Tuesday, September 29, 2009

மீண்டும் வந்தேன்... மீண்டு வந்தேனா...

shut-1

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் வீதியில் உங்களைச் சந்திக்கிறேன்.பெரும் மனச்சோர்வு பீடித்த காலமாக இந்த இடைப்பட்ட காலம் இருந்தது.உலகமே அனாதரவாக விட்டு விட்ட இலங்கைத்தமிழ் மக்களின் கதி பற்றிய பெருத்த குற்ற உணர்வும் துயரமும் ஒரு காரணம். இந்திய அரசியல் அரங்கில் இடதுசாரிகள் சந்தித்துவரும் நெருக்கடிகள் பற்றிய கவலை இன்னொரு காரணம்.

திறந்த வெளிச்சிறைகளான அகதிகள் முகாம்களில் அடைபட்டுள்ள தமிழ்மக்கள் உடனடியாக அவரவர் ஊர்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என்கிற ஒரே உடனடிக்கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு இடங்களில் கருத்தரங்குகள் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறோம்.எல்லாம் முடிஞ்சு போன பிறகு இப்ப என்ன ( சில கெட்ட வார்த்தைகள்) த்துக்கு கூட்டம் போடுறானுக என்று நம் இனிய நண்பர்கள் நம்மை நோக்கிப் பேசிக்கொண்டிருக்க இக்கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறோம்.பத்திரிகையாளர் திசநாயகத்தின் மீதான 20 ஆண்டு சிறைத்தண்டனை என்கிற இலங்கை உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும் சென்னை,புதுச்சேரி போன்ற இடங்களில் கண்டனக் கூட்டம்/ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.’நாங்க ஒண்ணும் சும்மா இல்லே’ என்று காட்டிக்கொள்வதற்காக இக்கூட்டங்களை நாங்கள் நடத்தவில்லை. இவ்வுலகத்தாரால் முற்றிலுமாகக் கைவிடப்பட்டுவிட்ட தமிழ் மக்களுக்கான குரல் முன்னைவிடவும் வலுவாக ஒலிக்க வேண்டிய காலம் இது என மனப்பூர்வமாக நம்புகிறோம்.

நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தீராநதியில் தொடர்ந்து பல கட்டுரைகளில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினரைப்பற்றி இலங்கைப்பிரச்னையில் அவர்கள் மௌனம் சாதிப்பதாகவும் கட்சி சொல்வதை அப்படியே கேட்பதாகவும் மார்க்சியம் லெனினியத்தை அவர்கள் கைவிட்டு விட்டதாகவும் எழுதிக்கொண்டே இருக்கிறார்.சமீபத்திய அவரது தீராநதிக்க்கட்டுரையில் ஈழம் பற்றி ஒரு மூணுவரி ஹைக்கூ எழுதியவரின் பெயரைக்கூட மறக்காமல் குறிப்பிட்டுப் பட்டியலிட்டிருக்கிறார்.ஆனால் கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றுவதற்கு வெகு நாட்கள் முன்னதாகவே உடனடிப்போர் நிறுத்தமே இன்றைய தேவை என்பதை வலியுறுத்தி சென்னை,புதுச்சேரி ,தஞ்சை,மதுரை ஆகிய இடங்களில் எழுத்தாளர்கள் கலைஞர்களை அணிதிரட்டி முழக்கப்போராட்டம் நடத்தினோம். தமிழகத்தில் ஈழப்பிரச்னைக்காக அதிகபட்ச எழுத்தாளர்கள் பங்கேற்ற கூட்டங்கள் இவைதான் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.இப்போதும் 100 இடங்களில் பொதுக்கூட்டம்,கருத்தரங்கம் எனச் சென்று கொண்டிருக்கிறோம்.இவற்றில் எதுவுமே தோழர் பா.செ. அவர்களின் பார்வையில் படாமல் போனதற்கும் போவதற்கும் காரணம் உண்டு. அரசியலற்ற ராணுவப்பாதையைத் தேர்வு செய்து தங்களைத் தவிர தமிழ் மக்களுக்காகப் பேச யாரும் இருக்கக்கூடாது என்கிற நிலையைப் புலிகள் திட்டமிட்டு உருவாக்கிய காலம் தொட்டு நாங்கள் புலிகளை ஆதரிக்கவில்லை என்பதாலும் இலங்கையில் தனி ஈழம் என்பது சாத்தியமற்ற கோரிக்கை என நாங்கள் பேசுவதாலும்தான் பா.செ. தன் பட்டியலில் எம்மைச் சேர்ப்பதில்லை. பா.செ. மட்டுமல்ல- பல நண்பர்களும்.புலிகளை நானே என் சொந்தக் கண் கொண்டு பார்த்துத்தான் ஆதரிக்கவில்லை.என் கட்சி சொன்னதால் மட்டுமல்ல.கட்சியில் இருந்தால் சொந்த அறிவு இருக்காது என்று ஒரு கட்சியில் இருந்து தான் பெற்ற அனுபவத்தை மட்டும் வைத்து பா.செ. முடிவு செய்வது தவறு.எங்கள் சங்கத்தில் உங்களைப்போலவே கண்ணை மூடிக்கொண்டு புலிகளை ஆதரிக்கும் தோழர்களும் (இப்போதும்) இருக்கத்தான் செய்கிறார்கள்.

புலிகளோ பிற ஆயுதப்போராளிக்குழுக்களோ ஏன் தோன்றினவோ அதற்கான நியாயங்கள் இன்றைக்கும் இலங்கையில் நீடிக்கின்றன.உடல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் சிதைத்து ஒடுக்கப்பட்டுள்ள இலங்கைத்தமிழ் மக்களின் நியாயத்திலும் நியாயமான கோரிக்கைகளை சற்றேனும் மதிக்காத ராஜபக்சே அரசின் போக்கு மீண்டும் புலிகளைப்போன்ற ஆயுதப்போராளிக்குழுவின் எழுச்சிக்குத்தான் வழி வகுக்கும் என்றுதான் நாங்கள் பேசுகிறோம்.ஒரு சிவில் சமூகம் சுதந்திரமாகச் செயல்படமுடியாதபடி வன்முறை சார்ந்த பேரினவாத அரசியல்தான் இலங்கையை இன்றைக்கும் ஆட்டிப்படைக்கிறது. சிங்களப்பகுதியில் உள்ள இடதுசாரி சக்திகள் மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் பகுதி தம் வரலாற்றுக் கடமையை ஆற்றத்தவறியதும் இந்தப் பேரழிவிற்கு ஒரு முக்கியக் காரணம் என்றும் சொல்கிறோம்.

மே மாதம் முடிவுற்ற போரின் இறுதி நாட்களில் மனிதகுல வரலாறு இதுவரை கண்டிராத போர்க்குற்றங்களை சிங்கள ராணுவம் செய்துள்ளது என்பதே என் கருத்தாகவும் இருக்கிறது. அதே சமயம் கடைசி நாட்களில் புலிகளும் மக்களைச் சுட்டார்கள் என்று வருகிற செய்திகளை பொய் என்று நிராகரித்துவிடவும் முடியவில்லை.முகாம்களிலிருந்து மக்கள் வெளியேறி மனப்பிறழ்வு நிலையிலிருந்து ஓரளவுக்கேனும் மீண்ட பிறகு அவர்கள் பேசும்போதுதான் கடைசி 10 நாள் போர் பற்றிய உண்மைத்தகவல்கள் உலகுக்குத் தெரிய வரும்.

இப்போதைக்கு நம் எவருடைய நிலைப்பாடு சரி என்று நாம் விவாதிக்கிற நேரம் அல்ல இது. மக்களை குடியிருப்புகளுக்கு அனுப்பு என்று ஒரே குரலில் நாம் பேச வேண்டிய காலம் இது.

