சசி
சஸி
ஸஸி
ஸசி
எப்படிச்சொன்னாலும்
நீ என்
ஸசி
ஸஸி
சஸி
சசி
என்று அன்று 70களில் எங்கள் இளம் மனங்களை ஈர்த்தபடி அறிமுகமானார் கலாப்ரியா.அவரை நான் முதலில் அறிந்து கொண்டது அவர் நடத்திய-அதாவது கொண்டு வந்த-நிர்மால்யம் இதழின் வழியாக.ஒரே இதழ்தான் வந்தது.முதலில் நான் வாசித்தது அவரது தீர்த்தயாத்திரை தொகுப்பை.மிகுந்த மனக்கிளர்ச்சியூட்டிய தொகுப்பு அது.ஆண்டாள் அதிகாலையில் தன் தோழிகளை அழைப்பதை நகரோரத்துக் குடிசைப்பெண்கள் நாயைத் துணைக்கழைத்துக்கொண்டு ஊருக்கு வெளியே கக்கூஸ் போவதோடு இணைத்து எழுதிய எம்பவாய் என்கிற கவிதைதான் கலாப்ரியாவின் படைப்புகளில் முதன் முதலாக என்னைத் தாக்கிய படைப்பு. வண்ணதாசன் மிக்க கௌரவமான எழுத்தென்றால் கலாப்ரியா அன்றைய தேதியில் எதையும் எழுதிவிடலாம்போல ஒரு துணிச்சலை எங்களுக்கெல்லாம் வாரி வழங்கிக் கொண்டிருந்தார் என்பேன்.
எச்சியிலைத்தொட்டியில்
ஏறிவிழும்
தெருநாயின்
லாவகம் எனக்கொரு
கவிதை தரப் பார்க்கிறது.
கலாப்ரியா என்றால் ‘மீறல்’ என்றுதான் அப்போது எனக்கு அர்த்தமாகியிருந்தார். அப்போது நானும் எல்லோரையும்போலக் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தபடியால் தொடர்ந்து கலாப்ரியாவைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தேன்.மற்றாங்கே வரைக்கும் ஓடி வந்தவன் அதற்குப் பின் நின்றுவிட்டேன்.கவிதை எழுதுவது நின்றதால் வாசிப்பிலும் அது எனக்கு ஒரு தேக்க நிலையை உண்டாக்கி விட்டது.
என்றைக்கும் மறக்கமுடியாத கலாப்ரியாவின் கவிதையாக எனக்குள் நிற்பது,
அந்திக்கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது.
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.
காலவெள்ளத்தில் கரைந்து போகாமல் இக்கவிதை நிற்கிறது.அன்றைக்கு அவருடைய ‘அழகாயில்லாததால் அவள் எனக்குத் தங்கை யாகிவிட்டாள்’ என்கிற வரிகளுக்காக
நிறையத் திட்டு வாங்கினார். சலுகை என்ற தலைப்பில் வந்த இவ்வரிகளை ஓர் ஆண் மனதின் போக்கைப் பதிவு செய்ததாக மட்டும் எடுத்துக்கொண்டு கடந்து போய்விட்டேன். இன்று மீண்டும் அவருடைய எழுத்துக்கள் எல்லாவற்றையும் ஒருசேர வாசிக்கும்போது இந்தக்கவிதையும் நீக்கப்படாமல் மொத்தத்தொகுப்பில் சேர்க்கப்பட்டிருப்பதைக் கண்டேன். தயக்கமோ கூச்சமோ எதையும் மறைக்கும் உணர்வோ இல்லாத முற்றிலும் தன்னைத் தமிழ்ச்சமூகத்துக்குத் திறந்து வைத்துள்ள மகா கலைஞனாக கலாப்ரியாவை மீண்டும் நான் இனங்கண்டேன்.
திருநெல்வேலிப் பிள்ளைமார் சமூகத்தில் ஒரு வாழ்ந்துகெட்ட குடும்பத்துப் பின்னணியிலிருந்து வந்த கலாப்ரியா கீழ் மத்தியதர வர்க்கத்தின் இயலாமைகளையும் இல்லாமைகளையும் விரக்திகளையும் சந்தோசங்களையும் சின்னதான கோபங்களையும் யதார்த்தமாகக் கலையாக்கிய படைப்பாளி.
அன்பு மிதித்தெழும்
கோபம்.
ராகம் மிதித்தெழும்
ஆலாபனை.
யதார்த்தம் மிதித்தெழும்
படிமம்.
ஒழுங்குகள்,சட்டங்கள்,புனிதங்கள் மிதித்தெழுந்த கவிதைகளாக கலாப்ரியாவின் எழுத்து.ஜெயமோகன் கணித்ததுபோல அவர் ஒரு லௌகீகக் கவிதான்.ஆகவே எமக்கு மிக நெருக்கமான ஒரு கவியாகிறார்.நான் தொடர்ந்து கவிதைகளைப் பின் தொடராமல் போனதன் விளைவாகக் கலாப்ரியாவைக்கூடச் சரியாக சரியான நேரத்தில் பார்க்காமல் விட்டுவிட்டேன். பெயர்ப்பலகையைச் சரியாக வாசிக்காமல் என் சொந்த ஊருக்கான பஸ்ஸைக் கடந்து போவது தெரிந்தே தவறவிட்ட பயணியைப்போல நான் கலாப்ரியாவைத் தவறவிட்டிருக்கிறேன்.
சாப்பாடில்லாத பிள்ளைகள்
புழுதிக் காலுடன்
அடுப்பெரிகிறதை
வந்து வந்து பார்த்து
விளையாடப்போகும்,
பசியை வாசல்ப்படியிலேயே
விட்டுவிட்டு.
வாசல் படியில் பசியைக் காவலுக்கு வைத்துவிட்டுச் செல்லும் குழந்தைகள் என்கிற காட்சிப்படிமம் மனதை உலுக்குவதாக இருக்கிறது.பசியை விதவிதமாகப் பாடிய கவிஞனாக நான் அவரைப் பார்க்கிறேன்.
ஜெயிலுக்குப் பொறத்தால
நடக்கும் கல்யாணங்களில்
தோட்ட வேலைக்கைதிகள்
மாத்திரம்
வேலியருகே வந்து
இட்லியக் கெஞ்சி வாங்கி
மறைச்சபடி
உள்ளே ஓடற ஓட்டத்தை
யாரால்
செமிக்க முடியும்
என்று மனதால் சீரணிக்க முடியாத காட்சிகளை நம் முன் தூக்கிப் போட்டுக் கேள்வி கேட்கிறார்.
பிள்ளைகளின் பசியடக்க
புதிய வசவுகள் தேடி
மூலையடைவாள்,அம்மை.
பீடிகள் தேடிச்சலித்து,
யூனிபாரத்தை தேடச்சொல்லி
அன்பாய்க் கூப்பிடுவான்
‘ஒரே மாதிரி’வசவுகளில்
அழவும் மரத்துப்போன
பிள்ளைகளை
அப்பன்.
கலாப்ரியாவைப் பலரும் பல கோணத்தில் பார்த்துவிட்டார்கள்.எல்லாப்பார்வைகளுக்கும் இடம் இருக்கிறது அவர் எழுத்தில்.ஆனாலும் பசியையும் இல்லாமையையும் ஏக்கங்களையும் நிராசைகளையும் பூச்சின்றி அசலான மக்கள் மொழியில் பாடிய கவிஞன் என்கிற அடையாளத்தை அவருடைய கவிதைகள் அழுத்தமாகப் பெற்றிருக்கின்றன என்று உரக்கக் கூற விரும்புகிறேன்.தத்துவ தளத்துக்கோ சூனிய வெளிக்கோ ஆழ்மனச் சிடுக்குகளுக்கோ எடுத்துச்செல்லாமல் பசியைப் பசியாகவும் காதலைக் காதலாகவும் காமத்தைக் காமமாகவுமே பாடிய கவிஞன்.ஒரு பொருள்முதல்வாதக் கவி.
சமூகப் பார்வை என்று தனியாகப் பிரிக்காமல் சொந்த வாழ்வனுபவத்தோடு பின்னிய அரசியலாக அவருடைய கண்ணோட்டம் முன்வைக்கப்படுவது நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எனக்ககருதுகிறேன்.கைகளைப் பற்றிய கவிதை இவ்விதமாகச் செல்ல,
எட்டும்வரை
முதுகு தேய்க்க
பாரம் தூக்கிவிட
ஓட்டுப்போட
ஒன்றுக்கிருக்கும்போது
உதவிக்கொள்ள
குழந்தையையும்
மனைவியையும்
நையப்புடைக்க
...........
கைகள் தேவைதானே
எங்களுக்கும்
வாசகன் இக்கவிதையை இன்னும் நீட்டித் தன் அனுபவம் சார்ந்தும் நிலைபாடு சார்ந்தும் தன் மனதில் எழுதிக்கொள்ள இடம் வைத்தே கவிதை நகர்கிறது.
முழக்கமிடுகையில் விண்ணோக்கி உயர,
அடித்தால் திருப்பி அடிக்க..
என்று எழுதிப்பார்த்துக்கொண்டேன் நான்.
அறிந்தவைகளால் அறியப்பட்டிருக்கிறவர்கள் கவிதையில்
தக்கார் தகவிலரென்பது
அவரவர் எச்சத்தாற் காணப்படும்.
நாம் இந்தியர்கள்
அறியப்பட்டிருக்கிறோம்
இரந்தும் உயிர் வாழ
நேர்ந்து.
.......
பொறுப்பற்ற குடிமக்களும்
புண்ணியம் செய்த
அரசியல்வாதிகளும்-
பாரத தேச மென்றே
அறியப்படுவார்.
என்று பேசுகிறார்.எட்டயபுரம் நெடுங்கவிதையில் அரேபியாவுக்குக் கப்பலேறும் சிதம்பரங்கள் பற்றிய கவலையைப் பகிர்ந்து கொள்கிறார்.
வீடு மனை விற்று
வட்டி விற்று
நாட்டு வளம் கூறும்
தேசிய கீதங்களை,
மெய்ப்பொருள் விற்கும்
அரசாங்கத்திடமே
அடகு வைத்துவிட்டு;
எட்டயபுரம்
நீங்குவான்-கப்பலில்;
சிதம்பரம்,
அரேபியா நோக்கி
என்று வ.உ.சியையும் வழியின்றி வெளியேறிப் பிழைக்கப்போகும் இன்றைய நம் வாழ்க்கையையும் ஒரே வரியில் இணைத்துப் போடும் இக்கவிதை, அரசியல் கவிதைகள் எழுத முனையும் நம் இளம் படைப்பாளிகள் ஊன்றிக்கவனிக்க வேண்டிய படைப்பாகும்.
கவிதை மட்டுமின்றி இன்று பரவலான கவனிப்பைப்பெற்றுள்ள அவருடைய உரைநடை எழுத்துக்கள் –நினைவின் தாழ்வாரங்கள்-இவ்வளவு வெளிப்படைத்தன்மையோடு ஒரு மனிதன் பேசவும் எழுதவும் முடியுமா என வியப்புத் தருகிறது.
எந்தப் புகாரும் யார்மீதும் இல்லை.எவர் மீதும் குரோதமும் கோபமும் இல்லை.தான் என்ற அகங்காரமில்லை.எதையும் எவரிடத்தும் கோரவுமில்லை-எதிர்பார்ப்புமில்லை என்பதுபோன்ற அசல் கலைஞனுக்குரிய சகல குணாம்சங்களுடனும் தன் பயணம் தொடர்கிறார் கலாப்ரியா.
“ வலி உணரும் மனிதனே நல்ல கலைஞனாக இருக்கிறான்
என்னைப் பாதிக்கிற விஷயங்கள் எல்லாம் என் கவிதையில்
வருகிறது.சதா நிகழ்ந்துகொண்டிருக்கிற சமூக நிகழ்வுகள்,
சிந்தனைகள்,காலாதீத இடைவெளி தாண்டி நீண்டு கொண்டே
யிருக்கும் ஒரு சங்கிலியின் கண்ணிகள்.இதன் ஒரு கண்ணியில்
நான் என் கவிதையுடனும் வாசகன் தன் பிரத்யேக அனுபவங்களுடன்
இன்னொன்றிலும் பிணைவு கொள்கிறான்”
கேள்வி:
சமுதாய நிறுவனங்களின் சீரழிவுகளை பெரும்பாலும் அடையாளம் காட்டுவதுடன் நின்று விடுகிறீர்களே ஏன்?
கலாப்ரியா :
பிரச்னையின் உக்கிரத்தைத் தீவிரமானதொரு தொனியில் சொல்லி
சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துகிற காரியத்தையே கலைஞன் செய்ய இயலுகிறது.ஒரு இயக்கமாகச் செயல்பட அரசியல்ரீதியாக அதுவும் திட்பமான அரசியல் (POLITICAL WILL)ரீதியான ஒரு இயக்கம் வேண்டும் என்று நினைக்கிறேன்.அதற்காகக் கலைஞனுக்குச் சில அங்கீகாரங்கள் தேவைப்படுகிறது.
இவரை விட நெருக்கமான கவிஞர் நமக்கு வேறு யார் இருக்க முடியும் என உணர்கிறேன்.
3 comments:
மிக அருமையான கலைஞன். மிக மிக அருமையான பகிர்வும். நன்றி தமிழ்ச்செல்வன்!
கலாப்ரியாவைப் பற்றி, இவ்வளவு திறந்த மனத்துடனும், மிகச் சரியாகவும், நானறிய யாரும் சொல்லவில்லை. கடமுடா என்று எந்தப் பெரிய வார்த்தையையும் போட்டுப் பயங்காட்டாமல், மிக நெருக்கமாக நின்று அவரைப் பற்றிச் சொல்லியிருக்கிற உங்கள் வரிகளால் நான் நெகிழ்ந்து போயிருக்கிறேன். என் தனிப்பட்ட பாராட்டுக்கள்.
கால வெள்ளத்தை தாண்டி நிற்கும் கலாப்ரியாவின் கவிதையில் பிழை இருப்பதை சுட்டிக்காட்ட உறுத்தலாகத்தான் இருக்கிறது,இருந்தாலும் ....அந்த கவிதை இப்படி இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது
,எனக்கதன் கூடும் தெரியும்
குஞ்சும்தெரியும்
பாவமதற்கு-என்
பாஷை புரியாது...,
எனெனில் அது பாஷை கலாவுக்கு தெரிந்ததால் தானே அது கூடு தேடி அலையும் சோகம் புரிந்தது
Post a Comment