(டைம்ஸ் இன்று தீபாவளி மலருக்காக மனுஷ்யபுத்திரன் கேட்டுக்கொண்டதற்கிணங்க அனுப்பப்பட்ட குறிப்புகள் –முழுமையாக இங்கு.)
1.கற்றுத்தருதலின் பிரச்னைகள்
கற்றல்-கற்பித்தல் தொடர்பான சொந்த யோசனை உள்ள ஆசிரியர்கள் யாரும் தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை.அரசாங்கப் பயிற்சிப்பள்ளிகளில், ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகளில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் பல்லாயிரக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்து இந்த கற்பித்தல் உத்தியோகத்துக்கு வந்து சேர்கிறார்கள்.என்ன மரியாதை இருக்கும் இந்தக் கற்றுத்தரும் பணியின் மீது அவர்களுக்கு?முதல் பிரச்னை இது.அப்புறம்....
டிசம்பருக்குள்ளே போர்ஷனை முடிக்கணும்
பிப்ரவரிக்குள்ளே ரிவிசன் டெஸ்ட்டுகள் மூணு முடிக்கணும்.
பசங்க சரியாப் படிக்கலேன்னா டீச்சர்ஸ் என்னா சார் பண்ண முடியும்? அதிகாரி எனக்கு மெமோ கொடுக்கறாரு?நான் போயி பரிச்சை எழுதவா?
சார்.. புரியுதா புரியலியாண்றது முக்கியமில்லை..ரிசல்ட்தான் முக்கியம்.போங்க போய் நல்லா டிரில் பண்ணுங்க பசங்களை..
சின்ன கிளாஸ் டீச்சர்ஸ் ஒண்ணுமே சொல்லித்தராமே ஒரு கூட்டல் கழித்தல் கூட சரியா கத்துத்தராம மேலே அனுப்பிடறாங்க..நாங்க டென்த் ப்ளஸ்டூ டீச்சர்ஸ்தான் சாக வேண்டியிருக்கு.. எல்லாக் கெட்ட பேரும் எங்களுக்குத்தான்..
ப்ளஸ் டூ விலே 200 பசங்க சார்.ஒரே ஒரு இங்கிலீஸ் டீச்சர் நான் மட்டும்தான்.மைக் வச்சுத்தான் பாடம் நடத்தறேன்.டெஸ்ட் வச்சா பேப்பர் திருத்தியே கை வீங்கிப்போகுது..கவர்ன்மெண்ட் ஸ்கூல் லட்சணம் இதுதான் பாத்துக்கிடுங்க..
இவை நம் பள்ளி வளாகங்களில் அன்றாடம் கேட்கும் உரையாடல்கள்.கற்றுத்தருதலின் பிரச்னைகளாக நம் ஆசிரிய நண்பர்கள் உணர்வது எல்லாம் இவற்றுக்குள் அடங்கி விடும். இவை எல்லாமே இன்னும் பல லட்சம் ரோபோக்களை உருவாக்கும் போராட்டத்தின் பிரச்னைகள்தாம்.கற்றுத்தருதலின் பிரச்னைகள் அல்ல. கல்வி என்பது இதுவல்லவே?
சார்..நாம ஸ்கூல் டூர் போனப்போ டில்லி வரைக்கும் அவ்வளவு தூரம் போனாலும் பூமி தட்டையாத்தானே சார் இருக்குது?ஆனா பூமி உருண்டைன்னு படிக்கிறோம்?
மிதக்கிற டெக்டோனியம் பிளேட்டுகளுக்கு மேலேதான் கடலும் நிலமும் இருக்குதுன்னா நாம் படகு வீடு மாதிரி இருக்கிறோமா?அப்படின்னா அசையாம இருக்கிறோமே எப்படி ?
நாமளும் அவங்களை மாதிரிதானே இருக்கிறோம்.அப்புறம் எப்படி நாம மட்டும் கீழ்ச்சாதி ஆனோம்?சாதின்னா என்னா?
கற்பித்தலின் சவால்களை நம் பள்ளிகள் இன்றுவரை சந்தித்தே இல்லை.குழந்தைகளாக கல்விச்சாலைகளுக்குள் நுழைந்து இளைஞர்களாக யுவதிகளாக அவர்கள் வெளியேறும் காலம் வரையான 15 ஆண்டுகளில் என்ன கற்றுத்தருகிறோம்?. கடந்த பல நூற்றாண்டுகளாக மனிதகுலம் சேகரித்து வைத்துள்ள அறிவு மற்றும் பண்பாட்டுச் சுரங்கத்திருந்து எவ்வளவை நம் குழந்தைகள் எடுத்துச்செல்லும் விதமாக கற்றுத்தருதல் நடக்கிறது?அதில் என்ன பிரச்னைகள்?அதை விவாதிக்க நம் நாட்டில் இப்போது அவசியம் இல்லை.கல்வியின் பொருளறிந்து கற்பித்தல் நடக்கும்போதுதானே நாம் அதுபற்றிப் பேசலாம்.
2.மாற்றுக்கல்வி முயற்சிகள்
கற்பவரும் கற்பிப்பவரும் சேர்ந்து விமர்சனப்பூர்வமாக இந்த உலகத்தையும் பிரபஞ்சத்தையும் புரிந்து கொள்ளும் நிகழ்வுப்போக்கே கல்வி.அது அதிகாரப்பூர்வமான கல்விச்சாலைகளில் நடக்காததால் இந்தப்புரிதலோடு உள்ளும் புறமும் நடக்கும் எல்லா முயற்சிகளையுமே மாற்றுக்கல்வி முயற்சிகள் எனலாம். வழமையான பள்ளிகளில் வழமையான பாட போதங்களைத்தாண்டி நடைபெறுகிற பல நிகழ்வுகள் மாற்றுக்கல்வி முயற்சிகள்தாம்.பேச்சுப்போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு திறன்களுக்கான போட்டிகள்,பள்ளிகளுக்கு எழுத்தாளர்கள் உள்ளிட்ட சமூக மனிதர்களை அழைத்துப் பேச வைப்பது.சமூகசேவைக்காக கிராமப்புறங்களுக்கு அழைத்துச்சென்று பத்துநாள் முகாம் போடுவது,என்.சி.சி முகாம்கள்,பள்ளி ஆண்டுவிழாக்களில் பங்கேற்பது என இவையெல்லாம் சரியான புரிதலோடு செய்யப்பட்டால் எல்லாமே மாற்றுக்கல்வி முயற்சிகள்தாம்.
இந்தியஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சிலகாலம் மிகுந்த உற்சாகத்தோடு இரவுப்பாடசாலைகளைப் பல மாவட்டங்களில் நடத்தினர். பள்ளிக்கூடத்தின் பாட்த்திட்டமும் புத்தகங்களும் தேர்வு முறையும் பிரம்பும் அவர்கள் மனங்களில் ஏற்படுத்தியிருக்கும் அன்றாடக் காயங்களுக்கு மருந்தாக அந்த இரவுப்பாடசாலைகள் இருந்தன.அவற்றை நட்த்தியவர்கள் அதே தெருக்களைச் சேர்ந்த மூத்த அல்லது முன்னாள் மாணவர்கள். சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர்,நாகப்பட்டினம் மாவட்டங்களில் இந்தப் பாடசாலைகள் மிகப் பரவலாகவும் சிறப்பாகவும் நடைபெற்றன.
மதுரையில் அக்ஷரா,பட்டுக்கோட்டையில் இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் பள்ளி ,சென்னையில் சில பள்ளிகள் ,திருச்சியில் எஸ்.ஆர்.வி.மெட்ரிக்குலேசன் பள்ளி எனச் சில முறைசார்ந்த பள்ளிகள் மாற்றுக்கல்வி முயற்சிகளில் ஈடுபடுகின்றன.அவை மிக முக்கியமான அனுபவங்களைத் தந்துள்ளன.பல நல்ல முன்னுதாரணங்களை அவை உருவாக்கியுள்ளன.பட்டுக்கோட்டைப் பள்ளியில் வீட்டுப்பாடம் ,பிரம்பு,அதிகமான தேர்வுகள் ஏதும் வைப்பதில்லை.மாறாக வேறுவிதமான வீட்டுப்பாடங்கள் தருகிறார்கள்.
பிள்ளைகளுக்கு நமது மரபான கலைகளான கரகாட்டம்,தப்பாட்டம் போன்றவற்றிலும் நாடகங்கள் நடத்துவதிலும் பயிற்சி அளித்துப் பல ஊர்களுக்குப் பள்ளி வேனிலேயே அழைத்துச்சென்று நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள்.பள்ளிக்கூடம் இப்படி கரகாட்ட்த்தில் அக்கறை காட்டினால் படிப்பை பிள்ளைகள் தாங்களே பார்த்துக்கொள்கிறார்கள். எந்த வன்முறையும் இல்லாமல் பத்தாம் வகுப்பில் பட்டுக்கோட்டை மாணவர்கள் 98 சதம் தேறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் தேசிய அறிவியல் நிறுவனத்தின் விருதை இப்பளி மாணவர்கள்தாம் பெறு வருகிறார்கள்.
திருச்சி எஸ்.ஆர்.வி.பள்ளி ஆண்டு முழுவதும் சமூகத்தை மானவர்களுக்கு அறிமுகம் செய்யும் கனவு மெய்ப்பட.. என்கிற நிகழ்வை நடத்தி வருகிறது.வெளிக்காற்று உள்ளே வரட்டும் என்கிற தலைப்பில் கோடைகாலப் பயிலரங்கை நட்த்துகிறது.
நான் அறிய மேற்கூறிய சில பள்ளிகளின் ஆசிரியர்கள் மட்டுமே ஜன்னலில் ஒரு சிறுமி,பகல் கனவு,ஜான் ஹோல்ட்டின் கல்வி சார்ந்த புத்தகங்கள் எல்லாம் வாசித்தவர்களாக பாவ்லோ பிரையர்,மாண்டிசோரி போன்ற பெயர்களை அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் நடத்தும் கல்வி முயற்சிகலும் மாற்றுக்கல்வி முயற்சிகளே.அறிவியல் இயக்கத்தின் துளிர் இல்லங்களில் ஒரு பைக் மெக்கானிக் சிறப்பு அழைப்பாளராக வந்து ஒரு பைக்கை அக்கு வேறு ஆணிவேறாகக் கழட்டிக் காட்டிக் கொண்டிருந்தார். இதுதானே மாற்றுக்கல்வி.சமூகத்தை விமர்சனப்பூர்வமாகப் பார்க்கப்பழக்குவது.கஞ்சி குடிப்பதற்கிலார்.அதன் காரணம் இவையெனும் அறிவுமிலார் வாழும் ஒரு சமூகத்தில் காரணம் எவை என்னும் அறிவை வழங்குவது மட்டுமே மாற்றுக்கல்வியாக இருக்க முடியும்.
சாதியக்கூறுகளும் மீறல்களும்
தமிழகக் கிராமங்களில் சாதி முதல் பார்வையில் பளிச்செனத்தெரிவது புவியியல் தளத்தில்.சாதி ரீதியான தெருக்கள்.ஒதுக்குப்புறமான தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள்.அங்கிங்கெணாதபடி இந்தப்புவியியல் விதிப்படிதான் இப்போதும் கிராமங்கள் இருக்கின்றன.(நகரங்களும் அப்படித்தான். அங்கே பளிச்சென்று தெரியாது. ஆனால் தோண்டிப்பார்த்தால் இப்புவியியல் ரீதியான சாதி அங்கும் தெரியும்).இதில் மீறல் என்பது சில வடிவங்களில் இப்போது வெளிப்படுவதைக் காண முடியும்.ஒன்று, ஊருக்குள் வரும் டவுண்பஸ் கிராமத்திலேயே நின்று திரும்பி விடுகிறது.சேரிவரை வருவதில்லை.ஆகவே சேரிமக்கள் கிராமத்துக்கு வந்து நிற்க நிழலின்றிக்காத்திருந்து பஸ் ஏற வேண்டும்.சேரிவரை பஸ் வரணும் என்று தலித் மக்களும், சேரிவரை போனால் பள்ளுப்பறையெல்லாம் முதல்ல ஏறி சீட்டுப்போட்டு உக்கார்ந்துட்டு வருவான் நாம ஸ்டாண்டிங்லே போகணும்.ஆகவே பஸ் சேரிக்குப்போக்க்கூடாது என்று கிராமத்து மக்களும் என பஸ் போராட்டமாக அது வடிவம் கொண்டு நிற்கிறது பல ஊர்களில்.சாதிக்காரர்கள் வந்தால் பஸ்ஸில் முதலில் உட்கார்ந்துவிட்ட தலித்துகள் எழுந்து அவர்களுக்கு சீட் கொடுக்கும் அடிமைத்தனமெல்லாம் இப்போது கிராமப்புறங்களில் முற்றாக ஒழிந்து விட்டது ஆறுதலான மீறல்.ஆனாலும் சேரி இன்றும் ஒதுக்குப்புறமாகத்தான் இருக்கிறது என்பது பருண்மையான புவியியல் உண்மை.
படிப்பு ,வேலைவாய்ப்பு காரணமாக பொருளாதாரரீதியில் சற்றே முன்னேறிய தலித் மக்களில் ஒரு சிறு பகுதியினர் கிராமத்தில் சொந்தமாக நிலம் வாங்கிப் பயிர் செய்ய முன்வருகின்றனர்.பன்னெடுங்காலத்து நிலத்தாகம் தீர அவர்கள் உற்சாகத்துடன் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.நேற்றுவரை கூலியாக இருந்தவன் இன்று சமமாக விவசாயம் செய்ய வந்துவிட்ட யதார்த்த்த்தை சீரணிக்க முடியாத உயர்சாதி மனோபாவம் வயற்காட்டில் நீர்பாய்ச்சும் வாய்க்கால் தகராறாக வெடித்துக் கொலைகள் வரை செல்கிற போக்கு தென் மாவட்டங்களில் பரவலாக உண்டு.இது சாதியின் இருப்புக்கும் மீறலுக்குமான அடையாளம்தான்.
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே என்றொரு தமிழ்த்திரைப்படப்பாடல் உண்டு.மயானக்கரையில் நின்று அப்பாடலை ஒருவர் பாடுவதாக வரும்.ஆனால் தமிழகத்தில் எல்லாச் சாதியினருக்கும் ஒரே சுடுகாடு என்பது இன்றும் உருவாகவில்லை.மாநகரத்து மின்மயானங்கள் ஒரு வேளை விதிவிலக்காக இருக்கலாம்.எல்லா கிராமங்களிலும் சாதிரீதியான சுடுகாடுதான்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக இதுபற்றி நாங்கள் ஒரு சர்வே நட்த்தியபோது அரசாங்கத்தின் செலவில் கட்டப்பட்ட மயானங்களுமே சாதிக்கு ஒன்றாகத்தான் கட்டப்பட்டுள்ளதைக் கண்டோம்.இன்னும் பல ஊர்களில் பஞ்சம சாதிகளுக்கு மயானக்கரை என்ற ஒன்ரே இல்லாத நிலை நீடிக்கிறது.
தென் மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சியும் வட மாவட்டங்களில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் வந்த பிறகு உள்ளூரில் தீண்டாமைக்கு எதிராக அவர்கள் போராட முடியாவிட்டாலும் பெருநகரங்களில் மாநாடுகள் போடும் போதெல்லாம் சாதி மறுப்பு உணர்வு பொங்க ஒருவித மீறல் சமூக மனநிலைக்கு ஆளாவது நடக்கிறது.இது நாளை உள்ளூர் எதிர்ப்புகளுக்கும் பீறல்களுக்கும் இட்டுச்செல்ல ஒரு கருத்துநிலை முன் தயாரிப்பாக இருக்கும் என நம்பலாம். இட்துசாரிகளும் அருந்த்தியர் அமைப்புகளும் இணைந்து உருவாக்கியுள்ள தீண்டாம ஒழிப்பு முன்னணி போன்ற எல்லாச்சாதியினரும் கொண்ட பொது அமைப்புகள் சாதி எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுப்பதும் இப்போது துவங்கியுள்ளது ஆரோக்கியமான போக்கு ஆகும்.
4.இடம் பெயர்தல்
நான் சிறுவனாக இருந்த 50-60 களில் பஞ்ச காலங்களில் எங்கள் பகுதி மக்கள் மூட்டை முடிச்சுகளோடு தஞ்சாவூருக்குப் பஞ்சம் பிழைக்கப்போவது உண்டு.நான்கைந்து மாதங்கள் அங்குபோய் விவசாயக் கூலி வேலை பார்த்து நெல் மூட்டைகளுடன் ஊர் திரும்புவார்கள்.தஞ்சாலூரு போனா கருதறுத்துப் பிழைக்கலாம் காஞ்சீவரம் போனா காலாட்டிப்பிழைக்கலாம் என்று பாட்டி சொல்லுவாள்.இப்பழமொழிகள் நமக்குச் சொல்வது என்ன?ஏழை உழைப்பாளி மக்கள் பிழைப்புத்தேடி ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்தார்கள் என்பதைத்தான்.காலம் காலமாகத்தொடரும் இத்துயரம் இன்றும் தொடர்கிறது.
திருப்பூர் நகரம் ஒரு மினி தமிழ்நாடாகவே இருக்கிறது.எல்லா முனைகளிலிருந்தும் திருப்பூருக்கு பஸ்களின் வழித்தடங்கள் உண்டு.பிழைப்பு இழந்த தமிழகத்தின் கிராமப்புற ஏழைகள் படையெடுப்பது திருப்பூராக இருக்கிறது.அங்கே ஒரு நரக வாழ்க்கைதான் அவர்களுக்குக் காத்திருக்கிறது.என்றாலும் துரத்தும் ஊர்களை விட்டுப் பிரிந்தே தீரவேண்டியிருக்கிறது.நானறிந்த தென் மாவட்டங்களிலிருந்து திருப்பூர்,சென்னை புறநகர்ப்பகுதிகள்,ஓசூர்,ஆந்திர,கர்நாடக கல் குவாரிகள் எனப் பல திசைகளை நோக்கி மக்கள் இடம்பெயர்கிறார்கள்.பணம் புரட்ட முடிந்தவர்கள் வளைகுடா நாடுகளுக்குத் தப்பிச்செல்கிறார்கள்.
இது ஒருபுறம் எனில் தமிழகத்துக்குப் பிழைப்புத் தேடி சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தினசரி வந்திறங்கும் பீகார்,ஒரிஸ்ஸா மற்றும் ஆந்திர மாநில மக்களின் எண்ணிக்கை நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.கு.அழகிரிசாமியின் திரிபுரம் கதைதான் எனக்கு நினைவுக்கு வருகிறது.
” பட்டினிப்பட்டாளங்கள் ஏதோ நம்பிக்கையுடன் ஒரே சாலையில் எதிர் எதிர் திசையில் பிரயாணம் செய்வது பஞ்சத்தின் கோரமான அலைக்கழிவுகளில் ஒன்று “ 1949இல் கு.அழகிரிசாமி எழுதிய கதை இது.எந்த முன்னேற்றமும் இன்றுவரை இல்லையே என மனம் பதறுகிறது.சுதந்திரம் நமக்கு எதைத்தான் கொண்டு வந்ததோ தெரியவில்லை.
மத்தியதர வர்க்கத்து வாழ்வில் இடப்பெயர்ச்சி என்பது வெள்ளைக்காரன் காலத்திலிருந்து இருப்பதுதான்.விவசாயம் சார்ந்த வாழ்வை விட்டு அரசாங்க உத்தியோகம் சார்ந்து வாழப்புகும் அத்தனைபேருக்கும் இடப்பெயர்வு உண்டு.
ஆண்கள் இடம்பெயர்ந்து சம்பாதிக்கப்போவது சங்க காலம் தொட்டு இருப்பதுதான் -பொருள்வயின் பிரிவு.ஆனால் இன்று கூட்டம் கூட்டமாகப் பெண் குழந்தைகள் சுமங்கலித்திட்டம் என்பது போன்ற பல பேர்களில் ஊர்கடத்தப்பட்டு ஏதேதோ மில்களின் எந்திரங்களுக்கிடையே வதைபட்டுக்கொண்டிருக்கும் அவலம் நம் கண் முன்னே அரங்கேறிக்கொண்டிருக்கிறது.அவர்களின் கதைகளைக் கேட்டால் –சொல்லாமலே பெருமூச்சில் கரைந்துபோன கதைகள் ஓராயிரம் -நமக்கு ரத்தக்கண்ணீர்தான் கொட்டும்.தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் நாகை,திருவாரூர்,தஞ்சைப் பகுதிகளில் கிராமங்களில் இன்று இளைஞர்களே இல்லை.யுவதிகளும் இல்லை.எல்லாம் இடம்பெயர்ந்து டிருப்பூர் போன்ற பகுதிகளுக்குச் சென்று விட்டனர்.அரசின் விவசாயக்கொள்கையும் இறால் பண்ணைகளின் வருகையும் அவர்களைத் துரத்தி விட்டுள்ளதை வெறிச்சோடிக்கிடக்கும் அவ்வீதிகளில் காணலாம்.
மதுரை,திருச்சி பஸ் நிலையங்களில் ஓர் இரவை நாம் கழிக்க நேர்ந்தால் கூட்டம் கூட்டமாக மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் இப்பக்கமும் அப்பக்கமுமாக அலைவதைக் காணநேரும்.சனிக்கிழமைகளில் திருப்பூரிலிருந்து வரும் அத்தனை பஸ்களிலும் ரயில்களிலும் மக்கள் தொங்கிக்கொண்டு வருவதைப் பார்ர்க்க முடியும்.இடப்பெயர்வின் காட்சி வடிவமாக அது இன்றைக்கும் நடந்துகொண்டிருக்கிறது.ஆட்சிகள் நிலையாக இருக்கின்றன.அமைப்புகள் நிலையாக இருக்கின்றன.மக்கள்தாம் நிலையற்று வேரற்று அலையும் காலமாக நம் காலம் இருக்கிறது.
5.கிராமப்புறப்பெண்களின் கல்வி,சுகாதாரம்
என்னைச்சுற்றிலும் பீடிசுற்றும் பெண்கள்.கால்களை அகட்டி நடுவில் வட்டச்சுளகை வைத்துக்கொண்டு பீடி இலைகளோடு அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.எத்தனையோ தொழில்களில் எங்கள் பெண்கள் காலை முதல் மாலைவரை -செங்கல் சூளைகளில்,வயல் வெளிகளில்,தீப்பெட்டியில் பட்டாசுத்தொழிலில் -என உழைத்து வருகிறார்கள்.அவ்வத் தொழில்சார்ந்து உடல் உபாதைகள், வியாதிகள் அவர்களுக்கு வந்து சேர்கின்றன.பெண்ணாகப்பிறந்ததால் உண்டாகும் பிரச்னைகள் தனி.எல்லாவற்றுக்கும் மருந்து தேடி அவர்கள் போவதில்லை.போக நேரமில்லை என்பதுதான் முக்கியக் காரணம்.ஊருக்குள்ளேயே ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தால் போய் விடுகிறார்கள்.பக்கத்து ஊருக்குப்போய் வைத்தியம் பார்க்க நேரம் இருப்பதில்லை.இழுத்துக்கிட்டா கிடக்கு இப்பம் ஆஸ்பத்திரிக்குப் போக.. என்று வேலையைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
ஆரம்ப சுகாதார நிலையமும் அரசு மருத்துவமனைகளும் மட்டுமே அவர்களுக்கான நோய்நீக்கும் ஏற்பாடுகளாக உள்ளன.தனியார் மருத்துவமனைகள் பற்றி அவர்கள் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை.ஆகவே அரசு மருத்துவமனைகள் மிக மிக முக்கியமானவை ஆகின்றன.எளிய மக்களின் வாழ்வில் அவை வகிக்கும் பங்கு மகத்தானது.ஆயிரம் கோளாறுகளும் ஊழலும் உள்ளே இருந்தாலும் அரசு மருத்துவமனைகள் - கண் கலங்கிச்சொல்கிறேன் -எம் பெண்களின் குறைநீக்கும் கோவில்கள்தாம்.
இதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.முதலில் வீடுகளில் பெண்களுக்கான சத்தான உணவுக்கு வழியில்லை.எல்லோருக்கும் உணவளித்தபின் தனக்கானதை அவள் எடுத்துக்கொள்கிறாள்.நகர்ப்புறத்து இந்தப் பண்பாடு இப்போது கிராமத்துக்கும் வந்துவிட்டது.பெரும்பாலான பெண்கள் ரத்தசோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபற்றி அறியாமலும் அறிந்தாலும் கவனிக்க வாய்ப்பின்றி வண்டி ஓடுற வரைக்கும் ஓடட்டும் என்று போய்க்கொண்டிருக்கிறார்கள்.
படிப்பு பரவலாகியுள்ளது.கிராமத்துப் பெண் குழந்தைகள் எல்லோருமே ஆரம்பப்பள்ளியில் சேர்ந்துவிடுகிறார்கள்.பால்வாடிக்குப் போகும் பழக்கம் இன்னும் சின்ன வயதிலேயே 2 வயசில் வந்துவிடுவதால் பள்ளி செல்லும் பழக்கம் வந்துவிடுகிறது.படிப்பைத் தொடர்வதில் இன்னும் பிரச்னை இருக்கிறது.பெண் குழந்தைகள் வயதுக்கு வந்தபிறகு பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கும் பழக்கம் வெகுவாக்க் குறைந்துள்ளது.உள்ளூரில் பள்ளி இருந்தால் அதில் இருக்கும் வகுப்புவரை படிப்பதில் சிக்கல் இல்லை.அருகமைப்பள்ளிகள்,பொதுக்கல்வி என்கிற நம் கனவுகள் நிறைவேறினால் அது பெண்கல்விக்குத்தான் பெரும் பேறாக அமையும்.இன்று கிராமத்துப்பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கான தனிக் கழிப்பறைகள் கிடையாது.ஓலைத்தடுப்புத்தான் எங்கும் இருக்கிறது.மாத விலக்குக் காலங்களில் எம் குழந்தைகள் ஒதுங்க பள்ளிகளில் தனியான ஏற்பாடே கிடையாது. கழிப்பறை இல்லாத பள்ளிகளுக்கு கணிணி மட்டும் வந்து சேர்ந்து விடுகிறது.கேலிக்கூத்துதானே.
இன்னும் கல்லூரிகளுக்குப் போவது என்பது கிராமப்புறத்தில் உள்ள படித்த வர்க்கத்தினரின் பிள்ளைகளுக்கு மட்டுமே வாய்க்கிறது.மார்க் அடிப்படையில் சீட் என்னும் போது கிராமப்புறப் பெண்குழந்தைகள் கல்லூரிகளில் கிடைக்கும் பாட்த்தை எடுத்துப் படிக்க வேண்டிய நிலைதான் வாய்க்கிறது.ட்யூசன் வசதிகள் எதுவும் இல்லாத கிராமப்புறப் பெண்குழந்தைகளுக்கென எல்லாப் பாடப்பிரிவுகளிலும் (கல்லூரிகளில்)இட ஒதுக்கீடு செய்வது அவசியம்.
1 comment:
ஆசிரியைகளுடன் பேசினால் அவர்கள் ஊதியத்தை ப்ற்றியும் பஞ்சப்படியை பற்றியுமே பேச்சாக இருக்கும். அல்லது உடுத்திய சேலையை பற்றிய உரையாடலாக இருக்கும். மாணவர்கள் வாழ்க்கையை பற்றி படிப்பை பற்றி ஆசிரியைகள் பேசி கேட்டதில்லை .
Post a Comment