முதலில் நான் மேலாண்மை பொன்னுச்சாமியினுடையது என்று அறியாமலே லவுட்ஸ்பீக்கரில் அவருடைய பேச்சால் ஈர்க்கப்பட்டு அக்குரல் வந்த திசை நோக்கி நடந்தேன்.அவரை முன்னே பின்னே பார்த்ததில்லை. ஒலிபெருக்கியின் வழி வந்த வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு அதை நோக்கி நடந்தேன்.அப்போது எனக்குத் தெரியாது நான் தமுஎசவை நோக்கி நடந்துகொண்டிருந்தேன் என்று.என் பயணத்தின் திசை அன்றுதான் மாறியது என்பேன்.
அது எமர்ஜென்ஸி அமலில் இருந்த காலம்.அரசியல் இயக்கங்கள் சுதந்திரமாக இயங்க முடியாத ஒரு நெருக்கடிக்காலம்.நான் அப்போது ராணுவத்தில் இருந்தேன் .56 நாள் ஆண்டு விடுப்பில் கோவில்பட்டி வந்திருந்தேன்.விஸ்வகர்மா ஆரம்பப்பள்ளியில் அந்தக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது.அது தமுஎசவின் இலக்கியக்கூட்டம் என்ற போர்வையில் நெருக்கடி நிலைக்கு எதிராக நடந்து கொண்டிருந்த ஓர் அரசியல் கூட்டம் என்று உள்ளே போன பிறகுதான் தெரிந்தது. சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியைச் சேர்ந்த ஆர்.கிருஷ்ணன் (பின்னர் வாசு தேவநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த தோழர்) தலைமையில் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.மறைந்த மார்க்சிஸ்ட் தலைவர் பாலவினாயகம் அக்கூட்ட்த்தில் பேசியவர்களில் ஒருவர்.மேலாண்மை பொன்னுச்சாமி தமிழ் சினிமாக்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். இதயக்கனி பட்த்தில் எம்ஜிஆர் இனிமேல் இந்தத்தோட்டம் இங்கு வேலை பார்க்கும் எல்லோருக்கும் சொந்தம் என்று அறிவிக்கும் காட்சி பற்றி படு கிண்டலாகப் பேசிக் கொண்டிருந்தார். உலகத்தில் எந்த முதலாளியாவது அப்படிச் செய்திருக்கிறானா?இது ஆளும் வர்க்கம் உருவாக்கும் மாயத்தோற்றமும் மயக்கமும்ஆகும்.உழைக்கும் வர்க்கத்தை ஏமாற்ற அது செய்யும் எத்தனையோ செப்படி வித்தைகளில் இதுவும் ஒன்று என்று பேசினார்.ஒரு சினிமாவைக்கூட இப்படியெல்லாம் ஆய்வு செய்கிறார்களே என்கிற வியப்புடன் அக்கூட்டத்தில் அமர்ந்திருந்தேன்.அங்கு என் கல்லூரித்தோழர்கள் சுவடி,பாலு போன்றோரும் பால்வண்ணமும்கூட அமர்ந்திருந்தார்கள்.
அன்று கலை பற்றி மேலாண்மை முன்வைத்த அரசியலால் நான் ஈர்க்கப்பட்டேன்.பின்னர் ராணுவத்துக்குத் திரும்பியபோது கலிம்போங்க்கில் அறிமுகமான நக்சல் தோழர்களோடு இணக்கமான மனதோடு சில காலம் பழகியதற்கும் ,திரும்பி வந்த பிறகு –விரும்பி- தோழர் பால்வண்ணத்தின் பிடியில் சிக்கி,மார்க்சிய இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டதற்கும் துவக்கப்புள்ளியாக மேலாண்மையின் அன்றைய பேச்சுத்தான் அமைந்திருந்தது.
செம்மலரில் மேலாண்மையின் கதைகளைத் தொடர்ந்து வாசித்து வருவேன்.ஒவ்வொரு மாதமும் இரண்டு கதைகள் வரும்.மேலாண்மை பொன்னுச்சாமி என்ற பேரில் ஒன்று.அன்னபாக்கியம் செல்வன் என்ற பேரில் ஒன்று.செம்மலர் அலுவலகத்தில் இவ்வளவு உயரத்துக்கு அவருடைய கதைகள் அச்சுக்கு தயாராகக் காத்திருக்கும் என்று ஒரு ஆட்டுக்குட்டி உயரத்துக்கு கையை உயர்த்தி சுவடி சொல்வான்.அது மாதிரி நாமும் நிறைய எழுதி செம்மலரில் அச்சாக வேண்டும் என்று மனம் ஆசை கொள்ளும்.
கல்லூரி நாட்களிலேயே கவிதைகள் எழுதி கணையாழியிலும் நீலக்குயிலிலும் வந்து எனக்கு என்னைப்பற்றி நான் ஒரு எழுத்தாளன் என்கிற தன்னுணர்வு வந்து விட்டிருந்தது. கணையாழி, தீபம்,கசடதபற,நிர்மால்யம்,கோகயம் என என் பாதை போய்க்கொண்டிருந்தது.என் வாசிப்பில் இருந்த இவை எதுவும் பேசாத ஒரு வாழ்க்கையை செம்மலரும் மேலாண்மை பொன்னுச்சாமியும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.கிராமத்து வாழ்வின் நெருக்கடிகளை வர்க்கப்பார்வையுடன் முன்வைத்த அக்கதைகள் என்னை மெல்ல மெல்ல ஈர்த்தன.அக்கதைகளின் சத்திய ஆவேசம் என்னை வசீகரித்த (இதுவல்லவோ எழுத்து)அதே சமயத்தில் அக்கதைகளின் மொழியும் நடையும் எனக்குப் பெரும் ஆயாசமூட்டின. இதை வெளிப்படையாக மேலாண்மை பொன்னுச்சாமியைச் சந்திக்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன்.புதுசா வந்த பையன் ஏதோ சொல்றான் என்றில்லாமல் மேலாண்மை நான் சொல்வதையெல்லாம் பொறுமையாகச் செவிமடுத்துக்கேட்பார். நக்கலாகவும் பேசுவேன்.அதையும் சிரித்தபடி ஏற்றுக்கொள்வார்.பதிலுக்குக் காயப்படுத்தமாட்டார்.இது மேலாண்மை என்கிற அமைப்பாளர் அன்று கைக்கொண்ட மனநிலை.எனக்கு அது வியப்பளித்தது.அவர் யாரையும் வார்த்தைகளால் காயப்படுத்துவதில்லை-தன்னைத் தொடர்ந்து புண்படுத்துபவர்களையும் கூட.இலக்கிய உலகில் இது அபூர்வமாக காணக்கிடைக்கும் மனநிலை.
அவர் பள்ளிப்படிப்பு மறுக்கப்பட்ட ஒரு குழந்தையாக, தாய் தகப்பன் இல்லாமல் ஒரு தம்பியுடன் வாழ்வோடு மல்லுக்கட்டி வாழ்வை ஜெயித்தவர்.அவருடைய பின்புலம் அறிந்த பிறகு அவர் மீது ஒரு மரியாதை ஏற்பட்டது.வார்த்தைகளின் மீது அவருக்கிருக்கும் அபரிமிதமான மோகம் பற்றிய என் விமர்சனத்தின் தன்மை மாறியது.
ஒவ்வொரு கதையிலும் கூடுதலாகப் பல வரிகளும் பல வரிகளில் கூடுதலாகச் சில வார்த்தைகளும் அவர் எழுத்தில் வந்து விழுவது ஏன் என்று நான் கேட்டுக்கொண்டே இருப்பேன்.”மன ஆணி வேரின் அடி நுனியில்நீர்ச்சுனை பட்ட மாதிரியோர் குளிர்ச்சி.மனசெல்லாம் பூத்த மாதிரியோர் இறகு வருடல்.உறக்கச்சடவை கழுவித் துடைத்த மனமகிழ்வு “ என்று போகும் அவருடைய வரிகளில் மிளிரும் படிமங்கள் எனக்கு நெருடலை ஏற்படுத்துவதுண்டு.
“பள்ளி இல்லை.வகுப்பு இல்லை.அதிகாரத்திற்குப் பணிகிற பிள்ளைகள் இல்லை.நக்கல் செய்ய வாத்தியார்கள் இல்லை.கடை இல்லை.நினைத்த நேரம் தின்பண்டம் வாங்கித் தின்ன வாய்ப்பில்லை. ஏகப்பட்ட ’இல்லை’கள்.முடிவே இல்லாத இல்லைகள்.மனசின் சுவாரஸ்யங்களையும் ,உல்லாச இனிமைகளையும் இல்லையாக்குகிற கொடிய இல்லைகள்.ஏக்க வேதனையிலும் சலிப்புணர்ச்சியிலும் இவனைப்போட்டுப் புதைக்கிற நரக இல்லைகள்”
“சபிக்காத அம்மா.எரிந்து விழாத அம்மா.கோபமில்லாத அம்மா.தன் விதியைத் தானே நொந்துகொள்கிற சுய பச்சாதாப அம்மா.அவலமும் சோகமுமாய் அடிமன ஆத்மாவின் புலம்பலாய் ..அம்மா.”
போன்ற வரிகளில் திரும்பத் திரும்ப வரும் வார்த்தைகள் வாசிப்புக்குத் தடை என்பது என் அனுபவம்.சில சொற்சேகரங்களில் அவருக்கு அலாதியான ஆர்வம் உண்டு.பூ என்ற சொல் மீது ஒரு பிரேமை அவருக்கு.பூக்காத மாலை,பூச்சுமை,மனப்பூ,ஒரு மாலை பூத்து வரும்,மானாவாரிப்பூ, வெண்பூ மனம், அன்பூ வாசம், பூ நெஞ்சத்தீ இவற்றோடு சமீபத்தில் சாகித்ய அகாதமி விருது பெற்ற மின்சாரப்பூ. முன்னுரையில் கூட உங்கள் பாராட்டுப்பூக்கள் என்னை உற்சாகப்படுத்தும் என்று எழுதுவார். இதிலெல்லாம் என் வாசக மனம் சற்றே அசூயை கொள்கிறது.
யதார்த்தவாதம்தான் அவருடைய பாதை.ஆனால் அந்தப் பாதைக்குச் சொற்களின் மீதான இந்தக் கூடுதல் மயக்கம் ஒரு தடைதான் என்பது என் கருத்து.
பள்ளிப்படிப்பு மறுக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு தானே படித்தும் எழுதியும் போராடிப்பெற்ற எழுத்தறிவின் மீதும் வார்த்தைகளின் மீதும் மற்றவர்களுக்கு இருப்பதை விடக் கூடுதலான ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கும் என்கிற உளவியலைப் புரிந்து கொண்டதால் அவர் மீது ஆரம்ப நாட்களில் வைத்த கடுமையான விமர்சனத்தை நான் மென்மையாக்கிக் கொண்டேன்.
இதைத்தாண்டி அவருடைய படைப்புகளைப் பார்க்கையில் அத்தனையும் ஒரு மானாவாரி கரிசல்காட்டு விவசாயியின் குரலில் சொல்லப்பட்ட கதைகள்தாம் என்பேன்.தமிழில் இது அபூர்வமான குரல். உலகப் போக்கை அறியாத வெள்ளந்தியான ,அதே சமயம் இயற்கை நியாயத்தின் தளத்தில் உறுதியுடன் காலூன்றி நின்று பிசிற்ற குரலில் உரத்துப்பேசும் கதைகள் மேலாண்மை பொன்னுச்சாமிக்குரியவை. சம்சாரியின் மனதோடு பேசிய கதைகள் தமிழில் மிக மிக அரிது.அப்படியான அரிய கதைகளைத் தந்தவர் மேலாண்மை.
அவருடைய அரும்புகள்,உயிரைவிடவும்,சிபிகள் போல தமிழில் குறிப்பிடத்தக்க பல கதைகளை தந்திருக்கிறார்.அவருடைய முற்றுகை நாவலில் கையாண்ட பிரச்னை மிக முக்கியமானது.எல்லா நியாயங்களையும் தாண்டி அந்நாவலின் கதைநாயகி சாதி என்கிற கோட்டைக்குள் தன்னைத்தானே பூட்டி வைத்திருக்கும் மன முற்றுகை பற்றிய அந்நாவல் தமிழில் வேறு யாரும் பேசியிராத ஒரு வாழ்வைப்பேசியது.
முற்போக்கான உள்ளடக்கத்தோடு தொடர்ந்து அவருடைய படைப்புக்கள் வருவது பற்றி பலரும் பேசியிருக்கின்றனர்.ஆனால் அவருடைய கதைகளில் விவரிக்கப்படும் கரிசல் வாழ்க்கையின் சின்னச்சின்ன பண்பாட்டு அசைவுகள் பற்றி யாரும் அதிகம் பேசவில்லை.தனியாகவும் சிறப்பாகவும் பேசப்பட வேண்டிய ஒரு பகுதி அது.
சுமார் 20 சிறுகதைத்தொகுப்புகள்,4 குறுநாவல் தொகுப்புகள்,8 நாவல்கள் ஒரு கட்டுரை நூல் என அவருடைய படைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.இன்னும் தொகுக்கப்படாத கதைகள் சில நூறு இருக்கக்கூடும்.நானறிய இடையறாது கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் ஒரு படைப்பிலக்கியவாதி மேலாண்மை பொன்னுச்சாமி மட்டும்தான்.அதேபோல வாழும் காலத்திலேயே சரியாக இனம் காணப்பட்டு உரிய பரிசுகள் விருதுகள் தந்து கௌரவிக்கப்பட்ட கலைஞனாகவும் அவர் இருக்கிறார்.
செம்மலர் இலக்கிய இதழோடும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தோடும் இரண்டறக்கலந்தது அவரது படைப்பு வாழ்க்கை.அவர்மீது எறியப்படும் அவதூறுகளைக்கூட (சமீபத்தில் காலச்சுவடு செய்த்து) மிகுந்த பொறுப்போடும் நிதானத்தோடும் எதிர்கொள்ளும் அவரது மனநிலை எனக்கு இப்போதும் பிரமிப்பூட்டுகிறது.
அவரது படைப்புகள் குறித்த விமர்சனங்களை அவர் பொறுமையாக்க் கேட்பார் என்றாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்கிற வருத்தம் எனக்கிருந்தபோதும் மீண்டும் சொல்லி முடிக்கிறேன்.வார்த்தைகள் மீதான பிரேமை ஆரம்ப நாட்களில் இருந்ததை நான் புரிந்துகொண்டு ஏற்கிறேன்.ஆனால் இப்போதும் அது தேவையா?தன் வாசகர்கள் பற்றிச் சற்றுக் குறைத்து மதிப்பிடுகிறாரோ என்கிற ஐயம் தொடர்ந்து எனக்கு இருந்துகொண்டே இருக்கிறது.
ஜாக் லேண்டனின் உயிராசை கதையில் வரும் மனிதன் கப்பலில் ஏறிய பிறகும் உணவு ஏராளமாக அங்கே உத்தரவாதப்படுத்தப்பட்ட பிறகும் கூட பழைய பட்டினி நாட்களின் நினைவுப்பிடியிலிருந்து விடுபட முடியாமல் தன் உடலெங்கும் கோட்டுக்குள் ரொட்டிகளை ஒளித்து ஒளித்து வைத்துக்கொண்டிருப்பான்.ஆனால் அது புடைத்துக்கொண்டு எல்லோருக்கும் தெரிந்து விடும்.
எங்கள் இடையறாத இலக்கியச் சண்டைகளுக்கு ஊடே எனக்கும் அவருக்குமிடையிலான, என் குடும்பத்துக்கும் அவர் குடும்பத்துக்குமிடையிலான அன்பும் நட்பும் தோழமையும் மேலும் மேலும் நெருக்கமாகவே வளர்வதை நெகிழ்ச்சியோடும் நிறைவோடும் குறித்து வைத்து இதை நிறைவு செய்கிறேன்.
2 comments:
மேலாண்மை பொன்னுசாமியின் சிறுகதைகள் ஒன்றிரண்டு வாசித்திருப்பேன். அவரைக் குறித்து கொஞ்சம் வாசித்திருக்கிறேன். இந்த பதிவை படித்ததும் அவரது சிறுகதைத் தொகுப்பு மற்றும் நாவல் வாசிக்க விரும்புகிறேன். பகிர்வுக்கு நன்றி.
ஒரு படைப்பாளியைப் பற்றி சக படைப்பாளி பண்போடு எடுத்துரைத்தல் என்கிற மாண்பு மேலாண்மை அவர்களைப் பற்றிய. அவரின் எழுத்து பற்றிய உங்களின் இந்தக் கட்டுரையில் மிளிர்கிறது. மனதை இதமாக வருடிக் கொடுத்தது போன்ற கருத்துரைகள். இந்தப் பண்பு எத்தனை எழுத்தாளர்களிடம் இன்று இருக்கிறது. எல்லோரும் அவரவரை க.நா.சு. போன்றுதான் நினைத்துக் கொள்கிறார்கள். அவர் கூட பண்பு தவறி விமர்சித்ததில்லை என்பது எனது கருத்து. அன்பன், உஷாதீபன்
Post a Comment