புலிகளால் நாடுகடத்தப்பட்டு 1990 முதல் இன்றும் முகாம்களில் வசிக்கும் முஸ்லீம் மக்களையும் சேர்த்து வீடுகளுக்கு அனுப்பு என்று சேர்த்துப்பேசுங்கள் என்று நெல்லையில் ஒரு பொதுக்கூட்டத்தில் நான் பேசியதால் என்னை சிங்களச்செல்வனே இனத்துரோகியே என்று நெல்லைவாழ் இனமானத்தோழர்கள் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள்.போஸ்டர் ஒட்டியவர்களும் பா.செ.வைப்போன்றே எனக்கு மிக நெருக்கமான நண்பர்கள்தான்.இந்துத்வாவுக்கு எதிரான போராட்டத்தில் தோளோடு தோள் சேர்த்து நின்றவர்கள்-நிற்கப்போகிறவர்கள்தான் என்பதை நான் அறிவேன்.

இதையெல்லாம் தொடர்து பேசிக்கொண்டுதான் இருந்தோம்.எங்கள் பேச்சு யாருக்கும் ரசிக்கவில்லை.பிடிக்கவில்லை.ஆகவே யார் காதிலும் அது விழவில்லை.ஆகவே நாங்கள் கள்ள மௌனம் சாதித்தவர்களாக கட்சி சொன்னதைக்கேட்கும் கிளிப்பிள்ளைகளாக சொந்த அறிவு இல்லாதவர்களாக ஒரு கற்பிதமான பிம்பமாகக் கட்டமைக்கப்பட்டோம்.

எனக்கு 54 வயதாகிறது.இத்தனை வயதில் நான் கேட்டறியாத கெட்ட வார்த்தை வசவுகளையெல்லாம் blog ஆரம்பித்த இச்சில நாட்களில் நான் கேட்க நேர்ந்தது.Moderate செய்து பின்னூட்டங்களை வெளியிடத்துவங்கியபின் அந்த கெட்ட வார்த்தை நண்பர்களைக் காணவில்லை.அவர்களின் வார்த்தைகளால் நான் காயப்படவில்லை.அந்த வார்த்தைகளைப் புறந்தள்ளி அவற்றுக்குப் பின்னால் இருக்கும் மனதின் உணர்வையே நான் பார்த்தேன்.அது விமர்சனமற்ற புலிகள் ஆதரவு என்கிற புள்ளியிலிருந்து வந்தது.யாராவது ஒரு தோழர் ஒரு வரி பேசிவிட்டால் அதைப் பிடித்துக்கொண்டு தமுஎகசவையும் சிபிஎம்மையும் விளாசுவதற்கு ஒரு இருபது முப்பது நண்பர்கள் எந்நேரமும் விழிப்புடன் வலைப்பக்கங்களில் இயங்கிக் கொண்டிருப்பதை உணர்கிறேன்.அவர்களின் அவதூறுகள் அல்லது விமர்சனங்களில் கொப்பளிக்கும் கோபத்தையும் குரோதத்தையும் ஒதுக்கிவிட்டு அதில் நியாயமான விமர்சனம் இருப்பின் உள்வாங்கிப்பரிசீலித்து என்னை நான் திருத்திக்கொள்ளும் மனதோடுதான் நான் எப்போதும் இருக்கிறேன்.எல்லாவற்றுக்கும் மேலாக நண்பர் டி.அருள்எழிலன் அடுத்த தேர்தலில் வங்கத்திலிருந்து சிபிஎம் துடைத்து அழிக்கப்பட்டுவிடும் என்று எழுதிய வார்த்தைகள்தான் என் மனதைக் காயப்படுத்திய மிகக் கூர்மையான வார்த்தைகளாக இன்னும் கடக்க முடியாதவையாக என் எதிரே வழி மறித்து நிற்கின்றன.சிபிஎம் அங்கே ஜெயித்தாலும் சரி தோற்றாலும் சரி அதை இயக்கம் பார்த்துகொள்ளும்.ஆனால் அருள் எழிலன் போன்ற நல்ல நண்பர்களின் மனதில் எம்மீதான இத்தனை குரோதம் வளர்ந்து கிடக்கிறதே எப்படிச் சரி செய்யப்போகிறோம் என்பதுதான் என் பெரும் கவலையாக உள்ளது.நிலைப்பாடுகளால் நட்பும் மரியாதையும் கூட முறிந்து போவது அச்சமளிக்கிறது.அருள் எழிலனுக்கு மட்டுமல்ல ஆதவன் தீட்சண்யாவுக்கும் சேர்த்தேதான் இதை நான் கூறுகிறேன்.

