Friday, April 8, 2011

என் சக பயணிகள்-6

 

பூமணி

poomani

ஏலேய் சக்கிலியத்தாயளி..மாடு பாருடா படப்புல மேயிறத.கண்ணவிஞ்சா போச்சு.வாய்க்கு வந்தாத் தெரியுமா”

என்று முதல் வரியிலேயே சக்கிலியர் எனப்படும் அருந்ததியர் சமூக மக்களுக்குத் தமிழ்ச் சமூகம் தரும் மதிப்பையும் அவர்களின் துயரமும் அவமானங்களும் மிகுந்த வாழ்நிலையையும் துணிப்பாகப் படம்பிடித்த தமிழின் மிகமிக முக்கியமான நாவலான “ பிறகு” 1970களின் பிற்பகுதியில் வந்தது.இன்றைக்கும் எழுத்தாளர் பூமணியின் அடையாளமாக எனக்குப் படுவது பிறகு நாவலும் சில குறிப்பிடத்தக்க சிறுகதைகளும் தாம்.

பூமணி எங்கள் ஊர்க்காரர்.கோவில்பட்டியை ஒட்டிய கிராமத்தில் பிறந்தாலும் அவர் அதிகம் வாழ்ந்தது சென்னையில்.சென்னையில் வாழ்ந்தாலும் அவர் சென்னை வாழ்வு பற்றி ஏதும் எழுதவில்லை.நான் அறிந்தவரை ஒரு கதை கூட அவர் சென்னை வாழ்வைப்பற்றி எழுதவில்லை என்றே நினைக்கிறேன்.இது ஒரு ஆச்சர்யம் தரும் உண்மையாகும்.முற்றிலும் எங்கள் கரிசல் காட்டுக் கிராமங்களின் வாழ்வையே தொடர்ந்து எழுதிவருகிறார் பூமணி.அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிகளில் பிறந்து வறுமையும் அவமதிப்புமே பரிசாகப் பெற்ற ஒரு வாழ்வின் பல்வேறு அடுக்குகளைத் தன் கதைகளில் விரித்தவர் என்று பூமணியைக் குறிப்பிட வேண்டும்.

அவரது பிறகு,வெக்கை,நைவேத்தியம்,வாய்க்கால்,வரப்புகள் ஆகிய ஐந்து நாவல்கள் மற்றும் 50க்கு மேற்பட்ட சிறுகதைகள் வழியே கரிசல்காட்டின் வெக்கையைத் தமிழ் நவீன இலக்கியப்பரப்பில் பரவவிட்டவர் எங்கள் பூமணி என்று பெருமிதத்தோடு நான் குறிப்பிட விரும்புகிறேன்.இதைப்படி என்று பால்வண்ணம் என் கையில் பூமணியின் முதல் கதைத்தொகுப்பான ‘ வயிறுகள் ‘ புத்தகத்தைக் கையில் கொடுத்த அந்த இரவில் ஒரே மூச்சில் அக்கதைகளை வாசித்தேன். எனக்கு முன்னே நடந்து செல்லும் என் சக பயணியாக அந்த இரவில் அவரை மிக நெருக்கமாக உணர்ந்தேன்.அதற்குப்பிறகு அவருடைய ரீதி தொகுப்பு வந்து அன்று எழுதத்துவங்கியிருந்த எங்களையெல்லாம் மிரட்டியது என்றுதான் சொல்ல வேண்டும்.

பூமணியின் சிறுகதைகள் மிகுந்த சொற்சிக்கனத்துடனும் செட்டான வடிவமைப்புடனும் இலக்கண சுத்தமான சங்கீதம்போல அமைந்தவை.தேவையற்ற வார்த்தை ஒன்றுகூடப் பார்க்க முடியாது.அவருடைய எழுத்தின் மற்றுமொரு சிறப்பு கதைமாந்தர்களை அவரவர் கதியில் வாழ அனுமதித்திருக்கும் பாங்கு.எக்கருத்தையும் அல்லது எத்தகைய உணர்வையும் கதாபாத்திரத்தின் மீது ஏற்றிச் சொல்லும் தன்மையை அவருடைய ஒரு கதையில் கூடக் காண முடியாது. ஆனாலும் அவர் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான படைப்பாளிதான்.அவருடைய வர்க்கசார்பு வார்த்தைகளில் வெளிப்பட்டதேயில்லை .ஆனால் அவருடைய கதைத்தேர்வில் அது அழுத்தமாக வெளிப்பட்டு நிற்கும்.அவருடைய எழுத்து யாருக்காகவும் கண்ணீர் வடிப்பதுமில்லை.நம் கண்ணீரைக்கோரி நிற்பதுமில்லை.ஆனால் அவர் எழுதிச்செல்லும் வாழ்வின் உண்மை,துயரம் நம் வாசக மனங்களைப் பற்றி அழுத்தும்.நம்மை அறியாமல் நம் கண்களில் நீரும் கோபமும் இயலாமையின் துயரும் வழியும்.

“ அஞ்சாறு நாளைக்கொருக்க எங்க வீட்ல நெல்லுச்சோறு பொங்குவாங்க. நான் வடித்தண்ணிக்குள்ள பருக்கையப் போட்டு பரவச்சட்டியில வச்சு ஆப்பையிட்டுக் கோலி ஊதி ஊதிக் குடிப்பென்.வகுறெல்லாம் பொசுக்கும்.கம்மங்கஞ்சி காச்சுனா காச்சிக் கவுத்தி கொஞ்ச நேரத்துல தோச மாதிரி ஆட படந்துருக்கு மில்ல அத எடுத்துத் தருவா எங்க அம்மா.பிச்சுத் திங்க நல்லாருக்கும்”

கண்கள் திரையிடாமல் இவ்வரிகளை இப்போதும் தட்டச்சு செய்ய முடியவில்லை.என்ன ஒரு வாழ்க்கை நம் குழந்தைகளுக்கு லபித்திருக்கிறது.இந்த வாழ்க்கையைக் கடந்துதான் நாங்களும் வந்தோம்.இன்று ஒரு மத்தியதரத்து வாழ்க்கைக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டாலும் எங்கள் கரிசல் வாழ்க்கை இன்றும்கூட இக்கதியில்தான் இருக்கிறது என்கிற உண்மையை உணரும் நேரம் பெருத்த குற்ற உணர்வில் அமிழ்கிறோம்.நம் வாழ்விலிருந்து நாமே அந்நியமாகி நிற்கக் காரணமானது எது என்கிற கேள்வி மனதைப் பிசைகிறது.சிறு வயதில் எங்கள் மேட்டுப்பட்டி வீட்டில் கம்மங்கஞ்சியைக் கரைத்தபடி தம்பி இளங்கோ (கோணங்கி) சொன்ன “ நல்லாத்தான் இருக்கு.ஆனா கொஞ்சம் வாடை யடிக்கி.யாரும் மோந்து பாத்துறாம அப்பிடியே குடிச்சிருங்க” என்று சொன்ன வசனம் இப்பச் சொன்னதுபோல இக்கதைகளை வாசித்தபோது உணர்ந்து உடல் சிலிர்த்தேன்.

அன்று சிறுகதை எழுதத்துவங்கியிருந்த எனக்குப் பூமணியின் சிறுகதைகள் பெரிய சவாலாகவும் பாடமாகவும் திகழ்ந்தன.இதுக்குப் பதில் சொல்லுலே என்று ஒவ்வொரு கதையும் என்னைச் சீண்டின. அவருடைய ரீதி தொகுப்பிலிருந்த “பசை” என்கிற கதைக்கு ஈடான ஒரு கதையை இன்றுவரை நான் வாசித்துவிடவில்லை.வறுமையைப் பயன்படுத்திப் பாலியல் இச்சை தீர்க்கும் ஒருவனின் கதையாக இருவருக்கிடையேயான உரையாடலை மட்டுமே முன்வைத்துச் சொல்லப்பட்ட கதை.இக்கதையை வாசிக்கும்போதே அடிவயிற்றிலிருந்து கோபமும் ஆற்றாமையும் பொங்கி வருவதை ஒவ்வொரு வாசகனும் உணர்வான். குதிரைக்கு முன்னே கட்டிய கேரட்டைப்போல எனக்கு முன்னால் இந்தக் கதை இன்றும் ஓடிக்கொண்டே இருக்கிறது.

அவருடைய வலி கதையை அன்று எங்கள் கோவில்பட்டி நாடக்கக்குழு நாடகமாக்கி ஊர் ஊராகச் சென்று நடத்தினோம்.

’ ரீதி’ கதையில் வரும் மாடு மேய்க்கும் சிறுவர்கள் மறக்க முடியாதவர்கள். விளைச்சல் நிலங்களில் மாடுகள் புகுந்து விட்டால் நிலத்துக்காரர்கள் ஆவேசத்தோடு அவர்களை அடித்துத் துரத்துவார்கள்.

“ குடல் தெறிக்க ஓடினார்கள்.ஆடுகள் அத்தனையும் தோட்டத்தில் மிளகாய்ச் செடிகளை உழப்பிக்கொண்டுபோய் கிணற்றைச் சுற்றித் தளிர்த்திருந்த பாலாட்டஞ்செடிகளை மொய்த்திருந்தன.

தெற்கு மடக்கில் உழுதுகொண்டிருந்த புஞ்சைக்காரர் அவர்களுக்கு முந்தியிருந்தார்.அவர் கையில் சாட்டைக்கம்பு இருந்தது.

அவர்கள் ஆட்டுக் கும்மலை ஓடித் திருப்பி விரட்டியதும் அவர் இரைந்தார்.

”ஏலே சாதிகெட்ட சலுப்பத் தேவிடியா புள்ளீகளா.இங்க வாங்கலே.வெள்ளாமக்காடு தெரியாம அம்புட்டென்னலே பூளக்கொழுப்பு.இப்ப மூணு பேரவும் தென்ன மரத்துல கெட்டித் தொலிய உரிக்கனா என்னன்னு பாரு.”

உழவுக்கட்டிக்குள் விழுந்தடித்து ஓடி சின்னவனைச் சாட்டையால் விளாசினார்.அவன் கூப்பாடு போட்டுக்கொண்டு ஓட்டம் பிடித்தான்.அதுக்குமேல் அவரால் பின் தொடர முடியவில்லை.மிச்சக்கோவத்தைக் கண்டமானக்கி வைது தீர்த்துக்கொண்டார்.

முள்ளுக்காடெல்லாம் தாண்டி வந்த பிறகும் சின்னவனுக்கு விக்கலும் விம்மலும் அடங்கவில்லை.உடம்பைச் சுற்றி புரி முறுக்கியதுபோல தடிப்பு சிவந்திருந்தது.

“பெலமாப் பட்ருச்சோடா..”

சின்னவன் பேசவில்லை.மூக்கை உறிஞ்சினான்.

இந்த ஒரு காட்சி என் மனதை விட்டகலாத அமரத்துவத்துடன் அன்று தொட்டு நிலைத்து நிற்கிறது.பதேர் பாஞ்சாலி படத்தின் ரயில் காட்சி போல பொடெம்கின் படத்தின் ஒடெஸ்ஸா படிக்கட்டுகள் போல என்ன ஒரு காட்சி. இன்றைக்கும் எங்கள் சிறுவர்கள் முதுகில் சாட்டையடி விழுந்துகொண்டுதான் இருக்கிறது ஏதேதோ பேர் தெரியாத இந்த தேசத்தின் கிராமப்புரங்களில்.அவர்கள் முதுகுகளில் விழும் அடி சிவபெருமான் முதுகில் பட்ட அடிபோல என் தேசமே உன் முதுகில் விழவில்லையா என்று மனம் அரற்றுகிறது.

பூமணியைப்போல இப்படியான சிறுவர்களின் வாழ்வைச் சொன்ன படைப்பாளி தமிழில் யாரும் இல்லை.புதுமைப்பித்தன் தொட்டு ஒவ்வொரு மகத்தான படைப்பாளியும் குழந்தைகளை அற்புதமாகத் தம் படைப்புகளில் கொண்டு வந்துகொண்டே இருக்கிறார்கள்.என்றாலும் மாடு மேய்த்துக்கொண்டு திரிகிற- பசிக்கு அணிலைச் சுட்டுத்தின்கிற –நல்ல சாப்பாட்டைப் பற்றி நித்தம் கனாக்காண்கிற சிறுவர் வாழ்வை முதலில் சொன்னவர் பூமணிதான்.

வடிவம்,மொழி,அழகியல் குறித்த கூடுதலான தன்னுணர்வுடன் படைப்புகளைத் தந்தவர் பூமணி.அவருடைய நாவல்களில் பிறகு அளவுக்கு மற்றவை என்னைப் பாதிக்கவில்லை.வரப்புகள் நாவல் எனக்கு மிகுந்த சலிப்பை ஊட்டியது என்றே சொல்ல வேண்டும்.வெக்கை ஒருவித இறுக்கத்துடன் பதட்டத்துடன் வாசகனை அழைத்துச்சென்றது எனலாம்.

இந்திய சுதந்திரத்துக்குச் சற்று முந்திய காலத்தில் துவங்கும் பிறகு சக்கிலியக்குடியில் நிலை கொண்டு இந்திய வாழ்வை நமக்கு எடுத்துச்சொல்வதாக அமைந்தது.

“ நானும் அதக் கேக்கணும்னே இருந்தேன்.அயத்துப்போச்சு.நமக்கு விடுதல வந்திருச்சுன்னு பேசிக்கிறாகளே நம்மெல்லாம் செயில்லயா இருந்தொம்”

“விடுதலன்னா செயில்ல ரெம்ப நாளா இருந்துட்ருக்காகளே அவுகளுக்காருக்கும்.ஒரு பேச்சுக்காகச் சுட்டி எல்லாத்தவுஞ் சேத்துச் சொல்லீருப்பாக”

சரி அப்படியே வச்சீருவோம் .அதுக்காக வெள்ளக்காரன ஏன் வெளியேத்தனுமிங்காக.இவுகளுக்கு அவன் என்ன செஞ்சான்.நமக்கென்ன தெரியிது.வெள்ளங்காட்டி வில்லிசேரி மொதலாளி வீட்லயிருந்து பேபரோ என்னமோ வாங்கீட்டு வந்து முக்குல வச்சு பெலமாப் படிச்சுப் பேசிக்கிட்டாக”

“அவுகளுக்கென்னடா மதிய வரைக்கின்னாலும் பேசுவாக.அப்பிடியே சோத்துக்கு முனாலே உக்காருவாக.நம்ம அப்பிடி முடியுமா.அண்ணண்ணைக்குச் செரச்சாத்தான் உண்டு”

ஜி.நாகராஜனின் எழுத்துக்களைப்பற்றி சுந்தரராமசாமி சொன்னார் – எல்லோரும் வாழ்க்கையை முன் வாசல் வழியாகக் கண்டு சொன்னால் ஜி.நாகராஜன் புழக்கடையில் நின்று பார்த்துச் சொல்கிறார் என்று. அந்தப் பாணியில் சொல்வதானால் பூமணிதான் தமிழில் முதன் முதலாக வாழ்க்கையை கீழேயிருந்து –விளிம்பில் நின்று –பார்த்துச் சொன்ன படைப்பாளி.காட்சிப்பூர்வமான அவருடைய எழுத்தில் வந்த நாவல்களிலிருந்தும் கதைகளிலிருந்தும் பல காட்சிகள் அழியாக்கோலங்களென- ஓடும் மௌனப்படங்களாக என் மனதில் என்றென்றும் சலனப்படுத்தியபடி ஓடிக்கொண்டிருக்கின்றன.

மார்க்சியத்தின் அடித்தளத்தில் நின்றே பூமணி எப்போதும் பேசியிருக்கிறார்.ஆனாலும் அவர் தன்னை எந்த ஓர் இயக்கத்தோடும் இணைத்துக்கொள்ளவில்லை.அதனாலோ என்னவோ கொண்டாடப்பட வேண்டிய அளவுக்கு அவர் தமிழ்ச் சமூகத்தில் கொண்டாடப்படவில்லை என்கிற வருத்தமும் குற்ற மனமும் எனக்குண்டு.

அவருடைய ஐந்து நாவல்களையும் 51 சிறுகதைகளையும் தொகுத்து வெளியிட்டு பொன்னி பதிப்பகம் தமிழ் இலக்கிய உலகுக்கு மிகச்சிறந்த கொடையளித்திருக்கிறது.

3 comments:

kashyapan said...

பூமணி பற்றிய உங்கள் சித்தரிப்பு அருமை. அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகரம் கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது .---காஸ்யபன்

hariharan said...

நல்ல படைப்பாளியை புதிய வாசகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளீர்கள், என்னுடைய சிறுவயதில் கிராமத்தில் சக்கிலியமக்கள் குடிநீருக்காக பொதுக்கிணற்றில் நீர் இறைக்காமல் கிண்ற்றிற்கு வெளியே நின்று யாசகம் கேட்பதுபோல இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஒன்றா இரண்டா எத்தனையோ கொடுமைகளை உயர்சாதி இந்துக்கள் கடைபிடிக்கிறார்கள் அவர்களின் வலி தெரியவில்லை. தலித் இலக்கியங்களைப் படிக்கும்போது தான் நாமும் குற்றவாளி என்பதை உணர்கிறோம்.

"உழவன்" "Uzhavan" said...

போன வாரம் தான் பிறகு நாவல் படித்தேன். எனது கிராமத்தின் சக்கிலியக்குடி நாவல் முழுக்க கண்முன்னால் நின்றது.. அடேயப்பா என்னமா எழுதியிருக்கார்.