Wednesday, February 29, 2012

ஆசிரியை உமாமகேஸ்வரி படுகொலை

(தீக்கதிரில் வெளியான அருமையான கட்டுரை இங்கு )


உரையாடல்கள் மறுக்கப்பட்ட சமூகத்தின் இன்னுமொரு பரிதாப நிகழ்வு


எஸ் வி வேணுகோபாலன்



பொதுவாக மாலை தினசரியைத் தலைப்புச் செய்திகள் மூலமே வாசித்துவிட விரும்பும் மனிதர்களில் ஒருவனாகவே நேற்றும் பிற்பகல் பெட்டிக்கடை ஒன்றில் கொண்டு வந்து கயிற்றில் தொங்கவிடப்பட்ட மாலை இதழ் ஒன்றை வாசிக்க முற்பட்டவன் அதிர்ந்தே போனேன். அடுத்த நிமிடமே அந்த பத்திரிகையை வாங்கிக் கொண்டு அது தரக் காத்திருந்த கோர நிகழ்வு ஒன்றின் கொடிய கணங்களுக்குள் பயணத்தைத் தொடக்கினேன்.  

அது நடந்தே விட்டது.  தனது ஆசிரியை ஒருவரை அவரது  மாணவன் ஒருவனே கொன்று விட்டான். வியப்பு, அச்சம், நடுக்கம், ஏக்கம் எல்லாம் தமது கண்களிலிருந்து கொட்டித் தீர்த்தும் அதன் பொருளை உணர்ந்து அதற்கு வழி கொடுக்கும் சிந்தனையே இல்லாதிருந்த ஒருவனிடமிருந்து தமக்கு தப்பிக்க ஒரு வழியும் இல்லாது போன நேரத்தில் உமா மகேஸ்வரி உயிரற்று விழுந்துவிட்டார். தனது கொடுஞ்செயலின் அடுத்தடுத்த விளைவுகள் குறித்த எண்ணங்கள் இல்லாது போயிருந்த இர்ஃபான் கால காலத்திற்குமான தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிக் கொடுத்துவிட்டு காவல் துறை வசம் பிடிபட்டு உட்கார்ந்திருக்கிறான்.  உலுக்கப்பட்டு திடீரென்று  விழித்துக் கொண்டாற் போல சமூகம் திணறிக் கொண்டிருக்கிறது இந்த முப்பத்தாறு மணி நேரங்களாக.

என்ன நடக்கிறது, ஏன் இப்படியெல்லாம் ஆகிவிடுகிறது என்று யோசிக்குமுன், நமது அன்றாட வாழ்க்கையில் புழக்கத்தில் இருக்கும் சில சொல்லாடல்களை நினைத்துப் பார்த்தேன். "எவனையாவது ரெண்டு பேர போட்டுத் தள்ளினாத் தான் சரி வரும்", "உசுர வாங்குறான்"," மவன சாவடிச்சிடுவேன், "கொன்டே போடுவேன்" . 

நமக்கு ஓர் எதிரி உருவாவதும், அவரைப் பழி வாங்க அவருக்கான மரண வாசலைத் திறந்து வைக்க வேண்டுவதும் ஏதோ மானுட தருமம் போன்ற - தவிர்க்க முடியாத கடமை போன்ற - செய்தே தீர வேண்டிய தீரச் செயல் போல மண்டைக்குள் இரத்த ஆறு ஓடத் தொடங்குகிறது. முரண்பாடுகளையும், கருத்து வேறுபாடுகளையும் ஆயுதங்கள் வழியாகவே பேசிக் கொள்ளவும் தூண்டப் படுகிறோம். இர்ஃபான்  கையில் கத்தி இருந்ததா, கத்தியின் கையில் இர்ஃபான் இருந்தாரா என்பது உள்பட விவாதிக்க வேண்டி இருக்கிறது.  

ஆசிரியர்-மாணவர் உறவு, டாக்டர்-நோயாளி உறவு, கடைக்காரர்-வாடிக்கையாளர் உறவு எல்லாமே நெகிழ்வுத் தன்மை அற்ற - நிபந்தனைகளுக்கு உட்பட்ட அடிப்படையிலேயே இயங்குவதைப் பார்க்க முடிகிறது. ஒரு வழிப்பாதையான உரையாடலே எங்கும் ஒலிக்கிறது. பணத்தால் படியமைக்கப்பட்ட உறவுகளில் பரஸ்பரம் தூய்மையான இதயங்களின் உரையாடல் கேட்பதே இல்லை. அன்பின் சன்னல் வெளிச்சம் ஊடுருவாத அறைக்குள் கவ்வி இருக்கும் இருட்டில் சத்தங்கள் மட்டுமே வெளியே கேட்கின்றன, காட்சிகள் புலனை ஒரு போதும் எட்டுவதே இல்லை.

குழந்தை பிறந்த அடுத்த கணம் முதல் அதன் அடுத்தடுத்த மைல் கற்கள் பற்றிய வரைபடத்தை மருத்துவ உலகம் நமக்குக் கற்பிக்கிறது. தாலப் பருவம், முத்தப் பருவம், செங்கீரைப் பருவம்...என்று இலக்கியம் பேசுவது போலவே, தவழ்தல், நிற்றல், நடத்தல். பேசுதல்..என குழந்தையின் வளர்ச்சி குறித்த அளவீடுகள் உண்டு. காலம் தவறினால் தலையீடு தேவைப்படுகிறது. கல்விப் பயணத்திற்கும் இப்படியான படிக்கட்டுகள் இருக்கின்றன. முந்தைய மைல் கற்களைக் கடந்து வந்த விதத்தின் பிரதிபலிப்பு இதில் வெளிப்படும். அதற்கேற்ற உதவியும் தேவைப்படும். இந்த நுட்பமான விஷயத்தை மிக இலேசாக நினைத்தாலோ, எல்லாக் குழந்தைகளும் ஒன்று தான் என்று முரட்டடியாக அணுகினாலோ பிரச்சனைகளின் வேர் ஆழமாகப் போகிறது.

நூற்றுக் கணக்கில் மாணவர்கள் நிரம்பி வழியும் பள்ளிக்கூடங்களில் வகுப்பறை எந்த உன்னதமான கற்பித்தல் முறையையும் அனுமதிக்கவே செய்யாது. அங்கே இலக்குகள் மட்டுமே இயங்கும். பாட திட்டம் மட்டுமே நடக்கும். காகிதங்களில் வெளிப்படும் எழுத்துக்களின் அடிப்படையிலேயே அறிவு அளக்கப்படும். ஐம்பது அறுபது மாணவ எந்திரங்களுக்கு எதிரில், ஓர் ஆசிரிய எந்திரம் குறுக்கும் நெடுக்கும் நடந்து விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும். தாழ்வு மனப்பான்மை குடியேறிவிட்ட உள்ளங்களின் கரும்பலகையில் சிலேட்டுக் குச்சியால் எழுத முடியாது, ஆணியால் கீறிக் கொண்டிருக்க வேண்டி வரும். அந்த வலியில் துளிர்க்கும் இரத்த வேதனையில் கற்பது எந்தக் காலத்தில் இனிக்க முடியும்?

வேக கதிக்கு மாற்றப் பட்ட நமது அன்றாட வாழ்க்கையில் சகிப்புத் தன்மை, பொறுமை, சிந்தித்துப் பார்த்துப் பதில் சொல்லுதல், ஒரு வேளை எதிரில் இருப்பவர் சொல்வதும் சரியாக இருக்கலாம் என்று அங்கீகரித்தல்... இவை யாவும் தடை செய்யப்பட்டு விடுகின்றன. அலைபேசி உரையாடல்களில் இருந்து, ரயில் பேருந்து வழிப்பயண தள்ளு முள்ளுகளில் இருந்து, காத்திருக்கும் ஒவ்வொரு இடத்திலும், பணி செய்யும் இடத்திலும் எரிச்சல், ஆத்திரம், முன் கோபம், அதீத எதிர்பார்ப்பு, அடுத்தவரையே குற்றம் சாட்டுதல் இவையே ஆட்சி புரிகின்றன. இதன் பளு தாங்காமல் முறிகின்ற உறவுகளில் ஈவிரக்கம், நியாய அநியாயம், சரி தவறு இவை எதையும் பொருத்திப் பார்க்கும் மிகச் சிறிய கால இடைவெளி யாருக்கும் வைப்பதில்லை. அந்த மிகச் சிறிய கால இடைவெளியின் கடுமையான தண்டனைகளில் ஒன்றாகத் தான் உமா மகேஸ்வரியின் மரணம் நமது கண்ணெதிரே நடந்தேறி இருக்கிறது.  இரத்தம் சொட்டும் கத்தியை வைத்துக் கொண்டு பரிதாபமாக சமூகத்தைப் பார்க்கும் இர்ஃபான் குறித்து உமாவிற்கோ, உமா பற்றி இர்ஃபானுக்கோ சிந்திக்கக் கிடைக்காத மிகச் சிறு கால இடைவெளி அது.

ஓர் ஆசிரியையின் இபபடியான ஒரு மரணம் பல நூறு குழந்தைகளுக்கான கற்பித்தலின் மரணம். அடுத்திருக்கும் ஆசிரியர்களின் உள்ளங்களிலும் பூகம்பத்தை விதைக்கும் கொடிய மரணம். அதே பள்ளியிலோ, வேறு பள்ளிகளிலோ வேறு பிஞ்சுக் குழந்தைகள் பலரும் இர்ஃபான்களோ என்று சந்தேகப் பார்வைக்குள் சிக்கிவிடக் கூடும் சித்திரவதையை சாத்தியமாக்கிவிட்ட மரணம்.

அன்பின் வழியது உயிர்நிலை என்றனர் நமது முன்னோர்கள். எதிர்காலத்தைப் பற்றிப் பட்டியலிடும் நிபுணர்களின் வழிகாட்டிப் புத்தகங்கள் முழுக்க முடிவற்ற பந்தயங்களும், பல முனை போட்டிகளும், வெற்றி குறித்த துரத்தல்களும், தோல்வி குறித்த மிரட்டல்களும், இலக்குகளும், குறியீடுகளும், மைல் கற்களுமே நிறைந்திருக்க நேயம், அன்பு போன்ற சொற்கள் அறவே தவிர்க்கப் பட்டிருப்பதை நிம்மதியற்றுப் பார்க்கிறோம்.  

எந்தக் குழந்தையின் போக்கு குறித்தும் அட்டையில் எழுதி அதன் கழுத்தில் தொங்கவிடுமுன் அந்தத் தீர்ப்பளிக்கும் நீதிபதியா நாம் என்று யோசிப்போம்! சமூகத்தின் பிரதிபலிப்பைக் காட்டும் கண்ணாடிகள் தான் அடுத்தடுத்த தலைமுறை என்பதை உணர்வோம். பள்ளிகள் வர்த்தகக் கடைகளாயிருப்பதை மாற்றி கல்வி நிலையங்களாக மீட்டெடுப்போம்.

துள்ளத் துடிக்க மரணத்தை எதிர்கொண்ட உமாமகேஸ்வரியிடம் மன்றாடி மன்னிப்பு கேட்போம். இர்ஃபானை இப்படி கொண்டு நிறுத்திய சூழலிடமும்!

************

நன்றி: தீக்கதிர்: பிப்ரவரி 11