Friday, June 8, 2012

எப்படி எழுதுவது ?-விவாதத்துக்கான குறிப்புகள்

 

hosur-5 (ஓசூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய இளம் படைப்பாளிகளுக்கான படைப்பூக்க முகாமில் –மே 18,19,20-2012 இல் வாசிக்கப்பட்ட கட்டுரை)

பேனாவால் எழுதலாம்.

பென்சில் கொண்டு எழுதுவாரும் உளர்.

நேரடியாக கணிணியில் தட்டுவார் இன்று அதிகம்.

ஒருவர் சொல்ல ஒருவர் எழுத அல்லது தட்டச்சு செய்ய என்கிற நடைமுறையும் உள்ளது.

இந்த ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட மனநிலையைக் கோருவதாக இருக்கிறது.பேனாவால் தாளில் எழுதியவர் கணிணிக்குச் சென்றபோது ஒரு சிறிய உளவியல் நெருக்கடிக்கு ஆளாகித்தான் பழக்கமானார். யோசித்துக்கொண்டே இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட நிமிடத்தில் கணிணியின் திரை காணாமல் போகும்.கையால் எழுதும் ‘க’ வும் ’ற’ வும் என்னுடைய ’க’ வாகவும் ’ற’ வாகவும் இருந்தது.கணிணியில் யாரோ வடிவமைத்து வைத்திருக்கும் ’க’ வை எடுத்து அதில் என் எண்ணங்களைச் சொல்ல நேர்கிறது. அந்த என்னுடைய என்கிற சொந்த உணர்வு மறைந்து போகிறது.கையால் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிப் பின் அதை அச்சில் பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி இதில் குறைந்து விட்டது.கணிணியில் எழுதும் படைப்பு மனதை மின்சாராமும் மின் வெட்டும் கூடத் தகவமைக்கிறது.

சொல்லச்சொல்ல எழுதுவதில் ஒருவர் காத்திருக்கிறாரே என்கிற நெருக்கடி இருந்துகொண்டே இருக்கும்.அதையும் வென்றவர்கள் உண்டு. இன்னும் நாம் எங்கே உட்கார்ந்து எழுதுகிறோம்- தனி அறையிலா,கூட்ட்த்து நடுவிலா பொது இடத்திலா என்பதெல்லாம்கூட எழுத்தின் போக்கைப் பாதிக்கத்தான் செய்யும்.

எப்படி எழுதினாலும் அதை எழுத்தென்போம்.இங்கு இந்த நடைமுறை உண்டாக்கும் உளவியல் பற்றி நாம் விரிவாகப்பேசப்போவதில்லை-அதுவும் அவசியமே என்றபோதும். எழுத்தின் தொழில்நுட்பம் அல்லது நல்ல வார்த்தையில் சொன்னால் எழுதும் கலை பற்றி சற்றுப் பேசிப்பார்க்கலாம்.

எழுதும் கலையில் மூன்று அம்சங்கள் மிக முக்கியமானவையாகின்றன.

1.உள்ளடக்கம்

2.உருவம்/அழகியல்

3.படைப்பு மனநிலை

அ.உள்ளடக்கம்

எதை எழுதுவது என்கிற பொதுவான புரிதல் விரிவாகத் தனியே பேசப்பட வேண்டியது.அவரவர் வர்க்க நிலை சார்ந்து பிறந்த நிலப்பரப்பு-காலம்-சாதி-பால் சார்ந்து எதை எழுதுவது என்பதை படைப்பாளி தீர்மானிக்கிறார்.நாம் இங்கு பேச எடுத்துக்கொள்வது அதுவல்ல. ஒரு குறிப்பிட்ட சிறுகதை அல்லது கவிதைக்கான ஒரு குறிப்பிட்ட உள்ளடக்கம்/கருப்பொருள் பற்றியே.ஒரு படைப்பின் உருவத்தை படைப்பாளி தேர்வு செய்யும் இந்த உள்ளடக்கமே தீர்மானிக்கிறது.

வெண்மணிக் கொடுமையை அதன் முழுமையான வரலாற்றுப் பின்னணியோடு கவிதையில் சொல்ல முயன்ற நவகவிக்கு ஒரு நெடுங்கவிதை என்கிற உருவமே கை கொடுத்தது.அதை உரைநடையில் சொல்ல முயன்ற இந்திரா பார்த்தசாரதிக்கும் சோலை சுந்தரபெருமாளுக்கும் பாட்டாளிக்கும் நாவல் என்கிற உருவம் பொருத்தமாக இருந்தது.தன் குருதிப்புனல் நாவலில் வெண்மணியை பிராய்டிய உளவியல் பார்வையில் இந்திரா பார்த்தசாரதியும் செந்நெல் நாவலில் விவசாயத்தொழிலாளர் நிலைபாட்டில் நின்று சோலை சுந்தரபெருமாளும் தன் கீழைத்தீ நாவலில் இடது தீவிரவாதப் பார்வையில் பாட்டாளி சொல்ல முற்பட்ட போது --ஒரே நிகழ்வு பற்றிய மூன்று வேறு வேறு உள்ளடக்கங்களாக அவை மாற்றம் பெறுகின்றன.இப்போது இந்திரா பார்த்தசாரதியின் உள்ளடக்கத்துக்கு ஏற்ற மொழியும் உத்தியும் வேறாகவும் சோலை சுந்தரபெருமாளின் வர்க்கநிலை சார்ந்த உள்ளடக்கத்துக்கான மொழியும் உத்தியும் வேறாகவும் அதிதீவிர நிலைபாட்டில் பேசிய பாட்டாளியின் உத்தியும் மொழியும் வேறாகவும் அமைவது தவிர்க்க முடியாததாகிறது.நவகவியும் புதுக்கவிதை என்கிற உருவத்தில் அல்லாமல் மரபுக்கவிதை என்கிற உருவத்திலேயே அதைச்சொல்ல நேர்கிறது.அதே வெண்மணியை தலித் மக்களின் குரலாக ஓர் ஆவேசத்தை பொது மேடைகளில் எடுத்துச்செல்ல இன்குலாப் “..எதையெதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க... நாங்க எரியும்போது எவன் மசிரப் புடுங்கப்போனீங்க..” என்று ஓர் இசைப்பாடல் வடிவத்தைக் கையில் எடுத்தார்.எந்த உள்ளடக்கம் என்பதும் –அதாவது ஒரே வெண்மணிக் கொடுமையின் எந்தப் பகுதியை உள்ளடக்கமாகக் கொள்கிறோம் என்பதும்- அதை யாருக்குச் சேர்க்கப்போகிறோம் என்பதும் இங்கு உருவத்தைத் தீர்மானித்ததைக் காண்கிறோம்.இன்னும் வெண்மணியின் சொல்லப்படாத கதைகளும் கவிதைகளும் எத்தனையோ வடிவங்களில் வரவேண்டிய பாக்கியும் இருக்கிறது.

அருணனின் கடம்பவனமும் மதுரையை மையமாகக் கொண்ட நாவல்தான்.சு.வெங்கடேசனின் காவல்கோட்டமும் மதுரையை மையமாகக் கொண்ட நாவல்தான்.நா.பார்த்தசாரதியின் பொன்விலங்கும் மதுரையைத்தான் சுற்றியது.அருணன் ஒரு அரசியல் சித்தாந்தப் போராட்ட்த்தைக் கருப்பொருளாக-உள்ளடக்கமாக்க் கொண்டார்.ஒரு இனக்குழுவின் வாழ்முறையை சு.வெ. உள்ளடக்கமாகக் கொண்டார்.நா.பா.வோ தேசியப் பெருமிதம் பற்றிய ஒருவித ஈர்ப்பையும் பிளேட்டோனியப் புனிதக்காதலையும் உள்ளடக்கமாகக் கொண்டார்.களம் ஒன்றாக இருந்தாலும் உள்ளடக்கம் வேறு வேறாக அமைந்த்தால் இம்மூன்று நாவல்களின் விரிவும் பரப்பும் அளவும் வடிவமும் மொழியும் முற்றிலும் வேறு வேறாக அமைந்த்தை நாம் பார்க்க முடிகிறது.

தன் கதைகளின் உள்ளடக்கம்- அவற்றின் நோகம் குறித்துப் புதுமைப்பித்தனுக்கு இருந்த தெளிவுதான் அவரது விதவிதமான எழுத்து முயற்சிகளுக்கு- சோதனைகளுக்கு- அடிப்படையாக அமைந்தது எனலாம்.

“பொதுவாக என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் பண்ண உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல.பிற்கால நல்வாழ்வுக்குச் சௌகரியம் பண்ணி வைக்கும் இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடும் அல்ல.”

என்பார் அவர்.உள்ளடக்கம் மட்டுமல்ல எழுத்தாளனின் நோக்கமும் ஒரு படைப்பு எப்படி எழுதப்படுகிறது என்பதற்கு அடிப்படையாக அமையும் என்பதற்கு புதுமைப்பித்தன் ஒரு உதாரணம் எனலாம்.

ஆ.உருவம் அல்லது வடிவம்/அழகியல்

”தமிழில் இம்மாதிரி உரைநடை நவீனம் பொதுமக்களுக்குஇதுவரை அளிக்கப்படவில்லை.ஆகையால் இந்நூல் வாசகர்களுக்கு ரசமாகவும் போதனை நிறைந்ததாகவும் இருக்கலாம் எனப் பெருமை கொள்கிறேன்.இம்மாதிரிப் புதிய முயற்சியில் ஏதாவது குற்றங்குறைகள் இருப்பின் பொருத்தருளுமாறு பொதுமக்களை வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்”

மேற்கண்ட வரிகள் 1879ஆம் ஆண்டு வெளியான தமிழின் முதல் நாவலான பிரதாபமுதலியார் சரித்திரம் நூலுக்கு அதன் ஆசிரியர்(!) ச.வேதநாயகம் பிள்ளை.ரசமாகவும் போதனை நிறைந்ததாகவும் என்கிற இரண்டு வார்த்தைகளும் கூர்ந்து நோக்கத்தக்கவை.தெருக்கூத்தில் குற்றங்குறை இருந்தால் பொறுத்தருளக்கேட்கும் கூத்துக்கலைஞனைப்போல நாவல் என்கிற ஒரு புதிய உரைநடை இலக்கிய வடிவத்தை முதன் முதலாகக் கைக்கொள்ளும் எழுத்தாளன் பேசுகிறான்.

கவிஞனுக்கு அத்தகைய மனத்தடைகளோ தயக்கங்களோ இருப்பதில்லை.ஏனெனில் கவிதைக்கு மிக நீண்ட வரலாறும் ஏற்பும் இருக்கிறது.ஆதிப்புராதன சமூகங்களில் நிலவிய கூட்டு வாழ்க்கையிலேயே உழைப்புப் பாடல்கள் எனும் வடிவில் கவிதை பிறந்து விட்டது.இயற்கையை வேண்டியும் ஏவல்கொண்டு அடக்கியாளவும் அம்மக்கள் நடத்திய சடங்குகளில் உச்சாடஞ்செய்யப்பட்ட மந்திரங்களும் கவிதை வடிவில் அமைந்தன.ஆகவே கவிதைக்கு மந்திர சக்தி இருப்பதான நம்பிக்கை இன்றுவரை தொடர்கிறது.இசைபாடவும் வசைபாடவும் ஏற்றவராக்க் கவிஞர்களே கொள்ளப்பட்டனர் என்பார் கைலாசபதி.மார்க்சிய அறிஞர் காட்வெல் “ கவிதை கூட்டு மொழியின் வெளிப்பாடாகவும் பொதுமக்களின் உணர்ச்சி வெளிப்பாட்டின் வடிவமாகவும் அமைந்தது “ என்று குறிப்பிடுகிறார்.புதுக்கவிதை வந்தபோது இந்த இலக்கணமெல்லாம் அடிவாங்கியது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.தனி மனித உணர்ச்சியை மையமாகக் கொண்ட உரைநடை இலக்கியத்தின் கூறுகளை புதுக்கவிதை உள்வாங்கிப் பயணம் செய்தது.

நிற்க.

உருவம் என்பது கதை அல்லது கவிதை எப்படிச்சொல்லப்பட்டுள்ளது என்பதைப் பற்றியது.அஎன்ன சொல்கிறாய் என்பதை விட எப்படிச்சொல்கிறாய் என்பதுதான் முக்கியம் என வாதிடுவோர் எல்லாக்காலங்களிலும் இருப்பர்.நம்மைப்பொறுத்தவரை இரண்டும் சம முக்கியத்துவம் உடையவை.எதை நீ- எப்போது- எப்படிச்சொல்கிறாய் என்கிற மூன்றும் நமக்கு முக்கியம்.

ஒரு படைப்பின் உருவம் அல்லது வடிவம் பற்றிப் பேசுங்கால் “அடியின் சிறப்பே பாட்டெனப்படுமே”என்று தொல்காப்பியம் கூறுவதுபோல படைப்பின் உள் கட்டமைப்பு பற்றிப் பிரித்தும் விரித்தும் பேசியாக வேண்டும்.கதைக்கும் கவிதைக்கும் இது வேறு வேறாக அமையும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

1,மொழிநடை

2.உத்தி

3.பாத்திரப்படைப்பு

ஆகிய மூன்று கூறுகள் உருவத்தின் அடிப்படை அம்சங்களாகின்றன.

1.மொழிநடை

”எளிய பதங்கள்,எளிய நடை,எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம்,பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு,இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான்” என்கிற பாரதியின் முன்வைப்பில் உள்ள எளிமை ஒன்றை மட்டுமே பிடித்துக்கொண்டு நம் படைப்பு மொழி நின்றுவிடக்கூடாது.சுவை புதிது,பொருள் புதிது,சொல் புதிது என்றும் பாரதி சொன்னதையும் சேர்த்த்துக்கொள்ள வேண்டும்.நாம் எதைச் சொல்ல வருகிறோமோ யாருக்குச் சொல்லப்போகிறோமோ கதையில் எந்தக் கதாபாத்திரத்தின் வழியே அதைச் சொல்கிறோமோ அதற்கேற மொழி நடை அமைய வேண்டும்.இதுபற்றி ரகுநாதன் குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும் “ தமிழில் எழுதி வந்தவர்கள் காதலாயினும் கையறு நிலையாயினும் ஒரே மாதிரி நடையில் ஒரே மாதிரி வேகத்துடன் பாவத்துடன்தான் எழுதினார்கள்” இது சரியல்ல.சொல்ல வரும் உணர்ச்சிக்கும் மொழி உகந்ததாக இருக்க வேண்டும்.தனித்தமிழ், செந்தமிழ் நடை என்பதெல்லாம் படைப்பிலக்கியத்தில் கவைக்குதவாதவை எனக் காலம் நிராகரித்துவிட்ட்தை நாம் உணர வேண்டும்.

தலித் இலக்கியம் தமிழில் முன்னுக்கு வந்த காலத்தில் அதன் மொழி குறித்துத்தான் அதிகமான சர்ச்சைகள் எழுந்தன.தொல்காப்பியர் காலந்தொட்டே இவ்விவாதம் இருந்துள்ளது.

“சேரி மொழியாற் செவ்வதிற் கிளந்து

தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்

புலனென மொழிப் புலனுணர்ந்தோரே” என்பது செய்யுளியலில் தொல்காப்பியர் கூற்று.இவ்வரிகளுக்கு

பேராசிரியர் உரை இவ்விதம் அமைகிறது “ சேரி மொழி என்பது பாடி மாற்றங்கள்.அவற்றானே செவ்விதாகக் கூறி ஆராய்ந்து காணாமைப் பொருட்டொடரானே தொடுத்துச்செய்வது புலன் என்று சொல்வார் புலனுணர்ந்தோர் என்றவாறு அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச்செய்யுளாகிய வேண்டுறைச் செய்யுள் போல்வன வென்பது கண்டுகொள்க” அதாவது நாடகத்தில் கூற்றுக்குரியோர்க்கு ஏற்றவண்ணம் பேச்சு அமைதல் வேண்டும் என்கிறார்கள்.அதாவது பாத்திரங்களின் மொழியாக வரும்போது மக்கள் மொழி இருக்கலாம்.ஆசிரியர் கூற்றாக வரும்போது பொதுமொழி இருக்கட்டும் என்பதே இதன் பொருள்.ஆனால் இன்று மு.ஹரிருஷ்ணன் போன்றோர் முற்றிலும் அவர்தம் வட்டாரப் பேச்சுமொழியிலேயே இடக்கரடக்கல் ஏதுமின்றிக் கட்டற்ற காட்டாற்று வெள்ளம்போல எழுத்த்துவங்கியுள்ளனர்.அத்தகைய மொழிக்கு வரவேற்பும் விமர்சனமும் சேர்ந்தே வருவதையும் பார்க்கிறோம்.அது படைப்பாளியின் சுதந்திரம்தான் என்றபோதும் வாசகனுக்கு நெருக்கமான மொழி என்பதும் முக்கியம் அல்லவா?

“கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்புச் சாதனமாக மட்டும் வைத்துத் தாவிச்செல்லும் நடை ஒன்றை அமைத்துக்கொண்டேன்.நானாக எனக்கு வகுத்துக்கொண்ட பாதை.தமிழ்ப்பண்புக்கு முற்றிலும் புதிது” –இது புதுமைப்பித்தன்.

“சொல்லும் பொருளும் நெஞ்சில் கண்ணாமூச்சி ஆடுகின்றன.வரம்புகள் கடந்த விஷயங்களை எழுத்தில் பிடிக்க முயல்கையில் அவை நழுவுகின்றன.ஊடலாடுகின்றன.பாஷையே பரிபாஷையாக மாறுகின்றது”-இது லா.ச.ராமாமிருதம்.

”மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும்” என்பதும் “வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர் சுட்டு ஆகலான்” என்பதும் தொகாப்பிய பொருளதிகாரம்.அதாவது மரபு வழிக் கூறவில்லை எனில் பொருள் வேறுபடும் என்பதும் உயர்ந்தோர் கூறும் வழக்கால் மரபு தோன்றுகிறது.வழக்கை உருவாக்குவதும் செயல்படுத்துவதும் உயர்ந்தோரே என்பதும் இதன் விளக்கம்.

மொழியில் விழுத்திணை(உயர்குடி வழக்கு) என்றும் இழிசனர் வழக்கு என்றும் இரண்டாக இருந்து வந்த்தும் பக்தி இயக்ககாலம் வரை இழிசனர் வழக்கு எழுதா எழுத்தாகவே இலக்கியத்தில் இடமின்றிட் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்ட்தும் நம் மொழிவரலாற்றின் முக்கியமான பக்கங்கள்.

மேற்சொன்ன எல்லாவற்றையும் பகுத்தாய்ந்து பார்க்கையில் ஒரு படைப்பின் மொழி என்பது அலங்காரமாகப் படைப்பில் நான் இருக்கிறேன் பார்த்தாயா இல்லையா என்று துருத்திக்கொண்டு நில்லாமல் உள்ளடக்கத்திற்கும் நோக்கத்துக்கும் உணர்ச்சிக்கும் பொருத்தமானதாக வாசிப்புக்கு இடையூறாக நில்லாமல் அமைய வேண்டும்.ஈராயிரமாண்டுப் பாரம்பரியம் மிக்க நம் தமிழ் மொழியின் செறிவான சொற்களையும் இலக்கணத்தையும் இலக்கியங்களையும் கற்றுத்தேறாமல் அன்றாடப்புழக்கத்தில் உள்ள தேய்ந்துபோன அலுமினியப்பாத்திரங்கள் போன்ற குறைவான சொல்வளத்தைக் கொண்டே நம் படைப்பாளிகள் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விமர்சன-சுய விமர்சன-நோக்குடன் நாம் பார்க்க வேண்டும்.

இவ்வகையில் ரகுநாதன் –புதுமைப்பித்தன்- கு.அழகிரிசாமியின் பள்ளி (SCHOOL OF THOUGHT)மாணாக்கர்களாக நாம் இருப்பது நல்லது.க.நா.சு- மௌனி-சுந்தரராமசாமி என்கிற சொந்தப் பாரம்பரியமற்ற பள்ளி மட்டும் போதாது.மேனாட்டுக் கலைச்செல்வங்களுக்காக இவர்கள் பள்ளியில் நாம் அமர்வது அவசியம் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இடைக்காலத்தில் பின் நவீனத்துவ வாதிகளாகத் தம்மைக் காட்டிக்கொள்ள முயன்ற சிலரின் சொல் விளையாட்டுக்களில் நாம் வீழ்ந்துவிடக்கூடாது.லா.ச.ராவின் பரிபாஷை என்பதை சரியான அளவில் சரியான கோணத்தில் உள்வாங்க வேண்டும்.நீண்ட காலம் செய்யுளிலும் சூத்திரத்திலும் மந்திரத்திலும் பரிபாஷையாக முடங்கிக்கிடந்த மொழியை நடமாட வைக்க ’வழங்கும் வசன நடை’ ஒன்று வரப் பலகாலம் ஆனதை மறந்து விடக்கூடாது.அதே சமயம் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையிலான பரிபாஷையாக உயிர்ப்புள்ள படைப்பு திகழமுடியும் என்பதையும் நாம் புரிந்து ஏற்க வேண்டும்.

மரபுகளை மீறாமல் புதியது பிறக்காது.மரபை முழுதாக அறியாமல் அதை மீறவும் முடியாது.மொழியிலும் சொல்புதிது வேண்டுமெனில் மரபுமீறல்கள் தவிர்க்க முடியாது.ஆனால் அதன் அவசியம் அதன் அளவு அதன் எல்லை குறித்த தன்னுணர்வு தேவை.

மக்கள் மொழியான நாட்டுப்புற இலக்கியங்களிலிருந்தும் பண்டைய தமிழிலக்கிய மரபிலிருந்தும் நம் படைப்புக்கான மொழியைப் பெற வேண்டும்.நாட்டுப்புற இலக்கிய வடிவங்களான பாடல்கள்,கதைப்பாடல்கள்,விடுகதைகள்,சொலவடைகள்,பழமொழிகள் போன்ற எல்லாவற்றிலிருந்தும் நாம் வார்த்தைகளை உருவி எடுக்கப்பழக வேண்டும்.இடையறாத வாசிப்பின் மூலம் நம் மனதில் தேக்கி வைக்கும் சொற்சேகரத்திலிருந்து படைப்பு மனம் தேவையானவற்றை தேவையான நேரத்தில் எடுத்துக்கொள்ளும்.

கிள்ளிப்போட்டுக் கிட்ட நிக்கலாம்..அப்படி ஒரு இருட்டு..

அரிசின்னு அள்ளிப்பார்ப்பாரும் இல்லை உமின்னு ஊதிப்பார்ப்பாரும் இல்லை.

சாமியே சைக்கிள்ளே போகுது பூசாரி புல்லட் கேட்கிறாரு

போன்றவையும் நமக்குத்தேவை.காமம் செப்பாது கண்டது மொழிமோவும் நமக்குத் தேவை.

புதுக்கவிதை பிறந்த காலத்தில் அதன் முக்கிய அம்சங்கள் பற்றிச் பேசிய க.நா.சு.,

“1. வார்த்தைச் சேர்க்கைகள் காதில் ஒருதரம் ஒலித்து உள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்ப வேண்டும்.

2.முதலில் புரியாமலிருந்து படிக்கப் படிக்கப் புரியத்தொடங்குவதாக இருக்க வேண்டும்.

3.நள்ளிரவில் விழித்துக்கொள்ளும்போது திடுதிப்பென காரண காரியமேயில்லாமல் மனசில் தானே தோன்றிப் புது அர்த்தம் தரவேண்டும்.”

என்றார்.எழுத்தாளர் வாசகர் இருவருக்கும் பொதுவான அவரவர் மொழிக்கிடங்கிலிருந்துதான் பொது அர்த்தங்கள் கிடைக்கின்றன.கநாசு வின் பார்வை எப்போதும் முற்றிலும் ரசனை சார்ந்ததுதான்.ஆனால் இலக்கியத்துக்கு அது முக்கியம்.அது ஒரு முகம்.அவர் மேலே கூறும் அனுபவம் மொழியின் சாத்தியங்கள் சார்ந்த்து என்பதையே இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.முதலில் புரியாமல்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏதுமில்லை.இந்த வரி மொழி சார்ந்த்தல்ல கவிதையின் உள்ளடக்கம்/அர்த்தம் சார்ந்த்து எனக்கொள்ளலாம்.

சொல்லாலே விளக்கத் தெரியலே அதைச் சொல்லாமலும் இருக்க முடியலே என்று பட்டுக்கோட்டையார் காதலுக்குச் சொன்னதை நாம் படைப்பு மொழிக்கும் பொருத்திப்பார்க்கலாம்.சொல்லிலிருந்து சொல்ல முடியாமைக்கும் சொல்ல முடியாததை உணரச்செய்வதற்குமாக நமது சொற்கள் நகரவேண்டியிருக்கிறது. ஜிப்ஸி சிறுகதையில் மக்சீம் கார்க்கி “ என் காதலை வார்த்தைகளால் சொல்லமுடியவில்லை.அந்த வயலினைக்கொண்டுவா.அதில் வாசித்துக்காட்டுகிறேன்” என்று எழுதியிருப்பார்.மனக்குகை ஓவியங்களானாலும் எழுத்தாளன் அவற்றைத் தன் வார்த்தைகளால்தான் வரையவேண்டியிருக்கிறது.சொல்லைப் புதுப்பித்துப் புதுப்பித்து அதில் தன் உயிரையும் சக்தியையும் ஏற்றித் தீ என்று எழுதினால் தாளில் தீப்பிடிக்கும் நிலைக்குக் கொண்டுசேர்க்க வேண்டும்.

எனக்கு இப்படியான மொழிதான் கை வருகிறது நான் என்ன செய்யட்டும் என்று ஒரு நவீன படைப்பாளி சொல்ல முடியாது.பொதுவாக எழுதுபவர் எல்லோருமே ஒரு மத்தியதரவர்க்க மனோபாவத்தில்(பிறப்பால் அப்படி இல்லாவிட்டாலும்)தான் இயங்குகிறோம்.மொழி குறித்த மனத்தடைகளுக்கு இந்த வர்க்கநிலையும் ஒரு காரணம்.நம் தலைகளில் நீண்டகாலமாக ஏற்றப்பட்டிருக்கும் மொழி குறித்த புனிதம்-தீட்டு என்கிற கருத்துக்கள் நாம் படைப்பில் ஈடுபடும்போது வந்து நின்று வழிமறிக்கின்றன.மொழியைச் சுதந்திரமாகக் கையாளவே நாம் நம்மை கீழ்வர்க்கப்படுத்திக்கொள்ளவும் அ-சாதிப்படுத்திக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.

மௌனி,நகுலன்,கோணங்கி,ரமேஷ்-பிரேதன் போன்றோரின் மொழி வாசகப்பங்கேற்புக்கு எந்த வாசலையும் திறந்து வைக்காமல் நகர்வதாகும்.நவீன கவிதைகள் இதுபோல அசாதாரணமான வடிவ இறுக்கம் ,மொழிச்சிக்கனம்,படிம அடர்த்தி,உள்நோக்கிய பார்வை கொண்டு இயங்கியாக வேண்டும் என்பது நீண்டகாலமாக எழுதப்படாத விதியாக இருப்பதை நாம் காண்கிறோம்.முற்போக்குப் படைப்பாளிகளும் ஈழத்திலிருந்து வரும் படைப்புகளும் பெண் படைப்பாளிகளின் புதிய வரவும் தலித் எழுத்துக்களுமே இப்போக்கை சக்தியிழக்கச்செய்தன எனலாம். மொழியின் கட்டமைக்கப்பட்ட புனிதங்களை நவீன பெண் படைப்பாளிகள் தங்கள் ஆவேசமிக்க கவிதைகளால் உடைத்து நொறுக்கிவிட்டனர்-சில அதீதங்களும் இருந்தன என்றபோதும்.மொழியின் எல்லைகளையும் சாத்தியங்களையும் அவர்கள் விரிவாக்கமும் செய்துள்ளனர்.மிகசமீப காலமாக எழுத வந்துள்ள திருநங்கையரின் மொழி அவர்களின் ஈராயிரமாண்டுத் தனிமையையும் கேட்கப்படாத உடல்/மன வாதைகளையும் சுமக்க இயலாமல் திணறுவதைக் கான முடிகிறது.ப்ரியாபாபு அவர்களுக்கான பொதுமொழியில் பேசுகிறார் எனில் லிவிங் ஸ்மைல் வித்யா தனித்த வேதனையை மனச்சிதைவை கூர்மையான மொழியில் பேசுகிறார்.

புதிதாக எழுதத்துவங்கும் இளம் படைப்பாளி தலித்/பெண்/திருநங்கையர்/சிறுபான்மையினர் எழுத்துக்களைச் சுமக்கும் ’மொழிகளை’ வாசித்து உள்வாங்குவது அவசியம்.

இலக்கியம் மொழியின் சாத்தியக்கூறுகளால் ஆனதல்ல.மொழியின் ரூபத்தில் வாழ்வின் சாத்தியக்கூறுகளால் ஆனது என்பதை மட்டும் ஒருபோதும் நாம் மறந்துவிடலாகாது.

2.உத்தி

கதையின் முதல் வரி எப்படி அமைய வேண்டும்.முடிப்பு எப்படி இருக்க வேண்டும்.ஒரு நிகழ்வை எந்தக்கோணத்தில் நின்று பார்க்க வேண்டும்.எந்தக் கதாபாத்திரத்தின் பார்வையில் கதையைச் சொல்வது.நான் பேசுவதாகவே அமைப்பதா அவன் அவள் என்று போவதா அல்லது ரமேஷ்,சுசீலா என்று கதாபாத்திரங்களுக்குப் பேர் வைத்து நகர்த்துவதா.அல்லது மாடு பேசுவதாகவோ புளியமரம் அல்லது குளத்தங்கரை அரசமரம் பேசுவதுபோலவோ கதையைச் சொல்லுவதா, நனவோடை உத்தியா முற்றிலும் உரையாடலாகவே கொண்டு செல்வதா ,யாராக இருந்து கதையைச் சொல்லுவது– இது போன்ற பல நூறு சின்னச் சின்ன நுட்பங்களையே நாம் உத்தி என்ற பேரால் குறிக்கிறோம்.

தான் சொல்ல வந்ததை வாசகனுக்குக் கடத்த நினைத்த உணர்வை சரியாகக் கொண்டுசெல்ல படைப்பாளி கையாளும் கலைத் தந்திரங்களே உத்தி எனப்படும்.

வேலையற்ற இளைஞனின் மனநிலை பற்றிய கரையும் உருவங்கள் என்கிற தன் கதையை வண்ணநிலவன் ”அவன் தலையைக் குனிந்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான்” என்று துவக்கியிருப்பார்.சக்கிலியர் சமூகத்தின் வாழ்வைச்சொல்ல வந்த பூமணியின் பிறகு நாவல் “ ஏலேய் சக்கிலியத்தாயிளி மாடு பாருடா படப்புல மேயிறத..” என்று துவங்கும்.கம்யூனிஸ்ட் இயக்கத்தை லட்சியவெறி பிடித்த அகம்பாவமாகக் காட்டும் நோக்கத்துடன் எழுதப்பட்ட ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரல் நாவல் கைக்கொள்ளும் உத்தியும் மொழியும் நாம் கவனிக்கத்தக்கவை.ஒரு நாவலுக்குள்ளேயே சிறுகதைகள்,நாடகம்,கவிதைகள்,கடிதங்கள்,கட்டுரைகள்,நினைவுக்குறிப்புகள் என மொழியின் எல்லா வடிவங்களையும் கொண்டுவரும் உத்தி படைப்பாளிக்கு நிறையச் சுதந்திரத்தை வழங்குவதைக் காண்கிறோம்.

சுந்தரராமசாமியின் புளிய மரத்தின் கதை ஒரு உத்தி எனில் ஜேஜே சில குறிப்புகள் முற்றிலும் வேறான ஒரு உத்தியில் எழுதப்பட்டுள்ளது.ஜேஜே என்னும் கற்பனைப் பாத்திரத்தை நிஜம்போலும் படைத்து ஒரு புதிய வழியை அவர் படைப்புலகுக்குத் திறந்து விட்டார்.சமீபத்திய வரவான கீரனூர் ஜாகீர்ராஜாவின் வடக்கேமுறி அலிமா முற்றிலும் புதிய ஒரு உத்தியைக் கையாண்டுள்ளது.ஆதவன் தீட்சண்யாவின் லிபரல் பாளையத்துக்கதைகள் உலகமய காலத்தைப் படம் பிடிக்க மேற்கொள்ளப்பட்ட புதுவகை உத்தி எனக் கூறலாம்.கன்னட/மராட்டிய அனுபவங்களிலிருந்து உரம் பெற்று தமிழில் எழுதப்பட்ட கருக்கு,சிலுவைராஜ் சரித்திரம் போன்ற தன் வரலாற்று நாவல்கள் ஒரு புதுவகை உத்திதாம்.

இந்த உத்தி,வடிவம்,மொழி பற்றிய தன்னுணர்வு ஏதுமின்றிக் களங்கமில்லாத கிராமத்து மனதுடன் கதை சொன்ன கு.அழகிரிசாமி அந்தக் களங்கமற்ற படைப்பு மனதின் காரணமாகவே பல அற்புதமான படைப்புகளைத் தந்து நாம் மேலே பேசிய முறைமைகளுக்கெல்லாம் சவாலாக விளங்குகிறார்.நாட்டுப்புற மொழியுடன் ஒரு தத்துவப்பார்வையை இணைத்துப் படைத்த கி.ராஜநாராயணனும் இவ்வரிசையில் வைக்கத்தக்கவரே.

3.படைப்பு மனநிலை

எதைச் செய்வதற்கும் ஒரு மனசு வேண்டுமல்லவா? மனசில்லாமல் செய்யும் எதுவும் ஜெயிக்காது.கதை ,கவிதை எழுதவும் ஒரு மனசு வேணுமல்லவா? அதையே படைப்பு மனநிலை என்கிறோம்.ஒருமுறை தமுஎச அன்று நடத்திய நாவல் முகாமுக்கு வந்திருந்த எழுத்தாளர் அசோகமித்திரனிடம் படைப்பு மனநிலை பற்றி நம் தோழர்கள் கேட்டபோது அவர் சொன்ன பதில் : ”அப்படின்னு தனியா ஒண்ணும் இல்லை.இதுதான் என் வெளிப்பாட்டு வடிவம் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையும் தன் ஏற்பும் அழுத்தமான சமூக அக்கறையுமே படைப்பு மனநிலையாக வடிவெடுக்கும்”

அதெல்லாம் ஒரு இன்ஸ்டிங்க்ட்-ஒரு ஸ்பார்க்-எனச்சொல்லி உழைப்பால் வருவதல்ல படைப்பு மனநிலை என்று ஒதுக்கிச்செல்ல முயல்வார் உளர்.ஒரு துளிர்ப்பும் வெடிப்பும் படைப்புக்கு முக்கையம் என்பதில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை.ஆனால் ஒரு ஸ்பார்க்- மின்னல்கீற்று மட்டுமே படைப்பாக முடியாது.படைப்பை அது தூண்டலாம்.நன்கு பண்படுத்தப்பட்ட நிலம்போலத் தன் மனதை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கும் படைப்பாளியின் மனதில் இந்துத் துளி வீழும்போதுதான் படைப்பு கிளை பரப்பி விரிகிறது.

