Monday, April 6, 2009

அள்ளிப்பார்க்க யாருமில்லை

solavadai

எழுத்தாளர் மாதவராஜ் தன்னுடைய வலைப்பக்கத்தில் சொலவடைகள் பற்றி ஓர் அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார். அப்பதிவு ஏற்படுத்திய தூண்டுதலில் இப்பதிவு....

சொலவடைகள் என்பவை பழமொழிகள் அல்ல.பழமொழி என்பதும் சொலவடை போல அனுபவத்திலிருந்து பிறப்பதுதான்.ஆனாலும் அது உள்ளூர் அறிவாளி ஒருவரால் வார்த்தைகள் ’செம்மை’ப்படுத்தப்பட்டு ஒரு சுத்தமான finishing effect உடன் இருக்கும்.ஆனால் சொலவடை என்பது தன்னளவில் முழுமையான பொருல் கொள்ளத்தக்கதாகவும் இருக்கும்.சில சொலவடைகள் அந்த சந்தர்ப்பத்தோடு பொருத்திப் பார்த்தால் இன்னும் கூடுதல் அர்த்தம் தருவதாக இருக்கும்.

“ காரணம் சொல்பவன் காரியம் செய்யான் “ என்பது பழமொழி. ‘பேச்சுப்படிச்ச நாயி வேட்டைக்கு உதவாது’ என்பது சொலவடை.’ வினை விதித்தவன் வினை அறுப்பான்.தினை விதைத்தவன் தினை அறுப்பான்’ என்பது பழமொழி ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும் என்பது சொலவடை.

சொலவடை என்பது மக்கள் மனசிலிருந்து அப்படியே வந்து விழுந்த வார்த்தைகளாக இருக்கும்.செதுக்குதல் இருக்காது.ஆகவே இயல்பாகவே நமக்குப் பழமொழிகளைவிட சொலவடைகளின் மீது பெரும் ஈர்ப்பு உண்டாகிவிடுகிறது.பண்பாடு குறித்து ஆழமான ஆய்வுப்பார்வையோடு கருத்துக்களை முன்வைத்த அந்தோனியோ கிராம்ஷி ( இவர் முசோலினி ஆட்சிக்காலத்தில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகாலம் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டு சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டவர்.இத்தாலிய கம்யூ.கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவர்) folklore –நாட்டார் வழக்காறுகள் பற்றிக் குறிப்பிடும்போது அவை உழைக்கும் மக்களின் உலகக்கண்ணோட்டத்தை வெளிப்படுத்துபவையாக இருக்கும் என்று குறிப்பிட்டார். அதே சமயம் அவை எல்லாவிதமான (முற்போக்கு மற்றும் பிற்போக்கான) சிந்தனைகளின் அருங்காட்சியகமாகவும் இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

தங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்கும்போது

‘ தட்டிப்போட்ட ரொட்டி பொறட்டிப்போட நாதியில்லை’ என்பார்கள்.இதே விரக்தியான தொனியில் ஏராளமான சொலவடைகள் உள்ளன.

‘அரிசின்னு அள்ளிப்பார்ப்பாரும் இல்லே

உமின்னு ஊதிப்பார்ப்பாரும் இல்லே’

“ குமறுன்னு இல்லாம வாக்கப்பட்டுக்கிட்டேன்

மலடுன்னு இல்லாம பிள்ளப்பெத்துக்கிட்டேன்”

அதுக்கு மேல சொல்ல என்ன இருக்கு என்கிற வார்த்தைகள் சொல்லாமல் விடப்பட்டு நிற்கும்..இவை வெறும் சொலவடைகளாக மட்டுமின்றி சுதந்திர இந்தியாவின் 60 ஆண்டுகால அரசியலின் மீதும் வளர்ச்சி பற்றிய சிதம்பரம்களின் வாய்ச்சவடால்கள் மீதும் எளிய மக்கள் காரி உமிழ்ந்த வார்த்தைகளாகவும் நாம் கொள்ளலாம்.

தட்டிப்போட்ட ரொட்டி- புரட்டிப்போட நாதியில்லை என்பதில் காட்சிப்பூர்வமாக நாம் பெறும் அதிர்ச்சி பெரிது.சொலவடைகள் பெரிதும் காட்சிகளாக நம் மனதில் விரியும் தன்மை கொண்டவை.

ஆங்கிலக்கல்வி நுழையாத சுத்தமான கிராமத்து மனங்களிலிருந்து வந்தவை இவை என்பதால் கல்லாத மக்களின் சிந்தனை முறைப்படி காட்சிப்பூர்வமாகவே வந்து விழுகின்றன.

சிறிதுகாலம் பேராசிரியர் ச.மாடசாமி அவர்களின் தலைமையில்

( என் வாழ்வில் பெரும் மனக்கிளர்ச்சியை – மனத்திருப்பத்தை உண்டாக்கிய ஆளுமை இவர்.இவருடைய புத்தகங்கள் வாசல் பதிப்பகத்திலும்(9842102133)பாரதி புத்தகாலயத்திலும்( 9444960935) கிடைக்கும்)

தென்மாவட்டங்களில் நாட்டார் வழக்காறுகளை இரண்டாண்டுகாலம் சேகரித்துத் தொகுத்து ஆய்வு செய்துகொண்டிருந்தோம்.சொலவடைகள் ஆயிரக்கணக்கில் வந்து

குவிந்திருந்தன.அவற்றை உணர்வுகளின் அடிப்படையில் பிரித்துப்பார்த்தோம்.கிண்டல்,கேலி,விரக்தி,வருத்தம்,ஏளனம் என பலவிதமான உணர்வுகளில் அவை இருந்தன.கோபம் என்கிற தலைப்பில் ஒன்றும் கிடைக்கவில்லை.

நான் என் வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நினைத்துப்பார்க்கும் பாரதியின் கவிதை வரிகளைப்போல பல சொலவடைகள் மனசைத் தாக்குவதுண்டு.ஊரூராகச் சுற்றிவிட்டு சிலசமயம் ஏற்படும் சோர்வான மனநிலையில்

நாலு வீட்டுல கல்யாணம்

நாய்க்கு அங்கிட்டு ஓட்டம் இங்கிட்டு ஓட்டம்

என்கிற சொலவடை மனசில் ஓடும்.பொது வாழ்வில் எல்லா நேரமும் மனதுக்குப் பிடித்த வேலைகளே செய்துகொண்டிருக்க முடியாது.வெட்டிவேலைகள் நிறைய வரும்.அப்போதெல்லாம்

எள்ளு எண்ணெய்க்குக் காயுது

எலிப்புழுக்கை எதுக்குக் காயுது

என்று தன்னிரக்கம் வரும்.

இப்போது தேர்தல் காலம்.ஒவ்வொரு கட்சிகள் பேசுவதையும் செய்வதையும் பார்க்கும்போது நமக்குச் சில சொலவடைகள் நினைவுக்கு வந்து சிரிப்பூட்டுகின்றன.

2011இல் முதல்வராகப்போகும் சரத்குமாரை நினைத்தால்

“ ஊசிப்போன மொச்சையிலே உழக்கு வாங்க மாட்டாதவன்

பாம்பே அல்வாயிலே பத்து டன் போடுன்னானாம்”

கூட்டணி-பேச்சுவார்த்தை-சீட்டுகள் பற்றி

”பணியாரம் சுட்ட வீட்டுக்கு

பத்துவாட்டி போனாளாம்

அவளும் வெக்கப்பட்டு ஒண்ணு கொடுத்தாளாம்”

ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆ.ராசாவுக்கு மற்றும் சகல ஊழல் பேர்வழிகளுக்காக...

1.”படப்போட மேயுற மாட்டுக்கு புடுங்கிப் போட்டா காணுமா”

2.‘கோழி களவாணிப்பய குடம் கிடைச்சா விடுவானா’

3.’அடிச்சுப்புடுங்குறவன் கண்டெடுத்தாக் குடுப்பானா’

மதுரைத்தொகுதியில் மு.க.அழகிரியை எதிர்த்து மார்க்சிஸ்ட் போட்டி

‘ கரட்டுக் கட்டைக்கு

முரட்டுக்கோடாரி’

சுடுகாட்டுக் கொட்டகை போடறதிலும் மாட்டுத்தீவனத்திலும் ராணுவதளவாடங்கள் வாங்குவதிலும் என எல்லாத்திலேயும் ஊழல்

‘நக்குற நாயிக்கு

செக்குன்னு தெரியுமா செவலிங்கம்னு தெரியுமா’

காங்கிரஸ்-திமுக சாதனைப்பட்டியல்கள் வெளியீடு

‘ உழக்கு அரிசி அன்னதானம் விடிய விடிய மேள தாளம்’

இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம்.

