Friday, May 27, 2011

தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு சாந்தி,தாமரை,செம்மலர் இதழ்களின் பங்களிப்பு

jeeva

பத்திரிகை வாசிக்கும் பழக்கமே சிறுகதையின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைந்ததை நாம் அறிவோம்.பி.எஸ்.ராமையா காலத்து மணிக்கொடியிலிருந்து இன்றைய உயிரெழுத்து வரை காலந்தோறும் இலக்கிய இதழ்கள் சிறுகதை வளர்ச்சிக்குப் பங்காற்றி வருகின்றன.

இந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக இடதுசாரிகளால் நடத்தப்பட்ட/நடத்தப்படும் சாந்தி,தாமரை,செம்ம்மலர் இதழ்கள் சிறுகதைக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த சில கருத்துக்களை இங்கு தொகுத்துப்பார்க்கலாம்.இம்மூன்று இதழ்களில் சாந்தி இதழ் நாடறிந்த கம்யூனிஸ்ட்டான திரு.தொ.மு.சி.ரகுநாதன் அவர்களின் தனிநபர் முயற்சியாக வந்தது. தாமரை இதழ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் இலக்கிய இதழாகவும் செம்மலர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) நடத்தும் இலக்கிய இதழாகவும் வந்துகொண்டிருக்கின்றன.

1.சாந்திtho.mu.si

இம்மூன்று இதழ்களில் காலத்தால் முந்தியது சாந்தி.1954 ஆம் ஆண்டு டிசம்பரில் முதல் இதழ் வந்தது.சாந்தி மலர்கிறது என்கிற தலைப்பிலான அவ்விதழின் தலையங்கத்தின் இரண்டாவது பத்தி இவ்விதம் செல்கிறது:

“ பாட்டுக்கொரு புலவன் பாரதியும் தேசபக்த சிரோமணி சிதம்பரம்பிள்ளையும் சிறுகதைக்கோர் தனிநாயகன் புதுமைப்பித்தனும் தோன்றிய சீமையிலிருந்து சாந்தி மலர்வதில் பெருமை கொள்கிறது: அவர்கள் கற்பித்துத் தந்த லட்சிய மார்க்கத்தையும் இலக்கிய போதத்தையும் கருத்திலே கொண்டு ,புதிய இலக்கியங்களைப் படைத்து ,அவர்களைப்போல் தமிழர் நெஞ்சில் தனித்ததோர் இடம் பெற்று வாழ வேண்டும் என்ற ஆர்வத்தோடு சாந்தி இன்று மலர்கிறது “

தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளான பாரதியையும் புதுமைப்பித்தனையும் முன் வைத்து முதல் தப்படியை எடுத்து வைத்த சாந்தியின் முதல் இதழில் அன்று நெல்லையில் இயங்கிய நெல்லை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப்போட்டியில் 100 ரூபாய் பரிசு பெற்ற திரு.சுந்தரராமசாமியின் தண்ணீர் சிறுகதை பிரசுரிக்கப்பட்டுள்ளது. விந்தன்,வல்லிக்கண்ணன், ப.சீனிவாசன்.தி.க.சிவசங்கரன்,ரகுநாதன் ஆகிய ஐவரும் இப்போட்டியின் நீதிபதிகளாக இருந்துள்ளனர்.

அதே இதழில் கே.ஏ.அப்பாஸின் பழிக்குப்பழி என்ற மொழிபெயர்ப்புச் சிறுகதையும் அகிலனின் மழை இரவு என்கிற சிறுகதையும் சி.வி.எஸ்.ஆறுமுகம் என்பாரின் டாக்டரின் கோபம் என்கிற சிறுகதையும் பிரசுரமாகியுள்ளன.72 பக்கமே உள்ள அந்த இதழில் சிறுகதைக்கு(ஒரு பக்கக் கதை ஒன்றையும் சேர்த்து) 43 பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வெறும் பக்க அளவால் மட்டுமின்றி சுந்தரராமசாமி,அகிலன்,கே.ஏ.அப்பாஸ் எனத் தரமான படைப்பாளிகளின் கதைகள் பிரசுரமாகியுள்ளதும் குறிப்பிட்டுப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

