என் சிறுகதைகள் அச்சில் வரத்துவங்கியதும் நான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து வேலை செய்யத்துவங்கியதும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் நிகழ்ந்தது.கோவில்பட்டி நண்பர்கள் என் சிறுகதைகளின் கைப்பிரதிகளை வாசித்துவிட்டு அஸ்வகோஷ் எழுதிய பறிமுதல் படிச்சியா? கடன் கதையைப் படிச்சியா என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.முற்போக்கு எழுத்தாளர்கள் என்றால் முஷ்டியை உயர்த்தியபடியே எந்நேரமும் திரிவார்கள் என்று சொல்லி வளர்க்கப்பட்டிருந்த அன்றைய என் இலக்கிய மனம் அஸ்வகோஷின் கதைகளை வாசித்தபோது பேரானந்தம் கொண்டது.முற்போக்காளர் குறித்து வெளியில் இருப்பவர்கள் கட்டமைத்த பிம்பங்கள் பொய்யென்று அஸ்வகோஷின் கதைகள் எனக்கு உரைத்தன.தேவையற்ற வரிகள் ஏதுமில்லாத எவ்வளவு அழகான யதார்த்தமான கதைகள் அவருடையவை.அன்று அவர் தமுஎசவின் மாநிலத் துணைச்செயலாளராக இருந்தார்.சீக்கிரமே நான் அநேகமாக அவருடைய சீடனாகவே மாறிவிட்டிருந்தேன்.அமைப்புக்குள் ‘குண்டக்க மண்டக்க’ பேசிக்கொண்டிருக்கும் ஆளாக அன்று நான் வளர அவரே காரணமாக இருந்தார்.அது வேறு கதை.இங்கு அவருடைய கதைகள் பற்றி மட்டும் பேசுவோம்.
பாலியல் சார்ந்த கதைகளை வெகு இயல்பாக அவர் எழுதுவார்.அதுதான் அவரிடம் எனக்கு மிகுந்த ஈர்ப்பை அன்று ஏற்படுத்தியது.சமூகப்பிரச்னைகளை எழுத்தில் கொண்டுவருவதில் அவர் தனக்கேயான பாணியைக் கொண்டிருந்தார் என்றாலும் அன்று நான் ஈர்க்கப்பட்டது அவருடைய பாலியல் சார் கதைகளால்தான்.என் மனநிலை அந்த 24 வயதில் சஸ்தி ப்ரதா,பாரதி முகர்ஜி,கமலாதாஸ் என்று ’மீறிய’ எழுத்துக்களால் தகவமைக்கப்பட்டிருந்ததும் ஒரு காரணம். கோணல்வடிவங்கள்,புற்றிலுறையும் பாம்புகள் போன்ற கதைகளை நான் தேடி வாசித்து வியந்தேன். சமீபத்தில் அவருடைய தொகுப்பில் வாசித்த ஊனம் கதை வடிவத்திலும், மொழியிலும் , சொன்னதைப்பார்க்கிலும் சொல்லாமல் விட்ட பாங்கிலும், மிக அற்புதமான கதையாக வந்துள்ளது.இடதுசாரி எழுத்தாளர் என்றால் சாமியார்கள் மாதிரி பாலியல் விஷயங்களை புறங்கையால் ஒதுக்க வேண்டியதில்லை. பாலியலை ஒரு சமூகப் பிரச்னையாக அதற்கு உரிய அளவிலான இடம் அளித்து அதற்கான உக்கிரத்தோடு சொல்ல வேண்டும்.
பொருளியல் வாழ்வுதான் எல்லாவற்றுக்கும் இறுதியில் தீர்மானிக்கும் அம்சம்.அதே சமயம் மனித குல வரலாற்றில் உற்பத்தி (மனித குல) மறு உற்பத்தி இவை இரண்டின் முக்கியத்துவம் குறித்தும் ஏங்கல்ஸ் குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் நூலில் நுட்பமாக விளக்கியிருப்பதை நாம் அவதானிக்க வேண்டும்.அந்தப்பின்புலத்தில் நின்று வாழ்வின் மிக முக்கிய அங்கமான பாலியல் குறித்து நம் கதைகள் பேச வேண்டும்.