சொலவடைகள் எனப்படும் இந்த மக்கள் மொழி ஒரு குறிப்பிட்ட காலத்தோடு நின்று விட்டதா? என்பது ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.

Latest ஆன சொலவடைகள் என்று பார்த்தால்

’சாமியே சைக்கிள்லே போகுது

பூசாரி புல்லட் கேட்டானாம்’

கஞ்சிக்கு லாட்டரி

கைக்கு பேட்டரியா

போன்றவற்றையும் ரயில் சம்பந்தமான சொலவடைகள் விடுகதைகளையும் கூறலாம்.அதாவது புல்லட் பைக்,பேட்டரி எனப்படும் டார்ச் லைட் அறிமுகமான காலம் வரை சொலவடைகள் பீறிட்டு வந்துள்ளன.அதாவது காலனிய ஆட்சிக்கு முன் வரை என்று கொள்ளலாமா?அல்லது ஆங்கிலக்கல்வி பரவலாவதற்கு முன்வரை எனக்கொள்ளலாமா? கல்வி வந்து மக்களை ஒரு மௌனக்கலாச்சாரத்தில் அமிழ்த்தி விட்டதா?இந்த Cultural Silence தானே நாம் எதிர்கொள்ள வேண்டிய பெரும் பிரச்னையாக உள்ளது? புதிய சொலவடைகள் ஏதும் உண்டா? சினிமா வசனங்கள் சில – வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க என்பது போல மக்களின் பேச்சு வழக்கில் புகுந்துள்ளனவே அவைதான் இன்றைய சொலவடைகளா ? அவை வெளியிலிருந்து வந்தவை ஆயிற்றே?மக்கள் மனசிலிருந்து வருகை நின்று போனதா?

இப்படிப் பலப்பல கேள்விகளோடு சொலவடைகள் நம் தொடுதலுக்காகக் காத்திருக்கின்றன.அல்லது சொலவடைகளே அரிசின்னு அள்ளிப்பார்ப்பாரும் இல்லாம உமின்னு ஊதிப்பார்ப்பாரும் இல்லாமக் கிடப்ப்பதாகவும் கொள்ளலாம்.

19 comments:

யாத்ரா said...

சம்பவங்களுக்கு பொருந்துகிறதும், சொலவடைகளுக்கு ஏற்றாற்போல் இன்னும் பல சம்பவங்களை நினைவு கூறுவதாகவும் கவித்துவம் மிகுந்ததாகவும் மிக அருமையாக இருக்கிறது.

sivarajan said...

நீங்கள் கூறுவதில் நிறைய உண்மைகள்…

sivarajan said...

ஐயா..இந்த வார விகடனில் உங்கள் பி்ளாக்கை சிறந்த ஒன்றாக குறிப்பிட்டு உள்ளனர். வந்தேன்,பார்த்தேன்,ரசித்தேன்…
தொடரட்டும் உங்கள் தேன் மொய்க்கும் எறும்பு {எழுத்து} பணி

ச.பிரேம்குமார் said...

அருமையான கட்டுரை அய்யா :)

//ஊசிப்போன மொச்சையிலே உழக்கு வாங்க மாட்டாதவன்
பாம்பே அல்வாயிலே பத்து டன் போடுன்னானாம்”
//

இதுக்கு எங்க ஊருல இன்னொரு சொலவடை இருக்கு

“கூரை ஏறி கோழி புடிக்காதவன்
வானம் ஏறி வைகுண்டம் போறானாம்’

மண்குதிரை said...

சொலவடைகளில் உள்ள படிமங்கள் என்னை வியக்கவைக்கின்றன.

//நா ஏச்ச நரி தண்ணி குடிக்காம அலையுது நீ என்னிய ஏக்கப் பாக்குறயா//

இந்த சொலவடை என்னுடைய ஆச்சி சொன்னது.

வெயில் காலத்தில் பாயும் கானல் ஓடையை நீர் என்று காட்டி நரியை ஏமாற்றிய என்னையே ஏமாற்றப் பார்க்கிறாயா?

இது ஒரு புதுக்கவிதை போல இருக்கிறது. இல்லையா?

Anonymous said...

ஓஹோ இப்படித்தான் இலக்கியத்தில் அரசியலைக் கலக்கணுமா ?!!
//இப்போது தேர்தல் காலம்.ஒவ்வொரு கட்சிகள் பேசுவதையும் செய்வதையும் பார்க்கும்போது நமக்குச் சில சொலவடைகள் நினைவுக்கு வந்து சிரிப்பூட்டுகின்றன. 2011இல் முதல்வராகப்போகும் சரத்குமாரை நினைத்தால் “ ஊசிப்போன மொச்சையிலே உழக்கு வாங்க மாட்டாதவன் பாம்பே அல்வாயிலே பத்து டன் போடுன்னானாம்” கூட்டணி-பேச்சுவார்த்தை-சீட்டுகள் பற்றி ”பணியாரம் சுட்ட வீட்டுக்கு பத்துவாட்டி போனாளாம் அவளும் வெக்கப்பட்டு ஒண்ணு கொடுத்தாளாம்” ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆ.ராசாவுக்கு மற்றும் சகல ஊழல் பேர்வழிகளுக்காக... 1.”படப்போட மேயுற மாட்டுக்கு புடுங்கிப் போட்டா காணுமா” 2.‘கோழி களவாணிப்பய குடம் கிடைச்சா விடுவானா’ 3.’அடிச்சுப்புடுங்குறவன் கண்டெடுத்தாக் குடுப்பானா’ மதுரைத்தொகுதியில் மு.க.அழகிரியை எதிர்த்து மார்க்சிஸ்ட் போட்டி ‘ கரட்டுக் கட்டைக்கு முரட்டுக்கோடாரி’ சுடுகாட்டுக் கொட்டகை போடறதிலும் மாட்டுத்தீவனத்திலும் ராணுவதளவாடங்கள் வாங்குவதிலும் என எல்லாத்திலேயும் ஊழல் ‘நக்குற நாயிக்கு செக்குன்னு தெரியுமா செவலிங்கம்னு தெரியுமா’ காங்கிரஸ்-திமுக சாதனைப்பட்டியல்கள் வெளியீடு ‘ உழக்கு அரிசி அன்னதானம் விடிய விடிய மேள தாளம்’ இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம்.//

greatlover said...

நாய்க்கு வேலையும் இல்லை நிற்க நேரமும் இல்லை !

rvelkannan said...

// கல்வி வந்து மக்களை ஒரு மௌனக்கலாச்சாரத்தில் அமிழ்த்தி விட்டதா?இந்த Cultural Silence தானே நாம் எதிர்கொள்ள வேண்டிய பெரும் பிரச்னையாக உள்ளது //

உண்மை தான் ஐயா,
மீதமிருக்கும் மனித மனங்களின் வளமையான பகுதியும், தனியார் தொலைக்காட்சிகளின்
'முதல் தரமான' நிகழ்ச்சிகள் (உம்: 'மானட மயிலாட') மழுங்கடித்து விடுகின்றன.
இவ்வித மன நிலையின் இறுக்கமான சுழல் ('Cultural Silence') ஆபத்தானதும் கூட.

hema said...

Good article

Azhagu Selvan SP said...

இயல்பான தமிழ் பேச்சே குறைந்து விட்டது. சொலவடை களை எங்கே பொய் தேடுவது.

so.krishnakumar said...

அன்பு தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு
தங்களின் வலைத்தள வருகை மட்டற்ற மகிழ்வைத்தருகிறது
என்றபோதும் என்னுடைய அண்டைவீட்டு மனிதனிடமிருந்து அன்னியப்பட்டுப்போய்விடுவேனோ என்ற உறுத்தல் என்னை எழுதவிடாமல் இறுக்கு கிறது. இந்த வினைக்கு உங்களுடைய கருத்தை அறிய விரும்புகிறேன்.

சோ. கிருஷ்ணகுமார்.
so.krishnakumar@gmail.com

குடந்தை அன்புமணி said...

சொலவாடைகளை தற்கால அரசியலுடன் ஒப்பி்ட்டது அருமையாக இருக்கின்றன தோழரே!

விழியன் said...

நல்ல பதிவு

ச.தமிழ்ச்செல்வன் said...

வந்த உள்ளங்களுக்கு நன்றி.

பிரேம்குமார் சொன்னது பழமொழியோ என்கிற மயக்கம் தருகிறது.மண்குதிரை சொன்ன சொலவடை அடடா என்ன அற்புதம்.என்ன கூர்மை.என்ன திமிரு பாருங்க அதிலே.

வேல்கண்ணன் சொல்வதை ஆமோதிக்கிறேன்.

சோ.கிருஷ்ணக்குமார் சார் தயக்கம்தான் எழுத்துக்கு முதல் எதிரி.நம்முடைய அனுபவம் மற்றும் கருத்துக்களை எல்லோருக்குமானதாக ரசமாற்றம் செய்து எழுதிவிட்டால் நாம் அன்னியப்பட மாட்டோம் என நினைக்கிறேன்.

so.krishnakumar said...

சார்போட்டு விரட்டாதீஙக தோழர்
இலக்கியத்தின் இன்னொரு வடிவம் என புரிந்து கொள்ளலாமா

Karthikeyan G said...

சார், இன்னும் ஒன்னு,

பா.ம.க-வுக்கு மட்டும் எழு எனக்கு ஏன் கம்மி என கேட்ட ம.தி.மு.க- வை பார்த்தது ஜெ-வின் தொண்டர்கள்..

"மானங்கெட்ட நாயி நேத்து வந்த ஈனங்கெட்ட நாய எட்டி எட்டி பாத்துதாம்"

:)

Unknown said...

சொலவடைகள் அருகிப் போய்விட்டதென்பது உண்மைதான் தமிழ். மேற்கூரிய சொலவடைகளில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை நான் கேள்விப்பட்டிராதது. என் ஆச்சி அடிக்கடி சொல்வது ‘நாய்க்கு வேலை ஏதுமில்ல, நிக்க நேரமில்லை’ அப்பறம் ‘உத்து உத்துப் பாத்தா இத்துப் போயிடும்’ ஈயத்தைப் பார்த்து இளிச்சுதாம் பித்தளை’ ..இதெல்லாம் சொலவடைகளா இல்லது ஆச்சியின் சொந்தச் சரக்கான்னு தெரியாது. இன்னும் நிறைய சொல்வார்கள் யோசித்துப் பார்த்தால் ஞாபகம் வரும். என்னோட பசங்ககிட்ட இதையெல்லாம் ட்ரை பண்ணா ‘அம்மா நல்லாதானே இருந்தீங்கன்னு’ கிண்டல் பண்ணுவாய்ங்க...ரொம்ப மாறிட்டாங்க நாமும் ஸேம் ட்ராக்ல போக வேண்டிய சூழல்;))) வழமை போலவே அருமையான பதிவு தமிழ்.

ஆடுமாடு said...

//என்னமோ சொன்னானாம் கதையில, எலி லவுக்கை கேட்டதாம் சபையில//

இந்த சொல்வடையை கேள்விபட்டிருக்கேளா? எங்க ஆச்சி அடிக்கடி சொல்லுதது.

era.thangapandian said...

தோழமை வணக்கம். நாட்டார் வழக்காறுகள் பற்றிய தங்களின் படைப்புகளை.... உரை வீச்சுகளை கடந்த 15 ஆண்டுகளாகவே நான் கேட்டும் வாசித்தும் வருகிறேன். தங்களின் இருளும் ஒளியும் பதிவை பல நண்பர்களுக்கு அறிகுனம் செய்துள்ளேன். நாட்டார் வழக்காறுகள் தொடர்பாக பேராசிரியர் வானமாலையில் தொடங்கி கழனியூரான் வரையில் பல பதிவுகள் வந்த போதிலும் இன்னுமு் முழுமையான பதிவை யாரும் தரவில்லை என்பதே என்னளவு வாசிப்பனுபவத்தின் வெளிப்பாடு. இதில் பேராசிரியர் லூர்துவும் சிவசுப்ரமணியனும், முகிலும் கொஞ்சம் கால்வீதி நடந்துள்ளார்கள்.
தமுஎகச நாட்டுப்புற இலக்கியங்களுக்காக பல பயிலரங்கங்கள் நடத்தியுள்ளது. அது நேரத்தில் ஓம் முத்துமாரி போன்ற முதுபெரும் கலைஞர்களிடமிருந்து வாய்மொழி இலக்கியங்களை இன்னும் பதிவு செய்யவில்லை.

நாட்டார் கலைகள் பற்றிய ஒரு விரிவான ஆய்வரங்கை அரசின் துணையோடு நடத்த வேண்டும் என்பதே என்னைப் போன்ற நாட்டுப்புறவியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
--
நன்றி
தோழமையுடன்
இரா. தங்கப்பாண்டியன்

எனது வலைதளத்திற்கு வருகைதாருங்கள்: http://vaigai.wordpress.com/, http://thangapandian2007.blogspot.com/