சாந்தியின் ஒவ்வொரு இதழுமே இவ்விதமான கட்டமைப்போடு சிறுகதைக்கு அதிகமான அழுத்தமும் பக்கங்களும் ஒதுக்கி ஒவ்வொரு இதழும் இந்தியச்சிறுகதை என்கிற தலைப்புடன் ஒரு மொழிபெயர்ப்புச் சிறுகதையோடு வெளி வந்துள்ளதைப் பார்க்க முடிகிறது.உதாரணமாக இரண்டாவது இதழில் கிருஷ்ணசந்தரின் பௌர்ணமி நிலவிலே, 3 ஆவது இதழில் யஷ்பாலின் அன்பின் விலை நான்காம் இதழில் முல்க்ராஜ் ஆனந்த்தின் அனுமந்தபுரம் மகாராஜாவும் கூடுதலாக ஆண்டன் செகாவின் லாட்டரிச்சீட்டு கதையும் பிரசுரமாகியுள்ளன.அடுத்ததில் தகழியின் கதை வந்துள்ளது.இப்படி இறுதி இதழ் வரைக்கும் பன்னாட்டுச் சிறுகதைகளும் இந்தியச்சிறுகதைகளும் தமிழ்க் கதைகளுமென சாந்தி இதழ் சிறுகதைக்கான சிரப்பிதழ் போலவே வெளிவந்துள்ளதைப் பார்க்க முடிகிறது.பிற நாட்டார் கதைகளோடு நம் கதைகளையும் அருகருகே வைத்துப் பார்க்க வேண்டும் என்கிற மனநிலை மிக முக்கியமானது,இளம் படைப்பாளிகளுக்கும் சிறுகதைகளை ஆய்வு நோக்கில் அணுகுவோருக்கும் இது மிகப்பெரிய உதவியாகும்.

இத்தோடன்றி சாந்தி மூன்றாவது (பிப் 1955) இதழிலேயே புதுமைப்பித்தன் ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.நடுவர்கள் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிப்புக் கூறுகிறது.இதுவும் முக்கியமானதல்லவா.பின்னர் அகிலன்,அசோகன், நா.வானமாமலை, ரகுநாதன் ஆகியோர் பரிசீலனைக்குழுவினராக அறிவிக்கப்படுகின்றனர்.

ஜூன் 30 சிறுகதைக்கோர் தனிநாயகன் புதுமைப்பித்தனின் நினைவு நாள் ஆதலால் 1955 ஜூலை சாந்தி இதழை புதுமைப்பித்தன் மலராகக் கொண்டு வருகிறார் ரகுநாதன்.அவ்விதழில் புதுமைப்பித்தன் பற்றி எஸ்.வையாபுரிப்பிள்ளை,எஸ்.சிதம்பரம்,கு.அழகிரிசாமி,ரகுநாதன், இளங்கோவன் போன்றோரின் கட்டுரைகளும் தமிழ் ஒளியின் கவிதையும் ஜயகாந்தன், சுந்தரராமசாமி ஆகியோரின் சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன.

தமிழ்ச்சிறுகதைக்கு வளமான பங்களிப்பைச் செய்த சரஸ்வதி(ஆசிரியர். வ.விஜயபாஸ்கரன்) கலை இலக்கிய மாதப்பத்திரிகை வந்துவிட்ட விளம்பரம் மே 1955 சாந்தி இதழில் வெளியாகியுள்ளது.

உண்மையில் இடதுசாரி இலக்கிய இதழ் வரிசை சாந்தி-சரஸ்வதி-தாமரை-செம்மலர் என்றுதான் வந்துள்ளது.

தாமரை

1960 களின் முற்பாகத்தில் அமரர் தோழர் ஜீவானந்தம் அவர்களின் முன்முயற்சியில் பிறந்த இரு இயக்கங்கள் எனத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தையும் தாமரை இலக்கிய மாத இதழையும் குறிப்பிட வேண்டும்.தாமரை இதழின் ஆசிரியராக தி.க.சிவசங்கரன் பொறுப்பேற்று நடத்திய 1965க்கும் 1972க்கும் இடையிலான காலம் தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய காலம் (கொஞ்சம் பழைய உவமானம்தான் என்றாலும்)என்று நிச்சயமாகக் கூறலாம்.இன்று தமிழின் மிகச்சிறந்த சிறுகதையாளர்களாக எல்லோராலும் அங்கீகரிக்கப்படும் பிரபஞ்சன், வண்ணநிலவன், பூமணி,கந்தர்வன், பா.செயப்பிரகாசம், ஆர்.கே.லிங்கன், தனுஷ்கோடி ராமசாமி போன்ற பலரும் மலர்ந்து மணம் பரப்பியது அன்றைய தாமரை இதழில்தான் என்று பெருமையுடன் குறிப்பிட முடியும். கு.சின்னப்பபாரதி,டி.செல்வராஜ்,பொன்னீலன் போன்ற முற்போக்கு இலக்கிய இயக்க முன்னோடிகளும் தாமரையில் கதைகள் எழுதியுள்ளனர்.

