Tuesday, January 11, 2011

ஹரிகிருஷ்ணன் படைக்கும் உலகம்

pen மயில்ராவணன் தொகுப்புக்குப் பிறகு இந்த நாய்வாயிச் சீலை தொகுப்பை ஹரிகிருஷ்ணன் நமக்கு வழங்கியிருக்கிறார்.கெட்டவார்த்தைகளைச் சரளமாகக் கையாள்கிறார் என்று யாரும் முத்திரை குத்தி இக்கதைகள் முன்வைக்கும் விளிம்புநிலை மக்களின்- கிராமப்புற உழைப்பாளி மக்களின் அசலான வாழ்வின் துயர் ததும்பும் பக்கங்களை வாசிக்கத் தவறிவிடக்கூடாதே என்கிற அச்சத்துடனே இவ்வரிகளை எழுதலானேன்.

வன்முறையின் வடிவமாகி நிற்கிற பள்ளிக்கூடத்தைப் பார்த்துக் காரித்துப்புகிற கதையாக அசுரவித்து அழுத்தமாக நம் மனதில் விழுகிறது.ஆதமத்தநாடு திக்கத்தச்சனம் என்று இரண்டாவது கதைக்கு அவர் வைத்திருக்கும் தலைப்பு எனக்குப் புரியவில்லை.அவரது வட்டார வழக்காக இருக்கலாம்.அது ஒரு பிரச்னை இல்லை.கதை இன்றைய சமகால நிகழ்வான காண்ட்ராக்ட் தொழிலாளிகள்,சுமங்கலித் திட்டம் என்ற பேரில் இளம்பெண்களைக் கொத்தடிமைகளாக வைத்திருக்கும் மில்லுகளின் உள்ளே நடக்கும் தொழிலாளர் விரோத நடப்புகள் ,இந்த நுகத்தடியிலிருந்து தப்பிஓடிவிட முடியாத பெண் வாழ்க்கையின் அவலம் இவற்றையெல்லாம் மண்ணோடு சேர்த்து அப்படியே நம் மனசுக்குள் அள்ளிக்கொட்டுகிறார் ஹரி. சமீப காலத்தில் நான் வாசித்த மிக முக்கியமான தொழிலாளி வர்க்கக் கதை இது.தப்ப முடியாது என்று இக்கதை சொல்லவில்லை.தப்ப முடியவில்லையே என்று ஏங்குகிறது.உண்மை ஒன்றாக இருக்க ஊருவாயி எப்போதும் வசதி படைத்தவர் பக்கமே நிற்பதை – எளிய மக்கள்-அதிலும் பெண்கள் ஏமாந்து மடிவதை ஊருவாயி பேசுகிறது.

இத்தொகுப்பின் மிகச்சிறந்த கதை குடிநாசுவன்.நாசுவரின் சாதியை முன் வைத்து ஊர் அவரை அவமாரியாதை செய்வதும் அவர் அதைப் பிழைப்புக்கருதிப் பணிந்து ஏற்பதையும் அவரது துணைவியான அழகம்மாள் கொதித்து எழுவதும் நம் மனம் அதிரப் பதிவாகியுள்ள கொந்தளிப்பூட்டும் கதை குடிநாசுவன்.வாயிக்கி வணங்காத பூவும் பல்லுக்கு மெதுவான கல்லும் கதை ஒரு பெண்ணின் சோக காவியம்.கட்டிலுக்குக் கீழே கணவன் ஒளித்துவைத்த பெண்ணைக் கண்டதும் , ”என்னாப்பண்டுவ? கறகறன்னு கண்ல பிச்சிக்கிட்டு வந்த கண்ணுத்தண்ணிய வெரல்ல வழிச்சு சுண்டியெஞ்சிப்புட்டு வாயிப்பேசாம கப்புனு இந்துக்கிட்டா.” இந்த ஒரு வரி வாசக மனதில் ஏற்படுத்தும் வலியும் வேதனையுனம் எத்தனை ஆழமானது. இப்படி மௌனத்தில் அமிழ்ந்துபோன எத்தனையோ பெண்களின் சோகங்களின் அவர்கள் சந்திக்கும் துரோகங்களின் குறியீடாக இவ்வரி மின்னுகிறது.

வலுத்தவர்களின் பலவீனத்தை எளியவன் ஆயுதமாக்கும் கதைதான் மொன்னப்பழனி கந்தாயங்கட்ன கதை.ஒரு கூத்துக்கலைஞனின் வாழ்வின் இல்லாமையை நிராசைகளை பெருமூச்சுக்களைப் பதிவு செய்யும் பாதரவு கதை மயில்ராவணன் தொகுப்பு முன்வைத்த கூத்துக்கலைஞர் வாழ்வின் தொடர்ச்சியாகும். நாம் அறியாத அவர்கள் வாழ்வின் மறுபக்கமாகும். திருநங்கைகள் குறித்த அக்கறையும் விழிப்பும் அதிகரித்து வரும் இந்நாட்களில் நாயிவாயிச்சீலை அவ்வியக்கத்துக்குச் சமர்ப்பணமாக வந்துள்ள கதை என்பேன்.

ஹரிகிருஷ்ணனின் மனிதர்கள் இந்திய வாழ்வின் அடியிலும் அடித்தட்டில் வாழப்போராடும் ஜீவன்களாவர்.அவர்களின் வாழ்வை அவர்கள் மொழியிலேயே -அப்படியே சிறுகதையின் வடிவம்-செட்டு-உருவம்,உள்ளடக்கம் என்பதுபற்றியெல்லாம் சற்றும் கவலைப்படாமல்- சொல்லிச்செல்கிறார் ஹரி.தமிழில் இது ஒரு புதுவகையான எழுத்து முறை.வார்த்தைகளில் நல்ல வார்த்தை கெட்ட வார்த்தை என்றேதும் கிடையாது.இது சனங்களின் மொழி.புதுவகையான வாசிப்பு முறையைக் கோரும் ஒரு எழுத்து முறையை ஹரி முன்வைக்கிறார்.ஒருவிதமாகப் பழகிவிட்ட நம் வாசக மனங்கள் நாசூக்கு என்ற பேரில் இக்கதைகளைப் புறக்கணித்து விடாதபடிக்கு

இக்கதைகள் முன்வைக்கும் உயிர்களின் துடிப்பைக் கேட்க வேண்டுமாய்ப் பணிவன்புடன் வேண்டுகிறேன்.

அன்புடன்

ச.தமிழ்ச்செல்வன்

பத்தமடை

07-01-2011

ஹரிகிருஷ்ணனின்  இரண்டாவது சிறுகதைத் தொகுப்புக்கு முன்னுரையாக எழுதிய சில வரிகள்-பாரதி புத்தகாலய வெளியீடு

No comments: