Thursday, June 4, 2009

துப்பாக்கிகள் அடங்கியிருக்கும் இப்போதேனும்...

srilanka2 என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் என்ன பேசிக்கொண்டிருந்தாலும் மனதின் பின் திரையில் சத்தமில்லாத ஒரு மௌனப்படமாக இலங்கையில் தமிழ் மக்கள் கதறியழுவதும் பெண்கள் இருகரம் விரித்து வானத்தை நோக்கிக் கதறிப் பேசுவதும் லாரிகளிலிலிருந்து அன்று கொன்ற ராணுவத்தினர் இன்று நீட்டும் உணவுக்காகக் கைகள் ஏந்தி மக்கள் வெறித்து நிற்பதும் என ஒரு காட்சி சதா ஓடிக்கொண்டே இருக்கிறது.குற்ற உணர்வும் வலியும் இயலாமையின் துக்கமும் மாறி மாறி மனதில் அலையடித்துக்கொண்டே இருக்கிறது. சுனாமியில் கணவன்,குழந்தைகள் என எல்லோரையும் இழந்துவிட்ட அந்த லட்சுமி அம்மாள் அன்று கடற்கரையில் நின்று கடலோடு உரத்துப் பேசிக்கொண்டிருந்த காட்சியும் கூடவே அலையடிக்கிறது.

எல்லோராலும் கைவிடப்பட்ட (உன்னாலும் கூடத்தான் என்று உள்ளிருந்து குரல் கேட்கிறது) ஒரு சமூகம் அங்கே முகாம்களில் (அது என்ன லட்சணத்தில் இருக்கிறதோ) அலைபாய்ந்து கொண்டும் அடைபட்டும் கிடக்கிறது.இங்கே தமிழகத்திலேயே அகதிகள் முகாம்கள் கோழிகள் அடைக்கப்பட்டிருந்த ஷெட் களில்தான் முதலில் அமைக்கப்பட்டன என்பது நினைவுக்கு வருகிறது.ஆண்டுகள் பலவாக செருப்பில்லாத கால்களுடன் குரைக்கும் துப்பாக்கிகளுக்கு இடையே ஓடி ஓடித் தப்பிப்பிழைத்த பெண்களின் பாதங்களைச்சுற்றிலும் படிந்திருந்த வெள்ளை நிற வெடிப்புகளை படத்தில் பார்த்த கணத்திலிருந்து அக்காட்சி நின்று என் நெஞ்சை அறுக்கிறது. எங்கெல்லாம் ஓடி ஒளிந்து திரிந்து எவரையெல்லாம் இழந்து வந்து நிற்கின்றனர் என் பெண்கள் என்று நினைக்க மனம் நடுங்குகிறது.

புலிகளின் மீதான விமர்சனம் என்பதும் என் மனதை என் மௌனத்தை நான் சமாதானப்படுத்திக்கொள்ளும் திரையாகவும் பயன்பட்டது- அவர்கள் மீது இப்போதும் விமர்சனம் இருக்கிறது என்றபோதும். தலைவர் இன்னும் நலமாக இருக்கிறார் பத்மநாபா விலை போய்விட்டார் என்று வரும் குறுஞ்செய்திகளுக்குப் பின்னால் துடிக்கிற மனதின் அச்சத்தை நான் உணர்கிறேன்.மாறியுள்ள சர்வதேச நிலைமைகளை கணக்கில் கொண்டு போர்த்தந்திரங்களை வகுக்கத்தெரியாதவர்களா 33 ஆண்டுகாலம் ஆயுதம் ஏந்தி நின்றார்கள் என்கிற வியப்பும் அதன் காரணமாகவும் நம் மக்கள் கூடுதல் அழிவைச் சந்திக்க நேரிட்டதே என்கிற பெருமூச்சும் ஒருசேர ஏற்படுகிறது.

பேச்சுவார்த்தைக்குக்கூட உருப்படியான ஆட்கள் அங்கே இருக்கிறார்களா என்கிற கவலை ஆட்கொள்கிறது.சர்வதேச சமூகத்தின் தலையீட்டை இப்போதேனும் சக்தி மிக்க முறையில் கொண்டுவந்தால் பட்டினியாலும் சுகாதாரக் கேடுகளாலும் எஞ்சியுள்ள மக்கள் சாவதை தடுக்கலாம்.திருவனந்தபுரத்தில் சர்வதேச அளவில் இலங்கை பற்றிப் பேச ஒரு சிறிய சந்திப்பு ஏற்பாடாவதாகக் கேள்விப்படுகிறேன். சென்னையில் அத்தகைய ஒரு மாநாட்டை இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக எண்ணம் கொண்டோர் உடனடியாக ஏற்பாடு செய்து சர்வதேசக் கண்காணிப்பில் தமிழருக்கான உரிமைகள் மீட்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனதில் ஒரு தவிப்பு ஏற்படுகிறது.