சமீபத்திய உயிரெழுத்து இலக்கிய இதழில் விரிவாக வெளிவந்துள்ள திகசியின் நேர்காணலில் இதுபற்றி அவர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.சிறுகதைப்போட்டிகளை தாமரை அவ்வப்போது நடத்தியுள்ளது.மே.து.ராசுகுமார் நடுவராக இருந்து போட்டிக்கு வந்த ஏராளமான கதைகளை ஆய்வு செய்தது பற்றி தனது நேர்காணலில் திகசி குறிப்பிடுகிறார்.புதுமைப்பித்தன் மலர், கரிசல் இலக்கிய மலர் எனப் பல சிறப்பிதழ்கள் வெளியிட்டு அவற்றில் சிறுகதைகளுக்கு முக்கிய இடம் தந்தது தாமரை.

அளவில் மட்டுமன்றி உள்ளடக்கத்திலும் வடிவத்திலும் வித்தியாசமான-வீச்சான - கதைகள் வெளிவரும் தளமாக தாமரை எப்போதும் இருந்து வந்துள்ளதுதான் தாமரையின் மிக முக்கியமான பங்களிப்பாகும்அது மட்டுமன்றி சிறுகதைகள் குறித்த ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டு சிறுகதை வளர்ச்சிக்கு தாமரை உதவியுள்ளது.கலாநிதி கைலாசபதி,கா.சிவத்தம்பி,நா.வானமாமலை போன்ற முக்கியமான ஆய்வாளர்கள் தொடர்ந்து தாமரையில் எழுதி வந்துள்ளனர்.பல சமயங்களில் சிறுகதைகள் பற்றிய தொடர் விவாதங்களும் தாமரையில் காத்திரமாக நடைபெற்றுள்ளது.

இடது எதிர்ப்பாளர்களும் கூடத் தாமரையின் சிறுகதைக்கான பங்களிப்பை இதுவரை மறுத்ததில்லை என்பதே தாமரையின் பங்களிப்புக்குச் சான்றாக நிற்கிறது.

செம்மலர்semmalar

நாவலாசிரியர் கு.சின்னப்பபாரதியின் முன்முயற்சியில் இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) கட்சியின் கலை இலக்கிய இதழாக 1970 முதல் வெளி வந்து கொண்டிருப்பது செம்மலர். அதனுடைய முதல் இதழ் தலையங்கம் கலை இலக்கியம் யாருக்காக என்கிற கேள்வியை எழுப்பிக் கீழ்க்கண்டவாறு பதிலளிக்கிறது:

“இன்று புதிய மாறுதலுக்கான புதிய போராட்டம் மலர்ந்திருக்கும் பொழுது இந்தப் புதிய போராட்டத்தின் புதிய கதாநாயகர்களாக உழைக்கும் மக்கள் வீறு கொண்டெழுந்திருக்கும்பொழுது

இப்புதிய போராட்டத்தின் மூலம் புதிய கலாச்சாரம்,புதிய பண்பாடு,புதிய மனிதன் உருவாகிக்கொண்டிருக்கும்போது இவைகளுக்கு எதிர்ப்பாகக் கிளம்பும் சுரண்டும் வர்க்கத்தினரை அம்பலப்படுத்துவதும் ,முற்போக்கு என்ற கொடியின்கீழ் தப்பான வழியில் தவறாகச செல்கிறவர்களை சரியான வழிக்கு விமர்சன ரீதியாகக் கொண்டு வருவதுமான பணியில் செம்மலர் தன் புதிய மலர்களை மடலவிழ்க்கிறது”

முதல் இதழில் கு.சின்னப்பபாரதியின் “அவள் எத்தனை குழந்தைகளுக்குத் தாயானாலும்’” என்ற கதையும் டி.செல்வராஜின் ஒரே ஒரு மைசூர்பாக் என்ற கதையும் ஒரு மொழிபெயர்ப்புக் கதையுமென மூன்று சிறுகதைகள் வெளியாகியுள்ளன. இக்கதைகளை வாசித்துப்பார்க்கையில் மிகச்சரியான பாதையில் செம்மலர்ச் சிறுகதைகள் பயணம் துவக்கியிருப்பது புரிகிறது.

செம்மலரின் துவக்க காலத்திலிருந்து அதில் கதைகள் எழுதுபவர்களாக டி.செல்வராஜ், கு.சின்னப்பபாரதி தவிர அஸ்வகோஷ்,தணிகைச்செல்வன்,மேலாண்மை பொன்னுச்சாமி, என்.ஆர்.தாசன்,ஞானபாரதி,சி.ஆர்.இரவீந்திரன் போன்றோரைக்குறிப்பிடலாம்.கவிதைகளில் மின்னிய தணிகைச்செல்வன் கதைகளில் சோபிக்கவில்லை.மற்ற எல்லோருமே தமிழின் முக்கியமான சிறுகதையாளர்களாக அறியப்பட்டவர்களே.20 ஆண்டு செம்மலர்க் கதைகளை தன் முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக்காக பரிசீலித்த பேராசிரியர் ச.மாடசாமி செம்மலரில் எழுதி அறிமுகமான படைப்பாளிகளை பத்தாண்டுகளின் வரிசையில் பட்டியலிட்டுச்சொல்கிறார்.அதில் வரும் சில பெயர்களைப் பார்த்தாலே சிறுகதைக்கு செம்மலர் ஆற்றியுள்ள வளமான பங்களிப்பு புரியும்.

எழுபதுகளில் எழுதியவர்களாக நாஞ்சில்நாடன்,கதைப்பித்தன்,செ.யோகநாதன்.பொள்ளாச்சி அம்பலம்,மும்தாஜ் யாசின்,கம்பராயன் போன்றோரையும் எண்பதுகளில் எழுதி செம்மலர் மூலம் அறிமுகமானவர்களாக கந்தர்வன்,தமிழ்ச்செல்வன்,வேல.ராமமூர்த்தி,தேனி சீருடையான், உதயஷங்கர்,காமுத்துரை,அல்லி உதயன்,ரோஜாக்குமார், ஷாஜகான்,கமலாலயன், நா.முத்துநிலவன், மாதவராஜ்,போப்பு,முகில்,பிரேமா அருணாசலம்,இந்து வரதன் ஆகிய பெயர்களோடு பெரிய பட்டாளமே வந்துள்ளது.இந்தப் பெயர்களோடு கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன்,பாவண்ணன் பெயர்களையும் செம்மலரில் பிறந்த படைப்பாளிகளாக அறியும்போது வெளி வட்டாரத்தார் அதிகம் குறிப்பிடாதபோதும் சிறுகதை வளர்ச்சிக்கு செம்மலர் ஆற்றியுள்ள பங்களிப்பை பெருமையுடன் பதிவு செய்ய முடியும்.இன்றைக்கும் எஸ்.லட்சுமணப்பெருமாள் ,சுப்பாராவ் போன்ற தமிழின் மிக முக்கியமான சிறுகதையாளர்கள் செம்மலரில்தான் அதிகம் எழுதிவருகிறார்கள்.

இன்றைக்கு இலக்கிய இதழ்கள் எல்லாமே சமகால அரசியல்,பண்பாட்டு நிகழ்வுகளுக்கு ஒதுக்கும் இடத்தின் அளவுக்கு சிறுகதைக்குத் தராத போக்கு உருவாகிவிட்டது. ஆனால் செம்மலர் இன்றும் மாதம் நான்கு அல்லது ஐந்து சிறுகதைகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.தவிர சிறுகதைப்போட்டிகள் நடத்தி இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் பணியையும் செம்மலர் செய்து வருகிறது.கந்தர்வன் நினைவுச் சிறுகதைப்போட்டியில் பரிசு பெறும் கதைகளை செம்மலர் ஆண்டுதோறும் பிரசுரம் செய்கிறது.

இவ்விதமாக தொகுத்துப்பார்க்கையில் இம்மூன்று இதழ்களும் சிறுகதைக்கு வளமான பங்களிப்பைச் செய்துள்ளதைப் புரிந்துகொள்ள முடியும்.

சாந்தியில் வெளியான எல்லாச் சிறுகதைகளையும் தாமரை உருவாக்கிய சிறுகதை மன்னர்கள் அனைவரின் சிறுகதைகளையும் செம்மலரின் பொறுப்பாசிரியர் என்ற முறையிலும் செம்மலர் தவிர வேறு இதழ்களில் எழுதாததவன் –அதன் தொடர்ந்த வாசகன் என்ற முறையிலும் செம்மலர் நடத்திய சிறுகதைப்போட்டியின் நடுவராக இருந்து 400 க்கு மேற்பட்ட கதைகளை வாசித்தவன் என்கிற முறையிலும் ஒரு விஷயத்தை அழுத்தமாக இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். தீக்கதிரிலும் ஜனசக்தியிலும் செய்தியாக வருவது செம்மலரிலும் தாமரையிலும் சிறுகதையாக வெளிவரும் என்று இடது எதிர்ப்பாளர்கள் சிலர் அவ்வப்போது எழுதி வருவது நூறுசதப்பொய்யும் அவதூறும் ஆகும்.தம் இடது எதிர்ப்பு மனோவக்கிரங்களைச் சுகமாகச் சொரிந்து விட்டுக்கொள்ள மட்டுமே உதவும் இவ்வாதத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை.சமகால வாழ்க்கை நிகழ்வுகளை இலக்கியமாக்கும் முயற்சிகளைப் புறக்கணிக்கும் அரசியலிலிருந்துதான் இத்தகைய கருத்துக்கள் சொல்லப்படுவதாக நாம் கருத முடியும்.செம்மலரிலும் தாமரையிலும் சாந்தியிலும் எழுதியுள்ள படைப்பாளிகளின் பட்டியலை பார்க்கும் எந்த மனச்சாட்சியுள்ள இலக்கியவாதியும் இவ்வாதத்தை ஏற்க மாட்டார்.இலக்கியச்சிந்தனை அமைப்பின் சிறுகதைப் பரிசுக்காக பல இதழ்களில் வந்த கதைகளை நடுவராக இருந்து ஆய்வு செய்த எழுத்தாளர் தி.ஜானகிராமன் அந்த ஆண்டின் சிரந்த கதையாக செம்மலரில் வெளியான மும்தாஜ் யாசீனின் பசி கதையைத்தான் தேர்வு செய்தார் என்பதை நினைவுக்குக் கொண்டு வருகிறேன்.

இடதுசாரிகள் உள்ளடக்கத்துக்கு மாத்திரமே முக்கியத்துவம் அளிப்பர்.வடிவத்துக்கும் அழகியலுக்கும் முக்கியத்துவம் அளிக்க மாட்டார் –வெறும் போராட்டக் கதைகளாகவே அவர்கள் எழுதுவார்கள் என்றும் சிலர் பேசுவதுண்டு.அதற்கு முகத்திலடிக்கும் விடையாக இம்மூன்று இதழ்களிலும் வந்துள்ள சிறுகதைகளே சான்றாக அமைகின்றன.

இது குறித்து செம்மலரில்(ஜூன் 1970 இதழ்) வெளியான ஒரு கருத்தை இங்கு பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் ,

“ புரட்சிகரமான உள்ளடக்கமும் ,மிக உன்னதமான கலாரூபமும் பக்குவமாகப் பிணைந்து இருக்க வேண்டும்.கலாரீதியான குணாம்சம் நிறைந்ததாய் இல்லாத கலை இலக்கிய சிருஷ்டிகள், அவை அரசியல் ரீதியாக எவ்வளவு முற்போக்கு வாய்ந்தவைகளாயிருந்தாலும் சரி,பயனற்றவையாகும்.

தீங்கு விளைவிக்கும் பிற்போக்கு உள்ளடக்கம் நிறைந்த கலா சிருஷ்டிகளையும் நாங்கள் வெறுக்கிறோம்.கலை இலக்கியப் பிரச்னைகளில் இத்தகைய இரண்டு முனைகளில் நாம் போராட வேண்டும்”

இந்தப்பார்வையோடுதான் இம்மூன்று இடதுசாரி இலக்கிய இதழ்களும் சிறுகதைகளை வெளியிட்டன.படைப்பாளிகளை ஊக்குவித்தன.சிறுகதைக்கு வளம் சேர்த்தன.இன்றும் அரும்பணி ஆற்றி வருகின்றன.

(சென்னையில் சாகித்ய அகாடமி நடத்திய தமிழ்ச்சிறுகதையின் நூற்றாண்டை ஒட்டிய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

No comments: