கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு இன்னும் ஒருமாதத்துக்குமேல் தியேட்டர்களுக்குக் கூட்டம் வர வாய்ப்பில்லை என்பதைக் கணக்கில் கொண்டு இந்த மாதத்தில் அவசர அவசரமாகப் பல படங்களை வெளியிட்டுள்ளது தமிழ்த் திரையுலகம்.வெள்ளிக்கிழமை மட்டுமே பட ரிலீஸ் என்கிற தயாரிப்பாளர்கள் முடிவின்படி இம்மாதம் வெள்ளிக்கிழமைதோறும் படங்கள் வெளியாகின.15 படங்களுக்கு மேல் வந்திருந்தாலும் இரண்டு படங்கள் பற்றி மட்டும் இங்கு பேச எடுத்துக் கொள்கிறோம். ஒன்று கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் மிஷ்கின் படமமான யுத்தம் செய்..இன்னொன்று பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கிய படமான பயணம்.இவ்விரு இயக்குநர்களுமே தங்கள் முந்தைய படங்களின் மூலம் நம்பிக்கை ஊட்டியவர்கள்.ஆகவே இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு நமக்கு இருந்தது.
சித்திரம்பேசுதடி,அஞ்சாதே என்று துவங்கி நந்தலாலாவுக்கு வந்து மீண்டும் ஒரு யுத்தம் செய் படத்துக்கு மிஷ்கின் வந்துசேர்ந்துள்ளார்.சினிமாமொழியில் கலைநுட்பத்தோடு கதை சொல்லுவதில் வல்லவரான மிஷ்கின், வித்தியாசமான காட்சிகளுடனும் கேமிரா அசைவுகளுடனும் அடர்த்தியான இசையுடனும் மிகுந்த எதிர்பார்ப்பைத் தூண்டும் விதமாக கதையைத் துவங்கி வழக்கமான ஒரு பழிவாங்கும் கதைக்கே வந்து சேர்ந்துவிட்டார் யுத்தம் செய் படத்தில்.
எதிர்பாராத திருப்பங்களும் காட்சிகள் உருவாக்கும் ஒருவித திகில் மனநிலையும் கேயின் புத்தம்புதுசான இசையும் ரசிகர்களை உட்கார வைப்பதில் வெற்றி கண்டுள்ளன.வழக்கம்போல மிஷ்கின் முத்திரையான ‘ கன்னித்தீவுப்பெண்ணா ’என்றொரு (ஆபாசமில்லாத)குத்துப்பாட்டைத் தவிர படத்தில் தேவையற்ற காட்சிகள் ,காமெடி ட்ராக்,ரொமான்ஸ் என்னும் தொங்கு சதைகள் ஏதுமின்றி கட்டிறுக்கமான திரைக்கதை அமைந்துள்ளது.
சேரன் நேர்மையான சிபி சிஐடி அதிகாரியாக கடமைக்கும் காணாமல்போன தங்கையின் மீதான பாசத்துக்கும் இடையில் வெற்றிகரமாக நடந்து செல்கிறார்.காதலுக்காக ‘ஙே’ என்று ஒரு முகபாவத்துடன் அலைபவராகவே வரிசையாகப் பல படங்களில் சேரனைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன ரசிக மனம் சந்தோசம் கொள்ளும் விதமாக இப்படத்தில் அழுத்தமான அலட்டல் இல்லாத நடிப்பால் சேரன் மனசில் நிற்கிறார்.மார்ச்சுவரியில் பிணங்களோடு படுத்துறங்கும் வித்தியாசமான ஒரு பாத்திரத்தில் முக்கிய வேடத்தில் ஜெயப்பிரகாஷ் நடித்துள்ளார். பிணவறைக்குள் நம்மை அதிக நேரம் அழைத்துச்சென்ற முதல் தமிழ்ப்படம் இதுதான்.பிணவறை ஊழியர்கள் மீது பரிவேற்படும் வண்ணம் காட்சிகள் அமைந்துள்ளதைப் பாராட்ட வேண்டும்.கொ டுமைக்குத் துணை போகும்காவல்துறை உயரதிகாரிகள் கச்சிதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். படம் நெடுகிலும் சமூக விமர்சனம் வந்துகொண்டே இருப்பதும் பாராட்டத்தக்கது.
எல்லாம் சரிதான்.அடிப்படையில் கதை வலுவில்லாத ஒரு வழக்கமான பழிவாங்கும் கதை என்பதால் இத்தனை கலை நுட்பமும் கலைமனமும் இதற்குத்தானா என்றாகிவிடுகிறது.கவ்ரவ் இயக்கத்தில் தயாநிதி அழகிரியின் தயாரிப்பில் இம்மாதம் திரைக்கு வந்திருக்கும் தூங்காநகரம் கதையும் இதே ஜவுளிக்கடையில் உடைமாற்றும் பெண்களை ஒளிந்திருந்து பார்க்கும் வக்கிரத்தை மையமாகக் கொண்டே சுழல்கிறது.மதுரை என்றாலே அருவாளும் குத்து வெட்டும்தான் என்கிற கோடம்பாக்க பார்முலாபடி நகர்வதால் தூங்கா நகரம் படம் மனதில் ஒட்டாமல் விலகிச் சென்றது.
பெரும்பகுதி யதார்த்தமான படப்பிடிப்புடன் நேர்கோட்டில் பயணிக்கும் யுத்தம் செய் படம் இறுதிக்காட்சிகளில் நாடகத்தன்மைக்குள் விழுந்து அதுவரை கட்டப்பட்ட ரசிக மனநிலையைச் சிதைத்து நம்மிடமிருந்து விலகிச்செல்கிறது.ஒரு சாதாரணப் பிரஜை திருப்பித் தாக்குவதுதான் படத்தின் மையம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.ஆனால் படத்துக்குள் அப்படியான ஒன்றும் கிடைக்கவில்லை.வித்தியாசமாகச் சொல்லப்பட்ட ஒரு பழிவாங்கும் படம் என்கிற அளவுக்குமேல்
ஒன்றும் நமக்குக் கிடைக்கவில்லை.
மிஷ்கின் போன்ற நுட்பமான கலைஞர்கள் அசலான தமிழ்மண்ணின் –தமிழ் மக்களின் -கதைகளை எடுத்துப் படம் தயாரித்தால் அது எத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற ஏக்கத்தையே இப்படம் நமக்குத் தருகிறது.
இம்மாதத்தின் இரண்டாவது ஏமாற்றம் ராதாமோகனின் பயணம்.
1999 டிசம்பரில் நடந்த கந்தஹார் விமானக்கடத்தல் சம்பவத்தை மையமாகக் கொண்டு பின்னப்பட்ட திரைக்கதை.மொழி,அபியும் நானும் படங்களைத் தந்த பிரகாஷ்ராஜ் ராதாமோகன் கூட்டணியின் அடுத்த படம் இது.அபியும் நானும் படத்தைப்போல இழுவையாக இல்லாமல் ஒப்பீட்டளவில் கட்டான திரைக்கதையை பயணம் கொண்டிருக்கிறது.காதல்,காமெடி ட்ராக்,பாட்டு,டான்ஸ் என்று எதுவுமே இல்லாமல் ஆபாசமும் இல்லாமல் படம் எடுத்ததைப் பாராட்ட வேண்டும்.
ஆனால் கதை என்று பார்த்தால் வழக்கமான விஜய்காந்த் பார்முலாவான முஸ்லீம் தீவிரவாதி யூசுப்கானை விடுதலை செய்வதற்காக ஜிகாத் தீவிரவாதிகள் செய்யும் அடாவடிகள் அதை எதிர்க்கும் கமாண்டோ கதாநாயகன கதைதான்.இன்னும் எத்தனை காலம்தான் முஸ்லீம்களையே தீவிரவாதிகளாகக் காட்டிக்கொண்டிருப்பீர்கள் என்கிற கோபம்தான் முதலில் நமக்கு வருகிறது.பாபர் மசூதியை இடித்த பிறகுதான் தீவிரவாதம் அதிகமாகியது என்று ஒரு இடத்தில் வெட்டப்பட்ட வசனம் வருகிறது . பாகிஸ்தான் குழந்தைக்கு இந்தியாவில் அறுவைச்சிகிச்சை செய்து அழைத்துப் போகிறார்கள்.ஆனால் அதையெல்லாம் மீறிப் படத்தில் அழுத்தமாக வந்திருப்பது முஸ்லீம் தீவிரவாதிகள் முட்டாள்தனமாகவும் முரட்டுத்தனமாகவும் விமானத்தைக் கடத்திப் பிறர் துன்பத்துக்குக் காரணமாக இருப்பவர்கள் என்பதுதான்.
நகைச்சுவை உணர்வோடு திரைக்கதாநாயக பிம்பங்களும் சோதிடசிகாமணிகளும் கேலி செய்யப்பட்டுள்ளது ரசிக்கும்படி இருக்கிறது.ஆனால் படம் முழுக்க கடத்தப்பட்ட விமானப்பயணிகள் பெரிய அளவுக்குப் பதட்டமில்லாமல் நல்ல மனநிலையோடும் பளிச்சென்ற உடல்நலத்தோடும் இருப்பது படத்தின் நம்பகத்தன்மையைக் குலைத்துவிடுகிறது.நிறைய காமெடி கொஞ்சம் பதட்டம் கொஞ்சம் தேசபக்த முலாம் கொஞ்சம் அரசியல் விமர்சன வசனம் எனக் கலவையாகப் படம் போகிறது.புதுசாக எதுவும் இல்லாத ஒரு கதையை நல்ல திறன்மிக்க கலைஞர்களும் நகைச்சுவையும் சேர்ந்து ஒருவழியாக இழுத்துச் செல்கின்றனர்.
இம்மாதம் வந்த படங்களைத்( யுத்தம் செய்,தூங்கா நகரம்,நடுநிசி நாய்கள்...) தொடர்ந்து பார்க்கும் ஒரு ரசிகன் இரவு நேரங்களில் தனியாக நடந்துபோனால் பின்னால் யாரும் பதுங்கிப் பின் தொடர்கிறார்களா என்கிற சந்தேகத்துடன் திரும்பித் திரும்பிப் பார்த்தபடிதான் செல்வார்.
எப்படி ஆக்கிவிடுகிறார்கள் நம்மை?இதுதான் இன்று கலைஞர்கள் தம் படைப்புகள் வழியே தமிழ்ச்சமூகத்தில் உருவாக்கித்தர வேண்டிய மனநிலையா?
1 comment:
சரியாகவே கணித்துள்ளீர் தோழரே சமீபத்திய தமிழ் சினிமாவை.
நன்றி.
Post a Comment