Monday, February 28, 2011

போர்வையில்லாமல்..

6974974-surreal-dark-portrait-of-a-young-man-covering-his-face-and-eyes-with-his-hands-but-he-can-see-right-

நாங்கள் பள்ளியில் சின்ன வகுப்புகளில் இருந்தபோது தரையில் பலகை போட்டு அமர்ந்திருப்போம்.பெஞ்ச் வசதியெல்லாம் அப்போது(இப்போதும்தான்) கிராமப்புற ஆரம்பப்பள்ளிகளில் கிடையாது.சில வகுப்புகளுக்கு பலகையும்கூட இருக்காது.தரையில் அமர்ந்திருப்போம்.பலகையோ தரையோ பெஞ்சோ ஆண்களுக்குத் தனி இடமும் பெண்களுக்குத் தனி இடமும் என்பது மட்டும் உறுதியாக இருக்கும்.எங்கள் ரெண்டாப்பு டீச்சரிடம் ஒரு பழக்கம் இருந்தது.அவர் பிரம்பு வைத்துப் பிள்ளைகளை அடிப்பதில்லை.அடி ஸ்கேலை வைத்தும் புறங்கையில் சொட் சொட் என்று அடிப்பதில்லை. தலையில் அவரும் கொட்டுவதில்லை மற்ற பிள்ளைகளை விட்டுக் கொட்ட வைப்பதுமில்லை.தோல் சிவக்கக் கிள்ளுவதுமில்லை.குனிய வைத்து முதுகில் மொத்துவதுமில்லை.வெயிலில் போய் முட்டங்கால் போட வைப்பதுமில்லை. கொளுத்தும் வெயிலில் மைதானத்தை நாலு ரவுண்டு ஓடி வரச்செய்வதுமில்லை.இப்படியான ’அங்கீகரிக்கப்பட்ட’ தண்டனைகள் எதையும் பிள்ளைகள் மீது பிரயோகிக்கும் வழக்கம் அவருக்கில்லை.

கேள்விக்குப் பதில் சொல்லாவிட்டால்-வாய்ப்பாடு ஒப்பிக்காவிட்டால்-வகுப்பில் சேட்டை பண்ணினால் அவர் ஒண்ணுமே செய்ய மாட்டார்.அவன் பையனாக இருந்தால் அவனைத் தூக்கி பெண்கள் பலகையில் பெண்பிள்ளைகளுக்கு நடுவே உட்கார வைத்துவிடுவார்.பெண்ணாக இருந்தால் ஆம்பிளைப்பயல்கள் பலகையில் உட்கார வைத்து விடுவார்.இதுதான் அவர் தரும் தண்டனை.அதைப் பார்த்து வகுப்பே சிரிக்கும்.அந்தச் சிரிப்பை அவர் உற்சாகப்படுத்துவார்.செத்து விடலாம்போல இருக்கும்.

யோசித்துப்பார்க்கையில் என் சின்ன வயதில் ஆண் பெண் பேதம் என்பது இப்படி வகுப்பறையில்தான் எனக்கு அறிமுகமானதாகப் படுகிறது.தெருக்களில் நாங்கள் ஆண்-பெண் குழந்தைகள் சேர்ந்துதான் விளையாடிக்கொண்டிருப்போம். வகுப்பறையில் உண்டாக்கப்பட்ட இந்த பேதம் உருவாக்கிய கூச்ச உணர்வு பின்னர் நெடுங்காலத்துக்குக் என் கூடவே வந்து கொண்டிருந்தது .பெண்களோடு பேசவும் கூச்சப்படும் பையனாகவே நான் கல்லூரிக்காலம் கழிந்தபின்பும் இருந்து வந்தேன்.கிராமப்புறங்களில் இப்போதும் இப்படி நிறையப்பேர் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

என் நண்பரான பேராசிரியர் ஒருவர் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தார். அவரை வழிகாட்டியாகக் கொண்டு ஆய்வு செய்யும் மாணவர்களில் ஆண்களிடம் ஒருவிதமாகவும் பெண்களிடம் மட்டும் எப்பவும் கடுகடுப்பாகவும் தான் நடந்து கொள்வதாகவும் அது ஏன் என்று தனக்கே புரியவில்லை என்றும் கூறினார்.பெண்களிடமிருந்து ஒரு தூரத்தைத் தான் தக்க வைத்துக்கொள்ளும் உளவியலிலிருந்துதான் அந்தக் கடுகடுப்பு வந்திருக்கும் என்று பின்னர் கூறினார். அது பெண் என்கிற எச்சரிக்கை மணி உள்ளே ஒலித்ததும் ஆண் மனதுக்குள் இயல்பு மனநிலை என்னும் கோபுரம் இடிந்து தகரத்துவங்குவதன் வெளிப்பாடு.

என் எதிர்வீட்டில் ஒரு நண்பர் இருந்தார் அவர் ஆண்களிடம் அவ்வளவாகப் பேசமாட்டார்.பெண்கள் என்றால் நட்டு கழண்டதைப்போல வலிய வலியப் போய் வழிய வழியப்பேசிக்கொண்டிருப்பார். இந்த ‘வழிதல்’ என்பது எல்லா ஆண் மக்களிடத்தும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஏதாவது ஒரு மனுஷியிடத்து நிகழ்ந்துதான் விடுகிறது. வழிதலின் வரலாற்றை அவரவர் சொந்த வாழ்வுக்குள் ஊடறுத்துச் சென்று ஆய்ந்து பார்த்துச் செப்பனிட்டுக்கொள்ள வேண்டும்.இன்னும் சில நண்பர்கள் அக்கா,தங்கச்சி என்று யோசிக்காமல் உடனடியாக ஒரு உறவுப்பெயரிட்டுப் பெண்களோடு பேசத்துவங்கி விடுவார்கள்.எதுக்கு வம்பு என்கிற ரகம் இது.இதுதான் நம் பொதுப்புத்தி சங்கடப்படாமல் இருக்கச் செய்து கொள்ளும் பொதுவான ஏற்பாடாக இருக்கிறது.

ஐம்பது வயது தாண்டிய பிறகு நானும் இந்த பார்முலாவைப் பின்பற்றி பெண்பிள்ளைகளை மகளே என்று சட்டென அழைக்கத்துவங்கினேன்.அவர்களுக்கும் அது சரியென்று படுவதால் ஏதோ ஒருவித இயல்பும் பரஸ்பர அன்பும் ஆரோக்கிய அளவு குன்றாமல் போய்க்கொண்டிருக்கிறது.ஆனால் ஒரு மனுஷி இதை ஏற்கவில்லை.மகளே என்று அவசரமாக நான் அழைத்ததும் பட்டென்று என் முதுகில் அறைந்தாள்.எதுக்கு அவசரமா ஒரு போர்வையைப் போட்டு மூடறீங்க. எந்தப் போர்வையும் இல்லாமல் ஒரு மனுஷரும் மனுஷியும் இந்த உலகத்தில் இயல்பாகப் பழக முடியாதா என்ன? என்று கேட்டாள்.முதுகில் பட்ட அந்த அடி என்னைப் பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்பில் கொண்டுபோய் நிறுத்திவிட்டது.ஆண்பெண் பால் பேதம் –பேத உணர்வு என்பதில் இயற்கையானது என்பது மிகமிகக் குறைந்த சதவீதம்தான் என்று படுகிறது. மீதியெல்லாமே இச்சமூகத்தால்- நம் பண்பாடு என்னும் வசக்கும் கருவியால் - நம் மூளைகளில் ஏற்றப்பட்டதுதான். நான் இவ்விதம் வசங்கிய இடங்களை மனதுள் தேடித்தேடி அழித்துக்கொண்டிருக்கிறேன்- இந்த அறிவு முன்னாடியே வராமப்போச்சே என்கிற மனக்குறையுடனும் இக்கட்டுரையுடனும்.

No comments: