என்னைவிட ஆறேழு வயது மூத்தவரான கவிஞர் பரிணாமன் என் வாழ்நாள் முழுதும் என மனதுக்குள் இசைத்துக்கொண்டிருக்கும் பல வரிகளை எனக்குத்தந்தவர்.பொதுவுடமை இயக்கத்தின் பொக்கிஷங்களில் ஒருவராக அவரை எப்போதும் நான் கொண்டாடுவேன்.அவரை நான் அறியத்துவங்கியது நான் ராணுவப்பணியிலிருந்து திரும்பிய 1978-79 களில்தான் என்று நினைவு. கோவில்பட்டியில் சரஸ்வதி தியேட்டர் சாலையில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜீவா படிப்பகத்தில் ஓலைப்பாய் மீது கிடக்கும் மகாநதி இலக்கிய இதழின் வழித்தான் முதலில் அவரை அறிந்தேன்..அதை நடத்திய ஆசிரியர் குழுவிலும் பரிணாமன் இருந்தார் என்று நினைவு.மதுரையிலிருந்து அதை வெளிக்கொண்டு வந்தார்கள்.அப்போது மதுரையில் பரிணாமன்,சகுந்தலை,நவபாரதி என ஒரு வலுவான குழு கலை இலக்கியப் பெருமன்றத்தில் துடிப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.கல்பனா இதழிலும்கூட இந்தக் குழுவே பெரிய பங்களிப்பு செய்ததாக ஞாபகம்.
அப்புறம் அவருடைய முதல் கவிதைத்தொகுப்பான ஆகஸ்ட்டும் அக்டோபரும் கையில் கிடைத்தது.அதிலிருந்த பல கவிதைகளை எங்கள் கரிசல் குயில்கள் இசைக்குழுவைச்சேர்ந்த கிருஷ்ணசாமியும் சந்திரசேகரும் மெட்டமைத்துப் பாடத்துவங்கியிருந்தார்கள்.அப்போது அவ்விசைக்குழுவில் பின் பாட்டுப் பாடுகிறவனாகவும் குழு மேனேஜராகவும் நானும் ஊர் ஊராகப் போய்க்கொண்டிருந்தேன்.எங்கள் குழுவுக்கு அன்று உயிர் தந்த கவிகளாக பரிணாமனும் நவகவியும் பின்னர் ரமணனும் இருந்தார்கள்.
பின் பாட்டுப்பாடியே அவருடைய பல பாடல்கள் எனக்கும் மனப்பாடம் ஆகியிருந்தன.இடதுசாரி இயக்கத்திலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இணைந்து வேகத்துடன் மக்களிடம் சென்று பணியாற்றும் ஆவேசம் கொப்பளித்துக் கொண்டிருந்த அந்த நாட்களின் எம் மனங்களை அலைக்கழித்த இசைப்பாடல்களை பரிணாமன் வாரி வாரி வழங்கிக்கொண்டிருந்தார். ஒரு கட்டிடம் கட்டும் கொத்தனாராம் .படிப்பு ஒண்ணும் கிடையாதாம்.பாட்டு பாட்டு அப்படி ஒரு பாட்டுக்கட்டும் படைப்பாளியாம் என்று அவரைப்பற்றிய கசிவுகள் எங்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருந்தன.ஆனால் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு மட்டும் கிட்டவில்லை.
எட்டயபுரத்தில் முற்போக்கு வாலிபர் சங்கம் ஜீவா காலந்தொட்டு ஆண்டுதோறும் பாரதி விழா நடத்தி வருகிறது.1981 இல் அங்கு நடந்த பாரதி நூற்றாண்டு விழாவில் அவர் கவிதை வாசிக்கிறார் என்று கேள்விப்பட்டு ஓடினோம்.பேண்ட் சட்டை அணிந்த ஒரு ஒல்லியான உருவம் மேடையேறி, பயந்தது போன்ற தொனியில் சன்னமான ஒரு குரலில் இசையோடு பாடத்துவங்கியது.
மண் எண்ணெய் விளக்கினிற்
பாட்டுக்கட்டி இந்த
மண்ணுக்குக் கொண்டு வந்தேன்
அந்த மாகவி இங்கெங்கோ
மறைந்து நிற்பானென்று
மனப்பால் குடித்து வந்தேன்
என்கிற ஆரம்ப வரிகளைப் பாடி ஒரு கணம் நிறுத்தினார்.கரவொலியால் எட்டயபுரம் அதிர்ந்தது.
கவி தவழ்ந்தோடிய காலடி மண்ணையும் கண்டுஞ்சென்றேன் முன்பு கொண்டுஞ்சென்றேன்.அவனது ஒரு நூறு ஆண்டுக்கவியரங்கில் ஆள வந்தேன்புகழ் சூழ வந்தேன்.. என்று பத்திக்குப் பத்தி கைதட்டலோடு அந்நெடுங்கவிதை நகர்ந்து கொண்டிருந்தது.கூட்டத்தின் கடைசியில் நின்றபடி அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.வீழ்க அணுகுண்டு வீசும் கொடுமைகள் வீழ்கவே யுத்தங்களே என்று உலகமெல்லாம் நல்லாருக்கட்டும் என்கிற நல்ல மனசோடு அவர் பாடி முடித்த்தும் என் கண்களில் கண்ணீர் மெல்லக் கசிந்தது.ஒரு ஏழைக்கவியின் உள்ளத்திலிருந்து இந்த வரிகள் –வாழ்க நிரந்தரம் வாழ்க நல் அமைதி வாழ்கவே சோசலிசம் என்று –சத்தியத்தின் குரலாய் இசையாய் வந்து என் உள்ளத்தில் வந்து இறங்கியபோது அடைந்த பரவச மனநிலையைச் சொல்லாலே விளக்கி விட முடியாது.அன்று அடைந்த அதே உணர்வை நான் மீண்டும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற ஆண்டு சமயபுரம் எஸ்.ஆர்.வி.பள்ளியில் பெண் குழந்தைகள் சேர்ந்து “ எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்கிற பாடலைப்பாடிக்கேட்டபோதுதான் அடைந்தேன்.கவிகளும் குழந்தைகளும் இந்த உலகம் நல்லா இருக்கப் பாடும்போது அவ்வரிகளுக்குப் புது அர்த்தமும் புத்துணர்ச்சியும் கிடைத்து கேட்பவர் மனம் நடுங்கி விடுவதாக உணர்கிறேன்.
பிற கவிஞர்களையும் படைப்பாளிகளையும் பற்றி இத்தொடரில் எழுதியதுபோல இசைப்பாடல்களால் எம் நெஞ்சங்களை நிறைத்த பரிணாமன் பற்றி எழுதி வாசக மனங்களுக்குக் கொண்டு சேர்க்க முடியுமா என்கிற சந்தேகம் கூடவே வருகிறது.என் வாழ்வின் திருப்பங்களோடு அவர் தந்த வரிகள் பின்னிக்கிடக்கின்றன.தவிர அவ்வரிகளைக் கிருஷ்ணசாமி பாடக்கேட்க வேண்டியுமிருக்கிறது.இசையோடு தான் பரிணாமனும் பாடுவார்.
பாரதி பிடித்த தேர் வடமும் –நடு
வீதி கிடக்கிறது- அதைப்
பற்றிப் பிடித்து இழுப்பதற்கு ஊர்
கூடித்தவிக்கிறது.
நம்பிக்கை வைத்து நெம்புகோல் எடுத்து
நடப்போம் வாருங்கள் –நாம்
நடந்தால் தேர் நடக்கும் ; அன்றேல்
வெய்யில் மழையில் கிடக்கும்...
நம்பிக்கை வைத்து நெம்புகோல் எடுத்து நடப்போம் வாருங்கள் என்று வரிகள் உச்ச ஸ்தாயியில் சஞ்சாரிக்கும்போது ஒவ்வொரு முறையும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடித் தேரை நகர்த்தும் பெருமுழக்கம் என் மனதிலும் செவிகளிலும் காட்சியாக விரிந்து கிளர்ச்சியடைய வைக்கும்.அவருடைய எந்தக்கவிதையும்/ இசைப்பாடலும் கேட்போர் மனங்களில் சித்திரங்களாகவே விரியும்.
அவர் இசைத்த பாடல்களில் என் மனம் அடிக்கடி பாடிக்கொண்டிருக்கும் ஒரு பாடல் எங்களைத் தெரியலையா என்ற பாடல்.மக்களுக்கான போராட்டத்தில் எங்கள் இயக்கத்தோழர்கள் ஒவ்வொரு முறை கொல்லப்படும்போதும் யாருக்காகப் பாடுபட்டார்களோ அந்த வர்க்கத்து மக்களே அவர்களின் வீரமரணம் பற்றி அறியாதவர்களாக அவரவர் பாடுகளில் உழலும் காட்சியைக்காணும்போதும் கண்ட இழவையெல்லாம் முதற்பக்கத்தில் செய்தியாக்கும் ஊடகங்கள் எம் தோழர்களின் மரணங்களை ஒரு ஓரத்துப் பெட்டிச்செய்தியாகக்கூட வெளியிட மறுக்கும்போதும் 2000 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட ஏசுவுக்காக இப்போதும் கதறி அழும் உழைப்பாளி மக்கள் வாரம் ஒரு தோழரைப் பலி கொடுக்கும் இட்துசாரி இயக்கத்தைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும்போதும் என இது போன்ற தருணங்களிலெல்லாம் என் மனம் அழும்.அப்போது பரிணாமனின் இப்பாடல்தான் என் மனதில் இசைக்கும்.அப்பாடல் வரிகளின் வழியே என் துக்கத்தைக் கரைப்பேன்.பல முறை மனம் விரக்தியில் ததும்பும்போது இப்பாடலைச் சத்தமாகப் பாடியபடி ராத்திரி தெருக்களில் நடந்து சென்றதுண்டு.
எங்களைத் தெரியலையா-இந்த
இசையைப் புரியலையா?
திங்கள் ஒளியினில் துயில்வோரே-தினம்
சூரியத்தீயினில் உழைப்போரே
என்று துவங்கும் அப்பாடல் நாங்கள் யார் என்று உழைப்பாளி மக்களுக்கு அறிமுகம் செய்தபடி முன்னகர்ந்து பாடல் முடியும் போது பெருத்த நம்பிக்கையை விதைத்தபடி முடியும்.என் சோகம் மறைந்திருக்கும்:
ஆன்ம பலமுள்ள மானிடரே-எங்கள்
அணிவகுப்பைச் சற்றுப் பாருங்கள்
அமெரிக்க ஆதிக்கம் பின் வாங்க..
வியட்நாம் வென்றதைக் கூறுங்கள்
பூமியின் முகத்தை உழைப்பால் மாற்றிடும்
புயலின் சின்னங்களே-நம்
போரின்னும் முடியவில்லை-இந்தப்
பூமி முழுவதும் விடியும்வரை!
பொதுவுடமை இயக்கத்தில் நம்பிக்கையோடு இயங்கும் படைப்பாளியாக அவர் எனக்கு முன்னால் பாடியபடி நடந்து போய்க்கொண்டிருப்பதான ஒரு சித்திரம் எனக்கு எப்போதும் உண்டு.தண்ணீரைப்போல இலகுவான மனதுடன் இயங்கும் ஓர் எளிய அன்புள்ளம் பரிணாமன் என்கிற உணர்வு எப்பவும் எனக்குண்டு.
என்னை இக்கதிக்கு ஆளாக்கியவர்களில் ஒருவரான தனுஷ்கோடி ராமசாமியைப் போன்ற உலகின் சிறந்த அப்பாவிகளில் ஒருவர் இவர் என்கிற படிமமும் பரிணாமன் பற்றி அவரோடு நேரில் அதிகம் பழகாமலே எனக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. பல நிகழ்வுகள் அவரைப்பாதித்தது போலவே அவ்வக்காலங்களில் என்னையும் பாதித்துள்ளது.குறிப்பாக சோவியத் யூனியன் சிதைந்தபோது கதறியழுத தோழர்களில் ஒருவனாக அவரைப்போல நானும் இருந்தேன் என்பது அவரது கவிதை வழி அறிய நேர்கையில் இன்னும் மனம் நெருக்கமானது.தாயுண்டு தமிழுண்டு! நீ எங்கே சோவியத்தே?,புதிய ருசியா எழும், கவி வாக்குப் பொய்க்குமோ? மற்றும் ஒப்பாரியல்ல போன்ற கவிதைகளில் சோவியத் சிதைவைப் பாடித் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார்.உண்மையில் சோவியத் தகர்வு 90களில் என் போன்ற பலரை தலைகுப்புறப் புரட்டிப்போட்டது உண்மை.அது பற்றிய மனப்பதிவுகளை நாங்கள் யாரும் இன்றுவரை எழுதவில்லை.
இப்படி எப்படி ஆனதுவோ?
எதிரியும் நம்பக்கூடியதோ? என்று துவங்கும் பாடல் நினைக்க நெஞ்சுக்கு வேதனைதான் நேரக்கூடாத சோதனைதான்! நன்றிக்கடன்பட்ட நாடெல்லாம் என்று காணும் அந்த சோவியத்தை?
ஆற்றலுக்கோர் அளவில்லை
என்பதனை உலகுக்குக்
காட்டிநின்ற பெருங்கனவே
கண்மணியே சோவியத்தே!
ஒரு தேசத்தைக் கண்மணியே என்று சொல்லிக் கசிந்துருகும் மனம் சோவியத்தின் பால் இருந்தது.என் இரண்டாம் தாயகம் என்று சோவியத்தை மூத்த படைப்பாளி ஜெயகாந்தன் சொன்னது நினைவுக்கு வருகிறது.அது ஒரு கனாக்காலம் போல் ஆகிவிட்டது.அக்காலத்தின் அடையாளமாகப் பரிணாமனின் வரிகள் என் முன்னே விரிந்து கிடக்கின்றன.
தமிழக நெல் களஞ்சியமாம்
தஞ்சை மண்ணின் ஓரம்
தாத்தப்பட்ட நாப்பத்திரண்டு
பூக்கள் எரிந்த கோரம்
நெஞ்சம் குமுறும் அம்மா அம்மா
என்கிற அவருடைய பாடலை கிருஷ்ணசாமி பாடிய பல மேடைகள் கண்ணீரால் மீண்டும் கட்டப்பட்டன.கேட்ட மக்கள் கரைந்து நிற்பார்கள்.
இசைப்பாடல்களுக்கும் இடதுசாரி இயக்கங்களுக்கும் நீண்ட வரலாற்றுத் தொடர்பு உண்டு.தமிழகத்தில் இடதுசாரி இயக்கம் வேர் கொள்ளத் துவங்கிய நாட்களில் தோழர் ஜீவாவின் காலுக்குச் செருப்புமில்லை கால் வயிற்றுக் கூழுமில்லை என்கிற கோவை ஸ்டேன்ஸ் மில் தொழிலாளர் போராட்டம் பற்றி எழுதிய பாடல் எத்தனையோ தோழர்களால் தமிழகமெங்கும் பாடப்பட்டது.பின்னர் அடுத்தடுத்துச் சில இசைக்குழுக்களை பொதுவுடமை இயக்கம் உருவாக்கி மக்களிடம் அனுப்பியது.பாவலர் வரதராஜன் குழு,திருமூர்த்தி குழு,மதுரை தியாகி ராமசாமி கலைக்குழு, பிற்காலத்தில் கரிசல் குயிலகள் குழு,கைலாசமூர்த்தி பாடல் குழு எனத்துவங்கி இன்று ஏராளமான குழுக்களும் தனிப்பாடகர்களும் இடதுசாரி இயக்கங்களில் பாடி வருகிறார்கள்.இவர்கள் எல்லோருக்கும் பாடல்களை வழங்கும் வற்றாத ஊற்றாகப் பரிணாமன் எம்மோடு வாழ்கிறார்.
அமெரிக்க்க் கறுப்பின மக்கள் மத்தியில் பணியாற்றிய இசைக்குழுக்கள் பற்றி ஆய்வு செய்து வெளியாகியுள்ள MY SONG IS MY WEAPON என்கிற நூலைப்போல தமிழகத்தில் மக்கள் இயக்கங்களோடு கலந்து நின்ற –நிற்கிற- இசைக்குழுக்கள்-பாடகர்கள்-கவிஞர்கள் குறித்த வரலாற்றை இனிமேல்தான் நாம் யாரேனும் எழுத் வேண்டியிருக்கிறது.அவ்வரலாற்றில் மதிக்கத்தக்க ஒரு பங்கினை ஆற்றியவராக பரிணாமன் இருப்பார்.சந்தக்கவிதைகள் மறைந்து புதுக்கவிதைகள் வந்து சேர்ந்த இடைவெளியில் இசைப்பாடல்களை நம் சமூகம் மறந்து விட்டதுபோல ஆகிவிட்ட்து.இசைப்பாடல் என்ரால் அது சினிமாப்பாடல் என்றாகிவிட்டது.அதைத் தாண்டி சமூக அக்கறைமிக்க கிளர்ச்சிப்பாடல்களை பரிணாமன் போன்றோர் தொடர்ந்து வழங்கி வருவது முக்கியமானது.
சமீபத்தில் வெளியாகியுள்ள அவரது கவிதைத் தொகுப்பான என் பெயர் இந்தியா என் மனதைத் தொடவில்லை. மக்கள் போராட்ட வரலாற்றிலிருந்து வார்த்தைகளை உருவி எடுத்து மனசிலிருந்து நூலெடுத்துக் கோர்த்துக் கவி பாடும் பரிணாமனின் கவிமனம் திட்டமிட்டுச் செய்யும் பணிகளில் சறுக்கி விடத்தான் செய்கிறது.
கல்பனா மாத இதழ் வந்துகொண்டிருந்தபோது பரிணாமன் அதில் ஒரு நாவலும் எழுதியிருக்கிறார்.உரைநடையில் அவர் எழுதி ஏதும் நான் படித்ததில்லை.உழைப்பாளி வர்க்கத்திலிருந்து உருவாகி வந்த அபூர்வமான கவி பரிணாமன்.
பாரதத் தென் கோடி
பாண்டி மாமதுரையில்
பாட்டாளியாய் வளர்ந்தேன்!
பார்வை உலகெங்கும்
அளவளாவிடப்
பாட்டுரம் பெற்றுயர்ந்தேன்
சாரதி பாரதி
ஆகிட ரத்த்தினில்
சஞ்சரித்தெங்கும் வந்தேன்
சமகாலப் பாடலில்
பரிணாமன் என்றதோர்
சந்ததி கொண்டு வந்தேன்.
பரிணாமன் கவிதைகள் தொகுப்பை ஸ்ரீ செண்பகா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.என் பெயர் இந்தியா தொகுப்பை என்சிபிஎச் வெளியிட்டுள்ளது.
2 comments:
தமிழ் அவர்களே! மதுரை அனுமந்தராயன் கோவில் தெருவில் நவபாரதி தங்கியிருக்கும் அறையில் கொத்தனார் கிருஷ்ணனாக அறிமுகமானவர் பரிணாமன். " எங்களைத்தெரியலையா"என்றபாடலை உருவாக்கி அவர் பாடிக்காட்டிய நிகழ்வு,மறக்க முடியாத ஒன்று..கோவை மாநாட்டின் பொது ஜெ.கே யோடு வந்திருந்தாரென்று நினைக்கிறென்---காஸ்யபன் .
வணக்கம். கடந்த 4 நாட்களும் சென்றதே தெரியவில்லை, அந்த அதி அற்புதமான நாட்கள், இரண்டாவது சர்வதேச குறும்படவிழா
வில் கழிந்தமை குறித்த பெருத்த மகிழ்வில் திளைத்த வண்ணம் உள்ளோம். மீண்டும் அந்த நாட்கள் வருவதற்கு ஒரு வருடம்
காத்திருக்க வேண்டும். ஆம், த.மு.எ.க.ச. வின் அரும்பணி அளவிடற்கரியது. தேர்ந்த திரையிடல், தேர்ந்த ரசனையை
வளர்த்தெடுத்ததில் புதிய உற்சாகம் ஊற்றெடுக்கிறது. உங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்.............அங்கயற்கண்ணி அருட்செல்வன், பாண்டிச்சேரி.
Post a Comment