Friday, October 21, 2011

என் சக பயணிகள்-11- தனுஷ்கோடி ராமசாமி

 

 3800589968_cd9717fb89_m

அப்போதுதான் நான் ராணுவத்திலிருந்து திரும்பியிருந்தேன்.தீவிரமான இலக்கியவாதியாக வாசிப்பும் எழுத்தும் மட்டுமே முழுநேர வாழ்க்கையாக (என்ன அற்புதமான நாட்கள் அவை) இருந்துகொண்டிருந்தது. ஆனந்த விகடனில் அந்தநேரம் தனுஷ்கோடி ராமசாமி எழுதிய நாரணம்மா என்கிற கதை வந்திருந்தது.தனுஷ்கோடி ராமசாமி என்கிற பெயரைப்பார்த்ததும்  கதையைப் படித்தேன். அவர் எங்கள் ஊரான நென்மேனி மேட்டுப்பட்டிக்கு அடுத்த ஊரான கலிங்கல் மேட்டுப்பட்டிக்காரர்.இரண்டு ஊருக்கும் நடுவே ஒரே ஒரு கண்மாய் மட்டும்.சிறுவயதில் அவரைப்பார்த்தது.மீண்டும் 15 ஆண்டுகள் கழித்து அவரை விகடனில் பார்க்கிறேன்.உடனே ஒரு கார்டு எழுதிப்போட்டேன். உத்தேசமான ஒரு முகவரியுடன்.மறுநாளே பதில் கடிதம் வந்தது.உடனே புறப்பட்டு சாத்தூரில் அவர் வீட்டு வாசலில் போய் நின்றேன். நான் எழுதிக் கைவசம் வைத்திருந்த சில கதைகளோடு. நான் கதை எழுதுகிற ஆளாக வளர்ந்திருப்பேன் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.சந்தோசத்தில் குதித்தார். அவரைப்போல மகிழ்ச்சியை இவ்வளவு கொண்டாட்டமாக வெளிப்படுத்திய மனிதரை நான் முன்பும் பின்பும் பார்த்ததில்லை.அன்று விடிய விடிய பேசிக்கொண்டிருந்தோம்- இலக்கியம்தான் வேறு என்ன.அவர் அப்போது எல்.எப்.கிணற்றுத்தெருவில் சிறிய வாடகை வீட்டில் குடியிருந்தார்.வைப்பாற்றின் கரையில் வீடு இருந்தது.சாப்பிட வீடும் இலக்கியம் பேச மணல் ஓடும் ஆறும் என அருகருகே வாய்ப்பது எத்தனை அபூர்வம்.அந்த அபூர்வத்தினூடே எங்களுக்கிடையேயான காதலும் வளர்ந்து கொண்டிருந்தது.

வேண்டாம்.அவருடைய எழுத்துக்கு வந்து விடுகிறேன்.

தொடர்ந்து அவருடைய சிறுகதைகள் ஆனந்த விகடனில் வந்து கொண்டிருந்தன.கண்முன்னால் நடக்கும் கொடுமைகளை அப்படியே கதைகளாக எழுதினார்.சாத்தூர் அரசு மருத்துவமனையில் கையூட்டுத்தர வசதியில்லாத காரணத்தால் கவனிப்பின்றித் தற்கொலை செய்துகொண்ட கிராமத்துப் பெண் நாரணம்மா.கர்ப்பிணிப்பெண்ணின் தற்கொலை.நெஞ்சை உலுக்கும் வரிகளில் உணர்ச்சிப் பிரவாகமாகக் கதை வந்திருந்தது. கிராமத்தில் சுகப்பிரசவம் உத்தரவாதமில்லை என டவுண் ஆஸ்பத்திரி தேடி வந்த நாரணம்மா சரியான கவனிப்பில்லாததாலும் காசு இல்லாததாலும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.ரெண்டுநாள் கூலி வேலை செய்து காசு கொண்டுவர ஊருக்குப் போன அவள் புருசன் இல்லப்பத் தேவன் திரும்பி வரும்போது அவள் பிணவறையில் வயிறு ஊதிக்கிடக்கிறாள்.ஏ..தாயே என்று கூக்குரலிட்டு அழுகிறான்.ஏ... தாயே..எஞ்சீதேவி..அடுத்தவங்க கால்லே முள் குத்தினாக் கூடச் சகிக்க மாட்டியே .. உனக்கா...என்று அவன் அரற்றி அழும்போது எந்த வாசகரும் உடைந்து அழாமல் அடுத்த வரிக்குப் போக முடியாது.

கண்களில் கண்ணீர் வெள்ளமாக வழிந்து கொண்டேயிருக்க வாசித்த கதை சேதாரம்.அவருடைய கதைகளில் என்னை மிகவும் உருக்கும் கதை அதுதான்.ஈரமில்லாத விழிகளோடு அக்கதையை ஒருபோதும் வாசிக்க முடிந்ததில்லை.வறுமையின் விதவிதமான கோலங்களே அவரது ஒவ்வொரு கதையும். வறுமையை காதல் திருமணம் செய்து கொண்டதால் கிடைத்த அய்யாவின் புறக்கணிப்பைத் தம் அன்பால் கடக்க முயற்சிக்கும் அக்காள் தங்கையின் கதைதான் சேதாரம்.பார்த்தால் ஒரு சாதாரணக் கதைதான்.வீடு ஒதுக்கி வைத்த அக்காளைப்பார்க்க தங்கச்சி போய் வரும் கதைதான்.சின்னச் சின்னச் சாதாரண நிகழ்வுகள்தாம்.ஆனாலும் சேதாரம் நம் மனதில் பெரும் காவியமாக விரிந்து கிடக்கிறது.உயர்ந்து நிற்கிறது.அதுதான் தனுஷ்கோடி ராமசாமியின் எழுத்தின் பலமும் ஆதாரமும்.

அரசு மருத்துவமனையின் அவலங்கள் பற்றி அவர் அடுத்தடுத்துக் கதைகள் எழுதிக்கொண்டே இருந்தார்.நர்சுகள் அவரைச் சுற்றி வளைத்து எங்க அசோசியேசன் மூலமா உங்களுக்கு எதிரா போராட்டம் நடத்துவோம் என்று சொல்கிற அளவுக்கு எழுதினார்.சில நண்பர்கள் நாட்டின் பெரிய ஊழல்களைப்பற்றி எழுதாமல் சாதாரண ஊழியர்களான நர்சுகளின் பிடுங்கல் பற்றி இவ்வளவு காட்டமாக எழுதணுமா என்று அப்போது விவாதித்ததுண்டு. ஆனால் அவருடைய கதைகளை தொழிற்சங்க ”பாயிண்ட் ஆஃப் வியூ”விலிருந்து பார்த்துப் புரிந்து கொள்ள முடியாது.ஒரு பஸ் வசதி கூட (இன்னும்) வந்து சேராத ஒரு கரிசல் கிராமத்தின் முதல் தலைமுறைப் படிப்பாளியான அவர் அறியாமையிலும் வறுமையிலும் தம் மனித மாண்புகளை இழக்காத - பிரியமே உடலாக வாழும் -தம் மக்கள் அன்றாடம் அவசியமாகத் தொடர்பு கொள்ளும் ஒரே அரசாங்க நிறுவனம் இந்த ‘கவருமெண்டு ஆசுப்பத்திரி’தான்.அங்கேயும் என் மக்களுக்கு இதுதான் கிடைக்கிறதா என்கிற அவருடைய ஆவேசத்திலிருந்து பிறந்த கதைகள் இவை என்றுதான் பார்க்க வேண்டும்.’சுதந்திரம் சிறையிலே’ என்கிற கதையில் தொழிற்சங்க இயக்கத்தை உலகத்திலேயே உயர்வான மனித அமைப்பாகச் சித்தரித்துக் கதை எழுதியவர்தான் அவர்.

ஆனந்த விகடனில் அவர் எழுதிய ‘கஸ்ப்பா’ என்கிற கதை ஒரு ஏழைப்பிராமணக்குடும்பம் உள்ளூர் கஸ்ப்பா எனப்படும் வருவாய்த்துறை உள்ளூர் அலுவலரிடம் செருப்படி படுவதைப்பற்றிய கதை.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கதை.மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளால் அவர் விசாரணைக் குள்ளாக்கப் படுவது வரை நிறைய எதிர்வினைகளை உண்டாக்கிய கதை.ஒரு பாப்பாரக் குடும்பத்துக்கு வக்காலத்து வாங்கி எழுதப்பட்ட கதை என்பதில் துவங்கி சாதாரண ஒரு அரசு ஊழியன்தானா உங்கள் பிரதான எதிரி என்பதுவரை விதவிதமான மனநிலைகளோடு தமிழ் வாசக உலகம் அக்கதையை எதிர்கொண்டது.கஸ்ப்பா கதைக்கு ஆதரவாக சமூக நிழல் சிற்றிதழ் ஒரு சிறப்பிதழே வெளியிட்டது.அதன் பாதிப்பில் விகடனில் இன்னொரு இளம் எழுத்தாளர் கஸ்ப்பான் என்றொரு கதையை எழுதினார். தனுஷ்கோடியே கஸ்ப்பாவின் தொடர்ச்சியாக சூரசம்ஹாரம் என்கிற கதையை எழுதி அதை விகடன் பிரசுரிக்க மறுத்ததால் தாமரையில் வெளியிட்டார்.

கண்ணில் காணும் அசல் வாழ்வை அப்படியே கதையாக எழுதுவது சரியா?வாழ்வின் நிகழ்வுகளின் அதம பொதுமடங்காகத்தானே கதையும் கதாபாத்திரங்களும் வார்க்கப்பட வேண்டும்.என்றெல்லாம் விவாதிக்க அவர் கதைகளில் இடம் உண்டுதான்.ஆனால் எளிமையிலும் எளிமையான கிராமத்து மனதின் வெடிப்புகள்தாம் அவரது எல்லாக்கதைகளும் என்கிற புள்ளியில் அவர் கதைகள் குறித்த எல்லா எதிர்வாதங்களும் தவிடுபொடியாகிவிடும்.

தரகன் பாடு என்கிற அவரது கதையை நான் கடுங்காப்பி என்கிற பெயரில் மறுபடைப்புச் செய்து அறிவொளி இயக்கத்தின் புதிய கற்போருக்கான வாசிப்புப்புத்தகமாகக் கொண்டு சென்றோம். நூற்றுக்கணக்கான கிராமங்களில் அக்கதை வாசிக்கப்பட்ட்து.கூலி வேலைக்குக் காட்டுக்குப் போயிருந்த பெண்ணை திடீரெனப் பெண் பார்க்க மாப்பிள்ளை வந்திருக்கிறார் என்று வரச்சொல்ல அவள் அரக்கப்பரக்க வெயிலில் ஓடி வந்து பக்கத்து வீட்டில் முகம் கழுவிப் பவுடர் போட்டு சடைப்பின்னித் தன் வீட்டுக்குள் உடல் நடுங்க நுழையும்போது நம் மனமும் நடுங்கத்துவங்கும்.தகப்பனில்லாத அப்பெண்ணிடம் கடுங்காப்பியைப் போட்டு ரெண்டு டம்ளர்களில் மாப்பிள்ளைக்கும் தரகருக்கும் கொடுத்தனுப்புவாள் அம்மா.நடுங்கிக்கிட்டே எடுத்துவரும் அவள் கண்களில் கண்ணீர் மாலைகள் வழிவதை மாப்பிள்ளை கொண்டுசாமி பார்க்கிறான்.தலை கவிழ்கிறான்.சாணமிட்டு மெழுகிய தரையில் இரு துளி நீர் விழுந்து ஈரமாகி இருப்பதைக்கண்டான்.அடுப்படிக்குத் திரும்பி அம்மாவைக் கட்டிப்பிடிச்சு அவள் அழுவது கேட்டுச்சு.அவங்க அம்மா அவளைத் தேற்றுகிறாள்.ஏ..ய்ய்யா..என்னை விட்டுப் போயிட்டீரே ..” பெரிய ஏக்கத்தை அடக்கிச் சன்னமாக அழுகிறாள்.மகளைத்தேற்றிக்கொண்டிருக்கும்போதே தாயும் கலங்கிப் புலம்பறது கேட்டுச்சு...

இந்தப் பெண்பார்க்கும் படலத்தில் நாங்கள் கதை வாசித்த கிராமத்து சனங்கள் கதறி அழும் காட்சியைப் பல கிராமங்களில் நாங்கள் கண்டிருக்கிறோம்.தமிழ்ச்சமூகத்தின் மனசாட்சியை ஆழ்மனதை உலுக்கி எடுத்துவிடும் வல்லமை இக்கதைக்கு உண்டு.என்றும் அழியாப்புகழுடன் வாழும் கதை அது.

உணர்ச்சிகரமான இக்கதைகள் மட்டுமின்றி பிற்காலத்தில் அவர் தொடர்ந்து எழுதிய செந்தட்டிக்காளை கதைகள் எல்லோரையும் படித்துச் சிரித்து உருள வைத்த கதைகளாக இருந்தன.அப்பாவியும் சூதுமிக்கவனாகவும் முட்டாளாகவும் அறிவாளியாகவும் ஒரே நேரத்தில் காட்சியளிக்கும் அவருடைய மைத்துனன் செந்தட்டிக்காளையின் சாகசங்களே அக்கதைகள்.தெனாலிராமன் கதைகளைப்போல இக்கதைகள் என்றும் நின்று அவர் பேர் சொல்லும்.

தோழர் என்றொரு நாவல் அவருடைய மிக முக்கியமான படைப்பு.தோழர் என்கிற சொல்லுக்குள் மந்திர சக்தியை ஏற்றித்தந்த நாவல் அது.பிரான்ஸ் நாட்டிலிருந்து சேவை மனப்பான்மையுடன் நென்மேனிக்கு வரும் ஒரு கிறித்துவர் குழுவுடன் மொழிபெயர்ப்பாளராகச் செல்லும் ஒரு கம்யூனிஸ்ட் இளைஞன் வாயிலாகச் சொல்லப்படும் இக்கதை தமிழகக் கிராமங்களின் யதார்த்தப் படப்பிடிப்பாகவும் தோழர் என்ற சொல்லைக் கேட்டாலே அலறும் அக்கிறித்துவக்குழுவிலிருக்கும் சபின்னா என்கிற இளம்பெண் விடைபெறும் தருணத்தில் கண்களில் நீருடன் பஸ்ஸின் சன்னல் வழியே கையை நீட்டி தோழர்.... என்று உணர்ச்சி பொங்க அழைப்பதோடு நாவல் நிறைவு பெறும்.இளம் தோழர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு நாவல்.

சொந்த வாழ்வில் சத்தியத்தின் வழியில் எவ்விதச் சமரசமும் இன்றி வாழ முயன்றதால் சதா ஏதேனும் ஒரு பிரச்னை,சிக்கல்,வழக்கு-விசாரணை என்று போனது அவரது வாழ்வு.இன்னும் இருபது ஆண்டுகளில் இந்தியாவில் புரட்சி வந்துவிடும் என்று உறுதியாக நம்பிய எளிய மனம் கொண்ட தோழர் அவர்.அவருடைய சிறுகதைகள்,கவிதைகள்,கட்டுரைகள்,செந்தட்டிக்காளை கதைகள் என எல்லாப்படைப்புகளையுமே நியூ செஞ்சுரி நிறுவனம் தோழர் பொன்னீலன் முன்னுரையோடு நான்கு தொகுதிகளாக அழகான பதிப்பாக வெளியிட்டுள்ளது.தனுஷ்கோடிராமசாமி இலக்கியத்தடம் என்னும் தொகுப்பையும் வெளியிட்டுள்ளது.அத்தொகுப்புக்கு என்னிடம் கட்டுரை கேட்டுத் தோழர் காமராசு மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டார்.ஆனால் ரொம்ப காலத்துக்கு அவரைப்பற்றி நினைத்து எழுத முடியாத மனநிலையே என்னை ஆக்கிரமித்திருந்தது.எழுத முடியவில்லை.அவரது தோழர் நாவலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

