Thursday, April 9, 2009

மரியாதை வருவதில்லை

 

village-2

நாங்கள் அறிவொளி இயக்கத்தில் கற்போம் கற்பிப்போம் என்கிற முழக்கத்தோடு 90களின் மத்தியில் கிராமம் கிராமமாகச் சுற்றிக்கொண்டிருந்த நாட்களில் சங்கரன்கோவில் வட்டாரத்தில் திருவேங்கடம் பக்கம் ஒரு கிராமத்தில் கோட்டைச்சாமி என்கிற ஒரு மனிதரைச் சந்திக்க நேர்ந்தது.ஊர்ப்பெயர் மறந்து விட்டது.அவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்த அந்த வாத்தியார் பேரும் மறந்து விட்டது.(சமீப காலமாகவே இந்த மூளை என்பது மறப்பதற்கு உதவும் ஒரு கருவியாக மாறிக்கொண்டிருக்கிறது-அது தனிச் சோகக்கதை. அதை விடுங்க அப்புறம் பேசலாம் அதைப்பத்தி)

அவரைச் சந்திப்பதற்கு முன் இலக்கியம் பற்றியும் நான் ஒரு இலக்கியவாதி என்பது பற்றியும் நான் கொண்டிருந்த பெருமிதமெல்லாம் அன்று தகர்ந்து வீழ்ந்தது.

கோட்டைச்சாமிக்கு உள்ளூரில் எந்த மரியாதையும் கிடையாது. அவரைக்கண்டாலே எல்லோரும் ஒரு கிண்டலான மனநிலைக்குப் போய்விடுவார்கள்.அவருடைய துணைவியாரும்கூட ரொம்ப காலமாக அவர் மீது எரிச்சலடைந்துதான் இருந்தாராம்.நான் சந்தித்த காலத்தில் அவர் அப்படி இல்லை.கணவர் மீது மிகுந்த பரிவு கொண்டவராக மாறியிருந்தார்.

கோட்டைச்சாமி பள்ளிக்கூடப்பக்கம் போகாதவர்.ஆனால் தன் சொந்த முயற்சியில் போராடி –படிச்ச உள்ளூர் பையன்கள் உதவியுடன் – எழுத்துக்கூட்டி வாசிக்கவும் – தப்பும் தவறுமாக என்றாலும் எழுதவும்கூட கற்றுக்கொண்டிருந்தார்.ஆகவேதான் அப்பகுதி அறிவொளிப் பொறுப்பாளர் மாவட்டப்பொறுப்பில் பணியாற்றிய என்னிடம் அவரை ’ அறிவொளி வருமுன்னரே கற்றுக்கொள்ள ஆரம்பித்தவர் ’ என்று அறிமுகம் செய்தது.அறிவொளி இயக்கத்தை கோட்டைச்சாமி சிக்கெனப்பற்றிக்கொண்டார்.

அதெல்லாம் சரிதான்.ஆனால் அவரிடம் ஒரே ஒரு பிரச்னை இருந்தது.யாரோடும் அவர் பேசுவது கிடையாது.எல்லாமே பாட்டாகத்தான் பாடுவது.மனைவி, குழந்தையில் ஆரம்பித்து எதிர்ப்படும் யாரிடமும் – அவரோடு பேச்சுக்கொடுக்கும் யாரிடமும்- பாட்டில்தான் பதிலுரைப்பது-வினவுவது எல்லாமே.

வயிறு பசித்தால் அவர் துணைவியாரிடம்

‘அன்பே ஆருயிரே

அடி வயிற்றில் தீப்பிடித்து

அரை மணி யாச்சுது

அமுதம் படைப்பாயா? ‘ என்றுதான் கேட்பார்.

என்னப்பா கோட்டைச்சாமி நெல்லுக்கருது அறுக்கப் போவமா? என்று சக உழைப்பாளிகள் வந்து அழைத்தால்

‘ நேற்றறுத்த நெல்மணிக்குக்

கூலி வந்து சேரலையே

நெதமும் இப்படியே

நெல்லறுக்க ஏலாது,

என்றுதான் பதிலளிப்பார்.

