எனக்கும் அவனுக்கும்
இவனுக்கும் உனக்கும்
கடைசியில் ஒன்றுமில்லை
என ஆனது
அதனாலென்ன வாருங்கள்
டீ குடிக்கப் போகலாம்
என்றேன் நான்.
இதைவிட எளிமையாக நவீன கவிதை எவரிடமிருந்தும் வெளிப்பட்டதில்லை என்பேன்.வாழ்வின் இத்தனை சிக்கல்கள்-குழப்பங்களுக்கு மத்தியிலும் எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்கிறபடி உண்மை நமது இருதயத்துக்குள்ளேயே இருப்பதை நினைத்து நினைத்து சந்தோஷப்படுபவர் சமயவேல்.இத்தகைய எளிய மனத்தை அதன் பரிசுத்த வடிவில் அறிமுகப்படுத்தும் அவரது கவிதைகளும் எளிமையானவைதாம்.மிகுந்த எளிமை, மிகுந்த உண்மையை வேண்டி நிற்பதை எவரும் அறிவர் என்கிற அறிவிப்போடு அல்லது விளக்கத்தோடு (பிரகடனம் அல்ல) வெளியான அவரது முதல் தொகுப்பான காற்றின் பாடல் அன்று என் மனதின் இண்டு இடுக்குகளிலெல்லாம் புகுந்து என்னை மீட்டியது.இதையெல்லாம் கூட இப்படி எளிய வார்த்தகளில் சொல்லிவிட முடியுமா என்கிற பெருவியப்புடன் அன்றுமுதல் சமயவேலைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
இடைவிடாமல் தொடர்ந்து
காற்று பாடிக்கொண்டிருக்கிறது
அதன் ஒவ்வொரு பாடலிலும்
கோடி உயிர்கள் முளைத்தெழுகின்றன
அதன் ஒவ்வொரு வரியிலும் மரங்கள்
செடி கொடிகள் ஆனந்தக் கூத்தாடுகின்றன
.........
காற்றே உன் ஒப்பற்ற கருணையில்
காட்டு மூங்கிலோடு நானும் பாடுகிறேன்
கதவைத் தள்ளி அறைக்குள் நுழையும்
காற்றின் அன்பில் கரைந்து பாடுகிறேன்
எனது காற்று என்று இங்கே
எதனைக்கூறுவேன்
எனது பாடல் என்று இங்கே
எதைச் சொல்லுவேன்
எல்லாம் இங்கே காற்றின் பாடலே.
ஒரு புறாவை நாம் பறக்கவிட்டால் அது ஒரு வட்டமடித்துப் பின் திரும்பும்போது இன்னும் பத்துப்பறவைகளோடுதான் வீடு திரும்பும்.அது போல தம்பி கோணங்கி எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்த வண்ண வண்ணப் புறாக்களில் ஒரு புறாவாக எங்களுக்குக் கிடைத்த அரிய சொத்து சமயவேல்-எங்கள் எல்லோருக்கும் செல்லமான மாப்பிள்ளையாக.
ஓர் எளிய மனத்திலிருந்துதான் இத்தனை உண்மையும் அன்பும் அழகும் மிளிரும் கவிதைகள் வரமுடியும்.அதிகாலைப்பொழுதால் மன எழுச்சி கொள்ளும் மனம் சமயவேலுடையது.
கூரை முகட்டுப் பட்சிகளின் கரைதல்களுடன்
இமைகளைப் பிரித்து வாழ்த்துச் சொல்லும்
இளங்காலை
ஒரு உடம்பு முறுக்கலில் மெல்லவே பிரியும்
நேற்றின் அயர்வுகள்
என்று தொடங்கும் கவிதை குளிக்க சாப்பிட வேலைக்கென கலகத்துக்கு அழைக்கும் வாழ்க்கையை இன்றும் நேசிப்பேன் என்று முடியும்.இயற்கையின் வண்ணங்களான பொழுதுகளைக் கண்டு மனஎழுச்சி கொள்ளும் கவிமனம் அப்படியே பார்வையைத் திருப்பி மனித வாழ்வின் மீது செலுத்தும்போது எல்லோருக்குமான அன்பைப் பொழியும் மழையாகிவிடுகிறது.
இந்தக் கிராமத்துச் சாலையைப்போல
குழந்தைகளே
உங்கள் வாழ்க்கை குழப்பமற்று
இருக்கப் பாடுகிறேன்.
மறிக்கப்பட்டுக் கிடக்கிற
எங்கள் எல்லோர் வாழ்வுக்குள்ளும்
குருமலைக் காற்றே
நீ வீசுவாயெனப் பாடுகிறேன்.
முதல் தடவை இந்தக் கவிதையை நான் வாசித்த அந்த நாள் இன்னும் அப்படியே நடுக்கத்துடன் நினைவில் புதுசாயிருக்கிறது.குழந்தைகளே உங்கள் வாழ்க்கை இந்தக் கிராமத்துச் சாலையைப்போல ..என்கிற வரிகளில் மனம் கரைந்து அழுத ஈரம் இன்னும் என் விழி ஓரங்களில் பிசுபிசுக்கிறது.காலைப் பொழுதை விதவிதமாகப் பாடிய கவி சமயவேல்.
இப்பொழுது
நம்மில் எவரும்
ஒரு வார்த்தைகூடப் பேச வேண்டியதில்லை.
நம் எல்லோருக்குமாகச் சேர்த்து
பெரும் பேரழகுடன்
பேசிக்கொண்டிருக்கிறது
அதிகாலை
என்று ஒரு கவிதையிலும் ,பூத்துக்குலுங்கும் பயிர் பச்சைகளோடு பின் நிலவில் பூமியின் வனப்பு கூடக்கூட உதிப்பதை சூரியன் ஒத்திப்போட்டுக்கொண்டிருந்த ஒரு காலைப்பொழுதைக் கண்டு,
எல்லோரையும் எழுப்பி
எல்லாரோடும் சேர்ந்து
உரத்துப்பாட வேண்டும் அந்த
அதிகலையைப் போற்றிப் புகழ்ந்து வாழ்த்தி
வாயாரப் பாட வேண்டும்.—என்று பாடுவார்.
தன்னுணர்வற்ற எந்திர வாழ்க்கை வாழ்பவருக்கு இப்பூமியில் பிரச்னை ஏதுமிருக்கப்போவதில்லை. சுயபிரக்ஞை உள்ள மனிதனுக்கோ இருப்பே பிரச்னைதான்.எல்லாமே கேள்விதான்.சப்தமில்லாமல் அம்பாரமாய்க் குவியும் நாட்களில் நூற்றாண்டுகளை விழுங்கிய நாகரிகங்களின் அழுகலில் மூச்சடைத்துக் கிடக்கும் கவிமனம்
நேசர்களின் உலகம்
எந்த்த்தீவிலோ ஒளிந்துகொண்டது
ஆத்ம நண்பனை எங்கே?
நம்பிக்கை அவநம்பிக்கை
றெக்கைகள் இரண்டும் பிய்ந்து
எங்கோ விழுந்து கிடக்கிறேன்... என்று தவிக்கிறது.
சமயவேலின் கவிதைகளில் நான் காண்பது வெம்பூர் என்கிற ஒரு கரிசல் கிராமத்தின் எளிய மனிதனின் கள்ளமற்ற மனதை.பெருநகரத்து வாழ்விடுக்குகள் சிக்க நேர்ந்த அவ்வெளிய கிராமத்து மனதின் அதிர்ச்சிகளும் துக்கங்களும் விரக்தியும் நம்பிக்கையும் அவநம்பிக்கையுமே அவரது கவிதைகளாகி நிற்கின்றன.அவருக்கு ஒரு மழை நாளின் குளிர் இரவு இடம் பெயர்ந்த பெருநகர இருப்பில் ஒரு கனத்த துயரைச் செதுக்குவதாயிருக்கிறது.நவீன வாழ்க்கை ஏற்படுத்தும் அழிமான்ங்களை நினைவுபடுத்துவதாயிருக்கிறது,
வெகு காலத்துக்கு முன்பே நமது இசை
நமது வயல்களுக்குள் நுழைந்த
நெடுஞ்சாலையில் அடிபட்டு நசுங்கிப்போனது.
கரும்பாறைகளின் சதைகளில் பிய்ந்த
கிரானைட் மார்பிள்களின் அடியில்
மலைகளைப் புதைத்தார்கள்.
அழிந்தது அழிகிறது
கடந்தது கடக்கிறது
காலம் ஒரு பட்டுப்போர்வையை எடுத்து
எல்லாவற்றையும் அழகாக மூடிவிடுகிறது
நகரத்து வாழ்வில் நாட்களின் வேட்டையில் சிக்கி விடாமல் காட்டில்; திசையற்று ஓடும் சிறுமானாகத் தன்னை உணரும் சமயவேல் அலுவலகங்களை விட மருத்துவமனை பிடித்திருக்கிறது வீட்டை விட அழுக்கு வீசும் விடுதி அறைகளில் விரும்பித் தங்குகிறேன்.கட்டணக்கழிப்பிடங்களின் பேரழகு குறித்து வாசகர் கடிதம் எழுதுகிறேன் என்று மனம் மயங்கிப் பிறழ்கிறார்.என்னை என்ன செய்வதென்று தெரியவில்லை என்றும் ஒரு முக்குக் கல் கூட திசை காட்டி இயங்க உயிர் நிரம்பிய நானோ வெறும் கல்லானேன் என்றும் மண் சுமப்பதும் சுமந்து முடிந்து உண்பதுமாக்க் கழிகிறதே நாட்கள் என்றும் இந்த வாழ்வின் அந்நியமாதலைப் பாடிச் சலிக்கிறார்.ஆனாலும் சமயவேலிடம் எனக்குப் பிடித்தது இந்த வாழ்வின் மீது அவர் கொள்ளும் நேசம்.
இவ்வளவுக்குப் பிறகும்
நான் இந்த பூமியில்
இருக்கத்தான் விரும்புகிறேன் .
அதுதான் என் சாராம்சம்.
சமயவேல் கவிதைகளிலேயே என்னை மிகவும் அலைக்கழித்த கவிதை என்று எங்களுக்கு ஒரு அறை இருந்தது என்கிற கவிதையை நான் குறிப்பிடுவேன்.மணமாகாத காலத்தில் இளைஞனாக வாழும் பருவத்தின் நம் மனம் கொண்டிருக்கும் விசாலம் மணமாகித் தன் வீடென்று அடையும் போது சுருங்கிபோவதை இத்தனை வலியுடனும் துல்லியமாகவும் யாரும் சொன்னதில்லை.நம் நடுத்தர வர்க்க வாழ்க்கையின் முகத்திலடிக்கும் கவிதை இது என்பேன்.
ஆசிரமம் தெருவில்
எங்களுக்கு ஒரு அறை இருந்தது
நகரத்தில் எதனிடமும் ஒட்டுப்பட முடியாமல்
கூரைகளுக்கு மேல் மிதந்த
மிகச்சிறிய அறை அது
.......
நண்பர்கள் கூடக் கூட
அறை அகன்று விரிந்தது ஒருவர் பாயில்
மூவர் தரையில் இருவர் சேரில்
படியில் மூவர் நியூஸ் பேப்பரில் இருவர் எனத்
தாறுமாறாய்ப் படுத்து
இரவுகளைக் கடந்தோம்
அறையை விட்டுக் கிளம்பி
குடும்பம் கட்டியிருக்கும் நாங்கள்
வீட்டையும் அறையையும் இணைக்க முடியாமல்
திணறிக்கொண்டிருக்கிறோம்.
எளிமையும் நேரடித்தன்மையும் கொண்டு மனசைக் கதிக்கத் தாக்கும் கவிதைகளை வாசித்து விட்டு சமீபத்திய அவரது சிறுகதைத் தொகுப்பை ( இனி நான் டைகர் இல்லை-உயிரெழுத்து வெளியீடு)க் கையில் எடுத்தபோது ஏமாற்றத்தில் மனம் தடுமாறுகிறது.கதை மொழியில் சிக்கலில்லை.ஆனாலும் கவிதையில் தரிசித்த அந்த மனம் கதையில் இல்லை.அதர்க்க வெளியில் சஞ்சாரிக்கும் பல கதைகள் எனக்கு ஆயாசத்தை ஏற்படுத்தின.உடல் மொழியும் உயிர் இசையும் கதை மட்டும் என் நெஞ்சைப் பிளந்து கதற வைத்தது.என்ன ஒரு கதை அய்யா!பச்சை மரகதக் கல்கிளியும் முக்கியமான கதையாகிறது.மற்றபடி மற்ற கதைகள் மனசைத் தொடலியே மாப்ளே.
சமீபத்திய கவிதைத்தொகுப்பான மின்னிப்புற்களும் மிதுக்கம்பழங்களும் நூலின் முதல் கவிதையாக அமைதி படர்ந்த அதிகாலைத் தெருவைப் பற்றிய வரிகளைக்கண்டு மனம் குதூகலித்தேன். கவிதைக்குள் அதே குருமலைக் காற்று வீசிக்கொண்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது.தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் குணமில்லாத எளிய மனிதர் சமயவேல்.என மனதுக்கு மிக மிக நெருக்கமான கவிதைகளைத் தந்த கவிஞன் ..தமிழில் பெரிய அளவுக்கு கண்டுகொள்ளப்படாமல் பேசப்படாமல் கொண்டாடப்படாமல் அது பற்றி எந்தக் கவலையும் கொள்ளமல் இன்றுவரை உற்சாகத்துடன் இயங்கிக்கொண்டிருக்கும் படைப்பாளி சமயவேல்.உயிர்மை பதிப்பகமும் ஆழி ப்ப்ளிசர்சும் அவ்ருடைய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளனர்.
நேசம் விதைத்த காட்டில்
நெருப்பு முளைத்தாலும்
பிடுங்கி எறிந்து விட்டு
உழுது விதை விதைப்பேன்
தத்துவங்கள் வீழட்டும்
தேசங்கள் சிதறட்டும்
உலகம் எதையும் பிதற்றட்டும்
பசித்தவர்கள் பக்கமே என்றும்
நான் இருப்பேன்.
3 comments:
தனிழ்ச்செல்வன் அவர்களுக்கு! உங்கள் சகபயணிகளை தொடர்ந்து படிக்கிறேன் . பா.செயப்பிரகாசம்,சமயவேல், என்று எழுது கிறீர்கள். புத்தகமாக வரவேண்டும் . அவர்களின் சொந்தவாழ்க்கை பற்றி ஒரு பத்தியாவது எழுதலாம்.வருங்காலத்தில் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவலாம் என்பதற்காகாவே இதனைக்குறிப்பிடுகிறேன் ---காஸ்யபன். ,
பசித்தவர்களோடு நானிருப்பேன் என்ற சமயவேலின் மனது மிகவும் பிடித்திருக்கிறது. மதுரையில் சில இலக்கிய கூட்டங்களில் சமயவேல் அவர்களைப் பார்த்திருக்கிறேன். எளிமையான மனிதர். அவரது கவிதைகளை உங்கள் பதிவு மூலமே வாசித்தேன். இனி அவரது கவிதைகளைத் தேடி வாசிக்க விரும்புகிறேன். பகிர்விற்கு நன்றி.
சகபயணி சமயவேலின் தொடர்பிடித்திருக்கிறது. நன்றி. kosindra
Post a Comment