என்னுடைய தெருக்கள் என்று யோசிக்கும்போது முதலில் என்னைத்தாக்குவது எனது கிராமமான நென்மேனி மேட்டுப்பட்டியின் தெருக்கள்தாம்.
அது இப்போது விருதுநகர் மாவட்டத்தில் இருக்கிறது.அப்போது இராமநாதபுரத்தில் இருந்தது.ஒண்ணாம் வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்புவரை(அப்போதெல்லாம் 12 ஆம் வகுப்பு என்பது கிடையாது) அந்த ஊரின் தெருக்களில் அலைந்து கொண்டிருந்திருக்கிறேன்.எங்க ஊர்த்தெருக்கள் எனக்குக் கற்றுத்தந்த பாடங்கள் பல.முதல் பாடம். நாயைக்கண்டு பயந்து நாம் ஓடக்கூடாது என்பது.
எத்தனையோ நாய்கள் எங்க ஊரில் திரிந்தாலும் செல்லையா நாயக்கர் வீட்டு நாய்தான் இந்தப்பாடத்தை எனக்குக் கற்றுத்தந்த குருநாயர்.
அது ஒரு சாம்பல் வண்ணத்து நாய் –சாம்பல் நிறத்தொரு நாயிக்குட்டி என்று பாரதிபோல பாட முடியாதபடிக்கு ஒரு முரட்டு நாய்.
ஈரக்குலை நடுங்க(நம்முடைய ஈரக்குலைதான்) அது குரைக்கும் சத்தம் எப்பேர்க்கொந்த வீரனையும் கதிகலங்கச்செய்யும்.
ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த எனக்கு கனவெல்லாம் அந்த நாயைப்பற்றிய பயம்தான்.அதுக்குப் பேர் கிடையாது.கு.அழகிரிசாமியின் வெறும் நாயும் கிடையாது.எங்க ஊரிலேயே பணக்காரரான செல்லையா நாயக்கர் வீட்டு நாய்.ஆனால் அது சதா தெருவில்தான் சுற்றிக்கொண்டு திரியும்.அதனுடைய மெயின் டூட்டி எங்களை மாதிரி பையன்களை மிரட்டி அதில் ஒரு சந்தோசம் அடைவது மட்டும்தான்.அது நாய்க்கமார் வீட்டு நாய் என்பதால் நாய்க்கமார் தெருவில் மட்டுமே சுற்றிக்கொண்டிருக்கும்.மற்ற சாதித்தெருக்களுக்குள் நுழைவதில்லை.அந்த மட்டில் மற்ற 3 தெருக்ககள் war free zone களாக எங்களுக்குக் கிடைத்தன.ஆனால் பள்ளிக்கூடம் போக வேண்டுமானால் நாய்க்கமார் தெருவுக்குள் போயே ஆக வேண்டும். அதுகூடப்பரவாயில்லை பால் வாங்கவும் மோர் வாங்கவும் அதே செல்லையா நாயக்கர் வீட்டுக்கே போகச்சொல்லி வீட்டுப்பெரியவர்கள் நம்ம கையில் சொம்பைக் கொடுத்து அனுப்பி விடுவார்கள்.பெரியவர்களும் அந்த நாயைப்போல சிறுவர்களை இம்சித்து மகிழும் வர்க்கம்தானே எப்போதும்.
எங்க தாத்தா தலையாரியாக வேலைபார்த்துக்கொண்டு செல்லையா நாயக்கர் வீட்டுக் கிட்டங்கியில் கணக்கும் எழுதுவார்.அந்த உரிமையில் ஓசி மோர் வாங்க என்னை அனுப்பிவிடுவார்கள்.அந்த வீட்டுச் சின்னப் பையன் கூட சுப்பையா பேரன் வந்திருக்கான் என்று தாத்தாவைப் பேர் சொல்லிச் சொல்லுவான்.அதுக்காகவெல்லாம் கோபப்பட்டு மோர் வேண்டாம் என்று வந்துவிடக்கூடாது.தாத்தாவுக்கு மோர் அவசியம் என்று அத்தை சொல்லி அனுப்புவாள்.
இப்போது கோணங்கியாக அறியப்படும் என் இளைய தம்பி இளங்கோவனும் அப்போது என்னோடுதான் இருந்தான்.என்றாலும் அவன் இதுபோன்ற வீட்டு வேலையெல்லாம் செய்ய உடன்படுவதில்லை.அந்த வயசிலேயே அவனுக்கு மறுக்கத் தெரிந்திருந்தது.பாயில் படுத்து கால் மேல் கால் போட்டு ஆட்டியபடி பால் வாங்க மோர் வாங்க எல்லாம் நம்மளாலே போக முடியாது என்று அவன் சொல்வான்.எனக்கு இந்த வயசிலேயும் எதையும் மறுத்துத் தலையசைக்கத் தெரியாமல் எல்லாத்துக்கும் சரி சரி என்று தலையை ஆட்டிச் சீரழிந்து கொண்டிருக்கிறேன்.வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் நமக்குப் பிடிக்காததை உறுதியுடன் மறுக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.(இது ஒரு முக்கியமான பாடமாக - இலவச இணைப்பாகச் சொல்லிக்கொள்கிறேன்)சரி.அந்த சோகத்தை விடுங்க.
அந்த ஈன மோர் வாங்க ஆகவே நானேதான் போக வேண்டும்.பொதுவாக காலை 6 மணிக்கு அந்த வீட்டுக்குப் போனால் அந்த நாய் வெளியே ரவுண்ட்ஸ் போயிருக்கும். அப்போது போய் மோரை வாங்கிக்கொண்டு ஓடி வந்து விடுவேன்.என் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் திசையையும் அப்போது அந்த நாய்தான் தீர்மானித்துக் கொண்டிருந்தது.( எப்போதுமே நம் வாழ்வின் திசையை யாராவதுதானே தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்கள்) ஆகவே அந்த நாயின் சகல தினப்படி நடவடிக்கைகளும் எனக்கு அத்துபடியாக இருந்தது.நண்பர்களின் நடமாட்டத்தை விட எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதுதான் ரொம்ப முக்கியம்.
3ஆம் வகுப்பிலிருந்து அந்தக்கொடுமை தொடர்ந்து கொண்டிருந்தது.அதை நினைத்தால் இப்போது கூட கண்ணீர் வழிகிறது.காலமெல்லாம் ஏதாவது ஒரு நாய்க்குப் பயந்து வாழ வேண்டியிருக்கே என்பதுதான் இக்கண்ணீரின் சாரம் என்பது சொல்லத்தேவை இல்லை.
ஆனால் எல்லாக்கொடுமைகளுக்கும் ஒரு முடிவு உண்டல்லவா?அந்த நாளும் வந்தது.அன்று மோர் வாங்கிக்கொண்டு செல்லையா நாய்க்கர் வீட்டுப் படியைத் தாண்டிக் கொண்டிருந்தபோது நம்ம நாயார் ரவுண்ட்ஸ் முடித்து வந்துவிட்டார்.
என்னைக்கண்டதும் அவருக்கு மூக்கு விடைக்க வாய் விரிந்து பல்லெல்லாம் தெரிய ஆத்திரம் வந்து விட்டது.என் வீட்டுக்கே.. என் வீட்டுக்கே ..படியேறி வர்ற அளவுக்கு உனக்குத் துணிச்சல் வந்துட்டுதா.. அதன் மூளையில் ஓடிய இவ்வரிகளை நான் வாசித்துவிட்டேன். அடுத்த கணம் சொம்பைக் கீழே போட்டு விட்டு பிடித்தேன் ஓட்டம்.அது துரத்த நான் ஓட நான் ஓட அது துரத்த .. ஒரு இடத்தில் அது என்னை முந்திக்கொண்டு மறித்துவிட்டது.நான் நிலை தடுமாறி நிற்க அது என் தோள் பட்டையின் மேல் இரண்டு முன்னங்கால்களையும் போட்டு நாக்கை அகோரமாக தொங்க விட்டபடி என் மூஞ்சிக்கு நேராக கீசு கீசு என்று மூச்சிரைத்தது.நான் உயிரற்ற சடலமாகத்தான் நின்று கொண்டிருந்தேன்.அடுத்தது என் மூக்கைக் கடித்துத் துப்ப வேண்டிய வேலைதான் பாக்கி என்கிற தருணத்தில் எங்கிருந்தோ பறந்து வந்த கல் ஒன்று சரியாக நாயின் மூக்கில் தாக்கிக் கீழே விழுந்தது.
ஊளையிட்டபடி நாய் ஓடியது.கல் எறிந்த தம்பி கோணங்கி பயப்படாதண்ணே என்றபடி என்பக்கம் ஓடிவந்தான்.நான் பயம் அப்படியே உறைந்திருக்க ஏனோ அவனை அடிக்கத் துவங்கினேன்.
அவன் அடியை வாங்கிக்கொண்டான். சரி.விடுண்ணே.மோர்ச்செம்பை எங்கே என்று கேட்டான்.
பிறகு என்னையும் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு நாய்க்கர் வீட்டுக்கே போனான்.அங்கே நாய்க்கர் வீட்டம்மா சொம்பை எடுத்து வைத்திருந்தது.மீண்டும் மோர் ஊற்றிக் கொடுத்தது.இப்படியா ஒரு நாய்க்குப் பயப்படுவாக என்று சிரித்தது.சொம்பை வாங்கிக் கொண்டு என்னையும் கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு தம்பி தெருவுக்கு வந்தான்.
தெருவில் அந்த நாய் ஆத்திரத்தோடு எங்கள் வரவை எதிர்பார்த்து நின்றது.எனக்கு அழுகை வந்துவிட்டது.அது உர்ர்.. என்றதும் தம்பி பயப்படவில்லை.என்னிடம் திரும்பி பயப்படாதே இந்த சொம்பை மட்டும் கவனமாப் பிடிச்சிக்க என்று கொடுத்துவிட்டு ஓரடி முன்னால் போய் நாயிடம் என்னா.. என்று ஒரு பேச்சு வார்த்தைஅயித் துவக்கினான்..அது மீண்டும் உர்ர்.. என்றது.வாங்கின எறி போதலையா என்று சொன்னபடி குனிந்தான்.கீழே கல் எதுவும் இல்லை.ஆனாலும் நாய் அதே ஊளையுடன் ஓடிவிட்டது.இவ்வளவுதாண்ணே என்று என்னைப்பார்த்துச் சொன்னான்.
தெருவில் அன்று கிடைத்த இந்தப்பாடம் என் வாழ்நாள் முழுவதுக்குமான நாய் பயத்தைப் போக்கி விட்டது.
நீதி
குரைக்கிற நாயோ முட்ட வரும் மாடோ தூக்க வரும் கழுகோ எதுவானாலும் பயப்படாமல் நின்று முதலில் ஒரு பேச்சு வார்த்தை நடத்திப்பார்க்கலாம்.முடியாதபோது சரியான கல்லெடுத்து சரியாகக் குறிபார்த்துச் சரியான வேகத்தில் எறிந்துதான் ஆகவேண்டும்.அதற்கு யோசித்தால் நாய் குரைத்துக்கொண்டேதான் இருக்கும் நாம் ஓடிக்கொண்டேதான் இருப்போம்.
நன்றி . வணக்கம்.
பி.கு : வளவளன்னு நாலு பக்கமெல்லாம் எழுதினால் வலைத்தளத்தில் யாரும் படிக்க மாட்டாங்க என்று ஆசான் மாதவராஜ் சொல்லியிருந்தார்.ஆனால் இதைவிடச் சுருக்கமாகப் பேச எனக்கு வராது.வாசக அன்பர்கள் பொறுத்தருள வேண்டும்.
27 comments:
மகிழ்ச்சியாக இருக்கிறது.
உங்கள் எழுத்தை படிக்க மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்ததிற்காக நான் தான் நன்றி செல்ல வேண்டும்.
இந்த கட்டுரை சுவரஷ்யமாக இருந்தது. மிகவும் ரசித்து வாசித்தேன்.
தமிழ் வீதி தெருவிலிருந்து ஆரம்பமா.
"வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் நமக்குப் பிடிக்காததை உறுதியுடன் மறுக்கப் பழகிக்கொள்ள வேண்டும்"
பல விஷயங்களில் பிடிக்காவிட்டாலும் எதிர்க்க திராணி இல்லாமல் ஏற்றுக்கொள்கிறோம். கண்டிப்பாக மறுக்கப்பழகவேண்டும்.
அருமையான துவக்கம்.
உங்கள் எழுத்துக்களைப் பற்றி நண்பர்கள் மூலம் அறிந்துள்ளேன் (மிகவும் நல்ல அபிப்பராயம் தான் :-) ).
வலைப்பதிவு உலகத்திற்கு உங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன் :-)
nall kathai
appadiya konjam marxism pathiyum sollunga
thozamaiyudan
mani
//குரைக்கிற நாயோ முட்ட வரும் மாடோ தூக்க வரும் கழுகோ எதுவானாலும் பயப்படாமல் நின்று முதலில் ஒரு பேச்சு வார்த்தை நடத்திப்பார்க்கலாம்.முடியாதபோது சரியான கல்லெடுத்து சரியாகக் குறிபார்த்துச் சரியான வேகத்தில் எறிந்துதான் ஆகவேண்டும்.//
இவ்விரண்டுக்குமே மிகுந்த நிதானமும் சாமர்த்தியமும் வேண்டும். இல்லையா? அதனால் தான் ஓடுவதே எளிது என பெரும்பாலானோர் நினைத்து விடுகிறோம்.
நல்ல கதை, சிறந்த நீதி. அடுத்தடுத்த பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அப்ப்டியே உங்கள் "ஆண்களுக்கான சமையல் குறிப்புகளையும்" இங்கே வெளியிடுங்கள். அதன் முன்னுரையை மட்டுமாவது!
நல்லா எழுதுகின்றீர்கள்... பகடியாக சொல்வது படிக்க சுவாரஸ்யமாக இருக்கின்றது.
\\வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் நமக்குப் பிடிக்காததை உறுதியுடன் மறுக்கப் பழகிக்கொள்ள வேண்டும்\\
முற்றிலும் உண்மை, 15 வேலைகளை விட்டேன் சுயமரியதையின் நிமித்தம், தற்போது நிம்மதியாக சுயதொழில் புரிகிறேன்
//.( எப்போதுமே நம் வாழ்வின் திசையை யாராவதுதானே தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்கள்)//
சுயதொழில் என்பதை நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை, என் மீது செலுத்தப்பட்ட அதிகாரவர்க்கத்தால் தீர்மானிக்கப்பட்ட திசையிது,
“வளவளன்னு நாலு பக்கமெல்லாம் எழுதினால் வலைத்தளத்தில் யாரும் படிக்க மாட்டாங்க என்று ஆசான் மாதவராஜ் சொல்லியிருந்தார்.ஆனால் இதைவிடச் சுருக்கமாகப் பேச எனக்கு வராது“
நீங்கள் எழுதுங்கள், எல்லோரும் படிப்போம்.
ரொம்ப சந்தோஷமா இருக்கு.. தேடித்தேடி படிக்கக்கூடிய எழுத்துக்கள் இப்போ எங்க வீட்டு கணணில வருது அதுவும் கடிதம் போல எடுத்துப்படிக்கவேண்டிய வேலை மட்டுமே... நன்றி வேறென்ன சொல்ல தங்களுக்கும், மாதவராஜுக்கும்.....
// வளவளன்னு நாலு பக்கமெல்லாம் எழுதினால் வலைத்தளத்தில் யாரும் படிக்க மாட்டாங்க என்று ஆசான் மாதவராஜ் சொல்லியிருந்தார். //
நல்ல எழுத்துக்களென்றால் நாலென்ன, நாற்பது, நானூறு பக்கங்கள் கூட படிப்போம்.
ரொம்ப நாளைக்கப்புறம் நம்மூர்க்காரரிடம் நடந்து கொண்டே பேசுவது போல் இருக்கிறது உங்களது எழுத்துக்கள்.
தமிழ்!
//வளவளன்னு நாலு பக்கமெல்லாம் எழுதினால் வலைத்தளத்தில் யாரும் படிக்க மாட்டாங்க //
இதை நான் எனக்குச் சொல்லிக் கொண்டது. உங்களுக்கு அல்ல. எழுதித் தள்ளுங்கள்.
அது சரி.... அதென்ன ஆசான்! இதெல்லாம் ஓவரா இல்ல....
வலையில் உங்களைப் படிப்பது நிறைவாக இருக்கிறது.
"நாயைக்கண்டு பயந்து நாம் ஓடக்கூடாது என்பது." நாய்க்கு அப்பாலும் சிந்திக்க வேண்டியது
//.காலமெல்லாம் ஏதாவது ஒரு நாய்க்குப் பயந்து வாழ வேண்டியிருக்கே என்பதுதான் இக்கண்ணீரின் சாரம் என்பது சொல்லத்தேவை இல்லை// ஆயிரம் பேசினாலும் எதாற்த்தமான உண்மை... நான் எல்லா நாயையும்தான் சொல்கின்றேன்.... பயப்பட வேண்டாம், பயப்படுவதுபோல நடித்தும் வாழவேண்டியுள்ளது.... உங்கள் எழுத்துக்கள் பல சிந்தனைகளை தூண்டுகின்றது ஐயா.
தமிழ்ச்செல்வன்,
உங்களை இங்கே காண்பது மகிழ்வான விடயம். பெண் விடுதலைக்கான பேச்சுக்களம் ஒன்றில் உங்களின் "ஆண்களுக்கான சமையல் குறிப்புகள்" ஐ முக்கியமான பிரதியாக முன்வைத்து உரையாடிய நினைவு வருகிறது. சுட்டியைத் தேடிப்பிடிக்க முடிந்தால் இங்கிடுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள் இங்கும்.
பிறகு இப்பதிவு குறித்து.......சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் நீதியை என்னவோ எல்லாச்சூழலுக்கும் பொருத்திப்பார்க்க முடியவில்லை என்னால்:)
நாம் வீதியில் இறங்கித் தெருவுக்கு வந்தால் ஒருசில நாய்களுடனா முடிந்துவிடப்போகிறது நம் பயணம்? வழியெங்கும் அங்கங்கிருந்தும் தலைநீட்டி எத்தனையோ நாய்கள் குரைக்கவே செய்கின்றன. பலநாய்களுக்குக் கல்லெறிதலெல்லாம் தேவையே இல்லாமல் வெறும் புறக்கணிப்பேகூடப் போதுமானதாகவும் இருக்கிறது. குரைக்கிற எல்லா நாய்களையும் எதிர்த்துக்கொண்டிருந்தால் பிறகு கல்லெறிதலே வாழ்வென்று சுருங்கிவிட நேருமே என்றும் கவலை பிறக்கிறது:))
நன்றி உங்களின் வலையுலக வரவிற்கு.
மன்னிக்கவும் தமிழ்ச்செல்வன், இந்தப்பதிவில் போடவேண்டிய பின்னூட்டத்தை இன்னொரு பதிவில் போட்டுவிட்டேன் கவனக்குறைவில். எனவே அதை மீண்டும் இப்பதிவிலிட்டிருக்கிறேன்.
தமிழ் வீதியில் இறங்கி, தெரு வீதியில் நடக்க ஆரம்பித்துள்ள தமிழுக்கு எனது வாழ்த்துக்கள். ஐயோ, நாய் விஷயத்துல மிக முக்கியமான ரகசியம், "குலைக்குற நாய் கடிக்காதுன்னு" சொல்லுவாங்க. அதேபோலத்தாங்க, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, இராயபுரத்துல, ஸ்டான்லி மருத்துவமனைக்கு எதிரில் உள்ள ஒரு நண்பர் வீட்டுக்கு செல்லும் போது இரண்டு நாய்கள் எல்லைக்குள் நுழையும் போதே குலைக்க ஆரம்பித்தது. யாரோ ஒரு எதிரி உள்ளே நுழைந்துட்டான் என்று சிக்னல் கொடுத்து விட்டது. அப்புறம் பக்கத்துல, அக்கத்துல இருக்கறவங்க ஆய், ஊய் என்று துரத்த அந்த நாய்கள் ஒதுங்கிக் கொண்டது. பின்பு, நண்பர் வீட்டுக்கு சென்று பேசிவிட்டு மீண்டும் அந்த தெருவில் நடக்க ஆரம்பிக்கும் போதே அந்த நாய்கள் இருக்கிறதா என்று ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டேன். அதுல ஒரு நாய் மட்டும் தனியா இருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அது பக்கத்துலேயே போய்ட்டேன். அது ஒண்ணும் பண்ணல. ஆனா, என்னுடைய வருகைக்காக எங்கேயோ பதுங்கியிருந்து எதிர்பார்த்திருந்த அந்த குலைக்காத நாய் அப்படியே காலை பிடித்து விட்டது... அங்புறம் என்ன நாய் சுரம் தொற்றிக் கொண்டது. அப்புறம் குட்டி, குட்டி... நாய்கள் குலைக்க ஆரம்பித்தால்கூட அடடடா... உஷாராக இருக்க வேண்டும் என்ற பதைப்பு தொற்றிக் கொள்கிறது. அப்புறம் இந்த நாய்களைப் பற்றி பேசும் போது இன்னொரு சுவராஷ்யமான விஷயம் ஜாக் லண்டனின், "கானகத்தின் அழைப்புதான்" அதுல வர்ற்ற நாய்கள் நிஜத்தில் நம்மைச் சுற்றிச் சூழல்வதை நடைமுறையில் பார்க்க வேண்டும். அற்புதமான படைப்பு. நாய் மேய்க்கத் தெரியாதவர்கள் ஆற்றில் மூழ்கும் சோகம் இதயத்திலிருந்து அகலவில்லை... வாழ்த்துக்கள்!
அப்புறம் செல்வநாயகியின் பின்னூட்ட விஷயம் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டது. அவருக்கும் நாய் சுரமா என்றுத் தெரியவில்லை!
வணக்கம்
ம்ம்ம் நல்ல பதிவுதான்
ஆனா மறுக்க வேண்டும்....
இதுதான் சரியான பாடம்.
நன்றி
இராஜராஜன்
தமிழ்ச்செல்வன்,
இன்று காலை வலையில் தற்செயலாக தங்கள் பதிவு பார்க்கக் கிடைத்தது. ஒரே மூச்சில் இரண்டு பதிவுகளையும் படித்து முடித்தேன். படுகொலை செய்யப்பட்ட அல்லது போர் திண்ற என் கிராமத்தின் நினைவு என் மனதை இன்று அலைக்கழிக்கிறது
திருமாவளவன் (கனடா)
நல்ல எழுத்துக்களை படிக்கின்ற வாய்ப்பு வீடு தேடி வருகிறது.மிக்க மகிழ்ச்சி.உங்களை இங்கே அழைத்து வந்தவர்களுக்கு ஒரு முதல் வணக்கம்.
//குரைக்கிற நாயோ முட்ட வரும் மாடோ தூக்க வரும் கழுகோ எதுவானாலும் பயப்படாமல் நின்று முதலில் ஒரு பேச்சு வார்த்தை நடத்திப்பார்க்கலாம்.முடியாதபோது சரியான கல்லெடுத்து சரியாகக் குறிபார்த்துச் சரியான வேகத்தில் எறிந்துதான் ஆகவேண்டும்.அதற்கு யோசித்தால் நாய் குரைத்துக்கொண்டேதான் இருக்கும் நாம் ஓடிக்கொண்டேதான் இருப்போம்//
பல அர்த்தங்களை கொடுக்கிறது.பிரச்சினைகளை எதிர்கொள்ளும் முறையை எளிதாக சொல்லிவிட்டீர்கள்.
உங்களை வலைத்தளத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி. நல்ல பதிவு தமிழ்ச்செல்வன். கோணங்கி அண்ணாச்சி இப்படியொரு வீரச் சிறுவனாக இருந்திருப்பார் என்று நினைக்கவில்லை ;)) நான் நாய் பிரியை. சின்ன வயதிலிருந்தே தெரு நாய்கள் எல்லாம் தோழர் தோழியர்கள். நாய்களுக்கு பெட் லவர்ஸ் யார் என்று தெரிந்துவிடும். அவர்களைப் பார்த்து முறைக்காது, கடிக்காது, சும்மா வாலாட்டிவிட்டு சென்றுவிடும். அதையும் மீறி சில பைரவர்கள் நம்மைப் பார்த்து உர் என்றால், அண்ணாச்சி டெக்னிக்தான் பெஸ்ட். இன்னொரு டிப்ஸ் நாய் ஏரியாக்களில் நடமாடும்போது அது கோபாவேசத்துடன் எதிர்படும் முன்பே கையை பின்னந் தலையில் வைத்தபடி நடந்தால் நாய் நம்மை பார்த்தாலும் கண்டும் காணாமல் போய்விடுமாம். நான் முயற்சித்தது இல்லை, யாருக்கேனும் உதவுக்கூடும். ;)) தொடர்ந்து எழுதுங்கள் தமிழ். நாங்கள் வெகு ஆவலுடன் வாசிக்கக் காத்திருக்கிறோம்.
கோணங்கி உங்க மூத்த தம்பி ஆச்சே... இளைய தம்பின்னு எழுதியிருக்கீக..?
அருமையா இருக்குங்க!
உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
//வளவளன்னு நாலு பக்கமெல்லாம் எழுதினால் வலைத்தளத்தில் யாரும் படிக்க மாட்டாங்க //
இது நாங்க(குறைந்த பட்சம் நான் மட்டுமாவது) எல்லாருமே ஒருத்தர்கிட்டே சொல்லிகிட்டிருக்கோம்! கேக்க மாட்டேங்குறார்!
(சுவாரசியமா இருந்தா எத்தனை பக்கம் வேணும்னாலும் படிப்பாங்க, பொன்னியின் செல்வனை இன்னமும் பலமுறை படிப்பவர்கள் இருக்கிறார்கள்)
ஹைய்யோ:-)
எப்படி..... இப்படி......
அட்டகாசம்.
தோழி சொல்லி இங்கே வந்தேன்.
நாயாரைப்பத்தி நல்லாவே எழுதிட்டீங்க.
இனிய பாராட்டுகள்.
உங்களைப் பத்திரிகைகளிலிருந்து,
இங்கே வலைப்பதிவில் பார்ப்பது
மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
நாயைப் பொறுத்தவரை நீங்கள் சொல்லுவது உண்மை. எதிர்த்து நின்றால்,அதுவும் உறுதியோடு திரும்பினால் வெற்றி கிடைக்கும்.
பொறுமையும் முனைப்பும் வேண்டும். நன்றி தமிழ்ச்செல்வன்.
ஆஹா நாய் கதை அருமைங்க.கொலுவிற்கு கூப்பிட நானும் என் தோழியும் போயிருந்த போது நாயோட நடத்திய ஒரு பெரிய போராட்டத்தை நினைவு படுத்திட்டீங்க:)):)
தமிழ் சார் நீங்கள் வலைப்பூ அராம்பித்திருப்பது மிகவும் தாமதம் தான்.
இந்த தெரு நாய்களை எப்போது அல்லது யார் ஒழிககிறார்களோ அவர்களுக்குத்தான் எனது ஒட்டு என்று முடிவு கட்டி பல தேர்தல்களாக நான் ஒட்டு போடுவதில்லை.நீங்கள் பாருங்கள் எங்கும் நாய் மாயம் தான்.பேருந்து நிலையத்தில் ரயில் நிலையத்தில் எங்கும் நாய்கள் தான். எந்த நேரத்திலும் நாய்கள் நம்மை கடிக்கலாம். மோட்டார் சைக்கிளில் செல்லும் பொழுது குறுக்கே நாய்கள் வந்து விழுந்து எத்தனையோ மனிதர்கள் இறந்திருக்கிறார்கள். அனால் நம் மக்கள் எந்த சொரணையும் இல்லாமல் இருக்கிறார்கள். பழனி மலை மேல் கூட நாய்கள் சுற்றி திருகின்றன. ரொம்ப நேரம் நின்று கொண்டிருக்கும் பேருந்துகளீல் ஏறும்போது அடியில் குனிந்து நாய்கள் இல்லை என்று ஊர்ச்சித படுத்திய பிறகே பேருந்தில் ஏற வேண்டும் இல்லையென்றால் ஏறும் பொது கால்களை கடித்து விடும் அபாயம் உள்ளது.இது போல நிகழ்ச்சிகள் நிறைய நடந்துள்ளன. நான் கேட்கிறேன் இந்த தெரு நாய்களை ஒழித்தால் இந்த அரசியல் வாதிகள் என்ன குறைந்து பொய் விடுவார்கள். அல்லது அவர்களின் ஊழலுக்கு ஏதாவது பங்கம் வந்து விடுமா என்ன? குறைந்த பட்சம் இந்த தெரு நாய்களை கூட ஒழிக்க முடியாத அரசியல் வாதிகளால் எப்படி வர்க்கங்களை தீண்டாமைகளை ஒழிக்கமுடியும்?
அன்புடன்
பெருமாள்
கரூர்
Post a Comment