Thursday, March 12, 2009

தெருமுனை

koozh 

ச.தமிழ்ச்செல்வன் என்பது எனக்கு அப்பா அம்மா வைத்த பெயர் என்று சொல்லும்போதே அப்போது என் அம்மாவிடம் அப்பா கருத்துக்கேட்டிருப்பாரா என்கிற சந்தேகமும் கூடவே வருகிறது.ஆனால் என் அம்மாவும் ஒரு கலை இலக்கியவாதியான மதுரகவி பாஸ்கரதாசின் மகள் என்பதால் ஒருவேளை கலந்து பேசிக்கூட ஜனநாயகமாக முடிவெடுத்திருக்க வாய்ப்புண்டு.அம்மா இப்போது இல்லை.இலக்கிய ஈடுபாட்டின் காரணமாகவே என் அப்பா பாஸ்கரதாஸ் மகளைப் பெண் கேட்டாராம்.

1954இல் நான் பிறந்த காலம் திராவிட இயக்கம் அதன் அழகுகளோடும் அர்த்தத்தோடும் இயங்கிக்கொண்டிருந்த காலம்.என் அப்பாவும் அதில் ஈடுபாடு கொண்ட இளைஞராக இருந்தாராம்.திராவிட இயக்கம் தமிழை ஒரு அணி திரட்டும் சாதனமாக சக்தியுடன் பயன்படுத்திக்கொண்டிருந்த காலம் அது.ஆகவே என் பெயர் தமிழ்ச்செல்வன் ஆனது.

திராவிடப்பாரம்பரியம் என் பெயரோடு இருப்பதாலோ என்னவோ இன்றைக்கும் தினசரி மைக்கோடு வாழும் கதி எனக்கு வாய்த்திருக்கிறது.மைக்கும் திராவிட இயக்கமும் பிரிக்க முடியாதபடி பின்னிப்பிணைந்து கிடந்தது வரலாறு அல்லவா?வாரத்தில் நாலு நாளாவது தமிழகத்தின் ஏதாவது ஒரு வீதியில் மைக் முன் நின்று ஏதேனும் ஒரு உரை ( வரவேற்புரை, வாழ்த்துரை,நன்றியுரை,அறிமுக உரை,சிறப்புரை,கருத்துரை,திறப்பு உரை key note address என்பதை உண்மையில் திறப்புக் குறிப்பு உரை என்றுதான் சொல்ல வேண்டும்.-எத்தனை எத்தனை உரைகளடா) ஆற்றும் ஓர் அன்றாட வாழ்வு எனக்கு வாய்த்திருக்கிறது.

30 ஆண்டுகளாக சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று ஜம்பமாக அறிமுகம் செய்து கொள்ள ஆசைப்பட்டாலும் எத்தனை கதை என்று எண்ணிப்பார்த்தால் 32 கதைதான் தேறுகிறபடியால் அதைச்சொல்லிக்கொள்வதில்லை.அந்த 32இல் ஒரு கதையான வெயிலோடு போய் கதையை இயக்குநர் சசி ‘பூ என்ற திரைப்படமாகத் தயாரித்து வெளியிட இப்போது பூ கதாசிரியர் என்றும் மூலக்கதையாசிரியர் என்றும் (உண்மையில் எனக்கு மூலப் பிரச்னை அவ்வப்போது உண்டு என்பதால் )அறிமுகப்படுத்தப்படும்போது கொஞ்சம் நகட்டி உட்கார்வது தன்னியல்பாக நடக்கும்.

பேசுவது எழுவதில் எதையும் மறைப்பது தப்பு என்று சின்ன வயதிலேயே தலையில் ஏறி விட்டதால் என்னத்தையும் எழுதி அவ்வப்போது கொஞ்சம் பேச்சு வாங்குவதும் உண்டு.செல்போன் வந்த புதிதில் தேவையோ இல்லையோ எல்லோரும் செல் வாங்கியது போல blog என்கிற இந்த அயிட்டம் வந்த பிறகு ஒரு எழுத்தாளனாக இருந்துட்டு இப்படி blog ஆரம்பிக்காம இருக்கலாகுமா என்று அறிந்தவர்கள் கேட்க இந்தத் தமிழ்வீதியில் நின்று உங்களோடு பேசிக்கொண்டிருக்கலாச்சு.

தெருவும் தெருப்புழுதியும் எனக்கு உலகத்திலேயே ரொம்பப் பிடித்தமானவை.உலகத்தின் மாற்றங்கள் எல்லாம் தெருவில்தான் நடந்தது.தெருவில் ஒளிவு மறைவு இருக்க வாய்ப்பில்லை.அடைத்துக்கொள்ளக் கதவில்லை.தெருமறிச்சான்கள் கட்டப்பட்டாலும் அவை தகர்க்கவும் படுகின்றன.தெருவில் மாற்றங்களைக் கொண்டுவருபவர்களாக எப்போதும் புழுதி படிந்த அந்த உழைக்கும் மனிதர்கள்தான் இருந்துள்ளார்கள்.

ஆகவே.. என் இனிய blog சமூகமே இங்கேயும் கொஞ்சம் தெருப்புழுதியைக் கொண்டுவர முயற்சிப்போம் என்று கூறி தமிழ்வீதிக்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.நன்றி.வணக்கம்.

39 comments:

மாதவராஜ் said...

வலையுலகம் உங்களை வாழ்த்தி வரவேற்கிறது!

Anonymous said...

varuga varuga.... ungal eluththukalai vaasikka aarvamaaga ullen

Anonymous said...

வருக வருக தோழரே!!

//தெருப்புழுதியைக் கொண்டுவர முயற்சிப்போம் //..கண்டிப்பாக

தோழமையுடன்

முகமது பாருக்

யாத்ரா said...

சார் உங்கள் மேல் எனக்கு நிரம்ப மரியாதை உண்டு, உங்களை வாசித்திருக்கிறேன், மாதவராஜ் அவர்களால் தங்கள் பதிவின் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி

உண்மைத்தமிழன் said...

வருக.. வருக.. வருக..

நல்கூறும் தமிழ் வலையுலகம் தமிழகத்தின் மிக முக்கிய எழுத்தாளர் ஒருவரைத் தன்னகத்தே சுவீகரித்துக் கொள்வதில் நிச்சயம் பெருமையடைகிறது.

உங்களுடைய படைப்புகளும், ஆக்கங்களும் இன்னும் பல நூறு தமிழர்களை வலையுலகத்திற்குள் கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை..

அன்புடன்
உண்மைத்தமிழன்

ச.முத்துவேல் said...

வருக வருக!(என்ன கொடுமை சார். நான் போய் உங்களக் கூப்பிடறது). எங்களுக்கெல்லம் வழிகாட்ட, நிறைய எழுதணும். வருகைக்கு நன்றி.

இப்னு ஹம்துன் said...

வருக வருக
தங்களின் சிந்தனைகளை இங்கேயும் தருக.

Thamira said...

தமிழ்ச்செல்வன் போன்றோரெல்லாம் பதிவர் என்றால் அப்புறம் நான் என்னை எப்படி சொல்லிக்கொள்வது? மாதவராஜை என்ன பண்ணினால் தகும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்..

பிச்சைப்பாத்திரம் said...

அன்புள்ள தமிழச்செல்வன்,

இணைய உலகத்திற்கு வருக!. உங்களின் எழுத்துக்கள் ஒருபுறமிருக்கட்டும். இலக்கியக் கூட்டங்களில் உங்களின் யதார்த்தமான அற்புதமான மேடைப் பேச்சைக் கேட்டிருக்கிறேன். ஆண்களும் சமையல் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற உங்களின் கருத்தாக்கம் நியாயமானது. தொடர்ந்து எழுதுங்கள்.

எல்லா இடங்களைப் போலவே இணையத்திலும் சர்ச்சைகளும் அரசியலும் அவதூறுகளை அள்ளி வீசுதலும் நடைபெறும். அவற்றை ஒதுக்கி விட்டு தொடர்ந்து எழுதுங்கள்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

வருக வலைப்பதிவுலகிற்கு வருக.உங்கள் மேடை உரைகளையும்் வலைப்பதிவின் மூலம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணம் உண்டா?

Boston Bala said...

வருக!

தொடர்ச்சியாக உங்கள் பயணங்களில் உடன் அழைத்துச் செல்லவும் விடாது வலைப்பதியவும் வேண்டுகிறேன்

மதுமிதா said...

வலையுலகுக்கு நல்வரவு தோழர். கொண்டு வந்து சேர்த்த மாதவராஜுக்கு நன்றி.

hariharan said...

வருக தோழரே,

பூ திரைப்படம் மிக அருமை.. அதில் யாரும் நடித்த மாதிரி தெரியவில்லை, வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்.

வாழ்த்துக்கள்..

ஆதவா said...

தமிழகத்தில் மசாலா குப்பைகளுக்கு நடுவே ஒரு நல்மாணிக்கமாய் வெளிவந்த பூ கதை எழுத்தாளரே வருக...

ஒரு ரசிகனாக, (மன்னிக்கவும், இதுவரை தங்களுடைய எப்படைப்பும் நான் வாசித்திருக்கவில்லை) ஒரு தரமான படைப்புகளுக்கு ஏங்கும் வாசகனாக உங்களை வலையுலகிற்கு வரவேற்கிறேன்..

எழுத்தாளர்கள் விதியை எழுதுவதில்லை
ஒருவேளை எழுத்துக்கள் எழுதலாம்...

அன்புடன்
ஆதவா

நிலாரசிகன் said...

வருக வருக தமிழ் தருக.

மணல்வீடு விழா முடிந்த பின் நீங்கள் நான் விழியன் மூன்று பேரும் சேலம் திரும்பியது உங்களுக்கு நினைவிருக்கும்.

அந்த இனிமையான சந்திப்பிற்கு பிறகுதான் உங்களது சிறுகதை தொகுப்பை வாசித்தேன்.

நம் வட்டார மொழியை இவ்வளவு நுணுக்கமாக உங்களால் மட்டுமே எழுத முடிந்திருக்கிறது.

வாழ்த்துகள்,
நிலாரசிகன்.

Deepa said...

//முத்துவேல்: வருக வருக!(என்ன கொடுமை சார். நான் போய் உங்களக் கூப்பிடறது). எங்களுக்கெல்லம் வழிகாட்ட, நிறைய எழுதணும். வருகைக்கு நன்றி.//

வழிமொழிகிறேன்! த‌ங்களுக்கும் த‌ங்களை வரவழைத்த திரு. மாதவராஜ் அவர்களுக்கும் நன்றி!

selventhiran said...

கோவைப் புத்தகத் திருவிழாவின் அன்றைய நிகழ்ச்சிக்கு சற்று தாமதமாகத்தான் செல்ல முடிந்தது. மேடையில் ஒருவர் முழங்கிக்கொண்டிருந்தார். மைக்கின் முன்னால் ஒரு திமிரான உடல் மொழியுடன் ஆணவமான நடையில் ஒருவர் முழங்கிக்கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்தவரிடம் 'யார் சார் இவர்?' என்றேன். 'யாருன்னு தெரியல... ஆனா தானாமுனா ஆளுன்னு தெரியுது' என்றார் அவர்.

பேச்சினூடாக 'ஆண்கள் சமைத்தல் அதனினும் இனிது', 'அரசியல் எனக்குப் பிடிக்கும்' போன்ற தலைப்புகளில் புத்தகம் எழுதி இருக்கிறார் என்பதை அறிய முடிந்தது. சரிதான் எவனோ சலம்பல் எழுத்தாளன் என்று ஏகமனதாக முடிவெடுத்து இடத்தைக் காலி செய்தேன்.

அரங்கில் வாங்கிய 'உயிர்மை' இதழில் அந்த எழுத்தாளரின் பத்தி இருந்தது. எழுத்து வடிவில் எது இருந்தாலும் வாசிக்கும் வழக்கம் இருந்ததால் அதையும் படித்தேன். பரவாயில்லை... பேச்சை விட எழுத்து நன்றாகத்தான் இருக்கிறது என நினைத்துக்கொண்டேன்.


அடுத்தடுத்த மாதங்களில் நான் தவறாது படிக்கும் பத்திகளில் ஒன்றாகிவிட்டது. அதிலும் 'எழுத்தைப் பின் தொடர்தல்' என்ற கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தமானதாகவும் இணக்கமானதாகவும் இருந்தது. பிறகு, ச. தமிழ்செல்வன் என்ற பெயர் என் அபிமான எழுத்தாளர்களின் பெயர்களுள் ஒன்றானது.

பின்னொருநாள் எழுத்தாளர் பாமரனைச் சந்திக்கப் போயிருந்தேன். அவர் ஒரு ஆஜானுபாகு இளைஞனைக் காட்டி 'இவரு யாருன்னு' தெரியுதா என்றார். நான் முகத்தைப் பார்த்துவிட்டு 'அசப்பில் தமிழ்செல்வன் மாதிரி இருக்காருல்ல...' என்றேன். இது அவரது மகன் என்று பதில் வந்தது.

தமிழ்ச்செல்வன் என்றவுடன் இதெல்லாம் ஒன்றின் பின் ஒன்றாக நினைவுக்கு வருகிறது. இனி அவரது எழுத்துக்களை ஓசியிலும் படிக்கலாம். வாசகன் என்ற உரிமையை எடுத்துக்கொண்டு உரையாடலாம். ச. தமிழ்ச்செல்வனுக்கு பத்தொன்பது கேள்விகள்னு பகிரங்க பதிவு போடலாம். அணானியாய் வந்து அசிங்க பின்னூட்டங்கள் போட்டு விட்டு ஓடிவிடலாம். ஆஹா எத்தனை வசதிகள் இருக்கிறது.

எனக்கு நானே வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்கிறேன்.

vimalavidya said...

WELCOME TAMILSELVAN>>>YOU HAVE MANY HEARTS TO SHARE YOUR THOUGHTS AND OPINIONS>>WAITING FOR YOUR SHOWERS...
SELVAPRIYAN---CHALAKUDY

Thamiz Priyan said...

இனிய வலையுலக அனுபவத்திற்கு வாழ்த்துக்கள்!

நாமக்கல் சிபி said...

வலையுலகம் உங்களை வாழ்த்தி வரவேற்கிறது!

வலையுலகம் வாயிலாக உங்கள் அறிமுகம் கிடைத்திருக்கிறது! மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது!

Anonymous said...

’பேசாத பேச்செல்லாம்’ பேசியவர், எழுதாத எழுத்தெல்லா எழுத வாருங்கள் என வரவேற்கிறேன்.

ச.தமிழ்ச்செல்வன் said...

இவ்வளவு அன்பு நெஞ்சஙள் இருக்கும் இந்த வாலைத்தெருவுக்கு (எனக்கு எல்லாமே தெருதான் சார்களே மேடம்களே)ரொம்ப தாமதமாக வந்துவிட்டேன் என்கிற குற்ற உணர்வை எல்லோரும் ஏற்படுத்திவிட்டீர்கள் நன்றி

மனதாரப் பேசவே விருப்பம்.அரசியல் உட்பட வலிந்து எதையும் எழுதும் உத்தேசமில்லை

அன்புடன்

தமிழ்ச்செல்வன்

ஆ.ஞானசேகரன் said...

வாருங்கள் ஐயா! உங்களின் பகிர்வுகளை அன்புடன் எதிர்பார்க்கின்றோம்...

Anonymous said...

வரவேற்கிறேன். றோம்

சுப. முத்துக்குமார் said...

வாங்க சார்... நீங்களே இவ்வளவு லேட்டா வரலாமா? சரி வாங்க பேசுவோம்..

சிவக்குமரன் said...

செல்வேந்திரனின் லிங்க் மூலமாதான் வந்தேன் போக போகதான் தெரியும், அறிமுக உரை என்னவோ நல்லாத்தான் இருக்கு. வாங்கய்யா வாங்க, வந்து ஐக்கியமாகுங்க.. நல்?வரவு..

Anonymous said...

/உலகத்தின் மாற்றங்கள் எல்லாம் தெருவில்தான் நடந்தது.தெருவில் ஒளிவு மறைவு இருக்க வாய்ப்பில்லை.அடைத்துக்கொள்ளக் கதவில்லை.தெருமறிச்சான்கள் கட்டப்பட்டாலும் அவை தகர்க்கவும் படுகின்றன.தெருவில் மாற்றங்களைக் கொண்டுவருபவர்களாக எப்போதும் புழுதி படிந்த அந்த உழைக்கும் மனிதர்கள்தான் இருந்துள்ளார்கள்.\எத்தனை அர்த்தங்கள் கொண்ட சொற்கள்.புதைந்து கிடக்கும் உண்மைகளைப் புதையலாகத் தாருங்கள்.

ஜீவா said...

வருக.. வருக.. வருக..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உங்கள் எழுத்துகளைப் படித்திருக்கிறேன். மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

Gopalan Ramasubbu said...

உங்களை வலைப்பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதவேண்டுகிறேன்.

செல்வநாயகி said...

தமிழ்ச்செல்வன்,

உங்களை இங்கே காண்பது மகிழ்வான விடயம். பெண் விடுதலைக்கான பேச்சுக்களம் ஒன்றில் உங்களின் "ஆண்களுக்கான சமையல் குறிப்புகள்" ஐ முக்கியமான பிரதியாக முன்வைத்து உரையாடிய நினைவு வருகிறது. சுட்டியைத் தேடிப்பிடிக்க முடிந்தால் இங்கிடுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள் இங்கும்.

பிறகு இப்பதிவு குறித்து.......சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் நீதியை என்னவோ எல்லாச்சூழலுக்கும் பொருத்திப்பார்க்க முடியவில்லை என்னால்:)

நாம் வீதியில் இறங்கித் தெருவுக்கு வந்தால் ஒருசில நாய்களுடனா முடிந்துவிடப்போகிறது நம் பயணம்? வழியெங்கும் அங்கங்கிருந்தும் தலைநீட்டி எத்தனையோ நாய்கள் குரைக்கவே செய்கின்றன. பலநாய்களுக்குக் கல்லெறிதலெல்லாம் தேவையே இல்லாமல் வெறும் புறக்கணிப்பேகூடப் போதுமானதாகவும் இருக்கிறது. குரைக்கிற எல்லா நாய்களையும் எதிர்த்துக்கொண்டிருந்தால் பிறகு கல்லெறிதலே வாழ்வென்று சுருங்கிவிட நேருமே என்றும் கவலை பிறக்கிறது:))

நன்றி உங்களின் வலையுலக வரவிற்கு.

தமிழ்நதி said...

தமிழ்ச்செல்வன்,

உங்கள் 'நான் பேச விரும்புகிறேன்'தொகுப்பு என்னில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய புத்தகம். தன்னம்பிக்கையில் ஒரு துளி அது தந்ததென்றும் சொல்லலாம். 'பேசாத பேச்செல்லாம்'வாசித்து வைத்தபிறகும் அதில் வந்த மனிதர்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். 'பூ'வைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அண்மையில் பார்த்த சிறந்த திரைப்படம் அது. உங்களுக்கு அந்தக் கதையைத் திரைப்படமாக்கிய விதம் நிறைவைத் தந்திருக்குமென்று நம்புகிறேன். இந்த இணைய நீரோட்டத்திற்கு வந்துவிட்டீர்கள். மகிழ்ச்சி. நிறைய வேடிக்கைகள் நடக்கும்.:) உலகம் ஒரு பெட்டிக்குள் எப்படியெல்லாம் உருள்கிறது என்பதைப் பார்க்கும் வாய்ப்பு... இனி இதில்லாமல் வாழமுடியாது எங்களுக்கெல்லாம்.

நாமக்கல் சிபி said...

//இப்போது பூ கதாசிரியர் என்றும் மூலக்கதையாசிரியர் என்றும் (உண்மையில் எனக்கு மூலப் பிரச்னை அவ்வப்போது உண்டு என்பதால் )//

:)

நன்று!

விடுதலை said...

தோழர் அவர்களுக்கு உங்களுடைய வருகை என்பது எங்களுக்கு நன்மை தோழர் அவர்களுக்கு உங்களுடைய வருகை என்பது எங்களுக்கு நன்மை

Anonymous said...

அப்படியாண்ணே.. நீங்களும் ரவுடியாண்ணே..:)

விழியன் said...

வணக்கம்,

வருக வருக.

இன்றே உங்கள் வலைப்பக்கம் பற்றி அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி.

உங்கள் எழுத்தை இணையத்தில் காண்பதில் மகிழ்ச்சி.

விழியன்

ச.தமிழ்ச்செல்வன் said...

விழியனை என் தெருவுக்கு வரவேற்கிறேன்

ஆ.ஞானசேகரன் said...

மதிப்பிற்குறிய ஐயா, வணக்கம்! ஓர் மகிழ்ச்சியான செய்தி. என் வலைப்பக்கம் வந்து பாருங்கள்... உங்களின் வருகை என்னையும் மகிழச்செய்யும்.....
அம்மா அப்பாஅன்புடன் ஆ.ஞானசேகரன்

cheena (சீனா) said...

அன்பின் தமிழ்ச் செல்வன்

கேள்விப்பட்டிருக்கிறேன் - பார்த்ததில்லை -படித்ததில்லை - ஈடுபாடு இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறது - தொடர ஆர்வம்.

வலையுலகத்திற்கு வருக வருக என வரவேற்கிறேன். நண்ப்பர் மாதவராஜ் அழைத்து வந்தாரா - நன்று நன்று - நல்வாழ்த்துகள்