கண்டதில்லை என்பதால்.ராஜபக்சேக்கு எதிராக்க் கையில் புலிக்கொடியோடு லண்டன் ஆர்ப்பாட்ட்த்தில் நிற்கும் அண்ணன் தான் ஒரு காலத்தில் காதலித்த பவித்ரா அக்காவை அவள் இயக்கத்திலிருந்தாள் என்பதற்காகவும் ஒன்றரை வருடம் ராணுவத்தடுப்பு முகாமிலிருந்தாள் என்பதற்காகவும் நிராகரிக்கிறான்.அவன் அப்படி நிராகரிப்பான் என்பதை பவித்ரா அக்காவும் அறிந்தே இருக்கிறாள்.சமூக நிகழ்வுகள் எப்படி மனித மனநிலைகளைத் தாறுமாறாகப் புரட்டிப்போடுகின்றன!இக்கதைக்கு இணையான சம்பவங்களை நாம் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது காணாமல்போய் திரும்பி வந்த பெண்கள் சந்தித்ததை வாசித்திருக்கிறோம். பவித்ரா அக்காவின் கண்ணீரில் பேப்பரில் இருந்த புலிக்கொடி கரைந்து போனது என்று இக்கதை முடிகிறது.உடனே இக்கதை புலிக்கொடியை அவமதிப்பதாக நாம் கருதிக் கொள்ளக் கூடாது.இத்தகைய பின்னணியில் உழலும் ஆண் மனம் அடையும் மாற்றங்கள் பற்றியதான universal truth ஒன்றைப் பேசும் கதையாகவே பார்க்க வேண்டும்.

அரிசி கதையை வாசித்துவிட்டு பேதலித்த மனதோடு நீண்ட நேரம் மௌனத்தில் அமிழ்ந்திருக்க நேர்ந்தது.செல்லடித்துத் தாய் சாக அவளைப் புதைத்த கையோடு அம்மாவின் ரத்தம் படிந்த அரிசியைக் களைந்து சமைக்கத்தயாராகும் அக்கா பற்றியதல்ல அந்தப் பாதிப்பு.அதுபோல எத்தனையோ குடும்பங்கள் ஈழப்போராட்ட்த்தில் அனுபவித்துத்தான் விட்டன.இக்கதையில் கோழி களவாண்டு ஒரு வாய் ருசியான சோத்துக்காக அண்ணனும் அக்கா தங்கைகளும் படும் பாடு,குளிக்க ஆசைப்பட்ட சகோதரிகளை அழைத்துச்செல்லும் மகன்ன - பிள்ளைகள் திரும்பி வரும் வரை டார்ப்பாலினுக்குள் கந்த சஷ்டி கவசம் சொல்லிக்கொண்டிருக்கும் அம்மா என விரியும் காட்சிகளே மனதைப் பேதலிக்கச் செய்தன.எழுத்து மறைந்து அந்த அவல வாழ்க்கைக்குள் நாம் போய் விடுகிறோம்.செல்லடியின்போது செல்கள் விழும் டைமிங்கை கணக்கிட்டு இடைவெளிகுள் அம்மாவைத்தேடுவதும் சத்தத்தை வைத்து அது என்னவகையான செல் என்னவகையான குண்டுவீச்சு எனச் சொல்லப்பழகிவிட்ட தமிழ் வாழ்க்கை-அதுதான் நம்மை உலுக்குவதாயிருக்கிறது.

சீட்டாட்டம் கதையும் சோசலிசம் கதையும் முற்றிலும் வேறொரு கோணத்திலிருந்து இயக்கத்தின் லட்சணத்தைத் தோலுறித்துக் காட்டுகின்றன.சரியான கிண்டலும் பகடியுமாய்ப் போகும் இக்கதைகள் நமக்கு நகையுணர்வை ஊட்டவில்லை.மாறாகப் பல உண்மைகளைப் போட்டு உடைத்து நகர்கின்றன.அதிர்ச்சியும் துயரமுமே நமக்கு மிஞ்சுகின்றன.பவுணன்ணையின் மனைவி சொல்லும் “ ச்சா.. எல்லாம் என்ன மாதிரி மரிட்டுது.எல்லாமே சோசலிசமாய் போச்சுது...” என்கிற வசனம் நம் கண்களில் நீர் துளிர்க்க வைக்கின்றன.பேதமின்றி அவரவருக்கான அப்பத்தைக் காலம் வழங்கிச்சென்றுவிட்ட குரூரத்தை நாம் உணர்கிறோம்.

முள்வேலி முகாமுக்குள்ளிருந்து வெளியேற சிங்கள ராணுவத்தினரோடு சினேகமாக்க் கதைச்சு ஒரு ஜோக்கரைப்போல நடிச்சு ஒரு வழியாக விடுதலை பெறும் இளைஞன் வெளியே வந்த்தும் ஆகாயத்தைப் பார்த்து கண்களை மூடியபடி இன்னும் கூடிய செனேக பாவத்துடன் சொன்னான் “தமிழீழம் கிடைச்ச மாதிரியிருக்குது” என்று முடியும் பாலையடிச்சித்தர் கதை இன்றைய முள்வேலி வாழ்க்கைக்குள்ளாக நம்மை அழைத்துச்சென்று காட்டுகிறது.கடைசிவரி ஏதேதோ வரலாற்றுக் காலங்களை நினைவு படுத்தி சுதந்திரத்தின் அர்த்தம் அர்த்தமின்மை குறித்தெல்லாம் யோசிக்க வைத்துவிடுகின்றது.முகாமுக்குள் பெரும்பாலான பொடியளைப்போலவே இவனும் முகாம் வாசலைப்பார்த்தபடியே நெடுநேரம் குந்தியிருப்பான் என்கிற வரியை எளிதில் வாசித்துக் கடந்துவிட முடியவில்லை. மூர்த்தி மாஸ்ர்ர் மீது நமக்குப் பரிதாபமும் பச்சாதாபமும் ஏற்படுகின்றன.புலிக்கொடியின் வரலாறு அதன் வர்ணங்கள் பற்றிய விளக்கங்கள் என்று படியளுக்குப் பாடம் நட்த்திய அவரும் முள்ளிவாய்க்காலில் பெண்டு பிள்ளைகளோடு இயக்கத்திடமிருந்து தப்பி ராணுவத்தை நோக்கி ஓடுகிறார்.என்ன ஒரு காட்சி அது.

இத்தொகுப்பில் மிகுந்த வலியுடன் வாசித்த கதை என்று பாவமன்னிப்பு கதையைச் சொல்லுவேன்.முற்றிலும் உளவியல்ரீதியான இக்கதை பெரும் மன உளைச்சலைத் தந்த்து.ஆபாத்தில் நண்பனுக்கு உதவாமல் ஓடிவந்த குற்றம் மனதை அரிக்க பவமன்னிப்புக் கிட்டாமல் தவிக்கும் இளைஞனின் கதையாக இக்கதை நம் மனதுக்குள் இறங்குகிறது.இத்தொகுப்பின் அட்டைப்படம் இக்கதைக்காகப் போடப்பட்ட்தோ என்று தோன்றியது.

சேகுவேரா இருந்த வீடு கதை ஒரு வரலாறு.வெவ்வேறு இயக்கங்களும் இந்தியன் ஆமியும் பின்னர் சிங்கள ராணுவமும் என மாறி மாறிக் கையகப்படுத்திக்கொள்ளும் அவ்வீடு ஈழப்போராட்ட வரலாற்றின் கண் கண்ட சாட்சியாக கதையில் நின்று எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டிருக்கிறது.வீட்டின் உரிமையாளரோ வீட்டை மீட்க முடியாமல் மனம் பிறழ்ந்து இந்தியாவில் போய்ச் செத்துப்போகிறார்.

’நான் பிறந்தது இந்தியன் ஆமி நேரம்’ என்கிற ஐயனின் எஸ்.எல்.ஆர் கதையில் வரும் வரி நம்மை ஒரு ஆட்டு ஆட்டி விடுகிறது.நம் மக்களின் நினைவுகளுக்குள் இந்தக் கொடுமையான வரலாற்று நிகழ்வுகள் எல்லாம் ஏறி உட்கார்ந்துவிட்டனவே. வந்தேமாதரம் பாட்டுப்பாடி அமைதிப்படையை வரவேற்ற பெரியவர் ராத்திரி ஒண்ணுக்குப்போக வெளியே வந்தபோது இருட்டில் அதே இந்தியன் ஆமியால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

இத்தொகுப்பு முழுவதுமே சிங்கள ராணுவமும் புலிகள் இயக்கமும் இந்திய ராணுவமும் ஈழத்தமிழ் மக்களைப் படுத்திய பாடுகள் ரத்தமும் சதையுமாக விரிந்து கிடக்கின்றன.இக்கதைகளை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான கதைகள் என்று எவரும் சொல்லிவிட முடியாது.மாறாக இவை யாவும் ஒவ்வொரு வரியும் ஈழத் தமிழ் மக்களின் சார்பாக நின்று பேசப்பட்ட கதைகள்.மக்களின் பார்வையில் எல்லா இயக்கங்களையும் ராணுவங்களையும் எந்தப்பக்கமும் சார்பின்றி கேள்விக்குட்படுத்துகின்றன.இதுதான் இதுதான் இன்று ஈழபோராட்டம் முடிவுக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவுபெறப்போகும் இத்தருணத்தில் எல்லோருக்கும் வந்து சேர வேண்டிய மனநிலை.வரலாற்றிலிருந்து பாடம் கற்பதற்கான ஆவணமாக இத்தொகுப்பு அமைந்துள்ளது.தமிழ் சினிமாக்காட்சிகளும் வசன்ங்களும் பாடல்களும் கதைகள் நெடுகிலும் விரவிப் பகடிக்குள்ளாக்கப்படுவது நாம் பண்பாடென்று கட்டியழுதுகொண்டிருக்கும் பலவற்றின் முகத்தில் அறைவதாக இருக்கிறது.

LRRC அல்லது பான்கீ மூன் அனுப்பிய மூவர் குழு அறிக்கை அல்லது இனி நடக்கப்போகும் விசாரணைகள் எல்லாவற்றையும் பார்க்க இக்கதைகளே உண்மையான முழுமையான யுத்த சாட்சியமாக ஒரு கலைஞனின் அசலான பொய்களற்ற வாழ்க்கைப் பதிவுகளாக நம் கைவந்து சேர்ந்துள்ளன.தவிர இவை ஈழத்து வாழ்வைப்பற்றிய கதைகளாக மட்டுமில்லை.மனித குல வரலாற்றின் மீது வைக்கப்படும் கேள்விகளாகவும் இக்கதைகள் வெடிக்கின்றன.

மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு தமிழனும் இன்று வாசிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் இது.

பி.கு:

இக்கதைகளை வாசிக்கும் போதெல்லாம் என் மனதில் யோ.கர்ணனையும் அவர் வயதை ஒத்த ஈழத்து இளைஞர்களையும் என் மடியில் கிடத்தித் தலை கோதி ஆற்றுப்படுத்துவது போலவும் அவர்களை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொள்வதுபோலவும் கரங்கள் குலுக்கி ஆறுதலாகப் பேசிக்கொண்டிருப்பது போலவும் அட்டைப்பட்த்தில் உள்ளதுபோல என் தலையை நான் பிடித்துக் கதறுவதுபோலவுமான பலப்பலகாட்சிகள் சித்திரமாக தோன்றித்தோன்றி மறைந்து கொண்டிருந்தன.

நாம வேற என்னத்துக்குத்தான் ஆகப்போறோம்?

சே குவேரா இருந்த வீடு

சிறுகதைகள்-யோ.கர்ணன்

வடலி வெளியீடு,

டி 2/5, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்,தெற்கு சிவன்கோவில் தெரு,

கோடம்பாக்கம்,சென்னை-600024

தமிழ்நாடு-+919789234295

கனடா- +16478963036

மின்ன்ஞ்சல்- salesvadaly@gmail.com

விலை ரூ. 80/-பக்கம் 128

-ச.தமிழ்ச்செல்வன்