Tuesday, January 11, 2011

காற்றைப்போல எளிய கதைகள்

kuravan யெஸ்.பாலபாரதியைப் பல ஆண்டுகளாகப் பழக்கமென்றாலும் அவர் எழுத்துக்களை இதுவரை நான் வாசித்ததில்லை.

கோட்டி முத்து

பாரதியின் ஒரு பாட்டு

பொம்மை

கடந்துபோதல்

தண்ணீர் தேசம்

துரைப்பாண்டி

பேய்வீடு

நம்பிக்கை

சாமியாட்டம்

சாமியாட்டம்-2

ஆகிய இந்தப்பத்துக்கதைகளை 2003லிருந்து 2010 வரை எட்டு ஆண்டுகளாக எழுதியிருக்கிறார்.நம்மைவிடப் பெரிய சோம்பேறி ஒருத்தரைப் பார்த்துவிட்ட அற்ப சந்தோசம்தான் முதலில் எனக்கு ஏற்பட்டது..35 ஆண்டுகளில் 29 கதைகள் எழுதியவன் நான்.ஆகவே என்னிடம் ஒரு முன்னுரை அல்லது அணிந்துரை வாங்கிப்போட பாலபாரதி எடுத்த முடிவு அந்த வகையில் ரொம்பச் சரி.

வாசகனைச் சவாலுக்கு அழைக்கும் ‘இலக்கிய’ மொழியைத்தவிர்த்து கு.அழகிரிசாமியின் பள்ளியிலிருந்து வந்தவர்போல மிக எளிமையான, நேரடியான மொழியில் கதை சொல்லியிருக்கும் பாங்கு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.ஒரு கலைஞனுக்குரிய நுட்பமும் குழந்தை மனமும் பார்வையும் பாலபாரதிக்கு இயல்பாக இருக்கிறது.எந்த மெனக்கெடலும் இல்லாமல் காற்றைப்போல இக்கதைகள் நம்மைத் தொட்டுத்தழுவிச் செல்கின்றன.

இத்தொகுப்பின் சிறந்த கதைகள் துரைப்பாண்டியும் கோட்டிமுத்துவும் தாம்.பிற கதைகளிலும் சில அற்புதமான தருணங்கள் பதிவாகியிருக்கின்றன.குழந்தை உழைப்பாளி துரைப்பாண்டி நம்மை அந்தரத்தில் நிறுத்திவிட்டு அவனை விழுங்கும் சமுத்திரத்திற்குள் காணாமல் போகிறான்.அவனுக்கும் கதைசொல்லிக்கும் மலரும் நட்பு வெகு இயல்பாக மெல்ல மெல்லப் பற்றிப்படர்வது அழகாகப் பதிவாகியிருக்கிறது.வாசக மனதில் துயர் விதைத்த கதைகளாகத் துரைப்பாண்டியும் கோட்டி முத்துவும் அமைந்துள்ளன.பாலபாரதி சொல்வதுபோல எல்லா ஊர்களிலும் ஒரு கோட்டிமுத்து இருக்கிறான்.கந்தர்வன் அவனை சீவனாகப் படைத்தார்.வேல ராமமூர்த்தி கிறுக்கு சண்முகமாகப் படைத்தார்.என்னிடம் ஓரளவில் கருப்பசாமியின் அய்யாவாக வந்து சேர்ந்தார்.பாலபாரதிக்கு ஒரு கோட்டி முத்து.அவன் சட்டை கிழிந்துவிட்டால் ஊருக்குள் வராமலும் யாரிடமும் கேளாமலும் சுடுகாட்டு மண்டபத்தில் படுத்துக்கொள்ளும் இடம் கதையில் உன்னதமான இடமாகும். இப்பூமியில் வாழத்தெரியாத கோட்டிகள் எத்தனையோ கோடிப்பேர் இருக்கிறார்கள்.அவர்களைக் கோட்டி என்று நாம் பெயரிடுவதில்லை.நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கோட்டி குறிப்பிட்ட சதவீதத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான்.உலகத்தில் எல்லோருமே இப்படிக் கோட்டிகளாக இருந்துவிட்டால் அது எத்தனை அன்பும் கருணையும் பிறர் மீது அக்கறையும் உள்ள பூமியாக இருக்கும்.என்றெல்லாம் நம்மை யோசிக்க வைக்கும் படைப்பாக கோட்டிமுத்து அமைந்துவிட்டது.பல நினைவுகளையும் சிந்தனைகளையும் கிளர்த்துவதுதானே சிறந்த படைப்பு.

பாரதியின் ஒரு பாட்டு கதை இன்னும் நன்றாகச் செதுக்கப்பட்டு வந்திருக்க வேண்டும்.எனினும் சிறுமியிடம் கைநீட்டும் வயோதிகன் நம்மை அதிரச்செய்து ஆணென்ற நினைப்பில் நம்மைக் கூனிக் குறுகச்செய்கிறான்.எத்தனை துரோகங்களை நம் பெண்பிள்ளைகள் கடந்து வரவேண்டியிருக்கிறது.அந்தப்புள்ளியை நோக்கிக் கதை முதல் வரியிலிருந்து பயணப்படாமல் சுற்றிச் சுற்றி வந்திருப்பதைக் கவனத்துடன் தவிர்த்திருக்க வேண்டும்.

பொம்மை கதையில் மகளைக் கரடி பொம்மை சந்திக்கும் புள்ளிதான் கதை.அதைச் சுற்றி இன்னும் வலுவாகக் கதை பின்னப்பட்டிருக்க வேண்டும்.கடந்துபோதல் மிக முக்கியமான கதையாக வர வாய்ப்புள்ள படைப்பு.சாமியாட்டம்,பேய்வீடு போன்ற பகுத்தறிவுசார் கதைகளும் தண்ணீர் தேசம் போன்ற முற்போக்கான உள்ளடக்கம் கொண்ட கதைகளும் பாலபாரதியின் எதிர்கால எழுத்தின் மீது ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.

காட்சிரூபமாகவே எல்லாக்கதைகளும் நம் முன் விரிந்து விரிந்து மனதில் சித்திரங்களை வரைந்து செல்லும் எழுத்து நடை பாலபாரதிக்கு மிக இலகுவாகக் கை வந்துள்ளது.இதை வாழ்வின் நெருக்கடிகள் என்னும் போக்குவரத்து நெரிசலில் தொலைத்துவிடாமல் இறுகப்பற்றிக்கொள்ள வேண்டும்.

தமிழகத்திலும் மும்பையிலுமென பல பரிமாணமுள்ள வாழ்க்கையனுபவம் என்னும் மிகப்பெரிய பின்பலம் பாலபாரதிக்கு வாய்த்திருக்கிறது.தோண்டத்தோண்டக் கதைகள் அச்சுரங்கத்திலிருந்து வந்துகொண்டேதான் இருக்கும்.அதற்கான உழைப்பை நாம் கொடுக்க வேண்டும்.பத்திரிகையாளனாக எழுதிப்பிழைக்கும் வாழ்க்கை ஒருவகையில் படைப்பெழுத்துக்குப் பல விதத்தில் இடைஞ்சல் தரும்தான்.அதை மீறுவதற்கான போராட்டத்தைப் பாலபாரதி நடத்த வேண்டும்.

காற்று தென்றலாகவும் வரும்.புயலாகவும் வரும் சுனாமியாகவும் வரும்.இத்தொகுப்பு மென்மையான காற்றாக நம்மைத் தழுவிச்சென்றுள்ளது.இன்னும் அழுத்தமும் இறுக்கமும் கைகூடும்போது நம்மை வலுவாகத் தாக்கும் புயல்களை பாலபாரதி கட்டவிழ்த்து விடுவார் என்கிற நம்பிக்கையை இத்தொகுப்பு அளித்துள்ளது.வாழ்த்துகிறேன்.

அன்புடன்

ச.தமிழ்ச்செல்வன்

04-01-2011

பத்தமடை

No comments: