ஆடுகளம்,காவலன்,சிறுத்தை ,இளைஞன் என்று எண்ணி நாலே படங்கள் இந்தப் பொங்கலுக்கு வந்துள்ளன.
முக்கியமான தமிழ் வார இதழ்களில் இளைஞன் தவிர்த்த மற்ற மூன்று படங்களுக்கான விமர்சனங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன.ஆகவே முதலில் இளைஞன் படத்தைப் பார்ப்போமே என்று மனதில் இரக்கம் இயல்பாகத் தோன்றவே --படம் பார்த்த 12 பேரோடு 13 ஆவது ஆளாக நாமும் போய் அமர்ந்தோம்.(படம் வெளியான ஐந்தாம் நாள் அது).நமக்கேற்பட்ட இந்த இரக்க உணர்வு படத்தைத் தயாரித்தவர்களுக்கு நம் மீது இல்லையே என்கிற ஏக்க உணர்வைப் படம் தந்தது.
தமிழினத்தலைவர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் கதை,திரைக்கதை,வசனத்தில் உருவான படம் இது. மட்டுமன்றி,இது கலைஞரின் 75ஆவது படம் என்கிற முத்திரையோடும் வந்துள்ள படம்.மற்றபடி கலைஞரின் குடும்ப நடிகர்கள் குஷ்பூ,கவிஞர் பா.விஜய்,சுமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். குடும்பத் தயாரிப்பாளர் கோயம்புத்தூர் மார்ட்டின் கோடிகள் கொட்டி இப்படத்தைத் தயாரித்துள்ளார்.படம் பார்த்து முடிந்ததும் நம் மனதில் ஓடிய ஒரு நினைப்பு- இப்படத்தைக் கலைஞர் தன்னுடைய நண்பர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்குச் சமர்ப்பணம் செய்திருக்கலாமே என்பது. திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் கட்சி துவங்கிய புதிதில் லண்டன் பிபிசிக்கு அளித்த நேர்காணலில் உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்கிற கேள்விக்கு அண்ணாயிசம்தான் என் கொள்கை என்று பளிச்செனப் பதிலளித்தார்.அண்ணாயிசம் என்றால் என்ன என்று மேலும் விளக்கம் கேட்கப்பட்டபோது ‘ கேபிடலிசம்,சோசலிசம்,கம்யூனிசம் இந்த மூன்றும் சேர்ந்ததுதான் அண்ணாயிசம் என்று பதிலுரைத்தார்.என்னதான் கலைஞருக்கு எதிராகக் கொடி பிடித்துக் கட்சி ஆரம்பித்து ஆட்சியையும் பிடித்திருந்தாலும் கலைஞர் எம்.ஜி.ஆர் மீது கொண்ட அன்பு மட்டும் மாறவே இல்லை என்பதற்கான எடுத்துக்காட்டாக இப்படம் அமைந்துள்ளது.
ஆம். அண்ணாயிசம்தான்-எம்.ஜி.ஆர்.சொன்ன அண்ணாயிசம்தான்- இப்படத்தின் கதை.
ஒரு கோட்டைச்சுவருக்குள் கொத்தடிமைகளாக உழைப்பாளி வர்க்கம்.அவர்களின் விடுதலைக்காகப் போராடும் ஒரு இளைஞன்.போராட்டத்துக்குத் தேவையான புரட்சிகரமான துண்டுப்பிரசுரங்கள் அச்சாவது அந்தக் கொடுமைக்காரக் கோமானின் வீட்டிலேயே.கோமானின் தங்கை தானே அவற்றை அச்சிட்டுப் புரட்சியாளர்களுக்கு வழங்குகிறாள்.கோட்டைச்சுவரை உடைக்க அதுவரை ஐடியாவே இல்லாமல் புரட்சிப் பாட்டுக்கள் மட்டும் பாடிக்கொண்டிருந்த(அவ்வப்போது வசனங்களும் பேசிக்கொண்டிருந்த) தொழிலாளி வர்க்கத்துக்கு அவள்தான் திட்டம் தீட்டிக்கொடுக்கிறாள்.ஏனெனில் அவள் ஒரு மெக்கானிக்கல் எஞ்சினீயர்.அந்தக்கப்பல் கட்டும் தொழிற்சாலையை அப்படியே தொழிலாளிகளுக்கே தானமாக எழுதிவைக்கத்திட்டமிடுகிறார் அப்பா முதலாளி.அதை அறிந்த மகன் முதலாளியும் அவன் மனைவியான சேனா ( வசந்த சேனையை விடமாட்டேன் என்கிறார் ) வும் அப்பாவை விஷம் தந்து தலையணையால் முகத்தை அமுக்கிக் கொன்று கடலில் வீசி விடுகிறார்கள்.ஆகவே அப்பாவின் மகள் புரட்சியாளர்களோடு சேர்ந்து விடுகிறார்.இப்படி முதலாளித்துவத்துக்குள் சோசலிசமும் சோசலிசப்புரட்சியின் பங்காளியாக முதலாளித்துவமும் என பின்னிப்பிணைய விட்டுக் கதை போகிறது. உங்களுக்கு வயசாகிப்போச்சு உடம்பு சரியில்லே ..பேசாம ஓய்வெடுக்கப்போங்க என்று அடிக்கடி தடாலடி செய்யும் மகன் பேசும் வசனங்கள் ஒரு வெந்த புண்ணிலிருந்து வரும் வசனங்களோ என்று நமக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது உண்மை.
இந்தக் கதையைக்கூட மன்னித்துவிடலாம்.வடிவேலுவை இவ்வளவு கோரமாக தமிழ்சினிமா வரலாற்றில் யாருமே பயன்படுத்தியிருக்க மாட்டார்கள்- அதை மன்னிக்கவே முடியாது.1940களில் சுமாரான தமிழ் சினிமாக்களில் வந்த மொக்கை நகைச்சுவைக்காட்சிகளின் அப்பட்டமான பிரதியாக நகைச்சுவைக்காட்சிகள். படமே ஒட்டுமொத்த நகைச்சுவையாக இருக்கையில் தனி காமெடி ட்ராக் வைத்திருக்க வேண்டாம் என்றும் தோன்றியது.
இந்தக் காத்துட்டுப் பெறாத கதையை வைத்துக்கொண்டு வெனிஸ்,ஐரோப்பா,சிங்கப்பூர் ,மலேசியா என்று ஊர் ஊராக வேறு போய் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்..அராஜகமன்றி வேறென்ன? இன்னும் பராசக்தி காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் இக்கதை மற்றும் திரைக்கதை ஆசிரியரை அங்காடித்தெரு ,களவாணி,மைனா போன்ற படங்களைப் பார்க்க வைத்தால் தாவலை.எப்படியெல்லாம் தமிழ் சினிமா மாறிப்போச்சு இவங்க எங்கே இருக்காங்க? என்னா கொடுமை சார் இது.
கற்பனையான கொடுமைகளைப் படத்தில் காட்டிக்கொண்டு நிஜவாழ்வில் ரெட்டணைத் துப்பாக்கிச்சூடு முதல் ஃபாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம்வரையான நிஜமான கொடுமைகளுக்கு முகம் திருப்பிக் கொண்டிருக்கும் கலைஞரின் இந்தப் படத்துக்கு இளைஞன் என்று பேர் வைத்திருக்கிறார்கள்.படத்தில் இளமை எங்கும் இல்லை.கலைஞரே கதை வசனம் எழுதியிருக்கிறார்.படத்தில் கலையும் இல்லை.
வார இதழ்கள் இப்படத்துக்கு விமர்சனம் எழுதாமல் மௌனம் சாதித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் துணிச்சலாகும். அர்த்தமுள்ள மௌனங்கள்.
வந்திருக்கும் நாலு படங்களில் நாலுவரி பாராட்டி எழுதணும் என்றால் அது ஆடுகளம் படம் பற்றி மட்டுமே எழுத முடியும்.கொலைகளுக்கு வாய்ப்புள்ள கதையாகத் தேர்ந்தெடுக்கும் கோடம்பாக்கம் பார்முலா இதிலும் உண்டு என்றபோதும் மதுரை வட்டார மண்வாசனையோடு கதை சொல்ல முயற்சி எடுத்துள்ளார்கள்.சேவல் சண்டையைப் பின்னணியாக வைத்து மதுரை,திருப்பரங்குன்ற வட்டாரத்தில் படமாக்கியிருக்கிறார்கள்.தனுஷ் முதல் சேவல்கள்(கிராபிக்ஸ் உதவியுடன்)வரை எல்லோருமே யதார்த்தமாக நடித்துள்ளார்கள்.ஜி.வி.பிரகாஷின் இசையும் வேல்ராஜின் கேமிராவும் புதிய அனுபவம் தருகின்றன.ஈழத்துக்கவிஞர் வ.ஐ.ச.செயபாலன் படத்தில் குரோதமும் துரோகமும் செய்யும் பெரிய அண்ணணாக சிறப்பாக நடித்துப் படத்தைத் தூக்கியிருக்கிறார்.
எல்லாப்படங்களிலுமே குத்தும் வெட்டும் கொலையும் என வந்துகொண்டே இருப்பது பெரும் அயர்ச்சியையும் மனச்சோர்வையும் அவநம்பிக்கையையும் ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.குத்துவெட்டுக்கதாநாயகனான விஜய் காவலன் படத்தில் குத்து வெட்டு இல்லாத பணக்கரப்பெண்ணைக் காதலிக்கும் காவக்காரப்பையனாக ( ஸ்... அம்மா..மதுரைவீரன் படத்திலிருந்து எத்தனை கதை இப்படி..தாங்க முடியல சாமி) வந்திருப்பது பரவலாக பத்திரிகைகளால் பாராட்டப்பட்டுள்ளது.இது பாடிகார்டு எனப்படும் மலையாளப்பட மறு உருவாக்கப்படம்.
கார்த்திக் ரெட்டை வேடத்தில் கலக்கும் சிறுத்தையும் பொங்கலன்று உருமத் தொடங்கியது.தெலுங்கில் ‘விக்கிரமார்குடு’வாக உறுமியதுதான் தமிழில் சிறுத்தையாக உறுமிக்கொண்டிருக்கிறது.ஒரு போலீஸ்காரராகவும் ரவுடியாகவும் நடித்தால்தான் பெரிய ஹீரோ ஆக முடியும். ஆகவே கார்த்தியும் பெரிய ஹீரோ ஆகிவிட்டார் என்பதற்கு மேல் இப்படத்தில் சொல்ல ஏதுமில்லை.
ஒரு சமூகப் பிரச்னையைச் சொல்ல-அல்லது ஒரு படைப்பாளியின் மனதில் எழும் கலைசார் –வாழ்வு சார் உணர்வும் அக்கறையும் அழகியலும் கொண்ட- ஒரு படம் எடுக்கணும் என்று யாரும் நினைப்பதில்லை.ஒரு ’ஹிட்’ கொடுக்கணும்.அதுக்குள்ள ஒரு நல்ல கதை இருந்தாலும் எங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபமில்லை என்கிறதுதான் கோடம்பாக்கத்தின் நிலை –இன்றுவரை தொடரும் சோகம். ஆனால் நல்ல சினிமா எது என்பது தெரிந்துதான் இருக்கிறது.அது வந்துவிடாமல் பார்த்துக்கொள்ளும் எச்சரிக்கைதான் தமிழ்த் திரையுலகைத் தலைமை தாங்குகிறது.அதன் வெளிப்பாடுகளாகவே இந்த நாலு படங்களும் வந்துள்ளன.
No comments:
Post a Comment