( புதிய தலைமுறை தீபாவளி மலருக்காக எழுதிய கட்டுரை)
அறிவொளி இயக்கம் என்ற பெயரில் தமிழகத்துக்கு எழுத்தறிவு இயக்கம் வந்தபோது நான் அதில் ஒரு தன்னார்வத் தொண்டனாக உடனே என்னை இணைத்துக்கொண்டதற்குக் காரணமாக அமைந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.அப்போது நான் அஞ்சல் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.திடீரென இந்தி ஒழிக.. தமிழ் வாழ்க.. என்கிற முழக்கத்தோடு ஒரு அறுபது பேர் சின்ன ஊர்வலமாக எங்கள் அலுவலகத்துக்கு முன்னால் வந்து சேர்ந்தார்கள். முழக்கம் தொடர்ந்து கொண்டிருக்க ஒருவர் கையில் தார்ச்சட்டியோடு மேலே ஏறினார்.பலகையில் இருந்த இந்தி எழுத்தைத் தார்பூசி அழிக்கத்தான் என்று புரிந்து கொண்டேன்.மேலே போனவர் அடுத்த நிமிடத்தில் கீழே இருப்பவர்களைப் பார்த்துக் கூவினார், “ ஏண்ணே இதுலே எதுண்ணே இந்தி எழுத்து?”..முதல் வரி..முதல் வரி.. என்று கீழிருந்து பதில் போனது.
நீண்ட நாட்களுக்கு இச்சம்பவம் என் மனதில் ஒருவிதக் குற்ற உணர்வைத் தந்து கொண்டிருந்தது. நம் சக தமிழனுக்குத் தமிழ் எழுத்து எது ஆங்கில எழுத்து எது இந்தி எழுத்து எது என்று பிரித்தறிகிற எழுத்தறிவு இன்னும் போய்ச்சேரவில்லையே.சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகாலம் ஆகி விட்டதே? தமிழனுக்குத் தமிழைக் கொண்டு சேர்க்கப்போவது யார்?இதில் என் பங்கு என்ன? என்கிற மன உளைச்சலுக்கு விடையாக மத்திய அரசு (மூன்றில் ஒரு பங்கு மாநில அரசு உதவி) அறிவொளி இயக்கத்தை அறிவித்தது.
ஏற்கனவே சில தலைமுறைகளாக எழுத்தறிவு பெற்றுவிட்ட நமக்கு அது ஒரு பெரிய விசயமாகத் தெரிவதில்லை-அது நம் வாழ்வின் இயல்பான அங்கமாக மாறிவிட்டபடியால்.ஆனால் முதல் முறையாக எழுத்துக்களோடு பரிச்சயமும் உறவும் கொண்ட கிராமத்து மக்கள்- குறிப்பாகப் பெண்கள் -அதை எப்படிக் கொண்டாடினார்கள் என்பதை எண்ணிப்பார்க்கவே மகிழ்ச்சியில் மனம் விம்முகிறது.
செங்கோட்டைப் பக்கமுள்ள தவணை என்கிற கிராமத்திலிருந்து இசக்கியம்மாள் என்கிற பெண்மணி எங்களுக்கு எழுதிய (அவரது வாழ்வில் அதுதான் அவர் எழுதிய முதல் கடிதம்)கடிதத்தில் அவர் யாருடைய உதவியும் இல்லாமல் யாரிடமும் ‘இந்தப் பஸ் எங்கே போகுது ?’என்று கேட்காமல் தானே தவணையில் புறப்பட்டு செங்கோட்டை போய் அங்கிருந்து பஸ் பிடித்து மதுரைக்குப் போய் தன் மகளைப் பார்த்துவிட்டு மீண்டும் அவரே பஸ் ஏறி ஊர் வந்து சேர்ந்த அனுபவத்தைத் தன் புதிய தமிழில்(நாங்கள் அதைக் கற்போர் தமிழ் என்போம்) எழுதியிருந்தார்.சின்னப் பிள்ளைக மாதிரி அப்படியே கீழே விழுந்து புரண்டு அழுகணும் போல சந்தோசமா இருக்கு என்று கடிதத்தை முடித்திருந்தார்.ஊத்துமலைக்கு அருகே ஒரு கிராமத்துக்கு நாங்கள் போனபோது வீட்டு வாசல்களில் அ..ஆ.. ப..பா.பட்டா..படி என்று எழுத்துக்களைக் கோலமாகப் போட்டிருந்தார்கள்.நம் பெண்களுக்குத்தான் இப்படியெல்லாம் ஒன்றைக் கொண்டாடத்தெரியும்.
உழைப்பாளி மக்களுக்கு எழுத்தறிவு நிச்சயமாக ஓர் ஆயுதம்தான்.புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவொளி இயக்கத்தில் படித்த கல்லுடைக்கும் பெண்கள் , சங்கம் அமைத்துக் கல் குவாரி காண்ட்ராக்டை அவர்களே எடுத்துப் பண மூட்டைகளின் மிரட்டல்களையும் வழக்குகளையும் சந்தித்து வெற்றிகரமாகக் கல் உடைத்தார்கள். (கல்லை மட்டுமா உடைத்தார்கள்!)ஷீலா ராணி சுங்கத் ஐ.ஏ.எஸ் அவர்களின் உதவி பின்புலமாக இருந்தது என்றாலும் அப்பெண்கள் எழுந்து நிற்கக் காரணமாக அமைந்தது அவர்கள் பெற்ற எழுத்தறிவுதான்.
ஆந்திராவில் நெல்லூர் மாவட்டத்தில் எழுத்தறிவு பெற்ற பெண்கள் ( என்.டி.ஆர். ஆட்சியில்) அரசின் சாராயக்கடைகளை ஊர் ஊராகப் போய் உடைத்து நொறுக்கினார்களே.எழுத்தறிவின் கொண்டாட்டம்தான் அது.அரசே சாராயக்கடைகளை நடத்தியதால் அப்பெண்கள் அரசுப்பணியைத் தடுப்பதாகக் கூறிக் காவல்துறையை அவர்கள் மீது அரசு ஏவியதும் போலீஸ் ஜீப்புகளில் சாராயப்பானைகளை ஏற்றிக்கொண்டு விற்பனைக்குக் கொண்டுபோனதும் நம் ஜனநாயகத்தின் மிகப்பெரிய கேலிக்கூத்துக்கள்.
வங்கிக் கணக்குகளில் கைநாட்டுக்குப் பதிலாகக் கையெழுத்துப்போட்ட மக்கள் அன்று அடைந்த மகிழ்ச்சியை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன்.எழுத்துப் பயிற்சிக்காக அம்மக்களைக் கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதுங்கள் என்று சொன்னபோது ‘ ஒரே ஒரு கிரைண்டர் மட்டும் கிடைக்க அருள் செய்.நான் மாவாட்டிப் பிழைத்துக்கொள்வேன்’ என்றும் மாறாந்தை வரைக்கும் வரும் பஸ்ஸை எங்க ஊருக்கும் வர வைக்க மாட்டியா சாமி என்றும் எத்தனை எளிய கோரிக்கைகளை மக்கள் கடவுளிடம் வைத்தார்கள்! இரக்கமில்லாத இந்த உலகத்தில் கருணையின் வடிவமாகக் கடவுள் இருக்கிறார்.ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சாகக் கடவுள் இருக்கிறார் என்கிற மார்க்சின் வரிகளை நாங்கள் அக்கடிதங்களில் கண்டோம். அத்தகைய எளிய தேவைகளைக்கூட இச்சமூகம் அவர்களுக்குத் தந்திருக்கவில்லை என்கிற உண்மையும் கூடவே உறைத்தது.
இரண்டாண்டுகாலம் அறிவொளி இயக்கமாகவும் பின்னர் ஓராண்டுகாலம் தொடர்கல்வி இயக்கமாகவும் தமிழகத்தில் சமூகப்பங்கேற்புடன் எழுத்தறிவு இயக்கம் நடைபெற்றது.ஆனால் மனித இயல்பு என்னவெனில் ஐந்தாண்டுகாலம் தொடர்ந்து வாசித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தால்தான் எழுத்தறிவு என்றும் மறக்காமல் மனசில் தங்கும்.இடையில் விட்டுவிட்டால் மீண்டும் கல்லாத நிலைக்கே(relapse) போய்விடுவோம்.நான் ராணுவத்தில் பணியாற்றியபோது இந்தி பேசவும் கொஞ்சம் எழுதவும் கற்றுக்கொண்டேன்.அங்கிருந்து திரும்பி வந்துவிட்ட பிறகு எல்லாம் மறந்து போச்சு.இப்போது யாராவது பேசினால் புரியும் அவ்வளவுதான் என்கிற நிலைக்கு வந்து விட்டேன்.தமிழகத்தில் அறிவொளி இயக்கத்தில் எழுத்தறிவும் எண்ணறிவும் பெற்ற பல லட்சம் பேரின் நிலை இன்று இதுதான்.தொடர்கல்விக்குப் பிறகு வளர்கல்வி என்று ஒரு திட்டத்தை அரசு நடத்தி வருகிறது.ஆனால் அதெல்லாம் ஒரு மக்கள் இயக்கமாக இல்லாமல் அரசுத்திட்டங்களில் ஒன்றாக நடக்கிறது.ஆகவே பெரிய பலன் கிட்டவில்லை.
ஒரு கிராமம் என்றால் அந்த கிராமமே எழுத்தறிவைக் கொண்டாடிக் கற்கும் போதுதான் எல்லோருக்கும் ஆர்வமும் எழுத்தறிவு முக்கியம் என்கிற உணர்வும் வரும்.பல கிராமங்களில் அறிவொளிக்காலத்தில் நாங்கள் எதிர்கொண்ட ஒரு கேள்வி “ எங்க ஊர்லே படிச்சவுங்க எத்தனை பேர் இருக்காங்க.. அவங்க கையிலே புத்தகம் எடுத்து நாங்க பார்த்ததே இல்லை ..எங்களை மட்டும் தினமும்படி படி என்கிறீர்களே...”
வேறு எதையும் கொண்டாடுவதை விட எழுத்தறிவை மட்டும் எல்லோரும் கொண்டாடினால்தான் அந்த நாடு படித்த நாடாக மாற முடியும். அது அரசுத்திட்டமாக மட்டுமே இருக்கும் வரை ஒரு மண்ணும் நடக்காது.லத்தீன் அமெரிக்க நாடுகளில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கான விதையை 20-30 ஆண்டுகளுக்கு முன்னால் அப்பகுதிகளில் பாவ்லோ ப்ரையர் போன்ற மிகச்சிறந்த கல்வியாளர்களின் தலைமையில் நடந்த எழுத்தறிவு இயக்கமே ஊன்றியது.விமர்சன விழிப்புணர்வுக்கான எழுத்தறிவை அவர்கள் ஊட்டினார்கள்.இயற்கையின் படைப்பு மட்டுமல்ல மனிதன் -இயற்கையை மாற்றும் வல்லமை படைத்தவன் என்கிற உணர்வை ஊட்டுவதே கல்வி.
நம்முடைய கல்விமுறையானது தேர்வுகள் ,கட்டாயமான வீட்டுப்பாடங்கள் ,உயர்ந்த மதிப்பெண் பெற்றால் உயர்ந்த கல்வி , நிறைய காசு இருந்தால் நல்ல தரமான கல்வி என்று பலவிதமான கேடுகள்,குழப்பங்களால் பின்னப்பட்டுக் கிடக்கிறது.இந்திய தண்டனைச் சட்டத்தையும் இந்தியக் கல்விச்சட்டத்தையும் ஒரே நேரத்தில் ஒரே ஆள்தான் (மெக்காலே) எழுதினான் என்பதிலிருந்தே நமது கல்வி என்பது குழந்தைகளுக்குத் தண்டனையாக இருப்பதன் காரணத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.நமது கல்வி முறை கற்றவர்களையும் கற்பவர்களையும் கற்பிப்பவரையும் கல்லாதோரையும் ஒரு மௌனக்கலாச்சாரத்தில் அமிழ்த்தி வைத்துள்ளது.அந்த மௌனம் உடைபடும் விதமாக நாம் எழுத்தறிவை எப்போதும் வீடுகளிலும் ஊர்களிலும் குழந்தைகளோடும் மக்களோடும் விழாக்கோலமாகக் கொண்டாட வேண்டும்.வீடுகளில் கல்வி என்பது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான போராட்டம் என்பதாக உணரப்படும் நிலையை மாற்றி அதைக் கொண்டாட்டமாக மாற்ற வேண்டும்.கொண்டாட்ட மனநிலைதான் எழுத்தறிவுக்கேற்ற தட்பவெப்பமாகும்.
2 comments:
Assuming now the learning trend is changing from village to village and every where. I am facing new problem making difference between Kanada and Telugu letters and ofcourse picture to me for the hindi letters.
thanks
muthu, bangalore.
கல்வி கொண்டாட்டமாய்
மாறுவதற்கான சாத்தியங்கள்
ஏதாவது இங்கு உள்ளதா?
மெக்காலே முக்காலே வாசி
கெடுத்தார். மீதி கால் வாசியை
கல்வியாளர்கள் கெடுத்து
விட்டார்கள். பாவம் நம்
குழந்தைகள்.
Post a Comment