முகாம்களில் கிடக்கும் பிஞ்சுக்குழந்தைகளின் முகங்களைப் புகைப்படங்களில் பார்க்கும் கணத்தில் மேற்சொன்ன எனது வார்த்தைகளும் கூட அர்த்தமற்று இற்று வீழ்ந்து விடுகின்றன.என்ன செய்துவிடப்போகிறோம் அவர்களுக்கு – புலிகள் ஆதரவாளர்களாகவும் – எதிர்ப்பாளர்களாகவும் தமிழகத்தில் சௌக்கியமாக இருக்கிற நாம்?

பிரபாகரனைத் தம்பி என்று அன்போடு அழைத்த அந்த அமிர்தலிங்கம் இன்று இருந்தால் கூட இலங்கையில் ஏதேனும் அரைகுறை நிவாரணத்தையாவது முகாம்களுக்குப் பெற்றுத்தந்திருப்பாரே என்கிற எண்ணம் தினமும் வந்து போகிறது.

நிற்க.

unnai

சமீபத்தில் கமலஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன் என்கிற திரைப்படத்தைப் பார்த்தேன். வடிவரீதியாக பாய்ச்சலான பல முயற்சிகளையும் படு கேவலமான உள்ளடக்கத்தையும் கொண்டு வந்துள்ள படம் என்று சொல்வேன். குஜராத்தில் பெஸ்ட் பேக்கரியில் கொல்லப்பட்ட பெண்ணின் கணவன் ஒரு தீவிரவாதியாக மாறினால் ( கொள்கையளவில் நாம் அதை ஏற்கவில்லையாயினும்) சினிமா நியாயத்தின்படி அவன்தானே படத்தின் கதாநாயகனாக இருக்க வேண்டும்.அவனைக் கொலை செய்கிற கமலஹாசன் நிச்சயமாக வில்லன் அல்லவா?தவிர விஜய்காந்த் படங்களை விட மோசமாக இஸ்லாமியர்தான் தீவிரவாதிகள் என்று சொல்கிற ஒரு படத்தை கமல் தந்துள்ளார்- அவருடைய வழக்கமான சில குழப்பங்களையும் சேர்த்து. எந்தக்குற்றமும் செய்யாமல் இஸ்லாமியராகப் பிரந்த ஒரே குற்றத்துக்காக இந்தியச்சிறைச்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் அடைபட்டுக்கிடப்பது பற்றி சச்சார் குழு அறிக்கையே கவலைப்பட்டு எழுதியிருக்கும் யதார்த்தத்தின் பின்னணியில் வைத்து இப்படத்தைப் பார்க்கும்போது ஜனநாயக எண்ணம் கொண்டோர் ஒன்று சேர்ந்து கண்டனக்குரல் எழுப்ப வேண்டிய படம் என்கிற அழுத்தமான உணர்வே எனக்கு ஏற்படுகிறது.

17 comments:

Kavin Malar said...

நன்றி! ’மீண்டு’ம் வருக!!!

Anonymous said...

//குஜராத்தில் பெஸ்ட் பேக்கரியில் கொல்லப்பட்ட பெண்ணின் கணவன் ஒரு தீவிரவாதியாக மாறினால் ( கொள்கையளவில் நாம் அதை ஏற்கவில்லையாயினும்) சினிமா நியாயத்தின்படி அவன்தானே படத்தின் கதாநாயகனாக இருக்க வேண்டும்.அவனைக் கொலை செய்கிற கமலஹாசன் நிச்சயமாக வில்லன் அல்லவா?//

Interesting. நடுவில் அந்த தீவிரவாதி வெடிகுண்டு வைத்துக் கொன்றதாக சொல்லப்படும் அப்பாவி சாமானிய மனிதர்களைப் பற்றி உங்களுக்கு அக்கறை இருக்காதுதானே. அந்தப் படம் சொல்லும் விஷயமே அதுதானே. மத அடிப்படைவாதத்தின் பேரில் குண்டு வைத்து மும்பையின் அன்றாட வாழ்வை சீர்குலைக்கும் அமைப்புகளுக்கு எதிராக ஒரு பொதுஜனத்தின் எதிர்வினை. அப்படியே சாமர்த்திய்மா பிளேட்டை மாத்திப் போடறதுதானே முற்போக்குத்தனம். இப்படி மொக்கையா எழுதறதுக்கு நீங்கள் இவ்வளவு நாட்கள் சும்மா இருந்திருக்க வேண்டாமே.

ஆதவன் தீட்சண்யா said...

அவரவர் நிலைப்பாடுகளோடு நட்புடனும் மரியாதையுடனும் பழகுவதற்கான வெளியை- மாற்றுக்கருத்தை மதிக்கிற பண்பை- கருத்தியல் ரீதியாக வெற்றிகொள்வதற்கான பரஸ்பர உரையாடலை அவதூறுகளாலும் பொய்களாலும் திணறடித்துக் கொல்கிறவர்களில் ஒருவராக அருள் எழிலனையும் அறிய நேர்ந்த தருணம் மிகுந்த துயரமானது. ஒருவேளை அவர் அப்படியாகவே ஆரம்பம் முதல் இருந்திருக்க, நான் அறிய எடுத்துக் கொண்ட காலதாமதத்திற்கான தண்டனையாகக்கூட அந்த துயரமிருக்கலாம். அதனாலேயே, அவரும் அவரொத்த பலரும் எழுதிய ஒவ்வொரு சொல்லுக்கும் பதிலளிக்க முடியுமென்றாலும்- எதுவொன்றுக்கும் பதிலளிப்பதில்லை என்று பிடிவாதமாக இப்போதுமிருக்கிறேன்.

உயிரைத் துச்சமெனக் கருதி கழுத்திலே குப்பிக் கட்டிக்கொண்டு களமிறங்கிய ஆயிரக்கணக்கான போராளிகள், பொருளாதாரரீதியாகவும் தார்மீகமாகவும் துணைநின்ற புகலிடத் தமிழர்கள், என்னைப்போன்ற ஒருசில துரோகிகளைத் தவிர பாக்கியுள்ள தமிழகத்தவர்களின் ஆதரவு என அவ்வளவையும் வைத்துக்கொண்டு அடைய முடியாத ஈழத்தை ஆதவன் மீது அவதூறு சொல்வதன் வழியாக அடையலாம் என்று நம்புகிற அருள் எழிலனுக்கும் அவரது இலக்கான எனக்கும் எப்படி உங்களால் பொத்தாம்பொதுவாக பேசமுடிகிறது? அடிக்கிறவனையும் அடிவாங்குகிறவனையும் ஒன்றுபோல பார்த்து சண்டை போடாதீங்கப்பா என்று சொல்வதை நெடுங்காலமாய் கேட்டுக்கொண்டுதானிருக்கிறோம்.

இது ‘நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு’ என்ற கோரிக்கையல்ல. தீர்ப்பில் எனக்கு உடன்பாடில்லை என்பதற்கான விளக்கம் மட்டுமே.



-ஆதவன் தீட்சண்யா

ramgopal said...

வாங்க தோழர், மீண்டும் வாங்க. நூற்றுக்கு நூறு சரிங்க, நீங்க சொன்னது, "நிலைப்பாடுகளால் நட்பும் மரியாதையும் கூட முறிந்து போவது அச்சமளிக்கிறது". இதற்குத்தான் தோழர், நீங்க வேணுங்கிறது. சரி, அது எதற்கு "ஷட் அப்"?. உன்னைப் போல் ஒருவன் படத்தின் ஹிந்தி மூலத்தை பார்த்தபோதே இந்தப் படம் இஸ்லாமியர்களை மீண்டும் குற்றவாளிகளாக முன்னிறுத்தும் ஒரு மிகுந்த புத்திசாலி படம் எனவே பட்டது. கமலஹாசனுக்கு தேவர் மகன் தொடங்கி அவரது குழப்பங்கள் தொடர்கிறது.