நான் அவரைப்பற்றிச் சொல்லக் கேள்விப்பட்டும் நம்பாமல்தான் பார்க்கப்போனேன். சந்தித்தபோது நான் அடைந்த வியப்பு இன்னும் என் நெற்றியில் சுருங்கி நிற்கிறது. எத்தனை வயசிலிருந்து இப்படிப் பாட்டாகப் பேசுகிற பழக்கம் உங்களுக்கு வந்தது என்று கேட்டேன்.

ஈரேழு வயதென்று

இப்போது ஞாபகம்

என்று சற்றும் யோசிக்காமல் கூறினார்.அவருடைய மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தபோது ”அந்தக் கொடுமையை ஏங்கேக்கிக” என்று ஆரம்பித்து அவர் சொன்ன கதைகள் விடிய விடிய எழுதிக்கொண்டிருக்கலாம். முதல் பிரசவத்துக்காக அவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்ந்திருந்தபோது கோட்டைச் சாமியும் கூடவே இருந்து தன் பாட்டால் அந்த ஆசுப்பத்திரியையே கதிகலங்கச் செய்தாராம்.கடேசியில் டிஸ்சார்ஜ் ஆகும் போது நர்சுகள் ,கம்பவுண்டர்கள் காசு காசு என்று அரிக்க,

தும்பைப் பூப்போல

வெள்ளை உடை உடுத்தி

துட்டுத் துட்டென்று

துரத்தி வரலாமா

துட்டிருந்தால்

என் தங்க மனையாளை

தனியார் டாக்டரிடம்

நல்ல வாசமுள்ள இடம் தேடிப்

போயிருக்க மாட்டேனா

எட்டூருக்கு நாறும் இந்த

நாறக்குழியிலேயா

நாம்பெத்த மகனைப்

பெத்தெடுக்க விட்டிருப்பேன்

என்று சொன்னாராம்.செவிலியர் எல்லோரும் வீவீ என்று அவரோடு சண்டைக்கு வந்துவிட்டார்களாம்.தப்பிச்சு வந்ததே பெரும்பாடாகி விட்டதாம்.அதேபோல பஸ் ஏறி திருநெல்வேலி போன கதை,திருச்செந்தூருக்கு மகனுக்கு முடி இறக்கப் போன கதை,திருநெல்வேலியில் சந்தேகக்கேசில் போலீசில் மாட்டிய கதை என்று சொல்லச்சொல்ல ஊற்றுப்போலக் கதைகள் வந்து கொண்டிருந்தன.

இவர் தொல்லை தாங்க முடியவில்லை.ஊரிலும் மதிப்பில்லை.ஆந்திராவுக்கு கல் உடைக்க ஆள் தேவை என்று ஒரு ஏஜண்ட் வந்தபோது தன் இரண்டு காதுக்கம்மலை அடகு வைத்து இருநூறு ரூபாய் பணம் புரட்டிக் கணவனை அந்த ஏஜெண்டுடன் அனுப்பி விட்டார்.எங்கிட்டாவது போனாலாவது மனுசன் திருந்தி வரமாட்டாரா என்கிற நம்பிக்கையில்.

ஆனால் அந்த ஏஜண்ட் அழைத்துச் சென்றது ஆந்திராவுக்கு அல்ல.மத்திய பிரதேசத்தில் ஒரு மலைக்காட்டில் சிலேட்டுக்கான கல் அறுக்கும் சுரங்கத்துக்கு.

போன மூணுநாளில் கைகால் நக இணுக்கிலெல்லாம் கரி புகுந்து கரும்பிண்டமாக அலைய நேர்ந்தது.அவமான வசைகள்,அரைகுறைச் சாப்பாடு,சமயத்தில் அடிகூட உண்டு.கண்காணாத் தூரத்தில் கொத்தடிமைத் தொழில் புரிய நேர்ந்ததே என்று கோட்டைச்சாமி கண்ணீர் உகுக்காத நாளில்லை.கண்ணீரில் நனைந்த பாடல்களைத் தன் சக தமிழ் உழைப்பாளிகளிடம் இவர் சொல்லச் சொல்ல எல்லோரும் இரவுகளில் உட்கார்ந்து அழுவார்களாம்.

அங்கிருந்து தப்பி இவரும் இன்னொருவரும் மட்டும் கால் நடையாகவே 60 மைல் ஓடி ரயில் பிடித்து தெற்கே வந்திருக்கிறார்கள்.திருச்சியில் வைத்து ரயில்வே ஸ்குவாட் அவர்களைப் பிடித்துவிட்டது.ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு கோர்ட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்.(தமிழ் நாட்டு ரயில்வேக்காரர்கள் இதில் மட்டும் ரொம்ப யோக்கியமாக இருப்பார்கள்.சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டும் சைடு பெர்த்தில் 3 அடுக்குப் போட்டுப் பயணிகளின் கழுத்தெலும்பையும் முதுகெலும்பையும் உடைத்து 300 ரூபாய் வசூல் செய்வதை மற்ற ரயில்வே எல்லாம் எடுத்தும் இவர்கள் மட்டும் எடுக்க மறுக்கிறார்கள்- கதைக்கு நடுவே கதை சொல்லி தன் சோகத்தையும் சந்தடி சாக்கில் செருகி விட்டதற்கு மன்னிக்கவும்)

டிக்கட் இல்லாமல் பயணம் செய்தீர்களா என்று கோர்ட்டார் கூண்டில் நின்ற இவரைப் பார்த்துக் கேட்கவும் இவர் கதறியழுது ஏ சாமி ஆதியிலும் திருடனல்ல நான் சாதியிலும் கள்ளனல்ல.தங்க மனையாட்டி கழ்ட்டிக்கொடுத்த கம்மல்.... என்று ஆதியோடு அந்தமாக நடந்த கதை பூராவையும் பாட்டாகவே சொல்ல அதைக்கேட்ட கோர்ட்டார் கண்கலங்கி அவரை விடுதலை செய்து ரயில்வே பாஸ் கொடுத்து சாப்பாடும் போட்டு அனுப்பி விட்டாராம்.

” ஊர் வந்து சேர்ந்து அவுக என் வீட்டு வாசலில் நின்னு அன்னிக்குப் பாடுன பாட்டைக்கேட்டு நான் தெருவிலே உருண்டு அழுத அழுகை இருக்கே . சாமி...” என்று அவருடைய துணைவியார் என்னிடம் பேசிக்கொண்டிருந்த போதே அந்த நாளின் துயரத்தைக் கண்ணில் பெருக்கி கேவி அழ ஆரம்பித்தார்.( நானும்தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை)

இத்தனைக்குப் பிறகும் கோட்டைச்சாமி பாட்டை விட்டாரில்லை.

கூடுதலாக இப்போது அதையெல்லாம் அறிவொளி நோட்டுகளில் எழுத ஆரம்பித்திருந்தார்.அவற்றில் ஒன்றிரண்டை வாசித்துவிட்டுத் தருகிறேன் என்று வாங்கி வந்து சில பாடல்களைப் பிரதி எடுத்துக்கொண்டு கொடுத்துவிட்டேன்.அதனால்தான் இத்தனை மறதிப்புத்தி வந்த பிறகும் சில பாடல்களை மேலே எழுத முடிந்தது.

அவன் கலைஞனா?

நானா?

என்கிற கேள்வி எப்போதும் ஒரு நதிபோல என் மனசில் துள்ளிக்கொண்டே இருக்கிறபடியால் ஒருபோதும் என்மீது எனக்குப் பெரிய மரியாதை ஒன்றும் வருவதே இல்லை.

21 comments:

ச.கார்த்திகேயன் said...

என்னத்த ?சொல்ல நமக்கு வழி தெரிஞ்சது தெருவீதிக்கு வந்துட்டோம். வழி தெரியாம வாழ்க்கையோடு போராடுவதில் மட்டுமே ஆயுசே கணக்கில்லாம போயிட்டிருக்கு :-) தேர்தல் வந்தாச்சி மாற்று வரட்டும் . மாறுதலுக்கு! ச.கார்த்திகேயன். ஓசூர்.

கதிரவன் said...

ரொம்பவே வித்தியாசமான அனுபவம். இன்னும் இதுபோன்ற பல சுவாரசியமான, அறிவொளி இயக்க அனுபவங்களைக் கேட்க ஆர்வமா இருக்கிறேன்

என்னோட பள்ளி நாட்கள்ல (90களின் மத்தியில்) எங்க கிராமத்துல (ராஜபாளையம் பக்கம் தளவாய்புரம்) நடந்த அறிவொளி இயக்கத்தின்,வீதி நாடகம் இன்னும் ஞாபகம் இருக்குது. அந்த நாடகத்துல படிப்பறிவில்லாத ஒரு கூலித்தொழிலாளி தனக்கு வந்த கடிதத்தைப் படிக்கச்சொல்லிக்கேட்க, தன் முதலாளிகிட்ட வருவார். அப்போ அந்த முதலாளி இவருக்கு விறகு வெட்டற வேலையைக்குடுத்துட்டு, ரொம்ப நேரம் கழிச்சு கடிதத்தைப் படிச்சுச்சொல்வார். அந்தக்கடிதத்தில அந்தத்தொழிலாளியோட மகன் இறந்திட்டான்னு இருக்கும்...கல்வி அறிவோட முக்கியத்துவத்தச்சொல்லி முடியும் நாடகம்

அந்த வீதி நாடகக்குழுவில் நீங்களும் இருந்தீர்களோ ? இன்றும் அறிவொளி இயக்கம் செயல்படுகின்றதா ?

யாத்ரா said...

கோட்டைச்சாமி மனதிற்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார்

//ஏ சாமி ஆதியிலும் திருடனல்ல நான் சாதியிலும் கள்ளனல்ல.//

//அன்பே ஆருயிரே அடி வயிற்றில் தீப்பிடித்து அரை மணி யாச்சுது அமுதம் படைப்பாயா?//

//நேற்றறுத்த நெல்மணிக்குக் கூலி வந்து சேரலையே நெதமும் இப்படியே நெல்லறுக்க ஏலாது//

இவர் எனக்கு கவிஞர்
மு சுயம்புலிங்கத்தை நினைவுபடுத்துகிறார்.

சொற்பிரயோகம் எவ்வளவு இயல்பாக கைகூடியிருக்கிறது, வெறும் சொற்பிரயொகம் மட்டுமல்ல, அந்த கூலி விடயத்தில் என்ன ஒரு செறிவான எழுச்சிமிக்க சிந்தனை.

அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

ச.பிரேம்குமார் said...

//எட்டூருக்கு நாறும் இந்த
நாறக்குழியிலேயா
நாம்பெத்த மகனைப்
பெத்தெடுக்க விட்டிருப்பேன்
//

நிச்சயமாய் அவர் பெரும் கலைஞன் தான். தன்னிச்சையாய் வெளிப்படும் கலைக்கு எப்போதும் ஒரு தனியழகு இருக்கத்தான் செய்கிறது

ஒரு சுவாரசியமான நபரை பற்றி பதிவிட்டதற்கு நன்றி அய்யா

விழியன் said...

அற்புதமாக அனுபவம்.

அறிவொளி இயக்கம் தந்த அனுபவம் தான் எத்தனை எத்தனை.

அப்பாவையும் அவர் நினைவில் நிற்கும் அனுபவங்களை எழுத நானும் தங்கையும் நிர்பந்தித்துக்கொண்டே இருக்கின்றோம்.

தொடருங்கள் உங்கள் வீதி அனுபவங்களை.

மண்குதிரை said...

ஓசையும், பொருளும் அபாரமாக இருக்கிறது.

ஆனால் நீங்கள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. அவர் திருவேங்கடம் பக்கம் இருக்கிறாரா?

சற்றும் யோசிக்காமல் எப்படி இவ்வளவு அற்புதமாக பாடமுடியும்? உங்களுடைய ''சரக்கும்'' கலந்திருக்கிறது?

Unknown said...

கோட்டைச் சாமி என் மனதிற்கும் மிகவும் நெருக்கமாகிவிட்டார்....வாழ்க்கையிலிருந்து நேரடியாக கற்பவர்கள் இயற்கையான படைப்பாளிகள். கோட்டைச்சாமியின் கவிதை புனையும் திறன் அவரின் பட்டறிவால் ஏற்பட்டிருக்கும், அதை பழக்கமாக்கியதால் அவரால் இயல்பாய் கவித்துவமாக பேச இயன்றது என்று நினைக்கிறேன்....வாசித்ததும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது தமிழ்ச்செல்வன்...மறதிக்கு சிறந்த மருத்துவம் ஒன்றை சொல்லட்டுமா, உங்களுக்கு மறதி இருக்கிறது என்பதை மறந்துவிடுங்கள் (எந்த ஊரும்மா நீயின்னு கேக்கறீயளா – பக்கத்துல திருநெல்வேலி ;)))))

உண்மைத்தமிழன் said...

மனதை உருக்குகிறது ஸார்..

ஏட்டறிவும், எழுத்தறிவும் அனுபவ அறிவுக்கு முன்பு நிற்காது..

பாட்டாலேயே வாழ்க்கையைப் பாடி வரும் இவர் நாவில் எந்த சரஸ்வதி குடியமர்ந்திருக்கிறாள் என்று தெரியவில்லை..?

மாதவராஜ் said...

தமிழ்!

கோட்டைச்சாமி என்னை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டார். இந்த மனிதர்களிடம் இருக்கும் அற்புத ஆற்றல் உலகின் கண்களுக்கு ஏளனமாகத் தோன்றும். அதைத் துடைத்து, அவரிடம் இருக்கும் ஒளியை காண்பித்திருக்கிறீர்கள் மிக இயல்பான, உங்களுக்கே உரிய நெருக்கமான மொழியில். அர்த்தமுள்ள நிறைவான பதிவு.

Muthu said...

Avar kandekupadatha
vairam pol irunthirukirar...
avarai patri pathivu seithatahrku nadri

வேடிக்கை மனிதன் said...

//கோட்டைச்சாமிக்கு உள்ளூரில் எந்த மரியாதையும் கிடையாது. அவரைக்கண்டாலே எல்லோரும் ஒரு கிண்டலான மனநிலைக்குப் போய்விடுவார்கள்.அவருடைய துணைவியாரும்கூட ரொம்ப காலமாக அவர் மீது எரிச்சலடைந்துதான் இருந்தாராம்.//

மாணிக்கக் கல்லின் மத்திப்பு மேயும் மணிப்புறாக்கள் அறிவதில்லை.
தகுதிவாய்ந்த ஒருவரை இங்கே வெளிச்சமிட்டு காட்டியதற்கு என் நன்றி

Anonymous said...

You have introduced a great man to the networld.But it is unbelievable and unpardonable that a person like you have forgotten his village.You are going to even forget Ettayapuram oneday.

தீப்பெட்டி said...

நிஜமாவே ரொம்ப அருமையான பதிவு. உங்க எழுத்துநடை என்னை ரொம்பவே கவர்ந்துவிட்டது. உங்கள் இனிமையான அனுபவம் சின்ன பொறாமையை ஏற்படுத்துவது என்னவோ நிஜம்

ச.தமிழ்ச்செல்வன் said...

கருத்துக்களைப் பதிவிட்ட நண்பர்களுக்கு நன்றி. நம்ப முடியவில்லைதான்.அறிவொளி நாட்களில் தினசரி முணு நாலு கிராமங்களுக்குப் போய்க்கொண்டிருப்போம்.அதனால் திரும்பத் திரும்பப் போன ஊர்களின் பெயர்தான் இன்று நிற்கிறது.கோட்டைச்சாமி பற்றி அப்போதே நெல்லை மாவட்ட அறிவொளி வார இதழில் அவர் படத்தோடு செய்தி வெளியிட்டேன்.இப்போதும் எனக்கு அவரை அறிமுகம் செய்த ஆசிரியரை கண்டால் ஆளைப்பிடித்து விடலாம்.முயற்சிக்கிறேன்.

இருக்கிற வேலைகளுக்கு இடையில் இதுபோன்ற பணிகளையும் நாம்தானே செய்ய வேண்டும்?

அவர் எழுதிய/பாடிய பாடல்களை அப்படியே அட்சரம் பிசகாமல் நான் இங்கே த்ந்துள்ளதாகக் கூற முடியாது.அவருடையது வார்த்தைகள் பேச்சு வழக்கிலேயே இருக்கும்.அவ்வளவு துல்லியமாக இப்போது நினைவில்லாததால் எல்லோருக்குமான தமிழில் சில வார்த்தைச் செதுக்குதல் மட்டும் செய்தேன்.மற்றபடி சாரம் அப்படியேதான்.

இப்படி பல மனிதர்கல் வித்தியாசமான மனநிலைகளோடு பல ஊர்களில் இருக்கிறார்கள். திருவண்ணாமலையில் எழுத்தாளர் பவா.செல்லத்துரை எனக்கு ஒரு நண்பரை அறிமுகம் செய்து வைத்தார்.அவர் நினைவு தெரிந்த நாளிலிலிருந்து மூன்று வேளையும் பிரியாணி அல்லது ஃபிரைடு ரைஸ் எனப்படும் சித்ரான்னங்கள் மட்டுமே சாப்பிட்டு வருகிறார். வெள்ளை சாதமே சாப்பிட மாட்டாராம்.அவர் பேரும் மறந்து விட்டது.மன்னிக்க.பவாவிடம் கேட்டால் சொல்வார்.

நம்ப முடியாத இதுபோன்ற மனநிலைகள் எப்படி உருவாகின்றன என்று நாம் வியக்கலாமே ஒழிய 100 சதம் கண்டுபிடித்துவிட முடியாது என்றே கருதுகிறேன்.இயற்கையை இன்னும் முழுதாக மனிதன் அறிந்துகொண்டு விடவில்லைதானே.அறிய முடியாததில்லை. இன்னும் அறியவில்லைதானே?

ச.தமிழ்ச்செல்வன் said...

கதிரவன்.. உங்க தளவாய்புரத்தில் உள்ள மலைக்கொவிலில் என்னிடைய கதை பூ திரைப்படத்தின் சில காட்சிகல் படமாக்கப்பட்டன.வந்திருந்தேன்.

Anonymous said...

The life has so many miserables in which many do not get introductions and many did not even surface.the story has touched the heart.
-----------R.Selvapriyan-Chalakkudy

மணிநரேன் said...

வித்தியாசமான மனிதரை மனதின்முன் படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல அனுபவம்.. பகிர்ந்தமைக்கு நன்றி

Anonymous said...

Some one should record his songs as he sings. Some persons have this capacity to compose and sing without any effort.

Muruganandan M.K. said...

அவர் பட்டறிவுக் கலைஞர். அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

Anonymous said...

தோழராக இருப்பது, அதுவும் கொஞ்சம் நெகிழ்வான ஆசாமியாக இருப்பது - ஒரு விசித்திரமான பயனம் தான் போல

சார் இது சூப்பரா இருக்குமா இல்ல சப்பையா இருக்குமானு கேட்டு வெறுப்பேத்தீராதிங்க - இது வாழ்க்கைங்க - அரட்டை அரங்கம் இல்ல - ஆன அந்த அளவுள தான் ஒரு மனுஷன் பேசிக்கனும்கிறது ரொம்ப கொடுமை...பேச்சுல ,எழுத்துல உண்மை இருக்கனும் , இல்ல அறிவாச்சு இருக்கனும் - வெறும் மேலோட்டம் மட்டும் - இருந்தா அரிமா சங்கம் மாதிரி இருக்கும் - இல்ல சீரியல் மாதிரி இருக்கும் - இங்க முற்போக்கான சில பேச்சுகள் அப்படி தான் இருக்கு

மிகவும் நேர்மையானவர்கள், அன்பானவர்கள், அதிகார வெறி பிடித்தவர்கள், புத்திசாலிகள், கோட்டைசாமிகள் என்று மனிதர்களின் விசித்திரங்களை பார்க்கும் ஒரு வாய்ப்புதானோ பொது வாழ்க்கை.