Wednesday, February 29, 2012

என் சக பயணிகள்-16 சமயவேல்

samayavel  உனக்கும் எனக்கும்

எனக்கும் அவனுக்கும்

இவனுக்கும் உனக்கும்

கடைசியில் ஒன்றுமில்லை

என ஆனது

அதனாலென்ன வாருங்கள்

டீ குடிக்கப் போகலாம்

என்றேன் நான்.

இதைவிட எளிமையாக நவீன கவிதை எவரிடமிருந்தும் வெளிப்பட்டதில்லை என்பேன்.வாழ்வின் இத்தனை சிக்கல்கள்-குழப்பங்களுக்கு மத்தியிலும் எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்கிறபடி உண்மை நமது இருதயத்துக்குள்ளேயே இருப்பதை நினைத்து நினைத்து சந்தோஷப்படுபவர் சமயவேல்.இத்தகைய எளிய மனத்தை அதன் பரிசுத்த வடிவில் அறிமுகப்படுத்தும் அவரது கவிதைகளும் எளிமையானவைதாம்.மிகுந்த எளிமை, மிகுந்த உண்மையை வேண்டி நிற்பதை எவரும் அறிவர் என்கிற அறிவிப்போடு அல்லது விளக்கத்தோடு (பிரகடனம் அல்ல) வெளியான அவரது முதல் தொகுப்பான காற்றின் பாடல் அன்று என் மனதின் இண்டு இடுக்குகளிலெல்லாம் புகுந்து என்னை மீட்டியது.இதையெல்லாம் கூட இப்படி எளிய வார்த்தகளில் சொல்லிவிட முடியுமா என்கிற பெருவியப்புடன் அன்றுமுதல் சமயவேலைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

இடைவிடாமல் தொடர்ந்து

காற்று பாடிக்கொண்டிருக்கிறது

அதன் ஒவ்வொரு பாடலிலும்

கோடி உயிர்கள் முளைத்தெழுகின்றன

அதன் ஒவ்வொரு வரியிலும் மரங்கள்

செடி கொடிகள் ஆனந்தக் கூத்தாடுகின்றன

.........

காற்றே உன் ஒப்பற்ற கருணையில்

காட்டு மூங்கிலோடு நானும் பாடுகிறேன்

கதவைத் தள்ளி அறைக்குள் நுழையும்

காற்றின் அன்பில் கரைந்து பாடுகிறேன்

எனது காற்று என்று இங்கே

எதனைக்கூறுவேன்

எனது பாடல் என்று இங்கே

எதைச் சொல்லுவேன்

எல்லாம் இங்கே காற்றின் பாடலே.

ஒரு புறாவை நாம் பறக்கவிட்டால் அது ஒரு வட்டமடித்துப் பின் திரும்பும்போது இன்னும் பத்துப்பறவைகளோடுதான் வீடு திரும்பும்.அது போல தம்பி கோணங்கி எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்த வண்ண வண்ணப் புறாக்களில் ஒரு புறாவாக எங்களுக்குக் கிடைத்த அரிய சொத்து சமயவேல்-எங்கள் எல்லோருக்கும் செல்லமான மாப்பிள்ளையாக.

ஓர் எளிய மனத்திலிருந்துதான் இத்தனை உண்மையும் அன்பும் அழகும் மிளிரும் கவிதைகள் வரமுடியும்.அதிகாலைப்பொழுதால் மன எழுச்சி கொள்ளும் மனம் சமயவேலுடையது.

கூரை முகட்டுப் பட்சிகளின் கரைதல்களுடன்

இமைகளைப் பிரித்து வாழ்த்துச் சொல்லும்

இளங்காலை

ஒரு உடம்பு முறுக்கலில் மெல்லவே பிரியும்

நேற்றின் அயர்வுகள்

என்று தொடங்கும் கவிதை குளிக்க சாப்பிட வேலைக்கென கலகத்துக்கு அழைக்கும் வாழ்க்கையை இன்றும் நேசிப்பேன் என்று முடியும்.இயற்கையின் வண்ணங்களான பொழுதுகளைக் கண்டு மனஎழுச்சி கொள்ளும் கவிமனம் அப்படியே பார்வையைத் திருப்பி மனித வாழ்வின் மீது செலுத்தும்போது எல்லோருக்குமான அன்பைப் பொழியும் மழையாகிவிடுகிறது.

இந்தக் கிராமத்துச் சாலையைப்போல

குழந்தைகளே

உங்கள் வாழ்க்கை குழப்பமற்று

இருக்கப் பாடுகிறேன்.

மறிக்கப்பட்டுக் கிடக்கிற

எங்கள் எல்லோர் வாழ்வுக்குள்ளும்

குருமலைக் காற்றே

நீ வீசுவாயெனப் பாடுகிறேன்.

முதல் தடவை இந்தக் கவிதையை நான் வாசித்த அந்த நாள் இன்னும் அப்படியே நடுக்கத்துடன் நினைவில் புதுசாயிருக்கிறது.குழந்தைகளே உங்கள் வாழ்க்கை இந்தக் கிராமத்துச் சாலையைப்போல ..என்கிற வரிகளில் மனம் கரைந்து அழுத ஈரம் இன்னும் என் விழி ஓரங்களில் பிசுபிசுக்கிறது.காலைப் பொழுதை விதவிதமாகப் பாடிய கவி சமயவேல்.

இப்பொழுது

நம்மில் எவரும்

ஒரு வார்த்தைகூடப் பேச வேண்டியதில்லை.

நம் எல்லோருக்குமாகச் சேர்த்து

பெரும் பேரழகுடன்

பேசிக்கொண்டிருக்கிறது

அதிகாலை

என்று ஒரு கவிதையிலும் ,பூத்துக்குலுங்கும் பயிர் பச்சைகளோடு பின் நிலவில் பூமியின் வனப்பு கூடக்கூட உதிப்பதை சூரியன் ஒத்திப்போட்டுக்கொண்டிருந்த ஒரு காலைப்பொழுதைக் கண்டு,

எல்லோரையும் எழுப்பி

எல்லாரோடும் சேர்ந்து

உரத்துப்பாட வேண்டும் அந்த

அதிகலையைப் போற்றிப் புகழ்ந்து வாழ்த்தி

வாயாரப் பாட வேண்டும்.—என்று பாடுவார்.

தன்னுணர்வற்ற எந்திர வாழ்க்கை வாழ்பவருக்கு இப்பூமியில் பிரச்னை ஏதுமிருக்கப்போவதில்லை. சுயபிரக்ஞை உள்ள மனிதனுக்கோ இருப்பே பிரச்னைதான்.எல்லாமே கேள்விதான்.சப்தமில்லாமல் அம்பாரமாய்க் குவியும் நாட்களில் நூற்றாண்டுகளை விழுங்கிய நாகரிகங்களின் அழுகலில் மூச்சடைத்துக் கிடக்கும் கவிமனம்

நேசர்களின் உலகம்

எந்த்த்தீவிலோ ஒளிந்துகொண்டது

ஆத்ம நண்பனை எங்கே?

நம்பிக்கை அவநம்பிக்கை

றெக்கைகள் இரண்டும் பிய்ந்து

எங்கோ விழுந்து கிடக்கிறேன்... என்று தவிக்கிறது.

சமயவேலின் கவிதைகளில் நான் காண்பது வெம்பூர் என்கிற ஒரு கரிசல் கிராமத்தின் எளிய மனிதனின் கள்ளமற்ற மனதை.பெருநகரத்து வாழ்விடுக்குகள் சிக்க நேர்ந்த அவ்வெளிய கிராமத்து மனதின் அதிர்ச்சிகளும் துக்கங்களும் விரக்தியும் நம்பிக்கையும் அவநம்பிக்கையுமே அவரது கவிதைகளாகி நிற்கின்றன.அவருக்கு ஒரு மழை நாளின் குளிர் இரவு இடம் பெயர்ந்த பெருநகர இருப்பில் ஒரு கனத்த துயரைச் செதுக்குவதாயிருக்கிறது.நவீன வாழ்க்கை ஏற்படுத்தும் அழிமான்ங்களை நினைவுபடுத்துவதாயிருக்கிறது,

வெகு காலத்துக்கு முன்பே நமது இசை

நமது வயல்களுக்குள் நுழைந்த

நெடுஞ்சாலையில் அடிபட்டு நசுங்கிப்போனது.

கரும்பாறைகளின் சதைகளில் பிய்ந்த

கிரானைட் மார்பிள்களின் அடியில்

மலைகளைப் புதைத்தார்கள்.

அழிந்தது அழிகிறது

கடந்தது கடக்கிறது

காலம் ஒரு பட்டுப்போர்வையை எடுத்து

எல்லாவற்றையும் அழகாக மூடிவிடுகிறது

நகரத்து வாழ்வில் நாட்களின் வேட்டையில் சிக்கி விடாமல் காட்டில்; திசையற்று ஓடும் சிறுமானாகத் தன்னை உணரும் சமயவேல் அலுவலகங்களை விட மருத்துவமனை பிடித்திருக்கிறது வீட்டை விட அழுக்கு வீசும் விடுதி அறைகளில் விரும்பித் தங்குகிறேன்.கட்டணக்கழிப்பிடங்களின் பேரழகு குறித்து வாசகர் கடிதம் எழுதுகிறேன் என்று மனம் மயங்கிப் பிறழ்கிறார்.என்னை என்ன செய்வதென்று தெரியவில்லை என்றும் ஒரு முக்குக் கல் கூட திசை காட்டி இயங்க உயிர் நிரம்பிய நானோ வெறும் கல்லானேன் என்றும் மண் சுமப்பதும் சுமந்து முடிந்து உண்பதுமாக்க் கழிகிறதே நாட்கள் என்றும் இந்த வாழ்வின் அந்நியமாதலைப் பாடிச் சலிக்கிறார்.ஆனாலும் சமயவேலிடம் எனக்குப் பிடித்தது இந்த வாழ்வின் மீது அவர் கொள்ளும் நேசம்.

இவ்வளவுக்குப் பிறகும்

நான் இந்த பூமியில்

இருக்கத்தான் விரும்புகிறேன் .

அதுதான் என் சாராம்சம்.

சமயவேல் கவிதைகளிலேயே என்னை மிகவும் அலைக்கழித்த கவிதை என்று எங்களுக்கு ஒரு அறை இருந்தது என்கிற கவிதையை நான் குறிப்பிடுவேன்.மணமாகாத காலத்தில் இளைஞனாக வாழும் பருவத்தின் நம் மனம் கொண்டிருக்கும் விசாலம் மணமாகித் தன் வீடென்று அடையும் போது சுருங்கிபோவதை இத்தனை வலியுடனும் துல்லியமாகவும் யாரும் சொன்னதில்லை.நம் நடுத்தர வர்க்க வாழ்க்கையின் முகத்திலடிக்கும் கவிதை இது என்பேன்.

ஆசிரமம் தெருவில்

எங்களுக்கு ஒரு அறை இருந்தது

நகரத்தில் எதனிடமும் ஒட்டுப்பட முடியாமல்

கூரைகளுக்கு மேல் மிதந்த

மிகச்சிறிய அறை அது

.......

நண்பர்கள் கூடக் கூட

அறை அகன்று விரிந்தது ஒருவர் பாயில்

மூவர் தரையில் இருவர் சேரில்

படியில் மூவர் நியூஸ் பேப்பரில் இருவர் எனத்

தாறுமாறாய்ப் படுத்து

இரவுகளைக் கடந்தோம்

அறையை விட்டுக் கிளம்பி

குடும்பம் கட்டியிருக்கும் நாங்கள்

வீட்டையும் அறையையும் இணைக்க முடியாமல்

திணறிக்கொண்டிருக்கிறோம்.

எளிமையும் நேரடித்தன்மையும் கொண்டு மனசைக் கதிக்கத் தாக்கும் கவிதைகளை வாசித்து விட்டு சமீபத்திய அவரது சிறுகதைத் தொகுப்பை ( இனி நான் டைகர் இல்லை-உயிரெழுத்து வெளியீடு)க் கையில் எடுத்தபோது ஏமாற்றத்தில் மனம் தடுமாறுகிறது.கதை மொழியில் சிக்கலில்லை.ஆனாலும் கவிதையில் தரிசித்த அந்த மனம் கதையில் இல்லை.அதர்க்க வெளியில் சஞ்சாரிக்கும் பல கதைகள் எனக்கு ஆயாசத்தை ஏற்படுத்தின.உடல் மொழியும் உயிர் இசையும் கதை மட்டும் என் நெஞ்சைப் பிளந்து கதற வைத்தது.என்ன ஒரு கதை அய்யா!பச்சை மரகதக் கல்கிளியும் முக்கியமான கதையாகிறது.மற்றபடி மற்ற கதைகள் மனசைத் தொடலியே மாப்ளே.

சமீபத்திய கவிதைத்தொகுப்பான மின்னிப்புற்களும் மிதுக்கம்பழங்களும் நூலின் முதல் கவிதையாக அமைதி படர்ந்த அதிகாலைத் தெருவைப் பற்றிய வரிகளைக்கண்டு மனம் குதூகலித்தேன். கவிதைக்குள் அதே குருமலைக் காற்று வீசிக்கொண்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது.தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் குணமில்லாத எளிய மனிதர் சமயவேல்.என மனதுக்கு மிக மிக நெருக்கமான கவிதைகளைத் தந்த கவிஞன் ..தமிழில் பெரிய அளவுக்கு கண்டுகொள்ளப்படாமல் பேசப்படாமல் கொண்டாடப்படாமல் அது பற்றி எந்தக் கவலையும் கொள்ளமல் இன்றுவரை உற்சாகத்துடன் இயங்கிக்கொண்டிருக்கும் படைப்பாளி சமயவேல்.உயிர்மை பதிப்பகமும் ஆழி ப்ப்ளிசர்சும் அவ்ருடைய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளனர்.

நேசம் விதைத்த காட்டில்

நெருப்பு முளைத்தாலும்

பிடுங்கி எறிந்து விட்டு

உழுது விதை விதைப்பேன்

தத்துவங்கள் வீழட்டும்

தேசங்கள் சிதறட்டும்

உலகம் எதையும் பிதற்றட்டும்

பசித்தவர்கள் பக்கமே என்றும்

நான் இருப்பேன்.

என் சக பயணிகள்-15 சுகுமாரன்

 sukumaran

எல்லோரையும்போல ஆதியில் எனக்கும் வாழ்க்கை கவிதையாகத்தான் துவங்கியது.நான் இங்கு நம் பால்ய காலம் பற்றிப் பேசவில்லை.எழுத்து வாழ்க்கையின் தொடக்கத்தைச் சொன்னேன். வாழ்க்கையின் போக்கில் நதியின் ஓட்டத்தால் தேய்படும் கூழாங்கல்போல மனம் மந்தப்பட்டு மந்தப்பட்டுக் கவிதையை இழந்தேன்.தாக்குப்பிடித்துக் கவிதையை இழக்காதவர்கள் பாக்கியவான்கள்.பழைய சட்டையோடு நிற்கும் சிறுவன் புதுச்சட்டை போட்ட சக நண்பர்களைப்பார்ப்பதுபோல ஒரு பொறாமையோடு அவர்களைப் பார்க்கிறேன்.

நான் கவிதை எழுதுவதை ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டாலும் எனக்கான கவிதைகளை எழுதுகிறவர்களாகச் சிலரை நான் பின் தொடர்கிறேன்.நம் மனசிலிருந்து வந்த வார்த்தைகளைப்போல அக்கவிதைகள் நம் கையிலிருக்கும் புத்தகத்தில் இருந்தால்?அப்படி என் மனதுக்கு நெருக்கமான மனதாக எப்போதும் சுகுமாரனை உணர்வேன்.மனித வாழ்க்கையின் அர்த்தம்-சாராம்சம் குறித்த நிரந்தரமான கேள்விகளைச் சதா எழுப்பியபடி நகரும் அவரது எழுத்து அதீத மனநிலைகளில் நின்று அதீதங்களுக்கிடையில் நகரும் அன்றாட வாழ்வைப்பற்றிப் பேசுபவை.’மழைநீர் வேருக்குள் பரவுவதைப்போல’நீண்ட நெடும் தமிழிலக்கியப் பாரம்பரியத்தை நுட்பமாக உள்வாங்கிய கவிஞர் அவர்.ஒவ்வொரு பருவத்திலும் எனக்கான கவிதைகளை வழங்கி வரும் கவிஞராக அவர் இருக்கிறார்.

அன்று 80களில் என் 30 வயதுக்காலப் பருவத்தில் ,

”வலுவற்றது

ஆயிரம் வருடக்களிம்பேறிய என் கைமொழி

உன் பிரியத்தைச் சொல்ல..”

“எளிமையானது உன் அன்பு

நடு ஆற்றில் அள்ளிய தண்ணீர் போல”

போன்ற சுகுமாரனின் வரிகளில் சிக்கிய துடிக்கும் இதயமாக இருந்தேன்.பின்னர் என் வாழ்வின் ஓட்டத்தில் நான் உணர்ந்த்தையே அவர் இவ்விதமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்:

ஒரே வீட்டில் வாழ்கிறோம் நாம்

ஒரே வீட்டில் வாழ்ந்தாலும்

ஒரே வீட்டிலும்

ஒவ்வொரு வீட்டில் வாழ்கிறோம்.

..........

என் வீட்டுக்கதவு வழியாக

நீ நுழைய முடிவதில்லை

உன் வீட்டுக் கதவு வழியாக

நானும்.

நாம் வீடுகளில் வாழ்கிறோமா?

அல்லது

வீடுகளின் காவலில் இருக்கிறோமா?”

உடம்பின் கூக்குரல் காமமெனில் மனதின் சைகைதான் காதலா? என்கிற கேள்வியை வீசி நான் இரண்டு முறை பெண் வசப்பட்டவன் -உடம்பாக ஒரு முறை மனதாக ஒருமுறை என்கிற வாக்குமூலம் தந்து பெண் என்பவள் உடம்பின் கோஷமோ மனதின் நிசப்தமோ அல்லவென்று கற்பித்தவள் நீ என்று பயணித்து அவளிடம் கற்ற பாடத்தைச் சொல்லி நிறைவுறும் கவிதையின் கடைசி வரிகள்:

“வண்ணத்துப்பூச்சியெனில்

உடல் மட்டுமல்ல

சிறகு மட்டுமல்ல

காற்றும் “ நவீன குடும்ப வாழ்வின் சாரமாக இக்கவிதைகளின் வரிகள் நமக்குள் இறங்குகின்றன.

சமூகமாற்றத்துக்கான கனவுகளுக்கும் யதார்த்தத்துக்குமான பெருத்த இடைவெளியில் மனம் துவளும் நேரங்களிலெல்லாம் என்னைத் தூக்கி நிறுத்தும் வரிகள் இவை:

நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதை விட

பற்றி எரிவது மேல்

ஒரு கணம் எனினும்

கம்பிமேல் நடக்கும் கூத்தாடியின் கை மூங்கிலைப்போல நான் வாழ்வில் இடறி விழும்போதெல்லாம் தூக்கி நிறுத்தும் நம்பிக்கையாக சுகுமாரனின் பல கவிதைகள் என் கைப்பிடிக்குள் வலுவாக நிற்கின்றன.

ஓர் இசைக்கலைஞனாகிவிட ஆசைப்பட்டு முயன்று ”நான்- பிராமின்ஸ் ”ஆனதால் அது நடக்காமல்போய் பாதுகாப்பற்றது வெளி –பரிவில்லாதது வீடென்று கவியெழுத வந்தவர் அவர்.அவரால் பாட முடியாத ராகங்களும் இசைக்க முடியாத தாளங்களும் ததும்பி வழியும் ஆலாபனைகளாகவே அவரது எழுத்துக்கள் நம் மனவெளிகளை நிறைத்துக்கொண்டிருக்கின்றன.இசை பற்றிய குறிப்பில்லாத கவிதை இல்லை என்று சொல்லும்படியாக அவரது வரிகள் நம்முன் விரிந்து கிடக்கின்றன:

தற்கொலைக்கு முயன்று சாகத்தவறிய தருணம் பற்றிய வரிகள் இவ்விதமாக

“மனம் அலைகளடங்கி அமைதியானது

நினைவில் புதைந்த இசை

வெளிப்பட்டுத் ததும்பியது

மனம் அலைகளடங்கி அமைதியானது “ என்கிறார்.

1.“மனச்சுவரில் இடையறாது கசியும்

ராகத்தின் கீற்றை நினைவுறுத்திப் பறக்கும்

மஞ்சள் மூக்குப் பறவை”

2.“சில சமயம்

சகல துக்கங்களையும் இறைக்கும் சங்கீதம் போல”

3.சில புத்தகங்கள்

சில நினைவுகள்

காயங்களில் தடவிக்கொள்ள மருந்து தரும் இசை யந்திரம்

4.வேட்டைநாய் விரட்டல்,

இளைப்பாறுதலின் சங்கீதம் என

அகல்கிறது நாட்களின் நடை

5.வெளிச்சம் அகன்றதும் நிசப்தம்

சங்கீதம் உறைந்த்தும் இருள்

..........

இன்னொரு மின்தடை இரவில் மின்மினிகள் மறுபடியும் அப்போது நீங்களும் வருக கேட்டால் விழிமயக்கும் அந்த அற்புதக் கச்சேரியைப் பார்த்து மகிழலாம் என்று இசையைப் பார்க்கவும் ஒளியைக் கேட்கவும் அழைக்கிறார்.

இசைக்கலைஞர்களுக்கென எழுதப்பட்ட கவிதையான ’இசை தரும் படிமங்கள்’ இவற்றிலெல்லாம் உச்சமான வரிகளைக்கொண்டு மிளிர்கிறது. விரல்களில் அவிழ்ந்தது தாளம் -புறங்களில் வீசிக் கசிந்தது குரல் என்று ஹரிக்கும் ஸ்ரீனிவாசனுக்கும் புல்லாங்குழல் சகல மனிதர்களின் சோகங்களையும் துளைகளில் மோதிற்று என்று ஹரிபிரசாத் சௌராஸ்யாவுக்கும் எனக்கு மீந்தன கண்ணீரும் சிறகுகளும் இசை திரவமாகப் படர்ந்து உருக்க செவியில் மிஞ்சியது உயிர் என்று ஸாப்ரிகானுக்கும் அற்புதமான வரிகளைச் சமர்ப்பணம் ஆக்கியுள்ளார் சுகுமாரன்.

தற்கொலைக்கு ஒரு முறை முயற்சித்துள்ள சுகுமாறன் எல்லோரும் ஒருமுறையேனும் தற்கொலை பற்றி மனதளவிலாவது யோசித்திருப்பார்கள் என்று நம்புகிறார்.(நான் இருமுறை யோசித்திருக்கிறேன் இந்த 57 வயதில்)பல கவிதைகள் தற்கொலை மனம் தடுமாறுவதும் மரணத்தை முன்னிறுத்தி வாழ்வோடு உரையாடல் மேற்கொள்வதுமாகப் பயணிக்கின்றன.எனினும் அவர் அவநம்பிக்கைவாதியல்ல வாழ்வை நேசத்துடன் இறுகக்ட்டிக்கொண்டு கதறும் கவியாகவே நான் உணர்கிறேன்.

”வெளியில் போகிற எப்போதும்

காயம்படாமல் என் கிளி திரும்பியதில்லை

இதோ உன்னிடமிருந்தும்

ஆனால் அலகில் நீ பரிசளித்த நெற்கதிர்”

“விரல்கள் மழுங்கிய தொழுநோயாளி முகந்த

ஓட்டைக்குவளை நீர் –இந்த வாழ்க்கை

.........

எனினும்

முதுகை இறுக்கும் பாறைகளின் கீழ்

ஊன்றி நிமிரப் போதும்

வெறும் கையகல நம்பிக்கை”

“இங்கே

இருளின் மௌனம் புலம்புகிறது

காத்திருப்போம்

நாளை அல்லது நாளை அல்லது நாளை

ஒளியின் புன்னகை விடியும்”

“நீரில் மரணம் இனிது

அதனினும் இனிது

நிலத்தின் வாழ்வு”

என்று நிலத்தின் மீதான இவ்வாழ்வுக்கான போராட்டமே இப்பயணம் என்பதை முற்றாக உணர்ந்த கவி சுகுமாரன்,

“சிதிலங்களிலிருந்து ஊற்றெடுக்கும் எனது பாடல்

காயங்களின் இரும்பு நெடி வீசும் எனது சொற்கள்.

கசப்புப் பழங்களே விளையும் எனது சமவெளிகள்....

இங்கிருந்து புறப்பட வேண்டும் நான்

போராட்டம்-

எனினும் பயணமே நமது ஆறுதல்”

ஜூலை 1983 இல் அவர் எழுதிய இவ்வரிகள் அழிக்க முடியாத துயரத்தின் பதிவாக இன்றைக்கும் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் மனம் கதற வலி தரும் வரிகளாக...

இன்று

பூக்களும் பறவைகளும் குழந்தைகளின் புன்னகைகளும்

பெண்களும் எரிந்து போயினர்

உறுப்புகள் வெட்டப்பட்டவர்களின் குரல்கள்

வெளிகளில் தடுமாறுகின்றன

பிணங்களின் நடுவில் நொறுங்கும்

புத்தனின் மண்டையோட்டிலிருந்து கழுகுகள் அலறுகின்றன.

ஒரு பத்திரிகயாளராக நீண்ட காலம் பணியாற்றக்கிடைத்த வாய்ப்பை முடிந்தவரை தன் கலைவாழ்வுக்கு உதவும் விதமாகவும் மாற்றியமைக்கப் போராடிய வாழ்க்கை அவருக்கு.இலக்கியத்தைத் தீவிரமான செயல்பாடாகக்கருதும் ஒரு மரபின் தொடர்ச்சியாகத் தன்னை உணரும் அவர் ’கோட்பாடுகளல்ல: படைப்பின் மர்ம்மும் அது தரும் நிறைவும் அது வாழ்வனுபவமாகும் ரசவாதமும்தான் முக்கியம் ’என்கிற இலக்கிய வழியில் பயணம் செய்பவர். ஆனாலும் அவர் சொல்லும் “ ஓர் அர்த்தத்தில் இலக்கியத்தின் கடமைகளில் ஒன்று உலகியல் தளத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியாத உணர்வை உளவியல் தளத்தில் பூர்த்தி செய்து கொள்ள மனித மனத்தை அனுமதிப்பது கூடத்தானே?” என்கிற இவ்வார்த்தைகளும் கோட்பாடுகள் கொண்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கொள்கை அறிக்கை சொல்லும் “ யதார்த்தத்தின் –சமகால வாழ்வின் -குறைகள் நீக்கிய –இன்னும் சிறந்த வாழ்வை நோக்கிய பயணமே படைப்பின் லட்சியம்”என்கிற வார்த்தைகளும் ஒரே அலை வரிசையில் இருக்கின்றன.

சமீப ஆண்டுகளாக இலக்கிய இதழ்களில் அவர் நிறைய பத்திகள் எழுதுகிறார்.பத்திரிகைகளின் தேவையை ஒட்டிப் பல்கிப் பெருகிவிட்ட இந்தப் பத்தி எழுத்துக்களில் ஜீவனுள்ள பல கட்டுரைகளைப் படைத்தவர் சுகுமாறன்.அவரையும் அவருடைய மன உலகையும் அவருடைய கவிதைகளையும் இன்னும் நெருக்கமாகப் புரிந்து கொண்டு அனுபவிக்க இக்கட்டுரைகள் பேருதவியாக அமைகின்றன.அறுபதாயிரம் காதல் கவிதைகளும் உதிரியான சில குறிப்புகளும் என்னும் கட்டுரையும் பெண் கவிதை மொழி என்னும் கட்டுரையும் நவீன தமிழ்க்கவிதை உலகைப் புரிந்து கொள்ள உதவும் திறவுகோலாக அமைந்துள்ளன.நான் மிகவும் போற்றும் பேராசிரியர் நா.வானமாமலையின் புதுக்கவிதைகள் குறித்த பார்வையை சுகுமாறன் நிராகரித்தபோதும் என்னால் சுகுமாறனின் ஒருவரியையும் நிராகரிக்க முடியவில்லை.நவீன கவிதையின் பின்புலம் நடுத்தர வர்க்க மனோபாவத்திலிருந்து உருவானது என்கிற அவரது கணிப்பு மிகச்சரியானது.

இலக்கியங்களைப் படிப்பதற்காகவே அவர் விரும்பிக்கற்ற மொழியான மலையாளம் அவருக்கு நிறையக் கொடுத்திருக்கிறது--பெருமைகளையும் குற்ற மனதையும் புதிய திறப்புகளையும.தனியாக அலைவதற்கும் தப்பிச்செல்வதற்குமான வேட்கயுடன் அவர் தமிழகமெங்கும் அலைந்து திரிந்த அனுபவங்கள் இக்கட்டுரைகளின் கவித்துவமிக்க பக்கங்களாக அமைந்துவிட்டன.அவரது கட்டுரைகளில் ஆகச்சிறந்த கட்டுரையாக ஜே.கிருஷ்ணமூர்த்தி பற்றிய தனிமையின் வழி அமைந்துவிட்டது.கவிதைகள் எழுத்த்துவங்கிய என் கல்லூரி நாட்களில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டிருந்தேன்.ஆங்கிலத்தில் வெளியான அவருடைய அத்தனை நூல்களையும் -மேரி லுடியன்சின் அவேக்கனிங் இயர்ஸ் மற்றும் அவரே கைப்பட எழுதிய குறிப்புகள் உட்பட- வாங்கிப் படித்து அவரோடு சேர்ந்து மனம் அசைந்துகொண்டிருந்திருக்கிறேன்.மணல் மேட்டில் கட்டிய அழகிய வீடென்றும் நவீன அத்வைதிதான் அவரென்றும் சரியான விமர்சனங்கள் அப்போதே வந்திருந்தபோதும் அவருடைய வார்த்தைகள் மீது நான் கொண்டிருந்த மையல் இன்றும் அழியவில்லை.அதனால் இன்னும் கூடுதல் ஈர்ப்போடு சுகுமாறனோடு நடக்க முடிந்தது.வாழ்க்கை மீதான வர்ணனைகள் என்ற ஜேகேயின் பிரசித்தமான நூல் தொகுதிகளை வாசிப்பதற்காக வெல்லிங்டன் ஆற்றங்கரையைத் தேர்ந்தெடுத்திருந்தேன் என்று துவங்கும் தனிமையின் வழி கட்டுரை உரைநடை இலக்கியத்தின் உச்சமான சாத்தியங்களைத் தொட்டுவிட்ட கட்டுரை என்று சொல்லுவேன்.(மேகங்கள் நகர்வதை உடல் உணர்ந்து கொண்டிருந்தது...என்ன அனுபவம்..என்ன பதிவு!)

