Monday, October 4, 2010

பண்பாட்டுச் சீரழிவை ஊதி வளர்க்கும் சன் குழுமம் : தமுஎகச கண்டனம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

மாநிலக்குழு

28/21, வரதராஜபுரம் பிரதான சாலை,தேனாம்பேட்டை,சென்னை-600018

பத்திரிகைச்செய்தி 04-10-2010

சன் பிக்சர்ஸ் தயாரிப்பான எந்திரன் திரைப்படம் தயாரானது முதல் அக்கம்பெனியார் படத்துக்கான விளம்பரம் என்ற பெயரில் செய்து வரும் ஆர்ப்பாட்டங்கள் நியாய உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரையும் கவலை கொள்ளச்செய்வதாக உள்ளன. தங்கள் கையில் தொலைக்காட்சி அலைவரிசைகள் இருப்பதாலும் தாங்கள் போட்ட பணத்தைப்போல பல மடங்கு சம்பாதித்துவிட வேண்டும் என்கிற வியாபார வெறியுடனும் தமிழக இளைஞர்களைத் தவறான வழியில் திசைகாட்டும் வேலையை சன் குழுமம் செய்து வருகிறது.அதிகாலை 4 மணி முதல் திரைப்படத்தைத் திரையிடுவது ,இளைஞர்கள் மொட்டை போட்டுக்கொள்வதையும் கோழிகள் அறுப்பதையும் கட் அவுட்டுகளுக்குப் பால் ஊற்றுவதையும் மிகச்சிறந்த முன்னுதாரணமான பண்பாட்டு அசைவுகள் போல சன் டிவியிலும் தினகரன் பத்திரிகையிலும் திரும்பத் திரும்ப வெளியிட்டுத் தமிழக இளைஞர்களை மேலும் மேலும் அவ்விதமே செய்யத்தூண்டுகிறது.தமிழகத்தின் பலமான ஒரு உழைப்புச் சக்தியை இவ்விதம் சிதைக்கும் பணியை சன் குழுமம் செய்கிறது.சன் குழுமம் செய்து வரும் இந்தப் பண்பாட்டுச் சீரழிவு நடவடிக்கையை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. பொறுப்பும் மனச்சாட்சியும் உள்ள ஒவ்வொரு தமிழரும் இதைக் கண்டனம் செய்ய வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.தாம் விரும்பும் திரைக்கலைஞரைக் கொண்டாடும் ரசிக மனநிலையை ஒரு பைத்திய மனநிலைக்கு வழிநடத்தி இட்டுச்செல்லும் சன் குழுமத்தின் வியாபார வலையில் விமர்சனமின்றி வீழ்ந்துவிட வேண்டாம் எனத் தமிழகத்து இளைஞர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்ட கண்டன அறிக்கையை தங்கள் இதழில் வெளியிட்டு உதவுமாறு அன்புடன் வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம்.

அருணன்                                   ச.தமிழ்ச்செல்வன்

மாநிலத்தலைவர்                      பொதுச்செயலாளர்

6 comments:

வசுமித்ர... said...

நல்ல தொடக்கம். இன்னும் தொடர்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

அவமானம் ஏற்படுத்தும் செய்கையாக இருக்கின்றன அவை. இந்தக் கருத்துகளில் முழுக்க உடன்படுகிறேன்.

ஹரிஹரன் said...

//அதிகாலை 4 மணி முதல் திரைப்படத்தைத் திரையிடுவது ,இளைஞர்கள் மொட்டை போட்டுக்கொள்வதையும் கோழிகள் அறுப்பதையும் கட் அவுட்டுகளுக்குப் பால் ஊற்றுவதையும் மிகச்சிறந்த முன்னுதாரணமான பண்பாட்டு அசைவுகள் போல சன் டிவியிலும் தினகரன் பத்திரிகையிலும் திரும்பத் திரும்ப வெளியிட்டுத் தமிழக இளைஞர்களை மேலும் மேலும் அவ்விதமே செய்யத்தூண்டுகிறதது//

கேவலமான ரசிகர்களின் செய்கைகளை தங்களின் வியாபார உத்திக்காக பலமுறை நீயூஸ் சேனல்களில் ஒளிபரப்புவது கண்டிக்கத்தக்கது. மக்கள் இப்படிப்ப்ட்ட தொ(ல்)லைக்காட்சிகளை வெறுத்து ஒதுக்கவேண்டும்.

S.Raman,Vellore said...

மிகவும் சரியான நேரத்தில் த.மு.எ.க.ச சரியான கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது. அயோத்தி தீர்ப்பின் மூலம் எப்படிப்பட்ட விளைவுகள்
ஏற்படுமோ என்று ஒரு பகுதி மக்கள் உண்மையான அக்கறையோடு
கவலை கொண்டிருந்த நேரம், எந்திரன் படத்தைப் பற்றி மட்டுமே ஒரு கூட்டம் கவலை கொண்டிருந்தது. சத்துணவு ஊழியர்களோடு பேச நேரம் ஒதுக்க முடியாத கலைஞரால் பிரத்யேகக் காட்சிக்கு வந்து பார்க்க மட்டும் நேரம் ஒதுக்க முடிகிறது. குடும்பப் பிரச்சினை தீர இக்காட்சி உதவியதா என்று புலனாய்வுப் பத்திரிகைகள்
பட்டிமன்றம் நடத்திக் கொண்டுள்ளபோது எந்திரன் மாயையை உடைத்தது த.மு.எ.க.ச மட்டுமே. வாழ்த்துக்கள். அதே நேரம்
எச்சரிக்கையாகவும் இருங்கள். என் தலைவன் படத்தை பழிக்கிறாயா என்று பைத்தியக்கார மனநிலைக்கு மாற்றப்படும் ரசிகர் கும்பல் ஆட்டோவோடு வந்து விடப்போகிறார்கள்! சன் குழும சாக்சேனா மீதே சமீபத்தில் ஒரு தாக்குதல் வழக்கு பதிவானதையும் நினைவில் கொள்ளவும்.

Anonymous said...

Absolutely right. This idiotic hero worshiping fans should feel ashamed of themselves..........

kadhar24 said...

சன் குழுமத்தின் ஆதிக்கத்திற்கு எதிரான உங்கள் பதிவு பெருமைஅடைய செய்கிறது .மேலும் படிக்காத என் போன்ற பாமரமக்களுக்கும் புரியும் படியாக எளிய வடிவில் நீங்கள் எழுதிய அரசியல் எனக்கு பிடிக்கும் என்ற நூல் படித்து இந்திய அரசியலையும் ,உலக அரசியலையும் புரிந்து கொண்டேன் .உங்கள் எழுத்துக்கு நன்றி .