அப்படிச்சொன்ன முதல் முற்போக்குப் படைப்பாளி அஸ்வகோஷ்தான். ஜெயகாந்தன் சரஸ்வதி இதழில் சில முயற்சிகளைத் தொடங்கியிருந்தார் என்பது உண்மை என்றபோதும்.பாலியல்சார் எழுத்துக்களைத் தொடர்ந்து எழுதி அப்படியான ஒரு பாரம்பரியத்தை நாங்கள் வளர்த்தெடுக்காமல் விட்டு விட்டோமே என்கிற வருத்தம் எனக்கேற்படுகிறது.இன்று சில இளம் படைப்பாளிகள் அது பற்றி எழுதுவதில் அளவும் தன்மையும் குறித்த பார்வை இல்லாமல் சிக்கிக்கொள்வதைப் பார்க்கும்போது இந்த வருத்தம் மேலோங்குகிறது.
அமரர் தி.ஜானகிராமன் போன்றவர்கள் இதில் பெண் உடலை மட்டும் கொண்டாடும் இடத்தில் நின்றுவிட்டதாகப்படுகிறது.ஜி.நாகராஜன்தான் பாலியல் சார்ந்த வாழ்வை அதி உக்கிரத்தோடு சொன்ன முதல் தமிழ்ப்படைப்பாளி.ஜி.நாகராஜனை எப்போதுமே அண்ணாந்துதான் பார்த்தபடி இருக்கிறேன்.
அஸ்வகோஷ் இடது முகாமிலிருந்து இந்தத்தளத்தில் துணிச்சலாகப் படைப்புகளை முன்வைத்த முன்னோடி.ஆனால் அவருடைய எல்லாக்கதைகளும் இது விஷயத்தில் சரியாக வந்ததாகச் சொல்ல முடியாது.வானம் வெளிவாங்கி போன்ற தோல்வியடைந்த கதைகளும் உண்டு.பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கை அவலம் வாசகனுக்கு உரைக்கும் வண்ணம் அக்கதை வந்து சேரவில்லை.செயல்முறை விளக்கம்போல விலாவாரியான சித்தரிப்பே அக்கதையில் தூக்கலாகிவிட்டதுதான் பலவீனம்.கோணல் வடிவங்கள் கதையில் அது கலையழகுடன் ஒருங்கு கூடி வந்துள்ளது.அதுமட்டுமன்றி கோணல் வடிவங்கள் ஆணாதிக்கத்தின் ஒரு நுட்பமான வடிவத்தைப் பேசும் கதையாகவும் ரூபம் கொள்கிறது.தற்செயல் கதையிலும் கலை அமைதி கூடி வந்துள்ளது-சில பகுதிகள் தவிர.தற்செயல் கதையில் வரும் வத்சலா, ஊனம் கதையின் நாயகி சாந்தா,புற்றிலுறையும் பாம்புகள் கதையில்(அடடா என்னா மாதிரி கதை அது)வரும் வனமயிலு போன்ற மனுஷிகள் தமிழ்ச்சிறுகதைப் பரப்பில் அபூர்வமாக வெளிப்பட்டவர்கள்.இப்பாத்திரங்கள் தமிழ் நவீன இலக்கியத்துக்கு அஸ்வகோஷ் அளித்த கொடை என்பேன்.
அஸ்வகோஷின் சிறுகதைகள் பிரதானமாக சமகாலச் சமூக யதார்த்தங்களை அழகியலோடும் ஒருவித உணர்ச்சிகர மனநிலையோடும் முன்வைத்தவை.அவரே பின்னுரையில் பட்டியலிடுவதுபோல, “ சொல்லப்பட்ட செய்தியிலும் செய் நேர்த்தியிலும் தட்டித்தட்டிப் பொறுக்கிப் பார்த்துக் கனகச்சிதமாகச் செதுக்கி உருவாக்கப்பட்ட கதைகள் ஒரு இருபதுக்கு மேல் தேறும்.” அவர் அப்படிச்சொன்னாலும் என் பார்வையில் ஒரு நாலைந்து கதைகளைத்தவிர 50க்கு மேற்பட்ட அவரது கதைகள் இலக்கியத்தரமான முற்போக்கான கதைகள்தான் என்று அடித்துக் கூறலாம். ஏழ்மை,இல்லாமை-அதன் காரணமாக மனித மனங்கள் அடையும் அவமானங்கள் , சிதையும் மனித மாண்புகள்,அதையும் மீறி வெளிப்படும் அன்பும் நேசமும் -இவைதான் பெரும்பாலான அஸ்வகோஷ் கதைகளின் பாடுபொருளாக அமைந்தவை. எவ்வித மினுக்கும் தளுக்கும் இல்லாத ரொம்பச் சாதாரணமான மொழியில் நேரடியாகக் கதை சொல்லும் பாணி அவருடையது.வட ஆற்காடு வட்டார மொழி இயல்பாக அவரது கதைகளில் ஊடாடும்.வறுமையை நேரடியாகச் சொல்லாமல் அது ஏற்படுத்தும் உறவுச்சிக்கல்கள்,மன அவஸ்தைகளைக் கதையாக்கியதுதான் அஸ்வகோஷின் தனிச்சிறப்பு.
மூன்று தளங்களில் அவரது கதைகள் இயங்கின.ஒன்று ஆண்-பென் உறவு சார்ந்தது.இரண்டாவது சமூக யதார்த்தங்கள் சார்ந்தது.
மூன்றாவதாக அவருடைய மனதை ஆக்கிரமித்து அவரை அமுக்கிப்போட்டதாக நான் குறிப்பிட விரும்புவது கம்யூனிஸ்ட் கட்சி மீதான அவருடைய காட்டமான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் கேலியும் நக்கலும் நிறைந்த கதைகள்.எழுத்தாளனின் பார்வை இப்பிரபஞ்சத்தில் உள்ள எதன் மீதும் கவியும்.கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றும் படைப்புக்குள் வரக்கூடாத விதிவிலக்காக இருக்க முடியாது.பக்தி மார்க்கம்,மையம்,நிலச்சரிவு போன்ற சிறுகதைகள் மட்டுமின்றி அவருடைய நாவல் ஒன்றும் இதுகுறித்து விரிவாகப் பேசியது.எழுத்தாளர் மன்னார்சாமியைக் கதை நாயகனாகக் கொண்டு அமைப்பைக் கிண்டலடித்த அந்த நாவலை நான் கையெழுத்துப் பிரதியாக வாசித்தது.அது அச்சில் வந்ததா என்று தெரியாது.21ஆவது அம்சம் நாவல் அப்போதே வந்து விட்டிருந்தது.சொல்ல வேண்டியது என்னவென்றால் கம்யூனிஸ்ட் கட்சி அவருடைய மனதை வெகுவாகப் பாதித்திருந்தது.1988க்குப் பிறகு ரொம்ப காலம் கதையே எழுதாமல் இருந்து விட்டு 2008இல் அவர் தீராநதியில் ஒரு கதை எழுதியபோது அதே கம்யூனிஸ்ட் கட்சி ஒரு குதிரை வாங்குவதற்காக நிதிக் கோட்டா போடுவது பற்றியதான ஒரு நக்கல் கதையே எழுதியிருந்தார்.மீள முடியாத சிறைக்குள் சிக்கியது போல அவர் இதற்குள் மாட்டிக்கொண்டுவிட்டாரே என்று எனக்கு மிகுந்த வருத்தமும் ஏமாற்றமும் ஏற்பட்டது.கம்யூனிஸ்ட் கட்சி மீதான விமர்சனத்தை கதைக்குள் வைத்தது பற்றியதான வருத்தமில்லை அது.இந்த அளவுக்கு மீறிய எதிர்மனநிலையால்தான் அவர் மீண்டும் எழுந்து படைப்பிலக்கியத்துக்குள் வரமுடியாமல் போனாரோ என்கிற வருத்தம்தான் எனக்கு.
பொக்கேஷியன் கதைகள் என்கிற பெயரில் கிறித்துவ மடாலயங்கள்,பாதிரிகள் பற்றிய விமர்சன கிண்டல் கதைகள் இருப்பது போல எந்த அமைப்பைப்பற்றியும் கேலிக்கதைகள் காலந்தோறும் உருவாகத்தான் செய்யும்.கம்யூ.கட்சிகள் அதற்கு விதி விலக்கல்ல. ஆனால் மற்ற கதைகளில் காணக்கிடைக்கும் கலை அமைதி அஸ்வகோஷின் கம்யூ.கட்சிக் கேலிக்கதைகளில் காணக்கிடைக்கவில்லை என்பது உண்மை. கம்யூனிஸ்ட் நக்கல் நாவலான ஜெயமோகனின் 700 பக்க ’பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலிலும் கடைசியில் வரும் ஒரு ஆஸ்பத்திரி வார்டு பற்றிய 20 பக்கம் தவிர பாக்கி 680 பக்கமும் கலையாக மாறாமல் வெறும் தத்துவ வியாக்கியானமாகவே தேய்ந்து போனது.கம்யூ.கேலிக்கதைகள் எழுதுகிற பாரம்பரியமும் பயிற்சியும் அதற்குத்தேவையான முதிர்ச்சியும் கலை நுட்பமும் இன்றுவரை நம் நவீன தமிழ்ப் படைப்பாளிகளுக்குச் சித்திக்கவில்லை என்றே படுகிறது.எனினும் இவ்வகை இலக்கியத்தையும் தொடங்கி வைத்த முதல் படைப்பாளி என்கிற பெருமைக்கு உரியவராகவும் அஸ்வகோஷ்தான் திகழ்கிறார்.ர.சு.நல்லபெருமாளின் போராட்டங்கள் நாவல் முதலிலேயே வந்து விட்டாலும் அது கம்யூ. எதிர்ப்பு நாவல் என்கிற வகையிலேயே அடங்கும்.பாலகுமாரனின் மெர்க்குரிப்பூக்கள் ,சுஜாதாவின் குருபிரசாத்தின் கடைசி நாட்கள் போன்றவை கம்யூனிஸ்ட் விமர்சன வகையில் அடங்கும்.
வட்டங்கள் என்கிற அவருடைய நாடகம் ஒன்றும் நூலாக வந்துள்ளது.பாதல் சர்க்காரிடம் பயிற்சி பெற்ற நாடகக்காரர் அவர்.அரங்க ஆட்டம் என்கிற நாடகம் பற்றிய அருமையான தொடர் ஒன்றை அவர் செம்மலரில் எழுதி வந்தார்.உதயம், பிரச்னை என்கிற இரு இலக்கிய இதழ்களைப் பொறுப்பேற்று நடத்தி வந்தார்.அப்போது திருப்பூரிலிருந்து தோழர் நடராஜன் பொறுப்பில் விழிப்பு இதழும் சென்னையிலிருந்து தோழர் ச.செந்தில்நாதன் பொறுப்பில் சிகரமும் வந்துகொண்டிருந்தன.
நிறைய நாடகங்களை அவர் எழுதி இயக்கி மக்களிடம் கொண்டு சென்றார்.எமெர்ஜென்ஸி குறித்த அவருடைய தயாரிப்பான விசாரணை என்னும் நாடகத்தில் காவல்துறையின் அத்துமீறல்கள் பார்வையாளர்கள் மனம் கொந்தளிக்கும் விதமாக நிகழ்த்தப்பட்டவை.
விதி வசத்தால் அவர் எம்மைப் பிரிந்து சென்றார்.(விதி என்று நான் குறிப்பிடுவது இயக்க விதிகளைத்தான்.)அவரால் தொடர்ந்து படைப்பிலக்கியத்தில் ஈடுபட முடியவில்லை.90களுக்குப் பின் புதிய படைப்புகள் வரவில்லை.இயக்கத்தின் தேவையை ஒட்டி நிறைய எழுதி வருகிறார்.இதுவே நாம் அக்கறையுடன் விவாதிக்க வேண்டிய மனநிலைதான் என்று தோன்றுகிறது.நாம் சந்திக்க வேண்டிய-தாண்டி வரவேண்டிய மனநிலையாகவும் அவருடைய ரூபத்தில் அது நம்முன் சவாலாக நிற்கிறது.
அவருடைய 50 சிறுகதைகளின் தொகுப்பை தமிழினி 2002இல் வெளியிட்டுள்ளது.
1 comment:
விதி வசம்! (ஹஹ்ஹஹ்ஹா... அடுத்து வந்த பிராக்கெட்டை ரொம்ப சந்தித்தேன்) - இதை எழுதி முடிக்கிற வரை உதடுகள் ஒட்டவேயில்லை.
Post a Comment