பாசிச இலங்கை அரசை ஒரு அப்பாவி மூன்றாம் உலக அரசாக சர்வதேச சமூகம் பார்க்கிற பார்வையில் மாற்றம் வந்தால் மட்டுமே இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் பேசப்படும்.தமிழருக்கான அரசியல் தீர்வு அர்த்தமுள்ளதாக அமையும். இந்திய முதலாளித்துவத்தின் சந்தைத் தேவைகளே இலங்கை குறித்த இந்திய அரசின் கொள்கையைத் தீர்மானிப்பதில் பிரதான பங்கு வகிப்பதை தோலுறித்து மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவதன் மூலம் இந்திய அரசை சரியான நிலைபாட்டுக்குக் கொண்டுவரப் போராட வேண்டும்.

புலிகளே அழிக்கப்பட்ட பிறகு இனி என்ன பேசி என்ன செய்ய என்கிர மனநிலைக்குச் சென்றுவிடாமல் தமிழகத்தில் உள்ள புலிகள் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஒரே குரலில் உடனடியாகப் பேசத்துவங்க வேண்டும்.இன்றுவரை இலங்கையில் ஆட்சியிலிருந்த எந்த அரசும் தமிழ் மக்களுக்காக உருப்படியான எந்த அரசியல் நடவடிக்கையும் ஒரு திட்டமாகக் கூட முன்வைக்கவில்லை என்பதைக் கணக்கில் கொண்டு நாம் குரல் எழுப்ப வேண்டும்.

வானத்தை நோக்கிக் கைகள் விரித்துக் கதறிப்பேசும் அந்தத் தாய்மார்களின் குரல் துப்பாக்கிகள் மௌனமாகிவிட்ட இப்போதேனும் நம் செவிகளில் விழ வேண்டும். நிலைபாடுகளால் அணைகட்டி வைக்கப்பட்டிருந்த கண்ணீர் இப்போதேனும் கன்னங்களில் வழியட்டும். முன்னெப்போதையும் விட வலுவான இயக்கங்கள் இலங்கைத் தமிழ் மக்களுக்காக இப்போது உடனடியாகத் தேவை.தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் அங்கே ஒரு குழந்தை ஒரு தாய்......

11 comments:

Unknown said...

உங்கள் தசையின் ஆட்டத்தை என்னால் உணர முடிகிறது.எனக்கும் என் போன்ற பலருக்கும் இதே தவிப்பு உள்ளது.ஆனால் வெளிப்படுத்தும் விதம்,இடம்,என பல காரணிகள்(அன்றாட வாழ்வின் யதார்த்தங்கள் உட்பட)தடையாய் உள்ளது.இங்கு தனித்தனியாக பிரிந்து துடித்துக் கொண்டு கிடக்கும் மனித உணர்வுகளை ஒன்றுபடுத்தி,ஒருமித்த ஒத்த கருத்தை தொகுத்து அதை உலக சமுகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வது(அரசியல் குறுக்கீடுகளுக்கு இடையில்)என்பது அவ்வளவு எளிதானதல்ல.இதற்கு கட்சி பேதமற்ற ஒரு வெகுஜன அமைப்பை(இப்போது இருக்கும் வெகுஜன அமைப்புகளின் உதவியோடு)ஏற்படுத்த வேண்டும்.அந்த அமைப்பில் உள்ள மருத்துவர்கள்,பத்திரிக்கையாளர்கள்,கலைத்துறை பிரபலங்கள்,அரசு உயர் அதிகாரிகள், ஊழியர்கள்,(முடிந்தால் பிற மாநில பிரதிநிதிகள்)மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் என பலதரப்பட்ட மக்கள் அடங்கிய ஒரு குழுவை ஏற்படுத்தி அதை இலங்கைக்கு அனுப்பி அங்கு அகதிகளாக தங்கவைக்கப் பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்கள் நிலவரங்களை தெரிந்து கொண்டு அதை உலக சமூகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.பின் அவர்களூக்கான நிவாரனங்களையும்,கோரிக்கைகளையும் சேர்த்து நமது அரசின் அனுமதியோடு இலங்கையிடம் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.(ஆம்! நாம் அவர்கள் பிரதி நிதிகளாக மாற வேண்டும்)
எல்லாத்தையும் விட முக்கியம் பல ஆண்டுகளாக நமது நாட்டில் அகதிகளாக வாழும் அந்த ஆதரவற்ற மனிதர்களுக்கு நாம் உடனடியாக மறுவாழ்விற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இங்கு உடனடி தேவை அவர்களூக்கான பிரதி நிதித்துவமே(புலிகள் தமிழர்களிடம் எதிர்பார்பதும் இதுவே)
இவையெல்லாம் எளிதில் சாத்தியமல்ல என்பது தெரியும் ஆனால் இவைகளை தவிர்த்து விட்டு வேறு எது செய்தாலும் அது விழலுக்கு இறைத்த நீரேயாகும்.

ஆ.ஞானசேகரன் said...

//வகுக்கத்தெரியாதவர்களா 33 ஆண்டுகாலம் ஆயுதம் ஏந்தி நின்றார்கள் என்கிற வியப்பும் அதன் காரணமாகவும் நம் மக்கள் கூடுதல் அழிவைச் சந்திக்க நேரிட்டதே என்கிற பெருமூச்சும் ஒருசேர ஏற்படுகிறது//

ஆமங்க

ஆ.ஞானசேகரன் said...

//புலிகளே அழிக்கப்பட்ட பிறகு இனி என்ன பேசி என்ன செய்ய என்கிர மனநிலைக்குச் சென்றுவிடாமல் தமிழகத்தில் உள்ள புலிகள் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஒரே குரலில் உடனடியாகப் பேசத்துவங்க வேண்டும்.இன்றுவரை இலங்கையில் ஆட்சியிலிருந்த எந்த அரசும் தமிழ் மக்களுக்காக உருப்படியான எந்த அரசியல் நடவடிக்கையும் ஒரு திட்டமாகக் கூட முன்வைக்கவில்லை என்பதைக் கணக்கில் கொண்டு நாம் குரல் எழுப்ப வேண்டும்.///

என் ஆசையும் இதேதான்

venu's pathivukal said...

அன்பு தமிழ்

மிக அதிகமாகப் பேசப்படும் ஒரு துயரம் அது.
காட்சிகளுக்குக் குறைவில்லை. வேதனை முகங்களின் சோகங்களுக்கும் கவிதை வரிகள் கிடைக்காது.
ஆனாலும் தீர்வுக்கு கதியற்று மிஞ்சுகின்றன
அபலைகளின் கூக்குரல்களும்,
மழலைகளின் ஓலங்களும்.
அரசியல் பேசுங்கள் ஓய்விருப்பவர்கள்.
விளக்கம் கொடுங்கள்
விஷயம் அறிந்தவர்கள்.
வாழ்வு தாருங்கள் இதயம் உள்ளவர்கள்.........
என்பதாக இருக்கலாம் அவர்களின் ஏக்கங்கள்.

எஸ் வி வேணுகோபாலன்

Anonymous said...

ATHIRCHIYILIRUNDHU INNUM MEELAVILLAI..AAYINUM THODARNDHU KURAL KODUPPOM
RAVI...ORATHANADU

ச.தமிழ்ச்செல்வன் said...

ys.ravi

கே.பாலமுருகன் said...

//வானத்தை நோக்கிக் கைகள் விரித்துக் கதறிப்பேசும் அந்தத் தாய்மார்களின் குரல் துப்பாக்கிகள் மௌனமாகிவிட்ட இப்போதேனும் நம் செவிகளில் விழ வேண்டும்.//

எத்தனை தாய்மார்களின் குரல்கள் இன்னும் இலங்கை மண்ணில் சேகரிக்கப்பட்டாமல் கவனிக்கப்படாமல் காற்றில் தனது மண்ணை கவ்விப்பிடித்துக் கொண்டு தத்தளித்துக் கொன்டிருக்கிறதோ. பதிவு சிந்திக்க வைக்கிறது

Anonymous said...

ilangai thamizh makkalukka ungalaippol ingu thutippavarkal eraalam.aanaal eththakaiya thisaivazhi enpathil inru kuzhambippoi ullaarkal.ungalin unarvikal oru nalla thisaivazhiyai nookkis sellattum.

ஆல் இன் ஆல் அழகுராஜா said...

சி.பி.எம்ல் ஒரு ”மறத்”தமிழன் மிஸ்டர் ச.தமிழ்ச்செல்வன்

யுவன் பிரபாகரன் said...

இன்று தான் உள்ளம் கிடுகிடுக்க வைக்கும், இரத்தம் கொதிக்க வைக்கும் இந்த ஆய்வு கட்டுரை படிக்க கிடைத்தது...அப்படியே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தங்கபாலுவை இலக்கிய வடிவில் எழுத சொன்னால் எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது..வாழ்த்துகள்.....இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கிறேன்....


redirect to காலச்சுவடு,உயிர்மை
இன்னும் தமிழகம் எங்கும் பரவி இருக்கும் 10-12 பேர் வரை படிக்கும் சிற்றிதழ்களுக்கும்....

அ.பிரபாகரன் said...

சும்மா நீலிக்கண்ணீர் வடிக்காதீங்க தமிழ்செல்வன் சார். நானும் ஈழத்தமிழர்களுக்காக எழுதியிருக்கேன்பார் என்று தேவைப்படும்போது சொல்லிக்காண்பிப்பதற்குதான் இந்த கட்டுரை பயன்படும்.