Friday, October 21, 2011

என் சக பயணிகள் 10- கந்தர்வன்

 

gandharvan 

கந்தர்வன் எனக்கு அண்ணன்.என் முன்னோடி.எனக்கு வழிகாட்டி.எல்லாவற்றுக்கும் மேலாக என் மதிப்பு மிக்க தோழன்.அஸ்வகோஷ் விலகிச்சென்றபின் இயக்கத்தில் எனக்கு எல்லாமாக இருந்தவர் கந்தர்வன்.என்னை நான் புரிந்து கொண்டதை விடவும் சரியாகப் புரிந்து கொண்டவர் அவர்தான் என்று அந்த நாட்களில் நான் உணர்வதுண்டு. அவருடைய மைதானத்து மரங்கள் கதை செம்மலரில் வந்தபோது யார் இந்த கந்தர்வன் என்று விசாரித்துத் தேடிப்போய் அவரை புதுக்கோட்டை வருவாய்த்துறை அலுவலகத்தில் சந்தித்தேன். அப்போதெல்லாம் நல்ல எழுத்தை வாசித்துவிட்டால் உடனே அந்த எழுத்தாளரைத் தேடிப்போய்ப் பார்க்கும் பழக்கம் இருந்தது.எனக்கு மட்டுமல்ல 70களில் பல எழுத்தாளர்களுக்கு இந்தப்பழக்கம் இருந்தது.என்ன மாதிரி நாட்கள் அவை!அந்நாட்களில் நான் எழுதும் ஒவ்வொரு கதைக்கும் வரும் முதல் பாராட்டு/விமர்சனக்கடிதம் அவருடையதுதான்.அப்போது தொலைபேசியெல்லாம் கிடையாது எங்களிடம்.இருந்திருந்தால் இன்னும் எவ்வளவோ நாங்கள் பேசியிருப்போமே என்கிற ஏக்கம் இப்போது வருகிறது.

முதல் சந்திப்பிலேயே அண்ணன் தம்பியாகிவிட்டோம்.எனக்கு மட்டுமல்ல பலருக்கும் அவர் மிக நெருக்கமான உறவாக இருந்தார்.இரண்டாவது சந்திப்பிலேயே நீங்கள் அற்புதமான சிறுகதை எழுத்தாளர்.ஆனால் உங்கள் கவிதை ஒன்றும் தேறாது என்று சொன்னேன்.அடப்பாவி.. என்று சொல்லி என் முதுகில் அறைந்து கடகடவென்று சிரித்தார்.அதுதான் அண்ணனின் குணம்.விமர்சனங்களை மிகுந்த மிகிழ்வோடு ஏற்பார்.சிறுபையந்தானே சொல்கிறான் என்றெல்லாம் நினைக்க மாட்டார்.அப்போதெல்லாம் மனசில் பட்டதை அப்படியே பட்டென்று சொல்லிவிடுபவனாக நானும் இருந்தேன்.பெரியாள் சின்ன ஆள் என்றெல்லாம் பார்ப்பதில்லை.அது ஒரு வயது-அது ஒரு காலம்.அதிலும் தோழர் கந்தர்வனோடு வாழ்நாள் முழுவதும் எந்த ஒளிவும் மறைவும் இன்றிப் பேசிக்கொண்டிருக்க முடிந்தது.இப்படிச் சில பேர்தான் நமக்கு வாழ்க்கை முழுவதற்கும் வாய்ப்பார்கள்.

தணிகைச்செல்வன் விலகிச்சென்றபின் இயக்கத்தில் கவிதைகள் வழி தோழர்களை முறுக்கேற்றும் கடப்பாடு கந்தர்வனுக்கு வந்து சேர்ந்தது.அதை மிகுந்த பொறுப்புணர்வோடும் விருப்பத்தோடும் செய்தார்.” நான் கவிதைகளில் பிரச்சாரம்தான் செய்கிறேன்......என் கவிதைகள் மிகுந்த இலக்கியத்தரம் வாய்ந்தவை என்றோ ,அவை இலக்கியமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றோ நான் கவலைப்படுவதில்லை.எளிய மொழியில்,மக்களுக்குக் கருத்துக்களை எடுத்துச் சொல்கின்ற கருவியாகத்தான் நான் கவிதையைப் பயன்படுத்துகிறேன்.” என்று வெளிப்படையாகப் பேசியவர் கந்தர்வன்.பிரச்சாரம் இல்லாத எழுத்தென்று பம்மாத்துப் பண்ணுபவர்களைப்பற்றி யெல்லாம் அவர் அறிவார். இன்னொருவரை நோக்கிப் பேசுவதெல்லாமே பிரச்சாரம்தான்.அது கலையாக வந்திருக்கிறதா என்று மட்டும் பார்.திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்று திருவாசகத்தின் உணர்ச்சியையும் கலையையும் தமிழ்ச்சமூகம் கொண்டாடியதே அது என்ன? பச்சையான சைவப்பிரச்சாரப் பீரங்கிதானே திருவாசகம்? என்று எங்களுக்கு அன்று எளிமையாகப் பாடம் சொன்னவர் கந்தர்வன்.

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை என்கிற கவிதை இன்றுவரை எல்லோராலும் கொண்டாடப்படும் கவிதை.பெண்கள் இயக்கங்களில் முழக்கமாக அது இன்றும் அது எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.வித விதமாய் மீசை வைத்தாய் உன் வீரத்தை எங்கே தொலைத்துவிட்டாய் என்று தமிழ்ச்சமூகத்தைப்பார்த்துக் கவிதைகளால் கேள்வி எழுப்பினார்.இன்றைய ஊழல் குழந்தைப்பருவத்தில் இருந்த அந்த நாட்களில் அவர் எழுதிய ஒரு கவிதை எம்.எல்.ஏ சட்டையில் ஒரு பை வைத்தார்.எம்.பி.சட்டையில் பல பை வைத்தார்.மந்திரி பையையே சட்டையாக மாட்டிக்கொண்டார் என்று கவிதை வாசித்தவர் கந்தர்வன்.கிழிசல்கள்,மீசைகள்,சிறைகள்,கந்தர்வன் கவிதைகள் (எல்லாமே அன்னம் வெளியீடுகள்தாம்) ஆகியவை அவரது கவிதைத்தொகுப்புகள்.

கேள்விகள்,விசாரணை போன்ற பல நாடகங்களையும் எழுதி இயக்கி புதுக்கோட்டைத் தோழர்களைக்கொண்டு வீதிகளில் எடுத்துச்சென்றவர் அவர்.அவருடைய நாடகங்கள் கவியரங்கக்கவிதைகள் போல அங்கங்கே பஞ்ச் வைத்து நகரும் வித்தியாசமான வடிவம் கொண்டவை. தமுஎகச நாடகத்தளத்தில் தீவிரமாக இயங்கத்துவங்கிய 70களின் பிற்பகுதியில் அதற்கு விசையூட்டுபவராக அவர் இருந்தார்.சிவ.இளங்கோ தலைமையிலான சமரச சன்மார்க்க சங்கத்திலிருந்து துண்டித்துக்கொண்டு போர்க்குணமிக்க தோழர்கள் வெளியேறி ஒரு அமைப்புக்குழுவாகச் செயல்பட்ட நாட்களில் ஊழியர்களைப் புதிய அமைப்பாகத் திரட்டும் பணியில் அவர் இராப்பகலாக ஈடுபட்டார். சிவ.இளங்கோவைப்போலவே கையை ஆட்டி ஆட்டி அவர் மாதிரியே குரலை மாற்றிப் பேசும் நாடகப்பாங்கிலான அவரது உரைகள் தமிழகமெங்கும் அரசு ஊழியர்களை அணிதிரட்ட ஒரு சக்திமிக்க ஊடகமாகத் திகழ்ந்தது. தமுஎகசவின் இலக்கியக்கூட்டங்களிலும் கலை இரவுகளிலும் அவரது கவியரங்கக் கவிதைகள் போலவே அவரது இலக்கிய உரைகளும் மிகவும் விரும்பப்பட்ட நிகழ்த்து கலையாகவே இருந்தன.

ஆனால் அவர் எழுத்துலகுக்கு அறிமுகம் ஆனது கூர்மையான விமர்சனக்கட்டுரைகள் மூலமாகத்தான்.கண்ணதாசன் இதழில் துவங்கிய அப்பயணம் இறுதிவரை தொடர்ந்தது.வண்ணமயில் என்றொரு பத்திரிகை க.இராசமுகம்மது நடத்தியது.அதன் முதல் மூன்று இதழ்கள் தமிழ் இலக்கிய உலகில் மிகவும் மதிப்புமிக்க இதழ்களாக வந்தவை.அவற்றில் கந்தர்வன் காரசாரமான இலக்கியக்கட்டுரைகள் எழுதினார்.சாகித்ய அகாதமிக்கு எதிராக உறுமிக்கொண்டிருந்த சிங்கம் அவ்விருது கிடைத்ததும் இப்போது சத்தமே இல்லாமல் அடங்கி விட்டது என்றெல்லாம் ஜெயகாந்தன் பற்றி அதில் எழுதியது இப்போதும் நினைவிருக்கிறது.ஜேகே உச்சத்தில் இருந்த அந்த நாட்களில் இப்படி ஒருவர் எழுதுகிராரே என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும் .அக்கட்டுரைகளை வேறு பெயரில் எழுதினார்.அவருடைய கட்டுரைகளை நாம் யாராவது தேடித் தொகுக்க வேண்டிய பணி இன்னும் காத்திருக்கிறது.

இத்தனை வடிவங்களில் செயல்பட்டாலும் அவர் முழுமையான கலைஞனாக அடையாளப்பட்டதும் வெளிப்பட்டதும் சிறுகதைகளில்தான்.சமீப காலங்களில் எழுதப்படும் ’எதை நோக்கியும் செல்லாத’ சிறுகதைகளைப்போல அல்லாமல் அவரது ஒவ்வொரு கதைக்கும் ஒரு இலக்கு இருந்த்து.இலக்கு நோக்கிக் குறி தப்பாமல் பாய்ந்து செல்லும் அம்புகள் போல அவரது கதைகளின் முதல் வரியிலிருந்து அத்தனை வார்த்தைகளும் கதையின் மைய இலக்கை நோக்கிப் பாய்வதைப் பார்க்க முடியும்.பவா.செல்லத்துரை அவருடைய கதைகளை மொத்தமாகத் தொகுக்கையில் அட்டையின் உள் மடிப்பில் எழுதச் சில வரிகள் கேட்டபோது நான் இப்படி எழுதித்தந்தேன்.

“கவிதைகளிலும் கதைகளையே விரித்துச்சென்ற கதைசொல்லி கந்தர்வன்.தகப்பன் ஸ்தானத்தில் நின்று வாசகனுக்குக் கதை சொல்லும் உபதேசியாராக இல்லாமல், தோளில் கை போட்டுத் தோழமையுடன் பேசும் குரலே கந்தர்வன். வறண்ட பிரதேசமென பிற படைப்பாளிகளால் ஒதுக்கப்படும் தொழிற்சங்க வாழ்வின் வாஞ்சை மிகு மனிதர்களைத் தமிழ்க்கதைப்பரப்புக்குள் கை பிடித்து அழைத்து வந்த படைப்பு முன்னோடி அவர்.நைந்து அழிபடும் மத்திய தர வாழ்வுக்கு ஊடாகக் கீழ்வானில் பரவுகிற நம்பிக்கையின் கீற்றுக்களை அடையாளப்படுத்தியவர் கந்தர்வன். சுய எள்ளலுடன் விரைந்து செல்லும் மொழியும் நடையும் அவர் கதைகளின் பலம்.நெருக்கமான தோழமை உறவே(வாசகருடன்) அவர் கதைகளின் முகவரி “

கதை எழுதும்போது நாம் யாராக இருந்து யாருக்குக் கதை சொல்கிறோம் என்பது முக்கியமான ஒரு நெருக்கடி.ஒவ்வொரு எழுத்தாளனும் தன்னுணர்வோடோ அல்லாமலோ கடந்துவர வேண்டிய கேள்விகள் அல்லது மனநிலைகள் இவை.கந்தர்வன் வாசகருடன் ஒரு தோழமை உறவு கொண்டார்.தமிழில் இதுபோல ஒரு இடம் அபூர்வமாகச் சிலருக்கே வாய்ப்பது.

அவருடைய கதைகளில் சீவன்,மங்கலநாதர் இரண்டும் கடவுள் நம்பிக்கை பற்றிய கிண்டலான விமர்சனப்பூர்வமான கதைகள்.சீவன் கதை தனிச்சிறப்புமிக்க கதை. அறிவொளி இயக்கத்தின் தொடர்ச்சியாக பேராசிரியர் ச.மாடசாமி தலைமையில் நாங்கள் மதுரையில் கருத்துக்கூடத்தில் இயங்கியபோது தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நாங்கள் நடத்திய மக்கள் வாசிப்பு இயக்கத்துக்காக ஒரு கதை ஒரு புத்தகம் என்று ஒரு ரூபாய்ப் புத்தகங்களை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு விநியோகித்துக்கொண்டிருந்தோம்.அதில் தமிழ் எழுத்தாளர்கள் பலருடைய கதைகளை நான் புதிதாக எழுதப்படிக்க்க் கற்றுக்கொண்ட புதிய கற்போருக்கான மொழியில் மறுபடைப்புச் செய்து கொடுத்தேன்.எல்லா எழுத்தாலர்களும் அம்மறுபடைப்புகளில் மகிழ்ச்சியடைந்தார்கள்.கந்தர்வனின் சீவன் கதையை பேய் மழை என்ர பெயரில் நான் மறுபடைப்புச் செய்தேன்.அவரிடம் கொடுத்தபோது படித்து விட்டு அவர் ஒன்றும் பேசவில்லை.எப்படிண்ணே வந்திருக்கு என்று ஆவலுடன் கேட்டேன்.ம் .. என்று தலையை மட்டும் ஆட்டினார்.அவருக்குப் பிடிக்கவில்லை என்று புரிந்தது.ரொம்ப மனவருத்தம் உண்டானது எனக்கு.இன்றுவரை அது தீரவில்லைதான்.

அவருக்குள் ஒரு கிராமத்து மனிதன்தான் எப்போதும் இருந்தான்.பெரிய அதிகாரியாக நகரத்து வாழ்க்கைதான் அமைந்துபோயிருந்தாலும் அடிமனசில் அவர் இராமநாதபுரம் மாவட்டத்துக் கிராமத்தின் மனிதராகவேதான் இருந்தார்.அவரது ஆம்பிளை கதையில் வரும் கிராமத்துப் பையனாகத்தான் அவர் இருந்தார் என்ரு அடிக்கடி எனக்குத் தோன்றும். கிராமத்து நியாயங்களையே தன் கதைகளில் முன்வைத்தார்.ஆகவே அது சரியாகவுமிருந்த்து.கடைசி நாட்களில் அவர் சென்னைவாசியான பிரகு எழுதிய அவரும் பாவம்.. கதையில் வரும் உதவி இயக்குநர் தயாரிப்பாளரை நினைத்து அவரும் பாவம் என்ன செய்வார் என்று நினைப்பதாகக் கதை முடிவது அவருக்குள் ஆழ இயங்கும் அந்தக் கிராமத்து மனிதனை அடையாளம் காட்டுகிறது.சீவன்,பூவுக்குக் கீழே,இரண்டாவது ஷிப்ட்,சாசனம், துண்டு,தராசு, கொம்பன், ஆம்பிளை என அவரது கதைகள் ஒவ்வொன்றும் ஒரு ரகம் எனில் காடுவரை என்னும் கதை ஒரு காதல் காவியம் என்பேன்.

ஒரு நாவல் எழுதும் முயற்சி பற்றிச் சொல்லிக்கொண்டேயிருந்தார்.அது நிறைவேறாமலே போயிற்று.இறுதிவரை வெளிபடையாகப்பேசும் ஒரு கலைஞனாகவே வாழ்ந்து மறைந்தவர் கந்தர்வன்.அவருடைய கதைகளின் முழுத்தொகுப்பை வம்சியும் கவிதைகளின் முழுத்தொகுப்பை அன்னமும் வெளியிட்டுள்ளார்கள்.

பி.கு:

அவர் எனக்கு எழுதும் கடிதங்களை அன்புள்ள தசெ அல்லது தம்பி தசெவுக்கு என்றுதான் ஆரம்பிப்பார்.என்னைத் தமிழ் என்று விளிப்பவர்கள்தாம் உண்டு.தசெ என்று அழைத்த்து அவர் மட்டும்தான். அவர் மறைவுக்குப்பின் நான் எழுதும் கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் இறுதியில் இப்படிக்கு தசெ என்று போடத்துவங்கினேன். இப்போதும் அப்படித்தான் போட்டு வருகிறேன்.ஒவ்வொரு முறையும் இப்படிக்கு என்று எழுதி முடித்ததும் துவங்கி தசெ என்று எழுதி முடிக்கும் வரையிலான அந்தச் சில கணங்களில் என் முழு உடம்பும் நடுங்குவதையும் கண்களிலிருந்து நீர்த்திவலைகள் உருளுவதையும் என்னால் கட்டுப்படுத்த முடிவதில்லை.

1 comment:

சீனி மோகன் said...

அன்பு த செ,
கந்தர்வனை நெடுநாட்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்த உணர்வை உங்கள் பதிவு ஏற்படுத்தியது. நாங்கள் சிதம்பரத்தில் ‘மீசைகள்’ குறித்து ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த போது வந்திருந்தார். அதன் பின் அவரை சந்திக்கும் வாய்ப்பே ஏற்படவில்லை. உங்கள் பதிவின் மூலம் சந்தித்து உரையாடியது போன்ற உணர்வும் அவரது இழப்பின் வலியும் ஒரு சேர ஏற்படுகிறது.