Showing posts with label குழந்தைகள். Show all posts
Showing posts with label குழந்தைகள். Show all posts

Wednesday, February 29, 2012

ஆசிரியை உமாமகேஸ்வரி படுகொலை

(தீக்கதிரில் வெளியான அருமையான கட்டுரை இங்கு )


உரையாடல்கள் மறுக்கப்பட்ட சமூகத்தின் இன்னுமொரு பரிதாப நிகழ்வு


எஸ் வி வேணுகோபாலன்



பொதுவாக மாலை தினசரியைத் தலைப்புச் செய்திகள் மூலமே வாசித்துவிட விரும்பும் மனிதர்களில் ஒருவனாகவே நேற்றும் பிற்பகல் பெட்டிக்கடை ஒன்றில் கொண்டு வந்து கயிற்றில் தொங்கவிடப்பட்ட மாலை இதழ் ஒன்றை வாசிக்க முற்பட்டவன் அதிர்ந்தே போனேன். அடுத்த நிமிடமே அந்த பத்திரிகையை வாங்கிக் கொண்டு அது தரக் காத்திருந்த கோர நிகழ்வு ஒன்றின் கொடிய கணங்களுக்குள் பயணத்தைத் தொடக்கினேன்.  

அது நடந்தே விட்டது.  தனது ஆசிரியை ஒருவரை அவரது  மாணவன் ஒருவனே கொன்று விட்டான். வியப்பு, அச்சம், நடுக்கம், ஏக்கம் எல்லாம் தமது கண்களிலிருந்து கொட்டித் தீர்த்தும் அதன் பொருளை உணர்ந்து அதற்கு வழி கொடுக்கும் சிந்தனையே இல்லாதிருந்த ஒருவனிடமிருந்து தமக்கு தப்பிக்க ஒரு வழியும் இல்லாது போன நேரத்தில் உமா மகேஸ்வரி உயிரற்று விழுந்துவிட்டார். தனது கொடுஞ்செயலின் அடுத்தடுத்த விளைவுகள் குறித்த எண்ணங்கள் இல்லாது போயிருந்த இர்ஃபான் கால காலத்திற்குமான தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிக் கொடுத்துவிட்டு காவல் துறை வசம் பிடிபட்டு உட்கார்ந்திருக்கிறான்.  உலுக்கப்பட்டு திடீரென்று  விழித்துக் கொண்டாற் போல சமூகம் திணறிக் கொண்டிருக்கிறது இந்த முப்பத்தாறு மணி நேரங்களாக.

என்ன நடக்கிறது, ஏன் இப்படியெல்லாம் ஆகிவிடுகிறது என்று யோசிக்குமுன், நமது அன்றாட வாழ்க்கையில் புழக்கத்தில் இருக்கும் சில சொல்லாடல்களை நினைத்துப் பார்த்தேன். "எவனையாவது ரெண்டு பேர போட்டுத் தள்ளினாத் தான் சரி வரும்", "உசுர வாங்குறான்"," மவன சாவடிச்சிடுவேன், "கொன்டே போடுவேன்" . 

நமக்கு ஓர் எதிரி உருவாவதும், அவரைப் பழி வாங்க அவருக்கான மரண வாசலைத் திறந்து வைக்க வேண்டுவதும் ஏதோ மானுட தருமம் போன்ற - தவிர்க்க முடியாத கடமை போன்ற - செய்தே தீர வேண்டிய தீரச் செயல் போல மண்டைக்குள் இரத்த ஆறு ஓடத் தொடங்குகிறது. முரண்பாடுகளையும், கருத்து வேறுபாடுகளையும் ஆயுதங்கள் வழியாகவே பேசிக் கொள்ளவும் தூண்டப் படுகிறோம். இர்ஃபான்  கையில் கத்தி இருந்ததா, கத்தியின் கையில் இர்ஃபான் இருந்தாரா என்பது உள்பட விவாதிக்க வேண்டி இருக்கிறது.  

ஆசிரியர்-மாணவர் உறவு, டாக்டர்-நோயாளி உறவு, கடைக்காரர்-வாடிக்கையாளர் உறவு எல்லாமே நெகிழ்வுத் தன்மை அற்ற - நிபந்தனைகளுக்கு உட்பட்ட அடிப்படையிலேயே இயங்குவதைப் பார்க்க முடிகிறது. ஒரு வழிப்பாதையான உரையாடலே எங்கும் ஒலிக்கிறது. பணத்தால் படியமைக்கப்பட்ட உறவுகளில் பரஸ்பரம் தூய்மையான இதயங்களின் உரையாடல் கேட்பதே இல்லை. அன்பின் சன்னல் வெளிச்சம் ஊடுருவாத அறைக்குள் கவ்வி இருக்கும் இருட்டில் சத்தங்கள் மட்டுமே வெளியே கேட்கின்றன, காட்சிகள் புலனை ஒரு போதும் எட்டுவதே இல்லை.

குழந்தை பிறந்த அடுத்த கணம் முதல் அதன் அடுத்தடுத்த மைல் கற்கள் பற்றிய வரைபடத்தை மருத்துவ உலகம் நமக்குக் கற்பிக்கிறது. தாலப் பருவம், முத்தப் பருவம், செங்கீரைப் பருவம்...என்று இலக்கியம் பேசுவது போலவே, தவழ்தல், நிற்றல், நடத்தல். பேசுதல்..என குழந்தையின் வளர்ச்சி குறித்த அளவீடுகள் உண்டு. காலம் தவறினால் தலையீடு தேவைப்படுகிறது. கல்விப் பயணத்திற்கும் இப்படியான படிக்கட்டுகள் இருக்கின்றன. முந்தைய மைல் கற்களைக் கடந்து வந்த விதத்தின் பிரதிபலிப்பு இதில் வெளிப்படும். அதற்கேற்ற உதவியும் தேவைப்படும். இந்த நுட்பமான விஷயத்தை மிக இலேசாக நினைத்தாலோ, எல்லாக் குழந்தைகளும் ஒன்று தான் என்று முரட்டடியாக அணுகினாலோ பிரச்சனைகளின் வேர் ஆழமாகப் போகிறது.

நூற்றுக் கணக்கில் மாணவர்கள் நிரம்பி வழியும் பள்ளிக்கூடங்களில் வகுப்பறை எந்த உன்னதமான கற்பித்தல் முறையையும் அனுமதிக்கவே செய்யாது. அங்கே இலக்குகள் மட்டுமே இயங்கும். பாட திட்டம் மட்டுமே நடக்கும். காகிதங்களில் வெளிப்படும் எழுத்துக்களின் அடிப்படையிலேயே அறிவு அளக்கப்படும். ஐம்பது அறுபது மாணவ எந்திரங்களுக்கு எதிரில், ஓர் ஆசிரிய எந்திரம் குறுக்கும் நெடுக்கும் நடந்து விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும். தாழ்வு மனப்பான்மை குடியேறிவிட்ட உள்ளங்களின் கரும்பலகையில் சிலேட்டுக் குச்சியால் எழுத முடியாது, ஆணியால் கீறிக் கொண்டிருக்க வேண்டி வரும். அந்த வலியில் துளிர்க்கும் இரத்த வேதனையில் கற்பது எந்தக் காலத்தில் இனிக்க முடியும்?

வேக கதிக்கு மாற்றப் பட்ட நமது அன்றாட வாழ்க்கையில் சகிப்புத் தன்மை, பொறுமை, சிந்தித்துப் பார்த்துப் பதில் சொல்லுதல், ஒரு வேளை எதிரில் இருப்பவர் சொல்வதும் சரியாக இருக்கலாம் என்று அங்கீகரித்தல்... இவை யாவும் தடை செய்யப்பட்டு விடுகின்றன. அலைபேசி உரையாடல்களில் இருந்து, ரயில் பேருந்து வழிப்பயண தள்ளு முள்ளுகளில் இருந்து, காத்திருக்கும் ஒவ்வொரு இடத்திலும், பணி செய்யும் இடத்திலும் எரிச்சல், ஆத்திரம், முன் கோபம், அதீத எதிர்பார்ப்பு, அடுத்தவரையே குற்றம் சாட்டுதல் இவையே ஆட்சி புரிகின்றன. இதன் பளு தாங்காமல் முறிகின்ற உறவுகளில் ஈவிரக்கம், நியாய அநியாயம், சரி தவறு இவை எதையும் பொருத்திப் பார்க்கும் மிகச் சிறிய கால இடைவெளி யாருக்கும் வைப்பதில்லை. அந்த மிகச் சிறிய கால இடைவெளியின் கடுமையான தண்டனைகளில் ஒன்றாகத் தான் உமா மகேஸ்வரியின் மரணம் நமது கண்ணெதிரே நடந்தேறி இருக்கிறது.  இரத்தம் சொட்டும் கத்தியை வைத்துக் கொண்டு பரிதாபமாக சமூகத்தைப் பார்க்கும் இர்ஃபான் குறித்து உமாவிற்கோ, உமா பற்றி இர்ஃபானுக்கோ சிந்திக்கக் கிடைக்காத மிகச் சிறு கால இடைவெளி அது.

ஓர் ஆசிரியையின் இபபடியான ஒரு மரணம் பல நூறு குழந்தைகளுக்கான கற்பித்தலின் மரணம். அடுத்திருக்கும் ஆசிரியர்களின் உள்ளங்களிலும் பூகம்பத்தை விதைக்கும் கொடிய மரணம். அதே பள்ளியிலோ, வேறு பள்ளிகளிலோ வேறு பிஞ்சுக் குழந்தைகள் பலரும் இர்ஃபான்களோ என்று சந்தேகப் பார்வைக்குள் சிக்கிவிடக் கூடும் சித்திரவதையை சாத்தியமாக்கிவிட்ட மரணம்.

அன்பின் வழியது உயிர்நிலை என்றனர் நமது முன்னோர்கள். எதிர்காலத்தைப் பற்றிப் பட்டியலிடும் நிபுணர்களின் வழிகாட்டிப் புத்தகங்கள் முழுக்க முடிவற்ற பந்தயங்களும், பல முனை போட்டிகளும், வெற்றி குறித்த துரத்தல்களும், தோல்வி குறித்த மிரட்டல்களும், இலக்குகளும், குறியீடுகளும், மைல் கற்களுமே நிறைந்திருக்க நேயம், அன்பு போன்ற சொற்கள் அறவே தவிர்க்கப் பட்டிருப்பதை நிம்மதியற்றுப் பார்க்கிறோம்.  

எந்தக் குழந்தையின் போக்கு குறித்தும் அட்டையில் எழுதி அதன் கழுத்தில் தொங்கவிடுமுன் அந்தத் தீர்ப்பளிக்கும் நீதிபதியா நாம் என்று யோசிப்போம்! சமூகத்தின் பிரதிபலிப்பைக் காட்டும் கண்ணாடிகள் தான் அடுத்தடுத்த தலைமுறை என்பதை உணர்வோம். பள்ளிகள் வர்த்தகக் கடைகளாயிருப்பதை மாற்றி கல்வி நிலையங்களாக மீட்டெடுப்போம்.

துள்ளத் துடிக்க மரணத்தை எதிர்கொண்ட உமாமகேஸ்வரியிடம் மன்றாடி மன்னிப்பு கேட்போம். இர்ஃபானை இப்படி கொண்டு நிறுத்திய சூழலிடமும்!

************

நன்றி: தீக்கதிர்: பிப்ரவரி 11

Saturday, February 5, 2011

தமிழ் கற்றல்

tamil சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் பள்ளித் தமிழாசிரியர்களுடன் உரையாட நேர்ந்தது அல்லது வாய்த்தது.அவர்களில் பலருக்கும் தமிழாசிரியர் என்றால் பள்ளிகளில் யாரும் மதிப்பதில்லை.அறிவியல் பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்களுக்கு இருக்கும் மரியாதையும் மதிப்பும் எங்களுக்கு இல்லை என்று மிக வருந்திப் பேசினார்கள்.மொழிப்பாடம் என்று வந்தாலும் ஆங்கில ஆசிரியர்களுக்கு இருக்கும் மரியாதை எங்களுக்கு இல்லை.காலை வகுப்புக்கள் எல்லாம் கணிதம்,அறிவியல் போன்ற பாடங்களுக்கே ஒதுக்குகிறார்கள்.தமிழ் வகுப்புக்கள் எல்லாம் மதிய நேரமே தருகிறார்கள்.கேட்டால் ’தமிழ்தானே’ என்கிறார்கள். என்று பலவிதமான மனக்குமுறல்களை அவர்கள் ’கொட்டினார்கள்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழகமெங்கும் பஞ்சாயத்துக் கட்டிடங்கள் உட்பட அனைத்து அரசுக் கட்டிடங்களிலும் நியான் விளக்குகள் தமிழ் வாழ்க என்று மின்னிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் செம்மொழி மாநாட்டைப் பார்த்த அலுப்பே நமக்கு இன்னும் தீராத ஒரு பின்னணியில் இந்தத் தமிழாசிரியர்களின் உள்ளத்துக் குமுறல்களைக் கேட்க நேர்ந்தது.

நாம் பின்னோக்கிப் போனால் ஒரு காலத்தில் படிப்பென்றாலே அது தமிழ் இலக்கியம் படிப்பதுதான் என்று இருந்ததை அறிகிறோம்.உ.வே.சாவின் என் சரித்திரத்தில் அவர் கற்ற கதையை விரிவாகச் சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.ஆனாலும் நீண்ட்ந் நெடுங்காலமாகத் தமிழ் கற்றல் அல்லது கற்பித்தல் என்றாலே ஆத்திசூடி,கொன்றைவேந்தன்,வாக்குண்டாம், நல்வழி,நன்னெறி போன்ற போதனா இலக்கியப்பாடங்களை நெட்டுருச்செய்யும் பணி என்றே இருந்துள்ளது.நவீன காலத்தில் இந்தியா நுழைந்தபின்னும் கூட தமிழ் கற்பித்தலில் அறிவியல்பூர்வமான மாற்றங்கள் நிகழவில்லை.

அதற்கு முக்கிய காரணம் நம் சூழல்தான். தமிழ் என்பது மொழியாக மட்டுமின்றி ஒரு அரசியல் அணிதிரட்டலுக்கான சாதனமாகவும் பயன்படுத்தப்பட்ட சூழல் இந்தக் கற்பித்தல் முறையையும் பாதித்துள்ளது. மொழி இனத்தோடும்,இன உணர்வு கொள்வதோடும் இணைக்கப்பட்டதில் மாற்றங்களை மறுத்துப மொழியின் புனிதம் / தூய்மை காக்கிற மனநிலையோடும் பிணைக்கப்பட்டது.நாங்கள் அறிவொளி இயக்கத்தில் முதல் பாடமாக ஆனா ஆவன்னா வைக்காமல் பட்டா,படி என்று வைத்தபோதும் தமிழ்சார் அறிவாளிகளிடத்திருந்து எதிர்ப்பு வந்தது.70களில் இலங்கையில் தமிழ் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளைப் புகுத்திய போது தமிழறிஞர்களிடமிருந்து வந்த கடும் எதிர்ப்பின் காரணமாக அது கைவிடப்பட்டது பற்றி ஒரு கட்டுரையில் பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுகின்றார்.

திராவிட இயக்க அரசியலின் ஒரு பகுதியாக தமிழாசிரியர் என்பவர் இன உணர்வு மிக்கவராக /இன உணர்வை ஊட்டுகிற சமூகக்கடமையை ஆற்றுபவராக சமூகத்தில் மதிக்கத்தக்க ஒரு மனிதராக முன்னிறுத்தப்பட்டார்.ஆகவே தமிழாசிரியர்கள் ஒரு காலகட்டம் வரை தமிழகத்தில் மதிப்புப் பெற்றவர்களாகவே இருந்தனர்என்பது உண்மை.மு.வ, நா.பார்த்தசாரதி போன்றோரின் பல நாவல்களில் கதாநாயகர்களாகத் தமிழ் படித்த இளைஞர்களும் தமிழாசிரியர்களும் நடமாடினார்கள்.

காலமாற்றத்தில் திராவிட இயக்கத்தாரின் கேமிரா தமிழாசிரியர்களை விட்டு விட்டு வேறு திசைகளை நோக்கிக் கவனம் குவிக்கப் போய்விட்ட பின்னணியில் தமிழாசான்கள் ‘கைவிடப்பட்டவர்கள்’ ஆனார்கள்.பட்டிமன்றங்களின் பேசுபொருளாக தமிழ்க் காவியங்களும் காப்பியங்களும் இருந்தவரைக்கும் அங்கேயும் தமிழாசிரியர்களின் கொடி பறந்த காலம் இருந்தது.மாமியாரா மருமகளா பழைய சினிமாவா புதிய சினிமாவா என்று பட்டிமண்டபத்துப் பாடு பொருள்களும் மாறிவிட்டபோது அவர்களுக்கு அங்கேயும் இடமில்லை.தெருக்களில் தமிழ் கேட்கக் கூட்டமுமில்லை என்றானது.எல்லாம் ஒருசேரத் தமிழகத்தில் நடந்து முடிந்த போது வெந்த புண்ணில் வேல்பாய்ச்ச மைய அரசின் கல்விக்கொள்கைகளில் மாற்றம் ஏற்பட தொழிற்கல்வி முக்கிய இடம் பிடிக்க மருத்துவம்,பொறியியல் நோக்கித் தமிழகமே தொங்கோட்டம் ஓடத் தமிழின் நிலையும் தமிழாசிரியர் நிலையும் கல்விப்புலத்துக்கு உள்ளேயும் சமூக வெளியிலும் படு கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டன.ஆங்கிலத்திலும் கூட அமெரிக்கன் ஆங்கிலம்தான் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளதையும் அவதானிக்க வேண்டும்.

இத்தனைக்கும் மேலாக தமிழாசிரியர்கள் பாவம் ,மரபு வழிப்பட்ட தமிழ் கற்பித்தல் மூலம் ஆசிரியர்களாகி, வேறு ஏதும் தெரியாத அப்பாவிகளாக பள்ளிகளில் உலவிவரும் நிலை ஏற்பட்டுள்ளது. அறிவியல்,கணிதம்,பொருளாதரம் கற்றோருக்குக் கொஞ்சமாவது தமிழும் தமிழ் இலக்கணமும் இலக்கியமும் தெரிந்துதான் இருக்கிறது.ஆனால் தமிழாசிரியருக்கோ தமிழைத்தவிர வேறு எதுவுமே தெரியாது.தமிழிலும் நவீன இலக்கியம் பற்றி ஒன்றும் தெரியாது.70களுக்குப் பிறகுதான் நமது பல்கலைக்கழகங்கள் சிறுகதை,புதுக்கவிதை போன்றவற்றையும் இலக்கியம்தான் தமிழ்தான் என்று ஏற்றுப் பல்கலைப்படியேற அனுமதித்தன.

இன்று தமிழ் இலக்கிய உலகில் ஆண்மொழி,பெண் மொழி,உடல்மொழி,ஆதிக்கசாதி மொழி , ஒடுக்கப்பட்டோர் மொழி என்று என்னவெல்லாமோ வந்து விட்டது.அது எதுவுமே நமது தமிழாசிரியர்களுக்குத் தெரியாது.மொழியியலில் எத்தனை தூரம் சென்று விட்டார்கள்.நமக்குத் தெரிந்த நோம் சாம்ஸ்கியும் லெவிஸ்ட்ராசும் தமிழாசிரியர் யாருக்குமே தெரியாது. நாஞ்சில்நாடனைக்கூடத் தெரியாத தமிழாசிரியர்கள்தான் நம் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிக்கிறார்கள்.

சூழலும் சரியில்லை.தாமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதை நம் அன்புக்குரிய தமிழாசான்களுக்கு எவரேனும் புரியும் வகையில் எடுத்துரைத்து அவர்கள் கரை சேர வழி வகுக்க வேண்டும்.தமிழ்ப் பாடம் கற்பிப்போர் வெறும் மொழியை-அதன் கட்டமைப்பை மட்டும் கற்றுத்தருபவர்களாக அல்லாமல் சிந்தனையைத் தூண்டுபவராக பிள்ளைகளின் படைப்பாற்றலைத் தூண்டுபவராக வளர்த்தெடுப்பவராக சதா தன்னைத் தற்காலப்படுத்திக்கொள்பவராக சகல துறைசார் அறிவும் பெற்றவராக இருப்பது மிக மிக அவசியம்.வேறு பாட ஆசிரியர்களைப்பார்க்கிலும் தமிழாசிரியரே நமக்கு மிக மிக முக்கியமானவர் என்பதைத் தமிழ்ச் சமூகமும் உணர வேண்டும்.மொழி ,பண்பாட்டின் விளைபொருளாகவும் பண்பாட்டை உருவாக்கும் முக்கியக் கூறாகவும் பண்பாட்டு அடையாளமாகவும் பண்பாட்டு அம்சங்களைத் தலைமுறை தலைமுறைக்கும் எடுத்துச்செல்லும் சக்திமிக்க(காலத்தை ஊடறுத்துப்பாயும்) ஊடகமாகவும் திகழ்கிறது என்பதை தமிழர்களாகிய நாம் உணரவில்லை என்பதன் அடையாளமாகத்தான் இத்தனை பலவீனமான தமிழாசிரியர்களை நம் பிள்ளைகளுக்கு நாம் தந்திருக்கும் நிலை இருக்கிறது.

இது ரொம்ப ரொம்ப முக்கியமான ,கவலைக்குரிய ஒன்றாக எனக்குப்படுகிறது.

Thursday, June 3, 2010

கற்றது கைம்மண்ணளவு

 

மே மாதத்தில் வழக்கத்தை விட அதிகமான அலைச்சல்தான். செம்மொழிக்கான மக்கள் இயக்கம் என்றபேரில் 300 இடங்களில் பொதுக்கூட்டம்,கருத்தரங்கு என்று களம் இறங்கியதில் சுற்று அதிகமாகிவிட்டது.சுற்றுக்கு நடுவே மதுரையில் சுவர் விளம்பரம் ஒன்று பார்த்தேன்.கோவையில் செம்மொழி மாநாடு முத்தமிழ் அறிஞர் மு.க.அழகிரி அழைக்கிறார் என்று மாபெரும் எழுத்துக்களில் அவ்விளம்பரம் என்னை ஈர்த்தது.கோவையில் கலைஞர் கருணாநிதி அவர்களின் முழு உருவப்படம் திருவள்ளுவர் கெட்-அப்பில் வரைந்து வைத்திருக்கிறார்கள்.மாநாடு நெருங்க நெருங்க எல்லாத்தமிழ் அறிஞர்களின் கெட் அப்பிலும் ஏன் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து,நடராசன்,சின்னச்சாமி ஆகியோரின் கெட்-அப்பிலும் கூட கலைஞர் மற்றும் அவரது குடும்பத்தாரின் படங்களை வரைந்து வைத்துத் தாகமெடுத்த தமிழ் நெஞ்சங்களில் பால் வார்ப்பார்கள் என்று தோன்றுகிறது. எதையும் செய்துவிட்டுப்போங்க சாமிகளா .தமிழ் மொழிக்காகவும் இம்மாநாட்டில் ஏதாவது சில உருப்படியான திட்டங்களை அறிவிப்பு அளவிலாவது செய்துவிடுங்கள் போதும் என்று எனக்குள்ளே பேசிக்கொண்டேன்.

srv8

சரி.போகட்டும்.இப்போது நான் பேச வந்த விசயம் அதுவல்ல.தினசரி பஸ்ஸிலோ ரயிலிலோ மே மாதத்தின் எல்லா இரவுகளையும் வியர்வைக் கசகசப்போடு தூங்கியும் தூங்காமலும் கழித்துக்கொண்டிருந்த என்னைச் சிறைப்பிடித்துத் திருச்சிப்பக்கம் சமயபுரத்தில் இயங்கும் எஸ்.ஆர்.வி.மெட்ரிக் பள்ளியில் 5 நாள் அடைத்துப்போட்டார் அதன் முதல்வரும் என் இனிய நண்பருமான துளசிதாசன்.பிளஸ் டூ செல்லும் மாணவ-மாணவிகளுக்கு நான்கு நாட்கள் பயிலரங்கு ஒன்றை நடத்தித்தரும் வாய்ப்பை அவர் எனக்கு வழங்கினார்.ஞாநியும் நானும் சேர்ந்து ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து அதை நடத்தித்தரணும் என்று கேட்டிருந்தார்.80 மாணவிகள்,40 மாணவர்கள் என 120 பேருக்கான பயிலரங்கு அது.ஓரளவு வசதியான குடும்பப்பின்னணியிலிருந்து வந்துள்ள மாணவர்கள் அவர்கள்.வறுமையின் ரேகை படியாத முகங்கள்தாம்.

srv9

’வெளிக் காற்று உள்ளே வரட்டும் ’என்று அப்பயிலரங்கிற்கு ஒரு முழக்கத்தை வைத்தோம். பாடம்,பாடத்திட்டம் சம்பந்தமாக அப்பயிலரங்கில் எதுவும் இருக்காது.வகுப்பறைக்குள் அனுமதி மறுக்கப்பட்ட சமூக யதார்த்தங்களின் ஈரம் பாரித்த காற்று இம்மாணவர்களின் மனங்களைத் தழுவிட வேண்டும் என்று திட்டமிட்டோம்.ஓரிருவரைத்தவிர அநேகமாக கல்விப்புலம் சாராத கருத்தாளர்களையே இப்பயிலரங்கிற்கு அழைத்தோம்.சமூக நீதி, பெண்ணுரிமை,சுற்றுச்சூழல், அறிவியல் பார்வை,சினிமாவைப்புரிந்து கொள்ளுதல், படைப்பாற்றலைக் கிளர்த்துதல் என்று கட்டாயமாகச் சென்று சேர வேண்டியவை எனச் சிலவற்றைத் தீர்மானித்தோம்.பாரதி கிருஷ்ணகுமார்,எஸ்.ராமகிருஷ்ணன்,வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ், கல்பாக்கம் அணு விஞ்ஞானி சு.சீனிவாசன்,நாவலாசிரியர் சு.வெங்கடேசன், பேச்சாற்றல் மிக்க நந்தலாலா,மக்கள் அறிவியல் இயக்கத்தோழர்கள் இராதா (சமம்-மாநிலச்செயலர்),ரத்தின விஜயன்(வாசல் பதிப்பகம்)அமல்ராஜ்,காடு வா வா என்றழைப்பதைக் கூற முகம்மது அலி, மனித குல வரலாற்றைக்கூற எஸ்.சகஸ்ரநாமம் , வசனகர்த்தா பாஸ்கர்சக்தி,அப்புறம் மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஷைலஜா,எழுத்தாளர் ஏஸ்.பத்மாவதி ,பதிவு செய்ய புகைப்படக் கலைஞர் எஸ்.ஆர்,எழுத்தாளர் ஆரிசன் என ஒரு பெரும்படையே வந்து இறங்கியது. கல்விப்புலத்தில் சிறப்பாக மின்னுகிற அம்மாணவ நண்பர்களுக்கு இச்சமூகத்தை அறிமுகம் செய்ய ஒவ்வொருவரும் முயன்றோம்.முறைசார் கல்விமுறை தீட்டியிருந்த அவர்களின் புத்திசாலித்தனத்தின் மீது சமூகப்பிரக்ஞை என்னும் உள்ளுறை கவியுமாறு செய்தோம்.அல்லது முயன்றோம். நிறைவுவிழாவில் எஸ்.ராமகிருஷ்ணனைப் பேச அழைத்தோம்.

அம்முகாம் பற்றி முழுசாக இங்கு எழுதப்போவதில்லை.இரண்டு நிகழ்வுகள் அம்முகாமில் என்றும் மறக்க முடியாத நினைவுகளாக என் மனதில் ஆழப்பதிந்து நிற்கின்றன. அவை பற்றி மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

1.வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ் என்னும் மாமனிதன்

srv1

’அம்பேத்கரைப்படித்தேன் ஐ.ஏ.எஸ் ஆனேன் ’என்று பத்திரிகைகளில் பேட்டிகள் கொடுத்த மனிதர் வீரபாண்டியன் என்று மட்டுமே அறிந்திருந்த நான் இப்பயிலரங்கில் மாணவர்களோடு பேச வந்திருந்த அவரை நேரில் சந்திக்கும் பேறு பெற்றேன்.என் மகன் வயதை ஒத்த ஓர் இளைஞர்.இவர் இப்படியான மனிதராக இருப்பார் என்று மனம் வரைந்து வைத்திருந்த சித்திரங்கள் எல்லாவற்றையும் அழித்து விட்டார் வீரபாண்டி.அவர் பேசப்பேச ஒவ்வொரு சித்திரமாக அழிந்துகொண்டே வந்தது.

மதுரையில் ஒரு அருந்ததியர் சமூகக் குடும்பத்தில் துப்புரவுப்பணியாளர்களான பெற்றொருக்கு மகனாகப் பிறந்து ஐந்தாம் வகுப்புப்படித்த நாள் முதல் (11 வயது) தினசரி கூலி வேலைக்குப் போய்க்கொண்டே படித்த மாணவர்.சிறிய ஓட்டல்களில் துப்புரவுப்பணி,கொஞ்சம் வளர்ந்ததும் மாட்டுக்கறிக்கடையில் கசாப்பு வேலை,புரோட்டாக் கடைகளில் ராத்திரி ஷிப்ட் என்று என்ன வேலை கிடைத்தாலும் செய்து கொண்டே படித்தவர்.படிக்க வேண்டாய்யா ராசா வேலை மட்டும் பாரு என்று சதா சொல்லிக்கொண்டே இருந்த தாயின் அறியாக்குரலைப் புன்னகையோடு புறக்கணித்துப் படித்த மாணவர்.ராத்திரி வீட்டுப்பாடம் என்று படித்ததே இல்லை.பள்ளிக்கூடத்தில் கேட்கும் பாடம் மட்டும்தான்.ராப்பாடமே கிடையாது என்னும்போது ப்ளஸ் டூ மாணவர்களுக்குக் கிட்டும் எக்ஸ்ட்ரா ட்யூஷன் என்பதெல்லாம் கற்பனையே செய்ய வாய்ப்பில்லை.அவர்களுடைய காலனியில் இருந்த மதிமுக அலுவலகம,விடுதலைச் சிறுத்தைககள் அலுவலகம் போன்ற இடங்களில் கிடைத்த பத்திரிகைகள்,புத்தகங்களைப் படித்துப் பெற்ற பொது அறிவு இவற்றோடு ப்ளஸ் டூ வில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற மாணவராக முதல்வரிடம் ஒரு லட்சரூபாய் பரிசு பெற்ற வெற்றி.ஆங்கிலம் ஒரு வார்த்தை கூடப் பேசத்தெரியாது.புரியாது.மதுரை மாநகராட்சிப் பள்ளிப் படிப்பு முடித்து தோழர்.தொல்.திருமாவளவன்,அகரம் பவுண்டேஷன் சென்னை ,மற்றும் சில திராவிடர் கழகத் தோழர்களின் உதவியோடு சென்னை லயோலா கல்லூரியில் சமூகவியல் பட்டம் பெற்று வீதி நாடகக்குழுக்க்களோடும் தொண்டு நிறுவனங்களோடும் தலித் அமைப்புகளின் போராட்டங்களோடும் சிலகாலம் கழித்து தன் ஐந்தாவது முயற்சியில் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றார்.இது நாலு வரியில் சொல்லப்பட்ட கதைச்சுருக்கம்.

ஆனால் இந்த ஒவ்வொரு நாளையும் அவர் கடந்து வந்த கணங்களின் ரணங்கள் பற்றி அவர் சொல்லாமலே நம்மால் புரிந்து கொள்ள முடிந்ததில் கண்ணீர் பெருகியது.அவர் எனக்கு முன்னால் நின்று மாணவர்களோடு பேசிக்கொண்டே இருக்க நான் பின்னால் உட்கார்ந்து மாணவர்களுக்குத் தெரியாமல் மறைத்துக் கண்களைக் கர்சீப்பால் துடைத்துக்கொண்டும் செருமிக்கொண்டும் பின் பக்கம் திரும்பிக்கொண்டுமாக அந்தப் பையனின் வார்த்தைகளில் விரிந்த வாழ்க்கையைச் செரிக்க முடியாமல் கண்ணீரால் என் குற்ற மனதைக் கழுவிக்கொண்டிருந்தேன்.ப்ளஸ் டூ படிக்கும்போது மதுரை அரவிந்த் மருத்துவமனையில் அம்மாவோடு கக்கூஸ் கழுவும் பணியில் இருந்தேன் என்று அவர் சொன்ன போது உடைந்துபோனேன். அவர் கக்கூஸ் கழுவிய அதே ஆண்டில் ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருந்த என் மகனை வண்டியில் அழைத்துக்கொண்டு திருநெல்வேலியில் சிறப்பு ட்யூஷனுக்கு அழைத்துப்போன பொறுப்புணர்ச்சி இப்போது பெரும் பாரமாக மனதை அழுத்தத்துவங்கியிருந்தது. என் இன்னொரு மகன் இப்படி கக்கூஸ் கழுவியபடி பாடம் படித்திருக்கிறான் என்கிற தகவல் கூடத்தெரியாமல் அல்லது தெரிந்துகொள்ள முயலக்கூட இல்லாமல் ஒரு அவமானகரமான வாழ்க்கையை நான் வாழ்ந்துவிட்டேனே.இத்தனை நாள் கழித்தும் இவ்வரிகளை எழுதும் இத்தருணத்திலும் கூடக் கண்ணீரைக் கட்டுப்படுத்திட முடியவில்லை. எங்கே போய் இப்பாவத்தை நாம் கழுவப்போகிறோம்? நாம் அறியாத இத்தேசத்தின் எத்தனை ஓரங்களில் நம் பிள்ளைகள் வீரபாண்டியனைப்போல ஏதோ ஒரு உடல் உழைப்புடனும் சாதியம் தரும் அவமானங்களோடும் பாடப்புத்தகங்களைக் கையில் பிடித்திருக்கப் போராடிக் கொண்டிருக்கின்றனரோ என்கிற எண்ணமே அவர் பேசிக்கொண்டிருந்தபோது என் மனதில் கண்ணீராய் ஓடிக்கொண்டிருந்தது.ஒரு வீரபாண்டி ஜெயித்து விட்டார்.இன்னும் எத்தனை எத்தனை......

நம் பள்ளிக்கூடங்களும் கல்விமுறையும் முக்கியம் முக்கியம் என்று வற்புறுத்தி நம் பிள்ளைகளைச் சித்ரவதை செய்யும் எதையும் எல்லாவற்றையும் நிராகரித்து அதே கல்விப்புலத்தில் தன் சொந்த சொந்த சொந்த உழைப்பால் மட்டுமே வென்று நாம் கட்டமைத்த கல்விசார்ந்த எல்லாம் பொய்பொய்பொய் என்று நிரூபித்த ரத்த சாட்சியாக வீரபாண்டியன் இச்சமூகத்தின் முன் கம்பீரமாக நிற்கிறார்.

சமீப ஆண்டுகளாக அருந்ததியர் மக்கள் வாழ்வுரிமைக்கான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து வருவதால் அதன் அங்கமாக எனக்கும் அவர்களின் வாழ்நிலை பற்றிச் சில நேரடி அனுபவங்களும் பார்வைகளும் உண்டு.என்றாலும் என் 55 வயது அனுபவத்தில் நான் சந்தித்த மனிதர்களிலேயே மகத்தானவராக வீரபாண்டியன் இன்று என் மனதில் அழுந்தக்கால் ஊன்றி நிற்கிறார்.காரணம் -அவரது இத்தகைய வாழ்க்கை – அதில் இன்று அவர் பெற்றுள்ள ஒரு வெற்றி - என்று மட்டும் கூற முடியாது.

தான் யார் ? தான் யாரின் பிரதிநிதி ? காலம் தன்னை ஏன் இப்படியாக வடிவமைத்திருக்கிறது? தன் வாழ்க்கை எதற்காக? தன் வாழ்வின் அர்த்தம் என்ன? நான் எதன் சாட்சியாக இங்கே நிற்கிறேன்? என்பது பற்றிய முழுமையான சுய பிரக்ஞையோடு வீரபாண்டியன் இருக்கிறார்.உலகத்தின் எந்தப் பெரும் ஞானியும் அடைய முடியாத தன்னை உணர்ந்த நிலை இது.அப்பா! அதிர்ந்து போனது.அதிர்ந்து கொண்டே இருக்கிறது மனது.எதையும் கொஞ்சம் ஓவராக உணர்ச்சிவயப்பட்டு பேசிவிடுகிற ஆள்தான் நான்.ஆனாலும் வீரபாண்டியனை நான் சந்தித்தபின் அடைந்த மனநிலையை மேலே நான் கொட்டியுள்ள வார்த்தைகளால் முழுமையாகப் படம் பிடிக்க முடியவில்லை என்றே சொல்லுவேன்.

அவர் பேசி முடிக்கையில் தங்கை கே.வி.ஷைலஜா எழுந்து சென்று வீரபாண்டியனின் கையைப்பற்றிக்கொண்டு ( மாணவர்களை நோக்கி ) இந்தக்கை டேபிள் துடைத்தது இந்தக்கை கக்கூஸ் கழுவியது இந்தக்கை மாட்டுக்கறி வெட்டியது இனிமேல் இந்தக்கை அரசாங்கத்தின் கோப்புகளில் அர்த்தமுள்ள கையெழுத்தை இடப்போகிறது.எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம் என்று சொன்னார்.அந்த நிமிடம் துளசிதாஸ் உள்ளிட்ட பலர் கண் கலங்கியதைக் கண்டேன். ஷைலஜாவின் அந்த dramatic finishing அன்று அவசியமானதாகவும் கச்சிதமாகவும் அமைந்தது.

அவர் விடைபெற்றுக்காரில் ஏறியபோது என் மனதில் ஓடிய வார்த்தைகள் “ உலகின் எந்த சக்தியாலும் வெல்ல முடியாத மனிதன் இவன்”

srv3

வாழ்வாரை வாழ்த்துகிற இந்த உலகம் வெற்றி பெற்றுவிட்ட வீரபாண்டியனை இனிப் போற்றத்தான் செய்யும்- ஒரு அளவுக்கு. நம் கவனம் (நம் என்பதில் இப்போது வீரபாண்டியனும் அடக்கம்) இன்னும் வெளிச்சத்துக்கு வராத ஆயிரமாயிரம் வீரபாண்டியன்களைத் தேடிக்கண்டுபிடித்துக் கை கொடுப்பதை நோக்கி இனியாவது திரும்ப வேண்டும்.

2. மக்கள் சந்திப்பு இயக்கம்.

மிக முக்கியமான ஆளுமைகளின் உரைகள் அவர்களோடு மாணவர்களின் கலந்துரையாடல்கள் இவற்றோடு ஒரு மாலைப்பொழுது முழுவதையும் ஒரு எளிய கிராமத்து மக்களோடு மாணவ/மாணவியர் கழிக்கும்படியாகப் பயிலரங்கை வடிவமைத்தோம்.

சமயபுரத்தை அடுத்த ஊத்தங்கால் என்னும் கிராமத்துக்கு மாணவர்களை அழைத்துச்சென்று இரண்டு மாணவிகள் ஒரு மாணவர் என்கிற விதமாக மூன்று மூன்றுபேர் கொண்ட 40 குழுக்களாக அவர்களைப் பிரித்து ஒவ்வொரு குழுவும் அக்கிராமத்தின் ஒரு குடிசைக்குள் சென்று அவர்களோடு இரண்டு மணிநேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு வரவேண்டும் என்று அனுப்பினோம்.(எல்லாம் அறிவொளி இயக்கம் கற்றுத்தந்த பாடம்தான்).கேள்வித்தாள் மாதிரியோ பேட்டி எடுப்பது மாதிரியோ இருக்கக்கூடாது.நம் சொந்த மக்களோடு கலந்துறவாடி வரவேண்டும் என்று சொல்லி அனுப்பினோம்.இரவு வெகுநேரம் வர நீடித்தது அந்தச் சந்திப்பு.

srv11

மறுநாள் தங்கள் மனப்பதிவுகளை மாணவர்களும் மாணவிகளும் வெளிப்படுத்தியபோது பலர் உடைந்து அழுதார்கள்.பலர் வார்த்தைகளை அழுத்தும் மன உணர்வால் தடுமாறினார்கள். நாங்களும் பிறரும் நான்குநாட்களில் வகுப்பில் எண்ணற்ற உரைகளின் மூலம் கற்றுக்கொடுக்க முடியாத பல சமூக உண்மைகளை இம்மக்கள் சந்திப்பு அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருந்ததைக் கண்டோம்.இம்மாணவர்கள் எல்லோருமே மத்தியதர வர்க்கத்து-உயர் மத்திய தரவர்க்கத்து வீட்டுப்பிள்ளைகள்.எல்லோருமே நகர்ப்புறம் சார்ந்த வாழ்க்கையில் பிறந்து வளர்ந்தவர்கள்.கஷ்டம் தெரியாமல் வளர்ந்த பிள்ளைகள் என்று சொல்லலாம்.அவர்கள் கண்ட முதல் கிராமத்து வாழ்க்கை அனுபவம் இதுவாகத்தான் இருந்தது.

ஒரு குழுவினர் தாங்கள் சென்ற வீட்டுப் பெண்களும் குழந்தைகளும் தினசரி இரவில் தெருவில்தான் படுத்துறங்குவார்கள் என்கிற யதார்த்தம் கண்டு மனம் கலங்கி வந்தார்கள். அடிக்கடி ஈரம் பாரித்து விடும் தன்மை கொண்ட தங்கள் வீட்டு மண் தரையை விட ஊராட்சி போட்டுள்ள சிமிண்ட் தெருவில் படுப்பது உயர்ந்தது அல்லவா என்கிற அவர்களது கேள்வி தங்களை நிலைகுலையச்செய்ததாகக் கூறினார்கள்.வீட்டை விட தெரு நல்லது என்கிற ஒரு நிலைமை எவ்வளவு மோசமானது.அந்தக் குடிசையில் ஒரே ஒரு இலவச பல்பு எரிந்து கொண்டிருக்கிறது.அந்த வீட்டுக் குழந்தைகள் அந்த வீட்டில் அந்த வெளிச்சத்தில் உட்கார்ந்து எப்படி ஹோம் ஒர்க் செய்து எப்படிப் படித்து எங்களை மாதிரி மாணவர்களோடெல்லாம் போட்டி போடுவார்கள்?

இன்னொரு வீட்டில் ஆண்கள் எல்லோருமே குடிகாரர்கள்.அப்பெண்களின் கண்ணீர்க்கதையை முழுசாகக் கேட்க முடியாத மனநிலையுடன் அழுதபடி ஓடி வந்திருந்தது ஒரு குழு. கடன்பட்டுப் படிக்க வைத்து பொறியியல் பட்டதாரியாகிவிட்ட தன் மகன் அன்றாடம் குடித்துவிட்டுத் தெருவில் கிடப்பதையும் அவனைத்தூக்கிக் கொண்டு வந்து சேர்ப்பதே வாழ்வாகிப்போன ஒரு தாய்க்கு என்ன ஆறுதலும் சொல்ல முடியாமல் துக்கத்துடன் திரும்பியிருந்தது ஒரு குழு. அந்தக் குடிகார பொறியியல் பட்டதாரி அல்ல வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ் தான் தங்கள் ரோல் மாடல் என்றார்கள்.

கல் உடைக்கும் தொழிலாளியான குடும்பத்தலைவர் கல் தெறித்து இரு கண்களும் குருடாகிப்போக எந்த சேமிப்புக்கும் வழியற்ற அவர்கள் வாழ்க்கை வறுமையின் கோரப்பிடிக்குள் சிதைந்து கொண்டிருப்பதைக் கண்ணாரக்கண்டு திரும்பிய குழு இப்படியெல்லாமா வாழ்கிறார்கள் எங்கள் சக மனிதர்கள் என்று விம்மியது.

நம்முடைய பாடத்திட்டத்தில் அருமைத் தம்பி வீரபாண்டியனின் வாழ்க்கையைச் சேர்ப்பது எவ்வளவு முக்கியம் என்று எனக்குத் தோன்றுகிறது.அதே போல கிராமத்துக்கு அழைத்துச்சென்று அசலான வாழ்க்கையை மாதம் ஒருமுறையேனும் மாணவமணிகள் கண்டுணர்ந்து திரும்புவதையும் எல்லா உயர்வகுப்புப் பாடத்திட்டத்தின் பகுதியாக மாற்றுவதும் எவ்வளவு முக்கியமான தேவை என்று அம்முகாமின்போது உணர்ந்தேன்.ஆனால் அதையெல்லாம் செய்ய ஒரு அரசியல் மன உறுதியுள்ள அரசாங்கம் நாட்டில் இருக்க வேண்டும்.நினைத்தால் பெரும் ஏக்கப்பெருமூச்சே மிஞ்சுகிறது.

மாணவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் இதுபோன்ற மக்கள் சந்திப்பு அவசியம் . சாய்நாத் போன்றவர்கள் எழுதும் கட்டுரைகள் வாயிலாக மட்டுமே நம் சக மனிதர்களின் அவலவாழ்வை ’அறிந்து’ வரும் நாம் சில மணி நேரம் அவர்கள் வாழும் பகுதிக்குச் சென்று அவர்களோடு வாழ்ந்து பார்த்தால் மட்டுமே நம் சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாகும் நிலையை ‘ உணர’ முடியும்.பிறர் வலியை உணரவும் நமக்குப் பயிற்சி அவசியம்.

இப்படி ஒரு பயிலரங்கை நடத்தக் கனாக்கண்ட நண்பர் துளசிதாசும் எங்களுக்கு முழுச்சுதந்திரம் அளித்து எங்கள் விருப்பம்போல இப்பயிலரங்கை வடிவமைக்கச் சம்மதித்த நிர்வாகமும் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள். அறிவுலகிலிருந்து ஞானியும் தெருப்புழுதியிலிருந்து நானும் என இருவரும் கூட்டாக இப்பயிலரங்கை வடிவமைத்தது மிக முக்கியமான ஒன்றாக எனக்குப்படுகிறது.இரண்டும் தங்கள் பிள்ளைகளுக்குத் தேவை என்று அவர்கள் நினைத்தது பெரிது.

