கரிசல் காடெங்கும் கொட்டுச்சத்தம்.
காடுகரையெங்கும் பாட்டுச்சத்தம்.
பங்குனிப் பொங்கல் திருவிழாக்கள் கிராமங்களில் துவங்கிவிட்டன.
நான் சிவகாசிப்பக்கம் ஈஞ்சார் நடுவப்பட்டி என்கிற சிறிய கிராமத்தில்
(அது என் துணைவியார் பிறந்த ஊர்) முத்துமாரியம்மனுக்கு திருநாளாம்
என்று அலறுகிற லவுட்ஸ்பீக்கர் சத்தத்துக்கு நடுவே-அவ்வப்போது
அக்கினிச்சட்டியோடு வாசலைக்கடந்து செல்லும் மேளச்சத்தத்துக்கு நடுவில்-
அமர்ந்து என் வலை உலகத்தோடு பேசிக்கொண்டிருக்கிறேன்.
இங்கே மாரியம்மன் கோவிலில்தான் திருவிழா.ஒரு வார காலம்
கொண்டாட்டம்.முறைக்காரர்கள் மஞ்சத்தண்ணி ஊத்தி விளையாடுவதோடு
விழா நிறைவுபெறும்.நான் பிறந்த ஊரான நென்மேனி மேட்டுப்பட்டியில்
காளியம்மன்தான் எங்க ஊர்த்தெய்வமாக இருக்கிறாள்.ஆனால் எங்கள் குல தெய்வம்
என்பது வழிவிட்ட அய்யனார் -அவர் இராமநாதபுரம் மாவட்டம் கமுதிப்பக்கம்
அருவாளோடு குடிகொண்டிருக்கிறார்.
சின்ன வயசில் ரொம்ப பக்தியாக இருந்தேன்.அதாவது காலையில் தினசரி குளித்து
நெற்றியில் விபூதி பூசுவதுதான் அந்த ‘ரொம்ப பக்தி’ என்பதன் விரிவாக்கம்.கோவிலுக்குப்
போய் சாமி கும்பிடுவது என்பது கிராமத்தில் ஆண்டுக்கு ஒருமுறை திருவிழாவின்போது
மட்டும்தான்.தினம் தினம் கோவிலுக்குப் போய்ச் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தால்
பிழைப்பு நாறிப்போகும்.வேற வேலைக்கழுத இல்லாததுக தினம் போய் கும்பிட்டுக்கிட்டு
இருக்க வேண்டியதுதான் என்று சொல்வதுபோல சாமின்னு ஒரு அயிட்டம் தங்கள் வாழ்வில்
இல்லாததுபோல விடிந்ததும் காடுகரைகளுக்குப் போய் விடுவார்கள் மக்கள்.
இந்த ஒருவாரம் பார்த்தால் சாமி கும்பிடுவதைத் தவிர வேற சோலியே இல்லாதது போல
ஒருவாரகாலமும் வித விதமாகச் சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அக்கினிச் சட்டி எடுக்க ஒருநாள், மாவிளக்கு ஒருநாள், முளைப்பாரி ஒருநாள்,
பொங்கல் வைக்க ஒருநாள்,முடி இறக்கி மொட்டைபோட ஒருநாள்,அம்மனுக்குப்
பட்டெடுத்துச் சார்த்தி அழகுபார்க்க ஒருநாள் என்று ஊர் ரொம்ப பிசியாக இருக்கிறது.
எந்நேரமும் ஒரு BGM உறுமியோ தவில் சத்தமோ காற்றில் மிதந்துகொண்டே இருப்பது
இது மத்த வாரங்கள் மாதிரி சாதாரண வாரம் இல்லை என்கிற மயக்கத்தைத் தந்து
கொண்டே இருக்கிறது.சுற்றிலும் தேர்தல் பரபரப்பும் தூரத்தில் தமிழ் மக்களின் மரணக்
குரலும் கேட்டபடி இருக்க இங்கே அது ஒருபக்கம் இருக்கட்டும் ஆத்தாளுக்கு செய்ய
வேண்டியதை முதல்ல செய்வோம் என்று ......
சாமி இல்லை என்பது பிடிபட்ட பிறகு நான் கோயில் அயிட்டங்களிலிருந்து முற்றிலுமாக
விலகி இருந்துவிட்டேன்.அப்பா வழியில் கொஞ்சம் ’திராவிடப்பாரம்பரியமும்’ நம்ம
மூளையில் வந்து சேர்ந்திருந்தது.மதம் ஒரு அபினி என்று மார்க்ஸ் சொன்னதாக
அரைகுறையாகக் காதில் ஏறியிருந்ததும் சாமிகளை உப்பக்கம் கண்டதற்கு ஒரு காரணம்.
ஆனால் இதயமில்லாத இந்த உலகத்தில் கருணையின் வடிவமாகக் கடவுள்
இருக்கிறார்.இரக்கமில்லாத இந்த உலகத்தில் ஏழைகளின் ஏக்கப்பெருமூச்சாகக் கடவுள்
இருக்கிறார் என்று சொன்னதும் மார்க்ஸ்தான் என்பதைப் பின்னர்தான் அறிந்தேன்.அப்புறம்
கிடைத்தது ஆ.சிவசுப்பிரமணியன், தொ.பரமசிவன் போன்ற அறிஞர்களின் நட்பும் உறவும்.
அவர்கள் வழியே நாட்டுப்புற தெய்வங்கள் பற்றிய புதிய புரிதலும்.
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்
துடிப்போடு இயங்கிய அந்த நாட்களில் பத்துநாள் ”சனங்களின் சாமிகள்” பற்றிய கருத்தரங்கு
நடைபெற்றது.அந்தப் பத்துநாட்கள் என் வாழ்வில் புதிய திருப்புமுனையான நாட்கள்.தெய்வங்கள்,
கடவுள்கள் பற்றிய புதிய பார்வையை அக்கருத்தரங்கு எனக்கு வழங்கியது.
மக்களைக் கொலைசெய்வதைத் தம் முக்கிய அஜெண்டாவாகக் கொண்டலையும்
இந்துத்வா சக்திகளின் தத்துவச்செல்வாக்கைச் சீர்குலைக்க சிறுதெய்வங்கள் எனப்
பழிக்கப்பட்ட இந்நாட்டுப்புற தெவங்கள் நமக்குக் கைகொடுப்பார்கள் என்கிற அதீத மயக்கம்
எனக்கு ஏற்பட்டது.நாட்டார் தெய்வங்கள் நமது நேச அணி என்கிற தலைப்பில் சிறுநூல்
ஒன்றையும் எழுதினேன்.சவுத் விஷன் பாலாஜி அதை வெளியிட்டார்.
ஆனால் காலப்போக்கில் அந்த மயக்கம் குறைந்த்து எனினும் நாட்டார் தெய்வங்களின் மீதான
ஈர்ப்பு இன்றளவும் நீடிக்கிறது.பெருந்தெய்வ வழிபாட்டுக்கு நேர் எதிரான வழிபாட்டு முறைகளைக்
கொண்டுள்ள இந்நாட்டார் தெய்வங்கள் நம்மை ஈர்ப்பது இயல்புதான்.
தந்தை பெரியார் காலத்தில் நாட்டார் தெய்வ ஆய்வுகளோ நாட்டுப்புற
ஆய்வுகளோ இந்த அளவுக்கு வளர்ந்திருக்கவில்லை.அப்படி வளர்ந்திருந்தால்
பெரியார் அக்கருத்துக்களை உள்வாங்கிப் பேசியிருப்பார் என்னும் அறிஞர் தொ.பரமசிவனின்
கருத்துக்கள எனக்கு ஏற்புடையவையாக இருக்கின்றன.கொலையில் உதித்த தெய்வங்கள் இவை
என்று ஆ.சிவசுப்பிரமணியன் பட்டியலிடும்போது நாம் இன்னும் துலக்கம் பெறுகிறோம்.
சிவன்,விஷ்ணு,அல்லா,ஏசு என எல்லாப் பெருந்தெய்வங்களுக்கும் புனிதமான பிறப்புக்கதைகள்
இருக்க மக்கள் சாமிகளான மாரியாத்தா ,காளியாத்தாக்களெல்லாம் சாதாரணமாக
சாணி பொறுக்கப் போன இடத்தில் ஆதிக்க சாதியாரால் வல்லாங்கு செய்யப்பட்டுக்
கொல்லப்பட்டவர்களாகவோ மதுரைவீர சாமியைப்போல சக்கிலிய குலத்தில் பிறந்து
உயர்சாதியான நாயக்கர் வம்சத்தில் பிறந்த பொம்மியைக் காதலித்த குற்றத்துக்காகக்
கொல்லப்பட்டவராகவோ இருக்கிறார்கள்.
என்றாலும் இந்நாட்டார் சாமிகள் உள்ளூரில் சாதிகளோடு
இறுகப்பிணைக்கப்பட்டுள்ள கொடுமையும் ய்தார்த்தம்தான்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தலித்துகள் சென்று வழிபட முடிகிறது இன்று.ஆனால்
உள்ளூர் தெய்வங்கள் உள்ளூர் மேற்சாதியாரின் கட்டுப்பாட்டில் இருப்பதால்
தலித் பக்தர்களுக்கு சம உரிமை கொடுக்கும் உரிமை
மாரியாத்தாளுக்கோ காளியாத்தாளுக்கோ இல்லை.போராட்டங்கள் தேவைப்படுகின்றன.
சரி. கதைக்கு வருவோம்.
நடுவப்பட்டி மாரியம்மன் கோவிலில் எனக்கு மிகமிகப் பிடித்த விசயம்
எதுவெனில் இக்கோவிலுக்கு சாமி கும்பிடப் போகும்போது
ஆடு,கோழி அடித்து நல்லா மூக்கு முட்டச் சாப்பிட்ட பிறகுதான் போகணும்
என்கிற நடைமுறை இருப்பதுதான்.கறி தின்ன மறுக்கும் பிள்ளைகளுக்கு
சாப்பிடு தாயி சாமி கறியில்லா இது என்று தாய்மார்கள் ஊட்டுவார்கள்.
சாமி கும்பிடும்வரை சாப்பிடாமல் விரதம்
இருந்து அப்புறம் வந்துதான் சாப்பிடணும் என்கிற sanscritised மரபு இங்கு
இதுவரை வந்து சேரவில்லை.பக்கத்தில் பல ஊர்களில்
விரத மரபு வந்து தொலைத்து விட்டது.
இன்னும் ஏராளமாக இதுபற்றிப் பேச இருக்கிறது எனினும் கோழி கொதிக்கிற
வாசனை அடுப்பிலிருந்து வந்து கொண்டேயிருக்கிறது.ஒரு கிண்ணம் கோழிச்சாறு
அடித்துவிட்டு வந்தால்தான் எழுத்து ஒடும் போல இருக்கிறது.வர்ரிகளா சாறு குடிக்க...
சவேரியார் கல்லூரியில்
18 comments:
நாட்டுப்புறத் தெய்வங்கள் பற்றிப் புரிந்து கொள்ள நல்ல ஒரு அறிமுகம் செய்துள்ளீர்கள். நன்றி.
gods, demi-gods,semi-gods - all can be appropriated.you want to appropriate it for some purpose.
some others for their purposes.
dont worry, such traditions will survive despite all such attempts to appropriate.but they will not remain the same forever.Changes will be there, much to your disliking.You can simply blame sanskritisation and hindutva for all the changes and thereby prove your marxist/secular credentials.
ஐயா,
தாங்கள் கூறியுள்ளது போல
"இந்நாட்டார் சாமிகள் உள்ளூரில் சாதிகளோடு இறுகப்பிணைக்கப்பட்டுள்ள கொடுமையும் ய்தார்த்தம்தான்"
ஆகையால், நாட்டார் தெய்வங்களை பற்றிய புரிதல் மிக அவசியமாகிறது.
தாங்களின் 'நாட்டார் தெய்வங்கள் நமது நேச அணி' எங்கு கிடைக்கும்?
மேலும் நாட்டார் தெய்வங்கள் பற்றிய
புத்தகங்களை(பதிப்பகத்துடன்) கூற முடியுமா?
//இன்னும் ஏராளமாக இதுபற்றிப் பேச இருக்கிறது எனினும் கோழி கொதிக்கிற
வாசனை அடுப்பிலிருந்து வந்து கொண்டேயிருக்கிறது.//
மனுஷன் கொலபசியிலே இருக்கிறப்போ இப்படியெல்லாம் எழுதுறது அநியாயம் :-). அடுத்த திருவிழாவுக்கு உங்க ஊருக்கு வந்தா கறிச்சோறு கிடைக்குமா?
//இன்னும் ஏராளமாக இது பற்றிப் பேச இருக்கிறது எனினும் கோழி கொதிக்கிற
வாசனை அடுப்பிலிருந்து வந்து கொண்டேயிருக்கிறது. ஒரு கிண்ணம் கோழிச்சாறு அடித்துவிட்டு வந்தால்தான் எழுத்து ஒடும் போல இருக்கிறது. வர்ரிகளா சாறு குடிக்க... //
நல்லா குடிங்க சாமி..!
நல்லா சாப்பிடுங்க சாமி..!
இந்தச் சந்தோஷத்தைக் கொடுக்கத்தான் இந்தக் கொண்டாட்டம்..
பக்தியெல்லாம் பின்னாலதான்..
தெய்வங்களெல்லாம் தன்னை முன்னிறுத்தி இந்த நாளில் இப்படியொரு சந்தோஷத்தை மக்களுக்குக் கொடுக்கின்றன..
மனிதன்தான் இது தெய்வத்துக்கு நாம கொடுக்குற காணிக்கைன்னு தலைகீழா மாத்திட்டான்..!
ஏதோ எனக்குத் தோணினது சாமி..!
ஒரு கிண்ணத்தில் கோழிச்சாறு வைத்துக் கொண்டு ஏகப்பட்ட விஷயங்களை ஊட்டி விட்ட மாதிரி இருக்கு.
உறுமி மேளம் சத்தம் கேட்கத்தான் செய்கிறது...
மாட்டுக்கறியும் சோறும் முங்க தின்னு புட்டு விருது நகர் மாரியாத்தாளுக்கு இரவு 12 மணி தொடங்கி விடிய விடிய கொட்டுக்காரர்களின் அடிக்கு ஆட்டம் போட்டு சட்டி எடுத்த நினைவு வந்து போகிறது உங்களது பதிவைப்படித்த பிறகு. இப்போதும் சட்டிஎடுத்துக்கொண்டுதான் இருக்கிரறார்கள். குலவைச்சத்தமும் நையாண்டி மேளமும் காதுகளைக்குளிர வைத்துக்கொண்டுதான் இருக்கிறது
//எங்க மேல்மாந்தை தேவதை...
முன்பு போல் விளைச்சல் இல்லை
நெல்லறுத்த உடனே உளுஞ்செடிக்கு
களையெடுத்த நிலத்தில்
மிளகாய் கூட வரவில்லை
காலத்தில் மழை இல்லை
கண்மாய்களில் தண்ணீர் இல்லை
உழுத கால்கள் எல்லாம்
உப்பளத்திற்கு நடக்கின்றன
ஏர் கலப்பையை
எடைக்குப் போட்டுவிட்டுத்தான்
நாங்களும் இருக்கிறோம்
பட்டணக்கரைகளில்
பஞ்சம் பிழைக்க
ஆனாலும் பொங்க வைப்போம்
ஆடி மாசம்
எங்க மேல்மாந்தை தேவதைக்கு//
வேல் கண்ணனுக்கு சனங்களின் சாமிகள் என்கிற புத்தகம் கிடைக்குமிடம் Department of Folklore,St.Xaviers College,Tirunelveli-627002.பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனின் நாட்டார் வழக்காற்றியக் அரசியல் எனும் புத்தகம் பரிசல் வெளியீடாக வந்தது முகவரி கையில் இல்லை.ஊருக்குப் போனதும் பதிவிடுகிறேன்.பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதிய புத்தகங்கள் காலச்சுவடு பதிப்பகத்தில் கிடைக்கும்.என்னுடைய புத்தகம் இப்போது தீர்ந்துவிட்டது.வேறு புத்தகங்கள் பற்றி முழு விலாசத்துடன் மீண்டும் எழுதுகிறேன்.
what Mr.Anonymous said is correct.Sanscritisation என்று நாம் சொல்வது எப்போதும் ஒருவழிப்பாதை அல்ல அது மேலிருந்து திணிக்கப்படுவது மட்டுமல்ல.கீழே உள்ள மக்கள் விரும்பியும் ஏராளமான பார்ப்பன சடங்குகளை தங்கள் வழிபாட்டுக்குள் கொண்டு வருவார்கள்.it is natural.அதற்கு இந்துத்வா சக்திகளின் மீது பழிபோட வேண்டிய அவசியம் நமக்கில்லை.
ஆனால் திட்டமிட்ட முறையில் நாட்டார் கோவில் பூசாரிகளுக்குப் பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்து சங்கராச்சாரி போன்றவர்களை அதில் பங்கேற்க வைத்து நாட்டார் தெய்வ வழிபாட்டு மரபுகளெல்லாம் புனிதமற்றவை என்று அப்பூசாரிகள் தலையில் ஏற்றி எங்கள் கிராமங்களில் கொல்லப்பட்ட மனிதர்களான சாமிகளுக்குக் கும்பாபிஷேகம் நடத்திக்கொண்டிருக்கும் அந்த planned effort ஐ ஒருவர் கண்டிக்காமல் இருந்தால் அவர் நிச்சயம் இந்துத்வா ஆதரவாளர் அல்லவா?
அசைவக்கடவுளாக இருந்த நம் முருகனை சைவக்கடவுளான சுப்பிரமணியனாக மாற்றியது போன்ற பெருந்தெய்வக் குற்றங்களையெல்லாம் இன்னும் நாம் இங்கு பேச வேண்டியிருக்கிறது.
தற்கொலை செய்து கொண்ட எங்கள் “தீப்பாய்ஞ்ச அம்மன்” களையெல்லாம் சீதையோடு இணைத்து அப்பெண் தெய்வங்களையெல்லாம் ராமனின் சம்சாரமாக்கும் சதிகளைப் பற்றியெல்லாம் இன்னும் பேச வேண்டியிருக்கிறது.
இந்த இடத்தில் கவிஞர் மதிவண்ணனின் அற்புதமான கவிதை வரி ஒன்று நினைவுக்கு வருகிறது
“ சாதி மான்கள் சதித்துக் கொன்ற
மதுரை வீரனுக்கே
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமாம்
திண்ணியத்தில் மட்டுமல்ல
தினந்தோறும் தின்று கொண்டிருக்கிறது பீயை
என்சனம்”
we are not blaming the innocent Hindutva forces for tha natural course of sanscritisation but for their planned plots only.
ராஜா கிளம்பி வாங்க இப்பவே சாப்பிடலாம்.
உண்மைத்தமிழஃன் சொன்னது உண்மை.ஆனால் தெய்வங்கள் நமக்கு சந்தோஷம் கொடுப்பதற்காக இவற்றைச் செய்ய வில்லை.அதுக பாவம் எதுக்கு ஆகப்போகுதுக.மனுஷனின் படைப்புகள்தானே அவை.எல்லாம் அவன் செயல்தான்.அவன் என்பது மனிதனை. அது அவள் செயல் என்றும் கூறப்பட வேண்டும்.
மண்குதிரை சொன்ன அந்த நம்பிக்கை தரும் அம்சம் சாமிகளிடம் உண்டு என்பதாலும்தானே பக்தி தொடர்ந்துகொண்டிருக்கிறது.
nattupura theivangal
Avatrai naam vazhipadum muraigal
arumaiyaga sollapattirukkindrana
Neril paartha unarvu yerpadugirathu
//அசைவக்கடவுளாக இருந்த நம் முருகனை சைவக்கடவுளான சுப்பிரமணியனாக மாற்றியது போன்ற பெருந்தெய்வக் குற்றங்களையெல்லாம் இன்னும் நாம் இங்கு பேச வேண்டியிருக்கிறது.//
தென்னாடுடைய சிவன் "ஷிவா" ஆன கதையையும் இதனுடன் சேர்க்கலாமா?
//மதுரைவீர சாமியைப்போல சக்கிலிய குலத்தில் பிறந்து
உயர்சாதியான நாயக்கர் வம்சத்தில் பிறந்த பொம்மியைக் காதலித்த குற்றத்துக்காகக்
கொல்லப்பட்டவராகவோ இருக்கிறார்கள்.//
மதுரை வீரன் பற்றி மேலதிக விபரங்களுடன் பதிவிட முடியுமா?
//ராஜா கிளம்பி வாங்க இப்பவே சாப்பிடலாம்.//
இப்படி கூப்பிட்டா பொசுக்குன்னு கெளம்பி வர்ற தூரத்திலே நான் இல்லையே. ரியாத்லேர்ந்து வர்றதுக்குள்ளே கறிச்சோறு கஞ்சி ஆகிடுமே :-).
வேறு புத்தகங்கள் பற்றி எழுதுவதாக சொல்லி இருந்தீர்கள்.?? சீக்கிரம் ஐயா. காத்து கொண்டு இருக்கிறோம்.
மற்றுமோர் கேள்வி ஐயா! சிவகாசிப்பக்கம் ஈஞ்சார் நடுவப்பட்டி யில் வலை தொடர்பு எல்லாம் இருக்கிறதா??
ராஜா மற்றும் அழகுச் செல்வனுக்கு..
நடுவப்பட்டியிலும் வலைத்தொடர்பு கிடைக்கும்.
மதுரைவீரன் பற்றி அருணன் ஒரு நல்ல ஆய்வு செதுள்ளார் அதுபற்றி ஊருக்குப் போனதும் எழுதுகிறேன்.
பக்தி இயக்கம் என்பது தெற்கிலிருந்துதான் வடக்கே பரவியது.அது பற்றித் தனியாக ஒரு பதிவு எழுதலாம் பின்னர்.
அனேகமா எல்லாருக்கும் குலத்தெய்வம் என்பது இந்த சிறு தெய்வஙக்ளே.
இந்தப் பேரைத்தான் குழந்தை பிறந்த முதலிலும் வைப்பார்கள். பிறகுதான். ஷ், உஷ் எல்லாம்.
எனினும் சிறு தெய்வங்களை மேற்கொண்டு புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது இந்தப் பதிவு.
நன்றி
Thank u for taking our village to the world
Sankar Ganesh Devaraj
Naduvapatti
என் இனிய நடுவப்பட்டி மக்கள் என் வலைத்தெருவுக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிரது.நடுவப்பட்டிப்புழுதி இந்த வலைப்பக்கமெங்கும் பரவுக.
அமிர்தவர்ஷினி அம்மா சொல்வது ரொம்ப சரி.ஆனால் அம்மா சிறுதெய்வம் என்று சொல்லாதீர்கள்.அது ஒரு வசவு.சென்று நாம் சிறு தெய்வம் சேர்வேம் அல்லேம் என்பதுபோல சேக்கிழார் போன்ற பெருந்தெய்வ ஆட்கல் சிறுமைப்படுத்திச் சொன்ன சொல் அது.நாம் மக்கள் தெய்வம் என்ரே சொல்வோமே அம்மா.
ஈ.வே.ரா பிறப்பதற்கு முன் இங்கு எவனுக்கும் அறிவு இல்லை என்பது போலவும், அடிக்கடி நக்கல் நையாண்டி செய்தால் அவர் முற்போக்கு சிந்தனை உள்ள மொக்கைவாதி போலவும் உள்ளூர் பழக்கவழக்கங்களை பண்பாட்டுக் கூறுகளை அறிவின்பால், உணர்வின்பால், நெறிபடுதலின் பால், பண்பு பட்ட பண்பாட்டின் பால் எழுத அதை பின்பற்ற என்றைக்கு தான் இந்த ஆங்கிலேய குமாஸ்தா கூட்டம் முன் வருமோ? அதுவரை சதையால் இவன் தமிழன் மூளையால் இவன் ஆங்கிலேயன் தான். மண்ணின் மைந்தனாக இவன் என்றுமே ஆக முடியாது. முடியவே முடியாது. உங்களின் கட்டுரை அதற்கு ஆகச் சிறந்த எடுத்துகாட்டு.
Post a Comment