Wednesday, October 13, 2010

இசை என்னும் துன்ப வெள்ளம்

M.B.S-1

 

 

 

 

இம்முறை சென்னையில் இருந்தபோது ஞாநி வீட்டின் பின்புறம் நடைபெறும் கேணி கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.அன்று இசை மேதை எம்.பி.சீனிவாசன் அவர்களின் பிறந்தநாள்.இசைக்கலைஞர் அகஸ்டின் பால் எளிமையாகவும் சுவைபடவும் சேர்ந்திசை பற்றியும் சிம்பொனி பற்றியும் இசையிடையிட்ட உரை நிகழ்த்தினார்.சிம்பொனியை நம் போன்ற பாமரரும் உணர்ந்து ரசிக்கத் தக்க விதமாக எடுத்துரைத்தார்.அவரைத்தொடர்ந்து அமரர் எம்.பி.சீனிவாசன் அவர்களால் உருவாக்கப்பட்ட யூத் காயர் எனப்படும் சேர்ந்திசைக்குழுவினர் சில பாடல்களைச் சேர்ந்திசைத்தனர்.பகத்சிங் பற்றிய ஈரோடு தமிழன்பன் பாடலிலும் தாலாட்டுப் பாடலிலும் என் மனம் கரைந்து கண்களில் வழிந்துகொண்டிருந்தது.

பொதுவாக எனக்கு இசைஞானம் என்பது அறவே கிடையாது.தெருப்புழுதி தின்றலையும் ஒழுங்கற்ற ஓர் அன்றாடம் லபிக்கப்பட்ட நாம் எப்போது இசைபட வாழப்போகிறோம் என்கிற ஏக்கம் மட்டுமே எந்நேரமும் மனசில் நிறைந்திருக்கும் இசையாக இருக்கிறது.வாழ்வின் அர்த்தம் அர்த்தமின்மை குறித்தான தர்க்கங்களையெல்லாம் துடைத்தழித்துப் பரவி மனசை நிறைப்பது இசை என்பதை வாழ்வின் சில தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்.

எங்கள் வீட்டில் தம்பிகள் கோணங்கியும் முருகபூபதியும் பெரிய இசை ரசிகர்களாக இருப்பது கண்டு பெருமையும் பொறாமையும் அடைவதுண்டு.தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் இசையில் பெரிய மன்னனாக இருந்திருக்கிறார்.கிட்டப்பாவும் சுந்தராம்பாளும் அவரிடம் இசை கற்றிருக்கிறார்கள் என்கிற தகவலைப் பலரிடம் சொல்லிப்பீத்துவதுண்டு. அவர் வாழ்ந்த நாகலாபுரம்-பள்ளிவாசல்பட்டி வீட்டில் ரேடியோ ரூம் என்று ஒன்று இருக்கும்.ஒரு மேசையில் அந்த பெரிய (மர்பி என்றுதான் ஞாபகம்) ரேடியோப்பெட்டி இருக்கும்.அந்த அறையில் தனியாக அமர்ந்து தாத்தா பாட்டுக்கள் கேட்பாராம்.முற்றிலும் கலைஞனாக வாழமுடிந்த தாத்தா எப்போதும் எட்டாத உயரத்திலேயே இருக்கிறார்.முருகபூபதிக்குத்தான் உண்மையில் தாத்தா அவர் என்று ஒரு வரி அவ்வப்போது என் மனசில் ஓடி மறைவதுண்டு-வலியுடன்.பிச்சைக்காரர்கள் அவருடைய பாடல்களைத் தெருக்களில் பாடிச் செல்வார்களாம். ஆகவே அவரை ‘பிச்சைக்கொரு பாஸ்கரதாஸ்’ என்று பெருமையாக விளிப்பார்களாம்.அம்மா சொல்லுவார்கள்.அந்தப் பிச்சை என்ற சொல்லோடு மட்டும்தான் நமக்குத் தொந்தம் உண்டு அவரது இசை/நாடகம் இவற்றின் வாரிசாக நாம் வாழவில்லை என்கிற மன அவஸ்தை எப்போதும் எனக்குண்டு.

கல்லூரி நாட்களில் இரவு நேரங்களில் வானொலிக்கடியில் மயங்கிக்கிடந்தது இசைக்காகவா , கலங்குகின்றான் அவளை நெஞ்சில் நிறுத்தி.... என்கிற வரிகளுக்காகவா என்று இப்போதும் பிரித்துச்சொல்லிவிட முடியாது.இதுவரையிலான வாழ்க்கையில் அதிகம் இசைகேட்டது கல்லூரி நாட்களின் இரவுகளிலும் ராணுவத்தில் பணியாற்றிய காலத்து இரவுகளிலும்தான்.ராணுவ முகாம்களில் இரவு நேரங்களில் தூரத்துச் சாலைகளிலிருந்து வரும் வாய்ப்பாட்டு ஓசை மனதில் சொல்லொணாத்துயரத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.பெரும்பாலும் பனிபடர்ந்த மலைச் சாலைகளில் நிலவொளியில் மிதமான போதையுடன் கூர்க்கா இளைஞர்கள் பாடியபடி செல்வார்கள்.மேரா ஜீவன் கோரா காகஸ்.. என்று மெல்லிதாக என் அறைக்குள் நுழையும் வரிகளைப் பின் தொடரும் மனம் நெடுநேரம் அதில் இற்று வீழ்ந்து கிடக்கும்.

சரி.அந்தக்கதையை விடுங்க.

எம்.பி.சீனிவாசன் ஒரு இடதுசாரியாக தோழர் ஜீவா போன்றவர்களால் கொண்டாடப்பட்ட கலைஞனாக உருவானவர்.கட்சிக்கூட்டங்களில் அவரோடு சேர்ந்து பாடிய தோழர் டேப் கார்க்கி எங்கள் மாவட்டத்தில் சிவகிரியில் எந்நேரமும் பீடி குடித்தபடி தீக்கதிர் விற்றுக்கொண்டும் பாடிக்கொண்டும் வாழ்ந்தார்.அன்று கம்யூனிஸ்ட் இயக்கம் கைக்கொண்டிருந்த முக்கியக் கலை வடிவமாக இசைப்பாடல்கள் இருந்தன.ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு டேப் கார்க்கி,டேப் காதர்,டேப் மாரிமுத்து என்று தோழர்கள் இருந்திருக்கிறார்கள். பேராசிரியர் நா.வானமாமலை அவர்களுக்கு நாட்டுப்புறப்பாடல்களைக் கிராமப்புறங்களில் சேகரித்து அனுப்பும் பணியையும் ஈடுபாட்டுடன் செய்தவர் டேப் கார்க்கி. கார்க்கி சேகரித்த சில பாடல்களைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டுவருவதற்காக அவரை நான் அடிக்கடி சந்தித்துக்கொண்டிருந்த அந்த நாட்களில் அவர் எம்.பி.சீனிவாசன் பற்றி பேசிக்கொண்டிருப்பார்.

நீண்ட காலத்துக்குப் பிறகு - 1979 அல்லது 80 ஆக இருக்கலாம்- நாங்கள் கோவை துடியலூரில் ஒரு இசைமுகாம் நடத்தினோம்.தோழர் கே.ஏ.குணசேகரனெல்லாம் அப்போது எங்களோடு இருந்தார்.அந்த முகாமுக்கு எம்.பி.சீனிவாசன் வந்து நான்கு நாட்களும் எங்களோடு இருந்தார்.அன்றைக்கு இயங்கிக்கொண்டிருந்த எங்கள் இசைக்குழுக்களையெல்லாம் அந்த முகாமுக்கு அழைத்திருந்தோம்.நான் அப்போதுதான் உருவாகியிருந்த எங்கள் கரிசல் குயில் இசைக்குழுவில் தொகுத்து வழங்கும் அறிவிப்பாளனாகவும் அவ்வப்போது ஆமா.. ஆமா..அப்படிப்போடு.. என்று சொல்கிற பின்பாட்டுக்காரனாகவும் குழுவோடு ஊரூராகச் சுற்றிக்கொண்டிருந்தேன்.ஆகவே நானும் அந்த இசை முகாமில் பங்கேற்கும் உரிமை பெற்றேன்.

முகாமில் பங்கேற்ற எங்கள் எல்லோரையும் (80 பேர் இருக்கும் ) பெஞ்சு மேலே ஏற்றி ஒரு சேர்ந்திசைக்குழுவாக்கி ,விடுதலைப்போரினில் வீழ்ந்த மலரே.., சர்வதேச கீதம், ஜெயபேரிகை கொட்டடா.. போன்ற ஒரு நான்கு பாடல்களை சேர்ந்திசையில் பாட எங்களுக்கு எம்.பி.சீனிவாசன் பயிற்சி அளித்தார்.நாலு நாளில் நாலு பாட்டு என்றால் அது எப்படித்தான் இருக்கும்.நாங்கள் அவருக்குப் பெரிய சவாலாக நான்கு நாட்களும் திகழ்ந்தோம்.அவ்வளவு பெரிய மேதை எப்படியோ எங்களை நான்காவது நாள் அவரது விரலசைவுக்குப் பாடுபவர்களாக மாற்றிவிட்டார்.கோவை சிறைச்சாலை அரங்கத்தில் மக்கள் முன் பாடினோம்.

இசை குறித்து அந்நாட்களில் அவர் எங்களோடு பேசியவை மறக்க முடியாத அனுபவம். விடுதலைப் போரினில்.. என்கிற இரு வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பது பற்றியே பல மணி நேரம் பேசினார். ‘ டு ’ என்கிற குற்றியலுகரம் எப்படி உச்சரிக்கப்பட வேண்டும் என்றும் ‘ ப் ’என்கிற எழுத்தில் வரும் புள்ளி உன் பாட்டில் துல்லியமாக ஒலிக்க வேண்டும் என்றும் அவர் சொன்னது இன்றுவரை என் பேச்சுக்கு உதவி வருகிற வார்த்தைகள்.கிடைமட்டமாக உருவாகி வளர்ந்த மக்கள் இசை செங்குத்தான சில தனித்திறன் படைத்த பாடகர்கள் என்கிற எட்டாப்பனை மரங்கள் உருவானபின் எவ்வாறு மக்களிடமிருந்து அந்நியமானது என்று இசையின் வரலாற்றை அவர் புதிய கோணத்தில் கற்றுத்தந்தார்.

எங்களில் யாருக்கும் முறையான சங்கீதம் கற்கும் வாய்ப்பு அன்று இருக்கவில்லை.கொஞ்சம் ஆஆ.. என்று இழுத்துப் பாட முயற்சிப்பவர் யாராக இருந்தாலும் பாடகர் என்று சொல்லிக் களத்தில் இறக்கி விடுவோம்.இயக்கத்தின் தேவையாகவும் சாத்தியமாகவும் அதுவே இருந்தது.எங்களுக்கு ஒண்ணுமே தெரியாமல் இருப்பது பற்றி வருத்தத்துடன் துயர் ததும்பிய குரலில் எம்.பி.சீனிவாசன் அந்த முகாமில் பேசிய வார்த்தைகள் என்றுமே மறக்க முடியாதவை :-

“ நான்தான் இருந்து உங்களுக்கெல்லாம் இசை கற்றுத்தந்திருக்க வேண்டும்.நான் அதை விட்டுட்டு எங்கெங்கோ சுற்றி விட்டு இப்போ திரும்பி வந்து பார்த்தால் என் வீடு இப்படிச் சிதைந்து கிடக்கிறதே..”

குடும்பத்தின் மூத்த பிள்ளை காணாமல் போய் ரொம்ப காலம் கழித்து வீடு திரும்பிப் பேசிய பேச்சாக அதை நான் உணர்ந்தேன்.அதற்கப்புறம் அவர் இயக்க இசைக்குழுக்களோடு நிறைய வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார்.ஆனால் காலம் அனுமதிக்கவில்லை.சீக்கிரமே அவர் மறைந்து விட்டார்.

கேணியிலிருந்து புறப்பட்டு அவர் குறித இந்த நினைவென்னும் துன்பக்கேணியில் ஒரு பாடலைப்போல அவரோகணமாக இறங்கிக்கொண்டிருந்தேன்.

6 comments:

நேசமித்ரன் said...

மிக நெகிழ்வாகவும் மசி படிந்த சுவராகவும் மனசை ஆக்குகிறது இந்தப் பதிவு .எம்.பி.எஸ் அவர்களின் நினைவுக்கு நன்றி

Unknown said...

வணக்கம் சார் ..

நான் தேவராஜ் விட்டலன்
பல முறை தங்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன் .மேற்கொண்டும் என்னை அறிமுகப்படுத்த விரும்பவில்லை .
இசை என்னும் துன்ப வெள்ளம் என்ற பத்தியின் வாயிலாக தங்களது இயக்க அர்ப்பணிப்பும் , தோழர் இசை மேதை எம்.பி.சீனிவாசன் ஐயா அவர்களை பற்றியும் அறிந்துகொள்ள முடிந்தது . நானும் ராணுவத்தில்தான் பணி புரிகிறேன் . அஸ்ஸாமில் இரவுப் பொழுதுகளில் காற்றில் மிதந்து வரும் பாடல்களை ரசித்து , ஒன்றி மனக்கவலைகளை மறந்துள்ளேன் . தங்களது பத்தி மனதில் புதைந்த பசுமையான நினைவுகளை மீண்டும் கண் முன் நிறுத்துகிறது .

நன்றி

என்றென்றும் தங்களை
பின்தொடரும் மாணவன்..
தேவராஜ் விட்டலன்
vittalan@gmail.com
http://vittalankavithaigal.blogspot.com/

Deepa said...

நெஞ்சைத் தொடும் பதிவு. அதிலும் சில இடங்களில் வாய்விட்டுச் சிரித்தேன்:

//நாலு நாளில் நாலு பாட்டு என்றால் அது எப்படித்தான் இருக்கும்.நாங்கள் அவருக்குப் பெரிய சவாலாக நான்கு நாட்களும் திகழ்ந்தோம்.//
:)))))

//ஆமா.. ஆமா..அப்படிப்போடு.. என்று சொல்கிற பின்பாட்டுக்காரனாகவும் குழுவோடு ஊரூராகச் சுற்றிக்கொண்டிருந்தேன்.ஆகவே நானும் அந்த இசை முகாமில் பங்கேற்கும் உரிமை பெற்றேன்.// இதுக்கே பெரிய‌ உரிமைப் போராட்டம் நடத்திருப்பீங்க போலருக்கே. :))

டாக்டர். ருத்ரன் உங்களது இந்த இடுகையை கூகுள் பஸ்ஸில் பகிர்ந்திருக்கிறார்.

ஸதக்கத்துல்லாஹ் said...

மனதை விட்டு அகலாத பதிவு. காலஞ்சென்ற எம்.பி.எஸ் அவர்களை இன்றைய இளைய தலைமுறையில் எத்தனை பேர் அறிந்திருப்பார்களோ? இசையைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்முள்ள என்னைப் போன்றவர்களுக்கு அமரர் எம்.பி.எஸ் நடத்திய பாடக்குறிப்புகளை இன்னொரு பதிவாகத் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

விமலன் said...

வணக்கம் தோழர். மிகவும் கனத்த பதிவாகம். நெகிழ்வான பதிவாகவும் இருந்தது.நெகிழ்வின் பொழுதுகளில் அவிழ்ந்து போகிற மனம் எங்கிருந்தோ
வருடும் இசையில் லயித்துப் போகிறகணங்கள்...,,,,,

காதர் அலி said...

நிறைவான பதிவு மனசு சந்தோசமாக இருக்கிறது.