Wednesday, February 29, 2012

என் சக பயணிகள்-15 சுகுமாரன்

 sukumaran

எல்லோரையும்போல ஆதியில் எனக்கும் வாழ்க்கை கவிதையாகத்தான் துவங்கியது.நான் இங்கு நம் பால்ய காலம் பற்றிப் பேசவில்லை.எழுத்து வாழ்க்கையின் தொடக்கத்தைச் சொன்னேன். வாழ்க்கையின் போக்கில் நதியின் ஓட்டத்தால் தேய்படும் கூழாங்கல்போல மனம் மந்தப்பட்டு மந்தப்பட்டுக் கவிதையை இழந்தேன்.தாக்குப்பிடித்துக் கவிதையை இழக்காதவர்கள் பாக்கியவான்கள்.பழைய சட்டையோடு நிற்கும் சிறுவன் புதுச்சட்டை போட்ட சக நண்பர்களைப்பார்ப்பதுபோல ஒரு பொறாமையோடு அவர்களைப் பார்க்கிறேன்.

நான் கவிதை எழுதுவதை ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டாலும் எனக்கான கவிதைகளை எழுதுகிறவர்களாகச் சிலரை நான் பின் தொடர்கிறேன்.நம் மனசிலிருந்து வந்த வார்த்தைகளைப்போல அக்கவிதைகள் நம் கையிலிருக்கும் புத்தகத்தில் இருந்தால்?அப்படி என் மனதுக்கு நெருக்கமான மனதாக எப்போதும் சுகுமாரனை உணர்வேன்.மனித வாழ்க்கையின் அர்த்தம்-சாராம்சம் குறித்த நிரந்தரமான கேள்விகளைச் சதா எழுப்பியபடி நகரும் அவரது எழுத்து அதீத மனநிலைகளில் நின்று அதீதங்களுக்கிடையில் நகரும் அன்றாட வாழ்வைப்பற்றிப் பேசுபவை.’மழைநீர் வேருக்குள் பரவுவதைப்போல’நீண்ட நெடும் தமிழிலக்கியப் பாரம்பரியத்தை நுட்பமாக உள்வாங்கிய கவிஞர் அவர்.ஒவ்வொரு பருவத்திலும் எனக்கான கவிதைகளை வழங்கி வரும் கவிஞராக அவர் இருக்கிறார்.

அன்று 80களில் என் 30 வயதுக்காலப் பருவத்தில் ,

”வலுவற்றது

ஆயிரம் வருடக்களிம்பேறிய என் கைமொழி

உன் பிரியத்தைச் சொல்ல..”

“எளிமையானது உன் அன்பு

நடு ஆற்றில் அள்ளிய தண்ணீர் போல”

போன்ற சுகுமாரனின் வரிகளில் சிக்கிய துடிக்கும் இதயமாக இருந்தேன்.பின்னர் என் வாழ்வின் ஓட்டத்தில் நான் உணர்ந்த்தையே அவர் இவ்விதமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்:

ஒரே வீட்டில் வாழ்கிறோம் நாம்

ஒரே வீட்டில் வாழ்ந்தாலும்

ஒரே வீட்டிலும்

ஒவ்வொரு வீட்டில் வாழ்கிறோம்.

..........

என் வீட்டுக்கதவு வழியாக

நீ நுழைய முடிவதில்லை

உன் வீட்டுக் கதவு வழியாக

நானும்.

நாம் வீடுகளில் வாழ்கிறோமா?

அல்லது

வீடுகளின் காவலில் இருக்கிறோமா?”

உடம்பின் கூக்குரல் காமமெனில் மனதின் சைகைதான் காதலா? என்கிற கேள்வியை வீசி நான் இரண்டு முறை பெண் வசப்பட்டவன் -உடம்பாக ஒரு முறை மனதாக ஒருமுறை என்கிற வாக்குமூலம் தந்து பெண் என்பவள் உடம்பின் கோஷமோ மனதின் நிசப்தமோ அல்லவென்று கற்பித்தவள் நீ என்று பயணித்து அவளிடம் கற்ற பாடத்தைச் சொல்லி நிறைவுறும் கவிதையின் கடைசி வரிகள்:

“வண்ணத்துப்பூச்சியெனில்

உடல் மட்டுமல்ல

சிறகு மட்டுமல்ல

காற்றும் “ நவீன குடும்ப வாழ்வின் சாரமாக இக்கவிதைகளின் வரிகள் நமக்குள் இறங்குகின்றன.

சமூகமாற்றத்துக்கான கனவுகளுக்கும் யதார்த்தத்துக்குமான பெருத்த இடைவெளியில் மனம் துவளும் நேரங்களிலெல்லாம் என்னைத் தூக்கி நிறுத்தும் வரிகள் இவை:

நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதை விட

பற்றி எரிவது மேல்

ஒரு கணம் எனினும்

கம்பிமேல் நடக்கும் கூத்தாடியின் கை மூங்கிலைப்போல நான் வாழ்வில் இடறி விழும்போதெல்லாம் தூக்கி நிறுத்தும் நம்பிக்கையாக சுகுமாரனின் பல கவிதைகள் என் கைப்பிடிக்குள் வலுவாக நிற்கின்றன.

ஓர் இசைக்கலைஞனாகிவிட ஆசைப்பட்டு முயன்று ”நான்- பிராமின்ஸ் ”ஆனதால் அது நடக்காமல்போய் பாதுகாப்பற்றது வெளி –பரிவில்லாதது வீடென்று கவியெழுத வந்தவர் அவர்.அவரால் பாட முடியாத ராகங்களும் இசைக்க முடியாத தாளங்களும் ததும்பி வழியும் ஆலாபனைகளாகவே அவரது எழுத்துக்கள் நம் மனவெளிகளை நிறைத்துக்கொண்டிருக்கின்றன.இசை பற்றிய குறிப்பில்லாத கவிதை இல்லை என்று சொல்லும்படியாக அவரது வரிகள் நம்முன் விரிந்து கிடக்கின்றன:

தற்கொலைக்கு முயன்று சாகத்தவறிய தருணம் பற்றிய வரிகள் இவ்விதமாக

“மனம் அலைகளடங்கி அமைதியானது

நினைவில் புதைந்த இசை

வெளிப்பட்டுத் ததும்பியது

மனம் அலைகளடங்கி அமைதியானது “ என்கிறார்.

1.“மனச்சுவரில் இடையறாது கசியும்

ராகத்தின் கீற்றை நினைவுறுத்திப் பறக்கும்

மஞ்சள் மூக்குப் பறவை”

2.“சில சமயம்

சகல துக்கங்களையும் இறைக்கும் சங்கீதம் போல”

3.சில புத்தகங்கள்

சில நினைவுகள்

காயங்களில் தடவிக்கொள்ள மருந்து தரும் இசை யந்திரம்

4.வேட்டைநாய் விரட்டல்,

இளைப்பாறுதலின் சங்கீதம் என

அகல்கிறது நாட்களின் நடை

5.வெளிச்சம் அகன்றதும் நிசப்தம்

சங்கீதம் உறைந்த்தும் இருள்

..........

இன்னொரு மின்தடை இரவில் மின்மினிகள் மறுபடியும் அப்போது நீங்களும் வருக கேட்டால் விழிமயக்கும் அந்த அற்புதக் கச்சேரியைப் பார்த்து மகிழலாம் என்று இசையைப் பார்க்கவும் ஒளியைக் கேட்கவும் அழைக்கிறார்.

இசைக்கலைஞர்களுக்கென எழுதப்பட்ட கவிதையான ’இசை தரும் படிமங்கள்’ இவற்றிலெல்லாம் உச்சமான வரிகளைக்கொண்டு மிளிர்கிறது. விரல்களில் அவிழ்ந்தது தாளம் -புறங்களில் வீசிக் கசிந்தது குரல் என்று ஹரிக்கும் ஸ்ரீனிவாசனுக்கும் புல்லாங்குழல் சகல மனிதர்களின் சோகங்களையும் துளைகளில் மோதிற்று என்று ஹரிபிரசாத் சௌராஸ்யாவுக்கும் எனக்கு மீந்தன கண்ணீரும் சிறகுகளும் இசை திரவமாகப் படர்ந்து உருக்க செவியில் மிஞ்சியது உயிர் என்று ஸாப்ரிகானுக்கும் அற்புதமான வரிகளைச் சமர்ப்பணம் ஆக்கியுள்ளார் சுகுமாரன்.

தற்கொலைக்கு ஒரு முறை முயற்சித்துள்ள சுகுமாறன் எல்லோரும் ஒருமுறையேனும் தற்கொலை பற்றி மனதளவிலாவது யோசித்திருப்பார்கள் என்று நம்புகிறார்.(நான் இருமுறை யோசித்திருக்கிறேன் இந்த 57 வயதில்)பல கவிதைகள் தற்கொலை மனம் தடுமாறுவதும் மரணத்தை முன்னிறுத்தி வாழ்வோடு உரையாடல் மேற்கொள்வதுமாகப் பயணிக்கின்றன.எனினும் அவர் அவநம்பிக்கைவாதியல்ல வாழ்வை நேசத்துடன் இறுகக்ட்டிக்கொண்டு கதறும் கவியாகவே நான் உணர்கிறேன்.

”வெளியில் போகிற எப்போதும்

காயம்படாமல் என் கிளி திரும்பியதில்லை

இதோ உன்னிடமிருந்தும்

ஆனால் அலகில் நீ பரிசளித்த நெற்கதிர்”

“விரல்கள் மழுங்கிய தொழுநோயாளி முகந்த

ஓட்டைக்குவளை நீர் –இந்த வாழ்க்கை

.........

எனினும்

முதுகை இறுக்கும் பாறைகளின் கீழ்

ஊன்றி நிமிரப் போதும்

வெறும் கையகல நம்பிக்கை”

“இங்கே

இருளின் மௌனம் புலம்புகிறது

காத்திருப்போம்

நாளை அல்லது நாளை அல்லது நாளை

ஒளியின் புன்னகை விடியும்”

“நீரில் மரணம் இனிது

அதனினும் இனிது

நிலத்தின் வாழ்வு”

என்று நிலத்தின் மீதான இவ்வாழ்வுக்கான போராட்டமே இப்பயணம் என்பதை முற்றாக உணர்ந்த கவி சுகுமாரன்,

“சிதிலங்களிலிருந்து ஊற்றெடுக்கும் எனது பாடல்

காயங்களின் இரும்பு நெடி வீசும் எனது சொற்கள்.

கசப்புப் பழங்களே விளையும் எனது சமவெளிகள்....

இங்கிருந்து புறப்பட வேண்டும் நான்

போராட்டம்-

எனினும் பயணமே நமது ஆறுதல்”

ஜூலை 1983 இல் அவர் எழுதிய இவ்வரிகள் அழிக்க முடியாத துயரத்தின் பதிவாக இன்றைக்கும் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் மனம் கதற வலி தரும் வரிகளாக...

இன்று

பூக்களும் பறவைகளும் குழந்தைகளின் புன்னகைகளும்

பெண்களும் எரிந்து போயினர்

உறுப்புகள் வெட்டப்பட்டவர்களின் குரல்கள்

வெளிகளில் தடுமாறுகின்றன

பிணங்களின் நடுவில் நொறுங்கும்

புத்தனின் மண்டையோட்டிலிருந்து கழுகுகள் அலறுகின்றன.

ஒரு பத்திரிகயாளராக நீண்ட காலம் பணியாற்றக்கிடைத்த வாய்ப்பை முடிந்தவரை தன் கலைவாழ்வுக்கு உதவும் விதமாகவும் மாற்றியமைக்கப் போராடிய வாழ்க்கை அவருக்கு.இலக்கியத்தைத் தீவிரமான செயல்பாடாகக்கருதும் ஒரு மரபின் தொடர்ச்சியாகத் தன்னை உணரும் அவர் ’கோட்பாடுகளல்ல: படைப்பின் மர்ம்மும் அது தரும் நிறைவும் அது வாழ்வனுபவமாகும் ரசவாதமும்தான் முக்கியம் ’என்கிற இலக்கிய வழியில் பயணம் செய்பவர். ஆனாலும் அவர் சொல்லும் “ ஓர் அர்த்தத்தில் இலக்கியத்தின் கடமைகளில் ஒன்று உலகியல் தளத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியாத உணர்வை உளவியல் தளத்தில் பூர்த்தி செய்து கொள்ள மனித மனத்தை அனுமதிப்பது கூடத்தானே?” என்கிற இவ்வார்த்தைகளும் கோட்பாடுகள் கொண்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கொள்கை அறிக்கை சொல்லும் “ யதார்த்தத்தின் –சமகால வாழ்வின் -குறைகள் நீக்கிய –இன்னும் சிறந்த வாழ்வை நோக்கிய பயணமே படைப்பின் லட்சியம்”என்கிற வார்த்தைகளும் ஒரே அலை வரிசையில் இருக்கின்றன.

சமீப ஆண்டுகளாக இலக்கிய இதழ்களில் அவர் நிறைய பத்திகள் எழுதுகிறார்.பத்திரிகைகளின் தேவையை ஒட்டிப் பல்கிப் பெருகிவிட்ட இந்தப் பத்தி எழுத்துக்களில் ஜீவனுள்ள பல கட்டுரைகளைப் படைத்தவர் சுகுமாறன்.அவரையும் அவருடைய மன உலகையும் அவருடைய கவிதைகளையும் இன்னும் நெருக்கமாகப் புரிந்து கொண்டு அனுபவிக்க இக்கட்டுரைகள் பேருதவியாக அமைகின்றன.அறுபதாயிரம் காதல் கவிதைகளும் உதிரியான சில குறிப்புகளும் என்னும் கட்டுரையும் பெண் கவிதை மொழி என்னும் கட்டுரையும் நவீன தமிழ்க்கவிதை உலகைப் புரிந்து கொள்ள உதவும் திறவுகோலாக அமைந்துள்ளன.நான் மிகவும் போற்றும் பேராசிரியர் நா.வானமாமலையின் புதுக்கவிதைகள் குறித்த பார்வையை சுகுமாறன் நிராகரித்தபோதும் என்னால் சுகுமாறனின் ஒருவரியையும் நிராகரிக்க முடியவில்லை.நவீன கவிதையின் பின்புலம் நடுத்தர வர்க்க மனோபாவத்திலிருந்து உருவானது என்கிற அவரது கணிப்பு மிகச்சரியானது.

இலக்கியங்களைப் படிப்பதற்காகவே அவர் விரும்பிக்கற்ற மொழியான மலையாளம் அவருக்கு நிறையக் கொடுத்திருக்கிறது--பெருமைகளையும் குற்ற மனதையும் புதிய திறப்புகளையும.தனியாக அலைவதற்கும் தப்பிச்செல்வதற்குமான வேட்கயுடன் அவர் தமிழகமெங்கும் அலைந்து திரிந்த அனுபவங்கள் இக்கட்டுரைகளின் கவித்துவமிக்க பக்கங்களாக அமைந்துவிட்டன.அவரது கட்டுரைகளில் ஆகச்சிறந்த கட்டுரையாக ஜே.கிருஷ்ணமூர்த்தி பற்றிய தனிமையின் வழி அமைந்துவிட்டது.கவிதைகள் எழுத்த்துவங்கிய என் கல்லூரி நாட்களில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டிருந்தேன்.ஆங்கிலத்தில் வெளியான அவருடைய அத்தனை நூல்களையும் -மேரி லுடியன்சின் அவேக்கனிங் இயர்ஸ் மற்றும் அவரே கைப்பட எழுதிய குறிப்புகள் உட்பட- வாங்கிப் படித்து அவரோடு சேர்ந்து மனம் அசைந்துகொண்டிருந்திருக்கிறேன்.மணல் மேட்டில் கட்டிய அழகிய வீடென்றும் நவீன அத்வைதிதான் அவரென்றும் சரியான விமர்சனங்கள் அப்போதே வந்திருந்தபோதும் அவருடைய வார்த்தைகள் மீது நான் கொண்டிருந்த மையல் இன்றும் அழியவில்லை.அதனால் இன்னும் கூடுதல் ஈர்ப்போடு சுகுமாறனோடு நடக்க முடிந்தது.வாழ்க்கை மீதான வர்ணனைகள் என்ற ஜேகேயின் பிரசித்தமான நூல் தொகுதிகளை வாசிப்பதற்காக வெல்லிங்டன் ஆற்றங்கரையைத் தேர்ந்தெடுத்திருந்தேன் என்று துவங்கும் தனிமையின் வழி கட்டுரை உரைநடை இலக்கியத்தின் உச்சமான சாத்தியங்களைத் தொட்டுவிட்ட கட்டுரை என்று சொல்லுவேன்.(மேகங்கள் நகர்வதை உடல் உணர்ந்து கொண்டிருந்தது...என்ன அனுபவம்..என்ன பதிவு!)

சத்யஜித்ராய்,எம்.டி.ராமனாதன்,மதுபாலா,நௌஷத் பற்றிய கட்டுரைகளெல்லாம் கண்களில் நீர் வழிய நான் வாசித்த கட்டுரைகள் என்பேன்.

’புராணப் பிசுக்கேறிய உன் தாலிக்கயிற்றின் முடிச்சு’

‘பறவை நிழல் தரையைக் கடக்க..’

‘மரங்கள் இலைக்குரலில் நலம் விசாரிக்கும்’

‘மலை-ஒரு உன்னதம்.பயணம்-ஒரு போராட்டம்’

‘பிச்சைக்காரியின் ஒடுங்கிய குவளையில் சரித்திரம் கெக்கலிக்கும்’

என சுகுமாறனின் எத்தனையோ வரிகள் என் வாழ்நாள் முழுதும் கூடவே ஓடி வந்துகொண்டிருக்கின்றன..

அவருடைய பூனை கவிதை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.நாய்களை விட எந்தக்கடவுளுக்கும் வாகனமாயில்லாத பூனையின் சுதந்திரம் எனக்கும் எல்லோருக்கும் வாய்க்கட்டும்..

பூனை கண் மூடினால்

இருண்டு விடும் உலகம்

நானும்

கண் மூடுகிறேன்

‘மியாவ்’

பி.கு. அவருடையபடைப்புகள் உயிர்மை பதிப்பகத்தில் கிடைக்கும்

1 comment:

Rajasekharan Parameswaran said...

தற்கொலைக்கு ஒரு முறை முயற்சித்துள்ள சுகுமாறன் எல்லோரும் ஒருமுறையேனும் தற்கொலை பற்றி மனதளவிலாவது யோசித்திருப்பார்கள் என்று நம்புகிறார்.........
நான் இருமுறை யோசித்திருக்கிறேன் இந்த 57 வயதில்).......

நான் 3 முறை முயற்சித்துள்ளேன்......