ஆ.ஞானசேகரன் said...

வாருங்கள் நண்பரே

யுவகிருஷ்ணா said...

//பிரபாகரனைத் தம்பி என்று அன்போடு அழைத்த அந்த அமிர்தலிங்கம் இன்று இருந்தால் கூட இலங்கையில் ஏதேனும் அரைகுறை நிவாரணத்தையாவது முகாம்களுக்குப் பெற்றுத்தந்திருப்பாரே என்கிற எண்ணம் தினமும் வந்து போகிறது//

:-)

Deepa said...

வாருங்க‌ள் வாருங்கள் த‌மிழ்செல்வ‌ன் ஸார். இனி இப்பக்கத்தில் தொடர்ந்து எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

//விமர்சனங்களில் கொப்பளிக்கும் கோபத்தையும் குரோதத்தையும் ஒதுக்கிவிட்டு அதில் நியாயமான விமர்சனம் இருப்பின் உள்வாங்கிப்பரிசீலித்து என்னை நான் திருத்திக்கொள்ளும் மனதோடுதான் நான் எப்போதும் இருக்கிறேன்.//அப்ப‌டிப் போடுங்க‌!

//நிலைப்பாடுகளால் நட்பும் மரியாதையும் கூட முறிந்து போவது அச்சமளிக்கிறது.//
:-(

மாதவராஜ் said...

மீண்டும் எழுத வந்ததற்கு நன்றியும், வாழ்த்துக்களும்!

//முற்றிலுமாகக் கைவிடப்பட்டுவிட்ட தமிழ் மக்களுக்கான குரல் முன்னைவிடவும் வலுவாக ஒலிக்க வேண்டிய காலம் இது என மனப்பூர்வமாக நம்புகிறோம்//
//இப்போதைக்கு நம் எவருடைய நிலைப்பாடு சரி என்று நாம் விவாதிக்கிற நேரம் அல்ல இது. மக்களை குடியிருப்புகளுக்கு அனுப்பு என்று ஒரே குரலில் நாம் பேச வேண்டிய காலம் இது//
காலத்தின் குரலாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

காமராஜ் said...

வாருங்கள் மீண்டும் வந்ததற்கு வாழ்த்துக்கள்.

எதாவது ஒரு பொதுக்கருத்து வரும்போது
அதை கருத்தால் எதிர்கொள்வது, தர்க்கத்தால்
எதிர்கொள்வது இங்கு குறைவு. எழுத்தை விட்டுவிட்டு
எதையோ தேடுகிறார்கள்.

உண்மைத்தமிழன் said...

வலைப்பதிவுகளில் அரசியல்கட்சித் தொண்டர்களைத் தாண்டியும் விமர்சனங்கள் வருவது சகஜம். ஏனெனில் இங்கே ஒரு வசதி.. முகம் காட்டாமல் ஒளிந்து கொண்டிருப்பது.

இருப்பினும் மீண்டு வந்திருப்பது குறித்து மகிழ்ச்சியே..

'பூ' திரைப்படத்தின் கதைக்காக சிறந்த கதாசிரியர் விருது கிடைத்தமைக்கு எனது வாழ்த்துக்கள் ஸார்..!

கே.நாகநாதன் said...

வணக்கம் தோழர்.
இது என்னுடைய முதல் பதில்.
நான் சோர்ந்து போகிறபோதெல்லாம் உங்கள் எழுத்துக்கள் என்னை திரும்ப நிறுத்தும். நன்றி.
ஈழத்தமிழர்களுக்கான ஒருமித்த குரலை
நானும் உங்களோடு சேர்ந்து எழுப்புகிறேன். வானொலியில் காலையில் மதத்திற்கொரு பக்திப் பாடலை ஒலிபரப்பிவிட்டு மதசார்பின்மையை அரசு நிலைநிறுத்துவது போல் கமலும் நால்வரில் ஒரு இந்து தீவிரவாதியை கொல்வதன் மூலம் தனது தீவிரவாத எதிர்ப்பை பரவலாகக் காட்டிக் கொண்டுள்ளார்.அவர் அப்பாஸின் 'பழி தீர்' கதையை மறுபடி வாசிக்கலாம். இனி தொடர்ந்து உங்கள் எழுத்தை வா(நே)சிக்கலாம் தானே?

