Tuesday, March 31, 2009

கோடையும் அப்படித்தான்...

 

drought

 

கோடை வேகமாக வந்து கொண்டிருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் வெப்பம்
அதிகரித்துக்கொண்டே போகிறது.global warming அச்சுறுத்துகிறது.வெயிலில்
அரைநாள் பைக்கில் சுற்றினாலே உடம்பு படுத்துவிடுகிறது.பெண்களில் பலருக்கு
யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பதுபோல
கோடையின் வருகை அவர்களது உடம்பில் ஏற்படும் மாற்றங்களால் உபாதைகளால்
முன்னறியப்படுகிறது.டினோசார் போன்ற அத்தப் பெரிய ஜீவராசிகளே
பருவநிலை மாற்றங்களால்தான் செத்து மடிந்தன  என்பதை படிக்கும்போது
ஒப்புக்கொண்டதைவிட இந்த வெயிலில் அலையும்போது சந்தேகத்துக்கிடமில்லாமல்
ஏற்றுக்கொள்கிறோம்.

வெயிலின் உக்கிரத்திலிருந்து தப்பிக்க 36 வழிகள் என்று நம்முடைய வாரப்பத்திரிகைகள்
இலவச இணைப்புகள் வழங்குவார்கள்.மோர்,இளநீர்,குளிர்பானங்கள்,தர்ப்பூசணி போன்றவை
நம் காவல்தெய்வங்களாக கோடையில் கை கொடுக்கும்.இதெல்லாம்விட நிறைய தண்ணீர்
குடிப்பதுதான் அவசியம் என்று எஸ்.வி.வேணுகோபால் போன்றவர்கள் நமக்குச்
சொல்லுவார்கள்.(அவர் யார் என்று கேட்கிறீர்களா ‘ உடலும் உள்ளமும் நலம்தானா?’  என்கிற
அற்புதமான  சிறுநூலை எழுதியவர்.உடல் நலம் மனநலம் இரண்டைப்பறியும் ஒருங்கே
பேசிவரும் ஒரு சமூக சேவகர். )

எங்கள் கரிசல்காட்டில் கோடைக்கு பானக்கரம் என்று ஒரு பானம் தயாரிப்பார்கள்
கருப்பட்டியும் புளியும் மட்டுமே கரைத்த நீர்.என்ன தேவாமிர்தமாக இருக்கும்?அதை விட்டால்
புளிச்சாணி என வாய்ச்சொல்லால் வாங்கப்படும் புளிச்ச தண்ணி -
இது அரிசிச் சோற்றுப் பானையில் பழைய சோற்றுடன் ஊறி ஊறிப் புளித்த தண்ணீர்தான்
கோடையில் இதில் பச்சைத்தண்ணி கலந்து புளிப்பை மட்டுப்படுத்தி கொஞ்சம் உப்பு சேர்த்துக்
குடிக்கக் குடிக்க அது கொண்டா கொண்டா என்று சொல்லும்.
இதன் நாகரீக வடிவம் அல்லது  மத்திய தர வர்க்க வடிவம்தான்
கலைவாணர் குடிச்சுப் பழகணும் என்று பாடிய நீராகாரம்.

நம்மைப்போன்ற ஊர் சுற்றிகளுக்கு இப்போது வரப்பிரசாதமாக அமைந்திருப்பது
எல்லா ஊர்களிலும் கிடைக்கும் கம்பங்கூழ்.அந்தத் தள்ளுவண்டிகளைக்கண்டால்
நம்ம கால்கள் தாமே அங்கு கொண்டு சென்று நம்மைச் சேர்த்து விடுகின்றன.
எல்லா இடங்களிலும் சுத்தமான கூழ் கிடைப்பதாகக் கூற முடியாது.
குடித்துப் பார்த்து  நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
விவரமில்லாமல் மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் ஒருமுறை கம்பங்கூழ்
குடித்து அன்றே புடுங்கிக் கொண்டது.மதுரை என்றால் ஆரப்பாளையம் பஸ்
நிலையம் அருகே ஒரு அம்மணி கடை,நெல்லையில் பைபாஸ் ரோட்டில் மதி கூழ் பார்
என்று ஜம்பமாக எழுதப்பட்ட தள்ளுவண்டி-பைபாஸ் ரோட்டில்,சைதாப்பேட்டை கோர்ட்
அருகே,எக்மோர் ஆஸ்பத்திரி அருகே,சேலம் ஒமலூர் ரோட்டில்- என்று நிறைய கூழ்
பார்ட்டிகளோடு சினேகம் வைத்துள்ளேன்.

எங்கே கூழ் குடித்தாலும் காஞ்சிபுரம் மாவட்டம் கூழமாந்தல் கிராமத்தில் எங்கள்
பட்டறை ஒன்றில் காலை உணவாகக் கிடைத்த கூழுக்கு இணையாக
சமீப காலத்தில் எங்கும் நான் கூழ் சாப்பிட்டதில்லை.உழைப்பாளி மக்களின் அமிர்தம் அது.

சரி.கதைக்கு வருவோம்.

இந்த வெயிலைத் துச்சமாக மதித்து தார்ச்சாலைகளில் கால்களில் சாக்குக்
கட்டிக்கொண்டு வேலை செய்யும் ஆண்கள் பெண்கள்,கட்டிடத்தொழிலில் தலையில்
சாக்குக் கட்டிக்கொண்டு களத்தில் நிற்பவர்கள் இத்தேசமெங்கும் இக்கோடையில்
விவசாயம் இல்ல்லாது ஏதேனும் கூலி வேலை தேடி நகரங்களை நோக்கிப் படையெடுக்கும்
லட்சோப லட்சம்  உழைக்கும் மக்கள் (சாய்நாத்தின் கட்டுரைகளில் தவிர வேறு எங்கும்
பாடல் பெறாத இத்தலைமக்கள்- அதிலும் குழைந்தை உழைப்பாளிகள்)  வெயிலுக்குப்
பாதுகாப்பாக கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு
ஸ்ட்ரா போட்டு இளநீர்க் குடித்தும் சூடு தணியாத நம்மைப் பார்த்து
சாப்பிடுங்க சார் அதுக்கென்ன நாங்க போய்க்கிட்டு இருக்கோம் ஒரு பக்கமா...
என்று சொல்வதுபோல ஒரு காட்சி
வந்து வந்து மனதை அறுக்கிறது.இளநீர் தொண்டையில் விக்குகிறது.

நமக்கு இளநீர் வெட்டிக்கொடுத்தபடி இடையிடையே தாகத்துக்கு பக்கத்தில்
வைத்திருக்கும் பிளாஸ்டிக் குடத்திலிருந்து ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்துக்கொண்டு
அதற்கும் நம்மிடம் சாரி சொல்வதுபோல சிரித்துக்கொண்டு இளநீர்க்காய்களை வேகவேகமாக
வெட்டித்தள்ளும் அந்தப் பெண்மணி  வெட்டிய இளநீரை நம்மை நோக்கி நீட்டியபடி நம்
பயணம் முழுவதும் கூடவே வந்து கொண்டிருக்கிறாள்.

கோடையும் கூட  வர்க்க பேதத்துடன்தான் பூமிக்கு வந்து சேர்கிறது.

8 comments:

மண்குதிரை said...

புஞ்சைக்கு எங்க ஆச்சி கொண்டுவரும் பழய சோறை, ஊடு பயிரா நிக்கிற வெங்காயத்த புடிங்கி குடிச்சத ஞாபகப்படுத்திட்டீங்களே. என்ன சார் நீங்க.
*******

//நமக்கு இளநீர் வெட்டிக்கொடுத்தபடி இடையிடையே தாகத்துக்கு பக்கத்தில்
வைத்திருக்கும் பிளாஸ்டிக் குடத்திலிருந்து ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்துக்கொண்டு
அதற்கும் நம்மிடம் சாரி சொல்வதுபோல சிரித்துக்கொண்டு......///

உண்ர்ந்திருக்கிறேன்.

Deepa said...

//வெயிலுக்குப்
பாதுகாப்பாக கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு
ஸ்ட்ரா போட்டு இளநீர்க் குடித்தும் சூடு தணியாத நம்மைப் பார்த்து
சாப்பிடுங்க சார் அதுக்கென்ன நாங்க போய்க்கிட்டு இருக்கோம் ஒரு பக்கமா... //

//கோடையும் கூட வர்க்க பேதத்துடன்தான் பூமிக்கு வந்து சேர்கிறது//

வெயிலை விட அதிக சூடு இப்போது நெஞ்சுக்குள்.

ச.தமிழ்ச்செல்வன் said...

மண்குதிரை சாருக்கும் தீபாவுக்கும் நன்றி.இப்படியாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

தமிழன்-கறுப்பி... said...

உண்மைதான்...

hariharan said...

“நம்மைப்போன்ற ஊர் சுற்றிகளுக்கு இப்போது வரப்பிரசாதமாக அமைந்திருப்பது
எல்லா ஊர்களிலும் கிடைக்கும் கம்பங்கூழ்”

கம்பங்கூழ் என்றவுடன் ஞாபகம், எங்கள் கிராமத்தில் அரிசி சோறு கிடைக்காத காலத்தில் கம்பு ஒன்று தான் மூன்று வேளையும் பெரும்பாலான மக்களுக்கு உணவு ஆனால் இன்றோ எங்கள் விவசாயத்தில் கம்பு என்ற பயிரே இல்லை, என் சிறு வயதில் வீட்டில் “குழுகை”யில் எப்போதும் கம்மம்புல் இருக்கும், இப்போது ஆசைக்கு சாப்பிடவேண்டுமானாலும் நீங்கள் கூறுகிற தள்ளுவண்டியில் தான் குடிக்கமுடிகிறது.

ஹரிகரன்
மலைப்பட்டி (கடம்பூர்)

Joe said...

அருமையான பதிவு.
சிறுவயதில் அப்பாயி, தாத்தா ஊருக்கு சென்று வெயிலில் சுற்றி திரிந்து நொங்கு, இளநீர், பதநீர் குடித்த காலங்களை நினைவுபடுத்தி விட்டீர்கள்.

நகரத்திலே பிறந்து வளர்ந்த இளம் பதிவர்களுக்கு இவையெல்லாம் புதிதாக இருக்கலாம்.

பெண்களைப் பற்றி சொன்னவுடனேயே அடுத்த வரியில் டைனோசர்-களை பற்றி சொல்லுவானேன்? இதுல எதுவும் உள்குத்து இருக்கோ?

டைனோசர்கள் விண்வெளிக்கல் பூமியை தாக்கியதால் தான் அழிந்தன என்று படித்ததுண்டு. பருவநிலை மாற்றம்?

ச.தமிழ்ச்செல்வன் said...

வந்த உள்ளங்களுக்கு நன்றி. நண்பர் joe சொல்வது உண்மை.என்னிடமுள்ள அறிவியல் புத்தக வரி இவ்விதமாக ஓடுகிறது “one explanation is that the earth received an enormous shock from a colliding meteorite and many animal groups could not survive the sudden changes.Another is that slower changes in the Earth's climate reached a stage where certain groups no longer fitted in.no one has found a complete answer to explain the extinction of the dinosaurs'

நமக்குப் பொறுத்தமானதைப் போட்டுவிட்டோம் அவ்வளவே.தங்கள் கருத்தும் சரிதான்.

பெண்களுக்கு சமூகம் கொடுக்கிற உள் குத்துகள் போதாதா சாமி

venu's pathivukal said...

dear Thamizh

Again, one more piece dwelling on the class contradictions of the society. You prove once more that marxist perspective could be illustrated emotionally from day to day examples.....
thanks for citing our humble work... Udalum Ullamum Nalam Thaana.
The Health column in April issue of Bank Workers Unity magazine that carried the discussion on Summer problems, dehydration, tips on beating the heat, etc., (credit to Dr P V Venkatraman, M.D.,(Homoeo) for his briefings) has been receiving high appreciation from readers.

such is the 'kodumai' of 'kodai'

s v venugopalan