Monday, October 19, 2009

மு.சித்ராதேவிக்கு உதவுங்கள்

யார் சிரித்தால் தீபாவளி என்கிற என் முந்தைய பதிவைப் படித்துவிட்டு ஆஸ்திரேலியாவிலிருந்து அமிர்தவர்ஷினி அம்மா எனக்கொரு மின்கடிதம் அனுப்பினார்கள்.கவிதா என்கிற அந்த பட்டாசு விபத்தில் கைகளும் முகமும் சிதையுண்ட பெண்ணுக்கு அவருடைய வெளிநாடுவாழ் நண்பர்கள் மூலம் உதவிகள் செய்ய விரும்புவதாகவும், ஆகவே அந்தப்பெண்ணின் முழு முகவரி மற்றும் தேவைகள் பற்றி அறியத்தருமாறு கேட்டிருந்தார். உண்மையிலேயே தாயுள்ளத்தோடு அவர் எழுதிய வரிகள் என்னை நெகிழ வைத்தன. ஆகவே கவிதா என்று நான் குறிப்பிட்ட மு.சித்ராதேவி பற்றிய விபரங்களை அவருக்கு இ மெயிலில் அனுப்பாமல் இங்கேயே எல்லோருக்குமாகப் பதிவு செய்கிறேன்.சித்ராதேவியின் புகைப்படத்தையும் தந்துள்ளேன்.

சித்ராதேவிக்கு உதவ விரும்பும் உள் மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் நேரடியாக அவருடைய குடும்பத்தாரைத் தொடர்பு கொண்டு உதவிகள் செய்திட வேண்டுகிறேன்.

பெயர் – மு.சித்ராதேவி /வயது - 17

தாயார் –சுந்தராம்பாள். தந்தை – க.முனியசாமி

முகவரி – 109/44 பி. புதுத்தெரு,

அம்மன் கோவில்பட்டி பாகம்,சிவகாசி வட்டம்

விருதுநகர் மாவட்டம்,தமிழ்நாடு,இந்தியா

பின் கோடு-626123

கல்வித்தகுதி- ஏழாம் வகுப்பு (இடை நிற்றல்-விபத்து காரணமாக

முகத்தில் ஏற்பட்ட காயம் சக மாணவர்கள்

பயந்ததன் காரணமாக பள்ளி செல்லவில்லை)

உடன் பிறந்தோர்- மு.கார்த்தீஸ்வரி (24)-மணமாகிவிட்டது

மு.மகாலட்சுமி(22)-மணமாகவில்லை

மு.ராஜா (21)- மணமாகவில்லை-(ரூ 1200

மாதச்சம்பளத்துக்கு ஒரு மருந்துக்கடையில் பணி புரிகிறார்)

தந்தை திரு.க.முனியசாமி சிவகாசியில் ஒரு அச்சுக்கூடத்தில் தொழிலாளி அவருடைய மாத வருமானம் ரூ 2500/-

வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.

சித்ரா தேவிக்குத் தேவைப்படும் உதவிகள் – தொடர்ந்து அவரைப் பராமரிக்க வருமானம்-அவரால் கைகளைப் பயன்படுத்த முடியாது.

3 அறுவைச்சிகிச்சைகள் செய்தால் செயல்பாட்டுக்கு உதவியாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.மருத்துவச்செலவுகளுக்கு உதவி தேவை.தொடர்ந்து படிக்க வேண்டும் என்கிர ஆர்வமும் சித்ராதேவிக்கு இருக்கிறது.

யார் என்ன உதவி செய்ய முடியுமோ செய்யுங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

தொடர்புகளுக்கு : 91 9952500713

தோழர் சுகந்தி ( அனித்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்)-செல் -919442432659

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

Monday, October 5, 2009

யார் சிரித்தால் தீபாவளி?

35 36

அவள் பெயர் கவிதா.

18 வயதுப் பருவ மங்கை.

சந்தனக்கலரில் பூப்போட்ட சுடிதாரும் துப்பட்டாவும் அணிந்து அவள் மேடையேறினாள்.மேடையில் அமர்ந்திருந்த நாங்கள் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தோம்.ஒரு நிமிடத்துக்கு மேல் அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை.இரு கரங்களையும் துப்பட்டாவுக்க்குள்ளேயிருந்து வெளியே எடுத்து வணக்கம் சொன்னாள்.அந்தக் கைகளையும் எங்களால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை.அவள் ஒரு இளம் பட்டாசுத்தொழிலாளி.

அவள் ஏழாவது வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது வீட்டில் அம்மாவோடு சேர்ந்து பட்டாசு சுற்றிக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு அவள் முகம் கோரமாகச் சிதைந்துபோனது.கைகளில் விரல்கள் எல்லாம் மெழுகைப்போல உருகி ஒரே சதைக்கோளமாகி இருந்தது.அது வீட்டில் நடந்த விபத்து என்பதால் சட்டப்படி நட்ட ஈடு ஏதும் பெற முடியவில்லை.கருணைத்தொகையாக 25000 ரூபாய் மட்டும் கிடைத்தது.போராடினால் இன்னும் கொஞ்சம் பணம் அதிகமாகக் கிடைக்கலாம்.

ஆனால் கவிதாவின் அம்மா சொன்னார் ” இந்தப்பொண்ணோட எதிர்காலம் என்னாகுமோ என்கிற கவலையிலே நான் நல்லா தூங்கி ஆறு வருசமாகுதுய்யா.இந்த முகத்தை உங்களாலேயே ஒரு நிமிசம்கூட உத்துப்பாக்க முடியலே .இவளை யாரு கல்யாணம் கட்டுவா?என் காலம் முடிஞ்ச பிறகு இவ கதியென்ன?இந்த பூமியிலே எங்கே போய் அவ இருப்பா சொல்லுங்க சாமிகளா...”

தீபாவளிக்கு நாம் கொளுத்துகிற பட்டாசுகளின் சத்தத்தில் இந்தக் கவிதாக்களின் அழுகுரல்கள் அம்மாக்களின் கதறல்கள் எல்லாமே அமுங்கித்தானே போய்விடுகிறது?மேடையில் இருந்த எங்களிடம் அம்மாவின் கேள்விக்கு எந்த பதிலும் இல்லை.என் கன்னங்களில் உருண்ட கண்ணீரையும் கூட மேடை நாகரிகம் கருதியோ என்னவோ அவசரமாகத் துடைத்துக்கொண்டேன்.

கவிதாவைப்போல பலர் மேடையேறினார்கள்.கை இழந்தவர்கள்.தலை முடியோடு மேற்பகுதி கருகியவர்கள்.கணவனை இழந்தவர்கள் என.. ..

*

கடந்த இரு மாதங்களுக்கு முன்னால் சிவகாசியைச் சுற்றிலும் அடுத்தடுத்து பட்டாசுத் தொழிற்சாலைகளில் வெடி விபத்துக்கள் நடந்து 20க்கு மேற்பட்ட தொழிலாளிகள் கொல்லப்பட்டனர்.தினசரி தென் மாவட்ட செய்தித்தாள்களில் வந்த அச்செய்திகள் பெரும் அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் தந்தன.ஆண்டுதோறும் தீபாவளிக்கு முந்தின மாதங்களில் எம் மக்களின் உடம்பில் திரி வைத்து வெடிக்கப்படும் இக்கொடுமை நடந்துகொண்டே இருக்கிறது. இது சகஜம்தானே என்று நினைப்பதுபோல நம் சமூகம் மௌனமாய்க் கடந்து போய்க்கொண்டே இருக்கிறது.

இம்முறை இந்திய தொழிற்சங்க மையமும் (சி.ஐ.டி.யு) அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் சேர்ந்து இக்கொடுமைகள் குறித்த விரிவான கள ஆய்வினை மேற்கொண்டு அதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி சிவகாசியில் கடந்த 30-8-09 அன்று ஒரு பொதுவிசாரணைக்கு ஏற்பாடு செய்தனர்.பொது விசாரணையின் நீதிபதிகள் குழுவில் ஒருவனாக நானும் மேடையில் இருந்தேன்..

சிவகாசியைச்சுற்றிலுமுள்ள 200க்கு மேற்பட்ட கிராமத்து மக்கள் பட்டாசுத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.அநேகமாக எல்லா கிராமங்களிலும் வெடி விபத்துக்களில் மரணமடைந்த/காயப்பட்ட/கை,கால் இழந்த தொழிலாளிகள் அல்லது அவர்கள் குடும்பத்தினர் இருக்கிறார்கள்.

பட்டாசுத்தொழிலில் குழந்தைகள் சர்வசாதாரணமாக ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.ஏராளமான குழந்தை உழைப்பாளிகள் கடந்த காலங்களில் சிவகாசியில் இதுபோன்ற விபத்துக்களில் கொல்லப்பட்டுளனர்.தொடர்ச்சியான தொழிற்சங்கங்களின் போராட்டங்களாலும் மனித உரிமை அமைப்புகளின் வழக்குகளாலும் இப்போது பட்டாசுத் தொழிற்சாலைகளில் வெளிப்படையாக எந்த முதலாளியும் குழந்தை உழைப்பாளிகளை சேர்ப்பதில்லை.ஆனாலும் காண்ட்ராக்ட் முறை அதிலும் வந்த பிறகு வீடுகளுக்கு எடுத்துச்சென்று பட்டாசு தயாரிக்கும்போது அங்கு குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவது தொடரத்தான் செய்கிறது.

பட்டாசுத்தொழிற்சாலைகளில் விபத்துக்கு முக்கிய காரணமாக அப்பொது விசாரணையில் வெளிவந்த உண்மை- வெடிகள் தயாரிப்பதற்கான ரசாயனப்பொருட்கள் குறித்த எந்த அறிவும் பயிற்சியும் தரப்படாத தொழிலாளிகள் அப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவதுதான். போர்மேன் எனப்படும் ஒருவர்தான் ரசாயனக்கலவையைத் தயாரிப்பது மற்றும் ரசாயனக்கழிவுகளை பாதுகாப்பாக அழிப்பது போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. சிவகாசியில் எந்தப் பட்டாசுத் தொழிற்சாலைக்குப் போனாலும் மத்திய அரசின் வெடிமருந்துத்துறை அளித்த முறைப்படியான ஒரு போர்மேன் சான்றிதழ் அவருடைய புகைப்படத்துடன் பிரேம் போட்ட கண்ணாடியுடன் ஆணியில் தொங்கிக்கொண்டிருக்கும்.ஆனால் அப்படத்தில் உள்ள போர்மேன் அங்கே இருக்க மாட்டார்.கேள்வி ஞானத்தின் அடிபடையில் ஒரு போர்மேன் அங்கே வேலை செய்து கொண்டிருப்பார்.

விசாரணை மேடையில் அப்படி சான்றிதழ் பெற்ற ஒரு போர்மேன் சாட்சி சொல்ல வந்தார்.அவருடைய சான்றிதழின் ஜெராக்ஸ் பிரதியை எங்களிடம் வழங்கிவிட்டுச் சொன்னார்.” அய்யா நான் எஸ்.எஸ்.எல்.சி படித்திருக்கிறேன்.ரொம்ப காலமாக ஒரு ஜவுளிக்கடையில்தான் வேலை செய்கிறேன்.எனக்கு ரசாயனம் பற்றி எதுவுமே தெரியாது.எனக்குப் பழக்கமான பட்டாசு ஆலை அதிபர் ஒருவர் என் சான்றிதழையும் புகைப்படத்தையும் வாங்கிச் சென்று இந்த போர்மேன் சான்றிதழைப் பெற்று அவரது தொழிற்சாலையில் தொங்க விட்டு வேறு ஒரு பயிற்சியற்ற நபரை வைத்து வேலை வாங்கிக்கொண்டிருக்கிறார்.பெரும்பாலான தொழிர்சாலைகளில் இதுதான் நிலை.நான் ஒரு நாள் கூட பட்டாசு ஆலைப்பக்கம் போனதில்லை” .உண்மையில் அவருடைய வாக்குமூலம் எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை.பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராகவுள்ள ஒரு சமூகத்தில் என்னதான் நடக்காது? தொழிலாளிகளின் உயிரோடு விளையாடும் முதலாளிகளும் அதிகாரிகளும் என்ன தண்டனையும் பெறத்தகுதியானவர்கள்தான்.ஆனால் அவர்கள் எப்போதும் நிம்மதியாகவும் செல்வச்செழிப்போடும்தான் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சாட்சிகளாக வந்த வெடிவிபத்துக்களில் காயம் பட்டவர்கள், உடல் உறுப்புகளை இழந்தவர்கள் மேடையேறிச் சாட்சி சொன்ன்போது அதைத் தொடர்ந்து கேட்பதற்கே மனதோடு போராட வேண்டியிருந்தது.

சட்டங்கள் யார் மேல் தப்பு எந்த அளவுக்கு தப்பு எதனால் தப்பு அதற்கு எவ்வளவு தண்டனை யாருக்கு நிவாரணம் எவ்வளவு என்று எந்திரமாகப் போய்க்கொண்டே இருக்க ஆண்டுதோறும் எம் மக்கள் சிதைந்து கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.அவர்கள் எல்லோருக்கும் உதவிகளையும் ஆறுதலையும் அன்பையும் அரவணைப்பையும் நாங்கள் இருக்கிறோம் என்கிற நம்பிக்கையையும் ஊட்டத் துப்பில்லாத சமூகமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கொத்துக்கொத்தாக மக்கள் செத்து மடியும் இந்த அவலம் குறித்து ஊடகங்களும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.செத்த 3 நாளைக்கு நியூஸ் வரும்.அமைச்சர் வந்து ஆஸ்பத்திரியில் ஆறுதல் சொல்லும் புகைப்படத்தோடு அவர்களுக்கு பரபரப்புப் போய்விடும். விதர்பா விவசாயிகள் 60000 பேர் செத்தது கூட அவர்கள் முதல் பக்கச் செய்தியாக இடம்பெறத் தகுதி பெறவில்லையே.

அன்று மேடையை விட்டு இறங்கும் போது மானசீகமாக என் செருப்பைக் கழற்றி என் தலையில் ஓங்கி ஓங்கி அறைந்து கொண்டேன்.மேடையில் பேசிய எம் வாய்ச்சொற்கள் அம்மக்களுக்கு என்ன பயனைத் தந்து விடப்போகிறது? மேடையில் நீதிபதிகள் குழுவில் ஒருவராக இருந்த சிஐடியுவின் தலைவர் தோழர் டி.கே.ரெங்கராஜன் கவிதாவைப் பக்கத்தில் அழைத்து தைரிய்மாக இரு பாப்பா நிச்சயமாக உனக்கு நிவாரணம் கிடைக்கப்பாடுபடுவேன் என்று சொன்ன ஒரு வரியில் நம்பிக்கை வைத்து என் குற்ற உணர்வை மூடிப் பஸ் ஏறினேன்.

ஜப்பான் நாட்டில் 1945இல் அமெரிக்காக்காரன் ஹிரோஷிமா,நாகசாகி நகரங்களின் மீது குண்டு வீசினான்.பல்லாயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்தார்கள்.இன்னும் தப்பியவர்கள் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களாக முகம் சிதைந்து மூக்கு அழுகி காதுகள் இழந்து என்று நடைப்பிணங்களாக வாழ்ந்தார்கள்.இன்னும்கூட வாழ்கிறார்கள்.அவர்களை ஹிபாகுஷ் மக்கள் என்று ஒரு பெயரிட்டு அழைக்கிறார்கள்.சிவகாசியிலும் அப்படியான ஹிபாகுஷ் மக்கள்தான் கவிதாவைப்போன்றவர்கள் என்பதை உலகம் இன்னும் அறியாமல் இருக்கிறது.ஹிபாகுஷ் போல தனியாக ஒரு பெயர் சூட்டி இம்மக்களையும் அழைக்க வேண்டும்.

சிவகாசிக்கு குட்டி ஜப்பான் என்று ஒரு பெயர் உண்டு என்பதை இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.எவ்வளவு பொருத்தமான பெயர்?

கவிதாவின் முகம் இன்றுவரை என்னைத் துரத்திக்கொண்டே இருக்கிறது-தூக்கத்துக்கு நடுவிலும் பஸ்,ரயில் பயணங்களுக்கு நடுவிலும் என. உனக்கு என்னால் என்ன செய்துவிட முடியும் என்று தெரியவில்லை மகளே .... இந்த நாலு வரிகளை எழுதுவதைத் தவிர?

( இந்தக் கள ஆய்வினையும் பொது விசாரணையையும் இரு அமைப்புகள் ஏற்பாடு செய்தபோதும் அதற்காக மனக்கொதிப்புடன் பணியாற்றிய தோழர்கள் சாமுவேல்,சுகந்தி,சேகர்,தேவா,சின்னப்பராஜ் போன்றவர்களை நினைத்துப்பார்ப்பது அவசியம்)

Tuesday, April 21, 2009

குழந்தைகளுக்கான புத்தகம் என்னும் வன்முறை

bk-1 bk2

நேற்று முன்தினம் ப்ராடிஜி –prodigy பதிப்பகத்தார் நடத்திய குழந்தைகளுக்கான எழுத்துக்கள் மீதான கலந்துரையாடலில் பங்கேற்றது ஒரு நல்ல அனுபவம்.நாங்கள் பாரதிபுத்தகாலயத்தின் சார்பாக ஜூன் மாதத்தில் நடத்தவிருக்கும் குழந்தைகளுக்கான எழுத்து பற்றிய பட்டறையை வடிவமைக்க இந்தக் கலந்துரையாடலில் வந்த பல கருத்துக்கள் உதவும் என நம்புகிறேன்.

தமிழில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்ற பேரில் பெரும் குப்பைகள் –நீதிக்கதைகள்-மற்றும் புராணக்கதைகள் என்ற பேரில் கொட்டப்பட்டு வரும் இந்நாளில் இன்னும் நல்ல புத்தகங்களைத் தயாரித்து வழங்க கூட்டு முயற்சிகள் –விவாதங்கள்-கலந்துரையாடல்கள் தேவை.வந்துள்ள சில நல்ல முயற்சிகள் மீதும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் தேவை.

சோவியத் யூனியன் இருந்த நாட்களில் ஏராளமான வண்ண வண்ணப் புத்தகங்கள் மிக மிகக் குறைந்த விலையில் கிடைத்தன.உலகத்துக்கெல்லாம் கப்பல் கப்பலாக ஓசியில் புத்தகம் அனுப்பி ஓய்ந்துபோன தேசமல்லவா அது.

அதை விட்டால் தமிழில் அந்தக்காலத்தில் கண்ணன் வந்துகொண்டிருந்தது. எங்கள் ஊரான நென்மேனி மேட்டுப்பட்டியிலிருந்து 7 மைல் நடந்து சாத்தூருக்குப்போய் கண்ணன் வாங்கி வருவேன்.அப்படி இழுத்தது கண்ணன்.அதை நடத்திய எழுத்தாளர் ஆர்.வி சமீபத்தில்தான் காலமானார்.அம்புலிமாமாவும் பின்னர் வந்த சிவகாசிப் படக்கதை-காமிக்ஸ் புத்தகங்களும் மிகப்பெரிய ஈர்ப்புகளாக இருந்தன.

இன்று தமிழகத்தில் பதிப்பகங்கள் பெருத்துவிட்ட சூழலில் புத்தகக் கண்காட்சிகள் பத்து இருபது இடங்களில் பரவலாக நடத்துவது பழக்கமாகிவிட்ட ஒரு பின்னணியில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்கிற பெரிய மார்க்கெட் பெரிய பதிப்பகங்களின் நாவில் நீர் சுரக்க வைப்பது சகஜம்.

பள்ளிக்கூடங்களுக்குப் போய் சில ஆசிரியர்களைப் பிடித்து நூலகத்துக்கு மொத்தமாக புத்தகங்களை வாங்கிப் போட வைத்துவிட முடிகிறது.இந்த ஏரியாவில் முடிசூடா மன்னனாக முன்னர் NCBH மட்டும் இருந்து வந்தது. இப்போது போட்டி அதிகமாகி விட்டது. நல்லது.அப்படிப் போட்டியினால் நிறையக் குழந்தைகளுக்கான புத்தகங்கள் வந்தால் நமக்கு நல்லதுதானே?

ஆனால் மார்க்கெட்டை மட்டும் மனதில் கொண்டு புத்தகங்களை அடித்துத் தள்ளினால் குப்பைகூளம்தான் மறுபடியும் சேரும். அப்படிச் செய்துவிடாதீர்கள் என எல்லாப் பதிப்பகத்தாரையும் அன்போடு கேட்டுக்கொள்வோம்.

நல்ல புத்தகம் எது? யார் தீர்மானிப்பது?

இதில் பதிப்பகம் நடத்துவோரின் சார்பு- மற்றும் புத்தகம் பற்றியும் குழந்தைகள் பற்றியும் அவர்கள் கொண்டிருக்கும் புரிதல்தான் முக்கியப் பங்காற்றுகின்றன.

இந்தக் கலந்துரையாடலில் கூட நீதிக்கதைகளை ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள் என்று ஒரு பெரியவர் கேட்டார்.அந்தக்காலத்தில் நீதிக்கதைகளைப் படித்துத்தான் நாங்களெல்லாம் வளர்ந்தோம்.இப்போ பூராவும் டிவி சினிமான்னு ஆகிப்போச்சு என்று வருத்தப்பட்டார்.

நீதிக்கதைகள் படித்து வளர்ந்த இந்திய படித்த வர்க்கம் உருவாக்கியுள்ள இந்த சமூகம் நல்லா இல்லை அல்லவா? ஆகவே அவற்றை நாம் பெருக்கித்தள்ளியாக வேண்டும்.தவிர குழந்தைகளுக்கு நீதியும் அறிவுரையும் சொல்வதுபோல ஒரு அராஜகம் உலகத்தில் எதுவும் கிடையாது. குழந்தைகளுக்கு அது பிடிப்பதுமில்லை.

சரி. இப்போது நம்முடைய குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் பதிப்பகங்களிடமிருந்து நேரடியாகக் குழந்தைகளுக்குப் போய்ச்சேருவதில்லை.அவை ஒன்று பெற்றோர் மூலமாக அல்லது ஆசிரியர்/பள்ளிக்கூடம் மூலமாகத்தான் குழந்தைகளைச் சென்றடைகின்றன. இரா.நடராசன் அக்கூட்டத்தில் சொன்னதுபோல குழந்தைகளுக்கான புத்தகங்களை – நூலகத்துக்கு அரசு ஒதுக்கும் நிதியின் மூலம் – ஒருபோதும் குழந்தைகள் தேர்வு செய்வதில்லை.எல்லா வகுப்புகளிலிருந்தும் மாணவ மாணவியரை அழைத்துக்கொண்டு கூட்டமாக புத்தகக் கடைகளுக்குப் போய் அவர்களைத் தேர்வு செய்யச்சொல்லி புத்தகங்களை அள்ளி வருகிற ஒரு தலைமை ஆசிரியரை-ஒரு ஆசிரியரை நம் நாட்டில் காட்ட முடியுமா? அந்த ஆசிரியருடைய அறிவுக்கும் புரிதலுக்கும் ஏற்ப தேர்வு செய்து அடுக்கப்பட்ட புத்தகங்களே பள்ளிக்கூட நூலகங்களில் உள்ளன.அவற்றையும் யாரும் தொடாமல் பார்த்துக்கொள்ள ஒரு நூலகரை நியமித்துள்ளது தனிக்கதை.நூலகர் பள்ளிக்கூடத்தின் மற்ற எழுத்தர் பணிகளைத்தான் பார்த்துக்கொண்டிருப்பார்.பாவம்.

பெற்றோரின் புத்தக ரசனை-புத்தக்க் காதல் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்கள் இதே கல்விமுறையால் வளர்த்தெடுக்கப்பட்ட முன்னாள் குழந்தைகள்தானே? நம்முடைய கல்விச்சாலைகள் பன்னிரண்டு ஆண்டுகள் உழைத்து புத்தகக்காதலர்களாக வெளியே வரவேண்டிய நம் குழந்தைச் செல்வங்களை புத்தக விரோதிகளாக மாற்றக் கடுமையான பணியாற்றி வருகின்றன.இதியெல்லாம் தாண்டித்தான் பிள்ளைகள் சரியான புத்தகங்களைத் தற்செயலாகக் கண்டடைந்து படிக்கிறார்கள்.அது எல்லோருக்கும் வாய்க்காதல்லவா? முறைசார் கல்வியிலேயே இதற்கான ஏற்பாடு –புத்தக வாசிப்புக்கு ஆதரவான சூழல் இருந்தால் நாம் எல்லோருமே புத்தக் காதலர்களாக மாறியிருப்போம்.தலைமுறைகள் கடந்தும் நம் நாட்டில் இதுவிசயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.அதுபற்றிய ஒரு தன்னுணர்வும் சமூகத்தில் உருவாகவில்லை.

ஆங்கிலக் கல்வி பயிலும் நகர்ப்புரக்குழந்தைகள் சிலர் தீவிரமான புத்தக வாசிப்பாளர்களாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கான நல்ல நல்ல புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன.தவிர வசதியுள்ள வீட்டுப்பிள்ளைகளுக்கு சொந்தமாக பாக்கெட் மணியும் உள்ளது.

குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்று இன்று நாம் தயாரித்து வழங்குபவையெல்லாமே படித்த மத்திய தர வர்க்கத்துக்க் குழந்தைகளுக்காக மட்டுமேதான்.பல்வேறு பொருளாதார மற்றும் கலாச்சாரப் பினனணியில் வளரும் பல்வேறு அடுக்குகளில் வாழும் குழந்தைகள் பற்றி நாம் யோசிப்பதே இல்லை. அரைகுறைப்படிப்பாளிகளாக drop out ஆன குழந்தைகளாக நகரத்து வீதிகளிலும் கிராமத்து சிறு தொழில்களிலும் உழலும் குழந்தை உழைப்பாளிகளான வாசகர்கள் பற்றி எந்தப் பதிப்பகத்தாரும் எந்த எழுத்தாளரும் கவலை கொள்வதில்லை என்று சுயவிமர்சனமாக நாம் விவாதிக்க வேண்டும்.

வயது வாரியாக குழந்தைகளைத் தரம் பிரித்து அவர்களுக்கான புத்த்கங்கள் தயாரிக்கப்பட வேண்டியுள்ளது.

பாரதி புத்தகாலயம்,தாரா பதிப்பகம்,NCBH, குழந்தைகளுக்கான நேஷனல் புக் ட்ரஸ்ட் ,ப்ராடிஜி என எல்லோரும் கூடிப் பேசி இன்னும் சரியான திசை நோக்கி நகர வேண்டும். எழுத்தாளர்கள் இதில்

மிக முக்கியப்பங்காற்றவேண்டியுள்ளது. அதுபற்றித் தனியே விரிவாகப் பேசலாம்.

தயாரிப்பிலிருந்து விநியோகம் வரை குழந்தைகளுக்கான புத்தகம் என்கிற துறையில் அவர்களின் பங்கு ஏதுமில்லாத ஒரு வன்முறை நம் கண் முன்னால் நடந்துகொண்டிருக்கிறது.திணிப்பு நடந்து கொண்டிருக்கிறது.அவசரமாக நாம் தலையிட வேண்டும். நாம் என்பது இதுபற்றி அக்கறை உள்ள எல்லோரையும்.