சத்யஜித்ராய்,எம்.டி.ராமனாதன்,மதுபாலா,நௌஷத் பற்றிய கட்டுரைகளெல்லாம் கண்களில் நீர் வழிய நான் வாசித்த கட்டுரைகள் என்பேன்.

’புராணப் பிசுக்கேறிய உன் தாலிக்கயிற்றின் முடிச்சு’

‘பறவை நிழல் தரையைக் கடக்க..’

‘மரங்கள் இலைக்குரலில் நலம் விசாரிக்கும்’

‘மலை-ஒரு உன்னதம்.பயணம்-ஒரு போராட்டம்’

‘பிச்சைக்காரியின் ஒடுங்கிய குவளையில் சரித்திரம் கெக்கலிக்கும்’

என சுகுமாறனின் எத்தனையோ வரிகள் என் வாழ்நாள் முழுதும் கூடவே ஓடி வந்துகொண்டிருக்கின்றன..

அவருடைய பூனை கவிதை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.நாய்களை விட எந்தக்கடவுளுக்கும் வாகனமாயில்லாத பூனையின் சுதந்திரம் எனக்கும் எல்லோருக்கும் வாய்க்கட்டும்..

பூனை கண் மூடினால்

இருண்டு விடும் உலகம்

நானும்

கண் மூடுகிறேன்

‘மியாவ்’

பி.கு. அவருடையபடைப்புகள் உயிர்மை பதிப்பகத்தில் கிடைக்கும்

என் சக பயணிகள்-14 பா.செயப்பிரகாசம்

 jp

எங்கள் கரிசல் மண்ணின் கதைகளை எங்களுக்கு முன்பாக உணர்ச்சிக்கொந்தளிப்புடன் சொன்ன எங்கள் முன்னோடி பா.செயப்பிரகாசம். நானறிய 9 சிறுகதைத் தொகுப்புகளும் ஐந்து கட்டுரைத்தொகுப்புகளும் இரண்டு கவிதைத்தொகுப்புகளும் என வளமான பங்களிப்பை -பெரிய இடைவெளியோ மௌனமோ இன்றித் தொடர்ந்து –படைப்புலகில் நிகழ்த்தியவர் –தந்தவர் ஜேபி என நண்பர்களால் அன்போடு அழைக்கப்படும் பா.செயப்பிரகாசம்.பங்களித்த அளவுக்கு அவர் கொண்டாடப்பட்டதில்லை.நல்ல படைப்பாளிகள் எல்லோருக்கும் இங்கு நடப்பது இதுதானே.

எங்கள் கோவில்பட்டியிலிருந்து வந்துகொண்டிருந்த, அண்ணாமலை நடத்திய நீலக்குயில் இதழில்தான் அவ்ருடைய கதையை முதன் முதலாகப் படித்த நினைவு.வேரில்லா உயிர்கள் என்கிற கதை.என்னை முற்றிலுமாக உலுக்கிப்போட்ட கதை.அது 1973 அல்லது 1974 ஆக இருக்கலாம்.அந்த நாட்களில் ரிக்கார்டு டான்ஸ் என்ற பேரில் தமிழ் நாட்டில் பட்டி தொட்டியெல்லாம் சினிமாப் பாட்டுக்குப் பெண்களை ஆபாசமாக ஆடவிட்டு ஊர்கூடிப் பார்க்கும் பழக்கம் இருந்தது.70களில் அது முற்றிலுமாக அரசால் தடை செய்யப்பட்டது.அப்போது நகர்ப்புறங்களில் நடக்கும் பொருட்காட்சிகளிலெல்லாம் இந்த டான்ஸ் கொட்டகை ஒன்று இருக்கும்.கிராமப்புறங்களில் கோவில் திருவிழாக்களிலெல்லாம் ரிக்கார்டு டான்ஸ் போட்டுவிடுவார்கள்.பெரும்பாலும் மதுரையிலிருந்து ஆட்டக்காரிகளை அழைத்து வருவார்கள்.அதில் சிறப்புப் பட்டம் பெற்ற பெண்களும் இருப்பார்கள்.மதுரை ரவுடி சரோஜா என்கிற பெண் எங்கள் ஊர்ப்பக்கம் ரொம்ப பிரபலம்.அப்படிப் பெண்களைப்பற்றிய கதைதான் வேரில்லா உயிர்கள். அற்புதமான வரிகளால் சொல்லப்பட்ட கதை.

அந்த ஆட்டம் பார்க்க ராத்திரிகளில் ஒளிந்து வரும் ஊர்ப்பெரியவர்கள் பற்றி அவர் சொல்லுவார் “ தனிச்சொத்தைப் பாதுகாக்கப் பழக்கப்பட்டதைப்போலவே, தங்கள் பெண்டு பிள்ளைகளின் நிர்வாணத்தை அவர்கள் பாதுகாத்தார்கள்.பொதுச்சொத்தை நிர்வாணமாகப் பார்க்க அவர்கள் ஆசைப்பட்டார்கள். பொதுச்சொத்தை அனுபவிப்பதற்கு அவர்களுக்கு எந்தத்தடையும் தேவையில்லாமலிருந்தது”

பல்வேறு மனக்குழப்பங்களில் கிடந்த அந்த 20 வயதில் நான் வாசித்த இந்த வரிகள் என் முகத்தில் அறைந்தன.மனதைக் கிழித்து அழுக்குகளைப் பெருக்கித் தள்ளின என்பேன்.மீண்டும் 2005 இல் கனையாழியில் இதே போல ஒரு கதை ஆட்டம் என்கிற பெயரில் எழுதியுள்ளார்.ஆண்களின் மன வக்கிரங்களை தோலுரித்த இன்னொரு கதை அது.இதுப்பொல ஆபாச நடனம் நடப்பதாக்க் கேள்விப்பட்டுப் பழைய திரையரங்கிற்குப்போனவர்கள் ஆட்டம் கேன்சல் என்று அறிவிக்கப்பட்ட்தால் ஆத்திரத்துடன் பெஞ்சுகளை உடைத்துப்போட்டுவிட்டு கூட்டமாக வெளியேறும் காட்சியை அக்கதையில் வர்ணிக்கும் இடம் முக்கியமானது.

“கூட்டத்தில் முன்னேறி படிக்கட்டில் நின்று பார்த்தார்.இங்கிருந்து பார்த்தபோது கையில் விளக்குமாறுடன் ஒரு பெண் எதிரில் நிற்பது தெரிந்தது. ஒரு பெரிய சண்டைக்களத்தை உண்டாக்கக் காத்திருப்பதுபோல் காளி ரூபத்தில் நின்றாள்.

“இன்னைக்கு வரட்டும் ,இருக்கு ஒனக்கு வெளக்கு மாத்துப் பூசை”

கையில் விளக்குமாற்றை உருட்டிக்கொண்டே பேசினாள்.

“யாரைத்தேடுற?”

வெளியில் நின்ற பெரியவர் கேட்டார்.அவர் இசைத்தட்டு நடனம் பார்க்க வந்தவராகத் தெரியவில்லை.எசகு பிசகாய் ஏதோ நடந்திருக்கிறது என்று கேள்விப்பட்டு வந்திருக்க வேண்டும்.

“வேற யார? எம் மாப்பிள்ளையைத்தான்”

அந்தப்பெண் மாப்பிள்ளை என்றது அவள் வீட்டுக்காரனை.முகம் செவ செவ என்று ரத்த நரம்புகள் ஏறிக்கனன்றது.தூக்கிப் பிடித்த விளக்குமாறுடன் அவள் நின்றபோது அரங்கிலிருந்து வெளியேறுகிற ஒவ்வொருவரும் அடி வாங்கியதுபோல முகம் ‘சுரீச்சி’ வெளியேறினார்கள்.

“அப்படியே எல்லோருக்கும் பொறத்தாலே நாலு போடு போட்டு அனுப்பு “என்றார் பெரியவர்.

”ஏன் முன்னாலே போட்டா ஆகாதா?”

இக்காட்சி பூடகமாகவும் நுட்பமாகவும் ஆண் வாசக மனதில் அதிர்வுகளை ஏற்படுத்துபவை.ஜேபியின் ஒவ்வொரு கதையும் அழுத்தமான வார்த்தைகளோடு பிசிறற்ற குரலில் வாழ்க்கையைப் பேசுபவை.ஒரு சுவாரஸ்யமான துவக்கத்துக்காக ஆட்டம் கதையில் ஆரம்பித்துவிட்டேன்.உண்மையில் பா.செ.யின் அடையாளம் ‘ கரிசல் கிராமத்தின் காற்றுப்போல் நிறைந்திருந்த வறுமை’யை கொந்தளிக்கும் குரலில் பேசியவர் என்பதே ஆகும்.

அப்புறமாக அவருடைய எழுத்துக்களைத் தேடித்தேடி வாசிக்கத்துவங்கினேன்.அம்பலகாரர் வீடு என்கிற கதையையும் ஒரு ஜெருசேலம் கதையையும் படித்துவிட்டுக் கதறி அழுதிருக்கிறேன்.தன் அம்மாவைப் புதைத்த இடத்தில் முளைத்த கோரைப்புற்களைப் பிடுங்கும் சிறுவனை அவனை விடச் சிறுவனான இவன் அங்கே புல் புடுங்காதே அது எங்க அம்மா செத்த இடம் என்று கதறும்போது நம்மால் தொடர்ந்து வாசிக்க முடியாது. அழவைத்து வாசகனைச் செயலிழக்கச் செய்யும் கதைகளல்ல ஜேபியின் கதைகள்.ஆழப்பாய்ந்து நம்மைப் புரட்டிச் செயலுக்குத் தூண்டுபவையாகவே அவருடைய கதைகளெல்லாம் இருக்கின்றன.

தனிப்பட்ட வாழ்க்கையைச் சொல்லும் கதையானாலும் அதைப் பொது அரசியலுடன் இணைக்கும் மாயவித்தை கைவரப்பெற்ற தமிழ்ப்படைப்பாளியாக எப்போதும் பா.செ அவர்களை நான் வியப்போடு பார்ப்பேன்.என் மனம் அவருடைய கதைகளின் பின்னால் இழுபட இன்னொரு முக்கிய காரணம் என் கதைகளில் போலவே அவருடைய கதைகளிலும் எங்கும் அம்மா இல்லாத பிள்ளைகள்,அப்பா இல்லாத பெண்மக்கள் என வளர்க்க ஆளில்லாத துக்கத்தை முகத்தில் ஏந்தி நிற்கும் இளம் மானுடத்தைக் காணமுடிவதுதான்.இது எங்கள் கரிசல் மண்ணுக்கே சொந்தமான சோகம் போலும்.கு.அழகிரிசாமியின் பல கதைகளிலும் இதைக் காணலாம்.

பா.செ.யின் ஆரம்பக்கதைகளின் மொழி குறித்து அவருக்கே பின்னர் விமர்சனம் இருந்ததாக-அவர் எதிலோ சொன்னதாக ஞாபகம்.திராவிட இயக்கத்தாரின் மேடைச் சொல் உருட்டுகளில் சற்று மயங்கியிருந்தேன் என்று சொல்லியிருந்தார்.ஆனால் ஒரு வாசகனாக நான் அப்படி எப்போதும் உணர்ந்த்தில்லை.இப்போது அவருடைய எல்லாக்கதைகளையும் ‘ஒரே மூச்சில்’ வாசித்தபோதும்கூட மொழி இடையூறாக இருக்கவில்லை.செறிவையும் அடர்த்தியையும் அதிகப்படுத்துவதாகவே உணர்கிறேன்.கதை மாந்தர்களின் வாழ்க்கை பள்ளத்திலும் எனது மொழி நடை மேட்டிலும் இருப்பதாகக் காண்கிறேன் என்று அகரம் வெளியிட்ட அவரது கதைத்தொகுப்பின் என்னுரையில் அவர் குறிப்பிடுகிறார்.ஆனால் வாசக அனுபவம் அப்படி இல்லை.

“வறுமை வயிற்றின் கதவுகளைத் தட்டுகிறபோது,எல்லா அசிங்கங்களையும் ஏற்றுக்கொள்கிற மேன்மை வந்துவிடுகிறது.எல்லாத் திசையும் இருண்டிருக்கிறபோது, நம்பிக்கையுடன் கால் பதிக்கிற திசையும் பள்ளமாகி விடுகிறது.” என்பது போன்ற வார்த்தைகள் எத்தனை அனுபவமும் துயரமும் ததும்பி நிற்கும் வார்த்தைகள்.இந்த வரியே ஒரு கதையாகி இருளின் புத்ரியான அமுதாவை அதோ அந்த இருளடைந்த வீட்டில் யாருடைய வருகைக்காகவோ காத்திருக்க வைத்திருக்கிறது.கைவிடப்பட்டவர்களின் கதைகளை அதிகமாக எழுதிய தமிழ் எழுத்தாளர் இவர்தானோ என்று இக்கதைகளையெல்லாம் ஒருசேர வாசித்தபோது தோன்றியது.சமூகம் கவனிக்கத்தவறியவற்றை அதே சமூகத்துக்கு உரத்த குரலில் உணர்ச்சியோடு உறைக்கும் விதமாகச் சொல்பவன்தானே கலைஞன்? பா.செயப்பிரகாசம் ஒரு மகத்தான கலைஞன்.

சூரியதீபனாக அவர் எழுதிய கதைகளின் தொகுப்பு இரவுகள் உடையும் இப்போது வாசிக்கக் கிடைக்கவில்லை.எமர்ஜென்சிக் கொடுமைகள் பற்றிய கதைகள் அத்தொகுப்பின் பலமான கதைகள்.பெண்வாழ்வு பற்றிய இரவுகள் உடையும் கதை வாசித்த கணத்தில் ஏற்படுத்திய அதிவலைகள் இன்னும்கூட என் உடம்பில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அவருடைய கதைகளில் ஒரு ஜெருசேலம்,அம்பலகாரர் வீடு,இருளின் புத்ரிகள்,வேரில்லா உயிர்கள்,இருளுக்கு அழைப்பவர்கள்,தாலியில் பூச்சூடியவர்கள்,ஆட்டம்,வளரும் நிறங்கள் போன்ற கதைகள் எப்போதும் நின்று என்னை வதைக்கும் கதைகளாக இருக்கின்றன.கரிசல் காட்டின் கதையை நைனா கி.ரா துவங்கி பூமணி,வீர.வேலுச்சாமி ,சோ.தருமன் என ஒரு பட்டாளமே எழுந்து வந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்றாலும் பா.செ.யின் குரல் தனித்துவமிக்கது.அழுத்தமும் அடர்த்தியும் செறிவும் உணர்ச்சிக்கொந்தளிப்புமான குரலில் கதை சொன்னவர் அவர். அதற்கும் மேலாக தனிவாழ்வைப் பொதுவாக்கி பொதுவைத் தனிப்பட்ட அனுபவமாக்கிக் கதை சொல்வதில் வெற்றி கண்டு பொறாமையூட்டும் ஒரு முன்னோடியாக அவரை நான் கொண்டாடுவேன்.பாலியல் பிரச்னைகளை ஒரு நாட்டுப்புறக்கலைஞனைப்போல பட்டவர்த்தனமாகவும் ஆழமான உளவியல் அணுகுமுறையோடும் பா.செ.யைப்போலச் சொன்ன படைப்பாளிகள் தமிழில் மிகக்குறைவு.

கதைகள் பிறந்த கதையை சில கட்டுரைகளாக அவர் எழுதிப்பார்த்திருக்கிறார்.அதுவும் தமிழில் அபூர்வமாக நிகழும் முயற்சிதான்.ஒரு பேரனின் கதைகள் என்கிற சிறு புத்தகமாக அது வந்துள்ளது(சந்தியா பதிப்பகம்).

ஏராளமான கட்டுரைகளை-சமகால நிகழ்வுகளுக்கு எதிர்வினையாக- தொடர்ந்து எழுதி வருகிறார்.அவற்றில் உண்மையின் ஒளி வீசக்காண்கிறேன்.ஈழத்தமிழர் போராட்டம் –தீர்வு குறித்து என் மீதான கடும் விமர்சனம் அவருக்குண்டு என்பதை அறிவேன்.அவர் நிலைபாட்டில் நின்று அவர் விமர்சிக்கிறார்.நமது நிலைபாட்டில் நின்று நாம் போராடுவோம்.அதையெல்லாம் தாண்டி என் மனதுக்கு மிக நெருக்கமான படைப்பாளியாக எப்போதும் அவர் இருக்கிறார்.ரொம்ப நெருங்கிப் பழக வாய்ப்புக்கிடைத்ததில்லை.கே.ஏ.குணசேகரன் மதுரைப்பக்கம் பாலமடை அணைக்கட்டுப் பகுதியில் 1979 வாக்கில் நடத்திய 10 நாள் கிராமியப் பாடல் பயிலரங்கில் ஒன்றாகக் கலந்துகொண்டோம்.அங்கும் நாங்கள் ஒன்றாகக் ‘கலந்த’தில்லை.அப்போது அவர் மனஓசை ஆசிரியராக-தன் இயக்கத்தோழர்கள் பத்துப்பேரோடு வந்திருந்தார்.அரசியல் எப்போதும் இடையில் நின்று கொண்டிருக்கிறதுதான்.ஆனால் அவரது எழுத்து உண்டாக்கிய மன நெருக்கம் எதனாலும் குறையவில்லை.குறைந்திட மன அளவில் நான் அனுமதிப்பதில்லை.இது ஒரு வினோத மனநிலைதான் போலும்.ஒரு படைப்பாளிக்கும் வாசகனுக்கும் உள்ள பிரிக்க முடியாத உறவு.

அவருடைய ஒரு கட்டுரையின் தலைப்பைப் போல “ உண்மை-ஏற்கனவே தயாரிக்கப்பட்டிராத சொற்களில் வருகிறது”- அவர் அப்படியேதான் வாழ்கிறார்.

அவருடைய கதைகளின் மொத்தத்தொகுப்பை யாரேனும் வெளியிட்டால் தமிழ் இலக்கிய உலகம் அவருக்கு நன்றி செலுத்தும்.1998இல் அகரம் வெளியிட்ட 30 கதைகளின் தொகுப்புகூட இப்போது கிடைப்பதில்லை.மறுபதிப்பில்லை.

“காலத்திற்குள் அடைபட்டதுதான் இலக்கியம்.ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சித்தரிக்கிற ஒரு படைப்பு அந்தக் காலகட்டத்தையும் தாண்டி வாழ்கிறது.அது அந்தக் காலத்தின் சமுதாய வரலாறாகவும் இருக்கிறது.அதே நேரத்தில் அந்த சமுதாயத்துக்குள் இலக்கியவாதி வாழ்ந்த வாழ்க்கையாகவும் இருக்கிறது” என்கிற வரிகளுக்கு ஏற்ப வாழும் நம் சமகாலக் கலைஞனாக பா.செயப்பிரகாசம் திகழ்கிறார்.

ஆசிரியை உமாமகேஸ்வரி படுகொலை

(தீக்கதிரில் வெளியான அருமையான கட்டுரை இங்கு )


உரையாடல்கள் மறுக்கப்பட்ட சமூகத்தின் இன்னுமொரு பரிதாப நிகழ்வு


எஸ் வி வேணுகோபாலன்



பொதுவாக மாலை தினசரியைத் தலைப்புச் செய்திகள் மூலமே வாசித்துவிட விரும்பும் மனிதர்களில் ஒருவனாகவே நேற்றும் பிற்பகல் பெட்டிக்கடை ஒன்றில் கொண்டு வந்து கயிற்றில் தொங்கவிடப்பட்ட மாலை இதழ் ஒன்றை வாசிக்க முற்பட்டவன் அதிர்ந்தே போனேன். அடுத்த நிமிடமே அந்த பத்திரிகையை வாங்கிக் கொண்டு அது தரக் காத்திருந்த கோர நிகழ்வு ஒன்றின் கொடிய கணங்களுக்குள் பயணத்தைத் தொடக்கினேன்.  

அது நடந்தே விட்டது.  தனது ஆசிரியை ஒருவரை அவரது  மாணவன் ஒருவனே கொன்று விட்டான். வியப்பு, அச்சம், நடுக்கம், ஏக்கம் எல்லாம் தமது கண்களிலிருந்து கொட்டித் தீர்த்தும் அதன் பொருளை உணர்ந்து அதற்கு வழி கொடுக்கும் சிந்தனையே இல்லாதிருந்த ஒருவனிடமிருந்து தமக்கு தப்பிக்க ஒரு வழியும் இல்லாது போன நேரத்தில் உமா மகேஸ்வரி உயிரற்று விழுந்துவிட்டார். தனது கொடுஞ்செயலின் அடுத்தடுத்த விளைவுகள் குறித்த எண்ணங்கள் இல்லாது போயிருந்த இர்ஃபான் கால காலத்திற்குமான தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிக் கொடுத்துவிட்டு காவல் துறை வசம் பிடிபட்டு உட்கார்ந்திருக்கிறான்.  உலுக்கப்பட்டு திடீரென்று  விழித்துக் கொண்டாற் போல சமூகம் திணறிக் கொண்டிருக்கிறது இந்த முப்பத்தாறு மணி நேரங்களாக.

என்ன நடக்கிறது, ஏன் இப்படியெல்லாம் ஆகிவிடுகிறது என்று யோசிக்குமுன், நமது அன்றாட வாழ்க்கையில் புழக்கத்தில் இருக்கும் சில சொல்லாடல்களை நினைத்துப் பார்த்தேன். "எவனையாவது ரெண்டு பேர போட்டுத் தள்ளினாத் தான் சரி வரும்", "உசுர வாங்குறான்"," மவன சாவடிச்சிடுவேன், "கொன்டே போடுவேன்" . 

நமக்கு ஓர் எதிரி உருவாவதும், அவரைப் பழி வாங்க அவருக்கான மரண வாசலைத் திறந்து வைக்க வேண்டுவதும் ஏதோ மானுட தருமம் போன்ற - தவிர்க்க முடியாத கடமை போன்ற - செய்தே தீர வேண்டிய தீரச் செயல் போல மண்டைக்குள் இரத்த ஆறு ஓடத் தொடங்குகிறது. முரண்பாடுகளையும், கருத்து வேறுபாடுகளையும் ஆயுதங்கள் வழியாகவே பேசிக் கொள்ளவும் தூண்டப் படுகிறோம். இர்ஃபான்  கையில் கத்தி இருந்ததா, கத்தியின் கையில் இர்ஃபான் இருந்தாரா என்பது உள்பட விவாதிக்க வேண்டி இருக்கிறது.  

ஆசிரியர்-மாணவர் உறவு, டாக்டர்-நோயாளி உறவு, கடைக்காரர்-வாடிக்கையாளர் உறவு எல்லாமே நெகிழ்வுத் தன்மை அற்ற - நிபந்தனைகளுக்கு உட்பட்ட அடிப்படையிலேயே இயங்குவதைப் பார்க்க முடிகிறது. ஒரு வழிப்பாதையான உரையாடலே எங்கும் ஒலிக்கிறது. பணத்தால் படியமைக்கப்பட்ட உறவுகளில் பரஸ்பரம் தூய்மையான இதயங்களின் உரையாடல் கேட்பதே இல்லை. அன்பின் சன்னல் வெளிச்சம் ஊடுருவாத அறைக்குள் கவ்வி இருக்கும் இருட்டில் சத்தங்கள் மட்டுமே வெளியே கேட்கின்றன, காட்சிகள் புலனை ஒரு போதும் எட்டுவதே இல்லை.

குழந்தை பிறந்த அடுத்த கணம் முதல் அதன் அடுத்தடுத்த மைல் கற்கள் பற்றிய வரைபடத்தை மருத்துவ உலகம் நமக்குக் கற்பிக்கிறது. தாலப் பருவம், முத்தப் பருவம், செங்கீரைப் பருவம்...என்று இலக்கியம் பேசுவது போலவே, தவழ்தல், நிற்றல், நடத்தல். பேசுதல்..என குழந்தையின் வளர்ச்சி குறித்த அளவீடுகள் உண்டு. காலம் தவறினால் தலையீடு தேவைப்படுகிறது. கல்விப் பயணத்திற்கும் இப்படியான படிக்கட்டுகள் இருக்கின்றன. முந்தைய மைல் கற்களைக் கடந்து வந்த விதத்தின் பிரதிபலிப்பு இதில் வெளிப்படும். அதற்கேற்ற உதவியும் தேவைப்படும். இந்த நுட்பமான விஷயத்தை மிக இலேசாக நினைத்தாலோ, எல்லாக் குழந்தைகளும் ஒன்று தான் என்று முரட்டடியாக அணுகினாலோ பிரச்சனைகளின் வேர் ஆழமாகப் போகிறது.

நூற்றுக் கணக்கில் மாணவர்கள் நிரம்பி வழியும் பள்ளிக்கூடங்களில் வகுப்பறை எந்த உன்னதமான கற்பித்தல் முறையையும் அனுமதிக்கவே செய்யாது. அங்கே இலக்குகள் மட்டுமே இயங்கும். பாட திட்டம் மட்டுமே நடக்கும். காகிதங்களில் வெளிப்படும் எழுத்துக்களின் அடிப்படையிலேயே அறிவு அளக்கப்படும். ஐம்பது அறுபது மாணவ எந்திரங்களுக்கு எதிரில், ஓர் ஆசிரிய எந்திரம் குறுக்கும் நெடுக்கும் நடந்து விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும். தாழ்வு மனப்பான்மை குடியேறிவிட்ட உள்ளங்களின் கரும்பலகையில் சிலேட்டுக் குச்சியால் எழுத முடியாது, ஆணியால் கீறிக் கொண்டிருக்க வேண்டி வரும். அந்த வலியில் துளிர்க்கும் இரத்த வேதனையில் கற்பது எந்தக் காலத்தில் இனிக்க முடியும்?

வேக கதிக்கு மாற்றப் பட்ட நமது அன்றாட வாழ்க்கையில் சகிப்புத் தன்மை, பொறுமை, சிந்தித்துப் பார்த்துப் பதில் சொல்லுதல், ஒரு வேளை எதிரில் இருப்பவர் சொல்வதும் சரியாக இருக்கலாம் என்று அங்கீகரித்தல்... இவை யாவும் தடை செய்யப்பட்டு விடுகின்றன. அலைபேசி உரையாடல்களில் இருந்து, ரயில் பேருந்து வழிப்பயண தள்ளு முள்ளுகளில் இருந்து, காத்திருக்கும் ஒவ்வொரு இடத்திலும், பணி செய்யும் இடத்திலும் எரிச்சல், ஆத்திரம், முன் கோபம், அதீத எதிர்பார்ப்பு, அடுத்தவரையே குற்றம் சாட்டுதல் இவையே ஆட்சி புரிகின்றன. இதன் பளு தாங்காமல் முறிகின்ற உறவுகளில் ஈவிரக்கம், நியாய அநியாயம், சரி தவறு இவை எதையும் பொருத்திப் பார்க்கும் மிகச் சிறிய கால இடைவெளி யாருக்கும் வைப்பதில்லை. அந்த மிகச் சிறிய கால இடைவெளியின் கடுமையான தண்டனைகளில் ஒன்றாகத் தான் உமா மகேஸ்வரியின் மரணம் நமது கண்ணெதிரே நடந்தேறி இருக்கிறது.  இரத்தம் சொட்டும் கத்தியை வைத்துக் கொண்டு பரிதாபமாக சமூகத்தைப் பார்க்கும் இர்ஃபான் குறித்து உமாவிற்கோ, உமா பற்றி இர்ஃபானுக்கோ சிந்திக்கக் கிடைக்காத மிகச் சிறு கால இடைவெளி அது.

ஓர் ஆசிரியையின் இபபடியான ஒரு மரணம் பல நூறு குழந்தைகளுக்கான கற்பித்தலின் மரணம். அடுத்திருக்கும் ஆசிரியர்களின் உள்ளங்களிலும் பூகம்பத்தை விதைக்கும் கொடிய மரணம். அதே பள்ளியிலோ, வேறு பள்ளிகளிலோ வேறு பிஞ்சுக் குழந்தைகள் பலரும் இர்ஃபான்களோ என்று சந்தேகப் பார்வைக்குள் சிக்கிவிடக் கூடும் சித்திரவதையை சாத்தியமாக்கிவிட்ட மரணம்.

அன்பின் வழியது உயிர்நிலை என்றனர் நமது முன்னோர்கள். எதிர்காலத்தைப் பற்றிப் பட்டியலிடும் நிபுணர்களின் வழிகாட்டிப் புத்தகங்கள் முழுக்க முடிவற்ற பந்தயங்களும், பல முனை போட்டிகளும், வெற்றி குறித்த துரத்தல்களும், தோல்வி குறித்த மிரட்டல்களும், இலக்குகளும், குறியீடுகளும், மைல் கற்களுமே நிறைந்திருக்க நேயம், அன்பு போன்ற சொற்கள் அறவே தவிர்க்கப் பட்டிருப்பதை நிம்மதியற்றுப் பார்க்கிறோம்.  

எந்தக் குழந்தையின் போக்கு குறித்தும் அட்டையில் எழுதி அதன் கழுத்தில் தொங்கவிடுமுன் அந்தத் தீர்ப்பளிக்கும் நீதிபதியா நாம் என்று யோசிப்போம்! சமூகத்தின் பிரதிபலிப்பைக் காட்டும் கண்ணாடிகள் தான் அடுத்தடுத்த தலைமுறை என்பதை உணர்வோம். பள்ளிகள் வர்த்தகக் கடைகளாயிருப்பதை மாற்றி கல்வி நிலையங்களாக மீட்டெடுப்போம்.

துள்ளத் துடிக்க மரணத்தை எதிர்கொண்ட உமாமகேஸ்வரியிடம் மன்றாடி மன்னிப்பு கேட்போம். இர்ஃபானை இப்படி கொண்டு நிறுத்திய சூழலிடமும்!

************

நன்றி: தீக்கதிர்: பிப்ரவரி 11