அவர் தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச்செயலாளராகத் தேர்வு பெற்றதை விட நான் தமுஎகசவின் பொதுச்செயலாளராகப் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்டதைக் கைதட்டிச்சிரித்துக் கொண்டாடிய மனம் அவருடையது.என்னிடம் இன்றும் தொடரும் சற்றே அதிகமான மிகை உணர்ச்சி அவரிடமிருந்து நான் பெற்றதுதான்.. தனுஷ்கோடி ராமசாமி என்னும் கலப்பில்லாக் கரிசல்காட்டு மண்ணிலிருந்து எடுத்து வந்த பிடிமண் தான் நான் என்னும் உணர்வு எனக்கு எப்போதுமே உண்டு. என்னுடைய பலம் பலவீனம் எல்லாம் அந்த மண்ணிலிருந்து பெற்றதுதான்.

இப்போதும் சாத்தூரை பஸ்ஸிலோ ரயிலிலோ கடக்கும் போதெல்லாம் - அந்த ஆற்றுப்பாலத்தின் மீது ரயில் கடகடக்கும்போது ஒருபோதும் கடக்கவே முடியாத உணர்ச்சிப்பெருநதியாக அவர் எனக்குள் ஓடிக்கொண்டிருப்பதை ஒவ்வொரு முறையும் உணர்கிறேன்.

அவரைப் போதிய அளவுக்கு நவீன இலக்கிய உலகம் கொண்டாடிவிடவில்லை என்கிற வருத்தம் எனக்குண்டு.

அவரது கவிதை ஒன்றோடு இப்போதைக்கு முடிக்கலாம்.

”ஊர்வலம் போகின்றேன் – இறுதி

ஊர்வலம் போகின்றேன்.

சத்தியத்தை நெஞ்சில் சளைக்காது சுமந்த

என் கால்கடுத்த கடும்பயண ஓய்வாய்

என் கண்மூடி பிறர் தோளில் சுமையாய்

ஆடி ஆடித் தெருவெல்லாம் செல்கின்றேன்.(நான் ஊர்வலம்..)

ஊனோடு உயிரோடு நான் வாழ்ந்த நாளில்

உக்கிரமாய்ச் சாடிச் சதி செய்தோரெல்லாம்

உருக்கமாய்க் கேவிக் கேவிப் பின்வர

நெஞ்சம் விம்மி விம்மி ஆனந்தங்கொள்ள(நான் ஊர்வலம்)

எத்தனை கோர்ட்டுக்கு

கொடுமைக்கு முகங்கொடுத்தேன்?

அன்போடு அயராது பணி செய்த வேளையிலே

எத்தனை அறியாமை அழுக்காறுக்காளானேன்

இன்று அனைவரின் கண்ணீரை நானேற்று (நான் ஊர்வலம்..)

ஊர்வலத்தின் முடிவினிலே ஊனுடலைப் புதைத்த பின்னும்

‘கொடுமைக்கு அஞ்சாதீர் தாட்சண்யம் பார்க்காதீர்

சத்தியமே வாழ்க்கை சோதனையே இன்பமென்று

எனையறிந்தோர் மனச்சாட்சி ஒலியாய் வாழ்வேன்

(நான் ஊர்வலம்..)

No comments: