Wednesday, December 21, 2011

சாகித்ய அகாதமி விருது பெற்ற சு.வெங்கடேசனுக்கு தமுஎகச பாராட்டு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

மாநிலக்குழு

11,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,மதுரை-625001

பத்திரிகைச்செய்தி:21.12.2011

சாகித்ய அகாதமி விருது பெற்ற சு.வெங்கடேசனுக்கு தமுஎகச பாராட்டு

CHENNAI, 18/07/2010: Suvenkatesh. Photo:Handout_E_Mail

2011க்கான தமிழ் இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு அவர் எழுதிய காவல் கோட்டம் நாவலுக்காக வழங்கப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சியையும் பெருமித்தையும் ஒருசேர எமக்கு வழங்கியுள்ளது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளரான அவர் பெற்றுள்ள இவ்விருது எம் அமைப்புக்கே கிடைத்த விருதாக எமது இயக்கத்தின் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களும் பெருமையுடன் கொண்டாடுகிறார்கள்.

தமிழ் நாவல் வரலாற்றில் அழுத்தமான தடம் பதித்த காவல் கோட்டம் நாவலுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது இன்னும் சிறப்பான செய்தியாகும்.அறுநூறு ஆண்டுகால மதுரையின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு கி.பி.1300லிருந்து 1900 வரையிலான காலத்தின் கதையை அரசியல், சமூகவியல்,இன வரைவியல் கண்ணோட்டத்துடன் இந்நாவல் பேசுகிறது.வரலாறும் புனைவும் பிரித்தறிய முடியாதபடிக்குப் பின்னிச்செல்லும் நுட்பமான அழகியலோடு இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது.தாதனூர் என்னும் சிறு கிராமத்து மக்களின் களவும் காவலுமான வாழ்வினூடாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதுரையைக் கைப்பற்றுவதில் துவங்கி ரேகைச்சட்டத்தால் களப்பலியாகும் ஒரு மக்கள் குழுவின் வரலாறாகவும் இந்நாவல் விரிகிறது.என்னதான் முயன்றாலும் ஆங்கிலேய மூளைகளால் கணித்திடவே முடியாத ஒரு எளிய ஆனால் வலுவான உள்ளூர் பண்பாட்டு வரலாற்றைப் பதிவு செய்வதாகவும் காவல் கோட்டம் அமைகிறது.ஏற்கனவே இருந்த பண்பாட்டை அழித்து புதிதாக எதையும் தராத ஆங்கில அரசு என்று கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்ட ஒரு வரலாற்று உண்மையின் கலாபூர்வமான வடிவமாகவே காவல் கோட்டம் நாவல் அமைந்துள்ளது.1050 பக்கங்களில் விரியும் ஒரு பெருங்கதையாக ஓர் உள்ளூர்வரலாறு சொல்லப்பட்டிருப்பது தமிழில் அரிதாக நடக்கும் படைப்பு முயற்சியாகும்.ஏழு ஆண்டுகால கடுமையான ஆய்வுகளையும் உழைப்பையும் உண்டு செறித்து எழுந்து நிற்கும் காவல் கோட்ட்த்துக்காக இவ்விருது வழங்கப்பட்டிருப்பது அந்த உழைப்புக்குக் கிடைத்த உரிய அங்கீகாரமாகவே தமுஎகச கருதுகிறது.

ஓட்டையிடாத புல்லாங்குழல்,பாசி வெளிச்சத்தில்,ஆதிப்புதிர் போன்ற தொகுப்புகளின் வழியே ஒரு நுட்பமான கவிஞராக வெளிப்பட்ட எழுத்தாளர் சு.வெங்கடேசன் தொடர்ந்து ஆட்சித்தமிழ்,கலாச்சாரத்தின் அரசியல்,கருப்பு கேட்கிறான் கிடா எங்கே,மதமாற்றத்தடைச்சட்டம்,சமயம் கடந்த உ.வே.சா போன்ற பல நூல்களால் ஓர் ஆழமிக்க ஆய்வாளராக முகம் காட்டினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக அவர் ஆற்றிவரும் களப்பணிகள் அவரது இன்னொரு முகம்.தன் ஆவேசமிக்க உரைகளின் மூலம் அணிகளை மன எழுச்சிகொள்ள வைப்பவர் சு.வெங்கடேசன்.

2011 செப்டம்பரில் விருதுநகரில் நடைபெற்ற தமுஎகசவின் மாநில மாநாட்டில் அவர் தமுஎகசவின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.இவ்வளவு இளம் வயதில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தமிழ்ப் படைப்பாளி என்கிற பெருமையையும் இதன்மூலம் அவர் பெறுகிறார்.

தமுஎகச படைப்பாளிகள் இன்னும் உற்சாகத்துடன் தம் படைப்பு முயற்சிகளில் ஈடுபட இவ்விருது தூண்டுதலாக அமையும்.தோழர் சு.வெங்கடேசனுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஆவிசேரக் கட்டியணைத்துத் தெரிவித்துக்கொள்கிறது.

அருணன்                          ச.தமிழ்ச்செல்வன்

கௌரவத்தலைவர்           மாநிலத்தலைவர்

10 comments:

விடுதலை said...

ஆயிரம் பக்க அபத்தம் என்று ஏகத்தாளம்பேசியவர்களுக்கும் அமைப்பில் இருந்தால் கலைஞன் சிறப்பாக செயலாற்றமுடியாது என்றவர்களுக்கு இது சரியான பதில் வாழ்த்துகள் தோழர்

Rathnavel Natarajan said...

மனப்பூர்வ வாழ்த்துகள்.

Prem said...

வாழ்த்துக்கள்!!!

சித்திரவீதிக்காரன் said...

மதுரையை மையமாக கொண்டு வந்துள்ள சு.வெங்கடேசனின் ‘காவல்கோட்டம்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். பெரிய நாவல் என்பதால் இன்னும் வாசிக்கவில்லை. மதுரை குறித்த ஆவணம் என்பதால் எப்படியும் 2012ல் வாசித்துவிடுவேன். மதுரை புத்தகத்திருவிழாவில் சு.வெங்கடேனின் உரையை ஒருமுறை கேட்டிருக்கிறேன். அவருக்கு மதுரை வாசகனின் வாழ்த்துகள். மதுரைக்கே விருது கிடைத்தது போலிருக்கிறது. பகிர்விற்கு நன்றி.

முனைவர் இரத்தின.புகழேந்தி said...

முதல் புதினத்திற்கே விருது மிகவும் மகிழ்ச்சி அவரின் படைப்பாற்றலுக்குக் கிடைத்த வெற்றி சாகித்ய அக்காதமியைப் பாராட்டுவோம் வெங்கடேசனை வாழ்த்தி கொண்டாடுவோம்.

மணிச்சுடர் said...

த.மு.எ.க.ச எப்போதும் தனித்தவமான படைப்பாளிகளைக் கொண்ட அமைப்பு. இத்தனை இளம் வயதில், தனது முதல் புதினத்தில் முத்திரை பதித்த சாகித்திய அகாதமி விருது பெற்ற தோழர் சு.வெங்கடேசனுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள்.. இந்த விருதுக்குப் பிறகு அவருக்கு நிறைய சமூகப் பொறுப்புள்ள படைப்புகள் படைக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது..படைப்பார்.

அம்பலத்தார் said...

2011க்கான தமிழ் இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு ‘காவல்கோட்டம்’ நாவல்மூலம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் நண்பரே.

புதுச்சேரி அன்பழகன் said...

நான் மிகவும் விரும்பி படித்த புத்தகம் .பதினைந்து நாட்களாக தொடரந்து படித்து முடித்தேன் .மதுரையை பற்றியும் கள்ளர் மக்களின் களவும் காவலும் நிறைந்த வாழ்க்கையைப படித்து அசந்துபோனேன் .இருட்டைப்பற்றிய எழுத்தாளரின் எழுத்துகள் உணர்த்சிகலந்த சிந்தனையை அழகியலை துண்டக்கூடியவை .இந்த நாவலை எதிர்த்த விமர்சனக்கள் வீணானவை என்பததை காலம் நிருபித்துவிட்டது .சு.வெங்கடேசனுக்கு பாராட்டுகள் .

ganesan said...

உண்மைக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி.த மு எ க ச வினருக்கு இது உண்மை ஒளிரும் காலம்.நவீனதாரிகள் ஒதுக்கினாலும்,காலமறிந்து கூவும் சேவலை யாரும் தடுத்திட முடியாது என்பதை நிரூபித்திருக்கிறத் இவ்விருது.நெஞ்சம் நிறைய வாழ்த்துக்கள்.

Unknown said...

மதுரை மண்ணின் மகத்தான படைப்பாளிக்கு எனது வாழ்த்துக்கள்