Acu Healer.UMAR FAROOK.A said...

இலங்கைப்பிரச்சினை பற்றிய குரல்களில் முற்போக்காளர்களின் குரல் மிக முக்கியமானது.இலங்கை என்ற வார்த்தையைக்கூட ஈழம் என்று சொன்னால் மட்டுமே வாசிக்கிற நண்பர்கள் இப்போது பெருத்துப்போய் விட்டார்கள். நடுநிலையோடு என்று சொல்வதை விட, மனிதாபிமானத்தோடு பேச வேண்டுமானால் இலங்கையிலுள்ள தலித்களின் நிலையும், இஸ்லாமியர்களின் நிலையும் சேர்த்துப் பேசுவதே நியாயம்.

தொடர்ந்து எழுதுங்கள்.கொஞ்சம் இடைவெளி இருந்தால் இந்த இணைய கிராமத்தில் ( கிராம மக்கள் மன்னிப்பார்களாக ) கேட்கக்கூசும் வார்த்தைகளால் இட்டு நிரப்பி விடுவார்கள்.

காத்தவராயன் said...

சார் நீங்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ்வீதியில் எழுதுவது மிக்க மகிழ்ச்சியை தருகிறது, நிறைய எழுத வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

// வடிவரீதியாக பாய்ச்சலான பல முயற்சிகளையும் படு கேவலமான உள்ளடக்கத்தையும் கொண்டு வந்துள்ள படம் என்று சொல்வேன்.//

வடிவரீதியிலும் பெருசா எதுவுமில்லை, "tracking" அஞ்சாதே, வாரணமாயிரத்தில் பார்த்து சலித்து போனதே.......

அரயன் said...

அன்புள்ள ச,தமிழ் செல்வன் வணக்கம், உங்களுக்கு பூ கதைக்காக விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி, அதற்கான என் பாராட்டுகள். உங்கள் கட்டுரையில் இப்படி எழுதியிருக்கிறீர்கள்.
”எல்லாவற்றுக்கும் மேலாக நண்பர் டி.அருள்எழிலன் அடுத்த தேர்தலில் வங்கத்திலிருந்து சிபிஎம் துடைத்து அழிக்கப்பட்டுவிடும் என்று எழுதிய வார்த்தைகள்தான் என் மனதைக் காயப்படுத்திய மிகக் கூர்மையான வார்த்தைகளாக இன்னும் கடக்க முடியாதவையாக என் எதிரே வழி மறித்து நிற்கின்றன.”அன்புள்ள தமிழ் செல்வன் சார் நான் இவ்வாறான வரிகளை எங்கே பயன்படுத்தினேன் என்பதை நீங்கள் எடுத்துச் சொல்லவேண்டும். சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.
இக்கட்டுரையில் ஆதவனின் பின்னூட்டம் “ அவரவர் நிலைப்பாடுகளோடு நட்புடனும் மரியாதையுடனும் பழகுவதற்கான வெளியை- மாற்றுக்கருத்தை மதிக்கிற பண்பை- கருத்தியல் ரீதியாக வெற்றிகொள்வதற்கான பரஸ்பர உரையாடலை அவதூறுகளாலும் பொய்களாலும் திணறடித்துக் கொல்கிறவர்களில் ஒருவராக அருள் எழிலனையும் அறிய நேர்ந்த தருணம் மிகுந்த துயரமானது. ஒருவேளை அவர் அப்படியாகவே ஆரம்பம் முதல் இருந்திருக்க, நான் அறிய எடுத்துக் கொண்ட காலதாமதத்திற்கான தண்டனையாகக்கூட அந்த துயரமிருக்கலாம். அதனாலேயே, அவரும் அவரொத்த பலரும் எழுதிய ஒவ்வொரு சொல்லுக்கும் பதிலளிக்க முடியுமென்றாலும்- எதுவொன்றுக்கும் பதிலளிப்பதில்லை என்று பிடிவாதமாக இப்போதுமிருக்கிறேன். ” என்று ஆதவன் தீட்சண்யா எழுதியிருக்கிறார். “ அறிய எடுத்துக் கொண்ட காலதாமதத்திற்கான தண்டனையாகக்கூட அந்த துயரமிருக்கலாம் “ என்கிற ஆதவனின் கால அளவின் இடையில் ஆறேழு வருடங்கள் ஓடிக் கழிந்திருக்கும் என நினைக்கிறேன். எனது குறும்படத்தை ஓசூரில் திரையிட்டு தோழர்களுக்கு காண்பித்ததும், என் படைப்பை புது விசையில் பிரசுரித்ததுமான காலமாக அது இருக்கும் என நினைக்கிறேன். கருணாநிதியின் வரிகளின் சொன்னால் ” வளர்த்த கடா மார்பில் பாயுதடா” என்றும் துரோகம் என்றும் சொல்லாமல் வேறு வார்த்தைகளில் ஆதவன் நான் தூரோகம் செய்து விட்டது போன்று சொல்லியிருக்கிறார். இது போன்ற பின்னூட்டங்களைக் கூட எனது கட்டுரையில் காண முடிந்தது. மெலுஞ்சி சிறுகதை புது விசையில் வந்ததும், பேபூர் சுல்தானின் கதை (பஷீரின் நினைவுகள்) வந்ததும் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சிதான். விரும்பி எழுதியதுதான். ஆனால் இப்படி பக்குவமில்லாமல் மறைமுகமாக அதைச் சுட்டிக் காட்டுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அரசியல் ரிதியாக கேட்பதை அவதூறுகள் என்றும். தலித் ஆர்வலர்களாக உங்கள் மீது வைக்கும் கேள்விகளை துரோகமாகவும் எப்படி பக்குவமில்லாமல் இப்படி மாற்றுகிறீர்கள்.

செ.சரவணக்குமார் said...

நான் மிகவும் நேசிக்கும் எழுத்தாளர் நீங்கள். மீண்டும் தமிழ்வீதியில் எழுத துவங்கியிருப்பதற்கு மிக்க நன்றி.

தொடர்ந்து எழுதவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

சண்டாளச்சாமி said...

//அடுத்த தேர்தலில் வங்கத்திலிருந்து சிபிஎம் துடைத்து அழிக்கப்பட்டுவிடும் என்று எழுதிய வார்த்தைகள்தான் என் மனதைக் காயப்படுத்திய மிகக் கூர்மையான வார்த்தைகளாக இன்னும் கடக்க முடியாதவையாக என் எதிரே வழி மறித்து நிற்கின்றன//

60 ஆண்டுகளுக்கும் மேலாக அற வழியிலும், மற வழியிலுமாக போராடி வீழ்ந்து கிடக்கும் மக்களை நோக்கி நீங்கள் உதிர்க்கும்.. //தனி ஈழம் என்பது சாத்தியமற்ற கோரிக்கை என நாங்கள் பேசுவதாலும்//... போன்ற சொற்களை எப்படித்தான் அய்யா நாங்கள் கடப்பது?

அருள்எழிலன் சொன்னதற்கும் உங்கள் இந்த வார்த்தைகளுக்கும் என்ன வேறுபாடு?

ஈழ விடுதலை சாத்தியமே இல்லையென அருள் வாக்கு சொல்ல என்ன அதிகாரம் உள்ளது உங்களுக்கு? ஒரு வேளை நீங்கள், சொந்த அறிவு சொந்த அறிவு என்று கதைக்கிறீர்களே...அந்த அந்தராத்மாவின் குரலோ?

வலி, இடது பாரம்பரியத்தில் வாராதவர்க்கும் வரும்தானே?

vimalavidya said...

The indecisions in right time on the part of your decisions made you to come such a gloomy end.After 2006 you have no courage to take any even right decisions on matters.please correct yourself Tamil.Kindly dont destroy our hopes on you.---vimala vidya.
I even stopped your writings in the blog.---vimala vidya