ஜன்னலெங்கே
ஜன்னலெங்கே
சிபி பார்த்துக்
காத்திருந்த
மாடம் எங்கே
கண்ணாடிக்காவல்காரா
கருணை வையேன்
கழுகின் மூச்சு
சிறகைச்சுடுதே
எங்கே போச்சு
மக்கிப்போச்சா
சிபியின் தராசு
மண்ணுள் போச்சா
சிபியின் ஜன்னல்
அலகின் ரத்தம்
அர்ப்பணித்தேனே
காவல்காரா
உன்னை நிறுத்தியவர்
எதனைக் காக்க
என்னை வெறுத்தார்
கழுகின் மூச்சு
காலில் தெரியுதே
தேவதச்சன் என் கல்லூரித்தோழர்.எனக்கு ஓராண்டு முன்னால் படித்துக்கொண்டிருந்தார்.நவீன கவிதை புதிய திசைகளில் பயணிக்கத்துவங்கிய 70களின் முற்பகுதியில் அதை வழிமடக்கி எங்கள் ஊருக்குத் திருப்பிக்கொண்டு வந்த முன்னோடி.கோவில்பட்டியில் எங்கள் கல்லூரியில் எனக்கு முன்னால் நின்று அவரும் கவிஞர் பிரதீபனும் -தனபாண்டி என்று ஒரு தேவதச்சனின் நண்பர் இருந்தார்- அவரும் இலக்கியம் பேசிக்கொண்டிருப்பதை பின்னாலிருந்து நான் கேட்டுக்கொண்டிருப்பேன்.அவர்கள் பேச்சின் வழியாக எனக்கு அறிமுகம் ஆனவைதான் கசடதபறவும் வானம்பாடியும்.ஏற்கனவே தீபம் எங்கள் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தது.
கோவில்பட்டித் தெருக்களில் தேவதச்சனும் கௌரிஷங்கரும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளை விதைத்தபடி போய்க்கொண்டிருப்பார்கள்.நான் அவர்கள் அறியாமல் அவர்கள் பின்னால் அவற்றைப் பொறுக்கியபடி போய்க்கொண்டிருப்பேன்.அப்போதெல்லாம் நான் பயங்கரமான மரபுக்கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பேன்.ஆசிரியப்பாவில் ரெண்டு மூணு நோட்டுகள் நிரப்பியிருந்தேன்.அதுபற்றி அறிய வந்தபோது செண்பகவல்லியம்மன் கோவிலுக்குப் பின்னால் ஒரு ராவில் தேவதச்சனும் கௌரிஷங்கரும் என்னைப்பிடித்துக்கொண்டார்கள். நிலாவைப்பற்றி எழுதிவிட்டீர்களா? மேகத்தைப்பற்றி எத்தனை கவிதைகள் எழுதியிருக்கிறீர்கள்? மழையைப்பற்றி? என்று ஒருமணிநேரத்துக்கு மேல் ‘வியந்து’ கேட்டுக்கொண்டிருந்தார்கள்.அது சரியான கிண்டல் என்பது அப்போது எனக்குப் புரியவில்லை.
ராணுவத்துக்குப் போய்விட்டு ஐந்தாறு ஆண்டுகள் கழித்து நான் வேறொரு ஆளாகத் திரும்பி வந்து தேடல் என்கிற கையெழுத்துப் பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்தபோது அதில் நான் எழுதிய கவிதைகளைப் பார்த்துவிட்டு நம்ம ஊரிலே இன்னொரு கை தேரும் போல இருக்கே என்று என்னை வீடு தேடி வந்து உற்சாகப்படுத்திச் சென்றார்கள்.
அப்போது அவர் எழுதிய ஜெயம் என்கிற கவிதை கோவில்பட்டி இடதுசாரி நண்பர்களால் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானது.நான் இடது நண்பர்களோடு அப்போதுதான் அறிமுகமாகிக் கொண்டிருந்தேன்.
வாழ்வு
சாவெனத் தன்
வேசம் மாற்றிக்கொள்ளுமுன் உன்
சீட்டைக் காலி பண்ணு
நீ பாத்திரம் அது
பார்வையாளனெனத் தலை கீழாய்
நாடகம் மாறப்போகிறது
என்று துவங்கும் அக்கவிதை முடியும்போது
என்றும்
சோற்றால் பசியை
ஜெயிக்கணும் என்றால்
பசியால் சோற்றை
ஜெயிக்க்கணும் தான்
என்று முடியும்.இந்த இறுதிப்பத்திதான் தோழர்களால் விமர்சிக்கப்பட்டது. பொருள்முதல்வாதத்துக்கும் கருத்து முதல்வாதத்துக்கும் இடையிலான போராட்டம் இந்த நாலு வரிகளுக்குள் பதுங்கியிருப்பதைத் தோழர்கள் சரியாகவே இனங்கண்டனர்.
அன்று நான் தேவதச்சனின் ஜன்னலெங்கே ஜன்னலெங்கே என்கிற கவிதையால் மிகவும் ஆகர்ஷிக்கப்பட்டிருந்தேன்.ஓர் உயிரின் பரிதவிப்பைப் பதிவு செய்த கவிதையாக அதை நான் உணர்ந்தேன்.இன்றைக்கு வாசிக்கும்போதும் அதை நான் உணர்கிறேன்.
தேவதச்சனின் அடையாளமாக அவரது முத்திரை என்று சொல்லும்படியாக அன்று நான் கண்டது அவரது பழத்தைச் சாப்பிட்டு விடு கவிதையை.
பழத்தைச் சாப்பிட்டு விடு
நாளைக்கென்றால் அழுகிவிடும்
என்றாள் அம்மா
வாங்கி விண்டு
உண்டேன்
இன்றை.
தேவதச்சனின் கவிதைகள் மிகச்சாதாரணமான அன்றாட லௌகீக வாழ்வின் நிகழ்வுகள் பற்றியதாகவே தொடங்கி அவ்விதமாகவே பயணித்து ஆனால் லௌகீகமல்லாத தத்துவார்த்தமாகச் சென்று முடியும்.
காற்றில் வாழ்வைப்போல்
வினோத நடனங்கள் புரியும்
இலைகளைப் பார்த்திருக்கிறேன்
ஒவ்வொரு முறையும்
இலையைப் பிடிக்கும்போது
நடனம் மட்டும் எங்கோ
ஒளிந்து கொள்கிறது
அவருடைய கவிதைகளுக்குப் பொழிப்புரை சொல்ல முடியாது.ஆனால் அதில் கவிதை இருப்பதை நம்மால் சட்டெனக் கண்டுணர முடியும்.
அவரவர் கைமணலைத் துழாவிக்கொண்டிருந்தோம்
எவரெவர் கைமணலோ இவை என்றேன்
ஆம் எவரெவர் கைமணலோ இவை என்றான்
பிறகு
மணலறக் கைகழுவி விட்டு
எங்கோ சென்றோம்
அவருடைய முதல் தொகுப்பான அவரவர் கைமணலில்(ஆனந்த்துடன் இணைந்து வெளியிட்ட தொகுப்பு) வந்த கவிதை இது.இக்கவிதை முடிந்தபின்னாலும் நமக்குள் தொடர்கிறதாய் இருக்கிறது.ஆம். அவர்கள் மணலறக் கை கழுவிவிட்டு எங்கோ சென்ற பிறகு வேறு இருவர் வந்தமர்ந்து எவரெவர் கை மணலோ இவை என்று தமக்குள் பேசத்துவங்குகின்றனர். வாழ்வென்னும் பெரும் பயணத்தில் ஒரு புள்ளியைப் படம் பிடிப்பதாக நாம் இக்கவிதையை உள்வாங்கிக்கொள்ள முடியும்.வாழ்வென்னும் பெரு நதியில் என் வாழ்வு என்னும் துளி எது என்கிற கேள்வியை இக்கவிதை எழுப்புகிறது.
சிறு
கிளைகளிலிருந்து
இலைகள்
உதிர்ந்து
கொண்டிருக்கின்றன
அதன்
சுழல்மொழி
மழலையில்
மெல்ல
என்னுள்
திறக்கிறது
நீலப்பரவசம்
அது
மூடும்போது
எப்போதும் நீ
உள்ளே
வந்து விடுகிறாய்
அன்றாடப் புழக்கத்தில் உள்ள சொற்களே அவருடைய கைபட்டுக் கவித்துவ மெருகேறி மிளிர்வதை – அதன் சுழல் மொழி மழலையில்- நம்மால் சிலிர்ப்புடன் உள்வாங்க முடிகிறது.உணர்ச்சிப்பரவசமும் அறிவின் பெருக்கமுமாக மாறி மாறிப் பயணிக்கும் அவரது கவிதைகள் மொழியின் சாத்தியமான கடைசி எல்லைவரை செல்பவை.” அவரது மொழி கானகத்தில் எங்கோ தெரியும் சுடரைப்போல நம்மைத் தூண்டி அருகில் அழைக்கிறது.நெருங்கிச் செல்லச் செல்ல அது எங்கோ விலகிச் சென்று விடுகிறது.நவீன கவிதை மொழியைத் தொடர்ந்து உயிர்ப்பிக்கும் காரியத்தைத் தேவதச்சனின் இடையறாத கவிதை இயக்கம் செய்து வருகிறது” என்கிற வார்த்தைகள் உண்மையானவை.நாம் காணும் –நாம் வாழும்- இவ்வாழ்வின் சின்னஞ் சிறு தருணங்களே –அவற்றில் பொதிந்திருக்கும் வினோதங்களே தேவதச்சனின் கவிதைகளின் பாடுபொருளாகின்றன.பெரிதாக எதையும் சொல்ல வரவில்லை நான் என்கிற அடங்கிய தொனியே இவரது கவிதைகளின் தனிச்சிறப்பாக நான் உணர்கிறேன்.
எப்போதெல்லாம்
மைனாவைப்பாக்கிறேனோ
அப்போவெல்லாம் தெரிகிறது
நான்
நீராலானவன் என்று
அதன் குறுஞ் சிறகசைவில்
என் மேலேயே
தெறிக்கிறேன் நான்
ஆரம்ப நாட்களில் ’நீ விரும்புவதுன் உடல் முழுதும் ஆகுக’ போன்ற கவிதைகளை வாசித்துவிட்டு அவருடைய கவிதைகளின் உள்ளார்ந்த சேதியாக அத்வைதமோ அல்லது ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளோதான் இருக்கிறதாக நான் உணர்ந்ததுண்டு.அதன் காரணமாகவே ஒருவித எதிர்ப்புணர்விலேயே அவரது கவிதைகளைத் தொடர்ந்து பின் தொடராமல் போனதும் உண்டு.இப்போதும் அத்தகு மயக்கம் தரும் கவிதைகளை அவரிடம் காணவே செய்கிறேன்.ஆனால் ஜென் கவிதைகளைப் போல தத்துவச் சாயலோடு வாழ்வின் சின்னத் தருணங்களை அழகான கவித்வமிக்க வரிகளில் சொல்வதுதான் அவரது கவிதைகளின் பிரதானமான போக்காக இப்போது புரிந்து கொள்கிறேன்.
நாம் அன்றாடம் அனுபவிக்கும் மின் வெட்டு பற்றிய அவரது கவிதை முதல் நாள் இவ்வாறு செல்கிறது:
நகரில்
மின்வெட்டு வேளை
அப்படி ஒரு கும்மிருட்டு
ஊழிக்காலத்தின் இரண்டாம் நாள்
போல இருக்கிறது
எங்கோ
திசை கணிக்க முடியாத
கருந்ததும்பலில்
முரட்டு லாரி ஒன்று
இரைச்சலிட்டபடி ,
வருகிறது போகிறது.
பிரபஞ்சம் விழித்தெழுந்த
இரண்டாம் நாள்
போலவும் இருக்கிறது,
முதல் நாள்
நாளை வரும் போல
வலிந்து எதையும் சொல்லாத கவிதைகள். வலுவாக எதையும் வற்புறுத்தாத கவிதைகள் என்கிற தோற்றம் காட்டினாலும் Far from tha madding crowd என்பது போன்ற மனநிலை தீவிரமாக இக்கவிதைகளில் முன்வைக்கப்படுவது போலவும் உணர்கிறேன். அவரது கவிதைகள் தரும் அனுபவத்தை அவரோடு நாம் நடத்தும் உரையாடலிலும் காண முடியும்.அவரோடு மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருக்கும் அனுபவம் மிக ரசமானது.எதையும் திணிக்க மாட்டார்.விவாதம் தொடர்து செல்ல மென்மையாகத் தூண்டுவார்.விவாதங்கள் முடிந்து அவர் விடைபெற்றுச்சென்றதும் நாம் வேறு ஒரு உலகத்திலிருந்து மீண்டு இறங்கி வருவதுபோல இருக்கும்.மனம் ஒரு பறவையின் சிறகு போல லேசாகியிருக்கும்.
உயிர்மை பதிப்பகம் அவரது 229 கவிதைகளை மூன்று தொகுப்புகளாக வெளியிட்டுள்ளது.
”பலூனை விரல்களில் வைத்திருப்பது என்பது
காற்றைக் கையில் வைத்திருப்பது போல் இருக்கிறது,
பலூன்கள் கொஞ்ச நேரமே இருக்கின்றன.
எனினும் சிறுவர்கள்,கொஞ்சத்தை ரொம்ப நேரம்
பார்த்து விடுகிறார்கள்....”
அவருடைய நீல நிற பலூன் கவிதையில் வரும் இவ்வரிகள் அவருடைய 229 கவிதைகளுக்கும் அவருடன் பேசிக்கொண்டிருக்கும் இன்பமிக்க தருணங்களுக்குமே கூடச் சரியாகப் பொருந்தும்.
2 comments:
ஒரு காப்பி சாப்பிடலாம் வாயேனும்,
காதலனாக ‘சிகரெட் பிடிப்பதை’ப் பிடித்த சித்ராவுக்கு கல்யாணத்துக்குப் பிறகு சிகரெட் பிடிக்காமல் போவதுமான லவ் கீகங்களை அவரில் நான் ரசித்தேன்.
அப்புறம்...
வேண்டும் வேண்டுமெனக் கேட்காதபோதும்
மீண்டும் மீண்டும் தருகிற வானம்.
-
அந்த வானத்தின் கீழ் பறவைகள்,
மரங்கள், மலைகள், மரவுயிர்கள்...
அண்ணா! ஒன்று முந்தைய பின்னூட்டத்தையும் நீங்கள் நிறுத்திவிடவேண்டும் அல்லது இதையும் போட்டாக வேண்டும். ஒரு தேவாத்வைத மயக்கத்தில் தேவ தச்சனும் தேவ தேவனும் குழம்பிவிட்டது.
தனித்தனியாக கவிதைகள் ஞாபகம் வந்தாலும் இப்படிக் குழம்பிவிடக்கூடாதே என்று கட்டுரை படிக்கும்முன் ஆரம்பத்தில் இருவரையும் உடற்பருண்மையாக ஆரம்பத்தில் சிந்தித்து மனக் கண்ணில் வேறு படுத்திக்கொண்டாலும் பின்னூடத்தில் எப்படியோ தேவதேவன் வந்துவிட்டார்.
தேவதச்சனின் (மகளது வனப்பு கண்டு மென் பீதியுறும் தகப்பன் கவிதையில்) வார்த்தையில் சொல்வதென்றால் அன்பின் பதற்றம்.
குறைந்த பட்சம் கோவில் பட்டிக்காரரான நீங்கள் தேவதச்சனைத்தான் பேசியிருப்பீர்கள் என்கிற தர்க்கம் கூட மனதுக்கு எழவில்லை. எல்லாம் தூத்துக்குடி மாவட்டந்தானே என்கிற சால்ஜாப்புக்கும் இடமில்லை. சாரி...
(இன்றைய எழுத்துப் பணி இவ்விதம் தொடங்குகிறதாக்கும்....)
Post a Comment