இந்தத் “தயார் நிலை” என்பது என்ன?

இடையறாத வாசிப்பும் எழுத்து முயற்சியும் இன்னொருவர் நிலைபாட்டிலிருந்து தன்னையும் இந்த வாழ்வையும் பார்க்கும் மனப்பயிற்சியும் பிறர் வலிகளைத் தன் வலியாக உணரும் பண்பாடும்தான் இந்தத் தயார்நிலையாகும்.நான் யார் என்ற கேள்விக்கு மனித குல வரலாற்றின் நெடும்பாதையில் இன்று வாழ நேர்ந்த மனிதன் நான் எனப்பதிலுரைக்கும் மனமே இந்தத்தயார் நிலை.அறிவால் இவ்வுலகின் போக்கையும் பிரபஞ்ச இயக்கத்தையும் புரிந்துகொள்ளும் அறிவு மேதமையும் படைப்பாக்க உந்துதலும் இணையும் புள்ளிதான் இந்தத் தயார் நிலை.

பொதுவாக தமிழ்ப்படைப்பாளிகள் மத்தியில் அறிவுக்கு எதிரான ஒரு மனநிலை நீண்ட காலம் இருந்து வந்தது.இக்கதையை இவர் தன் மனதால் எழுதவில்லை.மூளையால் எழுதிவிட்டார் என்பது போன்ற விமர்சனக்குரல்களை நாம் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.இந்த்ப்பார்வையின் பின் உள்ள அரசியல் எதுவெனில் கீழ்த்தட்டு மக்களின் வாழ்வைச் சொல்லி விடாமல் முற்றிலும் ஒரு மத்திய தர வர்க்க மனோபாவமான உள்முகப்பயணம்தான் இலக்கியத்தின் அடிப்படை என்று நிறுவும் அரசியல்தான்.

இன்னொரு புறம் இலக்கியம் எதையும் சொல்ல வேண்டியதில்லை என்கிற போக்கும் லட்சியவாதத்துக்கு எதிர்நிலையில் அறம் என்பதை வைத்து(இரண்டும் எதிரானவையா?) ஒருமுகப்பட்ட மனிதப்பயணம் சாத்தியமில்லை என்கிற போக்கும் வளர்ந்து வருகிறதைப் பார்க்கிறோம்.சுந்தர்ராமசாமி அவர்கலின் ஒரு வாசகத்தையே இதற்குப் பதிலாகக் கூறலாம்:

“ இலக்கியம் சங்கீதம் அல்ல என்பதாலேயே அர்த்தமும் தத்துவமும் அதன் உடன் பிறந்த சங்கடங்கள் .எனவே தத்துவத்தின் ஒரு சாயலில் ,திட்ட்த்தின் ஒரு நிலையில் நின்றே தொழிலைத் தொடங்க வேண்டியதாக இருக்கிறது.எனினும் கலைஞன்,சிருஷ்டி கருமத்தில் முன்னேறும்போது, மனசை ஏற்கனவே பற்றியிருக்கும்முடிவுகள்,தத்துவச்சாயல்கள் இவற்றைத்தாண்டி ,சத்திய வேட்கை ஒன்றையே உறுதுணையாகக் கொண்டதன் விளைவால்,கலை சத்திய வெறி பெற்று, குறுகிய வட்டங்களை ‘நிரூபிக்க’க் குறுகாமல்,அனுபவத்தின் நானாவிதமானதும் மாறுபட்டதும் முரண்பட்ட்துமான சித்திரங்களின் மெய்ப்பொருளை உணர்த்த வேண்டும்.நான் நம்பும் கலை இது”- உடன்படவும் முரண்படவுமான உள்ளடக்கத்தோடு வந்து விழுந்துள்ள வரிகள் இவை.இவ்வரிகள் குறித்து நிறைய ஒட்டியும் வெட்டியும் பேச முடியும்.இப்போதைக்கு இலக்கியம் சங்கீதம் அல்ல.அதற்கு அர்த்தமும் தத்துவமும் வேண்டும் – இருந்துதான் தீரும் என்றுதான் சுந்தரராமசாமி கூறியிருக்கிறார் என்று அடிக்கோடிட்டு விட்டுச் செல்வோம்.

வாழ்க்கை என்னும் பேராற்றிலிருந்து ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கான வடிவமான கதை,கவிதை,நாவல்,காவியம் என்னும் பாத்திரத்தில் துளி நீரை/ஒரு குவளை நீரை/ஒரு வாளி நீரை/ஒரு அண்டா நீரை வாசகருக்கு அள்ளி வருகிறான்.அந்தத் துளி நீரிலும்கூட –குவளை நீரிலும் கூட- அப்பேராற்றின் வரலாறும் வாசமும் ருசியும் தன்மையும் அறியத்தக்கதாக –உணரத்தக்கதாக-உட்கொள்ளத் தக்கதாக இருந்திட வேண்டும்.அதற்கு உதவும் விதமாக நீரைச் சேந்திக் கொண்டுவர உதவும் உருவும் உத்தியுமே நாம் எப்படி எழுதுவது என்பதைக் கற்பிக்கும்.

-ச.தமிழ்ச்செல்வன்

No comments: