அதோ மேகங்கள்
மழையைக்கொண்டு போகிறது
நம்முடைய குளங்கள்
வறண்டு விட்டன
நம்முடைய
பயிர்கள்
வாடிவிட்டன
விடாதே
மேகங்களை மடக்கு
பணிய வை
கி.ரா.அவர்களின் கரிசல் கதைத்திரட்டின் மூலம் மு.சுயம்புலிங்கம் ஒரு சிறுகதையாளராக உலகுக்கு வெளித்தெரிய வந்தார்.என்றாலும் அவரை எனக்கு முழுமையாக அறிமுகம் செய்து வைத்தது கோணங்கிதான்.எங்கள் தூத்துக்குடி மாவட்ட்த்தின் வேப்பலோடை என்கிற ஒரு கடலோரக்கிராமத்தின் பனையேறிக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சுயம்பு நாட்டுப்பூக்கள் என்றொரு கையெழுத்து இதழை தன் ஊருக்குள் நட்த்தி வந்தார்.அவற்றின் சில பிரதிகளைக் கோணங்கி எங்கள் வீட்டுக்கு வாங்கி வந்தான்.பின்னர் கல்குதிரையின் ஒரு இதழ் முழுக்க சுயம்புவின் நாட்டுப்பூக்களுக்காகவே சமர்ப்பணம் செய்தான்.பின்னர் சவுத் விஷன் பாலாஜியும் தேவப்பிரகாஷும் சேர்ந்து அப்படைப்புகளை ஊர்க்கூட்டம் என்ற பேரில் கோணங்கியின் உதவியுடன் முதன் முதலாக நூலாக்கம் செய்தார்கள். (இதுபோலப் பல ஆளுமைகளை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது)
காதல்,அன்பு,சோகம் என்று போய்க்கொண்டிருந்த அன்றைய என் வாசிப்புப் பரப்பில் பெருத்த அதிர்ச்சி அலைகளை சுயம்புவின் எழுத்துக்கள் ஏற்படுத்தின.எனக்கு மட்டுமல்ல.பலருக்கும்.முதலில் அவருடைய கவிதைகள்தான் எம்மைத்தாக்கின.சிறுகதையின் மொழியைச் சிக்கனப்படுத்த ஒரு பயிற்சி தேவை.அதுக்காகத்தான் கவிதை எழுத வந்தேன் என்று ‘தெனாவட்டாக’ப் பிரகடனம் செய்து அப்போதுதான் எழுத வந்திருந்த எங்களையெல்லாம் திகைப்புக்குள்ளாக்கியவர் சுயம்பு.
முதல் வாசிப்பில் அவருடைய கவிதைகள் மாவோ மற்றும் ஹோசிமின் கவிதைகளைப்போல ஒரு தோற்றம் தருபவை.சின்னஞ்சிறு கிராமத்திலிருந்து இத்தனை வீறுகொண்ட வார்த்தைகளா என்கிற வியப்பே முதலில் ஏற்பட்டது.பனங்காட்டின் வறுமையை வெக்கையை அனலை அவர் எழுத்துக்களில் கொண்டு வந்தார்.அவருடைய சோகம் ஊரின் சோகமாக இருந்தது.தனிமனித சோகம் அவர் எழுத்தில் எப்போதும் இருந்ததில்லை.ஊரின் மனிதராக-ஒரு இனக்குழுச் சமூகத்தின் மனநிலையோடுதான் -அவர் எப்போதும் இருந்தார்-இருக்கிறார் என்பது என் கணிப்பு.கொடுமையைச் சிரிச்சுத்தான் கழிக்கணும் என்பது அவருடைய எழுத்தின் பாணி.
எதுவும் கிடைக்காதபோது
களிமண் உருண்டையை வாயில் போட்டு
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீரணமாகி விடுகிறது
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்.
முற்போக்கு இலக்கியம் விதைக்கும் நம்பிக்கையின் கீற்று அவருடைய எழுத்துக்களில் எப்போதும் மிளிர்வதைக் காணமுடியும்.வறட்சியைப் பாட வரும்போதும் கூட,
இந்தப் பாழாய்ப்போன வானம்
நான் கட்டோடு அதை
வெறுக்கிறேன்.
எங்கள் சீமைக்கு
ஆரோக்கியமான வானம் வேணும்
வாழ்வு வேணும்
நாங்கள் அதைச் செய்தாகணும்.
என்று பாடுவது அவருடைய மனப்போக்காக ஆரம்பத்தில் இருந்தது.பொதுவுடைமைச் சிந்தனைகளும் போராட்ட உணர்வும் மிகுந்த ஒரு மனநிலைதான் அவருடைய ஆரம்ப எழுத்துக்களின் அடையாளமாக இருந்தது.இயக்கத்தின் மீதான விமர்சனங்களும் அவருடைய எழுத்துக்களில் கூர்மையாக வெளிப்பட்டதுண்டு.
நீ கவனிக்கிறதே இல்லை
உன்னுடைய சாட்டையில்
வார் இல்லை
முள் இல்லை
சரி செய்
பிரயோகம் பண்ணு
அப்போதுதான்
வசத்துக்கு வரும்
அதுகள்
உன் வசத்துக்கு வரும்.
வாழ வழியற்றுச் சொந்த கிராமத்தை விட்டுச் சென்னைப்பட்டணத்துக்குத் துரத்தப்பட்ட அவர் பட்டணத்து வாழ்க்கையை எதிர்கொண்ட விதம் அலாதியானது.அதே பனங்காட்டு மனசோடுதான் அவர் பட்டணத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்பதற்கான அடையாளங்களாக அவருடைய பிற்காலக் கவிதைகள் திகழ்கின்றன.
விசாலமும்
எண்ணிக்கையும்
நிறைந்த சென்னையில்
ஒண்ணுக்குப்போக
ரெண்டுக்குப்போக
மகா
தர்மசங்கடம்.
என்று ஒரு கவிதையிலும்
நீண்டு கிடக்கிறது
ரயில் தண்டவாளம்.
தண்டவாளத்து மேலே
பெண்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்
காலைக்கடன் செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்கள்.
ரயில் வருது.
எச்சரிக்கை செய்கிறது சங்கு
கொத்தா விழுந்து துரத்துகிறது வெளிச்சம்.
வேவு பார்க்கின்றன
நூறு நூறு கண்கள். – என்று செல்லும் ஒரு கவிதை
எது எதுக்கெல்லாம்
பெண்
அசிங்கப்பட வேண்டியிருக்கு.
என்று முடிகிறது.
அவருடைய எழுத்துக்களை இரண்டாகப் பிரிக்கலாம்.பனங்காட்டு வாழ்வைப் பேசுபவை ஒன்று .சென்னை வாழ்க்கை பற்றியவை மற்றொன்று என.ஆனாலும் அதிகம் கிராமத்து வாழ்க்கைதான்.
சுயம்புவின் சிறுகதைகள் தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் தனித்துவமிக்க இடம் பெற்றவை. முன்னுதாரணமும் பின் தொடர்வும் இல்லாத தனீ ரகமானவை.கவிதைகளைப் போலவே கதைகளிலும் கிராமத்து வாழ்வும் நகரத்து வாழ்வும் தமக்குரிய பாகத்தைப் பெறுகின்றன.கி.ரா போன்றவர்கள் வலுவாக முன்னெடுத்த வட்டார மொழி மற்றும் அடையாளங்களை நோக்கிய பயணத்தில் சுயம்புலிங்கத்தின் கதைகள் அழுத்தமான சுவடு பதிக்கின்றன.மிகுந்த சொற்செட்டுடன் சிக்கனமான ,செறிவான மொழியில் சொல்லப்பட்ட கதைகள் அவை.அவருடைய கதைகளில் ‘கதை’ என்று பார்த்தால் ஒன்றும் இருக்காது.சம்பவங்களைக் கதையாக்கும் ஆளில்லை அவர்.வீட்டுக்கு விலக்கான ஒரு பெண்ணின் ஒருநாள் ஒரு கதையாகும்.ஊர்க்கூட்டம் –அதில் கிராமத்துச்சம்மதம் உருவாவது ஒரு கதை.குருவி தெறிக்க வந்தவனைத் தப்பாக நினைத்துத் திட்டும் பெண்ணின் பயம் ஒரு கதை.வீட்டாள்கள் எல்லோரும் கிடந்து செத்த-செத்துக்கிடந்த திருணையின் கதை ஒருபக்கக்கதையாக.இப்படி இப்படித்தான்.அவர் கதை எழுதுகிறாரா இல்லை சும்மா கதை எழுதிப்பார்க்கிறாரா என்று கூட ஆரம்பத்தில் எனக்கு சந்தேகம் வருவதுண்டு.அதுசரி.எல்லாமே ஒத்திகைதானே வாழ்க்கையில் என்ரு மனம் அப்புறம் சமாதானம் கொள்ளும்.
எல்லாம் வாசித்தவர்தான் அவர்.ஒண்ணும் தெரியாத கிராமத்து ஆளில்லை.எங்கள் தாத்தாவுக்கு ஒரு குதிரை இருந்தது என்று தலைப்பு வைக்கிறவர் வைக்கம் முகம்மது பஷீரைப் படிக்காமலா இருப்பார். வாழ்வின் அழகுகளையும் ஆனந்தங்களையும் பார்க்க துயரையும் குரூரத்தையும் ரத்தக்கவிச்சியோடு முன் வைத்த கதைகள் அவருடையவை.இதில் சில கதைகளில் ஜி.நாகராஜனையும் விஞ்சி நிற்கிறார் என்று எனக்குப்படுகிறது.
அவளுக்கு அவ்வளவு இஷ்ட்டம் குளிக்கிறதுக்கு.முங்கி முங்கிக் குளிக்கிறாள்.சேத்து மண்ண அள்ளித் தலைல அரக்கித் தேய்க்கிராள்.கைட்டு மூக்கப்பொத்திக்கிட்டு தண்ணிக்குள்ள நல்லா முங்கிக்குளிக்கிறாள். வத்திக்கிடக்குற அந்தக் கம்மாத்தண்ணி அழிநாத்தமும் மீன் நாத்தமும் சேலப்பீ நாத்தமுமாய் மணந்து கெடக்கு.(தூரம்-கதையிலிருந்து)
இந்த மணம் அவர் கதைகள் எல்லாவற்றிலும் பரவிக்கிடப்பதை நுகரலாம்.நகர்சார் கதைகளில் என்னை மிகவும் தாக்கிய கதைகள் என தோவாளம் மற்றும் சிங்காரச்சென்னை ஆகிய கதைகளைக் கூறுவேன். ”சாக்கடைத் தண்ணீரின் அடியிலிருந்து ஒரு மனிதனின் சுவாசக் காற்று சாக்கடைத் தண்ணீருக்கு மேலே வந்து முட்டை இடுகிறது.அவரோடு சேர்ந்து வேலை செய்யும் அவரது சகாக்கள் கயிற்றைப்பிடித்துக்கொண்டு கயிற்றின் அசைவை உற்றுப்பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள்” என்று அவர் அக்காட்சியை விளக்கிச்செல்லும் வரிகள் வாசிக்கும் நம்மைப் பெரும் குற்ற உணர்வுக்கு இட்டுச்செல்கின்றன.இன்னொரு இட்த்தில் இதுபற்றி அவர் மனிதன் சாக்கடைக்குள் இறங்குகிறான் விஞ்ஞானம் வேடிக்கை பார்க்கிறது என்று எழுதுகிறார்.கழிப்பறையில் வழுக்கி விழுந்து செத்துப்போன ஒரு பெரியவரை பிளாட்பாரத்தில் வைத்துக் குளிப்பாட்டும் ஒரு காட்சியை விவரிக்கும் சிங்காரச்சென்னை என்கிற கதை புதுமைப்பித்தனின் மகாமசானம் போன்ற ஒரு வலுவான கதை என்பேன்.
தென் தமிழகத்து வாழ்வின் ஒரு பகுதியை- பனையேறிகளான ஒரு மக்கள் குழுவின் வாழ்க்கையை-சிறு கடைகள் நடத்திப் பிழைக்கும் எளிய மக்களின் வாழ்க்கையை-சென்னையில் பெரிய கடைகளில் வேலை பார்க்க என்று இளம் பிராயத்திலேயே ஊரையும் பெற்றோரையும் துறக்க நேரிடும் துயரத்தை சுயம்புதான் தமிழில் முதன் முதலாகப் பேசியிருக்கிறார்.
ஆனாலும் அவர் தமிழ் இலக்கிய உலகில் அதிகம் அல்ல குறைவாக்க் கூடப் பேசப்படாத ஆளுமையாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்.பனைக்கூட்டம் துரத்த சென்னைக்கு வந்து தள்ளு வண்டியில் பொருட்களை விற்றுப் பிழைத்துப் பின் மிட்டாய்க்கடை வைத்துப் பிழைத்து என பெரும் அலைக்கழிவான வாழ்க்கை லபிக்கப்பட்ட அவர் தன் கழுத்தில் கிடக்கும் பறையை தானே அடித்துத் தன் இருப்பை உலகுக்கு உணர்த்தும் கூடுதலான ஒரு வேலையைச் செய்ய இயலாதவர்.அதனால்தான் கவனிப்பின்றிப்போனாரோ?
இப்போது மீண்டும் அவருடைய கவிதைகளையும் கதைகளையும் ஒருசேர வாசித்தபோது இன்னொரு காரணமும் இருப்பதுபோலப் புலப்படட்து.சுயம்பு தன் படைப்புகளில் கடுமையான உண்மைகளைப் பேசியிருக்கிறார்.புனைவென்று உணர முடியாத உண்மைகளாக அவை இருப்பதும் தமிழ் வாசகப்பரப்பில் அவ்ருக்கு சரியான இடம் கிடைக்காமல் போனதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று படுகிறது. உண்மையை ஒட்டிப்புளுகுவதுதான் எழுத்தென்று புதுமைப்பித்தன் சொன்னார்.புளுகத்தெரியாத சுயம்பு அடி வாங்கி விட்டாரோ என்றும் படுகிறது.மொழிசார்ந்த முழுப் பிரக்ஞையோடு இயங்கும் இவருடைய கதைகள் (எங்கள் தாத்தாவுக்கு ஒரு குதிரை இருந்த்து போல ஓரிரு விதிவிலக்குகல் தவிர்த்து) வாசக மனதைப் பிழிந்து கண்ணீர் துளிர்க்கச்செய்யாவில்லையோ (தமிழ் வாசக மனதைக் கவர அது தேவையாக இருக்கிறது) என்றும் தோன்றுகிறது.மௌனிக்குச் சொன்ன வாசகத்தை வேறொரு அர்த்தத்தில் நான் சுயம்புலிங்கத்துக்குச் சொல்வேன் --‘சுயம்புலிங்கம் எழுத்தாளர்களின் எழுத்தாளன்’ .
அவருடைய கதைத்தொகுப்பையும் (ஒரு பனங்காட்டுக் கிராமம்) கவிதைத்தொகுப்பையும் ( நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள்) உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
1 comment:
கை இல்லாமல்
கால் இல்லாமல்
உறுப்புகள் கோரப்பட்டு
மனுசங்க இருக்காங்க
வயிறு இல்லாத மனிதன்
இல்லவே இல்லை.
-மு.சுயம்புலிங்கம்.
எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரியில் இந்த கவிதையை வாசித்த போதே அவரைக் குறித்து அறிய விரும்பினேன். சுயம்புலிங்கம் குறித்த தங்கள் பகிர்வு அவரைத்தேடி வாசிக்கத் தூண்டும்படியாக இருக்கிறது. நன்றி
Post a Comment