Saturday, February 5, 2011

தமிழ் கற்றல்

tamil சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் பள்ளித் தமிழாசிரியர்களுடன் உரையாட நேர்ந்தது அல்லது வாய்த்தது.அவர்களில் பலருக்கும் தமிழாசிரியர் என்றால் பள்ளிகளில் யாரும் மதிப்பதில்லை.அறிவியல் பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்களுக்கு இருக்கும் மரியாதையும் மதிப்பும் எங்களுக்கு இல்லை என்று மிக வருந்திப் பேசினார்கள்.மொழிப்பாடம் என்று வந்தாலும் ஆங்கில ஆசிரியர்களுக்கு இருக்கும் மரியாதை எங்களுக்கு இல்லை.காலை வகுப்புக்கள் எல்லாம் கணிதம்,அறிவியல் போன்ற பாடங்களுக்கே ஒதுக்குகிறார்கள்.தமிழ் வகுப்புக்கள் எல்லாம் மதிய நேரமே தருகிறார்கள்.கேட்டால் ’தமிழ்தானே’ என்கிறார்கள். என்று பலவிதமான மனக்குமுறல்களை அவர்கள் ’கொட்டினார்கள்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழகமெங்கும் பஞ்சாயத்துக் கட்டிடங்கள் உட்பட அனைத்து அரசுக் கட்டிடங்களிலும் நியான் விளக்குகள் தமிழ் வாழ்க என்று மின்னிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் செம்மொழி மாநாட்டைப் பார்த்த அலுப்பே நமக்கு இன்னும் தீராத ஒரு பின்னணியில் இந்தத் தமிழாசிரியர்களின் உள்ளத்துக் குமுறல்களைக் கேட்க நேர்ந்தது.

நாம் பின்னோக்கிப் போனால் ஒரு காலத்தில் படிப்பென்றாலே அது தமிழ் இலக்கியம் படிப்பதுதான் என்று இருந்ததை அறிகிறோம்.உ.வே.சாவின் என் சரித்திரத்தில் அவர் கற்ற கதையை விரிவாகச் சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.ஆனாலும் நீண்ட்ந் நெடுங்காலமாகத் தமிழ் கற்றல் அல்லது கற்பித்தல் என்றாலே ஆத்திசூடி,கொன்றைவேந்தன்,வாக்குண்டாம், நல்வழி,நன்னெறி போன்ற போதனா இலக்கியப்பாடங்களை நெட்டுருச்செய்யும் பணி என்றே இருந்துள்ளது.நவீன காலத்தில் இந்தியா நுழைந்தபின்னும் கூட தமிழ் கற்பித்தலில் அறிவியல்பூர்வமான மாற்றங்கள் நிகழவில்லை.

அதற்கு முக்கிய காரணம் நம் சூழல்தான். தமிழ் என்பது மொழியாக மட்டுமின்றி ஒரு அரசியல் அணிதிரட்டலுக்கான சாதனமாகவும் பயன்படுத்தப்பட்ட சூழல் இந்தக் கற்பித்தல் முறையையும் பாதித்துள்ளது. மொழி இனத்தோடும்,இன உணர்வு கொள்வதோடும் இணைக்கப்பட்டதில் மாற்றங்களை மறுத்துப மொழியின் புனிதம் / தூய்மை காக்கிற மனநிலையோடும் பிணைக்கப்பட்டது.நாங்கள் அறிவொளி இயக்கத்தில் முதல் பாடமாக ஆனா ஆவன்னா வைக்காமல் பட்டா,படி என்று வைத்தபோதும் தமிழ்சார் அறிவாளிகளிடத்திருந்து எதிர்ப்பு வந்தது.70களில் இலங்கையில் தமிழ் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளைப் புகுத்திய போது தமிழறிஞர்களிடமிருந்து வந்த கடும் எதிர்ப்பின் காரணமாக அது கைவிடப்பட்டது பற்றி ஒரு கட்டுரையில் பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுகின்றார்.

திராவிட இயக்க அரசியலின் ஒரு பகுதியாக தமிழாசிரியர் என்பவர் இன உணர்வு மிக்கவராக /இன உணர்வை ஊட்டுகிற சமூகக்கடமையை ஆற்றுபவராக சமூகத்தில் மதிக்கத்தக்க ஒரு மனிதராக முன்னிறுத்தப்பட்டார்.ஆகவே தமிழாசிரியர்கள் ஒரு காலகட்டம் வரை தமிழகத்தில் மதிப்புப் பெற்றவர்களாகவே இருந்தனர்என்பது உண்மை.மு.வ, நா.பார்த்தசாரதி போன்றோரின் பல நாவல்களில் கதாநாயகர்களாகத் தமிழ் படித்த இளைஞர்களும் தமிழாசிரியர்களும் நடமாடினார்கள்.

காலமாற்றத்தில் திராவிட இயக்கத்தாரின் கேமிரா தமிழாசிரியர்களை விட்டு விட்டு வேறு திசைகளை நோக்கிக் கவனம் குவிக்கப் போய்விட்ட பின்னணியில் தமிழாசான்கள் ‘கைவிடப்பட்டவர்கள்’ ஆனார்கள்.பட்டிமன்றங்களின் பேசுபொருளாக தமிழ்க் காவியங்களும் காப்பியங்களும் இருந்தவரைக்கும் அங்கேயும் தமிழாசிரியர்களின் கொடி பறந்த காலம் இருந்தது.மாமியாரா மருமகளா பழைய சினிமாவா புதிய சினிமாவா என்று பட்டிமண்டபத்துப் பாடு பொருள்களும் மாறிவிட்டபோது அவர்களுக்கு அங்கேயும் இடமில்லை.தெருக்களில் தமிழ் கேட்கக் கூட்டமுமில்லை என்றானது.எல்லாம் ஒருசேரத் தமிழகத்தில் நடந்து முடிந்த போது வெந்த புண்ணில் வேல்பாய்ச்ச மைய அரசின் கல்விக்கொள்கைகளில் மாற்றம் ஏற்பட தொழிற்கல்வி முக்கிய இடம் பிடிக்க மருத்துவம்,பொறியியல் நோக்கித் தமிழகமே தொங்கோட்டம் ஓடத் தமிழின் நிலையும் தமிழாசிரியர் நிலையும் கல்விப்புலத்துக்கு உள்ளேயும் சமூக வெளியிலும் படு கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டன.ஆங்கிலத்திலும் கூட அமெரிக்கன் ஆங்கிலம்தான் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளதையும் அவதானிக்க வேண்டும்.

இத்தனைக்கும் மேலாக தமிழாசிரியர்கள் பாவம் ,மரபு வழிப்பட்ட தமிழ் கற்பித்தல் மூலம் ஆசிரியர்களாகி, வேறு ஏதும் தெரியாத அப்பாவிகளாக பள்ளிகளில் உலவிவரும் நிலை ஏற்பட்டுள்ளது. அறிவியல்,கணிதம்,பொருளாதரம் கற்றோருக்குக் கொஞ்சமாவது தமிழும் தமிழ் இலக்கணமும் இலக்கியமும் தெரிந்துதான் இருக்கிறது.ஆனால் தமிழாசிரியருக்கோ தமிழைத்தவிர வேறு எதுவுமே தெரியாது.தமிழிலும் நவீன இலக்கியம் பற்றி ஒன்றும் தெரியாது.70களுக்குப் பிறகுதான் நமது பல்கலைக்கழகங்கள் சிறுகதை,புதுக்கவிதை போன்றவற்றையும் இலக்கியம்தான் தமிழ்தான் என்று ஏற்றுப் பல்கலைப்படியேற அனுமதித்தன.

இன்று தமிழ் இலக்கிய உலகில் ஆண்மொழி,பெண் மொழி,உடல்மொழி,ஆதிக்கசாதி மொழி , ஒடுக்கப்பட்டோர் மொழி என்று என்னவெல்லாமோ வந்து விட்டது.அது எதுவுமே நமது தமிழாசிரியர்களுக்குத் தெரியாது.மொழியியலில் எத்தனை தூரம் சென்று விட்டார்கள்.நமக்குத் தெரிந்த நோம் சாம்ஸ்கியும் லெவிஸ்ட்ராசும் தமிழாசிரியர் யாருக்குமே தெரியாது. நாஞ்சில்நாடனைக்கூடத் தெரியாத தமிழாசிரியர்கள்தான் நம் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிக்கிறார்கள்.

சூழலும் சரியில்லை.தாமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதை நம் அன்புக்குரிய தமிழாசான்களுக்கு எவரேனும் புரியும் வகையில் எடுத்துரைத்து அவர்கள் கரை சேர வழி வகுக்க வேண்டும்.தமிழ்ப் பாடம் கற்பிப்போர் வெறும் மொழியை-அதன் கட்டமைப்பை மட்டும் கற்றுத்தருபவர்களாக அல்லாமல் சிந்தனையைத் தூண்டுபவராக பிள்ளைகளின் படைப்பாற்றலைத் தூண்டுபவராக வளர்த்தெடுப்பவராக சதா தன்னைத் தற்காலப்படுத்திக்கொள்பவராக சகல துறைசார் அறிவும் பெற்றவராக இருப்பது மிக மிக அவசியம்.வேறு பாட ஆசிரியர்களைப்பார்க்கிலும் தமிழாசிரியரே நமக்கு மிக மிக முக்கியமானவர் என்பதைத் தமிழ்ச் சமூகமும் உணர வேண்டும்.மொழி ,பண்பாட்டின் விளைபொருளாகவும் பண்பாட்டை உருவாக்கும் முக்கியக் கூறாகவும் பண்பாட்டு அடையாளமாகவும் பண்பாட்டு அம்சங்களைத் தலைமுறை தலைமுறைக்கும் எடுத்துச்செல்லும் சக்திமிக்க(காலத்தை ஊடறுத்துப்பாயும்) ஊடகமாகவும் திகழ்கிறது என்பதை தமிழர்களாகிய நாம் உணரவில்லை என்பதன் அடையாளமாகத்தான் இத்தனை பலவீனமான தமிழாசிரியர்களை நம் பிள்ளைகளுக்கு நாம் தந்திருக்கும் நிலை இருக்கிறது.

இது ரொம்ப ரொம்ப முக்கியமான ,கவலைக்குரிய ஒன்றாக எனக்குப்படுகிறது.

3 comments:

க. சீ. சிவக்குமார் said...

1.இளைஞன் படம் பார்க்காத பாவி ஆயிட்டேன் நான். டோரண்ட்ஸ் டாட் காமில் அந்தப் படம் கிட்டுவதில்லை என்பது நல்ல விஷயம்.
2. கலாப்ரியாவின் கவிதைகளில் எனக்கு மறக்க இயலாதது சந்திரோதயம் நன்கு தெரியும் விதமாக ஒரு தோட்டம்தான்.
3.இன்னும் தமிழில் குழந்தைகள் டிகிரி படிக்கிறார்கள் என்பதுதான் ஆறுதலும் ஆச்சரியமுமாக இருக்கிறது.
4. பெங்களூர் வந்திட்டேன்.(உங்க போன் நம்பரைத் தொலைச்சிட்டேன்ங்கறது உங்களுக்கு நல்ல செய்தியா இருக்கலாம். 08050444267-க்கு போன் பண்ணினா நான் ஒரு கதை அனுப்புவேன்)
5.வீட்டார் நலம் / நலமறிய ஆவல்.

Anonymous said...

////தமிழ்ப் பாடம் கற்பிப்போர் வெறும் மொழியை-அதன் கட்டமைப்பை மட்டும் கற்றுத்தருபவர்களாக அல்லாமல் சிந்தனையைத் தூண்டுபவராக பிள்ளைகளின் படைப்பாற்றலைத் தூண்டுபவராக வளர்த்தெடுப்பவராக சதா தன்னைத் தற்காலப்படுத்திக்கொள்பவராக சகல துறைசார் அறிவும் பெற்றவராக இருப்பது மிக மிக அவசியம்.வேறு பாட ஆசிரியர்களைப்பார்க்கிலும் தமிழாசிரியரே நமக்கு மிக மிக முக்கியமானவர் என்பதைத் தமிழ்ச் சமூகமும் உணர வேண்டும்.///////

அருமையான பதிவு தோழர், கவலையளிக்கும் பதிவாகவும் உள்ளது,,. நமது சமுக அமைப்பில் சிலபஸ் தாண்டி, தாங்கள் கையாளும் பாடம் குறித்த பொதுஅறிவை தேடுதல் ஆசிரியப் பெருமக்களிடம் குறைவாகவே உள்ளது,, தமிழாசிரியர்களின் நிலையும் அது தான்,, நாஞ்சில் நாடன் குறித்து., . அவர் கவிஞரா சிறுகதை எழுத்தாளரா என்பது எத்தனை பேருக்கு தெரியும்-? என்பது உண்மை தான்...தமிழ் மொழியின் பிரம்மாண்டத்தை, வளமையை நாம் இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது..

pavithra balu

Muthu Nilavan said...

"வேறு பாட ஆசிரியர்களைப்பார்க்கிலும் தமிழாசிரியரே நமக்கு மிக மிக முக்கியமானவர் என்பதைத் தமிழ்ச் சமூகமும் உணர வேண்டும்" -

மிகச் சரி.
இதை அவர்களும் உணர வேண்டுமே!

அறுபதுகளில் பொங்கித் ததும்பிய இந்தி எதிர்ப்பில் தமிழாசிரியர்களுக்கும் ஓரளவுக்குப் பங்கிருந்தது. அந்த ‘மாயை’ ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகளால் இற்று விழுந்த போதும் எப்படி அந்த -இந்திக்கான- இடத்தை ஆங்கிலம் பிடித்தது என்பதெல்லாம் உங்களுக்கும் தெரியும் தானே? ‘இந்தி நெவர், இங்லீஷ் எவெர்’ என்றவர்களால் தமிழ்வழிக் கல்வியோ தமிழ்ப்பாடநூல் வழிச் சமுதாய உணர்வோ இடம்பிடிக்கவில்லை என்பதை நான் ‘தமிழ்ப்பாட நூல்களில் தமிழ்’ எனும் ஒரு விரிவான கட்டுரையாக எழுதியிருக்கிறேன். இயலுமெனில் பார்க்க..

http://valarumkavithai.blogspot.com/2011/02/blog-post_23.html

தமிழாசிரியர் யாரும் இந்தக் கட்டுரையைப் பற்றிக் கருத்துக் கூறவில்லை. ‘நல்லாத்தான் இருக்கு’ என்பதைத் தவிர என்பதையும் சேர்த்துக்கொள்க.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தமிழ்ப் பாடத்திட்டத்திற்கு விடிமோட்சம் வந்தால் தமிழாசிரியர்களுக்கும் வரலாம்…
நா.முத்து நிலவன்
புதுக்கோட்டை
08-03-2011