Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Friday, June 8, 2012

வழியெங்கும் புத்தகங்கள்

bk reading நான் ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் பள்ளிக்கு எதிரே ஒரு வாசக சாலை இருந்தது.அதில் சாணி மெழுகிய திண்ணையில் விரித்த ஓலைப்பாயில் தினசரிகள்,வார,மாத இதழ்கள் கிடக்கும்.பெரிய ஆட்கள் உட்கார்ந்து படித்துக்கொண்டிருப்பார்கள்.அப்போது பொடியன்களான நாங்கள் சிலர் அவ்வப்போது உள்ளே நுழைந்து எதையாவது வாசிப்போம்.பிறகு மணியடிக்கவும் ஓடிவிடுவோம்.அப்படி ஒருநாள் ஒரு வார இதழில் வாசித்த பெட்டிச்செய்தியில் , பகத்சிங்கைத் தூக்கு மேடைக்கு அழைத்த போது அவர் லெனின் எழுதிய ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார் என்றும் அதை முழுதாகப் படித்து முடிக்கும்வரை கால அவகாசம் கேட்டார் என்றும் படித்து முடித்ததும் மகிழ்ச்சியோடு தூக்கு மேடைக்குப் போனார் என்றும் எழுதியிருந்தது.பாருய்யா சாகப்போற நேரத்திலே கூடப் படிச்சிருக்கான்...அவன் மனுசனா.. நாம மனுசங்களா என்று பெரியவர்கள் ரெண்டுபேர் பேசிக்கொண்டதையும் கேட்டேன்.அந்த செய்தியும் பேச்சும் என் மனதில் ஆழப்பதிந்து விட்டது.

பின்னர் பெரியவனாகிக் கோவில்பட்டியில் கல்லூரியில் படித்த காலத்தில்(1970-71) பஸ் நிலையத்துக்கு எதிரே என்சிபிஹெச் புத்தகக் கண்காட்சி நடந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன்.சிவப்புப் புத்தகங்களின் அணிவகுப்பில் லெனின் எழுதிய புத்தகங்களைத் தேடிப்பார்த்துக்கொண்டிருந்தேன்.மேசை அருகே சேர் போட்டு அமர்ந்திருந்த வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை மனிதர் ஒருவர் என்ன புத்தகம் தேடுறே தம்பி என்று கேட்டார்.’பகத்சிங் சாவதற்கு முன்னால் படித்த லெனின் புத்தகம்’ என்று சொன்னேன்.உடனே அவர் ‘அரசும் புரட்சியும் ‘என்ற நூலை எடுத்துக்கொடுத்தார்.என்னை இன்றும் செதுக்கிக் கொண்டிருக்கும் புத்தகமாக அது இருக்கிறது.இதையும் சேர்த்துப்படி என்று அந்தச் சிவந்த மனிதர் ஏங்கல்ஸ் எழுதிய குடும்பம் ,தனிச்சொத்து,அரசு ஆகியற்றின் தோற்றம் என்கிற புத்தகத்தையும் அன்பளிப்பாக எனக்கு வழங்கினார்.அந்த இரண்டு புத்தகங்களும் நூற்றுக்கு மேற்பட்ட முறைகள் என்னால் மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்டு பைண்டிங் கிழிந்து தாள் தாளாக ஆகிவிட்டாலும் பொக்கிஷம் போலக் கையில் வைத்திருக்கிறேன்.அதே நூல்களின் வேறு இரு பிரதிகள் அப்புறம் வாங்கிவிட்டாலும் அந்தப் பெரியவர் கொடுத்ததுதான் என் புத்தகமாக என் வாசிப்புக்கான சொந்தப் பிரதியாக பிரியத்துடன் வைத்திருக்கிறேன்.அந்தப்பிரதி பேசுவது போல வேறு பிரதிகள் என்னோடு நெருங்கிப் பேச முடிவதில்லை.அந்தப் புத்தகங்களை எனக்கு எடுத்துக் கொடுத்த பெரியவர் பெயர் எஸ்.எஸ்.தியாகராஜன் என்பதும் அவர் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்பதும் அவர் என் சித்தப்பாவின் நண்பர் என்பதும் பின்னர் அறிய நேர்ந்த கூடுதல் தகவல்கள்.

அரசு என்பது காலம் காலமாக எப்போதும் இருந்து கொண்டிருக்கும் ஒன்று- அது எல்லா மக்களுக்கும் பொதுவான ஒரு நிர்வாக ஏற்பாடு மட்டும்தான் என்கிற என் பொதுப்புத்தியை வெடிகொண்டு தகர்த்தன இவ்விரு புத்தகங்களும்.தீர்க்க முடியாத வர்க்கப்பகைமையின் விளவுதான் அரசு.தனிச்சொத்தைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையின் பெயர்தான் அரசு என்பதும் வரலாற்றில் தனிச்சொத்து தோன்றுவதற்கு முன்னால் அரசு என்கிற வன்முறைக்கருவி இருந்திருக்கவில்லை என்பதும் இவ்விரு புத்தகங்களால் தெளிவானது.அப்போது இலக்கிய வாசிப்பில் நான் நா.பார்த்தசாரதியிடமிருந்து விடைபெற்று ஜெயகாந்தனின் ஆளுகைக்குள் வந்துகொண்டிருந்த காலமாகவும் இருந்தது.பொன்விலங்கும் குறிஞ்சிமலரும் அந்த நாட்களில் என் மனதுக்கு நெருக்கமான நாவல்களாக இருந்தன.அரவிந்தனைப்போல சத்தியமூர்த்தியைப்போல தேசம் பற்றிய பொங்கும் பெருமிதத்தோடும் ஒருவித கற்பிதமான சத்திய ஆவேசத்தோடும் சிலபல நா.பா. கொட்டேசன்களோடும் ஒரு பூரணியை அல்லது பாரதி-கல்யாணியைத் தேடும் இளைஞனாக இருந்துகொண்டிருந்தேன்.கோகிலா என்ன செய்துவிட்டாள் என்கிற குறுநாவல்தான் ஜெயகாந்தனில் நான் முதலில் வாசித்தது.அப்படியே அவர் இழுத்துக்கொண்டு போய்விட்டார்.பாரீசுக்குப் போவின் கலை சார்ந்த தத்துவ விவாதங்களில் பிரமித்து அக்கினிப்பிரவேசத்தில் குளித்தெழுந்த கங்காவைப் பின்தொடர்ந்து சிலநேரங்களில் சில மனிதர்களைச் சந்தித்துச் சினிமாவுக்குப் போன சித்தாளுவுடன் ரிக்‌ஷாவில் ஏறி எம்.ஜி.ஆரின் பட வால் போஸ்டரை உடம்பில் சுற்றிக்கொண்டு அலைந்தேன்.விகடனில் அவர் எழுதிய வசீகரமான தொடர்களை விடாமல் வாசித்துக்கொண்டிருந்தேன்.ஆனால் வெகு சீக்கிரமாக நான் ஜெயகாந்தனிடமிருந்து விடைபெற்றுக் கொள்ள நேர்ந்தது. புதுக்கவிதை பொங்குமாங்கடல்போலப் பொங்கிப் பிரவகித்துக்கொண்டிருந்த நாட்களாக அவை இருந்தன.பழைய தடைகளை எல்லாம் உடைத்துக்கொண்டு மொழி புதிய எல்லைகளில் பிரவேசித்த அனுபவத்தில் நின்று ஜெயகாந்தனின் சத்தமான குரலை முன்போலக் கேட்க முடியவில்லை.வண்ணநிலவன்,வண்ணதாசனிடம் மிக இயல்பாக வந்து சேர்ந்தேன்.வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவலையும் தோழர் பால்வண்ணம் கொடுத்த ஜூலியஸ் பூசிக்கின் தூக்குமேடைக்குறிப்புகளையும் ஒரே சமயத்தில் படித்துக்கொண்டிருந்தேன்.இந்தப்பிரியங்களும் பாசங்களும்தான் வாழ்க்கை என்று கடல்புரத்துப் பிலோமிக்குட்டி சொன்னதையும் சிறைக்குள்ளே உலகத்தொழிலாளர் மீதான பாசத்துடன் ஜூலியஸ் பூசிக் மேதினம் கொண்டாடியதையும் ஒரே நேர்கோட்டில் வைத்து வாசித்துக்கொண்டிருந்தேன்.’உன் அடிச்சுவட்டில் நான்’ புத்தகத்தையும் அதே நேரம் வாசித்து அந்த ட்ராயைப்போல உலகத்தின் மக்கள் எல்லோருக்காகவும் சாகத் தயாராகிக்கொண்டிருந்தேன்.வண்ணதாசனின் கலைக்க முடியாத ஒப்பனைகள் என்ற சிறுகதைத்தொகுப்பின் அகல விரித்த வார்த்தைப் பரப்பில் தீட்டப்பட்ட நுட்பமான ஓவியங்களைக் கண்டு மனம் நடுங்கி ’எச்சங்கள்’ சிறுவர்களின் எச்சிற்சோடாக் குடிக்கும் காட்சியைக்கண்டு மனம் பதறி அச்சிறுவர்களுக்காகப் போராட உறுதிகொண்டேன்- கண்ணீரைத்துடைத்துக்கொண்டு.

இப்படியான மனநிலையோடு பாலியல் சார்ந்த குழப்பங்களும் கூடவே ஓடிவந்து கொண்டிருந்த ஒரு வயதில் –அப்போதுதான் ராணுவத்திலிருந்தும் திரும்பியிருந்தேன் –ராணுவமுகாம்களில் வாசிக்கக் கிடைத்த கமலாதாஸ் அக்காவும் சஸ்தி பிரதாவும் பாரதி முகர்ஜியும் இன்னும் என்னோடு இருந்துகொண்டிருந்தார்கள்.குறிப்பாக சஸ்தி பிரதாவின் HE AND SHE, MY GOD DIED YOUNG போன்ற நாவல்களும் கமலாதாசின் என் கதையும் கவிதைகளும் கதைகளும் இருட்டுக்குள் என்னை இழுத்துக்கொண்டே இருந்தன.இருட்டு எப்போதும் மயக்கம் தரவல்ல வசீகரத்தோடு கூடியதுதானே.

கல்லூரிநாட்களின் இறுதியில் அறிமுகமான ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவ உரையாடல்களையும் இன்னும் விடாமல் வாசித்துக்கொண்டிருந்தேன். அவருடைய COMMENTARIEES ON LIVING இரண்டு தொகுதிகளும் BEYOND VIOLENCE மற்றும் THE AWAKENING YEARS ,அவருடைய கிருஷ்ணமூர்த்தி நோட் புக் போன்ற நூல்கள் என்னோடு இருந்தன.அப்போதைய என்னுடைய பட்ஜெட்டில் அவற்றை வாங்கியது பெரிய செலவுதான்.என்றாலும் ஜே.கிருஷ்ணமூர்த்தி அப்படி ஈர்த்தார்.கேள்வி பதில் பாணியிலான அவருடைய உரைகள் அன்று என்னை ஆட்டி வைத்தன.

நீங்கள் ஒரு குழுவோடு உங்களை ஏன் அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள்? ஒரு இனத்தோடு-ஒரு மதத்தோடு- ஒரு இயக்கத்தோடு?ஒரு கூட்டத்தோடு உங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ளும் கணத்தில் உங்கள் படைப்பாற்றல் (CREATIVITY) மறும் கேள்வி கேட்கும் சுரணை முற்றுப்பெற்று விடுகிறது.என்கிற ஜே.கே யின் முன்வைப்பு நீண்ட காலம் என்னை அலைக்கழித்தது.

ஆனால் ஆர்.கே.கண்ணன் மொழிபெயர்ப்பில் வாசித்த ஜார்ஜ் பொலிட்சரின் மார்க்சீய மெய்ஞ்ஞானம் நூல் என்னைப் பிடித்திழுத்துப் பிரகாசிக்கும் சூரிய வெளிச்சத்தில் தள்ளிவிட்டது.இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைப் பச்சைக்குழந்தைகளுக்குச் சொல்வதுபோலச் சொன்ன புத்தகம் அது.அதைத்தொடர்ந்து ராகுல்ஜியின் வால்கா முதல் கங்கை வரை நூலையும் பொதுவுடமைதான் என்ன என்கிற புத்தகத்தையும் வாசித்ததில் மனம் மேலும் துலக்கமானது.வரலாற்று ரீதியாக ஒரு கதை வடிவில் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தையும் மனித குல வரலாற்றின் முக்கியமான பக்கங்களையும் பேசிய வால்கா முதல் கங்கை வரை வாசித்து அதில் வரும் ஒரு கதாபாத்திரமான ரேக்காபகத் என்கிற பெயரைப் புனைபெயராகக் கொண்டு சில கதைகளைச் செம்மலரில் எழுதினேன்.

ஜே.கிருஷ்ணமூர்த்தியிடமிருந்தும் சஸ்தி பிரதாவிடமிருந்தும் கமலாதாசிடமிருந்தும் முறையாக விடைபெற்று வர மாரீசு கான்போர்த்தின் இயக்கவியல் பொருள் முதல்வாதம் நூலும் சோவியத் வெளியீடாக அன்று வந்த Marxist Ideology என்கிற அட்டவணைகள் நிறைந்த எளிய புத்தகமும்தாம் கை கொடுத்தன.மனம் என்பதின் செயல்பாடுகள் பற்றியும் உள்மனம்-வெளி மனம்-ஆழ் மனம் மற்றும் அறிவு-உணர்வு என்பவற்றின் அடிப்படை அறிவியல் உண்மைகளோடும் இயக்கவியலைப் புரிய வைத்த இப்புத்தகங்கள் என் வாழ்க்கையையும் வாழ்க்கைக் கண்ணோட்டத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டன.

என் பசிக்குத் தீனியாக அப்போது சென்னை புக்ஸ் பாலாஜி பல நல்ல நூல்களை வெளியிட்டுக்கொண்டிருந்தார்.போல்ஷ்விக் கட்சியின் வரலாறு அப்போது வெளியாகியிருந்தது.அந்தக் கறுப்பு ஞாயிறு பற்றிய பக்கங்கள் என் மனதைப் பாதித்தன.பின்னர் பேட்டில்ஷிப் பொடெம்கின் திரைப்படத்தைப் பார்த்தபோது ஒடெஸ்ஸா படிக்கட்டுகள் காட்சி மீண்டும் என்னைப் போல்ஷ்விக் கட்சியின் வரலாற்றைப் படிக்க வைத்தது.சோவியத்யூனியனைப்போலவே அன்று கிழக்கு ஜெர்மனியிலிருந்தும் ஏராளமான மார்க்சிய அடிப்படை நூல்கள் வந்து கொண்டிருந்தன.அப்புத்தகங்கள் சோவியத் புத்தகங்களைப்போல சிவப்பு வண்ணத்தில் அல்லாமல் நீல வண்ன அட்டைகளுடன் இருக்கும்.ப்ளூ மார்க்சிஸ்ட்ஸ் என்று அவற்றைப்பற்றிய ஒரு கேலியான சிரிப்பு கோவில்பட்டித் தோழர்களிடம் இருக்கும்.

பிளெக்கனோவின் இரு புத்தகங்கள் அந்தத் தருணத்தில் தெளிவான பார்வையைத் தந்தன.வரலாற்றில் தனி நபர் பாத்திரம் என்கிற நூலும் கலையும் வாழ்க்கையும் என்ற நூலும்.அப்போது கு.சின்னப்ப்பாரதியின் தாகம் நாவலும் டி.செல்வராஜின் மலரும் சருகும் நாவலும் வந்துவிட்டிருந்தன.இதுதான் எனது பாதை எனத் தீர்மானிக்க இவ்விரு நாவல்களும் பிளெக்கனோவின் நூல்களும் வழிகாட்டின என்பேன்.

இவ்வளவு புத்தகங்களுக்குப் பிறகுதான் நான் 1848இல் மார்க்சும் ஏங்கல்சும் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையை வாசித்தேன்.ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது என்று துவங்கி எத்தனை இலக்கியப்பூர்வமான மொழிநடையில் உலகத்தொழிலாளர்களை ஒன்றுசேர அறைகூவி அழைத்த புத்தகம் அது.இன்றுவரை அப்புத்தகத்தை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே இருக்கிறேன்.ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஒரு புதிய தெளிவு கிடைத்துக்கொண்டே இருக்கிறது.எதைப்பற்றி எழுதப்போனாலும் பேசப்போனாலும் கம்யூனிஸ்ட் அறிக்கையை ஒருமுறை பார்த்துக்கொள்வது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது.அப்போது Radical review பத்திரிகையில் இ.எம்.எஸ். அவர்களின் நேர்காணல் ஒன்று வெளியாகி இருந்தது.CPI-CPM-CPI-ML என்பது அந்நேர்கணலின் தலைப்பு அதைப்படிச்சிட்டு அப்புறம் இதைப்படி என்று தோழர் பால்வண்ணம் என்னிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சித்திட்டம் என்கிற நூலையும் மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை அறிக்கை என்கிற சிறு நூலையும் கொடுத்தார். கட்சித்திட்டம் என்றால் ஏதோ அது அவர்கள் கட்சியைப்பற்றியும் அவர்களின் வழியைப் புகழ்ந்தும் எழுதியிருக்கும் என்று எதிர்பார்த்த எனக்கு அது ஓர் ஆழமான வரலாற்று ஆவணம்போல பல உண்மைகளை அடுக்கி மக்கள் ஜனநாயகப்புரட்சிக்கு மக்களை அழைக்கும் புத்தகமாக இருந்து என்னை ஆச்சர்யப்படுத்தியது.

சோவியத் நூல்களைச் சரளமாக வாசிக்கும் பழக்கம் இதற்குள் வந்துவிட்டிருந்தது.கார்க்கியைவிட அன்று என்னை மிகவும் ஈர்ப்பவராக தஸ்தாவ்ஸ்கியே இருந்துகொண்டிருந்தார்.வெண்ணிற இரவுகளின் பனி பொழியும் பாதைகளில் காதல்வயப்பட்ட இளைஞனாக நான் நடந்துகொண்டிருந்தேன்.சிங்கிஸ் ஐத்மாத்தோவின் ஜமீலாவைக் காதலிக்கும் பலகோடி உலக இளைஞர்களில் நானும் ஒருவனாக நிலவொளியில் நீந்திக்கொண்டிருந்தேன்.கோகோலின் ’மேல்கோட்’டை அணிந்து இருமிக்கொண்டு அந்தோன் செகாவின் கதைகளுக்குள் ஆறாவது வார்டில் ஒரு பாத்திரமாக மனப்பிறழ்வுடன் அலைந்து கொண்டிருந்தேன்.இவான் துர்கனேவின் முதற்காதல் என்கிற குறுநாவல் என்னை அந்நாவலில் வரும் சிறுபையனாகவே மாற்றியது.டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவலில் வரும் ஏமாற்றுக்காரப் பெண்ணும் அவள்மீது காதல் கொண்டு வாழ்நாள் முழுக்க அவள் பின்னாலேயே ஏமாந்து அலையும் அந்த இளைஞனும் அந்தக்காதலின் புனிதமும் மனதைத் தாக்கினாலும் இது ஒரு கிறித்துவப்பார்வையுடன் எழுதப்பட்ட நாவல் என்று டால்ஸ்டாயையே விமர்சிக்கும் அளவுக்கு அப்போது வளர்ந்துவிட்டிருந்தேன்.

உண்மையில் அன்றைய பல இளைஞர்களைப்போலவே நானும் மொழிபெயர்ப்பு நூல்கள் என்னும் பெரும் கடலில் விழுந்து கிடந்தேன்.நட் ஹாம்சனின் நிலவளம் நாவல் மனித வாழ்க்கையை ஆதியிலிருந்து புரிந்து கொள்ள உதவிய வரலாற்று ஆவணம் போல வந்து சேர்ந்த்து.அந்நாவலில் வரும் மேல் உதடு பிளந்த பெண்ணின் வயிற்றில் பிறந்த அவளைப்போலவே மேல் உதடு பிளந்த குழந்தையை அவள் யாருக்கும் தெரியாமல் மண்ணில் புதைக்கும் காட்சியில் இன்னும் மனம் உறைந்துபோய்க் கிடக்கிறேன்.நிலவளம் போலத் தமிழில் வந்த ஒரு புத்தகமாக அப்போது சா.கந்தசாமியின் சாயாவனம் நாவலை இயற்கையை வெல்லும் மனிதக்கதையாகப் புரிந்து கொண்டேன்.இன்று அதே கதையை இயற்கையை அழித்த மனிதன் சீரழியும் கதையாகப் புரிந்துகொள்கிறேன். வி.ஸ.காண்டேகரின் எரிநட்சத்திரம் நாவலில் வரும் புரட்சிகர இளைஞனாக என் ஆசிரியர்களுடன் வாதம் செய்திருக்கிறேன்..வங்கத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட கதைகள் ஏராளம்.விபூதிபூஷனின் இலட்சிய இந்து ஓட்டல், பங்கிம் சந்திரரரின் விவசாய எழுச்சியை மையமாக்க் கொண்ட வந்தேமாதரம் பாடலைத் தந்த ஆனந்த மடம் நாவல் ,வெளிநாட்டுக்குப் பிழைக்கப்போகும் உயர்சாதி இளைஞன் பற்றிய பாரதி நாவல் எனப்பல நாவல்கள். தாகூரின் கீதாஞ்சலி வாசித்துத் தலை நிமிர்த்தி நடந்திருக்கிறேன்.வங்க நாவல்களின் தத்துவப் பார்வையை விட என்னோடு எளிமையாகவும் நெருக்கத்துடனும் பேசிய கதைகளாக மலையாள எழுத்தாளர்களின் படைப்புகள் இருந்தன.வைக்கம் முகம்மது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும் இளம்பருவத்துத் தோழியும் குறுநாவல்களும் பஷீரின் சிறுகதைகளும் கேசவ்தேவின் நடிகையும் ஓர் அழகியின் சுயசரிதையும் என் திருமணத்துக்கு அன்பளிப்பாக வந்த என்.பி.டி.யின் சமீபத்திய மலையாளச்சிறுகதைகள் தொகுப்பும் என ஒரு வளமான பங்கு கேரளத்திலிருந்து வந்து கொண்டிருந்தது.அந்த அளவுக்குத் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு ஏதும் செல்லவில்லை என்பது இன்றுவரை தீராத ஒரு சோகம்தான்.

இந்த சந்தர்ப்பத்தில் நான் தொழிற்சங்க இயக்கத்தில் கூட்டங்களில் பேசுகிற ஆளாக மாறிப்போனதால் தேவையை ஒட்டித் தேடிப்படிக்கும் பழக்கமும் வந்து விட்டது.அப்படி வாசித்த புத்தகங்களில் என்னை மிகவும் பாதித்த புத்தகம் என தோழர் இ.எம்.எஸ். அவர்கள் எழுதிய INDIAN PLANNING IN CRISIS என்கிற நூலையும் அதன் தொடர்ச்சியாக வந்த CRISIS INTO CHAOS என்ற நூலையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே பொருளாதார அமைப்பு குறித்து எழுந்த விவாதங்கள் 1948இல் திட்டக்கமிஷன் உருவாக்கப்பட்ட பின்னணி அதன் பின் இயங்கிய வர்க்க அரசியல் பற்றியெல்லாம் தெளிவாக விளக்கிய நூல்கள் இவை.இ.எம்.எஸ் மீது ஏற்பட்ட ஈர்ப்பு அவர் எழுதிய எல்லா நூல்களையும் தேடி வாசிக்கத் தூண்டியது.அவரது இந்திய வரலாறு-ஒரு சுருக்கமான வரலாறும், நான் ஏன் கம்யூனிஸ்ட் ஆனேன் என்கிற நூலும் அப்போது தமிழில் கிடைத்தன.பின்னர் அவரது A HISTORY OF INDIAS FREEDOM STRUGGLE என்கிற புத்தகம் வந்ததும் ஓடிப்போய் வாங்கிப்படித்தேன்.இப்போது அது தமிழிலேயே கிடைக்கிறது.நம் நாட்டின் கடந்த கால வரலாற்றை ஒரு மார்க்சிய நோக்கில் பயில இதைவிடச் சிறந்த புத்தகம் வேறொன்றும் இல்லை.பின்னர் வேதங்களின் நாடு வந்தது.இந்தியாவில் சாதிகளின் தோற்ரம் பற்றிய ஒரு புதிய விளக்கத்தை இந்நூல் தந்த்து.

அங்கிருந்து என் வாசிப்பு வரலாற்று நூல்களின் மீது ஆவலுடன் தாவியது.குறிப்பாக இந்திய வரலாறு,தமிழக வரலாறு குறித்து என்ன துண்டுத்தாள் கிடைத்தாலும் வாங்கி வாசித்துத் தீவிரமாக்க் குறிப்புகளும் எடுத்துக்கொண்டிருந்தேன்.இந்திய வரலாற்று ஆய்வுக் கவுன்சிலின் நூல்கள் பலவற்றை அப்போது என்.சி.பி.எச் வெளியிட்டுக்கொண்டிருந்தது.என்சிபிஎச் கிளை பொறுப்பாளர் ஒருவரிடம் ரகசியமாக்க் கணக்கு வைத்துக்கொண்டு மாத்த் தவனையில் அந்த எல்லா வரலாறு நூல்களையும் வாங்கிக் குவித்து வெறிகொண்டு படித்துக்கொண்டிருந்தேன்.டி.டி.கோசாம்பியின் பண்டைய இந்திய வரலாறு,ராகுல்ஜியின் ரிக் வேத கால ஆரியர்கள்,ரோமிலா தாப்பரின் வரலாறும் வக்கிரங்களும்,சுவீரா ஜைஸ்வாலின் வைஷ்ணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,ஆர்.பி.ஷர்மாவின் பண்டைய இந்தியாவில் அரசு நிர்வாகத்தின் தோற்றம்,விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்கள்,பி.சி.ஜோசியின் 1857 புரட்சி ,சுசோபன் சர்க்காரின் வங்காள மறுமலர்ச்சி என எண்ணற்ற புத்தகங்கள்.படித்த நூல்களை நோட்டுப்போட்டுக் குறிப்புகளாக எழுதி வைத்துக்கொண்டிருந்தேன் –எதற்கென்று தெரியாமலே.இவ்வாசிப்பில் 1857 புரட்சியை ஒரு தனித்த சிறப்பு வாய்ந்த நூலாக உணர்ந்தேன்.ஒரு வரலாற்று நூல் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமான நூலாக இது அமைந்தது.ஏற்கனவே 1857 சிப்பாய்ப் புரட்சி பற்றி வேறு சில நூல்களையும் நான் வாசித்திருந்தேன்.மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள் முயற்சியில் 1957இல் அரசு வெளியிட்ட 1857 என்கிற விரிவான ஆங்கில நூலையும் பட்டாபி சீத்தாராமையா எழுதிய 1857 கலகம் என்கிற நூலையும் சவர்க்காரின் இந்தியப்புரட்சி நூலையும் வாசித்திருந்தாலும் அவை எதுவும் பி.சி.ஜோஷியின் நூலுக்கு ஈடாக நிற்கவில்லை.1857 புரட்சி பற்றிய வரலாறுக் காரணங்கள்,அன்றைய பத்திரிகைகளில் அது பற்றி வந்த செய்திகள்,நாட்டுப்புறப்பாடல்கள் ,பிற நாட்டு அறிஞர்கள் அப்புரட்சி பற்றி எழுதிய குறிப்புகள் என எல்லாவற்றையும் உள்ளடக்கிய முழுமையான நூலாக அது வந்திருந்தது.என்னைப்போன்ற அன்றைய இளம் வாசகர்களுக்குச் சரியான தீனியாக அது அமைந்தது.கோ.கேசவனின் எழுத்துக்களை நான் இந்த சமயத்தில்தான் வாசிக்க வாய்ப்புக் கிடைத்தது.அவரது சமூகமும் கதைப்பாடல்களும் என்கிற சின்னஞ் சிறிய புத்தகம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை இருக்கிறது.பாளையக்காரர்களின் காலத்தைப்புரிந்துகொள்ள தமிழில் இதைவிடச் சிறந்த நூல் ஏதும் இல்லை என்பேன்.அவரது மண்ணும் மனித உறவுகளும், இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் மற்றும் இயக்கமும் இலக்கியப்போக்குகளும் போன்ற நூல்களையெல்லாம் ஒருசேரத் தேடித் தேடி வாசித்தேன்.இயக்கங்களில் பணியாற்றும் தோழர்களுக்குக் கல்வி புகட்டும் மொழியில் அவர் எழுதினார்.அவரது மறைவு இட்து சிந்தனை உலகுக்குப் பேரிழப்பாகும்.

இப்போது கதைகள் எழுதவும் துவங்கியிருந்தேன்.ஒரு திட்டமிட்ட பாடத்திட்ட அடிப்படையில் இலக்கியங்களைக் கற்பது என்று முடிவு செய்து கால வாரியாக நூல்களைப் பட்டியலிட்டு நூலகங்களிலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் நிறைய சொந்தமாகவும் வாங்கிப் படிக்கலானேன்.(இந்த வைராக்கியம் ஓராண்டுக்கு மேல் நீடித்தது எனக்கு ஆச்சரியமே-அவ்வளவு நீண்ட காலத்துக்கு என் புத்தி ஒரு நிலையில் நிற்பது –வாசிப்பைப் பொறுத்து-அபூர்வம்தான்)

1920களின் முக்கிய உரைநடை இலக்கிய எழுத்துக்கள் என பாரதியின் சிறுகதைகளையும் அவரது சந்திரிகையின் கதை என்னும் நாவலையும் அ.மாதவய்யாவின் குட்டிக்கதைகளையும் வ.வே.சு.அய்யரின் மங்கையர்க்கரசியின் காதல் தொகுப்பையும் படித்தேன்.சமூகத்துக்கு ஏதேனும் சொல்லத்துடித்த கதைகளாக அவற்றை உணர்ந்தேன்.மாதவய்யா கதைகளின் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் நான் எதிர்பாராதவை.சிறுகதை என்னும் வடிவம் பூரணமாகக் கைவராத படைப்புகளாக இம்மூவரின் கதைகள் இருந்தன.ஆனாலும் சிறுகதையின் துவக்கம் சமூக அக்கறை கொண்ட்தாகவே இருந்தது-உள்மனப் பயணம் பற்றியதாக இல்லை என்பது குறிக்கத்தக்கது.

1925இல் இம்மூவரும் மறைந்து விட்ட பின் புதுமைப்பித்தனும் கு.ப.ராஜகோபாலனும் மௌனியும் முன்னுக்கு வந்தனர்.இப்போதுபோல ஒட்டுமொத்தத் தொகுப்புகள் அக்காலத்தில் இல்லை.மௌனியின் அழியாச்சுடர் ஒரு தொகுப்புதான் வந்திருந்தது.என்னைப்போலவே(!) மிகக் குறைந்த எண்ணிக்கையில் கதை எழுதியவர் அவர் என்பதாலும் சிறுகதைகளின் திருமூலர் என்று புதுமைப்பித்தன் அவரைப்பற்றிச் சொன்னதாலும் அவரை ஆவலுடன் வாசித்து ஏமாந்தேன்.அன்றுமுதல் இன்றுவரை மௌனி என்னை வசீகரிக்கவில்லை.புதுமைப்பித்தனின் காஞ்சனை,புதுமைப்பித்தன் கதைகள் ,துன்பக்கேணி போன்ற பத்துத்தொகுப்புகள் என் கையில் இருந்தன.ஒவ்வொரு கதையும் எனக்குப் பாடம் சொன்ன கதைதான்.இலங்கைக்குப் போய் பரங்கிப்புண் பெற்ற மருதாயியின் சோகமும் கடவுளோடு ஒருநாள் கழித்த கந்தசாமிப் பிள்ளையின் எள்ளலும் மகாமசானம் என்று சென்னைப்பட்டணத்தை மயானம் என்று சொல்லி முதலாளித்துவத்தின் முகத்தில் அடித்த கோபமும் அவருக்கன்றி யாருக்கு வரும்? கு.ப.ராவின் சிறிது வெளிச்சம் தொகுப்பின் கதைகள் இன்றைக்கும் மனதை ஈர்ப்பவையாக இருக்கின்றன.சிறிது வெளிச்சம்,ஆற்றாமை,மெகருன்னிசா போன்றவை இறவாப்புகழ் பெற்ற கதைகள்தாம்.

40களின் படைப்பாளிகளில் நான் தடுமாறி விழுந்தது கு.அழகிரிசாமியின் மடியில்தான்.இன்றைக்குவரை எனக்கு ஆதர்சம் அவர்தான்.நான் கதை எழுதிய ஒவ்வொரு நாளும் அவரது மடியில் உட்கார்ந்து கதை எழுதுவதான உணர்வே எனக்கு இருக்கும்.எளிய வார்த்தைகளில் எங்கள் கரிசல் மனிதர்களின் கள்ளமில்லாத உள்ளத்துடன் கதை சொன்ன அவர்தான் எமக்கு அப்பா.அவரது சிரிக்கவில்லை,தவப்பயன்,அன்பளிப்பு,கற்பக விருட்சம் போன்ற 11 தொகுப்புகள் அன்று என் கைவசம் இருந்தன. அது பற்றிய அளவற்ற கர்வமும் எனக்கு இருத்து.அவற்றை மொத்தமாக வாங்கிப்போன ஜோதிவிநாயகம் திருப்பித்தராமலே போய்விட்டது ஒரு சோகம்தான்.இன்று மொத்தக்கதைகளின் தொகுப்பு வந்துவிட்டாலும் அந்த என் புத்தகங்கள் போன சோகத்தை அது ஈடு செய்யவில்லை.

50-60 களின் இலக்கிய ஆளுமைகளாக அசோகமித்திரனும் கி.ராஜநாராயணனும் சி.சு.செல்லப்பாவும் ஜி.நாகராஜனும் சுந்தரராமசாமியும் லா.ச.ராமாமிர்தமும் என் வாழ்வில் வந்து சேர்ந்தார்கள்.சென்னை வாழ்வின் கீழ் மத்தியதர வாழ்வைக்களனாக்க் கொண்ட அசோகமித்திரனின் சிறுகதைகளைப்(காலமும் ஐந்து குழந்தைகளும் ) பார்க்கிலும் என்னைப் பாதித்தவை அவரது அற்புதமான நாவல்களான கரைந்த நிழல்கள்,தண்ணீர்,பதினெட்டாவது அட்சக்கோடு போன்றவைதாம்.தண்ணீரில் வரும் ஜமுனாவின் துக்கம் நம்முடையதாகிவிடும்.அதை ஒரு குறியீட்டு நாவல் என்று அப்போது பேசிக்கொள்வார்கள்.பத்னெட்டாவது அட்சக்கோடு ஹைதராபாத்தைக் கதைக் களனாகக் கொண்டு இந்து முஸ்லீம் கலவரத்தில் சிதையும் மனித மாண்புகள் பற்றி நுட்பமாகப் பேசிய நாவல்.கி.ரா எங்க காட்டுப் பெரியவர். வேட்டி,கிடை,கன்னிமை போன்ற சிறுகதைத் தொகுப்புகளாலும் கோபல்லபுரம் மற்றும் கோபல்லபுரத்து மக்கள் ஆகிய நாவல்களாலும் கரிசல் வாழ்வின் பல பரிமாணங்கலை எளிய பேச்சுவழக்கில் கதைகளாக்ச் சொன்னவர் கி.ரா.பிரசாதம் சிறுகதைத் தொகுப்புத்தான் சுந்தரராமசாமியின் எழுத்துக்களில் நான் முதலில் வாசித்தது.புளியமரத்தின் கதையை ரொம்ப்ப் பின்னாளில்தான் வாசித்தேன்.அவருடைய எழுத்தின் மீது ஏற்பட்ட ஒரு வசீகரமும் மோகமும் இன்றுவரை தீரவில்லை.ஜே.ஜே.சில குறிப்புகள்தான் அவருடைய மாஸ்டர்பீஸ்.கருத்துரீதியாக அந்நாவலில் விமர்சனம் எனக்குண்டெனிலும் மொழி மற்றும் உத்தி ரீதியில் அது வந்த காலத்தில் மிக முன்னதாகப் பாய்ந்த படைப்பு அது.லா.ச.ராவை அன்று வாசித்தபோது பிரமிப்பாக இருந்தது.மொழியின் எல்லைகளை இவ்வளவு தூரம் விரிக்க முடியுமா என்று வியந்ததுண்டு.பின்னர் 90களில் அபிதாவை எடுத்து வாசித்தபோது என்னால் வாசிக்கவே முடியாத அயர்ச்சி ஏற்பட்டது.ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு குறுநாவலும் நாளை மற்றொரு நாளே நாவலும் தமிழ் நவீன இலக்கியம் அதிகம் பேசாத பக்கங்களைப் பேசின.எல்லோரும் வாழ்க்கையை முன்வாசல் வழியாகப் பார்க்கும்போது ஜி.நாகராஜன் புழக்கடை வழியே அதைப் பார்க்கிறார் என்ற சு.ரா.வின் கருத்து முற்றிலும் சரிதான்.இன்றும் என்னை ஈர்க்கும் ஒரு எழுத்து ஜி.நாகராஜனுடையது.

70-80 களில் நானும் மைதானத்தில் இறங்கியிருந்தேன்.எனக்கு முன்னால் பிரபஞ்சனும்,வண்ணநிலவனும்,வண்ணதாசனும்,பூமணியும்,பா.செயப்பிரகாசமும் ,கந்தர்வனும் மேலாண்மை பொன்னுச்சாமியும் போய்க்கொண்டிருந்தார்கள்.

தொழிற்சங்க மற்றும் இலக்கிய உலகத்தோடு நான் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்து சில வேலைகளைச் செய்தபோது என் அறிவுலகின் வாசல்கள் இன்னும் அகலத் திறந்தன.கே.கிருஷ்ணகுமாரின் இயற்கை,சமுதாயம்,மனிதன் என்ற புத்தகம் எளிமையாக மனித குலவரலாற்றினூடாக அறிவியல் செய்த பயணம் பற்றிப் பேசியது. அறிவியல் இயக்கம் எனக்குச் செய்த மாபெரும் உதவி சில தலை சிறந்த மனிதர்களை எனக்கு அறிமுகம் செய்ததுதான். ச.மாடசாமி,டாக்டர் சுந்தரராமன்,டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன்,டாக்டர் ராமானுஜம்,டாக்டர் (?) செந்தில்பாபு போன்ற அறிஞர்கள் எனக்கு முற்றிலும் புதியதோர் உலகத்துப் புத்தகங்களை வாரி வழங்கிய கொடை வள்ளல்களாக அமைந்தனர்.

எளிய மக்களின் மனதோடு பேசும் கலையைக் கற்றுத்தந்த பேராசிரியர் ச.மாடசாமியின் எனக்குரிய இடம் எங்கே? அவரவர் கிணறு,சொலவடைகளும் சொன்னவர்களும் ஆகிய மூன்று நூல்களும் வாசிப்பவரின் மனங்களை விசாலமாக்கும் தன்மையுடையவை..சொலவடைகள் புத்தகம் கடுமையான உழைப்பையும் ஈடுபாட்டையும் கோரிய புத்தகம்.டாக்டர் சுந்தரராமன் தான் எமக்கு அந்தோனியோ கிராம்ஷியையும் மிஷேல் பூக்கோவையும் அறிமுகம் செய்து வைத்தவர்.அவருடைய அறிமுகத்தால் உந்தப்பெற்றுத் தேடிப் பிடித்து வாசிக்க முயன்ற புத்தகங்களென கிராம்ஷியின் PRISON NOTE BOOK மற்றும் CULTURAL WRITINGS ஆகிய இரு நூல்களையும் குறிப்பிட வேண்டும்.தோழர் தொ.மு.சி.ரகுநாதனின் கடைசி நாட்களில் இப்புத்தகங்களை அவர் கேட்கக் கொண்டுபோய்க் கொடுத்த சந்தோஷமும் எனக்குக் கிட்டியது.சவுத் விஷன் பாலாஜி வெளியிட்ட (எஸ்.வி.ஆர்-கீதா) அந்தோனியோ கிராம்ஷி-வாழ்வும் சிந்தனையும் அக்காலத்தில் முதல் அறிமுக முயற்சி.இப்போது விடியலில் அதைவிட நல்ல புத்தகங்கள் வந்துவிட்டன.

செந்தில்பாபு வரலாற்றாளர் எரிக் ஹோப்ஸ்வாம் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டார்.இப்போது அவரை விடவே முடியவில்லை.நான் முதலில் வாசித்த்து அவரது AGE OF EXTREMES தான் .நான் வாசித்த வரலாற்று நூல்களில் CLASSIC என்று இந்நூலைத்தான் சொல்வேன்.20ஆம் நூற்றாண்டைப்பற்றிய ஒரு முழுமையான பார்வையை இந்நூல்தான் வழங்கியது.அவருடைய Nations and Nationalism,Age of Empires,Age of Capitalism, சமீபத்திய Globalisation,Democracy and Terrorism போன்ற நூல்கள் வரலாற்றின் பக்கங்களைப் புரிந்துகொள்ள உதவிய நூல்கள்.ஒவ்வொரு நூற்றாண்டும் நமக்குச் சில வார்த்தகளை விட்டுச்செல்கின்றன என்கிற அவருடைய வரியும் மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு-நினைவு படுத்திக்கொண்டே இருப்பது வரலாற்றாளனின் கடமை என்கிற வரியும் மறக்க முடியாதவை.

த.வி.வெங்கடேஸ்வரன் திருவனந்தபுரத்தில் இருந்தபோதும் இப்போது டெல்லியில் இருக்கும்போதும் அவ்வப்போது அறிய புத்தகங்களை எனக்கு அறிமுகம் செய்பவராக இருக்கிறார்.முக்கியமாக புவியியல் நூல்களின் அரசியலை எனக்குப்புரிய வைத்து Jared Diamond என்கிற அற்புதமான புவியியல் எழுத்தாளரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.Jared Diamond இன் Why Geography என்கிற நூல் புவியியல் கற்பதன் அவசியத்தையும் உன்னதத்தையும் எனக்கு உணர்த்தின.அவருடைய இன்னொரு புத்தகமான GUNS,GERMS AND STEEL இதுவரையிலும் பார்க்காத ஒரு புதிய புவியியல் கோணத்தில் உலக வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவியது.வரைபடங்களின் அரசியலையும் வரைபடங்களின் வழியே வரலாற்றைப் புரிந்து கொள்ளவும் SUSAN GOLE அவர்களின் நூல்கள் சில உதவின.குறிப்பாக INDIA WITHIN GANGES- இண்டியா இந்த்ரகேஞ்சம் என்கிற அவரது நூல் ஐரோப்பியர்களின் பார்வையில் ஆதி காலந்தொட்டு இந்தியா பற்றிய சித்திரங்கள் எவ்விதம் மாறி மாறி வடிவம் கொண்டன என்பதை விளக்குகிறது.- இப்பாதையில் புத்தகங்களோடு என் வாழ்வில் குறுக்கிட்ட இன்னொரு ஆளுமை சேலம் சகஸ்ரநாமம்.நானும் அவரும் சேர்ந்து மனிதகுல வரலாறு,சமூக வரலாறு, கட்சித்திட்டம் போன்றவற்றை நழுவுபடக்காட்சிகளாகத் தயாரிக்கப் பெரும் திட்டங்கள் தீட்டினோம்.(நடக்கிறதோ இல்லையோ கனவுகளை விரித்துக்கொண்டே இருப்பதுதான் வாழ்வின் ஆதாரம் இல்லையா).மனித குல வரலாறு தொடர்பான சமீபத்திய பல நூல்களை அவர் பல ஊர்களிலிருந்து தருவித்தார்.ஒரு மேப் பாணியிலான கண்காட்சியைத் தயாரித்து ஆளுக்கு ஒரு செட் வைத்துக்கோண்டோம். சில ஊர்களுக்குக் கொண்டு சென்றோம்.அதற்குள் பவர் பாயிண்ட் என்கிற இன்னும் சிறப்பான வடிவம் வந்துவிட்டது.அவர் மூலம் வாசிக்க்க் கிடைத்த புத்தகங்களில் முக்கியமானவையாக JaredJared Diamond எழுதிய DioThe Rise anf Fall of Third Chimpanzee யையும் by Robert Wright எழுதிய The Moral Animal என்கிற நூலையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.மரபணு ஆராய்ச்சிகளின் விளைவாக மனித குலம் பிறந்தது ஆப்பிரிக்கா கண்ட்த்தில்தான் என்பது நிரூபணமான பிறகு இந்நூல்களை வாசித்தது நம் வேர்களை இன்னும் நெருக்கமாக அடையாளம் காண உதவியது. நமது ஆதி விலங்கினத் தொடர்பு எவ்விதம் இன்றுவரை நம் பண்பாட்டு வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்பதையும் நாம் ஏன் இவ்விதமாக வாழ்கிறோம் என்பதற்கான டார்வினிய அடிப்படையிலான விளக்கத்தை இந்நூல்கள் அளிக்கின்றன.

90களில் சோவியத் யூனியன் சிதறுண்டதும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகள் வீழ்ச்சியடைந்ததும் பண்பாட்டுத்தளத்தில் நாம் பணியாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின. எனது பார்வையும் இயக்கத்தின் பார்வையோடு சேர்ந்து மாற்றம் பெற்றது.அம்பேத்கரின் நூற்றாண்டு அவரது சிந்தனைகளின் மீது கவனத்தைத்திருப்பியது எனலாம்.அவரது நூல்கள் தமிழில் வெளியாகத் துவங்கியதும் ஈர்ப்புக்கு ஒரு வடிவம் கொடுத்தது.அவருடைய இந்தியாவில் சாதிகள் என்கிற கொலம்பியா பல்கலைக்கழக உரையும் புத்தரும் அவரது தம்மமும் என்கிற நூலும் காந்தியும் காங்கிரசும் தீண்டாதோருக்குச் செய்தது என்ன என்கிற நூலும் முதல் வாசிப்பிலேயே வாசகனின் கண்ணோட்டத்தை மாற்றியமைத்தன.அவரைப்பற்றிய புத்தகங்களில் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியின் அம்பேத்கர் ஆய்வு மையம் வெளியிட்ட அம்பேத்கர்-ஒரு பன்முகப்பார்வை ஒரு நல்ல எளிமையான அறிமுக நூலாகவும் DR.AMBEDKAR AND UNTOUCHABILITY- என்கிற CHRISTOPHER JAFFRELOT அவர்களின் நூல் அவரது சிந்தனைகளின் அறிமுகமாகவும் எனக்கு வாசிக்கக் கிடைத்தன.மராட்டிய அரசு வெளியிட்டுள்ள 40க்கு மேற்பட்ட அம்பேத்கர் நூல்வரிசையில் 20க்கு மேற்பட்டவற்றை வாங்கி வைத்து அவ்வப்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். முழு தொகுதிகளையும் வாங்கியாக வேண்டும்.அவருடைய ஆய்வு முறையும் ஆழ்ந்தகன்ற வாசிப்பும் ஒவ்வொரு வார்த்தையிலும் குமுறும் அவரது கோபாவேசமும் அம்பேத்கரை என் மனதின் உச்சத்தில் கொண்டு வைத்துள்ளது-மிகத் தாமதமாக அவரிடம் வந்து சேர்ந்தோமே என்கிற குற்ற உணர்ச்சியுடன்.

தந்தை பெரியாரின் நூல்களில் பெண் ஏன் அடிமையானாள்? மற்றும் திராவிடர் கழக வெளியீடுகளான பெரியார் களஞ்சியம் பத்துத் தொகுதிகள் (பெண்ணியம்,சாதி மட்டும்)வாங்கி வாசித்திருந்தாலும் வழக்குகளைச் சந்தித்து வெற்றி கண்டு பெரியார் திராவிடர் கழகத்தோழர்கள் வெளியிட்ட பெரியாரின் குடி அரசு எழுத்துக்களின் 27 தொகுதிகளை வாங்கி பரீட்சைக்குப் படிப்பது போல (ஒரு கூட்ட்த்தில் பேச வேண்டி இருந்ததால்)படித்த அனுபவம் அலாதியானது.பெரியாரின் எழுத்துக்களில் மிளிரும் கிண்டலும் கேலியும் நாட்டுப்புறக் கதைகளும் சொலவடைகளும் தனியே விவரித்து எழுதத்தக்கவை. காதல் பற்றிய அவரது கிண்டலான கருத்துக்கள் முதல் வாசிப்பில் எனக்கு வியப்பூட்டின. மக்கள் மொழியில் மக்களிடம் பேசிய மகத்தான தலைவராக அவர் மனதில் உயர்ந்து நிற்கிறார்.கிராம்ஷி சொல்லும் Organic Intellectual இவர்தான் என்று தோன்றியது.

பெண்களின் நிலை குறித்துத் தொடர்ந்து பேசி வந்தாலும் வலுவான புத்தகங்கள் வாசிக்க்க் கிடைக்காத சூழலில் எழுத்தாளர்-பத்திரிகையாளர் ஏ.எஸ்.பத்மாவதி அவர்கள் வீட்டுக்கு ஒருமுறை சென்றபோது அரிய பல நூல்களை அப்படியே எனக்கே எனக்கு என அள்ளிக்கொடுத்து விட்டார்.அவற்றில் – SIMON DE BEUOVA எழுதிய நான் ரொம்ப காலமாகத் தேடிக்கொண்டிருந்த THE SECOND SEX என்கிற புத்தகமும் இருந்தது.பிரான்ஸ் நாட்டையும் ஐரோப்பாவையும் குலுக்கிய அப்புத்தகம் பெண்நிலையில் நின்று இவ்வுலகைக் காணப் புதிய சாளரங்களைத் திறந்து விட்டது.The Beauty Myth மற்றும் Sacrificing Ourselves ஆகிய இரு புத்தகங்களும் வ.கீதா எழுதிய Gender மற்றும் Patriarchy ஆகிய இரு நூல்களும் பெண்ணியம் தொடர்பான என் பல குழப்பங்களுக்கும் விடையளிப்பதாக அமைந்தன.

நெல்லைக்குப் பணியாற்ற வந்த வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதியும் தமிழறிஞர் தொ.பரமசிவமும் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனும் எனக்குச் செய்துள்ள உதவிகள் சொல்லாலே விளக்கிவிட முடியாதவை.இந்திய-பாகிஸ்தான் பிரிவினை குறித்த சில முக்கியமான புத்தகங்களை சலபதிதான் எனக்கு வாங்கித்தந்தார்.ஊர்வசி புட்டாலியாவின் The Otherside of Silence கமலா பாஷின் எழுதிய Borders and Boundaries ஆகிய இரு நூல்களும் எந்த வரலாற்று நூலும் இதுவரை சொல்லியிராத தேசப்பிரிவினையின் காயங்களைத் திறந்து காட்டின.இந்தியாவின் விடுதலை என்பது பெண்களின் உடம்பின் மீது எழுதப்பட்ட ஒரு வரலாறுதான் என்பதை இவ்விரு நூல்களும் நம் முகத்திலறைந்து சொல்கின்றன.கண்ணீரில் கரைந்தபடி வாசித்த நூல்கள் இவை.எஸ்.ராமானுஜம் மொழி பெயர்ப்பில் வெளியான மண்ட்டோ படைப்புகள் இவ்வரிசையில் ஓர் மகத்தான நூலாகும்.

தொ.பரமசிவன் அவர்களின் அறியப்படாத தமிழகம் என்கிற நூல் தமிழகப்பண்பாட்டு வரலாற்றில் உண்மையிலேயே அறியப்படாத ஒரு தமிழகத்தை அறிமுகம் செய்து பலத்த அதிர்வுகளை உண்டாக்கிய நூல்.அந்நூலை நாங்கள் எம் தோள்களில் சுமந்து சென்று விற்பனை செய்தோம்.இன்று அவருடைய எல்லாக் கட்டுரைகளும் பண்பாட்டு அசைவுகள் என்கிற நூலாக வந்துள்ளது.நாட்டார் தெய்வங்களி வரலாற்றை ஆய்வு செய்து வெளிக்கொண்டுவந்த வாழும் நா.வானமாமலை என நான் மதிக்கிற தோழர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் அடித்தள மக்கள் வரலாறு, கொலையில் உதித்த தெய்வங்கள்,கிறித்துவமும் சாதியும் ,மந்திரங்கள் சடங்குகள் என அவரது ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு எழுத்தும் தமிழகப் பண்பாட்டு வரலாற்றைக் கட்டமைக்க உதவும் அடிப்படையான நூல்களாக அமைந்துள்ளன.சின்ன வயதிலேயே பெரும் சாதனைகள் புரிந்தவராக நான் மதிக்கும் ஆ.இரா.வேங்கடாசலபதியின் அந்தக்காலத்தில் காப்பி இல்லை,நாவலும் வாசிப்பும்,திராவிட இயக்கமும் வேளாளரும்,முச்சந்தி இலக்கியம் உள்ளிட்ட பல நூல்கள் தமிழில் வரலாற்று நூல்களின் வரிசையில் மிக முக்கிய இடம் பிடிப்பவை.

தமிழகத்தில் நானறிந்த ஒரே பொருளாதார வரலாற்றாய்வாளரான முனைவர் கே.ஏ.மணிக்குமாரின் 1930களில் தமிழகம் என்கிற நூலும் முதுகுளத்தூர் கலவரம் குறித்த அவரது 1957 RIOTS என்கிற நூலும்(அச்சில்) தமிழக வரலாற்றுக்கு அரிய பங்களிப்புகளாகும்.முத்துராமலிங்கத்தேவர் பற்றிய ஒரு விருப்பு வெறுப்பற்ற கணிப்பை மணிக்குமார் அவர்களின் இந்நூல் செய்துள்ளது குறிப்பிட்த்தக்கது.1930களில் தமிழகம் நூலை முன் வைத்து புதுமைப்பித்தனின் கதைகள் சிலவற்றை ஆய்வு செய்து பார்ப்பது அவசியம்.30களின் பொருளாதார மந்தம் பற்றி பல கதைகளில் புதுமைப்பித்தன் அழுத்தமாகவும் வெளிப்படையாகவும் பேசியுள்ளார்.

நான் சந்தித்த மனிதர்கள் எல்லோருடைய முகங்களுமே எனக்குச் சில புத்தகங்களாகவே மனதில் தோன்றுகின்றன.புத்தகம் சுமந்த (புத்தகங்களை நானும் என்னைப் புத்தகங்களும் ) வரலாறுதான் என் கடந்தகாலமும் நிகழ்காலமும் எதிர்காலமுமாக இருக்க முடியும்.என் மனப்போக்கின் ஒவ்வொரு திருப்பத்தையும் நடப்புகளும் நிகழ்வுகளும் தீர்மானித்ததை விட மேலே குறிப்பிட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்களே தீர்மானித்தன என்று உறுதியாகச் சொல்லுவேன்.

சமீபத்திய வாசிப்பில் இளம்பிறை,குட்டி ரேவதி, சுகிர்தராணி,சல்மா,மாலதி மைத்ரி போன்ற பெண் படைப்பாளிகளின் கவிதைகளும் கதைகளும் லிவிங் ஸ்மைல் வித்யாவின் தன் வரலாறும் ப்ரியாபாபுவின் எழுத்துக்களும் என்னைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளன என்பேன்.இவர்களைப்பற்றி இப்படி ஒட்டுமொத்தமாக ஒரு வரியில் எழுதுவது நியாயமில்லை.ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான வாழ்வை முன்வைத்துப் பேசுகிறார்கள்.பொதுவான அம்சம் ஒன்றுண்டு என்பதால் பொதுவாக்க் குறிப்பிட்டேன்.வாசிக்கும் ஆண் மனதைக் குற்ற உணர்வு கொள்ளச்செய்யும் படைப்புகளாக இவை யாவும் உள்ளன என்பதே அது.

கீரனூர் ஜாகிர் ராஜாவின் வடக்கேமுறி அலிமா,யோ.கர்ணனின் தேவதைகளின் தீட்டுத்துணி மற்றும் சேகுவேரா இருந்த வீடு போன்ற படைப்புக்கள் சமீபத்தில் நான் வாசித்து அதிர்வுக்குள்ளான உயிர்த்துடிப்புள்ள படைப்புக்கள்.இஸ்லாமிய வாழ்க்கைப் பின்புலத்தோடு மனித வாழ்வை, நம்பிக்கைகளை , மனித மதிப்பீடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் நாவல்களைத் தொடர்ந்து எழுதி வரும் ஜாகிர் ராஜாவின் எழுத்துக்களில் தனித்துவமான ஒன்றாக வடக்கே முறி அலிமாவை நான் மதிப்பிடுகிறேன்.ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்கிற புஷ்பராஜாவின் புத்தகமும் ராஜனி திரானகம எழுதிய முறிந்தபனை யும் காட்டிய ஈழப்போராட்ட்த்தின் மறுபக்கத்தையும் முழுமையான சித்திரத்தையும் வலி மிகுந்த வாழ்க்கையையும் துக்கத்தின் உச்சியில் பிறக்கும் பகடியாக யோ.கர்ணன் தன் சிறுகதைகளில் எழுதிச்செல்கிறார்.சேகுவேரா இருந்த வீடு ஒட்டுமொத்த ஈழப்போராட்டத்தின் குறியீடாக அமைந்துவிட்ட்து.

கோ.ரகுபதியின் தலித்துகளும் தண்ணீரும் சமீபத்தில் நான் வாசித்த மிக முக்கியமான புத்தகம்.பாவங்களைக் கழுவும் புனித வஸ்துவாகக் கருதப்படும் தண்ணீரைக் குடிப்பதற்காக தலித்துகள் நடத்தி வரும் போராட்டங்களை வரலாற்று ரீதியில் விளக்கும் இந்நூல் பரவலாக வாசிக்கப்பட வேண்டிய நூலாகும்.சு.கி.ஜெயராமன் தொடர்ந்து எழுதிவரும் புவியியல் சார் புத்தகங்களான குமரி நில நீட்சி,மணல் மேல் கட்டிய பாலம் போன்றவை இன்றைய இந்துத்துவப் புரட்டுகளையும் புளுகுமூட்டைகளையும் எதிர்கொள்ள உதவும் முக்கியமான புத்தகங்கள்.

என் இலக்கிய வாசிப்பு குறித்துப் பாதியிலேயே நிறுத்தி விட்டேன்--500 புத்தகங்களுக்கு மேல் அது வளரும் என்பதால்.

.இவையெல்லாம்தான் என் புத்தகங்கள்.இவற்றை என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டுதான் என் அன்றாடம் நகர்கிறது.இன்னும் கூட வாசிக்காத பல புத்தகங்கள் என் அலமாரிகளில் இருக்கின்றன.வாழ்வு முடிவதற்குள் நம்மிடம் இருக்கும் புத்தகங்களையாவது நாம் வாசித்து முடிப்போமா என்கிற சந்தேகம் அவ்வப்போது வரத்தான் செய்கிறது.என்றாலும் வாசிக்காமல் முடியாது.வாசித்தாலும் தீராது.

இப்படிச் சொல்ல உங்களுக்கும் நிறையவே இருக்கும்.

Tuesday, January 11, 2011

காற்றைப்போல எளிய கதைகள்

kuravan யெஸ்.பாலபாரதியைப் பல ஆண்டுகளாகப் பழக்கமென்றாலும் அவர் எழுத்துக்களை இதுவரை நான் வாசித்ததில்லை.

கோட்டி முத்து

பாரதியின் ஒரு பாட்டு

பொம்மை

கடந்துபோதல்

தண்ணீர் தேசம்

துரைப்பாண்டி

பேய்வீடு

நம்பிக்கை

சாமியாட்டம்

சாமியாட்டம்-2

ஆகிய இந்தப்பத்துக்கதைகளை 2003லிருந்து 2010 வரை எட்டு ஆண்டுகளாக எழுதியிருக்கிறார்.நம்மைவிடப் பெரிய சோம்பேறி ஒருத்தரைப் பார்த்துவிட்ட அற்ப சந்தோசம்தான் முதலில் எனக்கு ஏற்பட்டது..35 ஆண்டுகளில் 29 கதைகள் எழுதியவன் நான்.ஆகவே என்னிடம் ஒரு முன்னுரை அல்லது அணிந்துரை வாங்கிப்போட பாலபாரதி எடுத்த முடிவு அந்த வகையில் ரொம்பச் சரி.

வாசகனைச் சவாலுக்கு அழைக்கும் ‘இலக்கிய’ மொழியைத்தவிர்த்து கு.அழகிரிசாமியின் பள்ளியிலிருந்து வந்தவர்போல மிக எளிமையான, நேரடியான மொழியில் கதை சொல்லியிருக்கும் பாங்கு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.ஒரு கலைஞனுக்குரிய நுட்பமும் குழந்தை மனமும் பார்வையும் பாலபாரதிக்கு இயல்பாக இருக்கிறது.எந்த மெனக்கெடலும் இல்லாமல் காற்றைப்போல இக்கதைகள் நம்மைத் தொட்டுத்தழுவிச் செல்கின்றன.

இத்தொகுப்பின் சிறந்த கதைகள் துரைப்பாண்டியும் கோட்டிமுத்துவும் தாம்.பிற கதைகளிலும் சில அற்புதமான தருணங்கள் பதிவாகியிருக்கின்றன.குழந்தை உழைப்பாளி துரைப்பாண்டி நம்மை அந்தரத்தில் நிறுத்திவிட்டு அவனை விழுங்கும் சமுத்திரத்திற்குள் காணாமல் போகிறான்.அவனுக்கும் கதைசொல்லிக்கும் மலரும் நட்பு வெகு இயல்பாக மெல்ல மெல்லப் பற்றிப்படர்வது அழகாகப் பதிவாகியிருக்கிறது.வாசக மனதில் துயர் விதைத்த கதைகளாகத் துரைப்பாண்டியும் கோட்டி முத்துவும் அமைந்துள்ளன.பாலபாரதி சொல்வதுபோல எல்லா ஊர்களிலும் ஒரு கோட்டிமுத்து இருக்கிறான்.கந்தர்வன் அவனை சீவனாகப் படைத்தார்.வேல ராமமூர்த்தி கிறுக்கு சண்முகமாகப் படைத்தார்.என்னிடம் ஓரளவில் கருப்பசாமியின் அய்யாவாக வந்து சேர்ந்தார்.பாலபாரதிக்கு ஒரு கோட்டி முத்து.அவன் சட்டை கிழிந்துவிட்டால் ஊருக்குள் வராமலும் யாரிடமும் கேளாமலும் சுடுகாட்டு மண்டபத்தில் படுத்துக்கொள்ளும் இடம் கதையில் உன்னதமான இடமாகும். இப்பூமியில் வாழத்தெரியாத கோட்டிகள் எத்தனையோ கோடிப்பேர் இருக்கிறார்கள்.அவர்களைக் கோட்டி என்று நாம் பெயரிடுவதில்லை.நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கோட்டி குறிப்பிட்ட சதவீதத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான்.உலகத்தில் எல்லோருமே இப்படிக் கோட்டிகளாக இருந்துவிட்டால் அது எத்தனை அன்பும் கருணையும் பிறர் மீது அக்கறையும் உள்ள பூமியாக இருக்கும்.என்றெல்லாம் நம்மை யோசிக்க வைக்கும் படைப்பாக கோட்டிமுத்து அமைந்துவிட்டது.பல நினைவுகளையும் சிந்தனைகளையும் கிளர்த்துவதுதானே சிறந்த படைப்பு.

பாரதியின் ஒரு பாட்டு கதை இன்னும் நன்றாகச் செதுக்கப்பட்டு வந்திருக்க வேண்டும்.எனினும் சிறுமியிடம் கைநீட்டும் வயோதிகன் நம்மை அதிரச்செய்து ஆணென்ற நினைப்பில் நம்மைக் கூனிக் குறுகச்செய்கிறான்.எத்தனை துரோகங்களை நம் பெண்பிள்ளைகள் கடந்து வரவேண்டியிருக்கிறது.அந்தப்புள்ளியை நோக்கிக் கதை முதல் வரியிலிருந்து பயணப்படாமல் சுற்றிச் சுற்றி வந்திருப்பதைக் கவனத்துடன் தவிர்த்திருக்க வேண்டும்.

பொம்மை கதையில் மகளைக் கரடி பொம்மை சந்திக்கும் புள்ளிதான் கதை.அதைச் சுற்றி இன்னும் வலுவாகக் கதை பின்னப்பட்டிருக்க வேண்டும்.கடந்துபோதல் மிக முக்கியமான கதையாக வர வாய்ப்புள்ள படைப்பு.சாமியாட்டம்,பேய்வீடு போன்ற பகுத்தறிவுசார் கதைகளும் தண்ணீர் தேசம் போன்ற முற்போக்கான உள்ளடக்கம் கொண்ட கதைகளும் பாலபாரதியின் எதிர்கால எழுத்தின் மீது ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.

காட்சிரூபமாகவே எல்லாக்கதைகளும் நம் முன் விரிந்து விரிந்து மனதில் சித்திரங்களை வரைந்து செல்லும் எழுத்து நடை பாலபாரதிக்கு மிக இலகுவாகக் கை வந்துள்ளது.இதை வாழ்வின் நெருக்கடிகள் என்னும் போக்குவரத்து நெரிசலில் தொலைத்துவிடாமல் இறுகப்பற்றிக்கொள்ள வேண்டும்.

தமிழகத்திலும் மும்பையிலுமென பல பரிமாணமுள்ள வாழ்க்கையனுபவம் என்னும் மிகப்பெரிய பின்பலம் பாலபாரதிக்கு வாய்த்திருக்கிறது.தோண்டத்தோண்டக் கதைகள் அச்சுரங்கத்திலிருந்து வந்துகொண்டேதான் இருக்கும்.அதற்கான உழைப்பை நாம் கொடுக்க வேண்டும்.பத்திரிகையாளனாக எழுதிப்பிழைக்கும் வாழ்க்கை ஒருவகையில் படைப்பெழுத்துக்குப் பல விதத்தில் இடைஞ்சல் தரும்தான்.அதை மீறுவதற்கான போராட்டத்தைப் பாலபாரதி நடத்த வேண்டும்.

காற்று தென்றலாகவும் வரும்.புயலாகவும் வரும் சுனாமியாகவும் வரும்.இத்தொகுப்பு மென்மையான காற்றாக நம்மைத் தழுவிச்சென்றுள்ளது.இன்னும் அழுத்தமும் இறுக்கமும் கைகூடும்போது நம்மை வலுவாகத் தாக்கும் புயல்களை பாலபாரதி கட்டவிழ்த்து விடுவார் என்கிற நம்பிக்கையை இத்தொகுப்பு அளித்துள்ளது.வாழ்த்துகிறேன்.

அன்புடன்

ச.தமிழ்ச்செல்வன்

04-01-2011

பத்தமடை

Saturday, January 1, 2011

என் சக பயணிகள்-3

அம்பைambai

நான் தோசைகளை வெறுக்கத்துவங்கியது அம்பையின் எழுத்துக்களைப் படிக்கத்துவங்கிய காலத்தில்தான்.அதற்கு முன்வரைக்கும் தோசை என்றால் கபகப வென்று அவ்வளவு ஆசையுடன் தட்டின் முன்னால் காத்திருப்பேன்.என் அம்மா கல்லில் தோசை வார்த்து அதை ஒரு இட்லிக்கொப்பரை மூடிகொண்டு மூடி வைத்துப் பின் மூடியைத்திறந்து தோசையை அப்படியே இரண்டாக மடித்து ,மடித்த தோசையின் மீது தோசைக்கரண்டியால் செல்லமாக ரெண்டு தடவு தடவி எடுத்து எங்கள் தட்டில் போடுவார்கள்.எங்கள் கிராமத்திலேயே இப்படித் தோசை சுடுவது எங்க அம்மா மட்டும்தான்.மற்ற வீடுகளிலெல்லாம் ராத்திரி 2 மணிக்கெல்லாம் தோசைகளைச் சுட்டு வட்ட வட்டமாக நார்ப்பெட்டியில் அடுக்கி விடுவார்கள் பெண்கள்.அப்பேர்ப்பட்ட தோசையும் ஆணாதிக்கத்தின் இன்னொரு வடிவமாக என் மனதில் அழுத்தமாகப் படிந்துவிட்டது-அம்பையின் வெளிப்பாடு கதையைப் படித்து முடித்த அந்த நிமிடத்தில். (வட்டமான ஆணாதிக்கம்).எங்கள் அம்மா சுட்டு நாங்கள் தின்ற தோசைகள் வயிற்றில் வலி உண்டாக்கின.

பெண்கள் வாழ்க்கை குறித்து ஆய்வு செய்ய வந்த ஆய்வாளரான ஒரு பெண்ணுக்கும் ஒரு குடும்பப்பெண்ணுக்கும் நடக்கும் உரையாடல்(வெளிப்பாடு-கதை):

“நான் தோசை சுடட்டுமா?

“அட, தோசை சுடத்தெரியுமா?”

”ஏன்,தெரியாதுன்னு நினைச்சீங்களா? உங்களை மாதிரி அவ்வளவு அழகா வராது.ஆனா சுடுவேன்.”

“என்ன மாதிரின்னா, என் வயசு என்ன உங்க வயசு என்ன?பத்து வயசு தொடங்கி சுடறேன்.நாப்பது வருஷத்திலே ஒரு நாளைக்கு இருபது மேனிக்கு எவ்வளவு தோசை....அம்மம்மா...”

ஒரு வருடத்துக்கு ஏழாயிரத்து முந்நூறு தோசைகள்.நாற்பது வருடங்களில் இரண்டு லட்சத்துத் தொண்ணூற்றிரண்டாயிரம் தோசைகள்.இது தவிர இட்லிகள்,வடைகள்,அப்பங்கள்,பொரியல்கள், குழம்புகள்.எவ்வளவு முறை சோறு வடித்திருப்பாள்?எவ்வளவு கிலோ அரிசி சமைத்திருப்பாள்?இவள் சிரிக்கிறாள்.

“என்னா ரிப்போர்ட்டு எளுதணும்?”

“ பொம்பளைங்க பத்தி “

”பொம்பளைங்க பத்தி எழுத என்ன இருக்கு?”

“அதாவது அவங்க எப்படி வாழறாங்க?என்னவெல்லாம் வேலை செய்யறாங்க, அவங்க தங்களோட வாழ்க்கையைப் பத்தி என்ன நெனக்கிறாங்க..”

“என்ன நெனக்கிறாங்க? புள்ள பெறுதோம்.ஆக்கிப் போடுதோம். “

தோசையைப் புரட்டிப்போட்டது போல அன்று என் ஆண் மனதைப் புரட்டிப்போட்ட அரைப்பக்கம் இது.இன்று 2010இல் இன்னும் கூர்மையாக நம்மைத்தாக்கும் கதைகளைப் பெண் படைப்பாளிகள் பலர் எழுதித்தீர்த்துவிட்டார்கள் என்றாலும் நவீன தமிழ் உரைநடை இலக்கியத்தில் ஒலித்த முதல் பெண் குரல் அம்பையினுடையது அல்லவா?பெண் கோபத்தின் முதல் வெளிப்பாடு என்று சுந்தரராமசாமி மிகச்சரியாகக் குறிப்பிட்டார்.உண்மையில் இக்கதையை வாசித்த பிறகு பெண்களின் உலகத்தைப் பார்க்கும் என் பார்வை தலைகீழான மாற்றம் அடைந்தது.இதெல்லாம் கூடக் கவனிக்காமல் கடந்து வந்துவிட்டோமே என்கிற குற்ற உணர்வும் கூர்மைப்பட்டது.’பெண் பார்வை’ என்றால் என்ன என்பதை முதன் முதலாக எம்மில் பலருக்கு உணர்த்தியது அம்பையின் சிறுகதைகள்தாம்.அப்புறம்தான் நான் அலெக்ஸாண்டர் கொலண்டாயும் கிளார ஜெட்கினும் சிமாண்டிபுவாவும் அறிய வாய்த்தது.

70களில் கசடதபற இதழில் அம்பை எழுதிய ‘ அம்மா ஒரு கொலை செய்தாள்‘ கதை பெரும் அதிர்வலைகளையும் விவாதத்தையும் தமிழ் இலக்கியப்பரப்பில் ஏற்படுத்தியது.என் முன்னோடிகளான வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும் (ஒரு போதும் தனித்தனியாக இந்த இருவரையும் பிரித்து என்னால் யோசிக்கவே முடிந்ததில்லை-க.சீ.சிவக்குமாரையும் பாஸ்கர் சக்தியையும் போல) நெருக்கமான நண்பர் அம்பை எனக் கேள்விப்பட்டிருந்ததால் அவர் எழுத்துக்கள் மீது வாசிக்கும் முன்பே ஒரு மரியாதை விழுந்திருந்த்து.

வயதுக்கு வரும் நாளின் மனக் குழப்பத்தோடு அம்மாவின் ஆறுதலான வார்த்தைகளுக்காகக் காத்திருக்கும் சிறுமி ஒருத்தியின் மனம் –அம்மா வந்ததும் அவள் கழுத்தைக்கட்டிக்கொண்டு- தன் அவஸ்தையைச் சொல்லக்காத்திருக்கும் அந்த மனம்-தன் உடம்பே தனக்கு மாறுதலாகப் படும் தவிப்பை –அதற்கான விளக்கத்தை அம்மா சொல்லுவாள் எனக்காத்திருக்கும் அவள் மனதை ‘ உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம் ’என்று சொல்லிச் சிதறடிக்கும் அம்மா உண்மையில் ஒரு கொலைதான் செய்தாள்.

அவருடைய முதல் தொகுப்பின் தலைப்புக்கதையான சிறகுகள் முறியும் ஆண் பெண் உறவு குறித்தும் பெண்ணின் விடுபட முடியாத் துயரம் குறித்தும் விஸ்தாரமாகவும் அழுத்தமாகவும் பேசியது.அந்தக்கதையை நான் வாசித்து முடித்த அந்த நாள் இன்னும் நினைவில் இருக்கிறது.தன் நிலை பற்றிய சுய பிரக்ஞை ஏதும் இல்லாதவரைக்கும்தான் பெண் நிம்மதியாகத் தூங்க முடியும்.தன்னுணர்வு பெற்ற கணத்திலிருந்து சாயாவைப்போல அல்லது அவள் அம்மாவைப்போலச் சிரிப்பை இழந்து வெறிக்கும் பார்வையோடு மௌனத்தில் நிற்கும் நிலையே லபித்துவிடும்.ஆனால் தன்னுணர்வு பெறாமல் , இத்தகைய மனநிலையைக் கடந்து ஒரு கோப மனநிலையை நோக்கித் தன்னை நகர்த்தாமல் விடுதலைக்கு வேறு மார்க்கமில்லை.இது கடந்தே தீர வேண்டிய வலிதான்.இவ்வாறும் பலவித்மாகவும் யோசித்தபடி அன்று யாரோடும் பேசப்பிடிக்காமல் நெடுந்தூரம் தனியே நடந்து கொண்டிருந்தேன்.

கு.அழகிரிசாமியின் திரிபுரம் கதைக்குப் பிறகு அவ்வளவு மன அழுத்தத்தை நான் அடைந்தது அம்பையின் வெளிப்பாடு , வீட்டின் மூலையில் ஒரு சமையலறை மற்றும் கறுப்புக்குதிரைச் சதுக்கம்,காட்டில் ஒரு மான் போன்ற கதைகளால்தான்.

கு.அழகிரிசாமி,வண்ணநிலவன்,வண்ணதாசன் என்று என்னுடைய உலகம் உணர்ச்சிகரமானதாக இருக்க,அம்பை அறிவார்த்தமான கேள்விகளைக் கிளப்பியபடி எனக்குள்ளே பிரவேசித்தார். அறிவார்ந்த உலுக்குதல் மூலம் உள்நுழையும் அவரது கதைகள் பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பை வாசக மனதில் பொங்கி எழ வைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளவை.அறிவின் தீட்சண்யமும் ஆழ்ந்தடங்கி உறைந்திருக்கும் உணர்வுப் பெருக்கும் சரியாகக் கலந்த ஒரு படைப்பு சக்தியாக நான் அம்பையை உணர்கிறேன்.இந்த நிதானம்தான் இன்றைய நம் படைப்பாளிகளிடம் தப்பி விடுவதாகப் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

தோழர் கந்தசமியின் துணைவி தன் மகன் லெனினைப் பற்றிப் பேசும் ஒரு பத்தி (கறுப்புக்குதிரைச் சதுக்கம்) :

”நல்ல புள்ளம்மா அவன்.” கையைப்பற்றிக்கொண்டாள்.” “இன்னும் நிஜார் போட்ட பையனாகவே தெரியிறான் எனக்கு.ஒருவாட்டி அவரை செயில்ல போட்டுட்டாங்க.பன்னண்டு வயசுப்பயையணை இழுத்துக்கிட்டு ஓடறேன் அங்க.அங்க அலைஞ்சு,இங்க போயி அவரப் பாக்குற வரிக்கும் ‘பசிக்குதம்மா’ன்னு சொல்லலையே பையன்! எப்படிப்பட்ட புள்ள அவன்! ”

முதல் முறை இந்தப்பகுதியை வாசித்தபோது வெடித்து அழுதுவிட்டேன்.எத்தனை ஆண்டுகள் கழிந்தும் ஒரு தாய்க்குத் தன் மகன் பற்றிய எந்த நினைவு முதலில் முந்திக்கொண்டு வருகிறது ! பசியாற்றிப் பசியாற்றித் தன் பசியும் தன் சுகமும் தன் சுயமும் அழிந்துபோன ஆயிரமாயிரம் தாய்களின் தியாகப்புகையில் மூச்சுத்திணறுகிறது.பால்நினைந்தூட்டும் தாய் மனதோடு கூடிய ஒரு சமூக அமைப்பு பற்றிய நம் நெடுங்கனவு குறித்தான ஏக்கம் பெருமூச்செரிகிறது.தாயும் சமூக அமைப்பும் ஒன்றெனக் கொள்கிறேன்.

அம்பையின் படைப்புகளில் முதலில் நம்மைத்தாக்குவது அவரது தெளிவான -அகண்ட பார்வை வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம் -அவர் முன் வைக்கும் பெண்ணரசியல். இதெல்லாவற்றையும்விட பொதுவான பிரச்னைகளை ஒரு தன்னுணர்வோடும் தனிப்பட்டதான உணர்வாக மடைமாற்றியும் அவர் பேசும் விதம்தான் அவர் படைப்புகளைத் தனித்துவமிக்கவையாக்குகிறது.இது தமிழில் அபூர்வமான இடமாகும்.

வன்முறைக்கும் வன்புணர்ச்சிக்கும் ஆளாக்கப்பட்ட பெண் உறுப்புகள் மீது அவர் கொள்ளும் –கொட்டும்-கருணையும் வாஞ்சையும் நம் ரத்தத்தை உறையச் செய்கின்றன.நம்மால் (ஆண்களால்)அப்படியெல்லாம் யோசிக்கவே முடியாது.

“ஒவ்வொரு பெண்ணும் இன்னொருத்தியின் கண் அடியில் உள்ள கருவட்டங்களைத் தடவ வேண்டும்.பிரசவக் கோடுகளில் உள்ளங்கைகளை வைக்க வேண்டும்.புடைத்த நரம்புகளில் விரலை வைக்க வேண்டும்.வெடித்த கால்களைக் கைகளில் ஏந்த வேண்டும் .யோனியில் முகம் பதிக்க வேண்டும் “

இப்பத்தியில் இடம் பெறாமல் புறந்தள்ளப்பட்ட ஆணாக என்னை உணரும் இக்கணம் பெரும் குற்றச் சுமையை ஏற்றுகிறது.பல கதைகளில் பெண்களின் உடல்கள் கோடுகளோடும் கீறல்களோடும் விவரிக்கப்பட்டிருப்பது பெரும் மனத்திறப்பை ஆண் வாசகரிடம் ஏற்படுத்த வல்லதாகும்.

கதைகளுக்கு அப்பால் அம்பை இயங்கும் படைப்புத் தளம் மிக விரிந்து பரந்தது.அவர் நடத்தி வரும் ஸ்பாரோ (SPARROW- Sound and Picture Archives for Reasearch on Women) பெண்களுக்கான ஆய்வு மையத்தின் பணிகள் குறிப்பிடத்தக்கவை.அவர்களின் ஓரிரு நூல்கள் வாசிக்கக் கிடைத்தன.புதிய வெளிச்சம் தரும் முயற்சிகள் அவை.

இப்பூமியில் தோசைகளும் மார்ச்-8 உம் உள்ளவரை அம்பையின் கதைகள் நினைக்கப்படும்.ஆழ்ந்த அதிவுர்களை அவசியமான அளவுக்குத் தந்து கொண்டே இருக்கும்.

Friday, December 17, 2010

என் சக பயணிகள்-2

 

kambanadhi

வண்ணநிலவன்

” தலையைக் குனிந்தபடியே நடந்து வந்து கொண்டிருந்தான்” – வண்ணநிலவன் பற்றிச் சிறிய மின்னலென ஒரு நினைப்பு வரும்போதும்  கூட இந்த ஒரு வரி கூடவே சேர்ந்து வந்து நிற்கும்.என் மனதில் பதிந்துள்ள வண்ணநிலவனின் சித்திரத்தோடு சேர்ந்த ஒரு தீற்றலாகவே இந்த ஒரு வரி.அவர் எழுதிய கரையும் உருவங்கள் சிறுகதையின் முதல் வரி இது. நவீன இலக்கியத்தில் வேலை கிடைக்காத இளைஞர்களின் மன உலகைப் பதிவு செய்த முதல் தலைமுறை எழுத்தாளர் வண்ண நிலவன். இந்த ஒரு வரி, தனக்குள்ளே ஒடுங்கிப்போகும் அத்தகைய இளைஞனின் சொல்ல முடியாத -பகிர்ந்து கொள்ளப்படாத-துயரத்தின் குறியீடாக அமைந்துவிட்ட வரி.மெதுவாகத் துவங்கும் ஓர் உருமிச் சத்தம்போலத் துவங்கும் இந்த வரியிலிருந்து கதை மேலெழும்பிச் சென்று அவன் வீட்டுக்குள்ளே எல்லோரும் தூங்கியிருக்க தனக்காக விழித்திருக்கும் தன் அக்காள் எடுத்து வைத்த சாப்பாட்டைத் தொட மறுத்துச் சுவரில் சாய்வதும் பிரியத்துடன் அதட்டி அக்கா அவனுக்கு சாதத்தைப் பிசைந்து கையில் உருட்டிக்கொடுக்கச் சாப்பிடுவதும் என்று உருமி மேலே மேலே எழும்பி சட்டென்று அவன் அக்கா மடியில் முகம் புதைத்து அழுவதில் உச்சம் கொண்டு முடியும்.தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்ட கதை இது.

முதலில் நான் வாசித்தது அவருடைய சிறுகதைகளை அல்ல. கடல்புரத்தில் நாவலைத்தான்.ஜெயகாந்தனும் நா.பார்த்தசாரதியும் போன்ற பெரியவர்களின் அரசாட்சி நாவல் உலகில் பெரும் சத்தத்தோடு நடந்தேறிக்கொண்டிருந்த ஒரு நாட்களில் சத்தமேயில்லாமல் வந்து எல்லோரையும் சாய்த்துப்போட்ட நாவல் கடல்புரத்தில்.கல்லூரி வாழ்க்கை முடிந்து ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு விடுமுறைக்கு வந்தபோது கடல்புரத்தில் நாவலை வாசித்த அந்த இரவு இன்றைக்கும் கண்ணீரோடுதான் நினைவில் தங்கியிருக்கிறது.அந்தப் பிலோமிக்குட்டிக்காக அந்த ராத்திரிப்பூராவும் அழுது கிடந்தேன்.எவ்வளவு சின்ன வயசில் எத்தனை துயரங்களை அவள் சந்தித்து விட்டாள்?

’இதெல்லா என்ன பிரியங்களும் பாசங்களும். ஒண்ணும் நிசமில்லே.அவிய எம்மேலே இருக்க மாதிரி என்னாலே அவிய மேல பிரியமாட்டு இருக்க முடியலே.ஒருத்தராலே ஒருத்தரு மேலதா ரொம்ப உயிராட்டு இருக்க முடியும்’ என்று பிலோமியிடம் ரஞ்சி சொல்லும்போது அவள் செபஸ்தி மீது கொண்டிருந்த நிறைவேறாக்காதலின் சுமை நம்மையும் அழுத்தும்.

”எவ்வளவு கொடுமையானதாக வாழ்க்கை வருத்தினாலும் இங்கே யாரும் சாகப் பிரியப்பட வில்லை.அதற்கு இந்த ஸ்நேகங்களும் பிரியங்களும்தான் காரணம்” இதுதான் வண்ணநிலவன் இந்த உலகுக்குச் சொல்லும் செய்தி. எத்தனை சத்தியமான வார்த்தைகள்.பிரியங்களும் சினேகங்களும் அற்றுப்போகிற கணத்தில்தான் தற்கொலை எண்ணம் வலுப்பெற்று விடுகிறது போலும்.ஆனால் பிலோமியின் அம்மை வாழ்ந்த காலம் பூராவும் தன்னை யாருக்கும் பிடிக்காது என்று நினைத்துத்தான் வாழ்ந்தாள்.அவளுடைய மரணம்தான் அவள் மீது மற்றவர்கள் கொண்டிருந்த பிரியத்தைக் காட்டிக்கொடுத்தது.ஆனால் அதை அறியாமலே அவள் மாண்டு போனாள்.

கடல்புரத்தில் முன்னுரையில் வண்ணநிலவன் ‘அன்புவழி’ யைப்போல ஒரு நாவலை எப்போதாவது எழுதிவிட மாட்டேனா என்று ஒரு வரி எழுதியிருப்பார்.அந்த ஒரு வரியைப் பற்றிக்கொண்டுதான் நான் உலக இலக்கியங்கள் என்னும் பெருங்கடலை அடையாளம் கண்டு அதில் அமிழ்ந்து போனேன்.பாரபாசின் அன்புவழியைப்போல பல கதைகளை உண்மையில் வண்ணநிலவன் எழுதிவிட்டார்.கடல்புரத்தில் மட்டுமல்ல.

கம்பாநதி நாவலில் பாப்பையாவும் கோமதியும் இண்டர்வியூவுக்குப் போய்விட்டு மழை விட்ட மாலையில் நயினார்குளத்துக் கலுங்கில் கால்களைத் தொங்கப்போட்டபடிக்கி பேசிக்கொண்டிருக்கும் அந்த எட்டுப்பக்கங்கள் தமிழ் இலக்கியத்தின் உச்சமான பக்கங்கள்.காதல்வயப்படுதல் என்கிறார்களே அது இதுதான். வெண்ணிற இரவுகள் படித்துவிட்டுத் தூக்கம் பிடிக்காமல் விடிய விடியத் தெருக்களில் சுற்றித் திரிந்ததுபோல கம்பாநதியின் இந்தப் பக்கங்களைப் படித்துவிட்டுப் பல இரவுகள் வேறொரு மனசோடு கண்களில் வழிந்து கொண்டேயிருக்கும் கண்ணீரைத்துடைக்கவும் மனசின்றி அலைந்து திரிந்ததுண்டு.அப்படி ஒன்றும் அவர்கள் பேசியிருக்கவும் மாட்டார்கள்.அவன் முன்னிலையில் அவள் அழுகிறாள்.ஏன் அழுதாள் என்று அவளுக்கும் தெரியவில்லை.அவனுக்கும் புரியவில்லை.ஏன் ஏன் என்று அவன் கேட்டுக்கொண்டே இருப்பான்.அவன் அப்படிக்கேட்டுக்கொண்டே இருந்தது அவளுக்கு ரொம்பவும் பிடித்திருக்கும்.என்னம்போ போலத் தோணிச்சி.அதான் அழுதேன்.... இதுதான் அவள் சொல்லும் காரணம்.அவள் சொன்னதில் எவ்வளவோ இருந்ததாக அவனுக்குப் பட்டது.தான் ஒளிக்காமல் அவனிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்ட நிறைவு அவளுக்கும் இருக்கும்.அவ்வளவுதான்.என்ன ஒரு மனநிலை அது.இப்பக்கங்களை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் என்னைப்போலவே தன் பாலியல் சார் கசடுகள் எல்லாம் தானே உருகி வழிந்து தரையில் ஓடுவதைக் கண்ணாரக் காண்பார்.உண்மையில் விடலைத் தனமாக ஓடிக்கொண்டிருந்த அன்றைய என் மனநிலையில் ஒருவித முதிர்ச்சியையும் பக்குவத்தையும் பெண்கள் சார்ந்து ஒரு புதிய பார்வையையும் கண்ணோட்டத்தையும் இந்த எட்டுப்பக்கங்கள்தான் ஏற்படுத்தின என்று மனம் திறந்து கூறுவேன்.

அவருடைய அன்புவழி பற்றி 70களில் கேலி பேசியவர்கள்கூட உண்டு.அன்பினாலேயே உலகத்தைத் திருத்த முடியுமா என்று. அன்பும் சினேகமும் கருணையும் முற்றிலுமாக வற்றிப்போய்க்கொண்டிருக்கும் இந்த நாட்களில் வண்ணநிலவனின் எழுத்துக்களுக்குப் புதிய அர்த்தமும் தேவையும் உண்டாகியிருப்பதாக உணர்கிறேன்.சண்டையும் சச்சரவுகளும் மலிந்துவிட்ட நம் தெருக்களில் வாங்க டீ சாப்பிடலாம் என்று கேட்கிற ஒரு அன்பான குரல் எத்தனை ஆறுதலானதும் முற்போக்கானதுமாகி விடுகிறது.

இப்போது வாசித்துப்பார்க்கையில் வறுமையை-இல்லாமையை-அது உண்டாக்கும் மனச் சிதைவுகளை –உறவுகளில் அது உண்டாக்கும் விரிசல்களை வண்ணநிலவன் அளவுக்கு யார் சொல்லியிருக்கிறார்கள் என்று படுகிறது.மயானகாண்டம் கதை ஒன்று போதும்.பிணமே விழாத ஊரில் பிணம் எரிக்கும் பண்டிதன் தன் குல மரபுப்படி தன் குடும்பத்தின் பட்டினியை ஊருக்குத் தெரிவிக்கச் சங்கு எடுத்து மயானக்கரையில் நின்று ஊதும் காட்சி மனதை நடுக்குறச்செய்யும். பட்டினியை சங்கின் ஒலியாக மாற்றி ஆறு,வயல்,வண்டிப்பாதை எனப் பரவவிட்டு இப்பிரபஞ்சமே பட்டினியைக் குரலாகக் கேட்க நேரும் மாயத்தை இக்கதை செய்திருக்கிறது.

எல்லோரும் கொண்டாடிய எஸ்தர் கதை என்றென்றும் அழியாப்புகழ் பெற்றுவிட்டு அமரகாவியமாகும்.பஞ்சம் வந்தால் மனித மனம் எப்படியெல்லாம் ஆகிவிடுகிறது?பெண்கள்தான் அதையெல்லாம் எப்படித் தைரியமாக எதிர்கொள்கிறார்கள்! அக்கதையில் வரும் ஊழியன் ஈசாக்கு காட்டிலேயே கிடந்து உழைப்பவன்.காடெல்லாம் விளையாமல் கனலாகத் தகிப்பது கண்டு காட்டுக்காக அழுவான்.அந்தக்காடு ஏதும் அவனுக்குச் சொந்தமுமில்லை.என்றாலும் அழியும் காடுகளைப்பார்த்து ஏங்கி அழும் மனநிலையை 70களிலேயே வண்ணநிலவன் எழுதிவிட்டார்.

இந்த தண்டாவாளத்தை நீயும் அப்பாவும் தானம்மா போட்டீங்க என்று கேள்வி மேல் கேள்வி கேட்கும் தன் மகனுடன் ரயில் ஏறி படித்த மனிதர்களால் டிக்கட் இல்லாமல் ஏறியதற்காக இறக்கி போலீஸ் ஸ்டேசனில் விடப்படும் அந்த ஏழை உழைப்பாளிப் பெண்ணின் கதை எவ்வளவு பெரிய அரசியலை சத்தமில்லாமல் பேசியது?

அவருடைய சிறுகதைத் தொகுப்புகளில் எஸ்தர்,தர்மம்,தாமிரபரணிக்கதைகள்போன்றவற்றையும் நாவல்களில் கடல்புரத்தில்,கம்பாநதி,ரெய்னீஸ் அய்யர் தெரு,நேசம் மறப்பதிலை நெஞ்சம் வரைக்கும் பின் தொடர்ந்தேன்.அப்புறம் நம் வாழ்க்கை வேறு பக்கமாக ஓட்டத்தைச் சுழித்துவிட்டதால் அப்புறமான அவரது படைப்புகளை வாசிக்க வாய்க்கவில்லை.

வண்ணநிலவன் என்றாலே மனதை உருக்கும் எழுத்து என்றுதான் அர்த்தம்.எவ்வளவு இறுக்கமான மனிதனையும் குற்றவாளியையும் மனம் திரும்பச்செய்ய வண்ணநிலவனின் எழுத்துக்களை வாசிக்கச்செய்யலாம்.அப்படி ஒரு HEALING EFFECT- ஆற்றுப்படுத்தும் தன்மை - உள்ள அபூர்வமான எழுத்து வண்ணநிலவனுக்குரியது.

v nilavan

Wednesday, September 8, 2010

கழிப்பறைச் சுவர்களில் எழுதப்பட்ட ஒரு காவியம்

கீரனூர் ஜாகீர் ராஜாவின் -வடக்கேமுறி அலிமா

alima

 

 

 

 

 

ரொம்பத் தாமதமாகத்தான் நான் கீரனூர் ஜாகிர்ராஜாவின் எழுத்துக்களை வாசிக்க வாய்த்தது.அவருடைய கருத்த லெப்பை மற்றும் மீன்காரத்தெரு ஆகிய இரு நாவல்களுக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நாவல் பரிசு அடுத்தடுத்த ஆண்டுகளில் வழங்கப்பட்டது.அப்போதும்கூட நான் அவருடைய நாவல்களை வாசித்திருக்கவில்லை. நடுவர்குழுத்தோழர்கள் சிறப்பாக அந்நாவல்கள் பற்றிப் பேசியது ஆர்வத்தைத்தூண்டியது.

கருத்த லெப்பையும் மீன்காரத்தெருவும் சேர்த்தே வாசித்தபோது நிமிர்ந்து உட்கார வைத்தது.இல்லை.இது தமிழில் ஒரு முக்கியமான எழுத்துக்காரனை அடையாளம் காட்டுகிறது என்று உடனே தோன்றியது. மூன்றாவது நாவல் துருக்கித் தொப்பியை வந்த உடனே படித்துவிட்டேன்.நான்காவது நாவல் வடக்கே முறி அலிமாவையும் சீக்கிரமே படித்து விட்டேன்.அதுபற்றி உட்கார்ந்து எழுதத்தான் உடனடியாக அவகாசமின்றித் தள்ளிப் போய்விட்டது.

* *

‘இந்தப் பிரதியில் ஏன் இத்தனை

வீச்சமெடுக்கிறது என்று

கேட்காதீர்கள்

இந்தச் சமூக அமைப்பு

ஏன் இத்தனை அலங்கோலமாயிருக்கிறது

என்று வேண்டுமானால்

கேளுங்கள் “

என்று நாவலின் முகப்புப் பக்கம் வரவேற்கிறது.

வடக்கேமுறி என்கிற வீட்டில் பிறந்த அலிமா என்கிற ஒரு பெண்ணின் கதை இது என்று நினைத்து உள்ளே நுழைகிறோம். உலகம் அவளை 1.பைத்தியம்,2.திருடி,3.கஞ்சா விற்பவள்,4.விபச்சாரி,5.கொலைகாரி,6.சி.ஐ.டி.ஆபீசர்,7.வாழ்ந்து கெட்டவள்,8.காதலனால் வஞ்சிக்கப்பட்டவள் 9.தலாக் கொடுக்கப்பட்டவள், 10.எய்ட்ஸ் நோயாளி,11.அரபு ஷேக் கைவிட்ட கேஸ் 12.மாந்த்ரீகம் செய்பவள் 13.சினிமா வாய்ப்புத் தேடி சோரம் போனவள் என்று ஆளுக்கு ஒரு விதமாகப் புரிந்து கொண்டிருந்தது .அலிமா மேற்படி பட்டியலிலுள்ள ஒவ்வொரு வேடத்துக்குக்கும் பொருந்துகிறவளாக இருந்ததும் சுவாரஸ்யமான விஷயம்தான் என்று முதல் அத்தியாயத்திலேயே நாவலின் கதைச்சுருக்கத்தை அல்லது கதையையே சொல்லி முடித்து விடுகிறார்.இனிமேல்தான் கதையே ஆரம்பமாக வேண்டும்.ஆகவே ஒரு கதை அல்ல இந்த நாவல்.ஒரு கதையைச் சொல்வதற்காக அல்ல இந்த நாவல் என்று தன் ஆடுகளத்தை - ஆட்டத்தின் தன்மையை முதல் அத்தியாயத்தில் நமக்கும் தனக்குமாக நிர்ணயித்துக்கொள்கிறார்.இதற்கு ஒரு துணிச்சல் வேண்டும்தான். நாவல் நெடுகிலும் இது அல்ல நான் சொல்ல வந்தது.இதுவும் அல்ல நான் சொல்ல வந்தது என்று ஒவ்வொன்றாக அழித்துக்கொண்டே வருகிறார் ஒவ்வொரு அத்தியாயத்திலும்.பின் எது பின் எது என்று வாசகன் பின் தொடரும் வாசிப்பு அனுபவம் முற்றிலும் புதியதாக இருக்கிறது.

மேற்பட்டியலில் உள்ள 13 ரகமான மனுஷிகள் பார்வையில் இந்தச் சமகால வாழ்வைச் சொல்லிப் பார்க்கிறது இந்நாவல் என்று சொல்லலாம்.அல்லது இந்தப் 13 ரக மனுஷியை எதிர்கொண்டவர்களின் கதையினூடாக நம்மை நாமே பார்த்துக்கொள்ளச்செய்கிறது இந்நாவல் என்றும் சொல்லலாம். ஆனால் உண்மையில் இந்தப் 13உம் அல்லாத வேறு ஒருத்திதான் அலிமா.அவள் உண்மையில் எப்படியானவள் என்பதைத் தேடிய பயணமாகவே இந்நாவல் என்றும் சொல்லலாம்.

அலிமா ஒரு நாடோடி.கழிப்பறைச் சுவர்களில் தன் கதையைக் கரித்துண்டு கொண்டு எழுதுபவள்.அதைப் பின்தொடர்ந்து பிரதியெடுத்துப் பதிப்பிக்க வேண்டும்.சராசரியாக ஒரு சிறுகதையை எழுத அவளுக்கு 50 கழிப்பறைகள் தேவைப்படுகின்றன. கரித்துண்டுகள் எத்தனை தேவைப்படும் என்பதை அவள் சொல்லவில்லையே என்கிற கவலை எனக்கு வந்தது.பட்சி கதையை எழுத மட்டும் 53 கழிப்பறைகள் தேவைப்பட்டன.எண்ட யாத்ராவை எழுத அவளுக்கு 3800 கக்கூஸ்கள் தேவைப்பட்டன.

பேனாப்பிடித்து –இப்போது கணிணியின் மௌஸ் பிடித்து எழுதும் – எழுத்தாளன் என்கிற என் அகங்காரத்தின் மீது வலுவான அடியை அலிமாவின் கழிப்பறை-கரித்துண்டு படிமம் கொடுத்துவிட்டது.தொடர்ந்து வாசிக்க முடியாமல் ‘ இனி தாள்களில்தான் எழுத வேண்டும்.அது துர்ப்பாக்கியம்தான்’ என்கிற வரியில் உறைந்து நின்றேன். தாள்களில் உறைந்து கிடக்கும் பிறவிகளாயிற்றே நாம்.தவிர கக்கூசில் உட்கார்ந்து வாசிக்கும் வாசக மனநிலை பற்றியும் மேசை வாசகராகிய நம்மை இவ்வரிகள் யோசிக்க வைக்கின்றன.

வாழ்க்கையின் புதிர்கள் மற்றும் மனித மனம் என்னும் மர்மங்கள் நிறைந்த காட்டு வழியில் பயணித்து இந்நாவல் நம் வாழ்வை நோக்கித் தெளிவாகப் பேசுகிறது. அலிமா சிறு பிராயத்தில் கபுறுகளின் மீதேறி விளையாடும் அந்த ஒரு அத்தியாயம் தமிழ் உரைநடை இலக்கியத்தின் உன்னதமான பக்கங்கள்.

பிரம்பால் ஒவ்வொரு கல்லறையின் மீதும் அடித்து சிறுமி அலிமா எழுப்பும் கேள்விகள்.. வட்டி வாங்கினதுண்டா? உங்க பாரியாளத் தலாக் கொடுத்திங்களா? உங்க தள்ளிய கொடுமப்படுத்தினீங்களா? பாவப்பட்டவன் வயித்திலே அடிச்சீங்களா? ஒவ்வொரு கல்லறைக்கும் ஒரு கேள்வி.ம்.. சொல்லுங்கோ.. நா அல்லாக்குப் பேத்தியாக்கும்..சொல்லுங்கோ நான் அல்லாண்ட மகளாக்கும்...மரணத்தின் நெஞ்சில் பிரம்பால் அடித்து வாழ்வின் மீதான கேள்விகளை எழுப்பும் எழுப்புதல் பக்கங்கள் அவை.

மரபான,மூலைக்குள் முடங்கிக் கிடக்கும் இந்திய ஸ்த்ரீகளின் எல்லாவிதத் திரைகளையும் நெருப்பில் பொசுக்கிவிட்டுப் புறப்பட்ட நாடோடி அலிமாவுக்குத் தான் எங்கே போகிறோம் என்பது எப்போதும் தெரியாது.அவள் கால்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அது.அவளுடைய கால் தடத்தையும் கக்கூஸ் சுவர் எழுத்துக்களையும் பின் பற்றிச் சென்று எழுதப்பட்டுள்ள இந்நாவல் ஒப்பனையே இல்லாத – தான் வெறுத்தவர்களை மனதார வெறுத்தும் –நேசித்தவர்களை ஆழமாக நேசித்தும் வாழ்ந்த ஒரு அற்புதமான மனுஷியைப் பற்றி அவளால் நிராகரிக்கப்பட்ட ஒரு பாவப்பட்ட ஒருதலைக்காதலனின் பார்வையில் சொல்லப்பட்டுள்ளது.எல்லாம் சொல்லத்தெரிந்த அந்தக் காதலனுக்கு அலிமாவின் மனதில் இடம் பிடிக்கும் வித்தை மட்டும் பிடிபடாமல் போனதுதான் வாழ்வின் புதிர்.

அதைவிடப்பெரிய புதிர் அவளுடைய கதையை முழுவதுமாக ஒரு தன் வரலாற்று நாவலாக அவளுடைய பெரியப்பன் வனத்தில் வீட்டில் உட்கார்ந்து ஏற்கனவே எழுதி முடித்து விட்டிருந்தான் என்பதுதான்.இன்னும் அச்சில் வராத அதைப் படித்துவிட்டு அலிமாவின் பெரியம்மா சாரா தன் கணவனோடு சண்டைக்கு நிற்கிறாள்:

‘ அலிமாவின் ஜாதகத்தை உங்களால் எப்படிக் கணிக்க முடிந்தது.

அது ஜாதகமில்லை. ஒரு புனைவு.கதை.ஜோடனை.கற்பனை.நான் ஜோதிடனில்லை.

கற்பனை எப்படி நிஜமாகும்?

புனைவுக்கும் யதார்த்தத்துக்கும் இடைவெளி அதிகமில்லை என்று சிலர் சொல்வதைப் போலிருக்கிறது உன் கேள்வி..நான் எழுத மட்டுமே செய்தேன்.

அலிமாவின் வாழ்க்கை அந்நாவலின் ஒவ்வொரு வரியின் படி அத்தனை துல்லியமாக நடந்தேறியதை பெரியம்மாவால் செரிக்க முடியவில்லை.எழுதும்போது அலிம நம்ம மகளாச்சே என்ரு கொஞ்சம் யோசித்து எழுதியிருந்தால் அலிமாவை நாம் இழந்திருக்க மாட்டோமே என்பது அவளுடைய ஆத்திரமாக இருந்தது.அதைவிடவும் அவளுக்குப் பீதியளித்த இன்னொன்று.அவன் எழுதிக்கொண்டிருக்கும் அடுத்த நாவலின் நாயகி சபுரா. இப்போது சாரா கருவுற்றிருக்கிறாள். பிறக்கப்போவது பெண்குழந்தைதான் என்றும் அவள் பெயர் சபுராதான் என்றும் அவளுக்குத் தோன்றுகிறது. பிறக்கப்போகும் அந்த மகவுக்கு சபுரா என்று பேர் வைக்க ஏனோ அவளுக்குத் தோன்றுகிறது.பல்லாயிரம் தடவை அந்தப் பெயரை அழித்துப் பார்த்தும் அவள் நாவும் மனமும் சதா சபுரா சபுரா என்றுதான் உச்சரிக்கிறது.ஒன்று அவள் அக்கருவைக் கலைத்துவிட வேண்டும் அல்லது சபுராவின் கதையை எழுதுவதை அவன் நிறுத்த வேண்டும் என்று சாரா தன் கணவனின் சட்டையைப் பிடித்து நிற்கிறாள்.

ஒரு வணிகக் குடும்பத்தில் பிறந்து லௌகீகமாகப் பாடம் கற்றுக்கொள்ளாமல் தனியனாய்த் தவறி விழுந்த விதையாய்த் தவித்த அந்த எழுத்தாளனைப்பற்றிய எழுத்தாளர்களைக் கொன்றுவிடலாம் என்கிற அத்தியாயம் தமிழ்ப் புனைவுலகில் முற்றிலும் புதிய ஒரு குரல் என்று எனக்குத் தோன்றுகிறது.ஒரு எழுத்தாளனாக இருக்க நேர்ந்ததன் துயரம் அல்லது கழிவிரக்கம் தாண்டிய ஒரு கர்வமும் பெருமிதமும் ’இரக்கமற்ற காலத்தின் குரல் நான்’ என்கிற தலைநிமிர்வும் தெறிக்கும் இந்த அத்தியாயம் ஒரு புதிய அத்தியாயம்தான்.அதைத்தாண்டிக் குறியீடாக இப்பக்கங்கள் உணர்த்தும் செய்திகள் ஏராளம்.இவ்விதமே இந்நாவல் முழுவதும் மர்மங்களும் முடிச்சுகளும் அவிழ்ப்புகளும் வெளிச்சங்களுமாக நிறைந்திருக்க நம் முகத்தின் மீது நாமே ஒளிபாய்ச்சிக் கொள்ளும் கூச்சத்துடன் வாசிக்க நேர்ந்தது.

அலிமாவின் பயணத்துக்கேற்ற ஒரு அநேர்கோட்டு வடிவத்தைத் தேர்வு செய்தது நாவலை மேலும் செறிவுள்ளதாக்குகிறது.சரளமாகப் பாய்ந்து வரும் சொற்பிரயோகங்களும் மொழியும் வாசக மனதை வெகுவாக வசீகரிக்கிறது.

இஸ்லாமிய வாழ்வைக் களமாகக் கொண்டு ஜாகீர் ராஜா எழுதுவது அறிந்த உலகை எழுதுவதற்காக மட்டுமே.அவரை ஒருபோதும் ஒரு இஸ்லாமிய எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தவே முடியாது.இஸ்லாத்தின் அடிப்படைகளையே கேள்விக்குள்ளாக்கிய கருத்த லெப்பை நாவலைப்போல தமிழில் எந்த இஸ்லாமிய எழுத்தாளரும் இதுவரை படைத்ததில்லை.

மதச் சார்பற்ற பகுத்தறிவின் குரலாக அவரது எல்லாப்படைப்புகளும் திகழ்வதைப்போலவே இந்த நாவலும் பகுத்தறிவின் வெளிச்சத்தில் வாழ்வின் புதிர்களைப் பற்றி அலிமாவை முன்வைத்து நம்மோடு பேசுகிறது.

****

வடக்கே முறி அலிமா,மருதா பதிப்பகம் 2/100,5வது குறுக்குத்தெரு,குமரன் நகர்,சின்மயா நகர்,சென்னை-92

பக்கம்:144

விலை ரூ.80

Tuesday, July 20, 2010

சமச்சீர் பாடப்புத்தகங்கள் –ஒரு பார்வை

text bk1

 

 

 

 

 

ஆதியிலே பாடப்புத்தகங்களே இல்லாத காலம் ஒன்று இருந்தது.வரலாற்றின் ஒரு புள்ளியில்தான் பாடப்புத்தகம் வந்தது.சிலபஸ் எனப்படும் பாடத்திட்டமும்கூட வரலாற்றின் துவக்கத்தில் இருந்ததில்லை.மனிதகுலம் வர்க்க சமூகமாகப் பிளவுண்ட பிறகே ஆளும் வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பைச் சுரண்டுவதற்கு ஒப்புதல் தரும் வண்ணம் உழைக்கும் வர்க்கத்தின் மனங்களைத் தகவமைக்க வேண்டிய அவசியம் ஆள்பவர்களுக்கு ஏற்பட்டது.மனிதகுலத்தின் பொதுவான சேகரமான அறிவைத் தனியுடமை ஆக்கிப் பெருவாரியான மக்களைக் கல்விச்சாலைகளுக்கு வெளியில் வைத்துப் பலகாலம் அறிவையும் அதிகாரத்துக்கான ஒரு சாதனமாக்கிக்கொண்டிருந்த்து ஆளும் வர்க்கம்.அதன்மூலம் தான் அறிவில் தாழ்ந்த வர்க்கம் என உழைக்கும் வர்க்கம் ஒப்புக்கொடுக்க நேரிட்டது. இந்தியாவின் ’சிறப்பான’ சாதியக்கட்டுமானம் கல்வியை காட்டுக்குள்ளே பர்ணசாலை அமைத்துப் பார்ப்பனருக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் மட்டுமெனக் கொடுத்து வந்தது.அதை மீறிய ஏகலைவனின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டது

இங்கிலாந்தில் வெகுண்டெழுந்த தொழிலாளி வர்க்கத்தின் ’சாசன இயக்கம் ‘தான் முதன் முதலாக அனைவருக்கும் கல்வி வேண்டும் என்கிற முழக்கத்தை முன்வைத்தது. அது உலகெங்கும் பரவியது. தொழிற்புரட்சி ஏற்பட்ட பின்னான காலத்தில் எழுந்த முதலாளி வர்க்கத்துக்கு எந்திரங்களைக் கையாளவும் கணக்குப் பார்க்கவும் தேவையான அடிப்படைக்கல்வி பெற்ற ஒரு உழைக்கும் கூட்டம் தேவைப்பட்டது. ஆளும் வர்க்கத்தின் இத்தேவையைக் காலந்தோறும் பூர்த்தி செய்ய ஆளும் வர்க்கத்தின் அரசுகள் பாடத்திட்டங்களையும் கற்பிக்கும் முறைமைகளையும் மாற்றிக்கொண்டே வந்ததுதான் கல்வியின் வரலாறும் கல்வியின் அரசியலும் ஆகும்.

“ நான் இந்தியாவின் எல்லாத்திசைகளிலும் பயணம் செய்து பார்த்துவிட்டேன்.எந்த ஒரு மூலையிலும் ஒரு பிச்சைக்காரனையோ ஒரு திருடனையோ என்னால் பார்க்க முடியவில்லை.அப்படி ஒரு பொருளாதாரச்செழிப்பும் பண்பாட்டுச் செறிவும் வாழ்க்கை நியதிகளும் ஆன்மீக மதிப்பீடுகளும் ஒழுக்க நெறிகளும் மிக்கதான இத்தேசத்தை நம்மால் ஒருபோதும் அடிமைகொள்ள முடியாது. இம்மண்ணின் ஆன்மீக மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் முதுகெலும்பை முறித்துப்போடாமல் இந்நாட்டை அடிமைப் படுத்த் முடியாது.ஆகவே நான் இந்நாட்டில் நிலவும் பழைய கல்விமுறை மற்றும் பண்பாட்டு அசைவுகளை நீக்கிவிட்டு அந்த இடத்தில் புதிய கல்வி முறையையும் அதனூடாகப் புதிய பண்பாட்டு விழுமியங்களையும் இம்மக்கள் மனங்களில் ஸ்தாபிக்க வேண்டும்.தங்கள் கல்வி தங்கள் மொழி இவற்றைவிட ஆங்கிலக்கல்வி,ஆங்கிலம் உயர்வானது என்று இம்மக்கள் ஒப்புக்கொள்ளும் படி இவர்கள் கற்பிக்கப்படவேண்டும்.அப்போதுதான் இவர்கள் தங்கள் சுய கௌரவத்தையும் சொந்தப் பண்பாட்டையும் இழந்து முழுமையான அடிமைகளாக ஆவார்கள் ”

மேலே கொடுக்கப்பட்டுள்ளவை நமது கல்விமுறையை வடிவமைத்து நம் தலையில் திணித்த மெக்காலேயின் 1835 பாராளுமன்ற உரையாகும்.மிக வெற்றிகரமாக மேற்சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இந்தியாவில் அமலாக்கப்பட்டது.நாம் அடிமைகளானோம்.1947 ஆம் ஆண்டு அரசியல் சுதந்திரம் நமக்குக் கிடைத்தபோதும் மெக்காலேயின் கல்வி வலைக்குள் 1860களில் விழுந்த நம் தேசம் இன்னும் பண்பாட்டு ரீதியாக அவ் வலையைக் கிழித்து வெளியேறவில்லை. அதன் அடையாளமாகத்தான் இன்றும் நிலவும் நம் கல்விமுறையும் பாடத்திட்டமும் பாடப்புத்தகங்களும் திகழ்கின்றன.

இதில் மாற்றம் வேண்டும் என மாணவர் இயக்கங்களும் சனநாயக எண்ணம் கொண்ட கல்வியாளர்களும் காலம் காலமாக வலியுறுத்தியும் போராடியும் வந்ததன் விளைவாகத் தமிழக அரசு சமச்சீர் கல்வியைக் கொண்டுவரச் சம்மதித்தது.ஆனாலும் இப்போது பாடப்புத்தகங்களை மட்டும் சமசீராக்குகிறோம் என்று சொல்லி இந்த ஆண்டு முதல் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் மட்டும் பாடப்புத்தகங்களைத் தயாரித்து வழங்கியுள்ளது.இந்த ஆண்டு இப்புத்தகத்தயாரிப்பிலும் மேற்பார்வையிடும் பணியிலும் முற்போக்கான சிந்தனை கொண்ட பல்வேறு ஆளுமைகள் ஈடுபடுத்தப்பட்டது தமிழகப் பாடப்புத்தக வரலாற்றில் முதல் முயற்சியாகும்.அதன் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு அழகான வடிவமைப்பில் குழந்தை மனநிலையைக் கணக்கில் கொண்டு புத்தகங்கள் வந்துள்ளன. ஆகவே இம்முயற்சியை நாம் முதலில் வரவேற்க வேண்டும்.இந்த முற்போக்கான ஆளுமைகள் சொன்னதெல்லாம் நடந்ததா என்று தெரியாது.எவ்வளவு தூரம் இவர்கள் சொன்னதற்கு மதிப்பு இருந்தது என்பதும் முழுமையாக நமக்குத் தெரியாவிட்டாலும் புத்தகங்கள் மாணவர்களுக்குப் போய்ச் சேர்ந்து விட்ட சூழலில் அவை பற்றிய கருத்துக்களை நாம் பதிவு செய்வது அவசியம்.

தமிழ்ப்பாடம் தவிர மற்ற எல்லாப்பாடங்களும் இதுவரை முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுப் பின்னர் அப்படியே அவை தமிழாக்கம் செய்யப்பபட்டு வந்ததாகவும் இந்த ஆண்டுதான் முதன் முறையாக அறிவியல் உள்ளிட்ட அனைத்துப்பாடங்களும் நேரடியாகத் தமிழில் எழுதப்படுகின்றன என்றும் அறிய நேர்ந்தபோது நாம் பெரும் அதிர்ச்சிக்குள்ளானோம். மெக்காலே நம் மூளைகளில் எவ்வளவு அழுத்தமாக உட்கார்ந்திருக்கிறான் ! இந்த மாற்றம் வருவதற்கே –இந்தத் தன்னம்பிக்கையும் தமிழால் முடியும் என்கிற நம்பிக்கையும் வருவதற்கு- தமிழ் தமிழ் என்று முழங்கி வரும் திராவிடக் கட்சிகள் 43 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்டு முடிக்க வேண்டி இருந்திருக்கிறது.அவர்தம் தமிழ் உணர்வு பாடத்திட்டத் தயாரிப்பில் இப்படியாகத்தான் இதுகாறும் பொங்கி வழிந்துள்ளது என்பது எவ்வளவு கசப்பான உண்மை.

ஆறாம் வகுப்புக்கான தமிழ்ப்பாடநூலில் கடவுள் வாழ்த்து என்பதற்கு பதிலாக வாழ்த்து என்று போட்டு இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவிலிருந்து ஒரு பாடல் முதல் பாடமாக வைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க மாற்றம்.பேராசிரியர் சமாடசாமி அவர்களின் மேற்பார்வையில் இப்பாடப்புத்தகம் வந்துள்ளதன் அடையாளங்கள் புத்தகம் நெடுகிலும் கிடக்கின்றன.

இலக்கணத்தை அறிமுகம் செய்யும் முதல் பாடம் இவ்வாறு செல்கிறது :

“ இலக்கணம் எதற்கு?

நாம் பேசும் மொழியை,எழுதும் மொழியைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு இலக்கணம்

தேவை.

இப்படி எழுது,அப்படி எழுது என்று கட்டளையிடுவதற்காக இல்லை.

அவன் வந்தாள் – என்று எழுதினால் யாருக்காவது புரியுமா?வந்தவர் ஆணா , பெண்ணா என்பது

எப்படித்தெரியும்?

நாம் பேசுவதும் எழுதுவதும் மற்றவர்க்கும் புரிய வேண்டும்: நமக்கும் புரிய

வேண்டும்.அதற்குத்தான் இலக்கணம் தேவைப்படுகிறது.”

இப்படி ஒரு மொழியில் குழந்தைகளின் அனுபவத்தைக் கணக்கில் கொண்ட ஒரு பாடத்தைக்காண எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.ஆனாலும் துணைப்ப்பாடங்களில் நம்மூர் நாட்டுப்புறக்கதைகளை வைக்காமல் பழையபடி வெளிநாட்டுக் கதைகள்,அறுதப்பழைய அதே தெனாலிராமன் கதை என்று வைத்திருப்பது ‘ ம்கூம். இன்னும் திருந்தலே..’ என்கிற சலிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.

​” தமிழ்ப் பாடநூ​லில் நாட்​டுக்கு உழைத்த தலை​வர்​க​ளின் வாழ்க்கை வர​லாறு பாட​மாக வைக்​கப்​ப​டு​வ​துண்டு.​ ஒவ்​வொரு முறை​யும் பாடத்​திட்​டம் மாற்​றப்​ப​டும்​போது,​​ காந்​தி​ய​டி​கள்,​​ காம​ராஜ்,​​ தந்தை பெரி​யார்,​​ அறி​ஞர் அண்ணா,​​ எம்.ஜி.ஆர்.​ போன்​றோ​ருள் ஒரு​வ​ரது வாழ்க்கை வர​லாற்​றுச் செய்தி இப்​ப​கு​தி​யில் இடம்​பெற்​றி​ருக்​கும்.​ ஒரு​வ​ரைப் பற்​றிய பாடமே தொடர்ந்து பாடநூ​லில் இடம்​பெ​று​வ​தில்லை.​ ஆனால்,​​ பசும்​பொன் முத்​து​ராம​லிங்​கத் தேவர் வர​லாறு,​​ ஆறாம் வகுப்​பில் மட்​டுமே தொடர்ச்​சி​யாக மூன்​றா​வது முறை​யா​கப் பாட​மாக வைக்​கப்​பட்​டுள்​ளது.​ 1995,​ 2003-ம் ஆண்டு பாட​நூல்​க​ளைத் தொடர்ந்து இப்​போ​தும் ​(2010) இவ​ரைப் பற்​றிய பாடம் இடம்​பெற்​றுள்​ளது.​ இப்​போது வெளி​வந்​துள்ள பாட​நூல் ஆறு அல்​லது ஏழு ஆண்​டு​க​ளுக்கு நடை​மு​றை​யில் இருப்​பது உறுதி.​ அவ்​வா​றா​யின் இரு​ப​தாண்டு காலத்​தில்,​​ இடை​வெ​ளி​யின்​றித் தொடர்ந்து இரண்டு தலை​மு​றை​க​ளுக்கு ஒரே பாடப்​பொ​ரு​ளைக் கற்​றுக்​கொ​டுப்​பது ஏற்​பு​டை​ய​து​தானா?​ பாட​நூல் ஆசி​ரி​யர்​கள் இதை ஏன் கவ​னத்​தில் கொள்​ளாது புதிய சிக்​கலை உரு​வாக்​கி​யுள்​ள​னர் என்​ப​தும் தெரி​ய​வில்லை.​”

என்று தினமணியில் ஒரு கட்டுரையாளர் எழுப்பிய அதே கேள்வி நமக்கும் வருகிறது.அதுபோலவே நாட்டுப்புறத்தை நாட்டுப்புரம் என்று பாடத்தில் அச்சிட்டு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

வகுப்பறைத்திறன்கள் ,வாழ்க்கைத்திறன்கள், எது பண்பாடு என்கிற உரைநடைப்பாடம், நாட்டுப்புறப்பாடல்களை உரைநடைப்பாடத்தில் கொண்டு வந்தது எனப் பாராட்டத்தக்க அம்சங்கள் நிறையவே உள்ளன.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர்களில் ஒருவரான டாக்டர்.ஆர்.ராமானுஜம் வல்லுநராக இருந்து தயாரித்ததாலோ என்னவோ முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புக் கணிதப் பாடப்புத்தகங்கள் அருமையாக வந்துள்ளன.முதல் வகுப்புத் தமிழில் எடுத்த எடுப்பில் அனா ஆவன்னா என்று பிள்ளைகள் கையை ஒடிக்காமல் விளையாட்டாகவே எழுத்துக்களையும் கற்றுக்கொளும் விதமாகப் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது ஆறுதலாக இருக்கிறது.

எல்லாப்பாடப்புத்தகங்களிலுமே பல பாடங்கள் குழந்தைகளுக்கான மொழியில் எழுதப்பட்டுள்ளது மிக மிக முக்கியமான முயற்சியாகும்.நம்து செம்மலரின் வடிவமைப்பு ஓவியர் மாரீஸ் பல பாடப் புத்தகங்களை அழகாக வடிவமைத்திருக்கிறார்.இளம் ஓவியர்கள் பலரையும் மணியம் செல்வம் போன்ற மூத்த ஓவியர்களையும் ஈடுபடுத்தியிருக்கிரார்கள்.வரவேற்கத்தக்க ஒன்று.

தனியார் பள்ளிநிர்வாகங்களுக்கு இப்பாடப்புத்தகங்கல் பிடிக்காமல் இருக்கலாம்.ஆனால் பெருவாரியாக அரசுப்பளியில் பயிலும் லட்சோப லட்சமான குழந்தைகளுக்கு நியாயம் செய்ய தமிழக வரலாற்றில் முதன் முறையாக ஒரு முயற்சி நடந்துள்ளது . வரவேற்போம்.

அதே சமயம் முற்போக்கான சிந்தனையாளர்களை அவர்கள் முதன்மைக் கல்வி அதிகாரிகளாகவோ பி.எட். எம்.எட் என்கிற கல்வித்தகுதி இல்லாதவர்கள் என்பதற்காகவோ பயன்படுத்தாமல் விடுவது இன்னும் தொடர்கிறது.தமிழின் ஆகச்சிறந்த ஆளுமைகள்,எழுத்தாளர்கள்,சிந்தனையாளர்களையெல்லாம் அரசியல் மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு இணைத்துக்கொண்டு பாடப்புத்தகங்களைத் தயாரிப்பதே நாம் எதிர்பார்ப்பது.

மெக்காலே அழித்துச் சென்ற நமக்கேயான பண்பாட்டு விழுமியங்களை பாடப்புத்தகங்களின் வழி மீட்டெடுக்க வேண்டும்.அப்பணி இன்னும் தூரத்துக்கனவாகவே இருக்கிறது.

எனினும் இந்த சமச்சீர் பாடப்புத்தகங்கள் அத்திசையை நோக்கித் திரும்ப முயற்சிக்கின்றன.

Thursday, March 25, 2010

கடையநல்லூர் முஸ்லீம்கள் வரலாறு-மிக முக்கியமான ஓர் உள்ளூர் வரலாறு

 

உலகளாவிய அளவில் பெரும் உளவியல் நெருக்கடிக்கும் முற்றுகைக்கும்  உள்ளாக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய சமூகம் பற்றிய பிற சமூகத்தவரின் புரிதல்கள் கவலையளிக்கும் அளவுக்குக் குறைவாக உள்ளது.'மூடுண்ட சமூகம் ‘என்கிற இந்துத்வா வாதிகளின் பொய்ப்பிரச்சாரமே வெற்றிபெற்றுள்ளது இன்று.

இஸ்லாமிய சமூகம் பற்றி அறிந்து கொள்ளும் அக்கறை பிற சமூகத்தவரிடம் இல்லாததும் அச்சமூகத்திலிருந்து தம்மைப்பற்றிய வரலாற்றுப்பூர்வமான படைப்புகள் வெளிவராததும்கூட இதற்குக் காரணமாக அமைகிறது.'மேலப்பாளையம் முஸ்லீம்கள்' என்கிற சாந்தி எழுதிய புத்தகமும் குமரிமாவட்ட முஸ்லீம்கள் பற்றிய பெட்டகம் என்கிற தொகுதியும் இவ்வகையில் குறிப்பிடத்தக்க முயற்சிகள்.

இது ஒரு புறம் இருக்க, இதுகாறும் வரலாறென்று அறியப்பட்டதெல்லாமே ஆள்பவர்களால் தங்கள் ஆதிக்கத்தை நியாயப்படுத்த எழுதப்பட்ட வரலாறுகளே. ஆகவே அது தேசிய வரலாறானாலும் பிராந்திய வரலாறானாலும் வென்றவர்களின் வரலாறாகவே அமைந்துபோகிறது.பிரதான சாலைகள் மட்டுமே மக்க்ளின் வழித்தடங்களாக அமைந்துபோவதில்லையே? சிறு சிறு தெருக்களும் சந்துகளும் இல்லாமல் ஊரின் பெருவீதிகளும் ராஜபாட்டைகளும் இருந்தென்ன பயன்?அதுபோல நாட்டின் வரலாறு மட்டுமே ஒரு மக்கள் குழுவின் முழு வரலாறு ஆகிவிடாது.ஆகவேதான் சமீப காலமாக உள்ளூர் வரலாறுகள் குறித்த தன்னுணர்வும் அக்கறையும் அறிவுத்துரையில் அதிகரித்து வருகிறது.

மேற்கூறிய இரு செய்திகளின் பின்னணியில் வைத்துப் பார்க்கவேண்டிய ஒரு முக்கியமான நூலாக சமீபத்தில் வந்திருப்பது “கடையநல்லூர் முஸ்லீம்கள் வரலாறு” என்னும் நூலாகும்.கடையநல்லூரைச்சேர்ந்த சிராஜும் முனீர் நற்பணி மன்றமும் மத்ரஸா சிராஜும் முனீரும் வெளியிட்டுள்ள 924 பக்கம் கொண்ட இப்பெருநூலை திரு.எஸ்.ஏ.முகம்மது இபுறாகிம் அவர்களை முதன்மை ஆசிரியராகக் கொண்ட ஒரு ஆசிரியர் குழு எழுதியுள்ளது.

தங்கள் ஊரின் பெருமையை தங்கள் இனத்தாரின் பெருமையைத் தமக்கே சொல்லித் தம் உளவியல் சமநிலையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய வரலாற்று நெருக்கடியின் பின்னணியில் இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது.வசதி வாய்ப்புகள் மிக்க பெருமக்கள் ஆதரவு இந்நூலுக்கு இருந்திருக்க வேண்டும்.

கடையநல்லூரின் இஸ்லாமியப் பகுதி மக்களின் வரலாற்றைச் சொல்லவே இந்நூல் எழுதப்பட்டிருந்தாலும் வியக்கத்தக்க அளவுக்கு மதச்சார்பற்ற மனநிலையோடும் உள்ளூரில் வாழும் மற்றும் வாழ்ந்த பிற இனத்தவரின் பெருமைகளையும் மனந்திறந்து பாராட்டும் பகுதிகளோடு இந்நூல் வந்திருப்பது மிகுந்த மனநிறைவு அளிக்கிறது. முன் எப்போதையும்விட இப்போதுதான் சிறுபான்மை சமூகத்தினர் அழுத்தமான மதச்சார்பற்றவர்களாகத் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அடிக்கடி வரலாற்றாய்வாளர் கே.என்.பணிக்கர் கூறுவது நினைவுக்கு வருகிறது.

கடையநல்லூர் என்கிற பெயர்க்காரணத்தில் நூல் துவங்குகிறது.நகரின் ஜமாஅத்துகளைப் பற்றியும் சங்கங்களைப்பற்றியும் முக்கிய பிரமுகர்கள் பற்றியும் விரிவாகப்பதிவு செய்துள்ள இந்நூலின் மிக முக்கியமான பகுதியாக எனக்குப்பட்டது  குடும்பங்களின் வரலாறு என்னும் பகுதி.சொன்னி,மூப்பர் மாப்பிள்ளை,பெருந்தரகன்,சேயன்,புலவன் என்கிற ஐந்து குடும்பங்களே கடையநல்லூரின் ஆதி இஸ்லாமியக்குடும்பங்களாக இருந்துள்ளன.அவை எவ்விதம் இன்று நூறுக்கும் மேற்பட்ட பெயர்களுடனான குடும்பங்களாகப் பல்கிப் பெருகியுள்ளன என்பதை சுவாரசியமான குறிப்புகளோடு இப்பகுதி விளக்குகிறது.எந்த ஓர் உள்ளூர் வரலாற்றிலும் இத்தகைய குலவிளக்கம் அல்லது வம்சாவழி வரலாறு என்பது மிக மிக அவசியமானதாகும்.

இந்நூலின் இன்னொரு மிக முக்கியமான அம்சம் கடையநல்லூர் மக்களின் கூட்டு மனதில் அழியா இடம்பெற்ற நிகழ்வுகளைப்பற்றிய சரித்திரக்குறிப்புகள் மக்களின் வாய்வழி வரலாறாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகும்.பள்ளிவாசல் யானை களவு போன கதை, மறக்குடிக்கலவரம்,1952-53களின் கோதுமைக்காடிப்பஞ்சம் போன்ற சில நிகழ்வுகள் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சில குறிப்புகளுக்கான ஆவணங்களும் பிற்சேர்க்கையாகத் தரப்பட்டிருப்பது ஆசிரியர்குழுவின் ஆய்வுமனப்பான்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.40களில் அச்சிடப்பட்ட நிக்காஹ்(திருமண) அழைப்பிதழ்களில் மணப்பெண்ணின் பெயரே அச்சிடப்படவில்லை என்பதும் திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படம் பார்க்க பெண்களுக்கு அன்றும் சரி இன்றும் சரி அனுமதி கிடையாது என்கிற குறிப்பும்  வாசக மனதில் அதிர்வினை ஏற்படுத்துகிறது.இத்தகு செய்திகளையெல்லாம் வெளிப்படையாக எழுதியிருப்பது பாராட்டத்தக்கது.

1952 பஞ்சத்தை ஒட்டி கடையநல்லூரில் செயல்பட்டு வந்த கமாலியா முஸ்லீம் சங்கம் 4-2-53இல் நிரைவேற்றிய தீர்மானம் நம் மனங்களை சலனப்படுத்தி கண்களில் ஈரம் கசியச்செய்கிறது.அது :-

“ கடையநல்லூர் கைத்தறி நெசவாளர்களுக்கு கஞ்சித்தொட்டி வைத்துக் கஞ்சி வாங்குவோருக்கு  கார்டு வழங்கி கார்டு மூலம் கஞ்சி ஊற்றி வந்த முறையை திடீரென்று ஸ்தல அதிகாரிகள் மாற்றி கஞ்சி வாங்கும் இடத்தில்தான் வைத்து சாப்பிட வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தி பிச்சைக்காரர்கள் போல வீதியில் உட்காரவைத்துக் கஞ்சி ஊற்றி வேடிக்கை பார்ப்பதை உடனே தடுத்து முதலில் நடந்து வந்த முறை போல  நடந்துவர ஸ்தல அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டுமென்று ஜில்லா கலெக்டர் அவர்களைக் கமிட்டி கேட்டுக்கொள்கிறது.”

கஞ்சித்தொட்டிகளோடு பின்னிப் பிணைந்த தமிழக நெசவாளர்களின் வாழ்வின் ஒரு கண்ணீர்த்துளி போல இந்தத் தீர்மானம் அமைந்திருப்பதை நாம் பார்க்கிறோம்.

ஒரு மதச்சார்பற்ற மனநிலையோடும் நல்ல தமிழ் உணர்வோடும் செயல்பட்டுள்ள இவ்வாசிரியர்குழு மறக்காமல் கடையநல்லூர் மக்களிடையே புழங்கும் நாட்டார் வழக்காறுகளில் ஒரு பகுதியை-பாடல்களை,பழமொழி-சொலவடைகளையும் வழக்குச் சொற்களையும்கூடத் தொகுத்து வழங்கியுள்ளது மிகுந்த ஆச்சர்யத்தையும் மனநிறைவையும் தருகிறது.

கடையநல்லூர் இஸ்லாமிய சமூகத்தின் வரலாற்றை தமிழக வரலாற்றோடும் இந்திய வரலாற்றோடும் இணைக்கும் முயற்சியும் இந்நூலின் பல பக்கங்களில் காணக்கிடைக்கிறது.சமீபகாலத்தில் வந்த மிக முக்கியமான ஓர் உள்ளூர் வரலாற்று நூல் இது.

பக்கம் 924
விலை ரூ.300
கிடைக்குமிடம்:சிராஜ் புக் டிப்போ,ஜூமா பள்ளிவாசல் அருகில்,பரசுராமபுரம் தெரு,கடையநல்லூர்-627751,செல்-9965458887

-ச.தமிழ்ச்செல்வன்

Saturday, October 17, 2009

உமர் பாரூக் பேசும் உடலின் மொழி

சமீபத்தில் நான் வாசித்த புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்த புத்தகம் அ.உமர்பாரூக் எழுதிய ”உடலின் மொழி”.கவர்ந்த புத்தகம் என்று சொல்வதை விட முழுமையாக என்னை ஆக்கிரமித்த அல்லது அன்றாடம் அதிலிருந்து ஒரு வரியையேனும் நினைத்தே ஆகும்படிக்கு பாதித்த புத்தகம் என்று சொல்வதுதான் சரி.

இலக்கியத்தில் ஆண் மொழி,பெண்மொழி,தலித் உரையாடல் எல்லாம் நாம் அறிவோம். உடல் மொழி பற்றியும் உடல் அரசியல் பற்றியும் கூட இப்போது பரவலாகப் பேசப்படுகிறது.இவர் சொல்ல வருவது இதுவெல்லாம் அல்ல.ஒவ்வொரு மனுஷி யுடைய-மனிதனுடைய -உடலும் அவளோடு-அவனோடு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறது.தெவைப்படும் நேரத்தில் அழுத்தமாகவும் ஆவேசமாகவும் கூடப் பேசுகிறது. ஆனால் நம் தேவைகளுக்காக கணிணியின் மொழியை பறவைகளின் மொழியை மிருகங்களின் மொழியைக்கூடப்போராடிக் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் நாம் நம் ஆரோக்கியம் குறித்து நம்மிடம் பேசும் உடலின் மொழியை அறிந்து கொள்ளாமல் இருக்கிறோம். தூசியை உள்ளே அனுப்ப மறுக்கும் உடலின் எதிர்ப்புக் குரலே தும்மல்.திரிந்த பாலை வாந்தியாகவும் பேதியாவும் வெளியேற்றுவது குழந்தையின் உடலின் மொழி என்று துவங்கும் இப்புத்தகம், விஞ்ஞானம் நமக்கு இதுகாறும் கற்றுத்தந்துள்ள பல பாடங்களைத் தலைகீழாகப் போட்டு உடைக்கிறது.

மிகவும் அடிப்படையாக நாம் சாப்பிடும் முறை பற்றிய மிகப்பெரிய புரிதலை இந்நூல் நமக்கு வழங்குகிறது.எல்லா உடல் உபாதைகளுக்கும் நோய்களுக்கும் மூலகாரணமாக இருப்பது நமது முறையற்ற உணவுப்பழக்கமே-உணவு முறையே என்று ஆணித்தரமாக நம் மனதில் நிறுவுகிறது.அதை ஆசிரியர் சொல்லியுள்ள விதம் –அவர் அதைப் பேசப் பயன்படுத்தும் மொழி மிகச்சரியாக சொல்ல வரும் உள்ளடக்கத்துக்குப் பொருந்துகிறது.

நொறுங்கத்தின்னா நூறு வயசு என்கிறது நம் பழமொழி.அதற்கு உமர் பாரூக் அளிக்கும் விளக்கம் அறிவியல்பூர்வமானதாக -நம்மை ஒப்புக்கொள்ள வைப்பதாக -இருக்கிறது.வீட்டுக்கு விருந்தினர் வந்தால் விடுவிடுவென நாம் அப்படியே காப்பி சாப்பிட அழைத்துச் சென்றால் உள்ளே காப்பி தயாராக இருக்குமா? முன்னறையில் உட்கார வைத்து நாலு வார்த்தை பேசி யாரு வந்திருக்காகன்னு பாரு என்று உள்ளே சத்தம் கொடுத்து துணைவியாரை வரவழைத்து –அவர் வந்து வாங்கன்னு கேட்ட படியே எத்தனை பேர் என்று ஒரு நோட்டம் பார்த்து –இதெல்லாம் முடிந்த பிறகுதானே காப்பி பலகாரம் எல்லாம். அதுபோல வாயில் போட்டதும் மென்றும் மெல்லாமலும் அரைகுறையாக அரைத்தும் அரைக்காமலும் நாம் வயிற்றுக்குள் தள்ளினால் தயாராகாத சமையலறை எதிர்பாரா விருந்தாளியைச் சமாளிப்பதுபோல நன்றாக உபசரிக்க முடியாது போகும்.விருந்தினர் மனவருத்தமடைய நேரிடும்

.பாரூக் சொல்கிறார் “ மெல்லுதல் என்பது சாதாரண விசயமல்ல.வாயில் நீங்கள் மென்ரு சுவைக்கும் அந்த உணவின் தன்மை இரைப்பைக்கு அறிவிக்கப்படுகிறது.மிக எளிதான மென்மையான உணவை நீங்கள் மென்று கொண்டிருக்கும்போதே இரைப்பையில் அந்த எளிதான உணவைச் செரிக்கத்தேவையான அமிலம் தயாராகிறது.நீங்கள் கடினமான உணவை மென்று கொண்டிருக்கும்போது கடின உணவைச் செரிக்கும் தன்மையுடன் இரைப்பை தயாராகிறது.முன்னே பின்னே ஒரு தகவலும் இல்லாமல் திடீரென்று கதவைத்தள்ளிக்கொண்டு நுழையும் விருந்தாளியாக இரைப்பையில் விழும் உணவைச் செரிக்கமாட்டாத இரைப்பை அதை என்ன செய்யும்?

தவிர, நொறுங்கத்தின்பது என்பது செரிமானத்தை எளிதாக்கும்.சிறிய சிறிய கவளங்களாக உணவை வாயிலிடும்போதே நன்றாக மென்று அரைத்துக்கூழாக்கி விழுங்க வேண்டும்.ஏனென்றால் இரைப்பையில் உணவைக் கூழாக்கவோ,நொறுக்கவோ எந்த ஏற்பாடும் இல்லை.இரைப்பைக்குப் பற்களா இருக்கின்றன என்று உமர் பாரூக் கேட்கும் போது நாம இத்தனை காலம் ஒழுங்கா திங்கக்கூடத் தெரியாமத்தான் வளர்ந்து நிக்கிறமா என்கிற வெட்க உணர்வு எனக்கு ஏற்பட்டது.எப்படி தின்பது?எப்படி தண்ணீர் குடிப்பது ? நோய் என்றால் என்ன? உடம்பு தவறு செய்யுமா? என்று பலபல கேள்விகளை எழுப்பி நம்மை முற்றிலும் புதிய ஓர் உலகத்துக்குள் அழைத்துச்செல்கிறார்.

இதெல்லாம் ஒரு மாதிரிக்காக எடுத்துச்சொன்னேன்.புத்தகத்தை முழுமையாக வாசித்தாலே அதன் அருமையை நாம் உணர முடியும்.நான் பொதுவாக மனதுக்குப் பிடித்து விட்டால் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு ஆகா ஓகோ என்று புகழ்ந்து எழுதி விடுகிற ஆள்தான்.ஆனாலும் இப்புத்தகம் பற்றிக் கூடுதலாக நான் ஒரு வார்த்தையும் எழுதிவிடவில்லை என்பதை வாசிப்பவர்கள் அறியலாம்.இந்த சிறு அறிமுகத்தை வாசிப்பவர்கள் இதை நூறு பிரதிகள் எடுத்து நூறு பேருக்குக் கொடுத்தால் உங்கள் குடும்பம் செழித்தோங்கும் .தஞ்சாவூரில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் இப்புத்தகத்தை 600 பிரதிகள் வாங்கி தம் தோழர்களுக்கெல்லாம் கொடுத்துள்ளார்கள்.ஆறு மடங்கு நன்மை அவர்களுக்கு உண்டாகட்டும்.முதல் பதிப்பு வெளியாகி எட்டு மாதங்களுக்குள் ஐந்தாவது பதிப்புக் காணும் இந்நூல் தமிழ்ப்புத்தக உலகிலும் ஓர் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்நூலில் உணர்வுகளும் உணவும் உடலும் பற்றி எழுதவில்லை.அது இந்நூலின் இரண்டாம் பாகத்தில் வரும் என ஆசிரியர் கூறினார்.அதையும் சேர்த்து வாசிப்பது இன்னும் கூடுதல் பலன் தரும் என்பது நிச்சயம்.

5

(ஐந்தாம் பதிப்புக்கான அணிந்துரையாக இவ்வரிகள் எழுதப்பட்டன)

உடலின் மொழி- ஆசிரியர் Healer .அ.உமர்பாரூக்

வெளியீடு –பாரதி புத்தகாலயம்,421,அண்ணாசாலை,தேனாம்பேட்டை,சென்னை-600018

விலை-ரூ.40.பக்கம்.80அ

_______________________________________________________________________________________________________________________________________

பின் குறிப்பு : உமர் பாரூக் ஒரு கவிஞரும் சிறுகதை எழுத்தாளரும் கூட.இடது சிந்தனைகளையும் மருத்துவம்,உணவு இவற்றையும் சரியாக இணைத்துப் பேசும் அவரும் அவருடைய இணைபிரியா நண்பர் அய்.தமிழ் மணியும் இணைந்து தேனி மாவட்டம் கம்பத்தில் ஏதேதோ செய்து வருகிறார்கள்.சமீப காலங்களில் எனக்கு மிகுந்த நம்பிக்கை ஊட்டிய இளைஞர்களாக இவர்கள் இருக்கிறர்கள்.இரண்டு குறும்படங்களையும் இயக்கியிருக்கிறார்கள்.எல்லாமே ஆரம்ப முயற்சிகளுக்கான பலம் பலவீனங்களோடு வருகின்றன என்றாலும் அவர்களின் உத்சாகமும் செயல்பாட்டு வேகமும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் (அவநம்பிக்கை அலையடிக்கும் இந்நாட்களிலும்) எனக்கு நம்பிக்கை தரும் கீற்றுகளாக இருக்கின்றன.பல்வேறு மாவட்டங்களில் நான் சந்திக்கும் இத்தகு இளைஞர்களே மனம் விட்டுப்போகாமல் என்னை வாழவைக்கும் சக்திகளாக இருக்கின்றனர்.

Thursday, June 11, 2009

ஏப்ரல்மாதச் சூரியனைப் பிழிந்த சாறு..

solitude-1 நேற்றுத் தற்செயலாக பழைய ‘வேர்கள்’ இதழ்களைப் (பைண்டிங்) பார்த்துக்கொண்டிருந்தபோது இரண்டு விளம்பரங்கள் கவனத்தை ஈர்த்தது.அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளத்தோன்றியது.அந்த விளம்பரம்:

I

செப்டம்பர் 97 இல் வெளிவருகிறது

கமலாதாஸ் கதைகள்

கமலாதாஸின் படைப்புக்கள் சில சமயம் ஒரு பழைய ஆல்பத்தைப்போல

இழந்துபோன துக்கத்தில் நம்மை ஆழ்த்துகிறது.வேறு சமயம் ய்தேச்சையாய் நம்மைக் கடந்துபோகும் ஒரு காட்சியமைப்பாய் சுற்றுப்புறம் பற்றி நமது கருத்தாக்கங்களைக் காயப்படுத்துகிறது.இளமைக்கால நினைவுகளின் அழுத்தி வைக்கப்பட்ட தேம்பலில் கரைந்து போகும் தருணத்திலும் ஓர் அறுவைச்சிகிச்சை நிபுணணின் உற்சாகத்தோடு காதல், தாம்பத்தியம் பற்றிய அங்கீகரிக்கப்பட்ட நம்பிக்கைகளைக் கீறி அறுக்கும் வேளையிலும் முற்றிலும் தனித்துவத்தை வெளிக்கொணர்கிறது.

1956ல் இருந்து கமலாதாஸ் எழுதிய படைப்புகளின் தேர்ந்தெடுத்த தொகுப்பு

ஒரு குறு நாவலும் பதின்மூன்று சிறுகதைகளும்

மொழிபெயர்ப்பு : நிர்மால்யா

பக்கங்கள் 168 விலை ரூ.45

இது ஒரு வேர்கள் வெளியீடு

II

கமலாதாஸ் கதைகள்:தமிழில் –நிர்மால்யா

வௌவால்கள் சுற்றித்திரியும் பழைய நாலப்பாட்டு வீட்டின் அந்தி வேளைகள்,தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட ஒரு வேலைக்காரிப் பெண்ணின் விடை தெரியாத நிசப்தம்,படுக்கையில் காட்டெருமையின் வீரியத்தை வெளிப்படுத்தும் காதலன் உடம்பின் அடங்காத மூச்சிறைப்பு,கிளாசில் பிழிந்தெடுத்த ஆரஞ்சுச் சாற்றைப் போன்ற ஏப்ரல் மாதச்சூரியன்,நிர்வாண மனிதர்கள் நடனமாடும் பம்பாய் தெருவில் கோடைக்கால இறுதியில் வந்து சேரும் சிறிய மழை,மரணத்தைக் கண் முன் பார்த்த நாட்களில் தலையில் அறைந்தவாறு வரும் மருத்துவமனைப் படுக்கையின் மருந்து நெடி , மஞ்சள் துணி போர்த்தப்பட்ட நெருக்கமானவரின் பூதவுடல் போன்ற சுடர்விடும் நினைவுச்சித்திரங்களிலிருந்து உந்துதலும், உயிர்ப்பும் பெற்ற பதினான்கு சிறுகதைகள்

மேற்கண்ட இரு விளம்பரங்களை கமலாதாஸ் காலமாகி நிற்கும் இந்த நாட்களில் தற்செயலாகக் காணக்கிடைத்த இந்த நிமிடம் அபூர்வமான ஒரு மனநிலையைத் தந்துகொண்டிருக்கிறது.

வேர்கள் என்கிற பத்திரிகை மற்றும் அது முன்வைத்த இலக்கிய இயக்கம் இவ்விரண்டின் மீதும் இந்த நிமிடத்தில் மீண்டும் அளப்பரிய மரியாதை உண்டாகிறது.இராமலிஙம் என்கிர அந்த மகத்த்தான மனிதரும் அவரோடு துணை நின்ற நெய்வேலி நண்பர்களும் 90களில் நடத்திய வேர்கள் இயக்கம் இடையில் நின்று போனாலும் அது இதோ இந்த நிமிடத்திலும் மனதில் அதிர்வலைகளை ஏற்படுத்தியபடி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.ஆகவே சிறு சிறு கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு சமயங்களில் மனம் சோர்வடைந்துபோகும் அன்பர்கள் மனம் துவள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.நமக்கு என்றைக்கும் அழிவில்லை.

மேலே கண்ட விளம்பரப்படி கமலாதாசின் கதைகளை வேர்கள் வெளிக்கொண்டு வர முடியவில்லை.வேறு யாரேனும் கொண்டு வந்தார்களா என்பதும் எனக்குத் தெரியவில்லை.வந்திருந்தால் அது இன்று மீண்டும் மறுபதிப்பு வந்தால் நல்லது.விபரம் தெரிந்த நண்பர்கள் தெரிவிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.புத்தகம் வராவிட்டாலும் கூட இந்த விலம்பரத்தின் வரிகள் கமலாதாசின் எழுத்தின் சாரத்தைப் பிழிந்து தந்துள்ளன எனலாம்.நிர்மால்யாதான் இவ்வரிகளை எழுதியிருக்க வேண்டும்.அவர் இப்போது எங்கிருக்கிறார் என்ன செய்துகொண்டிருக்கிரார் என்பதும் நான் அறியமாட்டேன்.

ஆனால் மேற்கண்ட இரண்டாவது விளம்பரத்தில் உள்ள ஒரு வரி மாற்றப்பட வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது.கிளாசில் பிழிந்தெடுத்த ஆரஞ்சுச் சாற்றைப்போன்ற ஏப்ரல் மாதச் சூரியந் என்கிற வரிதான் அது. அவருடைய ஒரு கவிதை இப்படித்துவங்கும் The April sun squeezed like an orange in my glass –அவ்வரியிலிருந்தே இவ்விளம்பர வரி எடுக்கப்பட்டதெனில் மொழிபெயர்ப்பு சரி செய்யப்படவேண்டுமல்லவா?

சரி.

கமலாதாசின் கவிதை ஒன்று ‘வேர்கள் ‘அக்-டிச-96’ இதழில் வந்தது.அதைக் கீழே தருகிறேன்:-

சில வாசகர்களோடு

இரண்டு வார்த்தை

போனிலும் கடிதத்திலும்

விஷம் கக்குபவர்களே

என்னை வெறுப்பவர்களே

உங்கள் இகழ்ச்சியை நான்

கடந்து வாழ்கிறேன்.

என் கவிதை கோழி –எச்சத்தைத் தண்ணீராய் கழித்ததைப்

போல இருக்கிறது என எழுதி அறிவித்த நண்பரே,

என் புகைப்படம் தனக்கு சுய இன்பம் செய்ய

கொஞ்சமும் உதவவில்லை எனத் தெரிவித்த

அறியப்படாத இளைஞனே

உங்கள் மனதின் அகோரத்தையும்

நான் கடந்து வாழ்கிறேன்

என் இலக்கியப்படைப்புகள் குறிக்கோள் இல்லாதவை

எனத் தெரிவிக்க மட்டும்

மதியம் உறங்கிக் கொண்டிருந்த

என் கணவரை எழுப்பி என் வீட்டு

வாசற்படிக்கு வந்த அறிவுஜீவி,

நான் உங்கள் ஏளனத்தையும் கடந்து வாழ்கிறேன்.

ஆம்,இதோ நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

சிரிக்கிறேன்,பாடுகிறேன்,உறங்குகிறேன்

தூக்க மாத்திரைகளைத் தேடி மருந்துக்கடைகளில்

ஏறி இறங்குவதில்லை நான்

நீங்கள் ஒவ்வொருவரும் மண்ணாகிவிடும்போதும்

மிஞ்சியிருப்பேன் நான்

மையால் கருமைப்படுத்திய என் இரு விழிகளுக்கும்

தொலைவில்-வெகு தொலைவில், ஒரு வற்றாத

நீர் நிலையைப்போல என் கண்ணீர்

தேங்கி நிற்கிறது

இருப்பினும் நான் அழுவதை நீங்கள்

காணமாட்டீர்கள் ஒரு போதும்.

(தமிழில்-நிர்மால்யா)

கவிதை எழுதவோ அல்லது ஏது காரணமாகவோ பொது வெளியில் வந்து உலவும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது போன்ற ஒரு கவிதை எழுத அவசியம் இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கிறேன்.எவ்வளவு மோசமான ஓர் ஆணாதிக்கச் சுழலில் நாம் வாழ விதிக்கப்பட்டிருக்கிறோம்.

வாழ்க வேர்கள்!

வாழ்க கமலா அக்கா!

Sunday, May 31, 2009

பெண்மை என்றொரு கற்பிதம்... (மூன்றாம் பகுதி)

 8


முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ,
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான்துழந்து அட்ட தீம்புளிப்பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே - ( குறுந்தொகை : பாடல் 167 )

எவ்வளவு அழுக்கான ஆடையணிந்து புகை படிந்த கண்களோடும் தலைவி சமைத்துப்போட்டா லும் கணவன் அவள் சமையல் இனிது என்று பாராட்டுவதைக்கேட்டுத் தலைவி பிறர் அறியாவண்ணம் நுண்ணிதாக மகிழ்ந்தாள் என்று இப்பாடல் ஒரு காட்சியை விளக்குகிறது. ரொம்பப்புகழ் பெற்ற சங்கப் பாடல் இது. உண்மையில் இது மிகவும் ரசிக்கத்தக்க பாடல்தான். என்ன ஒரு ரசமான குடும்பக் காட்சி. ஆனால், மனைவி சமைத்துப்போட கணவன் பாராட்ட அதைக்கண்டு பெண் நாணிச் சிவக்க என்று குறுந்தொகைக் காலத்திலேயே இந்த ஆண் - பெண் வேலைப் பேதமும் உன் கை ருசியே தனிதான் என்று ஏமாற்றி அடுக்களையை அவளது சாம்ராஜ்ஜியமாகத் தலையில் கட்டியதும் வந்துவிட்டதே என்று நினைக்கை யில் பாடல் வருத்தமளிக்கிறது. தொல்காப்பியத்திலேயே,


ஏனது சுவைப்பினும், நீ கைதொட்டது
வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கு


- என்று பெண்கள் தலையில் மொளகா அரைக்கப்பட்டு விட்டதுதான்.
ஆனால், இங்கு நாம் அதுபற்றி விளக்கிப் பேசப்போவதில்லை. அதுபற்றிப் பின்னர் பார்க்கலாம். முதல் வரியில் வரும் காந்தள் மெல்விரலை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். கெட்டித்தயிரைப் பிசைந்த தால் சிவந்து போன ஒரு பெண்ணின் கை விரல்களைப் பற்றி இந்த வரி பேசுகிறது. அவ்வளவு மென்மை யான விரல்கள் என்று! இப்படியே ஆரம்பித்து பெண்மையை விட மென்மையான தலையணைகள் என்று இன்று கம்பெனிகள் விளம்பரம் செய்கிறவரை வந்து நிற்கிறோம்.

மென்மை என்பது பெண்மையின் ஓர் அம்சம் என்கிற கருத்து காலம் காலமாக நம் மனங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது. வெள்ளைக்காரனும் வெண்டைக்காய்க்கு லேடீஸ் ஃபிங்கர் (பெண் விரல்) என்று பேர் வைத்து அங்கேயும் இதே கொடியை நாட்டி வைத்து நாங்களும் உங்களுக்குக் குறைஞ்சவங்க இல்லே என்று சொல்லிவிட்டான். மென்மையானவள் என்பதால் முரட்டு வேலைக்கு லாயக்கில் லாதவள் என்று சமூக உற்பத்தியின் பல தொழில்களிலிருந்தும் பெண் விலக்கி வைக்கப்படுகிறாள்.

சோசலிச சோவியத் யூனியனுக்குப் போய் வந்து தன் அனுபவங்களை எழுதிய ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அங்குள்ள அங்குள்ள பெண்கள் எல்லா வேலைகளும் செய்கிறார்கள். ஆகவே அவர்களுடைய கைகளெல் லாம் முரடாக இருக்கின்றன. பெண்களுக்குரிய மென் மையை அவர்கள் இழந்துவிட்டார்கள் என்று வருந்தி எழுதினர். எல்லா ஆண்களுக்குமே அப்படி ஒரு வருத்தம் இருக்கிறதுதான். கையைப் பிடித்தால் பஞ்சு மாதிரி மென்மையாக இருக்கணும் என்கிற எதிர்பார்ப்பு.
ஆனால், நாட்டின் பெருவாரியான உழைக்கிற பெண்களின் கைகள் முரடாகவும் உறுதிப்பட்டும்தான் இருக்கிறது. சங்க இலக்கியங் களும் உப்பு மூட்டைகள் சுமந்த உமணப் பெண்கள் பற்றிப் பேசுகிறது. தூத்துக் குடிக்குப் போனால் இன்றும் அதே உமணப் பெண்கள் உப்பளங்களில் பெட்டிகளை வைத்துத் தூக்கிச் சுமப்பதைக் காண முடியும். சாலைப் பணி களில், கரும்பு வெட்டும் தோட்டங்களில், உயர்ந்து எழு கின்ற கட்டிடங்களுக்கு ஊடே என்று பெண்கள் அரி வாளும் மண்வெட்டியும் பிடித்துக் கடினமான வேலை கள் எல்லாம் செய்கிறார்கள். மென்மை - மெல்லியலாள் என்கிற புருடாக்கள் எல்லாம் மத்திய தர வர்க்கம் மற்றும் அதற்கு மேல் உள்ள பெண்களின் தலையில்தான் பெரிதும் சுமத்தப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரத்தில் கண்ணகியை மண் மகள் அறியா வண்ணச் சீறடியாள் என்று இளங்கோவடிகள் குறிப்பிடு வார். கண்ணகியும் மிக வசதியான வீட்டுப்பிள்ளைதான். கண்ணகியின் பாதங்கள் மண்ணிலேயே பட்டதில்லை என்று பெருமையாகப் பேசினாலும் இன்னொரு பக்கம் அவளை வீட்டை விட்டு வெளியே விடாமல் அப்படி அடைத்து வைத்திருந்தார்கள் என்றும் பார்க்க வேண்டி யுள்ளது. உள்ளேயே பூட்டி வச்சிருந்தா காயும்கூட அவிந்து மென்மை யான கனியாகி விடுவதில்லையா? அதுபோலத் தான் பெண்ணும், மென்மையாக்கப் பட்டிருக்கிறாள். இது இயற்கை யான மென்மை இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாகப் பூட்டி வச்சுப் பழுக்க வைத்த மென்மை.

மென்மையின் இன்னொரு முக மாக அவள் பலவீனமானவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். றுநயமநச ளுநஒ என்று ஆங்கிலமும் சொல்கிறது. ஆனால், அது அப்பட்டமான பொய். உடல்ரீதியாகவே பெண்தான் பலசாலி. ஆணின் உடலில் பருவத் தில் மீசை முளைப்பது போன்ற சிற்சில மாற்றங்களைத் தவிர வேறு எந்த சிக்கலும் சாகும் வரை ஏற்படுவதில்லை. ஆனால், பெண் மாதவிலக்கில் துவங்கி கருத் தரித்தல், குழந்தை பெறுதல், மெனோபாஸ் என உயிரைக் காவு கேட்கும் உதிரப்போக்கு நிறைந்த பல உயிரியல் ரீதியான மாற்றங்களைத் தன் உடம்பில் தாங்கியபடியே தன் வாழ்நாள் முழுவதையும் கடந்து கொண்டிருக்கிறாள். ஆண் சந்திக்கும் மற்ற எல்லாப் பிரச்சனைகளையும் இந்த உடல் பிரச்னைகளோடு சேர்த்துக் கூடுதலாகச் சந்திக்கிறாள்.

உடல்ரீதியாகவும் சரி மனரீதியாகவும் சரி பெண்தான் ஆணைவிடப் பலசாலி. ஆனால், நமது பொதுப்புத்தி யில் நேர்மாறான புரிதல் தான் அழுத்தமாகப் பதிவாகியிருக்கிறது.

பெண்மையின் மென்மை என்றால் என்ன என்பதற்கு நாம் கொண் டுள்ள புரிதல் ஆணின் தன்மைக்கு எதிரானது என்பதுதான். கடுமை, கடினம், முரடு, வலிமை, உறுதி போன்றவை எல்லாம் ஆண் குணம். இவற்றுக்கு எதிராக மென்மை என்பதை நாம் பெண்ணுக்குரியதாக முன்வைக்கிறோம். நாம் இத்தொடரின் ஆரம்ப அத்தி யாயங்களில் குறிப்பிட்டதுபோல ஆணையும் பெண்ணையும் பரஸ்பர எதிர்வுகளாக நிறுத்திப் பார்க்கும் கண் ணோட்டத்திலிருந்தே ஆணிடம் இல்லாது பெண்ணிடம், பெண்ணிடம் இல்லாதது ஆணிடம் என்று இதெல்லாம் இயற்கையின் படைப்பு போன்ற ஒரு தோற்றத்தை இயல்பானது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக வரலாற்றுப் போக்கில் உருவாக்கப் பட்டதுதான். பெண் ஆணுக்கு இணையாக முடியாது. மாறாக அவனிடம் இல்லாத சில பள்ளங்களை இட்டு நிரப்புபவளாக இருப்பதே இயற்கை அவளுக்கு இட்ட கட்டளை என்கிற கண்ணோட்டத்திலிருந்தே இக் கருத்துக்கள் பிறக்கின்றன. சமூகம் இப்படியாக ஏற்றத் தாழ்வுமிக்கதாக, வர்க்க சமூகமாக, உயர்ந்தோர் தாழ்ந் தோர் என்பதாக இருப்பது இயற்கையிலேயே நியாயம் என்பதை வலியுறுத்துகிற முக்கிய ஆதாரமாக இந்த ஆண் பெண் பேதம் பயன்படுகிறது. காலம் காலமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்தக் குணங்கள் என்பவை சும்மா வெறும் விவ ரணைகளாகவோ அலங்காரத்துக்கு ஏற்பட்டவையோ அல்ல. சமூகத்தில் ஆண் செய்பவற்றையெல்லாம் பெண் செய்யக் கூடாது. பெண் செய்வதற்கென்று சில இருக்கின்றன. அவை சமூகத்தின் சட்டங்கள் மட்டு மல்ல, இயற்கையின் விதியே அப்படித்தான் என்று அழுத்தமாகச் சொல்வதற்காகச் செயற்கையாகக் கட்டமைக்கப்பட்டவையாகும். ராஜஸ்தான் மாநிலத்தில் பன்வாரி தேவி என்கிற பெண்மணி இந்தக் கட்டுக்களை யெல்லாம் தாண்டினார். ஒரு சமூக சேவகர் என்கிற முறையில் அங்கு அமலில் இருக்கும் குழந்தைத் திருமணம் உள்ளிட்ட பல பிற்போக்கான பழக்க வழக் கங்களுக்கு எதிராக இயக்கம் நடத்தினார். உயர்சாதி ஆண்கள் சிலர் கூட்டாக அவரைப் பாலியல் பலாத் காரம் செய்தனர். அவரது சமத்துவ நடவடிக்கைகளை முடக்குவதற்காகவே அவர் மீது அவ்வன்முறை தொடுக்கப்பட்டது. பொம்பளைக்கு இதெல்லாம் தேவை யா? அவள் தன் எல்லையை மீறலாமா? மீறினால் இப்படித்தானே நடக்கும்? என்கிற கேள்விகளை மீண்டும் பொதுப்புத்தியில் எறிகிற சம்பவமாக அந்த வன்முறை நிகழ்த்தப்பட்டது.

ஆகவே, பெண்மை என்கிற பெயரில் அது பெண்மை, நளினம், தாய்மை, கருணை, தியாகம் என எதுவாக வும் இருக்கலாம். அக் குணங்கள் வெறும் அலங் காரத்துக்கும் ஆண் - பெண் வேறுபாட்டைச் சும்மா காட்டுவதற்காக வும் ஏற்பட்டவை அல்ல, அவற்றுக்கு ஒரு சமூகக் கடமை இருக்கிறது. செயல்பாட்டுத் தன்மை யோடு இணைப்பு இருக்கிறது.

ஒரு பெண் மீது சுமத்தப்படும் குணங்கள் (கவனிக்க: பெண்ணின் குணங்கள் அல்ல. பெண் மீது சுமத்தப்படும் குணங்கள்) பற்றி நாம் பேசுகையில் நாம் இரண்டு வித மாகப் பார்க்க வேண்டும். ஒன்று உயிரியல் ரீதியானது எவை என்கிற கேள்வி. இன்னொன்று பண்பாட்டு ரீதியாக அவள் மீது சுமத்தப்பட்டுள்ள குணங்கள் எவை என்கிற கேள்வி.

பிள்ளை பெற்றுக் கொள்வதும் பாலூட்டுவதும் உயிரியல் சார்ந்தவை. அது இயற்கையானது. இயல் பானது. அதைக் கேள்விக்குள்ளாக்க வாய்ப்பில்லை. அது நிச்சயமாக ஆணுக்குக் கிட்டாத வாய்ப்பு.


அதைத் தவிர தாய்மை, பெண்மை, மென்மை போன்ற மைகள் எல்லாம் யாரு வச்ச மை? என்று கேட்க வேண்டிய மைகள்தான். இவையெல்லாம் பண் பாட்டு ரீதியாக - வரலாற்று ரீதியாக - சமூக ரீதியாகப் பெண் மேல் சுமத்தப்பட்ட மைகள்தான். இவை அத்தனையும் நம் கேள்விக்கு உள்ளாகியே தீர வேண்டும். இவை யும் உயிரியல் ரீதியானவைபோல, இயற்கையின் படைப்புபோல ஒரு புரிதல் நம் (ஆண்-பெண்) எல்லோருடைய  மண்டைகளிலும் ஏற்றப்பட்டுள்ளன. அது பண்பாட்டின் வேலை. உண்மையில் பண்பாடுதான் ஒரு பெண்ணைக் கட்டமைக்கிறது. பெண் பிறப்பதில்லை. பெண் கட்டமைப்படுகிறாள் என்று சொல்வது இந்தப் பண்பாட்டுக் கட்டமைப்பைத்தான்.இந்தப்பண்பாடு என்பதுதான் என்ன? இது ஏன் இந்த மாதிரி வேலைகளையெல்லாம் செய்கிறது? அதைக் கேள்விக்குள்ளாக்கி மாற்ற முடியாதா? அதை யார் செய்வது? ஆண்களா? பெண்களா? இருவரும் சேர்ந்தா? 

                             9

ஆண்மை - பெண்மை என்பவை வெறும் உயிரியல் ரீதியானவையோ உடலியல் ரீதியானவையோ மட்டும் அல்ல. கடவுளால் அல்லது இயற்கையால் இப்படி இருக்கக் கடவது எனப் படைக்கப்பட்டவையும் அல்ல. நூற்றாண்டுகளாக மனித குலம் கடந்து வந்த பாதையில் - வரலாற்றின் போக்கில் - அவர்கள் கட்டமைத்துக் கொண்ட சமூக ஏற்பாடுகளின் - சிந்தனை மற்றும் செயல்பாட்டு முறைமைகளின் பகுதியாகவே ஆண்மையும் பெண்மையும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகவே, ஆண்மை அல்லது பெண்மை என்பவற்றின் பொருளும் பரிமாணமும் முக்கியத்துவமும் காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம் மாறக் கூடியவையே. மாறிக் கொண்டேதான் வந்திருக்கின்றன.

இது தொடர்பாகப் பல்வேறு சிந்தனைப் பள்ளிகள் வேறு வேறு வியாக்கியானங்களையும் விளக்கங்களையும் தருகின்றன. மார்க்சிய சிந்தனைப் பள்ளிகள் ஆண் - பெண் உறவு, ஆண்மை - பெண்மை மற்றும் குடும்பம் இவை பற்றியெல்லாம் விரிவான ஆழமான முழுமையான பார்வையை முன்வைக்கின்றன. பாலினம் அல்லது பால்பாகுபாடு என்பது சமூகத்தில் தனித்து இயங்கும் ஒரு யதார்த்தமல்ல. சமூக முழுமையின் ஒரு பகுதியாகத்தான் அவற்றைப் பார்க்க வேண்டும் என்கிறது மார்க்சியம். ஆண்கள், பெண்களின் பங்கு மற்றும் இடம் என்பவை வெறும் செயல்பாட்டு ரீதியான வை மாத்திரமல்ல, சமூகப் பொருளாதார அமைப்பின் அங்கங்களாக அம்சங்களாக - பொருளாதார அதிகாரம், சமூக மேலாதிக்கம், பண்பாட்டுக் கடமைகள், உரிமைகள் ஆகிய இவற்றைப் பிரதிபலிப்பவையாகவும் இவற்றின் மீது தாக்கம் செலுத்துபவையாகவும் ஆண்மை - பெண்மை மற்றும் பாலின பேதம் என்பவை அமைந்துள்ளன.

புரிதல் என்பது எப்போதும் இயங்கியல் ரீதியானது. இந்த உலகத்தை மனிதன் புரிந்து கொள்வது அதைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளவோ அதை வெறுமனே வியாக்கி யானம் செய்யவோ அல்ல. மாறாக அதை இன்னும் சிறந்த உலகமாக மாற்றுவதற்காக.

மனித குலம் இரண்டு விதமான பொருளியல் நடவடிக்கைகள் மூலம் தன்னைத்தானே வாழவைத்துக் கொள்கிறது. ஒன்று உற்பத்தி. இன்னொன்று மறு உற்பத்தி. ஒரு சமூகம் தனக்கான உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்காகச் செய்யும் சகல நடவடிக்கைகளையும் உற்பத்தி என்று மார்க்சியம் குறிப்பிடுகிறது. மறு உற்பத்தி என்பது குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி இச்சமூகத்துக்குத் தருவது - இதில் வெறும் உடம்பாகப் பிள்ளைகளைப் பெற்றுத் தருவதை மட்டும் மறு உற்பத்தி என்று சொல்வதில்லை. இந்த உலகத்தின் போக்கை - நிலவும் வாழ்முறையை ஏற்று அதற்குத் தக்கவாறு குழந்தைகள் தம்மை மாற்றி யமைத்துக் கொள்வது உள்ளிட்டதுதான் மறுஉற்பத்தி. அவ்விதம் தகவமைக்கப்படும் குழந்தைகள் ஏற்கெனவே அச்சமூகத்தில் நிலவும் உற்பத்தி உறவுகளின் படிநிலையில் தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தை - பாத்திரத்தை - எதிர்ப்பின்றி ஏற்று வாழப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். நிலப்பிரபுவின் மகன் நிலப்பிரபுவாக கூலியின் மகன் கூலியாக, பிரச்சனை இல்லாமல் உற்பத்தி நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு காலத்திலும் ஒரு உற்பத்தி முறை அமலில் இருந்து வந்துள்ளது - வருகிறது. அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம், முதலாளியச் சமூகம், சோசலிச சமூகம் என.... அவ்வச்சமூக ஏற்பாட்டுக்கேற்ற மக்களைத் தயாரிக்கும் பாசறைகளாகக் குடும்பங்கள் கடமையாற்றுகின்றன. பிள்ளைகளை மறு உற்பத்தி செய்யும் உடலியல் வாய்ப்புப் பெற்ற பெண்களுக்கு உற்பத்தி முறையில் வேறொரு முக்கியப்பணியை வர்க்க சமூகம் வழங்கியுள்ளது. வர்க்க சமூகத்தில் தமக்குரிய - தமக்கு வரையறுக்கப்பட்ட இடங்களில் மனப்பூர்வமாக உட்கார்ந்து கொள்ளும் பிள்ளைகளாக மனிதர்களைப் பயிற்றுவிக்கிற கடமை. இதையே சமூகவயமாக்கல் என்கிறோம். குடும்பமும் மதமும் தான் இதில் பிரதானப் பங்கு வகிக்கின்றன. பெண்கள் குடும்ப விளக்குகளாகவும் பக்தியின் உருவங்களாகவும் கட்டமைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் இதுதான். பண்பாட்டுக் கூறுகளையும் நம்பிக்கைகளையும் சுமந்து தலைமுறை தலைமுறைக்கும் கடத்திச் செல்பவர்களாகவும் மத ஆச்சாரங்கள் கடமைகள் குடும்பச் சடங்குகளை வழுவாது கடைப்பிடிப்பவர்களாகவும் பெண்கள் வர்க்க சமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருப்பது இந்த வர்க்கக் கடமையை நிறைவேற்றத்தான்.
இந்த சமூகவயமாக்கும்  ஆளும் வர்க்கத்தேவை வெளியிலிருந்து அல்லா- மாறாக வீட்டுக்குள்ளிருந்தே பெண்கள் மூலமாக நிறைவேற்றப்படுகிறது.
இந்தப் புரிதலோடு பண்பாடு என்றால் என்ன என்கிற கேள்விக்குள் நாம் புக வேண்டும். பண்படுத்துவது எதுவோ அதுவே பண்பாடு. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் என்றே கலித் தொகையும் கூறுகிறது. சமூகத்தின் பாடறிந்து - செல்நெறி அறிந்து - ஒழுகுதலே பண்பாடாகிறது. நிலத்தைப் பண்படுத்துவதை ஆங்கிலத்தில் அக்ரி கல்ச்சர் என்கிறோம். மனதைப் பண்படுத்துவதை கல்ச்சர் என்கிறோம். யார் நிலத்தை யார் பண்படுத்துவது நல்லது என்று நாம் கேட்பதில்லை. யார் மனதை யார் பண்படுத்துவது யாருக்கு நல்லது என்றும் நாம் கேட்பதில்லை.

ஆதிகாலம் தொட்டு - இனக் குழு சமூகத்திலிருந்து - மனித குலம் தன் வாழ்வனுபவத்தினூடே உட்செறித்த மதிப்பீடுகள் வாழ்வின் அர்த்தம் பற்றிய புரிதல்கள், நடை, உடை, பாவனை எனப்பெறும் வாழ்முறைகள் எல்லாம் பண்பாட்டில் அடங்கும் என்பர். ஆனால், வர்க்க சமூகமாக மனித குலம் பிளவுண்ட பிறகு பண்பாட்டுக்கு வேறு பணிகள் வந்து சேர்கின்றன. ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு வர்க்கம் ஒளிந்திருக்கிறது என்னும்போது ஆண்மை, பெண்மை, குடும்பம், பண்பாடு என்கிற ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு வர்க்கம் - வர்க்க நலன் என்பதை நாம் தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்தப் பண்படுத்தும் பணி பிரதானமாக மனித மனதின் பொதுப்புத்தி எனப்படும் காமன் சென்ஸ் என்கிற தளத்தில்தான் வலுவாக நடக்கிறது. பட்டறிவும், வாழ்பனுபவமும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆளும் வர்க்கத்தின் (அது பெற்றுள்ள இடத்தின் காரணமாக இயல்பாகவே) சிந்தனைகளும் கலந்த கலவைதான் பொதுப்புத்தியாக வடிவெடுக்கிறது. பொதுப்புத்தியில் எல்லாம் கலந்துதான் கிடக்கும். நம்பிக்கைகள், சமூக விழுமியங்கள், பல்வேறு பண்பாட்டுக் கூறுகள் என எல்லாமும் குழம்பிக் கிடக்கும். அதில் சக்திமிக்க தலையீடு செய்து ஆளும் வர்க்கம் தனக்குச் சாதகமான திசை வழியில் மனித மனங்களை வழி நடத்திடப் பண்படுத்துகிறது.

பண்படுத்தும் இவ்வர்க்கக் கடமையை நிறைவேற்றும் தொழில் நுட்ப அறிவுடன் இயங்கும் தொழிற்சாலைகளாக இருப்பவை பண்பாட்டு நிறுவனங்கள். குடும்பம், கல்விச் சாலைகள், மதம், மீடியா, கலை - இலக்கியங்கள் என விதவிதமான பண்பாட்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்தியாவில் சாதி எனும் நிறுவனம் நம் சமூகத்தின் வர்க்க ஏற்பாடாகவும், பண்பாட்டு நிறுவனமாகவும், இருவிதப் பணிகளைச் செய்கிறது. இந்நிறுவனங்களின் எல்லாப் பணிகளையும் விரித்துப் பார்க்க இங்கு இடமில்லை. ஆண்மை - பெண்மை உருவாக்கத்தில் இவை எவ்விதமான பண்படுத்தலைச் செய்கின்றன என்று பார்ப்பதே   இப்போதைய தேவை.                            


10


சென்ற கட்டுரைக்கு வாசகர் கடிதம் பகுதியில் கம்பிக் குடியிலிருந்து தோழர் வேம்பு மணி சாமி எழுதிய விமர்சனம் பார்த்தேன். பண்டைக்காலத்தில் உற்பத்திக்கு மனித சக்தி தேவைப்பட்டதால் அதிகக் குழந்தை பெறுவதும் தேவைப்பட்டது.ஆகவே பெண் உடலுக்கு ஒரு கவர்ச்சித்தன்மை ஊட்ட வேண்டியிருந்தது என்பதுபோல பல கருத்துக்கலை அவர் குரிப்பிட்டிருந்தார்.

அவ்வாசக எதிர்வினைக்குப் பின்பும் சில கேள்விகள் நிற்கத்தான் செய்கின்றன. இயல்பு மீறிய கவர்ச்சிப் பொருளாகப் பெண்ணுடல் மட்டும் ஏன் வைக்கப்பட வேண்டும்? இலக் கியங்களும், இலக்கணங்களும் மனிதன் காட்டில் வாழ்ந்த இனக்குழு சமூகத்தால் எழுதப்பட்டவையா? சங்க இலக்கியம் என்பது இனக்குழு சமூகத்திலிருந்து நிலவுடைமைச் சமூகத்தை நோக்கிப் பயணிக்கிற  மாறிக் கொண்டிருந்த ஒரு காலத்தின் வாழ்வைப் பதிவு செய்துள்ளது என்றே அறிஞர்கள் கணிக்கிறார்கள். சிலைகள் ஆலயங்களில் வைக்கப்பட்டதும் பெரும் பெரும் ஆலயங் கள் எழுப்பப்பட்டதும் வர்க்க சமூகமாக மாறிவிட்ட நிலவுடைமைச் சமூகத்தில் அல்லவா?

தவிர, வாசகர் குறிப்பிடுவது போல அன் றைய பெண்ணடிமைச் சிந்தனைகள் அன் றைய காலத்தின் தேவையால் எழுந்து அன்றோடு மடிந்து போய்விடவில்லையே அவை மியூசியத்தில் வைக்கப்படவில்லை. இன்றும் நம் மூளைகளை ஆக்கிரமித்து வழி நடத்தும் வாழும் சிந்தனைகளாகவே இருக்கின்றன. ஆகவே, பழையதை அய்யோ பாவம் பழைய சிந்தனை என்று ஒதுக்கிச் சும்மா பாராட்ட முடியாது. மறுவாசிப்புச் செய்து விமர்சித்துக் காலி செய்ய வேண்டியது நமது முக்கியமான பணி அல்லவா?

மேலும், காம உணர்ச்சி என்பது இயற்கை யானது- வயிற்றுப் பசியைப் போல. அதற்கு மாடுகளைப் புணர்ச்சிக்குக் கிளப்பிவிடுவது போல பாட்டுப் பாடிக் கிளப்பிவிட வேண்டிய அவசியம் இல்லை. அது தன்னாலே நடக்கும். வர்க்க சமூகத்தின் தேவையிலிருந்தே ஆணா திக்கச் சிந்தனை பிறக்கிறது. பெண்ணை வெறும் உடம்பாக -ரசிக்கத்தக்கதாக- குறுக்குகின்ற பார்வை எந்தக் காலத்தில் தோன்றி யிருந்தாலும் மறுவாசிப்புக்கு உட்படுத்தி இன்றின் பட்டறையில் தட்டி நிமித்தியாக வேண்டும்.  நாங்கள் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் ஒண்ணாவது இரண்டாவது வகுப்புகளில் இருந்தபோது ஒரு பழக்கம் இருந்தது.ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான விடை சொல்லாவிட்டாலோ அல்லது பாடம்   தப்பில்லாமல் ஒப்பிக்கத் தெரியாவிட்டாலோ அடிப்பது முட்டங்கால் போட வைப்பது தலையில் குட்டுவது போன்ற தண்டனைகளை சில ஆசிரியர்கள்  வழங்குவார்கள்.வேறு சிலர் தப்பாகப் பதில் சொன்ன பையன்களை  பொம்பளைப் பிள்ளைகள் உட்கார்ந்திருக்கும் பலகையில் அவர்களுக்கு நடுவில் உட்கார வைத்து விடுவார்கள்.

பல பெண் உடல்களுக்கு நடுவில் ஒரே ஒரு ஆண் உடல்.

பிற பையன்களின் கேலிச்சிரிப்பு உடனே பின் தொடரும்.அவமானத்தால் நாங்கள்  கூசிப்போவோம்.ஆண் உடல் வேறு பெண் உடல் வேறு என்கிற தன்னுணர்வு பால்பேதம் பற்றிய எவ்வித உணர்வும் தோன்ற வாய்ப்பில்லாத அந்தப் பால்ய நாட்களிலேயே பள்ளிக்கூடத்தில் எமக்குத் தோன்றிவிட்டது.  சமூகத்தால் கட்டமைக்கப்படும் உடல்கள் மற்றும் உடல் அசைவுகள் குறித்து இன்று உலக அளவில் ஏராளமான ஆய்வுகள் வந்து கொண்டிருக்கின்றன.  அவற்றை நாம் படிக்கும் போது எமது பள்ளியில் நடந்த அத்தண்டனைச்சம்பவங்கள்  தவிர்க்கவியலாத படி நினைவுக்கு வருகின்றன.  இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும் நடை வனப்பும் நாணின் வனப்பும்-புடைசால்  கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு எழுத்தின் வனப்பே வனப்பு -                                                   (ஏலாதி)

என்று நம்பிப் பள்ளிக்கூடம் போனால் அங்கே பாடத்திட்டத்துக்கு அப்பால் பல கல்வி நடக்கிறது. ஆண்-பெண் உடல் பேதம் ஒரு முக்கியமான கல்வி அல்லது பண்படுத்தல். பால பாடங்களில் குடும்பம் பற்றிய படத்தில் அப்பா ஈசி சேரில் உட்கார்ந்து பேப்பர் படிப்பதும் அம்மா சமையல் செய்வதும் போன்ற காட்சிப்படுத்தலில் துவங்கி , சமூகத்தில் ஆண்- பெண் இருவரின் இடம் எது- அந்தஸ்து என்ன என்பது பற்றிச் சமூக மனதில்-பொதுப்புத்தியில் என்ன இருக்கிறதோ அதைப் பள்ளிக்கூடம் கேள்விக்குள்ளாக்கவில்லை.மாறாக . வினையே ஆடவர்க்கு உயிரே வாள் நுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்  என்பதாக அடிக்கோடு இட்டுப் பிள்ளைகள் மனதில் அழுந்தப் பதிக்கிறது.அதாவது மேலும் நுட்பமாகப் பண்படுத்துகிறது .அவள் ஏன் மனையுறை மகளிர் ஆக்கப்பட்டாள் என்று கேள்வியைப் பள்ளிக்கூடம் நம் மனதில் எழுப்புவதில்லை.எழுப்பினால்தானே அது சரியான கல்வியாகும்?

ஆண்கள் பெண்கள் சேர்ந்து படிக்கிற பள்ளிகளை விட பெண்கள் பள்ளி ஆண்கள் பள்ளி என்று தனித்தனியாக இருப்பதே நலம் என்கிற கருத்து வலுவாக நம்மிடம் உள்ளது. ஈன்றவள்,மகள், தம் உடன் பிறந்தாள் ஆயினும் சான்றார் தமித்தா  உறையற்க ஐம்புலனும் தாங்கற் கரிதாகலன் (ஆசாரக்கோவை)

(தாய்,மகள், சகோதரியே ஆனாலும் அவர்கள் தனித்திருக்கையில் அவர்களோடு உடன் உறையக்கூடாது -ஏனெனில் ஐம்புலன்களையும் அடக்குவது என்பது அவ்வளவு லேசான காரியமில்லையே) என்று பாடிவைத்தவர்கள் ஆயிற்றே நாம்.(என்ன கேவலமான பாட்டய்யா இது! )  இவ்விதமாக ஆண்களும் பெண்களும் சாதாரணமாகக் கலந்து பழகுதல் தவறென்று நம் பண்பாட்டில் நிறுவப்பட்டுள்ள ஒன்றையே கல்விச்சாலைகளும் கறாராகக் கற்றுத் தருகின்றன. நடைமுறைப் படுத்துகின்றன. அதாவது மனங்களைப் பண்படுத்துகின்றன.

விளையாட்டிலும்கூட பெண்களுக்கான விளையாட்டுகளாகப் பரவலாக நம் பள்ளிகள் வைத்திருப்பது த்ரோ பால் (வாலிபால் கிடையாது),கோக்கோ, வளைபந்து எனப்படும் டென்னிகாயிட் இவைபோலச் சிலவே.அதிலும் பேதம்தான்.

மாணவர்களைத் திட்டுவதற்கு (மாடு மேய்க்கத்தான் லாயக்கு போன்றவை) வேறு வசவுகள் மாணவிகளைத் திட்டுவதற்கு ( ஆக்கிப் போடத்தான் லாயக்கு) வேறு வசவுகள் . பெண்களுக்குப் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால் பெண்களின் வருகையே பாதிக்கப்படுவது தனியாகப் பேச வேண்டிய ஒன்று.

கல்விச்சாலைகள் என்பவை பண்பாட்டு நிறுவனங்களில் முக்கியமானவை.அவற்றை ஆளும் வர்க்கங்களே நடத்துகின்றன.சட்டப்படி நடக்கிற -- சட்டத்தை மதிக்கிற-- ஒருமனிதரின் உத்தரவுக்குக் கீழ்ப்படிகிற -  மார்க் அடிப்படையில் தன் தகுதியை சமூகத்தில் தன் இடத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிற விதமாக மனங்களைப் பண்படுத்தும் தொழிற்சாலையே கல்விக்கூடம். இவ்விதமான வர்க்கக் கடமையை நிறைவேற்றும் கல்விச்சாலை  வர்க்க வேறுபாடுகளைத் தன் பாடத்திட்டத்தின் மூலம் கற்றுத்தருவதில்லை.மாணவ மாணவிகளில் பெருவாரியானவர்களான உழைப்பாளி மக்களின் பிள்ளைகளுக்கு வர்க்க உணர்வை ஊட்டும் விதமான கல்வியைத் தருவதில்லை.ஏனெனில் அது அதற்கு எதிராக இயங்குவதற்காகவே படைக்கப்பட்டது.

அதே காரணங்களாலேயே அது பெண்களுக்கு பெண் உணர்வையும் ஊட்டுவதில்லை.பெண் உணர்வு என்று நாம் குறிப்பிடுவது பெண்ணிய உணர்வைத்தான்.அதாவது பெண் சமத்துவ உணர்வைத்தான்.மக்கள்  தொகையில் சரிபாதியான பெண்கள் ஆண்களுக்கு இணையானவர்கள் அல்ல என்று பல்வேறு வடிவங்களில் கல்விச்சாலை கற்பிக்கிறது.அதில் ஒன்றுதான் உடல் ரீதியாகப் பெண்ணை வேறுபடுத்தி நிறுத்துவது.

அடுத்து பெண்களுக்குப் பொறுத்தமான கல்வி - பாடப்பிரிவுகள் என்று சிலவற்றை உருவாக்கி வைப்பது.ஹோம் சயின்ஸ் ,அறிவியல் பாடங்கள், கல்வியியல்,செகண்டரி கிரேடு ஆசிரியர் பயிற்சி ,நர்ஸ், சித்த மருத்துவம் என்று துவங்கி இன்று கம்ப்யூட்டர் வரைக்கும் - அதாவது உட்கார்ந்த இடத்தில் படிக்கிற மாதிரி- அலையாத வேலைக்குத் தோதான கல்வி.ஆய்வு மாணவிகளுக்குக் கூட  கிராமம் கிராமமாகச் சென்று ஆய்வு செய்து ஆய்வேட்டைச் சமர்ப்பிக்கும் தலைப்புகளைத் தவிர்த்து ஜெயகாந்தன் படைப்புகளில் சமூகப்பார்வை என்பது போல மேசை ஆய்வுகளையே தேர்வு செய்வது. இதுதான் பொதுவான போக்காக இருக்கிறது.

சமீபத்தில் விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் கணிணித் துறையில் வேலை பார்க்கும் பெண் வேண்டாம் என்று மறுக்கிற இளைஞர்கள் எண்ணிக்கை பெருகிவருவது விவாதத்தின்போது வெளிப்பட்டது.இது இப்படியே போனால் இன்னும் சில காலத்தில் கணிணித்துறைக்கு இப்போது வேக வேகமாகத் தம் பெண்பிள்ளைகளை அனுப்பிக்கொண்டிருக்கும் பெற்றோர் அதை நிறுத்திவிடும் அபாயம் இருக்கிறது.

என் பொண்ணு கணிணியில் பெரிய ஆளாக வருவதை விட அவளுக்கு வரன் கிடைத்துக் கல்யாணம் ஆவதுதானே முக்கியம்! கக்கூசிலிருந்து கணிணி வரை எல்லாமே பெண்கல்விக்குத் தடையாக இருப்பது யதார்த்தம்.இது ஒருபக்கம் இருக்க, பாலியல் கல்வி என்பதே நம் பாடத்திட்டத்தில் இன்றுவரை கிடையாது.ஆண்-பெண் இருபால் குழந்தைகளுக்கும் பாலியல் கல்வி அளிப்பது நிச்சயமாக இன்று நிலவும் பால் பேதக் கொடுமைகளைக் குறைக்க சிறிதளவேனும் உதவ முடியும்.சின்ன வயதிலேயே பாலியல் கல்வி அளிக்கப்பட வேண்டும்.பாலுறவுச் சுரப்பிகள் தம் பணியைத் துவக்குவதற்கு முந்திய பால பருவத்தில் இக்கல்வி அளிக்கப்பட்டால் ஆணோ பெண்ணோ தம் உடல் பற்றிய விஞ்ஞானப்பூர்வமான புரிதலோடு பரஸ்பரம் தங்களை மனுஷர்களாகவும் மனுஷிகளாகவும் பார்க்கத் துவங்கி விட வாய்ப்பு உருவாகும். உடல்களைக் கடந்து மானுடப் பிறவிகளாக ஆணும் பெண்ணும் வாழ என்ன மனநிலையைத் தகவமைக்க வேண்டுமோ அது பள்ளிக்கூடத்தில்தான் செய்யப்பட வேண்டும்.இன்று அதற்கு நேர் மாறானது நடந்து கொண்டிருக்கிறது. வரலாற்றைப் போதிக்கும்போது அதில் நிகழ்ந்துள்ள பெண் புறக்கணிப்பு பற்றிச் சொல்லியாக வேண்டும்.இலக்கியம் போதிக்கும்போது  அது பெண்ணியப் பார்வையோடு மறுவாசிப்புச் செய்யப்பட வேண்டும்.அறிவியலில் மறைந்துள்ள ஆணாதிக்கப்பார்வையை அடையாளம் காட்ட வேண்டும். இதுபோன்ற வேலைகளைக் கையில் எடுக்கும் கல்விதான் நமக்குத் தேவை.                                                                             

11                             

கல்விச்சாலைகளை அடுத்து நாம் குடும்பம் என்னும் மிக முக்கியமான பண்பாட்டுத் தொழிற் சாலையைப் பார்க்கலாம். கல்விச்சாலைகள், மதங்கள்,மீடியா போன்றவை யெல்லாம் அளவில் பெரிய பண்பாட்டு நிறுவனங்கள் போலத் தோற்றம் தருபவை.குடும்பம் அவ்விதமாகப் பார்த்தால் அளவில் சிறியதுதான்.ஆனால் பண் படுத்தும் பணியை மிக நுட்பமாக-  குடிசைத் தொழிலாகச் செய்கிற இடம் குடும்பம்.குடும்பம் என்பதை ( ) குழந்தைகளை சமூகவயப்படுத்தும் மையம் என்பார்கள்.நாம் வாழும் சமூகத்துக்கேற்ற மனிதர்களாக மனுஷி களாக குழந்தைகளை வளர்த்தெடுக்கும் இட மாகவே குடும்பங்கள் இருப்பதால்தான் என்ன விதமான ஆட்சி மாற்றங்கள் ஆட்சிமுறை மாற்றங்கள் நிகழ்ந்தபோதும் குடும்பங்கள் தொடர்ந்து அப்படியே நீடிக்க ஆளும் வர்க்கத் தாரால் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

குடும்பத்தின் மைய அச்சாக இருப்பது பெண் என்கிற உணர்வு அழுத்தமாக நம்மிடம் உள்ளது. ஒரு வீடு என்கிற கட்டிடம் குடும்பமாக மாறுவது அந்த வீட்டில் பெண்/பெண்கள் இருக்கும்போது தான் என்பார்கள். ஆகவே வர்க்க பேதமுள்ள- சாதி பேதமுள்ள - இச்சமூகத்திற்கு ஏற்ற சாதி மற்றும் வர்க்க மனிதர்களாக குழந்தைகளை வளர்த்தெடுக்கும் மிகப்பெரிய பொறுப்பை பெண்களின் தலையில் ஏற்றி வைத்திருக்கிறது சமூகம்.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இப் பொறுப்பைப் பெண் பிசகாமல் நிறைவேற்றி வருகிறாள்.அதனால்தான் ஆம்பளை கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருந்திட்டாலும் கண்டு கொள்ளாமல் விடுகிற சமூகம் பெண் விஷயத்தில் எந்த சலுகையும் கொடுப்பதில்லை. தர்மங்கள், நியாயங்கள், சரி-தப்புகள்,நீதி-நேர்மைகள் என எல்லாவற்றையும் அவள்தான் கட்டிக் காத்து  வரும் தலைமுறைக்கும் எடுத்துச்சொல்ல வேண்டிய வளாக, எடுத்துச்செல்ல வேண்டியவளாக இருக் கிறாள்.எதையும் மீற முடியாதவளாக மீறக் கூடாதவளாக பெண் கட்டமைக்கப்படு கிறாள். அதற்காகத்தான் இந்தப்பெண்மை, தாய்மை என்கிற எல்லா இழவுகளும் அவள் தலையில் ஏற்றப்பட்டுள்ளன -ஆண்களின் தலை யிலும்தான்.

இந்த இடத்தில் மறைந்த எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பியின் மருமகள் வாக்கு  என்கிற சிறுகதையை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.

மருமகள் வாக்கு

திருமணமாகிப் புகுந்த வீட்டுக்கு வரும் ஒரு மருமகளைப்பற்றிய கதை இது.அந்த வீட்டில் எல்லாம் மாமியார் வச்ச சட்டம்தான்.இன்னைக்கு அரைப்படி அரிசி பொங்கணுமா கால்படி வடிச்சா போதுமா என்பது உட்பட மாமியாரிடம் கேட்டுத் தான் செய்ய வேண்டும். புருசனோடு பேசுவது கூட மாமியார் அனுமதி யோடுதான். மருமகளின் ஒவ்வொரு அசைவும் மாமியார் விருப்பப் படிதான். ஆரம்பத்தில் மருமகள் மனசில் என்ன இது கொடுமையா இருக்கே என்று தோன்றினா லும் நாள் ஆக ஆக இதுதானே நம்ம வீட்டு வழக்கம் என்று ஆகி விட்டது.
அந்த சமயம் உள்ளூர் பஞ்சாயத்துத் தேர்தல் வந்தது.பல சின்னங்களில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.பூனைச்சின்னத்துக்கும் கிளிச்சின்னத்துக்கும்தான் சரியான போட்டி. மருமகள் தன்னுடைய ஓட்டு யாருக்கு என்று மனசுக்குள் யோசித்துக் கொண்டிருந்த போது மாமியார் வந்து  என்ன யோசனை பலமா இருக்கு உன்னுடைய ஓட்டு கிளிச்சின்னத்துக்குத் தான் ஒண்ணும் யோசிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டாள். மாமியார் அப்படிச்சொன்னா மறுகணமே மருமகள் தன்னுடைய ஓட்டு பூனைக்குத்தான்  என்று அழுத்தமாக முடிவு செய்து விட்டாள்.ரகசிய வாக்குத்தானே. யாருக்குப் போட்டோம் என்று மாமியாருக்குத் தெரியவா போகிறது என்று தைரியமாக முடிவு எடுத்தாள்.

இடையிடையே மாமியார் உன் ஓட்டு யாருக்குடீ என்று கேட்கும்போதெல்லாம் நீங்க சொன்னபடி கிளிக்குத்தான் அத்தே என்று சிரிப்போடு பதிலும் சொல்லி விட்டாள். கடைசியில் தேர்தல் நாளும் வந்தது. காலை யிலேயே மருமகள் ஓட்டுப் போடக் கிளம்பி விட்டாள்.மாமியார் கிளிச்சின்னம் என்று ஒரு உறுமலோடு மருமகளை அனுப்பி வைத் தாள்.ஒருநாளும் இல்லாத உற்சாகமும் மகிழ்ச்சி யும் மருமகளின் நடையில் துள்ளியது. வாழ்க்கை யில் முதல் முறையாக மாமியாருக்கு எதிராக வாக்களிக்கப்போகிறோம் என்கிற சந்தோசம் அது.சுட்டு விரலில் மையிட்டு வாக்குச் சீட்டை வாங்கிக்கொண்டு மறைவிடத்துக்குப் போனாள். வாக்குச் சீட்டில் ஒவ்வொரு சின்னமாகப் பார்த்துக்கொண்டே வந்தாள்.கிளிச்சின்னத்தின் மீது பார்வை பதிந்ததும் கிளி சிறகடித்தது. கிளிச்சின்னம் என்கிற மாமியாரின் உறுமல் பின்புறமிருந்து கேட்டது.கிளியைத்தாண்டி அவள் கை கீழே நகரவில்லை.அப்படியே தலை சுற்றுவது போலிருந்தது.கீழே பூனைச்சின்னம் இருப்பதை மயக்க நிலையில்தான் கவனித்தாள். அவளை அறியாமலேயே கை அதுபாட்டுக்கு கிளிச்சின்னத்தில் முத்திரையைப்பதித்து விட்டது. வாக்குச்சீட்டை உள்ளே போட்டு விட்டு வெளியே அவசரமாக ஓடிவந்துவிட்டாள்.

இதுதான் அக்கதையின் சுருக்கம்.பெண்களின் மனநிலையை மட்டுமல்ல ஆளும் வர்க்கத்தின் சிந்தனை மற்றும் பண்பாட்டு மேலாதிக்கத்துக்குத்  தன்னையறியாமலேயே கட்டுண்டு கிடக்கும் பாட்டாளி வர்க்கத்தின் மனநிலைக்கும் இக்கதை பொருந்தும். அவள் நினைத்தாலும் அவளால் மீற முடியாத தளைகளுக்குள் பெண் காலம் காலமாகக் கட்டப்பட்டிருக்கிறாள்.பக்தி,குடும்பநலன்,
வீட்டுக்கு ஆகாது,பிள்ளைகளுக்கு நல்லது, அவருக்கு நல்லது என்கிற வளையத்துக்குள் வசமாக சிக்க வைக்கப்பட்டிருக்கிறது பெண் மனம். மாட்டையடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே வீட்டினில் எம்மிடங்காட்ட வந்தார் என்று பாரதி சொன்னது போல பெண் வசக்கப்படுகிறாள் குடும்பத்தில்.அவள் வசங்கும் காலம் என்று ஒரு குறிப்பிட்ட பருவத்தை மட்டும் சொல்லி விட முடியவில்லை. பிறந்ததிலிருந்து சாகும் வரை அவள் பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் பெற்ற மக்கள் வீட்டிலும் என வசக்கத்தான் படுகிறாள். சகல தர்மங்களையும் நம்பிக்கைகளையும் சுமக்க வசக்கப்படுகிறாள்.
ஆனால் அதே சமயம் குடும்பம் எந்த மாற்றத்துக்கும் ஆளாகாமல் அப்படியே தொடர் வதாகச் சொல்ல முடியாது.சமூகத்தில் நிகழும் மாற்றங்கள் குடும்பத்துக்குள் தொடர்கிற பண் பாட்டு அசைவுகள் மீதும் தாக்கம் செலுத்தி வந்துள்ளன. கணவன் இறந்தால் அவனோடு மனைவியும் எரிந்து சாம்பலாகிற பண்பாடு இந்தியக்குடும்பங்களில் -குறிப்பாக வட மாநிலங்களில் இருந்ததை நாமும் அறிவோம். இதுபோல சமூகம் குடும்பத்துக்குள் கொண்டுவந்த இன்னும் பல மாற்றங்களைப் பார்க்கலாம்.  
                                                                                                                                                                                       12


மனித மனங்களைப் பண்படுத்தும் தொழிலை சக்தி மிக்க முறையிலும் பரந்துபட்ட அளவிலும் நுட்பமான வடிவங்களிலும் செய்யும் பண்பாட்டு நிறுவனமாக ஊடகங்கள் செயல்படுகின்றன. ஊடகங்களில் அச்சு ஊடகங்கள்,மின்னணு ஊடகங்கள்,திரைப்படங்கள் எனப்பலவகை உண்டு. இன்று உலகமயப் பொருளாதாரத்தின் முகமூடி யாகவும் கேடயமாகவும் உறைவாளாகவும் இந்த ஊடகங்கள் திகழ்கின்றன.

ஜனநாயகத்தின் மூன்றாவது தூண் என்று வர்ணிக்கப்படும் ஊடகங்களின் மிகப்பெரிய அரசியல் யாதெனில் சில துறைசார்ந்த செய்திகளை தவறாமல் மீண்டும் மீண்டும் வெளியிடுவதும் சில துறைசார்ந்த செய்திகளை மறந்தும் வெளியிட்டு விடாமல் இருப்பதுமாகும்.சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி விவசாயிகள் பற்றிய செய்திகளை-தொழிலாளர் போராட்டங்கள் பற்றிய செய்திகளை - தேசிய அளவில் வெளியாகும் எந்தப் பத்திரிகையும் எந்த மின் ஊடகமும் வெளியிடுவதில்லை என்பது தெரிய வந்துள்ளது. மராட்டியத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது கூட அங்கே பிரதமர் சென்ற செய்தியை ஒட்டித்தான் அவை தற்கொலைச் செய்திகளையே வெளியிட்டன. அவை வெளியிடும் செய்திகளில் விவசாயி-தொழி லாளர் பற்றிய செய்திகள் 0.70 சதவீதம்தான்.

பெண்கள் பற்றிய செய்திகளை - நிகழ்ச்சிகளை- எந்த ஊடகமும் புறக்கணிப்பதில்லை.ஆனால் அவை என்னமாதிரியான பெண் செய்திகளை வெளியிடு கின்றன என்பதுதான் நாம் கேட்க வேண்டிய கேள்வி. ஏற்கனவே இந்த ஆணாதிக்க சமூகம் கட்டமைத்து வைத்துள்ள பெண்மை என்கிற பொய்யை-பெண்மை என்கிற கருத்தாக்கத்தை-மேலும் மேலும் அடிக் கோடிட்டுத் திணிக்கும் வேலைதான் ஊடகங்களில் நடக்கிறது.

விவசாயிகள் தற்கொலையை நாட்டின் முக்கிய மான செய்தியாகக் கருதாத தினசரிகள் சாமியார்களின் காமலீலை,அழகிகள் கைது,காதலனுக்காகக் கணவனைக் கொன்ற சங்கீதா என்பன போன்ற செய்தி களையும் சினிமா மற்றும் பொழுதுபோக்குச் செய்திகள் என்ற பேரில் பெண்களின் உடல்காட்டும் புகைப்படங்களையும் வாரக்கணக்கில் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.வார இதழ்களிலோ அட்டை டு அட்டை ஆண் மனதில் காட்சி இன்பம் தூண்டும் லட்சிய வெறியுடன் அச்சிடப்பட்ட பெண் உடல்தான். இவற்றிலெல்லாம் ஊடாடுவது பெண் என்பவள் வெறும் உடல்தான் -வெறும் காட்சிப் பொருள்தான் -ஆண்கள் நுகர்வதற்கான ஒரு போகப் பொருள்தான் -என்கிற ஒரு கருத்தோட்டம்தான். பெண்களுக்கான பத்திரிகைகள் சில சாதனைப்பெண்கள் பற்றி அறிமுகம் செய்வது போன்ற மிகச்சில சேதிகளைத் தவிர மற்றதெல்லாம் பெண்மையின் இலக்கணங்களாக நம் சமூகம் சொல்லிவரும் சமையல்,கோலம்,டிசைனிங் என்றே வட்டமடிக்கின்றன. பிற பத்திரிகைகளுக்கும் பெண் களுக்கான பத்திரிகைகளுக்கும் உள்ள ஒரு முக்கிய மான வித்தியாசம் இதில் பெண் உடம்பாகக் குறுக்கப் படுவதில்லை. ஆனால் பெண்மையின் பெருமை என்கிற கொடுமை தவறாமல் உண்டு.

தொலைக்காட்சி அலைவரிசைகளில் பரவலாகப் பேசப்படுபவை தொடர்கள். தவிர்க்கவியலாத ரெண்டு பெண்டாட்டிக் கதைகளாகவே அமைந்து விடுகிற இத்தொடர்களில் கண்ணீரும் கம்பலையுமாக பெண்கள் புலம்புகிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக விமர்சித்து அவற்றைப் புறந்தள்ளுவது நியாயமான பார்வையாக இருக்காது.

கோலங்கள், அரசி, சித்தி, கஸ்தூரி போன்ற தொடர்கள் எல்லா விமர்சனங்களுக்கும் அப்பால் ஒரு பெண்ணின் போராட்டத்தை- பல சோதனை களைத் தாண்டி அவள் வெற்றி பெறுவதைச் சொல் லும் கதைகளாகவும் இருக்கின்றன என்பதை நாம் பார்க்க வேண்டும். இவற்றை விரும்பிப் பார்க்கும் பெண்கள் மனங்களில் உளவியல்ரீதியாக ஒரு பெருமித உணர்வு சத்தமில்லாமல் பொங்கிப் பெருகு வதை நாம் காணத் தவறக்கூடாது.

ஏழை எம்.ஜி.ஆர். பணக்கார வில்லனைத் தோற் கடிக்கிற பழைய சினிமா பாணிதான் இது என்ற போதிலும் இதில் வெல்வது பெண் என்பது முக்கியம். ஆனால் இத்தொடர்கள் எல்லாவற்றிலுமே வில்லியாக ஒரு பெண்ணே காட்டப்படுவது ஏற் கனவே நம் மனங்களில் அழுந்தப்பதிக்கப்பட்டுள்ள மாமியார் - வில்லி என்கிற படிமத்தை இன்னும் வலுவாக அடிக்கோடிடும் கேட்டைச் செய்கின்றன.

இன்னும் குடும்பப் பொண்ணா லட்சணமாக வாழும் ரோல் மாடல் பெண்கள் ஏராளமாக இத் தொடர்களில் மூக்கைச் சிந்துவார்கள்.எத்தனை காலத்துக்குத்தான் பெண்களை குடும்பப்பாங்கு என்கிற முக்காட்டுக்குள் மூச்சுத் திணற வைப் பது?பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்கிற புளித்துப்போன பழைய வாதமும் இத் தொடர்களில் அடிக்கோடிடப்படுகின்றது.

கலைஞர் தொலைக்காட்சி வந்தபிறகு தொடர் களை விட, மானாட மயிலாட போன்ற ஆட்ட பாட்டத்தொடர்கள் மற்றும் நேரலை ( ) ஒளி பரப்புக் காட்சிகள் மையமான இடத்தைப் பிடித் துள்ளன. இவற்றில் ஆடும் பெண்களின் உடையலங் காரம் மற்றும் ஜட்ஜ்களாக வந்து அமரும் சில மேடம்களின் உடை பற்றிக் குடும்பங்களில் கடும் விமர்சனங்கள் எழுவதைப் பார்க்கிறோம். -டிவியின் ஆட்டங்கள் நம் சேனல்களில் வந்தபோதும் இத்தகைய விமர்சனங்கள் எழுந்தன.விமர்சிக்கும் அதே வேளையில் உடையில் ஒருவித கட்டுடைக்கும் சுதந்திர மனோபாவத்தை இந்த ஆட்டங்கள் பெண்களுக்கு வழங்குகின்றன என்பதையும் நாம் குறிப்பிட வேண்டும்.சேலையை விட சுடிதாரும் நைட்டியும் நிச்சயமாக வசதியும் சுதந்திரமும் தந்தனதானே. இப்படியே போனால் என்னாவது என்று சுதந்திரத்தின் எல்லையை அவசர அவசரமாக ஆண்மனம் நிர்ணயிக்கத் தவிக்கிறது.குடும்ப மனம் என்பதே சமூக மனமாகத் திகழும் ஆண்மனம்தானே.

இவை போக தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள் பொறுப்பான பெண்கள் கக்கூஸ் சுத்தம் செய்ய சரியான க்ளீனிங் திரவத்தைத் தேர்வு செய்வதையும் துவைப்பதற்கு ஏமாறாமல் ஒரு சோப்பையோ வாஷிங் பவுடரையோ தேர்வு செய் வதையும் குழந்தைகளுக்கும் கணவருக்கும் ஆகா என்று சொல்லும் வண்ணம் மசாலாப் பொடிப் போட்டுச் சமைப்பவராகவும் மீண்டும் மீண்டும் மீண்டும் காட்டிக்கொண்டே இருக்கின்றன.

திரைப்படங்களும் இதே வேலையைப் பெரிய திரையில் டிஜிட்டல் சவுண்டுகளுடன் செய் கின்றன.காதலிக்கும் போதெல்லாம் டவுசர், பேண்ட்டுகளில் வரும் பெண்கள் கல்யாணம் என்றதும் பட்டுப்புடவை கட்டித் தழையத் தழைய வருவதை எல்லாத்திரைப்படங்களிலும் பார்க் கிறோம். இவர்கள் எல்லோருமே ஒரே ஆண்மனதின் வேறு வேறு ரூபங்கள்தான்.ஒரே குரலில் பெண் களுக்கான உடைக்கலாச்சாரத்தை நம் மண்டையில் திணிக்கிறார்கள்.
இன்னும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு அதே கயவனைத் தாலி கட்டச் சொல்லும் நாட்டாமைகள்,கதாநாயகன் தன் சமூக சேவை நடவடிக்கைகள் இல்லாத நேரத்தில் கூடச் சேர்ந்து ஆடிப்பாடுவதற்கு என்றே வந்துபோகிற கதாநாயகிகள் என்று திரைப்படங்களும் தொலைக் காட்சிகளும் கட்டமைக்கிற பெண்மையின் லட்சணங்கள் ஏராளம்.இது ஆண் பெண் இருபால்  ரசிகர்களின் மனங்களிலும் ஆழ்ந்த பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.பெண்மை இன்னும் பல விதங் களில் மீடியாவால் தகவமைக்கப்படுகிறது. 

                                13

நாம் வாழும் சமூகங்கள் நம்மை அதாவது ஆண்களையும் பெண்களையும் சில குறிப்பிட்ட விதங்களில் சிந்திக்கவும் செயல்படவும் வேண்டு மென எதிர்பார்க்கின்றன.அந்த எதிர்பார்ப்பே பண்பாட்டுத்தளத்தில் ஆண்களுக்கும் பெண்களுக் குமான விதிகளாக இறுகி நிற்கின்றன.ஆனால் மனிதர்களாகிய நாம் எப்போதும் விதிகளைக் கட்டிக்கொண்டே சாவதில்லை.அழுத்தம் அதிக மாகும்போது விதிகளை உடைத்துக்கொண்டு வெளியே வரத்தான் செய்வோம். அரசியல்-பொரு ளாதாரத் தளங்களில் நடப்பதுபோல இந்த உடைப்பு அவ்வளவு எளிதில் பண்பாட்டுத்தளத்தில் நடந்து விடுவதில்லை.

ஒரு சின்ன விசயம்.

முற்போக்கு மேடைகளில் பிரபலமாகப் பாடப்படும் ஒருசில பாடல்கள் பற்றி ஒரு முகாமில் காரசாரமான விவாதம் வந்தது.ஒரு பாட்டு ஆசைப்பட்ட எல்லாத்தியும் காசிருந்தால் வாங்க லாம் அம்மாவை வாங்க முடியுமா ? என்கிற பாட்டு. இன்னொன்று ஆத்தா உன் சேலை என்கிற பாடல்.இவை அற்புதமாகப் பாட்டெழுதும் தோழர் ஏகாதசியின் பாடல்கள். இத்தகைய பாடல்களை மக்கள் விரும்பிக் கேட்கிறார்கள்.மேடையில் நம் கலைஞர்கள் பாடும்போது கூட்டத்தில் பலர் கண் கலங்கி அழுது விடுவதும் உண்டு. அவரவர் அம்மா ஞாபகம் வந்து ஏக்கப்பெருமூச்சு விடாதவர் யாரும் இருக்க மாட்டார்கள்.மக்கள் அடிக்கடி விரும்பிக்கேட்கும் பாடலாக சீட்டுக்கொடுத்துப் பாடச்சொல்வதும் உண்டு - இப்பாடல்களை.

ஏற்கனவே அம்மா என்றால் அன்பு-பாசம்-தியாகம் - கண்ணீர் என்று சமூக மனதில் பதிவாகி யிருக்கிற - அம்மாக்கள் என்ன செய்ய வேண்டும் எப்படி வாழ வேண்டும் என்று இச்சமூகம் எதிர்பார்க்கிறதோ - என்ன விதிக்கப்பட்டிருக் கிறதோ அதையே கண்ணீரும் கம்பலையுமாக சோகத்தில் தோய்த்தெடுத்து இப்பாடல்கள் காற்றில் பரவ விடுகின்றன. முற்போக்காளர்கள் அதே தியாக அம்மாவையா மக்களின் முன்னால் கொண்டுபோய் நிறுத்த வேண்டும்? நமக்கு இந்த அன்பு பாசம் தியாகம் போன்ற மூடாக்குகளிலிருந்து விடுபட்ட -கார்க்கியின் தாய் நாவலில் வரும் அம்மா போல -கேப்டன் லட்சுமி போல -அன்னை லட்சுமி போல -ஜானகி அம்மா போல - பாப்பா அம்மா போல-ஒரு அம்மாவை அல்லவா நாம் முன்னுதாரணமாக மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டும் என்று விவாதம் செய்தோம்.

பாட்டை எழுதிய கவிஞர் இந்த விமர்சனப் பார்வையை ஏற்றுக்கொண்டு அப்படி ஒரு புதிய பாடலை தானே எழுதித்தருவதாக ஒப்புக் கொண்டார். ஆனால் கூட்டம் முடிந்ததும் ஒரு தோழர் தனியாக வந்து சன்னமான குரலில் சொன்னார்  இப்படி எல்லாத்தியும் ராவடியாக பெண்விடுதலைப் பார்வையிலேயே பார்த்துக் கொண்டு போனால் உலகத்தில் அன்பு பாசம் தாயின் அரவணைப்பு என்று  மனித வாழ்க்கைக்கு அழகும் அர்த்தமும் தந்து கொண்டிருக்கிற எல்லாமே காலியாகி விடாதா?வாழ்க்கை என்பது எல்லாம் சேர்ந்ததல்லவா? வெறும் பிரச்னைகளின் தொகுப்பல்லவே வாழ்க்கை. ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் ஆத்தாவின் மடியில் நமக்கு ஒரு ஆறுதல் இருக்கிறதல்லவா?அதையும் பறித்துக்கொள்வது நியாயமா?என்று தயக்கத்துடன் ஆனால் ஒரு உள்ளார்ந்த கோபத்துடன் அவர் கேட்டார்.

பெண்களுக்காக யார் எப்போது எங்கே லேசாகக் குரல் எழுப்பினாலும் இப்படி லட்சம் சந்தேகங்களும் கேள்விகளும் வந்துவிடும் என்பதை நாம் அறிவோம்.
தாயின் அரவணைப்பை நாம் மறுக்க வில்லை.அதில் உயிரியல்ரீதியான அம்சம் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இருக்கிறது.தாய் மட்டுமே தியாகியாவது அயோக்கியத்தனமான ஏற்பாடு அல்லவா என்பதுதான் நாம் எழுப்பும் ஒரே கேள்வி. தாய்க்குத் தியாகம் செய்கிற ஒரு டூட்டி மட்டுமே கொடுப்பது எந்த உலகத்து நியாயம் என்பதுதான் நம் கேள்வி.இருக்கும் கதகதப்பை - அனுபவித்துக் கொண்டிருக்கும் அரவணைப்பை இழந்துவிடச் சொல்கிறார்களே என்கிற ஆண் மனப்பதட்டமே இத்தகைய கேள்விகளுக்குப் பின்னால் துடித்துக் கொண்டிருக்கிறது.ஏன் பதட்டப்பட வேண்டும்?. இப்போதிருக்கும் இந்த ஒருதலைப்பட்சமான ஏற்பாட்டுக்கு மாற்றாக அரவணைப்பு-அன்பு-பாசம்-என்பதற்கான புதிய வரையறுப்புகளை உருவாக்குவோம்.அப்புதிய சூழல் இன்னும் ஜனநாயகமான ஒரு காதலை- இன்னும் பரஸ்பரமான கதகதப்பை வழங்கும்.நாம் இன்னும் நல்ல ஒரு வாழ்வை நோக்கிச் செல்லலாம் அல்லவா?.

எத்தனையோ விசயங்களில் முற்போக்கானவர் களாக இருக்கும் நண்பர்கள் தாய்மை-பெண்மை என்கிற இடம் வரும்போது மட்டும் வெறும் உணர்ச்சி மனிதர்களாக வரலாற்றுணர்வற்றுப் பின் தங்கி விடுகிறார்கள்.மிகப்பெரிய உடைப்பு உணர்வு மட்டத்திலும் அறிவுத்தளத்திலும் நடக்க வேண்டி யிருக்கிறது. அதுவரைக்கும் செத்தாலும் என்னைப் பொத்த ஆத்தாவின் சேலை வேண்டும் என்று அழுது மூக்கைச் சிந்திக்கொண்டிருப்போம் என்று சொல்வது நியாயமா? இதில் இன்னொரு கொடுமையும் சத்த மில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. பாட்டைக் கேட்டு அம்மாக்களுக்காக நாலு சொட்டுக் கண்ணீர் விட்டு ரெண்டு சிலிண்டர் பெருமூச்சும் விட்டுக் கொள்வதில் நம் குற்ற உணர்வுகள் கரைந்து போய் மீண்டும் வழக்கமான ஆண்களாக நிம்மதியாக வலம் வந்து விடுகிறோம். நாம் சுத்திகரிக்கப்பட்டு விடுகிறோம்.சடங்குகள் எப்படி உளவியல்ரீதியாக இயங்கி குற்ற உணர்வுகளில் இருந்து நம்மை விடுவிக்கப் பயன்படுகின்றனவோ அதுபோலக் கலை இங்கே அப்பணியைச் செய்து விடுகிறது. அன்பின் பேராலும் பாசத்தின் பேராலும்தான் ஆணாதிக்கம் நம் சமூகத்தில் அமலாகிக் கொண் டிருக்கிறது   என்பதை நாம் கருத்தில் கொண்டால் எந்த அளவுக்கு சமரசமற்ற இடைவிடாத போரை நாம் நமக்கு உள்ளேயும் சமூகத்திலும் நடத்த வேண்டியிருக்கிறது என்பதை உணரலாம்.

பெண்மை என்கிற இட்டுக்கட்டப்பட்ட கற்பனையின் மீது நாம் பல கனவுகளையும் கடமைகளையும் ஏற்றி வைத்துக்கொண்டே போகிறோம்.உயிரியல் ரீதியான ஆண் பெண் வேறுபாடுகளைத் தவிர மற்ற எல்லாம் பண்பாடு என்ற பெயரில் இச்சமூகம் நம் தலையில் திணித்தவை என்னும்போது மாற்றுப்பாதையை நாம் சமைக்க வேண்டும்.

சென்ற மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தொலைக்காட்சி அலைவரிசை களில் பலருடைய கருத்து உதிர்ப்புகள் ஒளி பரப்பப் பட்டன.ஒரு திரைப்பட இயக்குநர் கூறினார் . பெண்களுக்கு சமத்துவம் சென்னை போன்ற மாநகரங்களில் கிடைத்துவிட்டது. டவுன் சவுத்தில் கிராமப்புறங்களில் இன்னும் கிடைக்கவில்லை(ஈவ் டீசிங்கில் இளம் பெண்கள் செத்தது எல்லாமே பெருநகரங்களில்தான் என்பது காலப் போக்கில் எளிதாக மறந்துபோகிறது)
வேறு பலருக்கு முன்னே மாதிரி இல்லே இப்போ பெண்கள் ரொம்ப முன்னேறிட்டாங்க என்கிற கருத்து இருக்கிறது.

எதெல்லாம் பெண் அடிமைத்தனம் என்று ஒரு நீண்ட பட்டியலைத் தயார் செய்து - தீண்டாமைக்குச் செய்வது போல -சர்வே எடுத்து-பரவலாக மக்களிடம் கொண்டு சென்று பெண்நிலை குறித்துப் பெரும் கல்விபுகட்டல் நடைபெற வேண்டியுள்

14 

நீண்ட நெடுங்காலமாய் காத்திருக்கிறோம்...


இரண்டு நிகழ்வுகளை நாம் நினைவு படுத்திப் பார்க்க வேண்டும். ஒன்று 1946 முதல் 1951 வரையி லும் நீடித்த தெலிங்கானா போராட்டத்தில் கம்யூ னிஊட்டுகள் தலைமையில் பல நூறு பெண்கள் ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.துப்பாக்கி ஏந்திடப் பயிற்சி எடுத்தார்கள். துப்பாக்கியோடு எதிரிகளைச் சுட்டு வீழ்த்தினார்கள். சக ஆண் போராளிகளைப் போலவே வெட்ட வெளியில் வயல் வெளிகளில் மலைக்காடுகளில் என எவ் விடத்தும் படுத்து உறங்கினார்கள்.வீடுகளைத் துறந்து உற்றார் உறவினரைத்துறந்து தாங்கள் ஏற்றுக்கொண்ட லட்சியத்துக்காக சுதந்திரத்துக்காக நிஜாமின் - பண்ணையார்களின் ஆதிக்கத்துக்கு எதிராகக் களத்தில் நின்றார்கள்.நிஜாம் தோற்கடிக்கப் பட்டபிறகு நேருவின் அரசாங்கத்தின் ராணுவமும் போலீசும் தெலிங்கானா போராட்டத்தை நசுக்கி அழித்த பிறகும் அதுவரை வீடுகளைத் துறந்து இயக்கத்தோடு இருந்துவிட்ட பெண்களை இனி நீங்கள் உங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள் என்று கட்சி சொன்னபோது அப்பெண்களில் பலர் கதறி அழுதார்கள். மீண்டும் அந்த நரகக் குழிக்குப் போகவா? நாங்கள் கட்சி அலுவலகத்திலேயே இருந்து விடுகிறோமே என்றுதான் எல்லோரும் கேட்டார்கள்.
இன்று நம்மோடு கூட வாழும் நம் வீட்டுப் பெண்களுக்கு இது நரகக் குழி என்பது இன்னும் பிடிபடவில்லை. காடுகளிலும் வயல் வெளிகளிலும் படுத்துறங்கும் வாழ்க்கையை அவர்கள் சற்றும் ருசிக்கவில்லை. காடுகளை விடுங்கள். வீட்டுக்கு வெளியே இயங்கும் உலகத்தில் எத்தனை கோடி இன்பம் உண்டோ அதில் ஒரு துளியையும் அவர்கள் ருசித்ததில்லை. வெளியே இருக்கும் உலகம் தன்னை விழுங்கும்.தன்னை மானபங்கம் செய்துவிடும் என்கிற அச்சம் தவிர வெளி உலகம் பற்றி நம் பெண்களுக்கு நாம் என்ன காட்டியிருக்கிறோம்.

வேலைக்குப் போகும் பெண்கள் ஒன்றி ரண்டாக- அரையும் குறையுமாக- சில சுதந்திரங் களை தொட்டுப்பார்த்திருந்தாலும் வேலை பார்க்கும் ஆண்கள் அனுபவிக்கும் சுதந்திரம் அவர் களுக்கு இல்லை.நரகம் என்று தெரிந்தும் மீற முடியாத மனத்தடைகளுக்குள் நம் பெண்கள் சிக்கிக் கிடக்கிறார்கள்.பல்லாயிரம் ஆண்டுகளாகப் பண் பாடு அவர்கள் தலையில் (ஆண்கள் தலை யிலும்தான்) ஏற்றி வைத்துள்ள பெண்மை பற்றிய கற்பிதங்களில் இருந்து விடுபட முடியாத மனத் தடைகள்தாம் அவை.

அரசியல்ரீதியாக தன்னை முற்போக்காக வளர்த்துக்கொண்டு இயங்கும் ஒருவர்கூட வீட்டில் - பெண்களைப் பொறுத்தவரை படு பிற்போக்கான வராக அவர்களது விருப்பங்கள் ஆசைகள் கனவுகளுக்கு எந்த மதிப்பும் தராதவராகவே இருக்கிறார். சரி அதுதான் இல்லை.தன்னுடைய நண்பர் களை - தோழர்களை வீட்டுக்கு அழைத்து வரும் அவர் தானும் தன் தோழர்களும் சாப்பிட்ட தட்டுகளை  - எச்சில் தட்டுகளை -  சூப்பிப்போட்ட முருங்கைக்காய்த் தோலுடன் மிதக்கும் அந்தத் தட்டுகளை தம் வீட்டுப் பெண்கள் எடுத்துச் சென்று கழுவுவதை எந்தக் குற்ற உணர்வும் இன்றி இயல்பாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார். சாப்பிட்டவர்கள் தட்டை எடுத்தால்கூட அட நீங்க ஏன் தட்டை எடுக்கறீங்க.. நீ எடும்மா என்று மனைவியை ஏவித் தமிழ்ப்பண்பாட்டை நிறுவி நிற்கிறார்.தன்னுடைய மனைவியின் நண்பர்கள் தோழிகள் இப்படி வீட்டுக்கு வந்து சாப்பிட்டால் அவர்களது எச்சில் தட்டைத் தான் கழுவுவோமா என்று யோசிக்கிற அறிவெல்லாம் அப்படிப்பட்ட ஆணுக்கு வருவதே இல்லை.இதற்குப் பெயர் முற்போக்கு ஆணாதிக்கம் என்று சொல்வதா? இப்படியே பெண்களை வேலை வாங்கிக் காலம் பூராவும் திங்கிறதைத் தவிர வேற எந்த வீட்டு வேலையிலும் பங்கேற்காத ஆண்கள் கோடிக் கணக்காக இருந்தார்கள். இருக்கிறார்கள். இருப் பார்கள்- நாம் அறிவோடும் உணர்வோடும் கொஞ்சம் சுரணையோடும் இது விஷயத்தில் தலையீடு செய்யாமலே இருந்தால்.


பெண்களுக்கில்லா அந்த அறிவு வரணும். நாம என்னா சார் செய்ய முடியும், என்று ஆண் மனம் கூவுவது கேட்கிறது. ஆணாதிக்கத்துக்கு எதிராகப் போராட பெண்களை ஆண்கள்தான் தயார் செய்ய வேண்டும்.வர்க்க உணர்வு பெறாத தொழிலாளிக்கு சக தொழிலாளி வர்க்க உணர்வு ஊட்டுவ தில்லையா? வர்க்கபோதம் பெறாத தொழி லாளிக்கு வர்க்கபோதம் ஊட்டுவதில்லையா? அதுபோல ஆணாதிக்க சமூகத்துக்கு எதிராக பெண் உணர்வை  பெண்நிலைவாதத்தை அல்லது போதத்தை சக மனிதனாக காலம் காலமாக கூடுதலான சுதந்திரத்தை அனுபவித்து வரும் ஆண்தான் பெண்ணுக்கு ஊட்ட வேண்டும்.

எனக்கு எதிராகப் போராடு என்று என் மனைவியை நான் தூண்டவில்லையானால் நான் ஓர் ஆணாதிக்கவாதிதான். எனக்கெதிராகப் போராட என் மகளை நான் தயார் செய்யவில்லையானால் நான்தான் குற்றவாளி.
பின்னாலிருந்து இரண்டு குரல்கள் கேட் கின்றன. ஒன்று ஆண் குரல். இன்னொன்று பெண் குரல்.

ஆண் குரல் சொல்கிறது இப்படியெல்லாம் பேசறது ரொம்ப அதி தீவிரம் இல்லையா?
பெண் குரல் சொல்கிறது அவுக தட்டெல் லாம் கழுவ வேண்டாம்.நொள்ளை சொல்லாம பொங்கிப் போட்டதை சந்தோசமா சாப்பிட்டுப் போனாப் போதும் இந்த இரண்டு மனநிலைகளுமே சரியல்ல. மனநிலைகளில் மாற்றம் தேவை.
ஆண் குற்ற உணர்வு கொள்ள வேண்டும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்ப் பெண்களை அடிமை கொண்ட பாவத்தின் கறைபடிந்த நம் கரங்களை -  இதயங்களை -  பெண் விடுதலைக் காகப் போராடும் செயல்களால் கழுவ வேண்டும்.

பெண்கள் -பண்பாடு தங்கள் மீது கழுதைப் பொதிபோல ஏற்றி வைத்திருக்கும் சுமைகளை மனத்தடைகளை உதறி எறிய வேண்டும்.கை நீட்டி அடித்தால்தான் வன்முறை என்று கருதாமல் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் ஒவ்வொரு திருப்பத்திலும் தங்கள் மீது வன்முறை பிர யோகிக்கப்படுவதை உணர வேண்டும். கெட்ட வார்த்தையில் திட்டினால்கூட இச்சமூகம் பெண்ணை - பெண்ணின் உடல் உறுப்புகளைப் பழிக்கும் விதமான சொற்களையே பயன்படுத்து கிறது என்பதைக் கோபத்துடன் பார்க்கப் பழக வேண்டும். ரெத்திரம் பழகு என்று பாரதி பெண்களை நோக்கித்தான் சொன்னான் என உணர வேண்டும். இதெல்லாம் எப்படி சார் நடக்கும்? நடக்கும்.

துவக்கத்தில் குறிப்பிட்ட அந்த இரண்டாவது நிகழ்வுக்கு இப்போது வருவோம்.
அறிவொளி இயக்கம் நடந்து கொண்டிருந்த காலத்தில் அது முற்றிலும் பெண்கள் இயக்க மாகவே நடந்தது. ஆயிரம் ஆயிரம் பெண்கள் வீதிக்கு வந்தார்கள். கற்றார்கள். கற்பித்தார்கள். நாடகம் போட்டார்கள். பாட்டுப் பாடினார்கள். எல்லாம் இந்தத் தமிழகத்துத் தெருக்களில்தான் நடந்தது.

அறிவொளியின் தொடர்ச்சியாக வந்த சுய உதவிக்குழுக்களில் இன்று எத்தனை ஆயிரம் பெண்கள் அணி திரண்டிருக்கிறார்கள்? இத்தனை வருசமா நீங்கள்ளாம் எங்கேதான் இருந்தீங்க என்று நாம் வியக்க வேண்டியிருக்கிறது.
ஆம். இவை எதைக்காட்டுகின்றன? பெண்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். வாய்ப்புக் கிடைத்தால் கிளம்பி வருவார்கள்.அறிவொளிக்கு இருந்தது போன்ற ஆதரவான சமூக மனநிலை இருந்தால் பெண்கள் தெருவில் இறங்குவார் கள்.தெலிங்கானாவில் போல எதிர்ப்புகள் பலமாக இருந்தபோதும் தோழமை உறவுகள் துணை நின்றால் பெண்கள் ஆயுதம் ஏந்தவும் தயாரா வார்கள்- தங்கள் விடுதலைக்காகவும் தங்கள் வர்க்கத்தின் விடுதலைக்காகவும் தங்கள் தேசத்தின் விடுதலைக்காகவும்.பண்பாட்டு ரீதியாக மிக மிக அதிகமான மன அழுத்தத்தில் வைக்கப்பட்டுள்ள அவர்கள் அதையெல்லாம் மீறியும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் விடுதலைக்கான தங்கள் தாகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

மீண்டும் மீண்டும் இதுபோன்ற இயங்கு தளங்களை உருவாக்குவதும் வாய்ப்புகளைத் திறந்து விடுவதும்தான் சக பயணிகளான - தோழர்களான- ஆண்களின் -மற்றும் தோழமை பூர்வமான இயக்கங் களின் பிரதான வரலாற்றுக் கடமையாகும். அதோ பெண்கள் பாடி வரும் குரல் பிசிறற்றுக் கேட்கிறது. கேட்கிறதா?


நீண்ட நெடும் காலமாய்   காத்திருக்கிறோம்
நெஞ்சுக்குழியில் வாழும் கனவைத் தேக்கி நிற்கிறோம்
சமத்துவமாய் வாழ ஒரு சாசனத்தை முன் மொழிகின்கிறோம்
உம் கரம் பிடித்துக் கையெழுத்தை இடுமாறு கோரி நிற்கிறோம்.


கனிந்து வரட்டும் என்று காத்திருக்கக் காலம் இனி இல்லை
எம் காதலரை நெஞ்சுக்கு நெருக்கமான அன்பர்தமை எதிர்த்தே சமர் புரியும் சங்கடத்தைத் தந்து விடாமல்
சமமான உணர்வோடு கரம் இணைத்து
இச்சமூகத்தின் ஆணிவேரை அறுத்திட வாரீர்

ஆணாதிக்கம்தான் அந்த வேர் எனவே புரிந்திட வாரீர்
அறைகூவி அழைக்கின்றோம் தோழர்களே
ஆழ்மனதில் பொங்கி வரும் தாகத்துடனே..                         
(  கவிதையின் துவக்க வரிகள் : ஆதவன் தீட்சண்யா )