Saturday, October 29, 2011

சமீபத்திய இரு திரைப்படங்களை முன் வைத்து...

 

எங்கேயும் எப்போதும்

engeyum_eppothum_movie_stills_1008110415_040

எல்லோரும் கொண்டாடும் எங்கேயும் எப்போதும் திரைப்படம் பற்றிய ஓர் ஆழ்ந்த கவலையை இங்கே முதலில் குறித்துக்கொள்ள வேண்டும்.ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தின் மூலம் ஃபாக்ஸ் ஸ்டூடியோஸ் எனப்படும் ஒரு பன்னாட்டுக் கம்பெனியை தமிழ்த் திரைப்படத்தொழிலுக்கு அழைத்து வந்துள்ளது. நியூஸ் கார்ப்பொரேஷன் கம்பெனி என்பது அமெரிக்கப் பகாசுரப்பன்னாட்டு நிறுவனமாகும்.அது ஸ்டார் டிவி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஊடக நிறுவனங்களை உலகெங்கும் வலைபரப்பியுள்ள ரூபர்ட் முர்தோக்கின் நிறுவனமாகும்.இந்நிறுவனத்தின் துணை அமைப்புக்களான ட்வெண்டியெத் செஞ்ச்சுரி ஃபாக்ஸ் மற்றும் ஆசியன் ஸ்டார் நெட் ஒர்க் இணைந்து 2008இல் உருவாக்கியதுதான் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இந்தியா என்னும் கம்பெனி .இந்தியாவில் மை நேம் இஸ் கான் ,ஆஸ்திரேலியா,ஸ்லம் டாக் மில்லியனர் போன்ற படங்களை தயாரித்தும் விநியோகித்தும் தம் வியாபாரத்தைத் துவக்கிய இக்கம்பெனி இப்போது எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் கோடம்பாக்கத்தில் கடை விரித்துள்ளது.சன் நெட் ஒர்க்,ரிலையன்ஸ்,மோசர்பேர் போன்ற இந்தியக் கார்ப்பொரேட் கம்பெனிகள் ஏற்கனவே இங்கே வலுத்த ஆட்டம் போட்டுக்கொண்டுதான் உள்ளன.ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு சன் டிவி காட்டிய பாதையில் ஜெயா டிவியும் புதிய படத்தயாரிப்பாளர்களை அழைத்து படத்தை ஜெயா டிவிக்கு ’எழுதித்தர’ அன்பாக வேண்டுகோள் விடுக்கத் துவங்கியிருப்பதாக நம்பத்தகுந்த செய்திகள் கூறுகின்றன.இந்தக்கூத்துகளுக்கு நடுவே இப்போது பகாசுர ஃபாக்ஸ் களம் இறங்கியுள்ளது.பெரிய பெரிய கோபுரங்களும் ஆலயங்களும் எழும்பியது எளிய பீடங்களாக நின்ற நம் நாட்டுப்புற தெய்வங்களைத் தின்று செரிக்கத்தான் என்கிற வரலாறு இவ்விதமாகத் திரைப்படத்துறையில் அரங்கேற்றம் ஆகிறது என்று எச்சரிக்க வேண்டியது நம் கடமை.சிறிய முதல் போட்டுப் படம் எடுப்பவர்கள் படம் எடுத்து முடிந்ததும் இத்தகைய பெரிய கம்பெனிகளுக்கு படத்தை விற்றுவிடுவது இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டது.எடுத்த படத்தை வாங்கும் இந்நிறுவனங்கள் இனி தாங்கள் வாங்கத்தக்கதாகப் படங்கள் இருக்கணும் என்று நெருக்கடி கொடுக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதே நம் கவலை.

நிற்க. இப்போது படம் பற்றி.

ஆனந்த விகடன் அதிகபட்சமாக 50 மார்க் போட்டுக் கொண்டாடிய படம் என்கிற மரியாதையுடனும் எதிர்பார்ப்புடனும் படம் பார்க்கச் சென்றோம்.வேகமாகக் கார் ஓட்டி இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்வதால் எத்தனை பேருடைய வாழ்க்கை திசை மாறிப்போகிறது என்பதை அழுத்தமாகச் சொல்லும் கதை.கதைதான் படத்தின் நாயகன்.அது முதலில் பாராட்ட வேண்டிய அம்சம்.தமிழுக்கு ஒரு வித்தியாசமான களம்.யதார்த்தமான காட்சியமைப்புகள், இயல்பான-மிகையற்ற நடிப்பு,பொருத்தமான பின்னணி இசை, மனதைத்தொடும் ஒளிப்பதிவு இவற்றின் துணையுடன் கதையை முன் பின்னாக நகர்த்திச்செல்லும் இயக்குநரின் உத்தி பார்வையாளரிடம் ஒரு நம்பகத்தன்மையை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளது. அஞ்சலி ஒரு யதார்த்தமாக வாழ்வை அணுகும் பெண்ணாக தமிழுக்குப் புதுசான ஒரு கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.அவருக்கு இணையாக வரும் ஜெய் பரவாயில்லை.நடிப்பில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது.இன்னொரு காதல் ஜோடியாக வரும் அன்னயா-ஷ்ரவானந்த் வெகு இயல்பாக நடித்துள்ளனர்.அஞ்சலி ஜோடியின் காதலில் சில இடங்களில் தமிழ் சினிமா பார்முலா எனப்படும் சில கோளாறுகள் உள்ளன.மெக்கானிக்குகள் எல்லோருமே வேற வேலை வெட்டி இல்லாமல் பிகர்களைக் கணக்குப்பண்ணிக்கொண்டு அப்பெண்கள் அணியும் உடைக்கு மேட்ச்சிங் சட்டை போட்டுக்கொண்டு அலைகிறார்கள்.ஆறு மாசம் பாட்டு வெகு சாதாரணமான மசாலா.

இரண்டு காதல் ஜோடிகள் போதாதென்று மூன்றாவதாக பஸ்ஸில் ஒரு ஜோடி உருவாகிறது.இவ்வளவு வசீகரங்களுக்கிடையே பேருந்து விபத்து பற்றிய கதையை மையமாகக்கொண்டு படம் நகர்கிறது.படம் சொல்ல வரும் செய்தி என்று பார்த்தால் சாலை விதிகளை மதியுங்கள்.வேகமாக பஸ்/கார் ஓட்டாதீங்க.அவ்வளவுதான் என்று வெளிப்படையாகத் தோன்றினாலும், நம் வாழ்க்கை நம் கையில் இல்லை என்று படம் சொல்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம். எப்போ வேணுமானாலும் எதுவும் நடக்கலாம் என்று சொல்கிறதாகவும் கொள்ளலாம்.ஆனால் அழுத்தமான செய்தி ஓட்டுநர்களுக்குத்தான். நல்லது.நல்ல செய்திதான்.ஒரு சேதியைச் சொல்ல நினைத்து நாயக பிம்பங்களை பெரிதாக முன்வைக்காமல் அழகான படமாக தந்திருக்கும் இயக்குநர் சரவணனை பாராட்ட வேண்டும். ஷ்ரவனாந்த் மருத்துவமனையில் அன்ன்யாவிடம் தன் அன்பை வெளிப்படுத்தும் இடம் மனதை உருக்குவதாக அமைந்திருக்கிறது.இறுதிக்காட்சிகள் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன.அஞ்சலியின் நடிப்பு படத்துக்கு மிகப்பெரிய பலம்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்துள்ள நல்ல கலைஞர்.

தீனா,ரமணா,கஜனி போன்ற வணிக வெற்றிப்படங்களைத் தந்த இயக்குநர் முருகதாசின் முதல் தயாரிப்பு இது.அவருடன் துணை இயக்குநராகப் பணியாற்றிய சரவணனுக்கு இது முதல் படம்.கைதட்டி வரவேற்கிறோம் இருவரையும். முதல் படமா என்று வியக்க வைக்கிறார் சரவணன்.சினிமா மொழி தெரிந்த கலைஞராக சரவணன் வெளிப்பட்டிருக்கிறார்.வாழ்த்துக்கள்.

அதுசரி சரவணன்.. காதலியின் அப்பா ஏட்டையா ராமசாமியைத்தேடிச் செல்லும் கதாநாயகன் அவரை ஒரு கம்யூனிஸ்ட் கூட்டத்தில் காவலுக்கு நிற்கும் இடத்தில் சந்திப்பதாக ஒரு காட்சி வைத்திருக்கிறீர்களே.. அதற்கு என்ன அர்த்தம்.ஜஸ்ட் ஒரு கூட்டம் என்று சொல்கிறீர்கள்.அதில் 15 பேர் சேர் போட்டு உட்கார்ந்திருக்க நூற்றுக்கணக்கான சேர்கள் காலியாகக் கிடக்க ஒருவர் ரத்த ஆறு ஓடும் என்கிற பாணியில் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்.செங்கொடிகள் பறக்க பின்னணியில் மார்க்ஸ்..எங்கல்ஸ் படங்கள் வேறு.செங்கொடிகளோடு லட்சோப லட்சம் பேர் திரளும் பேரணிகளும் போராட்டங்களும் முதலாளித்துவ ஊடகங்களால் எப்போதும் புறக்கணிக்கப்படுவது ஒருவிதமான அரசியல் என்றால், சரவணன் நீங்கள் நக்கலாக எடுத்துள்ள இதுபோன்ற காட்சிகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பதும் ஒரு அருவருப்பான அரசியல்தான் என்பதை மெத்தப் பணிவோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.எங்களைப் பார்த்தா உங்களுக்குக் கிண்டல் பண்ணத்தான் தோணுமா?

வளரும் கலைஞரான உங்களை வாழ்த்தும் அதே நேரத்தில் இதையும் சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம்.

அரிய வகைப் பூவாக மலர்ந்துள்ள வாகை சூடவா

vaagai

களவாணி படத்தின் மூலம் நல்ல பேரெடுத்த இயக்குநர் சற்குணம் இயக்கியுள்ள வாகசூடவா தமிழில் எப்போதாவது வெளியாகும் அரிய படங்களில் ஒன்று.1966இல் நடப்பதாக வரும் கதை.அக்காலத்துக்கு நம்மை அழைத்துச்செல்லும் காட்சி அமைப்புகள்.படத்தின் வண்ணம்.சின்னச்சின்ன அசைவுகள். பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் எல்லாமே சேர்ந்து கவனத்துடன் செதுக்கப்பட்ட ஓர் உயிர்ச்சிற்பமாக வாகைசூடவா நம் மனங்களை வென்று வாகை சூடியுள்ளது.

ஒரு கிராமத்தில் ஆசிரியராக ஆறு மாதம் வேலை பார்த்து ஒரு சான்றிதழ் பெற்றுவிட்டால் அரசாங்க உத்தியோகம் வாங்கி செட்டில் ஆகிவிடலாம் என்கிற சுயநலத்தோடு ஒரு குக்கிராமத்துக்குப் போகும் இளைஞன் அக்கிராமத்தோடு நிரந்தரமாகத் தங்கிக் கல்விப்பணியாற்ற முடிவெடுக்கும் அழுத்தமான கதை. டீக்கடைப் பெண்ணொருத்தியின் காதலை ஏறெடுத்தும் பார்க்காதவனாக, கருமமே கண்ணாக, அசல் சுயநல மத்தியதர வர்க்கத்துக் கதாபாத்திரமாகத் தனியாக அக்கிராமத்தில் அலைபவனாக ஒரு கதாநாயகன். படிக்க வராமல் பிள்ளைகள் எல்லோருமே செங்கல் சூளையில் வேலை பார்க்கிறார்கள். பெற்றோருக்கும் படிக்க அனுப்புவதில் ஆர்வமில்லை என்கிற 60களின் நிலை அற்புதமாகப் படமாகியுள்ளது.

கல்வியை வலியுறுத்தும் படம் என்றாலும் படம் முழுக்க ஆசிரியரும் கல்விமுறையும் ஒரு கேலிப்பொருளாக ஆக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.வாழ்க்கையிலிருந்து ஏராளமாகக் கற்றுக்கொண்டுள்ள அக்குழந்தைகள் ஆசிரியரைவிட உயர்வான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது படத்தின் மிக முக்கியமான செய்தியாகும்.படத்தின் பலமும் அதுதான். மெக்காலே கல்வி முறையின் மீதான அழுத்தமான விமர்சனமாக வாகைசூடவா படம் வந்துள்ளது என்று சொல்லலாம்.60களின் கதை 2011 உடன் இணைவது இந்தப்புள்ளியில்தான். சமூகப்பொறுப்புடன் கதையும் வசனமும் எழுதப்பட்டுள்ளது. பாராட்டுக்கள் இயக்குநர் சற்குணம்.ஒரு முதலாளிகிட்டே தப்பிச்சு இன்னொருவன்கிட்டே போயிட்டோம்னு நிம்மதியா இருக்காதீங்க.அவனும் ஒரு முதலாளிதான்கிறத மறந்துடாதீங்க என்பது போன்ற அர்த்தமுள்ள வசன்ங்கள் பட்த்துக்குக் கனம் சேர்க்கின்றன.பஞ்ச் டயலாக் காலத்தில் இப்படியான வார்த்தைகளைக் கேட்க நம் செவிகள் பெருமூச்செரிகின்றன.

கதாநாயகி இனியா காதலை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் ஏமாற்றத்தை உள்வாங்கும் காட்சிகளிலும் பேசும் கண்களோடு என்ன அற்புதமான முகபாவங்களைக் கொண்டு வருகிறார்.கதாநாயகியாக இது அவருக்கு முதல் படம்.நாயகன் விமலுக்கு இது மூன்றாவது படம்.நல்ல முன்னேற்றம் நடிப்பில்.கடைசிக்காட்சியில் அவர் இனியாவின் காதலை ஏற்றுக்கொண்டதாக பேசும் இடம் அவசரமாகக் கடக்கிறது.மனதைத் தைக்கவில்லை.அவருடைய மனமாற்றத்துக்கான காட்சிரூப நியாயம் படத்தில் வைக்கப்படவில்லை.

படத்தில் வரும் குழந்தைகளின் கோலம் காட்சிக்குக் காட்சி நம்மைக் கண்கலங்க வைக்கின்றன. வறுமையின் கோரத்தை உணரத்தெரியாத அறியாமை மிகுந்த விளையாட்டுக்களோடு அவர்கள் நம் கண் முன்னே ஓடித்திரியும் காட்சிகள் எந்த இலக்கியத்தாலும் சொல்லிவிட முடியாதது. பைத்தியமாகித்திரியும் வைத்தியரின் பறவைச்சத்தம் கேட்குது என்கிற குரல் நம் குற்ற மனதைக் கிளர்த்துவதாக இன்னும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.ஒவ்வொரு பாத்திரமும் தன்னை உணர்ந்து வாழ்ந்திருப்பது பட்த்தை அசல் வாழ்க்கைக்கு வெகு அருகில் கொண்டு சேர்க்கிறது.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் நம் கண்முன்னே அகல விரியும் காட்சிகள் முற்றிலும் ஒரு புதிய காட்சி அனுபவத்தை வழங்குகின்றன.அபூர்வமான படப்பிடிப்பு.மக்கள் கிளர்ந்தெழுந்து வில்லன்களைத் தாக்கும் காட்சி எழுச்சியுடன் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் பாடல்களும் (வைரமுத்து,வே.ராமசாமி) இசையும் நம்மை 60களுக்கு அழைத்துச் செல்கின்றன.கவிஞர் வே.ராமசாமி இலக்கிய நுட்பங்களோடு கவிதைகளும் கதைகளும் எழுதி வரும் நல்ல படைப்பாளி.இப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆகிறார்.கவிஞர் வைரமுத்துவின் சார..சாரக்காத்து பாடல் காட்சியாக்கப்பட்ட விதம் புதிய சிலிர்க்கும் அனுபவத்தைத் தருகிறது.கலை இயக்குநர் சீனு படத்துக்கு உயிரூட்டியிருக்கிறார். இசையமைப்பாளர் கிப்ரானுக்கும் இதுதான் முதல் படம்.தமிழுக்குப் பெருமைமிக்க வரவு.

ஊர் ஊராகக் கொண்டாட வேண்டிய படம் வாகை சூடவா.

-செம்மலருக்கு எழுதிய கட்டுரை

2 comments:

Muruganandan M.K. said...

வாகை சூடவா பற்றிய உங்கள் விமர்சனம் பார்க்க வேண்டும் என எண்ண வைக்கிறது.
பன்னாட்டுக் கம்பெனிகள் தமிழ் சினிமா பக்கம் பார்ப்பது நீங்கள் சொல்லியது போல பிரச்சனைக்குரியதுதான்.

சித்திரவீதிக்காரன் said...

'பிரம்மாண்டங்கள் எல்லாமே மனித விரோதமானவை' என்ற தொ.பரமசிவன் அய்யாவின் வரிகள் ஞாபகம் வருகிறது. அழகர்சாமியின் குதிரை திரைப்படத்திற்கு பிறகு நான் எந்தப் படமும் பார்க்கவில்லை. நானும் சகோதரனும் எங்கேயும் எப்போதும் அல்லது வாகை சூடவா என இரண்டில் எதாவது ஒரு படம் பார்க்கும் முடிவில் சென்றோம். இறுதியில் வாகை சூடவா படத்திற்கு சென்றோம். எண்பதுகளில் பிறந்த எங்கள் தலைமுறைக்கு அறுபதுகளின் வாழ்க்கையை அற்புதமாக காட்டிய சற்குணத்திற்கு நிறைய நன்றி சொல்ல வேண்டும். விளக்கு பொருத்திய சைக்கிள், கழுதையில் உப்பு விற்க வருபவர் எல்லாம் நாங்கள் காணாத காட்சிகள். படம் உண்மையிலேயே அருமை. இனிதான் வாய்ப்பு கிடைத்தால் எங்கேயும் எப்போதும் பார்க்கவேண்டும். நல்ல பகிர்வு. நன்றி.