Friday, May 27, 2011

நம்பிக்கையூட்டும் இரண்டு படங்கள்

 

1.அழகர்சாமியின் குதிரைkuthirai

தமிழில் நீண்ட காலத்துக்குப் பின் வெளிவந்துள்ள ஒரு சாதி எதிர்ப்பு- பகுத்தறிவுப் படம் அழகர்சாமியின் குதிரை.வறட்டுப் பிரச்சாரமாக அல்லாமல் காட்சிக்குக் காட்சி அழகியல் கூறுகளுடன் பாஸ்கர் சக்தியின் கச்சிதமான சிறுகதை திரைப்படமாகியுள்ளது.வெண்ணிலா கபடிக்குழுவில் வெற்றிகரமாகத் துவங்கி , நான் மகான் அல்ல என்று வர்த்தகமாகப் போய், அழகர்சாமியின் குதிரையுடன் அற்புதமாக மீண்டு வந்துள்ளார் சுசீந்திரன்.

மூன்று ஆண்டுகளாக மழை தண்ணி இல்லாமல் வாழ்க்கை வறண்டு போன ஒரு கிராமத்தில் அழகர்சாமிக்கு திருவிழா எடுக்க முயலும் ஊர்ச்சனம் , தடைமேல் தடையாக வந்து விழா நின்று நின்றுபோகும் துக்கத்தில் நிற்கிறது.எல்லாம் கூடிவரும் வேளையில் சாமியின் வாகனமான மரக்குதிரை காணாமல் போகிறது. கதை சூடு பிடிக்கிறது.காவல்துறை ஊருக்குள் நுழைகிறது.வெத்திலையில் மை போட்டுக் குதிரையைத் தேட மலையாள மந்திரவாதி வருகிறான்.

காட்சிக்குக் காட்சி யதார்த்தமான மொழியில் தெறிக்கும் பகுத்தறிவு வசனங்களோடு (வசனம்-பாஸ்கர் சக்தி) படம் நகர்கிறது.இதற்கிடையில் நிஜக்குதிரை ஒன்று ஊர் எல்லைக்கு வந்து நிற்க அதுதான் சாமியின் குதிரை என்று மந்திரவாதி சொல்ல ஊர் அதைக் கொண்டாடி மகிழ்கிறது.மலைவாழ் மகனான அழகர்சாமி காணாமல் போன தன் குதிரை அப்புவைத் தேடி கிராமத்துக்கு வர, கதை புதிய திருப்பம் கொண்டு பயணிக்கிறது.

ஓர் இலக்கியப் படைப்பைத் திரைப்படமாக்குவதில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது இப்படம்.முற்றிலும் சினிமா மொழியில் எடுக்கப்பட்ட இப்படத்தின் இசையை இளையராஜா வழங்கியுள்ளார்.பாடல்களைப் பார்க்கிலும் பின்னணி இசை அற்புதமாக அமைந்துள்ளது.கேமிரா கோணங்களும் விரியும் மலைக்காட்சிகளும் படத்துக்கு மேலும் அழகையும் செறிவையும் சேர்க்கின்றன.குறிப்பாக குதிரைகள்  சுமைகளுடன் பயணிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ள விதம் உலகத்தரமானது.

தத்துவ நோக்கில் இப்படத்தை அணுக இடம் வைத்துக் கதை நகர்கிறது.பல்வேறு ஆசைகளும் நோக்கங்களும் சுயநலங்களும் குற்றங்களும் நிறைந்த கிராமத்தில் தன் குதிரை அப்புவின் மீது கொண்ட அன்பைத்தவிர வேறு ஏதும் அறியாத வெள்ளை மனம் கொண்ட அழகர்சாமி மக்களின் மனச்சாட்சியைத் தூண்டும் எளிய சக்தியாக அந்தத் தெருவில் படுத்துக்கிடக்கிறான்.அவனுடைய குழந்தை மனதின் முன் அத்தனை குற்ற மனங்களும் கரைந்து வழிந்தோடுவதே கதை என்றும் வாசிக்கலாம்.அழகர்சாமிக்காக மலையில் காத்திருக்கும் அப்பெண்ணின் மாசு மருவற்ற அன்பு திரைக்குப் பின்னால் மறைந்து நின்று நம் மனங்களை நிறைக்கிறது.

அழகர்சாமியைத் துட்டர்கள் தாக்கும்போது கட்டிய கயிற்றை அறுத்தெறிந்து ஊருக்குள் ஓடும் குதிரை எல்லாக் கெட்டவற்றையும் மிதித்துத் துவம்சம் செய்தபடி பாய்கிறது.இக்காட்சியையும் ஒரு குறியீடாக நம்மால் வாசிக்க முடிகிறது.

பொய்யும் புனைசுருட்டும் பித்தலாட்டமும் துரோகமும் மலிந்துபோன இன்றைய நாட்களில் எளிய கிராமத்து மனிதர்களை அவர்களின் வெள்ளை உள்ளங்களை அவர்களின் தெள்ளிய நீர் போன்ற அன்பை அவர்களுக்கேயுரிய நம்பிக்கைகளுடனும் அவநம்பிக்கைகளுடனும் முன் வைப்பதே ஒரு கலைஞனின் அரசியல்தான்.சாதிய உணர்வின் மீதான சவுக்கடியாகப் பெருமழை எல்லோருக்குமாகப் பெய்து படத்தை நிறைவு செய்வது அழகோ அழகு.

திராவிட இயக்கம் சார்ந்த 40களின் பகுத்தறிவுப்படங்களுக்குப் பின்னர் இந்த மாதிரிப் படங்களை எவரும் தயாரிக்கவில்லை.திராவிட இயக்கத்தாரும் மானும் மயிலும் ஆடுவதை மக்களுக்குக் காட்டப்போய் விட்டார்கள்.70 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர்- இரண்டு தலைமுறைகளுக்குப் பின்னர் -இக்கலைஞர்கள் இந்த அழகான படத்தை கலைநுட்பங்கள் நிறைந்த ஒரு கலைப்படைப்பாக நமக்கு வழங்கியிருக்கிறார்கள்.

உலகத்தரத்துக்கான ஓர் உள்ளூர்ப்படமாக தமிழ் அடையாளங்களோடு வந்துள்ள இப்படைப்பை தமிழ்கூறு நல்லுலகம் இருகரம் விரித்து ஆவி சேர்த்துக் கட்டியணைத்து வரவேற்க வேண்டும்-தயாநிதி அழகிரியின் ஏகபோக க்ளவுட் நைன் மூவீஸ் வெளியிட்டிருந்தபோதும்.

2. நர்த்தகிnarthagi

புன்னகைப்பூ கீதாவின் தயாரிப்பில் ஜி.விஜயபத்மாவின் இயக்கத்தில் வந்துள்ள நர்த்தகி தமிழ்ச் சினிமா வரலாற்றில் துணிச்சலான ஒரு முயற்சி.திருநங்கைகள் என்றும் அரவாணிகள் என்றும் அழைக்கப்படுகிற (இயற்கையின் படைப்பில் நேரும் பிழை என்று கூறப்படுகிற) மனிதர்கள் பற்றிய முதல் தமிழ்த் திரைப்படம் இது.திரையிட தியேட்டர்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு அதன் காரணமாகக் காலதாமதமாக வெளியாகியுள்ள படம் இது.

சுப்பு என்கிற இளைஞன் பெண்ணாகத் தன்னை உணர்ந்து இருபாலினத்தவனாக மாற்றம் பெறுவதை மையமாகக் கொண்ட ஒரு கதை மிகுந்த அக்கறையுடன் நேராகச் சொல்லப்பட்டுள்ளது.திருநங்கை கல்கி தன் கதையைக் கூறுவது போன்ற வடிவத்தில் கதை பின்னப்பட்டுள்ளது.ஒரு காதல்-காமப் பாடல் காட்சி தவிர படத்தில் வேண்டாத காட்சி என்று ஏதும் இல்லை.

குழந்தைப்பருவக் காட்சிகள் சற்று நீளம் என்கிற உணர்வை ஏற்படுத்துகின்றன.புறவயமான நிகழ்வுகள் மூலமே பாலின மாற்றம் அடையும் இளைஞனின் அக உணர்வுகளைச் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.அதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.மும்பைக்குச் சென்று அறுவைச்சிகிச்சை மூலம் ஆணைக் களைந்து பெண்ணாகும் காட்சிகள் முதன் முறையாக விரிவாகப் படமாக்கப்பட்டுள்ளன.அவை எல்லாமே விழாக்கோலமாக நகர்ந்து செல்கின்றன.அவர்களின் உலகம் அது. திருநங்கை ப்ரியாபாபுவும் அவரது கலைக்குழுத் தோழர்களும் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளனர்.பாலினமாற்றம் அடையும் இளைஞனாக வரும் கலைஞரும் பாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார்.

ஆண் உடலுக்குள் சிறைப்பட்ட பெண் உடலை உணர்ந்து விடுபடத்துடிக்கும் உணர்வும் வேதனையும் கொந்தளிப்பும் சில திருநங்கையரின் எழுத்துக்களில் வந்த அளவுக்குப் படத்தில் சொல்லிவிட முடியவில்லை.அகவயமான பயணத்தைத் திரையில் பதிவு செய்வது சவால் மிக்க பணி என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.எனினும் ஆண்மை திமிரும் ஒரு சிலம்பாட்டக்காரரின் மகனாகக் காட்டாமல் ஒரு சாதாரணமான இயல்பான குடும்பத்திலேயே இத்தகைய குழந்தைகள் எவ்விதம் நடத்தப்படுகிறார்கள் –துரத்தப்படுகிறார்கள் என்பதைச் சொன்னாலே கூட அது பலமான அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கத்தான் செய்யும்.இப்படியான ஒரு குடும்பம் என்பது நுட்பமான தளத்தில் இப்பிரச்னையை ரசிகர்கள் உள்வாங்கத் தடையாக இருப்பதாக உணர்கிறோம்.ஜி.வி.பிரகாஷின் இசையில் நா.முத்துக்குமாரின் பாடல்கள் கதைக்கு ஏற்ற மனநிலையை உருவாக்க உதவியுள்ளன.இதயத்தில் விழும் மழைத்துளிகள் பாடல் நினைவில் நிற்கிறது.

சமீப ஆண்டுகளாகத் தமிழ்ச்சமூகத்தின் பொதுவெளியில் தம்மை வலுவான குரலில் முன் வைத்து வரும் திருநங்கைகளான தோழர்களின் தொடர் முயற்சிக்கு ஊக்கமும் உரமுமாக இப்படம் அமைந்துள்ளது.

சமூக அக்கறையுள்ள ஒவ்வொரு தமிழரும் இப்படத்தை ஆதரிக்க வேண்டும்.

2 comments:

hariharan said...

very good movie, i watch the movie after your review.

சித்திரவீதிக்காரன் said...

அழகர்சாமியின் குதிரை’ படத்தைப் பார்த்ததும் சிங்கிஸ் ஜத்மதேவ் எழுதிய ‘ஃபேர்வெல் குல்சாரி’ என்ற ரஷ்யநாவல் தான் ஞாபகம் வந்தது. பாஸ்கர் சக்தியின் சிறுகதையை மிக அற்புதமாக படமாக்கியிருக்கிறார்கள். தங்களுடைய ‘வெயிலோடு போய்’ சிறுகதையை பூ படமாக்கியது போலவே இப்படமும் நன்றாக அமைந்து விட்டது. நர்த்தகி இன்னும் பார்க்கவில்லை. அரவாணிகளை கேலி செய்து தான் இது வரை படங்கள் வந்துள்ளன. இப்பொழுது அவர்களது வலியை பதிவு செய்தும் படங்கள் வருவது தமிழ் சினிமா ஆரோக்கியமாக மாறி வருவதை காட்டுகிறது. பகிர்விற்கு நன்றி!