Friday, June 8, 2012

என் சக பயணிகள்-18 இன்குலாப்

inkulab

எழுதியதெல்லாம்

மொழிபெயர்ப்புத்தான்.

இளைஞர் விழிகளில்

எரியும் சுடர்களையும்,

போராடுவோரின்

நெற்றிச்சுழிப்புகளையும்

இதுவரை கவிதையென்று

மொழிபெயர்த்திருக்கிறேன்

என்று சொல்லி எழுத வந்தவர் தோழர் இன்குலாப்.ஆகவே அவருடைய எழுத்துக்கள் கவிதையல்ல என்று ப்யூர் கவித்வவாதிகள் அன்று முதல் இன்றுவரை சொல்லத்தவறவில்லை.என் இளம் வயதில் எனக்கும் என் போன்ற இளைஞர்களுக்கும் ஆவேசமூட்டிய கவிதைகளைத் தந்தவர் இன்குலாப்.70’களில் நக்சல்பாரி இயக்கம் பிறந்தபோது வசந்தத்தின் இடிமுழக்கம் எங்கள் எல்லோருக்கும் தெளிவாகக் கேட்டதுதான்.பின்னர் அது தூரத்து இடிமுழக்கமாகித் தேய்ந்து கரைந்துபோனதாக சிலர் கருதினோம்.இல்லை இல்லை இடிமுழக்கம் கேளாச் செவிடராய் நீங்கள்தான் ஆகிப்போனீர்கள் என அதே பாதையில் தொடர்ந்தவர்கள் சிலர்.

நக்சல்பாரிப்பாதையில் நம்பிக்கையோடு நீண்ட காலம் நடைபோட்ட கவியாக இன்குலாப் எழுதினார்.அவருடைய பாதையில் உடன்படாவிட்டாலும் அவருடைய கவிதைகளால் உரமும் உத்வேகமும் பெற்ற இளைஞனாக நான் வளர்ந்துகொண்டிருந்தேன்.போராடும்போதுதான் மனிதன் பிறக்கிறான் என்கிற அவருடைய வரி இன்றைக்கும் என்னை உள்ளிருந்து இயக்கும் வரியாக இருக்கிறது. பார்ப்பன எதிர்ப்பு அரசியல் பேசிய திமுக ஆட்சியில் பார்ப்பன சிம்சன் முதலாளிக்கு ஆதரவாக தமிழ்த்தொழிலாளிகளுக்கு எதிராக காவல்துறையும் ரௌடியிசமும் கூட்டாகக் களமிறக்கி விடப்பட்டனர்.ஆவடியில் தோழர் வி.பி.சிந்தன் மீது கொலைவெறித்தாக்குதல்.அவர் உடம்பெங்கும் கத்திக்குத்துகள்.

“இரும்புக்கரங்கொண்ட ஹிட்லரின் புதல்வர்கள்

நாசிச நிர்வாண நாடகத்தை

ஆவடியில் போய் அரங்கேற்றினார்கள்

தொழிலாளர் வர்க்கத்தின் தூய புதல்வர்கள் மேல்

கைவைக்கத் துணிந்த காட்டுமிராண்டிகளே:

இந்த ரத்த்த்தின் ஈரம் உலருமுன்

எங்கள்

தோழர்கள் உங்களைச் சூறையாட வருவார்கள் “

என்கிற இன்குலாப்பின் வரிகள்தான் அன்று இக்கொலை முயற்சி பற்றி எழுதப்பட்ட வரிகளிலேயே உக்கிரமானதாக நாங்கள் உணர்ந்தது .பின்னர் சில காலம் கழித்து பல ஊர்களில் கட்சிக்கூட்டங்களில் தன் சட்டையைக் கழற்றித் தோழர்களுக்கு காயங்களையும் தழும்புகளையும் தோழர் வி.பி.சி. காட்டும் போதெல்லாம் எங்கள் மனங்களில் இன்குலாபின் வரிகள்தான் பழிதீர்க்கப்படாத கோபத்தின் வெளிப்பாடாக ஓடிக்கொண்டிருக்கும்.

வெண்மணியைப் பற்றி அதிகமான கவிதைகளில் வெடித்து எழுதியவராக தோழர் இன்குலாப்பையே கூற முடியும்.(நவகவியின் நெடுங்கவிதையும் வேறு சில கவிஞர்களின் சில முக்கியமான கவிதைகளும் குறிப்பிடத்தக்கவை என்றபோதும்)

தாஜ்மகாலிலேயே ஷாஜகான் காலத்துப்

பொன்மாயப் புனை சுருட்டுகளை

நெருப்பிலே போட்டு நீதி வழங்குவோம்.

வெண்மணிச் சாம்பல் மேட்டிலிருந்தே

நமது தாஜ்மகாலை நாம் உருவாக்குவோம்.

· * *

குடியானவன் வீட்டு அடுப்பெரியாதபோதும்

கோபாலகிருஷ்ணர்கள் குளிர்காய்ந்துகொள்ள

விறகாய் எரிந்தது வெண்மணி விவசாயிதான்

· * *

சதையும் எலும்பும் நீங்க வச்சதீயில் வேகுதே-ஒங்க

சர்க்காரும் கோர்ட்டும் அதிலே எண்ணெ ஊத்துதே

எதையெதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க-நாங்க

எரியும்போது எவன் மசுரைப் புடுங்கப் போனீங்க?

மனுசங்கடா..நாங்க-மனுசங்கடா

என இன்னும் பல கவிதைகளில் அணையா நெருப்பாக வெண்மணி அவருடைய வரிகளில் எரிந்து கொண்டே இருக்கிறது.மனுசங்கடா பாடலை கே.ஏ.குணசேகரன் மெட்டமைத்து முதன் முதலாக தமுஎசவின் மேடைகளில் பாடிய போது காற்று வெளியெங்கும் தீப்பற்றக்கண்டோம்.வெண்மணியின் வரலாற்றை இந்த நாலு வரிகளுக்குள் துடிப்போடும் உயிர்ப்போடும் அதே நெருப்பின் வெக்கையோடும் சொல்ல முடிந்ததே .இந்த எழுத்தின் வலிமை கண்டு அன்று போலவே இக்கணத்திலும் நான் வியந்து நிற்கிறேன்.

எனக்குள் நெருப்பை மூட்டி என்னை இடது பக்கம் நின்று இயங்க வைத்த பல கவிதைகளை இன்குலாப் தந்து கொண்டிருந்தார்.கனவுகளின் இடத்தில் விஞ்ஞானத்தை வைத்த உங்களை ஒரு மனிதராகக் கண்டே மரியாதை செய்கிறோம் என்று கார்ல் மார்க்ஸ் பற்றி அவர் எழுதிய எழுச்சியூட்டிய ஒரு கவிதை,

நாடு நாடாக விரட்டப்பட்டீர்

ஊர் ஊராகத் துரத்தப்பட்டீர்

இன்று

ஒரு பகலைப்போல

வெளிப்படையாகவும்

ஒரு பூகம்பம்போலத்

தலைமறைவாகவும்

நீங்கள் நடந்து செல்லாத

நாடேது?

ஊரேது?

அவர் எழுதிப் பரபரப்பையும் கடுமையான எதிர்ப்புகளையும் சந்தித்த கவிதைகள் என கண்மணி ராஜம் ,ராஜ மகேந்திர சதுர்வேதி மங்கலம், ஸ்ரீராஜராஜேச்சுவரியம் போன்ற கவிதைகளைக் குறிப்பிட வேண்டும்.இன்று மீண்டும் தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டை திமுக ஆட்சி கொண்டாடியபோது இன்குலாபின் ஸ்ரீராஜராஜேச்சுவரியம் கவிதையின் வரிகளைத்தான் தமுஎகசவின் பல மேடைகளில் முழங்கினோம்:

ஆயிரம் ஆண்டு மூத்த என் தங்கையின்

காலில் கட்டிய சதங்கை

இந்தப் பெரிய கோயில் முற்றத்தில்

அழுது கொண்டிருக்கிறது

இன்னும்

இதனுடைய ஒவ்வொரு கல்லிலும்

என் சகோதரன் தசைகள்

பிதுங்கிக் கொண்டிருக்கின்றன.

வல்லாங்கு செய்யப்பட்டுப் பிறந்து கொண்டிருக்கும்

நான்

கூசி நிற்கிறேன்.

இந்தக் கவிதைகளும் யுகப்பிரளயம்,பிரமிடுகள் போன்ற நெடுங்கவிதைகளும் இன்று வாசிக்கையில் ஆயாசம் தந்தாலும் அன்று இளம் பருவத்தில் எமக்குக் கல்வி புகட்டிய கவிதைகளாக விளங்கின.கல்வி பற்றி அவர் எழுதிய வரிகள் இன்றைக்கும் எத்தனை பொருத்தப்பாடுடையவையாகத் திகழ்கின்றன:

தாமரைப் பீடத்தில்

இருந்த சரசுவதியை

நிலப்பிரபுத்துவம்

எழுப்பிக்கொண்டுபோய்

ஏகாதிபத்தியத்தின்

மடியில் அமர்த்தியது.

கலைமகள் பின்பு

கவுன் மாட்டிக்கொண்டாள்

வீணையிலிருந்து

இங்கிலீஷ் ம்யூசிக்.

தொழிற்சங்கங்களின் தேவை,பணி பற்றிய நக்சல் பார்வை கொண்ட அவருடைய கவிதை வரிகள் அப்போதும் எனக்கு ஏற்புடையதாக இருந்ததில்லை.இப்போதும் ஏற்க முடியவில்லை.

புரட்சி ஓங்குக

என்ற இடிகளின் முழக்கத்தை

ஒலிக்க வேண்டிய உனது பேரிகை

“ கூலி உயர்வு

போனஸ்”

என்று கொசுக்களைப் போலவா

முணங்கித் திரிவது?

வர்க்கபோதம் அல்லது வர்க்க உனர்வு என்பது தானே தொழிலாளி வர்க்கத்துக்கு வந்து சேராது.அது தொழிற்சங்கப் போராட்டங்களின் வழியே ஊட்டப்பட்டு உருவாக்கப்படுவதுதான்.லெனின் காட்டிய வழியும் அதுதான்.தொழிற்சங்க இயக்கத்தின் மீது ஆரோக்கியமான விமர்சனம் வைக்கலாம்.ஆனால் கொசுவென்று பேசிக் கொச்சைப்படுத்தும் பார்வையை என்னால் ஏற்க இயலாது.அதே போல பகத்சிங் சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசியதை நக்சல் பாதைதான் சரியானதென்று சிம்பாலிக்காக காட்டுவதாக எழுதப்பட்ட கவிதையும் நெருடா பற்றிய கவிதையில் சிலிப் புரட்சி தோற்ர்ர்தற்குக் காரணம் அவர்கள் வாக்குச்சீட்டை நம்பி நக்சல் பாதையில் ஆயுதம் ஏந்திப் போகாததுதான் என்றெல்லாம் எழுதியிருப்பது வாசிக்கும்போதே ஓவராத்தான் எழுதிட்டார் தோழர் என்று நினைத்ததுண்டு.ஆனாலும் அது அவருடைய பாதை.அவருடைய தேர்வு.அவருடைய சுதந்திரம்.நம் கருத்து நம்மோடு.அதற்காக அன்பே உருவான இனிய அம்மனிதரை நம்மால் கடந்து செல்ல முடியுமா என்ன?

நிற்க.

பிற்காலத்தில் 2007இல் அவர் எழுதிய கவிதைகள் பொன்னிக்குருவி என்னும் தொகுப்பாக வந்துள்ளன.அவை முற்றிலும் வேறு ஒரு மன உலகத்தைக் காட்டுபவையாக இருக்கின்றன.அருவியை நீரின் உச்ச முழக்கம் என்றும் கிணற்றை நீரின் ஆழ்நிலைத் தியானம் என்று ஒரு கவிதை பேசுகிறது.விடை பெறுகிறது அலை, கடலிடமிருந்தா?கரையிடமிருந்தா என்று இன்னொரு கவிதை பேசுகிறது.பிற்காலக் கவிதைகளில் ஆழ்ந்தடங்கிய மௌனமும் அமைதியும் கோலோச்சுகின்றன.இதய அறுவைச்சிகிச்சைக்கு முன்னும் பின்னுமென அவரெழுதிய இரு கவிதைகள் அற்புதமான உணர்வைத் தருகின்றன.பிற்காலக் கவிதைகளில் என்னை மிகவும் தொட்ட கவிதையென ’எனது தனியறை’ கவிதையைச் சொல்வேன்.மூடிய தனியறை என்னுடன் வருகிறது எனத்துவங்கும் அக்கவிதை தரும் அனுபவம் நம்மில் பலரும் பெறுவதாக இருக்கிறது.

இன்குலாப் அவருடைய கவிதைகளின் வழியாகவே பெரிதும் அறியப்பட்டிருக்கிறார்.அவர் நாடகங்களும் எழுதியிருக்கிறார்.ஔவை,குரல்கள்,தடி ,மீட்சி போன்ற நாடகங்களை அவர் அவருடைய இயக்கத்தின் தேவைகாரணமாகவும் சூழலின் நெருக்குதல் காரணமாகவும் படைத்துள்ளார்.ஔவை பேசப்பட்டது.

நான் மிகுந்த கவலையோடு குறிப்பிட விரும்புவது அவரது அற்புதமான சிறுகதைகள் பற்றி யாருமே பேசாமல் விட்டது பற்றியே.அவருடைய கவிதைகளின் ஆவேசமும் ஆர்ப்பாட்டமும் முழக்கமுமான முகத்துக்கு முற்றிலும் வேறான ஒரு கலைமனதை அவருடைய சிறுகதைகளில் தரிசிக்க முடிகிறது.அவருடைய 13 சிறுகதைகளை பாலையில் ஒரு சுனை என்கிற பேரில் தொகுப்பாக அன்னம் வெளியீடாக ஒரு நுட்பமான முன்னுரையோடு மீரா 1992இல் வெளியிட்டிருக்கிறார்.சமீபத்தில் அக்கதைகளை முழுமையாக வாசித்தபோது அடடா என்ன ஒரு எழுத்தென்ற வியப்பும் சிறு அதிர்ச்சியும் எனக்குள் ஏற்பட்டது.விபத்து,கிணறு போன்ற மனிதக் கீழ்மைகளைப் பற்றிய பதிவாகட்டும் பாலையில் ஒரு சுனை,உம்மாவோட மொகம் போன்ற மனதை நடுங்கச்செய்யும் மானுட மேன்மை குறித்த கதைகளாகட்டும் எத்தனை ஆழ்ந்தடங்கிய அமைதியோடு எழுதப்பட்ட காவியங்களாக அவை விளங்குகின்றன.எப்போதும் இயக்கச் செயல்பாடுகளுக்கூடாக பரபரப்பாக வாழ நேர்ந்த ஒரு கலைமனதின் அற்புதமான மறுபக்கமாக இக்கதைகள் மின்னுகின்றன.இச்சிறுகதைகளின் வடிவமும் மொழியும் என்ன ஒரு நவீனமான உணர்வைத்தருகின்றன.இக்கதைகளை வாசித்து புத்தம் புதுசான ஒரு உணர்வை நான் பெற்றேன்.அது குறித்துத் தனியாக விரிவாக எழுத ஆவல் கொண்டுள்ளேன்.

பிற்காலக் கவிதைகளிலும் சிறுகதைகளிலும் காணும் அமைதிபற்றி இவ்விதம் நான் எழுதுவதால் அவருடைய மொத்தக் கவிதைகளின் சாரமான உணர்ச்சிக்கொந்தளிப்பையும் சமூக அக்கறையையும் சிறிதும் குறைத்து மதிப்பிடவில்லை.சதா விமர்சனத்தை முன்வைத்த சில இலக்கிய பீடாதிபதிகளுக்கு அவர் வைத்த தன்னடக்கமான பதிலையே சொல்லி இக்கட்டுரையை முடிப்போம்:

“கவிதையாக்கம் என்பது கூட்டிசை போன்றது.தேவதேவன் அவருடைய வயலினை எடுத்து வந்தால் நான் என்னுடைய பறையுடன் வருகிறேன்.கூட்டிசையில் வயலினின் சுநாதம் மட்டும்தான் ஒலிக்க வேண்டும்.பறையொலி தலைதூக்கக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது.பறையின் தேவை இருக்கும்வரை ஒரு பக்கத்தில் நின்று கொண்டு பறையை என்றென்றைக்கும் நான் தட்டிக்கொண்டேதான் இருப்பேன் “

ஒவ்வொரு புல்லையும் – 2005 வரையான இன்குலாப் கவிதைகளின் தொகுப்பு-பொன்னி வெளியீடு,விலை ரூ.200 பக்கம்-436

பொன்னிக்குருவி –வெளிச்சம் வெளியீடு-விலை ரூ.60 பக்கம் 120

No comments: