Monday, October 5, 2009

யார் சிரித்தால் தீபாவளி?

35 36

அவள் பெயர் கவிதா.

18 வயதுப் பருவ மங்கை.

சந்தனக்கலரில் பூப்போட்ட சுடிதாரும் துப்பட்டாவும் அணிந்து அவள் மேடையேறினாள்.மேடையில் அமர்ந்திருந்த நாங்கள் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தோம்.ஒரு நிமிடத்துக்கு மேல் அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை.இரு கரங்களையும் துப்பட்டாவுக்க்குள்ளேயிருந்து வெளியே எடுத்து வணக்கம் சொன்னாள்.அந்தக் கைகளையும் எங்களால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை.அவள் ஒரு இளம் பட்டாசுத்தொழிலாளி.

அவள் ஏழாவது வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது வீட்டில் அம்மாவோடு சேர்ந்து பட்டாசு சுற்றிக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு அவள் முகம் கோரமாகச் சிதைந்துபோனது.கைகளில் விரல்கள் எல்லாம் மெழுகைப்போல உருகி ஒரே சதைக்கோளமாகி இருந்தது.அது வீட்டில் நடந்த விபத்து என்பதால் சட்டப்படி நட்ட ஈடு ஏதும் பெற முடியவில்லை.கருணைத்தொகையாக 25000 ரூபாய் மட்டும் கிடைத்தது.போராடினால் இன்னும் கொஞ்சம் பணம் அதிகமாகக் கிடைக்கலாம்.

ஆனால் கவிதாவின் அம்மா சொன்னார் ” இந்தப்பொண்ணோட எதிர்காலம் என்னாகுமோ என்கிற கவலையிலே நான் நல்லா தூங்கி ஆறு வருசமாகுதுய்யா.இந்த முகத்தை உங்களாலேயே ஒரு நிமிசம்கூட உத்துப்பாக்க முடியலே .இவளை யாரு கல்யாணம் கட்டுவா?என் காலம் முடிஞ்ச பிறகு இவ கதியென்ன?இந்த பூமியிலே எங்கே போய் அவ இருப்பா சொல்லுங்க சாமிகளா...”

தீபாவளிக்கு நாம் கொளுத்துகிற பட்டாசுகளின் சத்தத்தில் இந்தக் கவிதாக்களின் அழுகுரல்கள் அம்மாக்களின் கதறல்கள் எல்லாமே அமுங்கித்தானே போய்விடுகிறது?மேடையில் இருந்த எங்களிடம் அம்மாவின் கேள்விக்கு எந்த பதிலும் இல்லை.என் கன்னங்களில் உருண்ட கண்ணீரையும் கூட மேடை நாகரிகம் கருதியோ என்னவோ அவசரமாகத் துடைத்துக்கொண்டேன்.

கவிதாவைப்போல பலர் மேடையேறினார்கள்.கை இழந்தவர்கள்.தலை முடியோடு மேற்பகுதி கருகியவர்கள்.கணவனை இழந்தவர்கள் என.. ..

*

கடந்த இரு மாதங்களுக்கு முன்னால் சிவகாசியைச் சுற்றிலும் அடுத்தடுத்து பட்டாசுத் தொழிற்சாலைகளில் வெடி விபத்துக்கள் நடந்து 20க்கு மேற்பட்ட தொழிலாளிகள் கொல்லப்பட்டனர்.தினசரி தென் மாவட்ட செய்தித்தாள்களில் வந்த அச்செய்திகள் பெரும் அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் தந்தன.ஆண்டுதோறும் தீபாவளிக்கு முந்தின மாதங்களில் எம் மக்களின் உடம்பில் திரி வைத்து வெடிக்கப்படும் இக்கொடுமை நடந்துகொண்டே இருக்கிறது. இது சகஜம்தானே என்று நினைப்பதுபோல நம் சமூகம் மௌனமாய்க் கடந்து போய்க்கொண்டே இருக்கிறது.

இம்முறை இந்திய தொழிற்சங்க மையமும் (சி.ஐ.டி.யு) அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் சேர்ந்து இக்கொடுமைகள் குறித்த விரிவான கள ஆய்வினை மேற்கொண்டு அதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி சிவகாசியில் கடந்த 30-8-09 அன்று ஒரு பொதுவிசாரணைக்கு ஏற்பாடு செய்தனர்.பொது விசாரணையின் நீதிபதிகள் குழுவில் ஒருவனாக நானும் மேடையில் இருந்தேன்..

சிவகாசியைச்சுற்றிலுமுள்ள 200க்கு மேற்பட்ட கிராமத்து மக்கள் பட்டாசுத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.அநேகமாக எல்லா கிராமங்களிலும் வெடி விபத்துக்களில் மரணமடைந்த/காயப்பட்ட/கை,கால் இழந்த தொழிலாளிகள் அல்லது அவர்கள் குடும்பத்தினர் இருக்கிறார்கள்.

பட்டாசுத்தொழிலில் குழந்தைகள் சர்வசாதாரணமாக ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.ஏராளமான குழந்தை உழைப்பாளிகள் கடந்த காலங்களில் சிவகாசியில் இதுபோன்ற விபத்துக்களில் கொல்லப்பட்டுளனர்.தொடர்ச்சியான தொழிற்சங்கங்களின் போராட்டங்களாலும் மனித உரிமை அமைப்புகளின் வழக்குகளாலும் இப்போது பட்டாசுத் தொழிற்சாலைகளில் வெளிப்படையாக எந்த முதலாளியும் குழந்தை உழைப்பாளிகளை சேர்ப்பதில்லை.ஆனாலும் காண்ட்ராக்ட் முறை அதிலும் வந்த பிறகு வீடுகளுக்கு எடுத்துச்சென்று பட்டாசு தயாரிக்கும்போது அங்கு குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவது தொடரத்தான் செய்கிறது.

பட்டாசுத்தொழிற்சாலைகளில் விபத்துக்கு முக்கிய காரணமாக அப்பொது விசாரணையில் வெளிவந்த உண்மை- வெடிகள் தயாரிப்பதற்கான ரசாயனப்பொருட்கள் குறித்த எந்த அறிவும் பயிற்சியும் தரப்படாத தொழிலாளிகள் அப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவதுதான். போர்மேன் எனப்படும் ஒருவர்தான் ரசாயனக்கலவையைத் தயாரிப்பது மற்றும் ரசாயனக்கழிவுகளை பாதுகாப்பாக அழிப்பது போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. சிவகாசியில் எந்தப் பட்டாசுத் தொழிற்சாலைக்குப் போனாலும் மத்திய அரசின் வெடிமருந்துத்துறை அளித்த முறைப்படியான ஒரு போர்மேன் சான்றிதழ் அவருடைய புகைப்படத்துடன் பிரேம் போட்ட கண்ணாடியுடன் ஆணியில் தொங்கிக்கொண்டிருக்கும்.ஆனால் அப்படத்தில் உள்ள போர்மேன் அங்கே இருக்க மாட்டார்.கேள்வி ஞானத்தின் அடிபடையில் ஒரு போர்மேன் அங்கே வேலை செய்து கொண்டிருப்பார்.

விசாரணை மேடையில் அப்படி சான்றிதழ் பெற்ற ஒரு போர்மேன் சாட்சி சொல்ல வந்தார்.அவருடைய சான்றிதழின் ஜெராக்ஸ் பிரதியை எங்களிடம் வழங்கிவிட்டுச் சொன்னார்.” அய்யா நான் எஸ்.எஸ்.எல்.சி படித்திருக்கிறேன்.ரொம்ப காலமாக ஒரு ஜவுளிக்கடையில்தான் வேலை செய்கிறேன்.எனக்கு ரசாயனம் பற்றி எதுவுமே தெரியாது.எனக்குப் பழக்கமான பட்டாசு ஆலை அதிபர் ஒருவர் என் சான்றிதழையும் புகைப்படத்தையும் வாங்கிச் சென்று இந்த போர்மேன் சான்றிதழைப் பெற்று அவரது தொழிற்சாலையில் தொங்க விட்டு வேறு ஒரு பயிற்சியற்ற நபரை வைத்து வேலை வாங்கிக்கொண்டிருக்கிறார்.பெரும்பாலான தொழிர்சாலைகளில் இதுதான் நிலை.நான் ஒரு நாள் கூட பட்டாசு ஆலைப்பக்கம் போனதில்லை” .உண்மையில் அவருடைய வாக்குமூலம் எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை.பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராகவுள்ள ஒரு சமூகத்தில் என்னதான் நடக்காது? தொழிலாளிகளின் உயிரோடு விளையாடும் முதலாளிகளும் அதிகாரிகளும் என்ன தண்டனையும் பெறத்தகுதியானவர்கள்தான்.ஆனால் அவர்கள் எப்போதும் நிம்மதியாகவும் செல்வச்செழிப்போடும்தான் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சாட்சிகளாக வந்த வெடிவிபத்துக்களில் காயம் பட்டவர்கள், உடல் உறுப்புகளை இழந்தவர்கள் மேடையேறிச் சாட்சி சொன்ன்போது அதைத் தொடர்ந்து கேட்பதற்கே மனதோடு போராட வேண்டியிருந்தது.

சட்டங்கள் யார் மேல் தப்பு எந்த அளவுக்கு தப்பு எதனால் தப்பு அதற்கு எவ்வளவு தண்டனை யாருக்கு நிவாரணம் எவ்வளவு என்று எந்திரமாகப் போய்க்கொண்டே இருக்க ஆண்டுதோறும் எம் மக்கள் சிதைந்து கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.அவர்கள் எல்லோருக்கும் உதவிகளையும் ஆறுதலையும் அன்பையும் அரவணைப்பையும் நாங்கள் இருக்கிறோம் என்கிற நம்பிக்கையையும் ஊட்டத் துப்பில்லாத சமூகமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கொத்துக்கொத்தாக மக்கள் செத்து மடியும் இந்த அவலம் குறித்து ஊடகங்களும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.செத்த 3 நாளைக்கு நியூஸ் வரும்.அமைச்சர் வந்து ஆஸ்பத்திரியில் ஆறுதல் சொல்லும் புகைப்படத்தோடு அவர்களுக்கு பரபரப்புப் போய்விடும். விதர்பா விவசாயிகள் 60000 பேர் செத்தது கூட அவர்கள் முதல் பக்கச் செய்தியாக இடம்பெறத் தகுதி பெறவில்லையே.

அன்று மேடையை விட்டு இறங்கும் போது மானசீகமாக என் செருப்பைக் கழற்றி என் தலையில் ஓங்கி ஓங்கி அறைந்து கொண்டேன்.மேடையில் பேசிய எம் வாய்ச்சொற்கள் அம்மக்களுக்கு என்ன பயனைத் தந்து விடப்போகிறது? மேடையில் நீதிபதிகள் குழுவில் ஒருவராக இருந்த சிஐடியுவின் தலைவர் தோழர் டி.கே.ரெங்கராஜன் கவிதாவைப் பக்கத்தில் அழைத்து தைரிய்மாக இரு பாப்பா நிச்சயமாக உனக்கு நிவாரணம் கிடைக்கப்பாடுபடுவேன் என்று சொன்ன ஒரு வரியில் நம்பிக்கை வைத்து என் குற்ற உணர்வை மூடிப் பஸ் ஏறினேன்.

ஜப்பான் நாட்டில் 1945இல் அமெரிக்காக்காரன் ஹிரோஷிமா,நாகசாகி நகரங்களின் மீது குண்டு வீசினான்.பல்லாயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்தார்கள்.இன்னும் தப்பியவர்கள் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களாக முகம் சிதைந்து மூக்கு அழுகி காதுகள் இழந்து என்று நடைப்பிணங்களாக வாழ்ந்தார்கள்.இன்னும்கூட வாழ்கிறார்கள்.அவர்களை ஹிபாகுஷ் மக்கள் என்று ஒரு பெயரிட்டு அழைக்கிறார்கள்.சிவகாசியிலும் அப்படியான ஹிபாகுஷ் மக்கள்தான் கவிதாவைப்போன்றவர்கள் என்பதை உலகம் இன்னும் அறியாமல் இருக்கிறது.ஹிபாகுஷ் போல தனியாக ஒரு பெயர் சூட்டி இம்மக்களையும் அழைக்க வேண்டும்.

சிவகாசிக்கு குட்டி ஜப்பான் என்று ஒரு பெயர் உண்டு என்பதை இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.எவ்வளவு பொருத்தமான பெயர்?

கவிதாவின் முகம் இன்றுவரை என்னைத் துரத்திக்கொண்டே இருக்கிறது-தூக்கத்துக்கு நடுவிலும் பஸ்,ரயில் பயணங்களுக்கு நடுவிலும் என. உனக்கு என்னால் என்ன செய்துவிட முடியும் என்று தெரியவில்லை மகளே .... இந்த நாலு வரிகளை எழுதுவதைத் தவிர?

( இந்தக் கள ஆய்வினையும் பொது விசாரணையையும் இரு அமைப்புகள் ஏற்பாடு செய்தபோதும் அதற்காக மனக்கொதிப்புடன் பணியாற்றிய தோழர்கள் சாமுவேல்,சுகந்தி,சேகர்,தேவா,சின்னப்பராஜ் போன்றவர்களை நினைத்துப்பார்ப்பது அவசியம்)

18 comments:

மண்குதிரை said...

வணக்கம்,

பட்டாசு தொழிற்சாலைகளில் உள்ள ஒவ்வொரு அறையிலும் தண்ணீர் தொட்டி இருக்கவேண்டும். இருக்கிரது ஆனால் அவற்றில் தண்ணீர் இருப்பதில்லை.

அந்த அறையில் எல்லா கதவுகளும் திறந்திருக்க வேண்டும்.

பகல் வெளிச்சத்தில் மட்டும்தான் வெலை செய்ய வேண்டும். அவசரமான ஆர்டர் வரும் போது இது மீறப் படுகிரது.

இது போன்று எந்த முறையும் கடைபிடிப்பதில்லை.

சோ தர்மனின் "நசுக்கம்" கதை ஞாபகத்திற்கு வருகிறது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

மகளே! என்று முடிக்கும் போது என்னையறியாமல் கண்ணீர் வருகிறது.

கண்டிப்பாய் கவிதாவிற்கு நல்ல தொரு வாழ்க்கை அமையும். அமையவேண்டும்.

இடையில் ஏனோ உங்களின் சுப்பக்கா சிறுகதை ஞாபகத்திற்கு வந்து மனதை பிசைகிறது சார்.

மாதவராஜ் said...

எப்போதுமே உண்மைகள் தொந்தரவு செய்யக் கூடியதாகவும், அதிர்ச்சியானதாகவுமே நம் சமூகத்தில் இருக்கின்றன. எங்கள் வங்கிக் கிளைக்கு தீயினால் சுட்ட அவயங்களோடு மனிதர்கள் வருவதைப் பார்த்து வெலவெலத்துப் போயிருக்கிறேன். அவர்கள் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டவர்களாக எதிரே நிற்பார்கள். அது பெரும் கொடூரம்!

hariharan said...

வணக்கம் தோழரே!

நான் ஏப்ரல் மாத சூரியனை பார்த்து பார்த்து போரடிவிட்ட்து.

மீண்டும் எழுத துவங்கிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!!

//சிஐடியுவின் தலைவர் தோழர் டி.கே.ரெங்கராஜன் கவிதாவைப் பக்கத்தில் அழைத்து தைரிய்மாக இரு பாப்பா நிச்சயமாக உனக்கு நிவாரணம் கிடைக்கப்பாடுபடுவேன் //

ஒரு மாநிலங்களவை உறுப்பினராக இருந்து கொண்டு மக்களின் பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுக்கிறார் தோழர். டிகேஆர்.அவர் எடுத்த மிக முக்கிய பிரச்சனை மத்திய அரசு மூடிய தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள், மீண்டும் திறக்கும் வரை போராடியிருக்கிறார்.இதிலிருந்து தான் மற்ற கட்சிகளிடமிருந்து இடதுசாரிகள் தனித்துவம் பெறுகிறார்கள்.

pavithrabalu said...

"பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராகவுள்ள ஒரு சமூகத்தில் என்னதான் நடக்காது? தொழிலாளிகளின் உயிரோடு விளையாடும் முதலாளிகளும் அதிகாரிகளும் என்ன தண்டனையும் பெறத்தகுதியானவர்கள்தான்.ஆனால் அவர்கள் எப்போதும் நிம்மதியாகவும் செல்வச்செழிப்போடும்தான் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்"



"சிவகாசிக்கு குட்டி ஜப்பான் என்று ஒரு பெயர் உண்டு என்பதை இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.எவ்வளவு பொருத்தமான பெயர்?"


உண்மையிலேயே முகத்தில் அறையும் யதார்த்தம் தான்.

நிச்சயமாக இந்த தீபாவளிக்கு வெடி வாங்க எனக்கு மனமில்லை....

இத்தகைய கள ஆய்வுக்கான முன்முயற்சியை மேற்கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

உருக்கமான இடுகை... அதற்கு மேல் சொல்ல தெரியவில்லை

superlinks said...

உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன், பாருங்கள்.

venu's pathivukal said...

தெரியாத விஷயமல்ல என்றாலும், அறியாத தகவல்கள் அல்ல என்றாலும், நவீன சமூகத்தின் கொண்டாட்டங்களின் வேர்களில் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ என்ற குரல் வேதனை நிரம்பியது.

'ஹிபாகுஷா'க்கள் என்று அழைப்பது தலைமுறை தலைமுறையாய் தொடரும் பாதிப்புகளினால் தான். இங்கும் கூட அப்படி ஒரு அவஸ்தை வேறு வழியில் தொடர்கிறது. நீங்கள் யோசிப்பது போல் சிவகாசி விபத்தில் இப்படி ஊனங்களைச் சுமந்து திண்டாடுவோர்க்கு ஒரு பெயர் வைக்கலாம் தான். ஆனால் எப்போது நிறுத்தப் போகிறோம் இத்தகைய கொடுமைகள் நிகழ்வதை ?

பதிவிற்கு யார் சிரித்தால் தீபாவளி என்று தலைப்பு உள்ளது. நரகாசுரர்கள் யார் என்றும் துணைத் தலைப்பிடலாம். வேறு யார், நாம் தான்.

மீண்டும் ப்ளாக் உலகிற்கு மீண்டது நல்ல விஷயம். தொடர்ந்து எழுதுங்கள்.

எஸ் வி வேணுகோபாலன்

ராகவன் said...

அன்பு தமிழ்ச்செல்வன்,

தங்களின் யார் சிரித்தால் தீபாவளி, என்னை வெகுவாக பாதித்தது. பட்டாசுத் தொழில் மட்டுமே அல்லாது நிறைய தொழிற்துறைகள் இது போல் வீட்டுத் தொழிலாளர்கள் என்ற கான்செப்டில் இயங்கி கொண்டு தான் இருக்கிறது. பட்டாசின் வீர்யம், பாதிப்புகள், வெளிப்படையானவை, வெளிச்சமானவை. பட்டாசுத் தொழிற்சாலைகளும் எந்தவிதமான தொழிற்சாலை சட்டங்களையும் கருத்தில் கொள்ளாமல் கட்டப்பட்டிருக்கின்றன. மிகக்குறைவான தொழிற்சாலைகளே, தேவையான உரிமம் பெற்று, எல்லா பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளையும் பின் பற்றி கட்டப்படுகின்றன. பெரும்பாலான பட்டாசு தயாரிக்கும் இடங்கள் வாடகைக்கு பிடிக்கும் இடத்தில் ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்து, அதன் அடியில் தற்காலிகமாக தொழிற்தேவைகளுக்கு ஏற்ப கட்டமைக்கப்படுகின்றன, போதிய கழிப்பிடங்கள் இருக்காது, போதிய தீயனைப்பு கருவிகள் இருக்காது, அப்படியே இருந்தாலும் அதைப்பற்றிய பயிற்சி இருக்காது. அரசுத்துறையில் இருந்து ஆய்வுக்கு வருபவர்களின் தேவையே வேறு. அவர்களுக்கு தீபாவளிப்பரிசாக கிடைக்கும் பொட்டலங்களில் நம் சகோதர, சகோதரிகளின் ரத்தம் தோய்ந்த விரல் ரேகைகளை பதிந்திருப்பதை, படிக்கத் தெரியாத தற்குறிகள்.
குறித்த நேரத்தில் ஆர்டர் செய்ய முடியாத காரணத்தினாலும், உற்பத்திச் செலவுகளை குறைப்பதற்காகவும் இந்த பட்டாசுத்திரிகள் வீடுகளில் உள்ள விளக்குத்திரிகளில் பொருத்தப்படுகிறது. இது பட்டாசுத்தொழிலின் இதர பயங்கரங்கள் ரசாயனத்தில் புழங்குபவர்களுக்கு ஏற்படும் தொழில் சார் அபாயங்கள் இன்னும் கொடுமை, பிறக்கின்ற குழந்தைகள், தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் ஏனைய குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், ரசாயனக்கழிவினால் ஏற்படும் சுற்றுச்சுழல் பயங்கரங்கள் என்று வருங்காலத்தையே பட்டாசுக்குள் அடைத்து கொளுத்தும் முனைப்புகள்.

ராகவன்

Acu Healer.UMAR FAROOK.A said...

யார் சிரித்தால் தீபாவளியை வாசித்த போது யார் சிரிக்க இந்த தீபாவளி என்ற கேள்வி எழுகிறது.

இத்தனை அவலங்களையும் வருடா வருடம் சந்திக்கிற போதும், வெடிகளின் விற்பனை டாஸ்மாக் விற்பனையைப் போன்றே உயர்ந்து கொண்டிருப்பதை யாரிடம் சொல்ல?

Kavin Malar said...

//பதிவிற்கு யார் சிரித்தால் தீபாவளி என்று தலைப்பு உள்ளது. நரகாசுரர்கள் யார் என்றும் துணைத் தலைப்பிடலாம். வேறு யார், நாம் தான்.//

இதன் மூலம் என்ன கூற வருகிறீர்கள்? அவர்களைத் துன்பத்தில் ஆழ்த்தி பட்டாசு கொளுத்தும் மக்களை நரகாசுரர்கள் என்கிறீர்கள். ஆக தீபாவளி கொண்டாடும் நீங்கள் உள்ளிட்ட மக்களைத் திட்டுகிறீர்கள் உங்கள் கோபத்தில் நியாயமிருக்கிறது. ஆனால் தப்பாக உதாரணம் தருகிறீர்களே?

TAMILSUJATHA said...

வெளிநாடுகளில் வீடுகளிலோ, தெருக்களிலோ பட்டாசு வெடிக்க முடியாது. அரசாங்கம் ஒதுக்கும் பொதுவான இடங்களில், குறித்த நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கிறார்கள். அப்படிப் பட்டாசு வெடிப்பதற்கே பாதுகாப்பு தருகிறபோது, பட்டாசு தயாரிப்புக்கு இங்கு இருக்கும் சட்டங்களும் பாதுகாப்பற்ற சூழலும் வேதனை தருகிறது. இங்கு மனித உயிர்களுக்கு மதிப்பில்லை.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு துளிரில் வந்த பிரேமாவின் கதையைப் படித்த பின்பு எங்கள் வீட்டில் பட்டாசு வாங்குவதை நிறுத்தி விட்டோம்.

வாக்குமூலம் said...

//இம்முறை இந்திய தொழிற்சங்க மையமும் (சி.ஐ.டி.யு) அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் சேர்ந்து இக்கொடுமைகள் குறித்த விரிவான கள ஆய்வினை மேற்கொண்டு அதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி சிவகாசியில் கடந்த 30-8-09 அன்று ஒரு பொதுவிசாரணைக்கு ஏற்பாடு செய்தனர்.பொது விசாரணையின் நீதிபதிகள் குழுவில் ஒருவனாக நானும் மேடையில் இருந்தேன்../இப்படித்தான் ஒவ்வொன்றும் ஏதோ ஆகிவிடுவதைபோல ஆளுக்காள் ஆள்ப் பிடித்து கத்திக்கூப்பாடுபோட்டு மாறிமாறி மாலைகள் போட்டு எல்லாப்பிரச்சனகளும் இந்தாபார் கொன்று தொலைக்கிறோம் என்று பந்தா காட்டி கடைசியில் வந்த மக்களை ஏமாற்றி அரசியலாளர்களுடன் சேர்ந்து கொட்டமிடும் பேர்வழிகளை பார்ர்த்தும் கேட்டும் சலித்துப்போய் விட்டது. சிவகாசிப் பிரச்சனை என்பது இன்று நேற்றைய பிரச்சனையல்ல.நீதிபதிகளாக உங்களைபோடுவதற்குமுன்னே பலவருடங்களாகப் பேசப்பட்டும் வாதிக்கப்பட்டும் கண்டும் காணாமல் போனதற்கு அரசியல்வாதிகள் உருவாக்கிய சதிவலைகள் தான் முக்கிய காரணம். இது சகலருக்கும் தெரியும் ஆனால்சப்ம்பந்தப் பட்ட அரசியலாளருடன் தின்று குடித்துப் படுத்துத் தூங்கி விட்டு விசாரணை நடத்துகின்றோம் நிவாரணம் கொடுக்கப்பண்ணுகின்றோம் என்றெல்லாம் கரணம் அடிப்பது இனி எடுபடாது. மக்கள் விழிக்கத் தொடங்கி விட்டார்கள்.
ரமோனா

ச.தமிழ்ச்செல்வன் said...

பின்னூட்டம் இட்டுள்ள நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.கடைசியாக எழுதிய ’வாக்குமூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை.நீதிபதியாக அந்த மேடைக்குப் போவதற்கு முன்பு எமக்கு இவ்விபத்துகள் பற்றித் தெரியாதது போல எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன்.அது தவறு.1970 களில்லிருந்து நான் இப்பிரச்னையின் கூடவே ஓடி வந்துகொண்டிருக்கிறேன்.என் உறவுக்காரக் குழந்தைகளே பாதிக்கப்பட்டுள்ளனர்.சி.ஐ.டி.யு நீண்ட காலமாக சிவகாசியில் பல்வேறு போராட்டங்களை பட்டாசுத் தொழிலாளிகளுக்காக நடத்தி வருகிறது.இதுவரை நிவாரணம் என்று பெற்றுள்ள ஒவ்வொரு தொழிலாளிக்குப் பின்னாலும் சி.ஐ.டி.யு அல்லது மாதர்சங்கம் நின்றுள்ளது.பொது விசாரணை என்கிற வடிவத்தில் இது முதல் முறை.அவ்வளவே.நிற்க.70களில் பட்டாசு விபத்து பற்றிய அதிர்வுடன் எனது குரல்கள் கதை வந்தது.இப்பகுதியைச் சார்ந்த படைப்பாளிகள் லட்சுமணப்பெருமாள்,மாதவராஜ்,காமராஜ் என எல்லோருமே தம் படைப்புகளில் பட்டாசு வாழ்க்கை பதிவாகியுள்ளது.ஒரு குறும்பட முயற்சியிலும் மாதவராஜ் குழுவினர் உள்ளனர்.

காத்தவராயன் said...

70களில் "பூ" போட்ட பாவாட தாவாணி இன்னிக்கு "பூ" போட்ட சுடிதாரா மாறியிருக்கு அவ்வுளதுதான்......அவுக வாழ்க்கையில வேறென்னமும் மாறுனதா தெரியல, இன்னமும் தூக்கு சட்டியில பழய சோத்த கொண்டுட்டு போறத பாக்கயில என்னென்னமோ தோனுது.

சார் நீங்க இவுகள பத்தி எழுதுறப்ப அதுல ஏதோ ஒரு ஈரம் இருக்கு.

ஏனோ தெரியல தீவாளிக்கு வேட்டு போட்டு பதனஞ்சு வருசமாச்சு, இனியும் போடப்போறதுல்ல அந்த மட்டுலும் நான் பெரும பட்டுக்கலாம்.

காமராஜ் said...

பல தடவை விபத்துப்பார்க்கிற ஆர்வத்தில் கடந்துபோனாலும், வங்கியில் பணம் வாங்க நீள்கிற பல கரிக்கைகள் பார்த்தாலும்.
அழுகையை அடக்க முடியவில்லை இந்தப்பதிவை படித்ததும்.

Anonymous said...

Vaanakkam.

Arasiyal rethiyaga 30 andukaluku melaga poradium matram varavilai enna naam arinthum arthalukaga poradalm thavira, ayutham enthiya poratam illamal matrum varum enbathu manathirku erpudaiyathai illai.

Bharathi said...

யார் சிரித்தால் தீபாவளி? சிவகாசியில் வருடாவருடம் பல உயிர்களை குடித்துவிட்டு,பலரது வாழ்வை பறித்துவிட்டு,இன்பமாக தீபாவளியை கொண்டாடுவது நாம் மட்டுமே! நம் கண்ணுக்கு தெரிந்த இந்த கவிதாவை போல எத்தனையோ கவிதாக்கள் உள்ளனர். பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ள நம்முடைய முதலாளித்துவ நாட்டில் தொழிலாளிகளின் உயிர் துளி அளவேனும் மதிக்கப்படுவதில்லை.அவர்களுடைய அராஜகம் ஒழிக்கபடாவிடில் இது போன்ற எத்தனையோ கவிதாக்கள் வாழ்க்கையை இழந்திடும் அபாயம் வெகு தூரத்தில் இல்லை.